Friday, April 18, 2014

ஓநாய்களின் தர்மம் - The Wolf of Wall Street
நடிகர் எம்.ஆர்.ராதாவின் வாழ்வில் நிகழ்ந்ததாக சொல்லப்படும் சம்பவம் ஒன்றுண்டு.  இதன் நம்பகத்தன்மை பற்றி தெரியவில்லை என்றாலும் சுவாரசியமானது. ஒரு முறை அவரது கார் மிக வேகமாக சென்று கொண்டிருந்ததாம். போக்குவரத்து காவலர் அதை நிறுத்தி 'ஏன் இத்தனை வேகமாக செல்கிறீர்கள்?' என கேள்வி எழுப்பினாராம். ராதா அவருக்கேயுரிய பிரத்யேக பாணியில் 'இன்னா மேன்.. நீ... வேகமா போறதுக்குதான்னே கார் இருக்கு. அதுக்குதான்னே... அதை கண்டுபிடிச்சிருக்கான். அதை நீ ஸ்டாப் பண்றியே.. அறிவில்லே.. நான்சென்ஸ்' என்றாராம். பொதுவாகவே கலகத்தன்மையோடு செயல்படுகிறவர்களைப் பற்றி உண்மையான தகவல்களோடு சுவாரசியமான பொய்களும் கூடவே கலந்து வரும். அப்படியொரு தகவல் இது. உண்மையா என தெரியவில்லை.

ராதா ஒருவேளை எழுப்பிய அந்தக் கேள்வி தார்மீக ரீதியாக அராஜகத்தன்மையுடையது என்று தோன்றினாலும்   தர்க்க ரீதியாக ஒருவகையில் அது சரியானது. விஞ்ஞான கண்டுபிடிப்புகளினால் ஏற்பட்ட தொடர்ந்த வளர்ச்சிகளின் மூலம் மனித குலம் காலத்தையும் தூரத்தையும் மிக வேகமாக இன்று கடக்க முடியும். முன்பு கால்நடையாக ஒருமணி நேரம் கடந்த தூரத்தை வாகனத்தின் தன்மைக்கும் வேகத்திற்கும் ஏற்ப இன்று சுமார் ஐந்து நிமிடத்தில் கடந்து விடலாம். வேகமே வாகனத்தின் அடையாளமும் நோக்கமும். அதற்காகவே அதிவேக வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. தூரத்தை வேகமாக கடப்பதற்கே வாகனத்தை பயன்படுத்துகிறோம் எனும் போது வேகத்தை தடைப்படுத்தச் சொல்வது முறையா என்று ராதாவின் கேள்வியை ஒருவகையில் நியாயப்படுத்தலாம்.

மனித குலம் தோன்றி வளர்ந்து கூடிவாழக் கற்கத் துவங்கிய கற்காலத்தில் உடல் வலிமை கொண்டவனே அதிகபட்ச தேவையை அடைய முடியும். 'வலிமையுள்ளது எஞ்சும்' என்பதே அப்போதைய ஆதார விதி. மனிதன் சிந்திக்கத் துவங்கி, தன் விலங்குத் தன்மைகளை ஒழுங்குபடுத்தி  நாகரிக உலகை அமைக்க முயலும் போது அதற்கான விதிகளும் வழிமுறைகளும் உண்டாக்கப்பட்டன. மதம், திருமணம், குடும்பம், அரசு, காவல், சட்டம் போன்ற நிறுவனங்கள் உருவாகின. அறம், நேர்மை, கருணை, பணிவு போன்ற விழுமியங்கள் கற்பிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சிகளுள் ஒன்றுதான் போக்குவரத்து விதிகளும். வாகனம் வேகமாக செல்லக்கூடியதுதான் என்றாலும் மற்றவர்களுக்கும் உபயோகிப்போருக்குமே கூட ஆபத்தோ விபத்தோ ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுதான் இந்த விதியின் அடிப்படை. இந்த அடிப்படையில் ராதாவின் கேள்வி நியாயமற்றது, அந்த விதிகளுக்குப் புறம்பானது.

சராசரியான மனிதனின் நலத்தையும் செளகரியத்தையும் கருத்தில் கொண்டே மேற்குறிப்பிட்ட விழுமியங்களும் விதிகளும் உண்டாக்கப்பட்டன. ஆனால் ஒவ்வொரு சராசரியான மனிதனும் தான் உருவாக்கிய விதிகளை  வெளிப்படையாகவோ ரகசியமாகவோ தானே மீற விரும்புகிறான் என்பது ஒரு சுவாரசியமான முரண்நகை. சிவில் சமூகத்தின் ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் அந்த கற்கால மனிதன் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறான். இந்த விதிகளை உடைத்துக் கொண்டு சமூகத்தின் மீது போர் தொடுக்க எப்போதும் அவன் தயாராகவே இருக்கிறான். என்றாலும் நாகரிக சமூகம் பல்வேறு விதிமுறைகளை மாற்றியமைத்துக் கொண்டேயிருப்பதின் மூலமும் விழுமியங்களை ஆழ்மனதில் போதித்துக் கொண்டேயிருப்பதின் மூலமும் இந்தக் கற்கால மனிதனை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. இந்த மனிதனை உள்ளுக்குள் ரகசியமாக புதைத்து வைத்திருக்கும் பெரும்பான்மையினர் நாகரிக கனவான்களாகவும் வெளிப்படுத்தி அல்லது மறைக்க முயன்று மாட்டிக் கொள்ளும் சிறுபான்மையினர் குற்றவாளிகளாகவும் அறியப்படுகின்றனர்.  இந்தச் சிறுபான்மை சமூகம் பெருகாமலிருப்பதில்தான் நாகரிக சமூகத்தின் சமநிலையும் பாதுகாப்பும் பாதிக்கப்படாமலிருக்க முடியும்.

***

இப்படியொரு சிறுபான்மை சமூகத்தின் சுவாரசியமான பிரதிநிதிதான் ஜோர்டான் பெல்போர்ட். அமெரிக்க பங்குச் சந்தையில் மிகப்பெரிய மோசடிகளை நிகழ்த்தி பிறகு சிறைப்பட்டு விடுதலையாகி தற்போது ஊக்கமூட்டும் பேச்சாளராக இருக்கும் ஜோர்டானின் வாழ்க்கை பிரபல அமெரிக்க இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்செஸியினால் திரைப்படமாகியிருக்கிறது. 'The Wolf of Wall Street' என்கிற ஜோர்டானின் தன்வரலாற்று நூல்தான் இத்திரைப்படத்திற்கு அடிப்படை.

பிறப்பால் யூதரான ஜோர்டானின் பெற்றோர் இருவருமே கணக்காளர்கள். அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடிக்கும் ஜோர்டானுக்கு பல் மருத்துவத்திற்கான வகுப்பில் ஆசிரியரின் உபதேசம். 'நீ அதிகம் பணம் சம்பாதிக்க விரும்பினால் உன் இடம் இதுவல்ல'. பிரபலமான பங்குச் சந்தை நிறுவனமொன்றில் பணிபுரியத் துவங்கி அதன் நுணுக்கங்களையும் முறைகேடுகளையும் ஓட்டைகளையும் கற்றுத் தேர்ந்து சான்றிதழ் பெற்ற ஒரு தரகராக தன் தொழிலைத் துவங்கும் ஜோர்டானுக்கு  முதல் நாளே மோசமானதாக இருக்கிறது. பங்குச் சந்தை உலகில் மிகப் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்திய நாளான அக்டோபர்,19, 1987, 'கறுப்புத் திங்கள்' என்று அழைக்கப்படுகிறது.  அதன் காரணமாக பணியை இழந்து சோர்வுறும் ஜோர்டான் தன் தொழிலையே மாற்றிக் கொள்ள முடிவு செய்யும் போது அவனுடைய மனைவி ஊக்கப்படுத்தி சிறுநிறுவனங்களின் பங்குகளை விற்கும் நிறுவனத்தில் சேரச் சொல்கிறார். பெரு நிறுவனங்களின் பங்குகளை வாங்க முடியாத நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களிடம் தன்னுடைய விற்பனை சாதுர்யத்தினால் அவர்களின் கனவுகளையும் ஆசைகளையும் ஊதிப்பெருக்கி தவறாக வழிநடத்தி முறைகேடான வழியில் அதிகம் சம்பாதிக்கத் துவங்குகிறார் ஜோர்டான்.

