Thursday, October 31, 2019

The Guernsey Literary and Potato Peel Pie Society | 2018 | U.K./France | இயக்குநர் - Mike Newell






அயல் திரை  - 7


போரும் காதலும்



போரை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களை பொதுவாக இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று, போரின் சாகசத்தை பரபரப்பாக சித்தரிக்கும் திரைப்படங்கள். பெரும்பாலான ஹாலிவுட்டின் வணிக திரைப்படங்கள் இந்த வகையே. சுவாரஸ்யம் மட்டுமே இதன் அடிப்படை. மாறாக போரின் மூலம் பாதிக்கப்பட்ட தனிநபர்களின் துயரத்தை உணர்வுபூர்வமாக பதிவு செய்யும் திரைப்படங்கள் இன்னொரு வகை. போர்க்காட்சிகளின் பெருமித சாகசங்களோ, வன்முறையோ இதில் இருக்காது. பெரும்பாலான ஐரோப்பிய திரைப்படங்கள் இந்த வகையில் அமைந்திருக்கும்.

இந்த பிரிட்டிஷ்/பிரான்ஸ் திரைப்படம் இரண்டாவது வகை. போரின் உப விளைவுகள் பல தனிநபர்களையும் அவர்களின் உறவுகளையும் தலைமுறை கடந்தும் பாதிக்கிற விதத்தை வன்முறையின் உறுத்தல் இல்லாமல் அழுத்தமாக நமக்கு உணர்த்துகிறது.
Mary Ann Shaffer மற்றும் Annie Barrows எழுதிய நாவலின் அடிப்படையில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

**

1941-ம் ஆண்டிற்கும் 1946-ம் ஆண்டிற்கும் இடையில் மாறி மாறி பயணிக்கிறது இதன் திரைக்கதை. ஜூலியட் ஆஷ்டன், இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண் எழுத்தாளர். தனது புதிய நூல் குறித்தான சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். இங்கிலீஷ் கால்வாயில் உள்ள Guernsey என்கிற தீவில் இருந்து இவருக்கு ஒரு கடிதம் வருகிறது.. கடிதத்தை எழுதிய டவ்சி ஆடம்ஸ், ஜூலியட்டின் வாசகர். இங்கிலாந்தில் ஒரு நூலை வாங்கி அனுப்பச் சொல்லி அந்தக் கடிதம் வேண்டுகிறது.

‘The Guernsey Literary and Potato Peel Pie Society’ என்கிற அந்த வாசிப்புக் குழுவின் விநோதமான பெயர் ஜூலியட்டைக் கவர்கிறது. நூலை வாங்கி அனுப்பும் ஜுலியட், பதில் உபகாரமாக அந்தக் குழுவின் பெயர் உருவான காரணத்தை அனுப்பச் சொல்லி கேட்கிறார். இப்படியாக சில பல கடிதங்களின் மூலம் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. அதன் மூலம் ஐந்தாண்டுகளுக்கு முன்னதான காட்சிகள் விரிகின்றன.

Guernsey தீவு, ஜெர்மனியின் நாஜி வீரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நேரம் அது. பன்றிப் பண்ணை வைத்திருக்கும் ஆடம்ஸின் வீட்டில் இருக்கும் பன்றிகளையெல்லாம் நாஜி படை கைப்பற்றிக் கொள்கிறது. எங்கும் பஞ்சம். ஒரேயொரு உருளைக்கிழங்கை வைத்து ஒரு முழு நாளை ஓட்ட வேண்டிய நிலைமை. எலிஸபெத் என்கிற பெண் ஆடம்ஸை அவரது வீட்டிற்கு அழைக்கிறார். அவர்கள் வீட்டில் ஒரு பன்றியை ஒளித்து வைத்திருப்பதைக் கண்டு ஆடம்ஸின் கண்கள் விரிகின்றன. இஸோலா என்கிற பெண்மணி, தான் தயாரிக்கும் மதுவைக் கொண்டு வருகிறாள். எமென் என்கிற கிழவர் உருளைக்கிழங்கு தோலினால் செய்யப்பட்ட ஒரு பதார்த்தத்தை கொண்டு வருகிறார்.

கடுமையான பசியில் இருக்கும் அவர்கள் ஆசை தீர மதுவுடன் அந்த விருந்தைக் கொண்டாடுகிறார்கள். இந்த உற்சாகத்துடன் அவர்கள் சாலையில் உரையாடிக் கொண்டே போகும் போது நாஜி வீரர்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. அது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் காலம் என்பதால் நாஜிகளின் விசாரணையை மேற்கொள்கிறார்கள். தாங்கள் நடத்தும் வாசிப்பு குழுவில் நூல் வாசித்து விட்டு வருகிறோம் என்று அப்போது வாய்க்கு வந்த பொய்யைச் சொல்கிறார்கள். ‘உங்கள் குழுவின் பெயர் என்ன?” என்று கடுமையாக கேட்கிறான் நாஜி அதிகாரி. அந்த ஊரின் பெயரையும் தாங்கள் சாப்பிட்ட விருந்தையும் கலவையாக இணைத்து விநோதமான பெயரை உருவாக்கிச் சொல்வதால் அப்போதைக்கு தப்பிக்கிறார்கள்.

பொய்யை உண்மையாக்கினால்தான் நாஜிகளின் கண்காணிப்பிலிருந்து தப்பிக்க முடியும் என்கிற காரணத்தினால் நூலகத்திலிருந்து புத்தகங்களை திருடி, வாசிப்பு குழுவை உருவாக்கி ஒவ்வொரு வெள்ளியன்றும் கூடி புத்தகங்களைப் பற்றி பேச, நூல்கள் மீது தன்னிச்சையாக ஆர்வம் உருவாகி அந்த வாசிப்புக் குழு உண்மையாகவே தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.

இந்தக் குழு உருவான பின்னணியை அறியும் ஜூலியட், டைம்ஸ் இலக்கிய இணைப்பிதழிற்காக இதைப் பற்றிய கட்டுரையை எழுதும் உத்சேத்துடன் Guernsey தீவிற்கு செல்கிறாள். லண்டனிலிருந்து வந்திருக்கும் இவளைப் பார்த்து அந்தக் குழுவின் உறுப்பினர்கள் முதலில் திகைத்தாலும் பிறகு பிரியத்துடன் ஒட்டிக் கொள்கிறார்கள். தான் வந்த நோக்கத்தை ஜூலியட் கூற, குழுவின் மூத்த உறுப்பினரான அமேலியா அதற்கு உறுதியாக மறுத்து விடுகிறார். “எங்களுக்கு இதில் சம்மதமில்லை. நீ லண்டனுக்கு திரும்பிச் செல்” என்று கடுமையாக சொல்கிறாள்.

அவர் அத்தனை கடுமையாக மறுப்பதற்கான காரணம் ஜுலியட்டுக்கு புரிவதில்லை. அதில் ஏதோவொரு மர்மமும் விநோதமும் இருப்பதாக நினைக்கும் அவள், அங்கேயே தொடர்ந்து தங்கி அவர்களுடன் பழகத் துவங்குகிறாள். மெல்ல மெல்ல விவரங்கள் துலங்குகின்றன. குழுவின் தலைவரான எலிஸபெத், ஓர் அடிமைச்சிறுவனுக்கு உதவப் போய் நாஜி படையினரால் கைது செய்யப்பட்டு தூர தேசத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறாள். சிறைக்குச் செல்வதற்கு தன் மகள் கிட்டை டவ்ஸி ஆடம்ஸிடம் ஒப்படைத்துச் செல்கிறாள். கிட்டை தன் மகள் போலவே வளர்க்கிறார் ஆடம்ஸ். இந்த விவரங்களை மெல்ல அறிந்து கொள்கிறார் ஜூலியட்.

இதற்கிடையில் ஜூலியட்டிற்கும் ஆடம்ஸிற்கும் இனம் புரியாத நேசம் உருவாகிறது. இங்கிலாந்தில் இருந்து கப்பல் ஏறுவதற்கு முன்பாக, ஜூலியட்டின் நண்பனும் பதிப்பாளனுமான மார்க், இவளைத் திருமணம் செய்ய விரும்புவதாக சொல்லி இவளுடைய சம்மதத்தை கேட்கிறான். இவளும் சம்மதிக்கவே நிச்சயதார்த்த மோதிரத்தை அணிவிக்கிறான். எனவே அது சார்ந்த உறுத்தல் ஜூலியட்டிற்கு இருப்பதால் ஆடம்ஸை அதிகம் நெருங்காமல் தவிர்க்கிறாள்.

எலிஸபெத்தின் இருப்பு இல்லாமல் அந்தக் குழு தவிப்பதை அறியும் ஜூலியட் அவர்களுக்கு உதவுவதற்காக, தன் வருங்கால கணவனான மார்க்கிற்கு ஒரு கடிதம் எழுதுகிறாள். ராணுவத்தில் பணிபுரியும் அவன் அது பற்றி விசாரிக்கிறான். ஜூலியட்டிற்கும் ஆடம்ஸிற்கும் உள்ள விநோதமான உறவு பூடகமாக வளர்கிறது. ஆடம்ஸின் மகள் ‘கிட்’ உடன் பாசமாகப் பழகுகிறாள் ஜூலியட். எலிஸபெத்தின் காதலன் ஒரு ஜெர்மானியன் என்பதும் இவர்களுக்குப் பிறந்த குழந்தைதான் ‘கிட்’ என்பதையும் ஜூலியட் அறிந்து கொள்கிறாள். இவர்களின் உறவை அறியும் ஜெர்மானிய ராணுவம், மார்க்கை கப்பலில் ஏற்றி அனுப்பி விட, கப்பல் விபத்துக்குள்ளாகி எலிஸபெத்தின் காதலன் இறந்து விடும் செய்தியும் தெரிகிறது.

இந்த விவரங்கள் பத்திரிகையில் வந்தால், ஜெர்மனியிலிருந்து எவராவது வந்து குழந்தையை எடுத்துச் சென்று விடுவார்களோ என்கிற பயத்தில்தான் இதைப் பற்றி எழுத அமேலியா முன்பு கடுமையாக மறுத்திருக்கிறார் என்கிற விஷயத்தையும் ஜூலியட் புரிந்து கொள்கிறாள்.

எலிஸபத்தைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்கும் மார்க், ஜூலியட்டைத் தேடி அந்தத் தீவிற்கே வந்துவிடுகிறான். அவனை அங்கு எதிர்பார்க்காத ஜூலியட், மகிழ்ச்சியும் திகைப்புமாக அவனை வரவேற்கிறாள். தன்னுடைய பழைய ஜூலியட் அங்கில்லை என்பதை உணரும் மார்க் ‘நான் அணிவித்த திருமண மோதிரம் எங்கே’ என்று கேட்கிறான். சங்கடத்துடன் மழுப்பலான பதிலைக் கூறுகிறாள் ஜூலியட்.

நாஜிகளின் பிடியில் சிறையில் இருந்த எலிஸபெத், ஒரு பெண்ணுக்கு உதவப் போய், சுடப்பட்டு இறந்து விட்ட செய்தியை மார்க்கின் மூலம் அறியும் ஜூலியட் மனம் துயருகிறாள். இந்த வேதனையான செய்தியை அந்தக் குழுவிற்கு தெரிவிக்கிறாள். ‘நீ வந்த வேலை முடிந்து விட்டதல்லவா, வா” என்று அவளை அழைத்துக் கொண்டு லண்டன் செல்கிறான் மார்க். அவள் செல்வதால் ஆடம்ஸ் வருத்தப்படுகிறான். ஜூலியட்டிற்கும் வருத்தம்தான்.

ஆடம்ஸின் மீது உருவாகி விட்ட நேசத்தை உதற முடியாது என்பதை மனமார அறிந்து கொள்ளும் ஜூலியட், மார்க்கிடம் இந்த விஷயத்தைச் சொல்லி மன்னிப்பைக் கோருகிறாள். முதலில் அதிர்ச்சியடையும் மார்க் பிறகு வாழ்த்துகிறான். அந்த வாசிப்பு குழுவைப் பற்றி எழுதமாட்டேன் என்று வாக்களித்த ஜூலியட், அதை வெளியில் கொட்ட வேண்டிய உளைச்சலில், இரவு பகலாக அமர்ந்து பெரிய நாவலாக எழுதி முடித்தவுடன்தான் மனநிம்மதி கொள்கிறாள்.

எழுதப்பட்ட நாவலின் பிரதியை Guernsey தீவிற்கு அனுப்புகிறாள் ஜூலியட். அதனுடன் இருக்கும் கடிதத்தில் ‘ஆடம்ஸ் மீதான ஈர்ப்பு’ இருப்பது பற்றிய குறிப்பும் இருக்கிறது. உடனே லண்டன் செல்ல வேண்டுமென்று பதைக்கும் ஆடம்ஸ் துறைமுகத்திற்கு செல்ல, இவர்களைக் காண வேண்டுமென்று துடிப்புடன் அங்கு வந்திருக்கும் ஜூலியட் ஆடம்ஸைக் காண, காதலர்களின் உணர்வுபூர்வமான சந்திப்பு நிகழ்கிறது. ஜூலியட்டின் நாவலைப் பற்றி, வாசிப்பு குழு உரையாடுவதோடு இத்திரைப்படம் நிறைவுறுகிறது.

**

ஜூலியட் ஆஸ்டன் பாத்திரத்திற்காக ‘டைட்டானிக்’ புகழ் கேட் வின்ஸ்லெட் முதல் பல நடிகைகளுடன் பேச்சு வார்த்தையை நடத்திய பிறகு இறுதியாக லில்லி ஜேம்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த தேர்விற்கான முழு நியாயத்தையும் தந்திருக்கிறார் லில்லி ஜேம்ஸ். அத்தனை அபாரமான நடிப்பு. இரண்டு காதல்களுக்கும் நடுவில் நின்று தவிப்பதையும், வாசிப்பு குழு நபர்களின் தோழமையைப் பெறும் முயற்சிகளையும் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்.

மேலோட்டமாக பார்க்கும் போது இதுவொரு காதல் கதையாக தோற்றமளித்தாலும், போரினால் தனிநபர்களுக்கு ஏற்படும் இழப்புகளும் துயரங்களும் இதன் அடிநாதமாக உறைந்துள்ளன. வாசிப்புக்குழுவின் மூத்த உறுப்பினரான அமேலியா, தன் மகளை போரில் இழந்துள்ளார். மகளாக கருதிய எலிஸபத்தையும் அதே காரணத்தால் தொலைத்து விட்டதால், இந்தக் குழுவைப் பற்றி எழுதக்கூடாது என்று ஜூலியட்டிடம் உறுதியாக மறுத்திருக்கிறார் என்பதை அறிய நேரும் போது நெகிழ்வு ஏற்படுகிறது. ஜூலியட்டும் தனது பெற்றோர்களை போர் வன்முறையில் இழந்திருப்பதால் அந்த துயரத்தை அவளால் ஆழமாக உணர முடிகிறது.

அமேலியாக நடித்திருக்கும் Penelope Wilton, டவ்ஸி ஆடம்ஸ் –ஆக நடித்திருக்கும் Michiel Huisman உள்ளிட்ட பல நடிகர்கள் தங்களின் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் கலை இயக்கத்திற்காக மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. நாற்பதுகளில் நிகழும் பின்னணி என்பதால் அந்தக் காலக்கட்டத்தின் கட்டிடங்கள், கப்பல், உடை என்று பல விஷயங்களை நுட்பமாக உருவாக்கியுள்ளார்கள். Alexandra Harwood-ன் பின்னணி இசை அபாரமாக பதிவாகியுள்ளது.

சமகாலம், ஐந்தாண்டுகளுக்கு முந்தைய கடந்த காலம் என இரண்டிற்கும் இடையில் திரைக்கதை பயணிக்கிறது. எலிஸபெத்தின் பின்னணியும் அதிலுள்ள மர்மமும் மெல்ல மெல்ல விரியும் வகையில் காட்சிகள் அற்புதமாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

Four Weddings and a Funeral (1994), Donnie Brasco (1997) போன்ற அற்புதமான திரைப்படங்களை இயக்கிய Mike Newell இந்த திரைப்படத்தை அற்புதமாக இயக்கியுள்ளார். எங்கோ தீர்மானிக்கப்படும் அரசியலால் நிகழும் போர்கள் அதற்குத் தொடர்பேயில்லாத வேறெந்த பிரதேசத்தையோ சேர்ந்த தனிநபர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் துயரத்தை மிக இயல்பாகவும் அழுத்தமாகவும் உணர்த்துகிறது இத்திரைப்படம்.


(குமுதம் தீராநதி -  செப்டெம்பர்  2018 இதழில் பிரசுரமானது)  

 
suresh kannan

Wednesday, October 30, 2019

Beyond the Clouds | 2017 | India | இயக்குநர் - Majid Majidi







அயல் திரை  - 6


மேகங்களுக்குப் பின்னே ஒரு முழு நிலவு

மஜித் மஜிதி – உலக சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர். இரானிய சினிமாவின் புகழ் மற்றும் பெருமையை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் சென்ற இயக்குநர்களில் ஒருவர். அண்ணனுக்கும் தங்கைக்கும் உள்ள பாசத்தை இயல்பான திரைமொழியில் சித்தரித்த ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ என்கிற எளிமையான சினிமாவின் மூலம் உலகத்தின் சராசரி ரசிகனையும் சென்றடைந்தவர். தற்போது ‘Beyond the Clouds’ என்கிற இந்தி சினிமாவின் மூலம் இந்தியத் திரைத்துறையிலும் கால் பதித்துள்ளார்.

கவித்துவமான காட்சிகளால் ‘சில்ரன் ஆஃப் ஹெவனில்’ சித்தரிக்கப்பட்ட அதே போன்றதொரு சகோதர அன்பு ‘இருண்மையான பின்னணியின்” வழியாக ‘‘Beyond the Clouds’–ல்  பதிவு செய்யப்பட்டுள்ளது. நன்மைக்கும் தீமைக்கும் இடையில் அல்லாடும் ஒரு சராசரி மனிதனின் அறவுணர்வையும் அதன் தத்தளிப்பையும் இத்திரைப்படம் மையமாகக் கொண்டிருக்கிறது. அடித்தட்டிற்கே உண்டான அனைத்து சிக்கல்களுடன் விளிம்பு நிலையில் வாழ்ந்தாலும் ஆதாரமான விழுமியங்களை கைவிடாத மனிதர்கள் இதில் உலா வருகிறார்கள். கடுமையான சூழல்களுக்கு இடையேயும் தங்களிடம் எஞ்சியிருக்கும் அன்பெனும் விளக்கு கொண்டு இருளை பிரகாசமாக்கி விடும் மனிதர்களின் அறம் மீண்டும் மீண்டும் இத்திரைப்படத்தில் வலியுறுத்தப்படுகிறது.

நவீன மும்பையின் பரபரப்பான சாலை மற்றும் செல்போன் விளம்பரப் பலகையை  முதலில் காட்டும் காமிரா, அப்படியே கீழிறங்கி சாலையோரத்தில் வசிக்கும் மனிதர்களை சித்தரிக்கும் துவக்க காட்சியிலேயே படத்தின் தன்மை பார்வையாளர்களுக்கு துல்லியமாக உணர்த்தப்பட்டு விடுகிறது. தாராவி இளைஞர்களின் இருட்டு உலகமும் நிழலான காரியங்களும் இயல்புத்தன்மையுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

**

மும்பையின் சேரிப்பகுதியில் வசிக்கும் இளைஞனான அமீர், போதைப் பொருட்களை விநியோகிக்கும் ஆபத்தான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான். சற்று பணம் ஈட்டி தனது அக்காளான தாராவுடன் நல்ல நிலையில் வாழ வேண்டும் என்பது அவனுடைய கனவு. அமீரின் சிறுவயதிலேயே அவனுடைய பெற்றோர்கள் விபத்தில் இறந்து விட்டனர். அக்காள் கணவனின் அடி, உதையை தாங்க முடியாமல் அங்கிருந்து ஓடி விடுகிறான் என்கிற பின்னணியை அவன் மூலமாக பின்னர் அறிந்து கொள்கிறோம்.

கொடுமை தாங்காமல் கணவனை விட்டுப் பிரியும் தாரா, சாலையோரங்களில் வசித்து துன்புறுகிறாள். பாலியல் தொழிலாளியாக மாறுகிறாள். போதை மருந்துடன் அமீர் ஒருமுறை காவல்துறையிடம் பிடிபட இருக்கும் போது அக்ஸி என்கிற நடுத்தர வயது ஆசாமி அமீரைக் காப்பாற்றுகிறான். சிறிது இடைவெளிக்குப் பிறகு அப்போதுதான் தன் சகோதரியைச் சந்திக்கிறான் அமீர். விரிசல் விழுந்த உறவு மறுபடியும் இணையத்துவங்கும் போது அக்ஸியின் வழியாக ஆபத்து வருகிறது.

அக்ஸிக்கு தாராவை அடைய வேண்டும் என்கிற எண்ணமுண்டு. ஆனால் தாரா இதை மெளனமாக எதிர்க்கிறாள். ஒரு கட்டத்தில் தாராவை பலவந்தம் செய்யத் துணிகிறான் அக்ஸி. இதில் ஏற்படும் தகராறில் தற்காப்பிற்காக அக்ஸியை தாக்க அவன் உயிர் போகும் ஆபத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். காவல்துறை தாராவை கைது செய்கிறது. அக்ஸியின் உயிர் போனால் தாரா ஆயுள் தண்டனையை அடைய வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. தன் அக்காவை சிறையிலிருந்து விடுவிப்பதற்காக வேறு வழியின்றி அக்ஸியின் மருத்துவ ஏற்பாட்டை கவனித்துக் கொள்கிறான் அமீர்.

அக்ஸியைத் தேடி அவனுடைய குடும்பம் மும்பைக்கு வருகிறது. அவர்களுக்கும் அடைக்கலம் தருகிறான் அமீர். சிறையில் இருக்கும் தாரா, சோட்டு என்கிற சிறுவனிடம் அன்பு செலுத்துகிறாள்.

நல்லிதயம் வாய்த்த மனிதர்களை துயரத்தின் ஆழத்திற்குள் தள்ளினாலும் அவர்களுக்குள் ஆதாரமாக இயங்கும் மனிதம் காரணமாக அவர்கள் அன்பை விதைத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்கிற செய்தியை பல காட்சிகளின் மூலமாக இத்திரைப்படம் வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது.

தன்னுடைய அக்காள் சிறைக்குச் செல்ல காரணமாக இருந்த அக்ஸியின் மீதுள்ள கோபத்தில் குடும்பத்தை முதலில் துரத்துகிறான் அமீர். ஆனால், அக்ஸியின் வயதான தாய், இரண்டு மகள்கள் கொண்ட அந்தக் குடும்பம் இடி, மழையில் சாலையோரத்தில் ஒதுங்கியிருப்பதைக் கண்டு அமீரால் தூங்க முடிவதில்லை. மனச்சாட்சியின் உறுத்தலை சகிக்க முடியாமல் அவர்களுக்கு தன்னுடைய வீட்டில் அடைக்கலம் தருகிறான்.

அக்காளின் ஜாமீன் செலவிற்காக, அக்ஸியின் மகளை பாலியல் சந்தையில் விற்று விட முடிவு செய்கிறான் அமீர். ஒரு திரில்லர் படத்தை விடவும் பதைபதைப்பை ஏற்படுத்துகிற காட்சிக்கோர்வை இது. இளம் சிறுமிக்கேயுரிய களங்கமில்லாத முகத்துடன் அமீரைப் பின்தொடர்ந்து செல்கிறாள் தனிஷா. ஆனால் கடைசி நிமிடத்தில் அவனுடைய அறவுணர்வு விழித்துக் கொள்கிறது. குண்டர்களிடம் செம்மையாக அடிவாங்குகிறான். அமீரைக் காட்டிக் கொடுத்த உயிர் நண்பன்,  அமீர் ரத்தக்காயத்துடன் தொடர்ந்து அடிவாங்குவதை காணச் சகிக்க முடியாமல் அவனைக் காப்பாற்றச் சென்று தானும் அடிவாங்குகிறான். மறுபடியும் அதேதான். நன்மைக்கும் தீமைக்கும் இடையில் அல்லாடும் சராசரிகளின் மனங்களை இந்த திரைப்படம் பிரதிபலித்துக் கொண்டேயிருக்கிறது.


சிறையிலேயே தான் செத்துப் போய் விடுவோமோ என அஞ்சுகிற தாராவின் இருளான உலகம், அங்குள்ள சோட்டு என்கிற சிறுவனின் மூலமாக பிரகாசம் கொள்கிறது. கொடுமைப்படுத்திய குடிகாரக் கணவனைக் கொன்று விட்டு சிறைக்கு வந்திருக்கிறாள் சோட்டுவின் தாய். உடல்நலம் குன்றி அவள் மருத்துவமனைக்குச் சென்று விட தன்னிடமுள்ள மொத்த அன்பையும் கொட்டி சோட்டுவை பாதுகாக்கிறாள் தாரா.

குழந்தைகளின் உலகை அதன் இயல்பு கெடாமல் பதிவாக்குவதில் மஜித் மஜிதி விற்பன்னர் என்பதை அவரது முந்தைய திரைப்படங்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த திரைப்படத்திலும் அது போன்ற கவித்துவமான காட்சிகள் இருக்கின்றன. இளம் சிறுமியான தனிஷா மற்றும் அவளது தங்கையான ஆஷா இருவருடன் இணைந்து வீடெங்கும் அமீர் வரையும் ஓவியங்கள் தொடர்பான காட்சி நெகிழ்ச்சியை ஊட்டுவதாக இருக்கிறது. துவக்கத்தில் இவனைக் கண்டு அஞ்சும் ஆஷா, இவன் அடிபட்டு வந்திருக்கும் காட்சியைக் கண்டு, குழந்தைக்கேயுரிய குணாதிசயத்துடன் அழத் துவங்குகிறாள்.

சிறையில் தள்ளப்படும் பெண்களால் அவர்களின் குழந்தைகளும் அங்கிருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை சோட்டு பிரதிநிதித்துவப்படுத்துகிறான். தன் களங்கமின்மையால் தாராவை அன்பைப் பெறும் சோட்டுவின் காட்சிகள் அபாரமான அழகியலுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த திரைப்படத்தின் இறுதிக்காட்சி கவித்துவமானது. தன் தாய் இறந்து விடுவதை அறிய முடியாத வயதில் இருக்கும் சோட்டு, அவளைப் பற்றி தாராவிடம் விசாரிக்கிறான். “அவள் மேகங்களைத் தாண்டி நிலவிற்கு சென்றிருக்கிறாள்’ என்று பொய்யான சமாதானத்தை சொல்கிறாள் தாரா. ‘என்னை அங்கு அழைத்துச் செல்வாயா?” என்று கேட்கிறான் சோட்டு. தன்னிடம் எஞ்சியிருக்கும் மோதிரத்தை காவலாளியிடம் தருகிறாள் தாரா. வானத்திலிருக்கும் நிலவை சோட்டுவிற்கு காண்பிப்பதற்காக இந்த லஞ்சம் தரப்படுகிறது. சோட்டுவின் மீது தாராவிற்கு உள்ள இந்த அன்பை உணரும் பெண் காவலாளி, மனம் கூசி மோதிரத்தை திருப்பி வைத்து விடும் காட்சி அருமையானது.

இடியும் மழையுமான அந்த நேரத்தில் நிலவைப் பார்க்க முடியாத சூழல். “இவை சற்று நேரத்தில் ஓய்ந்து விடும். அது வரை காத்திருக்கலாம்” என்று சொல்கிற தாரா, சோட்டுவுடன் விளையாடத் துவங்கி விடுகிறாள். அனைத்துச் சிக்கல்களும் ஒரு நாள் தீரும் என்கிற நம்பிக்கையை இறுதிக்காட்சி உணர்த்துகிறது. ‘மேகங்களுக்கு அப்பால்’ என்கிற படத்தின் தலைப்பும் இதையேதான் பிரதிபலிக்கிறது.

**

முரட்டு இளைஞன் அமீராக, இஷான் கட்டர் அற்புதமாக நடித்துள்ளார். பணம் சேர்க்கும் கனவுடன் துள்ளலுடன் இவர் போதை விற்பனையில் ஈடுபடும் துவக்க காட்சிகள் சிறப்பாக பதிவாகியுள்ளன. சகோதரி தாராவை சிறையில் இருந்து விடுவிக்க இவர் மேற்கொள்ளும் முயற்சிகளும் அக்கறையும் நெகிழ வைக்கின்றன. ஒரு கட்டத்தில் தனக்கு உருவாகும் மனஉளைச்சலில், வீட்டிலுள்ள புறாக்களை வெளியே எறிந்து விட்டு ‘நம்முடைய எல்லா சிக்கல்களுக்கு உங்கள் அப்பாதான் காரணம்’ என்று அக்ஸியின் குடும்பத்திடம் வெடிக்கும் காட்சியில் இவரது நடிப்பு அபாரமாக அமைந்துள்ளது.

இத்திரைப்படத்திற்காக வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சிறந்த திரைக்கலைஞர்களை ஒருங்கிணைத்துள்ளார் மஜித் மஜிதி. அக்ஸியாக, பிரபல வங்காள இயக்குநர் கெளதம் கோஸ் நடித்துள்ளார். படத்தில் இவருக்கு பெரும்பாலும் வசனங்கள் இல்லை. சலனமின்றி மருத்துவமனையில் படுத்திருக்கும் காட்சிகளே அதிகம். அமீர் தன்னிச்சையாக தன் கதையை தானே பேசிக் கொள்ளுவதைக் கண்டு மெளனமாக கண்ணீர் விடும் காட்சி அற்புதமானது.

தாராவாக, மலையாள திரைப்படங்களில் நடித்த மாளவிகா மோகனன் நடித்துள்ளார். சில இடங்களில் இவரது தோரணை மிகையாகவும் நாடகத்தனமாகவும் தோன்றினாலும் இதர காட்சிகளில் தன் பாத்திரத்தை உணர்ந்து அருமையாக நடித்துள்ளார். சோட்டுவிற்கும் இவருக்குமான அன்பு உலகம் சிறப்பாக உருவாகியுள்ளது. அக்ஸியின் குடும்பம் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர்கள் பேசுகிற தமிழ் வசனங்களின் மூலம் உணர முடிகிறது. அக்ஸியின் தாயாக, சாரதா சிறப்பாக நடித்திருந்தாலும் அவர் தமிழ் உச்சரிப்பு அந்நியமாக உள்ளது. அக்ஸியின் மகள்களாக நடித்திருப்பவர்களின் தோற்றம் தமிழ் மண்ணிற்கு பொருத்தமில்லாததாக இருந்தாலும் களங்கமில்லாத முகங்களின் மூலம் நம்மைக் கவர்ந்து விடுகிறார்கள்.

அமீரின் நண்பன் பாத்திரத்திற்காக, தாராவியைச் சேர்ந்த இளைஞனையே தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அனில் மேத்தாவின் ஒளிப்பதிவு இந்த திரைப்படத்திற்கு உறுதுணையாக நின்றிருக்கிறது. மும்பையில் நிழல் கலாசாரத்தையும் அதன் சந்து பொந்துகளையும் மிகத்திறமையாக பதிவாக்கியுள்ளார். அமீர் குண்டர்களால் தாக்கப்படும் காட்சியின் பின்னணியில் விரியும் அகண்ட நிலவெளி சிறப்பு.

‘பொம்மலாட்டம்’ போன்று திரைக்குப் பின்னால் தோன்றும் நிழலுருவங்கள் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. தாராவிற்கும் அக்ஸிற்கும் நிகழும் போராட்டம், அக்ஸியின் குடும்பத்தை தன் வீட்டிற்குள் அனுமதித்த இரவில் அவர்களை திரையின் வழியாக கவனிக்கும் அமீர், ஆஷாவை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக திரைக்குப் பின்னால் ஆடும் ‘முக்காபுலா’ ஆட்டம், சிறுவன் சோட்டுவிற்கு தாரா காண்பிக்கும் நிழலுருவ சித்திரங்கள்.. என பல இடங்களில் இந்த உத்தி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பின்னணி இசை ஏ.ஆர்.ரஹ்மான். ‘Muhammad: The Messenger of God’ என்கிற மஜித் மஜிதியுடன் முந்தைய திரைப்படத்தில் அமைந்த இந்த இசைக்கூட்டணி இதிலும் தொடர்கிறது. ரஹ்மானின் பின்னணி இசை பல இடங்களில் அபாரமாக அமைந்துள்ளது. காட்சிகள் தரும் மனவெழுச்சியை இசை கூட்டுவதாக உள்ளது. ஆனால் பல காட்சிகளின் பின்னணியில் ஒலித்துக் கொண்டேயிருக்கும் மிகைத்தன்மையையும் கொண்டிருப்பது நெருடலானது. பொதுவாக மஜித் மஜிதியின் திரைப்படங்களில் இயற்கையான சப்தங்களே ஒலிக்கும். சர்வதேச சினிமாக்களின் தன்மைகளுள் ஒன்று இது. ஆனால் இத்திரைப்படத்தின் பின்னணி இசையின் அளவு மிகையாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

**

இத்திரைப்படத்தில் பல உணர்ச்சிகரமான கட்டங்களும் அபாரமான நாடகீயத் தருணங்களும் இருந்தாலும் ஒட்டுமொத்த பார்வையில் ‘இது மஜித் மஜிதி’யின் படம்தானா என்கிற மெல்லிய ஏமாற்றத்தை தருவதாக அமைந்துள்ளது. குறிப்பாக மஜிதியின் முந்தைய உன்னதமான திரைப்படங்களை பார்த்தவர்கள் அதிக ஏமாற்றத்தை அடையக்கூடும். இது ‘இந்தி சினிமா’ என்பதால் இந்தியத் திரைப்படங்களின் மிகைத்தன்மையை பின்பற்றுவது சரியாக இருக்கும் என்று மஜிதி தவறாக தீர்மானித்து விட்டாரோ என்று தோன்றுகிறது.

எளிதாக யூகிக்க வைக்கும் காட்சிக்கோர்வைகளும் திரைக்கதையும் சற்று சலிப்பூட்டுகின்றன. அயல் இயக்குநர்கள் இந்தியா தொடர்பான திரைப்படங்களை உருவாக்குகிறார்கள் என்றால் அவர்களுக்கு சேரியையும் குற்றவுலகையும் தவிர வேறெதுவும் கண்ணில் படாதோ என்றும் தோன்றாமலும் இல்லை. சலாம் பாம்பே, ஆஸ்கர் விருது பெற்ற ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ போன்ற முன்மாதிரிகளால் மஜிதியும் இந்த மயக்கத்திற்கு ஆட்பட்டு விட்டாரோ என்கிற சந்தேகம் எழுகிறது.

என்றாலும் சில அபாரமான தருணங்களுக்காகவும், மனிதர்களின் ஆதார அறவுணர்வை வலியுறுத்தும் இதன் உன்னதமான மையத்திற்காகவும் இந்த திரைப்படம் பாராட்டப்பட வேண்டிய முயற்சியே. 


(குமுதம் தீராநதி -  ஆகஸ்ட்  2018 இதழில் பிரசுரமானது)   

suresh kannan

Tuesday, October 29, 2019

Loveless | 2017 | Russia | இயக்குநர் - Andrey Zvyagintsev






அயல் திரை  - 5


அன்பால் கட்டப்படாத வீடு

**

 

பெற்றோர்களின் அன்பு கிடைக்காமல், குடும்ப வன்முறையில் சிக்கி துயர் அடையும் சிறுவனொருவன் காணாமல் போய் விடுவதுதான் இந்த ரஷ்ய திரைப்படத்தின் மையம். கலையமைதியுடனும் கவித்துவமான சித்திரப்புகளுடனும் மிக இயல்பானதொரு படைப்பாக இதை உருவாக்கியுள்ளார் ,இயக்குநர் Andrey Zvyagintsev. கான் திரைப்பட விழாவில், ‘நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரிவில்’ 2017-ம் ஆண்டுக்கான விருதை வென்ற இந்த திரைப்படம், ஆஸ்கர் விருதிற்காக ‘வெளிநாட்டு திரைப்பட’ பிரிவிலும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

குடும்பம் என்கிற நிறுவனத்தின் மூலம்தான், ஒரு மனிதனுக்குள் ஆதாரமாக இருக்கும் அன்பு, பாசம், கருணை போன்ற உணர்வுகள் மேலும் வளர்த்தெடுக்கப்படுகின்றன. ஆனால் இதன் மறுமுனையில், குடும்பம் என்கிற அமைப்புதான் வன்முறையின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் முரணும் இருக்கிறது. இளம்வயதில் ஒருவனுக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புதான் வருங்கால குற்றங்களுக்கு பெரும்பாலும் காரணமாக இருக்கிறது என்கிறார்கள். குடும்பத்திற்குள் நிகழும் சச்சரவுகள், வன்முறைகள், பிரிவுகள் போன்றவைதான் இதற்கு அடிப்படையான விஷயங்களாக இருக்கின்றன.

இந்த சமூகப் பிரச்சினையை நுட்பமாக அணுகும் திரைப்படம் இது.

**

நவீன ரஷ்யாவின் மேற்குப்புறமுள்ள நகரில் உள்ள பள்ளிக்கூடம் அது. மணி அடித்ததும் வீட்டுக்குப் போகும் உற்சாகத்தில் சிறுவர்கள் ஓடிவருகிறார்கள். 12 வயது சிறுவனான அல்யோஷா தனது நண்பனிடம் விடை பெற்றுக் கொள்கிறான். மற்றவர்களைப் போல வீட்டுக்குச் செல்வதில் அவன் உற்சாகம் காண்பிப்பதில்லை. குடியிருப்பின் அருகேயுள்ள வனப்பகுதியில் சாவகாசமாக நடந்து செல்கிறான். பட்டத்தின் வால் போல கீழேயிருக்கும் ஒரு பிளாஸ்டிக் கயிற்றை வைத்து விளையாடுகிறான். பின்னர் அதை கொம்பில் கட்டி அருகேயுள்ள மரத்தின் மீது விசிறியடிக்க, கயிறு மரத்தில் சுற்றிக் கொண்டு காற்றில் ஆடிக் கொண்டிருக்கிறது.

வீட்டுக்குத் திரும்பும் சிறுவன், வெளியேயிருக்கும் மைதானத்தில் சில சிறுவர்கள் விளையாடுவதை ஜன்னல் வழியாக மெளனமான துயரத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவர்கள் தங்கியிருக்கும் வீடு விற்கப்படவிருக்கிறது. அதைப் பற்றி விசாரித்து வாங்குவதற்காக சிலர் வருகிறார்கள். அவர்கள் பேசும் சத்தத்தைக் கேட்டவுடன், தன் அறையின் கதவை ஓங்கி சாத்திக் கொள்கிறான் சிறுவன். இவனுடைய அறையையும் சுற்றிப் பார்க்க அவர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு முகமன் கூறவில்லையே என்று சிறுவனை அவனுடைய தாய் கண்டிக்கிறாள். அடிபட்ட உணர்வுடன் கோபத்துடன் வெளியே செல்கிறான் அல்யோஷா.

சிறிது நேரத்திற்குப் பிறகு சிறுவனின் தந்தை வருகிறார். தம்பதியினருக்குள் சண்டை நிகழ்கிறது. அவர்களுக்கிடையில் பல வருடங்களாக நீடிக்கும் பரஸ்பர வெறுப்பின் தொடர்ச்சியது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் விவாகரத்து செய்யவிருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது. சிறுவனை யார் வைத்துக் கொள்வது என்பது குறித்து அவர்களுக்குள் கசப்பான விவாதம் நடைபெறுகிறது. இருவருமே அவனை நிராகரிப்பதற்கான காரணங்களை அடுக்குகிறார்கள். மறைவாக இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் சிறுவன், சுயபச்சாதாபத்தோடு மெளனமாக கதறி அழுகிறான்.

மிக மிக இயல்பாக சித்தரிக்கப்பட்டிருக்கும் இந்த துவக்க காட்சிகளின் மூலம் அந்த வீட்டில் சிறுவன் அடைந்து கொண்டிருக்கும் துயரத்தையும் மனஉளைச்சலையும் நம்மால் உணர முடிகிறது. சிறுவனின் தந்தை மற்றும் தாய் இருவருக்குமே வேறு துணையுடன் உறவு இருக்கிறது.

சிறுவனின் தந்தையான போரிஸ், ஓர் இளம்பெண்ணுடன் வாழ்க்கை நடத்துகிறார். அவள் கர்ப்பமாக இருக்கிறாள். ‘என்னை கை விட மாட்டீர்கள் அல்லவா?” என்று கண்ணீருடன் கேட்கிறாள் அவள். போரிஸ் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்பதால், இது சார்ந்த பாதுகாப்பற்ற உணர்ச்சியில் அவள் அல்லாடுகிறாள்.

இதைப் போலவே சிறுவனின் தாயும் நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு பணக்காரருடன் நெருக்கமாக இருக்கிறாள். பணக்காரருக்கு வெளியூரில் தங்கிப் படிக்கும் ஒரு மகள் இருக்கிறாள். விவாகரத்து முடிந்த பிறகு தம்பதியினர் அவரவர்களின் திசையில் செல்வதற்கான ஏற்பாடுகளில் உள்ளனர். ஆனால் சிறுவனின் நிலைமை? இருவருக்குமே அது குறித்தான கரிசனம் மனதில் ஓரத்தில் இருந்தாலும் பொறுப்பை ஏற்கத் தயாராக இல்லை.

சோவியத் யூனியனின் உடைவு மற்றும் கம்யூனிச வீழ்ச்சிக்குப் பிறகான நவீன ரஷ்ய சமூகத்தின் சமகால உலகின் ஒரு பக்கத்தை இத்திரைப்படம் நுட்பமாக முன்வைக்கிறது. ரஷ்யா என்றல்ல, உலக மயமாதலுக்குப் பிறகு, ஏறத்தாழ அனைத்து நாடுகளிலும் மனித சமூகத்தின் இடையேயுள்ள விலகலும் சுயநலமும் அதிகமாகியிருப்பதை இது சுட்டிக் காட்டுகிறது.

சிறுவனின் தந்தையான போரிஸ் பணியாற்றும் நிறுவனத்தின் தலைவர் ஒரு கிறித்துவர். நிறுவன ஊழியர்களின் குடும்ப விவகாரங்களில் எவ்வித குழப்பமும் இருக்கக்கூடாது என்கிற கண்டிப்பை உடையவர். ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்கள், பணியை விட்டு உடனே விலக்கப்படுவார்கள். எனவே போரிஸ் இது குறித்த கவலையுடன் இருக்கிறார். சக ஊழியரிடம் இது பற்றி பதட்டமுடன் பேசிக் கொண்டேயிருக்கிறார். தாயான ஜென்யா, தன் புதிய கணவருடன் நெருக்கமாக இருக்கிறாள். ‘அன்பு என்கிற ஒன்றையே என் முன்னாள் கணவனிடம் உணர்ந்ததில்லை. உங்களின் மூலம் ஒரு புதிய உலகை காண்கிறேன்’ என்று உருகுகிறாள்.

இந்த நிலையில், ஜென்யா ஒரு நாள் வீட்டுக்கு வரும் போது, தன் மகன் அல்யோஷா இல்லாமலிருப்பதைக் கவனிக்கிறாள். எங்காவது நண்பனின் வீட்டில் தங்கி வந்திருப்பான் என்று யூகித்திருந்தவளுக்கு, அவன் இரண்டு நாட்களாக வீட்டிற்கு வரவில்லை என்பது பதட்டத்தைத் தருகிறது. கணவனை அழைத்து இந்த விஷயத்தைச் சொல்கிறாள். அவன் அதிக கவனமின்றி இந்தத் தகவலைக் கேட்கிறான். கோபத்துடன் தொலைபேசியைத் துண்டிக்கும் ஜென்யா, காவல்துறைக்கு தகவல் தருகிறாள். அவர்கள் சம்பிரதாயத்திற்கு இந்தப் புகாரை பதிந்து கொள்கிறார்கள். தேடுவதற்கு அதிகம் மெனக்கிடுவதில்லை. “பாருங்க மேடம், இதைவிடவும் முக்கியமானதா, ஆயிரத்தெட்டு கேஸ் இருக்கு. இந்த மாதிரி ஓடிப் போன பசங்க கொஞ்ச நாள்ல திரும்பி வந்துடுவாங்க நாங்க பார்க்காததா,?” என்று நம் நாட்டு காவல்துறையைப் போலவே அலட்சியமாக பேசுகிறார்கள்.

அவர்களின் மெத்தனத்தைப் பார்த்து கோபமடையும் ஜென்யாவிடம் காவல்துறை அதிகாரியே ஒரு யோசனை சொல்கிறார். “இது போல் காணாமல் போகும் சிறுவர்களைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு தன்னார்வல அமைப்பு இருக்கிறது. இதைப் போன்ற வழக்குகளைக் கையாளும் அனுபவமும் திறமையும் உள்ள அவர்களால் திறமையாகத் தேட முடியும்” என்கிறார். அந்த அமைப்பிடம் தெரிவிக்கிறார் ஜென்யா.

தேடுதல் படலம் துவங்குகிறது. தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள், மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் அனைத்து வழிகளையும் முயல்கிறார்கள். ஊர் முழுக்க சுவரொட்டிகளை ஒட்டுகிறார்கள். இது சார்ந்த காட்சிகள் பொறுமையாக நீள்கின்றன. இதற்கிடையில் தம்பதியினர் இடையே நிகழும் சண்டை ஓய்வதாயில்லை. ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள். ‘ஒருவேளை பாட்டி வீட்டிற்கு (ஜென்யாவின் தாய்) சென்றிருப்பானோ’ என்று இரண்டு மணி நேரம் பயணம் செய்யும் தொலைவில் உள்ள இடத்திற்கு நள்ளிரவில் செல்கிறார்கள். தனது தூக்கம் கலைந்த எரிச்சலில் கத்துகிறாள் பாட்டி. “கர்ப்பம் அடைஞ்சப்பவே கலைச்சுடுன்னு சொன்னேன். நீ கேட்கலை. இவனைப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டே. இப்ப ஏன் என்னை வந்து தொந்தரவு பண்றே?” என்று எரிந்து விழுகிறாள். கோபத்துடன் கிளம்புகிறாள் ஜென்யா. திரும்பும் வழியில் ஜென்யாவிற்கும் போரிஸிற்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் நிகழ்கிறது. பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள். கோபத்தில் ஜென்யாவை பாதி வழியிலேயே இறக்கி விட்டுச் செல்கிறார் போரிஸ்.

காணாமல் போன சிறுவனான அல்யோஷாவுடன் படிக்கும் சக மாணவனை விசாரிக்கிறார்கள். முதலில் மென்று விழுங்கும் அவன், ஒரு பாழடைந்த கட்டிடத்தில் சுற்றித் திரியும் வழக்கம் தங்களுக்கு இருப்பதை ஒப்புக் கொள்கிறான். தன்னார்வ அமைப்பின் ஆட்கள்  அந்தக் கட்டிடம் முழுவதையும் பொ’றுமையாகத் தேடுகிறார்கள். அங்கு சிறுவனின் ஆடை கிடைத்தாலும் எந்தவொரு பலனும் இல்லை.  குடியிருப்பின் அருகிலுள்ள வனப்பகுதி முழுவதையும் ஓர் இடம் கூட விடாமல் அக்கறையுடன் தேடிப் பார்க்கிறார்கள். ஒரு தடயமும் இல்லை.

இதற்கிடையில் காவல்துறையிடமிருந்து ஓர் அழைப்பு. வருகிறது. சேதமுற்ற நிலையில் ஒரு சிறுவனின் பிணம் கிடைத்திருப்பதாகவும் அடையாளம் காட்டச் சொல்லியும் அழைக்கிறார்கள். பெற்றோர் இருவரும் கலக்கத்துடன் அங்கு வருகிறார்கள். ‘அது தம் மகனாக இருக்காது’ என்று ஜென்யா தீர்மானத்துடன் இருக்கிறாள். தந்தையோ குற்றவுணர்வுடன் நிற்கிறார். அது தங்களின் மகன் இல்லை என்பதை அறிந்ததும் உடைந்து அழுகிறார்கள். இருவருக்குள்ளும் உறைந்திருக்கும் மகனின் மீதுள்ள அன்பு தன்னிச்சையாக வெளிப்படும் இந்தக் காட்சி நெகிழ்வூட்டும் படியாக அமைந்திருக்கிறது.

வருடங்கள் கடக்கின்றன. வீடு விற்கப்பட்டு விடும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது. விவாகரத்து பெற்ற தம்பதியினர், முன்னரே தீர்மானித்தபடி  தங்களின் இரண்டாவது இணையோடு தேர்வு செய்த வாழ்க்கையை வாழ்கிறார்கள். சிறுவனின் புகைப்படம் ஒட்டப்பட்டிருக்கும் பழைய சுவரொட்டியை வெறித்து நோக்குகிறாள் ஜென்யா. இரண்டாவது மனைவி மூலம் பிறக்கும் மகனை முழுமையான மகிழ்ச்சியுடன் கொஞ்ச முடியாமல் குற்றவுணர்வில் தவிக்கிறார் போரிஸ்.

சிறுவன் அல்யோஷா முன்னர் மரத்தில் கட்டிய பிளாஸ்டிக் கயிறு காற்றில் ஆடுவதை நிதானமாக காட்டும் காட்சியுடன் திரைப்படம் நிறைவுறுகிறது. அவனுடைய இருப்பின் கடைசி சாட்சியம் அந்த பிளாஸ்டிக் கயிறு என்பது போல் தோன்றுகிறது. அவனைப் பற்றி பிறகு எந்தவொரு சுவடுமில்லை. அவன் கிடைத்தானா, என்னவானான் என்பதையெல்லாம் பார்வையாளர்களின் யூகத்திற்கே விட்டிருக்கிறார் இயக்குநர். சிறுவன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தில் அதிகம் இல்லையென்றாலும் அவனுடைய நினைவுகளை பார்வையாளர்கள் படம் முழுவதும் உணருமாறு சிறப்பாக இயக்கியிருக்கிறார்.

 
**

இயக்குநர் Andrey Zvyagintsev, இயல்பான திரைக்கதையுடன் மிக மிக நிதானமாக நகரும் காட்சிகளை இணைத்து உருவாக்கியிருக்கும் தன்மைதான் இத்திரைப்படத்தை தனித்துவமாக உணரச் செய்கிறது.. எந்தவொரு காட்சியிலுமே நடிகர்கள் நடிப்பது போல் தோன்றவில்லை. ஒரு குடும்பத்தின் சிக்கலை, ஜன்னலின் வழியாக பார்ப்பது போலவே அத்தனை யதார்த்தத்துடன் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு பனிக்காலத்தில் துவங்கி வேறொரு பனிக்காலத்தில் முடியும் இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவு அபாரமானதாக உள்ளது. துவக்கத்திலும் இறுதியிலும் மெல்லிய அதிர்ச்சியை தரும் பின்னணி இசையைத் தவிர, படம் முழுவதும் இயற்கையான சப்தங்களால் நிறைந்திருக்கிறது.

நேரடியாக அல்லது மறைமுகமாக, பெற்றோர்களால் கொடுமைப்படுத்தப்படும், கைவிடப்படும் குழந்தைகளை பாதுகாக்கவும், கண்காணிப்பதற்குமான கண்டிப்பான சட்டங்கள், வழிமுறைகள் மேலைய நாடுகளில் உள்ளன. ஒரு குழந்தையை அத்தனை எளிதில் அங்கு கைவிட்டு விட முடியாது. இத்திரைப்படத்திலும், இது குறித்தான அச்சம் சிறுவனின் பெற்றோர்களுக்கு ஒருபுறம் இருக்கிறது.

ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் வெற்றுச் சம்பிரதாயங்களுக்கு சில சட்டங்கள் இருந்தாலும் நடைமுறையில் எதுவும் உறுதியாக இல்லை. குடும்ப வன்முறையில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கும் சட்டமும், கொடுமைப்படுத்தப்படும் குழந்தைகள் தங்களின் புகாரை பதிவு செய்ய 1098 என்கிற தொலைபேசி எண்ணும் இருந்தாலும் இது சார்ந்த குற்றங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. பதிவு செய்யப்படாத வழக்குகளையும் சேர்த்தால் இதன் சதவீதம் இன்னமும் உயரக்கூடும். வீட்டை விட்டு ஓடிப்போகும் சிறார்கள் பல்வேறு வன்முறைகளுக்கும் சமூகவிரோத காரியங்களுக்கும் வலுக்கட்டாயமாக பயன்படுத்தப்படுகிறார்கள்.

ஆரோக்கியமான குடிமகன்களை, வாரிசுகளை உருவாக்கும் பொறுப்பும் கடமையும் முறையே அரசாங்கத்திற்கும் குடும்பத்திற்கும் இருக்கிறது. இதில் குடும்பம் என்கிற நிறுவனத்தின் பங்கு மிக முக்கியமானது. தனிநபர் சுதந்திரம் என்கிற விஷயம் முக்கியமானதுதான். மணவாழ்க்கையின் கசப்புகளை வாழ்நாள் பூராவும் சகித்துக் கொள்ளத் தேவையில்லைதான். சரியான துணையைத் தேடி தங்களின் வேறு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் இது சார்ந்த ஏற்பாடுகளில், சம்பந்தப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு எவ்வித மனபாதிப்பும் இல்லாத வகையில் பார்த்துக் கொள்வது மிக முக்கியமானது. அன்பும் பாசமும் உள்ள வீடுகளில் இருந்துதான் மனஆரோக்கியமுள்ள குழந்தைகள் வெளிவருவார்கள். இது போன்ற குடிமகன்களின் மூலம்தான் ஆரோக்கியமான சமூகமும் உருவாக முடியும்.

இந்த நோக்கில், குடும்பத்திற்குள் நிலவ வேண்டிய அன்பு எத்தனை முக்கியமானது என்பதை இத்திரைப்படம் மிக அழுத்தமாக நிறுவுகிறது. 


(குமுதம் தீராநதி -  ஜூலை  2018 இதழில் பிரசுரமானது)  

suresh kannan

Monday, October 28, 2019

A Fantastic Woman | 2017 | Chile | இயக்குநர் - Sebastián Lelio



அயல் திரை  - 4

“ஆண் கூட்டில் சிறைப்பட்டிருக்கும் பெண்மை”


தொடர்ச்சியான விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்குப் பிறகும் கூட LGBT சமூகத்தைப் பற்றிய பொதுப்புத்தியின் புரிதல்களிலும் பார்வைகளிலும் கணிசமான மாற்றம் ஏற்படவில்லை. இந்த துரதிர்ஷ்டமான நிலைமையைப் பதிவு செய்திருக்கும் ஸ்பானிய மொழித் திரைப்படம் இது. மேற்கத்திய நாடுகளில் கூட இது சார்ந்த தவறான கற்பிதங்கள், முன்தீர்மான வெறுப்புகள் நிலவுகிற போது இந்தியா போன்ற நாடுகளைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமேயில்லை. தங்கள் சமூகத்தினர் குறித்து பொதுப்பார்வையில் உருவாக வேண்டிய மாற்றங்கள், தாங்க அடைய வேண்டிய அங்கீகாரங்கள் போன்றவைகளைப் பற்றி அவர்களேதான் போராட வேண்டியிருக்கிறது.

ஒரு சராசரி நபர், LGBT சமூகத்தினரைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று பார்ததால் அவர்களின் உறவு இயற்கைக்கு முரணானது; அவ்வுறவு காமத்தை மட்டுமே மையமாக கொண்டது; தடை செய்யப்பட வேண்டியது; அருவருக்கத்தக்கது என்பது போன்று பல தவறான அபிப்ராயங்கள் உள்ளன. இயற்கை சுழற்சிக்கு அடிப்படையாக இருக்கும் ஆண்-பெண் சார்ந்த உறவு மட்டுமே சரியானது என்றும் இதர பாலின உறவுகள் எல்லாம் முறையற்றவை என்கிற எண்ணங்களும் உலவுகின்றன.

ஒரு சராசரியான ஆண்-பெண் உறவில் உள்ள அத்தனை இன்ப துன்பங்களும் மாற்றுப்பாலின உறவுகளிலும் உள்ளன என்பது பொதுச்சமூகத்தால் அறியப்பட வேண்டும். அது காமத்தை மட்டும் மையமாகக் கொண்டது அல்ல. அந்த உறவுகளிலும் காதல், அன்பு. பாசம், பிரிவு, ஏக்கம் என்று அனைத்து விதமான உணர்வுகளும் உள்ளன. ஆண் – பெண் உறவைப் போலவே அவைகளும் மதிக்கப்படவும் அங்கீகரிக்கப்படவும் வேண்டும். அவையும் இயற்கை சார்ந்தவையே என்பது பொதுச் சமூகத்தால் உணரப்பட வேண்டும்.

Blue Is the Warmest Colour என்கிற பிரெஞ்சு திரைப்படம் 2013-ல் வெளியானது. அடெல் என்கிற இளம்பெண்ணுக்கு எம்மா என்கிற மூத்த மாணவியின் மீது தன்னிச்சையான ஈர்ப்பு உருவாகிறது. ஆண் நண்பருடனான சிநேகம் அவளுக்கு ருசிப்பதில்லை. எம்மாவின் மீதுதான் காதல். இருவரும் நட்பாகிறார்கள். மனமொத்த தம்பதியினரைப் போல இணைந்து வாழ்கிறார்கள். வழக்கமான திருமண உறவுகளில் நேர்வதைப் போல இதிலும் ஊடலும் சர்ச்சையும் நேர்கிறது. இருவரும் பிரிகிறார்கள். அடெலினால் இந்த பிரிவைத் தாங்க முடிவதில்லை. எம்மாவை நினைத்து உருகிக் கொண்டேயிருக்கிறார். 

இது வழக்கமான காதல் திரைப்படங்களின் திரைக்கதையை அடிப்படையாகக் கொண்டதுதான். என்னவொன்று இரு பெண்களுக்கு இடையேயான காதலை அடிப்படையாகக் கொண்டது. காதல் காவியக் கதைகளை உருகி உருகி வாசிக்கும் ஒரு சராசரி நபர்  இந்தக் காதலையும் அதே உருக்கத்துடன் பார்ப்பாரா என்பது சந்தேகம்தான். அவருடைய நோக்கில் இது இயற்கைக்கு மாறான உறவு என்கிற எண்ணம் இருப்பதால் அருவருப்புடன்தான் நோக்குவதற்கான சாத்தியம் அதிகம். ஒரு சராசரி காதலில் ஏற்படக்கூடிய அத்தனை ஏக்கங்களும் சோகங்களும் கண்ணீரும் தற்பால் ஈர்ப்பில் உருவாகும் காதலிலும் இருக்கும் என்பதை மிக அழுத்தமாகப் பதிவு செய்தது, Blue Is the Warmest Colour.




 
A Fantastic Woman என்கிற இந்த ஸ்பானிய மொழித் திரைப்படமும் இந்த வகையைச் சார்ந்ததே. வயது முதிர்ந்த ஓர் ஆணுக்கும் ஒரு திருநங்கைக்கும் ஏற்படும் உறவில் நிகழும் சிக்கல்களையும் சமூகத்தின் பார்வைகளையும் மிக இயல்பாகவும் உணர்ச்சிகரமாகவும் பதிவு செய்திருக்கிறது. ‘சிறந்த வெளிநாட்டுத்திரைப்படம்’ என்கிற பிரிவில் 2017-க்கான ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல சிறந்த விருதுகளைப் பெற்ற திரைப்படம் இது.

சிலி தேசத்தின் சான்டியாகோ நகரில் வசிக்கும் மரினா ஒரு திருநங்கை. ஓர் உணவகத்தில் பரிசாரகராக பணிபுரியும் மரினா, பாடகியும் கூட. தன்னுடைய பாலின மாற்றத்தை சட்ட ஆவணங்களில் பதிவு செய்து அந்த அங்கீகாரத்திற்காக காத்திருப்பவள். ஓர்லாண்டோ என்கிற அறுபத்தைந்து வயது நபருடன் மரினாவிற்கு காதலும் உறவும் உண்டாகிறது. ஆடை நிறுவனத்தின் உரிமையாளரான ஓர்லாண்டோ விவாகரத்தானவர். மரினாவின் பிறந்த நாளுக்காக ஓர்லாண்டோ விருந்து உபசரிப்பு தரும் நிகழ்வுடன் இந்த திரைப்படம் துவங்குகிறது. அடுத்த சில நாட்களில், ஒரு பிரபல சுற்றுலா மையத்திற்கு செல்வதற்காக முன்பதிவு செய்வு செய்திருக்கும் தகவலையும் ஓர்லாண்டே கூறுகிறார். மரினா மகிழ்கிறாள். வழக்கம் போல் ஓர்லாண்டோவின் வீட்டில் அவர்கள் இரவைக் கழிக்கிறார்கள்.

நள்ளிரவில் ஓர்லாண்டோ உடல் சார்ந்த அசெளகரியத்தை உணர்கிறார். பதறிப் போகும் மரினா அவரை கைத்தாங்கலாக கொண்டு வந்து குடியிருப்பின் வாசலில் நிறுத்தி வீட்டைப் பூட்டி விட்டு வருவதற்குள் படிக்கட்டுகளில் சரிந்து வீழ்கிறார் ஓர்லாண்டோ. இதனால் அவருடைய தலையிலும் உடல் பாகங்களிலும் சிறு காயங்கள் ஏற்படுகின்றன. அவரை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கிறாள் மரினா. ஓர்லாண்டோவின் குடும்பத்தினருக்கும் தகவல் தருகிறாள்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மரினா தொடர்ச்சியான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஓர்லாண்டோவின் உடலில் இருக்கும் காயங்களால் சந்தேகம் அடையும் மருத்துவர், காவல்துறைக்கு தகவல் தந்து விடுகிறார். தனக்கு ஏதோ சிக்கல் நேரப் போகிறது என்பதை உள்ளுணர்வால் உணரும் மரினா, ஓர்லாண்டோவை மருத்துவமனையில் சேர்த்து விட்ட ஆறுதலுடன் அங்கிருந்து விரையும் போது காவல்துறை வழிமறித்து விசாரணை செய்கிறது. மறுபடியும் மருத்துவனைக்கு அழைத்து வருகிறார்கள்.

ஓர்லாண்டோவின் வாழ்வில் ஒரு திருநங்கை இருப்பதை வெளியுலகம் அறியக்கூடாது என கருதும் அவரது சகோதரர், காவல்துறையிடனரிடமிருந்து மரினாவை விடுவித்து அனுப்புகிறார். என்றாலும் ஓர்லாண்டோவின் குடும்பத்தினர் வழியாக பல அவமதிப்புகளையும் சட்டச்சிக்கல்களையும் மரினா எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஓர்லாண்டோவின் மகன் இவளை பல நுட்பமான வழிகளில் அவமானப்படுத்துகிறான். குடுபத்தினர் தரும் அழுத்தத்தால் காவல்துறையைச் சேர்ந்த பெண்ணொருத்தி விசாரணை என்கிற பெயரில் மரினாவை மனஉளைச்சலுக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கிறாள்.  மரினா தங்கியிருக்கும் வீடு, கார் உட்பட ஓர்லாண்டோவின் அனைத்து உடமைகளையும் பறித்துக் கொள்கிறார்கள். அவற்றைத் திருப்பித் தருவதில் மரினாவிற்கு எந்தப் பிரச்சினையுமில்லை.

அனைத்து விதமான அவமதிப்புகளையும் சகித்துக் கொள்ளும் மரினா, ஓர்லாண்டோவின் குடும்பத்தினரிடம் விடுக்கும் ஒரே வேண்டுகோள், ‘ஓர்லாண்டோவின் இறுதிச் சடங்களில் பங்கேற்க வேண்டும்’ என்பதே. ஆனால் ஓர்லாண்டோவின் முன்னாள் மனைவியிடமிருந்து இதற்கு கடுமையான எதிர்ப்பு வருகிறது. “எக்காரணத்தைக் கொண்டும் அங்கு வந்து நின்று எங்களை அவமதிக்காதே” என்று சீறுகிறாள். மரினாவால் இறுதிச் சடங்கிற்கு செல்லாமல் இருக்க முடியவில்லை. ஓர்லாண்டோ மீது அவள் வைத்திருக்கும் அன்பு அத்தகையது. எதிர்ப்புகளை மீறி இறுதிச் சடங்கிற்குச் சென்று அவமானத்தை எதிர்கொள்கிறாள். ஓர்லாண்டோவின் மகனும் அவனது நண்பனும் இணைந்து மரினாவின் மீது உடல்ரீதியான வன்முறையை நிகழ்த்தி எச்சரிக்கிறார்கள்.

பல அவமதிப்புகளை சகித்துக் கொள்ளும் மரினா, ஒரு கட்டத்தில் கொதித்தெழுகிறாள். ஓர்லாண்டோ தனக்குப் பரிசாக அளித்த வளர்ப்பு நாயை திருப்பித்தர வேண்டும் என்று போராடுகிறாள். அதனுடன் தனிமையான வீட்டில் வசிக்கும் மரினா, தன்னுடைய பாடகி வாழ்க்கைக்கு திரும்புவதோடு இத்திரைப்படம் நிறைகிறது.

**

விவாகரத்தான ஓர் ஆணின் இரண்டாவது திருமணத்தை சட்டம் உட்பட அனைத்து சமூக நிறுவனங்களும் ஒப்புக் கொள்கின்றன; ஏற்றுக் கொள்கின்றன. ஒரு மனைவிக்கான அங்கீகாரமும் உரிமைகளும் அவளுக்கு வழங்கப்படுகின்றன. மரினாவின் வாழ்க்கையில் நிகழ்வதும் அதுதான். ஆனால் அவள் ஒரு திருநங்கை என்கிற ஒரே காரணத்திற்காக அத்தனை உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. உரிமைகள் மறுக்கப்படுவது மட்டுமல்லாமல் கூடுதலாக பல அவமதிப்புகளையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. ஒரு மனிதருக்கு அடிப்படையாக தரப்பட வேண்டிய மரியாதை கூட அவளுக்கு காட்டப்படுவதில்லை.

மரினா என்கிற திருநங்கையின் பாத்திரத்தில் டேனியலா வேகா மிக அற்புதமாக நடித்துள்ளார். உண்மையிலேயே இவர் ஒரு திருநங்கை என்பதால் தன் பாத்திரத்தின் உணர்வுகளை கச்சிதமாகவும் ஆத்மார்த்தமாகவும் வெளிப்படுத்த முடிந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது. இவரது அபாரமான நடிப்பிற்காக பல பாராட்டுக்களையும் விருதுகளையும் பெற்றார். ஆஸ்கர் விருது வரலாற்றிலேயே, திருநங்கை என்று தம்மை வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட ஒருவர் மேடையேறுவது டேனியலா வேகாவின் மூலமாகத்தான் நிகழ்ந்தது. அவரின் தனிப்பட்ட வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களும் அது சார்ந்த தூண்டுதல்களும் இந்த திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தன்னுடைய பாலின அடையாளத்தை பதிவு செய்ய மரினா முயற்சிக்கும் போராட்டம்தான் இத்திரைப்படத்தின் மையம். தம்மைச் சாய்க்க நினைக்கும் புயல் காற்றில் மரினா தாக்குப் பிடித்து நிற்கும் ஒரு காட்சி இதைச் சரியாக உணர்த்துகிறது. ஏறத்தாழ படம் முழுவதும் இறுக்கமான முகத்துடனே மரினா தோன்றுகிறார். பாலினச் சிறுபான்மையோர் சமூகத்தால் எதிர்கொள்ளும் பல்விதமான சிக்கல்களையும் அவமதிப்புகளையும் மரினாவின் இறுக்கமான முகம் நமக்கு உணர்த்துகிறது. காற்றில் கைகளை வீசி குத்துவதின் மூலம் கண்ணுக்குத் தெரியாத எதிரியை வீழ்த்தும் தற்காலிக ஆசுவாசத்தை மரினா அவ்வப்போது அடைகிறாள். விசாரணை என்கிற காவல்துறை நிகழ்த்தும் அவமதிப்புகளும் மனிதஉரிமை மீறல்களும், உலகெங்கும் பாலினச் சிறுபான்மையோர் எதிர்கொள்ளும் சிறுமைகளுக்குச் சாட்சியமாக நிற்கின்றன.

ஓர்லாண்டாவிற்கும் மரினாவிற்கும் இடையிலான உறவும் காதலும் மிக கண்ணியமாகவும் ஆத்மார்த்தமாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஓர்லாண்டே மறைவிற்குப் பின்னரும் அவர் தோன்றும் மாயக்காட்சிகள் மரினாவிற்குத் தோன்றுகின்றன. ஓர்லாண்டேவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மரினா செல்லும் காட்சியில் அவர் உயிருடன் தோன்றி மரினாவிற்கு முத்தமிடும் காட்சி நெகிழ்வுபூர்வமானதாக உள்ளது. சம்பிரதாயத்திற்காக குடும்பத்தினர் செய்யும் அஞ்சலியை விடவும் மரினாவின் அஞ்சலி உண்மையானதாக இருக்கிறது. தன் காதலரை மரினாவால் மறக்க முடியவில்லை என்பதை பல காட்சிகள் உணர்த்துகின்றன. இந்தக் காதலில் உள்ள உண்மையை சமூகம் உணர்வதற்கு தடையாக இருப்பது மரினாவின் பாலின அடையாளமே. பாலினச் சிறுபான்மையோர் மீதுள்ள முன்தீர்மான வெறுப்புகளும் கற்பிதங்களும் இந்தக் காதலின் புனிதத்தை உணர்ந்து கொள்ள தடையாக நிற்கின்றன.

படத்தின் துவக்க காட்சியில் ஓர் இசை மேடையில் மரினா பாடுவாள். ‘உனது காதல் நேற்றைய செய்தித்தாளைப் போல. யார் அதை வாசிக்க விரும்புவார்? இறுதியில் அது குப்பைக்குத்தான் போகும்’ என்பது போன்ற வரிகள் மரினாவின் காதலை துல்லியமாக அடையாளப்படுத்துகின்றன. பொங்கி வழியும் ஒரு நீர்வீழ்ச்சியின் அழகியலை அபாரமாக பதிவு செய்திருக்கும் துவக்க காட்சி முதற்கொண்டு ஒளிப்பதிவின் உன்னதம் படமெங்கும் தென்படுகிறது. காட்சியின் பின்புலத்திற்கு நெருக்கமான. அளவான பின்னணி இசையைத் தந்திருக்கிறார் மாத்யூ ஹெர்பெர்ட்.

ஓர்லாண்டே வைத்திருந்த ஒரு சாவியின் ரகசியம் மரினாவிற்கு பிடிபடுவதில்லை. ஒரு கட்டத்தில் அதன் உபயோகத்தை அறிந்து நாடிச் செல்கிறாள். சுற்றுலாவிற்கான பயணச்சீட்டோ என்கிற யூகம் நமக்குள் தோன்றுகிறது. ஆனால் மரினாவின் காதலைப் போலவே அந்த ரகசிய அறையும் வெறுமையாகக் காட்சியளிக்கிறது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 377 வது பிரிவு ‘இயற்கைக்கு மாறான உடலுறவை’ தண்டனைக்குரிய குற்றமாகச் சொல்கிறது. பாலினச் சிறுபான்மையினரின் பல போராட்டங்களுக்குப் பிறகுதான் இது சார்ந்த சட்டத்திருத்தங்களைப் பற்றி நீதித்துறை பரிசீலிக்கத் துவங்கியிருக்கிறது. சில விதிவிலக்குகளைத் தாண்டி ஏறத்தாழ உலகமெங்கிலும் இதே நிலைமைதான். சட்டரீதியான மாற்றங்களைத் தாண்டி, பொது சமூகத்தின் மனங்களிலும் இந்த மாற்றம் உருவாக வேண்டும் என்கிற செய்தியை மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது இந்த திரைப்படம். Call Me by Your Name என்கிற தலைப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் இன்னொரு திரைப்படமும் இந்த வகைமையைச் சேர்ந்ததே. இரு ஆண்களுக்குள் உருவாகும் காதலையும் பிரிவுத் துயரத்தையும் நெகிழ்ச்சியாக பதிவு செய்திருக்கும் திரைப்படம் அது.

மாற்றுப் பாலினத்தவர்களின் மனச்சிக்கல்களையும் அவர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகளையும் உரையாடும் இது போன்ற திரைப்படங்கள் தொடர்ந்து உருவாக்கப்பட வேண்டும். 

(குமுதம் தீராநதி -  ஜூன் 2018 இதழில் பிரசுரமானது) 


suresh kannan

Sunday, October 27, 2019

The Post | 2017 | United States | இயக்குநர் - Steven Spielberg






அயல் திரை  -3

“‘நான்காவது தூணின் சாகசம்’”




என்னை வாய்விட்டு சிரிக்க வைத்த memes சிலதை இணையத்தில் பார்த்தேன். ஒரு வாகனத்தில் இருந்து பெட்ரோல் சிறிது வழிந்து சாலையில் சிறுகீற்றாக ஓடுகிறது. உடனே அமெரிக்க ராணுவப் படையைச் சார்ந்த சில வீரர்கள் பாராசூட்டில் அங்கு வந்து இறங்குகிறார்கள். இன்னொரு காட்சி.  ஒரு தட்டில் எண்ணைய் வழிய வழிய இருக்கும் மெதுவடைகளின் மீதும் அவர்கள் தென்படுகிறார்கள். சற்று மிகையாக இருந்தாலும், அமெரிக்காவின் ‘எண்ணைய்’ வெறியின் பல்லாண்டு வரலாற்றை மிக நேர்த்தியாக எள்ளல் செய்த சித்திரங்களாக இவை எனக்குத் தோன்றின.

இதர பிரதேசங்களின் இயற்கை வளங்களைச் சுரண்டுதல், பிற நாடுகளின் உள்விவகாரங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தலையிடுதல், ‘உலகின் நாட்டாமை யார்?’ என்கிற அதிகாரப் போட்டியில் தம் தரப்பை நிலைநாட்டுவதற்காக செய்யும் தில்லுமுல்லுகள், தங்களின் வர்த்தகத்தை உலக அளவில் பரவச் செய்வதற்கான வணிகத் தந்திரங்கள் உள்ளிட்ட பல காரணங்களுக்காக வல்லரசு நாடுகள் பல மோசடிகளை நிகழ்த்துகின்றன. மிக குறிப்பாக, ‘உலகின் நிரந்தர பெரியண்ணனாக’ தம்மை நிலைநாட்டிக் கொள்ள காலம் காலமாக அமெரிக்கா நிகழ்த்தும் முறைகேடுகளின் வரலாறு என்பது மிகப் பெரியது.

இந்த நீண்ட வரலாற்றின் ஒரு துளியை ஓர் அமெரிக்கப் பத்திரிகை அம்பலப்படுத்த துணிகிறது. பரபரப்பும் சுவாரசியமும் கலந்த இந்தச் சம்பவங்களின் அடிப்படையில் வெளியாகியிருக்கிற அமெரிக்கத் திரைப்படம் ‘The Post’. பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்பீல்பெர்க் இதை இயக்கியிருக்கிறார். ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல திரைவிழாக்களில் நாமினேட் ஆன இந்த திரைப்படத்தை, 2017-ம் ஆண்டின் சிறந்த பத்து திரைப்படங்களில் ஒன்றாக ‘டைம்’ இதழும் அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டிடியூட்டும் தேர்ந்தெடுத்திருக்கின்றன.

**

இந்த திரைப்படத்திற்குள் செல்வதற்குள் முன்னால் இது தொடர்பான சில பின்னணி விவரங்களை சுருக்கமாகவாவது நினைவுகூர்ந்து விடலாம். ‘இரண்டாவது இந்தோசீன போர்’ என்று அழைக்கப்படும் ‘வியட்நாம் போர்’ ஏறத்தாழ இருபது ஆண்டுகள் நிகழ்ந்தது. 1955 முதல் 1975 வரை நிகழ்ந்த இந்தப் போரில் ராணுவ வீரர்கள், புரட்சிப் படையாளர்கள், சிவில் சமூகம் என்று பல தரப்பிலும் லட்சக்கணக்கானவர்கள் உயிர் இழந்தார்கள்; காயமுற்றார்கள். போர் முடிந்து பல வருடங்களாகிய இன்றைய நிலையிலும் கூட காணாமல் போனவர்களாக அறியப்பட்டவர்களின் நிலைமை என்னவாயிற்று என்பது கண்டுபிடிக்கப்பட முடியாமலேயே இருக்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஜப்பானின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து பிரான்சின் காலனி நாடாக இருந்தது வியட்நாம். 1945-ல் ஹோசிமினின் தலைமையில் அமைந்த புரட்சிப் படை வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்தது. ஆனால் தனது காலனியாதிக்கத்துக்குள்  வியட்நாமை தொடர்ந்து தக்கவைக்க முயன்றது பிரெஞ்சுப் படை. ‘முதல் இந்தோசீனப் போர்’ என்று அழைக்கப்படும் இந்தப் போர் 1946 முதல் 1954 வரை நிகழ்ந்தது. அளவில் சிறியதாக இருந்தாலும் சுதந்திர தாகத்துடன் வியட்நாம் மக்கள் படை ஆக்ரோஷமாக போரிட்டதால் பிரான்ஸ் பின்வாங்கியது. ஆயிரக்கணக்கான பிரெஞ்சுப் படையினர் வியட்நாமிடம் சரண் அடைந்தார்கள். ஜெனிவா ஒப்பந்தம் காரணமாக 1954-ல் வியட்நாமை சுதந்திர நாடாக உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன.

தற்காலிக ஏற்பாடாக வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் என அந்த தேசம் இரண்டாக பிரிக்கப்பட்டது. கம்யூனிசக் கொள்கைக்கு ஆதரவாக இருந்த வடவியட்நாமிற்கும் அதற்கு எதிராக இருந்த தெற்கு வியட்நாமிற்கும் மோதல் அதிகரித்தது. இந்த உள்நாட்டுப்போரில் அப்பாவியான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு இதர நாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தப் போருக்குள் தலையிட்டன. தெற்கு வியட்நாமிற்கு, கம்யூனிச எதிர்ப்பு நாடுகளான வடஅமெரிக்கா, தென்கொரியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து போன்ற நாடுகள் துணை நின்றன. வடக்கு வியட்நாமிற்கு கம்யூனிச ஆதரவு நாடுகளான சோவியத் யூனியன், சீனக்குடியரசு, வட கொரியா போன்றவை பக்கபலமாக இருந்தன. ஒருவகையில் இது பொதுவுடமை சித்தாந்தத்தை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் நாடுகளுக்கிடையே நிகழ்ந்த பதிலிப் போர் எனலாம்.

இந்தப் போரில் வடஅமெரிக்கா நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டது. தென் வியட்நாமிற்கு ஆதரவு தருவதின் மூலம் கம்யூனிச கொள்கை பரவுவதை தடுக்கும் சந்தர்ப்பமாக இந்தப் போரை உபயோகித்துக் கொண்டது. படைபலமும் பணபலமும் கொண்ட அமெரிக்காவை, வடவியட்நாமின் படைவீரர்கள் துணிச்சலாக எதிர்கொண்டார்கள். ராணுவத் தளபதி வோ கியென் கியாப்பின் பல்வேறு போர்த் தந்திரங்களை, கொரில்லா தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் வடஅமெரிக்கா தவித்தது. தங்களின் வல்லரசு பிம்பத்திற்கும் அகங்காரத்திற்கும் இதை சவாலாக எடுத்துக் கொண்டு மூர்க்கமாக செயலாற்றியது.

`ஏஜெண்ட் ஆரஞ்சு` என்ற, ரசாயன முறையில் இலைகளை உதிர்க்கச் செய்யும் ஒரு தாவரக்கொல்லியை அமெரிக்க ராணுவம் வியட்நாம் போரில் பயன்படுத்தியது. மண், இலை, புல், மிருகங்கள், மனிதர்கள் போன்ற உயிரிகளின் மேல் நிரந்தரமாகப் படிந்து பெரிய அளவில் தீங்குகளை இந்த ரசாயனம் விளைவிக்கும். பல ஆண்டுகள் கழித்து இப்போதும் சுற்றுச்சூழல் பாதிப்பையும் அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு மருத்துவச் சிக்கல்களையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொள்ளாத அகங்காரம் காரணமாக இந்தப் போரை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருந்த அமெரிக்காவின் மனித உரிமை மீறல் தொடர்பான சம்பவங்கள் கசியத் துவங்கிய போது உலக நாடுகள் அதிர்ச்சியடைந்தன. மிக குறிப்பாக அமெரிக்க மக்கள் தங்களின் அரசாங்கத்திற்கு எதிரான கண்டனப் போராட்டங்களை நிகழ்த்தினார்கள். தோல்வி ஏற்பட்டுக் கொண்டிருந்தாலும் அதை பூசி மெழுகி மேலும் பல அமெரிக்க ராணுவ வீரர்களை பலி கொடுத்துக் கொண்டிருந்த அமெரிக்க அரசின் மீது தங்களின் கொந்தளிப்பை வெளிப்படுத்தினர். ‘எங்களின் வரிப்பணத்தைக் கொண்டு எங்கள் மக்களையே கொல்லும் அரசு தேவையில்லை’ என்று தார்மீக ஆவேசத்துடன் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தார்கள்.

வியட்நாம் மக்கள் படையின் ஆவேசமாக எதிர்ப்பை சமாளிக்க முடியாததாலும், தங்களின் சொந்த நாட்டு மக்களின் பலத்த எதிர்ப்பினாலும் இந்தப் போரில் இருந்து அமெரிக்கா பின்வாங்கியது. பல போர்களில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிய அமெரிக்கா, வியட்நாமின் எளிய ராணுவத்தை எதிர்கொள்ள முடியாமல் தோற்று ஓடிய இந்தச் சம்பவம் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய அவப்பெயரினை தேடித்தந்தது. ‘வியட்நாம் போரில் இருந்து இன்னமுமா பாடம் கற்றுக் கொள்ளவில்லை?” என்கிற வாசகம் இன்றும் கூட அமெரிக்காவிலும் பிரான்சிலும் பிரபலமான மேற்கோளாக உள்ளது.

**

வியட்நாம் போரில் தங்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்த மனித உயிர் இழப்பு மற்றும் பொருளியல் இழப்புகளை மறைத்து ‘நாம் வென்று கொண்டிருக்கிறோம்’ என்கிற போலிப் பெருமிதப் பொய்களை தம் சொந்த நாட்டு மக்களிடம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தது அமெரிக்கா. ஆனால் இந்தக் குட்டு அம்பலமாகத் துவங்கிய போது அமெரிக்க சிவில் சமூகம் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தது. வியட்நாம் போரின் போது அமெரிக்க ராணுவம் நிகழ்த்திய பல்வேறு மனித உரிமை மீறல்கள் காட்சிகளாக கசிந்த போது மக்களிடையே இந்தக் கொந்தளிப்பு உயர்ந்தது.

வியட்நாம் போர் தொடர்பான 30 ஆண்டு கால நிகழ்வுகளை, ராபர்ட் மெக்நமரா என்கிற அமெரிக்க ராணுவச் செயலாளர் பல்வேறு ஆவணங்களாக தொகுத்தார். வருங்கால ஆராய்ச்சிக்காக தொகுக்கப்பட்ட இந்த ஆவணங்கள் (பெண்ட்டகன் பேப்பர்ஸ்) அமெரிக்கா அரசாங்கத்தால் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. போர் தொடர்பான பொய் தகவல்களின் மூலம் தம் சொந்த தேசத்து மக்களையே ஏமாற்றும் அரசாங்கத்தின் மோசடியால் மனம் நொந்து போகும் டேனியல் எலிஸ்பெர்க் என்பவர் இந்த ஆவணங்களை ஊடகங்களுக்கு கசிய விடுகிறார். வியட்நாம் போரின் போது அரசு தரப்பில் பார்வையாளராக களத்தில் நின்று பல்வேறு செய்திகளை நேரில் கண்டு பதிவு செய்தவர்தான் இந்த டேனியல். ராணுவ ரகசியங்களை பொதுவில் வெளியிடுவதின் மூலம் பல்லாண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் ஆபத்தை அவர் உணர்ந்திருந்தாலும் தேசநலன் கருதி இந்த சாகசத்தில் அவர் ஈடுபட்டது மிக மிகத் துணிச்சலான காரியம்.

‘தி நியூயார்க் டைம்ஸ்’ எனும் அமெரிக்கப் பத்திரிகை பெரும் முயற்சிக்குப் பின் இந்த ஆவணங்களின் பகுதியை டேனியலிடமிருந்து வாங்கி தங்களின் நாளிதழில் பிரசுரிக்கத் துவங்குகிறது. அப்போதைய அதிபர் நிக்சனின் தலைமையிலான அரசு பதறிப் போய் ஆவணங்கள் வெளியாவதற்கான தடையை விதிக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு  ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ எனும் போட்டிப் பத்திரிகை அந்த ஆவணங்களை அதே டேனியலிடமிருந்து வாங்கி தங்களின் இதழில் பிரசுரிக்கத் துவங்குகிறது. நிக்சனின் அரசு இந்தப் பத்திரிகையையும் முடக்கத் திட்டமிடுகிறது.

அரசாங்கத்தின் பொய் முகத்தை அம்பலப்படுத்துவதற்காக ஊடகங்கள் எடுக்கும் முயற்சிகளையும் அவற்றிற்குள் நிகழும் போட்டிகளையும் அரசு இயந்திரத்தின் அடக்குமுறையை எதிர்கொள்வதான தவிப்புகளையும் ஸ்பீல்பெர்க்கின் ‘தி போஸ்ட்’ திரைப்படம் மிக கச்சிதமாகவும் பரபரப்பாகவும் பதிவு செய்திருக்கிறது. வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் ஆசிரியர் குழுவிற்கும் அதன் பதிப்பாளருக்கும் இடையே நிகழும் வாதப் பிரதிவாதங்களை மிக சுவாரசியமாக காட்சிப்படுத்தியிருக்கிறது. அரசாங்கத்தை பகைத்துக் கொண்டு சிக்கலில் மாட்டிக் கொள்வதா அல்லது உண்மையை வெளியிட்டு மக்களிடம் நன்மதிப்பை பெறுவதா என்பது தொடர்பான சிக்கல்களே பெரும்பான்மையான காட்சிகளின் மையமாக இருக்கின்றன. இந்த வரலாற்று நிகழ்வுகளை நம்பகத்தன்மையோடு கூடிய திரைப்படமாக அளித்திருப்பதுதான் ஸ்பீல்பெர்க்கின் மேதமைக்கு சான்று. பலரால் அறியப்பட்ட கடந்த கால வரலாறு என்றாலும் ஒருதுளி கூட சுவாரசியம் குறையாமல் விறுவிறுப்பான அரசியல் திரில்லராக இந்த திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் ஸ்பீல்பெர்க்.

**

வியட்நாமின் போர்க் காட்சிகளோடு திரைப்படம் துவங்குகிறது. அரசு தரப்பில் பார்வையாளராக அமர்த்தப்பட்டிருக்கும் டேனியல் அதன் நிகழ்வுகளை மிக கவனமாக பதிவு செய்கிறார். அமெரிக்கத் துருப்புகளின் மூர்க்கமான தாக்குதல்கள் காரணமாக லட்சக்கணக்கான வியட்நாமியர்கள் மடிகிறார்கள். ரசாயன வெடிகுண்டுகள் ஏற்படுத்தும் பாதிப்பு கரும்புகை போல வியட்நாமைச் சூழ்கிறது. வியட்நாம் மக்கள் படை துணிச்சலாக எதிர்கொள்வதின் காரணமாக அமெரிக்கத் தரப்பிலும் பலத்த சேதம் ஏற்படுகிறது. தோல்வியை ஒப்புக் கொள்ளாத வீறாப்புடன் தொடர்ந்து தனது வீரர்களை அனுப்பிக் கொண்டேயிருக்கிறது அமெரிக்கா.

ராணுவச் செயலாளரான  ராபர்ட் மெக்நமராவிற்கு தாம் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்கிற நிதர்சனம் நன்கு தெரிகிறது. இந்த விஷயத்தை அரசாங்கத்தின் செயலாளருக்கு தெரிவிக்கிறார். சாட்சிக்காக டேனியலையும் அழைக்கிறார். “டேனியல், உண்மையான நிலவரத்தைச் சொல்”. ராபர்ட் சொல்லும் அதே கருத்தையே டேனியலும் பிரதிபலிக்கிறார். போர்க்களத்தில் அவர் கண்ட உண்மையும் அதுவே.

ஆனால் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது ‘அமெரிக்கா வெற்றியை நோக்கி பெருமிதத்துடன் நகர்ந்து கொண்டிருக்கிறது’ என்று உண்மைக்கு மாறான செய்தியை தெரிவிக்கிறார் ராணுவச் செயலாளர். கடந்து செல்லும் டேனியல் அமெரிக்காவின் இந்த இரட்டைநிலையைக் கண்டு மனம் நோகிறார். அரசாங்கத்தால் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஆவணங்களைத் திருடி அவற்றின் முதல் பகுதியை ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழின் மூலம் கசிய விடுகிறார். அதுவொரு தீப்பற்றின நாளாக அமைகிறது. அமெரிக்க அரசு பதறிப் போய் சம்பந்தப்பட்ட பத்திரிகை செய்தியை மேற்கொண்டு வெளியிடாமல் முடக்கி வைக்கிறது.

நியூயார்க் டைம்ஸின் போட்டிப் பத்திரிகையான ‘தி வாஷிங்டன் போஸ்ட்’டின் ஆசிரியர் குழு விரக்தியின் உச்சிக்கே போகிறது. இப்படியொரு முக்கியமான செய்தியை தாம் பிரசுரிக்காமல் அமெரிக்க அதிபர் மகளின் திருமணத்தைப் பற்றி எழுதியிருக்கிறோமே என்று வெறுப்படைகிறார் அதன் ஆசிரியர் பென் பிராட்லீ. டைம்ஸின் செய்தியாளரான நீல் ஷீகன் பல நாட்களாக எதையும் எழுதாமல் இருந்ததைக் கண்டு ‘அவர் ஏதோவொரு முக்கியமான திட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்’ என்று யூகித்த பிராட்லீயின் சந்தேகம் இப்போது உறுதியாகி விட்டது.


போட்டிப் பத்திரிகையின் இந்த வெற்றியை சகிக்க முடியாமல் ‘என்னதான் செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று தமது உதவி ஆசிரியர்களிடம் எரிந்து விழுகிறார். பென் பாக்திகியான் என்கிற துணை ஆசிரியர் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்கிறார். மிக சிரமப்பட்டு டேனியலைத் தேடிக் கண்டுபிடித்து ஆவணங்களின் பிற பகுதிகளை கைப்பற்றுகிறார். பிராட்லீ உற்சாகமாகிறார். ‘வாஷிங்டன் போஸ்ட்’டில் இதைப் பிரசுரிப்பதற்கான பணிகள் மிக ரகசியமாகவும் பரபரப்பாகவும் நிகழ்கின்றன.

ஆனால் இதை பிரசுரிப்பதற்கான அனுமதி அதன் பதிப்பாளரிடமிருந்து கிடைத்தாக வேண்டும். இது தொடர்பான நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றன. வெற்றியை நோக்கிச் செல்லும் கனி கையில் கிடைத்தாலும் அதை ருசிக்க முடியாத தடைகளை பிராட்லீ எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

**

‘வாஷிங்டன் போஸ்ட்’டின் தற்போதைய பதிப்பாளர் கேத்தரின் கிரஹாம். இது அவருடைய தந்தையாரின் பத்திரிகை. அவருடைய மறைவிற்குப் பின்னால் கேத்தரினின் கணவரான ஃபில் கிரஹாம் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். ஆனால் சில காரணங்களால் ஃபில் தற்கொலை செய்து கொள்ள அந்தப் பொறுப்பு கேத்தரீனை வந்து சேர்கிறது. தங்களின் குடும்ப பெருமையாக விளங்கும் பத்திரிகையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஒருபுறம், குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய கடமை ஒருபுறம், அரசாங்கத்தையும்  உயர்மட்ட அளவில் இருக்கும் தன் நண்பர்களையும் பகைத்துக் கொள்ள முடியாத சங்கடம். இந்த எல்லைகளுக்குள் அவரின் தத்தளிப்பு அமைகிறது.

ஆசிரியர் பென் பிராட்லீ ஆவணங்களை சிரமப்பட்டு தேடிப் பிடித்து விட்டாலும் அதைப் பிரசுரிக்கலாமா என்கிற முடிவை நோக்கி நகர்வதில் கேத்தரின் பெரிதும் சிரமப்படுகிறார். பத்திரிகை நிறுவனம் அந்தச் சமயத்தில் நிதி நெருக்கடியில் இருக்கிறது. எனவே தன் நண்பர்களின் ஆலோசனையின் படி பங்குச் சந்தையில் இணைவதற்கான திட்டத்தில் இருக்கிறார். இது போன்ற சூழ்நிலையில் அரசாங்கத்தைப் பகைத்துக் கொள்வது சொந்த செலவில் வைத்துக் கொள்ளும் சூன்யம் போன்றது. நிதியுதவி செய்வதற்கான ஆலோசனையில் ஈடுபடும் வங்கிகளும் கைவிரித்து விடும். இது மட்டுமல்ல, அரசாங்கத்தின் தடையால் பத்திரிகை முடக்கப்பட்டால் அதன் ஊழியர்களின் கதியும் கேள்விக்குறியாகி விடும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் ராணுவச் செயலாளரான ராபர்ட் மெக்நமரா, கேத்தரினின் நெருங்கிய நண்பரும் கூட. இத்தனை நெருக்கடிகளையும் தாண்டி பிரசுர முடிவை கேத்தரின் எடுக்க வேண்டும்.

இந்த முடிவை நோக்கி படம் விறுவிறுப்பாக நகர்கிறது. ஆவணங்களை பிரசுரிக்கும் நிலையில் உறுதியாக நிற்கும் ஆசிரியர் பென் பிராட்லீ, அதன் எதிர்முனையில் தவிக்கும் பதிப்பாளர் கேத்தரீன் ஆகிய  இருவருக்குமான போராட்டங்களுக்கான விடைக்கான கடைசிக்காட்சிகள் திறமையாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

**

ஜாஸ், ஜூராசிக் பார்க், போன்ற பிரம்மாண்ட பொழுதுபோக்குத் திரைப்படங்களை ஒருபுறம் உருவாக்கினாலும், கருப்பினத்தவர்களின் துயரங்களைச் சொல்லும் ‘தி கலர் பீப்பிள்’ போன்ற உன்னதமான திரைப்படங்களையும் ஸ்பீல்பெர்க் இயக்கியுள்ளார். ‘தி போஸ்ட்’ திரைப்படத்தையும் இந்த வரிசையில் இணைக்கலாம். அரசாங்கத்திற்கு எதிரான விஷயங்களை பிரசுரிப்பதற்காக ஊடகங்கள் எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிகளை மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படம், அதே சமயத்தில் செய்திகளை முந்தித் தருவதில் ஊடகங்களுக்கு இடையில் நிகழும் போட்டிகளையும் ஆவணப்படுத்தியிருக்கிறது.

ஸ்பீல்பெர்க்கின் ஆஸ்தான நடிகர்களுள் ஒருவரான டாம் ஹாங்க்ஸ், பத்திரிகை ஆசிரியர் பென் பிராட்லீயாக தனது சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். மேஜையின் மீது கால்களைப் போட்டுக் கொண்டு தனது உதவி ஆசிரியர்களுடன் விவாதிப்பது, “ராபர்ட் மெக்நமரா, உங்களது நண்பர்தானே, அவரிடம் பேசி ஆவணங்களின் பிரதியை வாங்கலாமே” என்று பதிப்பாளருக்கு நெருக்கடி தருவது, செய்தியை வெளியிட்டேயாக வேண்டும் என்கிற தவிப்புடன் ஒவ்வொரு தடையையும் சாமர்த்தியமாகவும் உறுதியாகவும் தாண்டுவது, பத்திரிகை வெளியிடப்படும் கடைசி நிமிடத்தில் கூட ஏற்படும் தடையை பரபரப்புடன் எதிர்கொள்வது என பல காட்சிகளில் அசத்தியுள்ளார்.

பதிப்பாளர் கேத்தரீனாக மெரில் ஸ்ட்ரீப். ஆஸ்கர் விருதிற்காக அதிக முறை நாமினேட் செய்யப்பட்டவர் என்கிற பெருமை இவருக்குண்டு. இத்திரைப்படத்திற்காகவும் ‘சிறந்த நடிகைகக்கான’ பிரிவில் நாமினேட் ஆகியிருந்தார். அவரது பங்களிப்பு மிகச் சிறப்பாகவும் திறமையாகவும் வெளிப்பட்ட படங்களில் ‘தி போஸ்ட்’ முக்கியமானதாக இருக்கும்.

ஒரு பொறுப்புள்ள பதிப்பாளராக இருக்க வேண்டிய அதே சமயத்தில் குடும்ப பாதுகாப்பை கைவிடாத ஜாக்கிரதை, நண்பர்களுக்கு சங்கடம் தர விரும்பாத கண்ணியம், பத்திரிகை தொடர்ந்து இயங்குவதற்கான கவலை என்று பல்முனை தத்தளிப்புகளில் சிக்கித் தவிப்பதை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். நண்பர்களின் ஆலோசனை ஒருபுறம், அரசாங்கத்தின் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய அச்சம் இன்னொருபுறம், இதற்கு நடுவில் பென் பிராட்லீயின் தார்மீகமான கோபம் ஆகியவற்றின் இடைவெளியில் தத்தளிக்கும் தனது பாத்திரத்தை சிறப்பாக கையாண்டுள்ளார் மெரில் ஸ்ட்ரீப். சுயபாதுகாப்பிற்கான முடிவுகளை எடுக்கும் அதே சமயத்தில் உள்ளுக்குள் ஆதாரமாக இயங்கும் அறவுணர்வு காரணமாக ஆவணங்களை பிரசுரிப்பதற்கான முடிவை எடுக்கும் இறுதிக் காட்சியில் இவரது நடிப்பு கச்சிதமாக வெளிப்பட்டுள்ளது. துணையாசிரியாக நடித்திருக்கும் பாப் ஓடன்கிர்க்கின் பங்களிப்பும் சிறப்பானது.

ஸ்பீல்பெர்க்கின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஜான் வில்லியம்ஸ், வழக்கம் போல் தன்னுடைய உன்னதமான இசையைத் தந்துள்ளார். மிக குறிப்பாக பத்திரிகை அச்சாகும் இறுதிக்காட்சியில் இவர் உருவாக்கியிருக்கும் இசை, அந்தக் காட்சியின் பரபரப்பை பார்வையாளர்களுக்கு கச்சிதமாக கடத்தியுள்ளது. Janusz Kamiński-ன் அபாரமான ஒளிப்பதிவையும் பிரத்யேகமாக குறிப்பிட வேண்டும். நீதிமன்றக் காட்சிகளில் காமிராவின் அசைவுகள் அதன் தன்மைக்கேற்ப சிறப்பாக அமைந்திருப்பதை உதாரணமாக சொல்லலாம்.

**


இந்த திரைப்படம் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தாலும் இதன் மீதான சர்ச்சைகளும் இல்லாமல் இல்லை. ரகசிய ஆவணங்களை சிரமப்பட்டு தேடித் தொகுத்து முதலில் வெளியிடுவது ‘நியூயார்க் டைம்ஸ்” பத்திரிகைதான். அதன் பிறகே ‘வாஷிங்டன் போஸ்ட்”  விழித்துக் கொள்கிறது அரசாங்கத்தின் தடை காரணமாக போட்டிப் பத்திரிகை செய்திகளை வெளியிட முடியாத சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது ‘வாஷிங்டன் போஸ்ட்’. ஆனால் இந்த திரைப்படத்தில் இந்தப் பத்திரிகைக்குத்தான் பிரதான இடம் தரப்பட்டுள்ளது. இந்தப் பத்திரிகையின் உயர் மட்டத்தில் நிகழும் சிக்கல்கள் தொடர்பான காட்சிகள்தான் பிரதானமாக பதிவாகியுள்ளது. இந்த சர்ச்சையை முதலில் வெளிப்படுத்திய ‘நியூயார்க் டைம்ஸின்’ பங்களிப்பு சாதாரணமாகவே இடம்பெற்றுள்ளது. அந்தக் காலக்கட்டத்தில் ‘நியூயார்க் டைம்ஸில்’ பணிபுரிந்த ஆசிரியர் குழுவும் இது சார்ந்த அதிருப்திகளை வெளிப்படுத்தியுள்ளது. ‘இந்த திரைப்படம் சிறப்பான உருவாக்கத்தில் அமைந்திருந்தாலும் எங்களின் முக்கியத்துவத்தை குறைத்து காட்சிப்படுத்தியிருப்பதின் மூலம் அதன் நம்பகத்தன்மையை இழந்திருக்கிறது” என்று புகார் கூறியுள்ளனர்.

ஓர் அரசாங்கத்தின் முறைகேட்டை, அந்த நாட்டைச் சேர்ந்த பத்திரிகையே வெளிப்படுத்துவது என்பது ஏறத்தாழ தற்கொலைக்கு ஈடானது. கடுமையான அடக்குமுறைகள் கொண்ட நாடுகளில் மட்டுமல்ல, ஊடக சுதந்திரமும் சகிப்புத்தன்மையும் உள்ளதாக கூறப்படும் அமெரிக்கா போன்ற தேசங்களிலும் இதுதான் நிலைமை என்கிற நிதர்சனத்தை இத்திரைப்படத்தை பட்டவர்த்தனமாக போட்டுடைக்கிறது. “ஊடகங்கள் தேசத்தை ஆள்பவர்களுக்காக  அல்ல, தேச நலனிற்காகத்தான் செயல்பட வேண்டும்’ என்று நீதிமன்ற தீர்ப்பில் கூறப்படும் வாசகம் மிக உண்மையானது. ஒரு சாமானியனின் கடைசி அடைக்கலமாக நீதித்துறையின் மீது உருவாகும் நம்பிக்கைகளை, இது போன்ற தீர்ப்புகள்தான் உறுதிப்படுத்துகின்றன.

வழக்கு தொடர்பான விசாரணைக்காக பதிப்பாளர் கேத்தரின் நீதிமன்றத்திற்குள் நுழைகிறார். அவரை இடைமறித்து சிறப்பு நுழைவின் வழியாக அழைத்துச் செல்லும் ஒரு பெண், கேத்தரினிடம் ரகசியமாக சொல்கிறாள். “உங்கள் வழக்கு வெற்றி பெற வேண்டும். எனது சகோதரன் இந்தப் போரில் பணிபுரிவதற்காக அனுப்பப்பட்டுள்ளான்” அவள் அரசுத்துறை சார்ந்த ஊழியை என்பதால் இதை ரகசியமாகத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. அவரைப் போன்ற சாமானியர்களின் குரலை ஊடகங்கள் பிரதிபலிக்க வேண்டிய அவசியத்தை இத்திரைப்படம் மிகச் சிறப்பாக வலியுறுத்துகிறது. அந்த வகையில் சமீபத்தில் உருவாகியுள்ள மிகத் தரமான திரைப்படம் என்று ‘தி போஸ்ட்’டை உத்தரவாதமாக சொல்லலாம்.

அரசு தரப்பிலான உயர்மட்ட அளவில் நிகழும் ஊழல்களுக்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பாக, ஆயுத பேர ஊழலில் ஒரு முன்னாள் பிரதமரின் பெயரும் பலமாக அடிபட்டது. இது தொடர்பான ஆவணங்களை ஓர் ஆங்கில தேசியப்பத்திரிகைதான் முதன்முதலில் வெளியிட்டது. இந்த முடிவை எட்டுவதற்காக ஆசிரியர் குழுவில் ஏற்பட்ட மோதல்களும் பின்னால் அறியப்பட்டன. ‘தி போஸ்ட்’டைப் போலவே இதுவும் திரைப்படமாக ஆவதற்கான சரியான கச்சாப் பொருள். அப்படியொரு முயற்சி இங்கு சாத்தியமா? ஆனால் அப்படியொரு திரைப்படம் இங்கும் உருவாக வேண்டியதின் அவசியத்தை ‘தி போஸ்ட்’ நமக்கு உணர்த்துகிறது.


(குமுதம் தீராநதி -  மே 2018 இதழில் பிரசுரமானது)

suresh kannan

Thursday, October 24, 2019

Tulip Fever | 2017 | United States, U.K. | இயக்குநர் - Justin Chadwick





அயல் திரை  -2

“ஒரு துலிப் மலரின் துயரம்”


ஹாலிவுட் என்றல்ல, உலகெங்கிலுமே மிகச் சிறந்த திரைப்படங்கள் என்று அறியப்பட்டவை, ஏற்கெனவே எழுதப்பட்ட நாவல்களிலிருந்துதான் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த திரைப்படமும் Deborah Moggach என்கிற பிரிட்டிஷ் நாவலாசிரியை எழுதிய, இதே தலைப்பில் அமைந்த நாவலில் இருந்துதான் உருவானது. காவியத்தன்மை படிந்திருக்கும் இந்த திரைப்படத்தில் ஆணாதிக்க உலகில் ஒரு பெண் பகடைக்காயாக சிக்கி அல்லலுறும் துயரம் மிக அழுத்தமாக பதிவாகியுள்ளது. பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்னமும் கூட மறையாத இந்த அவல நிலைக்கு ஒரு வரலாற்று சாட்சியமாக உருவாகியுள்ள திரைப்படம் இது.

**

17ம் நூற்றாண்டு. நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டெர்டாம் நகரம். அனாதை இல்லத்தில் வளர்ந்த சோபியா என்கிற இளம்பெண், கார்னெலிஸ் என்கிற நடுத்தர வயதைத் தாண்டிய ஒருவருக்கு மணம் முடித்து தரப்படுகிறாள். இந்த திருமணத்தின் மூலம் அவளுடைய இளைய சகோதரிகளுக்கு நல்வாழ்க்கை அமையும் காரணத்தினால் அவள் இந்த தியாகத்தை மனவிருப்பமின்றி ஏற்றுக் கொள்கிறாள்.

தனக்கொரு ஆண் வாரிசு வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காகவே இந்த திருமணத்தை கார்னெலிஸ் செய்து கொள்கிறார். முழுதும் ஒத்துழைக்காத தன்னுடைய ‘படைவீரனை’க் கொண்டு இதற்காக முயற்சித்துக் கொண்டேயிருக்கிறார். சோஃபியா மீது தன்னிச்சையான அன்பு உருவாக அவரது குற்றவுணர்ச்சியே ஒருவகையில் காரணமாக இருக்கிறது. அவருடைய முன்னாள் மனைவியின் பிரசவத்தின் போது, வாரிசு உற்பத்தி மீதான ஆவேசத்தில் ‘எப்படியாவது குழந்தையைக் காப்பாற்றி விடுங்கள்’ என்று மருத்துவரிடம் கூறி விடுகிறார். ஆனால் தாயும் குழந்தையும் இறந்து விடுகிறார்கள். இது சார்ந்த குற்றவுணர்ச்சி அவரை அலைக்கழிக்கிறது. இதுவே சோஃபியா மீது பரிவு காட்டுவதற்கான காரணமாகவும் அமைகிறது. விருப்பமில்லாத, திருப்தியில்லாத மணவாழ்வை வேறு வழியின்றி சகித்துக் கொள்கிறாள் சோஃபியா.

குடும்ப பெருமையை பதிவு செய்யவும் தன் புது மனைவியின் அழகைப் பற்றி வெளியில் பீற்றிக் கொள்ளவும் ஓர் இளம் ஓவியரை வரவழைக்கிறார் கார்னெலிஸ். அந்த நகரத்திலுள்ள மிகச்சிறந்த ஓவியர்களுள் ஒருவனான ஜேன், முதற்பார்வையிலேயே சோஃபியாவின் அழகால் புயல் போல தாக்கப்படுகிறான். ‘இந்த ஓவியன் வேண்டாம், வேறு எவரையாவது அமர்த்துங்கள்’ என்று ஜேனை முதலில் நிராகரிக்கும் சோஃபியா, பின்பு அவனையே மீண்டும் வரச் சொல்கிறாள். இளைஞனான ஜேனின் வருகை அவளுக்குள்ளும் சலனத்தை ஏற்படுத்துகிறது. இருவருக்குள்ளும் தன்னிச்சையான அன்பு உருவாகிறது. பிறகு ஏற்படும் ரகசிய சந்திப்புகளின் மூலம் ஒருவரையொருவர் ஆவேசமாக அறிந்து கொள்கிறார்கள். கார்னெலிஸிக்கு இது தெரியவந்தால் சோஃபியாவின் உயிருக்கு நிச்சயம் ஆபத்து ஏற்படும் சூழலும் இருக்கிறது.

சோஃபியாவின் பணிப்பெண்ணாக இருப்பவர் மரியா. இவளைத் தன் சகோதரியாகவே பாவிக்கிறாள் சோஃபியா. மரியாவிற்கு வில்லியம் என்கிற ரகசிய காதலன் உண்டு. மீன் வியாபாரியான அவனின் மூலம் தன் வளமான எதிர்காலம் உருவாகப் போகிறது என்கிற கனவில் இருப்பவள் மரியா. வில்லியமும் மரியாவின் மீது மிகப் பிரியமாக இருக்கிறான். இவர்களின் சந்திப்புகளும் கூடல்களும் ஒருபுறம் தொடர்கின்றன.

**

அக்காலக்கட்டத்து நெதர்லாந்தில் துலிப் மலர்களின் மீதான வணிகமும் அதன் மீதான சூதாட்டமும் வெறியும் உச்சத்தில் இருந்தது. மேற்கிலிருந்து அறிமுகமாயிருந்த துலிப் மலர்க்குமிழிகளின் விலை விண்ணைத் தொட்டது. அதிலும் அரிய வகை குமிழ்கள் ஒருவரின் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப் போடும் மதிப்பு வாய்ந்ததாக இருந்தது. இது சார்ந்த ஊகப் பேரங்களும் பேராசையுடன் கூடிய கனவுகளும் நகரெங்கும் பெருகி வழிந்தன. விண்ணளவு உயர்ந்து திடீரென்று சரிந்த இந்தப் பொருளியல் நிகழ்வு, வரலாற்றில் முதலாவதாகப் பதிவுசெய்யப்பட்ட ஊக வணிகப் "பொருளியல் குமிழி" எனக் கருதப்படுகிறது.

பணிப்பெண் மரியாவின் காதலனான வில்லியம், ஒரு தரகனின் பேச்சை நம்பி தன்னுடைய வாழ்நாள் சேமிப்பை துலிப் மலர் வணிகத்தில் முதலீடாக இடுகிறான். ஓர் அதிர்ஷ்ட வெற்றி கிடைத்தால் அதன் மூலம் மரியாவுடன் வளமான வாழ்க்கையை வாழ முடியும் என்பது அவனுடைய திட்டம். அதற்கேற்ப அரிய வகை மலர்க்குமிழ் கிடைக்கும் அதிர்ஷ்டம் அவனுக்கு அடிப்பதால் எதிர்பார்த்தபடியே பெரும்பணம் கிடைக்கிறது. இந்தச் செய்தியை தெரிவிக்க மிக ஆவலாக மரியாவைத் தேடி ஓடி வருகிறான்.

தன் காதலன் ஜேனைச் சந்திக்க மரியாவின் உடையை எடுத்து அணிந்து கொண்டு கிளர்ச்சியும் ஆவேசமுமாக ஓடுகிறாள் சோஃபியா. மரியா என நினைத்து இவளைப் பின்தொடரும் வில்லியம், எவனோ ஒரு ஆடவனுடன் ‘மரியா’வின் சந்திப்பு நிகழ்வதைக் கண்டு மனம் வெதும்புகிறான். தீர விசாரிக்கும் பொறுமையைில்லாமல் கழிவிரக்கத்தில் குடி விடுதியை நாடுகிறான். அங்குள்ள ஒரு வேசையின் தந்திரத்தால் தன் அதிர்ஷ்டப் பணத்தை இழக்கிறான். இது தொடர்பான தகராறு காரணமாக, வலுக்கட்டாயமாக கப்பல் படையில் சேர்க்கப்பட்டு அந்த நகரை விட்டு அப்புறப்படுத்தப்படுகிறான். இந்தப் பின்னணி விவரங்களை அறியாத மரியா, வில்லியமின் வருகையைக் காணாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள்.

**

சோஃபியா முதலாளியாகவும் மரியா பணிப்பெண்ணாக இருந்தாலும் பெண் என்கிற நோக்கில் அவர்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியான சிக்கலில் தவிக்கிறார்கள். வாழ்வின் தற்செயல்களும் அசந்தர்ப்பங்களும் அவர்களின் வாழ்வை புயல் நுழைந்த கடற்கரை போல தாக்கத் துவங்குகிறது.

சோஃபியா – ஜேனின் ரகசிய சந்திப்புகள் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்க, வில்லியமுடன் பழகிய காரணத்தால் மரியா கர்ப்பமுறுகிறாள். திருமணத்திற்கு முந்தைய கர்ப்பத்தை தன் முதலாளி கார்னெலிஸ் அறிந்தால் தன் பணி பறிபோகுமென அச்சப்படுகிறாள் மரியா. அவளைத் தேற்றும் சோஃபியா, அதிலிருந்து தப்பிக்க ஓர் உபாயத்தைச் சொல்கிறாள். ஒருவகையில் அவளுக்கான நலனும் அடங்கியிருக்கிற திட்டம் அது.

அதன்படி சோஃபியா கர்ப்பமுற்றிருப்பதாக நடிப்பாள், மரியா அவளுக்கு உதவுவதாக. இதன் மூலம் ஒருபக்கம் மரியா தப்பிக்க முடியும். தனக்கான வாரிசை மிக ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் கார்னெலிஸின் விருப்பமும் நிறைவேறும். இந்தச் சதிக்கு மருத்துவரும் இணங்குகிறார். மருத்துவ சோதனை என்கிற பெயரில் அவர் ஒருமுறை சோஃபியாவிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றதற்காக தரும் விலை இது. கார்னெலிஸ் கண்டுபிடிக்க முடியாதவாறு தங்களின் திட்டத்தை இருவரும் திறம்பட நிகழ்த்துகிறார்கள். தங்களின் குருதியிலிருந்து மட்டும் உருவாகும் வாரிசுகளுக்காக பெண்ணுலகத்தை ஆட்டிப் படைக்கும்  மமதையில் இருக்கும் ஆண்களை இரு எளிய பெண்கள் பழிப்புக் காட்டும் நகைச்சுவை இது.


