Saturday, May 30, 2020

Wolf Totem (2015) - ‘ஓநாய் வேட்டை'

ஓர் ஓநாயை வளர்ப்பதின் மூலமாக இயற்கையை புரிந்து கொள்ள முயல்கிறான் நகரத்து இளைஞன் ஒருவன். அவனது நோக்கம் நிறைவேறியதா என்பதை தத்துவார்த்தமாகவும் அரசியல் பொருளிலும் விவரிக்கிறது இந்த சீனத் திரைப்படம்.  Jiang Rong எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தை இயக்கியிருப்பவர் Jean-Jacques Annaud. பல  மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த நாவல், கம்னியூசத்தின் மீதான விமர்சனமாக கருதப்படுகிறது.

***

வருடம் 1969. பீஜிங் நகரில் இருந்து மங்கோலிய பழங்குடிகள் இருக்கும் இடத்திற்கு அனுப்பப்படுகிறான் இளைஞன் சென். சீனா உருவாக்க விரும்பிய கலாசாரப் புரட்சியின் படி  நகரத்திலிருந்து சில வருட காலத்திற்கு இடம்பெயரும் சென், பழங்குடி சிறார்களுக்கு கல்வி கற்றுத் தருவான். ஆனால் இதற்கு மாறாக பழங்குடி மக்களிடமிருந்தும், மலைப்பிரதேசத்தில் இருக்கும் ஓநாய்க்கூட்டங்களிடமிருந்தும் நிறைய விஷயங்களைக் கற்கிறான் சென்.

பழங்குடிகளின் இருப்பிடத்தை அடைந்ததும் ஊர்ப் பெரியவர், பாதுகாப்பு சாதனம் ஒன்றை சென்னுக்கு அளிக்கிறார். ஓநாய்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக உதவுவது அது. சில காலம் கழித்து குதிரை மீது தனியாகச் செல்லும் சென்-ஐ ஓநாய்களின் கூட்டமொன்று சுற்றி வளைக்கிறது. திகைத்துப் போகும் சென், பெரியவர் சொல்லித் தந்தபடி தன்னிடமுள்ள உலோகங்களை மோதச் செய்து சப்தம் ஏற்படுத்துகிறான். ஓநாய்கள் பயந்து ஓடுகின்றன. ஓநாய்களைப் பற்றி மேலதிமாக அறிந்து கொள்ளும் ஆர்வம் அவனுக்கு உண்டாகிறது.

'ஓநாய்கள் மிகவும் கட்டுப்பாடானவை. தன் வேட்டைக்காக எத்தனை காலமானாலும் பொறுமையுடன் காத்திருக்கும். கூட்டத்தின் தலைவன் தரும் சமிக்ஞைகளின் படி போர் வியூகம் அமைத்து  தன் இரையை சுற்றி வளைத்து வேட்டையாடும். மங்கோலிய பேரரசன் செங்கிஸ்கான், குறைந்த அளவு படைவீரர்களை வைத்துக் கொண்டு உலக நாடுகளை வெற்றி கொண்டது, ஓநாய்களின் போர்த்திறனை பார்த்து கற்றுக் கொண்ட பின்புதான்.' என்கிற தகவல்களையெல்லாம் சொல்கிறார் பெரியவர்.

***

ஓநாய்களை பின்தொடர்ந்து சென்று அவைகள் வேட்டையாடி பனியில் புதைத்து வைத்திருக்கும் மான்களை பழங்குடிகள் எடுத்து வருகிறார்கள். "ஏன் எல்லா மான்களையும் நாமே எடுத்துக் கொள்ளக்கூடாது?" என்று கேட்கிறான் சென். "அவைகளின் இரையை முழுக்கவும் நாம் எடுத்து விட்டால் ஓநாய்கள் இரையைத் தேடி ஊருக்குள் வந்து விடும்' என்கிறார் பெரியவர்.  மனிதனுக்கும் விலங்கிற்கும் உள்ள எழுதப்படாத ஒப்பந்தம் இது. இதன் மூலம் இயற்கையின் சமநிலையும் பேணப்படும்.


தனக்கு கிடைக்கும் ரேடியோ பெட்டிற்காக  மீதமுள்ள மான்களை ஒருவன் அரசாங்க அதிகாரிக்கு காட்டிக் கொடுத்து விட அவர்கள் வந்து அள்ளிப் போகிறார்கள். அவற்றின் தோலிற்கு நல்ல விலை கிடைக்கும். தங்களின் இரை பறிபோன வெறுப்பில் ஓநாய்கள் கொலைவெறியுடன் காத்திருக்கின்றன.

 மேய்ப்பவர்கள் அசந்த நேரம் பார்த்து குதிரைக் கூட்டத்தை ஓநாய்கள் வேட்டையாடத் துவங்குகின்றன. சில நபர்கள் மட்டுமே இருப்பதால் அவர்களால் சமாளிக்க முடியவில்லை.  உயிர் தப்புவதற்காக கண்மண் தெரியாமல் ஓடும் குதிரைகள் பனி நிறைந்த ஆற்றில் மூழ்கி இறக்கின்றன. இந்த இழப்பிற்காக அரசாங்க அதிகாரி எல்லோரையும் திட்டுகிறார். ஓநாய்கள் தங்களைப் பழிவாங்கத் துவங்கி விட்டன என்பதைப் புரிந்து கொள்கிறார் பெரியவர்.