பிறகு தன் சொந்த நிறுவனத்தைத் துவங்கி பங்குச் சந்தை குறித்து எவ்வித அனுபவமும் அல்லாத ஆனால் விற்பனையில் ஆர்வமுள்ள சாதாரண மனிதர்களை இணைத்துக் கொண்டு தன்னுடைய சாதுர்யங்களை மெல்ல அவர்களுக்குப் புகட்டி நிறுவனத்தை அசுர வேகத்தில் வளரச் செய்கிறார். தன்னுடைய குருவிடமிருந்து கற்றுக் கொண்டதின் படி கடுமையான பணியிலிருந்து இளைப்பாறுவதற்காக தான் ஈடுபடும் போதைப் பழக்கத்தையும் பாலியல் சுகத்தையும் தன்னுடைய பணியாளர்களுக்கும் விஸ்தரிக்கிறார். அதிகமான பணம், போதை மற்றும் செக்ஸ். எல்லாமே அதிகம். இளைஞர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிவதற்காக அலைமோதுகின்றனர். அவரது அலுவலகமே பணவெறியும் காமவெறியும்  பிடித்த மனநோயாளர்களின் விடுதி போலவே இயங்குகிறது. எவ்வித மென்உணர்வுகளுக்கும் இடம்தராமல் பணம் ஒன்றே குறியாக தொடர்ந்து கடுமையாக பணிபுரிந்து கொண்டேயிருப்பவர்கள்தான் அங்கு தாக்குப் பிடிக்க முடியும். எனவே நிறுவனத்திற்கு பல்வேறு முறைகேடுகளின் மூலமாக பணம் வெள்ளமாகப் பாய்கிறது. பங்குச் சந்தையுலகில் இந்த நிறுவனம் அதிகம் கவனிக்கப்படுவதாக மாறுகிறது. இதனால் FBI  இந்நிறுவனத்தின் நடவடிக்கைளை கண்காணிக்கத் துவங்குகிறது.

ராஜ வாழ்க்கை என்று சொல்வார்களே .. அதை வாழ்கிறார் ஜோர்டான். அரண்மனை மாதிரியான வீடு, கார், சொகுசுக் கப்பல். மனைவியை விட்டு விட்டு மாடல் அழகியுடன் திருமணம். போதை, செக்ஸ், மீண்டும் போதை, அதைவிடவும் அதிக போதையை தரும் பணம். அதைப் பதுக்குவதற்காக செய்யும் தகிடுதத்தங்கள். இப்படியாக பரமபத ஏணியில் நேரடியாக உயர்த்திற்கு ஏறும் அவரது கிராஃப் ஒரு மங்கலமான நன்னாளில் சட்டம் எனும் பாம்பின் வழியாக அதே வேகத்தில் கீழே இறங்குகிறது. அவரது முறைகேடுகள் விசாரிக்கப்படுகின்றன. தன்னைப் பாதுகாக்க சகலரையும் காட்டிக் கொடுக்கிறார். முறைகேடாக ஈட்டிய செல்வத்தின் பெரும்பகுதியை இழக்க நேர்கிறது அவரிடம் மிச்சமிருப்பது அறிவு மாத்திரமே. விற்பனைத் தந்திரங்களும். அதைக் கொண்டு சுயமுன்னேற்ற பேச்சாளராகிறார் ஜோர்டான் பெல்போர்ட். அதுதான் அவரது இப்போதைய வாழ்க்கை.

பங்குச் சந்தையின் 'கறுப்புத்தின திங்கள்' நாளின் துவக்கத்தைப் போலவே வெகுவேகமாக வளர்ந்த ஜோர்டானின் வெற்றியும் அசுர வேக இறக்கத்துடன் அமைந்தது ஒரு முரண்நகை.

***

மார்ட்டின் ஸ்கார்செஸியின் முந்தைய திரைப்படங்களை அறிந்தவர்களுக்கு அவரது திரைப்படங்களின் உள்ளடக்கத்தையும் உத்திகளையும்  அவை இயங்கும் விதத்தையும் பற்றி தெரிந்திருக்கும். நிழல்உலக மனிதர்களின் வாழ்வியலையும் குற்றவுலகின் வன்முறைக் குரூரத்தையும் மிக யதார்த்தமாகவும் கலைத்தன்மையுடனும் தன் படைப்புகளில் கையாண்டவர் ஸ்கோர்செஸி. சுருங்கக் கூறின் வன்முறையின் அழகியலை அதன் உளவியல் பின்னணியோடு தன் பெரும்பாலான திரைப்படங்களில் அற்புதமாக கையாண்டவர் ஸ்கார்செஸி. மென்னுணர்வுகளை சித்தரிப்பதும் அறவுணர்ச்சிகளைப் போதிப்பதுமே சிறந்த கலை என்றாகி விடாது. சூழல்களினால் குற்றவாளிகளாக நேரும் மனிதர்களையும் உள்ளடக்கியதுதான் இச்சமூகம். அவர்களின் உலகம் நீதியுணர்ச்சியுடன் புறக்கணிக்கப்பட வேண்டியதல்ல. கருணையுணர்ச்சியுடன் ஆராயப்பட வேண்டியது. குற்றங்களின் ஊற்றுக்கண்களின் மீதும் அதன் இருண்மைகளின் மீதும் வெளிச்சத்தைப் பாய்ச்ச வேண்டியது கலையின் கடமை. ஸ்கார்செஸியின் திரைப்படங்கள் மிகுந்த வன்முறையையும் குரூரத்தையும் கொண்டிருக்கிறது என்கிற குற்றச்சாட்டுண்டு. ஆனால் ஒரு திரைப்படத்தின் மையம் எதை நோக்கி இயங்குகிறது என்பதையும் நுண்ணுணர்வு கொண்ட ஒரு பார்வையாளனுக்கு அது எதை உணர்த்துகிறது என்பதையும்  கொண்டே அத்திரைப்படத்தின் மீதான மதிப்பீடும் பார்வையும் அமைய வேண்டும்.

உதாரணத்திற்கு நம்மூர் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய 'குரு' திரைப்படத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏறக்குறைய அதன் திரைக்கதை ஜோர்டானின் சுயசரிதத்திற்கு ஒப்பானது. தொழிலதிபர் அம்பானியின் வாழ்க்கை. ஸ்கார்செஸிக்கும் மணிரத்னத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் 'குரு' திரைப்படத்தில் அம்பானியை ஒரு ஹீரோ போலவே சித்தரித்திருப்பார் மணிரத்னம். பழமையான இந்தியாவின் தேவையில்லாத கட்டுப்பெட்டியான சட்டதிட்டங்களை உதைத்துக் கொண்டு முன்னேறிய ஒரு கடுமையான உழைப்பாளியின் கதை என்பது போலவே அதன் திரைக்கதை அமைந்திருக்கும். அதன் நாயகன் 'மய்யா மய்யா' என்று அரைகுறை ஆடையுடன் நடனமாடும் ஒரு நங்கையை வேடிக்கை பார்த்தாலும் தன் மனைவியை மாத்திரமே நேசிக்கும் 'ராமனாக' இருப்பான். தொழில்சார்ந்து அவன் ஆயிரம் முறைகேடுகளை செய்திருந்தாலும் "உங்க ஷேர்களை வித்துத்தான் என் மூணு பொண்ணுங்களுக்கு கல்யாணம் செஞ்சேன்' என்று கண்கலங்கும் பக்தர்களைப் பெற்றிருக்கும் கடவுளின் சித்திரமாக இருப்பான். தனது முறைகேடுகளை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளரை ஆள் வைத்து தாக்காமல் கருணையுடன் அணுகும் கனவானாக இருப்பான். ஒவ்வொருமே அம்பானியாக மாறினால் இந்தியா வல்லரசாகி விடும் என்கிற முதலாளித்துவக் கனவை ஒவ்வொரு பார்வையாளனுக்கும் விதைக்கும்  பேராசையே அத்திரைப்படத்தின் நீதியாக இருக்கும். இந்த முதலாளித்துவ ஆலமரங்களின் கீழ் தங்களின் உழைப்பெல்லாம் உறிஞ்சப்பட்டு சக்கையாகி விழுந்து மடியும் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பற்றி ஒரு கரிசனமும் இருக்காது. இதுவே மணிரத்னத்தின் பார்வை.

