
முந்தைய போட்டிளைப் போல் அல்லாமல் சமீபத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ஒவ்வொரு வாரமும் என்னால் தொடர்ந்து பார்க்க இயலவில்லை. இம்மாதிரியான ரியாலிட்டி ஷோக்களின் மீது சற்று ஒவ்வாமையே ஏற்பட்டுவிட்டது. நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் மிகையான அலட்டலும் நிகழ்ச்சிகளில் தென்படும் அப்பட்டமான நாடகத்தன்மையும் தோற்றுப் போகிற போட்டியாளர்களின் கண்ணீரை வைத்து நிகழ்ச்சியமைப்பாளர்கள் நடத்துகிற உணர்ச்சிமிகு நாடகங்களும், இந்த நிகழ்ச்சிகள் நடத்தப் பெறும் ஆதாரமான நோக்கு அடிபட்டுப் போவதையும் இதற்கு காரணமாய் சொல்லலாம். முந்தைய சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்ற நிகில் மேத்யூ, ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் 'பீமா' திரைப்படத்தில் 'எனதுயிரே' என்ற பாடலை பாடினதோடு சரி. அதற்கப்புறம் என்ன செய்கிறார் என்கிற தகவலே இல்லை. ஜூனியர் சிங்கரில் வெற்றி பெற்ற கிருஷ்ணமூர்த்தியும் என்ன ஆனார் என்று தெரியவில்லை. ஆனால் வடக்கில் பார்க்கும் போது ஜீ டிவி நிகழ்ச்சியான sa re ga ma pa போட்டியில் வெற்றி பெற்ற shreya ghosal, bela shindey போன்றவர்கள் இந்தியிலும் சமீபத்தில் தமிழிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
()
இன்று சூப்பர் சிங்கர் போட்டியின் இறுதி எபிசோட் என்பதால் சற்று சீக்கிரமாக இரவு 09.00 மணிக்கெல்லாம் வீடு வந்து சேர்ந்தேன். குளித்துவிட்டு வரும்வரை விளம்பரமாக போட்டுக் கொண்டிருந்தார்கள். இந்தக் கொடுமையை 07.00 மணியிலிருந்தே பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மகா பொறுமைசாலிகள்தான். இறுதிப் போட்டியாளர்கள் ஒவ்வொரு பாடலாய் பாட இன்னும் வாக்களிக்கும் வாய்ப்பை திறந்தே வைத்திருந்தார்கள். நல்லவேளையாக நிகழ்ச்சியை தொகுத்தவர்களில் மாலினி யுகேந்திரன் இல்லை என்பதை கவனித்து நிம்மதிப் பெருமுச்சுவிடுவதற்குள் பின்னர் வாயெல்லாம் பல்லாக வந்து இணைந்துவிட்டார். இந்த முறை சூப்பர் சிங்கரை நான் அதிகம் பார்க்காமல் தவிர்த்ததற்கு இவர் ஒரு பிரதான காரணம். அந்தளவிற்கு கொடுமையான நிகழ்ச்சி தொகுப்பு பணி.
இன்னும் சில கலை நிகழ்ச்சிகள்... என்று இழுத்துக் கொண்டே அதற்கிணையாக விளம்பரமும் போட்டுக் கொண்டே இருந்ததில் எரிச்சல் அதிகமானது. இது live ஆகத்தான் ஒளிபரப்பாகிறதா என்ற சந்தேகமும் ஆரம்பத்திலிருந்தே எழுந்தது. நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்து சற்று தாமதமாக எடிட் செய்து ஒளிபரப்பினார்களா என்று தெரியவில்லை. நேரில் கலந்து கொண்ட புண்ணியாத்மாக்கள் தெரிவிக்க வேண்டும். பிறகு ஒருவழியாக வெற்றி பெற்றவரை அறிவித்து விட்டார்கள். இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் வாக்கு பெற்று வென்றவர் அஜீஷ். இரண்டாவது பரிசை ரவியும் மூன்றாவது பரிசை ரேணுவும் பெற்றார்கள். இருவரது முகத்திலும் தோல்வியின் வலி அப்பட்டமாய் தெரிந்தது.
()
பொதுவாக விஜய் டிவி போட்டிகளுக்கும் எனக்கும் ஒரு ராசியுண்டு. யார் வெற்றி பெறுவார்கள் என்பதை நான் முன்னமே சரியாக யூகித்துவிடுவேன். அது மிக அதிர்ஷ்டவசமாக பெரும்பான்மையான சமயங்களில் சரியாக ஒத்துப் போய்விடும். சுசிகணேசனின் திரைப்படத்திற்காக நடந்த நடிகர் தேர்வில் பிரசன்னாவை பார்த்தவுடனே சொன்னேன். இவர் நிச்சயம் தேர்வு பெறுவார் என்று. பின்பு நடந்த அழகிப் போட்டியிலும் நான் யூகித்த மாதிரியே ஷீபா என்கிற பல் டாக்டர் அழகியாக தேர்வு செய்யப்பட்டார். நிகில் மேத்யூவும், கிருஷ்ணமுர்த்தியும் அவ்வாறே. முன்னரே சொன்னது போல் இந்த முறை சூப்பர் சிங்கரை தொடர்ந்து பார்க்கவில்லையெனினும் அஜீஷ் பாடுவதை கவனிக்கும் போது அவர் குரலிலும் பாடும் முறையிலும் ஒரு முதிர்ச்சி இருந்தது தெரிந்தது. எனவே அவர் வெற்றி பெறலாம் என்று யூகித்திருந்தேன். எங்கள் அலுவலகத்தில் நடந்த வாக்கெடுப்பிலும் அஜீஷே முதல் இடத்தில் நின்றார். பெண்களின் வாக்கு அதிகம்.
விஜய் டிவி லைவ்வாக ஒரு நிகழ்ச்சியை நடத்துவது இதுதான் முதன்முறை என்று நினைக்கிறேன். ரொம்பவே பொறுமையை சோதித்து விட்டார்கள். இரவு 11.45 வரை நிகழ்ச்சியை பொறுமையாக பார்த்ததற்கு ஒரே ஒரு பலன்தான் கிட்டியது. நேகா பேஷின் அருமையானதொரு பாட்டைப் பாடினார். அவர் பாட்டு ஒருபுறமிருக்கட்டும். அவரின் சிக்கனமான உடையும், நிகழ்ச்சியை கவர் செய்த ஒளிப்பதிவாளின் கலைமிகு கோணமும். அதனால் மனம் கொஞ்சம் சமாதானமடைந்தது.
வாழ்த்துகள் அஜீஷ்.
ரியாலிட்டி ஷோக்கள் குறித்து ஷாஜி எழுதின கட்டாயமாக வாசிக்க வேண்டிய பதிவு
(பின்குறிப்பு: விஜய்டிவியின் இன்னொரு ரியாலிட்டி நிகழ்ச்சியான 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா'வையும் தொடர்ந்து பார்க்க இயலவில்லை என்றாலும் பார்த்தவரை என்னை மிகவும் கவாந்தவர் மனோஜ் குமார். அவர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கிறேன்; விரும்புகிறேன். பார்க்கலாம்.)
suresh kannan