***


ஓநாய்க் குட்டி ஒன்றை வளர்ப்பதின் மூலம் அதன் இயங்குமுறையின் ரகசியங்களை புரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறான் சென். தாய் ஓநாய் வெளியே சென்றிருக்கும் வேளை பார்த்து அதன் குட்டியொன்றைத் திருடி வருகிறான். எவருக்கும் தெரியாமல் அதை வளர்த்து வருகிறான். பழங்குடிகள் இந்தச் செயலைக் கண்டித்தாலும் அரசாங்க அதிகாரியின் ஆதரவு இருப்பதால் அவனை யாராலும் தடுக்க முடியவில்லை. இதற்காக ஊர்ப்பெரியவரிடம் சென் மன்னிப்பு கேட்கிறான்.

நாளாக நாளாக ஓநாய்க்குட்டி மீது அவனுக்கு அன்பு அதிகமாகிறது. ஒரு நாள் கோபத்தில் அது அவனைக் காயப்படுத்தி விடுகிறது. என்றாலும் கூட அவனால் அதை கோபிக்க முடிவதில்லை. அவனுக்குப் பிரியமான ஒரு பெண்ணின் மகனை, சென் வளர்க்கும் ஓநாய் காயப்படுத்தி விடுகிறது. சிறுவனின் உயிர் பிழைப்பதே கடினம் என்றாகி விடுகிறது. அதற்கான நவீன மருந்தை எங்கெங்கோ அலைந்து திரிந்து கொண்டு வருகிறான் சென். அவளிடம் தன் காதலையும் தெரிவிக்கிறான். 'நீ நகரத்திற்கு போய் விடுவாயே' என்று அவனுடைய காதலை மறுக்கிறாள் அவள். 'இல்லை, இனி இதுதான் என் இடம்' என்கிறான் சென்.

பழங்குடிகளின் ஆட்டு மந்தையை ஓநாய்கள் சூழ்கின்றன. மிக லாவகமாக தடுப்புச் சுவற்றைத் தாண்டி வந்து ஆடுகளை வேட்டையாடுகின்றன. சத்தம் கேட்ட ஊர்க்காரர்கள் ஓநாய்களை துரத்துகிறார்கள். ஓநாய்க்காக வைக்கப்பட்ட வெடியில் சிக்கி ஊர்ப் பெரியவர் காயப்படுகிறார்.

அந்தப் பிரதேசத்தில் உள்ள அனைத்து ஓநாய்களையும் கொன்று விட வேண்டும் என்கிற ஆவேசத்துடன் கிளம்புகிறான் அரசாங்க அதிகாரி. துப்பாக்கியும் ஜீப்புமாக கிளம்பி ஏறத்தாழ அனைத்து ஓநாய்களையும் சுட்டுக் கொல்கிறார்கள்.

சென் வளர்க்கும் ஓநாய் பெரியதாகி விடுகிறது. அவனிடமிருந்து விடுபடத் துடிக்கிறது. சென்னால் அதன் சுதந்திர உணர்வை புரிந்து கொள்ள முடிந்தாலும் அதனை விடுவிக்க முடியாமல் தடுமாறுகிறான். அவன் எங்கோ சென்று திரும்பி வரும் போது ஓநாய்இருப்பதில்லை. அவனுடைய காதலி அதை விடுவித்திருக்கிறாள். மலைப்பிரதேசத்தின் தனிமையில் ஒற்றையாக நின்று ஓலமிடும் ஓநாய் ஒன்றை கவனிக்கிறான் சென். அவன் வளர்த்த ஓநாய்தான் அது. இவனை சற்று நேரம் உற்றுப் பார்த்து விட்டு மலைப்பிரதேசத்திற்குள் ஓடி மறைகிறது. சென் கண்ணீர் வழிய அதைப் பார்க்கிறான்.


***

பழங்குடிகள் இயற்கையோடு இயைந்து வாழத் தெரிந்தவர்கள். மனிதனும் விலங்கும் பரஸ்பரம் ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்த எல்லைக்குள் வாழப் பழகுகிறார்கள். விலங்குகளின் வாழ்வையும் சுதந்திரத்தையும் அவர்கள் மதிக்கிறார்கள். சென்-ஐப் போல இயற்கையின் ஒரு பகுதியை கைப்பற்ற முடியும் என அவர்கள் கருதுவதில்லை.


ஆனால் நவீன உலகத்தின் சுயநலமும் பேராசையின் அதிகாரமும் இயற்கையின் இந்த சமனைக் குலைக்கின்றன. மனித குலத்தால் இயற்கையை எந்நாளும் வெல்ல முடியாது; புரிந்து கொள்ள முடியாது என்கிற கருத்தினை ஆழமாகப் பதிவு செய்கிறது இத்திரைப்படம்.

ஓநாய்கள் வேட்டையாடும் காட்சிகள், மலைப்பிரதேசத்தின் அழகான காட்சிகள் போன்றவை  இத்திரைப்படத்தில் அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

No comments: