Showing posts with label நாடகம். Show all posts
Showing posts with label நாடகம். Show all posts

Monday, April 29, 2013

கடவுள் வந்திருந்தார் – சுஜாதா – பாரதி மணி



சென்னையிலுள்ள கன்னிமரா நூலகத்திற்கு எத்தனையோ முறை போயிருக்கிறேன். ஆனால் அதே வளாகத்திலுள்ள மியூசியம் அரங்கிற்கு இதுவரை ஒருமுறை கூட சென்றதில்லை. பகல் நேரங்களில் வெயிலில் மொட்டைகள் பளபளக்க சுந்தரத் தெலுங்கில் மாட்லாடிக் கொண்டு 'செத்த காலேஜ், உயிர் காலேஜை' வேடிக்கை பார்க்கும் உத்தேசத்துடன் கூட்டம் கூட்டமாக இறங்கும் அண்டை பிரதேசத்து பிரஜைகளை வேடிக்கை பார்த்தது போக மாலை வேளைகளில் அடர்த்தியான வண்ணங்களில் உயர்ரக வாசனைத் திரவியங்கள் மணக்க பளபள கார்களில் வந்திறங்கி 'மியூசியம் தியேட்டரில்' ஆங்கில நாடகம் பார்க்கச் செல்லும் உயர் வர்ககத்தினரையும் வேடிக்கை பார்க்கத் தோன்றியதே ஒழிய ஒருமுறை கூட அங்கு உள்ளே செல்ல வேண்டும் என்று தோன்றியதேயில்லை. 'யாருப்பா, என்ன வேணும்?' என்று துல்லியமான ஆங்கிலத்தில் யாராவது கேட்டால் என்ன செய்வது என்று பயந்தேனோ என்னவோ தெரியவில்லை. பாரதி மணி ஸாரின் புண்ணியத்தில் முதன்முறையாக இந்த அரங்கிற்குள் செல்லும் சந்தர்ப்பம் வாய்த்தது.

இன்னமும் உறுதியாக நின்று கொண்டிருக்கும் அந்த பிரிட்டிஷ் கால கட்டிடத்திற்குள் நுழையும் போது பீரியட் பிலி்ம் ஒன்றின் காட்சிக்குள் நுழையும் விநோத அனுபவம். புராதன கட்டிடங்களை முறையாக பராமரிக்காத நம் அலட்சிய மனப்பான்மை குறித்த கசப்புணர்வும் கூடவே. (இங்குதானே 'கோபுர வாசலிலே' திரைப்பட பானுப்பிரியா நடனக்காட்சி சூட்டிங் நடைபெற்றது?) பார்வையாளர்கள் அனைவருமே மேடையை நெருக்கமாக கவனிக்க ஏதுவாக வட்டவடிமான அரங்கு. உள்ளே நுழைந்த போது ஒன்றிரண்டு உற்சாக இளைஞர்கள், விண்வெளிக் கப்பல் வந்திறங்கும் வீடியோவை ஆடியோவுடன் சோதித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு எழுத்தாளனுக்கு இது  மிக பரவசமாக தருணமாக இருக்கலாம். ஏதோ ஒரு மனநிலையில் நோக்கத்தில் நேரத்தில் எழுதப்பட்ட எழுத்து இன்னொரு வடிவத்திற்காக தயாராவதற்காக பல நூறு நபர்கள் உழைப்பதை கவனிப்பது. எழுத்தாளர் சுஜாதா இதையும் பதிவு செய்திருக்கிறார். கமல் தயாரித்த சயன்ஸ் பிக்ஷன் என்று நினைத்து எடுக்கப்பட்ட விக்ரம் படமாவதற்கு முன் குமுதம் இதழில் தொடராக வெளிவந்தது. ஒரு பறவை வந்து காரின் பானெட்டில் உட்காருவதான, தான் எழுதிய ஒரு வரியை சலனக்காட்சியாக உருமாற்றுவதற்கு எத்தனை பிரயத்தனப்பட்டார்கள் என்பதை அது தொடர்பான அனுபவக் கட்டுரையில் எழுதியிருக்கிறார். கட்டுரையின் இறுதியில் 'எழுத்தில் தான் எழுதிய பறவை இதுவல்ல' என்பதை தயக்கத்தோடு குறி்ப்பிட்ட போது அத்தனை பேரும் கொலைவெறியுடன் தன்னை நோக்கினார்கள்' என்பதையும்.

