Showing posts with label புத்தக விமர்சனம். Show all posts
Showing posts with label புத்தக விமர்சனம். Show all posts

Friday, December 20, 2019

மம்முட்டி என்கிற மனிதன்




மம்முட்டி எனக்குப் பிடித்த நடிகர்தான் என்றாலும் ஒரு நடிகரின் வாழ்வனுபவங்களில் என்ன இருக்கப் போகிறது, அப்படியே இருந்தாலும் அது பொய்யும் புனைவுமாய் திரையைப் போலவே மிகை ஒப்பனையுடன்தானே பதிவாகியிருக்கப் போகிறது என்கிற அசுவாரஸ்யத்துடனும் தவறான முன்முடிவுடனும்தான் அந்த நூலை வாசிக்க ஆரம்பித்தேன்.


அது, மூன்றாம் பிறை –  வாழ்வனுபவங்கள்.


மம்முட்டி என்கிற நடிகரைப் பற்றிய நூலாக அல்லாமல் பெரும்பாலும் ஒரு தனிநபரின் முகமாக  அமைந்திருப்பதே இந்த நூலின் சிறப்பு. தனது திரையுலக அனுபவங்களைத் தாண்டி தம் சொந்த வாழ்வின் அனுபவங்கள் பலவற்றையும் ஒப்பனையின்றி ஆத்மார்த்தமாக பகிர்ந்திருக்கிறார் மம்முட்டி. தமிழில் இப்படி எந்தவொரு நடிகராவது உண்மையாகவும் ஆத்மார்த்தமாகவும் எழுதுவாரா என்று சற்று நேரம் யூகித்துப் பார்த்தேன். தம் சுயநிறங்களை ஒரு வாக்குமூலம் போல ஒப்புக் கொள்ளும் மம்முட்டி தான் சறுக்கிய தருணங்களையும் பிறகு அதை உணர்ந்த பக்குவத்தையும் பாவ மன்னிப்பின் நெகிழ்ச்சியோடு எழுதியுள்ளார்.


***

முகம்மது குட்டி என்கிற இயற்பெயர் கொண்ட அந்த இளைஞன் ஓமர் ஷெரீப் போன்று ஒரு நடிகனாகும் விருப்பத்தில் அதையே தன் பெயராக வைத்துக் கொள்கிறான்.கல்லூரி நண்பர்களால் அந்தப் பெயராலேயே அறியப்படுகிறான். ஒருநாள்  சக நண்பனொருவனால் இயற்பெயர் கண்டுபிடிக்கப்பட்டு அவன் 'மம்முட்டி' என வேடிக்கையாக அழைக்க, பிடிக்காமலிருந்த அந்தப் பெயரே தன் அடையாளமாகி வாழ்நாள் முழுவதும் தன் பின்னாலேயே துரத்திக் கொண்டு வரும் சுவாரசியமான கட்டுரையோடு துவங்குகிறது இந்த நூல். (பிடிக்காமலிருந்த என் பெயர்)

தான் வழக்கறிஞராக பணிபுரிந்த போது, தன்னை தினமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் ‘சார்.. நீங்க ஏன் சினிமா நடிகராகக்கூடாது. அதற்கான முகவெட்டு உங்களுக்கு இருக்கிறது’ என்கிறான். சினிமா ஆசை உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கும் அந்த வழக்கறிஞருக்கு உள்ளுக்குள் ஜிலீர் என்கிறிருக்கிறது.

பிறகு புகழ்பெற்ற நடிகராகின பிறகு தன்னை வேடிக்கை பார்க்க முண்டியடிக்கும் கூட்டத்தில் போலீஸ்காரரால் அடிபட்டு ரத்தம் ஒழுகிய அந்த இளைஞனின் முகத்தை, பிரியத்துடன் தன்னை அழைத்த அந்தக் குரலை எங்கேயோ பார்த்த ஞாபகமிருக்கிறதே என்று யோசித்துப் பார்த்திருக்கிறார். பிறகுதான் அந்தச் சிறுவனின் நினைவு வருகிறது. தனக்குள் இருக்கும் நடிகனைக் கண்டுபிடித்த முதல் ரசிகனை பிறகு காண முடியவில்லை என்கிற துயரத்தை உண்மையாக பதிவு செய்கிறார். எப்படியாவது தேடிக் கண்டுபிடித்திருக்கலாமே என்று நமக்கே ஆதங்கம் பெருகுமளவிற்கு அந்த அனுபவம் அமைகிறது. (முதல் ரசிகனின் ரத்தம் தோய்ந்த முகம்).

பழங்குடி கதாபாத்திரமாக ஒரு திரைப்படத்தில்  மம்முட்டி நடிக்கிற போது துணை நடிகர்களாக உண்மையான பழங்குடி மனிதர்களே வரவழைக்கப்பட்டிருந்தார்கள்.  கும்பலாக அமர்ந்து உணவருந்துவது போன்ற காட்சி. கேமராவின் பொய்களுக்கு ஏற்ப நிறுத்தி நிறுத்தி உணவருந்த அவர்களுக்குத் தெரியவில்லை. சோறு கொட்டக் கொட்ட சாப்பிட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். மம்முட்டியின் பக்கத்தில் அமர்ந்திருக்கும் மனிதருக்கு மம்முட்டி யாரென்று தெரிவதில்லை. அறிமுகமில்லாவிட்டாலும் எவரோ ஒரு நாடோடி போல என நினைத்து, மம்முட்டியின் இலையில் அவியல் தீர்ந்து போன போது தன்னிச்சையாக தன் இலையில் இருந்து அவியலை வாரி வைத்திருக்கிறார்.

முன்பின் அறிமுகமில்லா ஒருவனின் இலையில் உணவு தீர்ந்த போது எவ்வித தயக்கமுமில்லாமல் தன்னிடமிருந்து பகிர்ந்தளிக்கும் பழங்குடி மனோபாவத்தை மம்முட்டி நெகிழ்வுடன் வியக்கிறார். அவர்களைத்தான் நாகரிகம் அறியாதவர்கள் என்று உணவைப் பதுக்கும் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். (கற்றுணர்தல்)

பிரசவ வலியுடன் சாலையில் காத்திருந்த பெண்ணுக்கு உதவியதில் அவர் தந்தை தந்த இரண்டு ரூபாய், படப்பிடிப்பு நடந்த வீட்டின் உரிமையாளர் மகனை வெளியேறச் சொன்ன கோபம், சக நடிகை பகிர்ந்து கொண்ட அந்தரங்கமான துயரம், ஏமாற்றிய தயாரிப்பாளரிடமிருந்து வசூலிக்காமல் போன பணம், ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக நினைக்கும் மலையாளிகளை கண்டிக்கும் நேர்மை,  பெண்களை மதிப்பதை அமிதாப்பச்சனிடமிருந்து கற்றுக் கொண்ட சம்பவம் என்று ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு விதமான உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது.

மம்முட்டிக்குள் ஓர் அபாரமான எழுத்தாளன் ஒளிந்திருக்கிறான் என்பதை அடையாளப்படுத்தும் வகையான எழுத்து. மலையாளத்தில் இதன் மொழி எப்படி இருந்திருக்கும் என்கிற யூகத்தை தனது இலகுவான  தமிழ் மொழிபெயர்ப்பின் மூலம் உணர்த்தியிருக்கிறார் ஷைலஜா.

மிகவும் சுவாரசியமான நூல். வம்சி வெளியீடு


suresh kannan

Saturday, November 16, 2019

இரா.முருகன் என்கிற மாயக் கதைசொல்லி






மேற்கிலிருந்து இங்கு இறக்குமதியான இலக்கிய வடிவங்களுள் ஒன்று  குறுநாவல். வெகுசன இதழ்களின் உபகாரத்தில் சிறுகதை என்பது மெல்ல மெல்ல சுருங்கி ஸ்டாம்ப் அளவிற்கு மாறி விட்ட அவல சூழலில் சிற்றிதழ்கள், இடைநிலை இதழ்களின் தயவால்தான் அந்த வடிவம் இன்னமும் சற்றாவது மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது. நாவலின் வளர்ச்சி இதற்கு நேர் மாறானது. தலையணை அளவிற்கு எழுதினால்தான் அது நாவல் என்று தொன்னூறுகளில் எவரோ அவசர சட்டத் திருத்தம் கொண்டு வந்தது போல  கனமான புத்தகங்கள் நிறைய உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஒரு நாவலின் நூறு பக்கங்களை புரட்டி வாசித்து முடிப்பதற்குள் அந்த ஆசிரியரின் அடுத்த புத்தகம் வெளிவந்து விட்டதாக திகைப்பூட்டும் தகவல் வந்து சேருகிறது.

வாசிப்பவர்களை விட எழுதுபவர்கள் பெருகி விட்டார்கள் என்று நகைச்சுவையாக ஒரு காலத்தில் சொல்லப்பட்டவையெல்லாம் உண்மையாகிக் கொண்டு வருகிறது. எவை இலக்கியம், எவை அது அல்லாதது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்பட எவருக்கும் நேரமும் இல்லை; விருப்பமும் இல்லை. கவிதை நூல்களுக்கு மட்டும் என்றும் அழிவில்லை. விற்பனையாவதில்லை என்கிற புகார் தொடர்ந்து இருந்தாலும் கூட தமிழகத்தில் ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கு ஒரு கவிதையும் பத்து மணி நேரத்திற்கு ஒரு கவிதை நூலும் பிறப்பதாக ஓர் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இந்தச் சூழலில் குறுநாவல் என்கிற வடிவம் யாராலும் போஷிக்கப்படாமல் அநாதையாக நின்று கொண்டிருக்கிறது. வளவளவென்று நீண்டு விட்ட சிறுகதையையும் குறைப்பிரசவமாக முடிந்து விட்ட நாவலையும் குறுநாவல் என்று நம்பிக் கொண்டிருந்த கெட்ட வழக்கமும் நம்மிடம் இருந்தது. அது அவ்வாறல்ல. குறுநாவலுக்கென்று ஒரு பிரத்யேகமான வடிவமும் துல்லியமான வரையறையும் இருப்பதாகச் சொல்கிறார்கள். டெக்கமரான் கதைகள் இந்த வகைமைக்கான முன்னோடி. 'குறுநாவல் தன் விரிவால் ஒரு முழு வாழ்க்கையைச் சொல்லக்கூடியது, தன் குறுக்கத்தால் கூர்மையாகத் தைக்கவும் கூடியது. அது கைப்பிடியளவு விதை, காட்டின் ஆகச்சிறிய வடிவம்' என்று தனது குறுநாவல்கள் தொகுப்பின் முன்னுரையில் சொல்கிறார் ஜெயமோகன்.

தமிழிலும் பல உன்னதமான குறுநாவல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. சட்டென்று நினைவிற்கு வருவது அசோகமித்திரனின் 'இன்ஸ்பெக்டர் செண்பகராமன்'. தமிழில் எழுதப்பட்ட அபாரமான குறுநாவல்களுள் ஒன்று. தி.ஜா.வின் நினைவாக,கணையாழி இதழ் ஆண்டு தோறும் குறுநாவல்களுக்கென ஒரு போட்டி நடத்தியது. இன்றைக்கு முன்னணி எழுத்தாளர்களாக விளங்கும் பலர் தங்களின் துவக்க கால கணக்குகளை இதில்தான் துவங்கினார்கள். குறுநாவல்களுக்கு ஓர் இலக்கிய அந்தஸ்தை உருவாக்கித் தந்தது கணையாழி.

***

எழுபதுகளில் எழுதத் துவங்கியவர் இரா.முருகன். துவக்க கால எழுத்தில் இருந்த தேசலான வாசனை காரணமாக சுஜாதாவின் நீட்சி என்று பரவலாக மதிப்பிடப்பட்டார். கவிதை, சிறுகதை, நாவல், பத்தி எழுத்து, கமல், கணினிவியல், சினிமா வசனம் என்று இருவரின் கலைப்பாதையில் உள்ள தற்செயல் ஒற்றுமைகள் காரணமாக அப்படி கருதப்பட்டாலும் சட்டென்று வேறு திசையில் திரும்பியது இரா.முருகனின் எழுத்து.

இரா.முருகன்  இதுவரை எழுதிய குறுநாவல்கள் அனைத்தும் ஒரு தொகுப்பாக கிழக்கு பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருக்கிறது. ஏழு படைப்புகள் இதில் உள்ளன. ஒவ்வொன்றின் துவக்கத்திலும்  நூல் ஆசிரியரின் முன்குறிப்புகள் உள்ளன. எந்த ஆண்டில், இதழில், எந்தச் சூழலில் எழுதப்பட்டது என்பது போன்ற அத்தியாவசியமான குறிப்புகள். ஏழு படைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு  விதமான ருசியிலான வாசிப்பனுபவத்தை தருகின்றன.  திண்ணை இதழில் வெளியான 'வாயு', அவல நகைச்சுவையில் அமைந்த, தமிழில் எழுதப்பட்ட அபாரமான குறுநாவல்களில் ஒன்று. இந்தத் தொகுப்பில் அது சேர்க்கப்படாத காரணத்தை முருகன் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தாலும் அவர் தற்காலிகமாவாவது 'கறாரான இலக்கியவாதி'யாக' இருந்து அதை பிடிவாதமாக இந்த தொகுப்பில் இணைத்திருக்கலாம். தனிப்பட்ட அளவில் எனக்கு மிகவும் பிடித்த குறுநாவல் அது.

லத்தீன் அமெரிக்க இலக்கிய வகைமையான மாய யதார்த்த பாணி என்பது தமிழிற்கு இன்னமும் கூட பிடிபடாத நிலையில் அதன் துவக்க காலத்திலேயே சில பரிசோதனைகளை முயன்று பார்த்த முன்னோடிகளுள் ஒருவர் இரா.முருகன். வாசகனுக்கு புரிந்து விடவே கூடாது என்று திட்டமிடப்பட்டு செய்த சதி போல இந்த முயற்சிகளுள் சில பல போலிகளும் உற்சாக வீழ்ச்சிகளும் கலந்திருந்த சூழலில் அந்நிய பின்புலத்தை அப்படியே அபத்தமாக நகலெடுக்காமல் தமிழ் மரபுடன்  இணைத்து அந்த வகையை முயன்று பார்த்த வகையில் இரா.முருகனின் எழுத்து தனித்துவத்தைக் கொண்டிருக்கிறது எனலாம். இன்னொன்று முருகனின் மொழியில் இருக்கும் வசீகரம். கடப்பாரையை முழுங்கும் சிரமம் ஏதுமில்லாமல் மிக இயல்பாக வழிந்தோடும் சுவாரசியம் காரணமாக ஏறத்தாழ ஒரே மூச்சில் படித்து விடலாம்.

கலைடாஸ் கோப் வழியாக காணும் மாயக்காட்சிகள் போல முருகனின் உரைநடை கண்ணெதிரேயே சட்சட்டென்று மாறுகின்றன. ஆனால் இந்த பாணி வாசகனை ஈர்க்கும் வெற்று சுவாரசியமாக சுருங்கி விடாமல் இலக்கியமாகவும் உருமாறுவதே முருகனின் வெற்றி. ஒவ்வொன்றிலும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. இரண்டாம் பக்கத்தில் சித்தரிக்கப்படும் ஒரு காட்சியின் கீற்று, ஐந்து பக்கங்கள் தாண்டி வேறொரு கண்ணியில் இணைக்கப்படுவதில் முருகனின் எழுத்து திறனையும் திட்டமிடலின் பிரக்ஞையையும் பிரமிக்க முடிகிறது.


***

முதல் குறுநாவலான 'விஷம்' 1991-ல் எழுதப்பட்டது. கணையாழி குறுநாவல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரமானது. முதல் குறுநாவல் என்பதால் போகிற போக்கில் எழுதியதாக முருகன் தெரிவித்தாலும் அந்த அலட்சியம் மிக கவனமாகவும் திறமையாகவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. தன் காதலி பற்றிய சுவாரசியமான கனவுடனும் மூத்திரம் முட்டும் அவஸ்தையுடனும் உறங்கிக் கொண்டிருக்கும் கதைசொல்லியை கலைத்து எழுப்புகிறது வாசலில் ஒலிக்கும் அழைப்பு மணி. சக பணியாளனான போத்தி விஷம் குடித்திருக்கிறான். அவசர உதவி தேவை. அரும்பும் மீசையுடன் போத்தியின் மகன் வாசலில் நின்று கொண்டிருக்கிறான். இப்படி துவங்கும் இந்தக் குறுநாவல் சுவாரசியமான விவரணைகளைத் தாண்டி சில பக்கங்கள் தாண்டி சட்டென்று ஓர் எதிர்பாராத தருணத்தில் போத்தியின் கதையாக மாறுகிறது. பிறகு அங்கிருந்து தாவி சேகரனின் கதைக்கு. பிறகு இந்த வட்டம் முடிந்து போத்தி அருந்தியது விஷமும் இல்லை மண்ணுமில்லை என்கிற அவல நகைச்சுவையுடன் முடிகிறது.

