Monday, September 21, 2015

செம்மீன் 50 : கருத்தம்மாக்களின் நீங்காத துயரம்


ஐம்பதுகளில்  பிறந்த எந்தவொரு மலையாளியையும் சந்தித்து அவருடைய nostalgia பட்டியலைக் கேட்டால் அதில் 'செம்மீன்' திரைப்படம் உறுதியாக இடம்பெற அதிக வாய்ப்புண்டு. அந்த அளவிற்கு கேரளக்  கலாசாரத்தின் ஒரு பகுதியாகவே ஆகி விட்டிருக்கிறது இத்திரைப்படம். தென்னை, களரி, ஓணம், கதகளி ஆகியவை போன்று இத்திரைப்படமும்  கடவுள் தேசத்தில் தன்னிச்சையாக பதிந்து போன ஓர் அடையாளச் சின்னம். கேரள சமூகம் தங்களின் ஆழ்மனதில் உறைந்து போன இத்திரைப்படத்தை பல்வேறு சமயங்களில் நினைவுகூர்ந்து கொண்டே இருக்கிறது.  'கடலினக்கரை போனோரே.....'.. என்கிற அழியாப் புகழ் பெற்ற பாடலின் மூலம் தமிழ் சமூகமும் கூட இதைச் சட்டென்று கண்டு கொள்ளும். 1965-ல் வெளிவந்த இந்த திரைப்படம் சமீபத்தில் ஐம்பது வருடங்களை பூர்த்தி செய்ததையொட்டி மலையாளப் பத்திரிகைகள்  இத்திரைப்படத்தை ஒரு கொண்டாட்ட மனநிலையுடன் நினைவுகூர்ந்திருக்கின்றன. ஆங்கிலப் பத்திரிகையொன்றில் பரீக்குட்டியாக  நடித்த நடிகர் மதுவின் நேர்காணல் வெளிவந்துள்ளது. அழகியல் நோக்கிலும் நுட்ப ரீதியிலும் கச்சிதமாக உருவான தென்னிந்தியாவின் முக்கியமான துவக்க சினிமா என்று விமர்சகர்களால் அடையாளங்காட்டப்படும் இத்திரைப்படம் இந்தியக் குடியரசால் தங்கத்தாமரை விருது பெறும் முதல் தென்னிந்திய சினிமா என்கிற சிறப்பையும் பெற்றுள்ளது. பிராந்திய அரசியலின் ஆதிக்கத்தை தாண்டி இத்திரைப்படம் விருது பெறுவதற்கு இராமாயணத்து அணில் போல தானும் காரணமாயிருந்ததை எழுத்தாளர் பாரதிமணி இதே உயிர்மையில் எழுதிய கட்டுரையொன்றில் (செம்மீனும் தேசிய விருதுகளும்) நினைவு கூர்ந்துள்ளார்.

பிரபல மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கர பிள்ளை 1956-ல் எழுதிய புதினத்திலிருந்து இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டது. மலையாள இலக்கியத்தில் விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் துயரங்களை எழுத்திலக்கியத்தில் பதிவு செய்த முன்னோடிகளில் தகழி பிரதானமானவர். அதுவரை யதார்த்தவாத படைப்புகளாக உருவாக்கிக் கொண்டிருந்த தகழி, கற்பனாவாத அடிப்படையில்  உருவாக்கிய முதல் புதினம் 'செம்மீன்'. சுமார் 20 நாட்களிலேயே தகழியால் எழுதி முடிக்கப்பட்டு விட்டதாக கூறப்படும்  இந்தப் புதினம், இந்து மதத்தைச் சார்ந்த மீனவப் பெண்ணான கருத்தம்மாவிற்கும் பரீக்குட்டி எனும் இஸ்லாமிய இளைஞனுக்கும் இடையிலான காதல் உணர்வுகளை உள்ளடக்கியிருந்ததால் அது வெளிவந்த காலக்கட்டத்தில் பெரிதும் சர்ச்சைக்குள்ளானது. பள்ளிக்கூடம் செல்லும் வழியில் ஏறக்குறைய தினந்தோறும் காண நேரும் மீனவர்களின் வாழ்க்கையை தகழி உன்னிப்பாக கவனித்துச் சென்றது பின்னாளல் அவர் இந்தப் புதினத்தை உருவாக்கியதற்கான காரணிகளில் ஒன்றாக சொல்கிறார்கள். . 1957-க்கான கேரள சாகித்ய அகாதமி விருதைப் பெற்ற இந்தப் புதினம் பல இந்திய மொழிகளிலும் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட பல உலக மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்ட சிறப்பைப் பெற்றது. இந்தியக் கலையாக்கங்களின் பிரதிநிதித்துவமாக  UNESCO சேகரங்களில் இணைக்கப்பட்ட மலையாள நாவல் எனும் கூடுதல் பெருமையும் உண்டு. எழுத்தாளர் சுந்தரராசாமி இந்த நாவலை தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார்.

