
தமிழ்த்திரையுலகினர் தங்களுடைய வழக்கமான சம்பிரதாயத்தை மீண்டுமொரு முறை நிறைவேற்றியுள்ளனர் என்றுதான் தோன்றுகிறது. இன உணர்வோடு வீறுநடை போட்ட தமிழ்ச்சமூகமும் நயனதாரா வகையறாக்களை ஜொள்ளிட்டும் தங்களுடைய வருங்கால அரசியல் தலைவர்களின் உணர்சசிப் பெருக்கோடும் முழக்கங்களை கண்டு மெய்சிலிர்த்தும் திரும்பியுள்ளனர். தமிழ்ச்சினிமாக்களின் உலக சந்தையை கணக்கில் கொண்டு தங்களின் பிழைப்பிற்காவாவது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவானதொரு பாவனையை செய்ய பல நடிகர்களுக்கு கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அண்டை நாட்டு பிரச்சினைக்காக இங்கே ஏன் போராட வேண்டும் என்று அஜீத், அர்ஜூன் போன்றோர் சொன்னதாக ஏற்பட்ட வதந்தியையொட்டி ஈழத்தமிழர்கள் அஜீத்தின் சமீபத்திய படத்தை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். உடனே கருப்புச் சட்டையை மாட்டிக் கொண்டு வந்த அஜீத் 'உடல் மண்ணுக்கு - உயிர் தமிழக்கு' என்ற அரதப்பழசான இற்றுப்போன ழுழக்கத்தை செத்துப் போன குரலில் சொல்லி விட்டு நேரடியாக விஷயத்திற்கு வந்தார். "உங்க அரசியல்ல சினிமாக்காரங்கள இழுக்காதீங்க. ப்ளீஸ்'. அவ்வளவுதான் அவர் பேசினது. இலங்கைத்தமிழர்கள் குறித்தான அவர் பார்வையை தெரிந்து கொள்ள ஏற்கெனவே அவர் கொடுத்துள்ள பேட்டிகளைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். திரும்பவும் மேடையில் சொல்லியழ அவருக்கு 'தல' எழுத்தா என்ன?. ரஜினிகாந்த்தின் நாற்காலிக்கு ஆசைப்பட்டவரல்லவா? அப்படித்தான் பேசுவார் போலிருக்கிறது. என்றாலும் வணிகத்தையும் அரசியலையும் கலக்காதீர்கள் என்று வெளிப்படையாக சொன்ன அவரின் நேர்மையை பாராட்டியாக வேண்டும்.
யாருக்கும் புரியாது என்பதால் கமல் பேசுவது பற்றி பிரச்சினையில்லை. உணர்ச்சி வேகத்தில் உளறிக் கொட்டாமல் அறிவுப்பூர்வமாக பேசுவதால் அவர் பேச்சை யாருக்கும் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அபத்தமாக இருந்தாலும் எதையும் உணர்ச்சிகரமாக பேசுவதுதான் தமிழர்களுக்குப் பிடிக்கும். ரஜினி இதை நன்றாக புரிந்து வைத்துள்ளார். ஊடகங்கள் இவரின் உளறல்களை பிடல் காஸ்ட்ரோவின் 'வரலாறு நம்மை விடுதலை செய்யும்' என்ற முழக்கம் போல பிரதான இடமளித்து பிரசுரிப்பதின் அபத்தத்தை தாங்க முடியாமல்தான் இவர் பேசுவதை நானும் முக்கியத்துவம் அளித்து மறுக்க வேண்டியிருக்கிறது.
'என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே'... என்று கருணாநிதி சொல்வதை ஆவலுடன் எதிர்பார்த்து விசிலடிக்கும் கழகக்கண்மணிகள் போல் 'என்னை வாழவைக்கும் அன்பு ரசிகர்களே' என்று ரஜினி சொன்னவுடன் புல்லரித்துப்போய் (அவரை வாழ வைப்பது இருக்கட்டும், நீ எப்போதடா வாழ்ந்தாய் என்று யாரும் கேட்க மாட்டார்களா) இது உணர்வு சார்ந்த போராட்டம் என்கிற உணர்ச்சி கூட இல்லாமல் விசிலடித்து கைத்தட்டி மகிழும் கூட்டத்தைக் கண்டால் வேதனையாக இருக்கிறது.