இது போன்ற நான்-லீனியர் கதை கூறல் இன்னமும் கூட நமக்குப் பழக்கமாகவில்லை. உலக சினிமாக்கள் மெல்ல பரிச்சயமாகிக் கொண்டிருக்கும் சமகாலத்தில்தான் திரையில்தான் இந்த பாணி சற்றாவது பிடிபடுகிறது. ஆனால் தொன்னூறுகளின் எழுத்திலேயே இதை பிரமாதமாக முயன்ற காரணத்திற்காக முருகனை வியக்கலாம்.

அடுத்த குறுநாவலான 'மனை' மலையாள தேசத்தில் உலவுகிறது. 'புதிய பார்வை' குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றது. சமூக படிநிலையின் உச்சத்தில் இருந்த நம்பூதிரிகளின் வாழ்க்கை முறை பற்றி கடந்த நூற்றாண்டின் பின்னணியில் சித்தரிக்கிறது. ஒரு நம்பூதிரி குடும்பத்தில் மூத்தவர் மட்டும் திருமணம் செய்யலாம். முதல் மனைவி அலுக்கத் துவங்குவதற்கு முன்பே இன்னொரு இளம் பெண்ணைத் தேடி கூடுதல் திருமணங்கள் செய்யலாம். இளையவர்களுக்கு அந்த  வாய்ப்பில்லை. சொத்துரிமை பாதுகாப்பிற்கான ஏற்பாடு அது. இளைய நம்பூதிரிகள் எத்தனை நாயர் சமூகப் பெண்களுடன் கூடிக் கொள்ளலாம். கேள்வி கேட்பாரில்லை. நாயர்களுக்கும் இப்படியொரு சம்பந்தம் கிடைப்பது பெருமையே. பிராமணர்கள் எதிரே வந்தால் தாழ்த்தப்பட்ட குடியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை விலக்கிக் கொண்டு நிற்க வேண்டியிருந்த அவலமான காலக்கட்டம்.

இந்த பிற்போக்கு சூழலில் இருந்து தப்பிப் பிறந்தவன் சீதரன். நம்பூதிரி குலத்தின் வழக்கத்திலேயே இல்லாதபடி இளையவனாக இருந்தாலும் தன் ஒரே காதல் துணையை கண்டடைந்து மணம் புரிந்தவன். அவனுடைய துணைவியான பகவதியும் இவனைப் போலவே முற்போக்காக சிந்திப்பவள். மூத்த நம்பூதிரியின்  எச்சில் இலையில் முதலில் சாப்பிட்டு தன் உரிமையை நிலைநாட்டிக் கொள்ள அடித்துக் கொள்ளும் மனைவிகளின் போராட்டத்தைக் கண்டு மனம் கூசுபவள். யட்சியுடன் அந்தரங்கமாக உரையாடுபவள். மற்றொரு இளைய நம்பூதிரியான நீலகண்டனின் காம விளையாட்டால் கைவிடப்பட்டு அபலையாக வீட்டு வாசலில் வந்து நிற்கும் கார்த்தியாயினிக்கும் அவளது சின்னஞ்சிறிய மகளுக்கும்  எதிர்ப்பையும் மீறி ஆதரவளிக்கிறாள். மூத்த நம்பூதிரி ஆத்திரத்தில் எகிறிக் குதிக்கிறார். பகவதியின் புரட்சிக்கு சீதரனும் ஆதரவாக துணை நிற்க, கார்த்தியாயினியின் பிணத்திற்கு அவனே எரியூட்டுகிறான். அவளது மகளுடன் இவர்கள் ஊரைவிட்டு கிளம்பும் காட்சியுடன் இந்தக் குறும் புதினம் நிறைகிறது.

முருகனின் துல்லியமான விவரணைகளால் கடந்த கால சமூகம் நம் கண் முன் அசலாக வந்து நிற்கிறது. உரத்த குரலில் அல்லாமல் ஆண்களின் மேலாதிக்க சமூக இழிவுகளும் சாதியக் கட்டுமான அட்டூழியங்களும் இயல்பாக ஆனால் அழுத்தமாக சொல்லப்படுகின்றன. நூற்றாண்டு கழிந்தாலும் இன்னமும் கூட பேசப்பட்டுக் கொண்டிருக்கும் தாத்ரிக் குட்டியின் மீதான ஸ்மார்த்த விசாரம் பற்றிய குறிப்பு இந்தக் குறுநாவலின் இடையில் வருகிறது. கேரளப் பண்பாட்டு சூழலில் ஏற்பட்ட மறுமலர்ச்சிக்கான குறியீட்டுடன் இந்தப் படைப்பு நிறைவது சிறப்பு.

***

மூன்றாவது படைப்பான 'முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப்படம்', இந்த தொகுப்பின் சிறந்த அடையாளம் எனலாம். இந்தக் குறுநாவலின் மூலம், மாய யதார்த்த கதையாடல் நோக்கி தன்னுடைய முதலடி அமைந்ததாக முருகனின் குறிப்பு சொல்கிறது. திருமணம் கைகூடாத ஒரு பேரிளம் பெண்ணின் பெருமூச்சுகளும் தகிப்புகளும் பாலியல் விழைவுகளும் அது சார்ந்த கற்பனைகளும் இந்தப் புதினத்தின் வரிகள் முழுவதிலும் பொங்கி வழிகின்றன. சட்சட்டென மாறும் காட்சிகள். முன்னும் பின்னுமாக நகரும் காலம். புகைப்படத்திலிருந்து உரையாடும் பெற்றோர். முத்தம்மா டீச்சரின் உடமையைக் கைப்பற்ற ஆவேசமாக செயல்படும் தம்பியும் அவனது மனைவியும். உரிமையாக கைபோடும் மாப்பிள்ளையும் கதிரேசன் சாரும்.

முந்தைய புதினத்தில் திருமணம் ஆகாமல் தனிமையறையில் தன் உடல் சார்ந்த கொதிப்புகளை  காலம் பூராவும் அடக்கிக் கொண்டு கனவுகளில் அதை நிறைவேற்றிக் கொண்டு வாழ வேண்டியிருந்த நம்பூதிரிப் பெண்களின் துயரம் ஏறத்தாழ முத்தம்மா டீச்சரின் மீதும் அப்படியே படிந்திருக்கிறது. சமூகத்தின் நிறைவேறாத காமத்தின் வடிகாலாக சினிமாக் காட்சிகளும் பாடல்களும் எவ்வாறு விளங்குகின்றன என்பது தொடர்பான விவரணைகள் இதில் நிறைந்திருக்கின்றன. மூத்த பிராயத்திலும் டூயட்களை கைவிடாத தமிழ் சினிமா நாயகர்கள் நுட்பமாக கிண்டலடிக்கப்படுகிறார்கள். அபாரமான குறுநாவல்.


நான்காவது குறும்புதினம் -  'பகல் பத்து ராப்பத்து' - தனித்தனியாக நிகழும்  வெவ்வேறு துணைக் கதைகள் மாறி மாறி  பயணிக்கும் நான்-லீனியர் கதையாடல் முறை. ஒரு நல்ல குறும்படமாக இது ஆகக்கூடும் என்கிற எண்ணத்தை உற்பத்தி செய்கிறது. வைணவ சமூகத்தில் பெருமாளைக் கொண்டாட பத்து நாட்கள் நிகழும் உற்சவமான 'பகல் பத்து ராப்பத்து' நிகழ்வை தலைப்பு நினைவுப்படுத்தினாலும் மும்பையின் நவீன பின்னணியில் காலை பத்து முதல் இரவு பத்து வரும் நிகழ்ச்சிகளின் கோர்வை இது.

புளியோதரை அஜீர்ணத்தோடும் கோயில் கும்பாபிஷேக கலெக்ஷன் கவலையோடு மும்பையின் லோக்கல் டிரெயின் கூட்ட இம்சையில் பயணிக்கும் ராம்பத்ரன் அய்யங்கார். சாலையோரத்தில் கோலக் குழல் விற்கும் சாந்தாபாய். கூடியிருக்கும் காமாந்தகாரர்களின் பார்வையிலிருந்து தன் கற்பையும், உடல் ஊனமுற்று வீட்டில் முடங்கியிருக்கும் கணவனையும், குடும்பத்தையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறாள். மும்பையில் ஒரு பிளாட்டை வாங்குவதற்காக சோரம் போகவும் தயக்கத்துடன் தயாராக இருக்கும் மாடலிங் பெண் ப்ரீதி. இந்த மூன்று நபர்களின் ஒருதின வாழ்வில் நிகழும் சம்பவங்கள், வெவ்வேறு கவலைகள்.

அவல நகைச்சுவையுடன் நிறையும் ப்ரீதியின் பகுதி. கணவனின் துரோகத்துடன் முடியும் சாந்தாபாயின் பகுதி. நடுத்தர வாழ்வின் சலிப்புடன் நிறையும் ராமபத்ரனின் பகுதி. ஆர்வமும் கலையுணர்வும் உள்ள எந்த குறும்பட இளைஞனாவது இதை டிஜிட்டல் வடிவமாக சாத்தியப்படுத்தலாம்.


***

'ராத்திரி வண்டி' - கணையாழி குறுநாவல் போட்டியில் தேர்வானது. காலம் ஒரு தூலமான பரிணாமாகக் கதையில் முன்னும் பின்னும் சதா இயங்கிக் கொண்டே இருக்கும் இந்த எழுத்து நடைதான் பின்னர் நிகழ்ந்த அரசூர் வம்சத்திற்கு அடித்தளமாக அமைந்தது என்கிறார் முருகன். நகுலனால் பாராட்டப்பட்ட படைப்பு. ரயிலை தவறுதலாகவோ திட்டமிட்டோ அலட்சியமாகவோ தவற விட்டு இறங்கி விடும் ஓவியன். இளைஞன்.  நிர்வாணமான உடல்களை வரைவதில் ஆர்வமுள்ளவன். 'ச்சீ  என்ன கருமம்' என்று இகழும் சுற்றியுள்ள கூட்டம் அதே சமயம் ரகசியமான கண்களால் ஓவியத்தை தடவுவும் தவறுவதில்லை. தன் சகோதரனின் ஜாடையில் இருப்பதால் இவனை அழைத்து வந்து உபசரிக்கும் ஸ்டேஷன் மாஸ்டர். இருவரின் நினைவுகளின் மூலமாக இந்தப் புதினம் மாறி மாறிப் பயணிக்கிறது. விநோதமான, சுவாரசியமான வாசிப்பவனுத்தை தரும் படைப்பு.

அடுத்தது 'விஷ்ணுபுரம்' என்று தலைப்பிடப்பட்டு கணையாழியில் வெளியானது. ஜே.டி.சாலிங்கரின் 'The Catcher in the Rye' போல 'Coming-of-age' வகைமைப் புதினங்கள் தமிழில் அரிதானது. விடலையில் இருந்து இளைஞர்களின் உலகத்தில் குதிக்கும் அந்த மாற்றம் எப்போது நிகழ்கிறது என்பதை யூகிக்கவே முடியாத அந்த தன்மையின் வசீகரப் பின்னணியில் தமிழில் வெளியாகியிருப்பவை எவை என்று யோசித்துப் பார்த்தால் அசோகமித்திரனின் '18வது அட்சக்கோடு' சுஜாதாவின் 'நிலா நிழல்' போன்றவை உடனே நினைவுக்கு வருகின்றன. இதே கணையாழி குறுநாவல் வரிசையில் வெளியான, 'கர்னல் தோட்டக் கணக்கு'. இந்த வகைமையில் எழுதப்பட்ட மிகச் சிறந்த குறுநாவல் எனலாம். நமது பள்ளிக்கூட காலத்தின், விடலை மனங்களின் அறியாமைகளை, குறும்புகளை மிக அழுத்தமான நினைவுகூர வைக்கும் படைப்பு.

இதே வகைமையில் இரா.முருகன் முயன்ற குறும்புதினம்தான் 'விஷ்ணுபுரம் தேர்தல்'. ஏதோவொரு கடந்த காலத்தில் சிற்றூர் ஒன்றில் நிகழும் உள்ளூர் தேர்தல். அந்த ஊரின் விடலைகளின் பார்வையில், சம்பவங்களின் கோர்வையில் இந்தப் புதினம் நகர்கிறது. இந்தச் சிறுவன்களில் ஒருவன் பலகாலம் கழித்து இதே ஊருக்குத் திரும்பி வருகிறான். அப்போது நிகழும் ஒரு தேர்தல் பற்றி ரிப்போர்ட்டிங் செய்வதற்காக. புறவயமாக நிறைய மாற்றம் நிகழ்ந்தாலும் அகவயமாக காலம் அப்படியொன்றும் மாறி விடவில்லை. தேர்தல் கலாட்டாக்களும் குளறுபடிகளுமாக அப்படியே உறைந்திருக்கிறது.

வெளிநாட்டுத் தூதகரங்களுக்கு கடிதம் எழுதி புரியாத மொழியில் இருந்தாலும் பளபள காகிதத்தில் வண்ணப்புகைப்படங்களுடன் வரும் புத்தகங்களைக் கண்டு குதூகலிக்கும் சிறுவர்களின் குறும்பு துவங்கி பல்வேறு சுவாரசியமானன சம்பவங்கள், விவரணைகள் இந்த நாவலின் வாசிப்பை சுவாரசியப்படுத்துகின்றன.

இந்த தொகுப்பின் இறுதியான படைப்பு 'தகவல்காரர்'. 'முத்தம்மா டீச்சர்' போல இன்னொரு மாய யதார்த்த பாணி படைப்பு. அரசூர் வம்ச முத்தொகுதியின் முன்னோடி விதை. அபாரமாக எழுதப்பட்ட ஒரு கவிதையுடன் துவங்குகிறது. சுருங்கிப் போகும் சமூகங்களுக்காக ஜாதி, இனப் பத்திரிகை நடத்துவதால் ஜீவிக்கும் ஒரு முதியவர். அதுவும் சுருங்கி எழுபது குடும்பங்களின் சாவுச் செய்திகளை பரப்பும் அலுப்பான பணி. வழியில் இடர்ப்படும் ஒரு சாமியாரின் மூலம் அவர் எதிர்கொள்ளும் மாயவிநோத சம்பவங்கள். சாவுக்களையும் அது சார்ந்த தத்துவமும்  பரிபூர்ணமாக படிந்த படைப்பு. இதுவே இதற்கு ஒரு பிரத்யேகமான ருசியை அளிக்கிறது.

இரா.முருகனின் இந்த ஏழு குறுநாவல்களும் வெவ்வேறு விதமான வாசிப்பு அனுபவத்தை தருகின்றன. இவரது எழுத்திலுள்ள சுவாரசியத்தின் தன்மையால் இந்தப் பரிசோதனை முயற்சிகளில் விதவிதமான அலைச்சல்களும் நிறைந்திருந்தாலும் ஒருகணம் கூட அலுப்பு தட்டுவதில்லை. இளைய தலைமுறை வாசகர்களுக்கு ஓர் உறுதியான, உபயோகமான பரிந்துரையை முன்வைக்க விரும்புகிறேன். முருகனை அவசியம் வாசியுங்கள்.

***

இரா.முருகன் குறுநாவல்கள்
கிழக்கு பதிப்பகம்
300 பக்கங்கள் - விலை ரூ.250/-


(உயிர்மை இதழில் பிரசுரமானது) 

suresh kannan

Wednesday, October 16, 2019

மெய்ப்பொய்கை - பாலியல் பெண்களின் துயரம்





உலக அளவில் புராதனமானவற்றில் ஒன்று பாலியல் தொழில். இதை தொழில் என்பதை விடவும் ஆணாதிக்கத்தின் அப்பட்டமான குறியீட்டு நிகழ்வு என்று  சொல்வது இன்னமும் பொருத்தமாக இருக்கும். பெண்ணை சக ஜீவியாக கருதாமல் வெறும் உடலாக கையாண்டு  அவர்களை பண்டத்தைப் போல நுகரும், வணிகம் செய்யும் அவலத்தின் பின்னணியில் ஆண் சமூகத்தின் வக்கிரங்களுக்கே பெரும்பாலான பங்குண்டு. இளம் பெண்கள், குழந்தைகள் என்று வயது வித்தியாசமில்லாமல் இந்த அவலத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

இந்தியா போன்ற பாலியல் வறட்சி பெருகியோடும் தேசத்தில் பாலியல் தொழிலை சட்டப்பூர்வமானதாக ஆக்கவேண்டுமா, வேண்டாமா என்கிற விவாதம் நீண்ட காலமாக நடைபெறுகிறது. பாலியல் தொழி்லில் ஈடுபடுவர்களுக்கும், அது சார்ந்த திரைப்படங்களில நடிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பாக முறையான சட்டங்கள், விதிமுறைகள் போன்றவை மேற்கத்திய நாடுகளில் இருக்கின்றன என்று நம்பப்படுவது கூட ஒருவகையில் பொய்யே.

'I am Jane Doe' என்கிற ஆவணப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். சில அமெரிக்கத் தாய்மார்களுக்கும் ஓர் இணையத்தளத்திற்கும் இடையே பல வருடங்களாக நிகழ்ந்த ஒரு வழக்கின் பயணத்தை விவரிக்கும் ஆவணப்படம். சராசரி குடும்பத்தைச் சார்ந்த அவர்களுடைய அப்பாவி மகள்கள் பாலியல் கும்பலால் கடத்தப்படுகிறார்கள். கடத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குள் அவர்களின் புகைப்படங்கள் ஒரு குறிப்பிட்ட இணையத்தளத்தில் கண்சிமிட்டல்களுடன் காட்டப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் உடனே அதிலுள்ள தொடர்பு எண்களை ஆவலுடன் குறித்துக் கொள்கிறார்கள். மறைமுகமாக பாலியல் வணிகத்திற்கு அந்த இணையத்தளம் துணைபோகிறது. வருமானம் டாலர்களில் கொட்டுகிறது.

அந்த இணையத்தளத்தை தடை செய்யச் சொல்லி நீதிமன்றத்தை நாடுகிறார்கள் பெற்றோர்கள். வெளிப்படையாகவே தெரியும் அநீதிதான். ஆனால் நீதிமன்றம் தனது கண்களை இறுக மூடிக் கொண்டு சட்டப்புத்தகத்தை விரல்களால் தடவிப்பார்த்து விட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறது. ஏனெனில் அந்த இணையத்தளத்தின் வாடிக்கையாளர்களில் நீதிபதிகள் முதற்கொண்டு மதகுருமார்கள், அரசு அதிகாரிகள் வரை பல பெரியமனிதர்கள் இருக்கிறார்கள். அரசியல் சட்டத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட பிரிவின் துணை கொண்டு இணையத்தளத்தால் மிக துணிச்சலுடன் தன் அராஜகத்தை தடங்கல் ஏதுமின்றி தொடர முடிகிறது. பல வருடமாக நீளும் சட்டப் போராட்டங்களுக்குப் பின்பே அந்த இணையத் தளத்தை முடக்க முடிகிறது. பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர்கள், சமூகநீதி ஆர்வலர்கள், பாலியல் மாஃபியா கும்பலை துணிச்சலுடன் எதிர்கொள்ளும் மனச்சாட்சியுள்ள வழக்கறிஞர்கள் ஆகிய பல நபர்களின் உழைப்பிற்குப் பின்புதான் நீதி மெலிதாக கண்விழித்து பார்க்கிறது.

தனிநபர்களுக்கான சட்டங்கள் முறையாக பின்பற்றப்படுவதாக நம்பப்படும் மேற்கத்திய நாடுகளிலேயே இந்த நிலைமை என்றால் இந்தியா மூன்றாம் உலக நாடுகளின் நிலைமை என்ன? இங்கு நிகழும் பாலியல் வணிகம் என்பது ஏறத்தாழ இறைச்சிக்காக அடிமாடுகளை வண்டியில் நெருக்கி ஏற்றிச் செல்வது போன்ற பரிதாபமான வணிகம்தான்.  கேள்வி கேட்பவர்களே கிடையாது. பல கோடி ரூபாய் புழங்கும் இந்த வணிகத்தை அரசு, நீதி, காவல் என்று எல்லாத்துறைகளும் கண்டும் காணாமலும் இருக்கின்றன. மறைமுகமாக இதன் கூட்டாளிகளே இருப்பவர்களும் இவர்களே. மிகப் பிரதானமாக இதன் வாடிக்கையாளர்களும். அதாவது பொதுசமூகத்தின் பெரும்பகுதி.

**

பாலியல் தொழிலும் அது சார்ந்த பல விஷயங்களும் கோடிக்கணக்கில் பணம் புழங்கும் சர்வதேச வலைப்பின்னலாகி விட்டது. எவராலும் தடுக்க முயலாத, கட்டுப்படுத்த இயலாத ஒரு வணிகம். திரைப்படங்கள், பத்திரிகைகள், வெகுசன இதழ்கள், தொலைக்காட்சிகள் என்று பல்வேறு ஊடகங்களும் பெண்ணுடலின் கவர்ச்சி பிம்பத்தை மையமாக்கி பிழைப்பு நடத்துகின்றன. பாலியல் தொழிலின் இன்னொரு வகையான வணிகம் இது.

பாலியல் தொழிலில் சிக்கி பல்வேறு அவஸ்தைகளுக்கு ஆளாகும் பெண்களின் துயரத்தைப் பேசும் இலக்கியம் மிகக் குறைவானது. விளிம்புநிலை சமூகத்தின் மீது அக்கறை கொண்ட கலைஞர்களும் எழுத்தாளர்களும் அச்சமூகத்தின் துயரத்தை தங்களின் அபாரமான எழுத்தாற்றலின் மூலம் பதிவு செய்திருக்கிறார்கள். நவீன தமிழ் இலக்கிய சூழலில், “கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே, இதுதானய்யா பொன்னரகம்’ என்று யதார்த்தத்தை போட்டுடைத்த முன்னோடிக் குரல் புதுமைப்பித்தனுடையது. இவ்வகையான கலைஞர்களின் குரல்கள், இந்தியாவெங்கும் ஒலித்திருக்கின்றன.

பாலியல் பெண்களின் துயரத்தை மையமாகக் கொண்டு உரையாடும் இருபத்தோரு இந்தியச் சிறுகதைகளை தொகுத்திருக்கிறார் ருச்சிரா குப்தா. ஹிந்தி, மராத்தி, மலையாளம், கொங்கணி, அஸ்ஸாம், ஒடியா என்று பல மாநிலங்களைச் சார்ந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது. ஆங்கிலச் சிறுகதையும் உண்டு. கமலாதாஸ், புதுமைப்பித்தன், சாதத் ஹசன் மண்ட்டோ, பிரேம்சந்த், இந்திரா கோஸ்வாமி என்பது போன்ற சிறந்த எழுத்தாளர்களின் அபாரமான வரிசை. 

நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் ருச்சிரா குப்தா ஒரு பெண்ணியவாதி. பாலியல் தொழிலுக்காகப் பெண்கள் கடத்திச் செல்வதை எதிர்த்துப் போராடும் அமைப்பொன்றை (Apne Aap Women Worldwide) நிறுவியிருக்கிறார். ஏறத்தாழ இருபதாயிரம் பெண்கள் பாலியல் தொழிலில் இருந்து மீட்கப்படுவதற்கு உதவியிருக்கிறார்.

‘River of Flesh and other Stories’ (சதை நதி மற்றும் இதர கதைகள்) என்கிற ருச்சிரா குப்தாவின் ஆங்கில தொகுப்பு நூலின் தமிழாக்கம், கிழக்கு பதிப்பகத்தின் மூலமாக தமிழில் வெளியாகியிருக்கிறது. எழுத்தாளர் சத்தியப்பிரியன் இந்தச் சிறுகதைகளை அபாரமாக மொழிபெயர்த்துள்ளார்.

**

‘குட்டி வேசிக்கு ஒரு பொம்மை’ என்கிற கமலாதாஸின் முதல் சிறுகதையே இந்தத் தொகுப்பின் உள்ளடக்கத்தை துல்லியமாக தெளிவுப்படுத்தி விடுகிறது. பராமரிக்க ஆளில்லாத காரணத்தினால் தன் மகளை ஒரு வேசை விடுதியில் ஒப்படைத்து விட்டு பணம் வாங்கிக் கொண்டு செல்கிறாள் தாய். தன்னைப் போல் வேறொரு சிறுமியும் அங்கிருப்பதை பார்க்கிறாள் ருக்மணி. இருவரும் தோழி்களாகி விளையாடுகிறார்கள். தங்கள் மீது நிகழ்த்தப்படும் அவலம் குறித்து கூட அவர்களுக்கு தெரிவதில்லை. ‘அந்த’ நேரத்தில் மட்டும் வலியைப் பொறுத்துக் கொண்டு மறுபடியும் உற்சாகமாக விளையாட்டைத் தொடர்கிறார்கள்.

விடுதியின் தலைவியான லட்சுமி அங்குள்ள பெண்களை தன்னுடைய மகள்களைப் போல பார்த்துக் கொள்ளும் பெருமையுடன் இருக்கிறார். அதுவொரு இயல்பான தொழில் என்பது போன்ற மனோபாவமே அங்கு படிந்திருக்கிறது. மீரா என்கிற அழகுள்ள பெண்ணுக்கு பிரத்யேகமான இடம் வழங்கப்பட்டிருக்கிறது. இதர பெண்கள் அவள் மீது பொறாமையுடன் இருக்கிறார்கள். மீரா தன் காதலனுடன் ஓடிப் போய் காவல்துறையினரின் உதவியிடம் பிடிபட்டு மறுபடியும் விடுதிக்கே வருகிறாள். ருக்மணியின் தோழியான சீதா முறையற்ற கருச்சிதைவின் போது இறந்து போகிறாள். தாத்தா வயதுள்ள இன்ஸ்பெக்டர் சிறுமி ருக்மணியின் மீது பிரத்யேகமான விருப்பத்துடன் இருக்கிறார். ‘அப்பா’ என்றழைக்கும் ருக்மணிக்கு பேசும் பொம்மை வாங்கித் தருகிறார். இறுதியில் மட்டும் ஒருவகையான குற்றவுணர்வை அடைகிறார். பாலியல் தொழில் நிகழும் உலகத்தின் ஒரு பகுதி மிகையுணர்ச்சியின்றி இச்சிறுகதையில் அபாரமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. வாசகர்களிடமிருந்து அனுதாபத்தையோ அதிர்ச்சியையோ கோரும் எவ்வித செயற்கைத்தனங்களுமில்லை.

‘தெருவீதிப் பெண்கள்’ என்கிற பாபுராவ் பாகுல் எழுதிய மராத்திச் சிறுகதை, ஒரு முதிர்ந்த பாலியல் தொழிலாளியின் அவலத்தைச் சித்தரிக்கிறது. ஊரில் தன் மகன் சாகக் கிடக்கிறான் என்கிற தகவலை அறிந்து அதிர்ச்சியடையும் கிரிஜா, அந்த தகவலைச் சொன்ன ஹோட்டல் முதலாளியிடம் கிராமத்திற்குச் செல்ல பணம் கடனாக கேட்கிறாள். ஏற்கெனவே கடன் இருப்பதால் பணம் தர முதலாளி மறுக்கிறான். ஏதாவது ஒரு கிராக்கியை கவர்ந்தேயாக வேண்டியிருக்கிற கட்டாயம் கிரிஜாவிற்கு. தன்னுடைய இத்தனை வருட தொழில் அனுபவத்தையெல்லாம் திரட்டி ஒரு வாடிக்கையாளனையாவது கவர முடியுமா என்று பார்க்கிறாள். அது அத்தனை எளிதாக இருப்பதில்லை. அனுபவமில்லாத, இளம் பருவத்தினருக்கு மட்டுமே முன்னுரிமை தரும் விசித்திரமான விதி இருக்கிற தொழில். உண்மையில் தந்தியில் இருந்த வாசகம் வேறு. ‘அவனுடைய மகன் இறந்து விட்டான்’.

‘கடைசி வாடிக்கையாளன்’ என்கிற கன்னடச்சிறுகதையை நிரஞ்சனா எழுதியிருக்கிறார். தன்னுடைய வறுமையான வாழ்க்கையிலிருந்து தப்பிக்க, ஊனமுற்ற இளைஞனை நம்பி ஊரை விட்டு ஓடி வந்து விடுகிறாள் ‘அவள்’. அபலைகளுக்கு பெயர் அவசியமா என்ன? அழைத்து வந்தவன் காணாமல் போக வேறு வழியின்றி சாலையோரங்களில் தன்னை விற்க வேண்டிய கட்டாயம். நோயாளிகள், வயோதிகர்கள், குஷ்டரோகிகள் என்று சகலரும் அவளை நுகர்வதால் நோய் வந்து பலவீனமடைகிறாள். அவளுடைய இயலாமையைப் பயன்படுத்தி பணம் தராமல் ஓடிவிடும் கயவர்களும் இருக்கிறார்கள். சாலையிலேயே இறந்து போகும் அவளது சடலத்தின் மீது ஒரு கழுகு வந்து அமர்கிறது. அதுவோர் ஆண் கழுகாக இருக்கக்கூடும். கதையின் தலைப்பு கச்சிதமாகப் பொருந்துகிறது.

இந்தத் தொகுப்பின் அனைத்துச் சிறுகதைகளும் பாலியல் பெண்களின் துயரத்தை கண்ணீர் வடிய பேசும் படைப்புகள் அல்ல. மைய சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட பெண்களின் கதைகளையும் பேசுகிறது. ராணி மாதிரி வாழ்ந்த பெண்கள் சந்தர்ப்ப சூழலால் அகதிகளாக மாறும் அவலத்தைப் பற்றியும் பேசுகிறது.

பிபூதிபூஷன் பந்தியோபாத்யாய் அறியப்பட்ட வங்க எழுத்தாளர். இவர் எழுதிய ‘ஹிங் கச்சோரி’ சுவாரசியமான சிறுகதை. கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம்பெரும் ஓர் எளிய பிராமணக் குடும்பம். வாசுதேவ் என்கிற சிறுவனின் பார்வையிலிருந்து இந்தச் சிறுகதை நகர்கிறது. அவனுடைய குடும்பம் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் வரிசையாக சில வீடுகள். அவர்கள் யார் என்று புரியாத வயதில் இருக்கிறான் சிறுவன். அவர்கள் தங்களை சிறப்பாக அலங்கரித்துக் கொண்டிருப்பது இவனைக் கவர்கிறது.

வாசுதேவ் ஒரு தீனிப்பண்டாரம். குடும்பத்தின் வறுமையும் அதற்குக் காரணமாக இருக்கலாம். எதிரிலுள்ள வீடுகளின் மீது உருவாகும் பிரியத்தால் அங்கு செல்கிறான். குஸூம் என்கிற செல்ல அக்காவின் பிரியத்தைப் பெறுகிறான். அவள் தரும் தின்பண்டங்களை ஆவலாக உண்கிறான். அவளுடைய ‘பாபு’ வாங்கி வரும் கச்சோரி என்றால் இவனுக்கு அதிக பிரியம். அதற்காகவே காத்திருக்கிறான். இத்தனை பிரியம் காட்டும் குஸூம் தனக்கு ஏன் குடிக்க தண்ணீர் தர மறுக்கிறாள் என்கிற ரகசியம் வாசுதேவிற்கு புரியவில்லை. எளிய சமூகத்தைச் சேர்ந்த தாம் பிராமணச் சிறுவனுக்கு தண்ணீர் தந்து மேலும் பாவத்தைச் சுமக்க வேண்டுமா என்பது குஸூமின் பாமர எண்ணம். அங்கிருந்து இடம் பெயர்ந்து வளர்ந்து பெரியவனாகும் வாசுதேவ், மறுபடியும் அந்தப் பிரதேசத்திற்கு வர நேரும் போது மறக்காமல் தன் அக்காவைத் தேடுவதும் முதியவளாகி விட்ட குஸூம் பிரியத்துடன் கச்சோரியை உண்ணத் தருவதுடன் சிறுகதை நிறைகிறது. நம்மால் வெறுக்கப்படும் சமூகத்தைச் சார்ந்த பெண்களிடம் ஊறும் தீராத அன்பையும் பிரியத்தையும் இச்சிறுகதை அற்புதமாக விவரிக்கிறது.

