Showing posts with label குறிப்புகள். Show all posts
Showing posts with label குறிப்புகள். Show all posts

Monday, December 02, 2013

பொதுவெளியின் எளிய வாசகர்

சனிக்கிழமையன்று ஜெயமோகனின் 'வெள்ளை யானை' நூல் வெளியீட்டு விழா முடிந்து கிளம்பும் போது கடும் பசி. வழக்கமான வேலை நாட்களில் இவ்வாறு அத்தனை பசிக்காத வயிறு, வெளியே செல்லும் நாட்களில் உடலின் ஓவர்டைம் காரணமாகவாகவோ என்னவோ, விரைவில் பசிக்க ஆரம்பித்து விடுகிறது. இதனாலேயே விழா நிகழ்வுகளை ஒருமித்த மனநிலையில் கவனிக்க முடிவதில்லை. அதனாலேயே அவசரமாக எதையாவது திணித்து விட்டு ஓடுவேன். அன்று இயலவில்லை.

விழா முடிந்து நண்பர்களிடம் சிறிது உரையாடி விட்டு சென்ட்ரல் ஸ்டேஷன் அடைந்து வீட்டை அடைவதற்குள் பசி அதன் உக்கிரத்தை அடைந்திருந்தது. ஓளவையார் சொன்னது போல் இடும்பை கூர் வயிறு. கடுமையான பசியை உணர்ந்திருந்தால்தான் இந்த நாவலில் விவரிக்கப்படும் பஞ்சத்தின் விவரணைகளை உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று விழாவில் கெளதம சன்னா (?) சொன்னது நினைவிற்கு வந்தது. (ஒருவேளை பசிக்கே இதெல்லாம் ஓவர்ப்பா தம்பி).

வீட்டின் அருகிலிருக்கும் ஓர் அசைவ உணவகத்திற்கு சென்று அவசரமாய் பிரியாணி ஆர்டர் செய்தேன். காத்திருக்கும் நேரத்தில் சென்ட்ரல் ஸ்டேஷனில் வாங்கிய உயிர்மையைப் புரட்டி ஷாஜியின் கட்டுரையை ஆவலாக வாசித்துக் கொண்டிருந்தேன். (தன்னடக்கத்தை கவனியுங்கள், என் கட்டுரையை வாசிக்கவில்லை). அப்போதுதான் அது நிகழ்ந்தது.

அங்கு சர்வராக பணிபுரியும் ஒருவர் என்னை அணுகி 'இந்த மாச உயிர்மை இத்தனை சீக்கிரம் வந்துடுச்சுஙகளா?" என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பேருந்து மற்றும் ரயில் பயணங்களில் தினத்தந்தி, ராணிமுத்து வகையறாக்களைத் தாண்டி இலக்கிய நூல்கள், சிற்றிதழ்கள், காலச்சுவடு, உயிர்மை போன்ற இடைநிலை இதழ்கள் ஆகியவற்றை வாசிக்கின்ற சகஹிருதயர்களை அபூர்வமாகவே கண்டிருக்கிறேன். அநாமயதேயராக இருந்தாலும் அவர் மீது இனம் புரியாத காரணமறியாத பிரியம் ஏற்பட்டு விடும். சமயங்களில் லஜ்ஜையை கைவிட்டு அவர் வாசிக்கும் நூல் என்னவென்று எட்டிப்பார்ப்பதும் உரையாட கூட முயல்வதும் கூட உண்டு.

ஹோட்டலில் சர்வராக பணிபுரியும் ஒருவர் இலக்கிய இதழைப் பற்றிக் கேட்டது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. (ஏன் ஹோட்டல் சர்வர் இலக்கியம் படிக்க்ககூடாதா, இதைத்தான் மேட்டிமை மனப்பான்மையின் ஆழ்மன விளைவு  என்று ருஷ்ய அறிஞர் மிகாச்சேவ் காபுரா சொல்லியிருக்கிறார் என்றெல்லாம் என்னை தாக்க முனையாமல் அந்த சூழ்நிலையின் யதார்த்தத்தோடு புரிந்து கொள்ளுங்கள்). அவரைப் பற்றி ஆவலாக விசாரித்தேன். பெயரையும் ஊரையும் பற்றி சொன்னார். இது போன்ற இதழ்களை தொடர்ந்து வாசிப்பதாகவும் தெரிவித்தவுடன் என் பசியும் சற்று மறைந்து அவரைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது.

அவர் என்னைப் பற்றி விசாரித்தவுடன் என் பெயரைச் சொன்னேன். அவர் உடனே என் கையிலிருந்த இதழையும் பெயரையும் கச்சிதமாக இணைத்து யோசித்து 'சமீபத்தில் இதில் தொடர்ந்து எழுதுவது நீங்கள்தானே?' என்றார். 'ஆமாம்'

'கடந்த மாத  இதழில் மிஷ்கின் திரைப்படத்தைக் குறித்த கட்டுரையைப் பற்றி ' நல்லாயிருந்ததுங்க' என்று ஆரம்பித்து  'ஏன் இதைப் பற்றி எழுதவில்லை, ஏன் அதை எழுதவில்லை" என்று பல கேள்விகளால் திணறடித்து விட்டார். இதற்குள் நான் ஆர்டர் செய்த உணவும் வந்துவிட்டது. ஆனால் அதை கடும்பசியில் உண்ண இயலாமல் அவரின் கேள்விகள் தொடர்ந்து கொண்டேயிருந்தன. உள்ளே கிச்சனில் வறுபட்டுக் கொண்டிருந்த கோழி கூட அத்தனை துன்பப்பட்டிருக்காது. அந்தச் சங்கடத்தையும் மீறி சினிமா குறித்த அவரின் ஆர்வம் என்னை பிரமிப்படையச் செய்தது. மிஷ்கின் திரைப்படத்தின் பல காட்சிகளை உதாரணம் காட்டிக் கொண்டேயிருந்தார். நான் எழுதிய முந்தைய கட்டுரைகளைக் கூட அவர்  ஞாபகம் வைத்திருந்தது உண்மையில் என்னை நெகிழ வைத்தது. 'என்னுடைய பூர்வீகம் சென்னைதானா? என்பதை மறுபடி மறுபடி கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார். சென்னையில் பிறந்தவர்கள் எழுத்தாளராக எப்படி ஆக முடியும் என்பதை அவர் உறுதியாக நம்பினது போலிருந்தது.

எதற்காக இத்தனை சுயபிரதாபம் என்றால், இத்தனை வருட இணையப் பொதுவாழ்க்கையில் வசைகள் உட்பட பல வாசகர் கடிதங்களை மின்னஞ்சலில் பெற்றிருக்கிறேன். (வாசகர் கடிதங்களை இணையத்தில் பிரசுரிப்பதில்லை. தன்னடக்கம்தான் காரணம்) இணையப் பரிச்சயத்தின் மூலம் பல நண்பர்களின் அன்பையும் சில நண்பர்களின் கசப்பையும்  பெற்றிருக்கிறேன். நூல் வெளியீட்டு விழாக்களில் புத்தக கண்காட்சிகளில் சில நண்பர்களின் அறிமுகத்தைப் பெற்றிருக்கிறேன்.

ஆனால் பொதுச் சமூகத்தில் என்னிடம் எவ்வித முன்தொடர்பும் கொள்ள இயன்றிருக்காத ஓர் அநாயமதேய எளிய நபரை வாசகராக சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. இவரின் அறிமுகத்தின் மூலம் அன்றைய தருணம், வயிறை விடவும் மனம் அதிகமாக நிறைந்திருந்தது.

இதை போல் நூல் வெளியீட்டு விழா இறுதியில் வெளியே கிருஷ்ணமூர்த்தி என்கிற ஆர்வமுள்ள இளைஞரை சந்தித்தேன். திருவண்ணாமலையிலிருந்து இந்த விழாவிற்காகவே வந்திருக்கிறார். இரவு தங்க இடமிருந்தால் மறுநாள் நடக்கவிருந்த வாசகர் கலந்துரையாடலிலும் கூட கலந்து கொள்ள விருப்பம் ஆனால் இரவு கிளம்பினால்தான் மறுநாள் ஊர் அடைய முடியும் என்கிற வருத்தம். கணினி ஏதுமில்லையென்றாலும் கூட கைபேசியிலேயே ஜெயமோகன் தளத்தின் அனைத்துக் கட்டுரைகளையும் வாசித்து விடுவாராம். ஜெயமோகன் படைப்பொன்றைப் பற்றி கட்டுரை கூட எழுதி வைத்திருக்கிறார். பவாவிடம் சொல்லி திருவண்ணாமலையில் நிகழும் இலக்கிய சந்திப்பில் ஜெயமோகனிடம் சேர்த்து விட வேண்டும் என்கிற ஆவலில் இருக்கிறார். அவர் உடல்மொழியிலும் கண்களிலும் தெரிந்த பரவசத்தைக் காண நெகிழ்ச்சியாக இருந்தது. கணினி ஒன்றிருந்தால் அவர் எழுத்துக்களை இணையத்திலேயே பதிப்பிக்க முடியும் என்று யோசனை சொன்னேன். ஆனால் அவரிடம் சொந்தமாக கணினி இல்லை.

இவ்வாறான எளிய வாசர்களின் மூலம்தான் இலக்கியம் எனும் வஸ்து குற்றுயிரும் குலையுறுமாக ஜீவித்துக் கொண்டிருக்கிறது. 


suresh kannan

Friday, November 22, 2013

இறைந்து கிடக்கும் புத்தகங்கள்


எழுத்தாளர் அ.முத்துலிங்கம், இயக்குநர் மிஷ்கின் ஆகியோர்,  இறைந்து கிடக்கிற புத்தகங்களுக்கு நடுவிலிருக்கும் புகைப்படங்களை  சமீபத்தில் பார்த்ததும் சஹஹிருதயர்களைப் பார்த்த அளவில்லா சந்தோஷம் ஏற்பட்டது. நான் தனியனில்லை என்கிற சந்தோஷமும். என்னளவில், வாசிக்கிறோமோ இல்லையோ அது ஒருபுறம். ஆனால்  புத்தகக் குவியல்களின் நடுவில் சும்மா  இருப்பதே சொல்லவியலாத மகிழ்ச்சியையும் நல்ல அதிர்வலைகளையும் ஏற்படுத்துகிறது. அவைகைள வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதே நமக்கு பிடித்த பெண்களை பிடித்தமான கோணங்களில் கவனித்துக் கொண்டிருக்கும் இன்பத்தை அளிக்கிறது. 'வாயேன் என்னை வந்து வாசியேன்' என்று சுற்றியுள்ள புத்தகங்கள் அழைத்துக் கொண்டேயிருக்கும் குரல்களைக் கேட்பது தனி இன்பம்.

என் படுக்கையறையின் கட்டில் முழுக்க புதத்கங்களால் இறைந்து கண்கொள்ளா காட்சியாக இருக்கும். என் மனைவி என் மீது எரிச்சலும் கோபமும் கொள்ளும் பல விஷயங்களில் இதுவுமொன்று. (வாக்கியங்களுக்கு இடையி்ல் வாசிக்காதீர்கள்). சமையலறையும் வரவேற்பறையும் தேவையற்ற வஸ்துகளால் இறைந்திருக்கும் உண்மையைச் சுட்டிக் காட்டி அவரை பழிவாங்கி விடுவதில் சற்று திருப்தியாக இருக்கும்.  புத்தகங்களை கண்ணாடிச் சிறையில் அடைத்து விருந்தினர்கள் நம்மீது மதிப்பு கொள்வதற்காக காட்டும் வீண் ஜம்பங்களை விட புத்தகங்கள் இப்படி இறைபட்டு விருப்பமான நேரத்தில் கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதை உடனே வாசிப்பதே சிறந்த காரியம். புத்தகங்கள் மாத்திரமல்ல, எவற்றையுமே உபயோகிக்காமல் வீணாக வைத்திருப்பதால் பல கேடுகள் விளையும்.

வீட்டில் மாத்திரமல்ல, என் அலுவலக மேஜையும் (அங்கும் கூட புத்தகங்கள்) காகிதங்களாலும் கோப்புகளாலும் நி(இ)றைந்திருக்கும். என் பாஸ் இதை என்னிடம் நேரிடையாகவும் மறைமுகமாகவும் சொல்லி அலுத்து விட்டு விட்டார். இப்படியாக அஃறிணைகள் ஒழுங்கின்மைகளோடு இறைந்திருக்கும் ஒழுங்குதான் எனக்கு பிடித்திருக்கிறது. இப்படி இறைந்திருந்தால் சட்டென்று தேடி எடுப்பதும் எளிதாக இருக்கிறது.  பொருட்களை இப்படியாக இறைத்து வைத்திருப்பவர்களின் மனோநிலை,  பிசிறுகளும் குழப்பங்களும் நிறைந்ததாக இருக்கலாம்  என்று உளவியல் நிபுணர்கள் ஆராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடித்தும் நிரூபித்தும் இருக்கிறார்களாம். அவர்களின் ஆராய்ச்சி முடிவுகளை இந்த குப்பைகளின் கீழ் ஒளித்து வைத்தால் போகிறது. அதனால் ஒன்றும் பிரச்சினையில்லை.

அது போல் புத்தகங்களை வாசிக்கும் சிலர் அதில் அடிக்கோடிட்டும் குறிப்புகள் எழுதியும் தாம் வாசித்ததை நிரூபிக்கும் ஆவேசத்துடன் செயல்படுவார்கள். என்னைப் பொறுத்தவரை எத்தனை முறை வாசித்தாலும் அந்தப் புத்தகங்கள் அச்சிலிருந்து வெளிவந்த அதே புத்தம்புது அழகுடனும் வாசனையுடனும் தூய்மையுடனும் இருப்பதைத்தான் சரியாக எண்ணுவேன்.

புத்தகங்களை நாமறியாமல் காலால் தொட்டு விட்டால் அதைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ளும் மரபு சார்ந்த பழக்கம் நம்மிடமிருக்கிறது. விவரம் அறியாத வயதுகளில் நானும் செய்திருக்கிறேன். ஆனால் நான் மிக மதிக்கும் புத்தகங்களின் மீது எவ்வித குற்றவுணர்வும் தயக்கமுமின்றி என்னால் கால் வைத்து ஏறி நிற்க முடியும். அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்கள் குறித்துதான் எனக்கு மதிப்பே ஒழிய அச்சிடப்பட்டிருக்கும் காகிதங்கள் குறித்தல்ல. பி.ஏ. கிருஷ்ணன் எழுதிய 'புலிநகக் கொன்றை' புதினத்தில், உடலுறவு கொள்ளும் வசதிக்காக தடித்தடியான புத்தகங்களான கார்ல்மார்க்ஸின் 'மூலதனத்தை' பயன்படுத்திக் கொள்ளும் ஒரு பாத்திரம் நினைவிற்கு வருகிறது.

இவையெல்லாம் ஏதோ முற்போக்குத்தனமாக சிந்தித்து அவை சார்ந்தவைகளை அவற்றை ஒரு ஜம்பத்துடன் வெளியிட்டும்  அந்தப் பழக்கங்களை முரட்டுத்தனமாக தனக்குள் திணித்துக் கொள்வது என்பதல்ல. சற்று பகுத்தறிவுடன் சிந்தித்தாலே இவைதான் சரி என்பது இயல்பாக எல்லோருக்கும் தோன்றிவிடுவதுதான் இது. நம்முள் திணிக்கப்பட்டிருக்கும் மரபு சார்ந்த பல கற்பிதங்களின் காரணமாகவும் ஆழ்மன வினைகளை மறுக்க முடியாத காரணங்களினாலும்தான் இவைகள் ஆச்சார மீறலாகவும் தவறுகளாகவும் நமக்கு தெரிகின்றன.

அ,முத்துலிங்கத்தின் முகநூல் குறிப்பு. 

suresh kannan

Sunday, January 03, 2010

புத்தகக் கண்காட்சி ஜனவரி 2010 - நூல் பரிந்துரைகள்




புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்த போது கண்ட, ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்த, நான் வாங்க விரும்பிய நூற்களின் பட்டியலை இங்கே பகிர்ந்து கொள்ளலாமென்று ஒரு உத்தேசம். முழுக்க முழுக்க என் சுயவிருப்பத்தின், ரசனையின் அடிப்படையிலும் கண்காட்சியில் கிடைக்கப் பெற்ற விலைப்பட்டியலின் அடிப்படையிலும் இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே அறியப்பட்டவை என்பதால் இணைய எழுத்துக்களையும் குறிப்பாக கவிதை நூல்களையும் இதில் பெரும்பாலும் தவிர்த்திருக்கிறேன். கண்காட்சிக்குச் செல்லவிருக்கும் யாருக்காவது உதவலாம் என்பதால் இங்கே பதிவு செய்கிறேன்.



க்ரியா பதிப்பகம்

வீடியோ மாரியம்மன் - இமையம்

அடையாளம் பதிப்பகம்

ஈரானிய சினிமாவும் முஸ்லிம் உலகமும் - எம்.எஸ்.எம். அனஸ்
இலங்கையில் சமாதானம் பேசுதல் - கலாநிதி குமார் ரூபசிங்க
வெயிலும் நிழலும் (கட்டுரைகள்) - பிரமிள்
ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியங்கள் - சி.புஸ்பராஜா
அடிப்படைத் தமிழ் இலக்கணம் - எம்.ஏ.நு·மான்
கங்கணம் (நாவல்) - பெருமாள் முருகன்
அஞ்சுவண்ணம் தெரு (நாவல்) தோப்பில் முஹம்மது மீரான்
கு.ப.ரா. கதைகள் (முழுத் தொகுப்பு)
சலூன் நாற்காலியில் சுழன்றபடி (கோணங்கி முதல் 70 சிறுகதைகள்)
பிரமிள் (முழுத் தொகுப்பு) சிறுகதைகள். பதிப்பு: கால சுப்பிரமணியன்
அமெரிக்காவின் மறுபக்கம் - நாகேஸ்வரி அண்ணாமலை
தமிழ் நடைக் கையேடு

விடியல் பதிப்பகம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - ஜான் பெர்க்கின்ஸ்
பெரியார்: சுயமரியாதை தர்மம் - எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா
மாவோ வாழ்க்கை வரலாறு - பிலிப் ஷார்ட்
உலகமயமாக்கம்: அடிமைத்தளையில் இந்தியா - அரவிந்த்
ஜூதான் - எச்சில் - ஓம்பிரகாஷ் வால்மீகி

சந்தியா பதிப்பகம்

யுவான் சுவாங் - இநதியப்பயணம்
மனநோயின் மொழி - லதா ராமகிருஷ்ணன்
தமிழ்நாடு பயணக்கட்டுரை (ஏ.கே.செட்டியார்)

கிழக்கு பதிப்பகம்

நில்லுங்கள் ராஜாவே (நாவல்) - சுஜாதா
வாழ்விலே ஒரு முறை - ஜெயமோகன்
பனிமனிதன் - ஜெயமோகன் (குழந்தைகளுக்கான நாவல்)
நாவல் (கோட்பாடு) - ஜெயமோகன் 
   (நீண்ட வருடங்களுக்குப் பிறகு அச்சில் வரும் மிக முக்கியமான நூல்)
இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - ராமச்சந்திர குஹா
சீனா விலகும் திரை: பல்லவி அய்யர்
சென்னை மறுகண்டுபிடிப்பு - எஸ்.முத்தைய்யா
இலங்கை இறுதி யுத்தம் - நிதின் கோகலே
ராஜீவ் கொலை வழக்கு - ரகோத்தமன்
தி.மு.க. உருவானது ஏன் - மலர்மன்னன்
மாவோயிஸ்ட் - பா.ராகவன்
ஆர்.கே. சண்முகம் செட்டியார் - ஆர்.சுந்தர்ராஜ்
இடிஅமீன்  - ச.ந.கண்ணன்
மகாகவி பாரதி: இலந்தை சு.இராசாமி
லண்டன் டயரி - இரா.முருகன்
கர்நாடக சங்கீதம் ஓர் எளிய அறிமுகம் - மகாதேவன் ரமேஷ்
ஜே.பி.யின் ஜெயில் வாசம். - ஜெ.ராம்கி


உயிர்மை பதிப்பகம்

என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் - மனுஷ்யபுத்திரன் (உயிர்மை தலையங்கங்கள்)
நரகத்திலிருந்து ஒரு குரல் - சாருநிவேதிதா
தாந்தேயின் சிறுத்தை - சாருநிவேதிதா
சாட்சி மொழி - ஜெயமோகன்
புதிய காலம் - ஜெயமோகன்
முன்சுவடுகள் - ஜெயமோகன்
பேசத் தெரிந்த நிழல்கள் - எஸ்.ராமகிருஷ்ணன்
வாசக பர்வம் - எஸ்.ராமகிருஷ்ணன்
வெளியேற்றம் - யுவன் சந்திரசேகர்
சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும் - வா.மு.கோமு

வம்சி பதிப்பகம்

தென்னிந்திய நவீன சிறுகதைகள் - தொகுப்பு: கே.வி. ஷைலஜா
அனுபவங்களின் நிழல் பாதை - ரெங்கைய்யா முருகன்
   (இந்திய பழங்குடி மக்களின் இனவரைவியல்)
ஒரு கலகக்காரனின் கதை - ஜான் ஆப்ரகாம்
ஒற்றை கதவு - மலையாள நவீன சிறுகதைகள் : தமிழில் கே.வி. ஷைலஜா
உலக சிறுவர் சினிமா - விஸ்வாமித்திரன்
எஸ்.இலட்சுமண பெருமாள் சிறுகதைகள்
கனகதுர்கா - பாஸ்கர் சக்தியின் முழுமையான சிறுகதைகள்
உப்புக் கடலைக் குடிக்கும் பூனை - க.சீ.சிவகுமார்
இறுதி சுவாசம் - லூயிபுனுவல் சரித்திரம்
சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு (மறுபதிப்பு)

மதுரை பிரஸ்

ஸ்கூப் - குல்தீப் நய்யார்
இந்தியா காந்தியைக் கொன்றது யார்? - தாரிக் அலி
நிழல் வீரர்கள் -பி.ராமன் (ரா உளவு அமைப்பு குறித்தான நூல்)

காலச்சுவடு பதிப்பகம்


எனது பர்மா குறிப்புகள் - செ.முஹம்மது யூனூஸ்
என் பெயர் சிவப்பு - ஓரான் பாமுக் - தமிழில் ஜி.குப்புசாமி
குமாயுன் புலிகள் - ஜிம் கார்ப்பெட்
கொற்கை - ஜோ.டி.குரூஸ்
ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் - ஆ.சிவசுப்பிரமணியன்

எதிர் வெளியீடு

தமிழிசை வேர்கள் - நா.மம்மது
மேலும் சில ரத்தக்குறிப்புகள் - எஸ்.மகோதேவன்
தலித் அரசியல் - அ.மா¡க்ஸ்
நக்சலைட் அஜிதாவின் நினைவுக்குறிப்புகள்

தமிழினி பதிப்பகம்

இன்றைய காந்தி - ஜெயமோகன்
எழுதும் கலை - ஜெயமோகன்

image courtesy: http://www.bapasi.com/

suresh kannan

Monday, April 13, 2009

யாவரும் நலம்

இத்திரைப்படத்தின் மிகப்பெரிய பலம் இதன் அபாரமான திரைக்கதை.

சில ஆண்டுகளுக்கு முன்னர் 'மனோபாலாவின்' பிள்ளை நிலா என்றொரு ஷாலினி நடித்த படம் சக்கைப் போடு போட்டது. பின்னர்.. யார், 13-ம் நம்பர் வீடு, மைடியர் லிசா போன்ற அசட்டு திகில் படங்கள் தமிழில் வந்தாலும் உருப்படியான thriller எதுவும் தமிழில் வந்ததாக எனக்குத் தெரியவில்லை. நான் ரசித்துப் பார்த்த திகில் படைப்பு தொலைக்காட்சியில்தான் வந்தது. அது 'நாகா'வின் மர்மதேசம். split personality பற்றி தமிழ்த் திரை பேசுவதற்கு முன்பே அந்த சமாச்சாரத்தை தொட்ட தொலைக்காட்சி தொடர் அது. திகில் படங்களின் ஆதார விதி, அதில் லாஜிக் பார்க்கக்கூடாது என்பதுதான் போல. பார்வையாளனை நகத்தைக் கடித்தபடி இருக்கையின் நுனியில் அமர வைப்பதுதான் இயக்குநரின் முக்கியமான நோக்கமாக இருக்கும்.

Photobucket

அந்த வகையில் 'யாவரும் நலம்' வெற்றி பெற்றிருக்கிறது எனலாம். புது அபார்ட்மெண்டில் குடியேறும் மாதவன் விசித்திரமான நிகழ்வுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதன் தொடர்ச்சியாக அவர் வீட்டில் மாத்திரம் மதியம் 01.00 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடரில் நிகழும் சம்பவங்கள் சற்றேறக்குறைய அவர் வீட்டிலும் அப்படியே நிஜத்தில் நிகழ்கின்றன. அதன் ஆணிவேரைத் தேடி மாதவன் பயணிப்பதுதான் மீதப்படம்.

மஹாவிஷ்ணுவின் எல்லா அவதாரங்களையும் எடுத்து தீமைகளை ஒழிக்கும் சூப்பர்மேன் நாயகர்களுக்கு மத்தியில் சாதாரண மனிதர்களை நாயகர்களாக சித்தரிப்பதில் மோகன் வகையறாகளுக்குப் பிறகு தற்போது மாதவன் மாத்திரமே அம்மாதிரியான பாத்திரங்களை துணிந்து ஏற்கிறார் என்று நினைக்கிறேன். வழக்கமான திரைப்படங்கள் தவிர, அன்பே சிவம், நளதமயந்தி, எவனோ ஒருவன், குரு, ஆய்த எழுத்து, கன்னத்தில் முத்தமிட்டால்... என்று அவர் தேர்ந்தெடுக்கும் படங்களே அலாதியாகத்தான் இருக்கிறது. இடையில் சீமான் போன்றோர்களிடம் மாட்டிக் கொள்ளும் அபாயமும் நேர்கிறது. தானே தனது குடும்பத்தினருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடுமோ என்று பதைபதைக்கும் போது சுவாரசியமாகத்தான் இருக்கிறது.

அவ்வளவு பெரிய அபார்மெண்டில் மாதவன் குடும்பமும் கண்பார்வையற்ற ஒருவரும் நாயும் மாத்திரம்தான் இருக்கிறார்களா, மாதவனின் மொழியில் அவரின் அம்மாவிற்கு 'பாய் பிரண்டாக' இருக்கிற அந்த நபரின் வீட்டில் நிகழ்ந்த துர்மரணம் பற்றி இவர்கள் அறியாமலா இருப்பார்கள்? என்று நமக்குள் எழுகிற கேள்விகளையெல்லாம் நமக்குள்ளேயே புதைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

டிவி சீரியலில் நடிக்கவென்றே பிறந்தவர்களை இந்தப் படத்தில் பார்த்துத் தொலைக்க வேண்டிய சங்கடத்தைத் தவிர படம் மிக விறுவிறுப்பாகவே செல்கிறது. மண்டையோட்டுடன் மந்திரவாதி, இருட்டில் வெள்ளை சேலை போன்ற வழக்கமான அசட்டுத்தனங்ளை தவிர்த்துவிட்டு ஒரு ஹைடெக் திகில் படத்தைத் தருவதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் விக்ரம் குமார். ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமைப் பற்றி குறிப்பாக சொல்ல வேண்டும். பிரேமிற்குள் இருக்கிற அத்தனை பத்தாயிரம் வாட்ஸ் விளக்குகளையும் பயன்படுத்தி 'தெளிவாக' படம் எடுத்துக் கொண்டிருக்கிற தமிழ்த்திரையை இருளும் ஒளியுமான கலவையை நவீனமாக பயன்படுத்தி அதன் முகத்தை மாற்றியமைத்தவர்களில் முக்கியமானவர் பி.சி. அக்னி நட்சத்திர கிளைமேக்ஸ் போன்றவைகளை மாத்திரம் சற்று சகித்துக் கொள்ள வேண்டும். சங்கர் மகாதேவன் குழுவினரின் இசை சில சமயங்களில் இரைச்சலாக இருந்தாலும் பல சமயங்களில் திகிலை ஏற்படுத்துவதில் வெற்றியடைந்திருக்கிறது.

()

தொலைக்காட்சி தொடரில் வரும் சம்பவங்கள் protagonist-ன் நிஜ வாழ்விலும் நடைபெறும் காட்சித் தொடரை பார்த்தவுடன் என் மூளையில் மணியடித்தது. இதே போன்று எங்கோ பார்த்திருக்கிறோமே என்று. ஹாலிவுட்டின் பிரபல இந்திய தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ், sony pix தொலைக்காட்சியுடன் இணைந்து 'Gateway' என்றொரு ரியாலிட்டி நிகழ்ச்சியை தயாரித்தார். இந்தியாவில் உள்ள சினிமாவை தயாரிப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்கான போட்டி நிகழ்ச்சியது. அதில் ஆரம்ப நிலை போட்டியில் பிஜோய் நம்பியார் என்ற போட்டியாளர் soap என்கிற குறும்படத்தை உருவாக்கினார்.

கல்லூரி பேராசிரியர் ஒருவர் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போது அதில் தோன்றும் சம்பவங்கள் உடனேயே தன் வீட்டில் நிகழ்வதை ஆச்சரியத்துடன் கவனிக்கிறார். உடனே ஆர்வமாகி அந்தத் தொடரை தொடர்ந்து கவனிக்கும் போது அதிலேயேயும் இவரைப் போன்றதொரு பேராசிரியர் பாத்திரம் சந்திக்கும் நிகழ்வுகளை பிற்பாடு இவரும் சந்திக்க நேரிடுகிறது. மனஉளைச்சலுக்கு ஆளாகும் பேராசிரியர், டிவி பேராசிரியர் ஒரு விபத்தை சந்தித்து இறப்பதை பார்க்கிறார். நிஜ வாழ்க்கையில் இவரும் அதே போன்றதொரு விபத்தை சந்திக்க நேரிடுகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இவர் தப்பி விடுகிறார். சாலையில் செல்லும் இன்னொரு நபர் அதில் சிக்கி இறந்து விடுகிறார். அவர் யார் என்று யூகியுங்கள் பார்க்கலாம்?.

மிகச் சுவாரசியமாக உருவாக்கப்பட்டிருந்த அந்தக் குறும்படத்தில் கல்லூரி பேராசிரியராக இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் நடித்திருந்தார். இறுதிப் போட்டியிலும் பிஜோய் நம்பியாரே வெற்றி பெற்றார். (rediff செய்தி)

இதே காட்சியமைப்புகளின் அடிப்படையில் இந்தப்படம் உருவாகியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மேற்கண்ட தொலைக்காட்சித் தொடரை 'யாவரும் நலம்' இயக்குநரும் பார்த்து அதே போன்று அதைத் திரையில் நிகழ்த்த விரும்பினாரா என்பது தெரியவில்லை. இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று ஒரு கதாசிரியர் புகார் செய்திருப்பதாகவும் அறிகிறேன். படத்தில் வெளிப்படும் சுவாரசியங்களை விட இவை இன்னும் சுவாரசியமாக இருக்குமோ என்னவோ?

()

எனது முந்தைய பதிவின் சில குறிப்புகள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதை பின்னூட்டங்களின் மூலம் உணர முடிகிறது. என் நோக்கம் நிச்சயம் அதுவல்ல. பதிவை திறந்த மனத்துடன் படிக்கும் எவராலும் அதை உணர முடியும். அதற்கான தடங்கள் அந்தப் பதிவிலேயே உள்ளன. I was not trying to preach. 'அந்தப் படம் பாக்கறது வேஸ்டுப்பா' என்கிற ஒரு நண்பனின் குரல்தான் அது.

நான் பொழுதுபோக்கு சினிமாவின் எதிரி அல்ல. பல சமயங்களில் என்னை இளைப்பாற்றிக் கொள்ள நான் பார்ப்பது பொழுதுபோக்கு படங்களே. கலையின் ஆதாரத் துவக்கமே இளைப்பாறுதல்தான். ஆதிமனிதன் வேட்டையாடி, புணர்ந்து, இயற்கையுடன் போராடி சுற்றித் திரிந்து மீதமுள்ள தாராளமான பொழுதுகளைக் கழிக்க உருவாக்கின புனைவு, ஒவியம், நாடகம், இசை போன்றவற்றின் மிக நவீன வடிவங்கள் இன்று நாம் சந்தித்துக் கொண்டிருப்பது. அவற்றின் இன்னொரு பரிணாம வளர்ச்சியாக அதிலுள்ள குறைகளை களைந்து மிகுந்த நுண்ணுணர்வுடன் அணுகும், வணிகத்துக்காக செய்து கொள்ளும் சமரசங்களை முற்றிலுமாக புறக்கணிக்கும் படைப்புகளே 'கலைத்தன்மை' வாய்ந்தவை.

ஆனால் 'பொழுது போக்குத் திரைப்பட' இயக்குநர்களுக்கு வாஷிங் மெஷினுக்கு உள்ள மூளையாவது இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதில் தவறிருப்பதாக தெரியவில்லை. மேற்சொன்ன திரைப்படத்தை சுவாரசியமான திரைக்கதையுடன் அமைத்திருக்கும் இயக்குநரை நிச்சயம் பாராட்டுகிறேன். அம்மாதிரிப்படங்களை வரவேற்க வேண்டும். மாறாக என்ன நிகழ்கிறது. சுயமாக சிந்திக்கத் திராணியில்லாமல் பழைய திரைப்படங்களின் அடிப்படையை திருடிக் கொண்டு அதில் சதையையும் உதையையும் நாயகனின் பிம்பத்தையும் மிகையாக கலந்து சற்றும் சமூகச் சுரணையில்லாமல் பார்வையாளனை அந்தப் போதையிலேயே ஆழ்த்தி தன் கல்லாப் பெட்டியை நிரப்பிக் கொள்ளும் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் இருந்தாலென்ன, நாசமாயப் போனாலென்ன?. சினிமாவை முதல்வர் நாற்காலிக்கான குறுக்குப் பாதையாக பயன்படுத்த நினைக்கும் கோமாளிகள் வேறு. இந்த அபத்தமான சூழ்நிலையை சகித்துக் கொள்வது மாத்திரமல்லாமல், அதை வரவேற்கவும் ஆள் இருக்கிறது என்பதை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது.

எப்படி சிலர் வியாபாரத்திற்காகவோ அறியாமையினாலோ வணிகப்படங்களை ஆதரிக்கும் நிலையை எடுப்பது போல அதை புறக்கணிக்கும் நிலையில் இருப்பவர்களின் கருத்துக்களையும் வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலையை வெளியை அமைத்துத் தருவதுதான் உண்மையான கருத்துச் சுதந்திரமாக இருக்க முடியும்.

suresh kannan

Monday, April 06, 2009

திரைப்படத்தை பார்ப்பது எப்படி?

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் 'நான் கடவுள்' படத்தின் இயக்குநர் பாலாவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. "இந்தப் படத்தை ரசிகர்களுடன் திரையரங்கில் கண்டு ரசித்தீர்களா? அந்த அனுபவம் எப்படி இருந்தது?". அதற்கு அவர் அளித்த பதில் மிக முக்கியமானதாக எனக்குத் தோன்றுகிறது. "பொதுவாக திரையரங்கில் திரைப்படங்களை நான் காண்பதில்லை. ஏனெனில் மக்கள் மிக அலட்சியமாக திரைப்படத்தை அணுகும் போது அவர்களை அடிக்க நினைக்குமளவிற்கு எனக்கு மிகுந்த கோபம் வந்து விடும்". திரைப்படத்தை ஒரு பொழுதுபோக்காக கருதாமல் கலையின் உன்னத வடிவமாக நினைப்பவர்களின் உணர்வு இப்படியாகத்தான் இருக்க முடியும்.

Photobucket

சரி. ஒரு திரைப்படத்தை முறையாக ரசிப்பது எப்படி? மிக எளிமையாக தோன்றும் இந்தக் கேள்விக்குள் நமது சமூகத்தின் உள்ள விசித்திரமான முரண்கள் ஒளிந்திருக்கின்றன. சினிமாவிலிருந்து தம்முடைய வருங்கால முதல்வரை தேர்ந்தெடுக்கும் அளவிற்கு சக்தி வாய்ந்த ஊடகமாக விளங்கும் திரைப்படத்தையும் அதைச் சார்ந்த மனிதர்களையும் நாம் எவ்வாறு கையாள்கிறோம்? ஒரு புறம் உணர்ச்சி மிகுதியில் அவர்களை 'தலைவனாக' ஏற்றுக் கொள்ளும் மனம் இன்னொரு புறம் பிரச்சினையான சூழலில் அவர்களை 'கூத்தாடி'யாகவும் அணுகுகிறது. நம்மில் பெரும்பான்மையினருக்கு ஒரு திரைப்படத்தை எப்படி பார்ப்பது என்றே தெரியவில்லை என்றுதான் நான் சொல்வேன். பொழுதுபோக்கானதொரு அம்சத்தை இவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டுமா என்று கேட்கிறவர்களிடம் விவாதிக்க என்னிடம் ஒன்றுமில்லை.

ஒரு திரைப்படத்தை எவ்வாறு முறையாக அணுகுவது என்பதை என் அனுபவங்களிலிருந்து குறிப்புகளாக இங்கே தந்திருக்கிறேன். இவை தீர்மானமான முறையான விதிகளோ அல்லது நிபந்தனைகளோ அல்ல. தோழமையுடன் கூடிய தகவல் பரிமாற்றம் மாத்திரமே. இவை நீங்கள் ஏற்கெனவே அறிந்தவைதான் என்றாலும் இதை நினைவுப்படுத்துதலாக எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். வணிகத்திரைப்படங்கள், மாற்றுத் திரைப்படங்கள்... என்று அனைத்துவகை திரைப்படங்களுக்கும் கலந்து கட்டி இந்தக் குறிப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன.

()


நாம் பணம் கொடுத்துதான் திரையரங்கிற்குச் சென்று படம் பார்க்கிறோம் என்றாலும் நம்முடைய சக பார்வையாளர்களும் அவ்வாறுதான் பணத்தைச் செலுத்தி வந்திருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். ஏதோ திரையரங்கத்தையே நாம் விலைக்கு வாங்கி விட்டோம் என்கிற ரேஞ்சில் சந்திரமுகி அறிமுக ரஜினி மாதிரி ஷீக்காலை உயர்த்தி முன் பார்வையாளன் சீட்டில் வைப்பது, நாயகனின் தாய் உணர்ச்சிகரமாக சிரமப்பட்டு அழும் காட்சியில் எக்காளமாக கூக்குரலிடுவது, அறிமுக இயக்குநர் தயாரிப்பாளரிடம் சீன் பை சீனாக கதை சொல்வது போல் படத்தை முன்பே பார்த்துவிட்டு அதை இப்போது லைவ் கமெண்ட்ரியாக தருவது, திரைப்படத்தின் இடையில் குறுக்கே பிசாசு போல் நடமாடிக் கொண்டே இருப்பது போன்ற அட்டூழியங்களை அறவே தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுக்கு எந்தவிதத்திலும் தொந்தரவு தராமல் தமக்கான மகிழ்ச்சியை அமைத்துக் கொள்வதுதான் சிறந்ததாக இருக்கும். (இதில் சில விதிவிலக்குகளும் உள்ளன. 'அந்த வானத்தைப் போல' என்கிற விக்ரமனின் காவியம் ஒன்றை பார்க்கச் சென்ற போது தனது தம்பிகளை மழையிலிருந்து காக்க விடியும் வரை ஒரு அட்டையை தலைமேல் பிடித்திருந்த அண்ணன் விஜயகாந்த்தின் அசட்டுத்தனமான சென்டிமென்டை பொறுக்க முடியாமல் திரையரங்கமே வாய்விட்டுச் சிரித்தது.)

*

வணிக நோக்கில் எடுக்கப்படும் மசாலாப் படங்களுக்காக சிலர் வாதாடுவதைக் கவனித்திருக்கிறேன். நாளெல்லாம் உழைக்கும் மக்கள் தங்களுடைய மகிழ்ச்சிக்காக காணவிரும்பும் திரைப்படமும் பரிசோதனை முயற்சியாகவோ மூளையைச் சிரமப்படுத்தும் திரைப்படமாகவோ இருப்பதை இவர்கள் விரும்புவதில்லை. இது ஒரு முதிரா மனநிலை. நம்மில் எத்தனை பேர் சிறுவயதில் படித்த வாய்ப்பாடு புத்தகத்தை இன்னமும் படித்துக் கொண்டிருக்கிறோம்? பெரும்பாலும் யாருமே இருக்க முடியாது என்றுதான் கருதுகிறேன். ஆனால் திரைப்படங்களைப் பொறுத்த மட்டில் ஏன் இன்னமும் சிறுவயதில் கண்டு மகிழ்ந்த அதே வகைமாதிரி படங்களை திரும்பத் திரும்பப் பார்த்து அம்மாதிரியான பட இயக்குநர்களை ஊக்குவிக்கிறோம்?

*

சிலர் திரையரங்கை உணவகம் போன்ற சூழலாக அமைக்கும் பெருமுயற்சியோடு மசால் தோசை, சோலாபூரி போன்ற அயிட்டங்களைத் தவிர இன்னபிறவற்றை உள்ளே கொண்டு வந்து கடுக்மொடுக்கென்ற சத்தத்தோடும், பிளாஸ்டிக் பேப்பர்களின் சலசலப்போடும் கலோரிகளை நிரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். சினிமா முடிந்த பிறகும் இவர்கள் அடித்து பிடித்து விரைந்தோடும் இடம் 'சரவண பவனாகவோ' 'அஞ்சப்பர் செட்டி நாடாகவோ'த்தான் இருக்கும். புத்தகக் கண்காட்சியில் கூட கூட்டம் நிறைய இருக்கும் இடம் தின்பண்டங்கள் விற்கும் இடமாகவும் உணவகமாகவும் இருக்கும் தமிழர் கலாசாரத்தின் மர்மம் விளங்கவில்லை. இது கூட பரவாயில்லை. முதலிரவு அறையில் கூட ஜாங்கிரியும் மைசூர்பாக்கும் அடுக்கிவைக்கும் இந்த 'தின்னிப்பண்டாரங்களின்' சமூக நியதிகளை என்னவென்று அழைப்பது? செவிக்கு உணவு இல்லாத போதுதான் சிறிது வயிற்றுக்கு ஈயச் சொல்லியிருக்கிறார் தாடிவாலா.

*

அனல்பறக்க பஞ்ச் டயலாக் பேசும் 'புல்தடுக்கி பயில்வான்களின்' வணிகத்திரைப்படங்களை முற்றிலும் புறக்கணிப்பது சிறந்தது என்றாலும் அவ்வாறு தவிர்க்க இயலாதவர்கள் அவற்றை முதல் நாளே காணச் செல்வதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அந்தச் சமூகக் காவலர்களை தெயவங்களாகப் போற்றும் அப்பாவி விசிலடிச்சான் குஞ்சுகளின் தொந்தரவில் எந்த வசனத்தையும் கேட்க முடியாது. நாயகன் கக்கூசுக்குச் செல்வதைக் கூட ஸ்லோ மோஷனில் காட்டும் இயக்குநர்கள் அவன் கழுவுவதற்காகச் கையை உயர்த்துவதைக் கூட 'விஷ்க்' என்று வைக்கும் சத்ததிற்குக் கூட உணர்ச்சி மிகையுடன் கைதட்டி பேப்பர் துண்டுகளை பறக்கவிடும் தொண்டர்களின் அட்டகாசத்தை தாங்கவே இயலாது. இந்த மாதிரிப் படங்களை மாத்திரம் திருட்டி டிவிடியில் வீட்டில் அமர்ந்தவாறே பார்ப்பது உங்கள் பர்ஸிற்கும் நல்ல திரைப்படங்களின் வளர்ச்சிக்கும் நல்லது.

