Thursday, May 21, 2015

பறவையின் சிறகும் அறத்தின் குரலும்


 
தமிழ் ஸ்டூடியோ ஒழுங்கு செய்திருந்த 'The Invisible Wings' என்கிற ஆவணப்படம் மற்றும் அதைத் தொடர்ந்து  ஜெயகாந்தன் இயக்கிய 'யாருக்காக அழுதான்' படத்தின் திரையிடல் நிகழ்விற்கு சென்றிருந்தேன்.

முதலில் ஆவணப்படம். இதை இயக்கியவர் ஹரி என்கிற கேரள இளைஞர். திரைப்பட இயக்குநராகும் ஆர்வத்தில் கற்று சில இயக்குநர்களிடம் பணிபுரிந்துள்ளார். ஆனால் வெகுசன சினிமாவில் தன்னைத் தொலைத்து விடாமல் தனக்கான பிரத்யேக தேடுதலோடு இயங்குகிறார். எர்ணாகுளத்தில் டீக்கடை நடத்தி விரும் விஜயன் என்பவரைச் சந்திக்கும் போது அவரது வாழ்க்கையைப் பற்றிய சுவாரசியமான தகவல்களைப் பற்றியும் பின்னணியைப் பற்றியும் அவர் அறிய நேர்கிறது. உடனே அதைப் பற்றியே ஓர் ஆவணப்படம் எடுக்கலாமே என்று தோன்ற அதற்கான முயற்சியில் இறங்கினார். இதை ஏதோ ஒரு சாதாரண படமாக உருவாக்கி முடித்து விட முடியாது என்கிற உள்ளுணர்வோடு சுமார் 19 லட்சம் செலவழித்து ஒரு தரமான படைப்பை பதிவு செய்திருக்கிறார். இதற்காக நண்பர்களிடம் கடனாக பெற்ற நிதியை திருப்பியளிக்க அவர் செய்வதுதான் இன்னுமொரு சாதனை. தென்னிந்தியா முழுவதும் சைக்கிளிலேயே பயணம் செய்து தனது ஆவணப்படத்தை எல்லோரிடமு்ம் காண்பிக்கிறார். அவர்கள் தரும் தொகையை சேர்த்து தனது கடனை அடைப்பது என்பது ஏற்பாடு. வழியில் தென்படும் ஏதாவது ஒரு நபர் இந்த ஆவணப்படத்தை பார்க்க விரும்பினால் கூட அதற்கான ஏற்பாடுகளோடு (லேப்டாப், ஹெட்போன்) செல்கிறார். இது இயக்குநர் ஹரியின் வாழ்வியல்.

இன்னொரு புறம் ஆவணப்படத்தில் பதிவாகியுள்ள விஜயனின் வாழ்க்கையைப் பார்க்கலாம். முன்பே குறிப்பிட்டபடி எர்ணாகுளத்தில் கத்ரிகடவு எனும் ஊரில் டீக்கடை வைத்திருப்பவர் விஜயன். தனது பிரியமான மனைவி மோகனாவுடன் எளிய வாழ்க்கை. இப்போது அவருக்கு சுமார் 50 வயதிருக்கலாம். அவருக்கு சிறுவயதிலிருந்தே உள்ளுக்குள் தீ மாதிரி பற்றிக் கொண்டேயிருக்கும் ஒரு கனவு. 'தாம் செல்வந்தராக இல்லாமல் போனாலும் என்ன, இந்தப் பரந்த உலகை அதன் ஒவ்வொரு துளி அழகையெல்லாம் பயணம் செய்து தம் வாழ்நாட்களுக்குள் கண்ணால் கண்டு தீர்த்து விட வேண்டும்.  சிறுவயதிலேயே வீட்டில் உள்ள பொருட்களை விற்று சுற்றிப் பார்க்கச் சென்றது ஒரு துவக்கம். இப்போது தமது சிறிய உணவகத்தில் விற்றுக்கிடைக்கும் சொற்ப தொகைகளை சேர்த்து சேர்த்து சில வருடங்களுக்கு ஒருமுறை தனது பிரம்மாண்ட லட்சிய பயணத்தின் ஒவ்வொரு பகுதியாக நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். அவரது பயணத்திற்கும் ஆர்வத்திற்கும் முடிவேயில்லை. 'இந்தப்பணத்தில் நிலம் வீடு வாங்கிப் போடலாமே' என்று சுற்றியுள்ளோர் செய்யும் ஏளனம் எதுவும் அவரது கனவிற்கு தடையாக வர அவர் அனுமதிப்பதில்லை. 'உலகத்தைச் சுற்றும் என் கனவை இன்னமும் ஆர்வத்துடன் தீர்மானமாகத் தொடர்வேன்' என்று உறுதிப்பட அவர் சொல்லும் அழுத்தமான முகபாவத்துடன் ஆவணப்படம் நிறைகிறது.

இன்றைய தேதியில் குறும்படம் எடுப்பதென்பது, சமூக வலைத்தளத்தில் தமக்கும் தோன்றும் ஒரு குறிப்பை ஜாலியாக எழுதிப் போடுவது மாதிரி பெரும்பாலும் மிக மிக அலட்சியமாக நடந்து கொண்டிருக்கிறதோ என்கிற சந்தேகம் சில குறும்படங்களைப் பார்க்கும் போது தோன்றுகிறது. அவற்றை உருவாக்குபவர்களிடம் நிறைய ஆர்வமும் கனவும் இருந்தாலும் அதை செயல்படுத்துவதற்கான உழைப்பும் திட்டமிடலும் மெனக்கெடலும் இல்லையோ என்றும் தோன்றுகிறது. ஹரி இயக்கியுள்ள இந்தக் குறும்படம் மிகுந்த தரத்துடனும் அழகியலுடனும் படத்தின் மையத்திற்கு ஏற்ப அர்த்தப்பூர்வமான பின்னணிகளுடனும் உருவாக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பத்து நிமிடத்திற்குள் ஓர் எளிய ஆனால் சாதனை மனிதருடைய வாழ்வின் சாரத்தையும் அவரது கனவின் பரிமாணங்களையும் கச்சிதமாக பதிவு செய்வதும் அதை பார்வையாளர்களுக்கு கடத்துவதும் சாதாரணமான விஷயம் அல்ல. 


இயக்குநர் ஹரி இதற்காக மிகவும் மெனக்கெட்டிருக்கிறார் என்பது அவருடைய உருவாக்கத்தைப் பார்க்கும் போது தெரிகிறது. விஜயனின் டீக்கடையில் உள்ள ஈஃபில் டவரின் மினியேச்சர், படிப்பறை மேஜையின் மீதுள்ள National Geographic இதழ், துவக்கத்தில் காட்டப்படும் ஆங்கில மேற்கோள் மற்றும் பகவத் கீதையின் சில வரிகள், உலக வரைபடம், இயற்கையின் அழகான பின்னணியில் தோன்றும் விஜயனின் சித்திரங்கள், பயணத்தின் துளிக்காட்சிகள், சிகரம் போல ஆவணப்படத்தின் தலைப்பு போன்றவை இந்தக் குறும்படத்தை அழகாக மட்டுமல்லாது பொருள் பொதிந்த சலனக்காட்சியாகவும் நம்முன் நிறுத்துகிறது. இந்த ஆவணப்படத்திற்கு பிறகு திரையிடப்பட்ட 'யாருக்காக அழுதான்' திரைப்படத்தின் துவக்கத்தில் கண்ணதாசனம் எழுதிய பாடல் ஒன்று வருகிறது. அதன் முதல் வரி இப்படியாக அமைந்திருக்கிறது. 'உருவத்திலே இவன் மனிதன், உள்ளத்திலே ஒரு பறவை.' இந்தப் படிமத்தை விஜயனுக்கும் மிகப் பொருத்தமானதாக கருத முடியும்.

விஜயனுடையது பொதுவாக ஐரோப்பிய மனநிலையைச் சார்ந்தது. புதிய புதிய அனுபவங்களுக்கான தொடர்ந்த தேடலும் வருடத்தின் பாதி நாள் உழைப்பும் பாதி நாள் பயணமுமாக அமைந்தது. இந்திய வாழ்வியல் கலாசாரத்தில் இம்மாதிரியான மனநிலை படிவது மிக அபூர்வமானது. தன் எதிர்கால சந்ததிகளுக்காக  உழைத்து உழைத்து பொருளீட்டி பாதுகாத்து அந்திமத்தில் எவ்வித உலக அனுபவங்களும் அன்றி மறைவது. வீட்டிற்கும் அலுவலகத்திற்குமான குறுகிய பாதையைத் தவிர வேறெதையும் காணாமலேயே செத்துப் போகிறவர்களே அதிகம். தான் வாழ்கின்ற இடம் உள்ளிட்டு பிற பிரதேசங்களைப் பற்றி புத்தகங்களின் வாயிலாக அறிய முற்படுகிறவர்கள் கூட சொற்பமே. இதை உத்சேசித்துதான்  மதவுணர்வுகளின் வழியாக ஆன்மிகப் பயணங்கள் முன்னோர்களால் நமக்கு பழக்கப்படுத்தப்பட்டன. பயணங்களின் போது பலவிதமான மனிதர்களையும் சூழல்களையும் அனுபவங்களையும் கடக்கும் போது நம மனம் விசாலமடைகிறது. அதிகம் பயணம் செய்கிறவர்களைக் கவனித்தால் அவர்கள் பெருந்தன்மையுடையவர்களாகவும் மனிதர்களை நம்புகிறவர்களாகவும் அசெளகரியமான இடத்திலும் சூழலிலும் தம்மை எளிதில் பொருத்திக் கொள்ள இயல்கிறவர்களாகவும் காணலாம்.

இந்தக் குறும்படம் முடிந்தவுடன் பார்வையாளர்களிடமிருந்து கேள்விகள் பெறப்பட்டன. ஓர் பிரதியை சரியாக உள்வாங்கிக் கொள்வதிலிருந்தும் நமக்கு அந்நியமான அனுபவத்தை அதற்குள் செல்ல முடியாமல் நம்முடைய குறுகிய கூட்டிலிருந்தே அமர்ந்து சிந்திப்பதின் மூலம் நாம் எத்தனை பின்தங்கியிருக்கிறோம் என்பதையே நான் உட்பட எழுப்பிய அந்த அபத்தமான கேள்விகள் உணர்த்தின. இதற்குப் பதிலாக வெறும் கைத்தட்டுதல்களின் மூலம் நம் பாராட்டை தெரிவிப்பதோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம் என்று தோன்றியது. கூட்டத்தில் நம்முடைய அறிவை வெளிப்படுத்துகிறோம் என்கிற நோக்கத்தில் நம்முடைய அறியாமையையே முன்வைக்கிறோம். பார்வையாளர்களைச் சோர்வடைய வைப்பதற்காக இதை நான் கூறவில்லை. நம்முடைய குரலை நாமே கேட்கும் விருப்பத்தில் ஏதொவொன்றை கேட்பது என்றல்லாமல் பொருள் பொதிந்த கேள்விகளை முன்வைப்பதுதான் தொடர்புள்ள படைப்பாளிகளை மகிழ்ச்சிப்படுத்துவதோடு அவர்களின் அங்கீகரிக்கும் வழியாகவும் அது அமையும்.

பயணம் பற்றி அ.முத்துலிங்கம் எழுதிய கட்டுரையின் ஒரு பத்தி இவ்வாறு அமைகிறது. ' எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகொண்டது யார் என்று கேட்டால் எந்தப் பள்ளிச் சிறுமியும் உடனே பதில் கூறுவாள். ஆனால் Edmund Hillary மலை ஏறுவதற்கு முன்பே பலர் முயற்சி செய்து அந்த முயற்சியில் இறந்துபோய் இருக்கிறார்கள். George Mallory முதல் தரம் எவரெஸ்ட்டில் ஏறியபோது வெற்றிபெறவில்லை. இரண்டாவது முயற்சியிலும் தோல்வி கண்டார். அப்பொழுது பத்திரிகைக்காரர்கள் அவரிடம் கேட்டார்கள், 'நீங்கள் எதற்காக எவரெஸ்டில் ஏறுகிறீர்கள்?' அப்பொழுது ஜோர்ஜ் தனது உலகப் புகழ்பெற்ற பதிலைக் கூறினார். 'Because it is there.' ஏனென்றால் அது அங்கே இருக்கிறது. அதுதான் காரணம். அதனிலும் பெரிய காரணம் தேவையில்லை. மனித முயற்சிகளுக்கு அது சவாலாக இருக்கிறது, ஆகவே அதைக் கைப்பற்றவேண்டும்.'

ஆம். எந்தவொரு புதிய அனுபவத்தையும் கண்டடைய எந்தவொரு அற்ப காரணத்தையும் நடைமுறைச் சிக்கல்களையும் கருத்தில் கொள்ளத் தேவையேயில்லை. நாம் அந்த அனுபவத்தை அடைய வேண்டும் என்கிற ஒரு காரணத்தின் மகத்துவமே போதும். ஒருவகையில் ஆவணப்படத்தில் சித்தரிக்கப்படும் விஜயனும் அதை இயக்கிய ஹரியும் ஒரே மாதிரியான மனநிலையில் வார்ப்பில் இருக்கிறார்கள். ஒருவர் தம்முடைய எளிய சேமிப்பின் மூலம் உலக பயணத்தை மேற்கொள்ள தீராத ஆவலுடன் இருக்கிறார் என்றால் அதை இயக்கிய ஹரியும் இந்த ஆவணப்படத் தொகைக்கான கடனை தீர்க்க தொடர்ந்த பயணத்தில் இருக்கிறார். பயணத்தின் மூலம் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்ளும் இரு நபர்கள் இணைவது ஒரு மகத்தான அனுபவம்தான்.


ஆனந்தவிகடனில் வெளியான குறுநாவல் 'யாருக்காக அழுதான்' . தமிழ் திரையில் இதைப் படமாக்க அப்போது  பலர் அதிகம் விரும்பவும் சிலர் அதை சாத்தியப்படுத்துவதற்காக முன்வந்தும் இருந்திருக்கிறார்கள். ஜெயகாந்தனுடன் நட்பில் இருந்த காலக்கட்டத்தில் சந்திரபாபு, இதை ஜெயகாந்தன் தமக்காகவே எழுதியிருக்கிறார் என்று தீவிரமாக நம்பியிருக்கிறார். அவர் மீதிருந்த அன்பு காரணமாக ஜெயகாந்தனும் இந்த உணர்வை மறுக்கவில்லை. ஆனால் எந்தவொரு கதையிலும் பிரதான நடிகர்கள் தம்மை மிகைப்படுத்தி படைப்பின் மையத்தையும் ஆன்மாவையும் சிதைத்து விடுவார்கள் என்கிற எச்சரிக்கையுணர்வு காரணமாக இந்தக் கதைக்கான உரிமையை ஜெயகாந்தன் சந்திரபாபுவிற்கு அளிக்கவில்லை. இதனால் இவர்களின் நட்பு விலகல் அடைந்தது.

சேவாஸ்டேஜ் நடிகர் ஏ.வீரப்பன் என்பவரின் மீது ஜெயகாந்தனுக்கு நல்ல அபிப்ராயமிருந்தது. (இவர்தான் பிற்காலத்தில் பெரும்பாலான கவுண்டமணி- செந்தில் நகைச்சுவைப் பகுதியை எழுதியவர்) வீரப்பன் ஜெயகாந்தனின் தீவிர வாசகர். அவரது ஒவ்வொரு கதையையும் திரைப்படமாக்க வேண்டும் என்னும் எண்ணமுடையவர். ஆனால் அதற்கான வசதிகள் அற்ற எளியவர். எனவே இவருடைய பரிந்துரையின் படி காங்கிரஸ் தொண்டரான ஜி.என்.வேலுமணி என்கிற தயாரிப்பாளருக்கு 'யாருக்காக அழுதான்' கதையின் உரிமையை அளித்தார் ஜெயகாந்தன். கதையை சிதைக்காதவாறு எளிமையாக உருவாக்குவதும் அதில் பிரதான பாத்திரமான 'சோசப்பு' வேடத்திற்கு வீரப்பன் பொருத்தமாகயிருப்பார் என்பதும் ஜெயகாந்தனின் அனுமானமாக இருந்தது. ஆனால் அதற்கு மாறாக சம்பவங்கள் நடந்தன. இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி, ரங்காராவ், பாலையா போன்ற நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். என்றாலும் ஜெயகாந்தன் இதற்கெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டார்.

ஆனால் இயக்குநர் ஸ்ரீதர் கதாசிரியரிடம் கதையைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜெயகாந்தனுடன் தம்முடைய சேர்க்கைகளுடன் அமைந்த திரைக்கதையை விவரித்திருக்கிறார் "இறுதிக் காட்சியில் ஒரு மரச்சிலுவையின் முன்னர் தொழுது விழுந்து சோசப்பு உயிர் விடுகிறான்' என்பதாக படத்தின் முடிவை அவர் தெரிவித்த போது, ஜெயகாந்தன் தன்னுடைய பிரத்யேக சினத்துடன் சொன்ன பதில். "சரி. எனில் படத்தின் தலைப்பை 'யாருக்காக செத்தான்' என்று மாற்றிக் கொள்ளுங்கள். இப்படியாக அந்தச் சந்திப்பு இனிதே நிறைவுற்றது. என்றாலும் சில பல காரணங்களால் மனவேற்றுமைகளால் படம் நின்று போனது. சோசப்பு பாத்திரத்திற்கு சிவாஜி பொருத்தமாக இருக்க மாட்டார் என்கிற பிற்கால எண்ணமும் தயாரிப்பாளரின் இந்த மனவோட்டத்தை சிவாஜி அறிந்து கொண்டதும் படம் நின்று போனதற்கு காரணங்கள். (பின்னர் 1975-ல் பி.மாதவன் இயக்கத்திலும் வியட்நாம் வீடு சுந்தரம் எழுத்திலும் வெளிவந்த 'ஞானஒளி' இதன் பாதிப்பாக இருக்கலாம் என்பது என் யூகம். மட்டுமல்ல பாலச்சந்தர் அந்தச் சமயத்தில் உருவாக்கிய 'எதிர்நீச்சல்' நாடகத்திற்கும் 'யாருக்காக அழுதான்' கதைக்கும் தொடர்புள்ளதாக ஜெயகாந்தனின் நண்பர்கள் அவரிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் நாடகத்தைப் பார்த்த ஜெயகாந்தன் இதை ஏற்கவில்லை).

பின்னர் 'யாருக்காக அழுதான்' கதையை இயக்கும் வாய்ப்பு ஜெயகாந்தனையே தேடி வருகிறது. 'கருணையினால் அல்ல' என்கிற கதையை திரைப்படமாக்குவதற்காக முயன்று FFC-யிடம் அவர் மல்லாடிக் கொண்டிருந்த நேரம். கடன் பத்திரங்களில் கையெழுத்திட விரும்பாத தீர்மானத்தில் அந்தச் சமயத்தில் வந்த இந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டார் ஜெயகாந்தன். பிரதான நடிகரான நாகேஷை விட அதிக ஊதியம் தரப்பட வேண்டும் என்பது போன்ற அவரது தோரணைக்கே உரிய நிபந்தனைகள்.

இத்திரைப்படத்தை நான் கண்டு முடித்த பிறகு கதையானது முழுநீளத் திரைப்படத்திற்கானது அல்லவே என்று முதலில் இருந்தே எனக்குள் உறுத்திக் கொண்டிருந்த சந்தேகம் உறுதிப்பட்டது. இதை நல்லதொரு குறும்படமாக உருவாக்கியிருக்க முடியும். இந்த பிரக்ஞையானது ஜெயகாந்தனுக்கே இருந்திருக்கிறது. அதிலிருந்த குறைகளும் தன் முரட்டுத்தனமான பிடிவாதத்தினால் செய்த தவறுகளும் அவருக்கே தெரிந்திருக்கின்றன. ஒரு சம்பிரதாய திரைப்படத்தின் நீளத்தின்படி விநியோகஸ்தர்கள் தந்த அழுத்தத்தினால் செய்த சமரசங்கள் பற்றி அவரே வாக்குமூலம் தந்திருக்கிறார். படத்தின் முதலில் வரும் இயக்குநரின் அசரிரீ குரலும் கண்ணதாசனின் பாடலும் தேவையற்றவை என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது. என்றாலும் படத்தின் மையமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் ஆதார நேர்மையையும் முன்வைக்கப்பட்ட அறத்தையும் பற்றி தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது. ஆனால் அது தோற்றுப் போன போது அவர் மனக்கசப்புடன் இவ்வாறு நினைத்துக் கொண்டார். 'இனிமேல் படம் எடுக்கக்கூடாது, இந்தத் துறைக்கும் நமக்கும் லாயக்கில்லை. இவர்கள் கெடுக'.

***

இந்தப் படத்தைப் பாாப்பதற்கு முன் மூன்று விஷயங்களை மனதில் இருத்திக் கொண்டேன். ஒன்று நாயக பிம்பங்கள் வழிபட்டுக் கொள்ளப்பட்டிருந்த காலக்கட்டத்தில் ஒர் எதிர் உரையாடலை நிகழ்த்த முயன்ற திரைப்படம், இரண்டு, தமிழ் சினிமாவின் போலித்தனங்களைத் துளைத்துக் கொண்டு ஆரோக்கியமான படைப்பை உருவாக்கி விட வேண்டும் என்கிற போராட்டக்குணமுடைய ஒர் ஆரோக்கியமான ஆனால் காட்சி ஊடகத்தின் சாத்தியங்களை அறியாத நேர்மையாளரிடமிருந்து உருவாக்கப்பட்டது மற்றும் இப்போதைய நுட்ப மேம்பாடுகளுடன் தன்னிச்சையாக கூட ஒப்பிட்டுப் பார்த்து விடக்கூடாது என்கிற தீர்மானமான பிரக்ஞை.

என்றாலும் படம் துவக்க நிலையில் சலிப்பூட்டுவதாகவும் அமெச்சூராகவும் உருவாக்கப்பட்டிருந்ததை உணர முடிந்தது. தேவையற்ற பல ஷாட்கள். ஆனால் அந்த சலிப்பு ஒரு நிலை வரைதான். கதையின் மையத்தை படம் தீண்டியவுடனேயே நுட்பக்குறைகளெல்லாம் பின்தங்கி அது பார்வையாளனை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டது. நாம் பல தீமைகளுக்கும் கீழ்மைகளுக்கும் நடுவே இயங்கிக் கொண்டிருக்கிறோம். அவற்றின் கவர்ச்சியிலிருந்து எவரும் தப்ப முடிவதில்லை. ஆனால் அதற்கு மாறாக ஓர் அறத்தின் குரல், அந்தரங்கமான நேர்மையின் ஒலி நம்மை உள்ளுக்குள் இருந்து சுட்டிக் காட்டி எச்சரித்துக் கொண்டும்  வழிகாட்டிக் கொண்டும் இருக்கிறது. பல சமயங்களில் நம்மை குத்திக் கிழிக்கிறது, குற்றவுணர்வில் தள்ளுவதன் மூலம் நல்வழிப்படுத்த முயல்கிறது.

இந்த குணாதியசத்தின் ஒரு புறவடிவம்தான் சோசப்பு என்கிற மனிதன். ஒரு தூய ஆன்மா. தீது என்பதன் பொருள் அறியாதவன். அவனுடைய களங்கமற்ற உலகில் தீயவைகளே இல்லை. எல்லாவற்றையுமே ஒரு குழந்தைக்கான கருணையுடனும் அன்புடனும்தான் பார்க்கிறான். தங்கும் விடுதி ஒன்றில் பணிபுரியும் அவன் மீது ஒரு திருட்டுப்பழி சுமத்தப்படுகிறது. நையப் புடைக்கப்படுகிறான். நிரந்தரமான புன்னகையுடன் தன் மீதுள்ள குற்றச்சாட்டை மறுக்கிறான் சோசப்பு. தண்டனைகளுக்கான மிக எளிய இலக்கு நிரபராதிகள்தானே? எனவே அவனை பெரும்பாலோனோர் நம்புவதில்லை அல்லது நம்ப விரும்பாதது போல் பாவனை செய்கிறார்கள். அவனை நம்புவது ஓர் அபலைப் பெண் மட்டுமே. திருட்டுச் செய்த விடுதியின் உரிமையாளரும் சோசப்பின் மீதான தண்டனை குறித்து உள்ளுக்குள் மறுகுகிறாரே ஒழிய வெளியே தெரிவிப்பதில்லை. ஒருநிலையில் அவன் திருடன் அல்ல என்பது நிரூபணமானவுடன் அதுவரை தன் வாழ்விலேயே வாய் விட்டு அழாத சோசப்பு, மற்றவர்கள் குற்றவுணர்வுடன் சூழ்ந்து நிற்க வாய் விட்டு அழுது தீர்ப்பதுடன் படம் நிறைகிறது. அவன் யாருக்காக அழுதான்? தன் மேல் அநியாயமாக சுமத்தப்பட்ட தண்டனை குறித்தா? இத்தனை பாவிகளின் நடுவே வாழ வேண்டியிருக்கிறதே என்பது குறித்தா? தங்களின் பாவம் குறித்த தன்னுணர்வு அல்லாத மற்றவர்களின் அப்பாவித்தனம் குறித்தா?  பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாமல் இருக்கிறார்கள் என்று தேவகுமாரன் சிலுவையில் அறையப்பட்ட போது பிரார்த்தனை செய்தாரே, அந்த நிலையில் இருந்தா?

பல காட்சிகளில் இயேசுவின் திருவுருவம் பார்வையாளர்களுக்கு நினைவூப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. சோசப்பு அதற்கு இணையானதொரு படிமமாக இருக்கிறான். படத்தில் உறைந்திருக்கும் இயேசுவின் உருவமும் சோசப்பின் நிலையும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக காண்பிக்கப்பட்டு நெகழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சோசப்பிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பார்வையாளர்களும் இணைந்து கண்ணீர் சிந்துவதுதான் இத்திரைப்படத்தின் நீதியாக இருக்க முடியும்.

தமிழ் திரையின் ஒரு மகத்தான கலைஞன் நாகேஷ். இத்திரைப்படத்தின் ஆதாரமான உணர்வை கச்சிதமாக கைப்பற்ற முயன்றிருக்கிறார். மற்ற திரைப்படங்களில் தான் செய்திருந்த கோணங்கித்தனமான உடல்மொழியை கட்டுப்படுத்திக் கொண்டு சோசப்பாக உருமாற முயற்சி செய்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார். படம் நெடுக அவரின் உடல்மொழியிலிருந்து அவர் பெரும்பாலும் மீறவில்லை என்பதிலிருந்தே இத்திரைப்படம் தொடர்பான அவருடைய அர்ப்பணிப்பை உணர முடியும். ஆனால் பாலையா அவரையும் தாண்டிச் சென்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். நொடிந்து கொண்டிருக்கும் ஒரு விடுதியை நடத்த வேண்டியிருக்கும் சலிப்பையும், மாதம் ஒன்றானால் சரியாக சம்பளம் வாங்க வந்து விடும் தொழிலாளிகளின் நிம்மதியான வாழ்க்கையைக் கண்டு பொருமிக் கொண்டேயிருக்கும் முதலாளித்தனத்துக்கேயுரிய எரிச்சலையும் திருடிய பொருளை ஒளித்து வைக்க அவர் படுகிற பாடும், அந்த குற்றவுணர்ச்சி தாங்காது இறைவனிடம் பிரார்த்திக்கும் அழுகையும் என பல்வேறு கலவையான உணர்ச்சிகளில் மிக இயல்பாக புகுந்து பிரமிக்க வைக்கிறார்.

இந்த திருட்டுச் சம்பவத்தை ஒவ்வொருவருமே தங்களுக்கு சாதகமான முறையில் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறார்கள். முதலாளி பணத்தை ஒளித்து வைத்துக் கொள்கிறான். அங்கு தங்கியிருக்கும் ஏமாற்றும் பேர்வழிகள் தங்களின் ஹோதாவை நிரூபித்துக் கொள்ளவும் திருட்டுக் கொடுத்த சேட்டிடமிருந்து பணம் பறிக்கவும் முயல்கிறார்கள். மலையாள ஜோசியன் ஒருவன் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தன் தொழிலின் மூலம் சம்பாதித்துக் கொள்கிறான். சோசப்பு ஒரு நிரபராதி தெரிந்தும் அவனுடைய சக பணியாளர்களும் அவனைக் கைவிட்டு பயந்து ஒதுங்கி விடுகிறார்கள். ஒரு குற்றத்தை நம் சமூகம் எதிர்கொள்ளும் அதே மனநிலையையே இந்த மனிதர்களும் பிரதிபலிக்கிறார்கள்.

மானுட குலத்திற்கு தொடர்ந்து நினைவூட்டப்படக்கூடிய அறத்தின் குரலை ஜெயகாந்தனின் குறுநாவலும் அதைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமும் நிறுவுகிறது. ருஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ்வின் படைப்புகளைப் போல இந்தப் படைப்பின் உலகளாவிய குரலோடு மனிதர்களை நோக்கி உரையாடுகிறது. ஒரு நல்ல ஐரோப்பிய திரைப்படத்தின் சாயலையும் கூட கொண்டிருக்கிறது. இது போன்ற திரைப்படங்கள் வணிகரீதியான வெற்றி பெற்றிருந்தால் ஜெயகாந்தனைப் போன்று மேலதிகமாக நிறைய எழுத்தாள இயக்குநர்கள் தமிழ் சினிமாவிற்குள் வந்திருப்பார்கள். ஆனால் சோசப்பின் அழுகையைப் போன்று இது போன்ற முயற்சிகளும் யாரும் கவனிக்கப்படாமலேயே நிராகரிக்கப்படுவதென்பது நம் சூழலின் துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

காட்சிப்பிழை, மே 2015 இதழில் பிரசுரமானது - நன்றி காட்சிப்பிழை

suresh kannan

Saturday, May 16, 2015

ப்ரதீப்பின் குறும்படங்கள்



நண்பர் ப்ரதீப்பை சில ஆண்டுகளுக்கு முன் முதன்முறையாக சந்தித்த போது நீண்ட தலைமுடியுடன் நவீன நாடகங்களில் தோன்றும் ஆசாமி போலிருந்ததைக் கவனித்து 'உங்களுக்கு நடிகருக்கான முகவெட்டு இருக்கிறது' என்று விளையாட்டாக சொல்லிருந்தேன். ஆனால் அவருக்குள் இத்தனை ஆர்வமுள்ள நடிகர் இருப்பார் என்று நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. தமிழ் சூழலில் புதுக்கவிதை அறிமுகமான சமயத்தில் குடிசைத் தொழில் போல வீட்டுக்கு இரண்டு கவிதைத் தொகுதிகளும் நான்கு கவிஞர்களும் இருந்ததைப் போல சமகாலத்தில் நிறைய இளைஞர்கள் அப்பாவை தொடர்ந்து நச்சரித்து தேற்றிய சில்லறையில் வாங்கிய  உயர்தர கேமராவில் குறும்படம் எடுக்கிறேன் பேர்வழி என்று அலட்டலாக திரிந்து கொண்டிருக்கும் இளைஞர்களில் ப்ரதீப்பும் ஒருவர் போல என்று நினைத்திருந்தேன். ஆனால் காட்சி ஊடகத்தை மிகத் தீவிரமாகவே அணுக முயலும் நபர் என்பதை அவருடைய குறும்படங்களை தொகுப்பாக பார்த்தபின் உணர்ந்தேன்.

அவருடைய Article 39 (f ) எனும் சமீபத்திய குறும்படத்தைப் பற்றி முகநூலில் கீழ்கண்டவாறு எழுதியிருந்தேன். 

நணபர் ப்ரதீப் குமார் பங்களிப்பில் உருவாகியிருக்கும் குறும்படம். சுஜாதாவைச் சந்தித்த போது தேசிகனின் நண்பராக இவரை முதன்முறை சந்தித்த நினைவு. ஒரு நடிகருக்கான முகவெட்டு இவரிடம் இருக்கிறது என்று அவரிடம் அப்போதே சொல்லியிருக்கிறேன்.
இந்தக் குறும்படத்தில் அவர் நடித்திருக்கிறார். குறும்படங்களுக்கென்றே உள்ள சாத்தியங்களின் எல்லையில் உருவான ஒரு முயற்சி. சமூக அலவங்கள் குறித்து எத்தனை சட்டம் போட்டாலும் அது நடைமுறையில் செயல்படுத்தப்படாத வரை, அதற்கான விழிப்புணர்வு நம் ஆழ்மனதிலேயே மலராதவரை அதனால் எவ்வித பயனுமில்லை. கழிவுநீர் சாக்கடைகளை தூய்மைப் படுத்த இயந்திரம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும், மனித உழைப்பு கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும் கூட அது இயல்பாக தொடர்ந்து கொண்டிருப்பதை சாலையில்தினமும் காண்கிறோம்.
குழந்தைத் தொழிலாளர் முறையும் அது போன்றே. அதற்காக 'உச்' கொட்டிக் கொண்டே நம்மைச் சுற்றி இயங்கும் பல குழந்தைகளின் உழைப்பை நாமறியாமலேயே சுரண்டிக் கொண்டிருக்கிறோம், அல்லது சுரணையின்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். வெகுசன ஊடகங்கள் அடித்தட்டு மக்களின் மேல் கரிசனம் கொண்டு 'உருவாக்கும்' செய்திகளும் சுயநலம் சார்ந்தவையே. அதன் ஒரு துளியைத்தான் இக்குறும்பட நாயகனும் பிரதிபலிக்கிறான்.
கேன் வாட்டர் போடும் சிறுவன் அவன் எல்லையில் நன்றாக நடித்திருக்கிறான். நல்ல முயற்சி ப்ரதீப். தொடருங்கள்.



அதற்கு எதிர்வினையாக அவர் இயக்கி, உருவாக்கி, நடித்த குறும்படங்களை வரிசைப்படுத்தி அனுப்பியிருந்தார். வலி என்கிற குறும்படத்தில் சமூகத்தால் புறக்கணிக்கப்படும் திருநங்கையின் அந்தரங்கமான வலியை காட்சிப்படுத்திய விதம் அபாரமாக இருந்தது. காட்சி ஊடகத்தின் அடிப்படையை சரியாகப் புரிந்து கொண்டு வசனங்களை அதிகம் நம்பாமல் காட்சிபூர்வமாகவே தம் படைப்புகளை  நகர்த்திச் செல்லும் அவருடைய புரிதல் நம்பிக்கையளிக்கவும் பாராட்டவும் வைக்கிறது. ஒரு திருநங்கை பாத்திரத்தை தயங்காமல் எடுத்துக் கொண்டு அதன் உடல்மொழியை கூடுமானவரை அவர் வெளிப்படுத்தியிருந்தது நடிப்பில் அவருக்குள்ள ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. (ஆனால் ஒரு பெண்ணின் உடல்மொழிக்கும் திருநங்கையின் உடல்மொழிக்கும் நிறைய வேறுபாடுண்டு).

பச்சா பையா, குறும்படம் ஒரு நகைச்சுவை முயற்சி. ஆக்ஷன் காட்சியை கட் செய்து சொல்லும் போதே அது காமெடியாய்தான் உருமாறப் போகிறது என்பதை எளிதாய் யூகிக்க முடிந்தாலும் அது சண்டைக்காட்சியிலேயே நிகழும் என்பதற்கு மாறாய் குறும்படத்தின் இறுதிப்புள்ளயில் நிகழும் போது உண்மையிலேயே நகைச்சுவை மிளிர்கிறது. போலவே 'விடியல்' குறும்படமும் கண்பார்வையை மீட்டுக் கொண்ட ஒருவன் அதன் பரவசத்துடன் உலகைக் காணும் காட்சிகள். இதிலும் நிறைய வசனம் இல்லை. First Tamil Kiss தமிழ் சமூகத்தில் உள்ள பாலியல் வறட்சி கொண்ட மனோபாவத்தை நகைச்சுவையாகச் சொல்கிறது. விதவிதமான முகங்களையும் பாவங்களையும் காண்பது நல்ல அனுபவம்.

***

இத்தனை குறும்படங்களை உருவாக்கியதின் மூலம் குறும்படங்களை எடுப்பதில் உள்ள நடைமுறைச்சிக்கல்கள், அதன் பட்ஜெட், நடிகர்களை வேலை வாங்குதல், உள்ளிட்ட பல விஷயங்களை ப்ரதீப் கற்றுக் கொண்டிருப்பார் என நம்புகிறேன். இதுவரை அவர் உருவாக்கியதெல்லாம் முயற்சிகளே. இனிதான் அவர் நல்ல குறும்படங்களை உருவாக்கும் அடுத்த தளத்திற்கு நகர்வதை சாத்தியப்படுத்த வேண்டும் என விரும்புகிறேன். உதாரணமாக தமிழில் உள்ள நல்ல சிறுகதைகளை, அதில் உள்ள நல்ல தருணங்களை காட்சி ஊடகத்திற்கேற்ப மாற்றி உருவாக்க முயலலாம்.

இந்த வகையில் நான் பார்த்த சிறந்த குறும்படங்களில் ஒன்றாக, எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதையில் உருவான 'ஒரு கோப்பை தேநீர்' என்கிற இந்தக் குறும்படம். காமிராக் கோணங்கள் முதற்கொண்டு நடிகர்களின் சிறப்பான பங்களிப்பு வரை சிறந்த முறையில் உருவான குறும்படம். வசனங்கள் அதிகம் இறைபடுகின்றன என்பது ஒருகுறை. காவல்துறை பெண்ணாக வருபவரும் கைதியாக வரும் பெண் என இருவருமே நன்றாக நடித்திருந்தார்கள். இதை ப்ரதீப்பிற்கு ஒரு உடனடி முன்மாதிரியாக பரிந்துரைக்கிறேன்.

ப்ரதீப்பிற்கு வாழ்த்துகள். தமிழ் திரையுலகின் புதுஅலை இயக்குநர்கள் இவரைச் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என நம்புகிறேன்.

குறும்படங்கள்












 suresh kannan

ஜெயகாந்தனின் சினிமா


தம் வாழ்நாளில் ஒரு தங்க வாய்ப்பையாவது  பெற்று விட முடியாதா என்கிற கனவுடன் தமிழ் எழுத்தாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான நபர்கள் தமிழ் சினிமாவுலகில் நுழைய முண்டியடித்துக் கொண்டிருக்கும் போது அந்தக் காட்சி ஊடகமும் அதிலுள்ள நபர்கள் இயங்கும் போலித்தனத்திற்காகவே அதை தம் எழுத்தில் தொடர்ந்து முற்றிலும் கறாராக விமர்சித்து, வெறுத்து ஒதுக்கிய ஒரு நபர் அதிலேயே சில காலம் இயங்கி சில திரைப்படங்கள் இயக்க நேர்ந்தது என்பது விதியின்  சதுரங்க ஆட்டத்தின் ஒரு சுவாரசியமான அசைவு போலவே இருக்கிறது. 

ஜெயகாந்தன் சில காலத்திற்கு முன் எழுதிய 'ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்' நூலை வாசிக்கும் போது அவர் தமிழ் சினிமாவிற்கு வந்து விழுந்ததே ஒரு தற்செயலான விபத்து என்றே தோன்றுகிறது. அந்தளவிற்கு தம்முன் வந்த வாய்ப்புகளையெல்லாம் மிக மூர்க்கத்தனத்துடன் அவர் நிராகரித்துக் கொண்டேயிருந்தார். தன் படைப்புகளின் ஆன்மாவை தமிழ் சினிமா சிதைத்து விடும் என்கிற ஜாக்கிரதையுணர்ச்சி அவருக்கு இருந்திருக்கிறது. என்றாலும் நண்பர்களின் அன்பு கலந்த வற்புறுத்தல் காரணமாகவும் அதன் பின்விளைவாக நிகழும் சிலபல சிக்கலான தருணங்களைக் கடந்து வரவும்தான் அவர் திரைப்படம் தொடர்பான சில பணிகளை மேற்கொண்டிருந்தார் என்பதாகத் தெரிகிறது. ஒரு காலக்கட்டத்தில் எழுத்தை நிறுத்திக் கொண்ட கம்பீரத்தைப் போலவே பணத்தை அள்ளியும் கிள்ளியும் தந்த திரைப்படத்துறையிலிருந்தும் அவர் அதே கம்பீரத்துடன் விலகிய ஆளுமைக்குணம் எத்தனை பேருக்கு அமையும்?

'சில நேரங்களில் சில மனிதர்கள்' உள்ளிட்ட அவரின் சில படைப்புகள் மற்றவர்களால் திரைப்படமாக உருவாகியிருந்தாலும் அவரே நேரடியாக இயக்கிய திரைப்படங்கள் மூன்று. உன்னைப் போல் ஒருவன், யாருக்காக அழுதான், புதுச்செருப்பு கடிக்கும். இதில் 'யாருக்காக அழுதான்' திரைப்படத்தின் பிரதி மாத்திரமே இன்று காணக் கிடைக்கிறது. உன்னைப் போல் ஒருவன் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட காலத்தில் பார்த்திருக்கிருக்கிறேன். அதில் பிரதான நடிகர்களாக நடித்த காந்திமதி மற்றும் வீராச்சாமி போன்ற நடிகர்களின் மங்கலான உருவங்கள் மட்டுமே இன்று எனக்கு நினைவில் நிற்கிறது. புதுச்செருப்பு கடிக்கும் திரைப்படத்தைப் பார்த்த பாக்கியவான்களில் ஒருவராவது தமிழகத்தில் எவரேனும் இருக்கிறார்கள் என்று சந்தேகமாக இருக்கிறது.  அவரது தோழர்கள் உருவாக்கிய 'பாதை தெரியுது பார்' திரைப்படத்தின் ஒரு காட்சியில் தற்செயலானதொரு தருணத்தில் ஜெயகாந்தன் நடித்திருக்கிறார். அவர் முன்பு செய்து வைத்திருந்த கறாரான தீர்மானத்திற்கு முற்றிலும் எதிரான காரியம் அது. எனவே மிக சாமர்த்தியமாக அந்தக் காட்சியை நீக்குவதற்கும் தாமே காரணமாக இருந்திருக்கிறார். அது நீக்கப்படாமலிருந்தால் ஜெயகாந்தனை தமிழ் திரையில் பார்க்குமொரு மகத்தான வாய்ப்பு இழக்கப்படாமலிருந்திருக்கும். 

இத்திரைப்படத்தில் அவர் எழுதிய பாடல் ஒன்றும் மிக பிரபலமானது. 'தென்னங்கீற்று ஊஞ்சலிலே. சிட்டுக்குருவி ஆடுது'. ஜெயகாந்தனின் எழுத்து பங்களிப்பில் உருவான திரைப்படங்கள் பலவற்றின் பிரதி இன்று நம்மிடமில்லை அல்லது கண்டுபிடிக்க இயலவில்லை. ஜெயகாந்தன் என்கிற ஆளுமையை சமகால வாசகர்கள் இன்னமும் விஸ்தாரமாக அணுக இத்திரைப்படங்களை காண முடியாது என்பது ஒரு சோகம். கலைகளை ஆவணப்படுத்துதலில் தமிழ் சமூகத்திற்கு இருக்கிற அலட்சியமும் அறியாமையும் இதன் மூலம் மறுபடியும் நிரூபணமாகிறது. என்றாலும் ரவி சுப்பிரமணியம் இயக்கியிருக்கும் ஜெயகாந்தன் குறித்த ஆவண்ப்படமானது ஒரு சிறந்த குறைந்தபட்ச ஆறுதல்.

***

ஒரு காலக்கட்டத்து கலையுலக அனுபவங்கள் வரை பதிவாகியிருக்கும் ஜெயகாந்தனின் நூலில் அவரால் இயக்கப்பட்ட முதல் இரண்டு திரைப்படங்களும் உருவான பின்னணிகள் சுவாரசியமாக விளக்கப்பட்டுள்ளன. வீனஸ் கிருஷ்ணமூர்த்தி என்கிற பிரபல தயாரிப்பாளர் ஜெயகாந்தனை தாமே அணுகி 'உங்களது படைப்பில் எதை வேண்டுமானாலும் திரைப்படமாக உருவாக்கலாம்' என்கிற நம்பிக்கையை விதைக்கிறார். என்றாலும் ஒரு திரைப்பட இயக்குநராவதற்கான அனுபவம் குறித்த போதாமைகளை தாமே உணர்ந்திருக்கிற ஜெயகாந்தன் 'என் மீதே அதற்கான நம்பிக்கை வரும் போது' இயக்குநர் ஆவதாக பதிலளிக்கிறார். என்றாலும் அந்த தயாரிப்பாளருடன் இரண்டு வங்காளித் திரைப்படங்களை தமிழில் உருமாற்றுவதற்கான பணிகளில் ஈடுபடுகிறார். ஆனால் சினிமாக்காரர்களின் அலட்சியமான மனோபாவமும் கலையை வணிகமாகவே பார்க்கும் போலித்தனமும் அங்கிருந்து அவரை விலகச் செய்கிறது. சில காலம் கழித்து இதே தயாரிப்பாளரை சந்தித்து தன் நம்பிக்கையை தெரிவிக்கிறார். திரைக்கதை உருவாக்கப்படுகிறது. ஆனால் திரைக்கதையை கேட்ட தயாரிப்பாளர் சட்டென்று ஒரு வணிகராக மாறி 'என்ன இது சமைப்பதும், சாப்பிடுவதும், தூங்குவதுமாய் வங்காளிப்படம் மாதிரி இருக்கிறதே' என்று அவநம்பிக்கையான கருத்தை தெரிவித்திருக்கிறார். தனது பிரத்யேக குணத்துடன் இதை எதிர்கொண்ட ஜெயகாந்தன் 'இதை நான் என் நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி காட்டுகிறேன்' என்று ஆவேசமாக சொல்லி விட்டு வெளியேறியிருக்கிறார். ஜவஹர்லால் நேரு என்கிற ஆளுமையின் மீதான மரியாதையின் பேரில் அதன் பிறகு உருவானது, 'ஆசிய ஜோதி பிலிம்ஸ்'.

ஜெயகாந்தன் இயக்கிய திரைப்படங்களைக் காணும் போது அவற்றிலுள்ள பல நேரடியான குறைகள் நம் கண்களில் உடனே பட்டாலும் அவற்றை தாங்கிப் பிடிப்பது அவரது எழுத்துக்களைப் போலவே திரைப்படத்திலும் இருந்த யதார்த்தமான காட்சிகளும் அவற்றிலிருந்த நேர்மையும்தான். வெகுசன சினிமாவின் அபத்தமான போக்கிற்கு உடன்படாமல் தனித்து நின்ற அவரது கம்பீரமான வேறுபாடே அவரது ஆளுமையை தனித்து நிற்கச் செய்கிறது. இந்தக் காரணத்தினாலேயே  'உன்னைப் போல் ஒருவன்' திரைப்படத்திற்கு 1965-ம் ஆண்டிற்கான  தேசிய அளவிலான  விருது கிடைத்திருக்கிறது. கொள்கைகளின் படி இரண்டாம் விருது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட நிலையில் சத்யஜித்ரே இயக்கிய சாருலதாவிற்கும் இதற்கும்தான் போட்டி. ஆனால் ஒருவகையில் ஜெயகாந்தனுக்கு ஆதர்சமாயிருந்த ரேவின் படைப்பே தகுதியில் உயர்ந்தது என்கிற எண்ணம் ஜெயகாந்தனுக்கு இருந்ததால் மூன்றாம் பரிசு குறித்து அவருக்கு மகிழ்ச்சியே. ஆனால் இந்தச் செய்தியை தமிழக ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தது குறித்து வருத்தம். ஓர் எழுத்தாளரே இயக்குநர் அனுபவங்கள் ஏதுமல்லாது தன்னுடைய படைப்பை இயக்கி அதற்கு தேசிய அளவிலான விருது பெறுவது என்பது ஒரு மகத்தான சாதனை. உண்மையில் தமிழகமே திரண்டு இதைக் கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் இத்திரைப்படத்தை வடஇந்திய பத்திரிகைகள் கொண்டாடியிருக்கின்றன.

திரைப்படம் காண்பதை வழக்கமல்லாததாக கொண்டுள்ள காமராஜ் இத்திரைப்படத்தைக் கண்டு "இந்தப் படத்தை அரசாங்கமே வாங்கி மக்களுக்கு இலவசமாக காட்ட ஏற்பாடு செய்ய வேண்டும். நம்முடைய பல கஷ்டங்களுக்குக் காரணம் நமது ரசனை கெட்டுப் போனதுதான்' என்று புகழுரை தந்திருக்கிறார். ஏவிஎம் செட்டியார் ஜெயகாந்தனை அணுகி "படம் மிக யதார்த்தமாக வந்திருக்கிறது. பெரிய நடிகர்களைப் போட்டு இதை மறுபடியும் உருவாக்கலாம், அதற்கான உரிமையைக் கொடுங்கள்" என்ற போது இதை வர்த்தகமாக மாற்றுவதற்கு உடன்படாத ஜெயகாந்தன் அதை மறுத்திருக்கிறார். இதை விநியோகஸ்தர்களின் மூலம் வழக்கமான திரையிடலாக வெளியிட முடியாமல், தனிக்காட்சிகளாக வெளியிட்டிருக்கிறார்கள். சில திரையரங்கங்கள் வசூல் இல்லை என பொய்க்காரணம் சொல்லி இதை மாற்ற முயன்ற போது ஜெயகாந்தனே தடியுடன் காவல்காரன் போல நின்று காட்சிகளை நடத்தச் செய்திருக்கிறார் என்பது சுவாரசியமான வரலாறு.

***

எதையும் தனக்கேயுரிய முரட்டுத்தனமான, கம்பீரமான அகங்காரத்துடன் அணுகும் ஜெயகாந்தன் திரைப்பட படப்பிடிப்பில் துவக்கத்தில் அடைந்த தடுமாற்றங்களையும் வெளிப்படையாக பதிவு செய்யத் தவறவில்லை. முதல் நாள் படப்பிடிப்பில் எல்லோரும் இயக்குநரின் உத்தரவிற்காக காத்து நின்ற போது தமது உதவியாளரை இயக்கச் சொல்லி அதன் மூலம் கற்றிருக்கிறார். 'நான் ஒரு டைரக்டர் என்று என்னை மாற்றிக் கொள்வதற்கு முன்னால் யாரிடமும் உதவியாளராக இருந்ததில்லை. எனவே எனது உதவியாளர்களிடமிருந்து நான் பயின்றேன். அது குறித்து எனக்கு மகிழ்ச்சியே' என்பது ஜெயகாந்தனின் கருத்து. இத்திரைப்படத்தின் உருவாக்கத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு காட்சி அனுபவத்தை அதில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் பகிர்ந்து கொண்டதை எங்கோ வாசித்த நினைவிருக்கிறது.  நடிகை காந்திமதி தனது தலைமுடியை சீப்பால் வாரிக் கொண்டேயிருந்த பிறகு அந்த சீப்பு உடைய வேண்டும் என்பது காட்சி. காந்திமதி தொடர்ந்து தலைவாரிக் கொண்டேயிருக்கிறார். ஆனால் சீப்பு உடையவில்லை. 'இங்கு கட் செய்து சீப்பு உடையும் காட்சியை தனியாக ஒளிப்பதிவு செய்து இணைத்துக் கொள்ளலாம்' என்று ஒளிப்பதிவாளர் ஆலோசனை சொன்னாலும் அதை மறுத்த ஜெயகாந்தன் தொடர்ந்து அதை பதிவு செய்யச் சொல்லியிருக்கிறார்.

'யாருக்கான அழுதான்' திரைப்படத்தை இன்று பார்க்கும் போது அதிலுள்ள நேரடியான குறைகள் கண்ணில் படுகின்றன. இவற்றை ஒப்புக் கொள்வதிலும் ஜெயகாந்தனுக்கு தயக்கமேதுமில்லை. பட விநியோகஸ்தர்களின் வற்புறுத்தல்களின் படி படத்தின் நீளத்திற்காக இணைக்கப்பட்ட பாடலும் (உருவத்திலே இவன் மனிதன், உள்ளத்திலே இவன் பறவை என்கிற அந்த அற்புதமான பாடலை எழுதியவர் ஜெயகாந்தனின் நண்பர் கண்ணதாசன்) சில காட்சிகளும் தாமே அறியாமையால் செய்த குறைகளும் படத்தை நீளமாக்கி நீர்த்துப் போகச் செய்திருககிறது என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். இத்திரைப்படத்தில் முதலில் நடிக்க சந்திரபாபு விரும்பியிருக்கிறார். நண்பர்தான் என்றாலும் படமாக்கி கெடுத்து விடுவார் என்கிற உணர்வு காரணமாக அவருக்கு கதைக்கான உரிமையைத் தர மறுத்திருக்கிறார் ஜெயகாந்தன். பின்பு இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜி, சாவித்திரி, ரங்காராவ் போன்ற நடிகர்களுடன் உருவாக்க திட்டமிடப்பட்டது. கதை பற்றி ஜெயகாந்தனுடன் ஸ்ரீதர் விவாதிக்கும் போது திரைக்கதைக்காக அதில் தாம் செய்யும் மாற்றங்களை விவரித்து 'இறுதிக் காட்சியில் சிலுவையின் முன்பு சோசப்பு விழுந்து இறந்து போகிறான்' என்று மெலோடிராமாக நீட்டிச் செல்லும் போது ஜெயகாந்தன் அதற்கு "எனில் படத்தின் தலைப்பை 'யாருக்காகச் செத்தான்" என்று மாற்றிக் கொள்ளுங்கள்' என்று தமக்கேயுரிய சினத்துடன் சொல்லியிருக்கிறார். ஆனால் வேறு சில காரணங்களால் அத்திரைப்படம் உருவாகாமல் நின்று போயிற்று. சில பல குறைகளுடன் உருவாகியிருந்தாலும் நாகேஷ் நடிப்பில் உருவான இறுதி வடிவமானது ஒரு நல்ல முயற்சி.

ஜெயகாந்தனின் திரைப்படங்கள் வணிகரீதியாகவும் வெற்றி பெற்றிருந்தால் காட்சி ஊடகத்தின் சாத்தியங்களை மேலதிகமாகக் கற்று அவர் ஒரு சிறந்த இயக்குநராக பரிணமிக்கும் அளவிற்கு காலம் மலர்ந்திருக்கும். ஆனால் காமராஜர் குறிப்பிட்டது போல அப்போது மட்டுமல்லாமல், இப்போதும் கூட தமிழ் சூழல் ரசனை என்பது மலினமான கேளிக்கைகளின் மீதே அமைந்திருப்பதால் அது சாத்தியப்படாமல் போவது இயல்புதான். ஜெயகாந்தனைப் போன்று இன்னமும் அதிகமான எழுத்தாளர்கள் திரைத்துறைக்குள் புழங்கவும் அவர்கள் வெற்றி பெறுவதுமான சூழல் சாத்தியப்படுவது ரசனை மாற்றம் எனும் விஷயத்தின் மூலம்தான் நடைபெற முடியும்.

- அம்ருதா - மே 2015-ல் வெளியான கட்டுரை. (நன்றி: அம்ருதா)

suresh kannan

Friday, May 15, 2015

ஓ காதல் கண்மணி - மணிரத்னத்தின் பழமைவாத அரசியல்





ஆண்டுத் தேர்வு  முடிந்த விடுமுறை என்பதால் உறவினர்களின் பிள்ளைகளால் சூழ்ந்திருந்தது வீடு. எங்காவது வெளியில் போகலாம் என்று நச்சரித்தார்கள். சினிமாதானே தமிழ் சமூகத்தின் பிரதான பொழுதுபோக்கு? எனவே அதற்கு போகலாம் என்பது ஒருமனதாக முடிவாயிற்று. என்ன படம் போகலாம் என்பதற்கு 'ஓ காதல் கண்மணி' என்றார்கள். எல்லோருக்கும் சராசரியாக வயது 8 -ல் இருந்து 12 வயது வரைதான் இருக்கும். எனவே, 'அது காதல் தொடர்பான படமாயிற்றே, மேலும் cohabitation பற்றிய படமென்று வேறு சொல்கிறார்கள்,  பிடிக்காமற் போய் பின்னர் சிணுங்குவார்களோ, மேலும் இந்த வயதில் இவர்கள் பார்க்கின்ற படமா இது, என்றெல்லாம் கேள்விகள் உள்ளூற தோன்றின. எனவே அவர்களை திசை திருப்ப 'காஞ்சனா 2 என்று படம் வந்திருக்கிறதாமே, நல்ல நகைச்சுவை பேய்ப்படமாம். அதற்குப் போகலாமே?" என்றேன். ஆனால் எல்லோரும் ஒரே குரலில் அதை மறுத்து கோரஸாக "OKK தான் போகணும்" என்றார்கள். அவ்வாறே ஆயிற்று

***

இயக்குநர் மணிரத்னத்திற்கு ஏறத்தாழ அறுபது வயதாகிறது. அவர் முதல் படத்தை இயக்கியும் சுமார் 32 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் இன்னமும் சமகால இளைய தலைமுறையால் மட்டுமல்ல, அதற்கும் அடுத்த தலைமுறையாலும் விரும்பப்படும் வசீகரத்தைக் கொண்டிருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். சில இயக்குநர்கள் இருக்கிறார்கள், அவர்களின் வயது கூட கூட அவர்களைப் போலவே அவர்களது திரைப்படங்களும் கிழட்டுத்தன்மை கொண்டதாய் மாறி விடும். முதியவர்களின் குரலில் உபதேசம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். மணிரத்னத்தின் பட வெளியீடுகளின் போது அதுவரை பொத்தி வைக்கப்பட்ட முதல் போஸ்டர், டீஸர், பாடல்கள், டிரெய்லர் என்று எல்லாமே புத்துணர்ச்சியாலும் பல்வேறு வண்ணங்களாலும் இளமை ததும்பல்களாலும் நிறைந்திருக்கிற ஒரு திருவிழா அனுபவத்தை ஏற்படுத்துகிறது. நடுத்தர வர்க்கமானது, ஏதோ ஒரு அபூர்வ சந்தர்ப்பத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு செல்லும் போது அடையும் பிரமிப்பைப்  போலவே  அவரது திரைப்படத்திற்கு செல்வதிலும் ஒரு மேட்டுக்குடி விழா அனுபவத்தை சந்திப்பதற்கு ஈடான பரவசத்தை அடைகிறது.

பிரபல ஆங்கில விமர்சகர் பரத்வாஜ் ரங்கன், 'மணிரத்னம்  படைப்புகள் - ஓர் உரையாடல்' எனும் தன்னுடைய நூலின் முன்னுரையில் உத்தேசமாக  இவ்வாறாக குறிப்பிட்டிருப்பார். 1970-களில் பிறந்து  மெட்ராஸ் சூழலில் வாழ்ந்தவர்கள்தான் மணிரத்னம் திரைப்படங்கள் மீது அதிகம் உரிமை கொண்டாட முடியும். ஏனெனில் அவர்கள் ஏறத்தாழ மணியின் திரைப்படங்களோடு இணைகோடாக வாழ்ந்து வளர்ந்த ரசனையைக் கொண்டவர்கள் என்கிற காரணத்தினால். எனக்கு அதில் உடனே உடன்பாடு ஏற்பட்டது. ஏனெனில் நானும் அதில் ஒருவனே. திரைப்படத்தின் மீதான ருசி ஒரு பித்தாக வளர்வதற்கு முன்பே மணிரத்னம் என் ரசிக மனதை அதிகம் பாதித்திருக்கிறார். நாயகன் எனும் தனது ஒரே படத்தின் மூலம் அதுவரை வந்த பெரும்பாலான தமிழ் திரைப்படங்கள் எல்லாம் எத்தனை அசட்டுத்தனமான நாடகங்கள் என்பதை உணர்த்தியிருக்கிறார். எனவேதான் இந்தியா முழுவதும் அவரைக் கொண்டாடுகிறார்கள்.

பொதுவாக தமிழ் சினிமாவில் திறமையான திரைக்கதையாசிரியாக பாக்யராஜைத்தான் தொடர்ந்து குறிப்பிடுவார்கள். அவர் ஒரு முன்னோடி என்கிற வகையில் நான் நீண்டகாலமாக அந்த அபத்தமான மதிப்பீட்டை சகித்துக் கொண்டிருந்தேன். அவருடைய திரைப்படங்களில் இயல்பான நகைச்சுவைகளை, எளிமையான மனிதர்களை காண முடியும்தான் என்றாலும் சுவாரசியமான காட்சிகளை வெறுமனே அடுக்கி அதில் பாலியல் சார்ந்த நகைச்சுவையை மலினமாக தூவி படம் முடியும் வரை பெரிதும் சலிப்பின்றி நகர்த்துவது மட்டுமே நல்ல திரைக்கதையின் அடையாளமல்ல. ஒவ்வொரு காட்சிக் கோர்வையின் துவக்கமும் அதன் முடிவும், பிறகு அது அடுத்ததோடு பிசிறின்றி இணையும் லகுவும், பிறகு வரப்போகும் முக்கியமான சிக்கல்களுக்கு முன்னரே அதற்கான சங்கேதங்களை நிறுவுகிற நுட்பமும், பொருள் பொதிந்த காமிராக் கோணங்களும், அரங்கப் பொருட்களும்,  நிர்ணயிக்கப்பட்ட அதே  உடல்மொழியை படம் முழுவதும் பயன்படுத்தும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட பாத்திரங்களும் என பல்வேறு அம்சங்களின் திறமையான கூட்டுக்கலவையால்தான் காட்சி ஊடகத்துக்கேயுரிய ஒரு நல்ல திரைக்கதையை உருவாக்க முடியும். சுவாரசியமான மேடை நாடகங்களால் அல்ல. பார்வையாளர்களிடம் உலக சினிமா குறித்த பரவலான அறிவு வளர்ந்து விட்ட இன்றைய சூழலில் ஏன் இன்று இந்த மேடை நாடக ஆசிரியர்களால் வெற்றிகரமாக இயங்க முடியவில்லை என்பதற்கான விடையை யோசித்துப் பார்த்தாலே விளங்கி விடும். மெளனராகத்தின் இன்னமும் குறிப்பாகச் சொல்லப் போனால் நாயகனுக்குப் பிறகுதான்  நான் எதிர்பார்த்த மாதிரியே 'ஒரு திரைக்கதையாசிரியர்' தமிழில் உருவாகியிருக்கிறார் என்கிற சமாதானம் எனக்கு உண்டாயிற்று. (அஞ்சலி திரைப்படத்தில், அதுவரை தனது மகளை அடித்திராத தந்தை,  மனநிலை சரியில்லாத வாட்ச்மேனை 'பைத்தியம்' என அவள் உரக்க கத்தி கிண்டல் செய்யும் போது ஏன் சட்டென்று அடிக்கிறார் என்பது பிற்பகுதியை பார்க்கும் போதுதான் உணர முடியும் என்பது ஓர் எளிய உதாரணம்)

இந்திய இயக்குநர்களில் நுட்ப அளவிலான சிறப்பில் மணிரத்னம் கவனிக்கத் தகுந்தவர்தான் என்றாலும்  கதையின் மையத்தை வலுவாக கையாளும் சர்வதேச தர அளவிலான சில இயக்குநர்கள், ஏன் சில இந்திய இயக்குநர்களின் முன்னால் மணியின் திரைப்படங்கள் உறை போடக்கூட காணாது. அந்த வகையில் வெகுசன சினிமாவின் திரைமொழியை, புற அழகை சற்று உயரே எடுத்துச் சென்றது மாத்திரமே அவரது சாதனை. வெகுஜன சட்டகத்திற்குள் இயங்கி வணிக ரீதியான வெற்றியையும் பெற வேண்டும், அதே சமயத்தில் அது கலைப்படைப்பாகவும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் இரட்டை மனநிலை தத்தளிப்புகளில் அல்லாடுவதே இவரது திரைப்படங்களின் பாணி. இவ்வாறு அல்லாமல் குறைந்த சமரசங்களுடன் உருவாக்கப்பட்டதாக 'இருவர்' திரைப்படத்தை வேண்டுமானால் குறிப்பிடலாம். நேர்காணல்களில் தன்னுடைய ஆதர்சமான இயக்குநராக 'சத்யஜித்ரே' வை குறிப்பிடும் மணிரத்னம் அந்த வகையில் ஒரு திரைப்படத்தைக் கூட உருவாக்கவில்லை.

***


சுஜாதா தன்னுடைய படைப்புகளை உருவாக்குவதைப் பற்றி ஒருமுறை சுபமங்களா பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். 'நான் என்னுடைய எழுத்தில் craft பற்றிதான் அதிகம் யோசிப்பேன்.வடிவ ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும். ஒரு தச்சன் மரமேஜையைச் செய்வது மாதிரி. அதன் உணர்ச்சிகளில் மிக ஆழமாக செல்வது கிடையாது. மட்டுமல்லாமல் வாழ்க்கையின் அவலம் குறித்த பெரிய அனுபவங்கள் எனக்கு கிடையாது. வறுமையை நான் சந்தித்தில்லை'. கிட்டத்தட்ட மணி ரத்னத்தின் திரைப்படங்களும் அவ்வாறுதான். திரைக்கதையின் கச்சிதமும் காட்சிகளின் தரமும்தான் பிரதானமே ஒழிய கதை மையங்களின், கதாபாத்திரங்களின் ஆழமான உணர்ச்சிகளில் பயணிப்பதில் அவருக்கு நம்பிக்கையில்லை. ரோஜா, பம்பாய், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற அவருடைய சில திரைப்படங்கள் உக்கிரமான சமூகப் பிரச்சினைகளைப் பற்றி உரையாடுவதான பாவனைகளைக் கொண்டிருந்தாலும் உயர்தரத்தில் அவர் உருவாக்கும் ஜிலுஜிலுப்பான காட்சிப் பின்னணிகளின் குளுமைகளைப் போலவே அவைகளும் காதல் பின்னணியில் நீர்த்துப் போயிருக்கும்.

அவர் இதுவரை இயக்கியுள்ள திரைப்படங்களை பொதுவாக நான்கு வகைகளில் தொகுத்து விடலாம். ஆண்xபெண் இடையேயான உறவுச்சிக்கல், இதிகாசங்களின் மறுஉருவாக்க நவீன வடிவம், சமூகப்பிரச்சினை+காதல், Bio-pic வகை. இதில் அவர் இயக்கிய ஒரே மலையாளத்திரைப்படமான 'உணரு' மட்டுமே வேறு வகை. வேறு வழியில்லாமல் மாட்டிக் கொண்ட துவக்க கால படங்களில் அதுவுமொன்று. முதல் திரைப்படமான 'பல்லவி, அனுபல்லவி' உறவுகளின் அகச்சிக்கல்களைப் பற்றியதே. சமவயது காதலியைக் கொண்டிருந்தாலும் தன்னிலும் வயது மூத்த பெண்ணிடம் ஈர்ப்பு கொள்ளும் இளைஞன் ஒருவனின் மனத் தத்தளிப்புகளே அத்திரைப்படம். அவராக விரும்பி இயக்கிய திரைப்பயணத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் 'மெளன ராகத்தில்' இருந்தே துவங்க வேண்டும். நாயகன் அவரை ஸ்டார் அந்தஸ்திற்கு தூக்கிச் சென்ற படைப்பு. அதுவரையான தமிழ் சினிமாவின் திரைமொழியே நவீனத்திற்கு மாற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது அது.

இவரது சமீபத்திய திரைப்படம் 'ஓ காதல் கண்மணி.  அவரின் கடந்த சில திரைப்படங்கள் அவரின் ரசிகர்களாலேயே நிராகரிக்கப்பட்டன. வணிக ரீதியான வெற்றியையும் பெறவிலலை. அவரின் பொதுவான ரசிகர்கள் அவரது பாணியில் கச்சிதமாக உருவாக்கப்பட்ட கடைசி திரைப்படமாக  'அலைபாயுதே'வைத்தான் இன்னமும் நினைவுகூர்கிறார்கள். ரோஜா திரைப்படம் தேசிய அளவில் கவனிக்கப்பட்ட பிறகு தனது நிலவெளிகளையும், நடிகர்களையும் திரைக்கதையையும் அதற்கேற்ப மாற்றிக் கொள்ள முயன்றது,  மாநிலை எல்லைகளை மழுப்பி வணிக ரீதியான காரணத்திற்காக பொதுத்தன்மையை திணிக்க முயன்றது போன்ற சமரசங்கள் அவரை தனித்தன்மையைக் குலைத்து அவர் திரைப்படங்களுக்கு  பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது எனலாம். எனவே சமீபத்திய திரைப்படத்தை வெற்றிப்படமாக்க வேண்டிய நெருக்கடியில் அவர் இருந்தார் என யூகிக்கலாம். எனவே திகட்ட திகட்ட காதலுடன் இளமை ததும்பும் திரைப்படம். ஆனால் அதில் எந்தவொரு பிரச்சினையையும் எழுப்பாமல் இருந்தால் தன்னுடைய அறிவுஜீவி இயக்குநர் பிம்பம் என்னாவது என அவர் யோசித்திருக்கலாம். எனவே நவீன தலைமுறை பயில விரும்பும் live-in-relationship எனும் எதிர்கலாச்சார விவாதத்தைத் தொட்டுப் பார்த்திருக்கிறார். மற்ற திரைப்படங்களில் ஒரு சமூகப் பிரச்சினையை ஆராயும் பாவனையைப் போலவே இதிலும் இந்த நவீன சர்ச்சையின் நுனியை மாத்திரம் தொட்டுப் பார்த்து விட்டு உடனே எதிர்திசையில் வேகமாக ஓடி பாதுகாப்பான பழைய கலாச்சார ஓட்டுக்கே திரும்பி விட்டார் என்பதுதான் பிரச்சினை.

இது ஏறத்தாழ இயக்குநர் பாலச்சந்தரின் பாணி. பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள், அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, அவர்கள் (பா வரிசை பீம்சிங் மாதிரி அ வரிசைக்கு பாலச்சந்தர் போல) போன்ற திரைப்படங்களைக் கவனித்தால் வழக்கத்திற்கு மாறான உறவுகளில் அமையும் சிக்கல்களை முழுக்க விவரித்து விட்டு கடைசியில் ஒரு யூ திருப்பத்தின் மூலம் பழைய பாதைக்கு சென்று விடுவதைக் கவனிக்க முடியும். அவர் அந்தக் காலக்கட்டத்தில் பெரும்பான்மை சமூக மனநிலைக்கு எதிராக ஒருவேளை செயல்பட விரும்பாததால் செய்த புரட்சிப் பாவனையை நவீன காலத்திலும் மணிரத்னம் செய்திருப்பது சோர்வையே ஏற்படுத்துகிறது. புதிய அலை இளம் இயக்குநர்கள் தம் திரைப்படங்களில் இவைகளை மையப்படுத்தாவிட்டாலும் இது போன்ற எதிர்கலாசார விழுமியங்களை போகிற போக்கில் அநாயசமாக பதிவு செய்கிறார்கள் என்பதையும் கவனிக்கலாம்.


தம்முடைய இளமைக்காலத்தில் பாலச்சந்தரின் படங்களின் புதுமை தம்மைப் பாதித்ததாக மணிரத்னம் குறிப்பிடுகிறார். எனவே மணிரத்னம் உருவாக்கும் திரைப் பாத்திரங்கள் தாம் இயங்கும் முறையில் பாலச்சந்தரின் பாத்திரங்களையே பிரதிபலிக்கிறார்கள். அறிமுகமில்லாதவர்களிடம் கூட சட்டென்று துடுக்குத்தனமாக பேசுவது, வாழ்வை தீர்மானிக்கும் தீவிரமான கேள்வியைக் கூட போகிற போக்கில் விளையாட்டாக கேட்பது போன்றவை பாலச்சந்தரின் பாணி. ஏதொவொரு காரியத்தை செய்து கொண்டே, நடந்து கொண்டே பேசும் நபர்களால் படம் நிறைந்திருக்கும். சமையல் அறையில் ஒரு பெண்மணியைக் காட்டினார் என்றால் அவர் அங்குமிங்கும் அலைந்து சமைத்துக் கொண்டேதான் தன் வசனங்களைப் பேசுவார். செயற்கையாக நின்று வசனங்களை ஒப்பிப்பதை விட இம்மாதிரியான இயல்பான அசைவுகள் காட்சிகளின் நம்பகத்தன்மையைக் கூட்டும்தான் என்றாலும் இவையே மிகையாகப் போகும் போது திகட்டி அதுவே நாடகத்தனமாகி விடுகிறது. இவைகளை மணிரத்னத்தின் படங்களிலும் காணலாம். திருமணம் நடக்கும் சர்ச்சில் ஒருவருக்கொருவர் பக்கத்தில் அமர்ந்தாலும் மொபைலில் ரகசியமாக பேசுவது, நாயகன் சாவகாசமான நேரத்திலும் கூட உடைமாற்றிக் கொண்டே அவசரம் அவசரமாக மொபைலில் பேசுவது போன்றவை. ஒருவருக்கு அல்ஜைமர் எனும் குறைபாடு இருக்கும் முக்கியமான தகவலைக் கூட ஏதாவது செய்து கொண்டே போகிற போக்கில் சொல்லும் போது அது போன்ற காட்சிகள் நோக்கத்திலிருந்து மாறி நாடகமாகி விடுகிறது.

ஒருவரையொருவர் அறியாதவர்கள் செய்து கொள்ளும் ஏற்பாட்டு திருமணத்திற்குப் பின் உருவாகும் சிக்கல்கள், அதற்குப் பிறகான காதலை 'மெளனராகம்' பேசியது. காதலுக்குப் பின் திருமணம், அதன் பிறகு சிக்கல்கள், அதைத் தொடர்ந்து புதுப்பிக்கப்படும் காதலைப் பற்றி 'அலைபாயுதே' பேசியது. பரஸ்பரம் எந்த உறவையும் அது தொடர்பான சிக்கல்களையும் ஏற்படுத்திக் கொள்ளத் தேவையற்ற நிலையில் துவங்கி அதற்குப் பிறகு உருவாகும் காதலும் அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் திருமணத்திற்குள் விழும் நிலையைப் பற்றி 'ஓ காதல் கண்மணி் பேசுகிறது. தனது திரைப்படங்களில் திருமணம், குடும்பம் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டேயிருக்கும் ஓர் இந்திய கலாசார மனதையே இயக்குநர் கொண்டிருக்கிறார் என்பது வெளிப்படை. live-in-relationship என்பது நவீன காலத்து சூழலின் நெருக்கடியிலிருந்து பரிணமித்திருக்கும் ஒரு கலாசாரம். பெண்ணியச் சிந்தனைகள், கோட்பாடுகள் போன்று மேற்குலகிலிருந்து இங்கு பரவும் ஒரு வாழ்வுமுறை.

***

மானுட குலத்தின் நெடிய வரலாற்றின் பயணத்திலிருந்து சுருக்கமாக நாம் அறிவது இதைத்தானே? ஆதியில் தாய்வழிச் சமூகமாக இயங்கிய வாழ்வுமுறை மற்ற குழுக்களின் வன்முறையிலிருந்தும் விலங்குகளின் தாக்குதல்களில் இருந்தும் பாதுகாப்பு பெற உடல்வலிமை பெற்றிருந்த காரணத்தினாலேயே ஆணால் கைப்பற்றப்பட்டு தந்தைவழிச் சமூகமாக மாறியது. நிலவுடமைச் சமுதாயம் மலர்ந்த பின் சொத்துக்களை கைப்பற்றி தக்க வைத்துக் கொள்ளவும் அவை தம்முடைய நேரடி வாரிசுகளுக்கு மட்டும் போய் சேர வேண்டும் என்று நிச்சயித்துக் கொள்ளவும் பெண்ணையும் ஒரு சொத்தாக மாற்றி, நிலத்திற்கு வேலி போடுவது போல தாலி எனும் அணிகலன் மூலம் அவளைக் கட்டிப் போட்டு அதில்தான் கற்பு, கணவனின் உயிர் உள்ளிட்ட எல்லாம் இருக்கிறது என்கிற கற்பித பண்பாட்டுக் கூறுகளை ஏற்றி, பிறன்மனை நோக்காமல் கற்போடு வாழ்பவள்தான் பத்தினி என்று அவளை தெய்வமாக்கி ஏமாற்றுவதன் மூலம் குடும்பம் எனும் கூட்டுக்குள்ளேயே அடக்கி வைக்கும் அவலம் நிகழ்ந்தது.  தந்தை, கணவன், பிள்ளை என்று ஒரு பெண், ஆணையே சார்ந்து வாழும் வாழ்க்கையை ஏற்றி வைத்தது. பொருளீட்டி வரும் காரணத்திற்காகவே கணவனின் எல்லாக் கொடுமைகளையும் அனுபவித்து அவ்வப்போது தாலியைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு தாசி வீட்டுக்குச் செல்வதாய் இருந்தாலும் அவனை தலையில் சுமந்து தம் கற்பு நிலையை இறுதி வரை கைவிடாமல் செத்துப் போகும் நிலையைத்தானே திருமணம், குடும்பம் ஆகிய நிறுவனங்கள் பெண்களுக்குத் தருகின்றன? ஆண் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொண்டு நிலையான அதிகாரத்தைச் செலுத்தும் ஒரு சமூகமாகத்தானே இவை மாற்றியமைத்திருக்கின்றன?

திருமணம் என்பது ஓர் ஒப்பந்தம் எனில் எல்லா உரிமைகளும் அதிகாரங்களும் விதிகளும் சலுகைகளும் அந்த ஒப்பந்தத்தில் நுழையும் இரு நபர்களுக்கும் பொதுவாகத்தானே அமைய வேண்டும்? நம் குடும்ப அமைப்புகள் அவ்வாறா இயங்குகின்றன? குடும்ப வன்முறை என்பது பரவலாக அறியப்பட்ட ரகசியமாக ஆனால் சட்டத்தினாலும் நீதியினாலும்  ஒடுக்கப்பட முடியாத தன்மையுடன் அல்லவா வளர்ந்து கொண்டிருக்கிறது?  19-ம் நூற்றாண்டின் இறுதியில் பெண்ணியச் சிந்தனைகளும் கோட்பாடுகளும் மெல்ல பரவத் துவங்கியவுடன் பல்வேறு போராட்டங்களுக்குப் பின் பெண்களுக்கும் வேலைவாய்ப்புகள் பெருகத்துவங்கி அதுவரை அனைத்திற்கும் ஆணை எதிர்பார்த்திருந்த நிலை மாறி பொருளாதார விடுதலையை அடைந்தவுடன் ஆண்களின் வன்முறைக் கூடாரங்களாகவும் அதிகார மையங்களாகவும் விளங்கும் திருமணம், குடும்பம் ஆகிய அமைப்புகளில் ஏன் புக வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தனர்.

'பிள்ளை பெறும் இயந்திரங்களாக இருப்பதின் மூலமே நீங்கள் அடிமைகளாக கிடக்கின்றீர்கள், ஆகவே உங்கள் கர்ப்பப்பைகளை தூக்கிப் போடுங்கள்' என்று பெண் அடக்கப்படும் நுண்ணரசியலின் நுட்பமான புள்ளியைக் சுட்டிக் காட்டி அந்தக் காலத்திலேயே முழங்கினார் பெரியார்.  பாலியல் உள்ளிட்ட சில பல காரணங்களுக்காக மனிதன் தனித்து வாழ முடியாத சமூக விலங்கு என்பதாலேயே ஓர் ஆணும் பெண்ணும் எந்த பரஸ்பர கட்டுப்பாடுகளும் சாசனங்களும் விதிகளும் அல்லாமல் வாழத் துணியும் சமூகக் கலக முறையாகவே live-in-relationship தோன்றியது. இதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்தாலும் இதை சட்டவிரோதமானது அல்ல என்றுதான் நீதிமன்றங்களும் கூறுகின்றன. தனிநபர் சுதந்திரத்தை உறுதிப்படுத்துதல், பெண் விடுதலை போன்றவைகளான நோக்கில் அமைந்த இந்த வாழ்வுமுறைக்குப் பின்னால் இத்தனை நீண்ட பரிணாம வரலாறு இருக்கிறது. வழக்கமான எந்தவொரு உறவுகளின் இடையிலும் நிகழும் தற்காலிக சிக்கல்கள், எளிதில் தீர்க்கக்கூடிய சில்லறைப் பிரச்சினைகளோடு  வாழ்பவர்களுக்கு திருமணம், குடும்பம் ஆகிய நிறுவனங்கள் செளகரியமாகத் தெரிவதில் எந்தவொரு தவறுமில்லை. ஆனால் அந்த அமைப்பிற்குள் சிக்கிக் கொண்டு வாழ்நாள் முழுக்க புழுங்கி வதைபடும் நபர்களுக்கான விடுதலை எவ்வாறு, எப்போது நிகழும்? இந்தப் பின்னணிகளைப் பற்றியெல்லாம் துளியும் அலட்டிக் கொள்ளாததே 'ஓ காதல் கண்மணி' திரைப்படத்தின் பிரச்சினை.

***

My Sassy Girl திரைப்படத்தின் துவக்கக் காட்சியை  நினைவுப்படுத்துவது போல் தாரா மும்பை ரயில் மேடையின் நுனியில் நின்று தற்கொலைக்கு முயல்வது போல் இத்திரைப்படம் துவங்குகிறது. வீடியோ கேம் நிரலை உருவாக்கும் மென்பொருள் துறை நபரான ஆதி சென்னையிலிருந்து மும்பைக்கு வருகிறான். தற்கொலைக்கு முயலும் தாராவை நோக்கி கத்துகிறான். அடுத்த காட்சியிலேயே திருமணமொன்றில் சந்திக்கும் அவர்கள் திருமணம் எனும் சடங்கும்  குழந்தை பெறுதல் என்று அதைத் தொடரும் சிக்கல்களும் தேவைதானா என்கிற ஒத்த அலைவரிசை மனநிலை கொண்ட உரையாடல்  மூலம் நண்பர்களாகின்றனர். எவ்வித சிக்கலான நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் அற்று தாங்கள் இணைந்து வாழ முடியும் என்கிற தற்காலிக முடிவை நோக்கி நகர்கின்றனர். அதற்கு மாறாக  பிரிய முடியாதவாறு தாங்கள் ஒருவரையொருவர் தீவிரமாக நேசிக்கத் துவங்கி விட்டோம் என்பது இருவருக்குமே புரிந்தாலும் தங்களின் முந்தைய தீர்மானம் காரணமாகவே அது அல்லாதது போல பாவனை செய்கின்றனர். இப்படியே நீண்டு செல்லும் படத்தின் இறுதிக் காட்சியில் பணி நிமித்தமாக  இருவரும் பிரிய நேரும் போது அந்த துயர் தாங்காமல் தங்களை வெளிப்படுத்திக் கொண்டு தீர்மானத்தைத் துறந்து திருமண பந்தத்தில் நுழைய முடிவு செய்கின்றனர். இவர்கள் எடுக்கும் முடிவிற்கு அவர்கள் தொடர்ந்து கவனிக்கும் ஒரு முதிய தம்பதியினரின் பரஸ்பர நேசமும் காரணமாகி விடுகிறது.

ஏற்கெனவே குறிப்பிட்டபடி எந்தவொரு சமூகப் பிரச்சினையையும் மேலோட்டமாக உரையாடி அதை வெகுசன வணிகக்கூறுகளுடன் வியாபாரப் பண்டமாக உருமாற்றி நுட்பமாக சந்தைப்படுத்தும் அதே பணியைத்தான் இந்தத் திரைப்படத்திலும் மணிரத்னம் செய்திருக்கிறார். இந்த வாழ்வுமுறையில் உண்டாகும் எந்தவொரு சிக்கலும் அதன்  நன்மை தீமைகளும் பெண் சுதந்திர நோக்கிலான எந்தவொரு விவாதமும் இத்திரைப்படத்தில் நிகழவேயில்லை. நாயகியான தாராவிற்காவது தன்னுடைய பெற்றோரின் கசப்பான வாழ்வனுபவத்தின்  மூலம் திருமணத்தின் மீது அவநம்பிக்கை பிறக்கும் ஒரு காரணமாவது இருக்கிறது. ஆனால் நாயகனுக்கு அம்மாதிரியான பின்புலம் ஏதும் சித்தரிக்கப்படவேயில்லை. ஒரு சராசரியான உயர்நடுத்தர வர்க்க, கூட்டுக்குடும்பத்திலிருந்து எந்த பிரச்சினைகளும் அல்லாத ஆணாகத்தான் இருக்கிறான். ஒரு காட்சியில் தாரா தான் கர்ப்பமாக இருப்பதாகச் சொல்கிறாள். ஆதி அதிர்ச்சியடைகிறான். பிறகு அவள் விளையாட்டுக்காக பொய் சொல்வதாகச் சொல்கிறாள். உண்மையிலேயே அவள் கர்ப்பமாகியிருந்தால் அந்த சூழலை அவர்கள் எப்படி எதிர்கொண்டிருப்பார்கள்? இது போன்ற எந்தவொரு நடைமுறைச் சிக்கலுக்குள்ளும் மணிரத்னம் செல்லவேயில்லை. திரைக்கதையின் மையப்பொருளாக விவாதத்திற்கு உட்பட்டிருக்க வேண்டிய இந்த விஷயங்களைத் தாண்டி, அதற்குப் பதிலாக ஒரு சராசரியான காதல் படத்தைப் போலவே உருவாக்கியிருக்கிறார். படம் முழுவதும் அவர்களின் காமமும் காதலுமான காட்சிகள் திகட்ட திகட்ட விவரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. அவர்கள் இறுதியில் மனம் மாறி திருமணத்திற்குள் விழ ஊறுகாய் போல ஒரு முதிய தம்பதியினரின் நேசம் தொட்டுக் கொள்ளப்படுகிறது.

நவீனகால வாழ்வு தரும் நெருக்கடியிலிருந்து பரிணமித்திருக்கும் ஒரு கலாசார பிரச்சினை பற்றிய தீவிரமான விவாதத்தை ஒரு தமிழ் திரைப்படம்  துவங்கி வைக்கும் அற்புதமான வாய்ப்பிலிருந்து தவறி பழமைவாத மனம் வெற்றி கொள்ளும் முடிவிற்கே படத்தை தள்ளி தனிநபர் சுதந்திர வாழ்வை நிலையல்லாத, பொறுப்பற்ற, சந்தர்ப்பவாதம் என்பது போன்றே மணிரத்னம் பயன்படுத்தியிருக்கிறார்  என்பதுதான் சோகம். தம்மை கடத்தியவர்களின் கீழ்மைகளுக்கு இடையே உள்ள அவர்களின் சில நற்குணங்களைக் கவனித்து அவர்களின் மீதே காதலும் நேசமும் கொள்வதை Stockholm syndrome என்று சித்தரிக்கிறது உளவியல். அதைப் போலவே எத்தனை மோசமான ஆணாக இருந்தாலும் திருமணம் எனும் அழைப்பில் நுழைந்து அதை அனுசரித்துப் போவதின் மூலம் அதுவே பெண்களுக்கு நாளடைவில் பழகி விடும் என்கிற அற்புதமான பழமைவாத நீதியை உறுதி செய்திருக்கிறார் மணிரத்னம். Live-in-relationship ஒருவேளை பல கலாசார சீர்கேடுகளை, உறவுச்சிக்கல்களை உற்பத்தி செய்யும் என்று இயக்குநர் கருதியிருப்பாராயின் அதைப் பற்றியாவது திரைப்படத்தில் வலுவாக விவாதித்திருக்க வேண்டும். மாறாக அந்திமக் காலத்தில் உடல் தளர்ந்து போகிற போது ஒருவரையொருவர் தாங்கிப் பிடிப்பதற்கான ஏற்பாடுகளில் ஒன்றுதான் திருமணம் என்கிற தட்டையான செய்திதான் இதில் பதிவாகியிருக்கிறது.

***

மணிரத்னங்களின் படத்தின் மையங்கள் குறைபாட்டோடு சித்தரிக்கப்பட்டிருந்தாலும் அவரின் மற்ற திரைப்படங்களில் திரைக்கதை என்பதாவது குறைந்தபட்சம் ஒரு வலுவான சுவாரசியமான விஷயமாக இருக்கும். ஏற்கெனவே குறிப்பிட்டது போல இந்தியத் திரைப்படங்களின் திரைக்கதை பாணியை மாற்றியதில் மணிரத்னத்தின் பங்கு கணிசமானது. இதே மாதிரியான உறவுச்சிக்கல்களை கையாண்ட முந்தைய திரைப்படங்களான மெளனராகம் மற்றும் அலைபாயுதே ஆகியவற்றில் திரைக்கதையானது பல்வேறு அழுத்தமான சூழல்களால் நகர்ந்து கொண்டேயிருக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும்.

ஆனால் இத் திரைப்படத்தில் அவ்வாறான அழுத்தங்களோ, சுவாரசியமோ எதுவுமே இல்லை.  உண்மையில் அவர்களுக்கு என்ன பிரச்சினை என்றே தெரியவில்லை. இருவரும் திருமணம் எனும் நிறுவனச் சிக்கலில் இருந்து விடுபட்டு வாழும் உத்தேசத்தைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கான கறாரான மனநிலையையோ விலகலையோ அவர்களால் துவக்கத்திலிருந்தே பின்பற்ற முடியவில்லை. பதின்மவயதுக் காதலர்கள் போலவே உடல் நெருக்கத்துடன் தொடர்ந்து அலைந்து கொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் மனம் நிலையான காதலிலோ அல்லது திருமணத்திலோ உடனே விழ எந்தவொரு விதமான தடையுமே காட்சியமைப்புகளில் இல்லை. பொருளாதாரத் தடையுமில்லை. அவர்களின் அகங்காரம்தான் அதற்கு தடைக்கல்லாக இருக்கிறது என்றாலும் அதற்கான வலுவான காட்சிகளும் இல்லை. ஜீப்பில் சண்டையிட்டுக் கொண்டே பயணிக்கும் இறுதிக் காட்சியில் மட்டுமே அது நிகழ்கிறது. மணிரத்னம் எனும் இயக்குநர் அதுவரையிலான உறக்கத்திலிருந்து விழித்து உயிர்ப்புடன் செயல்படும் அது போன்ற காட்சிகள் மிக அபூர்வமாகத்தான் இத்திரைப்படத்தில் பதிவாகியிருக்கின்றன. பாத்திரங்களின் உணர்வுகளோடு பார்வையாளர்களும் வலுவாக இணைந்தால்தான் ஒரு திரைப்படத்தை அவர்களால் சுவாரசியமாக தொடர்ந்து கவனிக்க முடியும். இதில் அவ்வாறான எதுவுமே நிகழவேயில்லை. 'நீங்கள் எப்படியாவது தொலைந்து போங்கள், படத்தை முடித்தால் போதுமடா சாமி' என்பது போல்தான் இருந்தது.

மற்ற திரைப்படங்களில் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களோடு மணிரத்னத்தின் திரைக்கதையும் இணையும் போது அது சுவாரசியமான படைப்பாக மாறும் சாத்தியமாவது இருந்தது. நுட்பக் கலைஞர்களின் அசாத்திய திறமைகளில் மணிரத்னத்தின் ஒருவேளையான போதாமைகள் மறைந்து கொள்ளும் விஷயமாவது நடந்தது. ஆனால் இத்திரைப்படத்தில் மற்ற பங்கேற்பாளர்கள் அதிதிறமையாக பிரகாசிக்கும் போது இயக்குநர் செயலற்றுப் போயிருப்பதின் மூலம் இத்திரைப்படம் ஒரு வெற்று முயற்சியாகியிருக்கும் அவலம் மட்டுமே நடந்தேறியிருக்கிறது. ஒரு நல்ல திரைக்கதை என்பது அது நிகழும் நிலவெளியின் பின்னணி, கலாசாரத்தையுமே இணைத்து முழுமையாக பதிவு செய்வது. இதில் மும்பையின் பிரத்யேகமான நிலவெளிக்காட்சிகள் எங்குமே அழுத்தமாக பதிவு செய்யப்படவில்லை.

ஆறுதலாக சில நல்ல விஷயங்களையும் பார்த்து விடலாம். ஏற்கெனவே குறிப்பிட்டபடி மணிரத்தினத்தின் வழக்கமான அழகியல் சாகசங்களால் படம் நிரம்பி வழிகிறது. பொங்கும் ஷாம்பெயின் போல படம் முழுக்க இளமை நுரைத்துப் பொங்கி வழிகிறது. சுஜாதாவின் பாணியில் மிகச் சுருக்கமான வசனங்களின் மூலம் நீண்ட விளக்கங்களை தவிர்த்து விடும் பணியை மணியின் அற்புதமான வசனங்கள் செய்கின்றன. தான் தங்கியிருக்கும் வீட்டின் மூதாட்டியை ஓர் இசைக்கச்சேரிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு ஆதிக்கு நேர்கிறது. சாலையில் செல்லும் போது "பம்பாயில் நான் 20 வருஷத்திற்கு மேல இருக்கேன். எனக்குப் போகத் தெரியாதா, என்ன பிரச்சினை?" என்று கேட்பார் முதிய பெண்மணி. "அதான் பிரச்சினையே. பம்பாய், மும்பை-ன்னு மாறியே எத்தனையோ வருஷம் ஆச்சு" என்று பதிலளிப்பான் ஆதி.  மூதாட்டிக்கு அல்ஸைமர் குறைபாடு உள்ளது என்பதை சில விநாடிகளில் கடந்து போகும் வசனத்தில் அழுத்தமாக விளக்கியிருப்பது அற்புதம். அந்தப் பெண்மணியின் மீது அதிகமான உருக்கத்தைக் கூட்டி பார்வையாளர்களை நெகிழ்வடைய வைக்கும் அபத்தங்களையெல்லாம் செய்யாமல் மிக இயல்பாக இயக்குநர் பயன்படுத்தியிருப்பது ஆறுதல். இதைப் போலவே காதலர்களின் கூடல், ஊடல் ஆகிய தருணங்களின் பிரத்யேகமான உணர்வுகளை வெளிப்படுத்தும் போது அவற்றை  இயல்பான வசனங்களால் உருவாக்கியிருப்பது சமகால இளைய தலைமுறையை மணிரத்னம் எத்தனை தூரம் கவனித்திருக்கிறார் என்பதையே உணர்த்துகிறது. குறைந்த சாத்தியத்திற்குள் பிரகாஷ்ராஜ் நிறைவாக நடித்திருக்கிறார்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவின் இயக்குநர்கள் ரஹ்மானின் கைவிலங்கை கழற்றி விடுதலை செய்து விட்டார்களா அல்லது அவரே முயற்சித்து தப்பித்து வந்து விட்டாரா என்றும் தெரியவில்லை. ஒவ்வொரு பாடலுமே ஒவ்வொரு வகைமையில் மிகச் சுதந்திரமான முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு படத்தின் அனைத்துப் பாடல்களுமே கொண்டாட்டமாக அமைவதென்பது தமிழ் சினிமாவில் அரிதான விஷயம். அது காதல் கண்மணியில் சாத்தியப்பட்டிருக்கிறது. 'மலர்கள் கேட்டேன்' 'தீரா உலா' ரஹ்மானின் புதல்வர் அமீன் பாடும்  அரபிப்பாடல் போன்றவை முற்றிலும் வெவ்வேறு விதமான அனுபவங்களைத் தருகின்றன. இருவிதங்களில் ஒலிக்கும் 'மென்டல் மனதில்' பாடலுக்கான வேறுபாட்டின் மெனக்கெடல் அசர வைக்கிறது. ஆனால் மணிரத்னம் வழக்கம் போல் சில பாடல்களை துளியாக மாத்திரம் உபயோகித்து மீதியை துண்டித்து விடுகிற அநியாயத்தை செய்திருக்கிறார். பிறகு ஏன் அவைகளை மெனக்கெட்டு உருவாக்க வேண்டும்? செயற்கையான கட்டமைப்பில் உருவாக்கப்பட்டு திணிக்கப்படும் திரைப்பாடல்களை கைவிட்டால் சுதந்திரமான இசையமைப்புகளில் பல தனி ஆல்பங்களாவது உருவாகும் நிலை ஏற்படும். பி.சி. ஸ்ரீராமின் காமிராவும் ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்ங்கும் இளமைத் துள்ளாட்டங்களுக்கு மிக அற்புதமாக துணை செய்திருக்கின்றன.

புறவடித்தில் நவீனத்தின் பளபளப்பையும் ஆனால் அக வடிவத்தில் புரையோடிப் போன பழமைவாதத்தையும் அதை விவாதத்திற்கு உட்படுத்தாத அதைரியத்தையும் கொண்டிருக்கும் முரணான படைப்பே 'ஓ காதல் கண்மணி'

**

.
மணிரத்னத்தை 'இந்திய ஸ்பீல்பெர்க்' என குறிப்பிடுகிறார்கள். ஹாலிவுட்டின் பிரம்மாண்ட திரைப்படங்களின் இயக்குநராக அறியப்படும் ஸ்பீல்பெர்க் கூட தனது வணிக பாணியிலிருந்து விலகி The Color Purple, Schindler's List போன்ற அற்புதமான திரைப்படங்களை உருவாக்கியிருக்கிறார்.மணிரத்னமும் தனது வாழ்நாளில் வணிகத் திரைப்படங்களுக்கான எவ்வித சமரசங்களும் அல்லாமல் ஓர் அழுத்தமான திரைப்படத்தை உருவாக்கினால் அவரது பிம்பம் இந்தியத் திரை வரலாற்றில் இன்னமும் வலுவாக இடம்பெறும் சாத்தியமுண்டு.

- உயிர்மை - மே 2015-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)
 
suresh kannan

Thursday, May 14, 2015

யுவன் சந்திரசேகர் படைப்புலகம் - உரையாடல் நிகழ்ச்சி




ஓர் எழுத்தாளரின் அனைத்து அல்லது பெரும்பாலான படைப்புகளை ஒருசேர வாசிப்பதென்பது விநோதகரமான இன்பம். சுவாரசியமான அனுபவமும் கூட. ஒருசில எழுத்தாளர்களை மட்டுமே இப்படி வாசிக்க முடியும். (சில எழுத்தாளர்களை ஒருமுறை வாசிப்பது என்பதே துன்பகரமான அனுபவமாக இருக்கும்). ஒரு நல்ல படைப்பாளியின் பெரும்பாலான நூல்களை வாசிக்கும் போது நீங்களும் அந்த படைப்பாளியின் அந்தரங்க உலகின் ஒரு பகுதியாக மாறி விடுகிறீர்கள். நேரில் சந்திக்காமலேயே உங்களுக்கு நெருக்கமான தோழரின்  சாயலை அந்த எழுத்தாளர் பெற்று விடுகிறார். அந்தரங்க உரையாடலின் வழியாகவே இரு நபர்கள் வந்து ஒரு புள்ளியில் இணையும் அந்த அனுபவம் மகத்தான ஒன்று.

அப்படிப்பட்ட அலுக்காத அனுபவத்தை தரும் எழுத்தாளர்களில் ஒருவர் யுவன்சந்திரசேகர்.

இதுவரை ஆறு புதினங்களும் பல்வேறு சிறுகதைகளும், மொழிபெயர்ப்பு நூல்களும், எம்.யுவன் என்கிற பெயரில் கவிதைகளும் எழுதியுள்ள யுவன் தனது ஒவ்வொரு நூலிலும் பல்வேறு சோதனை வடிவங்களை முயன்றுள்ளார். அடிப்படையில் அவர் ஒரு கதை சொல்லி என்பது குறிப்பிடத்தக்கது. கச்சிதமான சொற்களுடன் கூடிய உரைநடை, நுட்பமான ஆனால் அபாரமான நகைச்சுவை, திகட்ட வைக்காத தத்துவ இழைகள் என்கிற விசித்திரமான கலவையில் உருவாகும் யுவனின் எழுத்துக்கள் பரவலாக சென்றடைய வேண்டியவை. அதிகமான கவனப்படுத்தப்பட வேண்டியவை.

இணையத்திலும் சரி, அல்லது பொதுவாகவும் சில குறிப்பிட்ட எழுத்தாளர்களைப் பற்றிய உரையாடலும், அவர்களின் அரசியலும் இலக்கியப்பூசல்களும் மட்டுமே திரும்பத் திரும்ப பேசப்படுகின்றன. மாறாக இளம் வாசகர்கள் தமிழில் அறியப்பட வேண்டிய நல்ல எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். அவர்களில் முக்கியமான நவீன படைப்பாளிகளுள் யுவன் சந்திரசேகர் முக்கியமானவர். சர்ச்சைகளின் வழியாகவும் இலக்கியப்பூசல்களின் வழியாகவும் தன் இருப்பையும் பீடத்தையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் ஆபாசமான தந்திரங்கள் என்று ஒரு சிலர் செய்யும் வழிமுறைகளை  அவர் செய்வதில்லை என்கிற தகுதியே அவரைப் பற்றி அறியும் ஆர்வத்தை உண்டாக்குகிறது.

***

யுவன் சந்திரசேகரின் படைப்புலகம் பற்றிய ஓர் உரையாடல் நிகழ்வு நண்பர் கிருஷ்ணபிரபுவின் ஒருங்கிணைப்பில் நிகழவிருக்கிறது. யுவனும் அதில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது. யுவன் ஒரு சுவாரசியமான பேச்சாளர் என அறிந்திருக்கிறேன். இந்த நிகழ்வில் அவரும் உரையாடக்கூடும் என நம்புகிறேன்.

இந்த நிகழ்வின் சிறிய பங்களிப்பாக யுவனின் படைப்புகள் பற்றி நானும் பேசவிருக்கிறேன். நாவல்கள் பற்றி என் உரை அமையும் என்று கிருஷ்ணபிரபு அவருடைய அறிவிப்பில் தெரிவித்திருந்தாலும் அதையும் தாண்டி யுவனின் எழுத்து முறை, அதிலுள்ள சுவாரசியம் போன்றவை பற்றி என் உரை அமையக்கூடும். மேடையில் பேசிய அனுபவமில்லாதது மெல்லிய பதற்றத்தைத் தந்தாலும் நண்பர்களுடன் உரையாடப் போகும் மகிழ்ச்சியும் யுவன் நூல்களைப் பற்றிய வாசக அனுபவத்தை பகிரப் போகும் ஆர்வமும் அந்த பதற்றத்தை தணியச் செய்கிறது.


யுவனின் மொழிபெயர்ப்பு நூல்கள் பற்றி கவிதா முரளிதரனும், சிறுகதைகள் பற்றி அ.மு.செய்யதுவும் கவிதைகள் பற்றி கங்காதரனும் பேசவிருக்கிறார்கள்.

வரும் ஞாயிறு, மே 17 அன்று  மாலை 04.30 முதல் முதல் சென்னை, கே.கே. நகரிலுள்ள டிஸ்கவரி புக் பேலஸில் நிகழும் இந்த உரையாடலுக்கு நண்பர்கள் அனைவரையும் வருக என  அன்புடன் அழைக்கிறேன்.

ஞாயிறு மதியம் என்பது ஒரு சங்கடமான நேரம்தான்.  இருந்தாலும் நான் முந்தையதொரு  பதிவில் குறிப்பிட்டிருந்தவாறு
ஒரு வாசகனாக இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதால் கிடைக்கும் ஆதாயம் என்னவெனில் லெளகீகச் சிக்கல்களில் திசைமாறி அமிழ்ந்து போன வாசக மனம் சற்று தெளிந்து விழித்துக் கொள்ளும் என்பதுதான். 