மலையாளத் திரையுலகின் மிக முக்கியமான துவக்க கால திரைப்படங்களுள் ஒன்றான 'நீலக்குயிலை' (1954) இயக்கிய ராமு கரியத், தகழியிடமிருந்து நாவலின் உரிமையை வாங்கி திரைப்படமாக்க முடிவெடுத்தார். கேரள அரசு உள்ளிட்ட பல அமைப்புகளிடமும் தயாரிப்பாளர்களிடமும் இதற்கான அவருடைய கோரிக்கை மறுக்கப்பட்டு இருபதே வயதான இஸ்மாயில் சேட் என்கிற இளைஞர் இதைத் தயாரிக்க முன் வந்தார். இத்திரைப்படத்தின் பங்களிப்பில் மேற்கு வங்கத்தைச் சார்ந்த கலைஞர்கள் அதிகம் இருந்தார்கள். இசையமைப்பாளர் சலீல் செளத்ரி, படத்தொகுப்பாளர் ரிஷிகேஷ் முகர்ஜி, 'மானச மைனே வரு' என்கிற அருமையான பாடலைப்பாடிய மன்னா டே ஆகியோர் மேற்கு வங்கத்தைச் சார்ந்தவர்கள். திரைப்படத்தை அற்புதமாக பதிவு செய்த மார்க்கஸ் பார்ட்லே ஓர் ஆங்கிலோ -இந்தியர். மலையாளத்தின் நவீன கவியான வயலார் ராமவர்மா பாடல்கள் எழுத புகழ்பெற்ற நாடகாசிரியரும் திரைக்கதையாசிரியருமான எஸ்.எல்.புரம் சதானந்தன் இதற்கு திரைக்கதை எழுதியிருக்கிறார். இத்தனை அற்புதமான கூட்டணியில் இருந்து உருவான திரைப்படம், இந்தியத் திரையில் மிக அழுத்தமான தடத்தை பதிந்து சென்றதில் வியப்பேதுமில்லை. பரீக்குட்டியாக நடிகர் மதுவும், கருத்தம்மாகவாக ஷீலாவும் பழனியாக சத்யனும் நடித்திருந்தார்கள். மூவருக்குமே அவர்களின் பிற்கால வளர்ச்சிக்கும் புகழிற்கும் செம்மீன் திரைப்படம் மிகவும் உதவிகரமாக இருந்தது. கருத்தம்மாவின் தந்தை செம்பன்குஞ்சுவாக கோட்டரக்காரா சீதரன் நாயர் அற்புதமாக நடித்திருந்தார்.


***

பொதுவாக காவியங்களிலும் புதினங்களிலும் திரைப்படங்களிலும் நாயகர்கள் தோல்வியைச் சந்திப்பது மரபில்லை. அது எதிரிகளை வீழ்த்துவதோ அல்லது காதலில் வெற்றி கொள்வதொ, அவைகளில் தற்காலிகமான தடைகள் இருந்தாலும் அதை முறியடித்துக் கொண்டு தங்களின் நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதே நாயகர்களின் அடையாளம். நாயகனின் பிம்பம் வெற்றிகரமாக உருவாவதில்தான் படைப்பின் வெற்றியும் அடங்கியிருப்பதாக நம்பப்படுகிறது. தோல்வியைச் சந்திக்கும் நிராசையான நாயகர்களை எவருக்கும் பிடிப்பதில்லை. காதல் தோல்வி நோக்கில் நாயகர்களாக நினைவுகூரப்பட்டவர்கள் என்றால் கூட அம்பிகாபதி-அமராவதி என்று சில பெயர்களை மட்டுமே வரலாறு பதிவு செய்திருக்கிறது.

இந்தியத் திரையில் காதல் தோல்வியின் மிக அழுத்தமான பிம்பம் என்றால் அது 'தேவதாஸ்' தான். சரத் சந்திர சட்டோபாத்யாயா 1917-ல் எழுதிய இந்த வங்க நாவல் பல்வேறு இந்திய மொழிகளில் வெவ்வேறு காலக்கட்டங்களில் சினிமாவாக உருவாகியிருக்கிறது. தெலுங்கு வடிவத்தில் இந்தப் பாத்திரத்தில் நடித்த நாகேஸ்வரராவின் நடிப்பு அவருக்கு மிகுந்த புகழைத் தேடித்தந்தது. இதைத் தவிர பொதுவாக, துன்பவியலின் நாயகன் என்கிற பிம்பத்தை இந்தி சினிமாவில் குருதத் அழுத்தமாகக் கொண்டிருந்தார்.  காதல் தோல்வி சார்ந்த திரைப்படங்களை இயக்குநர் ஸ்ரீதர் தமிழில் பெருமளவு உருவாக்கினார். இங்கே ஜெமினிகணேசன் அந்த பிம்பத்தைக் கொண்டிருந்தார். இந்த காதல் தோல்வி நாயகனின் வரிசையில் செம்மீனின் 'பரீக்குட்டி' இன்னொரு அழுத்தமான பிம்பம். நடிகர் மது இந்தப் பாத்திரத்தை திறம்பட கையாண்டிருந்தார். அவர் மலையாளத்தின் புகழ் பெற்ற நடிகராக பல படங்களில் நடித்திருந்தாலும் 'செம்மீனின்' பரீக்குட்டி பாத்திரத்தின் மூலமாகவே இன்றளவும் அதிகம் நினைவுகூரப்படுகிறார். பிரேம்நசீரும் சத்யனும் நாயகர்களாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த போது 'பரீக்குட்டி'யின் மூலம் வெளியான மதுவின் அற்புதமான நடிப்பின் மூலமாகவே அவர்களைத் தாண்டி வர அவரால் முடிந்தது. செம்மீன் திரைப்படத்தில் இவர் வரும் காட்சிகள் சொற்பமே என்றாலும் ஓர் அப்பாவி காதலன் பாத்திரத்தை மிக உருக்கமாகவும் இயல்பாகவும் நடித்து பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்தார்.

என்றாலும் 'செம்மீன்' படைப்பின் மையம் என்றால் அது கருத்தம்மாவின் ஆழமான துயரம்தான். அதை அழுத்தமாக உணர்வதின் மூலம்தான் இந்தப் படைப்பிற்குள் நாம் நுழைய முடியும். அது நாவலாகட்டும் அல்லது சினிமாவாகட்டும்,  இரண்டிலுமே கருத்தம்மாவின் துயரமான மனநிலையே பிரதானமாக விவரிக்கப்பட்டுள்ளது. அவள்தான் இந்தப் படைப்பின் ஆன்மா. உலக அளவில் அத்தனை சராசரியான பெண்களும்  எதிர்கொள்ளும் துயர மனநிலையின் ஒரு கச்சிதமான புறவடிவமாக கருத்தம்மாவை காண முடியும். குடும்பத்தாலும் சமூகத்தாலும் கற்பு சார்ந்து ஒரு பெண் எதிர்கொள்ளும் எல்லா நெருக்கடிகளையும்  துயரங்களையும் கருத்தம்மா தொடர்ந்து எதிர்கொண்டேயிருக்கிறாள். புனைவின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கருத்தம்மாவின் துயர மனநிலையை, தகழி மிக நுட்பமாக விவரித்துச் செல்கிறார்.

தன்னிச்சையாக ஏற்பட்ட  உணர்வில் சிறுவயது தோழனான அப்பாவி பரீக்குட்டியை நேசித்ததைத் தவிர அவள் வேறு பாவம் ஏதும் செய்யவில்லை. ஆனால் இந்த இயல்பான விஷயத்திற்காக வாழ்க்கை முழுவதும் அவள் உளரீதியாக எத்தனை நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது? இந்துப் பெண்ணான தன் மகள் மீனவச் சமுதாயத்தின் கட்டுப்பாடுகளுக்கு மாறாக முஸ்லிம் இளைஞனோடு போய் விடுவாளோ என்று கருத்தம்மாவின் தாய் படும் சந்தேகத்தையும் அது தொடர்பான மனஉளைச்சலையும் அவள் சந்திக்க வேண்டியிருந்தது. பரீக்குட்டியிடம் கடனாக வாங்கிய பணத்தில் தோனியையும் வலையையும் வாங்கும் கறுத்தம்மாவின் தகப்பன் செம்பன்குஞ்சு, பின்பு பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றிய காரணத்தினால் பரீக்குட்டியை எண்ணியும் கலங்க வேண்டியிருந்தது. தாயின் சந்தேகத்தின் மற்றும் தந்தையின் துரோகத்தின் காரணமாக எழும் குற்றவுணர்ச்சிக்கும், பரீக்குட்டியின் மீதெழும் பரிதாப உணர்ச்சிக்கும் காதலுணர்ச்சிக்குமான நெருக்கடியில் தாமே முன்வந்து பரீக்குட்டியிடம் தம்மை இழந்து விடுவோமோ என்கிற தத்தளிப்பிற்கும் இடையே ஆட்படுகிறாள். இதன் காரணமாகவே இந்த ஊரிலிருந்து சென்றால் போதும் என்று வேற்று ஆணுடன் திருமணமாகி செல்கிறாள். என்றாலும் கூட கணவனின் சந்தேகம் மூலமாக அவளின் கற்புநிலை சார்ந்த சந்தேகக் கேள்விகள் அவளைத் தொடர்ந்து துரத்திக் கொண்டேயிருக்கின்றன.

இந்த மனப்புழுக்கங்களின் மிக உச்சமான சிகரம் ஒன்றிருக்கிறது. மீனவச் சமுதாயத்திலுள்ள பெண்கள் கற்புநிலை தவறாமல் வாழ்வதுதான் கணவனின் உயிருக்கு பாதுகாப்பானது என்றும் அதை மீறினால் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் கணவனின் உயிரை கடல் தாய் பறித்துக் கொள்வாள் என்கிற தொன்மம் சார்ந்த பலத்த நம்பிக்கை இருக்கிறது. பெண் இனத்தை ஒடுக்கி வைக்க ஆணாதிக்க சிந்தனை சார்ந்த சமூகம் உருவாக்கிய பலவிதமான உத்திகளுள் ஒன்றுதான் இது. கடல்புரத்திலேயே சில மீனவப் பெண்கள் அரசல்புரசலான ஒழுக்கக்கேடுகளோடு இருப்பதையும் அவர்களின் கணவன்மார்கள் கடலம்மையால் விழுங்கப்படாமல் இருக்கிற நடைமுறைகளையும் கருத்தம்மா அறிந்துதான் இருக்கிறாள். என்றாலும்  அவளுடைய ஆழ்மனதில் மீண்டும் மீண்டும் உபதேசிக்கப்பட்டு உறைய வைக்கப்பட்ட நம்பிக்கை வேறு  தொடர்ந்து அவளைத் துன்புறுத்திக் கொண்டேயிருக்கிறது.


