Monday, May 29, 2017

வனநாயகன் - காங்கிரீட் வனத்தில் ஒரு யுத்தம்

தொழிற்சங்கம் உருவாக முடியாத, பணிப்பாதுகாப்பில்லாத தொழிலாளா்களைக் கொண்டது ஐ.டி எனப்படும் தகவல் நுட்பம் சார்ந்த துறை. இதர துறைகளோடு ஒப்பிடும் போது இதில் வருமானம் சற்று கூடுதல்தான் என்றாலும் வழங்கப்படும் ஊதியத்திற்கு மேலாக ஊழியர்களை சக்கையாக பிழிந்து விடும்  தன்மையைக் கொண்டது என்கிறார்கள். நேரம், காலம் பார்க்காமல் உழைத்தாலும் எப்போது வேண்டுமானாலும் பணியிலிருந்து வெளியேற்றப்படலாம் என்கிற அபாயக்கத்தி இருக்கையின் கீீழே பதுங்கியிருக்கும். சுருங்கச் சொன்னால் திரசங்கு சொர்க்கம் அல்லது டை கட்டிய அடிமைத்தனம்.

இப்படி நிர்வாகத்தால் மனச்சாட்சியின்றி திடீரென்று வெளியேற்றப்படுவதைப் பற்றி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சில ஐ.டி. பணியாளர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அதில் ஒருவர் சொன்னது திகிலாகவும் மட்டுமல்ல, வேதனையாகவும் இருந்தது. எவ்வித முன்அறிவிப்பும் இல்லாமல்  அவர் திடீரென்று  பணிநீக்கம் செய்யப்படுகிறார். அன்றைய நாள் பணிக்கு வரும் போதுதான் அவருக்கே அந்த விஷயம் தெரியும். இதை அறிந்து மேலதிகாரியின் அறைக்குச் சென்று வாக்குவாதம் கூட செய்ய அனுமதிக்கப்படாமல் வெளியேற்றப்படுகிறார். வேதனையுடன் அவர் தன் இருக்கைக்கு திரும்பும் போது வழியிலுள்ள ஒரு கதவைத் திறப்பதற்காக தனக்கு தரப்பட்டிருந்த ஸ்வைப்பிங் கார்டை உபயோகிக்கிறார். ஆனால் அது வேலை செய்யவில்லை. அதற்குள்ளாகவே நிர்வாகம் அதை செயலிழக்க வைத்திருக்கிறது. 'இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக எத்தனை உழைத்திருப்பேன், எப்பேர்ப்பட்ட அவமானம் இது" என்று கண்ணீர் வடிய பேசிக் கொண்டிருந்தார் அவர்.

***

ஆருர் பாஸ்கர் எழுதிய 'வனநாயகன் - மலேசிய நாட்கள்' எனும் புதினம்,  தமது பணியிலிருந்து திடீரென்று வெளியேற்றப்படும் ஒரு  ஐ.டி. பணியாளரைப் பற்றிய அதிர்ச்சியில் இருந்து துவங்குகிறது. ஆனால் இது ஐ.டி. ஊழியர்களின் துயரங்களைப் பற்றி பேசும் பரிதாபங்களின் தொகுப்பல்ல. மலேசியாவின் பின்னணியில் இயங்கும் இந்தப் புதினம், ஒரு திரில்லருக்கான வேகத்துடன் பணி நீக்கத்திற்கு பின்னால் உள்ள பிரம்மாண்டமான வணிக சதியை பரபரப்பான பக்கங்களில் விவரிக்கிறது. 

நூலாசிரியர் ஆருர் பாஸ்கரின் முதல் புதினமான 'பங்களா கொட்டா' கிராமப்பின்னணியில் உருவான எளிய நாவல். வனநாயகன் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு மலேசிய நாட்டின் பிரம்மாண்ட பளபளப்பு பின்னணியில் இயங்குகிறது. பணிக்காக தமிழ்நாட்டிலிருந்து கிளம்பிச் செல்லும் இளைஞனான சுதா என்கிற சுதாங்கன், அந்நிய பிரதேச காங்கிரீட் வனத்தில் எதிரி எவரென்றே தெரியாத புதிருடன், காற்றில் கத்தி வீசுவது போல தன் பிரச்சினைக்காக தன்னந்தனியாக போராடுகிறான். 

இது தொடர்பான பரபரப்பை தக்க வைத்துக் கொள்ளும் இந்தப் புதினம், அதே சமயத்தில் ' இருளின் பின்னாலிருந்து உதித்த அந்த மர்ம உருவம் கத்தியுடன் பாய்ந்தது, .தொடரும்' என்கிற ரீதியில்  மலினமான திரில்லர் நாவலாகவும் கீழிறங்கவில்லை. உடல் சார்ந்த சாகசங்களின் மிகையான அசட்டுத்தனங்கள் இல்லை. புத்திக்கூர்மையுடன் நாயகன் போடும் திட்டங்கள் எதிர் தரப்பை கச்சிதமாக வளைத்து அவனுக்கு சாதகமாகும் தற்செயல் அபத்தங்களும் இல்லை. நடுத்தர வர்க்க மனநிலையில் குழம்பித் தவிக்கும் ஓர் இளைஞன், தனக்கெதிரான அநீதியை நோக்கி  அதன் சாத்தியங்களுடன் என்னவெல்லாம் செய்ய இயலுமோ அதை மட்டுமே நாயகன் செய்கிறான். இந்த தன்மையே இந்தப் புதினத்திற்கு ஒரு நம்பகத்தன்மையையும் இயல்பையும்  அளிக்கிறது. 

***

மலேசியாவில் இயங்கும் வங்கிகளில் ஒரு பெரிய வங்கி, நஷ்டமடைந்து கொண்டிருக்கும் இன்னொரு சிறிய வங்கியை தன்னுடன் இணைத்துக் கொள்கிறது. இரு வங்கிகளின் இணைப்பு தொடர்பான தகவல் நுட்பங்களை கையாளும் குழுவின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பன் சுதா. அவனுக்கும் மேலே பல பெரிய தலைகள். பல மாதங்கள் நீடிக்கும் இந்த அசுரத் தனமான உழைப்பு நிறைவேறப்  போகும் இறுதி நாளில் சுதாவிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு. அந்த அழைப்புதான் அவனது பணி பறிபோக காரணமாக இருக்கிறது. ஆனால் அது அவனை வெளியேற்றுவதற்கான ஒரு தந்திரமான வழி மட்டுமே. சுதாங்கன் இப்படி பழிவாங்கப் படுவதற்கு பின்னால் தனிநபர்களின் அற்பக் காரணங்கள் முதல் நாட்டின் பொருளாதாரத்தையே சிதைக்கும் பெரிய காரணங்கள் வரை பல உள்ளன. அவைகளைத் தேடி நாயகன் அலைவதே 'வனநாயகன்' எனும் இந்தப் புதினம். 

புலம்பெயர் இலக்கியத்தின் வகைமையில் இணையும் இந்தப் புதினம் ஒருவகையில் பயண இலக்கியமாகவும் அமைந்திருக்கிறது. மலேசிய நாட்டைப் பற்றிய கலாசாரக்கூறுகளின் பல்வேறு நுண் விவரங்கள், சுற்றுச்சூழலில் ஏற்படுத்தப்படும் பாதிப்புகள், நிதி மோசடிகள், இன அரசியல், பிரஜைகளின் படிநிலை அந்தஸ்து, அந்தப் பிரதேசத்தின் முக்கியமான இடங்களைப் பற்றிய விவரணைகள், சட்டவிரோதக் காரியங்கள், குழுக்கள் போன்ற தகவல்களால் நிறைந்திருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் 'இதைப் பற்றி சொல்கிறேன் பார்' என்று புதினத்தில் இருந்து தனியாக துண்டித்து விலகித் தெரியாமல் அதன் போக்கிலேயே உறுத்தாமல் விவரிக்கப்பட்டிருப்பது நூலாசிரியரின் எழுத்து திறனிற்கு சான்று. சம்பவங்களின் காலம் தோராயமாக இரண்டாயிரம் ஆண்டில் நிகழ்வதால் அது தொடர்பான சம்பவங்கள், அடையாளங்கள் மிகப் பொருத்தமாக இணைக்கப்பட்டிருக்கின்றன.


