Thursday, June 26, 2008

கன்னிமையை இழக்காத நூலகம்

நீண்ட நாட்களாக கன்னிமரா நூலகத்திற்கு செல்ல திட்டமிருந்தது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இன்று அலுவலகப்பணிக்காக அந்தப்பக்கம் செல்ல வேண்டியிருந்ததால் திருப்பியளிக்க வேண்டிய புத்தகங்களை எடுத்துக் கொண்டேன். நூலகம் அமைந்திருக்கிற பகுதியிலேயே மியூசியம் அமைந்திருந்ததாலும் இதுவரை அங்கே போனதில்லை. மியூசியம் தியேட்டரில் அபூர்வமாக நடக்கும் நவீன நாடகங்களுக்கு லிப்ஸ்டிக் பூசிய நங்கைகள் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் வந்திறங்குவதை காணுவதுண்டு. என் மனைவி, மனைவியாக ஆவதற்கு முன்னால் இந்த வளாகத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது 'நேரமாகிவிட்டது' என்று காவலாளியால் துரத்தப்படுவோம். முன்பு அலங்கோலமாக இருந்த அந்தப்பகுதி இப்போது நன்றாக மரங்களும் செடிகளும் அழகாக அமைக்கப்பட்டு சீரமைக்கப்பட்டிருக்கிறது. நிரந்தர புத்தக கண்காட்சி நிலையமும் இங்கே இருக்கிறது. 10 சதவீத தள்ளுபடியில் புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம்.

நூலகத்தில் நிறைய மாற்றங்கள். ஆங்கில புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறை, சீரமைக்கப்பட்டு குறிப்புகள் எடுப்பவர்களுக்கு வசதியாக நிறைய இருக்கைகள் செய்யப்பட்டிருக்கின்றன. இண்டர்நெட் வசதியும் சமீபத்தில் செய்யப்பட்டிருக்கிறது. நூலக அடையாள அட்டைகளும் புத்தகங்களும் கணினிமயமாக்கப்பட்டு ஸ்கேனரின் ரத்தப்புள்ளியில் அடையாளம் காணப்படுகின்றன. முன்பெல்லாம் தடிமனான ஆங்கில புத்தகங்களை பந்தாவாக எடுத்துக் கொண்டு படிக்காமலேயே திருப்பியளிப்பேன். இப்போது அந்த பழக்கத்தை விட்டொழித்து விட்டேன். படிக்க இயலும் என்றால்தான் எடுப்பது. அப்படியும் குந்தர் கிராஸின் புதினமொன்றை படிக்க இயலாமலேயே திருப்பியளித்தேன்.

தமிழ் புத்தக அரங்கு இரண்டாம் மாடியில் இருக்கிறது. மர நாற்காலிகளில் அமர்ந்து ஜொள் வடிய மேஜை மீது தூங்கிக் கொண்டிருப்பவர்களை காண முடியவில்லை. இருக்கைகள் குஷன் வசதி செய்யப்பட்டு ஜோராக இருக்கின்றன. இங்கே பெரும்பாலும் அந்தந்த புத்தகங்களை அந்தந்த அடுக்குகளில் காணலாம். புத்தகங்கள் இடம் மாறி கிடப்பதின் சதவீதம் குறைவுதான். ரமணி சந்திரனின் நாவல் 'இலக்கிய திறனாய்வு' பிரிவில் இருப்பதும், 'மூப்பது நாளில் தையற்கலை' புத்தகம் உளவியல் பிரிவில் இருப்பதும் அபூர்வமானவைதான். ஊழியர்கள் அவ்வப்போது புத்தகங்களை தரம் பிரித்து அந்தந்த அடுக்குகளில் பொருத்தி வைத்துவிடுகிறார்கள்.

()

கிட்டத்தட்ட இரண்டு புத்தகங்களை வாங்கும் அளவிற்கான பணத்தை தாமத கட்டணத்திற்கு அழுது கொண்டே அளித்தேன். தமிழ் புத்தக அடுக்ககத்திற்கு வந்தேன். முன்பெல்லாம் பெரும்பாலும் புதினங்கள் தான் படிப்பேன். 20% fiction, 80% non-fiction என்று சுஜாதா வழிகாட்டியதைக் கூட சட்டை செய்யவில்லை. ஆனால் இப்போது பெரும்பாலும் அ-புதினங்கள்தான் படிப்பது. குறிப்பாக கட்டுரை நூல்களை. கவிதைப் புத்தகங்கள் இருக்கும் பக்கம் திரும்பிக் கூட பார்க்க மாட்டேன். பெரும்பாலும் புதிதாக இருக்கும் புத்தகங்களைத்தான் தேர்ந்தெடுப்பது.

புதினங்கள் பகுதியில் முதல் புத்தகமே - நல்ல சகுனமோ அல்லது கெட்ட சகுனமோ- 'இருள்வ மெளத்திகம்' கண்ணில்பட்டது. கொஞ்சம் படித்துப் பார்த்ததில் கண்ணை இருட்டிக் கொண்டு வந்ததில் அப்படியே வைத்துவிட்டேன். வெளியே நண்பர் காத்திருந்த காரணத்தினால் கிடைத்த சொற்ப நேரத்தில் எடுத்த புத்தகங்களின் தலைப்புகள் கீழே. இன்று எல்லாமே விருப்பமான புத்தகங்களாக கிடைத்து விட்டன.

Photobucket

1) வார்ஸாவில் ஒரு கடவுள் - தமிழவன் - நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருந்த நாவல்.
2) க.நா.சு. மொழிபெயர்ப்புக் கதைகள் - ஜார்ஜ் ஆர்வெல் உட்பட இன்னபிற ஆங்கில புதினங்களை க.நா.சு மொழிபெயர்த்திருக்கிறார். எடை சுமார் 2 கிலோ இருக்கும்.
3) மரக்கால் - சோலைசுந்தரபெருமாள்.
4) நவீனன் டைரி - நகுலன் - மீள்வாசிப்பிற்கு
5) மரம் (நாவல்) -ஜீ.முருகன் - பிடித்த எழுத்தாளர் என்பதால்
6) லண்டனில் சிலுவைராஜ் - ராஜ்கெளதமன். - சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை ஆகிய புத்தகங்களை ஏற்கெனவே படித்திருப்பதால் ஏற்பட்ட ஆவலில் தேர்ந்தெடுத்தது.

()

எழும்பூர் பக்கம் வரநேர்ந்தால் நீங்களும் ஒரு முறை சென்று பாருங்கள்.

suresh kannan

Saturday, June 21, 2008

அங்கதம் நுரைக்கும் கதைகள்

இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை
(சிறுகதை தொகுப்பு)
- ஆதவன் தீட்சண்யா,
சந்தியா பதிப்பகம், 160 பக்கங்கள், ரூ.75/-

Photobucket


ஆதவன் தீட்சண்யாவை தலித் படைப்பாளி என்ற முறையிலேதான் நான் அறிந்திருந்தேன். அதிகம் கவிதை எழுதுபவர் என்பதாக அறிந்திருந்ததனாலும் உலகிலேயே எனக்குப் பிடிக்காதவைகளின் பட்டியலில் கவிதை என்கிற சமாச்சாரம் பிரதான இடத்தில் இருப்பதாலும் இவர் எழுதியவைகளை நான் அதிகம் படித்திருக்கவில்லை. "எழுத வேண்டிய நாட்குறிப்பின் கடைசிப்பக்கங்கள்" என்றொரு சிறுகதைத் தொகுதியை படித்தவுடனே என்னுடைய பிடித்தமான எழுத்தாளர்களின் பட்டியலில் இடம்பெற்றுவிட்டார் ஆதவன். தலித் எழுத்தாளர்களின் பொதுமைக் குரலை வெளிப்படுத்தும் கதைகள் அவை. இந்தத் தொகுப்பையும் அவ்வாறான நினைப்புடனேயே வாசிக்க எடுத்து வந்திருந்தேன். ஆனால் எந்தவொரு கதையையும் புன்னகைக்காமல் வாசிக்க இயலவில்லை. அங்கதம் புதைந்திருக்கும் படைப்புகளின் ஊடாக ஒடுக்கப்பட்டவர்களின் வலி அதனுடைய முனகலின் தடயமே இல்லாமல் வெளிப்பட்டிருப்பதே இத்தொகுப்பின் சிறப்பு எனலாம். ஆதவன் தீட்சண்யாவின் புனைவு மொழி கற்பனைகளைக் கடந்து பின்நவீனத்துவ பாதையில் புழுதி பறக்க பாய்ந்திருக்கிறது.

"ஆறுவதற்குள் காபியைக்குடி" என்றொரு விநோதமான தலைப்புடன் இருக்கும் (அநேகமாக எல்லாத் தலைப்புகளுமே விநோதம்தான்) கதை புதுவீடு கட்டிக்கொண்டு போகிற அதிர்ஷ்டசாலிகளை ஆதங்கத்துடன் நோக்கும் ஒருவனை நகைச்சுவையுடன் சித்தரிக்கிறது. கிரகப்பிரவேசங்களின் வீட்டு உரிமையாளர் நடந்து கொள்கிறதைப் பற்றியும் 'இன்னும் ஒரு வீடு கட்டத் துப்பில்லையே என்று மனைவி இடித்துரைப்பதையும் விவரிக்கிறது இக்கதை.

.... நாங்கள் பார்த்த அளவில் தங்கள் வீட்டை சுற்றிக் காட்டும் ஒவ்வொருவரும் டபுள் பெட்ரூம் - பாத்ரூம் அட்டாச்டு என்பதைச் சொல்லும் போது அவர்களின் முகத்தில் முக்தியடைந்த தேஜஸ் வந்துவிடுகிறது. படுக்கையிலிருந்து எழுந்ததும் நேராக குளிக்கப்போவதில்லை யாரும். அப்புறமெதற்கு அட்டாச்டு பாத்ரூம்... ஒன்றுக்கு மேற்பட்ட கக்கூசுகள் தங்கள் வீட்டிலிருப்பதைத்தான் இப்படிச் சொல்லி பெருமையடைகிறார்கள்.....'

காலத்தை தைப்பவனின் கிழிசல்' என்ற சிறுகதை மனோகர் ராவ் என்பவரின் வாழ்க்கை சரிதத்தை எழுத வேண்டியதற்காக முன்தயாரிப்பு குறிப்புகளுடனான பாவனையில் இயங்குகிறது. மனோகர் ராவின் மூதாதையர் முதற்கொண்டு தற்கால வாழ்க்கைவரை தையற்கலைஞராக அவனுடைய வாழ்க்கையைப் பற்றின கட்டுரைத் தொனி.

'மார்க்ஸை மருட்டிய ரயில்'... ரயில் என்கிற விஷயம் கதைசொல்லிக்கு பிடிக்காமல் போகிறதற்கான காரணங்களைப் பட்டியலிட்டு .... எவனோ எரித்த இரண்டு பெட்டிகளுக்காக மூவாயிரம் அப்பாவிகளைக் கொன்ற நாடு இது. இனி என்னாலும் எதற்கு சேதாரம்.. என்று நிகழ்கால அரசியலுக்குள் சடாரென பாய்கிறது.

'லிபரல் பாளையத்து கட்டப்பஞ்சாயத்தார்க்கு காவானோபா வழங்கிய தீர்ப்பு' என்கிற இன்னொரு விநோதமான தலைப்பைக் கொண்ட சிறுகதை தொடர்ந்து செல்போன் பேசுவோர்களை பகடிசெய்கிற ஒரு வருங்கால கற்பனையை நிகழ்த்தி, இந்த அதிநவீனத்திலிருந்து விலகி ஓடுகிற ஒருவரை குற்றவாளியாக பார்க்கிற அமைப்பை சுட்டிக் காட்டுகிறது.

.... போன் வைத்திருப்பவர்கள், அதிலேயே எஸ்.டி.டி. வைத்திருப்பவர்கள், அதற்கும் மேல் ஐ.எஸ்.டி.டி. வைத்திருப்பவர்கள் என்று ஏராளமான பிரிவுகளும் படிநிலைகளும் உருவாகி ஒருவர் மேல் ஒருவர் உசத்தியானவர் என்று கருத்து படியத் தொடங்கியது. தம்மை தாழ்ந்தவர்களாக காட்டிக் கொள்ள விரும்பாதவர்கள் கஞ்சிக்கு சிங்கியடித்தாலும் பரவாயில்லையென்று வீட்டுக்கு ஒரு போன் வாங்கி மேல்நிலையாக்கம் பெறத் துடித்தனர்.....

'கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும்' என்ற சிறுகதையை இந்தத் தொகுப்பின் உச்சபட்ச சுவாரசியமான கற்பனை எனலாம். கக்கா நாடு என்றொரு கற்பனை பிரதேசத்தை உருவாக்கி, கிருந்ததியர்கள் என்றொரு கழிவை சுத்தம் செய்பவர்களின் சமூகம் ஜனாபதியை விட அதிகம் சம்பளமும் செல்வாக்கும் பெற்றிருப்பதாகவும், இது கண்டு வயிற்றெரிச்சல் கொள்கிற ஆதிக்கசாதியும் மற்றவரும் பொருளையும் செல்வாக்கையும் பெற வேண்டி தங்களையும் தாழ்த்திக் கொள்ள துணிந்து கழிவை சுத்தம் செய்யும் பணிக்கு போட்டியிடுவதாகவும், மிகப் பகடியான மொழியில் பதிவாகியிருக்கிறது இச்சிறுகதை. இதற்கான ஆதாரங்களை நிறுவும் பொருட்டு பிரசுரமாகியிருக்கும் புகைப்படங்கள் இன்னும் வாசிப்பவனுவத்தை சுவாரசியமாக்குகிறது. இந்தக் கற்பனை நிஜமானால் எப்படியிருக்கும் என்கிற சுவாரசியத்தையும் தருகிறது.

... சாதிவாரியாக ஸ்கேவஞ்சர் பதவி நிரப்பப்படுமானால் பணியின் தரம் குறைந்துவிடும் என்று கிருந்ததியர் வாதாடுகின்றனர். எமக்கும் மலத்துக்கும் எந்தத் தொடர்புமேயில்லையா? தினமும் குறைந்தது மூன்று வேளையாவது எங்களைது இடக்கை மலத்தைத் தொடத்தானே செய்கிறது? எங்களுடையது மட்டுமின்றி எமது குழந்தைகள், படுத்தப்படுக்கையாகிவிடும் எம் வீட்டு கிழடுகள் ஆகியோரின் மலஜலத்தையும் சுத்தம் செய்த அனுபவம் எங்களுக்குமிருப்பதை யாராவது மறுக்க முடியுமா, முண்ணியத்தில் ஒருவன் வாயில் திணிக்க நாங்கள் கையால் மலத்தை எடுக்கவில்லையா?.................

புத்தகத்தின் தலைப்பை கொண்ட சிறுகதை பகத்சிங்கின் வாழ்க்கையிலிருந்து வெளிவராத ஒரு நிகழ்வை முன்வைக்கிறது.

()

முன்னரே குறிப்பிட்டது போல் அங்கதமான வெளிப்படுகிற ஆதவனின் எழுத்துக்குள் ஒடுக்கப்பட்டவர்களின் வலியும் புதைந்திருப்பதை உணர முடிகிறது. தலித் எழுத்தாளர்களின் படைப்புகளின் போக்கில் இன்னொரு போக்கை ஒரு பாய்ச்சலுடன் நிகழ்த்தியிருக்கிறது இந்தப் புத்தகம். தீவிர வாசிப்பாளர்களுக்கு இந்தப் புத்தகத்தை கட்டாய பரிந்துரை செய்கிறேன்.


suresh kannan

Tuesday, June 10, 2008

குருவியா, கரப்பான் பூச்சியா...?

தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறவர்களை உளவியல் மொழியில் "மஸோக்கிஸ்ட்" என்கிறார்கள். அப்படியொரு அனுபவத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுபவிக்க நேர்ந்தது.

பள்ளி திறப்பதற்கு முன்னால் முடித்துவிட வேண்டிய நிபந்தனையுடன் என்னுடைய மகள் எனக்கு தந்திருந்த ஐந்து அம்சங்களில் திரைப்படத்திற்கு செல்வதும் ஒன்று. பள்ளித்திறப்பு நாளை சிறைத்தண்டனைக் கைதி போல் எதிர்நோக்கியிருந்த அவள், மீதமிருந்த அம்சமான திரைப்படத்தை நினைவுப்படுத்தி தினமும் நச்சரித்துக் கொண்டேயிருந்தாள். அலுவலகப்பணி அழுத்தம் காரணம் தினமும் நழுவிப் போய்க் கொண்டிருந்த அது ஒரு சுபதினத்தில் முடிவாயிற்று. விஜய் ரசிகையான அவளின் தேர்வு 'குருவி'யாக இருந்ததில் எனக்கொன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் துணையாக செல்லும் என்னால் அதை சகித்துக் கொள்ள முடியுமா என்பதுதான் எனக்குள்ள கேள்வியாக இருந்தது. மகளுக்காக அவனவன் என்னென்னமோ தியாகங்கள் செய்கிறான்... இதைக்கூடவா உன்னால் செய்ய முடியாது?... என்று மனச்சாட்சி குரலெழுப்பியதில் கொஞ்சம் சமாதானம் அடைந்தேன்.

Photobucket

வணிக நோக்கில் தயாரிக்கப்பட்ட திரைப்படமொன்றை பார்க்கப் போகிறோம் என்கிற முன்தயாரிப்புடன் சென்றிருந்ததால் படத்தைப்பற்றி பெரிதாக எந்த குறையையும் இந்தப் பதிவில் சொல்லப் போவதில்லை. என்றாலும்... தமிழ்த்திரைப்படங்களின் தரத்தை பெரிதும் பாதித்துக் கொண்டிருக்கும் இந்த மாதிரிப் படங்கிளின் மேலிருக்கும் எரிச்சலுடனேயே பார்க்க நேர்ந்தது.

இயக்குநர் தரணியின் படங்களில் என்னைக் கவர்ந்தது 'கில்லி'. வணிகப்படம்தானென்றாலும் சுவாரசியமான, வேகமான திரைக்கதைக்காகவும் பிரகாஷ்ராஜூக்காகவும் அந்தப்படம் எனக்கு பிடித்துப் போயிற்று. அதனுடன் ஒப்பிடுகையில் 'குருவி' பெயர்க்காரணமோ என்னமோ தெரியவில்லை, மெதுவாகவே பறந்தது. தரணியின் முந்தைய பட சாயல்களுடன் பல வெற்றிப்படங்களின் (சிவாஜி!) சாயல்களும் இருந்தன. விஜய், ரஜினி படங்களின் பார்முலாவை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளார் என்று தெரிகிறது. மற்ற நடிகர்கள் வித்தியாசத்தை வேண்டி மொட்டையடித்துக் கொள்வது, உடம்பை குறைப்பது, ஏற்றுவது, தாடி வளர்ப்பது... என்றெல்லாம் மெனக்கெட்டுக் கொண்டிருக்க இதைப் பற்றி மட்டுமன்றி நடிப்பைப் பற்றியும் எந்தவித கவலையிலுமில்லாமல் எல்லா பிரேம்களிலும் ஒரே மாதிரியாக வருகிறார். இவர் படங்களும் வெற்றி பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

இந்தப்படத்தின் கதை அம்புலிமாமா, பாலமித்ரா காமிக்ஸ் புத்தகங்களிலிருந்து இஷ்டத்திற்கு பக்கங்களை கிழித்து தயாரிக்கப்பட்டதைப் போல இருக்கிறது. விஜய், காரின் ஆக்சிலேட்டர் வயரை வாயில் கவ்வியபடி ரேஸில் ஜெயிக்கிறார்..... பட்டாபட்டி அண்டர்வேரில் இருக்கிற மாதிரியான கயிற்றைப்பிடித்துக் கொண்டு பத்தாவது மாடியில் இருந்து த்ரிஷாவை அணைத்த படி குதிக்கிறார்....(இவருக்கென்றே ஒவ்வொரு கட்டிடத்திலும் கயிறு தொங்குகிறது) ஒடும் ரயிலின் மீது குதிக்கிறார்...பறக்கிறார்.... புவிஈர்ப்புவிசை உட்பட அறிவியலின் எந்த விதிகளும் அவரின் சாகசங்களை தடுப்பதில்லை. லாஜிக்கை யோசித்து நமக்குத்தான் மண்டை குழம்புகிறது. திரையரங்கில் பெரும்பாலான மற்ற ரசிகபெருமக்கள் - என் மகள் உட்பட - இதைப் பற்றின எந்தவித கவலையுமின்றி கைத்தட்டி ரசிக்கிறார்கள். பின்னிருக்கையில் ஒரு வாண்டு சிரமப்பட்டு விசிலடிக்க முயற்சிக்கிறது. ஏ.கே 47 துப்பாக்கி முதற்கொண்டு கடப்பா ராஜா வரை யாருமே அவரை சாகடிக்க முடியவில்லை. 'கோச்சா' என்றாலே 'மூச்சா' போகும் மலேசியாவில் அவரிடமிருந்து வைரத்தை கடத்திக் கொண்டு வருகிறார். லிப்ட் அறுந்து நீரில் மூழ்கி எங்கிருந்தோ எழுந்து வருகிறார். துப்பாக்கியால் சுட்டால் கண்ணாடி உடைகிறது. இப்படியாக எப்படியும் சாகடிக்க முடியாத அந்தப் பாத்திரத்தை 'குருவி' என்பதை விட 'கரப்பான் பூச்சி' என்றழைப்பதுதான் பொருத்தாக இருக்கும்.

குழந்தைகளை கடவுளின் அம்சம் என்பது சரிதான் போலிருக்கிறது. ஒன்றரை வயதாகும் என்னுடைய இரண்டாவது மகள், படம் ஆரம்பித்த இரண்டு நிமிஷத்திலேயே தூங்கத் துவங்கி விட்டாள். கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவள்.

()

படத்தின் முற்பாதியில் விவேக் இருப்பதால் சற்று சமாளிக்க முடிகிறது. மற்றபடி தெலுங்கில் டப் செய்ய வசதியாக இருக்கவோ, என்னவோ கடப்பா ....கொண்டா ரெட்டி.... என்று ஆந்திர மிளகாயின் வாசனை படம் முழுவதும். பாவம் ஆஷிஷ் வித்யார்த்தி. இன்னும் எத்தனைப் படங்களில் இப்படி வரப்போகிறாரோ தெரியவில்லை. கல்லூரி திரைப்படத்தில் 'கயல்' ஆக வந்து தொணதொணத்த அந்த திறமையான நடிகையை, இதில் தமிழ்த்திரைபடங்களின் பிரத்யேக கிளிஷேவான குருட்டுத் தங்கையாக நடிக்க வைத்து தன்னுடைய பாரம்பரியத்தை நிலைநாட்டிக் கொண்டது தமிழ்ச்சினிமா. 'கொப்பும் குலையுமாக' இருக்கும் நடிகைகளை மாத்திரமே ஏற்றுக் கொள்ளும் தென்னிந்திய ரசிகர்கள் த்ரிஷாவை ஏற்றுக் கொண்டது என்னுடைய நீண்ட கால ஆச்சரியம். ஒரு பாட்டில் அவரைக்காய்க்கு கவர்ச்சி உடை மாட்டினது போலவே இருக்கிறார்.

பாவம் வித்யாசாகர். மற்ற தென்னிந்திய மொழிகளில் உலவிக் கொண்டிருந்தவரை அர்ஜூன் தமிழிற்கு கொண்டு வர 'மலரே மெளனமா'வில் மெல்ல மெல்ல மேலே ஏறினார். 'மொழி' படத்தின் பாடல்கள் என்னுடைய பிரத்யேக பாடல்களின் வரிசைகளில் உள்ளது. ஆனால் தன்னுடைய survival-க்காக அவரும் சாக்கடையில் குதிக்க வேண்டிய கட்டாயம். இந்தப்படத்தில் "டம் டம்" என்று பாட்டு முழுக்க வாத்தியங்களின் இரைச்சல். ஆனால் மறுபடியும் மறுபடியுமான கேட்பனுபவத்தில் பாடல்கள் கொஞ்சம் பிடித்துப் போவது ஆச்சரியம்தான். தேவா வகையறாக்கள் போல் அல்லாது குத்துப் பாட்டுக்களிலும் ஒரு நேர்த்தியான இசைக்குறிப்புகளை வடிவமைத்திருப்பது வித்யாசாகரின் திறமை.

கோபிநாத்தின் காமிரா கல் குவாரியின் பிரம்மாண்டத்தையும் உக்கிரத்தையும் நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறது. தரணி தன்னுடைய பாதையை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் இது என்று தோன்றுகிறது.

()

என்றாலும் இந்தப்படத்திற்கு சென்றதின் பிரதான நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறி விட்டது. என் மகளுக்கு படம் ரொம்பவே பிடித்துப் போயிற்று. இடையில் நெளியாமல், தொந்தரவு தராமல் முழுப்படத்தையும் ரசித்துப் பார்த்தது 'குருவி'தான். "சூப்பரா இருக்குப்பா படம். விஜய் ரொம்ப ரிஸ்க் எடுத்து (!) நடிச்சிருக்கார்ல" என்றவள், படத்தின் குறுந்தகடு வேண்டி இப்போது நச்சரிக்கிறாள். அவள் முகத்தில் தெரிந்த அந்த சந்தோஷத்திற்காக இது போன்ற இன்னும் இரண்டு படங்களைக் கூட சகித்துக் கொள்ளலாம் போலிருக்கிறது.

suresh kannan