***

சுஜாதாவின் 'கடவுள் வந்திருந்தார்' 80-களில் எழுதப்பட்டதாக நினைவு. இதை அவர் முழுக்க முழுக்க பூர்ணம் விஸ்வநாதனை மனதில் இருத்தி எழுதியிருக்க வேண்டும். அவரின் 'வந்தவன்' என்கிற சிறுகதை மிகச் சிறப்பாக படமாக்கப்பட்டு பூர்ணத்தால் சிறப்பாக நடிக்கப்பட்டு பரவலாக கவனிக்கப்பட்டதின் உற்சாகம் காரணமாக இந்த நாடக முயற்சிகளை தொடர்ந்திருக்கலாம். 'டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு' இன்னொரு உதாரணம். நடுத்தர வர்க்க மற்றும் வயதுள்ள அசட்டுத்தனமான கோழைத்தனமான பிராமண நபர்தான் பெரும்பாலும் இந்த நாடகங்களின் நாயகன். அது சுஜாதாவின் அசலான அல்லது ஆல்டர் ஈகோவாகவாக கூட இருக்கக்கூடும்.

நாடகத்தின் இறுதியிலான ஏற்புரையில் பாரதி மணி பேசும் போது தன்னை ஒரு 'சுஜாதா பைத்தியம்' என்று வர்ணணை செய்து கொண்டார். அவரைப் போன்ற பல்லாயிரக்கணக்கான பைத்தியங்கள்  - நான் உட்பட – இன்னமும் இருப்பதுதான் சுஜாதாவின் இளமையான எழுத்திற்கு கிடைத்த வெற்றி என்று தோன்றுகிறது. ஒரு வாசகனாக தன்னுடைய ஆதர்ச எழுத்தாளனின் மீது பிரேமையுடன் இருப்பது கூட இயல்பு. ஆனால் அந்த எழுத்தாளனை நெருங்கிப் பழக பழக சில பல பிம்பங்கள் உடைந்து அந்த பிரமிப்பும் பிரேமையும் மெல்ல கரைந்து விடுவதுதான் யதார்த்தம். ஆனால் பாரதி மணி சுஜாதாவுடன் நெருங்கிப் பழகியிருக்கிறார். ஒவ்வொரு நாடகம் எழுதப்பட்ட பின்பு அது டெல்லிக்கு அனுப்பப்படும் அளவிற்கு நெருக்கம். என்றாலும் சுஜாதாவின் மீதுள்ள பிரேமையையும் பிரமிப்பையும் இன்னமும் அவர் கவனமுடன் பாதுகாத்துக் கொண்டிருப்பதைக் காண பொறாமையாக இருக்கிறது.

இந்த நாடகத்தை தயாரித்து வழங்கிய 'சென்னை அரங்கம்', தம்மை வழக்கமான சபா நாடகங்களுக்கும் 'நவீன நாடகங்களுக்கும்' இடையில் எவ்வித பாசாங்களுகளுமற்ற முயற்சிகளை நிகழ்த்துவதாக பிரகடனப்படுத்துகிறது. ஆனால் சுஜாதாவின் 'கடவுள் வந்திருந்தார்' அசட்டுத்தனமான நகைச்சுவையை உள்ளடக்கமாகவும் பிரதானமாகவும் கொண்டிருக்கும் சபா நாடகங்களின் தொனியை பொதுவாக கொண்டிருந்தாலும் இதை வித்தியாசப்படுத்திக் காட்டுவது சுஜாதாவின் உறுத்தாத நகைச்சுவையும் அறிவார்ந்த தேடலும்தான். ஏற்கெனவே குறிப்பிட்டபடி ஒரு சராசரி நடுத்தர வாக்க நபர்தான் நாடகத்தின் பிரதான பாத்திரம். தங்களின் வழக்கமான சலிப்பூட்டும் அலுப்பூட்டும் லெளகீக வாழ்க்கையிலிருந்து 'எவராவது தம்மை விடுவிக்க மாட்டார்களா" 'பெருமூச்சு விடுவதற்கான இடைவெளி கிடைக்காதா' என்கிற தேடலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தின் மனநிலையை வெளிப்படுத்துவதே. ஆர்.கே.லஷ்மணனின் 'காமன் மேன்' கார்ட்டூன் பாத்திரம் போல. அதுவரை இயந்திரம் போல் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு நடுத்தர வர்க்க நபர் ஓய்வு பெற்றதும் என்னவென்று செய்வதெல்லாமல் திகைத்துப் போய் தாம் புறக்கணிக்கப்பட்டு விடுவோமோ என்கிற பயத்தில் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க சொல்லும் பொய்களில் ஒன்றாக இந்த நாடகத்தின் அடிப்படையாக பார்க்கலாம். அது அயல்கிரக மனிதன் என்கிற மகா பொய்யாக அமைவதால் எழும் நகைச்சுவையுடன் அமைந்திருக்கிறது.