***

வங்கி இணைப்பு பணியின் இறுதி நாளன்று நிகழும் விநோதமான, மர்மச் சம்பவத்தில் இருந்து துவங்கும் இந்தப் புதினம், பிறகு முன்னும் பின்னுமாக பயணிக்கும் அதே சமயத்தில்  வாசிப்பவர்களுக்கு எவ்வித குழப்பத்தையும் ஏற்படுத்தாமல் சுவாரசியமான அத்தியாயங்களுடன் விரிகிறது. புதினம் முழுக்க சுதாங்கனின் நோக்கில் தன்னிலை ஒருமையில் விவரிக்கப்படுவதால் நாமே அவனுடைய அனுபவத்திற்குள் விழுந்து விட்ட நெருக்கமான வாசிப்பனுபவத்தை தருகிறது. 

சுதாவின் நெருங்கிய நண்பனான ரவி, எரிச்சலூட்டும் சகவாசி ஜேகே, வாகன ஓட்டுநர் சிங், புலனாய்வு இதழ் நிருபர் சாரா, முகம் பார்க்காமல் இணைய உறவில் மட்டும் நீடித்து பிறகு அதிர்ச்சி தரும் ஓவியா,  மெல்லிய காதலோடு காணாமற் போகும் சுஜா, வெவ்வேறு முகங்கள் காட்டும் தந்திரக்கார அதிகாரிகள் சம்பத், லட்சு என்று ஒவ்வொரு பாத்திரத்தின் வடிவமைப்பும் அதன் தனித்தன்மையோடு துல்லியமாக உருவாகியிருக்கிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பிரத்யேக அடையாளங்களில் ஒன்றான உராங்குட்டான் குரங்கு இனம் அழிவின் விளிம்பில் இருப்பதையும் மனிதர்களின் லாபங்களுக்காகவும்  வக்கிரங்களுக்காகவும் அவை துன்புறுத்தப்படுவதையும் பற்றிய கவலைக் குறிப்புகளும் புதினத்தில் இடையில் பதிவாகியுள்ளன. 

நாயகனின் பணிநீக்கத்திற்கான காரணத்தை தேடி அலைவதான பரபரப்பின் பாவனையில் இந்தப் புதினம் இயங்கினாலும் இதன் ஊடாக இயற்கை வளங்களின் சுரண்டல், புதையலைத் தேடி ஓடிக் கொண்டேயிருக்கும் மனிதர்களின் பேராசை, அதற்காக அவர்கள் செய்யும் கீழ்மைகள், நல்லவனற்றிற்கும் தீயவனவற்றிற்கும் இடையே நிகழும் ஒயாத  போர், தனிநபர்களின் நிறைவேறாத  ஆதாரமான விருப்பங்கள், அவற்றிற்கான தேடல்கள், உளைச்சல்கள் என பல்வேறு விஷயங்கள் விழுந்து கொண்டேயிருக்கின்றன. 

ஐ.டி பணியின் சூழல், அத்துறை பணியாளர்களின் பிரத்யேகமான மனோபாவங்கள், அவைகளில் உள்ள பிளாஸ்டிக் தன்மை தொடர்பான குறிப்புகளும் அபாரமாக பதிவாகியுள்ளன. புலம் பெயர்ந்து நீண்ட காலமாகி அங்கேயே உறைந்து விட்ட எழுத்தாளர்களின் பாணி வேறு. தமிழகத்திலிருந்து சென்று தற்காலிகமான விலகலில் ஒரு குழந்தையின் கண்களுடன் புதிய உலகை விழி விரிய நோக்கி, எப்போது வேண்டுமானாலும் தாயகத்திற்கு திரும்பி விடும் நோக்கில் அமையும் படைப்புகள் வேறு. இரண்டாவது பாணியில்,  இந்தப் புதினம் சிறப்புற உருவாகியுள்ளது. 


வன நாயகன், அதன் தலைப்பிற்கேற்ப பல்வேறு மிருகங்களின் குணாதிசயங்கள் அடங்கிய நபர்களின்  இடையில் போராடி விடைகாண்பவனைப் பற்றிய பயண அனுபவமாக சுவாரசியத்துடன் உருவாகியிருக்கிறது. 
**

வனநாயகன் - மலேசியா நாட்கள்
ஆரூர் பாஸ்கர்,
கிழக்கு பதிப்பகம்,  முதல் பதிப்பு டிசம்பர் 2016
பக்கங்கள் 304, விலை ரூ.275

(அம்ருதா இதழில் வெளியானது)

suresh kannan

No comments: