Sunday, September 10, 2023

ஜெயிலர் – பாதிக் கிணறு மட்டுமே தாண்டியிருக்கும் பரிதாபம்

 
தனது ஆஸ்தான டைரக்டர்களிடம் இருந்து விலகி சந்தையில் முந்தி நிற்கும் இளம் இயக்குநர்களிடம் கூட்டணி வைக்க ரஜினிகாந்த் எப்போதும் தயங்கியதில்லை. இதைப் போலவே ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு தனது வயதுக்கேற்ற பாத்திரங்களைத் தேர்வு செய்யவும் ஆரம்பித்தார். இளம் நடிகைகளுடன் டூயட் பாடுவதை அவரது ரசிகர்களே விரும்பவில்லை என்கிற நிதர்சனம் ரஜினிக்குப் புரிந்து விட்டிருக்கலாம். இதெல்லாம் அவர் எடுத்த புத்திசாலித்தனமான முடிவுகள். தவிர்க்க முடியாத முடிவுகளும் கூட.

அப்போதைக்கு டிரெண்டிங்கில் இருக்கும் இளம் இயக்குனர்களை நம்பி தன்னை ஒப்படைத்துக் கொள்ளும் ரஜினியின் முடிவு பல சமயங்களில் சரியாகவும் அமைந்திருக்கிறது. சில சமயங்களில் சொதப்பலாகவும் முடிந்திருக்கிறது. ‘தர்பார்’, ‘அண்ணாத்தே’ என்று அவரது சமீபத்திய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இந்த நிலையில் நெல்சனுடன் புதிய கூட்டணி அமைத்திருக்கும் ரஜினியின் ‘ஜெயிலர்’ எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா?

*

முத்துவேல் பாண்டியன் தனது ரிடையர்ட் வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். மனைவி, மகன், மருமகள், பேரன் என்று பாசமான குடும்பத்துடன் வாழ்க்கை அமைதியாக போய்க் கொண்டிருக்கிறது. அசிஸ்டென்ட் கமிஷனராக இருக்கும் மகன், சர்வதேச நெட்வொர்க்கில் இயங்கும் ஒரு சிலைக்கடத்தல் கும்பலைப் பிடிக்க முயற்சி செய்கிறார். ஒரு கட்டத்தில் மகன் இறந்து விட்ட செய்தி மட்டுமே மழுப்பலாக கிடைக்கிறது. “உங்க நேர்மையும் இந்த மரணத்துக்கு ஒரு காரணம்’ என்று துயரத்தில் இருக்கும் மனைவி குற்றம் சாட்ட, முத்துவேல் பாண்டியனுக்குள் இருக்கும் இன்னொரு பிம்பம் ஆவேசமாக விழிக்கிறது. தனது மகனைக் கொன்றவர்களை வேட்டையாட கிளம்புகிறார். அந்தப் பயணம், பர்மிட் வாங்கிய லாரி மாதிரி இந்தியா முழுக்க எங்கெல்லாம் அவரைக் கொண்டு சேர்க்கிறது என்பதுதான் இந்தப் படம்.

சிவாஜி கணேசன் நடித்த ‘தங்கப்பதக்கம்’ முதல் கமலின் சமீபத்திய ‘விக்ரம்’ வரையான சில திரைப்படங்களை அப்பட்டமாக நினைவுப்படுத்தும் திரைக்கதை. மகனின் மரணத்திற்கு தந்தை பழிவாங்க கிளம்பும் அரதப்பழசான கதை. என்னதான் வழக்கமான மசாலா கதையாக இருந்தாலும் தனித்தன்மையுடன் கையாள்வதின் மூலம் ஓர் இயக்குநரால் அதை வித்தியாசமான திரைப்படமாக்கி விட முடியும். வெற்றியை ஈட்டி விட முடியும். இந்த முயற்சியில் நெல்சன் பாதி கிணறு மட்டுமே தாண்டியிருக்கிறார். முதல் பாதி சுவாரசியமாக அமைந்தாலும் இரண்டாம் பாதியில் திரைக்கதை அநாவசியமாக எங்கெங்கோ அலைந்து பார்வையாளர்களுக்குச் சோர்வையும் சலிப்பையும் அளிக்கிறது.

*

ரஜினியின் ‘ஸ்கீரின் பிரசன்ஸ்’ இன்னமும் சேதமுறாமல் அப்படியே இருக்கிறது என்பதற்கு ஜெயிலர் படமும் ஓர் உதாரணம். வீட்டிற்கு காய்கறி வாங்கி வரும் சமர்த்தான பெரியவர் பாத்திரத்தில் வரும் ரஜினி ஒரு பக்கம் கவர்கிறார் என்றால் சட்டையை மடித்துக் கொண்டு இன்னொரு அவதாரம் எடுக்கும் பரிமாணத்திலும் பட்டையைக் கிளப்புகிறார். ஒரு அறையில் அவரது பாதி உருவம் தெரியும் காட்சிக்கே அரங்கம் அதிர்கிறது. ஆனால் இந்த ஆவேசத்தை மிகையாக்கி விடாமல் ஒரு குறிப்பிட்ட மீட்டரில் துல்லியமாக அடக்கி வாசிக்க வைத்திருப்பதில் இயக்குநர் நெல்சனின் தனித்தன்மை தெரிகிறது.

படம் முழுவதும் வரும் ரஜினியின் பிரத்யேகமான பல மேனரிசங்கள் கவர்கின்றன. பிளாஷ்பேக்கில் திகார் சிறையின் ஜெயிலராக வரும் ‘டைகர்’ அவதாரமும் சிறப்பு என்றாலும் அதில் போதுமான அழுத்தம் இல்லாததால் எடுபடவில்லை. படத்தின் தலைப்பில் மட்டும்தான் ‘ஜெயிலர்’ இருக்கிறாரே தவிர, படத்திற்குள் சம்பந்தப்பட்ட காட்சிகளைக் காணவில்லை.

ஹீரோவின் காலை மட்டும் காட்டுவது, பின்னணி இசை அதிர ஸ்லோ மோஷனில் ஹீரோ நடந்து வருவது போன்றவை ஒரு ‘மாஸ்’ திரைப்படத்தின் தவிர்க்க முடியாத ஃபார்முலா காட்சிகள். ஆனால் இவற்றை மட்டுமே நம்பி ஒரு படத்தை ஒப்பேற்றி விட முடியுமா? ரசிகர்கள் விசிலடிப்பார்கள் என்பதெல்லாம் சரி. ஆனால் பொதுவான பார்வையாளர்களைக் கவர சுவாரசியமான திரைக்கதையும் இருப்பது அவசியம். தனது மகனின் மறைவிற்கு காரணமாக இருந்தவர்களை முத்துவேல் பாண்டியன் துரத்தி வீழ்த்தும் முதல் பகுதியோடு படத்தின் சுவாரசியமும் முடிந்து விடுகிறது. அதன் பிறகு வில்லன் தரும் ‘டார்கெட்டிற்காக’ ஹீரோ நடத்தும் நீண்ட டிராமாவும் அதில் வரும் ‘காவாலா’ போன்ற இடைச்செருகல்களும் கொட்டாவியை வர வைக்கின்றன.

*

ரஜினியைத் தவிர ‘காமியோ’ ரோலில் வரும் பக்கத்து மாநில சூப்பர் ஸ்டார்களான சிவ ராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப் ஆகிய மூவருக்கான காட்சிகளும் திறமையாக இணைக்கப்பட்டிருக்கின்றன. இதெல்லாம் ஒரு கிம்மிக்ஸ்தான் என்றாலும் படத்தின் சுவாரசியத்திற்கு உபயோகமாகியிருக்கிறது. இதில் சிவ ராஜ்குமார், மோகன்லால் வரும் காட்சிகளில் ரஜினிக்கு நிகரான கைத்தட்டல் கிடைக்கிறது. மெயின் வில்லன் வர்மாவாக நடித்திருக்கும் விநாயகனின் தோற்றமும் நடிப்பும் மிரட்டலாக இருக்கிறது. ஆனால் ஆரம்பத்தில் டெரராக வரும் வில்லன் போகப் போக பலவீனமாகி விடுவதால் திரைக்கதையும் கூடவே தொய்ந்து விடுகிறது.

ரம்யா கிருஷ்ணன் ரஜினியின் மனைவியாக நடித்திருக்கிறார். படையப்பாவில் நீலாம்பரியாக கலக்கியவர், இதில் சராசரி மனைவியாக சில காட்சிகளில் மட்டும் வந்து வீணடிக்கப்பட்டிருக்கிறார். மகனாக நடித்திருக்கும் வசந்த் ரவி, தனது பாத்திரத்தை தேவைக்கேற்றவாறு கையாண்டிருந்தாலும் ஒரே மாதிரியான முகபாவத்துடன் இருப்பது அசுவாரசியம். பேரனாக வரும் சிறுவன் ரித்விக், சமகாலத்து இளைஞர்களின் ‘இணைய வீடியோ’ மோகத்தையும் அதன் அலப்பறைகளையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறான்.

