Showing posts with label மஜித் மஜிதி. Show all posts
Showing posts with label மஜித் மஜிதி. Show all posts

Tuesday, August 17, 2010

மஜித் மஜிதியும் பீம்சிங்கும்

.. அந்த நடுத்தரவயது மனிதர் பச்சைக்காக சிக்னலில் காத்துக் கொண்டிருக்கிறார். பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகளில் காணக்கூடிய காட்சியைப் போல ஏழைச் சிறுவர்களும் சிறுமிகளும் இயல்பாக தங்கள் மீது உண்டாகும் அனுதாபத்தை காசாக்கிக் கொள்ளும் எளிய வணிக உத்தியோடு சிறு பொருட்களை  வாகனங்களின் ஊடாக விற்றுக் கொண்டிருக்கின்றனர். நடுத்தர வயது மனிதரின் முன்னால் சாம்பிராணிப் புகையை தூவிய படி வந்து நின்று மந்தகாசமாக புன்னகைக்கிறாள் ஒரு சிறுமி. அவள் வயதேயுள்ள தன்னுடைய மகளின் நினைவு அவருக்கு வந்திருக்க வேண்டும். தன்னுடைய உழைப்புக் களைப்பையும் மீறி பதிலுக்கு புன்னகைக்கிறார். அந்தச் சிறுமிக்கு ஏதேனும் தர வேண்டும் என்கிற உந்துதல் ஏற்படுகிறது. அவசரமாக பையிலிருந்து பணத்தை எடுக்கிறார். கையில் தட்டுப்பட்டது 500 டோமன்கள். அதைக் கூட தந்துவிடலாம்தான். ஏனோ ஒரு தயக்கம். அது அன்றாடங்காய்ச்சியான அவரது குடும்பத்தின் ஒரு நபருக்கான ஒரு வேளைக்கான உணவுப்பணமாக இருக்கக்கூடும். சில்லறை மாற்றித் தர முடிவு செய்து சிக்னலில் காத்துக் கொண்டிருக்கும் சக வாகனயோட்டிகளை அணுகுகிறார். கிடைக்கவில்லை. "யோவ், இதுவே சில்லறைதான்?" என்கிறான் ஒரு தாராளமயவாதி. சிவப்பிற்கான நேரம் முடியப்போகிறது. நடுத்தர வயது மனிதருக்குள் பரபரப்பு கூடுகிறது. கடைசி தருணத்திலும் யாரும் சில்லறை தர முன்வரவில்லை. பச்சை விழுந்து வண்டிகள் நகர ஆரம்பிக்கின்றன. தடுமாற்றத்துடன் நின்றிருக்கும் இவரை ஒலிகளின் மூலம் மிரட்டுகின்றன பின்னால் வரும் வாகனங்கள். எப்படியாவது அந்தப் பெண்ணுக்கு ஏதேனும் தர விரும்பிய, இவர் திடீரென்று தீர்மானித்து பணத்தை சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்டு அந்தச் சிறுமியை பார்க்க விரும்பாமல் வாகன நெரிசலுக்குள் மறைகிறார். ...

நம் தமிழ் சினிமாக்கள் எத்தனை மொண்ணைத்தனமாகவும் சாதாரண மனிதர்களின் அன்றாட நிகழ்வுகளிலிருந்து எத்தனை தூரம் விலகி நிற்கின்றன என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாய் The Song of Sparrows-ல் சித்தரிக்கப்படும் மேற்கண்ட காட்சியைச் சொல்லலாம். ('உலகின் சிறந்த படங்களோடு தமிழ் சினிமாவை ஒப்பிட்டுப் புலம்பாமல் உன்னால் எழுதவே முடியாதா?' என்கிற கேள்வியின் பின்னேயுள்ள நியாயத்தை உணர்ந்தேதான் இருக்கிறேன். எந்தச் சமரசத்திற்கும் தம்மை உட்படுத்திக் கொள்ளாமல் நுண்ணுணர்வு மிக்க ஒரு இயக்குநராவது தமிழில் இருந்தால் குறைந்தபட்சம் அவரை வைத்துக் கொண்டாவது திருப்தியடைந்து கொள்ளலாம். அப்படியேதும் இல்லாத ஆதங்கமும் எரிச்சலுமே இவ்வாறு எழுதத் தூண்டுகிறது).

மேற்கண்ட காட்சியை தமிழ் சினிமாவின் ஒரு சராசரி இயக்குநர் எப்படி சித்தரித்திருப்பார் என்று யூகித்துப் பார்ப்போம். நடுத்தர வயதைத் தாண்டியும் மிகை ஒப்பனையுடன் உலகத்தை ரட்சிக்க வந்த அவதாரமாக வேண்டுமானாலும் நடிக்க முன்வருவார்களே ஒழிய, தங்களின் இயல்பான வயதிற்கு ஏற்ற பாத்திரத்தை ஏற்க மாட்டார்கள். ஏழை ரிக்ஷாக்காரன் பாத்திரமென்றாலும் ரீபாக் கேன்வாஸ் ஷூவும் லீ ஜீன்சும் அணிந்து உலாவரும் நாயகன் அந்த ஏழைச்சிறுமியின் கண்ணீரைப் பொறுக்க மாட்டாமல் தன் கையிலிருக்கும் அத்தனை பணத்தையும் அவளிடம் திணித்துவிட்டு கூடவே ஏழைகளின் துயர்நீக்க விரும்பும் சோசலிசப் பாவனைப் பாடல்ஒன்றை பாடி தன்னுடைய நாயக பிம்பத்தை ஊதிப்பெருக்கிய திருப்தியும் பார்வையாளர்களின் ஏகோபித்த கரகோஷத்தையும் ஒருங்கே பெற்றுக் கொள்வான்.

மஜித் மஜிதியின் மேற்குறிப்பிட்ட படத்தின் உள்ளடக்கம், ஏறக்குறைய 'பா' வரிசைப் பட புகழ் ஏ. பீம்சிங்கின் வழக்கமான 'அழுகாச்சி' படங்களை ஒத்ததுதான். அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவன், காலச் சூழ்நிலைகளினால் பிரச்சினைகளின் பால் செலுத்தப்படுவதும் அந்த அவஸ்தைகளின் உச்சியில் மீண்டும் தன் அமைதியான வாழ்க்கைக்குத் திரும்பி பார்வையாளனை ஆசுவாசப்படுத்துவதும். ஆனால் நுண்ணுணர்வு மிக்க யதார்த்தமான காட்சிகளின் உருவாக்கத்திலிருந்தும் நடிகர்களின் பங்களிப்பிலிருந்தும் எப்படி இரு படங்களும் எதிரெதிர் திசையில் பயணிக்கின்றன என்பதை ஒரு சாதாரண பார்வையாளன் கூட உணர முடியும். ஒரு சினிமா இயக்குநர்,  'கலைஞன்' என்கிற உயர்நிலைப் புள்ளிக்கு உருமாறுகிற மாயத்தை அவரேதான் தீர்மானித்துக் கொள்கிறார். அவரால்தான் அது ஒரு சாதாரண பொழுதுபோக்கு சினிமாவா? அல்லது காலத்தை கடந்து நிற்கப் போகிறதொரு கலைப்படைப்பா என்பது நிர்ணயிக்கப்படுகிறது. அவ்வாறு உருவாகிற கலைஞர்கள்தான் சர்வதேச அரங்கில் 'திரைப்படைப்பாளிகளாக' அடையாளம் காட்டப்படுகின்றனர். அவர்களின் படைப்புகள் 'உலக சினிமா'வாக ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.



தீக்கோழி பண்ணையில் பணிபுரியும் கரீம், கோழியொன்று தப்பியோடின தவறின் காரணமாக பணிநீக்கம் செய்யப்படுகிறார். மகளின் காதுகேளா கருவியை பழுதுபார்க்க நகரத்திற்குச் செல்லும் அவரை தற்செயலான பணியை திணிப்பதின் மூலம் நகரம்  தன்னுள் ஈர்த்துக் கொள்கிறது. நகரம் அவருக்கு பல அனுபவங்களைத் தருகிறது. சற்று பொருளீட்ட முயன்றாலும் தன்னுடைய ஆன்மா அமைதியின்றி தவிப்பதை  அவ்வப்போது உணர்கிறார் கரீம். மறுபடியும் அவருடைய பழைய பணியை திரும்பப் பெற்றவுடன்தான் இயல்பான நிம்மதியைப் பெறுகிறார். மேலே குறிப்பிட்டபடியான பல நுட்பமான காட்சிகளின் மூலம் இத்திரைப்படம் ஓர் உன்னத அனுபவத்தைத் தருகிறது.

நகரப்பணிக்கு பழகிக் கொண்டிருந்தாலும் தப்பிச் சென்ற தீக்கோழி  அவருடைய அல்லறும் ஆன்மாவை பல்வேறு சமயங்களில் மறைமுகமாக தொடர்ந்து நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. எங்கோ இறக்கி வைக்க வேண்டிய ஒரு குளிர்பதனப் பெட்டிச் சுமையை வழிதவறுதல் காரணமாக வீட்டிற்குக் கொண்டு வர வேண்டியிருக்கிறது. திருடுவது அவரது நோக்கமில்லையென்றாலும் தானாக வந்த அந்த அதிர்ஷ்டத்தை அந்த எளிய கிராம மனம் உடனடியாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இரவெல்லாம் அதை விக்கித்துப் பார்ததபடி அமர்ந்திருக்கிறார் கரீம். நகரத்தில் எங்காவது அதை விற்றுக் காசாக்கிக் கொள்ளும் முடிவுடன் புறப்படுகிறார். தானாகவே முன்வந்து விசாரிக்கிற காசு தருகிற வியாபாரியை புறக்கணித்து (இப்படித்தானே நம் மனம் இயங்கும்) வேண்டாமென்று துரத்துகிறவனிடம் கெஞ்சுகிறார். இப்படியாக அலைகிற போது வழியில் தென்படுகிற ஒரு காட்சி அவரை திகைத்து நிறுத்துகிறது. அது வண்டியில் ஏற்றப்பட்டிருக்கிற சில தீக்கோழிகள். அவை அவரின் பழைய நிம்மதியான வாழ்க்கையை நினைவுப்படுத்துகின்றன. அடுத்த காட்சியில் குளிர்பதனப் பெட்டியை அதற்குரிய இடத்தில் கரீம் சேர்த்துவிடுகிற காட்சி காட்டப்படுகிறது.

கிராமம் என்றாலே அது வெள்ளந்தியான மனிதர்களின் இடம் போலவும் நகரம் என்றால் அது கொடூரமானது  என்கிற கறுப்பு-வெள்ளைச் சித்திரம்தான் பொதுவாக முன்வைக்கப்படும். பெரும்பாலும் கிராமத்திலிருந்து புலம்பெயர்கிற மனிதர்களுடனும்தான் நகரம் இயங்குகிறது என்கிற உண்மையை கிராமத்திலிருந்து வந்தவர்கள் செளகரியமாக மறந்துவிடுவார்கள். தவறுதலாக அதிக பணத்தை தந்து விட்டு விரைகிற செல்வந்தரை கிராமத்தனான கரீம் திருப்பித் தர துரத்துகிற அதே நகரத்தில்தான், அதிக பணத்தை பாக்கிச் சில்லறையாக தந்து விடும் கரீமிடம் அதை துரத்தி வந்து திரும்பத் தரும் நகரவாசியும் சித்தரிக்கப்படுகிறார்.

திரைமொழியை எத்தனை நுட்பத்துடன் உபயோகிக்க வேண்டும் என்பதை பல காட்சிகளில் சூசகமாக உணர்த்துகிறார் மஜித் மஜிதி. விபத்தொன்றில் சிக்கி நகரப் பணியின் வருவாயையும் இழந்து படுத்துக்கிடக்கும் கரீம், தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனக்குப்பதிலாக பணிபுரிவதை கையாலகாததனத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். உடம்பு ஒரளவிற்கு குணமான ஒரு தனிமையில் கீச்கீச்சென்று கத்திக் கொண்டிருக்கிற குருவியின் சப்தம் அவரது கவனத்தை ஈர்க்கிறது. எப்படியோ அறைக்குள் மாட்டிக் கொண்ட அந்தக் குருவி தப்பிக்கும் நோக்கத்துடன் கண்ணாடிச் சன்னலில் முட்டி முட்டி கீழே விழுகிறது. மெல்ல தவழ்ந்து சென்று சன்னலை திறந்து குருவியை விடுவிக்கிறார் கரீம். அதே சமயத்தில் அவரது பழைய பணி திரும்பக் கிடைக்கும் நல்ல செய்தியும் கிடைக்கிறது. குருவியைப் போல தத்தளித்துக் கொண்டிருந்த அவர் அதிலிருந்து விடுவிக்கப்படுகிற சூழலை மிகப் பொருத்தமாக உபயோகித்திருக்கிறார் இயக்குநர்.

காது கேளா மகளுடான தகப்பனின் பரஸ்பர அன்பும், தங்க மீன்கள் வளர்ப்பதன் மூலம் செல்வந்தனாகி விடலாம் என்ற கனவுடன் அலையும் அவரது மகனும், எப்பவும் அவனை கொலைவெறியுடன் துரத்தியடிக்கும் கரீமும், வளர்ந்த பிள்ளைகளிடமிருந்து விலகி மனைவியை நேசத்தை தனிமையில் அடைய விழைகிற கரீமின் குழைவும் அதற்கான மனைவியின் வெட்கமும், சிறுவர்களின் தங்கமீன் கனவு நிராசையில் முடிகிற அநீதியும் அதிலிருந்து துளிர்க்கிற நம்பிக்கையும்  என பல நுட்பமான காட்சிகள் நம்மை நெகிழ்ச்சியடையவும் பரவசமடையவும் செய்கின்றன. சிறுவர்களின் உலகை இயல்பாக காட்சிப்படுத்துகிற விதத்தில் மஜித் மஜிதியின் தனித்துவம் இதிலும் வெற்றி பெறுகிறது.

 

கரீமாக நடித்த Reza Naji-ஐ தோற்றப் பொலிவில்லாததின் காரணமாகவே நம்மூர்களில் துணைநடிகராக கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாடக நடிகரான இவர் 'சில்ரன் ஆ·ப் ஹெவனின்' மூலம் பரவலான கவனத்தைப் பெற்றார். இத்திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருதை பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பெற்றார். இரானின் நிலப்பரப்பை கூடுதல் அழகியல் கவனத்துடன் படமாக்கும் மஜித் மஜிதி இதிலும் அவ்வாறே இயங்கியுள்ளார். நகரத்தின் காட்சிகளும் அதற்கேயுரிய பரபரப்புடன் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.  என்றாலும்  பெரும்பாலும் மிக யதார்த்தமாக இயங்கும் ஒளிப்பதிவு, பருந்துப் பார்வையுடன் கூடிய இரண்டு ஏரியல் ஷாட் காட்சிகளில் பிரம்மாண்டமாயும் செயற்கையாயும் நம்மை உணரச் செய்து அந்நியமாய் விலகி நிற்பதை தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. 

மற்ற எந்த நாட்டுத் திரைப்படங்களையும் விட இரான் திரைப்படங்கள் மனதிற்கு மிக நெருக்கமாய் இருப்பதை பல முறை உணர்ந்திருக்கிறேன். The Song of Sparrows-ம் அதிலொன்று.