காதல் தோல்வியுணர்வும் அதற்கான துயரமும் சோகமும் ஆண்களுக்கே உரித்தானது, அவர்கள்தான் காதலிலும் அதற்குப் பின்னான பிரிவின் துயரத்திலும் உண்மையாக இருக்கிறார்கள் எனவும் பெண்கள் என்னும் மாயப்பிசாசுகள் சந்தர்ப்பத்திற்கேற்றாறு தங்களை சாமர்த்தியமாக தகவமைத்துக் கொள்கிறார்கள் என்பதுமான ஓர் உண்மையில்லா சித்திரம் பொதுச் சமூகத்தில் நிலவுகிறது. சினிமாக் கதைகளிலும் பாடல்களிலும் ஓர் அப்பாவி ஆணை காதல் என்கிற பெயரில் மோசக்கார பெண் ஏமாற்றிச் சென்று விட்டாள் என்கிற தொனியில் பெண்களை திட்டியும் பழித்தும் கிண்டலடித்துமே பல பதிவுகள் உள்ளன. காதல் தோல்வி காரணமாக ஒரு பெண் பைத்தியமாக திரிவதை எவராவது பார்த்துண்டா என்பதும் இவர்கள் செய்யும் கிண்டல். ஆனால் இதில் ஒரு பகுதிதான் உண்மையுள்ளது. காதலை ஒரு விளையாட்டாக, நேரக்கொல்லியாக, சந்தர்ப்பவாதமாக பயன்படுத்தும் ஆண்களைப் போலவே சில பெண்களும் இருக்கலாம்.

உண்மை நிலை என்னவெனில், பெண்கள் தங்கள் காதல் துயரத்தை வெளிப்படையாக வெளிப்படுத்துவதற்கான வெளி இங்கு இல்லவே இல்லை என்பதே உண்மை. ஓர் ஆண் பல காதல்களைக் கடந்து வந்திருந்தாலும் தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண், ஆண் வாசனையே அறியாத தூய மனமாக இருக்க வேண்டும் என்கிற ஆண்மைய சிந்தனை மற்றும் ஆணாதிக்க சூழல் காரணமாக பெண் தன்னை ஒளித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. யாருமறியா ரகசிய முனகல்களின் மூலமும் அழுகையின் மூலமும்தான் அந்த துயரத்தை அவள் கடந்து வர முயல வேண்டும். மற்றபடி காதல் துயரத்தையும் பிரிவையும் ஆண்களை விட அதிகஅளவிலான அளவில் ஆனால் அகரீதியாக பெண் அனுபவிக்கிறாள் என்பதே உண்மை. நிஜத்தை ஏற்றுக் கொள்ளும் மனவலிமை ஆண்களை விட பெண்களுக்குண்டு என்பதாலேயே உள்ளுக்குள்ளான கசப்புடன் அந்த யதார்த்தத்தை கடந்து வரும் பக்குவத்தை பெண் கற்றுக் கொள்கிறாள். ஆணுக்காவது தங்களின் துயரத்தை மிக வெளிப்படையாக மற்றவர்களிடம் சொல்லவும் புலம்பவும் அதைக் காரணம் கொண்டு குடிக்கவுமான சுதந்திரம் இருக்கும் போது அதைச் சமூகமும் இயல்பாக ஏற்றுக் கொள்ளும் போது பெண்ணுக்கு இது மறுக்கப்படவும் அதற்காகவே பெண் அதை மறைப்பதுமான அவலமான சூழல் நிலவுகிறது.