இது தவிர, மூச்சு திணறுமளவிற்கு ஏராளமான நடிகர்கள். சில காட்சிகளில் புன்னகைக்க வைத்திருக்கும் யோகி பாபு இன்னமும் கூட சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். விடிவி கணேஷின் காமெடி எடுபடவில்லை. ரெடின் கிங்ஸ்லி தன் வழக்கமான மாடுலேஷனையும் எக்ஸ்பிரஷனிலும் வருகிறார். இந்த வண்டி எத்தனை நாளைக்கு ஓடுமோ? ‘இந்தாம்மா ஏய்’ மாரிமுத்துவின் எண்ட்ரி காட்சியில் கூட கைத்தட்டல் வருகிறது. ஆனால் அவருடைய கேரக்ட்டரும் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாமல் கடந்து போகிறது. ‘வர்மா.. உனக்காக உயிரை கொடுக்கற நண்பன்டா நானு’ என்று எக்ஸ்ட்ண்ட்ரிக்தனமாக நடித்திருக்கும் அர்ஷத் தனித்துத் தெரிகிறார். ‘பிளாஸ்ட்’ மோகனாக வரும் சுனில் பாத்திரத்தின் மூலம் ‘டாப் ஸ்டார்’ நடிகர்களின் கோணங்கித்தனங்களை கிண்டலடித்திருக்கிறார்கள்.

பிராய்லர் கோழியாக வந்து தமன்னா ஆடிய ‘காவாலா’ பாடல், ஆடியோவாக ‘ஹி்ட்’ ஆன அளவிற்கு வீடியோவாக எடுபடவில்லை. தமன்னாவின் காதல் டிராமா எல்லாம் படத்திற்கு தொடர்பேயில்லாத, தேவையில்லாத ஆணி. ரஜினியைத் தவிர வேறு எந்த கதாபாத்திரமும் அழுத்தமாக வடிவமைக்கப்படாதது படத்தின் பெரிய பலவீனம். குறைந்தபட்சம் மெயின் வில்லனாவது வலிமையாக சித்தரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

*

ஒரு சராசரியான மிடில் கிளாஸ் குடும்பம், மாஃபியா உலகின் பிடியில் சிக்கிக் கொண்டால் என்னவாகும் என்பதுதான் நெல்சன் வழக்கமாக உருவாக்கும் கதையுலகம். ஸ்பானிஷ் முதற்கொண்டு பல வெப்சீரிஸ்களின் தாக்கமும் தழுவலும் அதில் இருக்கும். ஜெயிலர் படமும் இதற்கு விதிவிலக்கல்ல. முதற்பாதியில் ஓரளவிற்கு சீராக ஓடும் முத்துவேல் பாண்டியனின் வண்டி, பிறகு பிரேக் பிடிக்காத புல்டோஸர் மாதிரி எங்கெங்கோ சுற்றியலைவது படத்தின் ஒட்டுமொத்த சுவாரசியத்தை பாழ்படுத்தி விடுகிறது.

ரஜினியின் படம் என்றாலே ரசிகர்களைத் தாண்டி அதுவொரு குடும்பத் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். பெண்களும் குழந்தைகளுமாக கூட்டம் கூட்டமாக தியேட்டருக்குச் செல்வார்கள். ஆனால் ‘ஜெயிலர்’ படத்தில் முகஞ்சுளிக்க வைக்கும் அளவிற்கு வன்முறைக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. சுத்தியலால் மண்டையை உடைப்பது, காதை அறுப்பது போன்ற கொடூரமான காட்சிகளை மழுப்பாமல் அப்படியே நேரடியாக காட்டியிருப்பது மனம் பதைக்க வைக்கிறது. இது போன்ற வன்முறைக்காட்சிகள் இளம் மனங்களில் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற பொறுப்புணர்ச்சி இயக்குநருக்கும் ஹீரோவிற்கும் இருக்க வேண்டும். இது தவிர ரஜினி ஸ்டைலாக சுருட்டு பிடிக்கும் காட்சியும் வருகிறது. ‘குடிச்சுக் கெட்டுப் போயிடாதாதீங்க’ என்று இசை வெளியீட்டு விழாவில் கரிசனத்துடன் உபதேசம் சொன்ன ரஜினி, திரைக்கு உள்ளேயும் சில கட்டுப்பாடுகளை பின்பற்றியிருக்கலாம்.