*

ஒரு திரைப்படத்தை முதல் நாள், முதல் காட்சியிலேயே பார்த்துவிடுவதில் நம்மில் பலருக்கு அசட்டுத்தனமான பெருமையுண்டு. இது நண்பர்களிடம் உரையாடும் போது "இந்தப் படத்தை நான் பார்த்துவிட்டேன்" என்று ஜம்பமாக பெருமையடித்துக் கொள்வதற்குத்தான் உதவுமே ஒழிய, வேறெதற்கும் உதவாது. அது எந்த திரைப்படமாக இருந்தாலும் சரி, ஊடகங்களின் விமர்சனங்களுக்காகவும், நண்பர்களின் வாய்மொழியான சிபாரிசுக்காகவும் காத்திருங்கள்.

*


மிகவும் வயதானவர்கள், நிறைமாத கர்ப்பிணிப் பெண்கள் போன்றோர்கள்....திரையரங்கத்திற்கு வருவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. சினிமா சம்பவத்தின் சஸ்பென்ஸை விட இவர்களுக்கு ஏதாவது நிகழ்ந்து விடுமோ என்று சக பார்வையாளர்களுக்கு ஏற்படும் சஸ்பென்ஸை தடுக்கலாம். மேலும் பிறக்கப் போகும் குழந்தைக்கு அது பிறக்கப் போவதற்கு முன்பாகவாவது நல்ல சூழலை அமைத்துக் கொடுத்தல் உங்கள் கடமை. மேலும் கைக்குழந்தைகள் வைத்திருப்பவர்களும் சினிமாவை அறவே தவிர்ப்பது நல்லது. சூழ்நிலையின் அபத்தத்தை தாங்காமல் குழந்தை வீறிட்டு அலற அதை சமாதானப்படுத்த முடியாமலும் மற்றவர்களின் எரிச்சலான பார்வைகளை சந்திக்க முடியாமலும் நேர்கிற சங்கடத்தை தவிர்த்து விடலாம். குழந்தை பிறந்து மூன்று வருடங்கள் வரை தாய்ப்பால் மாத்திரமே போதும். அதில் சினிமாவை கலக்க வேண்டாம்.

*

விருதுப் படங்களை அதிலுள்ள பாலுறவுக் காட்சிகளுக்காக மாத்திரம் பார்க்க வருவது முதிர்ச்சியற்ற முட்டாள்தனம். பாலுறவும் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதிதான், அது ஊடகத்தில் வெளிப்படுவதில் எவ்வித தவறுமில்லை என்கிற புரிதல் இல்லாதவரை இவை நமக்கு 'அம்மணக்குண்டி' படங்களாகத்தான் தெரியும். அதை விட தமிழ்ச்சினிமாவின் ஒரு காதல் பாடலை பார்த்தால் அதிக நிறைவு ஏற்படக்கூடும். சுஜாதா சொல்வது போல் ஒரு ஆணும் பெண்ணும் முத்தமிட்டுக் கொள்வதை இரண்டு பூக்களை வைத்து மறைப்பதுதான் அதிக ஆபாசமாய் தெரிகிறது. திரைப்படச் சங்க திரையிடலின் போது திரையில் தோன்றிய தொடர்ச்சியான நிர்வாணக் காட்சிகளைக் கண்டவுடன் இரண்டு பெண்கள் விருட்டென்று எழுந்து போனதைக் கண்டிருக்கிறேன். தங்களின் பதிவிரதைத் தன்மையை பறைசாற்ற இதை விடவும் சிறந்த சந்தர்ப்பங்கள் இவர்களுக்கு உள்ளன. இவர்கள் ஏன் இந்த மாதிரிப் படங்களுக்கு முட்டாள்தனமாய் வருகிறார்கள் என்பது தெரியவில்லை. சுஜாதாவின் 'பிலிமோத்ஸவ்' சிறுகதைதான் நினைவுக்கு வருகிறது.

*

ஒரு மாற்றுத் திரைப்படத்தை காண்பதற்கு முன் அந்தப் படத்தைப் பற்றிய கூடுமானவரையான தகவல்களையும் கதைச்சுருக்கத்தையும் இயக்குநரைப் பற்றியும் அறிந்து கொள்வது நல்லது. படத்தின் முடிவை முன்பே அறிந்து கொள்வது திரைப்படத்தை சுவாரசியமாக பார்ப்பதற்கு தடையாக அமையும் என்பது எல்லாம் வணிக நோக்கில் எடுக்கப்பட்ட திரைப்படங்களுக்கும் சஸ்பென்ஸ் திரைப்படங்களுக்கும் வேண்டுமானால் ஒருவேளை பொருந்தலாம். ஒரு முதிர்ச்சியுள்ள திரைப்படப் பார்வையாளன் கதையின் போக்கை முழுவதும் அறிந்து கொண்டு அதை எவ்வாறு இயக்குநர் தன்னுடைய நுண்ணுணர்வுகளால் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதில்தான் கவனம் செலுத்துவான். மேலும் அயல்நாட்டுத் திரைப்படம் என்றால் அந்த நாட்டின் கலாசாரத்தையும் கொஞ்சம் அறிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது. இல்லையென்றால் இரண்டு ஆண்கள் முத்தமிட்டுக் கொள்கிற அவர்களின் இயல்பான கலாசாரம் நம்முடைய ஆச்சாரமான கண்களுக்கு அவர்கள் 'ஹோமோக்களாக' தெரியும் விபரீதம் ஏற்படலாம்.

*

மாற்றுத் திரைப்படங்களை ஒத்த அலைவரிசை கொண்டவர்கள்வுடனோ அல்லது தனியாக பார்ப்பதோ உத்தமம். இல்லாவிடில் அவர்கள் உங்களை குறுக்கீடு செய்து கொண்டே உங்களின் அனுபவத்தையும் பாழ்படுத்துவார்கள். ஒரு திரைப்படத்தை மிக மெளனமாக கூர்மையாக உள்வாங்கிக் கொள்வதே சிறந்த முறை. இடையிடையே உரையாடுவது, எழுந்து செல்வது போன்றவற்றைச் செய்து சம்பந்தப்பட்ட திரைப்பட இயக்குநரை அவமானப்படுத்தக்கூடாது. உங்களுக்கு குறிப்பிட்ட படம் பிடிக்கவில்லையெனில் அங்கிருந்து கிளம்பி விடுவது நல்லது. மாறாக மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யும் காரியங்களில் ஈடுபடக்கூடாது.

*

ஒரு திரைப்படத்தின் அனுமதிச்சீட்டைப் பெறவும் திரையரங்கத்தினுள் நுழையவும் மணிக்கணக்கில் காத்திருக்கும் நாம் திரைப்படம் முடிவதற்குக் கூட காத்திராமல் ஏன் அப்படி வெடிகுண்டிற்கு பயந்து ஓடுகிறாற் போல் அவசரமாக வெளியே விரைகிறோம் என்பது எனக்குப் புரியவில்லை. உங்களுக்காக மாய்ந்து மாய்ந்து அந்த திரைப்படத்தை இயக்கியிருக்கும் நபருக்காக எழுந்து நின்று கைத்தட்டலை எழுப்புவதின் மூலம் சிறிய மரியாதையை செலுத்தி விட்டு பின்னர் அமைதியாக வெளியேறுவது சிறந்ததாக இருக்கும். மேலும் திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் வெளியிடப்படும் தொழில்நுட்ப நபர்களையும் பொறுமையாக அமர்ந்து பார்ப்பது, ஒரு திரைப்படத்தை உருவாக்குவதன் பின்னணியில் எத்தனை திறமையான தனிநபர்கள் செயல்படுகிறார்கள் என்பதோடு அவர்களைப் பற்றியும் நாம் அறிவதற்கு ஏதுவாக இருக்கும்.

*

ஏதாவது ஒரு திரைப்படத்தை பார்க்கச் செல்வதை விட மிகுந்த திட்டமிட்டு ஒரு நல்ல திரைப்படத்தை தேர்வு செய்து அதற்கான முன்திட்டங்களுடன் செல்வது நல்லது. திரைப்படம் காண்பதென்று புறப்பட்டுவிட்டால் ஏதாவது ஒரு திரைப்படத்தையாவது கண்டு திரும்புவதுதான் தமிழர்களின் வீரம் சார்ந்த மரபு. அது ஏற்கத்தக்கதல்ல. நீங்கள் காணச் சென்ற திரைப்படத்திற்கு அனுமதிச் சீட்டு கிடைக்காத சூழலில் தோல்வியை ஒப்புக் கொள்ளாத மனத்தோடு வேறு ஒரு குப்பையான திரைப்படத்திற்குச் சென்று பணத்தையும் மனதையும் பாழ்படுத்திக் கொள்வதை விட கடற்கரைக்கோ அல்லது வேறு பயனுள்ள நிகழ்ச்சிக்குச் செல்வதோ நல்லதாக தோன்றுகிறது.

*

சிலருக்கு தங்களின் புரிதலின் எல்லையைத் தாண்டிய சமாச்சாரங்களை கேலியாகவோ குழப்பமாகவோ எதிர்கொள்ளுவதான் வழக்கமாக இருக்கிறது. மிஸிஷோ பிக்காசோ என்ற இயக்குநரின் .... என்றுதான் கிண்டலாக எழுதுவார்கள். தவறில்லை. நானும் அப்படித்தான் இருந்தேன். தங்களின் உயரங்களைத் தாண்டின திரைப்படங்களையோ புத்தகங்களையோ எழுத்தாளர்களையோ பற்றியோ எவராவது பேசும் போது அதை தாம் சந்தித்தில்லையே என்கிற தாழ்வுணர்வு ஏற்படுத்தும் குற்றவுணர்ச்சியில் அவற்றை கிண்டலடித்துப் பேசுவது எனக்கும் வழக்கமாகத்தான் இருந்தது. பிறகுதான் மெல்ல அதை அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட போது எத்தனை சிறந்த விஷயங்களை இதுநாள் வரை தவற விட்டிருக்கிறோம் என்கிற உணர்வு ஏற்பட்டது. எனவே யாராவது உங்களுக்கு சிறந்த திரைப்படத்தையோ இயக்குநரையோ அறிமுகப்படுத்தும் போது 'நமக்கெங்கே அவையெல்லாம் புரியப்போகிறது' என்கிற அலட்சிய மனப்பான்மையோடு அல்லாமல் சிறுமுயற்சியாவது செய்யுங்கள்.

*

உங்கள் குழந்தைகளுக்கு உலக சினிமா குறித்தான பரிச்சயத்தை ஏற்படுத்துங்கள். அவர்களுக்குப் புரியுமா என்ற கேள்வி அநாவசியம். உங்களை வைத்து உங்கள் குழந்தைகளை எடை போடக்கூடாது. சில மாதங்களுக்கு முன் என் மகளை அமர வைத்து சத்யஜித்ரேயின் 'பதேர் பாஞ்சாலி'யை திரையிட்டுக் காண்பித்தேன். துர்கா, அப்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை அவள் விரும்பிப் பார்த்தாள். துர்காவின் மரணத்தின் போது அவள் முகம் வெளிறிப் போயிருந்தது. இந்தியக் கிராமங்களின் இன்றைக்கும் மாறாத வறுமையை அவள் திரையில் எதிர்கொண்டது அதுதான் முதலாதவதாக இருக்கும். இதன் மூலம் வணிகச் சினிமாக்களின் மேல் உள்ள ஈர்ப்பு மாறக்கூடும்.

*

உலக சினிமா பற்றி ஆர்வமுள்ள ஆனால் காண வசதியில்லாதவர்களுக்கு அதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுங்கள். என்னுடைய பதின்ம வயதில் சுஜாதாவின் கட்டுரையொன்றின் மூலம் சத்யஜித்ரேவைப் பற்றி அறிந்து அவரின் திரைப்படமொன்று (அகாந்துக்) தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்ப இருப்பதை அறிந்து உறவினர் ஒருவரின் வீட்டிற்கு காணச் சென்றிருந்தேன். என்னுடைய வற்புறுத்தலால் தொலைக்காட்சியை இயக்கியவர் சற்று நேரமே பார்த்துவிட்டு "என்னப்பா.. ஆஷான்.. பூஷான்..ன்னு" பேசிண்டே இருக்காங்க:" என்று என்னைக் கேட்காமலேயே தொலைக்காட்சியை அணைத்துவிட்டுச் சென்று விட்டார். அந்தத் திரைப்படத்தின் குறுந்தகட்டை தேடிப் பார்ப்பதற்குள் பத்து வருடங்கள் கடந்து விட்டது. நீங்கள் அறிந்த சினிமாக்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அதைப் பற்றி ஆரோக்கியமாக உரையாடுங்கள். சினிமா உருவாவதான தொழில் நுட்பத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். சினிமாவில் உள்ளவர்களே இதில் சம்பந்தப்படாதவர்கள் அதைப் பற்றி அறிந்து கொள்ளத் தேவையில்லை என நினைக்கிறார்கள். கேமராவின் கோணங்கள், பின்னணி இசை, லைட்டிங் பற்றியும் அதை இயக்குநர்கள் எப்படி கலாபூர்வ பிரக்ஞையுடன் கையாண்டு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றியும் அறியும் போது இன்னமும் அந்தத் திரைப்படத்துடன் ஆழமாக நீங்கள் ஒன்ற முடியும்.

()

இப்போதைக்கு இவற்றோடு முடித்துக் கொள்கிறேன். நிச்சயம் இவை யாருக்கான அறிவுரைகளோ இடித்துரைக்கும் முயற்சியோ அல்ல. தோழமையான நினைவூட்டல் மாத்திரமே. சிறந்த திரைப்பட காண்பனுவங்களைப் பெற என்னுடைய வாழ்த்துகள்.

suresh kannan

Saturday, March 07, 2009

வழக்குரைஞர்கள்: போக்கிரிகள்... ஒழுக்கங் கெட்டவர்கள்

சமீபத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் நடந்த மோதலை விசாரிக்க முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி B.N.ஸ்ரீகிருஷ்ணா அவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட ஒருநபர் விசாரணைக் கமிஷனின் அறிக்கையை முழுவதுமாக படிக்க முடிந்தது. வழக்குரைஞர்களை லும்பன்களாக இந்த அறிக்கை சித்தரிக்கிறது.

..."Lawyers behaving like hooligans and miscreants. Lawyers think they are immune from the law, the report adds. Soft-pedalling policy by the lawyers led to the situation"...


என்று வழக்குரைஞர்களை கடுமையாக சாடியுள்ளது அந்த அறிக்கை. hooligans and miscreants என்கிற வார்த்தைக்கு போக்கிரி, ஒழுக்கங்கெட்டவர்கள், கயவர்கள் என்று அர்த்தம் கூறுகிறது சென்னைப் பல்கலைக்கழக அகராதி.

வழக்குரைஞர்கள் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தியிருப்பதை ஆரம்பத்திலேயே உயர்நீதிமன்ற நீதிபதிகள் தடுத்திருக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நிர்வாகம் இது குறித்து எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எடுக்காமல் மெளனம் காத்திருப்பதையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் பிரபாகாரனின் பிறந்த நாளை கொண்டாடியும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் வழக்குரைஞர்கள் போராட்டம் நடத்திய ஆரம்பக் காரணங்கள் முதல் சுப்ரமண்ய சுவாமி மீது நடந்த முட்டை தாக்குதல் வரை அறிக்கையில் ஆராயப்பட்டிருக்கிறது.

Photobucket

தொடர்ந்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வரும் வழக்குரைஞர்கள் இந்த அறிக்கையை ஏற்க மறுத்திருப்பதுடன் இது குறித்து கொதிப்படைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்களின் இந்த போராட்டத்தினால் நீதிமன்றப் பணிகள் முடக்கி வைக்கப்பட்டிருப்பதுடன் பொதுமக்களின் பல்வேறு வழக்குகள் தேங்கிப் போகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. நீதிபதிகளின் பற்றாக்குறை காரணமாக ஏற்கெனவே லட்சக்கணக்கான வழக்குகள் நீதிக்காக காத்திருக்கும் போது அதன் மீது இன்னும் சுமையைக் கூட்டுவது போல் நடக்கும் இந்தப் போராட்டத்திற்கு பொதுமக்களின் ஆதரவு கிடைக்காது என்பதை வழக்குரைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் இம்மாதிரியான போராட்டங்கள் வருங்காலத்தில் நடைபெறாதவாறு வழக்குரைஞர்களுக்கு உச்சநீதிமன்றம் கடுமையான விதிகளை ஏற்படுத்த வேண்டும். இப்போதைய போராட்டத்தைக் கூட உச்சநீதிமன்றமே தீவிரமாக தலையிட்டு வழக்குரைஞர்கள் பணிக்கு திரும்ப நிர்ப்பந்திக்க வேண்டும். அவ்வாறு குறிப்பிட்ட காலத்திற்குள் பணிக்குத் திரும்பாதவர்கள் மீண்டும் தங்கள் வழக்குரைஞர் பணியை சில வருடங்களுக்கு மேற்கொள்ள இயலாதவாறு தடை ஏற்படுத்த வேண்டும்.

()

சென்னை உயர்நீதிமன்றத்தின் அருகே அலுவலகம் அமைந்திருப்பதனால் சட்டக் கல்லூரி மாணவர்களாலும் வழக்குரைஞர்களின் தீடீர் போராட்டங்களினாலும் அடிக்கடி பாதிக்கப்படும் பொதுமக்களில் நானும் ஒருவன். அம்பேத்கர் சட்டக் கல்லூரியும் குறளகமும் அமைந்திருக்கும் நாற்சந்தி மிகுந்த போக்குவரத்து நெரிசல் மிக்கது. இங்கு சாலையைக் கடக்க விரும்பும் பாதசாரிகளுக்கு மிகுந்த மனோதிடம் தேவை. வேகமானதொரு வீடியோ கேம் விளையாட்டை கையாளும் லாகவத்துடனும் கவனத்துடன்தான் இங்கு சாலையை கடக்க முடியும். சிறிது தாமதித்தாலும் எதிர்புறமிருந்து வரும் வாகனமோ இடதுபுறமிருந்து வரும் வாகனமோ நம்மீது மோதும் அபாயமுண்டு. இந்த மாதிரியான நெரிசலான சாலையில்தான் சட்டக்கல்லூரி மாணவர்களோ, உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களோ சாலையில் அமர்ந்து தீடீர் போராட்டம் நடத்துவார்கள். சுற்றியுள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்படும். நடைபாதை வியாபாரிகளும் பொதுமக்களும் நடக்கவிருக்கும் வன்முறை குறித்த அச்சத்துடன் ஓடுவார்கள். அவசர வேலையாக செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி குறைந்தது ஒருமணி நேரத்தையாவது இழக்க வேண்டியிருக்கும். சென்னையின் அனைத்து மாநகர பேருந்துகளின் சந்திப்பு என்பதாலும் தென்சென்னையையும் வடசென்னையையும் இணைக்கும் பாதை என்பதாலும் பல பேர் இதனால் பாதிக்கப்படுவர். ஆனால் சட்டம் படிப்பவர்களுக்கும் அதை நடைமுறைப்படுத்துவர்களுக்கும் இதுகுறித்து கிஞ்சித்தும் அக்கறை கிடையாது. தங்களது வலிமையை நிலைநாட்டின திருப்தி ஏற்படும் வரையில் கலைந்து செல்ல மாட்டார்கள்.

அறிக்கையில் கூறப்பட்டிருப்பது போலவே வழக்குரைஞர்கள் சட்டத்தின் விதிகள் தமக்கானது அல்ல எனவும் அது தம்மை கட்டுப்படுத்தாது என்பதாகவும்தான் அன்றாட வாழ்வில் நடந்து கொள்கின்றனர். யாராவது ஒரு வழக்குரைஞர் குற்றவழக்கில் கைது செய்யப்பட்டாலோ அல்லது விசாரணைக்காக அழைத்து செல்லப் பட்டாலோ மற்ற வழக்குரைஞர்கள் கூட்டமாக வந்து வன்முறையின் மூலமோ காவல்துறையினரை மிரட்டுவதின் மூலமோ அவரை விடுவித்து அழைத்துச் சென்று விடுகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன் டைம்ஸ் ஆ·ப் இந்தியாவில் வந்த ஒரு செய்தி: குடிபோதையில் இருந்த வழக்குரைஞர் ஒருவர், காற்றுக்காக மாடியில் தூங்கிக் கொண்டிருந்த அண்டை வீட்டுக்காரப் பெண்களின் நடுவே படுத்து சில்மிஷம் செய்துள்ளார். அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறை அந்த நபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றது. ஆனால் அவர் தனது கைபேசியில் சக வழக்குரைஞர்களுக்கு உடனே தகவல் அளித்து விட்டார். அவ்வளவுதான். அந்த இரவிலும் காவல்நிலையத்திற்கு விரைந்து வந்த வழக்குரைஞர் பட்டாளம் சில்மிஷம் செய்த நபரை மீட்டுச் சென்று விட்டது. ஆனால் சாலையில் தூங்கிக் கொண்டிருக்கும் அப்பாவிகள் காவல்துறையினரால் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் போது அவர்களுக்கு குரல் கொடுக்க எவரும் முன்வருவதில்லை.

வழக்குரைஞர்களின் அராஜகத்திற்கு இன்னொரு தனிப்பட்ட அனுபவத்தையும் கூற விரும்புகிறேன். எங்களின் அடுக்ககத்தில் ஏற்பட்ட சில்லறைத் தகராறு ஒன்றில் ஈடுபட்ட வழக்குரைஞர் ஒருவர், சக குடிவாசியை குடிபோதையில் ஆபாசமாக திட்டித் தீர்த்ததோடு "உன் டைவர்ஸ் கேஸ்ல உனக்கு முன்ஜாமீன் எடுத்துக் கொடுத்தவனே நான்தாண்டா" என்று.. இன்னும் பல தகவல்களை பொதுவில் கொட்டித் தீர்த்தார். தன்னை நம்பி வாடிக்கையாளர்கள் தரும் தகவல்களின் ரகசியங்களை காக்க வேண்டும் என்பது வழக்குரைஞர்கள், மருத்துவர்கள் போன்றவர்களின் தொழில் தர்மம். ஆனால் தனிப்பட்ட விரோதத்தில் இவர்கள் அந்த தர்மத்தை மீறுவது போன்ற நம்பிக்கைத் துரோகம் வேறெதுவும் இருக்க முடியாது.

()

கிருஷ்ணாவின் அறிக்கை வழக்கறிஞர்களை மாத்திரம் சாடாமல் அதீதமாக எதிர்வினையாற்றிய காவல் துறையினரையும் குறைகூறுகிறது. வழக்குரைஞர்கள் ஏற்படுத்திய முதல் தாக்குதல்களினால் நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே SAG (Swift Action Group) வழக்குரைஞர்களின் மீது எதிர்தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் அது நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக அல்லாமல் பழிவாங்கும் நடவடிக்கையைப் போல் அமைந்தது கண்டிக்கத்தக்கது. காவல் துறையினர் பெண் வழக்குரைஞர்கள் மாத்திரமல்லாமல் நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் என எதிரில் வரும் அனைவரையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். அவ்வாறான தாக்குதலில் காவலர்கள் முறைப்படி நடந்து கொள்ளவில்லை என்பதையும் கிருஷ்ணாவின் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

....Despite instructions that during a lathi charge the lathi blow should be aimed at parts of the body other than thehead, the police freely rained lathi blows on the heads of the lawyers, causing head injuries to a number of lawyers.
மேலும் அங்கிருந்த வாகனங்களையும் நீதிமன்ற அலுவலகங்களின் உள்ளேயிருந்த பொருட்களையும் காவல்துறையினரின் குழு சேதப்படுத்தியுள்ளதை தொலைக்காட்சி ஒளிபரப்பிய சலனக் காட்சிகளில் காண முடிந்தது. 'வழக்குரைஞர்களின் வசவுச் சொற்களினாலும் கற்கள் கொண்டு தாக்கியதனாலும் ஏற்பட்ட கோபத்தை காவல்துறையினர் தாங்கிக் கொள்ள இயலாத பொறுமையின்மையால்தான் இவ்வாறான கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்கள் மீது தவறில்லை' என்கிற மாதிரியான வாதம் சிலரால் வைக்கப்படுகிறது. இது முட்டாள்தனமான வாதம். இம்மாதிரியான கலவரங்களை அடக்குவதற்குத்தான் அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது. அதைவிட்டு அவர்களும் தெருப்பொறுக்கிகள் போல் பதில் தாக்குதலில் ஈடுபட்டதை நியாயப்படுத்துவது முறையாகாது.

வழக்குரைஞர்களைப் போலவே காவல்துறையினரும் கட்டுக்கடங்காதவாறு நடந்து கொண்டிருப்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

....The policemen behaved in the same fashion as the unruly mob of lawyers.


நீதித்துறையும் காவல்துறையும் சமநிலையான சமூகத்தின் முக்கியமான இரு தூண்கள். இந்த தூண்கள் காலங்காலமாகவே ஒன்றையொன்று முட்டிக் கொண்டு நிற்கின்றன. இதனால் அஸ்திவாரமே ஆட்டங்காணும் அபாயமிருக்கிறது. இந்தச் சம்பவத்தின் மூலமாவது இதற்கொரு நிரந்தர முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

suresh kannan

Wednesday, February 18, 2009

சுந்தர ராமசாமி, கண்ணதாசன் நூல்கள் நாட்டுடைமை

பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, மு.ராகவையங்கார், பம்மல் சம்பந்தனார், டாக்டர் மு.வரதராசனார், கவியரசு கண்ணதாசன் உள்ளிட்ட 28 தமிழ்ச் சான்றோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப் பட்டு, அவர்கள் மரபுரிமையர்களுக்கு பரிவுத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழக நிதியமைச்சர் அன்பழகன் வெளியிட்ட பட்ஜெட் அறிவிப்பு: இதுவரை 95 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப் பட்டுள்ளன.


இதன் தொடர்ச்சியாக இந்தாண்டு குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா, கவியரசு கண்ணதாசன், பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார், மு.ராகவையங்கார், பம்மல் சம்பந்தனார், அ.சிதம்பரநாதன் செட்டியார், மு.சு.பூரணலிங்கம் பிள்ளை, தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், பாலூர் கண்ணப்ப முதலியார், இராய.சொக்கலிங்கனார், டாக்டர் மு.வரதராசனார், முனைவர் ச.அகத்தியலிங்கம், பாவலர் நாரா.நாச்சியப்பன், புலியூர் கேசிகன், எழுத்தாளர் சாண்டில்யன், கோதை நாயகி, சின்ன அண்ணாமலை, பூவை எஸ்.ஆறுமுகம், என்.வி.கலைமணி, கவிஞர் முருகு சுந்தரம், புலைவர் த.கோவேந்தன், எழுத் தாளர் சுந்தர ராமசாமி, திருக்குறள் மணி நவநீத கிருஷ்ணன், லட்சுமி, வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜமதக்னி மற்றும் ஜே.ஆர்.ரங்கராஜு ஆகிய 28 தமிழ் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும். மேலும், அவர்கள் உருவாக்கிய நூல்களின் எண்ணிக்கை, அவை சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம், அவற்றின் பெருமை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்தம் மரபுரிமையர்களுக்கு பரிவுத் தொகை வழங்கப்படும்.

()

சுந்தர ராமசாமி நூல்கள் நாட்டுடைமை குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு

"எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் படைப்புகளை நாட்டுடைமையாக்க அவரது குடும்பத்தினரின் அனுமதி பெறாமல் அறிவிப்பு வெளியிடுவது சட்டவிரோதமானது' என, காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.காலச்சுவடு பதிப்பக பதிப்பாளர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் படைப்புகளை நாட்டுடைமையாக்குவதாக தமிழக அரசு இன்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. சுந்தர ராமசாமியின் படைப்புகளின் காப்புரிமையை அரசு பெறுவது பற்றி அவரது குடும்பத்தினரிடம் அனுமதி பெறாமல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அனுமதி பெறாமல் அரசு அறிவிப்பது சட்ட விரோதமானது.சுந்தர ராமசாமியின் படைப்புகளை வெளியிடும் உரிமை தற்போது காலச்சுவடு பதிப்பகத்திற்கு மட்டுமே உள்ளது.


சட்டவிரோதமான அரசு அறிவிப்பின் அடிப்படையில் அவர் படைப்புகளை வெளியிட்டு காப்புரிமை சட்டத்தை மீற வேண்டாமென தமிழ் பதிப்பாளர்களை காலச்சுவடு பதிப்பகம் கேட்டுக்கொள்கிறது.அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழுக்கு பங்களித்து வந்த சுந்தர ராமசாமியை எந்த கட்டத்திலும் அங்கீகரிக்காத தமிழக அரசு இப்போது அவர் மறைந்து மூன்று ஆண்டுகளிலேயே அவசரமாக நாட்டுடைமையாக்கத்தை அனுமதி பெறாமல் அறிவித்திருப்பது அரசின் உள்நோக்கம் பற்றிய சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளது.


"காலச்சுவடு' இதழுக்கு நூலகத்தில் தடை விதித்திருக்கும் தமிழக அரசு சுந்தர ராமசாமியின் காப்புரிமையை அபகரித்து "காலச்சுவடு' பதிப்பகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நோக்கத்துடனேயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக சந்தேகம் எழுகிறது.இவ்வாறு கண்ணன் கூறியுள்ளார்.


கண்ணதாசன் பதிப்பக நிர்வாகி காந்தி கண்ணதாசன் அறிக்கை:தமிழக அரசின் பட்ஜெட் அறிக்கையில் 28 தமிழ் அறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்குவது தொடர்பான பட்டியலில் கவிஞர் கண்ணதாசன் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. கண்ணதாசன் நூல்களை எக்காலத்திற்கும் நாட்டுடைமையாக்குவதற்கு அவரது குடும்பத்தினர் ஒப்புக்கொண்டது இல்லை; ஒப்புக்கொள்ளப் போவதும் இல்லை.


இந்த பட்டியலில் கண்ணதாசன் பெயர் சேர்ப்பது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை எங்கள் குடும்பத்தினரை கலந்து ஆலோசிக்காமல், குறைந்தபட்சம் அவரது குடும்பத்தினருக்கு கூட தெரிவிக்காமல் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.கண்ணதாசன் நூல்களை கண்ணதாசன் பதிப்பகமும், வானதி பதிப்பகமும் மிகக் குறைந்த விலையில் வெளியிட்டு மிகப் பரவலாக மக்களிடையே எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது.


கண்ணதாசனின் குடும்பத்தினர் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டிய நிலையிலும் இல்லை. தமிழ் வளர்ச்சித் துறையின் இந்த தன்னிச்சையான போக்கு தமிழக அரசிற்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.கண்ணதாசன் புத்தகங்களை எங்களது சொத்தாக வைத்துப் பாதுகாத்து வருகிறோம். இதை தேசியமயமாக்கும் எண்ணம் துளியும் இல்லை. கண்ணதாசன் குடும்பத்தினருக்கு அவரது எழுத்துகளை பாதுகாப்பது எப்படி என்பது தெரியும்; காப்பற்றவும் எங்களால் முடியும். இது தொடர்பாக முதல்வரிடம் மனு அளிக்கவுள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி்: தினமலர்

()

குறிப்பிட்ட தமிழறிஞர்களின் வாரிசுகளிடம் சட்டரீதியான அனுமதி பெறாமலேயே அவர்களின் நூற்களை நாட்டுடைமையாக்கும் முடிவை அரசு எப்படி எடுத்தது, அதுவும் அதை சட்டசபையிலேயே பட்ஜெட்டில் அறிவித்தது எப்படி என்பது ஆச்சரியமாக இருக்கிறது. மற்ற நூற்களின் நிலையும் இவ்வாறுதான் இருக்கும் போலிருக்கிறது. இது நிச்சயம் முறையற்ற செயல்.

ஆனால் மற்ற அறிஞர்களைப் போலல்லாமல் சு.ரா.விற்கும் கண்ணதாசனிற்கும் இன்னமும் வணிக மதிப்பு இருப்பதனாலேயே அவர்களின் வாரிசுகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. தங்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்பது அவர்களின் குற்றச்சாட்டுகளில் ஒன்றாக இருப்பினும் அவ்வாறு கலந்து ஆலோசிக்கப்பட்டிருந்தாலும் அவர்களிடமிருந்து மறுப்புதான் கிடைத்திருக்கும் என்பதை அவர்களே தெளிவுப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால் பொதுமக்கள் எல்லோருக்கும் சென்று சேரவேண்டிய படைப்புகளை அனைவரும் எளிதில் எடுத்து பயன்படுத்த ஏதுவாக அரசு நாட்டுடமையாக்க முன் வந்திருப்பதை அவற்றின் வணிக லாபம் கருதி அவர்களின் வாரிசுகள் தங்களுக்குள்ளேயே முடக்கி வைக்க நினைப்பது, தார்மீக ரீதியான நோக்கில் சரியானதா என்பது விவாதத்திற்கு உரியது.

இதனிடையே பெரியாரின் படைப்புகளை நாட்டுடமையாக்க வேண்டும் என்ற மக்களின் நீண்ட கால கோரிக்கையை அரசு ஏன் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதையும் அதனின் அரசியல் காரணங்களை தாண்டி விளக்க வேண்டியதும் அரசின் கடமை. பெரியார் திடலில் இருந்து பெரியாரையே விடுதலை செய்யக் கோரும் நிலை இருப்பது திராவிடக் கலாச்சார அரசியலுக்கு மாபெரும் இழுக்கு.

NEWS UPDATE AT 05.40 PM.

தமிழக அரசு விளக்கம்:

மரபுரிமையாளர்கள் ஒப்புதல் தராவிட்டால் தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடமை ஆகாது.
=================================================

இன்றைய தலைமுறையினரும், எதிர்காலத் தலைமுறையினரும் எந்தவித சிரமமின்றி எளிய முறையில் பயன்பெற வேண்டும் என்பதற்காகத் தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடமையாக்கும் திட்டம் தமிழக அரசால் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இது அரசின் விருப்புரிமை அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. எந்தவிதக் கட்டாயமும் கிடையாது.

நாட்டுடமையாக்கப்படுவதற்கு சம்பந்தப்பட்ட மரபுரிமையாளர்கள், அவர்களுக்கு கிடைத்து வரும் 'ராயல்டி' தொகை கிடைக்காமல் போய் வரும் என்பதற்காக ஒப்புதல் தரவில்லையெனில் தொடர் நடவடிக்கை எடுக்காமல் கைவிட்டு விடுவதை அரசு வழக்கமாய் பின்பற்றி வருகிறது.

உதாரணமாக மூதறிஞர் ராஜாஜி, உ.வே.சா., அகிலன், கவியோகி சுத்தானந்த பாரதியார், ஆகியோரது நூல்களை நாட்டுடமையாக்கிட கடந்த காலத்தில் அரசினால் அறிவிக்கப்பட்டு பின்னர் சம்பந்தப்பட்ட மரபுரிமையாளர்கள் நாட்டுடமையாக்கிட ஒப்புதல் தரவில்லை என்பதால் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது.

எனவே தற்போது நிதிநிலை அறிக்கையில் நாட்டுடைமையாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலிலே உள்ள சில நூலாசிரியர்களின் மரபுரிமையாளர், அவர்களின் நூல்களை நாட்டுடமையாக்க ஒப்புதல் தரவில்லை என்பதால் கடந்த காலத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறை இப்போதும் பொருந்தும்.

நன்றி: மாலை மலர்



suresh kannan

Wednesday, January 28, 2009

"ஸ்லம்டாக் மில்லியனர்' படம் பார்க்காதீர்கள்"

இன்றைய தினமணி நாளிதழைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது 'ஸ்லம்டாக் மில்லியனர்' படம் பார்க்காதீர்கள்" என்றொரு தலைப்பை அடங்கிய விளம்பரத்தைப் பார்த்தேன். 'சன்டே இந்தியன்' என்றொரு வாரஇதழின் விளம்பரத்தில் அதன் ஆசிரியர் அரிந்தம் செளத்ரி 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தைப் பற்றி வலிமையான மொழியில் எழுதின காரசாரமான விமர்சனக் கட்டுரை ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.

'இந்தியாவில் இருப்பதைதானே வெளிநாட்டு துரைமார்கள் படத்தில் காட்டியிருக்கிறார்கள்" என்று சப்பைக்கட்டு கட்டும் கனவான்கள் இந்த கட்டுரையை அவசியம் படித்துப் பார்க்க வேண்டும். இந்தியாவிலிருக்கும் குறைபாடுகளை திரைப்படத்தில் சித்தரிப்பதில் தவறில்லை. ஆனால் 'இதுதான் இந்தியா' என்று படமெடுத்து சர்வதேச அரங்கில் முன்நிறுத்தும் முதல் உலக நாடுகளின் அரசியலை நாம் புரிந்து கொள்வது அவசியம்.

இப்போதே இந்தப் படம் குறித்த ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்களின் கூச்சல் தாங்க முடியவில்லை. ரஹ்மானின் பெயர் இந்தப்படத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதாலேயே இது இந்தியாவில் இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இல்லையென்றால் பத்தோடு பதினொன்றான ஆங்கிலப்படங்களுடன் கலந்திருக்கும்.

ஏற்கெனவே கமல் சொல்லியிருப்பது போல 'ஆஸ்கர் விருது' என்பது அமெரிக்கத்தரம்தான். அதற்காக நாம் ஏன் இவ்வளவு மாரடிக்கிறோம் என்று தெரியவில்லை. 2006-ம் ஆண்டின் சிறந்த படமாக தேர்வு பெற்ற 'The Departed' திரைப்படம் ஒரு குப்பை. அதன் இயக்குநர் Martin Scorsese திறமையானதொரு இயக்குநர்தான். ஆனால் இந்த குறிப்பிட்ட படம் அவரது முந்தைய சிறந்த படங்களுள் ஒன்றான 'Taxi driver'-ன் தரத்தோடு ஒப்பிடும் போது ஒன்றுமேயில்லை.

அரிந்தம் செளத்ரியின் ஆங்கிலக் கட்டுரையைப் படிக்க இங்கே செல்லவும்.

ஆனால் ஒன்று. இந்த மாதிரியான விமர்சனக் கட்டுரைகளும் குறிப்பிட்ட படத்தைப் பார்க்கும் ஆவலைத்தான் அதிகப்படுத்தும் என்று தோன்றுகிறது.

suresh kannan

Monday, January 05, 2009

நூலகங்கள்... பதிப்பகங்கள்... அரசு...

அரசின் பொது நூலகத்துறையின் அலட்சியத்தையும் பதிப்பகங்களின் பிரச்சினைகளையும் பற்றி பிரசன்னா சில விஷயங்களை வெளிப்படையானதொரு பதிவாக எழுதியிருக்கிறார். (காலச்சுவடு கட்டுரையை இன்னும் நான் படிக்கவில்லை).

அரசின் எல்லாத்துறைகளையும் போலவே பொது நூலகத்துறையிலும் ஊழலும் பொறுப்பின்மையும் நிறைந்துள்ளது என்று இதை பொருட்படுத்தாமல் விட்டு விட முடியாது. பொறுப்பான சமூகத்தின் உருவாக்கத்திற்கு புத்தகங்களின் பங்கு என்ன என்பதை யாரும் விரிவாக சொல்லத் தேவையில்லையாமலே அதை நாம் புரிந்து கொள்ள முடியும். கல்விக்கூடங்களில் சிலபஸ் தாண்டியும் அறிந்து கொள்ள விஷயங்களை நூலகங்களின மூலம்தான் அறிந்து கொள்ள முடியும். ஆனால் புத்தகங்களை காசு கொடுத்து வாங்க இயலாத, நூலகங்களை நம்பியிருப்பவர்களின் கதி என்ன? என் அனுபவத்தைச் சொல்கிறேன்.

பெரும்பாலான பள்ளிகளில் உள்ள நூலகர்கள் புத்தகங்களை மாணவர்களுக்குத் தராமல் பூட்டியே வைத்திருப்பர். (கிழியாமல் பத்திரமாக இருக்குமாம்). அதை மீறியும் தரப்படும் புத்தகங்கள் சிறுவர் நீதிக் கதைகளாக இருக்கும்.

இது இப்படியென்றால் தனியார் நூலகங்கள் வேறு மாதிரி. ஆராய்ச்சியாளர்களை மாத்திரமே அனுமதிக்கும் ரோஜா முத்தையா நூலகங்களில் உள்ளே நுழைவதற்கான விதிமுறைகள் புழல் சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிடச் செல்வதற்கான விதிமுறைகளை ஒத்தது என்கிறார்கள். சிறுவயதில் நான் முதன்முதலாக மறைமலையடிகள் நூலகத்திற்கு சென்றபோது உயரம் குறைவான ஒருவர் என்னை அகதி போல வெறுப்புடன் பார்த்து 'என்ன வேண்டும்?' என எரிச்சலுடன் கேட்டார். 'கத்தரிக்காய் கால் கிலோ' என்று மனதிற்குள் சொல்லிவிட்டு பயந்து போய் ஓடியே வந்து விட்டேன். என்றாலும் விடாப்பிடியாக மீண்டும் ஒருவாரம் கழித்து சென்றேன். நல்லவேளையாக இன்னொரு பொறுமையான மனிதர் இருந்தார். வாசிப்பின் மீதான என்னுடைய ஆர்வத்தைக் கண்டு சில கேள்விகள் கேட்டுவிட்டு உறுப்பினராக அனுமதித்தார். முதல் புத்தகமாக பாலகுமாரனின் 'பச்சை வயல் மனது' தேர்ந்தெடுத்த ஞாபகம். வீட்டிற்குச் சென்று உடனே படித்துவிட்டு மதியமே போய் இன்னொரு புத்தகத்திற்காக நின்றேன். என்னை ஆச்சரியமாக பார்த்தவர், ஒரு நாளைக்கு ஒரு புத்தகம்தான் அனுமதிக்கப்படும். இன்று போய் நாளை வா என அனுப்பவி்ட்டார். பின்பு அரிதான சமயங்களில் நூலகத்திலேயே அமர்ந்து படித்திருக்கிறேன். யுனெஸ்கோ போன்ற அறிவியல் இதழ்களை அங்கேதான் பார்த்தேன். தடிமனான புத்தகங்களை வைத்து சிலர் குறிப்பேடுகளுடன் வேறு உலகத்தில் ஆழந்திருப்பர். நான் கவிதைப் புத்தகத்தை படித்து பிரமித்துப் போய் 'வாலி, நீங்கள் கவிதைகளை அள்ளி அள்ளித் தரும் வாளி' என்று பின்னட்டையில் எழுதிக் கொண்டிருப்பேன். (இப்போதென்றால் வேறு மாதிரியாக எழுதக்கூடும்). அந்த நூலகத்தின் முக்கியத்துவம் குறித்து அப்போது நான் அறியவில்லை. (இப்போது இது கன்னிமரா நூலகத்துடன் இணைக்கப்பட்டு விட்டது).

அரசு நூலகங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பெரும்பாலான பொது நூலகங்களில் முனைவர் பட்டத்திற்காக எழுதப்பட்ட நூற்களும் (குப்பைகளே) பாலகுமாரன், ரமணிசந்திரன் போன்றவைகளும் பொத்தாம் பொதுவாக தலைப்புகளில் உள்ளடக்கம் முறையாக பதிப்பிக்கப்படாத புத்தகங்களே நிறைந்திருக்கும். பிரத்யேகமான தலைப்பில், பொருளில் ஆழமாக எழுதப்பட்ட புத்தகங்கள் சொற்பமானவையே. அவ்வாறான புத்தகங்களும் பொதுவாக நூலகத்தில் கிடைக்காது. அப்படியே இருந்தாலும் நமக்குத் தேவையான நூலை பொறுமையாக எல்லா அடுக்குகளிலும் தேட வேண்டுமென்றால் குறைந்தது இரண்டு மணி நேரம் தேவைப்படும். அதிர்ஷ்டமிருந்தால் அது நமக்கு கிடைக்கக்கூடும். நூலகர்களுக்கே புத்தகங்களைப் பற்றின அறிவு சுத்தமாக இருக்காது.

பல கிளை நூலகங்களில் புத்தகங்களில் இருட்டான அடுக்குகளில் துசிபடிந்து தொல்பொருள் ஆராய்ச்சியினருக்காக காத்திருப்பதை வேதனையுடன் பார்த்திருக்கிறேன். பிரபல வாரப்பத்திரிகைகள் எதையும் நூலகத்தினுள் நீங்கள் பார்க்க முடியாது. அவை நூலகத்தினரின் வீட்டில் பத்திரமாக இருக்குமோ என்னவோ. அரசு நூலகங்களில் உறுப்பினராக ஆவது கவுன்சிலர் சீட் மாதிரி மிகக்கடினம். அவர்கள் வேலைப்பளுவினை குறைக்க பெரும்பாலும் தவிர்க்கவே பார்ப்பர். காவல்துறை மாதிரி ஏரியா பிரச்சினைகளும் உண்டு. எனது அலுவலத்திற்கு அருகில் உள்ள நூலகத்தில் உறுப்பினராக விரும்பியபோது எனது வீடு எங்கே இருக்கிறது? எனக்கேட்ட அலுவலர் அப்போது அங்கேயே உறுப்பினராகிக் கொள்ளுங்கள்' என்றார். நீங்கள் செல்லும் தினத்தன்று நூலகர் இருந்தால் அன்று உங்கள் அதிர்ஷ்ட தினம்.

மக்களின் வரிப்பணத்தில் நூலகங்களுக்காக வாங்கப்படும் புத்தகங்கள் சிறிது காலத்திற்குள்ளாகவே பழைய புத்தகக்கடைகளில் நூலக முத்திரையுடனேயே விற்பதையும் நாம் பார்க்க முடியும்.

நகரத்தில் செயல்படும் நூலகங்களிலேயே இவ்வாறான நிலைமை என்றால் கிராமங்களில் செயல்படும் நூலகங்களைப் பற்றி கற்பனை செய்து பார்க்கவே பயமாக இருக்கிறது. இவற்றையெல்லாம் மீறித்தான் ஒரு வாசகன் தன்னுடைய சிந்தனையை விசாலப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

()

அரசின் அலட்சியமான செயல்பாடுகள் தவிர பதிப்பகங்கள் செயல்படும் விதமும் நம்பிக்கை தருவதாக இல்லை.பெரும்பாலான பதிப்பகங்கள் நூலக ஆர்டரை நம்பியே தம்முடைய பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கின்றன. நூற்கள் தயாரிப்பதில் பல முறைகேடுகளும் நடப்பதாக தெரிகிறது. பழைய பதிப்புகளை நூலாசிரியரின் கவனத்திற்கு கொண்டுவராமல் மாற்றி அச்சடிப்பது, பழைய நூற்களை முறையான அனுமதி பெறாமல் தயாரிப்பது, (எழுத்தாளர் பெருமாள் முருகன் இவ்வாறான பல தகிடுதத்தங்களை வெளியே கொண்டு வந்திருக்கிறார்) எழுத்தாளர்களுக்கு விற்பனை பற்றிய முறையான கணக்குகளை காட்டாமல் ராயல்டி தராமல் அவர்களை ஏதோ நன்கொடை பெற வந்தவர்கள் போல் நடத்துவது, புத்தகங்களின் உள்ளடக்கம் பற்றிய அறிவு பதிப்பகத்தார்க்கே இல்லாமலிருப்பது, நூலக ஆர்டரை பெற எந்த வழிமுறையையும் பின்பற்றுவது, கவர்ச்சியான தலைப்புகளின் மூலம் வாசகர்களை ஏமாற்றுவது போன்றவைகளிலேயே அவர்களின் பெரும்பாலான கவனமும் சக்தியும் செலவாவதால் வாசகர்களுக்கு கிடைப்பது புத்தகங்கள் என்ற பெயரில் காகிதக் குப்பைகளே. சுருங்கக்கூறின் மற்ற சேவைத்துறைகளைப் போலவே பதிப்பகத் துறையும் முற்றிலும் வணிக சிந்தனையோடு யோசிக்கத் தொடங்கி பல வருடங்களாயிருப்பது கவலையை அளிக்கிறது.

மிகச் சொற்பமான பதிப்பகங்களே அரசாங்கத்தின் தயவை எதிர்பார்க்காமல் நல்ல விஷயங்களை வாசகர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்கிற கொள்கைகளுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நூற்களின் அருமை தெரிந்தவர் முதல்வராய் இருக்கும் போதே இந்த லட்சணம் என்றால் ...

suresh kannan

Wednesday, December 31, 2008

கற்பிதங்கள் உடைந்த சிரிப்பு

மாறுதலாக, இம்மாதிரியான தருணங்களில் சாருநிவேதிதாவை ரொம்பவே பிடித்துப் போய் விடுகிறது.

()

நேற்று ஒரு வாடிக்கையாளரின் விளம்பர வடிவமைப்பு ஒப்புதலுக்காக நிறையவே களைத்துப் போயிருந்தேன். பொறுமையை இழக்க வேண்டியிருந்த தருணங்களை பல்லைக்கடித்துக் கொண்டு சகிக்க வேண்டியதாயிருந்தது. இறுதிக் கட்ட ஒப்புதலின் போது ஒரு மிகச்சிறிய திருத்தத்திற்காக அரைமணி நேரம் காத்திருக்க வேண்டிய நொந்து போயிருந்த கணத்தில் கிடைத்த இடைவெளியில் இணையத்தில் மேயும் போது சாருவின் வலைத்தளத்தில் அவரின் பத்து புத்தகங்களுக்கான அறிவிப்பில் இருந்த இந்த வரிகளை படித்த போது எல்லா உளைச்சலும் மறைந்து போய் சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வந்தது.

இந்த உலகில் எந்த விஷயத்தையுமே நாம் ஓசியில் வாங்க முடியாது. (அம்மாவின் அன்பு என்றெல்லாம் சொல்லி டார்ச்சர் பண்ணாதீர்கள்).

படித்து முடித்து விட்டு வேறு சில பதிவுகளை படித்த பிறகும் குறிப்பிட்ட வரிகள் நினைவில் வந்து சிரிப்பை வாரியடித்துக் கொண்டே இருந்தன. கணினி முன் அமர்ந்து கொண்டு தனியாக சிரித்துக் கொண்டிருந்தால் அலுவலகத்தில் உள்ளவர்கள் மனநல மருத்துவனைக்கு தொலைபேசும் அபாயம் இருந்ததால் தேநீர் அருந்தும் சாக்கில் வெளியே சென்றேன். கடலலை போல் அப்போதும் சிரிப்பு தேநீருடன் வழிந்து கொண்டே இருந்தது. உறங்கப் போகும் வரை இந்த மனநிலையே நீடித்தது.

மறுநாள் பல் துலக்கிக் கொண்டிருந்த கணத்தில் எங்கிருந்தோ நினைவகத்தில் இருந்து பாய்ந்து வந்த வரிகள் குபீர் சிரிப்பை மூட்டின. பற்பசையை உடனே துப்ப வேண்டியதாயிருந்தது.

()

தேசபக்தி, தாயன்பு, தெய்வீகக் காதல், விழாக்கள், பிறந்த நாட்கள் போன்ற மாதிரியான கற்பிதங்களையும் புனிதமாக கட்டமைக்கப்பட்ட பிம்பங்களையும் வைத்துக் கொண்டு நாம் படும் பாடு இருக்கிறதே, அப்பப்பா! எவ்வளவு போலித்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நல்லவேளையாக செய்தித்தாள்களில் குற்றவியல் சார்ந்த உண்மை நிகழ்வுகள் இந்தக் கற்பிதங்களை நாம் உணராமலேயே அவ்வப்போது சேதப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. நம்முன்னேயே உலவிக் கொண்டிருக்கும் உண்மையின் யதார்த்தத்தின் வெளிச்சத்தை கண்கொண்டு காண முடியாத கூச்சத்துடன் போலி இருட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெற்றோர்களும், ஆசிரியர்களும், முன்னோர்களும், வரலாற்றாசிரியர்களும், எழுத்தாளர்களும் அமைத்துக் கொடுத்த கடிவாளங்கள் வேறு.

இன்னும் விரித்து எழுத ஆசைதான்... ஆனால்..

சாருவின் பதிவை முழுக்கப்படித்துப் பாருங்கள். பதிவின் இறுதியிலும் சில சிரிப்பு வெடிகள் உள்ளன.

[பின்குறிப்பு: புத்தாண்டு வாழ்த்துகள் என்று சொல்லாமலிருக்கப் போகும் நண்பர்களுக்கு முன்கூட்டிய நன்றிகள். :-) ]

suresh kannan

Monday, December 29, 2008

திமுக: இளவரசருக்கு முடிசூட்டு விழா

தி.மு.க.ராஜ்யத்தில் மகாராஜாவின் பிரியமான இளவரசருக்கு நடந்த முடிசூட்டுவிழா கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பாகும் பாக்கியத்தைப் பெற்றேன். நான் முன்பே சொல்லியிருப்பதைப் போல 'காமெடி திரை' என்றெல்லாம் தனி சானல் தொடங்காமல் எல்லா கட்சிகளின் அரசியல் கூட்டங்களையும் நேரடியாக ஒளிபரப்புகிறாற் போல் ஒரு சானல் ஆரம்பித்தால் வடிவேலு, விவேக் எல்லாம் எடுபடாமலே போய்விடுவார்கள். அவ்வளவு காமெடியாக இருக்கும். அதை நிரூபிக்கிறாற் போல்தான் இருந்தது இந்த நிகழ்வுகளும்.

சந்தைக்கடை மாதிரி ஒலித்த கூச்சலின் பின்னணியில் கழக உடன்பிறப்புகளின் மத்தியில் பரிதாபமான தோற்றத்தில் அமர்ந்திருந்தார் கருணாநிதி. அவர் விரும்பியோ விரும்பாமலோ மாலைகளும் பொன்னாடைகளும் மேலே விழுந்து கொண்டே இருந்தன. இதே மாதிரியானதொரு காட்சியை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று யோசித்தேன். காஞ்சி மட சீனியரின் நூற்றாண்டு விழாவிலும் இதே போல் அவர் மலங்க மலங்க விழித்து அமர்ந்திருக்க மாலைகளும் தங்க நாணயங்களும் அவர் தலை மேல் கொட்டப்பட்டது நினைவுக்கு வந்தது.

Photobucket

ஸ்டாலினை வாழ்த்த வந்தவர்கள் (அதாவது அட்டெண்டென்ஸ் போட வந்தவர்கள்) தாங்கள் வந்திருக்கிறோம் என்பதை எப்படியாவது நிறுவ முயற்சி செய்தது காமெடியாக இருந்தது. ஸ்டாலினுக்கு மற்ற நிறங்களில் பொன்னாடை போர்த்தியவர்கள் கருணாநிதிக்கு மாத்திரம் ஞாபகமாக மஞ்சள் நிற பொன்னாடைகளை சமர்ப்பித்து காலில் விழுந்து அவரின் ஆசிகளைப் பெற்றனர். நேரம் ஆக ஆக பொன்னாடைகள் போர்த்தப்படுவது தவிர்க்கப்பட்டு செக்யூரிட்டிகளால் பிடுங்கி பின்னால் வீசப்பட்டன. ரோஜாப்பூவாக இருந்தாலும் தொடர்ந்து அடித்தால் வலிக்காதா என்ன?. இலவு காத்த கிளி போல் எழவு காத்த கிளியாக அமர்ந்திருந்த 'அன்பழகனை' பாவம், கண்டு கொள்ள ஆளே இல்லை. மூக்கை நெருடியவாறு அமர்ந்திருந்தார். கருணாநிதியின் நிழல் இருக்கிறதோ இல்லையோ, அதற்கு பதிலாக அமர்ந்து வந்த சண்முகநாதனை காணவில்லை. அதற்குப்பதிலாக ஒருவர் பெரியவாளிடம் பேசும் சிஷ்யகேடிகள் மாதிரி.. மன்னிக்கவும் சிஷ்யகோடி மாதிரி வாயைப் பொத்திக் கொண்டு கருணாநிதியிடம் பேசினார்.

இனி அரசு விழாக்களில் பொன்னாடைகள் போர்த்தப்படுவது தவிர்க்கப்பட்டு அதற்கு பதில் புத்தகங்கள் வழங்கவேண்டும் என்று கருணாநிதி எப்பவோ கூறிய நினைவு. காந்தி சொன்னதை அவர் இருக்கும் போதே பின்பற்றாதது மாதிரி உடன்பிறப்புகளும் கருணாநிதி சொல்லியிருந்ததை ஞாபகமாக பின்பற்ற விரும்பவில்லை. (காந்தியுடன் கருணாநிதியை ஒப்பிட்டது குறித்து திமுக காரர்கள், வீட்டிற்கு ஆட்டோ அனுப்பாமல் என்னை பாராட்ட வேண்டும். காங்கிரஸ்காரர்களுக்கு காந்தியை திட்டினாலும் பரவாயில்லை. சோனியா காந்தியை திட்டக்கூடாது).

ஒரு ஆச்சரியமும் நடந்தது. யாரோ ஒரு கலகவாதி பொன்னாடைக்கு பதில் புத்தகத்தை அளிக்க அதுவரை அசையாமல் அமாந்திருந்த கருணாநிதி சலனமடைந்து அந்தப் பரபரப்பிற்கிடையிலும் 'அது என்ன புத்தகம்?' என்று மெனக்கெட்டு கவனித்ததை புத்தகப்பிரியனான நான் நெகிழ்ச்சியுடன் பார்த்தேன்.

கூச்சலின் இடையே யாரோ ஒருவர் பலத்த சத்தத்துடன் சண்டையிடும் குரல் கேட்டது. கலைஞர் டிவியில் உடனே ஒலியை அமுக்கி பின்னணி இசையை ஓடவிட்டனர். ஆனால் சன்டிவியில் இதை தொடர்ந்து கேட்டு ரசிக்க முடிந்தது.

பத்திரிகையாளர்கள்தான் பாவம். ஒவ்வொரு முக்கியமான தலைவர்கள் பொன்னாடை அணிவிக்கும் போதெல்லாம் இலவச தொலைக்காட்சி பெட்டி வாங்க வந்தவர்கள் போல் முண்டியடித்துக் கொண்டு "அண்ணே, அண்ணே... சார்... சார்.... " என்று புகைப்படம் எடுக்க இறைஞ்சிக் கொண்டிருந்ததைக் காண பரிதாபமாக இருந்தது.

'இந்தப் பதவியை யாரும் என்னிடமிருந்து பிடுங்கவில்லை. நானாகத்தான் முன்வந்து தம்பி ஸ்டாலினை பொருளாளராக ஆக்கும் யோசனையை தலைவருக்கு அளித்தேன்' என்று ஆற்காடு வீராசாமி ஒரு பரிதாப சுயவாக்குமூலம் அளித்துக் கொண்டிருந்தார். 'நான் கைது செய்யப்பட்டால் தொண்டர்கள் பொறுமை காக்க வேண்டும்' என்று திராவிட தலைவர் சொன்னால் அதற்கு என்ன அர்த்தம் என்று ஆக்கப்பூர்வமான தொண்டர்களுக்கு தெரியாதா? அதே போன்ற அர்த்தத்தில்தான் இதையும் எடுத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

எப்படியோ கருணாதிக்குப் பின் ஸ்டாலின் என்று நெடுங்காலமாக உலவிக் கொண்டிருந்த உண்மையான வதந்தி, அதிகாரபூர்வமாக நிறுவப்பட்டு விட்டது.

மன்னராட்சி முறை ஒழிந்து மக்களாட்சி முறை நடப்பதுதான் ஜனநாயகம் என்று ஐந்தாங் கிளாஸ் வரலாற்று பாடப்புத்தகத்தில் படித்த ஞாபகம். அப்போது இந்திராகாந்தி பிரதமர் என்றும் ஞாபகம். என் மகள் படிக்கும் போது ராகுல் காந்தி பிரதமராக இருக்கலாம்.

ஜெய்ஹிந்த்.

சொல்ல மறந்தது: கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகளின் நேரடி ஒளிபரப்பில் சில மைக்ரோ செகண்டுகள் வித்தியாசத்தில் சன்னே முதலில் ஒளிபரப்பியது. என்ன இருந்தாலும் சீனியரல்லவா! ஜெயா டிவியில் மைனாரிட்டி திமுக அரசு.... என்று லட்சத்தி பன்னிரெண்டாயிரத்தி முந்நூற்று ஐந்தாவது தடவையாக சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்க பரிதாபமாக இருந்தது. 2011-ல் முதல்வராகும் வரிசையில் நிற்கும் விஜய்காந்த்,சரத்குமார் போன்றவர்கள் கதி என்னவாகும் என்று யூகிக்க முடியவில்லை.

ஸ்டாலினின் blog

suresh kannan

Friday, December 26, 2008

காமம் பொங்கி வழியும் புதினம்

பழைய ஆனந்த விகடன் கட்டுரைத் தொடர் ஒன்றில், கிராமத்தில் ஓடும் தகர டப்பா பஸ்ஸைப் பற்றி எழுதும் போது "ஏதோ ஒர் தர்மத்துக்கு கட்டுப்பட்டு அது தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தது' என்று எழுதியிருப்பார் பாஸ்கர் சக்தி. ஏறக்குறைய இந்தியாவையும் அந்த பஸ்ஸ¥டன் ஒப்பிட்டால் தேச பக்தர்கள் மேலே விழுந்து பிடுங்குவார்களோ என்னமோ. எங்காவது குண்டு வெடிக்கும் போதும் கிரிக்கெட்டின் போதுதான் இவர்களின் தேசபக்தி பொங்கி வழியும். வல்லபாய் பட்டேல் சாம, பேத, தான, தண்ட.. என அனைத்து முறைகளையும் உபயோகித்து கட்டிப் போட்ட தேசத்தின் கயிறு ஏதோ ஒர் தர்மத்திற்கு கட்டுப்பட்டு பிய்ந்து விடாமல் இருக்கிறது. உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியும் தனது அண்டை மாநிலத்தின் விவசாய பயன்பாட்டிற்கு நீர் தராத மாநிலங்களை வைத்துக் கொண்டு 'இந்தியா எனது தாய்நாடு; இந்தியர்கள் அனைவரும் என் உடன்பிறந்தவர்கள்' (நமீதாவை சகோதரியாக நினைக்க எந்த கேணையன் இருக்கிறான்?) என்று சொல்வதுதான் எவ்வளவு அபத்தமாக இருக்கிறது? சரி அரசியல் வேண்டாம். இலக்கியத்தின் பக்கம் வருவோம். தமிழ்நாட்டிலேயே பல பேருக்கு - தமிழ்த்துறை பேராசிரியர்கள் உட்பட- அது பாரதி, பாரதிதாசனோடு முடிந்து போய் விடுகிறது. இந்த லட்சணத்தில் அண்டை மாநிலத்தின் இலக்கிய வரலாற்றைப் பற்றிக் கேட்டால் அவனை எதால் அடிப்பது?. ஹிப்ரூ மொழியில் எழுதும் படைப்பாளியைக் கூட தெரிந்து வைத்திருக்கும் நவீன இலக்கிய உலகம் பக்கத்து மாநிலத்து எழுத்தாளனைப் பற்றிக் கேட்டால் பேய் முழி முழிக்கிறது. சாகித்ய அகாடமி என்றொரு அமைப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். அரசியல் சக்திகளின் அருளாசிகளின் வட்டத்தில் இருப்பவர்களுக்குத்தான் சம்பந்தப்பட்ட விருது கிடைக்கும் என்கிறார்கள். அவர்கள் வெளியிட்ட நூல்களில் உருப்படியாக நான் படித்தது சிவராம காரந்தின் 'அழிந்த பிறகு' மட்டும்தான். பத்தாங்கிளாஸ் பாடப்புத்தகம் ஸ்டைலில் இலக்கிய ஆளுமைகளைப் பற்றின நூல்களும் வெளியிடுகிறார்கள். யார் படிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

Photobucket

'மனிதனின் பெரும்பாலான அகப் பிரச்சினைகளுக்கு அடிப்படைக்காரணியாய் இருப்பது காமம்தான்' என்று சொன்ன உளவியலின் தந்தையான சிக்மண்ட் ·பிராய்டின் வாயில் சர்க்கரை மூட்டையையே போடலாம். 'யார் இந்த பிராடு? எப்போது இதை உன்னிடம் டெலிபோனில் சொன்னார்?' என்று கேட்பவர்கள் இணையத்தில் தேடிக் கண்டடையுங்கள். ஸி.வி. பாலகிருஷ்ணனின் மலையாள நாவலான 'ஆயுஸ்ஸிண்டே புத்தகம்' (தமிழில்: வை. கிருஷ்ணமூர்த்தி) இதைத்தான் புனைவு மொழியில் சொல்கிறது. இந்தப் புனைவெங்கும் காமம் கண்ணுக்குத் தெரியாத ஒரு மலைப்பாம்பைப் போல ஊர்ந்து செல்கிறது. காமத்தை இன்னும் கண்ணாமூச்சி ஆட்டம் போல வைத்திருக்கும் நம் பாசாங்கான சமூகத்தில் அடித்தட்டு மக்கள் இதை மிக எளிதாக கடந்து செல்கிறார்கள்.

மாடு மேய்க்கும் மேரி நைநானுடன் காதல் என்கிற பெயரில் உறவு கொள்கிறாள். அவனோ வேறு பெண்ணைத் திருமணம் செய்துக் கொள்கிறான். ஐம்பது வயதாகும் கிழவனை விரும்பியே பிடிவாதம் செய்து திருமணம் செய்து கொள்ளப் போவதாக சொல்லும் மேரியிடம் ஆனி கேட்கிறாள். ".. அந்த மனுஷனுக்கு உங்கப்பாவ விட வயசு ஜாஸ்தி, தெரியுமில்ல?".

"அது பரவாயில்ல. அவனுக்குப் பதினேழு வயசிலே ஒரு மகன் இருக்கானே? அவன் அப்பாவுக்குத் தெரியாம நாங்க ரெண்டு பேரும் ஜாலியா இருக்கலாமே!".

()

பெளலோவின் மகன் தோமோ. தோமோவின் மகள் ஆனி, மகன் யோஹன்னான்.

இந்த நாவல் குறிப்பாக காற்றில் பறக்கும் காகிதம் போல் அலைக்கழியும் யோஹன்னானைச் சுற்றியே அலைகிறது.

தாத்தா பெளலோ பக்கத்து வீட்டு பெண்ணான ராஹேலிடம் இறந்து போன தன்னுடைய மனைவியின் ஞாபகம் பொங்கிப் பெருகும் நினைவுகளின் ஒரு கணத்தில் முறைதவறி நடந்து விடுகிறார். தாத்தா தடவலின் வித்தியாசத்தை அறிந்த ராஹேல் அழுது கொண்டே ஓடுவதில் நாவல் துவங்குகிறது. இதைப் பார்த்து விடும் பெளலோவின் மகன் தோமோ தன் தந்தையாரை அடிஅடியென அடிக்கிறான். பின்பு முட்ட முட்டக் குடித்துவிட்டு தன் மனைவியின் கல்லறையை நோக்கி ஓடுகிறான். அவமானத்தில் புழுங்கித் தவிக்கும் பெளலோ தூக்கிட்டுச் சாகிறார். அவரின் பழைய செருப்புகள் வீட்டின் கூரையிலிருந்து அனைத்தையும் கவனிக்கிறது. (மேஜிக்கல் ரியலிசமாம்!).

அந்த ஊரின் அழகியான 'ஸாரா'வின் கணவன் ஸக்ரியா ஒரு நோயாளி. ஸாராவையே நினைத்து ஏங்கும் யாகேப் சுயமாக சாராயம் காய்ச்சிக் குடிக்கிறவன். தன்னுடைய காதலை அவளிடம் சொல்கிறான். ஆனால் அவளின் சம்மதம் கிடைக்காமல் போகவே அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டுச் சாகிறான்.

யோஹன்னானின் சகோதரி ஆனிக்கும் அந்த ஊர் சர்ச்சின் பாதிரி மாத்யூவிற்கும் காதல் ஏற்படுகிறது. தன்னுடைய 'வெள்ளை அங்கி' தடுக்கும் நிலையை நினைத்து பரிதவிக்கும் பாதிரிக்கு 'விழிப்பை' ஏற்படுத்துபவன் குடிகார யாகேப்தான்.

... இந்த உலகத்துல அன்பும் நட்பும் நிலவணும்கறதுதான் என்னோட ஆசை, கையாலாகத்தனம், யாருக்கும் தெரியாம, தனக்குள்ளேயே துக்கப்பட்டு இருக்கிறது, தைரியமில்லாமே, கோழையா வாழறது, பயந்தாங்குளித்தனம். இது ஒண்ணுமே இல்லாம இந்த உலகம் அன்பு நிறைஞ்சதா இருக்கணும்கறதுதான் என்னோட விருப்பம்...

தெளிவடைந்த பாதிரி மாத்யூ இது குறித்து மூத்த பாதிரியுடன் நிகழ்த்தும் விவாதம் இந்த நாவலின் முக்கியமான பகுதி. பாதிரி வாழ்க்கையை தேர்ந்தெடுத்து பிரம்மச்சரியத்துடன் வாழ நேர்பவர்கள் எதிர்கொள்ள நேரும் பிரச்சினைகளைப் பற்றி செய்தித்தாளில் வந்திருக்கும் ஒரு கட்டுரையின் துணையோடு விவாதிக்கிறார் மாத்யூ.

... மாத்யூ தொடர்ந்தார். 'செக்ஸ் வேண்டும் என்றல்ல நான் வாதிப்பது. அதில்லாமல் என்னால் வாழ முடியும். ஆனால் தனிமையை நம்மால் பொறுத்துக் கொள்ள முடியாது. ஒரு பெரிய கட்டிடடத்தில் என்னை விட வயதில் மூத்தவர்களுடனும் இளையவர்களுடனும் நான் சேர்ந்து வாழ்கிறேன். ஆனால் மிக அபூர்வமாகவே நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறோம். மனம் திறந்து பேச யாராவது இருக்க மாட்டார்களா என்று நான் பல தடவை ஏங்கியிருக்கிறேன். ...

என்பவர், உலகத்தில் நல்வழிகள் ஏற்கெனவே சொல்லப்பட்டிருந்தாலும் பிரச்சினைகளும் வன்முறைகளும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. எனவே பிரம்மச்சரியத்தோடு செய்வதை திருமணம் செய்து கொண்டும் செய்யலாம் என்று விவாதிக்கிறார்.

.. சொர்க்கத்தில் செய்யப்படுவதையெல்லாம் நாம் பூமியில் செய்ய நினைப்பது சரியல்ல என்று கருதுகிறேன். பூமியின் சட்ட திட்டங்கள் வித்தியாசமானவை. அதனால்தானே யேசு கிறிஸ்துவே அவருடைய சிஷ்யர்களிடையே பிரம்மச்சரியத்தைக் கட்டாயமாக்கவில்லை.! யோவானையும் பவுலையும் தவிர மற்ற எல்லோரும் திருமணம் செய்து கொண்டவர்கள்தானே?"...

இதற்கு மூத்த பாதிரி சொல்லும் பதில் மிகவும் convince- ஆக எனக்குத் தோன்றியது.

... நாம் திருமணத்துக்குப் பிறகு ஏற்படும் நூற்றுக்கணக்கான பிரச்சினைகளைப் பற்றியும் பேச வேண்டும். பாதிரியாகப் பணிபுரியும் கணவன், தன் மனைவியுடன் தினமும் சண்டை பிடித்துக் கொண்டிருந்தால் அது அந்த சர்ச்காரர்களுக்குப் பிடிக்குமா? தனது துக்கத்திலிருந்து விடுதலை பெற விரும்பும் யாராவது அந்தப் புரோகிதனிடம் வருவார்களா?..

என்றாலும் மாத்யூவும் ஆனியும் ஊரை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டு நிறைவான வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஆனியைப் பற்றிய தகவல் நாவலில் பிறகு சொற்பமாகவே வருகிறது.

()

யோஹன்னான் தனது நண்பன் ஜோஷியுடன் ஒரினப்புணர்ச்சி கொள்கிறான். ஜோஷி இறையியில் படிப்பிற்காக ஊருக்குச் சென்றவுடன் நாவலின் ஆரம்பத்தில் வரும் ராஹேலுடன் உறவு கொள்கிறான். மறுநாள் அவளை பார்க்கச் சென்ற போது அவள் 'கன்யா மடத்தில்' சேருவதற்காக சென்றிருப்பதை அறிகிறான். தனிமையின் புழுக்கத்தில் அலைந்து திரியும் அவனுக்கு விதவையான ஸாராவுடனும் உறவு ஏற்படுகிறது. இதையறியும் அவனுடைய தந்தை தோமா அவனைக் கண்டிக்கிறான். ஸாராவை தோமோவே திருமணம் செய்துக் கொள்ளலாமே என்கிற நண்பனின் யோசனையை அறிந்தவுடன் தோமோவுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்படுகிறது. அதுவரை இன்னொரு திருமணத்தைப் பற்றியே யோசிக்காமலிருந்தவன் இந்த யோசனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறான். ஆனால் ஸாரா தோமோவை திருமணம் செய்ய மறுத்து விடுகிறாள். தன்னுடைய மகனுடன் அவள் உறவு கொள்வதைக் காண்கிற தோமோ ஆத்திரத்தில் ஸாராவைக் கொன்று விடுகிறான்.

தனிமையில் ராஹேலின் நினைவுகளுடன் நடந்து போகும் யோஹன்னானுக்கு இறந்து போன யாகேப்பும் தாத்தா பெளலோவும் தென்படுவதோடும் அவனின் கூக்குரலுடனும் நாவல் நிறைகிறது.

()

படைப்பு நிகழும் களம் எதுவென தெளிவாகப் புலப்படவில்லை. ஏதோ சாத்தானால் சிருஷ்டிக்கப்பட்ட ஊர் போலிருக்கிறது. நாவலில் வரும் அனைவருமே கிறிஸ்துவர்களாக இருக்கிறார்கள். இடையே ஓடும் பன்றிக்குட்டியின் பெயர் 'ஜேம்ஸ்' என்றால் கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன். மருந்துக்குக்கூட வேற்று மதத்தவர்கள் அந்த நாவலின் உள்ளே நுழையவில்லை. ஒரு மூன்றாந்தர மோசமான இயக்குநர் படமாக்க நினைத்தால் 'மிகச் சிறந்த பாலியல் காட்சிகளை' கலைப்படம் என்ற போர்வையில் திணிக்கக்கூடிய அனைத்து சாத்தியக் கூறுகளையும் கொண்ட இந்த சிறந்த நாவல் மிக மிக வறட்சியான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. நிகழ்வை சட்டென்று நிறுத்திவிட்டு அடுத்த அத்தியாயத்தில் வருங்கால நிகழ்வில் 'ரிவர்ஸ் கியர்' போட்டு விவரிப்பதான மொழியில் நாவலின் பல அத்தியாயங்கள் புனையப்பட்டிருக்கின்றன. கிருஷ்ணமூர்த்தி இதை சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

காமம்தான் மனிதனை தொடர்ந்து வாழ வற்புறுத்துகிறது என்பதையே இந்த நாவலின் அடிநாதமாகப் பார்க்கிறேன்.

()

சமையல், ஜோதிடம், வாழ்க்கை வரலாறு என்று பரபரப்பான புத்தகங்கள் பிரசுரித்து பணம் பண்ணிக் கொண்டிருக்கும் இன்றைய பதிப்பகங்களுக்கு மத்தியில் 'கிழக்கு பதிப்பகம்' அண்டை மாநில இலக்கியங்களின் மொழி பெயர்ப்பையும் கவனத்தில் கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. நாவலின் ஆசிரியர் கேரள சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர் என்று பின்னட்டை சொல்கிறது.

'இறைவனை நிந்திக்கவில்லை' என்கிற வார்த்தைகள் 'இறைவனை சிந்திக்கவில்லை' என்று பிரசுரமாகியிருக்கிற (பக்கம் 45) கருத்துப்பிழை மயக்கங்களை ஏற்படுத்தும் சொற்ப தவறுகளை தவிர்த்திருக்கலாம் என்பதைத் தவிர புத்தகம் மிக நன்றாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

உயிர்ப் புத்தகம், ஸி.வி. பாலகிருஷ்ணன், தமிழில்: வை. கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம், 224 பக்கங்கள், 120 ரூபாய்.
ஆன்லைனில் வாங்க

suresh kannan

Wednesday, December 24, 2008

நிர்வாணமாக நின்ற ஆசிரியர்கள்

மறுபடியும் ஒரு நீயா நானா நிகழ்ச்சியைப் பற்றி எழுத வேண்டுமா என்று தோன்றியது. என்றாலும் அதன் தீவிரம் காரணமாக இதை எழுதித்தான் ஆக வேண்டியிருக்கிறது. கடந்த வார நிகழச்சியில், 'ஆசிரியர்கள் தங்களின் போதிக்கும் திறனை அவ்வப்போது மேம்படுத்திக் கொள்கிறார்களா, அல்லது இருக்கிற குறைந்த பட்ச அறிவை வைத்துக் கொண்டு சமாளிக்கிறார்களா?' என்ற தலைப்பில் விவாதம் நிழந்தது. மாணவர்கள் எப்படி வகுப்பில் நிகழ்ந்து கொள்வார்கள் என்பதை ஆசிரியர்கள் சில நடித்துக் காட்டினர். மாணவர்களும் அவ்வாறே. குறைந்த பட்ச ஆங்கில அறிவு இல்லாமல் கூட சில ஆசிரியர்கள் இருப்பதை மாணவர்களில் சிலர் சுட்டிக்காட்டினர். 'எங்களிடம் இருக்கிற ஞானத்தை மாணவனிடம் வழங்குவதற்கு மொழி பெரிய தடை கிடையாது' என்று ஆசிரியர் சார்பில் ஒருவர் கூறினார்.

ஆனால் என்னை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் பிறகுதான் நடந்தது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத், இரண்டு சிறப்பு விருந்தினர்களை சபையில் அமர வைத்து ஆசிரியர் குழுவினரிடம் 'அவர்கள் யார்'? என்று அடையாளம் காட்டச் சொன்னார். நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த நானே வெட்கப்படும்படியாக அங்கிருந்த அனைத்து ஆசிரியர்களும் மெளனம் காத்தனர். இத்தனைக்கும் அந்த இரண்டு சிறப்பு விருந்தினர்களும் கல்வித்துறையை சேர்ந்தவர்கள்தான். இருந்தும் ஒரு ஆசிரியருக்கும் அவர்களைப் பற்றிய அடையாளமோ தகவலோ தெரியவில்லை.

சிறப்பு விருந்தினர்கள் வந்து அமரும் போதே அவர்களைப் பற்றி என் மகளிடம் கூறிக் கொண்டிருந்தேன்.

Photobucket

ஒருவர் ஆ.இரா. வேங்கடாசலபதி.

தமிழ்நாட்டில் உள்ள குறிப்பிடத்தகுந்த வரலாற்று ஆய்வாளர்களுள் ஒருவர். 'அந்த காலத்தில் காப்பி இல்லை', 'நாவலும் வாசிப்பும்' 'முச்சந்தி இலக்கியம்' போன்ற சில முக்கிய ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய புத்தகங்களை எழுதினவர். குறிப்பாக 'புதுமைப்பித்தனின் சிறுகதைகளை' கவனமாக தொகுத்து செம்பதிப்பை தயாரித்தவர். பாரதியின் சில அபூர்வ படைப்புகளை லண்டனிலிருந்து கொண்டு வந்தவர். பாரதியின் கட்டுரைகளை வ.உ.சியின் கடிதங்களை தொகுத்தவர், சு.ராவின் ஜே.ஜே.சில குறிப்புகள்' புதினத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருப்பவர்.

Photobucket

இன்னொருவர் பேராசிரியர் கல்யாணி.

மனித உரிமைப் போராளி. அரசு கல்லூரியில் பேராசிரியராக பல வருடங்கள் பணியாற்றியவர். 'மக்கள் கல்வி இயக்கத்தை நிறுவியவர். பழங்குடிகளுக்காகவும், பத்மினி, அத்தியூர் விஜயா போன்றவர்களின் மீது நிகழத்தப்பட்ட வன்முறைகளுக்காக களத்தில் இறங்கி போராடியவர், வீரப்பனால் ராஜ்குமார் கடத்தப்பட்ட போது மீட்பு தூதுவர் குழுவில் இடம்பெற்றவர்.


இவ்வளவு தகவல்கள் கூட சொல்ல வேண்டாம், அவர்கள் யார் என்பது கூட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்குத் தெரியவில்லை. பிரபலமான முகம் என்கிற வகையில் சலபதியையாவது தெரியாமலிருக்கலாம். பேராசிரியர் கல்யாணியின் முகத்தை வீரப்பன் கடத்தலின் போது பத்திரிகைகளில் நிச்சயம் பார்த்திருக்க வேண்டும்.

இது மாத்திரமல்ல, சமீபத்தில் புக்கர் பரிசு பெற்ற இந்திய நாவலாசிரியரைப் பற்றின கேள்விக்கும் யாரிடமும் பதிலில்லை. தங்கள் துறை சார்ந்த புத்தகங்களையே அதிகம் படிப்பதாக சில ஆசிரியர்கள் சமாளித்தனர். சமீபத்தில் எந்த புத்தகம் படித்தீர்கள்? என்ற கேள்விக்கு ஒருவர் காப்மேயரின் சுயமுன்னேற்ற நூலைப் பற்றிக் கூறினார். ஏழாம் வகுப்பிலேயே இதை தாம் படித்து விட்டதாகக் கூறி கோபிநாத் அவர் மூக்கை உடைத்தார்.

()

ஆசிரியர்களின் தகுதியின் போதாமை குறித்து ஏற்கெனவே சில கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்த சலபதி, 'நான் எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாக இருக்கிறது' என்றார்.

பேராசிரியர் கல்யாணி தன்னுடைய மாணவப் பருவத்தில் ஆசிரியரிடம் பெற்ற ஒரு தண்டனையை நினைவு கூர்ந்த போது உணர்ச்சி மேலிட்டு தொடர முடியாமல் அழுதார். ஒரு வயோதிகரின் உருவம் மறைந்து டிரவுசர் போட்டுக் கொண்டிருந்த ஒரு சிறுவனையே அப்போது நான் பார்க்க நேர்ந்தது. இவ்வளவு வருடங்கள் கடந்தும் அதை நினைவு கூர்கிற போது அவர் அழுகிறார் எனும் போது குறிப்பிட்ட சம்பவம் அவரை மிகவும் பாதித்திருக்க வேண்டும். அடுத்த ஜென்மங்களில் நம்பிக்கையில்லை எனினும் 'அப்படியிருந்தால் எல்லா ஜென்மங்களிலும் ஆசிரியர் பணியாற்றவே விரும்புகிறேன்' என்ற போது மிகவும் நெகிழ்வாக இருந்தது.

ஊதியம் தொடர்பான போராட்டங்களில் மாத்திரம் தீவிரமாக இயங்கும் ஆசிரியர் பெருமக்கள், தங்களுடைய தேசத்தின் அடுத்த தலைமுறையை ஞானம் மிக்கவர்களாக மாற்றி சமுதாயத்திற்கு அளிக்க வேண்டும் என்கிற அடிப்படை பொறுப்புணர்ச்சியை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றே நான் கருதுகிறேன்.

suresh kannan

Wednesday, December 17, 2008

கேசவனும் ஜெயமோகனும்

தினமும் உறங்கப் போவதற்கு முன்னால் ஏதாவதொரு முழு அல்லது அரைத் திரைப்படத்தைப் பார்ப்பது வழக்கம். எப்படியும் உறங்கப் போக பின்னிரவு ஒரு மணியாவது ஆகிவிடும். Quentin Tarantinoவின் இயக்கத்தின் பகுதியையும் உள்ளடக்கிய Four Rooms திரைப்படத்தை இயன்ற வரை பார்த்து விட்டு உறங்கப் போக நேற்றிரவு திட்டமிட்டேன். ஆனால் offline-ல் சேமித்து வைத்திருந்த முக்கியமான வலைப்பதிவுகளை வாசிக்காமலிருந்ததும் நினைவுக்கு வந்தது. அதை சிறிது நேரம் வாசித்து விட்டு பின்னர் திரைப்படத்தை காணலாம் என்று முடிவு செய்தேன். ஜெயமோகனின் வலைப்பதிவிலிருந்த 'மத்தகம்' குறுநாவல் கண்ணில்பட்டது. நீள நீளமான ஐந்து அத்தியாயங்கள். ஒரு அத்தியாயத்தை மாத்திரம் இன்று படித்து முடித்து விட்டு பின்னர் திரைப்படத்தை காண்போம் என்று ஆரம்பித்தேன்.

ஆனால்....

கேசவன் தன் துதிக்கையால் என்னை இழுத்து படைப்புக்குள் தள்ளிவிட்டான். ஆவல் தாங்காமல் அடுத்த அத்தியாயத்திற்குள்ளும் நுழைந்தேன். மூன்று... நான்கு... ஐந்து.... ஒரே மூச்சில் முழுவதையும் படித்த முடித்தவுடன்தான் சூழலே புலனாயிற்று. வாசித்துக் கொண்டிருக்கும் போதே உள்ளே ஏதோ ஒன்று தொடர்ந்து வாசிக்காதே.. போதும்.. என்று எச்சரித்துக் கொண்டேயிருந்தது. உடம்பெங்கும் குளிர் படர்ந்து அடங்கியது. படைப்பு முழுவதையும் தியானத்திற்கான மனநிலையுடன் வாசித்திருக்கிறேன் என்று தோன்றியது. வாசிப்பு நிறைந்தவுடன்தான் சுயநினைவிற்கு வந்து நாற்காலியின் பின்னால் ஒய்வாக சாய்ந்தேன். இறுகப்பபற்றிக் கொண்டிருந்த கைகள் தளர்வடைந்தன.

பின்னாலிருந்து யாரோ விட்ட பெருமூச்சு கழுத்தில் முட்டிற்று. யானையோ? திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன். பின்னால் ஒரு யானை நின்றிருந்தால் கூட பெரிய ஆச்சரியமாயிருந்திருக்காது என்று பிற்பாடு தோன்றிற்று. கேசவனின் பிளிறல் எழுத்தாக படரும் போதெல்லாம் அது ஒலியாக மாறி என் காதில் ஒலித்தது. தம்புரானும் கேசவனும் சந்திக்கும் இடங்களிலெல்லாம் மனம் மெல்ல உற்சாகமடைவதை கவனித்தேன். வாசிப்பின் ஊடே அந்தக் கட்டங்களை மனம் ஆவலுடன் எதிர்பார்த்தது.

Photobucket

யானையும் ரயிலும் எந்த வயதிலும் பார்க்கச் பார்க்கச் சலிப்பு ஏற்படுத்தாது என்பது உண்மையோ என்னவோ. வேண்டுதலுக்காக ஒருமுறை சபரிமலை செல்லும் போது இயற்கையாகத் திரியும் காட்டு யானைகள் எங்காவது தூரத்தில் தட்டுப்படுமா என்று மனம் அலைபாய்ந்தது. நாங்கள் கடந்தவொரு இடத்தில் யானையின் சாணத்தை கண்டேன். சாணம் இளஞ்சூடாக இருந்தால் இப்போதுதான் அந்த இடத்தை கடந்திருக்கும் என்று ஒருவர் துப்பறிந்து திகிலுடன் சொன்னார். என்னை விட குருசாமிக்குத்தான் மிக ஆவலாக இருந்தது. இருபத்தைந்து வருடங்களில் அவர் ஒரு முறை கூட யானைகளைப் பார்த்ததில்லை என்றா¡ர். சீசன் சமயங்களில் யானைகள் அங்கு வராது என்றார்கள் கடைக்காரர்கள். ஏதோவொரு வருடத்தின் சீசனின் இறுதிக் கட்டத்தில் மனித நடமாட்டம் குறைந்து போய் பெருத்த பிளிறல் ஒன்று கேட்டதையும் கடைக்காரர்கள் அலறியடித்து ஒன்று கூடி கையிலிருந்த டப்பாக்களை அடித்து ஒலி எழுப்பியதில் அது காணாமற் போனதையுடன் அவர் விவரிக்க சுவாரசியமாய் கேட்டுக் கொண்டிருந்தோம்.

ஜெயமோகனின் முந்ததைய சிறுகதைகளிலும் யானைகளும் பாகன்களும் உலவியிருக்கிறார்கள். 'காடு' நாவலில் ஒரு கொம்பன் புத்தகம் முழுக்க உலவிக் கொண்டிருப்பான். குட்டப்பன் ஒரு முறை சொல்வான். (நினைவிலிருந்து தோராயமாக) "காட்டுக்கு ராஜா என்று சிங்கத்தை தெரியாத்தனமா சொல்லிப் போட்டான்கள். சே..என்ன ஒரு மிருகம் அது. கிண்ணத்தை களவாண்டவன் மாதிரி எப்பவும் ஒரு தாழ்ந்த பார்வை. ராஜ கம்பீரம்னா அது யானையல்லோ"... களவாணி மாதிரி பதுங்கிப் போகும் சிங்கத்தின் பிம்பம் மனதில் வந்து வாசிக்கும் போதெல்லாம் சிரிப்பை வரவழைக்கும் பகுதி அது.

ஆனால் 'மத்தகம்' போன்றதொரு பெருத்த அதிர்வை அவை ஏற்படுத்தினதில்லை. குறுநாவலை வாசித்து முடித்து சில கணங்களுக்கு எதுவும் செய்யத் தோன்றாமல் அமர்ந்திருந்தேன். உறங்கச் செல்வதற்கு முன் பல் துலக்கும் செயலையும் நேற்று தவிர்த்து விட்டிருந்தேன். மனம் முழுக்க கேசவனே நிரம்பியிருந்தான். வழக்கத்திற்கு மாறாக உடனே உறங்க முடியாமல் குறுநாவலின் பல வரிகள் மனதிற்குள் ஓடிக் கொண்டேயிருந்தன. பக்கத்தில் படுத்திருந்த மகள் தூக்கத்தில் காலை தூக்கி என் மீது போட்டாள். யானையின் தும்பிக்கை மேலே விழுந்தாற் போல் தோன்றியது. சிரிப்புடன் எண்ணங்களை வேகமாக கலைத்தபடி உறங்கப் போனேன்.

()

என்னால் இதைப் போன்றதொரு படைப்பை எழுத முடிந்திருக்குமா என்று நப்பாசையுடன் யோசித்துப் பார்த்தேன். மனம் ஒரு கணம் பதறி அடங்கியது. ஒருவேளை முடியலாம்தான். ஆனால் அதற்குப் பின்னால் தேவைப்படும் பிரம்மாண்டமான உழைப்பும் காலமும் மலைக்க வைத்தது. நூறு வருடங்கள் பின்னோக்கிய மலையாள தேசத்தின் கலாச்சாரத்தையும், தம்புரான்களின் சடங்கு, சம்பிரதாயங்களையும் பற்றின தரவுகள் தேவை. யானைகளையும் பாகன்களையும் அருகிலிருந்து குறைந்தது ஒரு வருடத்திற்காவது கூர்ந்து அவதானித்திருக்க வேண்டும். யானையின் சாணத்தை அதன் வெதுவெதுப்புடன் அள்ளி முகர்ந்திருக்க வேண்டும். தமிழின் வார்த்தைகளை அதனுடைய அழகியல் உணர்வுடன் நுட்பமாக பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கும் மேலாக ஏதோ ஒன்று நிச்சயம் இருக்க வேண்டும். அதைக் கண்டுபிடித்துவிட்டால்....

ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' படித்து விட்டு இடிந்து போய் உட்கார்ந்திருந்தது நினைவுக்கு வந்தது. அவர் மற்ற எழுத்துகளின் மீது எனக்கும் விமர்சனங்கள் உண்டு. 'எனது இந்தியா' கட்டுரை குறித்து சொல்ல என்னிடமும் சில வார்த்தைகள் உண்டுதான். ஆனால் இலக்கியம் என்று வருகிற போது அவருக்குள் ஒரு பிரம்ம ராட்சஸம் ஏறி அமர்ந்து கொள்ளும் போல. அவரின் சமீபத்திய பெருங்கதையான 'ஊமைச் செந்நாய்' கூட என்னை பெரிதாக கவரவில்லை. ஆனால் இந்த 'மத்தகம்'தான்...

யானை குறித்த பல நுட்பமான சங்கதிகள் இந்தக் குறுநாவலில் பொதிந்துள்ளன. சில பெருத்த வியப்பை ஏற்படுத்தினாலும் சில விஷயங்கள் அதீதமானதோ என்று எண்ண வைக்கிறது. யானை தன்னுடன் கூடவே உள்ள பாகன்களை விட எப்பவோ ஒரு முறை சந்திக்கிற தம்புரானைத்தான் மேலே அமர வைக்க சம்மதிக்கும் என்பது என் அறிவுக்கெட்டிய வரையில் ஒப்புக் கொள்கிறாற் போல் இல்லை. ஒருவேளை சொல்ல முடியாது. கேசவன் அப்படிப்பட்டவனாக இருக்கக்கூடும். ஜெயமோகன் மிக சுவாரசியமாக கட்டமைத்திருக்கும் கேசவனின் ஆளுமையில் இம்மாதிரியான நெருடல்களை பொருட்படுத்த தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது.

இப்போதைக்கு இதை எவற்றையும் ஆராய்வதாய் இல்லை. இன்னும் அந்த வாசிப்பனுபவம் தந்த பிரமிப்பிலிருந்து விலகாமலேயே இருக்க விரும்புகிறேன்.

()

எந்தவொரு சர்வதேச இலக்கியப் படைப்பாளியின் தரத்திற்கு சற்றும் குறைவில்லாமல் நம்முடைய தமிழிலும் படைப்பாளிகள் இருக்கிறார்கள் என்கிற பெருமித உணர்வு சாத்தியப்படுவதற்கு ஜெயமோகன் போன்ற ஆளுமைகள் காரணமாய் இருக்கிறார்கள். 'ஜெயமோகன் என்னுடைய ஆசான்' என்றார் ஜெயகாந்தன் ஒருமுறை. வயதான காலத்தில் ஏன் இப்படி அலட்டிக் கொள்கிறார் என்று அப்போது தோன்றியது. உணர்ந்துதான் சொல்லியிருக்கிறார் என்று இப்போது தோன்றுகிறது.

மத்தகம் - குறுநாவல் - ஜெயமோகன்

அத்தியாயம் 1,2 | அத்தியாயம் 3 | அத்தியாயம் 4 | அத்தியாயம் 5

suresh kannan

Friday, December 12, 2008

சாரு வீட்டு கழிவறை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'நீயா நானா' நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிறும் தொடர்ந்து பார்ப்பது வழக்கம். கடந்த வார நிகழ்ச்சியில் 'நவீன தீண்டாமை' என்கிற புதிய சொல்லாடலை முன்வைத்து கோபிநாத் நிகழ்ச்சியை நடத்தினார். திரைத்துறையினர், அரவாணிகள், திருமண/நில தரகர்கள், மதுக்கடை பணியாளர்கள், விதவைகள், விவாகரத்து பெற்றவர்கள்/ அரசியல்வாதிகள், காவல்துறையினர் போன்றவர்களை நம் சமூகம் எந்தவித காரணங்களுமின்றி கற்பிதங்கள் காரணமாக முன்தீர்மானத்துடன் தேவையற்ற வெறுப்பை/அருவெறுப்பை/ஒதுக்குதலை அவர்கள் மீது காட்டுகிறது. இவ்வாறாக ஒதுக்கப்படுபவர்கள் ஒரு குழுவாக தங்களின் கசப்பான அனுபவங்களை தங்கள் முன் வைத்தனர். சமூகத்தின் பிரதிநிதிகளாக அமர்ந்திருந்த எதிர்க்குழுவினர் எந்த காரணங்களுக்காக தாங்கள் அவர்களை ஒதுக்குகிறோம் அல்லது ஒதுங்குகிறோம் என்பதை கூறினர்.

ஒதுக்கப்படுபவர்களின் குரல்கள் சில:

(1) நான் டாஸ்மாக்கில் சூப்பர்வைசராக பணிபுரிகிறேன். இதனாலேயே என்னை "ஊத்திக்குடுக்கற வேலைய செய்யறவன்" என்கிற அருவெறுப்போடும் கிண்டலோடும் என் பணியை நோக்குகின்றனர்.

(2) நான் ஒரு துணை நடிகை. இதனாலேயே எனக்கு பலர் வாடகைக்கு வீடு தர மறுக்கின்றனர். ஒரு படப்பிடிப்பில் வெயிலாக இருக்கிறதே என்று அருகிலிருந்த வீட்டில் நிழலுக்காக ஒதுங்கப் போகும் போது அந்த வீட்டினர் அருவெறுப்புடன் என்னை துரத்தியடித்தனர். நான் செய்த பாவம் என்ன?

(3) நான் ஒரு அரசியல்வாதி (கவுன்சிலர்). இந்த காரணத்திற்காகவே எனக்கு பெண் தர மறுத்தனர்.

(4) நான் ஒரு விவாகரத்து பெற்ற பெண். இதனால் என் பிறந்த வீட்டிலேயே என்னை துரத்தியடித்தனர். அலுவலகத்தில் சக ஆண் பணியாளர்கள் என்னை பாலியல் நோக்கில் அணுகினர். உறவினர்கள் அவர்கள் வீட்டு விசேசங்களுக்கு என்னை கூப்பிடுவதில்லை.

(5) நான் ஒரு உதவி இயக்குனன். திரைத்துறையை சேர்ந்தவன் என்ற காரணத்தினாலேயே எனக்கு வீடு தர மறுக்கின்றனர்.

(6) நான் ஒரு திருமண அமைப்பாளர். சுமார் 300 திருமணங்களை நடத்தியுள்ளேன். ஆனால் எங்களை புரோக்கர் என்கிற இழிவான நோக்கிலேயே பார்க்கின்றனர்.

(7) நான் gay, lesbian, transgender போன்றவர்களின் உரிமைகளுக்காக போராடுகிறவன். ஆனால் என்னையும் ஒரு gayவாகவே இந்தச் சமூகம் பார்க்கிறது.

பொதுச் சமூகத்தின் குரல்கள் சில:

(1) திரைத்துறையினர் அனைவரையும் நாங்கள் குற்றம் சொல்லவில்லை. ஆனால் அவர்களைப் பற்றி கேள்விப்படுகிற பெரும்பான்மையான செய்திகள் அவ்வளவு சிலாக்கியமாக இல்லை. எனவே அவர்களுக்கு வாடகைக்கு வீடு தர மாட்டோம்.

(2) திருமண தரகர் சொன்ன பொய்யால் என் திருமண வாழ்க்கையே பாதித்து மிகவும் சிரமப்பட்டேன்.

(3) பொது இடங்களில் அரவாணிகளின் அடாவடித்தனத்தால் அவர்களைப் பார்த்தாலே எரிச்சலும், கோபமும், அருவெறுப்பும் வருகிறது. ஒருபால் உறவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அருவெறுப்பாக இருக்கிறது.

(4) போலீஸ்காரர்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்களுக்கு வாடகைக்கு வீடு தருவதில்லை. பின்னால் அவர்களால் பிரச்சினை வரும் என்று பயப்படுகிறோம்.

(5) அசைவம் சாப்பிடுபவர்களை, மது குடிப்பவர்களை பிடிப்பதில்லை. அவர்களை நாங்கள் ஒதுக்குவதில்லை. நாங்கள் 'ஒதுங்கிப் போகிறோம்'. அவ்வளவுதான் விஷயம்.

()

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எழுத்தாளர் சாருநிவேதிதா இவ்வாறாக சமூகத்தின் சில பிரிவினரை பொதுச் சமூகம் ஒதுக்குவதை cultural fascism என்று வர்ணித்தார்.

.." பெரும்பாலும் விளிம்புநிலையில் உள்ள மக்களே இவ்வாறான புறக்கணிப்பை சந்திக்க நேரிடுகிறது. திரைத்துறையில் இருக்கும் டைரக்டர் ஷங்கரையோ, ரஜினிகாந்த்தையோ இச்சமூகம் ஒதுக்குவதில்லை. ஆனால் துணை நடிகர் என்றால் ஒதுக்குகிறோம். ஒரு அரவாணியை நம்மால் ஒரு நண்பராக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியை நடத்தும் ரோஸ், அந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன்பிருந்தே என்னுடைய நண்பர். அவருடன் நண்பராக பல இடங்களுக்கு சென்றிருக்கிறேன். ஒரு முறை எங்கள் வீட்டிற்கு வந்த அவரிடம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசினோம். ரோஸ் கிளம்பும் போது அவரிடம் 'rest room உபயோகித்து விட்டுப் போங்கள்' என்று நான் சொன்னதற்கு மிகவும் நெகிழ்ந்து போனார். இதுவரை தன்னிடம் யாரும் அவ்வாறு கேட்டதில்லை என்று'

... விவாகரத்திற்குப் பிறகு என்னுடைய எட்டு வயது மகளோடு வாடகைக்கு வீடு தேடி போகும் போது பெரும்பாலோனோர் வீடு தர மறுத்தனர். டெல்லியில் இருந்த போது 'ரவி' என்கிற பெயர் 'ரபி' என்று உச்சரிப்புடன் கேட்டு அதற்காகவே வீடு கிடைக்கவில்லை. அசைவம் சாப்பிடுபவர்களுக்கு வீடு தர மறுக்கின்றனர்.

...இவ்வாறான சில மனத்தடைகள் நம்மிடம் இருக்கின்றன. அவற்றிலிருந்து இந்த சமூகம் வெளிவர வேண்டும்.

()

சமூகக் குரல்களின் சார்பில் சிறப்பு விருந்தினராக வந்திருந்தவர் (பெயரைக் கவனிக்கவில்லை. கோயில் குருக்கள் தோற்றத்தில் இருந்தார்) கூறியது.

.. திரைத்துறையினர் தாங்கள் செய்யும் தொழில் குறித்து அவர்களுக்கே ஒரு பெருமிதமும் பெருமையும் இருக்க வேண்டும். அவர்களே அவர்களின் தொழிலை இழிவாக பார்க்கக்கூடாது. (நான் என் தொழில் குறித்து பெருமையே கொள்கிறேன் என்று துணை நடிகை தொழில் புரிபவர் பதிலளித்தது உரையாடலின் கூச்சலில் பெரும்பாலோரின் கவனத்திற்கு வராமல் போய் விட்டது). மதுக்கடைகளில் பெரும்பாலும் கெட்டவர்களின் நடமாட்டமும் அதிர்வுகளும் இருக்கும். எனவே அவர்களுக்கு வீடு தர மறுப்பதில் தவறில்லை.

ஒதுக்கப்படுபவர்களின் குழுவில் இருந்த அரவாணி ஒருவர் "எங்களை இந்தச் சமூகம் எல்லாவிதத்திலும் ஒதுக்கி வைக்கிறது. வீட்டிலிருந்தும் துரத்துகிறார்கள். இந்தச் சமூகமும் எங்களை அருவெறுப்புடன் பார்க்கிறது. எந்த வேலை வாய்ப்பும் எங்களுக்கு கிடையாது. இப்படி எல்லா இடங்களிலும் ஒதுக்கப்படும் அரவாணிகள் செய்யக்கூடியது பிச்சை எடுப்பதும், பாலியல் தொழில் புரிவதும்தான். சமயங்களில் வன்முறையையும் அடாவடித்தனத்தையும் சில அரவாணிகள் கையில் எடுப்பது தவிர்க்க முடியாமல் போகிறது. அதற்கு இந்தச் சமூகம்தான் காரணம் என்றார்.

நிகழ்வின் உச்சமாக, அரவாணிகளைப் பற்றி வெறுப்பாக பேசிக் கொண்டிருந்த பெண், நல்ல பண்புகளுடன் உள்ள ஒரு அரவாணியை நண்பராக ஏற்றுக் கொள்ள தமக்கு ஏதும் தடையில்லை என்று கூறி எதிர் குழுவில் இருந்த அரவாணியை கட்டித்தழுவிக் கொண்டார். இந்தச் செய்கையால் மிகவும் நெகிழ்ச்சியடைந்த நிகழ்ச்சியின் நடத்துநர் கோபிநாத் அந்தப் பெண்ணுக்கு சபையை standing ovation அளிக்கச் செய்தார்.

()

எல்லா முற்போக்கு பாசாங்கு முகமூடிகளையும் கழற்றி விட்டு இந்தத் தலைப்பினுள் என்னை நான் பொறுத்திப் பார்த்தேன். நிச்சயம் காவல்துறையினர் என்றால் எனக்கு அலர்ஜி. நான் சந்தித்தவர்களில் பெரும்பான்மையோர் தன்னிடமிருந்த அதிகார மமதையோடுதான் இருந்தார்கள். தன் கடமையை உணர்ந்து பொறுப்புடனும் மிருதுவாகவும் அணுகியவர்கள் சொற்பமானவர்களே. நிலத்தரகர்களில் பெரும்பான்மையோர் ஏமாற்றுக்காரர்களாய்த்தான் இருக்கிறார்கள். brokers excuse. திருமண தரகர்கள் பற்றிய அனுபவமில்லை.

குடிப் பழக்கம் உள்ளவர்கள் வேறு; குடிகாரர்கள் வேறு. குடியை ஒரு விடுதலையாக, மிதமோடு நாகரிகமாக அருந்துபவர்களுடன் பிரச்சினையிலலை. ஆனால் அளவுக்கதிகமாக குடித்து விட்டு ரோட்டில் விழுந்து கிடப்பவர்கள், வாந்தியெடுப்பவர்கள், மற்றவர்களுடன் தகராறு செய்பவர்கள் போன்றவர்களைக் கண்டால் நிச்சயம் எரிச்சலாக இருக்கும். அதற்காக மதுக்கடைகளில் பணிபுரிபவர்களையும் குடிகாரர்களாக நினைத்து அருவெறுப்பது முட்டாள்தனம். அதே போல்தான் விவாகரத்து பெற்றவர்களையும், திரைத் துறையில் பணிபுரிபவர்களையும் ஒதுக்குவது.

ஒருபால் உறவு கொள்பவர்கள் குறித்து ஒரு காலத்தில் எனக்கு மிகுந்த வெறுப்பும் அருவெறுப்பும் இருந்தது. ஒருபால் உறவு நாட்டமுடையவர்கள் குறித்து ராயர் காப்பி கிளப் குழுமத்தில் நடந்த விவாதத்தில் என்னுடைய அருவெறுப்பை வெளிப்படுத்திய போது 'அவர்களின் பார்வையில் நீங்கள் அருவெறுப்பாய் தெரியக்கூடும் அல்லவா?' என்று எழுதினார் பத்ரி. விரல்கள் அழுகிக் கிடக்கும் தொழுநோயாளிக்கு ஆரோக்கியமானவனின் விரல்கள் அருவெறுப்பைத்தான் தரும் என்று நாகூர் ரூமி அதற்கு எதிர்வினையாக எழுதியது ஞாபகமிருக்கிறது.