ஸ்கார்செஸியின் திரைப்படத்தில் நாயகனின் பிம்பத்தை நேர்மையானவனாக கட்டியெழுப்பும் சாகசங்களோ  தீமையின் மழுப்பல்களோ அறவுணர்வை நேரடியாகப் போதிக்கும் அசட்டுத்தனங்களோ இருக்காது. அவரது திரைப்படத்தின் நாயகன் கடுமையான அயோக்கியன் என்றால் அவனது அயோக்கியத்தனங்கள் ஏறக்குறைய அப்படியே நேர்மையாகவும் வெளிப்படையாகவும் அதன் குரூரத்தோடு பதிவாகியிருக்கும். ஒன்று அவனை கடுமையாக வெறுப்பீர்கள் அல்லது விரும்பத் துவங்கி விடுவீர்கள். பொதுவாக நம்மூர் இயக்குநர்களின் அந்திமக் காலத் திரைப்படங்கள், எல்லாப் புதுமைகளையும் கலைத்திறனையும் இழந்து காலி பெருங்காய டப்பா போல வெறும் சக்கையாகவே உருவாகும். ஆனால் சுமார் 87 வயதாகும் ஸ்கார்செஸியின் 'The Wolf of Wall Street'  திரைப்படம் அவரது முந்தைய திரைப்படங்களை விடவும் அதியிளமையாக சிறப்பானதாக அமைந்துள்ளது என்பதே அவருடைய மேதமைக்குச் சான்றாக இருக்கிறது.

ஸ்கார்செஸியின் நெருங்கிய நண்பரான நடிகர் ராபாட் டி நிரோ அதிகபட்சமாக அவரது ஏழு படங்களில் நாயகனாக நடித்துள்ளார். அதற்குப் பிறகு லியோனார்டோ டிகாப்ரியோவுடனான கூட்டணி. ஐந்து படங்கள். ஜோர்டான் பெல்போர்ட்டாக டிகாப்ரியோ சிறப்பாக நடித்திருக்கிறார் என்றால் அதுதான் இந்த வருடத்தின் மிகப் பெரிய குறைமதிப்பு வாக்கியமாக இருக்கும். 'ஜோர்டான் பெல்போர்ட்டா' டாகவே வாழந்திருக்கிறார் என்றால் அதுவும் சம்பிதாயமான தேய்வழக்கு பாராட்டாக இருக்கும். மிகச் சிறப்பான பங்களிப்பின் மூலம் சொற்களினால் விளக்க முடியாத அத்தகையதொரு நியாயத்தை தனது பாத்திரத்திற்கு வழங்கியிருக்கிறார் டிகாப்ரியோ. . இதற்கு முழு முதற்காரணம் ஸ்கார்செஸி என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எனவேதான் டிகாப்ரியோ, கடுமையான போட்டிக்கு இடையே பெல்போர்ட்டின் சுயசரிதத்தை படமாக்கும் உரிமையைப் பெற்று அதை இயக்க ஸ்கார்செஸியை வேண்டுகிறார். எனவேதான் அகாதமி விருதின் சிறந்த நடிகருக்கான பரிந்துரைப்பட்டியலில் இவரின் பெயர் பெரியதொரு எதிர்பார்ப்புடன் இருந்தது.  இதுவரை சிறந்த நடிகருக்கான அகாதமி விருதை பெறாத டிகாப்ரியோவிற்கு இந்த வருடமும்  அதிர்ஷ்டம் அடிக்கவில்லை என்பது ஒரு சோகமான விஷயம்தான்.

டிகாப்ரியோவின் சிறந்த நடிப்பிற்கு உதாரணமாக ஒரு காட்சியை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜோர்டான், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்காக செய்யப்படும் பரிமாற்றங்களில் பெருந்தொகையொன்று காவல்துறையிடம் சிக்கிவிடும்.அவரது வீடு முழுக்க காவல்துறையால் ஒட்டுகேட்கப்பட்டுக் கொண்டிருக்கும். இந்த தகவல்களையெல்லாம் அறியாத ஜோர்டான் தன் கூட்டாளி நண்பருடன் இணைந்து  மனஅமைதிக்காக உட்கொள்ளப்படும் அதிவீர்யமுள்ள மருந்தை சாப்பிட்டுக் கொண்டிருப்பார். முதல் மாத்திரையில் எவ்வித எதிர்வினையும் தெரியாமல் போகவே மேலதிக மருந்தை உட்கொண்டு அமர்ந்திருப்பார். அந்த நேரத்தில் அவரது தனிப்பட்ட ஆலோசகர் தொலைபேசியில் அழைத்து அவரை உடனே வெளியே வந்து பொதுதொலைபேசியில் இருந்து அழைக்கச் சொல்வார். (முட்டாள்.. எதுவும் பேசாதே..உன் வீட்டை FBI கண்காணித்துக் கொண்டிருக்கிறது)  ஜோர்டான் அது போலவே வெளியே வந்து பொது தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் போது அதிகமாக உட்கொண்ட மருந்து பணியாற்றத் துவங்கி வாய் குழறி உடல் செயலிழந்து ஏறக்குறைய பக்கவாத நிலைக்குச் சென்று விடுவார்.

இப்போது அவர் தனது காரில் சிறிது தூரமுள்ள தன் வீ்ட்டிற்கு  திரும்பிச் சென்றாக வேண்டும். படிக்கட்டுகளில் உருண்டு எழுந்து எப்படியோ காரை அடைந்த பிறகு இன்னொரு சோதனை காத்திருக்கும். அதே மருந்து மயக்கத்திலிருக்கும் அவரது கூட்டாளி நண்பர் சுவிஸ் வங்கி நபரிடம் போனில் ஏதோ பேசி ரகளை கொண்டிருக்கிறார் என்கிற தகவல் அவரது மனைவியிடமிருந்து வரும். 'அவனை நிறுத்து' என்ற  இவர் உளறுவது அவரது மனைவிக்குப் புரியாது. எனவே ஜோர்டான் இப்போது எப்படியாவது  விரைந்து சென்று அவரது தொலைபேசி நண்பரை தடுத்து நிறுத்த வேண்டும்.

சுமார் 15 நிமிடங்கள் வரும் இந்த காட்சிக்கோர்வை ரகளையாக இருக்கும்.  பொது தொலைபேசியில் உளறத் துவங்குவது வரை காரில் சென்று தனது நண்பரை தடுத்து நிறுத்தும் காட்சிகள் வரை டிகாப்ரியோ செய்யும் ரகளைகளையும் அற்புதமான நடிப்பையும் படத்தில் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கிடையில் இந்தப் பகுதியிலான திரைக்கதையில் ஸ்கார்செஸி செய்து வைத்திருக்கும் அற்புதத்தையும் சொல்லாமல் இந்த விவரிப்பு  முழுமையுறாது. வாய்ஸ்ஓவரில் விவரிக்கப்படும் (ஸ்கார்செஸியின் வழக்கமான உத்தி இது) இந்தக் காட்சியில் ஜோர்டான் மருந்தின் மயக்கத்தில் இருந்தாலும் தனது காரை ஒரு கீறலும் அல்லாமல் பத்திரமாக எடுத்து வந்து விட்டதாக சொல்லுவான். அதற்கேற்ப வாகனமும் பளபளப்பாக சேதமில்லாமல் காட்டப்படும்.

ஆனால் மறுநாள் காலையில் காவல்துறையினர் வந்து அழைக்கும் போது 'என்ன தவறு செய்தேன்' என்று அவனுக்குப் புரியாது. வீட்டிற்கு வெளியே அவனை அழைத்து வந்து காட்டுவார்கள். கார் அப்பளமாக நொறுங்கி நசுங்கி சிதைந்திருக்கும். இப்போது ஜோர்டான் வீட்டிற்குத் திரும்பிய வழியில் உள்ள எல்லா வாகனத்தையும் இடித்துத் தள்ளி விட்டு வரும் முந்தைய காட்சிகள் காட்டப்படும். திரைக்கதையை எத்தனை சுவாரசியமாக உருவாக்குவது, காட்சிப்படுத்துவது, எடிட்டிங்கினால் மெருகேற்றுவது என்பதற்கான உதாரண காட்சிக் கோர்வையிது.

***

ஒரு பணமோசடி நாயகனின் வாழ்க்கையை ஏன் திரைப்படமாக்க வேண்டும்? பணமும் செக்ஸூம் போதையுமாய் வாழ்ந்த ஒருவனை என்னதான் சிறப்பாய் காட்சிப்படுத்தியிருந்தாலும் அதன் மூலம் ஸ்கார்செஸியை சிறந்த இயக்குநராக ஏற்றுக் கொள்ள முடியுமா என்கிற கேள்விகள் தோன்றலாம். ஏற்கெனவே குறிப்பிட்டபடி சமூகத்தின் இருண்மையான பகுதிகளும் மனிதர்களும் அந்த எதிர்மறையான காரணங்களுக்காகவே புறக்கணிக்கப்பட தேவையில்லாதவர்கள். அவர்களும் இணைந்ததுதான் இச்சமூகம். இம்மாதிரியான விளிம்புநிலை மனிதர்களை பற்றி உரையாட,அவர்களின் கோணங்களை கரிசனத்தோடு ஆராய, பதிவாக்க சில கலைஞர்கள்தான் முயல்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் இயக்குநர் ஸ்கார்செஸி.

ஜோர்டானுக்கு சிறுவயதிலிருந்தே பணம் சேர்க்கும் ஆவலிருக்கிறது. முட்டி மோதியாவது சமூகத்தின் உயர்ந்த நிலையை அடைய ஆசைப்படுகிறான். அதற்காக கடுமையாக உழைக்கிறான். இம்மாதிரியானவர்களுக்கு அவர்கள் அடையும் வெற்றி மாத்திரம்தான் கண்ணில் தெரியும். சமூகத்தில் பின்தங்கியிருக்கும் மக்கள், அவர்களின் வறுமை, அதற்கான சமூகக் காரணங்கள், அதன் அரசியல், தனிநபரின் தார்மீக பொறுப்பு  போன்ற மனச்சாட்சியை உறுத்தும் விஷயங்களெல்லாம் அவர்களின் பிரக்ஞையிலேயே இருக்காது. வேகமாக ஓடத் தெரிந்த, அதிவேகமாக மரம் ஏறித் தெரிந்தவன் அதிக கனிகளை சொந்தமாக்கிக் கொள்ளும் கற்கால மனிதனின் களிப்பே அவர்களுக்கு முக்கியம். மரம் ஏறத் தெரியவாதவர்கள் பற்றியோ மரத்தில் ஏற முடியாமல் ஊனமடைந்திருப்பவர்கள் பற்றியோ அவர்களுக்கு கவலை கிடையாது. எவனால் எடுத்துக் கொள்ள முடிகிறதோ எடுத்துக் கொள்ளுங்கள், என்னால் அதிகம் எடுத்துக் கொள்ள முடிகிறது, இயலாத நீங்கள் ஏன் அதைக் கண்டு பொறாமை கொள்கிறீர்கள், எரிச்சலடைகிறீர்கள், தடை செய்கிறீர்கள் என்பதுதான் இவர்களின் எண்ணமாக இருக்கும். இதற்காக குறுக்கே நிற்கும் எதையும் தாண்டிச் செல்லும் திறமையையும் வலிமையையும் சாதுர்யத்தையும் இவர்கள் பெற்றிருப்பார்கள்.

குறுகிய காலத்தில் அதிக பணத்தைச் சம்பாதிக்க ஜோர்டானுக்கு முன்னாலிருக்கும் வழிகளுள் ஒன்று பங்குச்சந்தை. இயல்பாகவே விற்பனைக் கலையில் சிறந்த அவன், அதிலுள்ள குறுக்கு வழிகளை மற்றவர்களை விட திறமையாக பயன்படுத்தி சம்பாதிக்கிறான், அனுபவிக்கிறான். யோசித்துப் பாருங்கள். அவன் யாரிடமும் வழிப்பறி செய்வதில்லை. திருடவில்லை. பத்து ரூபாயாக போடப்படும் முதலீடு ஆயிரம் ரூபாயாக திரும்பி விடாதா என்கிற பேராசையுடன் பங்குச் சந்தை எனும் சூதாட்டத்தில் விளையாட வருபவர்களைத்தான் அவன் ஏமாற்றுகிறான். இப்படிச் சேர்த்ததை யாருக்குள் பங்களிக்காமல் பாதுகாக்க நினைக்கிறான். அவனுடைய வணிகத்தில் நோக்கில் இதுவே தர்மம். ஏமாற்றப்படுவர்களின் நோக்கில் இந்த தர்மம் வேறு நோக்கில் தெரியலாம். இப்படிப் பார்த்தால் அனைத்துமே தர்மமும் அதர்முமமாக ஆகிறது.

எனில் இவ்வுலகத்தில் அறத்திற்கும் நீதிக்கும் நேர்மைக்கும் மதிப்பே இல்லையா? சிறந்த கலைஞனுக்கென்று சமூகப் பொறுப்போ தார்மீக நியாயவுணர்ச்சியோ இருக்கத் தேவையில்லையா என்கிற கேள்வி எழலாம். படத்தின் இறுதியில் தோன்றும் சிறு காட்சிக் கோர்வையில் அனைத்திற்குமான விடையை ஸ்கார்செஸி வைத்திருக்கிறார்.

ஜோர்டானின் பங்கு வியாபார நிறுவனம் முறைகேடுகளில் ஈடுபடுவதாக செய்திகள் கசியும் ஆரம்பக் காலத்திலிருந்து அதை FBI அதிகாரியொருவர் கண்காணித்து வருவார். இந்த ரகசிய தகவலை ஆலோசகர் ஒருவர் ஜோர்டானிடம் சொல்லி எச்சரிப்பார். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் FBI அதிகாரியிடம் இது குறித்து பேரம் பேச வேண்டாம் என்றும் எச்சரிப்பார். ஆனால் ஜோர்டான் தன்னிடமுள்ள விவாத சாதுர்யத்தின் மீதுள்ள தன்னம்பிக்கையினால் FBI அதிகாரியை பேச்சு வார்த்தைக்கு அழைத்து பணம், பெண்கள் ஆகியவற்றின் மூலம் வலை வீச முயல்வார். ஆனால் அந்த FBI அதிகாரி இதற்கெல்லாம் மசியாமல் தொடர்ந்து நிகழ்த்தும் விசாரணைகள் மூலம் ஜோர்டான் கைதாகி, அவருடைய பணத்தையெல்லாம் திரும்பத் தருவதற்கும் கூட்டாளிகள் பற்றியும் ரகசிய பணப்பரிமாற்றங்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கும் ஜோர்டானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைப்பதற்கும் காரணமாக இருப்பார்.

ஜோர்டானின் கைதுச் செய்தியை பத்திரிகையில் வாசித்தபடி அந்த FBI அதிகாரி ஒரு மின்வண்டியில் பயணம் செய்வதாக இறுதியில் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அவருக்கு எதிரே நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு வயதான ஜப்பானிய தம்பதியை சாவகாசமாய் அவர் பார்த்துக் கொண்டிருப்பதோடு அந்தக் காட்சி முடியும். அந்த FBI அதிகாரி நினைத்திருந்தால் ஜோர்டானிடம் அதிகப் பணத்தைப் பெற்றுக் கொண்டு விலையுயர்ந்த காரில் பயணித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் உழைப்பிற்கு பெயர் போன அந்த ஜப்பான் தேசத்து வயதான தம்பதியினரைப் போல் நிம்மதியாய் உறங்க முடியாது. மனஉளைச்சலுடனும் குற்றவுணர்வுடன்தான் காலந்தள்ள வேண்டியிருக்கும். அறத்திற்கான, நேர்மைக்கான மதிப்பு படத்தின் இறுதியில் தோன்றும் இந்தக் காட்சியில் மறைமுகமாக ஆனால் அழுத்தமாக வெளிப்படுகிறது. இதுவே ஸ்கார்செஸி சொல்ல முயன்ற நீதியாக இருக்கும்.

அம்பானியை நாயகனாக முன்நிறுத்தும் மணிரத்னமும் FBI அதிகாரியின் நேர்மையின் மூலமாக மறைமுக நீதி சொல்லும் ஸ்கார்செஸியும் மாறுபடும் முக்கியமான புள்ளி இதுவே.
  
- உயிர்மை - ஏப்ரல் 2014-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)
     
suresh kannan

Thursday, April 17, 2014

தங்க மீன்கள் - மிகையின் கலை

ஒரு முன்குறிப்பு:

'தங்கமீன்கள்' திரைப்படம் வெளிவந்த போது அது குறித்து பிரமாதம், சிறந்தபடம், குப்பை, சென்டிமென்ட் அழுகாச்சிபடம், போலியான திரைப்படம் என்கிற விதமான பல்வேறு விமர்சனங்கள் வந்தன. இணையத்தில் சில அறிவுஜீவிகள் தங்களின் வீங்கின மூளையுடன் இத்திரைப்படத்தை தடவிப் பார்த்து உற்சாகமாக தி்ட்டித் தீர்த்தார்கள். பல அபத்தமான கருத்துகள் வெளிப்பட்டன. இந்தநிலையில் இத்திரைப்படத்தைப் பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது. சிறந்தபடம் என்று சொல்ல முடியாவிட்டாலும் இத்தனை மூர்க்கத்துடன் புறக்கணிக்கப்பட வேண்டிய திரைப்படமல்ல என்பது மாத்திரம் உறுதியாகத் தெரிந்தது. எனவே இது குறித்து ஃபேஸ்புக்கில் சில குறிப்புகளை தொடர்ந்து எழுதினேன். எனினும் முழுமையாக ஒரு கட்டுரை எழுத விருப்பமிருந்தும் நிறைவேற்ற இயலாமல் போய்க் கொண்டிருந்தது.