*

அனிருத்தின் அட்டகாசமான பின்னணி இசையும் ‘உக்கூம்’ பாடலும் படத்தை பெருமளவு தூக்கி நிறுத்தியிருக்கிறது. ஆனால் எத்தனை தடவை ஐயா.. இதைத் தொடர்ந்து கேட்பது?! ஹைடெஸிபலில் வரும் சத்தம் காதுகளை பஞ்சர் ஆக்கியிருக்கும் விபத்தை அனிருத் தவிர்த்திருக்கலாம். விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு நேர்த்தியாக அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் வரும் அமைதியான காட்சிகளுக்கும் பிறகு நிகழும் அதிரடி காட்சிகளுக்கும் கணிசமான வித்தியாசம் காட்டியிருக்கிறார். எடிட்டர் ஆர்.நிர்மல் இன்னமும் சுதாரிப்பாக செயல்பட்டு அநாவசிய ஆணிகளைக் கழற்றியிருக்கலாம். ஸ்டன் சிவா வடிவமைத்திருக்கும் ஆக்ஷன் காட்சிகள் மிரட்டலாக இருக்கின்றன. ஆனால், தன் குடும்பத்தை அவமானப்படுத்தும் இரண்டு ரவுடிகளை இருட்டு மூலையில் ரஜினி வீழ்த்துவதில் உள்ள சூடும் விறுவிறுப்பும், ஸ்னைப்பர் ஷாட்களிலும் கன்டெய்னர் லாரிகள் வானத்தில் பறப்பதிலும் ஏற்படவில்லை.

சீரியஸான காட்சிகளின் இடையில் சட்டென்று காமெடியை இணைப்பது, காமெடியான சூழலை தீவிரத்துடன் முடிப்பது போன்றவற்றை ‘டார்க் காமெடி’ என்கிறார்கள். தமிழ் சினிமாவில் ஒரளவிற்கு இந்தப் பாணியை சிறப்பாக பயன்படுத்தும் இயக்குநர்களில் நெல்சனும் ஒருவர். ஆனால் அவரது முந்தைய படங்களில் இருந்த நகைச்சுவை கூட ‘ஜெயிலரில் போதுமான அளவிற்கு இல்லை. சீரியஸான சூழலின் பின்னணியில் அதிரடியான பாடலை ஓடவிட்டு ஜாலியாக நடனம் ஆடுவதெல்லாம் ‘டார்க் காமெடியில்’ வராது.

ஒரு மசாலா சினிமாவில் லாஜிக் பார்க்கக்கூடாது என்பதெல்லாம் சரிதான். ஆனால் இயன்றவரை காட்சிகளில் நம்பகத்தன்மையைக் கூட்டினால்தான் படத்துடன் பார்வையாளர்களால் ஒன்ற முடியும். ஜெயிலர் திரைப்படத்தில் கன்னாபின்னாவென்று லாஜிக் மீறல்கள். தேசமெங்கும் உள்ள கேங்க்ஸ்டர்கள், ஜெயிலரைப் பற்றி அறிந்திருக்கும் போது 40 வருடங்களாக கடத்தல் தொழிலில் இருக்கும், தன்னை ‘புரொபஷனல்’ என்று சொல்லிக் கொள்ளும் விநாயகன் கேரக்கட்டருக்கு தெரியாமல் இருப்பது விநோதம். தன் அப்பாவைப் பற்றி மிக துல்லியமாக அறிந்திருக்கும் வசந்த் ரவி, தான் செய்யும் மோசடியை அவர் எப்படியும் கண்டுபிடித்து விடுவார் என்று எதிர்பார்க்க முடியாமல் போனதும் விசித்திரம். நேர்மையாக பணியாற்றிய ஜெயிலர், எப்படி கிரிமினல்களுடன் கூட்டணி வைப்பார் என்கிற கேள்வியையும் தவிர்க்க முடியவில்லை.

‘நீங்கள் நடித்ததில் உங்களுக்குப் பிடித்த படம் எது?’ என்றொரு கேள்வி ரஜினியிடம் ஒருமுறை கேட்கப்பட்ட போது ‘முள்ளும் மலரும்’ என்று நேர்மையான பதிலைக் கூறினார். ‘மாஸ்’ சினிமாக்களில் நடித்து ரஜினி தமிழ் சினிமாவின் வணிகத்தைக் காப்பாற்றுவது அவசியம்தான். ஆனால் ‘முள்ளும் மலரும்’ ரஜினி எங்கேயோ, எப்போதோ தொலைந்து விட்டதுதான் பரிதாபம்.

ஜெயிலர் – ஃபெயிலியர் ஆகும் விபத்தை எப்படியோ முட்டி மோதி தவிர்த்திருக்கும் ஒரு சுமாரான முயற்சி.

(குமுதம் இதழில் வெளியானது)  
 
suresh kannan