அல்லது இந்த நாடகம் 'உண்மை என்றால் என்ன?' என்பதை தத்துவ நோக்கில் ஆராய்கிறது என்றும் சொல்லலாம். எனவேதான் 'யாரும் பார்க்காவிட்டாலும் ஆகாயம் நீலமாக இருக்குமா? என்கிற ஆதிசங்கரரின் தத்துவக் கேள்வியோடு துவங்குகிறது. வருங்காலத்தி்ன் அயல்கிரக மனிதன் நடுத்தரவர்க்க மனிதனின் வாழ்க்கையில் குறுக்கிட்டு சில பல குழப்பங்களை ஏற்படுத்துவது என்பதே ஒரு சுவாரசியமான பொய். ஆனால் சுஜாதா தனது அசாத்தியமான எழுத்தால் இதை உண்மை என்று நம்ப வைக்கிறார். ஆன்மீகம் என்கிற ஒப்பனையில் மேஜிக் தந்திரங்களை செய்து மக்களை நம்ப வைக்கும் போலிச் சாமியார்களையும் கிண்டலடிக்கிறார். ஆனால் அந்த சாமியார் மனம் திரும்பி உண்மை பேச முயலும் போது எவருமே அதை நம்பவில்லை. நம்ப விரும்பவில்லை என்பதே உண்மை. ஏனெனில் எல்லோருக்குமே தங்களை விடுவிக்க ஒரு சக்தி இருந்து கொண்டிருப்பதின் அவசியம் தேவையாயிருக்கிறது.

***

சில பல வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு நேரடியான நாடகத்தைப் பார்த்ததே புத்துணர்வை ஏற்படுத்தும் ஒரு அனுபவமாக இருந்தது. இப்படி கடைசியாக பார்த்தது நண்பர் ஆனந்த் ராகவின் சுருதி பேதம். காட்சி ஊடகம் எல்லாவற்றையுமே விதவிதமான காமிரா கோணங்களிலும் வேக வேகமான எடிட்டிங்கிலும் நாராசமான பின்னணி இசையிலுமே பார்த்துப் பழகிய இளைய தலைமுறைக்கு இம்மாதிரியான நாடகங்கள் நிச்சயம் புது விதமான அனுபவத்தை ஏற்படுத்தும்.

இந்த நாடகத்தின் பிரதான் பலம் சந்தேகமில்லாமல் பாரதி மணிதான். திரை ஊடகத்தில் எப்போதுமே முதலமைச்சராய் வாழ்ந்து வந்தவர், பெரிய மனதுடன் நடுத்தர வர்க்க மனிதராய் நடிக்க முன்வந்த அந்த பெருந்தன்மைக்காகவே அவரை பிரதானமாய் பாராட்டியாக வேண்டும். எத்தனை விதவிதமான முகபாவங்கள். அருகிலிருந்து நேரடியாக பார்க்கவே அத்தனை அற்புதமாய் இருந்தது. ஒரு வேளை திரை ஊடகத்திற்காக குளோசப் கோணத்தில் அவற்றை பதிவு செய்து கொண்டிருந்தால் 'கட்' சொல்லவே மனது வராது. இது போன்ற மென்மையான நகைச்சுவை நாடகத்தை பார்வையாளர் சலிப்புறாதபடி நிகழ்த்தவே தனித்திறமை வேண்டும்.

விளம்பர இடைவேளையாக என் சுயபுராணத்தின் ஒரு துண்டையும் இங்கு பதிய விரும்புகிறேன். நண்பரொருவனின் கல்லூரி ஆண்டு விழாவிற்காக ஒரு நகைச்சுவை நாடகத்தை எழுதிக் கொடுத்தேன். சேகர், மோகன் போன்றவர்களை உதாரணமாகக் கொண்டு நகைச்சுவைத் துணுக்குகளை தோரணமாக்கி கூடவே இலவச இணைப்பாக 'நியுமரலாஜி என்பது மூடநம்பிக்கை' என்கிற மெஸேஜூம். எல்லாமே சற்று அசட்டுத்தனமான மெல்லிய நகைச்சுவைகள். ("இந்த ஞாபக மறதி எத்தனை நாளா இருக்கு?" – "ஞாபகமில்லீங்க"). மாணவர்களால் நிச்சயம் இது ரசிக்கப்படும் என்கிற நம்பிக்கையுடன் அந்த விழாவிற்குச் சென்றிருந்தேன். அது பொய்த்துப் போனது.

ஏனெனில் நாடகத்தில் நடித்தவர்கள் அனைவருமே டைமிங் சென்ஸ் ஏதுமில்லாமல் மனப்பாடப் பகுதியை ஒப்பிப்பது போலவே செயற்கையாக நடித்து சொதப்பினார்கள். பார்வையாளர்களிடமிருந்து பெரிதாக ரியாக்ஷனே இல்லை. அடுத்ததாக வந்த மாணவர் குழு எவ்வித திட்டமிடலும் இல்லாமற் போல் தோன்றின, இன்றைய சந்தானம் அடிக்கும் கவுண்ட்டர் டயலாக்குள் போல் வாயக்கு வந்தததை டைமிங்காகச் சொல்லி கூட்டத்தினரின் கரகோஷத்தைப் பெற்றார்கள். எதற்கு இதைக் குறிப்பிடுகிறேன் என்றால் அழுகாச்சி நாடகங்களை மூலம் பார்வையாளர்களை கவர்வது கூட எளிது. (இதிலும் பார்வையாளர்கள் பயங்கரமாக சிரிக்கின்ற அபாயம் ஏற்படலாம்). ஆனால் நகைச்சுவையின் மூலம் சிரிக்க வைப்பது ஆகக் கடினமான காரியம் என்கிற விஷயத்தை என்னையும் சேர்த்து இதுவரை இரண்டு கோடியே மூன்றாயிரம் பேர் சொல்லி விட்டனர்.

'கடவுள் வந்திருந்தார்' – நாடகத்தை மிக சுவாரசியமாக்கினதற்கு காரணம் அதன் நடிகர்களே. 80-களில் எழுதப்பட்ட நாடகம் என்பதால் சற்று பழமையான நெடி. எக்ஸார்ஸிட், உல்லி உல்லி, ஜார்ஜெட், டுட்டி ப்ரூட்டி, கல்யாண பரிசு போன்ற 80-களின் கலாச்சார சொற்கள் புழங்கினாலும் இன்றும் இதை ரசிக்க முடிந்ததற்குக் காரணம் சுஜாதாவின் இளமையான எழுத்து. ஒரேயொரு உதாரணம் சொல்கிறேன். சமகாலத்தில் கூட இப்படி எழுத முடியுமா என்று தெரியவில்லை. சென்சாரில் வெட்டி விடுவார்கள். வாத்தியார் பூடகமாக கலக்கியிருக்கிறார்.

இந்தச் சூழலை கவனியுங்கள்....

மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவனுக்கு கீழேயிருக்கும் வீட்டின் உரிமையாளரின் மகளின் மீது காதல். ஆனால் அவளோ இவனை சட்டை செய்வதில்லை. ஒரு சிக்கலான இரவில் அவளின் அப்பாவிற்கு உதவி செய்யும் போது மாத்திரம் சற்று சிரித்துப் பேசுகிறாள். ஆனால் மறுநாள் காலையில் வழக்கம் போல் சிடுமூஞ்சு..

அப்போது அந்த இளைஞன் சற்று கோபமாக ஒரு ப்ளோவில் பேசும் வசனம் இது...

"வசு... அப்ப ராத்திரிக்கு மாத்திரம் நான் உனக்கு தேவையாயிருக்கேன்ல.... (சற்று நிதானித்து – தனக்குள்..) என்ன .. நான் உளர்றேன்...

சற்று விரசமானதொரு ஆனால் யதார்த்தமாக வந்து விழும் நகைச்சுவையை செருகி விட்டு..அதை கலாச்சார காவலர்களுக்காக அழகாக சமன் செய்திருக்கும் சாமர்த்தியம் வாத்தியாருக்கே வரும்..
மொத்த நாடகத்தையும் பாரதி மணி தன் தோளில் சுமந்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது. விதவிதமான முகபாவங்கள். டைமிங் சென்ஸ். அனுபவம் பேசுகிறது.. இந்த வயதில் தினம் ஆறு வேளை சிட்டுக்குருவி லேகியம் சாப்பிடுபவர் போல் அத்தனை எனர்ஜி. தனது வாழ்த்துரையில் மு.ராமசாமி குறிப்பிட்டதைப் போல சாதாரணமாகவே உட்கார்ந்து எழ சிரமமாயிருக்கும் ஈஸி சேரில் மனிதர் பாலே டான்ஸே ஆடியிருப்பதைக் காண நமக்குத்தான் பிரமிப்பாயும் பயமாயும் இருக்கிறது. ஒரு காட்சியில் பூசாரியிடம் உண்மையாகவே வேப்பிலையில் காட்டடி வாங்குகிறார். பாலாவின் பரதேசி டீசர் எல்லாம் நினைவுக்கு வந்து முதுகுத்தண்டு சில்லிட்டுப் போகிறது. மணி ஸார் பாலாவின் படங்களில் நடிக்க முயற்சிக்கலாம். ஆனால் அடுத்த சில நொடிகளில் ஒரு பெரிய உருட்டுக் கட்டையைக் கொண்டு அவர் பூசாரியை துரத்துவதைப் பார்க்கும் போது இயக்குநராகவும் ஆகி விடலாம் என்று தோன்றுகிறது.

அயல் கிரகத்து மனிதராக நடித்திருக்கும் (ஜோ) சீதரின் நடிப்பை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பாத்திரத்திற்கு மிக அவசியமான மையமான மர்மப் புன்னகையோடு குறும்புத்தனத்தோடும் நடித்திருக்கிறார். சீனிவாசனின் மனைவியாக நடித்திருக்கும் பத்மஜா நாராயணன், 'வியட்நாம் வீடு' பத்மினியை ஞாபகப்படுத்துவது போல அந்தப் பாத்திரத்திற்கு அத்தனை பாந்தமாய் பொருந்தியிருக்கிறார். சுந்தராக நடித்திருக்கும் ராம்குமாரும் சிறப்பாகவும் இயல்பாகவும் நடித்திருக்கிறார். (இவர் பங்களிப்பில் நான் கண்ட சிறிய குறை – மாடிப்படி ஓரமாக நின்று வீட்டில் நிகழ்பவற்றை கவனிப்பது போன்ற காட்சிகளில் அவர் நிற்கும் கோணத்தை, அந்த அரங்கின் பாதி பார்வையாளர்களே கவனித்திருக்க முடியும். மற்றவர்கள் கவனித்திருக்க முடியாது. இதை கவனத்தில் கொண்டிருக்கலாம்). பதிவர் தினேஷ் (குட்டி டின்) மாப்பிள்ளையாக வசீகரமான தோற்றத்தில் வந்து கலக்கியிருக்கிறார். பெண் பார்க்கும் காட்சியில் இரு வீட்டு குடும்பத்தினரின் எதிரேயே பெண்ணை தள்ளிக் கொண்டு வந்து வசனம் பேசும் காட்சியில் அரங்கில் விசில் பறக்கிறது. இனி மாப்பிள்ளை ரோல் என்றால் யோசிக்கத் தேவையில்லாமல் இவரைக் கூப்பிடலாம். (இந்த நாடகத்தில் இவர் நடித்திருக்கும் நேரம் 180 விநாடிகள் என்பது குறிப்பிடத்தக்கது).

எந்த ஸ்பான்ஸர்களின் நிதியுதவியும் இல்லாமல் கைக்காசை செலவழித்து இந்த நாடகத்தைப் போட்டிருக்கும் (தயாரிப்பு: அமிஜித் மணி மேகலை) சென்னை அரங்கத்தின் முயற்சி பாராட்டத்தக்கது என்றாலும் இலவசமாக பார்க்கும் நமக்குத்தான் குற்றவுணர்வு பிடுங்குகிறது. வரும் காலங்களில் நல்ல ஸ்பான்சர்களை பிடிக்கலாம் அல்லது நுழைவுக் கட்டணம் வசூலிக்கலாம். (அப்படி வசூலித்திருந்தால் பாரதிமணியைத் தவிர வேறு யாரும் இருந்திருப்பார்களா என்பதும் சந்தேகமே). இந்த நாடகக்குழுவின் அடுத்த படைப்பை அவர்களைப் போலவே நானும் மிக ஆவலாக எதிர்பார்க்கிறேன்.

image courtesy:https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash4/3625_567588263273770_389823822_n.jpg
 
suresh kannan