Monday, January 16, 2017

2016-ல் தமிழ்த் திரையிசை எப்படியிருந்தது? - ஒரு பார்வைதமிழ் திரையிசையின் எல்லா காலக்கட்டத்திலும் பல இசையமைப்பாளர்கள் இயங்கி வந்தாலும்  பொதுவாக அதில் ஒருவர் மட்டுமே முன்னணியில் இருப்பார். கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்கள் அவரவர்களின் காலக்கட்டத்தில் வெற்றிகரமானவர்களாக இருந்தனர். தோராயமாக இந்த நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து இந்த நிலை மெல்ல மாறத் துவங்கியது. ஒரு குறிப்பிட்ட சமயத்தில் எவருடைய இசை வெற்றியடைகிறதோ அந்தச் சமயத்தில் அவருடைய மதிப்பு உயரும். ஆனால் அது தற்காலிகம்தான். பின்பு இன்னொருவர் அந்த இடத்தைக் கைப்பற்றுவார். தட்பவெப்பம் மாதிரி இந்த நிலை மாறிக் கொண்டேயிருப்பதுதான் இப்போதைய சூழல்.

டிஜிட்டல் நுட்பம் அறிமுகமான பிறகு சினிமாவின் உருவாக்கம் எளிதானது.  நிறைய புது இயக்குநர்கள் வந்தார்கள். கூடவே நிறைய புது இசையமைப்பாளர்களும். நுட்பத்தின் வளர்ச்சி இசையமைப்பை மிக எளிதாக்கியது. எனவே புற்றீசல் போல நிறைய பாடல்கள் உருவாகின. தோன்றிய வேகத்தில் மறையத் துவங்கின. இன்னும் பல பாடல்கள் ரசிகர்களின் கவனத்திற்கு வராமலேயே மறைந்தன. ஒழுங்குபடுத்தப்பட்ட சப்தங்களின் தொகுப்பு மட்டுமே இசையல்ல, உருவாக்குபவரின் கலைத்திறமையும் ஆன்மாவும் அந்த இசை உருவாக்கத்தில் கலந்திருக்க வேண்டும். அத்தகைய படைப்புகளே காலத்தைக் கடந்தும் ரசிகர்களின் நெஞ்சில் நிற்கும் என்பதை நுண்ணுணர்வுள்ள சில இசையமைப்பாளர்களே புரிந்து வைத்திருக்கிறார்கள்.


இந்தச் சூழலில் 2016-ல் வெளிவந்த சில முக்கியமான திரையிசைப்பாடல்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். இது முழுமையான பட்டியல் அல்ல.

***

வருடத்தின் துவக்கத்திலேயே இளையராஜாவின் 'தாரை தப்பட்டை' ஆல்பம் வெளிவந்து மகிழ்ச்சியை அளித்தது. ராஜாவின் ஆயிரமாவது திரைப்படம் என்கிற பெருமையையும் பெற்றது.  இதில் அனைத்துமே ராஜாவின் பிரத்யேகமான முத்திரையுடன் கூடிய பாடல்கள் என்றாலும், திருவாசக வரிகளை அடிப்படையாகக் கொண்டு உருவான 'பாருருவாயா' என்ற பாடலை குறிப்பாகச் சொல்ல வேண்டும். கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டு உருவான அற்புதமான பக்திப்பாடலை சத்யபிரகாஷூம் சுர்முகியும் அபாரமாகப் பாடியிருந்தார்கள். விமானம் ஒன்று மெல்ல டேக் ஆஃப் ஆகி சட்டென்று அபாயகரமாக கர்ணம் அடித்து உயரே எழும்பிப் பறப்பது போன்று சுர்முகி தன் குரலால் மாயாஜாலம் புரிந்திருந்தார். ஆனால் பாலாவின் காட்சியாக்கம் ஏமாற்றமளித்தது.

ஏ.ஆர். ரஹ்மானுக்குப் பிறகு பல புதிய இசையமைப்பாளர்கள் தோன்றினாலும் சந்தோஷ் நாராயணன்  மட்டுமே கவனத்துக்குரியவராக இருக்கிறார். இந்த வருடம் அவர் உருவாக்கியதில் பெரிய ஹிட் என்று 'இறுதிச்சுற்று' மற்றும் 'கபாலியை' குறிப்பிடலாம். அதிக எண்ணிக்கையிலான வாத்தியங்களை வைத்து ஆர்ப்பாட்டம் செய்யாமல் குறைவான ஒலிகளின் பின்னணியில் வித்தியாசமான பாடல்களைத் தரும் திறமையுள்ளவராக விளங்குகிறார். இறுதிச்சுற்றில் 'ஏ சண்டைக்காரா' மற்றும் 'உசுரு நரம்பிலே' ஆகிய பாடல்கள் கவனிக்க வைத்தன. 'கபாலி'யில் 'மாயநதியென' பாடல் தரும் விசித்திரமான உணர்வு மயங்கவும் நெகிழவும் வைத்தது. 'இறைவி'யில் 'துஷ்டா' பாடல் psychedelic  உணர்வைத் தந்தது. ஆனால் அதிக எண்ணிக்கையிலான படங்களை ஒப்புக் கொள்வதினாலோ என்னவோ,  சந்தோஷின் தரம் மெல்ல வீழ்ந்து கொண்டு வருவது கவலையளிக்கிறது.

***

இடையில் காணாமற் போயிருந்த யுவன்சங்கர் ராஜாவின் மீள்வருகை இந்த ஆண்டு 'தர்மதுரை'யின் மூலமாக அழுத்தமாக அமைந்தது. 'ஆண்டிப்பட்டி கணவாய் காத்து'  இந்த வருடத்தின் முக்கியமான மெலடி எனலாம். கேட்க, கேட்க இதன் இனிமை குறையவேயில்லை. 'வெள்ளக்காரி காசு தீந்தா வெறுத்து ஓடி போவா, இவ வெள்ளரிக்கா வித்து கூட, வீடு காத்து வாழ்வா' என்கிற வைரமுத்துவின் பாடல் வரி சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது. நாட்டார் இசையின் சாயலில் அமைந்த 'மக்கா கலங்குதப்பா' பாடல் ரகளையானதாக இருந்தது. 'மதிசியம் பாலா' என்கிற கிராமத்துப் பாடகரின் அறிமுகம் இந்தப் பாடலின் மூலம் கிடைத்தது. இவரே பாடலையும் எழுதியிருந்தார். முதல் பாகத்தைப் போல, சென்னை-28-ன் இரண்டாம் பாகத்தில் யுவனின் இசை குறிப்பிடத்தகுந்ததாக அமையவில்லை என்பது ஏமாற்றமே.

குறைந்த எண்ணிக்கையிலான திரைப்படங்களில் இயங்கினாலும் 'ஜஸ்டின் பிரபாகரன்' குறிப்பிடத்தகுந்த இசையமைப்பாளராக உருவாகி வருகிறார். மறைந்த எம்.எஸ்.விஸ்வநாதனின் அபாரமான மெல்லிசை பாணியை இவரது இசையில் அழுத்தமாக உணர முடிகிறது. 'ஒருநாள் கூத்து' திரைப்படத்தில் உள்ள 'அடியே அழகே' இந்த வருடத்தின் சிறந்த பாடலில் ஒன்று. காதல் பிரிவின் ஏக்கத்தையும் நிராசையையும் பாடகர் ஷான் ரோல்டன் அற்புதமாக பிரதிபலித்திருந்தார்.

சேதுபதி திரைப்படத்தில் வரும் 'கொஞ்சிப் பேசிட வேணாம்' என்கிற மெல்லிசைப் பாடல் பலரை கவர்ந்ததாக அமைந்தது. சித்ராவும் ஸ்ரீராமும் பார்த்தசாரதியும் அருமையாகப் பாடியிருந்தார்கள். நிவாஸ் கே பிரசன்னாவிடமிருந்து இன்னமும் பல தரமான படைப்புகளை எதிர்பார்க்கலாம் என்கிற நம்பிக்கையை இந்தப் பாடல் ஏற்படுத்தியிருக்கிறது.

***

2016-ல் அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களுக்கு இசையமைத்தவராக டி.இமான் இருக்கக்கூடும். 2002-ல் இருந்து இயங்குபவராக இருந்தாலும் 'மைனா' மற்றும் 'கும்கி' திரைப்படங்களின் அபாரமான இசைக்குப் பிறகு இமானின் வேறு பரிமாணம் வெளிப்பட்டது. இவருடைய திரைப்படத்தில் ஒரு நல்ல மெல்லிசைப் பாடல் கட்டாயம் இருக்கும் என ரசிகர்கள் நம்பினார்கள். ஆனால் பெரும்பாலான பாடல்களின் சாயல் 'கும்கி'யின் சாயலிலேயே இருப்பது இமானுக்கு ஒரு பின்னடைவு.

2016-ல் வெளிவந்த இமானின் இசையில் 'றெக்க' திரைப்படத்தில் உள்ள 'கண்ணம்மா' பாடல் பலரால் ரசிக்கப்பட்டது. மனதை உருக்கும் இசையுடன் அமைந்த இந்தப் பாடலை நந்தினி சிறப்பாகப் பாடியிருந்தார். இதே திரைப்படத்தில் ஸ்ரேயா கோஷல் பாடிய 'கண்ணைக் காட்டு போதும்' பாடலும் பரவலாக ரசிக்கப்பட்டது. 'மிருதன்', 'தொடரி' 'மாவீரன் கிட்டு' ஆகிய திரைப்படங்களில் உள்ள சில மெல்லிசைப் பாடல்களையும் ரசிகர்கள் வரவேற்றார்கள். ஆனால் தனது தேய்வழக்கு பாணியிலிருந்து இமான் விடுபடுவது அவரது வளர்ச்சிக்கு நல்லது.

'ஜோக்கர்' திரைப்படத்தின் 'செல்லம்மா' பாடல் 'கண்ணம்மா'விற்கு நிகரான வரவேற்பினைப் பெற்றது. ஷான் ரோல்டனின் இசையில் வந்தது. 'கிடாரி'யின் மூலம் தமிழ்த்திரையிசைக்கு அறிமுகமான இயக்குநர் தர்புகா சிவா. நகைச்சுவை  நடிகராக இருந்து உயர்வு. 'பலே வெள்ளையத் தேவா'விலும் இவரது இசை. நல்வரவு. ஆனால் கவனத்திற்குரியவராக  இவர் இனிதான் மாற வேண்டும்.

இசையமைப்பாளர்கள் நாயகர்களாக உருமாறி விடுவதால் அவர்களின் ஆதாரமான துறையை நழுவ விட்டு விடுகிறார்கள் என்று தோன்றுகிறது. ஜி.வி.பிரகாஷூம் விஜய் ஆண்டனியும் இந்த உருவாக்கிய சில பாடல்கள் குறிப்பிடத்தகுந்தவையாக இருந்தாலும் அவர்களின் அதிசிறப்பான இசை உருவாக்கம் இந்த வருடத்தில் வெளியாகவில்லை என்று தோன்றுகிறது. (ஜி.வி. பிரகாஷின் 'உருகுதே, மருகுதே'வை இன்னமும் மறக்கமுடியவில்லை).

குறுகிய காலத்திலேயே  சமகால இளைஞர்களைக் கவர்ந்த இசையமைப்பாளராக வளர்ந்தவர் அனிருத். இந்த வருடத்தில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரே ஆல்பம் 'ரெமோ', முந்தைய திரைப்படங்களின்  நகலாக மட்டுமே இருந்தது. புதுமையானதாக எதுவும் அமையவில்லை. அடுத்த வருடமாவது இவருக்கு நல்ல ஆண்டாக அமையட்டும்.

ரஹ்மானுக்குப் பிறகு தொடர்ச்சியான தரத்தில்  பாடல்களை அமைப்பவர்் ஹாரிஸ் ஜெயராஜ். இவராலும் தன்னுடைய இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியவில்லையோ  என்று தோன்றுகிறது. இருமுகனில் 'ஹெலனா' என்கிற ரகளையான இசையுடன் கூடிய பாடலை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்ல முடிகிறது.


***

ஏ.ஆர்.ரஹ்மானை மிக அரிதாகவே தமிழ் திரையின் பக்கம் காண முடிகிறது. அத்தனை பிஸி. '24' திரைப்படத்தில் அவரின் இசையில் உருவான 'மெய்நிகர' பாடல் அருமையானதொன்று. 'பட்டாம் புலியே, கிட்டார் ஒலியே, மிட்டாய் குயிலே, ரெக்கை முயலே என்று பல வசீகரமான படிமங்களை இந்தப் பாடலின் மூலம் உருவாக்கியிருந்தார் மதன் கார்க்கி. சித் ஸ்ரீராம் அருமையாகப் பாடியிருந்தார்.


2016-ன் சிறந்த ஆல்பங்கள் என்று இரண்டைச் சொல்லலாம். 'கபாலி' மற்றும் 'அச்சம் என்பது மடமையடா'.

'வானம் பார்த்தேன்' 'மாயநதியென' ஆகிய இரு பாடல்களை 'கபாலி'யில் குறிப்பிட்டுச் சொல்லலாம். தொலைந்து போன தன் துணைவியை ஏக்கத்துடன் நாயகன் தேடும் ஏக்கமும் அவனுடைய அகம் சார்ந்த தத்தளிப்பும் மெலிதான பிறழ்வும் இந்தப் பாடல்களில் சிறப்பாக வெளிப்பட்டன. இரு பாடல்களையும் பிரதீப் குமார் அற்புதமாகப் பாடியிருந்தார். 'நான் உனை காணும் வரையில் தாபத நிலையில்' என சங்ககாலத்து சொற்களைக் கூட அருமையாக பயன்படுத்தியிருந்தார் பாடலாசிரியர் உமா தேவி.

***

சரணம், பல்லவி என்று இந்தியத் திரையிசையில் பல காலமாக இருந்த மரபை தன் புதுமையால் பெரிதும் மாற்றியமைத்தவர் என்று ஏ.ஆர்.ரஹ்மானைச் சொல்லலாம். இந்த அம்சம்  'அச்சம் என்பது மடமையடா' இசையமைப்பிலும் அழுத்தமாக பதிந்திருந்தது.

குறிப்பாக 'தள்ளிப் போகாதே' பாடலில் மரபில் அடங்காத மிக நீளமான பல்லவியொன்று அமைந்திருந்தது. அதன் தொடர்ச்சியாக 'ராப்' இசையோடு பாடல் நிறைவுறுகிறது. இத்தனை நீளமான மெட்டிற்கு வரிகள் எழுதுவது சவாலானதொன்று. 'கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றேனே' என்பது போன்ற கவித்துவமான வரிகளால் இந்த சவாலை திறமையாக எதிர்கொண்டிருந்தார் தாமரை. முதல் பகுதியின் மெல்லிசையொடு அதன் எதிர்முரணில் அமைந்த  அதிரடிப் பாணியை உறுத்தாமல் இணைத்தது ரஹ்மானின் மேதமையைக் காட்டுகிறது. சித் ஸ்ரீராமின் இன்னொரு அட்டகாசம் இது.


'ராசாளி' பாடலில் திருப்புகழின் 'முத்தைத் தரு பத்தித் திருநகை' பாடலிசைப் பாணியை முதல் பகுதியிலும்  'நின்னுக்கோரி வர்ணம்' இசையை இரண்டாம் பகுதியிலும் இணைத்தது அபாரம். எம்.எஸ்.வி காலத்தை நினைவுப்படுத்தும் 'அவளும் நானும்' ஓர் அட்டகாசமான மெல்லிசைப்பாடல். பாரதிதாசனின் பாடல் வரிகளை உபயோகித்தது சிறப்பு. அதிரடியான 'சோக்காலி' பாடலிலும் ரஹ்மானின் பிரத்யேகமான முத்திரை இருந்தது. 'இதுநாள் வரை'யும் சிறந்த பாடலே.

2016-ன் அதிசிறந்த பாடல் என 'தள்ளிப் போகாதே'வை சொல்லலாம். பல லட்சம் ரசிகர்கள் யூட்யூப் தளத்தில் இந்தப் பாடலைக் கேட்டு கொண்டாடியிருக்கிறார்கள்.

**

பாலமுரளி கிருஷ்ணா, நா.முத்துக்குமார்,  போன்ற அதி உன்னதமான கலைஞர்களின் இழப்பை 2016-ம் ஆண்டு எதிர்கொண்டிருப்பது துரதிர்ஷ்டமானது.

2016-ல் பல புதிய இசையமைப்பாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். ஏற்கெனவே துறையில் இருப்பவர்கள் அவர்களுடன் போட்டி போட வேண்டிய ஆரோக்கியமான சூழல் உருவாக்கியிருக்கிறது. ஆனால் நுட்பம் தரும் வசதியில் பல அவசரக் கோலங்களும் இறைபடுகின்றன. தகுதியுள்ளது தப்பிப்பிழைக்கும் என்பது காலத்தின் தீர்ப்பு. 

(கொழும்புவிலிருந்து வெளியாகும் 'தினகரன் – வாரமஞ்சரி’ பிரதிபிம்பத்தில் வெளியானது)


suresh kannan

Monday, January 09, 2017

அழைத்தார் பிரபாகரன் - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

 
 
 
'நீங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா என்ன?" 
 
இப்படியொரு துணிச்சலான கேள்வியை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவராக இருந்த பிரபாகரனிடம் கேட்க முடிகிற  ஒரு  காட்சியை கற்பனை செய்து பார்த்தாலே சற்று திகைப்பாகத்தான் இருக்கிறது இல்லையா?

இதைக் கேட்டவர் பிரபல கிரிக்கெட் வர்ணணையாளரும், தமிழறிஞரும், எழுத்தாளருமான அப்துல் ஜப்பார்.
 
ஏப்ரல் 10, 2002  அன்று  சர்வதேச ஊடகங்களின் பிரதிநிதிகள் பெரும்பாலும்  கிளிநோச்சியில் இருந்தார்கள். ஒட்டுமொத்த ஊடக உலகின் கண்களும் அன்று அந்த திசை  நோக்கிதான் இருந்தன.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சர்வதேச ஊடவியலாளர் மாநாட்டினை அன்று ஏற்பாடு செய்திருந்தார். 'அது ஒரு துன்பியல் சம்பவம்' என்று ராஜீவ்காந்தி படுகொலையைப் பற்றி முதன்முறையாக புலிகள் தரப்பிலிருந்து கருத்து தெரிவிக்கப்பட்டது அன்றுதான்.
 
இந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டிற்குத்தான் அப்துல் ஜப்பார் சென்றிருந்தார். மாநாட்டின் நிறைவில் எதிர்பாராததொரு ஆச்சரியமாக பிரபாகரனை சந்திக்கும் வாய்ப்பு, அப்துல் ஜப்பாருக்கு கிடைத்தது.

இவரின் வானொலி நிகழ்ச்சிகள் அங்கு பிரபலம் என்பதால் பிரபாகரனே இவரைச் சந்திக்க விரும்புகிறார்.  அந்த உரையாடலின் இடையில்தான் ஒரு தருணத்தில் மேற்குறிப்பிட்ட கேள்வியை ஜப்பார் கேட்கிறார்.

***
இந்த மாநாட்டிற்கு சென்ற அப்துல் ஜப்பாரின் பயண அனுபவங்களும் பிரபாகரனுடனான சந்திப்பு விவரங்களும் தொகுக்கப்பட்டு ஒரு சிறிய நூலாக வெளிவந்திருக்கிறது.

'கண்டேன் சீதையை' என்று அனுமன் சொல்வது போல 'அழைத்தார் பிரபாகரன்' என்பது நூலின் அழகான தலைப்பு.
 
எதிர்பாராமல் அமைந்த இந்த பயண நிகழ்வு, அதில் ஏற்பட்ட நடைமுறைச் சிரமங்கள், அதைத் தாண்டி வந்த சாதனைகள் என்று தன் பயணம் தொடர்பான ஒவ்வொரு நுண்தகவலையும் எளிமையான, அழகு தமிழில் பதிவு செய்திருக்கிறார். அவருடனேயே நாமும் சென்று வந்த உணர்வு இந்நூலின் மூலம் கிடைக்கிறது.

போரினால் அழிந்த கட்டிடங்கள், புதைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகள், எல்லா ஏற்பாடுகளையும் நேர்த்தியாகவும் பாதுகாப்பாகவும் செய்யும் புலிகளின் ஒழுங்கு, நிர்வாகத்திறமை, அவர்களின் தியாகவுணர்வு உள்ளிட்ட பல தகவல்கள் இந்த நூலில் சுவாரசியமாக வெளிப்படுகின்றன.

***

அழைத்தார் பிரபாகரன் - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.
தமிழ்அலை வெளியீடு, பக்கங்கள் 48, விலை ரூ.50/-
 
(அலமாரி இதழில் பிரசுரமான மதிப்புரை)
 
suresh kannan

Wednesday, January 04, 2017

தமிழில் இருக்கிறதா சிறுவர் சினிமா?மனஅழுத்தம் என்பது  பெரும்பாலும் வயதில் பெரியவர்களுடன் தொடர்புடைய சொல்லாகத்தான் பொதுவாக  இதுவரை அர்த்தம் கொண்டிருந்தது. இளம் பருவத்தினருக்கோ, சிறார்களுக்கோ  அந்தச் சொல்லுடன்  தொடர்பு இல்லை என்றும் அப்படியே சமயங்களில் அது வெளிப்பட்டாலும் எள்ளலாகவே கருதப்பட்டது. எல்கேஜி படிக்கும் ஒரு குழந்தை, 'ஒரே டென்ஷன்' என்று அலுத்துக் கொள்ளுமானால் அது  சுற்றத்தாலும் உற்றத்தாலும் நகைச்சுவையானதாகவே பொருள் கொள்ளப்பட்டது. ஆனால் இதை தீவிரமாக அணுகக்கூடிய ஒரு சூழலை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை கவனிக்க வேண்டும். ஏறத்தாழ பெரியவர்களின் உலகத்திற்கு நிகராக சிறார்களின் உலகமும் பல்வேறு அக/புற அழுத்தங்களால் பாதிக்கப்படுகின்றன.

கல்வி என்பது அறிவது என்கிற ஆதாரமான அடையாளத்தையும் நோக்கத்தையும் இழந்து பொருளீட்டும் பாதைக்கான கருவியாகவே மட்டுமே இன்று பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு குழந்தையின் தனித்தன்மையும் ஆர்வமும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு அவர்கள் மதிப்பெண்களை உற்பத்தி செய்யும் இயந்திரங்களாக மாற்றப்படுகிறார்கள். அதிக மதிப்பெண்ணை ஈட்டுபவன்தான் புத்திசாலித்தனமான மாணவன் என்று நம்ப வைக்கப்படுகிறது. கல்வி என்பது சேவையாக அல்லாமல், சமூகத்திற்கு ஆக்கப்பூர்வமான அடுத்த இளையதலைமுறையை உருவாக்குகிறோம் என்கிற தொலைநோக்கு அல்லாமல் பெரும்பாலான கல்வி நிலையங்கள் முற்றிலும் வணிக நோக்கத்திற்கு இணக்கமானதாக மட்டுமே இயங்கத் துவங்கியிருக்கின்றன. பாடப்புத்தகங்களைத் தாண்டி வெளியே எட்டிப் பார்க்கும் குழந்தைகள், கல்வி நிறுவனங்களாலும் பெற்றோர்களாலும் கடுமையாக தண்டிக்கப்படுகிறார்கள்.

கூட்டுக்குடும்பம் என்கிற அமைப்பு உடைந்து தனிக்குடும்பங்கள் பெருகி வரும் சூழலை வந்தடைந்திருக்கிறோம். அதிலும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரும்பாலான குடும்பங்கள் ஒற்றைக் குழந்தையோடு மட்டுமே நிறுத்திக் கொள்கிறார்கள். தனிவீடுகள் மெல்ல மறைந்து அடுக்குமாடி கலாச்சாரம் பெருகிற கட்டிடங்ககளில் எல்லா வீட்டின் கதவுகளும் பெரும்பாலும் சாத்தப்பட்டிருக்கின்றன. இந்தச் சூழலில் விளையாடுவதற்கும் தம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் சக வயது நட்போ, சகோதரத்துவமோ அல்லாத, கதை சொல்வதற்கு தாத்தா, பாட்டிகள் துணையோ அல்லாத மன இறுக்கத்துடன் தனிமையில் வளர்கிற சிறார்கள் பெருகி வருகிறார்கள்.

விளையாட்டு மைதானங்கள் மெல்ல மறைந்து வருகின்றன. விளையாட்டு நேரங்கள் திருடப்பட்டு  பாடத்திட்டங்களை திணிக்கும் வன்முறை  நேரமாக மாற்றப்படுகின்றன. பொருளீட்டும் வாய்ப்பு  அதிகமிருக்கும் துறை தவிர இதர துறைகளின் ஆர்வங்கள் மறுக்கப்படுகின்றன;  கேலியாக பார்க்கப்படுகின்றன. இத்தகைய அவலம் நிறைந்த சூழலில் பெரும்பாலான சிறார்களின் பொழுதுபோக்கு என்பது சினிமா, வீடியோ கேம்ஸ், கார்ட்டூன் என்று மூளையையும் கண்களையும் பாதிக்கிற அடைத்து வைக்கப்பட்டிருக்கும் குறுகிய வெளியில் நிகழும் இயக்கமாக மட்டுமே உள்ளது. இளம்பருவம் என்பது உடலில் செயல்திறன் அதிகம் பெருகி வழியும் காலக்கட்டமாகும். ஓடியாடி செலவழிக்கப்பட வேண்டிய அந்த செயல்திறன் அவ்வாறான வாய்ப்பில்லாமல் அடைபடுவதும் பல்வேறு உளச்சிக்கல்களுக்கு இட்டுச் செல்லும் வழியாக மாறுகிறது.

***

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிரதானமான பொழுதுபோக்கு என்பது சினிமா என்பதின் மீதாகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.  திரையரங்குகளில் வெளியாகும் சினிமாக்களைத் தவிர, தொலைக்காட்சி, பத்திரிகைகள், வானொலி என்று இதரபிற பொழுதுபோக்கு அம்சங்கள் பெரும்பாலானவற்றைத் தாண்டி நம்முடைய அன்றான உரையாடல்களிலும் சினிமா தொடர்பான அம்சங்களே நீக்கமற நிறைந்திருக்கின்றன. பெரியவர்களே சினிமாவை சுவாசித்துக் கொண்டிருக்கும் போது வளரிளம் பருவத்தினருக்கும் அதுவே  பொழுதுபோக்கு வாய்ப்பாக இருப்பது ஒரு நடைமுறை அவலம்.

இப்படி தவிர்க்கவே முடியாத ஒரு விஷயமாக நம் சூழலில் சினிமா இருக்கும் போது, அது சிறார்களின் பார்வைக்கும் மனநிலைக்கும் இணக்கமானதாக இருக்கிறதா, அவர்களின் உலகத்தை சரியாக பிரதிபலிக்கிறதா, இளம் பருவத்தினருக்கேயுரிய பிரத்யேகமான சிக்கல்களை பேசுகிறதா என்றால் இல்லை என்கிற துரதிர்ஷ்டமான பதில் மட்டுமே நம்மிடம் இருக்கிறது.

சிறுவர் சினிமா என்றாலே நமக்கு இரானிய திரைப்படங்களின் நினைவு மட்டுமே உடனே வருகிறது. அந்த அளவிற்கு சிறுவர்களின் புறவுலகை, அகம் சார்ந்த பிரச்சினைகளை, சிக்கல்களை அந்தப் பிரதேசத்தின் சினிமாக்கள் அற்புதமாக விவரிக்கின்றன. பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக அப்பாஸ் கியரோஸ்தமி இயக்கிய Where Is the Friend's Home? என்கிற அற்புதமான  திரைப்படத்தை சொல்லலாம்.

தனது நண்பனின் வீட்டுப்பாட புத்தகத்தையும் சேர்த்து தவறுதலாக கொண்டு வந்து விடுகிறான் ஒரு சிறுவன். தன் நண்பன் ஆசிரியரிடம் தண்டனை பெறக்கூடாதே என்பதற்காக புத்தகத்தை அவனிடம்  தருவதற்காக பக்கத்து கிராமத்தில்  இருக்கும் நண்பனின் வீட்டை தேடிச் செல்லும் பயணம்தான் இத்திரைப்படம். சிறார்களின் களங்கமில்லாத உலகில் இந்தச் சமூகம் எந்தெந்த வகையில் எல்லாம் தம் அதிகாரத்தைச் செலுத்துகிறது என்பதை எவ்வித ஆரவாரமும் இல்லாமல் விவரிக்கிற திரைப்படம் இது.

போலவே பிரெஞ்சு திரைப்படங்களும் சிறார்களின் உலகத்திலுள்ள சிக்கல்களைப் பற்றி தீீவிரமாக உரையாடுகின்றன. உதாரணத்திற்கு The Kid with a bike என்கிற திரைப்படம் தந்தையின் அன்பு நிராகரிக்கப்படும் ஒரு சிறுவன் எவ்வாறு மூர்க்கமாக மாறுகிறான் என்பதையும் பின்பு கனிந்து மனம் திரும்பும் விதத்தையும் இயல்பான திரைமொழியில் விவரிக்கும் திரைப்படமாக அமைந்திருக்கிறது.

***

நூற்றாண்டை நெருங்கும் தமிழ் சினிமாவில் இப்படியொரு சிறந்த உதாரணத்தை சட்டென்று சொல்லி விடமுடியவில்லை. மேலைய நாடுகளில் இருப்பதைப் போன்று மையநீரோட்ட வெளியில் சிறார்களுக்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்படும் திரைப்படங்களோ, அப்படியொரு வகைமையோ, அதற்கான வணிகச் சந்தையோ இங்கு இல்லை. அவ்வாறான வழக்கமும் இங்கு இல்லை. அனைத்து தரப்பினரையும் திருப்தியடைய வைக்கும் 'கூட்டு அவியல்' திரைக்கதையுடன்  ஒரு வணிகப் பண்டமாகவே சினிமா உருவாக்கப்படுகிறது.

1955-ல் ஏற்படுத்தப்பட்ட Children's Film Society என்கிற அரசு சார்ந்த அமைப்பு, இந்திய மொழிகளில் குழந்தைகளுக்கான  திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றை உருவாக்குகிறார்கள். பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஆனால் அந்த அமைப்பின் மூலம் உருவாக்கப்படும் திரைப்படங்கள் பொதுவெளியில் பரவலாக அறிமுகமாவதில்லை. விருது பெறும் திரைப்படங்களை  பார்க்கும் ஒரு குறுகிய வட்டத்து அறிவுசார் மக்களிடையே மட்டும்தான் அவை காணக் கிடைக்கின்றன.

இதைப் போலவே சென்சார் சான்றிதழ்களுக்கும் நடைமுறையில் இங்கு எவ்வித மதிப்புமுமில்லை. U சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை  அனைவரும் பார்க்கலாம், UA சான்றிதழ்  என்றால் 12 வயதிற்கு குறைவான வயதுள்ள சிறார்கள், பெரியவர்களின் துணையுடன் பார்க்கப்பட வேண்டியது, A என்றால் அது வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்க வேண்டியது என்கிற தகவல்கள் பொதுவாக அறிந்திருக்கப்பட்டாலும். வன்முறைக்காட்சிகளும் ஆபாசக்காட்சிகளும் நிறைந்திருக்கும் ஒரு வணிகப்படத்தை, எவ்வித விழிப்புணர்வும் குற்றவுணர்வும் இன்றி குழந்தைகளோடு  பார்க்கும் கலாசாரமே நடைமுறையில் உள்ளது.

ஒருவேளை இதில் தவற விடும் வாய்ப்புகளை, தொலைக்காட்சிகள் வரவேற்பறைக்குள்ளேயே நுழைந்து குழந்தைகளை பார்க்க வைக்கும் சேவையைப் புரிகின்றன. கொச்சையான பாலியல் அம்சங்கள் மிகுந்திருக்கும் திரையிசைப் பாடல்களின் பொருள் ஏதும் அறியாமல், அந்தப் பாடல்களைப் பாடும், அதே போன்ற உடலசைவுகளுடன் நடனமாடும், குழந்தைகள் கலந்து கொள்ளும் 'ரியாலிட்டி ஷோக்களை' கண்டால் ஒருபக்கம் பரிதாபமாகவும் இன்னொரு பக்கம் எரிச்சலாகவும் இருக்கிறது. வணிக நோக்கத்துடன் நிகழ்ச்சிகளை உருவாக்கும் தொலைக்காட்சிகளுக்குத்தான் எவ்வித பொறுப்புணர்வும் சமூக அக்கறையும் இல்லை என்றால், விளம்பர ஆசையில் பெற்றோர்களுக்கும் இவ்வித உணர்வு இல்லாமல் போவது கொடுமையானது.

***

சிறுவர்கள் பெரும்பாலான காட்சிகளில் காட்டப்பட்டால் அது சிறுவர் சினிமா என்கிற ஒரு அசட்டு நம்பிக்கையும் புரிதலும் இங்கு இருக்கிறது.  அந்த திரைப்படங்கள் பிரத்யேகமாகவும் முழுமையான அக்கறையுடனும் சிறார்களின் சிக்கல்களைப் பற்றி பிரத்யேகமாக உரையாடுகிறதா என்பதையே முக்கியமாக கவனிக்க வேண்டும்.

சில அரிதான விதிவிலக்குகளைத் தவிர தமிழ் சினிமாவில் சித்தரிக்கப்படும் பெரும்பாலான சிறார்களின் பாத்திரங்கள் பெரியவர்களின் உடல்மொழியை பாவனை செய்பவர்களாக, துறுதுறுவென உள்ளவர்களாக, வயதிற்கு மீறிய செயல்களைச் செய்கிறவர்களாகவே உள்ளார்கள். சிறார்களின் உலகிற்கு என்றுள்ள பிரத்யேகமான இயல்பும் அழகியலும் பெரும்பாலான திரைப்படங்களில் இல்லை. டெய்சி இரானி நடித்த 'யார் பையன்?' (1957), குட்டி பத்மினி இருவேடங்களில் நடித்த 'குழந்தையும் தெய்வமும்' (1965) போன்ற சில உதாரணங்களைக் கவனித்தால், தமிழ் சினிமாவின்  வழக்கப்படி கூட்டு அவியலாக உருவாக்கப்பட்ட திரைக்கதையில் இந்த துறுதுறு குழந்தைகள் பெரும்பாலான காட்சிகளில் வருவார்கள், அவ்வளவுதான். மணிரத்னத்தின் 'அஞ்சலி' திரைப்படம் வெளிவந்த தொன்னூறுகளின் காலக்கட்டம் வரையும் கூட இதுதான் நிலைமை. காதலர்களுக்கு உதவி செய்யும் குழந்தைகளின் அபத்தமான காட்சிகள் இதில் இருந்தன.

ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் மரபணு உள்ளிட்ட பல காரணங்களால் தனித்தன்மையான குணாதிசயங்கள் இருக்கும். ஆனால் கொழுகொழு, துறுதுறு குழந்தைகள்தான் புத்திசாலித்தனமான, ரசிக்கத்தக்க குழந்தைகள் என்கிற மாதிரியான மனோபாவமும் அசட்டு நம்பிக்கையும் பொதுவெளியில் உறுதிப்பட இவ்வாறான திரைப்படங்கள் உதவி செய்தன. தங்களின் பிள்ளைகள் இவ்வாறான உடல்மொழியை, பாவனையைக் கொண்டிருக்க வேண்டும் என்கிற ஆசையை  கொண்டிருக்கிற, அதற்கான திணிப்புகளை குழந்தைகளிடம் மேற்கொள்கிற பெற்றோர்கள் மிகுந்திருக்கும் அவலத்தையும் பார்க்க முடிகிறது.

***

சில சிறார்களிடம் கற்றல் திறனில் இருக்கும் சிக்கல் தொடர்பாக கவனிக்கப்படாமல் இருந்த Dyslexia என்கிற குறைபாட்டைப் பற்றி பொதுவெளியில் பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்திய திரைப்படமாக 'தாரே ஜமின் பர்' (2007) -ஐ சொல்லலாம். இந்தக் குறைபாட்டினால் அவதியுறும் ஒரு சிறுவனைப் பற்றி பிரதானமான உரையாடலை மேற்கொண்ட திரைப்படம் இது. இதன் திரைக்கதை வணிகக் காரணங்களுக்காக வேறு எங்கும் அலைபாய்வதில்லை. தனது மையத்தைக் குறித்தான கவனமும் அக்கறையும் இத்திரைப்படத்தில் இருந்தது சிறப்பு. இந்த நோக்கில் ஏறத்தாழ இதே அக்கறையுடன் தமிழில் வெளிவந்த திரைப்படமாக 2013-ல் வெளிவந்த 'ஹரிதாஸ்' திரைப்படத்தைச் சொல்லலாம். இதில் வணிகநோக்கு அம்சங்கள் கலந்திருந்தாலும் 'ஆட்டிஸம்' எனும் குறைபாடுள்ள சிறுவனின் விளையாட்டு ஆர்வத்தை மையப்படுத்திய திரைப்படம்.

சில வருடங்களுக்கு முன், கணையாழி குறுநாவல் போட்டியில் கலந்து கொண்ட, ரவிச்சந்திரன் சுப்ரமணியன் எழுதிய 'கர்னல் தோட்டத்துக் கணக்கு' என்கிற படைப்பை வாசித்து பிரமித்தேன். சிறார்களின் உலகை மிகவும் யதார்த்தத்துடன் சித்தரிருந்தது அந்தக் குறுநாவல். அது போன்றதொரு இயல்பான படைப்பு சினிமாவில் சாத்தியமா என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது அந்த ஆவலை சற்று தணிக்கும் படியாக வந்தது, பாண்டிராஜ் இயக்கிய 'பசங்க'. (2009). பொதுவாக சிறார்களை 'புனிதப்படுத்தி' களங்கமில்லாத வெள்ளந்திகளாக சித்தரிக்கும் போக்கிலிருந்து விலகி, அந்த உலகிற்கேயுரிய போட்டிகளை நகைச்சுவைப் பூச்சோடு சொன்னது. இது சிறுவர்களுக்கான பிரத்யேகமான படைப்பாக அல்லாமல் வணிக சினிமாவின் கூறுகளோடு இணைந்திருந்தது ஒரு பலவீனம். இதே இயக்குநர் இயக்கிய பசங்க -2, சிறார்களின் பிரச்சினைகளைப் பேசுவதாக இருந்தாலும் முற்றிலும் நாடகத்தனமான ஒவ்வாமையைக் கொண்டிருந்தது.

இந்த வகையில் இயக்குநர் ராம் இயக்கிய 'தங்க மீன்கள்' ஒரு குறிப்பிடத்தகுந்த திரைப்படம். குழந்தைகளின் தனித்தன்மைகளை, அவர்களின் கற்பனையுலகை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், கல்விக்கூடங்கள் அவர்களை  பிராய்லர் கோழிகள் போல் ஆக்கும் நிற்கும் அவலத்தைச் சொன்னாலும் குடும்ப வன்முறை, உலகமயமாக்கம் என பல்வேறுவிதமாக அலைபாய்ந்ததில் மையத்திலிருந்து விலகிப் போனது.

இவ்வாறான சில மாற்று முயற்சிகள் சமீபத்தில் உருவாகி வருவது பாராட்டத்தக்கது என்றாலும் சிறார்களின் உலகை மையப்படுத்தி ஒரு தீவிரமான சினிமா தமிழில் இதுவரை உருவாகவில்லை என்பது துரதிர்ஷ்டமானது. அந்த சினிமா சிறார்களின் பிரச்சினைகளை, சிக்கல்களைப் பற்றிய படமாக இருக்க வேண்டியது கூட அவசியமில்லை. அவர்களின் உலகை இயல்பானதாக, கொண்டாட்டமானதாக, நல்லியல்புகளை அவர்களுக்குகள் விதைப்பதாக இருப்பதாக இருந்தாலும் சிறப்பே.

ஹாலிவுட்டில் அனிமேஷன் திரைப்படங்களுக்கென ஒரு வணிகச்சந்தை இருக்கிறது. தமிழ் சினிமாவிலும் அம்மாதிரியான வகைமைகளை தீவிரமாக முயலலாம். அவ்வாறான கலாசாரம் இங்கு உருவாவது படைப்பாளிகளின் கையில் மட்டுமல்ல, பார்வையாளர்களின் தரப்பும் இணைவதில்தான் அதன் வெற்றி அடங்கியிருக்கிறது.

சிறார்களுக்கான சினிமா என்பது அவர்களுக்கானது மட்டுமல்ல. தாங்கள் கடந்த வந்த இளம்பருவ பாதையை மறந்து பெரியவர்களாக மட்டுமே இயங்குபவர்களுக்கும் கூட அவசியமானது. 

(' புத்தகம் பேசுது'  - அக்டோபர் 2016 இதழில் பிரசுரமானது)


suresh kannan