Showing posts with label தாஸ்தாயெவ்ஸ்கி. Show all posts
Showing posts with label தாஸ்தாயெவ்ஸ்கி. Show all posts

Wednesday, April 07, 2010

இடியட் நாவல் குறித்து தாஸ்தாயெவ்ஸ்கி


"இந்நாவலின் (அசடன் - idiot) கருத்து எனக்கு மிகவும் பிடித்தமான பழைய கருத்து. ஆனால் அது சிக்கலானதால் நீண்ட காலமாக நான் தொடவில்லை ; இப்போது அதனைத் தொட்டிருக்கிறேன் என்றால் மிகவும் மோசமான நிலைமையில் என்னைக் காண்பதாலேயே. நாவலின் பிரதான கருத்தாக்கம் நேரியலான நல்லவனை படைப்பதே. உலகத்தில் வேறெதுவும் அவ்வளவு சிரமமானதல்ல, குறிப்பாக தற்போதைய கால கட்டத்தில் நேரிய நல்லவனை படைக்க முயன்ற எல்லா எழுத்தாளர்களும் நமது எழுத்தாளர்கள் மட்டுமல்லாது அய்ரோப்பிய எழுத்தாளர்களும் எல்லாத் தடவைகளிலும் தோற்றுப் போயினர். அது ஒரு வரம்பற்ற காரியம். நல்லது என்பது ஒரு இலட்சியம் ; நம்முடையதும் பண்பாடடைந்த அய்ரோப்பாவினுடையதுமான அந்த இலட்சியம் இன்னும் ஈடேறவில்லை. உலகமெங்கிலும் ஒரே ஒரு நேரிய மனிதன் தான் இருக்கிறான். கிறிஸ்து... கிறித்துவ இலக்கியத்தில் உள்ள நல்லவகை மாதிரிகளில் மிகவும் பூரணமானது டான்க்விஜோட். ஆனால் அவன் அசட்டுத்தனமாக இருப்பதாலேயே நல்லவனாக இருக்க முடிகிறது. இதன் காரணமாகவே வெற்றி பெறுகிறது. தனது மதிப்பை உணராத நல்லவன் முட்டாளாக்கப் படுகையில் கருணையுணர்வு உண்டாகிறது. அதன் காரணமாக வாசகனிடம் இரக்கம் பிறக்கிறது. இந்தக் கருணை எழுவதே நகைச்சுவையின் இரகசியம். ஜீன்பால்ஜீனும் சக்திமிக்க முயற்சியே ; அவனது துரதிருஷ்டத்தின் அளவாலும் சமூகம் அவன் பால் காட்டும் அநீதியாலும் அவன் இரக்கத்தை உண்டு பண்ணுகிறான். எனது நாவலில் இந்த மாதிரி எதுவுமில்லை, ஒன்றுமில்லை, எனக்கே அது முழுத் தோல்வியாகிவிடுமோ என மிகவும் அஞ்சுகிறேன்.

- 'The Idiot' நாவலின் கருத்தாக்கம் குறித்து,  ஒரு கடிதத்தில் தாஸ்தாயெவஸ்கி.

[நன்றி: தாஸ்தாயெவ்ஸ்கி - ஒரு தொகுப்பு - கோணங்கி - கல்குதிரை வெளியீடு - 1991)

suresh kannan

Monday, April 05, 2010

தி இடியட் - தஸ்தாயெவ்ஸ்கி - அகிரா

உரையாடல் அமைப்பின் சார்பில் அகிரா  குரோசாவாவின் நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு நண்பர் சிவராமன் திரையிட்ட படம் 'தி இடியட்', தஸ்தாயெவ்ஸ்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டது.

தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புலகம் பெரும்பாலும் அகவுணர்வுகளின் போராட்டம் சார்ந்து இயங்கக்கூடியது. இதை எழுத்தில் வாசகனிடம் கடத்திக் கொண்டு வருவதே சவாலானது எனும் போது பல விவரணைகளுடன் சாவகாசமாக உருவாக்கப்படும் இந்த  எழுத்தைச் சிதைக்காமல் திரையில் கொண்டு வருவது இன்னுமொரு மகத்தான சவாலை எதிர்கொள்வதற்கு ஒப்பானது. 

நான் தஸ்தாயெவ்ஸ்கியின் சில குறுங்கதைகளை மாத்திரம் வாசித்திருக்கிறேன். ஆனால் இந்த நாவலை வாசித்ததில்லையென்பதால் திரைப்படத்தைப் பின்தொடர சிரமமாயிருந்தது. ஆனால் நாவல் திரைப்படமாகும் போது மூலப்படைப்பை படித்திருக்க வேண்டும் என்பது பொது விதியல்ல. அது அல்லாமலே திரைப்படமும் நாவல் ஏற்படுத்தும் பாதிப்பை சமயங்களில் கூடுதலாகவே ஏற்படுத்தக்கூடும். உதாரணத்திற்கு சத்யஜித்ரேவின் 'சாருலதா'வை ரசிக்க வேண்டுமெனில் தாகூரின் 'சிதைந்த கூடு' சிறுகதையை வாசித்திருக்க வேண்டுமென்பதில்லை என்பது என் தனிப்பட்ட அனுபவம்.

இப்போது 'தி இடியட்டை' நாவலுடன் தொடர்புபடுத்த இயலாத நிலையில் திரைப்படம் வழியாக என்னுடைய சொற்ப புரிதலிலிருந்து பார்க்கலாம்.



மரணத்தை மிக மிக அருகில் தவிர்த்த ஒரு போர்க்குற்றவாளி Kameda.  அது தரும் அனுபவத்தால் எல்லோரிடமும் அன்பு செலுத்தும் கருணையுள்ளம் கொண்டவனாகவும் வலிப்பு நோயுள்ளவனாயும் மாறுகிறான். இதன் காரணமாகவே மற்றவர்களால் 'முட்டாளாக' பார்க்கப்படுகிறான். ஊருக்குத் திரும்பும் அவனுடைய வாழ்க்கையில் இரண்டு பெண்கள் குறுக்கிடுகிறார்கள். Ayako என்கிற உறவுக்காரப் பெண். செல்வந்தரின் வைப்பாட்டியான Taeko Nasu.

இடியட்டான Kameda, Taeko Nasu-வை புகைப்படத்தில் பார்த்த முதல் கணத்திலிருந்தே அவளால் ஈர்க்கப்படுகிறான். இவனுடன் வண்டியில் பயணிக்கும் முரடனான Akama அவள் அழகை ரசிக்கும் போது, Kameda அவளுடைய கண்கள் கருணையைக் கோருவதாக உணர்கிறான்.  தன் முன்னாலேயே கொல்லப்பட்ட ஒர் இளைஞனின் கண்களை அவளுடைய கண்கள் நினைவுப்படுத்தியதாக பின்னால் விவரிக்கிறான். Taeko Nasuவும் இவனுடைய அப்பாவித்தனத்தினால் ஈர்க்கப்படுகிறாள். இதற்காகவே தன்னை மணந்து கொள்ளவிருக்கும் பணத்தாசை பிடித்த Kayamaவை புறக்கணிக்கிறாள். என்றாலும் திடீரென்று தீர்மானித்தவளாய், தன்னால் இந்த அப்பாவி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முரடன் Akamaவை மணந்து கொள்ளத் தீர்மானிக்கிறாள்.

இப்படியாக இந்த முக்கோணக் காதல் பயணம் செய்யும் பாதைகளும் அதனுடனான உணர்ச்சிப் போராட்டங்களும் அகிராவின் பிரத்யேக திரை மொழியில் விவரிக்கப்படுகிறது.

இடியட்டின் பாத்திரத்தை விட வைப்பாட்டியான Taeko Nasuவின் பாத்திரம் மிக அழுத்தமாக பதிவாகியுள்ளதாக நான் உணர்கிறேன். இவள் முரடனுடன் மறைந்துவிடுவதால் அவளைத் தேடித்திரியும் Kameda மெல்ல Ayakoவால் ஈர்க்கப்படுகிறான். என்றாலும் இவர்களின் இடையில் மீண்டும் நுழையும் Taeko Nasu, "அவன் உன்னை விடவும் என்னைத்தான் விரும்புகிறான். வேண்டுமென்றால் சோதித்துப் பார்" என்று சவால் விடுகிறாள். இருவரின் இடையே  Kameda தடுமாறினாலும் Taeko Nasu மீதுள்ள ஈர்ப்பை அவனால் இழக்க முடியவில்லை.

முரடன்  Akama வாக நடித்த தோஷிரோ மிபுனேவின் நடிப்பு எனக்கு பிடித்திருந்தது. 'செவன் சாமுராய்' உட்பட அகிரா தன்னுடைய பல படங்களில் இவரை உபயோகப்படுத்தியுள்ளார்.


()

ருஷ்யாவின் பனிப்படர்ந்த பின்னணியில் நிகழும் இந்த நாவலின் களத்தை அதே பின்புலத்தோடு ஜப்பானில் நிகழ்வதாக உருவாக்கியுள்ளார் அகிரா. இந்த வேறுபாடும் இருநாட்டு கலாசார முரண்களும் படத்தோடு ஒன்றிப் போக முடியாமல் செய்துவிடுகின்றன. மேலும் தஸ்தாயெவ்ஸ்கி மீதுள்ள மதிப்பால்  நாவலை அப்படியே திரைமொழிக்கு அகிரா மாற்றம் செய்துள்ளதை விமர்சகர்கள் ஒரு குறையாக முன்வைக்கிறார்கள். நாவலின் அடிச்சரடை மாத்திரம் எடுத்துக் கொண்டு தன்னுடைய பாணியில் அதை உருவாக்கியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

அகிரா இந்தப் படத்தை நான்கரை மணி நேரத்திற்கும் மேலாக ஓடுவதாக உருவாக்கினார். ஆனால் ஸ்டூடியோ முதலாளிகள் இத்தனை நீளத்தை விரும்பாததால் இருவருக்குள்ளாகவும் கருத்து மோதல் ஏற்பட்டு பின்னர் இரண்டரை மணிநேரமாக குறைக்கப்பட்டது. இதனால் படத்தின் சில ஆரம்ப பகுதிகள் எழுத்தின் மூலமாகவும் பின்னணி குரலின் மூலமாகவும் பொருந்தா அபத்தமாக நகர்த்தப்படுகிறது.

அகிராவின் காட்சிக்கோர்வைகளாலும் காமிராக் கோணங்களாலும் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டுள்ள அண்மைக் காட்சிகளாலும் குறிப்பாக முக்கோணக் காதல் கதையினாலும் தமிழ்த்திரை இயக்குநர் ஸ்ரீதர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நான் யூகிக்கிற அளவிற்கு இது ஸ்ரீதரின் சில திரைப்படங்களை நினைவூட்டியது. ஒளிப்பதிவாளர்  Toshio Ubukata-ன் இருளும் ஒளியுமான கவிதைக் கணங்கள் பிரமிப்பேற்படுத்தியது ஒருபுறம் என்றால் Fumio Hayasaka -ன் பின்னணி இசை காட்சிகளின் தொனியோடு மிகப் பொருத்தமாக இயைந்தொலித்தது.

தஸ்தாயெவ்ஸ்கியின் நாவலை வாசித்த பிறகாகவும் மீள்பார்வைகளின் மூலமாகவும் இந்த திரைப்படத்தை காட்சிகள் ரீதியாக இன்னும் அழுத்தமாக புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன்.

திரையிடலின் இறுதியில் நிகழ்ந்த கலந்துரையாடலில் கவிஞர் ராஜசுந்தர்ராஜன் முன்வைத்த சில விளக்கங்கள், திரைப்படத்தை சரியான கோணத்தில் உள்வாங்கிக் கொள்ள உதவியதோடு மட்டுமல்லாமல் ஒரு திரைப்படத்தை தனியாக காண்பதை விட ஒத்த ரசனையுள்ள நபர்கள் இணைந்து ஒரு குழுமமாக காண்பதிலுள்ள பயன்பாட்டையும் புரிந்து கொள்ள உதவியது.

திரையிடலை ஏற்பாடு செய்த 'உரையாடலுக்கும்' அதற்கு உதவிய  'கிழக்கு பதிப்பகத்திற்கும்' நன்றி. 

suresh kannan