இதற்கிடையில் ஓவியனான ஜேனும் துலிப் மலர் வணிகத்தால் ஈர்க்கப்படுகிறான். சோஃபியாவுடன் எங்காவது சென்று வாழ வேண்டும் என்பது அவனுடைய விருப்பம். இதற்காக தேவாலயத்தில் வளரும் மலர்க்குமிழ்களை திருட முயன்று தலைமை கன்னியாஸ்திரியிடம் பிடிபடுகிறான். தன் நிலையை அவளிடம் உருக்கமாக கூற, ஜேன் வணிகம் செய்ய அவர் உதவுகிறார். மது விடுதியில் நிகழ்ந்த சச்சரவால் வெளியேற்றப்பட்டிருந்த வில்லியமின் மலர்கள்தான் இவனுக்கும் அதிர்ஷ்டத்தை கொண்டு வருகின்றன. கூடவே துரதிர்ஷ்டத்தையும். அரிய மலர்க்குமிழி கிடைத்த நேரத்தில் அதன் வணிகமும் சூதாட்டமும் சரிந்து வீழ்கிறது. எவருமே இதை வாங்கத் தயாராக இல்லை. ஜேன் உருக்கமானதொரு உரையை கூட்டத்தின் முன் நிகழ்த்துகிறான்.

முன்னர் வில்லியமை ஏமாற்றி பணம் பிடுங்கிய வேசையொருத்தி, ஜேனின் நிலையைக் கண்டு அனுதாபப்பட்டு முதல் விலையைக் கேட்கிறாள். பிறகு மற்றவர்களும் இந்த ஏலத்தில் உற்சாகமாக கலந்து கொள்கிறார்கள். ஜேனுக்கு பெரும்பணம் கிடைக்கப் போகும் செய்தியை அறியும் அவனுடைய கடன்காரர்கள் வீட்டைச் சூழ்ந்து கொள்கிறார்கள். அவனால் வெளியில் செல்ல இயலாத நிலை. எனவே மலர்க்குமிழ்களை எடுத்துவர தன்னுடைய நண்பனை அனுப்புகிறான். ஆனால் அவனொரு குடிகாரன். எனவே எச்சரித்து அனுப்புகிறான் ‘வழியில் எங்கும் வேடிக்கை பார்க்காதே. முக்கியமாக குடிக்காதே’.

செல்லும் வேலையை முடித்து திரும்பும் நண்பன் வழியில் நிகழும் ஒரு சில்லறைத் தகராறில் உற்சாகமாக ஈடுபடுகிறான். அந்த வெற்றியைக் கொண்டாட நண்பர்கள் அழைக்க குடிவிருந்தில் கலந்து கொள்கிறான். அதை முடித்து விட்டு திரும்பும் அவனை ஜேன் ஆவலுடன் வரவேற்கிறான். நண்பன் கொண்டு வருவதில் அரியவகை மலர்க்குமிழ் இருப்பதில்லை. “அடப்பாவி, எங்கேடா அது?” என்று பதட்டத்தின் உச்சிக்கே செல்கிறான் ஜேன். “அது வெங்காயம்தானே, நான் தின்று விட்டேன்” என்று அப்பாவித்தனமாக சொல்கிறான் நண்பன். விலைமதிப்புள்ள அரிய வகை மலர்க்குமிழ் அது. இருக்கிற பணத்தைப் பிடுங்கிய கடன்காரர்கள் எச்சரித்தபடி விலக தலையில் கைவைத்து அமர்ந்து விடுகிறான் ஜேன்.

**

சோஃபியாவின் இல்லத்தில் பிரசவ நாடகம் அதன் உச்சத்தை எட்டுகிறது. பணிப்பெண் மரியாவிற்கு பிரவச வலி எடுக்கிறது. ஆனால் தான் அந்த வலியில் கதறுவதான நாடகத்தை திறமையாக நடத்துகிறாள் சோஃபியா. மருத்துவரும் உடன்படுகிறார். அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. பிரசவத்தில் சோஃபியா இறந்து விடுவது போன்ற நாடகத்தை ஏற்படுத்துகிறார்கள். இதன் மூலம் அவள் தன்னுடைய காதலனுடன் ஊரை விட்டுச் சென்று விட முடியும். அவள் உயிருடன் இருப்பதாக தெரிந்தால் கணவனான கார்னெலிஸ் எப்படியும் துரத்திக் கொல்லுவான் என்பதால் இந்த மரண நாடகம்.

மிகத் திறமையாக வடிவமைக்கப்பட்ட இந்த நாடகத்தின் படி சோஃபியா சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டு கார்னெலிஸ் கண்முன்னால் அப்புறப்படுத்தப்படுகிறாள். தன் மனைவிக்கு இறுதி முத்தம் தர நெருங்கும் கணவனை, ‘சவத்தை நெருங்கினால் தொற்றுநோய் பரவி விடும்’ என்று பயமுறுத்தி தடுத்து விடுகிறார் மருத்துவர். தன்னுடைய திட்டத்தில் வெற்றி பெற்ற சோஃபியாவால் அந்த மகிழ்ச்சியை முழுமையாக ருசிக்க முடியவில்லை. கணவரை ஏமாற்றிய குற்றவுணர்வு வாட்டுகிறது. பிரசவ நாடகத்தின் போது ஆவேசமாக உள்ளே நுழைய முயலும் கணவர், ‘குழந்தை பிறக்காவிட்டாலும் பரவாயில்லை. என் மனைவியை எப்படியாவது காப்பாற்றி விடுங்கள்’ என்று மருத்துவரிடம் உருக்கமாக கதறிய காட்சி வேறு அவளுடைய நினைவில் வந்து கொண்டிருக்கிறது.

திட்டத்தின் படி ஜேனிடம் செலவதற்குப் பதிலாக தன்னுடைய வீட்டிற்கு விரைந்து சென்று ஒளிந்து நின்று பார்க்கிறாள். புதிதாகப் பிறந்த குழந்தையை கணவர் கார்னெலிஸ் பாசத்துடன் கொஞ்சிக் கொண்டிருக்கும் காட்சி அவளுடைய குற்றவுணர்வை அதிகப்படுத்துகிறது. மனஉளைச்சல் தாங்காமல் தன் மேலாடையை ஆற்றில் வீசி விட்டு தற்கொலை உத்தேசத்துடன் கடற்கரையை நோக்கி விரைகிறாள். கடன்காரர்களிடமிருந்து தப்பித்து வரும் ஜேன், ஆற்றில் மிதக்கும் சோஃபியாவின் ஆடையைப் பார்த்து விட்டு அவள் தற்கொலை செய்து கொண்டாள் என நினைத்து மனம் உடைகிறான்.

சோஃபியாவின் இல்லத்தில் இன்னொரு வகையான உச்சக்காட்சி நடைபெறுகிறது. மரியாவின் காதலன் வில்லியம் ஊர் திரும்புகிறான். குழந்தையுடன் இருக்கும் மரியாவைப் பார்த்து சந்தேகமுறுகிறான். அவர்களுக்குள் சச்சரவு ஏற்படுகிறது. “என் அன்புள்ள மடையனே, இது நம் குழந்தை. என்னுடைய உடையில் நீ பார்த்தது என் எஜமானியம்மாள். இந்த நகரிலுள்ள ஓவியனுடன் அவளுக்குத் தொடர்பிருந்தது” என்று உரத்த குரலில் வாக்குவாதம் செய்கிறாள் மரியா

இதை தற்செயலாக கேட்கும் கார்னெலிஸ், கோபப்படுவதற்கு மாறாக மனம் உடைந்து போகிறான். தன்னுடைய வாரிசு வெறியும், அதன் மூலம் அழிந்த ஓர் இளம்பெண்ணும் வாழ்வையும் நினைத்து துயரமடைகிறான். தன்னுடைய வீடு உட்பட அனைத்துச் சொத்துக்களையும் மரியாவிடம் ஒப்படைத்து விட்டு கண்காணாமல் சென்று விடுகிறான். “இது சோஃபியாவின் குழந்தையாகவே இருக்கட்டும். என் குடும்பப் பெருமையைக் காப்பாற்று” என்கிற வேண்டுகோளை மரியாவிடம் முன்வைக்கிறான். அந்த வேண்டுகோளை ஏற்று தன் குழந்தையாக இருந்தாலும் முதலாளி குடும்பத்தின் குழந்தையாகவே வளர்க்கிறாள் மரியா.

துலிப் மலர்களின் மீதான வணிகமும் சூதாட்டமும் முற்றிலுமாக சரிந்து வீழ்கிறது. ஓர் அபத்த நாடகத்தின் முடிவு போல சந்தை வெறிச்சோடிக் கிடக்கிறது. வணிகப் பத்திரங்கள் ஏலக்கூடம் முழுவதும் கேட்பாறின்றி பறந்து கிடக்கின்றன. இதில் முதலீடு செய்த அப்பாவிகளும் பேராசைக்காரர்களும் பித்துப் பிடித்தவர்கள் போல அமர்ந்திருக்கிறார்கள்.

சில வருடங்களுக்குப் பிறகு ஜேன் அந்த நகருக்கு திரும்பி வருகிறான். அவனுடைய இருப்பிடத்தின் பெரும்பான்மையும் அழிந்து விட்டிருக்கிறது. ஆனால் அவன் வரைந்த ஓவியங்கள் இன்னமும் உயிர்ப்போடு உள்ளன. குறிப்பாக அவன் ரசித்து ரசித்து வரைந்த சோஃபியாவின் ஓவியங்கள் இன்னமும் அதன் ஜீவனோடு அவர்களுடைய காதலின் அழியா சாட்சியமாக நிற்கின்றன. தேவாலயத்தில் ஓவியங்களைப் புதுப்பிக்கும் பணி அவனுக்கு கிடைக்கிறது. கன்னியாஸ்திரிகளில் ஒருவராக சோஃபியாவை அவன் காணும் காட்சியோடு படம் நிறைவடைகிறது.

**

பணிப்பெண் மரியாவின் மூலமாக, அவளுடைய பின்னணிக் குரலில் விரியும் இந்த திரைக்கதையில் பதினாறாம் நூற்றாண்டின் பின்புலம் திறமையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்ஜெட் காரணமாக சில பின்னணி இடங்கள்  திரும்பத் திரும்ப வந்தாலும் ஒருகணமும் சலிப்பேறாதவாறு சுவாரசியமான திரைக்கதையை உருவாக்கியுள்ளனர்.

வாழ்வெனும் சதுரங்க விளையாட்டில் சில அபத்தமான நகர்வுகள் எப்படி ஒரு மனிதனின் வெற்றிக்கும் வீழ்ச்சிக்கும் மாறி மாறி காரணமாக இருக்கின்றன என்பதை இத்திரைப்படத்தில் பல இடங்களில் உணர முடிகிறது. துலிப் மலர் வணிகத்தின் மீதான சூதாட்டத்தைப் போலவே, ஆண்களின் உலகில் பெண்களை வைத்து ஆடும் சூதாட்டம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. தனக்கேற்ற இணையுடன் இனிமையான வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டிய சோஃபியா, வறுமை காரணமாக வயதில் மூத்தவரிடம் இரண்டாம் மனைவியாக வந்து சேர வேண்டியிருக்கிறது. காமம் சார்ந்த மன தத்தளிப்பை எதிர்கொள்ள இயலாமல் ஓர் இளைஞனிடம் ரகசிய உறவை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் அந்த இலக்கையும் முழுமையாக அடைய முடியாமல் சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் மதிப்பீடுகளின் மீதான குற்றவுணர்வு காரணமாக மரணத்தை நோக்கி நகர வேண்டியிருக்கிறது.

மரியாவின் உடையை சோஃபியா அணிந்திருக்கிறாள் என்கிற எளிய உண்மையை அறியாத வில்லியம், அந்த வெறுப்பில் குடிவிடுதிக்குச் சென்று தன் எதிர்கால வாழ்விற்கான பணத்தை இழக்கிறான். குடிகார நண்பன் முட்டாள்தனத்தினால் செய்யும் பிழைக்காக கடன்காரர்களிடம் சிக்கித் தவிக்கிறான் ஜேன். அவனுடைய எதிர்காலமும் மகிழ்ச்சிகரமானதாக இல்லை. ‘வாரிசு வெறி’யில் ஓர் இளம் பெண்ணின் வாழ்வைச் சூறையாடிய கார்னெலிஸ் இறுதியில் எதுவுமேயின்றி காணாமல் போகிறான். நாம் விரும்பியோடும் இடத்திற்கு அல்லாமல் அதன் எதிர்திசைக்கு அடித்துச் செல்லும் விதியின் சூதாட்டமே இறுதியில் வெல்கிறது.

நெருங்கிய நட்பாக இருந்தாலும் அசந்தர்ப்பமான சூழலில் மனிதர்கள் சட்டென்று நிறம் மாறும் உதாரணக் காட்சியும் இருக்கிறது. மரியா பணிப்பெண்ணாக இருந்தாலும் அவளைத் தன் சகோதரி போலவே பிரியத்துடன் பாவிக்கிறாள் சோஃபியா. மரியா கர்ப்பமுற்றதை அறிந்ததும் ஆறுதல் சொல்கிறாள்.  அவளை விடுவிப்பதற்கான உபாயத்தையும் தாமே முன்வந்து சொல்கிறாள். ஆனால், தன்னுடைய பணியை இழந்து விடுவோமோ என்கிற அச்சத்தில் சோஃபியாவை மிரட்டத் துணிகிறாள் மரியா. “எனக்கு நீ உதவவில்லையென்றால் ஓவியனுடன் உனக்குள்ள தொடர்பை உன் கணவனிடம் சொல்லி விடுவேன்’ என்று அச்சுறுத்துகிறாள்.

**

சோஃபியாவாக Alicia Vikander தன்னுடைய மிகச்சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். வறுமை காரணமாக ‘வாரிசை உருவாக்கித் தரும் இயந்திரமாக’ தாம் மாற்றப்பட்ட விதியையும், நிறைவேறாத பாலுணர்ச்சி சார்ந்த தவிப்பையும், ஜேன் மீது உருவாகும் காதலை தடுக்க முடியாத கொந்தளிப்பையும், கற்பிற்கும் காதலுக்கும் இடையேயான தத்தளிப்பையும் கச்சிதமான நடிப்பின் மூலம் உணர்த்தியுள்ளார். நடிப்பு ராட்சசனான Christoph Waltz, கார்னெலிஸ் பாத்திரத்தில் அசத்தியுள்ளார். ‘என் இளம் வீரன் இன்று தயாராகவுள்ளான்’ என்று குதூகலமாக தயாராவதும் அந்த இயலாமையை மெளனமாக விழுங்குவதும் என இவரின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது.  இறுதியில் சோஃபியாவின் துரோகத்தை மிக முதிர்ச்சியாக இவர் எதிர்கொள்வது சிறப்பான காட்சிகளுள் ஒன்று. ஜேன் –ஆக நடித்திருக்கும் Dane DeHaan-ன் பங்களிப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது.

Eigil Bryld-ன் அட்டகாசமான ஒளிப்பதிவில் பெரும்பான்மையான காட்சிகள் ஓவியத்திற்கு நிகரான உள்ளன. குறிப்பாக கடற்கரையில் சோஃபியா உலவும் தொலைதூரக் கோணக் காட்சிகள் உள்ளிட்டு பல காட்சிகள் உன்னதமான உணர்வுகளை பார்வையாளர்களுக்கு கடத்துவதாக அமைந்துள்ளன. ஜேனும் சோஃபியாவும் உடல்களின் மூலம் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும் காட்சிகள் அதன் erotic தன்மையின் அழகியலோடும், கண்ணியத்தின் எல்லைக்குள்ளும் அமைந்துள்ளன. Mandela: Long Walk to Freedom போன்ற சிறந்த படங்களை இயக்கியுள்ள Justin Chadwick இந்த திரைப்படத்தை மிக அற்புதமாக இயக்கியுள்ளார்.

மலர் வணிகம் மீதான சூதாட்டத்தைப் போலவே சோஃபியாவின் வாழ்வும் ஆண்கள் உலக சூதாட்டத்தில் அலையுறுதலே இத்திரைப்படத்தின் மையம் எனலாம்.

(குமுதம் தீராநதி -  மார்ச் 2018 இதழில் பிரசுரமானது) 

 
suresh kannan

Tuesday, October 22, 2019

Hostages | 2017 | ஜார்ஜியா, ருஷ்யா | இயக்குநர் - Rezo Gigineishvili



அயல் திரை -1

“அவர்களுக்கு என்னதான் வேண்டும்?”


பின்தங்கிய மற்றும் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளிலுள்ள இளம்தலைமுறையினருக்கு எப்போதுமே ஒரு தீராத கனவு இருந்து கொண்டே இருக்கும். எப்பாடுபட்டாவது அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் தன்னுடைய வருங்காலத்தை அமைத்துக் கொள்ள முடியாதா என்கிற ஏக்கம்தான் அது. எளிதில் கிட்டாத அந்த சொர்க்க பூமியை எட்டி அடைந்தே தீர வேண்டுமென்கிற தவிப்பு அவர்களின் உரையாடல்களிலும், திட்டமிடல்களிலும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.



அமெரிக்காவிற்கு ஒருமுறை சென்று திரும்பியிருப்பதே பெருமிதமான நிகழ்வாக எண்பதுகளில் கருதப்பட்டது. உலகமயமாக்கத்தின் விளைவாக பொருளியல் மாற்றங்கள் கணிசமாக வளர்ந்து விட்ட இன்றைய சூழலிலும் கூட நடுத்தர வர்க்க இந்தியர்களுக்கு அமெரிக்கா போன்ற நாடுகள் கனவுப் பிரதேசங்களாக இருக்கின்றன. தங்களின் ஆசைகள் நிறைவேறாத மூத்த தலைமுறையினர் இளம் தலைமுறையினருக்கு இந்தக் கனவை சிறுவயது முதலே ஊட்டி அதற்கேற்ப திட்டமிட்டு வளர்க்கின்றனர். மூன்றாம் உலக நாடுகளில் தாம் அடைய முடியாத பல அன்றாட வசதிகளை தங்களின் வாரிசுகள் அடைய வேண்டுமென்று பெற்றோர்கள் விரும்புகின்றனர்.



பெரியவர்களின் நோக்கு இப்படி இருக்கிறதென்றால், நுகர்வுக்கலாசாரத்தின் பளபளப்பு, கட்டற்ற சுதந்திரம், பாலியல் சார்ந்த விருப்புகள், தனிநபர் ஏக்கங்கள், பொருளாதார வாய்ப்புகள் போன்றவை இளைஞர்களின் கனவாக இருக்கின்றன. அதுவொரு கானல்நீர் என்கிற தெளிவு சில சதவீதத்தினருக்கே இருக்கிறது. கலாசார இழப்பு, சொந்த அடையாளத்தை தொலைத்தல், தம்முடைய வேர்களில் இருந்து துண்டிக்கப்படுதல் போன்ற அபாயங்களை உணர்ந்தவர்கள் மிகச்சிலரே.



தாங்கள் பிறந்து வளர்ந்த தேசத்தின் வரலாறு, அதன் முன்னோடிகளின் தியாகம் போன்றவை செய்தியாகவோ, ஆதாரமான உணர்வாகவோ கூட பெரும்பாலான இளம் தலைமுறையினருக்கு இருப்பதில்லை. தங்களின் கலாசார வேர்களைத் துண்டித்துக் கொண்டு லெளகீக வாழ்வின் அற்பமான சுகங்களுக்காக அடையாளமில்லாத முகங்களாக வாழவும் தங்களின் நகல்களை அடையாளச் சிக்கல் சார்ந்த குழப்பங்களுடன் அங்கே உருவாக்கவும் தயாராக இருக்கிறார்கள்.



இந்த மனோநிலையைக் கொண்ட இளைஞர்கள் குழு ஒன்றைப் பற்றியும் தங்களின் ‘விடுதலைக்காக’, அவர்கள் எடுக்கும் ஆபத்தான முடிவைப் பற்றியும் இந்த திரைப்படம் மிக நுட்பமாக உரையாடுகிறது. உண்மைச் சம்பவத்தின் மீதான படைப்பு.



**



வருடம் 1983. சோவியத் யூனியன் பிளவுபடாதிருந்த காலக்கட்டம். அந்த இளைஞர்கள் ஜார்ஜியாவின் உயர்வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவன் குழந்தை நட்சத்திரமாக இருந்து வளர்ந்த அறியப்பட்ட நடிகன். இன்னொருவன் மருத்துவன். இப்படி ஒவ்வொருவருமே வசதியான, கண்ணியமான குடும்பத்தைச் சார்ந்தவர்கள். வாழ்க்கையின் அடிப்படை வசதிகள் அனைத்தையும் பெற்றவர்கள். என்றாலும் அவர்களால் உணர முடியாத விஷயம் ஒன்றிருந்தது. – அது சுதந்திரம்.



கம்யூனிசக் கதவுகளால் சோவியத் யூனியன் தன்னை இறுகச் சாத்திக் கொண்டிருந்த வரலாறு நமக்குத் தெரியும். மேற்கத்திய இசை, அமெரிக்க பிராண்ட் சிகரெட், பத்திரிகைகள் போன்றவை அங்கு தடை செய்யப்பட்டிருந்தன. அவசியமான காரணம் அல்லாது நாட்டை விட்டு எவரும் அத்தனை எளிதில் வெளியேற முடியாது. இப்படி கடுமையானதொரு கண்காணிப்பு சமூகத்தில் வாழும் அந்த இளைஞர்களுக்கு மூச்சுத் திணறுகிறது. தங்களுக்குப் பிடித்த ‘பீட்டில்ஸ்’ குழுவினரின் இசைத்தட்டை சட்டவிரோதமாகத்தான் வாங்க வேண்டியிருக்கிறது. தேச விரோதமாக ஒரு சொல்லையும் கூட உச்சரித்து விட முடியாது. உளவுத்துறை இவர்களைக் கண்காணிக்க ஆரம்பித்து விடும்.



இந்த இளைஞர்கள் (இவர்களில் ஒரு பெண்ணும் உண்டு) கடற்கரையில் ஒருவரையொருவர் சீண்டிக் கொண்டு குளிக்கும் காட்சியில்தான் படம் துவங்குகிறது. அங்கு இரண்டு ராணுவ வீரர்கள் வருகிறார்கள். ‘குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு கடற்கரையில் எவரும் இருக்கக்கூடாது” என்கிற உத்தரவை மென்மையான கண்டிப்புடன் சொல்லி உடனே விலகச் சொல்கிறார்கள். இது தொடர்பான வழக்கும் பதிவாகிறது. அவர்களின் பெற்றோர்கள் அழைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள். “ உங்களின் பிள்ளைகள் சில  அந்நியர்களோடு தொடர்பு வைத்திருக்கிறார்களா, கடற்கரை வழியாக தப்பிச் செல்லும் உத்தேசம் இருக்கிறதா?” என்றெல்லாம் சந்தேகக் கணைகள் எழுகின்றன. பெற்றோர்கள் சங்கடம் அடைய இளைஞர்களும் எரிச்சல் அடைகிறார்கள்.



இது போன்று எத்தனை நாள்தான் மனப்புழுக்கத்தோடு வாழ்வது, வெளிநாட்டு பிராண்ட் சிகரெட் பிடிக்கக்கூட உரிமையில்லையா? என்னய்யா தேசம் இது என்கிற சலிப்புடன் அனைவரும் கூடி ஒரு திட்டம் தீட்டுகிறார்கள். ஆபத்தான திட்டம்.






நிக்கா என்கிற இளைஞனுக்கு அவனுடைய காதலியான அன்னாவோடு திருமணம் நிகழவிருக்கிறது. அந்தச் சாக்கையொட்டி, திருமணக் குழுவின் பாவனையில் அதற்கு மறுநாள் லெனின்கிராட் செல்லும் விமானத்தில் ஏறுவது. விமானம் கிளம்பியவுடன் பைலட்டை துப்பாக்கி முனையில் மிரட்டி துருக்கிக்கு ஓட்டச் செல்வது. பின்பு அங்கிருந்து தப்பி.. அமெரிக்கா.. தங்களின் கனவு தேசம். விருப்பம் போல புகையை, இசையை நுகர்ந்து மகிழலாம். கேள்வி கேட்க எவருமில்லை.



துப்பாக்கிச் சனியன்களையும் கிரானைட் குண்டுகளையும் சேகரித்து அவர்கள் அந்தச் சதிக்கு மெல்ல மெல்ல தயாராகும் காட்சிகளுடன் படம் நகர்கிறது. இதுவே ஹாலிவுட் திரைப்படமாக இருந்தால் அதற்கேற்ப பரபரப்புடனும் சாகசங்களுடன் காட்சிகள் உருவாகியிருக்கக்கூடும். ஐரோப்பிய திரைப்படங்களுக்கும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் அடிப்படையிலேயே உள்ள வித்தியாசம் இதுதான். அந்த இளைஞர்களுக்கு போன்ற வன்முறை சாகசங்களில் முன்அனுபவம் இல்லை என்பது அவர்களின் மனநடுக்கங்களின் மூலம் துல்லியமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இளமையின் வீறாப்புடன் தைரியமாக இருப்பது போல் ஒருவருக்கொருவர் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் ஒவ்வொருவருமே உள்ளுற அச்சத்தின் பிடியில் இருக்கிறார்கள். தங்களின் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறுமா என்கிற ரகசிய சந்தேகம் ஒவ்வொருக்கும் உண்டு.



**



விமானத்தைக் கடத்த வேண்டிய முகூர்த்த நாள் நெருங்குகிறது. இரு குழுவாக பிரிந்து விமானநிலையத்தை அடைகிறார்கள். ஏர் ஹோஸ்டஸ் ஆக இருக்கும் ஒருத்தி இவர்களுக்கு உதவுவாள். இவர்களின் சதி பற்றி எதுவும் அறியாத அவள், தன்னுடைய பணியை பிறகு இழக்கப் போகிறாள் என்பது, பாவம் அவளுக்குத் தெரியாது. இவர்களின் குழு மட்டும் அமரப் போகும் சிறிய விமானத்தை எதிர்பார்த்திருக்கும் இவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் வேறு பெரிய விமானம் வருகிறது. அதில் இவர்களோடு இதர பயணிகளும் இருப்பார்கள். தங்களின் அதிர்ச்சியை மறைத்துக் கொள்ளும் இளைஞர்கள், ‘ஆனது ஆகட்டும்’ என்று விமானத்தில் ஏறுகிறார்கள்.



விமானத்தின் இந்த உட்புறக் காட்சிகள் மிகத் திறமையாக பதிவாக்கப்பட்டுள்ளன. சிக்கலான வானிலை காரணமாக விமானம் கிளம்பிய இடத்திற்கே திரும்பத் துவங்குகிறது. தங்களின் திட்டம் ஒருவேளை அரசாங்கத்திற்கு தெரிந்து விட்டதோ என்று பதட்டமடைகிறார்கள். “ஆரம்பிக்கலாமா?” என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டு அச்சத்தின் காரணமாக தள்ளிப் போட்டுக் கொண்டிருந்த அவர்கள் சட்டென்று தீர்மானித்து விமானத்தில் இருந்த ஒரு ராணுவ அதிகாரியைத் தாக்குகிறார்கள். பிறகு பைலட்டின் அறைக்குள் வலுக்கட்டாயமாக புகுந்து கண்மூடித்தனமாக அவரைச் சுடத் துவங்குகிறார்கள்.



ஆனால் இவர்கள் எதிர்பாராதவிதமாக அங்கிருக்கும் இன்னொரு அதிகாரி இவர்களை நோக்கி பதிலுக்கு சுடத் துவங்க முறையான ஆயுதப்பயிற்சி இல்லாத இவர்கள் தரப்பில் கடுமையான சேதம் ஏற்படுகிறது. தங்களின் அறையை தாளிட்டுக் கொள்ளும் பைலட்டுகள், நிலையத்திற்கு எச்சரிக்கை அறிவிப்பை தந்து விட்டு பதட்டத்துடன் விமானத்தை கிளம்பிய இடத்திற்கு கொண்டு செல்கிறார்கள். இந்தக் களேபரத்தில் விமான பணிப்பெண் உள்ளிட்டு சில அப்பாவி பயணிகளின் உயிரும் இணைந்து பறிபோகிறது.



இளைஞர் குழுவில் காயமடைந்தவர்கள் ஒருபுறம் துடித்துக் கொண்டிருக்க, இதர சதிகாரர்கள் என்ன செய்வது என்று பதட்டமும் பயமுமாய் அமர்ந்திருக்கிறார்கள். தங்களின் அரசு தரப்போகும் தண்டனை மீதான அச்சம் ஒருபுறம், பெற்றோர்களை எதிர்கொள்ள வேண்டிய சங்கடம் இன்னொருபுறம் என்கிற தவிப்பு அவர்களை ஆட்கொள்கிறது. “என்னைக் கொன்று விடு” என்று படுகாயமடைந்த இளைஞன், இன்னொருவனை வேண்டுகிறான். ‘எவராவது பைபிளை படியுங்கள்” என்றொரு இளைஞன் பயணிகளை மிரட்டுகிறான். இனியும் தப்பிக்க முடியாது என்பதை உணரும் ஒருவன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு சாகிறான்.



விமானம் நிலையத்தை அடைந்ததும் அதைச் சுற்றிலும் ராணுவ வீரர்கள் வந்து நிற்கிறார்கள். ஜன்னலை உடைத்துக் கொண்டு தப்பும் ஒரு அதிகாரி, ‘உள்ளே இருப்பவர்கள் வெடிகுண்டு வைத்திருக்கிறார்கள்’ என்று ராணுவத்திற்கு தகவல் தருகிறார். எனவே தாக்குதலை உடனே நடத்தாமல் தாமதிக்கிறார்கள். அரசாங்கத்தின் உயர்அதிகாரிகளின் குழு தீவிர ஆலோசனையில் ஈடுபடுகிறது. பையன்களின் பெற்றோர்களை அழைத்து அவர்களின் மூலமாக அவர்களை வெளியே வரச்சொல்லலாம் என்று முயன்று பார்க்கிறார்கள். திருமண விழாவின் களை இன்னமும் கலையாத நிக்காவின் வீட்டை போலீஸ் வளைக்கிறது. அவனது தாயார் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். ‘என்னவாயிற்று?” என்கிற அவரின் பதட்டத்திற்கு எவரும் விடை அளிப்பதில்லை.



ஆனால் ஒரு கட்டத்தில் ‘இந்த வேண்டுகோள்கள் சரிவராது’ என்கிற முடிவை எட்டுகிறார்கள். ராணுவம் அதிரடியாக விமானத்திற்குள் நுழைந்து அவர்களைக் கைது செய்கிறது. இளைஞர்கள் எவ்வித எதிர்ப்புமின்றி சரணடைகிறார்கள். அவர்களுக்கு வேறு வாய்ப்பும் இருப்பதில்லை.



மணப்பெண்ணான அன்னாவிற்கு பதினைந்து வருட சிறைத் தண்டனை கிடைக்கிறது. மூவருக்கு மரண தண்டனை. துர்உபதேசம் மூலம் இவர்களை கெட்ட வழியில் தள்ளியதாக சந்தேகப்படும் ஒரு மதகுருவிற்கும் தண்டனை.



பல வருட தண்டனைக்குப் பிறகு அன்னா சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறாள். நிக்காவின் தாயைச் சந்தித்து விடைபெறும் அவள், துயரமும் குழப்பமும் கலந்த உணர்வோடு விமானத்தில் பயணிக்கும் காட்சியோடு படம் நிறைகிறது.



**



விமானக்கடத்தலையொட்டிய திரைப்படம்தான் என்றாலும் படத்தில் இது குறித்து செயற்கையான பரபரப்போ, பாவனைகளோ இல்லை. ஐரோப்பிய திரைப்படங்களின் பலமே இதுதான். உண்மைச் சம்பவத்தின் மீதான உருவாக்கம் என்பதால் அது சார்ந்த கவனத்துடனும் நம்பகத்தன்மையுடனும் காட்சிகள் நிதானமாக நகர்கின்றன. அவர்களின் சதித்திட்டம் பார்வையாளர்களுக்கு மிக இயல்பாக மெல்லத்தான் அம்பலப்படுத்தப்படுகிறது.



நிக்காவின் திருமணம் தொடர்பான காட்சிகள் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. அங்கு நிகழும் குதூலகத்தின் இடையே இளைஞர்களின் குழுவின் உள்ளே உறைந்திருக்கும் அச்சமானது உறைந்த பனி போல அந்த இடத்தைச் சூழ்ந்திருக்கிறது. மணப்பெண்ணான அன்னா, விருந்தாளி ஒருவர் தன்னை முறைத்துப் பார்ப்பதாக பொய்க் குற்றம் சாட்டுகிறாள். திருமணக்கூடத்தை விட்டு கோபத்துடன் வெளியேறும் அவள், சாலையில் தென்படும் காவல்துறையினரைப் பார்த்ததும் ஒருகணம் தயங்கி பிறகு சுதாரித்துக் கொள்கிறாள். நிக்கா அவசரம் அவசரமாக வந்து அழைத்துச் செல்கிறான்.



மிகச் சொற்பமான காட்சிகளிலேயே நிக்காவிற்கும் அவனது தாயாருக்கும் இடையிலான அன்பும் நேசமும் துல்லியமாக நிறுவப்பட்டு விடுகிறது. தன் தந்தையுடன் நிக்கா உரையாடும் காட்சி மிக முக்கியமானது. கண்காணிப்பு சமூகத்தில் வாழும் மனப்புழுக்கம் அவனது தந்தைக்கும் இருக்கிறது. அது குறித்து தன் மகனிடம் மறைமுகமாக அவ்வப்போது பேசி வந்திருக்கிறார் என்று தெரிகிறது.ஆனால் அரசாங்கத்தின் மீதான தன்னிச்சையான விசுவாசமும் அச்சமும் காரணமாக அதை மறைத்து வந்திருக்கிறார்.



‘ஒருவேளை இந்த தேசத்திலிருந்து நாங்கள் தப்பிக்க நினைத்தால் நீங்களும் எங்களோடு இணைவீர்களா?” என்று பாவனையாக கேட்கிறான் நிக்கா. இவனைச் சந்தேகமாக பார்க்கும் அவர் ‘என்ன விளையாடுகிறாயா, அது எளிதான விஷயமா?” என்று கடுகடுக்கிறார். நிக்காவிற்கு மரணதண்டனை அளிக்கப்படும் போது இவர் நீதிமன்றத்தில் சங்கடமும் துக்கமுமாக அமர்ந்திருக்கும் காட்சி உருக்கமானது.



விமானத்தை கடத்தி பயணிகளை பிணைக்கைதிகளாக வைத்திருக்கும் இளைஞர்களிடம் அவர்களின் பெற்றோர்களின் வழியாக விடப்படும் வேண்டுகோள் அறிக்கையை அரசு அதிகாரிகள் தயாரிக்கிறார்கள். அதைப் பார்க்கும் நிக்காவின் தாய், ‘இது இல்லாமல் எனது சொந்த வார்த்தைகளில் பேசலாமா?” என்கிறார். “சொந்த வார்த்தைகளின் மூலம் உங்களின் மகனை வளர்த்திருக்கும் லட்சணம்தான் தெரிகிறதே” என்று ஆத்திரப்படுகிறார் காவல்அதிகாரி. தனது பிள்ளையின் தவறுக்காக நிக்காவின் தாய் தலைகுனியும் காட்சி பெற்றவர்களின் கையறு நிலையை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்கிறது.



மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் உடல்கள் எங்கே புதைக்கப்பட்டது என்கிற விவரத்தைக் கூட அரசாங்கம் தருவதில்லை. சில வருடங்களுக்குப் பிறகு நிக்காவின் உடலைத் தேடி அவனது பெற்றோர் செல்லும் காட்சி உருக்கமானது. ஏதோவொரு உடல் தோண்டப்படும் போது விலகியிருந்த நிக்காவின் தாய், பதட்டத்துடன் நெருங்கி வரும் போது, ‘அது அவனுடைய உடல் அல்ல’ என்று தந்தை கூறுவது இன்னமும் கொடுமையானது.



**



அந்த இளைஞர் குழுவின் மனோபாவம் எந்தக்காலக்கட்டத்து இளைய தலைமுறைக்கும் படிந்திருப்பதை இறுதிக்காட்சி வெளிப்படுத்துகிறது. “அவர்களுக்கு என்னதான் வேண்டும்?. இங்கேயே எல்லா வசதிகளும் இருக்கின்றன. பின்பு வேறெங்கோ எதைத் தேடி அலைகிறார்கள்?” என்று ஒரு தந்தை, தன் நண்பரிடம் வெடிக்கும் காட்சியை இத்திரைப்படத்தின் மையமாக எடுத்துக் கொள்ளலாம். அவரது மகனும் அதே விதமான மனப்புழுக்கத்தில் இருக்கிறான். தந்தையுடன் கோபமாக விவாதிக்கிறான். “மேற்கில் என்ன சொர்க்கமா இருக்கிறது?” என்று பதிலுக்கு ஆத்திரப்படும் அவர், மகனை காரிலிருந்து இறக்கி விட்டு விட்டுச் செல்கிறார்.



கண்காணிப்புகளும் கட்டுப்பாடுகளும் உள்ள சமூகத்தில் வாழும் இளைய தலைமுறை, மேற்குலகைப் பார்த்து பெருமூச்சு விடும் மனோபாவத்தை இத்திரைப்படம் மிகச்சிற்ப்பாக பதிவாக்கியிருக்கிறது. தங்களின் சொந்த தேசங்களுக்காக குறைந்தபட்ச தியாகத்தையும் செய்யத் துணியாத இளைஞர்களை இடித்துரைக்கிறது. அதே சமயத்தில் கண்காணிப்பு சமூகத்தில் வாழ்பவர்களின் அகப்புழுக்கத்தையும் நுட்பமாக பதிவாக்கியுள்ளது.



இளம் இயக்குநரான Rezo Gigineishvili இயக்கியுள்ள இந்த திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைவிழாவில் திரையிடப்பட்டு விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றது. நிக்காவாக நடித்த Irakli Kvirikadze முதற்கொண்டு அனைத்து நடிகர்களுமே தங்களின் மிக இயல்பான பங்களிப்பை தந்துள்ளனர். எந்தவொரு இடத்திலுமே ஒரு ‘சினிமா’வைப் பார்க்கும் உணர்வே வருவதில்லை. Giya Kancheli-ன் பின்னணி இசை மிக அவசியமான இடங்களில் ஒலித்து படத்திற்கு துணைபுரிந்திருக்கிறது.



‘Aeroflot Flight 6833’ என்று அழைக்கப்படும், 1983-ல் நிகழ்ந்த உண்மையான சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், இளம் தலைமுறையினருக்கு ஆதாரமான சில விஷயங்களை நுட்பமாகச் சொல்லியுள்ளது. கவனிக்கத்தக்க திரைப்படம். 

(குமுதம் தீராநதி -  பிப்ரவரி 2018 இதழில் பிரசுரமானது)  


suresh kannan