காதல் தோல்வி அடைந்த ஆண் திருமணத்தின் மூலம் இன்னொரு பெண்ணை மணக்க வேண்டிய சூழலில் தன்னுடைய துயரத்தை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ சுட்டிக் காட்டி அந்தப் பெண்ணுடன் சுமூகமாக பழகுவதை மறுக்க முடியும். ஆனால் பெண்ணுக்கு இந்த வாய்ப்பு இல்லை. தன்னுடைய துயரத்தையும் மறைத்துக் கொள்வது மட்டுமல்லாமல் திருமணமான ஆணுடன் இயல்பாக இருப்பது போல் நடிக்க வேண்டிய இரட்டை துன்பத்திற்கு ஆளாகிறாள். ஏறத்தாழ கறுத்தம்மாவின் நிலையும் இதேதான். கறுத்தம்மாவாக நடித்திருக்கும் ஷீலா தன்னுடைய பாத்திரத்தின் நிலையுணர்ந்து அருமையாக நடித்திருக்கிறார். மலையாளத் திரையில் யதார்த்த நடிப்பை முன்வைத்து ஒரு முன்னோடியாகவே திகழ்ந்தவர் நடிகர் சத்யன். முரட்டுத்தனமான மீனவ தோற்றத்தில், கருத்தம்மாவின் கணவர் பழனியாக அவர் கொள்ளும் சினமும் அது தணிந்து கருத்தம்மாவின் மீது கொள்ளும் காதலும் நம்பிக்கையுமான காட்சிகள் அருமையாக பதிவாகியுள்ளன.

***

பொதுவாக ஒரு நாவல் திரைப்படமாக உருமாறும் போது அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி விடுகிறது. வாசகர்களின் நோக்கில் சினிமாவானது எப்போதுமே அதிருப்தியை அளிக்கும் விஷயமாகத்தான் இருக்கும். ஏனெனில் நாவலை படிக்கும் ஒவ்வொரு வாசகனும் அவனுடைய  வாசிப்புத் திறனிற்கும் அனுபவத்திற்கும் ஏற்றவாறு அவனுடைய அகத்தில் வெவ்வேறு அளவிலான கற்பனையை வளர்த்துக் கொள்கிறான். இவையும் இயக்குநர் முன்வைக்கும் பார்வையும் ஒன்றுபட இருப்பது சாத்தியமற்றது.   இதுவே அவனுக்குள் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. தகழியின் நாவலை இயக்குநர் ராமு கரியத் ஏறத்தாழ அப்படியே திரைப்பட உருவாக்கத்தில் பின்பற்றியிருக்கிறார். நாவலில் எழுதப்பட்டிருக்கும் வசனங்களும் ஏறத்தாழ அப்படியே உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன. செம்மீன் திரைப்படம் நாவலின் ஆன்மாவை சிதைக்காதவாறு சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது என்பது விமர்சகர்களின் பொதுவான கருத்து. திரைக்கதை எழுதிய எஸ்.எல்.புரம் சதானந்தனும் இயக்குநர் ராமு கரியத்தும் திறமையாகவே உருமாற்றம் செய்திருக்கிறார்கள். என்றாலும் நாவலில் சித்தரிக்கப்பட்டிருக்கும் சில நுட்பமான பகுதிகள் திரைப்படத்தில் தவறவிடப்பட்டிருக்கின்றன. உதாரணமாக திருமணமான முதல் இரவில் ஓர் அந்நிய ஆடவனை எவ்வாறு எதிர்கொள்வது என்கிற மனதடுமாற்றத்தைக் கொண்டிருக்கும் கருத்தம்மா, அவனுடைய ஸ்பரிசம் பட்டதும் இயல்பாக எழும் பாலுணர்ச்சியில் தன்னை மறந்து ஆவேசத்துடன் ஈடுபடுகிறாள். உணர்வு வந்ததும் அவளுக்குள் பல குழப்பான எண்ணங்கள் எழுகின்றன. பரீக்குட்டியிடம் அவள் வரம்பு மீறி பழகியதில்லை என்றாலும் இயல்பாக எழுந்த பாலுணர்ச்சி குறித்து அவளுக்குள் குற்றவுணர்வு ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் அவளுடைய ஆவேசத்தைக் கண்ட கணவன் தவறாக ஏதும் புரிந்து கொள்வானோ என்கிற பதட்டமும் ஏற்படுகிறது. அகவுணர்ச்சி சார்ந்த இது போன்ற நுட்பமான சித்தரிப்புகளை திரையில் காண்பிப்பது சிரமமானதுதான் என்றாலும் நாவலை வாசித்த வாசகனுக்கு இது போன்று விடுபட்ட பகுதிகள் சினிமா குறித்த ஒருவிதமான நிறைவின்மையை ஏற்படுத்துகின்றன. இது போல சில விடுபட்ட பகுதிகளைச் சொல்ல முடியும்

தகழி சிவசங்கர பிள்ளையுமே கூட தன்னுடைய நாவலை 'இது பிற்காலத்தில் சினிமாவாகப் போகிறது' என்கிற உணர்வுடன் எழுதியிருக்கிறாரோ என ஆச்சரியத்துடன் யூகிக்கும்படி ஒரு கச்சிதமான திரைக்கதையைப் போலவே  நாவலின் வடிவம் அமைந்திருக்கிறது. துவக்க காட்சியொன்றில் தோனி வாங்குவதற்காக விளையாட்டாக பரீக்குட்டியிடம் பணம் கேட்கிறாள் கருத்தம்மா. அவன் "மீன் பாடு வரும் போது எனக்குத் தருவியா?" எனக் கேட்கிறான். "நல்ல விலை தந்தால் தருவோம்" என்று விளையாட்டாகவே பதில் கூறுகிறாள் கருத்தம்மா. ஆனால் பின்னாளில் அவளுடைய தகப்பன்  கடன் வாங்கிய பரீக்குட்டிக்கு மீன் தராமல் அதிக விலைக்கு விற்று துரோகம் செய்யும் போது தான் விளையாட்டாக சொன்ன பதில் வேறு வகையில் உண்மையானதை எண்ணி கலங்குகிறாள். இந்தப் புதினத்தின் உச்சக்காட்சியைப் பற்றி சில வரிகள் சொல்ல வேண்டும். ஒரு காதல் கதையை  நிரந்தர காவியமாக உறைய வைப்பது அதன் உச்சம்தான். வாழவே முடியாத நிலையில் நிகழும் காதலர்களின் மரணம் என்பது அந்த மரணத்தின் மூலம் சமூகத்தை நோக்கி அவர்கள் முன்வைக்கும் கேள்வியாகவும் விமர்சனமாகவும் அமைகிறது. அந்தக் கேள்வி இந்தச் சமூகத்தை உறுத்திக் கொண்டேயிருக்கிறது. எனவே காவியச் சோகத்துடன் இந்தப் புதினம் நிறைந்தது ஒருவகையில் சரிதான் என்றால் பெண்களின் கற்பு குறித்து ஆண்மைய சிந்தனையுடன் கட்டமைக்கப்பட்ட அந்த தொன்மையான நம்பிக்கையை உறுதிப்படுத்துவது போலவே இதன் நிறைவை தகழி அமைத்திருப்பது முற்போக்கு நோக்கில் நெருடலை ஏற்படுத்துகிறது.

இந்தத் திரைப்படத்தின் காண்பனுபவத்தை மிகவும் உன்னதமாக்குவது இதன் ஒளிப்பதிவு. அகன்ற கோணத்தில் விரியும் மீனவக் கடற்கரையும் மீனவர்கள் கடலில் இறங்கிச்  செல்லும் காட்சிகளும் கடல் அலைகளின் விதவிதமான சித்திரங்களையும் பலவித கோணங்களில் அற்புதமாக பதிவாக்கியிருக்கிறது மார்க்கஸ் பார்ட்லேயின் காமிரா. ஒவ்வொரு சட்டகமும் உயிர்ப்புடன் ஓவியம் போலவே அமைந்துள்ளது. இன்றைக்குப் பார்த்தாலும் பிரமிப்பை ஏற்படுத்துகிற ஒளிப்பதிவை ஐம்பது வருடங்களுக்கு முன்பே சாதித்திருப்பது பார்ட்லேயின் மேதமை. 'மாயா பஜார்' திரைப்படத்தில் இவர் உருவாக்கிய தந்திரக்காட்சிகளும் இன்னும் சில படங்களில் அழகியல் உணர்வுடன் இவர் பதிவாக்கியிருக்கும் திரைச்சித்திரங்களும் ஒளிப்பதிவுத் துறையில் இவரை ஒரு திறமையான முன்னோடியாக நிறுவுகின்றன.

ஒருவகையில் இத்திரைப்படத்தை நாம் நெடுங்காலமாக நினைவு வைத்திருப்பது இதன் பாடல்கள் மூலம்தான். மீனவர்கள் கடலுக்குள் இறங்கும் காட்சிகளின் பின்னணியில் ஜேசுதாஸின் குரலில் ஒலிக்கும் 'கடலினக்கரை போனோரே.....'.பாடலை இத்திரைப்படத்துடன் மிக நெருக்கமாக உணர முடியும். தென்னிந்திய சினிமாவில் பாடகர் மன்னாடே முதன் முதலில் பாடிய 'மானச மைனே வரு' வில் காதல் நிறைவடையாத ஒரு இளைஞனின் உருக்கமான மனநிலையை உணர முடியும். 'பென்னாளே' என்கிற இன்னொரு அற்புதப் பாடலின் இடையே மீனவச் சமூகத்தில் புழங்கும் அந்த தொன்ம நம்பிக்கை வரிகளாக வெளிப்படுகின்றன. வங்காளியான சலீல் செளத்ரி, கேரள கலாசாரத்தின் குறிப்பாக மீனவச் சமூகத்தின் ஆன்மாவைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப இசையை அமைத்திருப்பது ஆச்சரியத்தை தருகிறது.

***


செவ்வியல் படைப்புகள் சமூகத்தின் மனதில் இருந்து நீங்காதவாறு அதைப் பற்றிய உரையாடல்கள் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும்.  திரையூடகத்தின் பல்வேறு விற்பன்னர்களின் கூட்டணியில் உருவான செம்மீன் திரைப்படமும் அந்த வகையில் ஒரு செவ்வியல் படைப்பாக மக்களின் நினைவில் உறைந்து போனதில் ஆச்சரியமொன்றுமில்லை. இத்திரைப்படம் 25  மற்றும் 40 வருடங்களைக் கடந்த சமயத்தில் இதைப் பற்றி பத்திரிகைகள் அப்போது எழுதின. தமிழ்த் திரைப்படங்கள் குறித்தும்  இது போன்ற கொண்டாட்டங்களும் நினைவுகூரல்களும் மேலதிமாக  நிகழ்த்தப்பட வேண்டும்.

குடும்ப உறவுகளாலும் ஆண்மைய சமூகத்தாலும் கற்பு நிலையின் நோக்கில் செம்மீன் கருத்தம்மா எதிர்கொள்ளும் நெருக்கடியும் துயரமும்  காலங்காலமாக பெண் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைதான். அதன் அழுத்தமான சாட்சியமாக ஐம்பது வருடங்களைக் கடந்தும் நம் முன் இன்னமும் உயிர்ப்புடன் வலுவாக நிற்கிறது செம்மீன் திரைப்படம். இத்தனை ஆண்டுகள் கடந்தும் நிலைமையில் பெரிதாக மாற்றம் ஒன்றுமில்லை. பெண்களை நடத்துவது குறித்து நம் சமூகம் மேம்பட வேண்டிய கடமையை தொடர்ந்து நினைவுப்படுத்தியபடி இருக்கிறது 'செம்மீன்'. 

- உயிர்மை - செப்டெம்பர் 2015-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)

suresh kannan