பிரேம்சந்த்தின் ‘கீர்த்தி பங்கம்’ ஒரு நல்ல சிறுகதை. தன் மீது பிரியத்துடன் இருந்த கணவன், புதிய பெண்ணுடன் உருவாகும் தொடர்பினால் தன்னை மெல்ல ஒதுக்குவதைக் கண்டு வெகுண்டெழும் மனைவி, புதுப்பெண்ணால் அடித்து அவமானப்படுத்தப்படுகிறாள். வீட்டின் முதலாளி அந்துஸ்துடையவளாக இருந்தவள் ஒரே நாளில் அபலையாகிறாள். தன் அன்புக்குரியவனாக இருந்தவனை பழிவாங்கும் நோக்கில், பதிலுக்கு அவமானப்படுத்தும் விதமாக அவள் வேசையாகி விடும் பரிதாபத்தை விவரிக்கிறது இந்தப் படைப்பு.

ஒப்பனைகளுடன் மேலுக்கு கவர்ச்சியாக தோன்றும் பாலியல் பெண்கள் உள்ளுக்குள் அடையும் உடல் உபாதைகளை, வேதனைகளை ரத்தமும் சதையுமாக விவரிக்கிறது ‘சதை ஆறு’ என்கிற ஹிந்தி மொழிச் சிறுகதை. இரக்கமேயற்ற முறையில் அந்த துயரத்தை அற்புதமாக விவரித்திருக்கிறார் கமலேஷ்வர்.

இந்தத் தொகுப்பின் சிறப்பான கதைகளுள் ஒன்று ‘வம்சாவளி’. குராத்-உல்-ஐன் ஹைதர் எழுதிய உருது மொழிக்கதை. பிரேம்சந்த்தின் கதையைப் போலவே இதுவும் நிராகரிக்கப்பட்ட ஓர் இல்லத்தரசியின் கதை. இளம் வயதுக் காதலானான அஜ்ஜூ தன்னை திருமணம் செய்து கொள்வான் என்கிற எதிர்பார்ப்புடன் இருக்கிறாள் சம்மி பேகம். ஆனால் சந்தர்ப்ப சூழல் அவளுக்குச் சாதகமாக இல்லை. வழக்கொன்றை கையாள்வதற்காக லக்னோ செல்லும் அஜ்ஜூ அங்கேயே ஒரு குடும்பத்தை அமைத்துக் கொண்ட விஷயம் நீண்ட காலத்திற்குப் பிறகே இவளுக்குத் தெரிய வருகிறது. அதிர்ச்சியடையும் சம்மி பேகம், திருமணம் செய்து கொள்ளாமல் தன் சிறிய கூட்டில் ஒடுங்கிக் கொள்கிறாள். ஆனால் காலம் அவளை பல்வேறு விதமாக வெவ்வேறு இடங்களுக்கு அலைக்கழிக்கிறது. ஆனால் எங்கும் தன் கம்பீரத்தைக் குறைத்துக் கொண்டு அவள் கீழிறங்குவதில்லை. கடைசியாக மும்பை நகரத்தில் ரசியா பானுவிடம் கொண்டு சேர்க்கிறது. ஆடம்பரமான குடியிருப்பில் ரசியா பானு செய்யும் தொழில் வாசகனான நமக்குப் புரியும் போது அப்பாவி மூதாட்டியான சம்மி பேகம் அதை அறிவதில்லை. அவர் குறித்து பெருமூச்சொன்றைத்தான் நம்மால் விட முடிகிறது.

இந்தச் சிறுகதையை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் போது சம்மி பேகம் போன்ற பெண்கள் அடையும் நிராகரிப்பின் துயரம் தாங்காமல் அழுது விட்டதாக மொழிபெயர்ப்பாளர் அடைப்புக்குறிக்குள் தெரிவத்திருக்கிறார்.

புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்’ இந்தத் தொகுப்பிற்கு மிகவும் பொருத்தமுடையது. இருபத்தோரு சிறுகதைகளும் விளிம்புநிலை சமூகத்தின் பெண்கள் படும் பாட்டை விவரிக்கின்றன. மிக குறிப்பாக பாலியல் தொழில் உலகில் சிக்கி அவதியுறும் பெண்கள். சில கதைகள் நேரடியான விவரிப்புடன் இயங்குகின்றன. வேறு சில கதைகள் இதையொட்டி பெண்களின் பொதுவான அவலத்தைச் சுட்டுகின்றன. தங்களின் எதிர்கால வாழ்க்கைகாக தன்னிடமுள்ள நகையையெல்லாம் கணவனிடம் கழற்றித்தரும் சாயாராணி, அந்தக் கயவன் அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு ஓடிவிடுவான் என்பதையும் இதுதான் அவனுடைய வழக்கமான தொழில் என்பதையும் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டாள். ஆதரவற்ற அவள் இனி என்ன செய்வாள்? (சந்தை விலை – நபேந்து கோஷின் வங்க மொழிச் சிறுகதை)

இந்தியப் பிரிவனையின் போது எழுந்த மதவாத வன்முறையால் அநாதைகளாகி விட்ட இரு சிறுமிகள். ஒருத்தி இந்து. இன்னொருவர் இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்தவள். பாலியல் தொழில் செய்யும் பெண்ணொருத்தி தரகனிடமிருந்து அவர்களை விலைக்கு வாங்கி வீட்டின் பின்புறம் வாடிக்கையாளர்களின் கண்படாமல் ஒளித்து வைத்திருக்கிறாள். அவள் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவிற்கும், பாகிஸ்தானின் ஜின்னாவிற்கும் ஒரு கடிதம் எழுதுகிறாள். ‘இவர்களை என்ன செய்யட்டும்?

கிருஷ்ண சந்தரின் இந்த உருது மொழி சிறுகதை, மதவாத மோதல்களால் அதற்குச் சம்பந்தமில்லாத அப்பாவி மக்கள் பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் துயரத்தை மிக நுட்பமாக பதிவு செய்திருக்கிறது.

சமீபத்தில் வெளியாகியிருக்கும் சிறந்த சிறுகதைத் தொகுப்பு என்று இதைச் சொல்லலாம். சத்தியப்பிரியனின் இலகுவான மொழிபெயர்ப்பு வாசிப்பனுபவத்தை உன்னதமாக்குகிறது.

**

மெய்ப்பொய்கை – பாலியல் பெண்களின் துயரம்
தொகுப்பு: ருச்சிரா குப்தா – தமிழில் சத்தியப்பிரியன்
கிழக்கு பதிப்பகம், 352 பக்கங்கள், விலை. ரூ.325

(குமுதம் தீராநதி -  டிசம்பர்  2017 இதழில் பிரசுரமானது)  



suresh kannan

Sunday, April 14, 2019

ஊழல், உளவு, அரசியல்






சங்கர் எழுதிய ‘ஊழல் – உளவு – அரசியல்’ நூலை வாசித்து முடித்தேன். ஒரு துப்பறியும் நாவலை வாசிப்பது போன்ற சுவாரசியத்துடன் ஏறத்தாழ ஒரே மூச்சில் வாசிக்க முடிந்தது. ஆனால் இது புனைவு அல்ல. மூர்க்கமான அரசு இயந்திரத்துடன் மோதி ஜெயித்த ஒரு சாமானியன் எதிர்கொண்ட திகிலும் பயங்கரமும் கொண்ட அனுபவங்களின் தொகுப்பு. அரசு இயந்திரத்தின் ஒரு உதிரியே அந்த இயந்திரத்தின் மோசடியை வெளிப்படுத்தத் துணிந்த துணிச்சலும் நேர்மையும் இந்த நூலின் பக்கங்களில் பதிவாகியுள்ளன.

தந்தையின் மறைவு காரணமாக 16 வயதிலேயே அரசுப் பணியில் இணையும் சங்கர், ஒரு விடலை இளைஞனின் அப்பாவித்தனமான பார்வையில் விரியும் அலுவலக அனுபவங்களை யதார்த்தமாக விவரித்துள்ளார். மெல்ல மெல்ல தன்னை முன்னேற்றிக் கொள்ளும் விவரங்கள் நம்பகத்தன்மையுடன் பதிவாகியுள்ளன. அங்கு நிகழும் அநீதிகளை, ஊழல்களை, மோசடிகளை நடைமுறை விவரங்களுடன் விவரித்துள்ளார். அரசுத்துறையில் பணியாற்றிக் கொண்டே இவற்றை நேரடியாக எதிர்க்க முடியாத சூழலில் மறைமுகமானதொரு யுத்தத்தைத் துவங்குகிறார். கோபமும் குதர்க்கமும் கொண்ட ஒரு பலமான குத்துச்சண்டை வீரனை எதிர்த்து ஐந்து வயது சிறுவன் சண்டைக்கு இறங்குவதற்கு நிகரான காரியம் இது.

எனவே இதன் எதிர்விளைவுகளையும் இவர் பிறகு எதிர்கொள்ள நேர்கிறது. காவல்துறை இழைத்த சித்திரவதைகளை இவர் இயல்பாக விவரிக்கும் போது மனம் கலங்கிப் போகிறது. சராசரி நபராக இருக்கும் ஒவ்வொருவரும் தாமே அங்கு மாட்டிக் கொண்டிருக்கும் உணர்வை ஏற்படுத்துகிறார். இவரது சிறை அனுபவங்கள் பல திரைப்படங்களை நினைவுப்படுத்துகின்றன. ஆனால் அதையும் தாண்டிய நடைமுறை நுண்விவரங்கள். பார்ப்பதற்கு பயங்கரமாகத் தோற்றமளிக்கும் ஒருவர் எவ்வாறு வெள்ளந்தியாக உதவுகிறார் என்கிற விஷயம் சுவாரசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிறகு தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்கை சங்கர் எதிர்கொள்கிறார். நீதித்துறையும் காவல்துறையும் அதிகார வர்க்கமும் எத்தனை மெத்தனத்தையும் அலட்சியத்தையும் சார்புகளையும் சுயநலத்தையும் கொண்டு இயங்குகிறது என்பதற்கான சாட்சியங்கள் இந்தப் பக்கங்களில் விரிகின்றன.

தான் எதிர்கொண்ட அனுபவங்கள் குறித்து விவரிக்கும் போது அவை வாசகர்களிடம் எவ்வித இரக்கத்தையும் கோரிவிடக்கூடாது என்பதில் சங்கர் கவனமாக இருக்கிறார். கழிவிரக்கத்தின் தடயங்கள் இல்லை. அதே சமயத்தில் தான் ஒரு ஹீரோ என்கிற சாகச பெருமிதமும்  அவரிடமும் இல்லை. ஒரு சாமானியனாக தான் எதிர்கொண்ட வயிற்றைப் பிசையும் முந்தைய அனுபவங்களை விலகி நிற்கும் எள்ளலோடு எழுத்தில் விவரிக்கிறார். ஆனால் அதையும் மீறி உண்மை நிலவரத்தை கற்பனை செய்து பார்க்கவே நமக்குத்தான் அத்தனை பயமாக இருக்கிறது.

ஒரு சமூகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுக்குமே மனச்சாட்சி, நேர்மை போன்ற நல்லியல்புகள் அடிப்படையாக இயற்கையில் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்தக் குரல் எழுப்பும் எச்சரிக்கையை பலர் காது கொடுத்துக் கேட்டு தங்களின் கீழ்மைகளைக் கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள். 

ஆனால் சிலர் இவற்றையெல்லாம் கழற்றி ஓரமாகப் போட்டு விட்டு சுயநலம், பேராசை, தன் வளர்ச்சியை பாதிப்பவற்றின் மீதான அச்சம், எனவே அவற்றுடன் இயைந்து போதல், அதற்காக எந்தவொரு அப்பாவியையும் பலி கொடுக்கத் தயாராக இருக்கும் கருணையற்ற தன்மை போன்றவற்றுடன் இயங்குகிறார்கள். அவர்களைப் பற்றிய விவரங்கள் இந்த நூலில் பதிவாகியிருக்கின்றன. ஒட்டு மொத்த அரசுத்துறையே இப்படித்தான் இயங்குகிறது.  குறிப்பாக காவல்துறை இயங்கும் விதம் அவர்களின் இயந்திரத்தனமான மிருகத்தனத்தை உறுதி செய்கிறது.

அரசியல்வாதிகளை விடவும் அதிகார வர்க்கம் எத்தனை பலம் வாய்ந்தது என்கிற நடைமுறை இந்த நூலில் நுண்விவரங்களுடன் பதிவாகியிருக்கிறது. அதே சமயத்தில் அப்போதைய ஆளுங்கட்சியின் நோக்கத்தை திருப்தி செய்வதற்காக எந்த வித சர்க்கஸ் வித்தைகளையும் செய்ய இவர்கள் தயாராகவும் இருக்கிறார்கள் என்கிற முரணும் பதிவாகியுள்ளது. ஆட்சி மாறியவுடன் உடனே பச்சோந்திகளாக மாறவும் இவர்கள் தயங்குவதில்லை.

இவர்கள் கற்ற கல்வி, பெற்ற அனுபவம் எல்லாம் குற்றங்களையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் எப்படி மூடி மறைத்து திறமையாக செய்யலாம் என்பதற்கே பயன்படுகிறது. அரசியல்வாதிகளையாவது ஐந்து வருடத்தில் துரத்தி விடலாம். ஆனால் ஓய்வு பெறும் வரை இவர்களின் அதிகார துஷ்பிரயோகங்களையும் சுயஆதாயங்களுக்காக செய்யும் அநீதிகளையும் கட்டுப்படுத்துவது கடினமானதாக இருக்கிறது. 

() () () 


ஆனால் இருளே நிறைந்திருக்கும் பிரதேசத்தில் நம்பிக்கையின் வெளிச்சம் இல்லாமல் போகாது. நூலாசிரியர் முதற்கொண்டு அவரது அலுவலகத்தில் பணிபுரியும் சில நல்ல மனிதர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், நண்பர்கள் போன்றோரின் துணையுடன்தான் தன் மீது சுமத்தப்பட்டிருந்த முள்கீரிடத்தை ஒருவாறாக இவர் கழற்ற முடிகிறது. ஆனால் அது எத்தனை எளிதான பாதையாக இல்லை. சங்கரின் குடும்பமே வழக்கு விசாரணையால் அலைக்கழிக்கப்படுகிறது. உதவி செய்த நண்பர்கள் மிரட்டலுக்கும் நெருக்கடிக்கும் ஆளாகிறார்கள்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ரமணா திரைப்படத்தில் ஒரு விஷயம் வரும். ஊழலும் மோசடியும் நிறைந்திருக்கும் ஒரு அரசு அலுவலகத்தில் நேர்மையாகவும் மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டும் இயங்கும் ஒன்றிரண்டு நபர்களாவது இல்லாமல் போக மாட்டார்கள். அப்படியொரு மனிதராகவே சங்கர் காட்சி தருகிறார். அவருக்கு உதவி செய்யும் நண்பர்களும் தெரிகிறார்கள். அரிய விதிவிலக்குகள்.

இத்தனை கசப்பான அனுபவங்களுக்கு ஆளாகி மீண்ட சங்கர் செய்த குற்றம்தான் என்ன? அரசு இயந்திரத்தில் நிகழும் அநீதிகளின் முக்கியமானதொரு  துளியை மட்டும் வெளிப்படுத்த முயற்சிக்கிறார். ஆனால் ஒட்டு மொத்த இயந்திரமே இவர் மீது மூர்க்கமாக பாய்ந்து இவருடைய வாயை அடைக்க, சாம, தான, பேத, தண்டம் என்று அனைத்து வழிகளையும் முயல்கிறது. ஏனெனில் அது பெரிய அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் தொடர்பான ஒரு கண்ணியாக இருக்கிறது.

சங்கர் எதிர்கொண்ட அனுபவங்களை வாசிக்கும் போது ஒரு சராசரி நபராக எனக்குள் அச்சமே பரவியது. சமூகக் கோபத்தில் ஃபேஸ்புக்கில் எதையாவது எழுதி வைத்திருப்பேனோ என்பது போன்ற திகிலான எண்ணங்கள் உருவாகின. ஆனால் அதே சமயத்தில் சமூக அநீதிகளை எதிர்ப்பதற்கான ஒரு துளி செயலையாவது செய்ய வேண்டும் என்கிற உத்வேகத்தையும் தருகிறது.

காவல் துறை அதிகாரிகளுடன் பணிபுரிந்த காரணத்தினால் அது சார்ந்த நடைமுறை அனுபவங்கள், சட்டவிதிகளின் அடிப்படைகள் போன்வற்றின் சிலவற்றையாவது சங்கர் அறிந்துள்ளார். எனவே அவற்றின் துணை கொண்டு எதிர்கொள்ள சங்கரால் இயன்றிருக்கிறது. ஆனால் இவை எதுவுமே இல்லாத ஒரு சாமானியன் என்ன செய்வான்? எளிய குற்றங்களைச் செய்து விட்டு வறுமையின் காரணமாக பல வருடங்களாக விசாரணை கைதிகளாகவே பலர் சிறையில் இருக்கும் அவலத்தையும் சங்கர் பதிவு செய்துள்ளார்.

சிறை என்பது ஒரு தனிப்பட்ட அரசாங்கமாகவே இயங்குகிறது. லஞ்சம்தான் அதன் ஆதார இயங்குசக்தி. பல வருடங்களாகவே நீடிக்கும் இந்த நிலைமை அரசியல்வாதிகளுக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் நீதித்துறைக்கும் நன்றாகவே தெரியும். ஆனால் அரிதான சில விதிவிலக்குகளைத் தவிர இவற்றை கறாராக மாற்றியமைக்க ஏன் எவருமே நடவடிக்கையும் முயற்சியும் எடுக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பல்வேறு விதமான ஒழுங்கீனங்களுடன் இயங்குவதுதான் ‘சிஸ்டம்’ என்பதை பலரும் அப்படியே ஏற்றுக் கொண்டு விட்டார்களா?

() () () 



இந்த நூலை நிச்சயம் வாசிக்க வேண்டுமென்று அனைவருக்கும் பரிந்துரைப்பேன். ஒட்டுமொத்த அரசுத் துறையே ஊழலிலும் மோசடியிலும் அதிகாரதுஷ்பிரயோகத்திலும் புரையோடிப் போயிருக்கும் அவலத்தின் ஒரு துளி சித்தரித்தை இந்த நூல் துணிச்சலாக வெளிப்படுத்தியிருக்கிறது. சம்பந்தப்பட்ட பெயர்கள் அப்படியே வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒளிவும் மறைவும் இல்லை. குறிப்பாக அரசியல் கட்சித் தலைவர்களை தங்களின் ஆதர்சங்களாக கருதிக் கொண்டிருக்கும் அப்பாவி தொண்டர்கள், விசுவாசிகள் படித்த புத்திசாலிகள் போன்றோர் இந்த நூலை அவசியம் வாசிக்க வேண்டும். அவர்கள் அறிந்திருக்கும் ஆளுமைகளின் நேர்மறையான வெளிச்சத்திற்குப் பின்னால் இருளும் கொடூரமும் நிறைந்திருக்கும் உலகு நிறைந்திருக்கிறது என்பதை நிச்சயம் அறிய வேண்டும்.

ஒருவர் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவுடன் தன் மீதும் தன்னைச் சார்ந்தவர்களின் மீதும் உள்ளவர்களின் குற்ற வழக்குகளையும் விசாரணைகளும் குழி தோண்டிப் புதைப்பதற்கான காரியங்களை விரைவாக நிறைவேற்றுகிறார். அதே சமயத்தில் தனது எதிரிகளின் மீதான வழக்கு முகாந்திரங்கள், அவற்றிற்கான சந்தர்ப்பங்களை உருவாக்குவதல் போன்றவற்றி முழு மூச்சாக ஈடுபடுகிறார். அரசு இயந்திரம் பெரும்பாலும் இதற்கு துணை போக வேண்டியிருக்கிறது. எதிர் தரப்பில் இருந்தவர் ஆட்சிக்கு வந்ததும் அவரும் இதையே செய்கிறார். இப்படியொரு விஷச்சுழற்சியில் தேசம் பிடிபட்டிருக்கிறது. இதை எதிர்ப்பவர்கள் ஈவு இரக்கமின்றி ஒடுக்கப்படுகிறார்கள். சங்கரின் அனுபவங்களும் இதைத்தான் பிரதிபலிக்கின்றன.

சங்கரின் துணிச்சலுக்காகவும் நேர்மைக்கும் அவருக்குள் இயங்கும் ஆதாரமான அறவுணர்விற்காகவும் அவரைப் பாராட்ட விரும்புகிறேன். சராசரி நபர்களின் பிரதிநிதியாக அவரை மகிழ்ச்சியுடன் அரவணைக்க விரும்புகிறேன். “சங்கர் யார் தெரியுமா, அவருடைய பின்னணி, நோக்கம் தெரியுமா?” என்பது போல் சிலர் ஐயம் எழுப்பக்கூடும். ஆனால் இந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கும் நிகழ்வுகள் சமூக நடப்புகளையே பிரதிபலிக்கின்றன. கற்பனையாக எதுவும் எழுதப்படவில்லை. அந்த ஆதார உணர்வும் அறமும் இருப்பதை உணர முடிகிறது.  







suresh kannan

Thursday, January 17, 2019

கலைஞர் என்கிற கருணாநிதி – வாசந்தி





புத்தக கண்காட்சி சென்று திரும்பியவுடன் வாங்கின புத்தகங்களை தரையில் பரப்பி அழகு பார்த்து விட்டு சந்தோஷ அலுப்புடன் உறங்கச் செல்வது ஒவ்வொரு வருடத்திலும் வழக்கம். கண்காட்சி என்றல்ல, பழைய புத்தகக்கடைகளில் வாங்கி வரும் புத்தகங்களுக்கும் இதே சடங்குதான்.

ஆனால் நேற்று உண்மையான அலுப்பாக இருந்ததால் தற்செயலாக கையில் கிடைக்கும் முதல் புத்தகத்தின் முன்னுரையை வாசித்து விட்டு உறங்கச் செல்லலாம் என்று நினைத்து கையில் எடுத்தேன். அப்போது சுமார் பதினோரு மணி. ஆனால் உறங்கச் செல்வதற்கு இரண்டு மணியாகி விட்டது. அந்தளவிற்கு அந்தப் புத்தகம் தன்னிச்சையாக என்னை உள்ளே இழுத்துக் கொண்டு விட்டது.

**

கலைஞர் என்கிற கருணாநிதி – பத்திரிகையாளரும் எழுத்தாளருமான வாசந்தி எழுதிய நூல். (காலச்சுவடு பதிப்பகம்).

ஓர் அரசியல் கட்சியின் தலைவர் அல்லது அந்தக் கட்சியின் தீவிரமான ஆதரவாளர், அனுதாபி போன்றவர்கள் எழுதும் நூல்களுக்கும் ‘வெளியில்’ நின்று பார்த்து எழுதுபவர்களின் நூல்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. முன்னதில் கட்சி விசுவாசமும், வெளிப்படையான மனச்சாய்வும், மழுப்பல்களும் இருக்கும். மாறாக அந்த அமைப்பை வெளியில் நின்று கவனிக்கிறவர்களின் பதிவுகளில் சமநிலைத்தன்மையும் அது குறித்தான கவனமும் இருக்கும்.

வாசந்தியின் நூல் இரண்டாவது வகை. சிறுவன் கருணாநிதி, சாதியப்பாகுபாட்டின் அவலத்தை நடைமுறையில் உணரும் ஒரு கசப்பான சம்பவத்தோடு நூல் துவங்குகிறது. இளம் வயதின் அனுபவங்களே ஒருவரின் ஆளுமையை வடிவமைக்கிறது என்கிறார்கள். எனவே கருணாநிதியின் சமூகநீதிப் பங்களிப்பின் விதை இளமையில் விழுந்திருக்கலாம்.

கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு என்கிற பாவனையில் இந்த நூல் தோன்றினாலும் அவருடைய அரசியல் பயணம், சொந்த வாழ்க்கை தொடர்பான சம்பவங்கள், போன்றவை மிக திறமையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. கருணாநிதி என்கிற ஒற்றைப் புள்ளியில் மட்டுமல்லாமல் அதனையொட்டி தமிழக வரலாற்றின் நினைவுகளும் விவரங்களும் மிகப் பொருத்தமாக இணைக்கப்பட்டுள்ளன.

‘மானே, தேனே..’ என்கிற ஆராதனை வார்த்தைகளை இட்டு நிரப்பும் எவ்வித மாய்மாலங்களும் இதில் இல்லை என்பதே பெரிய ஆறுதலாக இருக்கிறது. கருணாநிதியின் நல்லியல்புகள், நிர்வாகத்திறன், நூலாசிரியர் உடனான நட்பு போன்றவற்றுக்கு இடையே கருணாநிதி பற்றிய எதிர்விமர்சனங்களும் உள்ளுறையாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. எழுத்தாளர் வாசந்தி, அடிப்படையில் பத்திரிகையாளராகவும் இருப்பதால் கட்டுப்பாடான வேகத்துடனும், நம்பகத்தன்மையுடனான தொனியுடனும் புள்ளிவிவரங்களுடனும் இந்த நூலை நகர்த்திச் செல்கிறார். தவறான புரிதலால் நிகழும் ஒரு சச்சரவுடன்தான் கருணாதியுடனான அறிமுகம் வாசந்திக்கு நிகழ்கிறது. அதை எப்படி இருவருமே பரஸ்பரம் கடந்து வந்தார்கள் என்பதை முன்னுரையில் சுவாரசியமான சம்பவமாக  சொல்லிச் சொல்கிறார்.

கருணாநிதியின் தன்வரலாற்று நூலான நெஞ்சுக்கு நீதி, திமுகவின் வரலாறு போன்ற நூல்களைப் படித்தவர்களுக்கு இந்த நூலின் விவரணைகள், சம்பவங்கள், விவரங்கள் ஒருவேளை சலிப்பூட்டலாம். ஆனால் அவர்களையும் வாசிக்க வைக்கும் சுவாரசியத்தோடும் கோணத்தோடும் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

ஒரு பறவைப்பார்வையில் கருணாநிதி என்கிற ஆளுமையைப் பற்றிய கச்சிதமான கோணத்தை பதிவு செய்யும் இந்த நூல், அதன் ஊடாக தொடர்புடைய இதர விவரங்களையும், விமர்சனங்களையும் பொருத்தமாக இணைத்துக் கொண்டு முன்நகர்கிறது.

பாதிதான் வாசித்து முடித்திருக்கிறேன். அதற்குள்ளாக எதற்கு இந்தப் பதிவு என்று எனக்கே தோன்றியது. கண்காட்சி முடிவதற்குள் இதைப் பொதுவில் தெரிவித்தால் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு ஏதுவாக இருக்கும் என்கிற பொதுநலமே பிரதான காரணம்.

நெஞ்சுக்கு நீதி, திமுகவின் வரலாறு, முரசொலி மாறனின் மாநில சுயாட்சி போன்ற நூல்களைத் தேடி வாசிக்க வேண்டும் என்கிற எண்ணம் நீண்ட நாட்களாகவே இருந்தது. அதை வேகப்படுத்தும் தூண்டுதலை வாசந்தியின் நூல் அளிக்கிறது.

அழகான முகப்பு, தரமான அச்சு, வடிவமைப்பு, நேர்த்தியான எடிட்டிங் போன்றவைகளும் இந்த நூலை விரும்பச் செய்கின்றன. குறிப்பாக எழுத்துப்பிழை எங்கும் இல்லாததே பெரிய ஆறுதல். (விலை ரூ.125)





suresh kannan

Monday, May 29, 2017

வனநாயகன் - காங்கிரீட் வனத்தில் ஒரு யுத்தம்

தொழிற்சங்கம் உருவாக முடியாத, பணிப்பாதுகாப்பில்லாத தொழிலாளா்களைக் கொண்டது ஐ.டி எனப்படும் தகவல் நுட்பம் சார்ந்த துறை. இதர துறைகளோடு ஒப்பிடும் போது இதில் வருமானம் சற்று கூடுதல்தான் என்றாலும் வழங்கப்படும் ஊதியத்திற்கு மேலாக ஊழியர்களை சக்கையாக பிழிந்து விடும்  தன்மையைக் கொண்டது என்கிறார்கள். நேரம், காலம் பார்க்காமல் உழைத்தாலும் எப்போது வேண்டுமானாலும் பணியிலிருந்து வெளியேற்றப்படலாம் என்கிற அபாயக்கத்தி இருக்கையின் கீீழே பதுங்கியிருக்கும். சுருங்கச் சொன்னால் திரசங்கு சொர்க்கம் அல்லது டை கட்டிய அடிமைத்தனம்.

இப்படி நிர்வாகத்தால் மனச்சாட்சியின்றி திடீரென்று வெளியேற்றப்படுவதைப் பற்றி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சில ஐ.டி. பணியாளர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அதில் ஒருவர் சொன்னது திகிலாகவும் மட்டுமல்ல, வேதனையாகவும் இருந்தது. எவ்வித முன்அறிவிப்பும் இல்லாமல்  அவர் திடீரென்று  பணிநீக்கம் செய்யப்படுகிறார். அன்றைய நாள் பணிக்கு வரும் போதுதான் அவருக்கே அந்த விஷயம் தெரியும். இதை அறிந்து மேலதிகாரியின் அறைக்குச் சென்று வாக்குவாதம் கூட செய்ய அனுமதிக்கப்படாமல் வெளியேற்றப்படுகிறார். வேதனையுடன் அவர் தன் இருக்கைக்கு திரும்பும் போது வழியிலுள்ள ஒரு கதவைத் திறப்பதற்காக தனக்கு தரப்பட்டிருந்த ஸ்வைப்பிங் கார்டை உபயோகிக்கிறார். ஆனால் அது வேலை செய்யவில்லை. அதற்குள்ளாகவே நிர்வாகம் அதை செயலிழக்க வைத்திருக்கிறது. 'இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக எத்தனை உழைத்திருப்பேன், எப்பேர்ப்பட்ட அவமானம் இது" என்று கண்ணீர் வடிய பேசிக் கொண்டிருந்தார் அவர்.

***

ஆருர் பாஸ்கர் எழுதிய 'வனநாயகன் - மலேசிய நாட்கள்' எனும் புதினம்,  தமது பணியிலிருந்து திடீரென்று வெளியேற்றப்படும் ஒரு  ஐ.டி. பணியாளரைப் பற்றிய அதிர்ச்சியில் இருந்து துவங்குகிறது. ஆனால் இது ஐ.டி. ஊழியர்களின் துயரங்களைப் பற்றி பேசும் பரிதாபங்களின் தொகுப்பல்ல. மலேசியாவின் பின்னணியில் இயங்கும் இந்தப் புதினம், ஒரு திரில்லருக்கான வேகத்துடன் பணி நீக்கத்திற்கு பின்னால் உள்ள பிரம்மாண்டமான வணிக சதியை பரபரப்பான பக்கங்களில் விவரிக்கிறது. 

நூலாசிரியர் ஆருர் பாஸ்கரின் முதல் புதினமான 'பங்களா கொட்டா' கிராமப்பின்னணியில் உருவான எளிய நாவல். வனநாயகன் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு மலேசிய நாட்டின் பிரம்மாண்ட பளபளப்பு பின்னணியில் இயங்குகிறது. பணிக்காக தமிழ்நாட்டிலிருந்து கிளம்பிச் செல்லும் இளைஞனான சுதா என்கிற சுதாங்கன், அந்நிய பிரதேச காங்கிரீட் வனத்தில் எதிரி எவரென்றே தெரியாத புதிருடன், காற்றில் கத்தி வீசுவது போல தன் பிரச்சினைக்காக தன்னந்தனியாக போராடுகிறான். 

இது தொடர்பான பரபரப்பை தக்க வைத்துக் கொள்ளும் இந்தப் புதினம், அதே சமயத்தில் ' இருளின் பின்னாலிருந்து உதித்த அந்த மர்ம உருவம் கத்தியுடன் பாய்ந்தது, .தொடரும்' என்கிற ரீதியில்  மலினமான திரில்லர் நாவலாகவும் கீழிறங்கவில்லை. உடல் சார்ந்த சாகசங்களின் மிகையான அசட்டுத்தனங்கள் இல்லை. புத்திக்கூர்மையுடன் நாயகன் போடும் திட்டங்கள் எதிர் தரப்பை கச்சிதமாக வளைத்து அவனுக்கு சாதகமாகும் தற்செயல் அபத்தங்களும் இல்லை. நடுத்தர வர்க்க மனநிலையில் குழம்பித் தவிக்கும் ஓர் இளைஞன், தனக்கெதிரான அநீதியை நோக்கி  அதன் சாத்தியங்களுடன் என்னவெல்லாம் செய்ய இயலுமோ அதை மட்டுமே நாயகன் செய்கிறான். இந்த தன்மையே இந்தப் புதினத்திற்கு ஒரு நம்பகத்தன்மையையும் இயல்பையும்  அளிக்கிறது. 

***

மலேசியாவில் இயங்கும் வங்கிகளில் ஒரு பெரிய வங்கி, நஷ்டமடைந்து கொண்டிருக்கும் இன்னொரு சிறிய வங்கியை தன்னுடன் இணைத்துக் கொள்கிறது. இரு வங்கிகளின் இணைப்பு தொடர்பான தகவல் நுட்பங்களை கையாளும் குழுவின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பன் சுதா. அவனுக்கும் மேலே பல பெரிய தலைகள். பல மாதங்கள் நீடிக்கும் இந்த அசுரத் தனமான உழைப்பு நிறைவேறப்  போகும் இறுதி நாளில் சுதாவிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு. அந்த அழைப்புதான் அவனது பணி பறிபோக காரணமாக இருக்கிறது. ஆனால் அது அவனை வெளியேற்றுவதற்கான ஒரு தந்திரமான வழி மட்டுமே. சுதாங்கன் இப்படி பழிவாங்கப் படுவதற்கு பின்னால் தனிநபர்களின் அற்பக் காரணங்கள் முதல் நாட்டின் பொருளாதாரத்தையே சிதைக்கும் பெரிய காரணங்கள் வரை பல உள்ளன. அவைகளைத் தேடி நாயகன் அலைவதே 'வனநாயகன்' எனும் இந்தப் புதினம். 

புலம்பெயர் இலக்கியத்தின் வகைமையில் இணையும் இந்தப் புதினம் ஒருவகையில் பயண இலக்கியமாகவும் அமைந்திருக்கிறது. மலேசிய நாட்டைப் பற்றிய கலாசாரக்கூறுகளின் பல்வேறு நுண் விவரங்கள், சுற்றுச்சூழலில் ஏற்படுத்தப்படும் பாதிப்புகள், நிதி மோசடிகள், இன அரசியல், பிரஜைகளின் படிநிலை அந்தஸ்து, அந்தப் பிரதேசத்தின் முக்கியமான இடங்களைப் பற்றிய விவரணைகள், சட்டவிரோதக் காரியங்கள், குழுக்கள் போன்ற தகவல்களால் நிறைந்திருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் 'இதைப் பற்றி சொல்கிறேன் பார்' என்று புதினத்தில் இருந்து தனியாக துண்டித்து விலகித் தெரியாமல் அதன் போக்கிலேயே உறுத்தாமல் விவரிக்கப்பட்டிருப்பது நூலாசிரியரின் எழுத்து திறனிற்கு சான்று. சம்பவங்களின் காலம் தோராயமாக இரண்டாயிரம் ஆண்டில் நிகழ்வதால் அது தொடர்பான சம்பவங்கள், அடையாளங்கள் மிகப் பொருத்தமாக இணைக்கப்பட்டிருக்கின்றன.


***

வங்கி இணைப்பு பணியின் இறுதி நாளன்று நிகழும் விநோதமான, மர்மச் சம்பவத்தில் இருந்து துவங்கும் இந்தப் புதினம், பிறகு முன்னும் பின்னுமாக பயணிக்கும் அதே சமயத்தில்  வாசிப்பவர்களுக்கு எவ்வித குழப்பத்தையும் ஏற்படுத்தாமல் சுவாரசியமான அத்தியாயங்களுடன் விரிகிறது. புதினம் முழுக்க சுதாங்கனின் நோக்கில் தன்னிலை ஒருமையில் விவரிக்கப்படுவதால் நாமே அவனுடைய அனுபவத்திற்குள் விழுந்து விட்ட நெருக்கமான வாசிப்பனுபவத்தை தருகிறது. 

சுதாவின் நெருங்கிய நண்பனான ரவி, எரிச்சலூட்டும் சகவாசி ஜேகே, வாகன ஓட்டுநர் சிங், புலனாய்வு இதழ் நிருபர் சாரா, முகம் பார்க்காமல் இணைய உறவில் மட்டும் நீடித்து பிறகு அதிர்ச்சி தரும் ஓவியா,  மெல்லிய காதலோடு காணாமற் போகும் சுஜா, வெவ்வேறு முகங்கள் காட்டும் தந்திரக்கார அதிகாரிகள் சம்பத், லட்சு என்று ஒவ்வொரு பாத்திரத்தின் வடிவமைப்பும் அதன் தனித்தன்மையோடு துல்லியமாக உருவாகியிருக்கிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பிரத்யேக அடையாளங்களில் ஒன்றான உராங்குட்டான் குரங்கு இனம் அழிவின் விளிம்பில் இருப்பதையும் மனிதர்களின் லாபங்களுக்காகவும்  வக்கிரங்களுக்காகவும் அவை துன்புறுத்தப்படுவதையும் பற்றிய கவலைக் குறிப்புகளும் புதினத்தில் இடையில் பதிவாகியுள்ளன. 

நாயகனின் பணிநீக்கத்திற்கான காரணத்தை தேடி அலைவதான பரபரப்பின் பாவனையில் இந்தப் புதினம் இயங்கினாலும் இதன் ஊடாக இயற்கை வளங்களின் சுரண்டல், புதையலைத் தேடி ஓடிக் கொண்டேயிருக்கும் மனிதர்களின் பேராசை, அதற்காக அவர்கள் செய்யும் கீழ்மைகள், நல்லவனற்றிற்கும் தீயவனவற்றிற்கும் இடையே நிகழும் ஒயாத  போர், தனிநபர்களின் நிறைவேறாத  ஆதாரமான விருப்பங்கள், அவற்றிற்கான தேடல்கள், உளைச்சல்கள் என பல்வேறு விஷயங்கள் விழுந்து கொண்டேயிருக்கின்றன. 

ஐ.டி பணியின் சூழல், அத்துறை பணியாளர்களின் பிரத்யேகமான மனோபாவங்கள், அவைகளில் உள்ள பிளாஸ்டிக் தன்மை தொடர்பான குறிப்புகளும் அபாரமாக பதிவாகியுள்ளன. புலம் பெயர்ந்து நீண்ட காலமாகி அங்கேயே உறைந்து விட்ட எழுத்தாளர்களின் பாணி வேறு. தமிழகத்திலிருந்து சென்று தற்காலிகமான விலகலில் ஒரு குழந்தையின் கண்களுடன் புதிய உலகை விழி விரிய நோக்கி, எப்போது வேண்டுமானாலும் தாயகத்திற்கு திரும்பி விடும் நோக்கில் அமையும் படைப்புகள் வேறு. இரண்டாவது பாணியில்,  இந்தப் புதினம் சிறப்புற உருவாகியுள்ளது. 


வன நாயகன், அதன் தலைப்பிற்கேற்ப பல்வேறு மிருகங்களின் குணாதிசயங்கள் அடங்கிய நபர்களின்  இடையில் போராடி விடைகாண்பவனைப் பற்றிய பயண அனுபவமாக சுவாரசியத்துடன் உருவாகியிருக்கிறது. 




**

வனநாயகன் - மலேசியா நாட்கள்
ஆரூர் பாஸ்கர்,
கிழக்கு பதிப்பகம்,  முதல் பதிப்பு டிசம்பர் 2016
பக்கங்கள் 304, விலை ரூ.275

(அம்ருதா இதழில் வெளியானது)

suresh kannan

Sunday, May 21, 2017

மரணத் தொழிற்சாலை - ஹிட்லரின் வதைமுகாம்கள்




உலக வரலாற்றில் இதுவரை நிகழ்ந்த பெரும்இனப்படுகொலைகளைப் பட்டியலிட்டால்  முதலில் வந்து நிற்பது ஹிட்லர் தலைமையில் நாஜிக்கள் செய்த அநீதியே. அநீதி என்று குறிப்பிடுவது  கூட குறைந்த பட்ச சொல் மட்டுமே. மானுட அறத்தையும் நாகரிகத்தையும் குழி தோண்டிப் போட்ட படுபயங்கர காட்டுமிராண்டித்தனம் என்றுதான் சொல்ல வேண்டும். நாகரிகம் மெல்ல வளர்ந்து வந்து கொண்டிருந்த அந்தக் காலக்கட்டத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த இனப் பேரழிவின் அட்டுழியங்கள் மெல்ல மெல்ல அம்பலமான போது உலகமே அதிர்ச்சியடைந்தது. சுமார் ஆறு மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் விதம்விதமாக கொல்லப்பட்டார்கள்; கடும் சித்திரவதைக்கு உள்ளானார்கள். யூதர்கள் தவிர இடதுசாரிகள், ஜிப்ஸிகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று இந்த வரிசையில் கொல்லப்பட்டவர்களின் கணக்கு தனி. சொத்துக்களை இழந்து உயிர்தப்பி  அகதிகளாகவும் காணாமற் போனவர்கள் பட்டியல் வேறு.


இந்தப் பேரழிவு குறித்து காற்றில் உலவுவது போல பொதுவெளியில் நெடுங்காலமாகவே  பல கேள்விகள் இருக்கின்றன.

ஏன் ஹிட்லர் இந்த இன அழித்தொழிப்பை மனச்சாட்சியின் துளியும் இன்றி செய்தார்? அதற்கான பின்னணியும் காரணமும் என்ன? என்னதான் ஒரு சர்வாதிகாரி குரூர மனோபாவத்துடனும்  முட்டாள்தனமாகவும் ஆணையிட்டு விட்டாலும் நாஜிகள் லட்சக்கணக்கான யூதர்களை  ஈவுஇரக்கமேயின்றி கண்மூடித்தனமாக கொன்று குவிப்பார்களா என்ன? அவர்களுக்கு மனச்சாட்சி வேலையே செய்திருக்காதா? நாஜிப் படையில் இருந்த அத்தனை பேரையும் வசியப்படுத்தியா இந்தப் படுகொலைகளை ஹிட்லர் செய்திருக்க முடியும்?

தமக்கு முன் பின் தெரியாத ஓர் அப்பாவியை, பெண்ணை, குழந்தையை, முதியவரை அவர்கள்  யூதராகப் பிறந்த ஒரே காரணத்தினாலேயே சுட்டுக் கொல்வதும் பல்வேறு குரூரமான வழிகளில் சித்திரவதைக்குள்ளாக்கி சாகடிப்பதும் என்பது எத்தனை பெரிய கண்மூடித்தனம்?  அப்பட்டமான இனவெறுப்பு உள்ளே ஊறிப் போயிருந்தால்தான் இந்த அரக்கத்தனத்தை செய்ய முடியும்.

இதையொட்டி எழும் பல கேள்விகளைப் போலவே நிறைய பதில்களும் உலவுகின்றன.

இயேசுவின் மரணத்திற்கு யூதர்கள் காரணமாக இருந்தார்கள், எனவே யூதர்களின் மீதான பகை தோன்றியது என்பது ஒரு பதில்.  ஹிட்லருடைய தாயின் மரணத்திற்கு ஒரு யூத மருத்துவர் காரணமாக இருந்தார் என்கிறது இன்னொரு தகவல். ஆரிய இனமே உயர்ந்தது என்கிற உயர்வு மனப்பான்மையுடன் இன சுத்திகரிப்பிற்காக ஹிட்லர் செய்தது என்பது சொல்லப்பட்ட காரணங்களில் மற்றொன்று. எது உண்மை, எது பொய் என்றே கண்டுபிடிக்க முடியாத பதில்கள் அவை.  இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி வீழ்ந்து ஹிட்லரின் தற்கொலை நிகழ்வதற்கு முன்னால் பல்வேறு அரசு ஆவணங்கள் அவசரம் அவசரமாக அழிக்கப்பட்டன என்பதால் எஞ்சியிருக்கும் பதிவுகளையும் முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களையும் வைத்து மட்டுமே இந்தப் பின்னணியை அறிந்து கொள்ள முடியும்.

ஆனால்  யூத வெறுப்பிற்கு இதுதான் காரணம் என்று எதையும் திட்டவட்டமாக சொல்லி விட முடியாது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். வரலாற்றில் ஏராளமாக இறைந்திருக்கும் தரவுகளை ஆய்ந்து அவற்றின் தொடர்ச்சியோடும் சிக்கலான கண்ணிகளை இணைத்தும் தோராயமாகத்தான் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் ஹிட்லருக்கு முன்னாலும் யூத வெறுப்பு இருந்தது;  பின்னாலும்  இருக்கிறது. வித்தியாசம் என்னவென்றால் ஹிட்லரின் காலக்கட்டத்தில் இந்த இனவெறுப்பு ஒரு கச்சிதமான திட்டமிட்ட பிரச்சாரமாக முன்வைக்கப்பட்டு கொலைகளும் சித்திரவதைகளும் வெளிப்படையாகவே நடந்தேறின.

**

இந்த இனஅழிப்பைப் பற்றியும் ஹிட்லரைப் பற்றியும் பல்வேறு கோணங்களில் ஆராயும் நூல்கள், ஆய்வுகள், திரைப்படங்கள் போன்றவை ஆங்கிலம் உள்ளிட்ட சில மொழிகளில் ஏராளமாக உள்ளன. ஹிட்லரின் உளவியல், அவரது தனிப்பட்ட ஆளுமையை ஆராய்வது முதற்கொண்டு யூதர்கள் செய்யப்பட்ட வதைகளைப் பற்றி துல்லியமாக ஆராய்வது வரை பல்வேறு பதிவுகள் உள்ளன. ஆனால் தமிழில்  இரண்டாம் உலகப் போரின் பின்னணியோடு ஹிட்லரின் வாழ்க்கை வரலாற்றை மேலோட்டமாக விவரிக்கும் நூல்கள் உள்ளனவே தவிர யூதர்களின் மீது நிகழ்த்தப்பட்ட இந்தக் கொடுமைகளை பிரத்யேகமாக பதிவு செய்யும் நூல் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில் மருதன் எழுதி  கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள  'ஹிட்லரின் வதைமுகாம்கள்' எனும் நூல், தமிழ் சூழலில் அந்த இருண்ட பக்கத்தின் மீதான வெளிச்சத்தைப் பாய்ச்ச முயல்கிறது. அந்த வகையில் இதுவே தமிழில் வெளிவந்துள்ள முதன்மையான நூல் எனலாம். யுத்தம் முடிந்த பிறகு ரஷ்ய படையால் வதை முகாம்களில் இருந்து தப்பிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள், இதைப் பற்றி செய்யப்பட்ட ஆய்வுகள் என்று பல்வேறு நூல்களின் தரவுகளைக் கொண்டு கச்சிதமான கோர்வையாக இந்த நூலை உருவாக்கியுள்ளார் மருதன்.

மருதனின் அசாதாரணமான உழைப்பில் உருவாகியுள்ள இந்த நூல் நம்மைக் கவரும் அதே வேளையில் கலங்கடிக்கவும் வைக்கிறது. ஒவ்வொரு பக்கமும் மரணத்தின் ஓலங்கள், வலிகளின் கதறல்கள், விடுதலையின் ஏக்கங்கள் போன்றவற்றினால் குருதியும் கண்ணீரும் வழியும் ஈரங்களோடு பதிவாகியுள்ளது. ஆனால் இதில் பதிவாகியிருக்கும் துயரம் என்பது பனிப்பாறையின் மீதான நுனி மட்டுமே  நம்மால் கற்பனையில் கூட யூகிக்க முடியாத படியான கொடுமைகள் அரங்கேறியுள்ளன. முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒரு யூதர் சொல்கிறார் 'அங்கு நடந்ததை நான் சொன்னால் அது கடற்கரை மணலில் ஒரு துளியாக மட்டுமே எஞ்சும். அனைத்தையும் விவரிப்பது சாத்தியமல்ல. நாங்கள் அங்கு சந்தித்தவற்றை சொல்வது கடினம். அதையெல்லாம் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. எங்களுக்குள் அந்த அனுபவங்கள் புதைந்து போயிருக்கின்றன.'

நூலின் பெரும்பாலான பக்கங்களில் யூதர்கள் உள்ளிட்டவர்களின் நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள், அதற்கான திட்டங்கள், முகாம்களை நோக்கிச் செல்லும் ரயில் பயணங்களின் அவஸ்தைகள், அவர்களின் மரணத்திற்காக யூதர்களாலேயே செய்ய வைக்கப்பட்ட முகாம் பணிகள், மரணக்குழிகள், கொத்துக் கொத்தாக மனிதர்களை எவ்வாறு எளிதில் அழிப்பது என்று செய்யப்பட்ட ஆலோசனைகள், மனித உடல்களை வைத்து செய்யப்பட்ட ஆய்வுகள் என்று பல்வேறு தகவல்கள் பதிவாகியிருக்கின்றன.

யூதர்களை கொத்துக் கொத்தாக ரயில்களில்  மூச்சு முட்ட அடைத்து செல்வதற்காக எஸ்.எஸ். ரயில்வே துறைக்கு பணம் செலுத்த வேண்டும். இதற்காக சரக்கு ரயில்களை நாஜிகள் பயன்படுத்தினார்கள்.  உயிருள்ள மனிதர்களை சரக்குகள் என்றே தங்களின் ஆவணங்களில் குறிப்பிட்டார்கள். தேவையற்ற சரக்குகளை அழிப்பதற்காக வேறிடத்திற்கு கொண்டு செல்கிறோம் என்று குறிப்பு எழுதினார்கள். முகாம்களில் அடைக்கப்பட்ட நபர்களின் தனி அடையாளங்கள் உடனே அழிக்கப்பட்டன. அவர்கள் எண்களால் குறிக்கப்பட்டார்கள். உடல் வலு இல்லாதவர்கள், குழந்தைகளை விஷவாயு அறையில் இட்டுக் கொன்றார்கள். இதர நபர்கள் முகாம்களில் கடுமையான பணிகளுக்காக கட்டாயப்படுத்தப்பட்டார்கள். முகாமில் இருந்த ஒவ்வொருக்குமே தங்களின் விடுதலையோ மரணமோ எப்போது நிகழும் என்கிற விஷயம் அறியப்படாமல் பதட்டத்திலேயே தொடர்ந்து வைக்கப்பட்டார்கள்.

ஒரு துளி உணவிற்காகவும் இன்னபிற விஷயங்களுக்காகவும் யூதர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டார்கள். மற்றவர்களின் பொருட்களை திருடத் தயாராக இருந்தார்கள். மிக அடிப்படையான விஷயங்களை பறித்துக் கொண்டால் மனிதர்கள் எவ்வாறு விலங்குகளுக்கு நிகரானவர்களாக மாறும் கொடுமையை நாஜிப்படை திட்டமிட்டு செய்தது. இறந்து போனவர்களே அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று தோன்றுமளவிற்கு முகாமில் இருந்து பின்னர் விடுவிக்கப்பட்டவர்களின் உளவியல் நிலைமை பரிதாபகரமாக அமைந்தது. இயல்பான வாழ்க்கைக்குள் நுழைய முடியாமல் நிறைய பேர் முகாமின் கசப்பான நினைவுகளில் இருந்து வெளியேற முடியாமல் தடுமாறினார்கள்.

ஆனால் இந்த நூல் வதைகளைப் பற்றிய விவரணைகளோடும் அவற்றைப் பற்றிய பரிதாபங்களோடும்  தொடரும் விசாரணைகளோடும் முடிந்து விடவில்லை. இனவெறுப்பின் பின்னால் உள்ள சித்தாந்தக் காரணங்கள், உளவியல் பின்னணிகள் ஆகியவற்றின் தொடர்பான தரவுகளையும் பதிவு செய்கிறது.

தமிழில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் மிக முக்கியான நூல்களில் ஒன்றாக இதை  தயக்கமின்றி சொல்ல முடியும்.

**

ஹிட்லரின் வதைமுகாம்கள்
மருதன்
கிழக்கு பதிப்பகம், சென்னை
விலை ரூ.200
பக்கங்கள் - 232

(அலமாரி இதழில் பிரசுரமானது)




suresh kannan

Saturday, February 04, 2017

'கானகன்' - புலியாடும் வேட்டை




நவீன தமிழ் இலக்கியத்தில் சூழலியல் சார்ந்த படைப்புகள் மிக சொற்பம். சங்க இலக்கியத்தில் இயற்கை பற்றிய விவரணைகள், நுண்தகவல்கள் இருந்தன. இதன் தொடர்ச்சி இடையில் அறுபட்டு விட்டது.

மேலைநாடுகளில் தொன்னூறுகளில் Eco Criticism பற்றிய விழிப்புணர்வு பரவலாக ஏற்பட்டது. தமிழில் ச.கந்தசாமி எழுதிய சாயாவனம், சூழலியல் சார்ந்த துவக்க கால படைப்பு. ஜெயமோகனின் ‘ரப்பர், பாவண்ணனின் ‘பாய்மரக்கப்பல்’ போன்ற நாவல்கள் பிறகு உருவாகின.

இன்று சூழலியலுக்கான பிரத்யேகமான பருவ இதழ்கள் கூட வெளிவருவது மாதிரியான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சமகால இலக்கியத்திலும் இதன் பிரதிபலிப்புகள் வெளிப்படத் துவங்கியுள்ளன.

லஷ்மி சரவணகுமார் எழுதிய ‘கானகன்’ அவ்வாறானதொரு முயற்சி. இயற்கை வளங்களை பெருவணிகம் கொள்ளையடிப்பதும் சூறையாடுவதும் காலங்காலமாக நிகழ்ந்து வரும் ஓர் அராஜகம். மனித குலத்தால் இயற்கையின் மீது தொடுக்கப்படும் இந்தப் போரினால் பாதிக்கப்படுவது இயற்கையின் சமநிலை மட்டுமல்ல, இயற்கையைச் சார்ந்திருக்கும் காட்டுயிர்களும் பழங்குடிகளுமே.

அதிகார வர்க்கமும் வணிக முதலாளிகளும் இணைந்த ஒரு வலிமையான வலைப்பின்னலின் பேராசை காரணமாக தங்களின் வாழ்விடங்களையும் வாழ்வாதாரங்களையும் இழந்து துரத்தப்படும் அவலத்திற்கு ஆளாகின்றனர்.

கானகன் இந்தப் பின்னணியில் இயங்குகிறது.

**

தங்கப்பன் திறமையான வேட்டைக்காரன். காட்டின் அசைவுகளைப் பற்றி நுணுக்கமான அறிய முடிந்த அவனால் அதன் ஆன்மாவை உணர முடியவில்லை. அவனுடைய வளர்ப்பு மகன், வாசி. பழங்குடி நம்பிக்கைகளின் நுட்பமான தொடர்ச்சியான அவனுக்கு காட்டுயிர்கள் தொடர்ந்து அநியாயமான முறையில் வேட்டையாடப்படுவது குறித்த மெளனமான கோபம் இருக்கிறது.

தங்கப்பன் மற்றும் வாசியின் முரணியக்க இயங்குதலின் மீது நாவலின் மையச்சரடு பின்னப்பட்டிருக்கிறது. எண்பதுகளில், தமிழக மலைப் பகுதியில் நிகழ்வதாக களம் அமைக்கப்பட்டிருக்கிறது. பழங்குடிகளின் வாழ்வியல், இயற்கையை ஆராதிக்கும் அவர்களின் மனோபாவம், காட்டுயிர்கள், அவற்றின் மீது நவீன உலகம் நிகழ்த்தும் கொடூரமான வேட்டை போன்ற சம்பவங்கள், அதன் நுண்விவரங்கள் நாவலில் சிறப்பாகவே பதிவாகியுள்ளன.

நாவலை உருவாக்குவதில் நூலாசிரியரின் உழைப்பும் அக்கறையும் தெரிகிறது. என்றாலும் ஒட்டுமொத்த நோக்கில் இதுவொரு முதிராத முயற்சியாக சலிப்பூட்டுகிறது. காடும் பழங்குடிகளும், மிகையான அளவில், புனிதப்படுத்தப்பட்டுள்ளார்களோ என்று தோன்றுகிறது. ஆசிரியரின் குரலும் நாவலின் இடையில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருப்பதால் இதன் இயல்புத்தன்மையும் கலையமைதியும் வெகுவாக பாழாகியுள்ளது. செயற்கையான சம்பவங்களுடன் கூடிய அபத்தங்கள் நிறைந்துள்ளன. திணிக்கப்பட்ட பாலியல் நிகழ்வுகளும்.

இயற்கையைப் பற்றிய நுட்பமான விவரணைகளுடனும் நிதானமான நடையுடனும் இதை செறிவுப்படுத்தி உருவாக்கியிருந்தால் தமிழின் ஒரு முக்கியமான படைப்பாக ‘கானகன்’ அமைந்திருக்கும். என்றாலும் சூழலியல் பற்றிய தமிழ் படைப்புகள் சொற்பமே என்கிற அளவில், ‘கானகன்’ கவனத்தில் கொள்ளக்கூடிய முயற்சியே.

***

கானகன் (நாவல்) - லஷ்மி சரவணகுமார்
மலைச்சொல் பதிப்பகம்
பக்கம் 264 - விலை ரூ.99 (மக்கள் பதிப்பு)

(அலமாரி இதழில் பிரசுரமானது)


suresh kannan

Monday, January 09, 2017

அழைத்தார் பிரபாகரன் - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

 
 
 
'நீங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா என்ன?" 
 
இப்படியொரு துணிச்சலான கேள்வியை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவராக இருந்த பிரபாகரனிடம் கேட்க முடிகிற  ஒரு  காட்சியை கற்பனை செய்து பார்த்தாலே சற்று திகைப்பாகத்தான் இருக்கிறது இல்லையா?

இதைக் கேட்டவர் பிரபல கிரிக்கெட் வர்ணணையாளரும், தமிழறிஞரும், எழுத்தாளருமான அப்துல் ஜப்பார்.
 
ஏப்ரல் 10, 2002  அன்று  சர்வதேச ஊடகங்களின் பிரதிநிதிகள் பெரும்பாலும்  கிளிநோச்சியில் இருந்தார்கள். ஒட்டுமொத்த ஊடக உலகின் கண்களும் அன்று அந்த திசை  நோக்கிதான் இருந்தன.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சர்வதேச ஊடவியலாளர் மாநாட்டினை அன்று ஏற்பாடு செய்திருந்தார். 'அது ஒரு துன்பியல் சம்பவம்' என்று ராஜீவ்காந்தி படுகொலையைப் பற்றி முதன்முறையாக புலிகள் தரப்பிலிருந்து கருத்து தெரிவிக்கப்பட்டது அன்றுதான்.
 
இந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டிற்குத்தான் அப்துல் ஜப்பார் சென்றிருந்தார். மாநாட்டின் நிறைவில் எதிர்பாராததொரு ஆச்சரியமாக பிரபாகரனை சந்திக்கும் வாய்ப்பு, அப்துல் ஜப்பாருக்கு கிடைத்தது.

இவரின் வானொலி நிகழ்ச்சிகள் அங்கு பிரபலம் என்பதால் பிரபாகரனே இவரைச் சந்திக்க விரும்புகிறார்.  அந்த உரையாடலின் இடையில்தான் ஒரு தருணத்தில் மேற்குறிப்பிட்ட கேள்வியை ஜப்பார் கேட்கிறார்.

***
இந்த மாநாட்டிற்கு சென்ற அப்துல் ஜப்பாரின் பயண அனுபவங்களும் பிரபாகரனுடனான சந்திப்பு விவரங்களும் தொகுக்கப்பட்டு ஒரு சிறிய நூலாக வெளிவந்திருக்கிறது.

'கண்டேன் சீதையை' என்று அனுமன் சொல்வது போல 'அழைத்தார் பிரபாகரன்' என்பது நூலின் அழகான தலைப்பு.
 
எதிர்பாராமல் அமைந்த இந்த பயண நிகழ்வு, அதில் ஏற்பட்ட நடைமுறைச் சிரமங்கள், அதைத் தாண்டி வந்த சாதனைகள் என்று தன் பயணம் தொடர்பான ஒவ்வொரு நுண்தகவலையும் எளிமையான, அழகு தமிழில் பதிவு செய்திருக்கிறார். அவருடனேயே நாமும் சென்று வந்த உணர்வு இந்நூலின் மூலம் கிடைக்கிறது.

போரினால் அழிந்த கட்டிடங்கள், புதைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகள், எல்லா ஏற்பாடுகளையும் நேர்த்தியாகவும் பாதுகாப்பாகவும் செய்யும் புலிகளின் ஒழுங்கு, நிர்வாகத்திறமை, அவர்களின் தியாகவுணர்வு உள்ளிட்ட பல தகவல்கள் இந்த நூலில் சுவாரசியமாக வெளிப்படுகின்றன.

***

அழைத்தார் பிரபாகரன் - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.
தமிழ்அலை வெளியீடு, பக்கங்கள் 48, விலை ரூ.50/-
 
(அலமாரி இதழில் பிரசுரமான மதிப்புரை)
 
suresh kannan

Monday, November 28, 2016

புதுமைப்பித்தன் சிறுகதைகள் - புதுமையும் நவீனமுமான ஒரு கதைசொல்லி




வருடம் 1985. நான் பத்தாம் வகுப்பில் இருக்கும் போது தமிழ்  இரண்டாம் தாளில் சில சிறுகதைகள் பாடத்திற்கு வைக்கப்பட்டிருந்தன. என்னவென்று தெரியாமலேயே அதிலுள்ள ஒரு சிறுகதை என்னை மிகவும் கவர்ந்தது. வட்டார வழக்கு தடைகளையும் தாண்டி அதன் சுவாரசியத்தை அந்த இளம் வயதிலேயே உணர முடிந்தது.

நடுத்தர வர்க்க வாழ்வின் அவல நகைச்சுவையை  நையாண்டியுடன் சித்தரிக்கிற சிறுகதையது  என்பதும்  அதை எழுதியவர் நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியமான முன்னோடிகளில் ஒருவரான  'புதுமைப்பித்தன்' என்பது புரிவதற்கும்  அறிவதற்கும் சில வருடங்கள் கடக்க வேண்டியிருந்தாலும் அப்போதைய முதிரா வாசிப்பில் சிறுகதையில் வரும் சிறுமியின் சித்திரம் மிகவும் பிடித்திருந்தது. வர்க்க பேதத்தை உணராமல் ரிக்ஷாவில் ஏறிக் கொண்டு வீட்டில் விட அடம் பிடிக்கும் காட்சியும், விருந்தாளியை 'பல்லு மாமா' என்றழைக்கும் குறும்புத்தனமும் அந்தச் சிறுகதையை மறக்க முடியாமல் செய்தன.


***

சிறுகதை எனும் வடிவம் மேற்கிலிருந்து தமிழிற்கு  இறக்குமதியானது என்றாலும் அந்த வடிவம் இங்கு பரவலாக அறிமுகமாவதற்கு முன்பே அதில் உள்ள பல சாத்தியங்களை புதுமைப்பித்தன் முயன்று பார்த்து விட்டார் என்பது பிரமிப்பிற்கு உரியது. உலக இலக்கியத்தில் பரிச்சயம் கொண்டிருந்த அவர், வேறு வேறு பாணிகளில் நிறைய சிறுகதைகளை தமிழில் எழுதினார்.  நடுத்தர வர்க்க வாழ்வின் அவலம், விளிம்பு நிலை மக்களின் நுண்மையான சித்தரிப்புகள், இதிகாச கதையின் மீளுருவாக்கம்  என்று பல வகைகள்.

'அவன் ரஸ்தாவின் ஓரத்தில் உள்ள நடைபாதையில் படுத்து சாவகாசமாகச் செத்துக் கொண்டிருந்தான்.' (மகாமசானம்) என்பது  போன்ற  இன்றைக்கும் நவீனமாகத் தோன்றுகிற வாக்கியங்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன.

புதுமைப்பித்தனின் சிறுகதை தொகுப்புகள் பல்வேறு வடிவங்களில் வந்து விட்டன.  நாட்டுடமையாக்கப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளை கையாள்வது பற்றி கேட்பாரே இல்லை. 'சிறந்த சிறுகதைகள்' 'பத்து முத்துகள்' என்ற தலைப்புகளில் இஷ்டம் போல் அடித்து தள்ளுவது ஒரு மோசமான வணிக உத்தியாக மாறி விட்டது. ஒரு முன்னோடி எழுத்தாளரின் படைப்புகளை கால வரிசையில் தொகுத்து பிழையின்றி செம்மை பதிப்பாக கொண்டு வர வேண்டும் என்கிற நாணயமும் அர்ப்பணிப்பும் பெரும்பாலான பதிப்பாளர்களிடம் இல்லை. சில  பதிப்பகங்களே அந்த  நியாயங்களைச் செய்கின்றன. அந்த வகையில் ஆ.இரா.வேங்கடாசலபதியை பதிப்பாசிரியராக கொண்டு காலச்சுவடு பதிப்பகத்தால் கொண்டு வரப்பட்ட செம்மை பதிப்பு குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து சமீபத்தில் அன்னம் பதிப்பகம் கொண்டு வந்திருக்கும் 'புதுமைப்பித்தன் கதைகள்' தொகுப்பு முக்கியமானது. இது எந்த வகையில் முந்தைய  முயற்சிகளிலிருந்து வேறுபட்டது?

சிறுகதையின் தன்மையைக் கொண்டு அதை ஒரு குறிப்பிட்ட வகைமையில் பகுத்து கீழ்கண்ட  பதினோரு பகுப்புகளாக பிரித்து இந்த தொகுப்பை உருவாக்கியிருக்கிறார். சி.மோகன். மிகுந்த உழைப்பையும் நுண்ணுணர்வுடனான வாசிப்புத் தன்மையையும் கோரும் விஷயம் இது.

1) மாயப் புனைவு, 2) விந்தைப் புனைவு, 3) வேதாந்த விசாரம், 4) புராண, இதிகாசங்கள் - மீள்பரிசீலனை, 5) துப்பறியும் கதைகள், 6) குழந்தை-சிறுவர் - இளைஞர் உலகம், 7) விளிம்பு நிலை மற்றும் புலம்பெயர் வாழ்க்கை, 8) எழுத்தாளர் வாழக்கை 9) கால யதார்த்தமும் மனித மனமும், 10) சமூக யதார்த்தமும் காதல் மனமும், 11) தாம்பத்யம்.

சில சிறுகதைகளை ஒரு குறிப்பிட்ட வகைமையில் அடக்க முடியாமல் தவித்த அவஸ்தை உள்ளிட்ட பல விவரங்களை முன்னுரையில் விஸ்தாரமாக குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் வெளிவந்திருக்கும் மிக முக்கியமான தொகுப்பு நூல் என்று இதைச் சொல்லலாம்.

**

வருடம் 2016. பதினொன்றாம் வகுப்பு படிக்கும் என்னுடைய மகளின் தமிழ் பாட நூலை தற்செயலாக புரட்டிப் பார்த்தேன். என் இளம்வயதில் நான் வாசித்து ரசித்த அதே சிறுகதை - 'ஒரு நாள் கழிந்தது', இதிலும் இருந்தது.

"பிடிச்சிருந்துதா?" என்று கேட்டேன்.. "பல்லு மாமா கதைதானே? ம்.." என்றாள் உற்சாகமாய். காலம் அப்படியே உறைந்து நின்றது போன்ற பிரமை.  புதுமைப்பித்தன் எழுத்தின் சாஸ்வதத்திற்கு இதுவொரு சிறிய உதாரணம்.

**

புதுமைப்பித்தன் சிறுகதைகள் / பகுப்பு: சி.மோகன் /முதற்பதிப்பு மே 2016 / 
 வெளியீடு: அன்னம், மனை எண்.1, நிர்மலா நகர், தஞ்சாவூர் - 613 007. 
விலை. ரூ.500/-

நன்றி: அலமாரி - புத்தக மதிப்புரை இதழ்

suresh kannan

Sunday, November 27, 2016

மீண்டும் பூக்கும் (புதினம்) - ஜெ. பானு ஹாருன்



வளரிளம் பருவத்தில் நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் போன்றவை வாசிக்கும் போது இஸ்லாமியக் கதைகள் கண்ணில் படும். ரம்ஜான் போன்ற பண்டிகைக் காலங்களில் சிறப்புக் கதைகள் வெளிவரும். ஆனால் அவற்றை வாசிப்பதில் சில இடையூறுகள் இருந்தன. அந்தச் சமூகத்திற்கேயுரிய வழக்குச் சொற்களும் அரபிப் பெயர்களும் வட்டார வழக்குளும் புரியாமல் தடுமாற வைக்கும். எனவே வாசிப்பை இடையிலேயே நிறுத்தி விட்டு தாண்டிப் போக வேண்டியிருக்கும். சில படைப்புகளின் இறுதியில் வழக்குச் சொற்களின் பொருள் தந்திருப்பார்கள். எனவே ஏணியில் ஏறி இறங்கும் விளையாட்டு போல, திரைப்படத்தின் சப்டைட்டிலை கவனித்துக் கொண்டே பார்ப்பது போல சொற்களின் அர்த்தத்தை கவனித்துக்  கொண்டே வாசிக்க வேண்டியதிருக்கும்.

அந்த வயதில் கூடவே கோலியும் பம்பரமும் விளையாடும் நண்பர்களில் சாகுலும், இப்ராஹிமும் இருந்தாலும் இந்தப் புரிதலில் கலாசார சுவர் தடையாய் இருந்தது நடைமுறை உண்மை. ஏன் அவர்கள்  உறவினர்களை ‘அத்தா.. காக்கா.. ‘ என்கிறார்கள் என்று குழப்பமாக இருக்கும். கேட்டால் சிரித்துக் கொண்டே விளக்குவார்கள் என்றாலும் அந்தக் கலாசாரம் முழுக்கவும் புரியாது.

ஆனால் பிற்பாடு வாசிப்பின் ருசி கூடிய பிறகு குறிப்பிட்ட சமூகத்தின், வழக்குச் சொற்கள் கலாசார கலப்பின் அடையாளம் என்பதும் அவை அந்தப் புதினங்களுக்கு பிரத்யேகமான சுவையைக் கூட்டுகின்றன, அடையாளத்தை தருகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. குறிப்பாக வட்டார வழக்குச் சொற்களின் ருசி என்னுள் இறங்குவதற்கு கி.ராவின் நாட்டார் இலக்கியங்கள் காரணமாக இருந்தது. தோப்பில் முகம்மது மீரானின் புதினங்களை வாசிக்கும் போது இஸ்லாமிய சமூகத்தின் வழக்குச் சொற்கள் வாசிப்பிற்கு தடையாய் இல்லை. வாக்கியத்தின் தொடர்ச்சியோடு அவற்றின் பொருள் தன்னிச்சையாக புரிந்து போகும் அனுபவம் கூடியது.

**

ஜெ. பானு ஹாருன் அவர்கள் வாசிக்க அனுப்பித் தந்த புதினமான ‘மீண்டும் பூக்கும்’ நூலை சமீபத்தில் வாசித்தேன். பிரபல யுனானி மருத்துவரும் எழுத்தாளருமான எம்.ஏ.ஹாரூனின் துணைவியார் இவர்.

பாலின சமத்துவமற்ற சூழலில், மற்ற துறைகளைப் போலவே ஆண்மைய சிந்தனைகளே நிறைந்திருக்கும் படைப்புலகத்தில் பெண்களின் பங்களிப்பு பரவலாக நிகழத் துவங்குவது  எனக்கு எப்போதுமே மகிழ்ச்சியைத் தரும் விஷயம். அதிலும் மதம் சார்ந்த கட்டுப்பாடுகளும் அடக்குமுறைகளும் தடைகளும் உள்ள இஸ்லாமிய சமூகத்தில் இருந்து பெண் படைப்பாளிகள் உருவாவது, அவர்களின் தரப்பு இடம் பெறுவது மிக அவசியமானது. பாலின நோக்கில் பெண் எழுத்தாளர்களை தனித்து அடையாளப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லையென்றாலும் பெண்களின் சில பிரத்யேகமான பிரச்சினைகளை, அகச்சிக்கல்களை பெண்கள்களால்தான் நுட்பமாகவும் உண்மையானதாகவும் வெளிப்படுத்த முடியும் என நம்புகிறேன்.

எனவே பெண்களின் இவ்வாறான வருகையை துவக்க கட்டத்திலேயே விமர்சன நோக்கில் ‘முதிரா முயற்சிகள்’ என கறாராக புறந்தள்ளுவதில் எனக்கு உடன்பாடில்லை. இது பெண் என்பதால் தரப்படும் சிறப்புச் சலுகையல்ல. சமூகத்தின் பின்னுள்ள பண்பாட்டுச் சிக்கல்களை இணைத்து அணுகுவது,  புரிந்து கொள்வது கறாரான விமர்சனத்தை விடவும் முக்கியமானது என நினைக்கிறேன்.

பானு ஹாருனின் புதினம் சுவாரசியமான வாசிப்பனுபவத்தைக் கொண்டது. ஒரு மாத நாவலை வாசிப்பது போன்று இரண்டு மூன்று பயண நேரத்தில் வாசித்து முடித்து விட முடிந்தது. இந்த சுவாரசியமே இவரது அடிப்படையான எழுத்து திறனின் வெற்றியாக கருதுகிறேன்.

**

ஸக்கியா என்கிற பெண்ணின் துயர வாழ்வை விவரித்துச் செல்லும் நாவல் இது. அவளது வாழ்க்கையில் நிகழும் பல துயரங்களுக்குப் பிறகு காலம் கடந்து ஒரு வசந்தம் பிறக்கிறது. அதைத்தான் தலைப்பு உணர்த்துகிறது ‘மீண்டும் பூக்கும்’

முதலாளிகளிடம் அடியாளாக வேலை செய்து பிழைக்கும் குடிகார கணவனிடம் சிக்கி ஸக்கியா துன்பப்படும் சித்தரிப்புகளோடு நாவல் துவங்குகிறது.  அநாதையான ஸக்கியாவிற்கு பெரியம்மாதான் ஆதரவு. தனது சொந்த மகள்களை நன்கு படிக்க வைத்து, வசதியான இடங்களில் திருமணம் செய்து தரும் பெரியம்மா, இவளை மட்டும் வேற்றூரில் ஓர் எளிய உழைப்பாளிக்கு திருமணம் செய்து அனுப்பி விடுகிறார். ஸக்கியாவிற்கும் படிப்பதை விடவும் பெரியம்மாவின் அருகாமையில் இருந்து சேவை புரிவதே திருப்தியாக இருக்கிறது. ஆனால் கல்வி கற்காமல் போனதின் விலையை திருமணத்திற்குப் பிறகு அவள் தரவேண்டியிருக்கிறது.

அடியாள் வேலைக்குச் சென்ற கணவன் எதிரிகளால் கொலைசெய்யப்படுவதால் மறுபடியும் பெரியம்மாவை நோக்கி செல்ல வேண்டிய சூழல் ஸக்கியாவிற்கு. ஆனால் அங்கும் துரதிர்ஷ்டம் இவளை துரத்துகிறது. பெரியம்மாவின் மரணச் செய்தியைத்தான் அங்கு அறிந்து கொள்ள முடிகிறது.

எதிர்காலம் குறித்த கவலை ஒருபக்கம் இருந்தாலும் அந்தக் குடும்பத்தின் வளர்ச்சிக்காக தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறாள் ஸக்கியா. இவளுடைய சேவையும் அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது. அந்தக் குடும்பத்தின் இரண்டு மகள்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கிறாள்.

அந்த வீட்டின் பெரியவருக்கு இறக்கும் தருவாயில்தான் ஸக்கியாவின் நிராதரவற்ற நிலை அதிகம் உறுத்துகிறது. ‘தங்கள் வீட்டின் மகள்களைப் போல் அல்லாமல் இவளை வசதி குறைவான இடத்தில், தவறான நபருக்கு திருமணம் செய்து தந்து இவளின் வாழ்வை பாழடித்து விட்டோமே என்று குற்றவுணர்ச்சியின் தத்தளிப்பிற்கு ஆளாகிறார்.  ஸக்கியாவின் எதிர்காலத்திற்கு ஆதாரமான சில விஷயங்களை பிடிவாதத்துடன் செய்கிறார்.

ஸக்கியாவின் அதுவரையான துயரக்காலக்கட்டம் ஓய்ந்து வருங்காலத்தின் நம்பிக்கை வெளிச்சம் பிறக்கும் நல்ல செய்தியோடு நாவல் நிறைகிறது.

**

இஸ்லாமிய சமூகம் குறித்து இதர  சமூகங்களின் பொதுப்புத்தியில் நல்லதும் கெட்டதுமாக நிறைய முன்தீர்மான சித்திரங்கள் உள்ளன. மேலைய நாட்டவர்கள் பெரும்பாலும் கற்பு குறித்து அக்கறை கொள்ளாதவர்கள் என்கிற மேலோட்டமான புரிதல் இங்கு இருப்பதைப் போல ‘அவங்க நாலு திருமணம் கூட செய்துக்குவாங்க’ என்று இஸ்லாமிய சமூகத்தை சர்வசாதாரணமாக கூறி விடுவதைப் போன்ற அர்த்தமற்ற சித்திரங்கள்.

இது மட்டுமல்லாது சினிமாவும் ஊடகங்களும் இன்னபிற அமைப்புகளும் இது சார்ந்து பல ஆபத்தமான மதீப்பீடுகளை இங்கு உருவாக்குகின்றன. இஸ்லாமியர் என்பவர்கள், மதம் சார்ந்த தீவிரப்பற்றுவள்ளவர்கள், பிற்போக்கானவர்கள், அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் என்பது போன்ற பல ஆபத்தான கருத்துக்கள் பொதுச்சமூகத்தின் மையத்திற்குள் வீசப்படுகின்றன. மத அரசியல் திட்டமிட்டு இவற்றை ஊதிப் பெருக்குகிறது.

ஜெ. பானு ஹாருன் முன்வைக்கும் இந்தப் புதினத்தின் மூலம் ஒரு சராசரியான இஸ்லாமிய குடும்பத்தின் இயக்கத்தை, அதன் போக்கை நாம் நெருங்கி நின்று கவனிக்க முடிகிறது. அந்தக் குடும்பத்தின் வளர்ச்சி, வீழ்ச்சி ஆகிய இரண்டையுமே சமநிலையுடன் விவரித்துச் செல்கிறார் நூலாசிரியர். அவர்களும் ஏனைய சமூகத்தினரைப் போன்று அறம் சார்ந்த விழுமியங்களுக்கு கட்டுப்படுபவர்கள்தான். மனச்சாட்சியுடன் இயங்குகிறவர்கள்தான்.

மற்றவர்களைப் போல் தன் கணவன் கடல் கடந்து சம்பாதித்து வராத அங்கலாய்ப்புடன் இருக்கிறாள் ஜம்ஷித்தின் மனைவி. இதனாலேயே அந்த உறவில் விலகல் ஏற்படுகிறது. இன்னொரு திருமணத்திற்கான வாய்ப்பு இருந்தும் தன்னுடைய மகள்களின் எதிர்காலத்தையும் ஊருக்குச் செய்யும் சேவையையும் மட்டுமே நினைத்து காலம் கடத்துகிறான் ஜம்ஷித். இறுதிக் கட்டத்தில் பெரியவர்களின் நெருக்கடிக்கும் தன் மகள்களின் கோரிக்கைக்கும் செவிசாய்த்து நிராதரவாக நிற்கும் ஸக்கியாவை திருமணம் செய்ய  சம்மதிக்கிறான். ‘நாலு திருமணம் கூட’ செய்து கொள்ள வாய்ப்பிருக்கும் சமூகமாக கருதப்படுவதிலுள்ள பொதுப்புத்தியின் மேலோட்டமான கருத்தை ஜம்ஷித்தின் நிதானமான பாத்திரம் சிதறடிக்கிறது.

ஜம்ஷித்தின் இரண்டாவது மகளுக்கு கல்வியின் மீது அதிக ஈடுபாடு இருக்கிறது. சமூகக் கட்டுப்பாடுகளால், அடக்குமுறைகளால் அவளது கனவை தடுக்க முடியவில்லை. ‘கல்விதான் தன் விடுதலைக்கான ஆயுதம்’ என்கிற முதிர்ச்சியும் புரிதலும் அவளுக்கு இருக்கிறது. பழமையிலிருந்து விடுதலையாகத் துடிக்கும் ஒரு நவீன இஸ்லாமிய பெண்ணின் சித்திரம்.

திருமண நிகழ்வு ஒன்றின் மூலம் அதன் சம்பிரதாயங்கள், நடைமுறைகள், சடங்குகள் போன்றவற்றை அபாரமாக விவரித்துச் செல்கிறார் நூலாசிரியர். வடகரை இஸ்லாமிய சமூகத்தின் பண்பாட்டு சார்ந்த நுண்விவரங்கள் சிறப்பாக பதிவாகியிருக்கின்றன.

**

அது எந்தவொரு சமூகமாக இருந்தாலும், தேசமாக இருந்தாலும் பல ஆண்டுகளாக ஒரு சராசரியான பெண்ணின் இயக்கமும் வாழ்வும் ஆணாதிக்க சமூகம் உண்டாக்கும் பல அல்லல்களுக்கும் தடைகளுக்கும் இடையே நீந்திக் கடக்க வேண்டியதாக இருக்கிறது. ஸக்கியா அம்மாதிரியான பிரதிநிதித்துவத்தை எதிரொலிக்கும் ஒரு பிம்பம். ஆனால் அவளின் வாழ்வை துயரத்தில் மூழ்கடித்து விடாமல் நம்பிக்கைக் கீற்றோடு நிறைவுறச் செய்திருப்பது சிறப்பான விஷயம்.

**

‘மீண்டும் பூக்கும்’ (புதினம்)
-    ஜெ. பானு ஹாருன்
அபு பப்ளிகேஷனஸ், வடகரை
பக்கம் 132, விலை – ரூ.70
suresh kannan