'இந்த விழா...' என்று ஆரம்பித்தவர் சட்டென்று சுதாரித்துக் கொண்டு நல்லவேளையாக 'உண்ணாவிரத போராட்டம்' என்று சுதாரித்துக் கொண்டார். அண்டை நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரினால் பாதிக்கப்படும் லட்சக்கணக்கான மக்களுக்கு ஆதரவாக நடக்கும் ஓர் கூட்டத்திற்குப் போகிறோம் என்பது அவரின் ஆழ்மனதில் பதிந்திருந்தால் ஏதோ குறுந்தகடு வெளியீடு போல் விழா என்று ஆரம்பித்திருந்தது நிகழாமல் இருந்திருக்கும்தானே? கவனக்குறைவு என்று அவரின் ரசிகர்கள் சப்பைக்கட்டு கட்டினாலும். '30 ஆண்டுகளாலும் மேலாக போராடியும் வெற்றி பெற முடியவில்லை, நீங்கள் ஆம்பளைகளா?" என்பது அவரின் அடுத்த உதிர்ந்த முத்து. போர் என்கிற சமாச்சாரத்தை ஏதோ தாம் பஞ்ச் டயலாக் பேசிவிட்டு வில்லன்களை உதைக்கிறாற் போன்றதொரு விஷயம் என்று புரிந்து கொண்டிருக்கிறார் போலிருக்கிறது.
போர் என்பதின் வலியையும் வேதனையையும் நாம் எவ்வளவுதான் படித்தாலும், பார்த்தாலும் அனுபவிக்காமல் அதன் குரூரத்தை நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது. எனவேதான் யாராவது திரியை கொளுத்திப் போட்டால் அப்போதைக்கு எரிவதும் பின்பு அடங்கிவிடுவதுமாக இந்தப் பிரச்சினை தமிழக்கதில் எதிரொலிக்கிறது.
அங்கு கூடியிருந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ்ச்சமூகமாகிய நமக்குமே இலங்கையில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்கிற உண்மைச்சித்திரம் தெரியுமா என்பது கேள்விக்குறி. தீராநதியில் ஷோபாசக்தியின் பேட்டியைப் படித்தால் சகோதர இயக்கங்களை கொன்று குவிக்கிற போரை நிறுத்த வாய்ப்பிருந்தும் நிறுத்தாத புலிகளை குறை கூறுகிறார். ஷோபாசக்தியின் ஆளுமையை கட்டமைக்கிற முயல்கிற அ.மார்க்ஸின் போக்கு பற்றி அடுத்த இதழில் ஒரு எதிர்வினை வருகிறது. ஒரு காலகட்டத்தில் உணர்வுபூர்வமாகவும் நேர்மையாகவும் இந்தப்பிரச்சினையை கையாண்ட கருணாநிதி இன்று அரசியல் குளிர்காய பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். புலிகளின் மீதான நிலைப்பாட்டை பா.ம.க. சட்டென்று மாற்றிக் கொள்கிறது. தமிழர்களின் பிரச்சினையை விடுதலைப்புலிகள் ஆதரவு/எதிர்ப்பு என்ற பிரச்சினையாக மாற்றிவிடாதீர்கள் என்கிற தா.பாண்டியனின் குரல் தனித்து ஒலிக்கிறது.
பகுத்தறிவாளர்கள், முற்போக்குவாதிகள், ஜனநாயகவாதிகள் என்று தம்மை அழைத்துக்கொள்கிறவர்கள் உட்பட எல்லோரும் இனம் இனம் என்று முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய ஜாதியை, மதத்தை, இனத்தை, எல்லைக்கோடுகளை கடந்துவருகிறவனே ஒரு உண்மையான முற்போக்குவாதியாய் இருக்க முடியும் என்பது என் புரிதல். தமிழர்களுக்காக மாத்திரமல்லாமல் அங்கு சாகிற சிங்களனுக்கும் சேர்த்து உலகெங்கிலும் ஆதிக்க சக்தியால் பாதிக்கப்படும் ஒவ்வொருவருக்கும் நாம் துயரப்பட்டால்தான் உண்மையான மனிதர்களாவோம்.
suresh kannan