Monday, June 29, 2015

Munnariyippu - முன்னறியிப்பு - மம்முட்டி என்னும் அற்புதம்

 
 
இந்தத் திரைப்படத்தை பார்த்து முடித்தவுடன் மம்மூக்காவின் (மம்முட்டி) மீதான பிரியம் இன்னமும் அதிகமாகி விட்டது. அத்தனை இயல்பான, திருப்தியான நடிப்பு. தமிழ்நாட்டு  சினிமாவின் வணிக கலாசார வெறியும் அதிரடி மசாலா பிம்பங்களும் மலையாளத் திரையுலகிலும் பரவி விட்டதை ஆதங்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்த போது தமிழகம் போல கேரளம் அந்தச் சகதியில் மொத்தமாக மூழ்கிப் போய்விடவில்லை என்கிற ஆறுதலை இது போன்ற திரைப்படங்கள்தான் தருகின்றன.  மனிதர் இத்தனை உயரத்திற்குப் போயும் எத்தனை இயல்பாக, எந்தவொரு ஆரவாரமும் இன்றி நடித்திருக்கிறார், ஏன் நம்முடைய 'சூப்பர்' நடிகர்கள் மாத்திரம் தலையில் இரண்டு கொம்பு முளைத்தது போதாதென்று தமிழ்நாட்டையே தம்முடைய தோளில் தாங்கி நிற்பது போன்ற எரிச்சலூட்டும் பாவனையை தங்கள் திரைப்படங்களில் வெளிப்படுத்துகிறார்கள் என்றெழும் கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.
 
இவருடைய அறிமுகக் காட்சி ஒன்று மட்டுமே போதும், இந்தப் படத்தின் இயல்புத்தன்மையைப் பற்றி சொல்ல. ஜெயிலருக்கு தேநீர் கொண்டு வந்து வைக்கும் மிகச் சாதாரணமான யாரோ ஒரு துணை நடிகர் போல என்று நினைத்தால், அதுதான் படத்தின் பிரதான பாத்திரமான மம்முட்டி.  ஷூவை கேமிரா முன்பு நீட்டியும், காலில் இருந்து ஆரம்பித்து புட்டத்திற்கு காமிரா வருவதற்கே ஐந்து நிமிடங்கள் ஆகும்படியாகவும் கிராபிக்ஸ் அலப்பறை செய்யும் ஹீரோக்களின் சமகால தமிழ் திரைப்படங்களுக்கு மத்தியில் அண்டை மாநில திரைப்படத்தின் இப்படியொரு அறிமுகக் காட்சியே ஆச்சரியமாக இருக்கிறது. (மம்மூக்காவும் இப்படி அலப்பறையோடு எண்ட்ரி ஆகும் சில படங்களை தற்காலிகமாக மறந்து விடுவோம்).

***

முன்னறியிப்பு எதைப் பற்றியது? அதன் அவுட்லைனை சுருக்கமாக பார்த்து விடுவோம். அஞ்சலி (அபர்ணா கோபிநாத்) இதழியல் துறையில் சாதிக்க விரும்பும் ஓர் இளைஞி. காவல்துறை அதிகாரியாக பணிபுரியும் ஒரு ஜெயிலரின் (நெடுமுடி வேணு) சுயசரிதை நூலை, கோஸ்ட் ரைட்டராக எழுத அவளுக்கு ஒரு வாய்ப்பு மூத்த பத்திரிகையாளர்  (பிரதாப் போத்தன்) மூலமாக கிடைக்கிறது. ஆனால் அங்கு செல்லும் போது இதை விடவும் சுவாரசியமான கதாபாத்திரமான ராகவனின் (மம்முட்டி) அறிமுகம் நிகழ்கிறது. தன் மனைவியையும் இன்னொரு மார்வாடி பெண்ணையும் கொலை செய்ததற்காக தண்டனை பெற்றிருக்கும் அவர், தன் தண்டனைக் காலம் முடிந்தும் சிறையிலிருந்து வெளியேற விரும்பாமல் அங்கேயே எளிமையாக பணிபுரிகிறார். 'வெளிச்சத்தை உண்டாக்கும் விளக்கைப் போல இருளை உண்டாக்கும் சாதனம் உண்டா?' 'கண்ணாடியில் நாம் பார்க்கும் பிம்பம், நாம் சென்ற பிறகும் அங்கேயே இருக்குமா?" என்பது போன்ற தத்துவ விசாரங்களை தன் டைரியில் எழுதி வைத்திருக்கிறார். இந்த விஷயங்களெல்லாம் அஞ்சலியைக் கவர்கின்றன. அவரைப் பற்றி விசாரித்து ஆங்கிலப் பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதுகிறாள். அது பரலவான கவனத்தையும் வரவேற்பையும் பெறுகிறது. 


இதன் காரணமாக மும்பையிலிருக்கும் புத்தக நிறுவனம் ஒன்று அஞ்சலியைத் தொடர்பு கொண்டு ராகவனைப் பற்றி  மேலதிக தகவல்களைத் தொகுத்து நூலாக்குவதற்கான ஒப்பந்தத்தை முன்வைக்கிறது.  தன் வளர்ச்சிக்கான அடையாளமாக கருதும் அஞ்சலி இதை ஒப்புக் கொள்கிறாள். ராகவனை சிறையிலிருந்து வெளிவரச் செய்து ரகசியமாக  ஒரு அறையில் ஒளித்து வைத்து அவருடைய பழைய அனுபவங்களை எழுதச் சொல்கிறாள்.  போட்டி நிறுவனம் ஏதேனும் இந்த வாய்ப்பை தட்டிப் பறித்து விடக்கூடாது என்பதனால் இந்த ஏற்பாடு. ஆனால் ராகவனால் ஒரு எழுத்து கூட முடியவில்லை. அவ்வப்போது அறைக்குள் வரும் அஞ்சலி வெற்றுப் பக்கங்களை பார்த்து பார்த்து ஏமாறுகிறாள். டெட்லைன் அழுத்தத்தால் எரிச்சலுறுகிறாள். அவரை வேறு இடத்திற்கு மாற்றுகிறாள்.

ராகவன் தன் அனுபவங்களை எழுத்தின் மூலம் மீட்டுத்தந்தாரா? அஞ்சலியின் நோக்கம் நிறைவேறியதா? ஒரு சிறுகதையின் கச்சிதமான திருப்பத்தைப் போல பார்வையாளர்களுக்கு ஒரு திடுக்கிடும் அனுபவத்தை தருவதின் மூலம் படத்தை நிறைவுறச் செய்திருக்கிறார் இயக்குநர் வேணு. அடிப்படையில் இவர் ஓர் ஒளிப்பதிவாளர். ஜான் ஆப்ரஹாமின் 'அம்ம அறியான்' திரைப்படம் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் இயக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் இது. 

***

இறுதிக்காட்சியின் திடுக்கிடல் அனுபவம் ஒன்றைத் தவிர மற்ற பகுதிகளில் படம் முழுவதும் தென்றல் காற்றைப் போல் மெலிதாக, இதமாக, நிதானமாக நகர்ந்து கொண்டேயிருக்கிறது. ஒரு திட்டமிடப்பட்ட பிரதியுனுள் அவரவர்களின் எல்லைகளை மீறாமல் மிக இயல்பாக பாத்திரங்கள் இயங்குகின்றன. விடுதலை பெற்ற தண்டனைக் கைதியாக நடித்திருக்கும் மம்முட்டி 'ராகவன்' எனும் பாத்திரத்தை மட்டுமே பிரதிபலிக்கிறார். இடையில் வரும் ஒரு காட்சியில் குடிபோதையில் அவரது ஆழ்மனம் சிறிது கசியும் அந்தச் சிதறல்தான் இறுதிக்காட்சியின் முன்னோட்டம். மேற்பார்வைக்கு அமைதியாகத் தோற்றமளிக்கும் நடுக்கடலின் ஆழத்தில் எரிமலை உள்ளதைப் போல எந்தவொரு சலனத்தையும் முகத்தில் காட்டாமல் அஞ்சலியின் இழுப்பிற்கெல்லாம் இசைகிறார்.

அஞ்சலியாக நடித்திருக்கும் அபர்ணா கோபிநாத்தின் நடிப்பும் அற்புதம். சென்னை, கூத்துப்பட்டறையின் தயாரிப்பு இவர். எப்படியாவது மேலே வர நினைக்கும் ஓர் இளம் பத்திரிகையாளரின் ஆர்வம், இரண்டு தங்க வாய்ப்புகள் வரும் போது அதில் மதிப்பு வாய்ந்ததை தேர்ந்தெடுத்து விட்டு பிறகு தடுமாறும் தவிப்பு, டெட்லைனின் அழுத்தம் தாங்காமல் மம்முட்டியிடம் காட்டும் கண்டிப்பு, எரிச்சல் என்று அட்டகாசமான உடல்மொழியின் மூலம் தன் பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். இயக்குநரின் கதைக்கு உன்னி ஆர் அமைத்திருக்கும் இயல்பான திரைக்கதை அபாரம். பின்னணி இசை, சமயங்களில் அதிகம் ஒலித்தாலும் எல்லை மீறாதது ஆறுதல்.

***

மனைவியின் நகைகளை அடகுவைத்து இலக்கியப் பத்திரிகைகள் நடத்திய தியாகம் அடங்கிய காவிய காலங்கள் எல்லாம் மலையேறி விட்டன. உலகமயமாக்கலுக்குப் பிறகு எங்கும் எதிலும் 'வணிக வாய்ப்பை' மோப்பம் பிடிக்கும் கலாசாரம் தோன்றி விட்டது. இலக்கியமும் அதில் விதிவிலக்கல்ல. இதற்கான சந்தையைக் கைப்பற்றும் நோக்கமும் அதிலுள்ள போட்டியும் உள்ளுறையாக இந்தப்படத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. விளிம்புநிலை மக்களின் வாழ்வும் இவர்களுக்கு உகந்த கச்சாப் பொருளாக மாறி விட்டது. பெரிதும் இலக்கிய வாசிப்பில் ஈடுபடும் நடுத்தர வர்க்க சமூகத்திற்கு தங்களது அன்றாட சலிப்புகளை 'தாங்கள் அறியாத' சமூகத்தினரின் வாழ்வியலை அறிந்து கொள்வதன் மூலம் போக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். பாலியல் தொழிலாளிகள், பிச்சைக்காரர்கள், சிறைவாசிகள், மாற்றுப்பாலினத்தவர் என்று இவர்கள் தொடர்பான வாழ்க்கை வரலாறுகளும் "best selling'-ல் இடம்பிடிப்பதும் அதற்கான போட்டியும் என 'உருவாக்கப்படும்' இலக்கியங்கள், அதன் பின்னேயுள்ள வணிகச்சந்தையும் இலக்கியத்தின் நோக்கத்தையே பாழ்படுத்துகிறதோ என்று தோன்றுகிறது. 'திருடன் மணியன் பிள்ளை' எனும் நூலை தற்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதிலுள்ள சம்பவங்கள் ஒரு சில்லறைத் திருடனின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களாகத் தோன்றினாலும், சில இடங்களில் அதன் மொழி, விவரணைகள் ஆகியவை 'தேர்ந்த எழுத்துக்காரனின்' வெளிப்பாடாகப் பதிந்து வாசக அனுபவத்தில் பிசிறையும் விலகலையும் ஏற்படுத்துகிறது.

இறுதிக்காட்சியின் திருப்பம் அதுவரையான திரைப்படத்தின் இயங்குதலுக்கு எதிராக, பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வேண்டும் என்கிற நோக்கத்திற்காக வலிந்து திணித்ததாக ஒருவேளை தோன்றுவதில் ஆச்சரியமொன்றுமில்லை. தர்க்கரீதியாக அது முரண்தான். இயல்பற்ற தொன்றுதான்.  எனக்கும் கூட முதலில் அப்படித்தான் தோன்றியது. ஆனால் திரைக்கதையின் இலக்கணப்படி அந்த ஒரு புள்ளியை நோக்கியே படம் முழுவதும் பயணம் செய்து கொண்டிருப்பதை அதுவரையான காட்சிகளைக் கவனித்தால் உணர முடியும். 'கிரிமினாலஜி' படித்தவர்கள், அது தொடர்பான அனுபவங்களைக் கொண்டிருப்பவர்களால் இந்த இறுதிக் காட்சியை நெருக்கமாக உணர முடியும். சில அழுத்தமான குற்றவாளிகளை, அவர்களின் குற்றத்தை ஒப்புக் கொள்ளச் செய்வது அத்தனை எளிதான விஷயமல்ல. சமயங்களில் விசாரணை செய்பவருக்கே தாம் ஒரு நிரபராதியை துன்புறுத்திக் கொண்டிருக்கிறோமோ என்று உறுத்தல் வருமளவிற்கு திறமையாக நடிப்பவர்கள் இருக்கிறார்கள். BIG BAD WOLVES என்கிற திரைப்படத்தின் இறுதிக்காட்சியும் இதைப் போன்றதுதான். அதைப் பற்றிய பதிவு.