ஆனால் நாளடைவில் ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சியின் போக்கில் புரிதலின் பேரில் இன்று அது மட்டுப்பட்டிருக்கிறது எனலாம். இடது கை பழக்கம் போல் ஒருபால் உணர்வும் ஒருவகையான இயற்கை உணர்வே என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் ஒருபால் உறவு நாட்டமுடையவர்கள் சட்டபூர்வமாக திருமணம் செய்ய வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. என்றாலும் எரிச்சலான பேருந்து பயணங்களில் எப்பவாவது ஆண்குறிகள் மேலே உரசும் போது 'அட நாய்களா, இதில் விருப்பமுள்ளவர்களுடன் கூடித் தொலைங்களேன். ஏன் மற்றவர்களை தொந்தரவு செய்கிறீர்கள்' என்று கத்தத் தோன்றுகிறது.

அரவாணிகள் குறித்து பார்க்கும் போது விளிம்பு நிலையிலும் உள்ள அவர்களிடம் பொதுச்சமூகம் எல்லாக் கதவுகளையும் அடைத்து அவ்வாறு ஒதுக்குவது தவறுதான் என்று தோன்றினாலும் சிந்தனை ரீதியில்சில நடைமுறை அனுபவங்களின் போது நாம் அறிவைத் துறந்து அவற்றை உணர்ச்சியின் வழிதான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நான் பார்த்தவரை எங்கள் அலுவலகத்தில் வரும் அரவாணிகள் மிகவும் மோசமாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றனர். ஆண்களில் சிலரும் எளியவழியில் காசுபெற பெண் வேடமிட்டு வந்து தகராறு செய்து அரவாணிகளின் மீதான வெறுப்பை அதிகரிக்கச் செய்கின்றனர் என்று அரவாணிகள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுகிறது. என்றாலும் அவர்களின் உள்ளார்ந்த சமூக கோபத்தின் வெளிப்பாட்டை பொதுச் சமூகம் தன்னை மாற்றிக் கொள்ளும் சூழல் ஏற்படும் வரை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என நினைக்கிறேன்.

(பரபரப்பாக கவனிக்கப்பட வேண்டும் என்கிற உள்நோக்கத்துடனே பதிவின் தலைப்பு அமைக்கப்பட்டது. உள்ளடக்கத்திற்கும் அதற்கும் பெரிதான தொடர்பில்லை).

suresh kannan

Monday, December 01, 2008

பா.ராகவனும் காக்டெய்ல் பரோட்டாவும்

தமிழ்ப் புத்தக வாசிப்பாளர்களின் பொற்காலம் என்று இப்போதைய காலகட்டத்தை அழைக்கலாமோ (பதிப்பகங்களுக்கு பொற்காசுகளின் காலம் என்றும்) என்னுமளவிற்கு நவீன அச்சு நுட்பத்தின் உதவியோடு பல்வேறு தலைப்புகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் நான் ஓர் எழுத்தாளரின் குறிப்பிட்ட ஒரு சிறுகதைக்காக எங்கெங்கோ அலைந்து தேடியிருக்கிறேன். புதையல் போன்று காக்கும் நண்பரிடமிருந்து சிரமப்பட்டு அதனுடைய பிரதியை எடுத்து வந்திருக்கிறேன். ஆனால் இன்று அந்த எழுத்தாளரின் அனைத்து சிறுகதைகளும் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு 'உரித்த வாழைப்பழம்' போல் வாசகர்களுக்கு கிடைக்கும் செளகரியம் வாய்த்திருக்கிறது.

மோகன்தாஸ் காந்தி பற்றிய தலைப்பில் தேடினால் குறுக்கும் நெடுக்குமாக முன்பெல்லாம் பல வகைகளில் புத்தகங்கள் கிடைக்கும். ஆனால் கோட்சேவைப் பற்றி? கஷ்டம். காக்கி அரை நிஜார் போட்டுக் கொண்டு RSS முகாம்களில் தேடினால் ஒருவேளை கிடைக்கலாம். ஆனால் சந்தனக் கடத்தல் வீரப்பனும் புனித பிம்பாகி விட்ட இன்றைய நிலைமை வேறு. எதிர்மறையான ஆளுமைகளைப் பற்றிய புத்தகங்களும் சுலபமாக நிறைய கிடைக்கின்றன. அப்படிப்பட்டதோர் எதிர்மறை ஆளுமையான கொலம்பிய போதைக் கடத்தலின் முன்னோடியாக இருந்த Pablo Emilio Escobar Gaviria (1949 - 1993) என்பவரைப் பற்றின புத்தகம் பா.ராகவன் எழுதிய 'என் பெயர் எஸ்கோபர்'. (தில் திகில் திடுக்கிடல்)

Photobucket

ஒரு நாட்டின் அதிபயங்கர குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கிறவரே தான் கைது செய்து நடத்தப்படும் விதம் குறித்து அந்த நாட்டு அரசாங்கத்துடன் ஓர் ஒப்பந்தத்தைப் போட்டு அதை நிறைவேற்றிக் கொண்டிருக்க முடியுமா?

கொலம்பியாவில் இது நடந்திருக்கிறது. பெரிய மனது வைத்து 5 வருடங்கள் மாத்திரமே சிறைப்பட 'விரும்பிய' அவருக்கென்றே நவீன வசதிகளுடன் ஒரு சிறையைக் கட்டி அதில் அவரை 'தங்க' வைத்திருக்கிறது கொலம்பிய அரசு. விருப்பப்பட்ட நேரத்தில் அவர் வெளியே போய் தனக்கு பிடித்தமான கால்பந்து விளையாட்டை ரசித்து திரும்பலாம். (ஒரு முன்னாள் முதல்வரின் மீதுள்ள வழக்குகளை பிரத்யேகமாக விசாரிப்பதற்கென்றே தனி நீதிமன்றங்கள் சென்னையில் கட்டப்பட்டதை இச் சமயத்தில் பெருமையுடன் நினைவு கூரலாம்). கொலம்பியாவின் அப்படிப்பட்ட சிறப்பு வி.ஐ.பி. குடிமகனைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்தப் புத்தகத்தினுள் பயணம் செய்வது அவசியம்.

பல வருடங்கள் காலனியாதிக்கத்தின் சுரண்டலில் அவதிப்பட்ட நாடு கொலம்பியா. பல்வேறு புரட்சி இயக்கங்களின் முயற்சி மூலம் சுதந்திரம் அடைந்தாலும் உள்நாட்டு அரசியல் கலவரங்களாலும் போர்களாலும் மக்களுக்கு நிம்மதியில்லை. இரு வல்லரசுகளின் போட்டியில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. ஏற்படுத்தும் குழப்பங்கள் வேறு. இயக்கங்களுக்கு ஆயுதம் வாங்கப் பணம் வேண்டும். என்ன வழியென்று யோசித்தில் கோகெய்ன் என்ற போதைப் பொருளை தயாரிக்க உதவும் கோகோ பயிர் தென்படுகிறது. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் கொலம்பிய சரக்கு என்றால் நிச்சயம் உன்னதமாக இருக்கும் என்றொரு நம்பிக்கை இருந்ததால் பணம் டாலர்களில் கொட்டுகிறது. கொலம்பியாவின் குடிசைத் தொழிலாக இந்த போதைப் பொருள் தயாரிப்பு இருந்ததால் பல்வேறு சிறு குழுக்கள் இந்த சர்வதேச வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

()

சில்லறை கார் திருடராக இருந்த எஸ்கோபர், (அதற்கு முன் கல்லறைகளில் உள்ள நினைவுக்கற்களை திருடி விற்றவர் என்று சொல்லப்படுகிறது) தன்னுடைய பணக்காரக் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள இந்த போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட ஆரம்பிக்கிறார். சாதுர்யத்தாலும் தைரியத்தாலும் குறுகிய காலத்திலேயே தன்னுடைய தொழிலில் முன்னேறுகிறார். ஒரு முறை காவல்துறையினரிடம் மாட்டிக் கொண்டு நீதிபதியை மிரட்டியும் பலனளிக்காமல் சிறிது காலம் சிறையில் இருந்த எரிச்சலில் அவருக்கு தோன்றுவதுதான் 'தன்னைப் போன்ற போதை வியாபாரிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு அமைப்பை ஏற்படுத்துவது (மெடேலின் கார்ட்டல்); அதன் மூலம் இந்த தொழிலை ஒழுங்குபடுத்துவது'; அரசியலில் இணைந்து தனக்கொரு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்வது.

இதற்கு முன்னால் இதை யாரும் யோசிக்கவோ முயற்சிக்கவோ இல்லாமலிருந்ததால் எஸ்கோபர் போட்டுக் கொடுத்த தார் ரோட்டின் மேலே போதைப் பொருள் வியாபாரம் தள்ளாடாமல் சுகமாக பயணித்தது.

சினிமாப்படங்களின் தலைப்புகளின் கீழொரு tag line போடுவது போல எஸ்கோபரின் வியாபாரத்தின் தாரக மந்திரம் 'செய் அல்லது செத்துமடி'. தன்னுடைய போதைப் பொருள் விற்பனைக்கு உதவுகிற அத்தனை அரசு இயந்திர நட்டு போல்டுகளுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் தாராளமாக பணம் தரப்படும்; அதே சமயம் தடையாக நிற்கிற எதுவும் உடனே அப்புறப்படுத்தப்படும். பணத்திற்கு ஆசைப்பட்டு உதவியவர்கள் தவிர உயிருக்கு பயந்து உதவியவர்களும் அதிகம். உதவ மறுத்த அனைவருமே எஸ்கோபரின் ஆட்களால் கொல்லப்படுகின்றனர். எனவே எஸ்கோபரின் போதை வியாபாரம் flag கட்டிப் பறந்தது. 1989-ம் ஆண்டில் உலகின் ஏழாவது பெரிய பணக்காரர் என்று forbes பத்திரிகை எஸ்கோபர் குறித்து எழுதுமளவிற்கு பெரிய flag. இந்தப் பணம் அத்தனையையும் சுவிஸ் பேங்கில் போட்டு பதுக்காமல் தன்னுடைய பாதுகாப்பிற்காக தான் வாழும் மெடேலின் நகரின் அடித்தட்டு மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் பெரும்பான்மையை பூர்த்தி செய்ததில் ராபின் ஹ¥ட் இமேஜூம் கிடைத்தது. ஆனால்....

அந்தப் பயணம் இப்படியே சுகமாய் இருக்கவில்லை.

()

எஸ்கோபருக்கு போட்டியாய் தொடங்கப்பட்ட இன்னொரு அமைப்பான காலி கார்ட்டல், கெடுபிடிகளை தாங்க முடியாமல் கொலம்பிய அரசாங்கத்துக்கு எதிராக எஸ்கோபர் அறிவிக்கிற யுத்தம், சட்ட அமைச்சர் படுகொலை, விமான வெடிப்பு, M-19 என்கிற புரட்சிக்குழுவை உபயோகப்படுத்தி நாட்டின் தலைமை நீதிபதிகளை நீதிமன்றத்திலேயே சுட்டுக் கொன்ற பரபரப்பான சம்பவம், அமெரிக்கா தந்த அழுத்தத்தில் மிகவும் கடுப்படைந்த கொலம்பிய அரசாங்கம் கொலை வெறியுடன் தேடியவுடன் சரணடைவதாக சொல்கிற எஸ்கோபரின் நாடகம், பிறகு...

அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் மேற்சொன்ன புத்தகத்தைப் படிப்பதின் மூலம் அதை சாத்தியப்படுத்திக் கொள்ளலாம்.

()

பா.ராகவன் எஸ்கோபரின் ஆரம்பத்தையும் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் மிகத் தெளிவாக படம் வரைந்து பாகங்களை குறித்திருக்கிறார். க்ரைம் நாவலின் தொடக்கம் போல ஒரு கடத்தல் சம்பவம், கொலம்பியாவின் வரலாறு குறித்த சுருக் அறிமுகம், கொகேய்னின் சுவை, எஸ்கோபரின் ஆரம்ப சாகசங்கள், மெடேலின் கார்ட்டல் உருவான விதம், அதன் அசுரத்தனமான வளர்ச்சி, அரசாங்கத்துடனான யுத்தம் என்று எஸ்கோபரைப் பற்றின ஒரு சித்திரத்தை மிகத் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால்..

"இல்ல மச்சான்.. இன்னா மேட்டர்னா"... என்கிற தொனியில் அவரது மொழி வாசகரது தோள் மீது கை போட்டுப் பேசுகிறது. ராணி, குமுதம் படிப்பவர்கள்தான் தன்னுடைய வாசகர்கள் என்பதை பா.ராகவன் முன்னதாக தீர்மானித்துக் கொண்டதைப் போல் எல்லாவற்றையும் மிகவும் எளிமைப்படுத்தி விடுகிறார். இது தவறில்லை என்றாலும் இந்த தொனி அதீதமாகிப் போகும் போது இந்தப் புத்தகம் "பொழுது போக்கு நாவல்' தரத்திற்கு இறங்கிப் போகிற சங்கடம் நேர்கிறது. 'சூப்பர் கில்லாடிய்யா இவன்' என்று எஸ்கோபரின் ஆளுமை மீது வாசகன் பிரமிப்பும் கிளர்ச்சியும் அடைவதோடு இந்தப் புத்தகம் முடிந்து விடுகிறதோ என்று தோன்றுகிறது. சுருங்கக் கூறின் இண்டர்நேஷனல் கொலம்பியா மைதாமாவில் லோக்கல் நாமக்கல் முட்டையை ஊற்றி அடித்து ஒரு காக்கெடயில் பரோட்டாவை தந்திருக்கிறார் ராகவன். உதாரணத்திற்கு சில (பாரா)க்களை பார்ப்போம்.

... எந்த கோயிந்து தன் சொந்தப் பெயரில் ரூம் எடுக்கும்? ஆகவே கொலம்பியப் பெயர்களில் யார் யார் அறை எடுத்திருக்கிறார்கள் என்று பார்த்தார்கள். ம்ஹ¥ம். ஒருத்தர் கூட இல்லை. எஸ்கோபர் படு ப்ரில்லியண்டாக ஈக்வடாரில் அதிகம் புழக்கத்திலுள்ள பெயர் ஒன்றையே அளித்திருந்தான். அவனது ஆள்களும் ஆவடி மருதன், தூத்துக்குடி சிவசுப்பிரமணியன், மாயவரம் முத்துக்குமார், சத்தியமங்கலம் நவநீத கிருஷ்ணன், அம்பத்தூர் சுஜாதா முத்துராமன் என்று எ·ப்.எம். ரேடியாக்களுக்கு நேயர் விருப்பம் கேட்கிறவர்கள் மாதிரியே பெயரளித்தார்கள்... (பக்கம் 40)

.. அது ஒரு ரகசிய ஆலோசனைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் இடம். வெளியே இருந்து பார்த்தால் தரைக்கடியில் அப்படியொரு ரகசியப் பதுங்குதளம் இருப்பதே தெரியாது. மேலுக்கு ஒரு வேலு மிலிட்டரி ஹோட்டல். அந்த ஹோட்டலும் எஸ்கோபரின் அடியாள் ஒருவனுடையதுதான். அவன் தன்னுடைய சகலபாடியை கல்லாவில் உட்கார வைத்துவிட்டு வாசலில் காவலுக்கு நின்றபடி எப்போதும் முட்டை பரோட்டா தட்டிப் போட்டுக் கொண்டிருப்பான். .. (பக்கம் 101).

என்றாலும் ராகவனின் இந்த மொழிக்குப் பழகி விட்டால் மிகச்சுலபமாக புத்தகத்திற்குள் இறங்கி விட முடிகிறது. சுமார் இரண்டு மணி நேரத்தில் இந்த 220 பக்க நாவலை.. மன்னிக்கவும் புத்தகத்தை படித்து முடித்து விட முடிந்தது. ராகவனின் பிரத்யேகமான நகைச்சுவை கலந்த மொழி நம்மை பல இடங்களில் புன்னகைக்கவும் வாய்விட்டுச் சிரிக்கவும் வைக்கிறது. எஸ்கோபர் அரசாங்கத்தின் முன் வைக்கும் ஒப்பந்தத்திற்கு அரசாங்கம் பதில் சொல்வதாக சித்தரிக்கப்பட்டிருப்பதை 'ராகவன்' மொழியில் கவனியுங்கள்.

.. அன்புடையீர் வணக்கம், வந்தனம். சுஸ்வாகதம். நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறோம். இன்னும் பத்து நிபந்தனைகளைப் பின் இணைப்பாக அனுப்ப மறந்திருப்பீர்களானால் அதையும் காலக்ரமத்தில் அனுப்பி வையுங்கள். சேர்த்துக் கேட்கிறோம். ஆனால் கைதாகச் சம்மதம் என்று ஒரு வார்த்தை சொல்லி வயிற்றில் பீர் வார்த்தீர்களே, அது! அந்த அந்த சொல்லுக்காக உங்களுக்குக் கோயிலே கட்டுகிறோம் என்று விழுந்து சேவித்தார்கள்... (பக்கம் 174).

'போய் விட்டான்! (பக்கம் 55)' என்கிற இரண்டு வார்த்தைகளுக்கு முன்னால் இருக்கிற ஒரு அதிரடியான பத்தியை நிச்சயம் நீங்கள் படிக்க வேண்டும்.

()

பொதுவாக உலக வரலாற்றையும், சரித்திரத்தின் முக்கியமான முந்தைய, சமகால நிகழ்வுகளையும் பிற நாட்டுக் கலாசாரங்களையும், உணவுகளையும் அறிந்து கொள்ளும் ஆர்வமும் நேரமும் நம்மில் பெரும்பான்மையவர்க்கு இல்லை. பல பேருக்கு தினத்தந்தியில் ஆரம்பிக்கும் நாளின் தொடக்கம் இரவில் 'அரசி' தொலைக்காட்சி சீரியலோடு முடிந்து போய்விடுகிறது.

.. என்செபொலேடோ என்று ஒருவித கடல் பாசியையும் நாலைந்து ரக மீன்களையும் பட்டாணியையும் சேர்த்துப் போட்டு அண்டாவில் சூப் காய்ச்சி நாளெல்லாம் குடிப்பார்கள். ·ப்ரிட்டாடா என்று ஒரு பதார்த்தம் அங்கே இன்னும் ·பேமஸ். வெண்பன்றிக் கறியுடன் புதினாவைச் சேர்த்து அரைத்து சப்பாத்தி மாவு மாதிரி பதத்துக்குக் கொண்டுவந்து, இரண்டு பன்களுக்கு நடுவே வைத்து மூடி மைக்ரோவேவ் அவனில் கொஞ்சம் போல் வேகவைத்து எடுத்து தேனில் தோய்த்துச் சாப்பிடுவார்கள்.

இங்கே இதெல்லாம் என்னத்துக்கு என்று அந்தராத்மா கேள்வி கேட்டால் அடக்கி வைக்கவும். வேறு எந்த ஜென்மத்தில் நாம் ஈக்வடாரையெல்லாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்? .. (பக்கம் 38)

என்று நூலாசிரியரே இதை ஓரிடத்தில் கிண்டலடிக்கிறார்.

பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் எஸ்கோபரின் ஆளுமை ஒரு கதாபாத்திரமாக குறுக்காக நடந்திருக்கிறது. எஸ்போரைப் பற்றின பிரத்யேக முழுத்திரைப்படம் ஒன்று தயாரிப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. எஸ்கோபரைப் பற்றின பல நூற்கள், வீடியோக்கள் உள்ளன. Mark Bowden-ன் Killing Pablo என்கிற நூல் எஸ்கோபர் கொல்லப்பட்டதை பிரதானமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது.
()
..காலி கார்ட்டலின் போதைப் பணத்தை வெளுக்கும் விதம் குறித்த சார்ட் ஒன்று இந்தப் பக்கங்களில் தரப்பட்டிருக்கிறது. பொழுது போகாத நேரத்தில் பூதக் கண்ணாடி வைத்து கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணிப் பாருங்கள். கண்டிப்பாக ராத்திரி தூக்கம் வராது! (பக்கம் 85).

வருங்காலத்தில் ஒருவேளை உதவுமோ என்று இந்த சார்ட்டை முழுப் புத்தகத்திலும் நான் தேடிப் பார்த்தேன். காணோம். வாசகர்கள் ராத்திரிகளில் நிம்மதியாக தூங்க வேண்டும் என்கிற பதிப்பகத்தினரின் நல்லெண்ணத்தைப் பாராட்டுகிறேன்.

'கொலம்பியாவில் போதை அடிமைகள் கிடையாது' என்று ஒரிடத்தில் எழுதப்பட்டிருக்கிறது. பெரும்பாலான கொகேய்ன் அமெரிக்காவிற்குள் கடத்தப்பட்டாலும் போதைப் பொருள் தயாரிப்பின் தாயகத்திலேயே அதற்கு வாடிக்கையாளர்கள் கிடையாது என்பது முரணாக இருக்கிறது. இந்த நூல் எந்த பத்திரிகையிலாவது தொடராக வந்ததா என்பதைப் பற்றின குறிப்பும் புத்தகத்தில் இல்லை. ஒவ்வொரு அத்தியாயமும் ஆர்வமூட்டும் பரபரப்புடன் முடிவதை வைத்து யூகித்துத்தான் இந்தக் கேள்வி எழுகிறது.

()

இந்த நூல் ஜனரஞ்சகமான முறையில் எழுதப்பட்டிருந்தாலும் கொலம்பியாவைப் பற்றியும் அங்குள்ள போதை உலகத்தைப் பற்றியும் ஒரு சுவாரசியமான அறிமுகத்தை தந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் அதன் கலாசாரம் பற்றி மேலும் அறிய ஆர்வம் கொள்கிற வாசகனுக்கு இந்நூல் நிச்சயம் ஒர் ஆரம்பப் புள்ளியாக இருக்கும்.

என் பெயர் எஸ்கோபர் (பா.ராகவன்)
224 பக்கங்கள், விலை ரூ.90/-
கிழக்கு பதிப்பகம், சென்னை-18.
ISBN 978-81-8368-579-5
கிழக்கு பதிப்பகத்தின் சம்பந்தப்பட்ட சுட்டி

suresh kannan