நண்பர் சரவணன் (சரோ லமா) 'படப்பெட்டி' இதழிற்காக ஒரு கட்டுரை எழுதித் தரும்படி கேட்டுக் கொண்ட போது அந்த வேண்டுகோள் தந்த உத்வேகத்தில் இத்திரைப்படம் குறித்த ஒரு கட்டுரையை எழுதி அனுப்பினேன். பொதுவாக சிற்றிதழ்கள் பிரத்யேகமாக சந்திக்கக்கூடிய வழக்கமான தடைகள் காரணமாக அந்த இதழ் வெளிவருவது தாமதமாகிக் கொண்டேயிருந்தது. சரவணனிடம் இது குறித்து சமயங்களில் நினைவுறுத்தும் போதெல்லாம் சங்கடத்துடன் பதிலளிப்பார். ஒருவழியாக சில நாட்களுக்கு முன் இதழ் வெளிவந்துவிட்டதாக தெரிவித்திருந்தார். ஆனால் இன்னமும் எனக்கு வந்து சேரவில்லை. இதழ் கைக்கு கிடைத்தவுடன் இந்தக் கட்டுரையை இணையத்தில் பகிரலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் தங்கமீன்கள் திரைப்படம் தேசியவிருது பெற்றிருக்கும் இந்தச் சூழலில் இதை வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என தோன்றிற்று. இந்தக் கட்டுரை எழுதப்படுவதற்கு பிரதான காரணம் நண்பர் சரவணன்தான். எனவே அவருக்கு நன்றி. இத்திரைப்படம் குறித்து சில நண்பர்கள் முன்வைத்த எதிர்மறையான விமர்சனங்களின் சில பகுதிகளுக்கு இந்தக் கட்டுரையில் விடைகாண முயன்றிருக்கிறேன். கட்டுரை எழுதப்பட்ட நாள் 18·10·2013.

சிறுமி சாதனா உட்பட விருது பெற்றிருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்.

இனி கட்டுரை:


தங்க மீன்கள் - மிகையின் கலை

இத்திரைப்படத்தைப் பற்றி உரையாடுவதற்கு முன் சிலவற்றை சற்று கறாராக தீர்மானத்துக் கொள்வது சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.எந்தவொரு கலைப்படைப்பிலும் அதன் உள் அடுக்குகளில் நிறைய சிறந்த விஷயங்களையும் புத்திசாலித்தனங்களையும் கொண்டிருந்தாலும் அதனுடைய முழுமையான வடிவத்தை சற்று தள்ளி நின்று பார்க்கும் போது தன்னுடைய இலக்கை நோக்கின தெளிவையும் சீரான பயணத்தையும் கொண்டிருக்க வேண்டும். ஒரு திரைப்படத்தின் பார்வையாளனும் அதனுள் இருக்கும் பல சிறந்த விஷயங்களை அப்போதைக்கு உணர்ந்தாலும் படம் உரையாடும் ஒட்டுமொத்தமான தொனி்யைத்தான் ஒரு தொகுப்பாக தன் நினைவில் காலங்கடந்தும் நிறுத்திக் கொண்டிருப்பான்.

அந்த வகையில் தங்கமீன்கள், அதனுடைய முழுமையான வடிவத்தின் தெளிவான பயணத்திலிருந்து விலகியிருக்கிறது. மிகையுணர்ச்சிகள், சில நம்பகத்தன்மையற்ற காட்சிக்கோர்வைகள் போன்றவற்றினால் இந்தப் படைப்பின் கலையமைதி சிதைந்திருக்கிறது. படத்தின் மையம் எதுவென ஒரு தெளிவில்லை. தந்தைக்கும் மகளுக்குமான அன்பா, அல்லது சமகால கல்விமுறை இயங்குவதில் உள்ள அபத்தமா, அல்லது இரண்டிற்கும் இடையிலான தத்தளிப்பா, லாபத்தில் இயங்கும் தனியார் பள்ளிகள் x தன்னிச்சையாக இயங்கும் அரசுப் பள்ளிகளுக்கு  இடையிலான ஒப்பீடா என்று பல குழப்பங்களில்  மூழ்கியிருக்கிறது. போதாதற்கு 'நல்லாசிரியர்களுக்கு சமர்ப்பணம்' என்று எண்ட்கார்டு போட்டு கூடுதல் குழப்பத்தை இயக்குநர் ஏற்படுத்தியிருக்கிறாரோ என்று தோன்றுகிறது.

ஆனால் ஒரு திரைப்படம் ஒரு தொனியைத்தான் அதன் மையமாக கொண்டிருக்க வேண்டும் என்று கறாரான எந்தவொரு விதியுமில்லை. கலை வாழ்க்கையை பிரதிபலிக்க வேண்டும் என்கிற நோக்கில், நம் வாழ்விலும் எத்தனை பிரச்சினைகளின் மையங்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடுகின்றன. திரைப்படத்திலும் அது பிரதிபலிக்கலாம். ஆனால் அந்தக் கலவை, அந்தப் படைப்பின் கலையமைதி கெடாமல் கச்சிதமான, உறுத்தலற்ற திரைக்கதையாக திட்டமிட்டிருக்கப்பட வேண்டும். ராமின் திரைப்படம் இதை தவற விட்டிருப்பதாக தோன்றுகிறது.

இந்த இடையூறுகளைத் தாண்டி 'தங்க மீன்களிடம்' ஒரு பார்வையாளன் தன்னை முழுவதுமாக ஒப்படைத்துக் கொண்டால் மிகச் சிறந்த அனுபவத்திற்குள்ளாக முடியும் என்பதில் சந்தேகமில்லை. இதில் துண்டு துண்டாக மிகச் சிறந்த பல தருணங்கள் இருக்கின்றன. கல்யாணி என்கிற கல்யாணசுந்தரத்தின் அசலான வாழ்க்கை இருக்கிறது. உறுதியான இழையால் பிணைந்திருக்கும் தந்தைக்கும் மகளுக்குமான தூய அன்பு இருக்கிறது. வருங்கால தலைமுறையை அதன் எல்லா இயல்புகளையும் சிந்தனைகளையும் துடைத்து விட்டு பொருளீட்ட மாத்தி்ரமே சிந்திககத் தூண்டும், பணத்தை மாத்திரமே துப்பத் தெரிந்த ATM இயந்திரங்களாக மாற்றுகின்ற சமகால கல்வித்துறையின் மீதான விமர்சனம் இருக்கிறது. குடும்பம் என்கிற நிறுவனம் தனிநபர்களுக்கு ஏற்படுத்தும் அழுத்தங்களையும் அதனால் ஏற்படும் உறவுச் சிக்கல்களையும் மனஅழுத்தங்களையும் பற்றி திரைப்படம் உரையாடுகிறது.

***

இயக்குநர் ராமின் முதல் படைப்பான 'கற்றது தமிழ்' திரைப்படம், பால்யத்திலிருந்து தொடரும் காதலை ஓர் இழையாகவும் குழப்பமான கல்விமுறைகளாலும் அரசியல் கொள்கைகளினாலும் சமூகத்தில் ஏற்படும் பொருளாதார சமநிலைமையின்மையை இன்னொரு இழையுமாக கொண்டு பயணத்தி்ருந்தது. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு மொழியுணர்வை ஆயுதமாக படிக்கட்டாக பயன்படுத்திய அரசியல் கட்சிகள், தங்கள் இலக்கை அடைந்தவுடன் கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டன. ஆனால் அந்த உணர்வின் தூண்டுதலால் தமிழை மாத்திரமே அறிந்த தலைமுறை, உலகமயமாக்கத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திகைத்து நிற்கிறது. கொள்கைகளை உருவாக்கினவர்களின் அடுத்த தலைமுறை திரவியம் ஈட்ட டெல்லி வரை செல்லும் செல்வாக்கை பெற, கொள்கைகளை பின்பற்றின அப்பாவிகள் கூடுவாஞ்சேரியைத் தாண்ட முடியாமல் தேங்கிப் போனார்கள்.