சுஜாதாவின் சிறுகதையொன்றும் நினைவுக்கு வருகிறது. (தலைப்பு நினைவில் இல்லை). ஒரு பள்ளியில் நீண்ட வருடங்களாக மிக நேர்மையாக பணியாற்றும் அதற்காக பரிசும் வாங்கும் ஒரு வாகன ஓட்டுநர், தன் பணிக்காலத்தின் இறுதிநாளில் கடைசியாக இறங்க வேண்டிய ஒரு மாணவியுடன் வேறு திசைக்கு பயணிப்பதாக அந்தச் சிறுகதை முடியும். மனித மனம் இயங்கும், பிறழும் சில அந்தரங்கமான ஆழங்களை அறிந்து கொள்வது அத்தனை எளிதல்ல எனும் செய்தியையே இத்திரைப்படம் பதிவு செய்திருக்கிறது. 'சுதந்திரம் என்பது என்ன? அதன் வரையறை, அதன் இடையூறுகளைக் களைதல்' ஆகியவற்றைப் பற்றின தத்துவரீதியான மனோபாவங்களைக் கொண்டிருக்கும் ராகவனை சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்து மீண்டும் வேறு சிறையில் அடைப்பது போல அவனை வேறு வேறு அறைகளில் அடைத்து வைப்பதும் அவன் மனமுவந்து எழுத முனையாத பணியை, தன் சுயலாபத்திற்காக கட்டாயப்படுத்தி எழுதச் செல்வதும், அதற்கான தண்டனையைப் பெறுவதும் என அஞ்சலியின் கதாபாத்திரம் பயணம் தெளிவாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. படத்தின் இறுதிக்காட்சியில் இரண்டு புகைப்படங்களின் (அவர்களைத்தான் ராகவன் கொலை செய்தார் என்பதுதான் வழக்கும் தண்டனையும்) மீதாக மூன்றாவது புகைப்படமாக அஞ்சலியின் படத்தை ராகவன் ஒட்டி வைக்கும் போதுதான் அதுவரை தன் மீது சுமத்தப்பட்ட கொலையை அவன் அதுவரை மறுத்து வந்த அபத்தமும் ராகவனின் விபரீதமான அகமனமும் வெளிப்படுகிறது. 

சிறையிலிருக்கும் போது மிக அட்டகாசமான தத்துவ சிந்தனைகளை எழுதி வந்த ராகவன், வெளியில் வந்ததும் அஞ்சலி கட்டாயப்படுத்தியும் பழைய நினைவுகளை எழுத முடியாமல் தவிக்கும் காட்சிகள் அற்புதம். கட்டாயத்தின் பேரில் ஒரு குதிரையை நீரருந்தச் செய்ய முடியாது. சிறையிலிருக்கும் சமயத்தில் தன்முனைப்புடன் அவன் ஒருவரியை எழுதக்கூட பல வருடங்களை எடுத்துக் கொண்டிருக்கலாம். அத்தனை ஆழமான விஷயங்கள் அவை. ஆனால் வணிக நோக்கத்திற்காக செய்யப்படும் கட்டாயத்தினால் அந்த தீ அணைந்து போகிறது. அந்தத் தீ உயிர்பெறும் போது மூட்டியவரையே எரித்து விடுவது ஒரு அவல நகைச்சுவை.

மம்முட்டியின் அட்டகாசமானதொரு திரைப்படம். காணத் தவறாதீர்கள்.

suresh kannan

Friday, June 26, 2015

மனம் - ஒக்க மன்ச்சி தெலுகு சித்திரமுலு


என்னது, நாகேஸ்வரராவ் இறந்து விட்டாரா? என்றெல்லாம் கேள்வி கேட்டு ஆச்சரியம் கொள்ளாமல் இந்தப் பதிவை வாசியுங்கள். இத்தனை காலமாக ஏன் இந்த திரைப்படத்தைப் பார்க்கவில்லை என்று என்னையே நான் இன்று நொந்து கொண்டேன். இதைப் பற்றி பல நல்ல வார்த்தைகளை ஏற்கெனவே கேட்டிருந்தாலும் தெலுங்கு பேசும் ஒரு முதியவர் நேற்று இத்திரைப்படத்தைப் பற்றி என்னிடம் அத்தனை சிலாகித்து சொன்ன போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு சமகால திரைப்படத்தை இரண்டு தலைமுறைக்கு முந்தியுள்ளவர் பாராட்டுகிறார் என்றால் ஒன்று, அவர் மனது அத்தனை இளமையானதாக இருக்க வேண்டும் அல்லது அத்திரைப்படம் அத்தனை சிறப்பானதாக இருக்க வேண்டும். இரண்டுமே சரிதான் போல. படம் பார்த்த பிறகு இதைத்தான் நானும் உணர்ந்தேன்.