வாசிப்பின் இலக்கிய ருசியுள்ளவர்களும் அது மழுங்கிப் போனவர்களும் புதுப்பிக்க விரும்புபவர்களும் அல்லது புதிதாக உருவாக்கி கொள்ள விரும்புபவர்களும் இது போன்ற நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்து கொண்டு தன் அந்தரங்க மனதிற்கான தூண்டுதல்களை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என கருதுகிறேன். அது மட்டுமல்லாமல் எழுத்திலே மட்டும் சந்திக்கும் படைப்பாளிகளை பெளதீகமாக சந்திப்பதும் அவர்களைக் கவனிப்பதும் ஒருவகை மகிழ்ச்சியே.

என்கிற காரணத்தை முன்னிட்டு வாசகர்கள் பெருந்திரளாக இந்நிகழ்விற்கு வர வேண்டுமென்று அழைக்கிறேன். வருக.


தொடர்புள்ள பதிவு: டிஸ்கவரி புக் பேலஸ் – இலக்கிய நிகழ்வுகள்

suresh kannan

Wednesday, May 13, 2015

மறுவாசிப்பில் சுந்தர ராமசாமி - இலக்கிய வீதி


நூல் வெளியீடுகள், எழுத்தாளர்களின் உரைகள் உள்ளிட்ட  பெரும்பாலான இலக்கிய நிகழ்வுகள் பொதுவாக தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் நிகழ்வதை மற்ற நகரங்களில் வசிக்கும் இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள் ஒரு காலத்தில் பெருமூச்சுடன் கவனிப்பதை உணர்ந்திருக்கிறேன். (இப்போது மற்ற நகரங்களிலும் நிகழ்வதால் பெருமூச்சின் அளவு குறைவு) ஆனால் சென்னையிலேயே வசித்தும் கூட இம்மாதிரியான பல நிகழ்வுகளுக்கு என்னால் செல்ல முடியாத சில நடைமுறைச்சிக்கல்கள் சில.

தொழில் சார்ந்து நான் இயங்கும் பணியானது ஏறக்குறைய வெட்டியானுக்கு இணையானது என்பதால் எந்த நேரம் பிணம் விழுந்து அழைப்பு வருமோ அப்போது உடனே ஓட வேண்டியிருக்கும். எனவே இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு  செல்ல பெரும்பாலும் ஆசைப்படுவதில்லை. மீறி திட்டமிட்டால்,  இயலாத சமயங்களில் அது ஒரு கழிவிரக்கமான கசப்பாக உள்ளே படிந்து செய்யும் பணி சார்ந்த மனத்தடைகளை உருவாக்கும். இன்னொன்று, எனக்கு இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரியாததால். பொதுப் போக்குவரத்தை நம்பி குறுகிய நேரத்தில் வெவ்வெறு இடங்களின் நிகழ்விற்கு நேரத்திற்குள் செல்ல முடியாது, வீடு திரும்ப தாமதமாகும் என்பது போன்றவை.

நுகத்தடி சுமையல்லாத ஒரே விடுதலை நாளான ஞாயிற்றுக்கிழமையை வெளியே நகராமல் வாசிப்பு, திரைப்படம் என்று கழிப்பதற்கான சுயநல சோம்பேறித்தனம் மற்றும் இன்ன பிற லெளகீகச் சிக்கல்கள்.

இவைகளைத் தாண்டி செல்ல முடியாத குற்றவுணர்வு மட்டுமே மிச்சமிருக்கும்.

இலக்கிய நிகழ்வுகளுக்கு கூட்டம் வருவதில்லை என்கிற அமைப்பாளர்களின் புகாருக்கு என் தனிப்பட்ட அனுபவம் சார்ந்து சில காரணங்களை கண்டுபிடிக்க முயன்றிருக்கிறேன். தவிரவும் சனி,ஞாயிறின் ஒரே மாலையில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு எங்கே செல்வது என்கிற உப குழப்பம். இவற்றையெல்லாம் மீறி கூட்டங்களில் கலந்து கொண்டு அவற்றை வெற்றி பெறச்செய்யும் நல்லிதயங்களை நிச்சயம் வாழ்த்திப் பாராட்ட வேண்டும். சோர்வடையாமல் தைரியத்துடன் கூட்டங்களை தொடர்ந்து ஏற்பாடு செய்பவர்களுக்கும் பாராட்டு.

ஒரு வாசகனாக இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதால் கிடைக்கும் ஆதாயம் என்னவெனில் லெளகீகச் சிக்கல்களில் திசைமாறி அமிழ்ந்து போன வாசக மனம் சற்று தெளிந்து விழித்துக் கொள்ளும் என்பதுதான். இல்லையெனில் விழா முடிந்து வீட்டுக்குப் போய் நள்ளிரவில் நாற்காலி போட்டு மேலே ஏறி 'ஒரு புளிய மரத்தின் கதை' கிடைக்கிறதா, என்று புத்தக குவியலை துழாவிக் கொண்டிருந்தது எந்தக் காரணத்தினால் என்று நினைக்கிறீர்கள்?

வாசிப்பின் இலக்கிய ருசியுள்ளவர்களும் அது மழுங்கிப் போனவர்களும் புதுப்பிக்க விரும்புபவர்களும் அல்லது புதிதாக உருவாக்கி கொள்ள விரும்புபவர்களும் இது போன்ற நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்து கொண்டு தன் அந்தரங்க மனதிற்கான தூண்டுதல்களை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என கருதுகிறேன். அது மட்டுமல்லாமல் எழுத்திலே மட்டும் சந்திக்கும் படைப்பாளிகளை பெளதீக ரீதியாக சந்திப்பதும் அவர்களின் உடல்மொழியைக் கவனிப்பதும் ஒருவகை மகிழ்ச்சியே.

()

எனவேதான் இலக்கிய வீதி நடத்தும் நிகழ்விற்கு செல்ல வேண்டும் என்றெழுந்த தூண்டுதலை பத்திரமாக கைப்பற்றிக் கொண்டேன். இனியவன் பல வருடங்களாக தொடர்ந்து நிகழ்த்தும் இலக்கியச் செயற்பாடுகளை அறிந்திருந்தாலும் சென்றது இதுவே முதன்முறை. 'இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்' என்கிற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் உரை நடத்தி, எழுத்தாளர்களுக்கு விருதும் தருகிறார்கள். இந்த மாதம் சுந்தரராமசாமி என்பதால் எனக்கு கூடுதல் சுவாரசியம். 

அது என்னமோ இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்கிறவர்கள் சுலபமானது என்பதால் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து கொள்வதோடு நிறுத்திக் கொள்கிறார்களே தவிர, அங்கு என்னென்ன பேசப்பட்டது என்பதைப் பற்றி எழுதுவது இப்போதெல்லாம் குறைந்து விட்டது. நிகழ்ச்சி அமைப்பாளர்களாவது, குறைந்த பட்சம் அதன் காணொளிகளை தரமான விதத்தில் பதிவு செய்து இணையத்தில் ஏற்றி வைக்கலாம். உலகெங்கிலும் உள்ள நண்பர்கள் பார்க்க ஏதுவாக இருக்கும்.

()


பாரதிய வித்யா பவன். மைலாப்பூர் களையுடனான முதியவர்களும் மாமிகளும் நிறைந்திருந்த கூட்டத்தைப் பார்க்க சற்று ஆச்சரியம். நான் சென்ற போது ஞானக்கூத்தன் தலைமை உரையாற்றிக் கொண்டிருந்தார். பேச்சின் இடையில் நுழைந்ததால் எதைப் பற்றி என்று தெரியவில்லை. மறுவாசிப்பு பற்றியது என்று அனுமானம். ஆனால் அவர் சித்தரித்த ஒரு சம்பவம் சுவாரசியமாக இருந்தது.

சு.ரா, க.நா.சு, ஞானக்கூத்தன் கோயிலுக்குச் சென்றிருந்தார்களாம். கடவுள் நம்பிக்கையல்லாத சு.ரா. வெளியிலேயே நின்று விட்டார். ஐயரின் தட்டில் ஞானக்கூத்தன் பத்து ரூபாய் போட்டாராம். இருவரும் கோயிலில் இருந்து வெளியே வந்ததும் க.நா.சு.. தன் பையிலிருந்து பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்து "ஏன் நீங்கள் அவசரப்பட்டு போட்டீர்கள். எனக்கேதும் புண்ணியம் சேராது அல்லவா, எனவே இந்த ரூபாயை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்று ஞானக்கூத்தனிடம் அளித்து விட்டாராம். படைப்பாளிக்கும் ஆசாமிக்கும் உள்ள அகரீதியான வித்தியாசங்களை வாசகர்கள் அனுமானிக்காவிட்டால் குழப்பம்தான். 

யுவன்சந்திரசேகருக்கு 'அன்னம் விருது' அளித்தார்கள். தோற்றத்தில் மணிரத்னத்தை நினைவுப் படுத்துவது போலவே இருந்த அவர் பேச்சையும் அவ்வாறே சுருக்கமாக முடித்துக் கொண்டார். "ஏற்புரையெல்லாம் தர மாட்டேன் என்கிற உத்திரவாதத்தின் பேரில்தான் வந்தேன். எனது எழுத்துக்களுக்கு ஆதரவான கருத்துக்கள், எதிர்வினைகளிலிருந்து நான் சொல்ல என்ன இருக்கிறது. ஏதாவது பிடிக்காத விஷயம் இருந்தால் சொல்லுங்கள். அதைப் பற்றி இரண்டுமணி நேரமாவது உரையாடலாம்" என்றார்.

பிறகு காலச்சுவடு கண்ணன். 

'ஓர் எழுத்தாளரும் அவரது  வாசகர்களுக்கும் கூடும் சபையில், அவரது குடும்பத்தாருக்கு ஏதும் வேலை ஏதும் இல்லை என நினைக்கிறேன். அது இடைஞ்சலை ஏற்படுத்தலாம்' என்று தொடர்ந்தவர், சு.ரா வுடனான தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். புதிய இளம் வாசகர் முதற்கொண்டு எந்தவொரு நபரும் சு.ரா.வின் வீட்டில் வருவதற்கு தடையேதும் அல்லாத சூழலை சு.ரா. உருவாக்கி வைத்திருந்தார் என்பது பற்றிய பகுதியில் சலபதி ஒரு முறை கூறியதாக கண்ணன் தெரிவித்தது, சுவாரசியமானதாக இருந்தது. 'சு.ரா. வின் வீட்டில் எழுத்தாளர்களும் வாசகர்களும் தயக்கம் ஏதுமில்லாமல் உள்ளே நுழைவார்கள். ஆனால் உறவினர்கள்தான் தயங்கி தயங்கி வருவார்கள்'. 

அரவிந்தன்:

சு.ராவோடு பழகியவன் என்கிற முறையில் அவரைப் பற்றியும் அவருடைய நூல்களை வாசித்தவன் என்ற முறையில் அவைகளைப் பற்றியும் எளிதாக பேசிவிடலாம் என்கிற அபார நம்பிக்கை முதலில் இருந்தது. ஆனால் அழைப்பிதழ் வந்தவுடன்தான் அதன் தலைப்பில் 'மறுவாசிப்பில் சுந்தரராமசாமி' என்று போட்டிருந்ததைப் பார்த்ததும் சற்று தயக்கமாகி  விட்டது. ஏனெனில் மறுவாசிப்பு என்பது ஒரு படைப்பை மீண்டும் வாசிப்பது அல்ல, வேறு கோணத்தில் ஒரு புதிய திறப்பாக வாசிப்பது. எனவே கடந்த இரண்டு நாட்களில் சுமார் ஆயிரம் பக்கங்களை வாசித்தேன்.......

என்றவர் சு.ராவின் சிறுகதைகள், கட்டுரைகள், (சு.ரா எனக்காக இரங்கல் கட்டுரை எழுதுவார் என்றால் நான் இப்போதே இறக்கத் தயாராக இருக்கிறேன் என்றாராம் ஓர் எழுத்தாளர்)  நாவல்கள் என்று ஒரு பறவைப் பார்வையில் சு.ராவின் படைப்புகளை அறிமுகப்படுத்தும் வகையில் துவங்கினார், பிறகு மறுவாசிப்பு நோக்கில் ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள், ஆண்கள்,பெண்கள், குழந்தைகள் நாவல்களின் நுட்பங்களைப் பற்றி நீண்ட உரையாற்றினார்.  அவருடைய நேர்மையான, அபாரமான உழைப்பு அவருடைய உரையில் தெரிந்தது.  நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர் கூறியதைப் போன்று எவ்வித குறிப்பும் அல்லாமல் நினைவிலிருந்து இத்தனை விஷயங்களை மேடையில் உரையாற்ற வேண்டுமெனில் சு.ராவின் படைப்புகளில் அத்தனை ஊறிய வாசகராக இருக்க வேண்டும். சு.ரா.வின் மற்ற இரண்டு நாவல்களைப் போலவே 'ஆண்கள், பெண்கள்,குழந்தைகள்' மிக முக்கியமான படைப்பு. அதைப் பற்றி அதிகமான உரையாடல் நிகழ்த்தப்பட வேண்டும் என்பது அரவிந்தனின் ஆதங்கம். 

(புளியமரத்தின் கதை வெளியான காலத்திலேயே அது எழுதப்பட்ட பிரதியாக மட்டுமல்லாமல் சுதந்திர இந்தியாவிற்குப் பிந்தைய தேசத்தின் குறியீட்டு  நோக்கில் அதன் உட்பிரதி உரையாடல்களும் விவாதங்களும் அப்போதே நிகழ்ந்திருக்கின்றன என்றே நினைக்கிறேன். என்றாலும் அறிமுக வாசகர்களுக்கு அரவிந்தனின் உரை புதிய வெளிச்சங்களை அளித்திருக்கலாம்).

()

அவரை புன்னகைக்க வைப்பது ஒரு சவாலான பணியோ என் எண்ண வைக்கும் இயந்திர முகபாவத்துடன் மேடையில் அமர்ந்திருக்கும் அரவிந்தன், உரை நிகழ்த்தும் போது வேறு மனிதராக மாறி நீர்வீழ்ச்சி போல பொங்கி வழிகிறார். நிகழ்வு முடிந்த பிறகு இவரைச் சந்தித்து சில வார்த்தைகள் பேச முடிந்தது. போலவே யுவன் சந்திரசேகரையும். "சார், மே 17 அன்று உங்களுடைய நூல்களைப் பற்றி பேசவிருக்கிறோம். கிருஷ்ணா சொல்லியிருப்பாரே, நீங்கதான் என்னை விஷ் பண்ணணும்" என்றேன். "அட, இது நல்லாயிருக்கே.. வாங்க நல்லா பேசலாம்" என்றார். நிகழ்வில் பேசுவது குறித்து என்னுள் இருந்த தயக்க குமிழ் யுவனின் சகஜபாவத்தால் அந்தக் கணத்தில் உடைந்தது. 

இலக்கிய வீதி நிகழ்த்தும் இந்த தொடர்கூட்டத்தில் அடுத்த நிகழ்வில் ஜெயகாந்தனைப் பற்றி உரையாடப் போகிறார்களாம். வாய்ப்பிருப்பவர்கள் கலந்து கொள்ளுங்கள்.

suresh kannan