அவ்வாறே 'தங்கமீன்கள்' திரைப்படமும் தந்தைxமகள் இடையிலான அன்பும் பாசமும் ஓர் இழையிலும், கல்விக்கூடம் எனும் நிறுவனம் மனப்பாடக் கல்வியை திணித்து சுயசிந்தனைகளை அழித்து குழந்தைகளின் மீது செலுத்துகிற வன்முறையையும் மனஉளைச்சலையும் பற்றி மற்றொரு இழையிலும் உரையாடுகிறது. குடும்பங்களில் உள்ள உறவுச்சிக்கல்கள், ஆதிக்கங்கள், உலகமயமாக்கலின் எதிரொலி நுகர்வுக் கலாச்சாரமாய் நடுத்தரவர்க்கத்தினரின் வாழ்வில் எதிரொலிப்பது போன்றவை கிளை இழைகள்.

***

நாகர்கோவிலின் சிறுநகரத்தில் பாத்திரங்களுக்கு பாலிஷ் போடும் வேலையைச் செய்பவன் கல்யாணசுந்தரம் என்கிற கல்யாணி. பெருநகர் பெயர்ந்து பொருளீட்டுவதை விடவும் தன்னுடைய பாச மகளின் அருகாமையிலேயே இருக்கும் சுதந்திரத்திற்காக நீண்ட வருடங்களாகவே சொற்ப வருமானத்துடனும், சமயங்களில் அது கிடைக்காமலும் அங்கேயே பணிபுரிகிறான். 'சில்வர்மேனாக' தன்னைக் காண மகள் சந்தோஷப்படுவாள் என்பதற்காக பணியின் போது தன் முகத்தில் படும் கெமிக்கல் கறையை துடைக்காமல் அப்படியே பள்ளிக்குச் செல்கிறான். அதற்காக அவனை முட்டாள் என்று பொருள் கொள்ள முடியாது. அவமானத்தை சகிக்க முடியாதனின் பொருட்டு தன்னுடைய தந்தையின் பொருளாதார உதவியை மறுக்கக்கூடிய சுயமரியாதை அவனுக்கு இருக்கிறது. பணத்தை வைத்துக் கொண்டே அலைய வைக்கும் நண்பனிடம் கோபத்தைக் காட்ட முடிகிறது. சிக்கலான சூழலில் வீட்டை விட்டு வெளியேற முடிகிறது. விலையுயர்ந்த நாயை மகள் கேட்கும் போது, அவளிடம் சொல்லி புரிய வைத்து விடலாம்தான் என்றாலும் அவளும் புரிந்து கொள்ளக்கூடியவள்தான் என்றாலும், தன்னுடைய தந்தைமையை அவளிடம் நிரூபிக்க, தனக்கு உடம்பு சரியில்லை என்றவுடன் உதவி செய்ய தானாக வீட்டை விட்டு கிளம்பி விட்ட அவளின் அற்புதமான பாசத்திற்கு கைம்மாறாக தன்னுடைய சக்திக்கு மீறி எங்கெங்கோ பயணம் செய்ய முடிகிறது, எவரெவர் காலிலோ விழ முடிகிறது.

ஒரு கீழை பிரதேச நடுத்தரவர்க்க தகப்பனின் சித்திரம் கல்யாணியின் மூலமாக அதன் விசித்திரங்களோடும் விதிவிலக்குகளோடும் உணர்வுகளோடும் அற்புதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பாத்திரத்தின் பெயரே 'கல்யாணி' என்ற தாய்மையின் அடையாளத்துடன் சித்தரிக்கப் பட்டிருக்கிறது. இவனின் தந்தை, இவன் குழந்தையுடனேயே சுற்றுவதைக் கண்டு 'குழந்தைக்கு எதுக்குடா ரெண்டு அம்மா, பொறுப்பா போய் சம்பாதிக்கறவன்தாண்டா அப்பன்" என்று எரிச்சல்படுகிறார். இயக்குநர் ராம், கல்யாணியாகவே அற்புதமாக உருமாறியிருக்கிறார்.

கல்யாணியின் மனைவியாக நடித்திருக்கும் ஷெல்லி கிஷோர், உதிரிப்பூக்கள் 'அஸ்வினி'யை நினைவுப்படுத்தும் சோகம் இழையோடும் இயல்பான முகத்தைக் கொண்டிருக்கிறார். பொதுவாக பிரபலம் அல்லாத இயக்குநர்கள் நாயகர்களாக நடிக்கும் போது அதை சமன் செய்ய பிரபலமான நாயகியை நடிக்க வைப்பார்கள். வணிக காரணங்களாகக் கூட இருக்கலாம். ராம் அதைச் செய்யாமலிருப்பதே தன் படைப்பின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. 'பணம் இல்லாதது இல்லைங்க பிரச்சினை. பணம் இருக்கற இடத்துல பணம் இல்லாததுதான் பிரச்சினை' என்று மாமனாரின் வீட்டில் அண்டி வாழும் சூழலை மிகச் சரியாக புரி்ந்து கொண்டு அதிகம் சம்பாதிக்காத கணவனுக்கும் குத்திக் காட்டும் மாமியாருக்கும் இடையில் புழுங்கித்தவிக்கும் ஒரு சராசரியான மருமகளின் சித்திரத்தை கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். வீட்டை விட்டு வெளியேறும் கணவன் கோபத்துடன் தன்னை அழைக்கும் போது, கதவைச் சாத்திக் கொண்டு அழுகையுடன் போக மறுப்பது, சிக்கலான சூழலில்பெண்கள் உணர்ச்சிவசப்படாமல் சமயோசிதமாக யதார்த்ததிற்கு ஏற்ற முடிவையே எடுப்பார்கள் என்கிற பிரத்யேக நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் காட்சி சரியாகவே பதிவாகியுள்ளது. கணவன் தன்னை சரியாக புரிந்து கொள்ளவில்லையோ என்கிற கலக்கத்தில் 'நானும செல்லம்மா மாதிரிதாங்க' எனும் காட்சிகள், வீட்டின் உள்அரசியல் தாங்காமல் வெளியே கணவனுக்காக காத்திருந்து வெளியே சென்று உரையாடுவது போன்ற காட்சிகள், மருமகள்களின் துயரங்களின் சாட்சியாக இருக்கின்றன.

திரைப்படத்தி்ன் பிரதான பாத்திரங்களுள் ஒன்றான செல்லம்மா. கல்யாணியின் மகள். சாதனா என்கிற சிறுமி இந்தப் பாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். குழந்தைகளுக்கான தேசிய விருது பெறத் தகுதியானவர் என்று தோன்றுகிறது. குமாஸ்தாக்களை உருவாக்குவதற்காக ஆங்கிலேயேர் காலத்தில் உருவாக்கப்பட்ட கல்விமுறையை அதிகம் மாற்றமின்றி இன்னமும் புழக்கத்தில் வைத்திருக்கும் பள்ளிகள், குழந்தைகளின் சுயசிந்தனைகளை அழித்து மனப்பாடக்கல்வியையே பெரிதும் ஊக்குவிக்கின்றன. இதனாலேயே இதில் பின்தங்கியிருக்கும் செல்லம்மா, கற்றல் திறனில் குறையுள்ளவளாக கருதப்படுகிறாள். ஆதிமனிதன் இயற்கையின் மூலமாகவே  பல கற்றல்களையும் புரிதல்களையும் பெற்றான். செல்லம்மாவும் இயற்கையை மிக நுட்பமாக கவனிப்பதின் மூலமாகவே தன் கற்றல் திறனை வளர்க்கிறாள். ஆனால் துரதிர்ஷ்டமாக நடைமுறையில் இது 'கிறுக்குத்தனமாகவே' புரிந்து கொள்ளப்படுகிறது. W -க்கும் M -க்கும் உள்ள வேறுபாட்டை கரடியாக கத்தி கற்றுத் தரும் ஆசிரியையிடமிருந்து புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், இயற்கையின் மூலமாகச் சொல்லித் தரும் தகப்பனிமிருந்து உடனே கற்றுக் கொள்ள முடிகிறது. எனில் குறை எதன் மீது என்பது சமகால கல்வித்துறையை முன்னிட்டு நாம் சிந்திக்க வேண்டிய விஷயம்.

மாவட்ட ஆட்சித் தலைவர் இறந்து போவதால் பள்ளி விடுமுறை அறிவிக்கப்படும் போது கைத்தட்டி மகிழந்து பிறகு தண்டனை பெறும் செல்லம்மா. 'பிறந்த நாள் உடையணிந்து "யாரும் உன்னை இன்னிக்கு திட்டமாட்டாங்க" என்று சொல்லப்படும் போது "அப்ப இதையே ஸ்கூல் யூனிபார்மா வெச்சா நல்லாயிருக்குமில்ல" என்று சொல்லும் செல்லம்மா. 'ஒரு கேள்விக்கு ரெண்டு பதில் சொன்னா பெயில் போடுவாங்க' எனும் செல்லம்மா..இப்படி படம் முழுமையும் பார்க்க நேரும் செல்லம்மாவின் பல காட்சிகளிலிருந்து பள்ளிக்கூடங்கள் சிறைக்கூடங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் அவலத்தையும் இயந்திரத்தனமான கல்விமுறையையும் குழந்தைகளை ரேஸ்குதிரைகளாக மாற்றித்தரும் கல்விக்கூட முதலாளிகள் கொள்ளையடித்துக் கொழுத்துக் கொண்டிருப்பதையும் உணர முடிகிறது. கற்பனையில் தன்னை எவிட்டாவாக உருமாற்றிக் கொண்டு தன் தோழியிடம் செல்லம்மா சொல்லும் கதை ஓர் அழகான குறும்படம்.