அந்தத் திரைப்படம் - மனம். நாகேஸ்வர ராவ், நாகார்ஜூனா, நாக சைதன்யா ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் பரஸ்பரம் தங்கள் பாத்திரங்களின் பெயர்களை மாற்றியமைத்துக் கொண்டு நடித்தது. இதன் திரைக்கதையை விவரித்தால் சற்று தலைசுற்றும். உதாரணத்திற்கு அசலில் நாகார்ஜூனாவின் மகனான நாக சைதன்யாதான், கதாபாத்திரப்படி  இத்திரைப்படத்தில் அவரின் தந்தை. போலவே நாகார்ஜூனாதான், நாகேஸ்வர ராவின் தந்தை. ஐம்பது வயது நபர் இருபது வயதுப் பெண்ணை தாய் போல பார்த்து உருகுவதை கற்பனை செய்து பார்த்தாலும் நம்ப முடியாது. "என்னய்யா உட்டாலக்கடி இது" என்று தோன்றும். அதிலும் மறுஜென்மத்திலும் எப்படி ஐயா, அதே தோற்றத்துடன், அதே உறவுமுறையில் உணர்வார்கள் என்றெல்லாம் பல கேள்விகள் பிறக்கலாம்.

ஆம். தர்க்கமே இல்லை. ஆனால் தனது அபாரமான திரைக்கதையால் நெருடலே ஏற்படாதவாறு நம்ப வைத்திருக்கிறார் இயக்குநர் விக்ரம் குமார். குறிப்பாக இதன் மேக்கிங்கும் சின்ன சின்ன சுவாரசியங்களும் அற்புதம். இளம் இயக்குநர்களுக்கான பாடம், இத்திரைக்கதையில் உள்ளது. நீண்ட நாட்கள் கழித்து ஒரு திரைப்படத்தை மிகுந்த பரவசத்துடனும் பொங்கி வரும் புன்னகையுடனும் இடையில் சிறிது கண்ணீருடனும் பார்த்தேன் என்றால் அது இந்த திரைப்படம்தான். Back to the future என்கிற அறிபுனைவின் நகல் என்கிறார்கள். தெரியவில்லை. அதையும் பார்க்க வேண்டும்.

***

பொதுவாகவே எனக்கு தெலுங்கு திரைப்படங்களையும் அதன் நடிகர்களையும் பார்க்கவே பிடிக்காது. "சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து" என்று பாரதி பாடினாலும் அந்த மொழியின் ஒலி கூட சமயத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். குறிப்பாக என்.டி.ராமாராவ் போன்றோர்களின் கூப்பாடுகளையும் கதற வைக்கும் சப்தங்களையும் கண்ணைக் கூச வைக்கும் அடர்த்தியான வண்ணங்களையும் காமெடியான நடனங்களையும் பார்க்கவே பிடிக்காது. விதிவிலக்காக இந்த  பிரதேசத்தின் சினிமாக்களில்  பிடித்த ஒரே அம்சம், ஜெயமாலினி. இதற்காகவே பல டப்பிங் படங்களை சகித்துக் கொண்டு பார்த்திருக்கிறேன். ஆனால் தெலுங்கு சினிமா நிறைய முன்னேறி வந்திருக்கிறது என்பதை இத்திரைப்படம் மூலம் உணர முடிந்தது.

நான் பார்த்து ரசித்த முதல் தெலுங்குத் திரைப்படம் என்றால் அது ராம்கோபால் வர்மா இயக்கிய ஷிவா (தமிழில் உதயம்). தெலுங்கு படங்களிலும் ஹீரோக்கள் ஸ்மார்ட்டாக இருப்பார்கள் என்பதை அறிய வைத்தவர் நாகார்ஜூனா. ஆனால் ஏனோ இதற்குப் பிறகு தெலுங்கின் பக்கம் மறுபடியும் போகத் தோன்றவில்லை. 

ஆனால் நண்பர் சிவராமன், தினகரன் வெள்ளி மலர்களில் அதிரி புதிரியாக புல்லட் வேக நடையில் தெலுங்கு சினிமாக்களை அதன் கார சாரம் குறையாமல் விவரிக்கும் போது லேசாக சற்று சபலம் தட்டும். அதன் பாதிப்பில் சில இயக்குநர்களின் பெயர்கள் அறிமுகமானது. அதில் முக்கியமானது ராஜ்மெளலி. அவருடைய திரைப்படமான நான் ஈ, இந்தியத் திரைப்படங்களில் ஒரு சாதனை. அதைப் பற்றிய எழுதிய பதிவு.

பிறகு பார்த்தவைகளில் குறிப்பிடத்தக்கது, மகேஷ் பாபு நடித்த பிஸ்னஸ்மேன். மாஃபியாவின் இயக்கம் நாம் சினிமாக்களில் பார்ப்பது போல் அல்லாமல், ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் நிர்வாக கச்சிதத்துடனும் வலைப்பின்னலுடனும் அரசாங்கத்தையே ஆட வைக்கும் வகையில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நம்பும் வகையாக சொன்ன படம். தர்க்கரீதியாக எதையும் சிந்திக்காமல் படத்துடன் நம்மை ஒப்புக் கொடுத்து விட்டால் ஒருவேளை ரசிக்கலாம். அதைப் பற்றி இங்கே.

அதற்குப் பிறகு நான் ரொம்பவும் ரசித்த தெலுங்குத் திரைப்படம் என்றால் இதுதான். - மனம்.  வழக்கமாக வெகுசன திரைப்படங்களை நான் வெறுப்பதற்கு அதிக காரணமே அவை அரைத்த மசாலாவையே அரைத்து வேறு வேறு பாக்கிங்களில் தந்து கொண்டிருப்பதனால்தான். மற்றபடி இம்மாதிரியான வித்தியாசமான திரைக்கதைகளையும் சுவாரசியங்களையும் நுட்பங்களையும் கொண்ட திரைப்படங்களை நான் வரவேற்கவே செய்கிறேன். 


ஏறத்தாழ நூறு ஆண்டுகளின் இடைவெளிகளில் நிகழ்வது போன்ற, மறுஜென்ம நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதை. அதிலும் தெலுங்கில் புகழ்பெற்றிருக்கும் ஒரே நட்சத்திரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நடித்திருக்கிறார்கள் எனும் போது திரைப்படத்தையும் தாண்டி அத்தனை தலைமுறை ஆந்திர ரசிகர்களும் தங்களின் வாழ்நாளில் ரசித்த நடிகர்களை  உணர்ச்சிகரமான தொடர்போடு எப்படி கொண்டாடியிருப்பார்கள் என்பதை யூகிக்க முடிகிறது. தமிழில் இதை ரீமேக் செய்தால் சிவாஜியின் குடும்பத்தைத் தவிர வேறு யாருமே சாய்ஸில் இல்லை. அப்படி வந்திருந்தால் அந்த திரைப்படம் மிக சுவாரசியமானதாக இருந்திருக்கும். துரதிர்ஷ்டமாக சிவாஜி நம்மிடம் இல்லை என்பது ஒரு சோகம்.

நாக சைதன்யாவை முதன் முதலில் 'விண்ணைத் தாண்டி வருவாயா' வில் பார்க்கும் போது வழக்கமான தெலுங்கு நாயகர்கள் மீது ஏற்படும் ஒவ்வாமையே ஏற்பட்டது. "இவனா நாகார்ஜூனா பையன்? ஐயோ.. " என்றிருந்தது. ஆனால் இந்தப் படத்தில் அத்தனை அட்டகாசமாக நடித்திருக்கிறார். ஆனால் அவரது தந்தையான, இளமை மாறாத நாகார்ஜூனனை பார்க்க பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. என்ன காயகல்ப மருந்து சாப்பிடுகிறார்?

இந்தப் படத்தை நான் மிகவும் ரசித்து பார்க்க வைத்த நபர் என்றால் அது நடிகை சமந்தா. இதில் அத்தனை அற்புதமாக நடித்திருக்கிறார். நடிப்பிற்காக அல்லாமல் சமந்தாவை அதிகம் பிடிப்பதற்கு காரணம், 'நீதானே என் பொன் வசந்தம்'. அதைப் பார்த்த பிறகு மிக அப்பட்டமாகவே ஒப்புக் கொள்ள ஆரம்பித்து விட்டேன். ஆனால் அதையும் தாண்டி வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாத அந்தரங்கமானதொரு காரணமும் இருக்கிறது. அவர் தோன்றும் பிரேம்களில் எல்லாம் அவர் மீதிருந்து கண்களை எடுக்கவே முடியவில்லை. குடும்பக் காவியமாக தோன்றும் முதல் பகுதியிலும் உற்சாகப் புயலாக தோன்றும் இரண்டாம் பகுதியிலும் அதற்கான வித்தியாசத்துடனும், தாயாக உணரும் தருணங்களில் சிறந்த நடிப்பையும் தந்திருந்தார். இத்திரைப்படத்தில் அவருக்கான முத்தக் காட்சிகளைப் பார்க்கும் போது உண்மையாகவே காதிலிருந்து புகையும் வயிற்றிலிருந்து நெருப்பும் வந்தது.

ஆகவே நண்பர்களே... இந்தப் படத்தைப் பாருங்கள். நிச்சயமாக இந்தப் படம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். தெலுங்குத் திரைப்படங்களை முன்கூட்டிய ஒவ்வாமையுடன் தவிர்க்கும் என்னைப் போன்றவர்களுக்கு அழுத்தமாகவே பரிந்துரைக்கிறேன். உங்கள் வெறுப்பை இந்த திரைப்படம் நிச்சயம் மாற்றும். அபாரமான படைப்பு.

suresh kannan

Wednesday, June 24, 2015

இரண்டு கட்டுரைகள் - ஜூலை 2015

ஜூலை 2015 இதழ்களுக்காக இரண்டு திரைப்படங்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதியுள்ளேன். ஒன்று, காக்கா முட்டை திரைப்படம் பற்றியது. 

இதில் என்ன எழுதப் போகிறேன் என்பதைப் பார்க்க நானே ஆவலாக இருந்தேன். (அடங்குடா!) தமிழில் இது கவனப்படுத்தப்பட வேண்டிய, வரவேற்கப்பட வேண்டிய  சிறந்த படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்றாலும் அதன் முழுமையை நோக்கி நகர்ந்திருக்கலாம் என்கிற நோக்கில் கதாபாத்திரங்களின், சம்பவங்களின் வடிவமைப்பில் நிகழ்ந்திருக்கும் போதாமைகளை, பிசிறுகளை, இயக்குநரின் மீதுள்ள மதிப்பேதும் குறையாத அளவிற்கு சுட்டிக் காட்டியுள்ளேன்.  இவைகளை பதேர் பாஞ்சாலி திரைப்படத்தின் காட்சிகளோடு ஒப்பிட்டுள்ளேன்.


***

இரண்டாவது, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது திரைப்படத்தைப் பற்றியது. சமீபத்தில் வெளிவந்த ஆனால் அதிகம் கவனிக்கப்படாமல் போனதொரு நல்ல திரைப்படம். ஆனால் 'நாயகனுக்கு பிறகு தமிழில் என்னைக் கவர்ந்த மிகச்சிறந்த திரைப்படம்' என்று பாரதிராஜா மிகையுற்சாகமாக கூறின அளவிற்கு அல்ல. (மணிரத்னம் மீது பாரதிக்கு அப்படியென்ன கோபம்).

இதில் துண்டு துண்டாக மிகச் சிறந்த தருணங்களும் சிறுகதைகளும் உள்ளன. குறிப்பாக பொருளீட்டுவது உள்ளிட்ட இன்னபிற காரணங்களுக்காக சென்னை எனும் பெருநகருக்கு புலம் பெயர்ந்திருக்கும் பிரம்மாச்சாரிகளும், தனிநபர்களும் வசிப்பிடத்திற்காக அல்லாடும் பகுதிகள். அப்படி தங்க இடம் கிடைக்காத ஓர் இரவின் நீளம் எத்தனை கொடுமையாக இருக்கும் என்பது உள்ளிட்ட பகுதிகள் மிகச் சிறப்பாக பதிவாகியிருக்கின்றன. பெருநகரத்தின் கதவுகள் இரவுகளில் இறுகச் சாத்திக் கொள்கின்றன.

ஏறத்தாழ அப்படியொரு அனுபவத்தை சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது. என்னுடைய வழக்கமாக அல்லாமல், நண்பர்களின் அழைப்பில் சென்று உரையாடிய ஒரு மாலைப்பொழுது நீண்டு கொண்டே போய் கிளம்ப நள்ளிரவாகி விட்டது. அந்த நேரத்தில் வீட்டுக்குச் செல்ல முடியாது. நல்ல மழை வேறு பெய்து கொண்டிருந்தது. உடனிருந்த நண்பர் எங்காவது விடுதியில் உறங்கி விட்டு காலையில் கிளம்பலாம் என்று யோசனை தந்தார்.  

மழையில் நனைந்து கொண்டே ஓரளவிற்கு  தரமான, சுமாரான விடுதிகளில் சென்று கேட்டோம். சொன்னால் நம்ப மாட்டீர்கள். அப்படிச் சென்ற நான்கைந்து விடுதிகளிலும் இடமில்லை என்று கறாராக சொல்லி விட்டார்கள். அவர்கள் சொல்வதில் உண்மையில்லை என்பது அவர்களின் உடல்மொழியிலேயே தெரிந்தாலும் வெட்கத்தை விட்டு கெஞ்சிக் கேட்டாலும் 'அறை காலியில்லை' என்றே சாதித்தார்கள். உடனிருந்த நண்பர் தான் ஒரு பத்திரிகையாளர் என்று அடையாள அட்டையைக் காட்டியும் அவர்கள் மசியவில்லை. 

பலத்த மழை பெய்து கொண்டிருக்கும் இந்த இரவை எப்படிக் கழிக்கப் போகிறோம் என்று சற்று கலவரமாகி விட்டது. பதின்ம வயதுகளில் திரைப்படத்தின் இரவுக் காட்சிகளுக்கு தனியாகச் சென்று வீடு திரும்ப முடியாமல் காலியான ஆட்டோக்களிலும் பூங்காக்களிலும் சமயத்தில் சாலையோரத்திலும் கூட உறங்கின அனுபவம் எனக்கு உண்டுதான் என்றாலும் அவை பழங்கதையாகி நாகரிக உலகில் கலந்து விட்ட மேட்டிமைத்தனமும் சொகுசும் இப்போது  அப்படி அனுமதிக்குமா என தெரியாமல் இருந்தது. மட்டுமல்லாமல் காவல் துறையினரின் சந்தேகத்தை, அராஜகத்தை கடப்பதற்கு தனியான திறமை வேண்டும்.

இந்த நகரத்தின் தன்மையையும் சூழலையும் அறியாத ஓர் அந்நியர், ஊருக்கும் திரும்ப முடியாத படி இப்படி மாட்டிக் கொண்டால் என்ன செய்வார், எப்படி உணர்வார் என்பதை யோசித்துப் பார்க்கவே பயமாக இருந்தது. பெருநகரத்தின் இரவு முகம் என்பது அனுபவமில்லாதவர்களுக்கு திகிலை ஏற்படுத்துகிறது. பிறகு நண்பரின் யோசனைப்படி அந்த நேரத்தில் தெய்வாதீனமாக வந்த ஷேர் ஆட்டோவில் பயணித்து சென்னையின் புறநகரில் இருந்த சுமாரான விடுதியில் இடம் கிடைத்த பிறகுதான் ஆசுவாசமாக இருந்தது. 

கன்யாகுமரியின் விடுதிகளில் தனிநபராக வருபவர்களுக்கு இடம் தரப்படாது என்று விடுதி உரிமையாளர்கள் சங்கம் ஒரு முடிவே எடுத்திருக்கிறார்களாம். தனிநபர்களாக வருபவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் விகிதம் அதிகரித்திருப்பதே காரணம் என்கிறார்கள். பார்க்க: செய்தி. இப்படி பல காரணங்களைச் சொல்கிறார்கள்.

இப்படியாக பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் சாலையோரத்திலும் காவல்துறையினரின், சமூக விரோதிகளின், பணக்காரத் திமிரில்  கார் ஏற்றிக் கொல்லும் நபர்களிடையே ஒவ்வொரு இரவையும் கழிக்க நேர்பவர்களின் நிலைமையை யோசித்துப் பார்க்கவே முடியவில்லை. 

இந்த சம்பவத்தின்  உணர்வை மேற்குறிப்பிட்ட திரைப்படத்தின் காட்சிகள் மீள்நினைவு செய்ய வைத்து விட்டது. 

இரண்டு கட்டுரைகளும் முறையே உயிர்மை மற்றும் அம்ருதா ஜூலை 2015 இதழ்களில் வெளிவரக்கூடும். (பிரசுரமாகும் வரை உறுதியில்லை). நண்பர்கள் வாசித்து விட்டு தங்களின் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

suresh kannan