சொற்ப நேரமே என்றாலும் எவிட்டா மிஸ்-ஸின் கிளைக்கதை வண்ணநிலவனின் சிறுகதை போல் பூடகமான சோகத்துடன் அற்புதமாக பதிவாகியிருக்கிறது. மற்ற ஆசிரியைகள் செல்லம்மாவிடம் கடுமையாக நடந்து கொள்கிற போது எவிட்டா மிஸ் மாத்திரமே கருணையுடன் நடந்து கொள்கிறார். அதனாலேயே செல்லம்மாவிற்கு எவிட்டா மிஸ்-ஸை மிகவும் பிடித்து விடுகிறது. எவிட்டாவிற்கு திருமணமாகி பள்ளியை விட்டு விலகியவுடன் மகளின் வேண்டுகோளின்படி அவரின் வீட்டிற்குச் செல்கிறான் கல்யாணி. ஆனால் அவர் அங்கு மனைவியை சந்தேகப்படும் ஆணாதிக்க கணவனிடம் சிக்கி அவதிப்படுகிறார் என்பதை வசனங்கள் பெரிதாக ஏதுமின்றி கண நேரத்திலேயே பார்வையாளர்களுக்கு  புரியும் படியாக காட்சியமைத்திருக்கிறார் இயக்குநர். அதற்காக மனிதர்களை கருப்பும் வெள்ளையுமாகவும் சித்தரிக்கவில்லை. அந்தக் கணவன் தனது சந்தேகம் தீர்ந்தவுடன், கல்யாணியிடம் ஆதரவாக தோள் மீது கைபோட்டு பேசுகிறான். இதே போல் இன்னொரு காட்சியில் கல்யாணியின் தங்கை பாத்திரமும். நாயக்குட்டி வாங்குவதற்காக அதிகப் பணத்தை கேட்கும் அவனிடம் தர மறுக்கிற தங்கை, அவன் வாங்கி வரும் சாக்லெட்டுக்காக மகனிடம் சண்டை போட்டு வாங்குகிறார். இயக்குநர் நினைத்திருந்தால் தங்கை பாத்திரத்தை ஒரு வில்லியாகவே சித்தரித்து கல்யாணி பெறப்போகும் அனுதாபத்தைக் கூட்டியிருக்கலாம். ஆனால் அதுவரை பெரிய மனுஷியாக சண்டை போடும் தங்கை, சாக்லெட்டுக்காக சண்டை போடும் போது சிறுகுழந்தையாக மாறி, அந்தப் பாத்திரமே வேறு நிறத்தில் மாறும் அதிசயம் நடக்கிறது.  பூ ராம், ரோகிணி, பூரிக்காக தற்கொலையை தள்ளிப்போடும் சிறுமி நித்யஸ்ரீ  என்று பல துணை பாத்திரங்கள் இத்திரைப்படத்திற்கு உறுதுணையாக நின்றிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாகள் அர்பிந்து சாரா நிலப்பிரதேசங்களின் அழகியலை, காட்சிகளின் உணர்வுகளை சிறப்பாக பதிவாக்கியிருக்கிறார். அறையின் எல்லா ஜன்னல்களையும் அடைத்து விட்டு தேர்விற்காக தயார்செய்ய செல்லம்மா கட்டாயப்படுத்தப்படும் காட்சியில், அறையின் உச்சக்கோணத்தில் இருந்து பதிவாகும் காட்சிகள் அதுவோர் சிறையென்பதை கச்சிதமாக பார்வையாளனுக்கு உணர்த்துவது ஓர் உதாரணம். யுவனின் இசையில் ஆனந்த யாழ் பாடல் உன்னதமான அனுபவத்தைத் தருகிறது. பின்னணி இசையும் பல காட்சிகளில் அதனதன் உணர்வுகளுக்கு பொருத்தமாக பின்தொடர்ந்தாலும், சில காட்சிகளில் குறிப்பாக ராம் கதறியழும் காட்சிகளில், சோகத்தைக் கூட்டுகிறேன் பேர்வழி என்று அதீதமாக ஒலித்து நெருடலை ஏற்படுத்துகிறது.


முன்னரே குறிப்பிட்டபடி இத்திரைப்படம் முழுமையாய் ஒரு சிறந்த அனுபவத்தைத் தரா விட்டாலும் சில நுட்பமான காட்சிகளும் நுண்ணுணர்வுடன் உருவாக்கப்பட்ட சித்திரங்களும் சிறப்பானதாக வெளிப்பட்டு அக்குறையை சமன் செய்கிறது.  ஒரு காட்சியின் பின்னணியிலுள்ள நிலப்பிரதேசத்தின் தன்மையை பார்வையாளனுக்கு கடத்த. உணர்த்த இயக்குநர் மிகவும் மெனக்கெடுகிறார் என்பதாகப் படுகிறது. நாகர்கோவிலின் சிறுநகரமும், மலைகளும், இன்னமும் பெரிதாக கட்டிடங்கள் உருவாகிக் கொண்டிருக்கும் பள்ளியும், கொச்சின் நகரமும் ஆகிய காட்சிகள் இயங்கும் பின்னணிகள், அதன் அழுத்தத்தை பார்வையாளனிடம் வலுவாக செலுத்துகின்றன. பளளிக்கூட கட்டிடம் காட்டப்படும் அதே காட்சியில் பெருத்த சப்தத்துடன் தண்டவாளத்தில் பயணிக்கும் ரயிலின் காட்சி, குழந்தைகளின் கற்பனை உலகை பள்ளிக்கூடங்கள் நசுக்கி மிதித்தொழிக்கின்றன என்பதாகவே உணாத்துகிறது. கல்யாணி தன் நண்பனிடமிருந்து வாங்கப் போகும் கடனுக்காக காத்திருக்கும் வேளையில் அங்குள்ள சிறுவர்கள்.. 'ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்தது' என்று விளையாடுகிறார்கள். அதே சமயத்தில் செல்லம்மா தனது பள்ளியில் ஆங்கிலப்பாடலுக்கு சரியாக ஆடத்தெரியாமல் ஆசிரியயையின் கண்டனத்திற்கு ஆளாகி அவமானப்படுகிறாள். நம் கலாசார வேர்களிடமிருந்து துண்டித்துக் கொண்டு  அயல் கலாசாரத்தின் வேடங்களுக்கு இயங்கப் பழகி விட்டோம் என்பது போன்ற பல நுட்பமான காட்சிகள் இத்திரைப்படத்தை ஒரு சுவாரசியமான அனுபவத்திற்கு உள்ளாக்குகிறது.

***

தமிழ் சினிமாவில் ஏறக்குறைய அனைத்து திரைப்படங்களுமே அதற்கேயுரிய செயற்கைத்தனங்களுடனும் யதார்த்த வாழ்விற்கு அந்நியமாய் இயங்குகிற மிகைகளுடன் வெளிவருகிற போது 'தங்கமீன்கள்' போன்ற அபூர்வமான விதிவிலக்குகளே, தமிழ் சினிமாக்களின் காண்பனுவத்தை அர்த்தபூர்வமாக்குகிறது. இதனுள் உள்ள சில குறைகளையும மீறி சிறந்த படம் எனும் தகுதியை தக்க வைத்துக் கொள்வதே இதன் வெற்றி. ஆனால் இத்திரைப்படத்திற்கான எதிர்வினைகளும் விமர்சனங்களும் அபத்தமான புரிதல்களும், சினிமா எனும் கலையை நுகர்வதில் நாம் எத்தனை பின்தங்கியும் நுண்ணுணர்வு இன்றியும் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. தர்க்கத்தி்ற்கு பொருந்தாததாக சொல்லப்படும் ஏறக்குறைய அனைத்து புகார்களுக்கும் இத்திரைப்படத்திலேயே அதற்கான நியாயங்கள் உள்ளன என்பதை சற்று உன்னிப்பாக பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.

உலகமயமாகத்தின் விளைவாக வேலைவாயப்புகள் பெருகி ஓர் அடிமட்ட தொழிலாளி கூட கணிசமான தொகையை ஊதியமாக பெற்றுவிடக்கூடிய சமகாலத்தில் கல்யாணி ஏன் ஸ்கூல் பீஸ் கூட கட்டமுடியாதவாறு சொற்ப சம்பளத்தில் துயரப்படுகிறான்? எப்போது வேண்டுமானாலும் தன் மகளை பார்க்கக்கூடிய அருகாமைக்காகத்தான் என்று படத்தின் காட்சிகளிலேயே விளக்கப்படுகிறது. குறைந்த சம்பளத்திற்காக கொச்சினுக்கு அவன் பயணப்படுவதற்கான முடிவு கூட மிக நெருக்கடியான சூழலில் வேறு வழியில்லாமல்தான் எடுக்கப்படுகிறது.

தங்க மீனாக மாறுவதாக கனவு காண்பதின் மூலம் தந்தையே குழந்தையிடம் தற்கொலை உணர்வை தூண்டுவதாக இன்னொரு புகார். படத்தின் முதல் காட்சியிலேயே குழந்தைகள் விளையாட்டுக் கற்பனையாக குளத்திலிருக்கும் தங்க மீன்களைப் பற்றி பேசிக் கொள்வதாக காட்சிகள் வருகின்றன. அதைத் தொடர்ந்து செல்லம்மா அதைக் காணச் சென்று குளத்திற்குள் இறங்கி தந்தையால் தடுக்கப்பட்டு விடுகிறாள். பிறகு மரணத்தைப் பற்றி இருவரும் நிகழ்த்தும் உரையாடலில் 'மலைல செத்தா மேகம் ஆயிடுவாங்க.காட்ல செத்தா மரமாயிடுவாங்க..குளத்துல செத்தா தங்கமீனாயிடுவாங்க' என்கிறார் தந்தை. இயற்கையின் மூலம் கற்பித்தலை நிகழ்த்தும் தந்தை, அதன் மூலமே குழந்தையின் கற்பனைத்திறனை ஊக்குவிக்கும் விதமாக நிகழும் இந்த உரையாடல் மிக இயல்பானதாக அமைகிறது. தங்கமீன்களை காண விழையும் மகளின் ஆசையாக அந்த சூழலில் தற்காலிமாக நிறைவேற்ற விரும்பும் ஒரு தகப்பனின் விருப்பமாகவும் இதை உணரலாம். ஆனால் குழந்தையின் அகத்திற்குள் மரணத்தைப் பற்றின சிந்தனைகளை வளர்ப்பது பள்ளிக்கூடம் தரும் மனஅழுத்தம்தான். அவளை முட்டாளாக காணும் சமூகம்தான்.

நாலாயிரம் ரூபாய் சொற்ப சம்பளத்தில் வாட்ச்மேனாக பணிபுரியும் கல்யாணி, ஏன் மகளுக்கு விலையுயாந்த நாய்க்குட்டியை வாங்கித்தர சம்மதித்து அத்தனை சிரமப்படுகிறான்?. 'எங்கோ அலைந்து திரிந்து கொண்டிருக்கும் நாய்க்குட்டியை தகப்பன் பிடித்து வருவான் என்பதாகத்தான் குழந்தை நினைக்கிறது. இதனை இத்தனை அதிகமான விலைக்கு விற்பார்கள், செல்வந்தர்கள் கெளரவத்திற்காக இதை வளர்ப்பார்கள் என்பதெல்லாம் குழந்தைகள் உலகம் அறியாதது. தன் குழந்தைக்காக எதையுமே செய்யாமலிருப்பதாக உணரும் கல்யாணி, தன் உடல்நலக்குறைவை அறிந்தவுடன் தன்னிடம் வருவதற்காக எதையும் யோசிக்காமல் தன் மகள் வீட்டை விட்டு கிளம்பி விட்டதாக அறியும் கல்யாணி, மிகவும் நெகிழ்ச்சியடைந்த நிலையில் அவளின் விருப்பமான நாய்க்குட்டியை எப்பாடு பட்டாவது வாங்கித்தர நினைக்கிறான். அதன் மூலம் தன் பதில் அன்பை நிரூபிக்க முடியும் என உறுதியாக நம்புகிறான். இதற்கான காட்சிகள் படத்திலேயே இருக்கின்றன.

இதன் பின்புலமாக நாம் உணர வேண்டியது, பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் சந்தைப்படுத்தல்களின் தந்திரங்களின் மூலம் வாடிக்கையாளர்களின் ஆழ்மனங்களில் தங்களின் பொருட்களை வாங்கும் விருப்பத்தை பல்வேறு ஊடகங்களின் மூலமாக தொடர்ந்து விதைத்துக் கொண்டேயிருக்கிறார்கள் என்பதுதான். செல்லம்மாவும் நாய்க்குட்டியைப் பற்றி தொலைக்காட்சி விளம்பரத்தின் மூலமாகவே அறிகிறாள். நுகர்வுக்கலாச்சாரத்தின் பலியாடுகளாக நாம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறோம் என்பதை நம் வீட்டை சற்று சுற்றிப் பார்த்து எத்தனை தேவையில்லாத பொருட்களின் மூலம் அடைத்து வைத்திருக்கிறோம் என்பதிலிருந்து உணரலாம்.

கல்யாணி ஏன் மனநிலை பிறழ்ந்தவன் போல் சாலையில் ஒருவரிடமிருந்து லேப்டாப்பை பிடுங்கிக் கொண்டு ஓடி அடிவாங்குகிறான் என்பது போன்ற விதிவிலக்கான காட்சிகளைத் தவிர மற்றவை அனைத்துமே அதனதன் தர்கக ஒழுங்கிற்குள்தான் இயங்குகின்றன. இதனை கல்யாணியாக நாம் உணர்ந்தால்தான் அதைப் புரிந்து கொள்ள முடியும். நம்முடைய செளகரியமான நிலையிலிருந்து அல்ல. ஏன் நாமே சில சிக்கலான நெருக்கடியான தருணங்களில் உணர்வு சார்ந்த முடிவுகளை எடுத்து விட்டு பிறகு நிதானமாக யோசிக்கும் போது அது எத்தனை அபத்தமானதாக இருந்தது என்று பரிசீலனை செய்து கொள்கிறோம். அவ்வாறே கல்யாணியின் வாழ்வை நாம் வெளியிலிருந்து பாாத்து விட்டு முடிவுகளை எடுக்க முடியாது.

கல்யாணியை ஏன் ஒரு முட்டாளாக தன்னிடமிருந்து அந்நியப்படுத்திக் கொண்டு சில பார்வையாளர்கள் உணர்கிறார்கள் என்பதை யூகித்துப் பார்த்தேன். முன்பிருந்ததையும் விட உலகமயமாக்கத்தின் விளைவிற்கு பிறகு எவரையும் எதையும் அதன் பொருளாதார அந்தஸ்தை வைத்தே எடை போடும் பிளாஸ்டிக்தனமான அளவுகோலிற்கு பழக்கப்பட்டிருக்கிறோம்.  இந்த சூழலில் ஒரு  தோல்வியுற்ற மனிதனாக, மகளின் மீதான பாசம் ஒன்றையே பிரதானமாக நினைக்கும் கல்யாணி நமக்கு அறிவற்றவனாகத் தெரிகிறான். நகரத்திற்கு புலம்பெயர்ந்து சம்பாதிக்கத் தெரியாத முட்டாளாகத் தெரிகிறான். அவனது அழுகை நம்மை எரிச்சலூட்டுகிறது. அன்பு, பாசம் போன்ற மெல்லுணர்ச்சிகளை, பொரூளீட்டுவதின் மோகம் நசுக்கி சிதைத்திருக்கிறதோ என்று சந்தேகமாக இருக்கிறது.  'வெளியே போய் பொறுப்பா சம்பாதிக்கறவன்டா அப்பன்' என்று 'நல்லாசிரியர் விருது' பெற்றிருக்கும் தந்தையாலேயே அறிவுறுத்தப்படுகிறான்.

சில குறைகளையும் மீறி தங்கமீன்கள் பார்வையாளகளால் வரவேற்கப்பட வேண்டியதொரு கலைப்படைப்பு என்பதில் சந்தேகமில்லை. இது போன்ற திரைப்படங்கள் வெற்றி பெறுவதன் மூலம்தான் இன்னமும் நல்ல திரைப்படங்கள் வெளிவருவதற்கான வாய்ப்பையும் சூழலையும நம்மால் உண்டாக்க முடியும்.


 suresh kannan