தொடர்புடைய பதிவுகள்:

காட்சிப்பிழை

'புது அப்பா' நல்லவரா, கெட்டவரா?..

suresh kannan

Monday, December 07, 2009

காட்சிப் பிழை

கண்ணொளி அற்ற கதாபாத்திரங்கள் இயல்பாகவோ மிகையாகவோ இயங்கும் பல திரைப்படங்களை நாம் பார்த்திருக்கிறோம். தமிழ்த் திரைப்படங்களில் கமலின் ராஜபார்வை, விக்ரமின் காசி, 'அமர்க்களத்தின்' சார்லி பாத்திரம், 'நான் கடவுள்' அம்சவல்லி... போன்றவற்றை ஒரளவிற்கு குறிப்பிட்டுச் சொல்லலாம். ஆனால் கண்ணொளியை இழந்த ஒரு பாத்திரம் அதை மீண்டும் பெற்ற பிறகு அவர்களுக்கு ஏற்படும் மனச்சிக்கல்களை எந்தவொரு திரைப்படமும் முன்வைத்ததாக எனக்குத் தெரியவில்லை. கண் பார்வை கிடைத்ததோடு அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவே அவை நிறைவுறும். பார்வையற்ற ஒருவர் அந்தக் குறைபாட்டில் இருந்து விடுபடுவது மகிழ்வடையக்கூடிய நிகழ்வுதானே, அதில் என்ன பிரச்சினை இருக்கப் போகிறது என்பதைத்தான் ஒரு சராசரி மனம் யோசிக்கும். ஆனால் அதிலிருக்கும் மனச்சிக்கல்களை பிரதானமாக வைத்து இயங்குகிறது மஜித் மஜிதியின் The Willow Tree திரைப்படம். (Beed-e majnoon - 2005).



யூசுப் கல்லூரி பேராசிரியர். சிறுவயது விபத்தில் கண்பார்வையை இழந்தவர். மனைவியுடனும் அன்பான மகளுடனும் வாழ்க்கை நகர்கிறது. தம்முடைய தீராத முனைப்பின் மூலம் தம்முடைய தடையைத் தாண்டி சிறந்த பேராசிரியராக இருக்கிறார். என்றாலும் தம்முடைய கண் பார்வை திரும்புவதைப் பற்றின ஆசையும் வேண்டுதலும் அவருக்கு இருக்கிறது. ஏறத்தாழ முப்பத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மருத்துவ அதிசயமாக, பிரான்சில் நடைபெறும் அறுவைச் சிகிச்சையின் மூலம் அவருடைய பார்வை திரும்பக் கிடைக்கிறது. இலையைச் சுமந்துச் செல்லும் ஒரு எறும்பைக் காண நேர்கிற முதல் காணலில் மிகவும் அகமகிழ்ந்து போகிறார் யூசுப். தாம் இதுவரை குரல்களாகவும் விரல்தடவல்களாகவும் உணர்ந்த விஷயங்களைக் காணப் போகிற மகிழ்ச்சித் திகைப்பில் ஆழ்கிறார். ஆனால் நிகழ்வுகள் எதிர்த்திசையில் பயணிக்கின்றன. இதன் காரணமாக தீராத மன உளைச்சலுக்கு ஆளாகிறார். மனைவி அவரை விட்டு பிரிந்துப் போகிறார். யூசுப் என்கிற அந்த மனிதன் எதிர்கொள்கிற அகச்சிக்கல்களை அறிய நாம் இந்தத் திரைப்படத்தினைக் காண வேண்டும்.



சிறந்த நடிப்பிற்காக நாம் யாரையெல்லாமோ பாராட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால் யூசுப்பாக நடித்த Parviz Parastui-ன் திறமையைக் காண நேர்ந்தால் வியப்பால் நாம் திகைப்படைந்து விடுவோம். அந்த அளவிற்கு தம்முடைய உயிரோட்டமான, இயல்பான பங்களிப்பின் மூலம் இந்தப் படைப்பின் முழுக்க நிறைந்திருக்கிறார். Scent of a Woman-ல் அல்பசினோவின் பார்வையற்ற பாத்திரத்தின் திறமையை இந்தப் பதிவில் திகட்ட திகட்ட எழுதியிருந்தேன். ஆனால் இப்போது அல்பசினோவை பின்னுக்குத் தள்ளிக் கொண்டு Parviz Parastui முன்னே நிற்கிறார்.


பார்வையற்ற நிலையில் தம்முடைய மகளுடன் பழகுகிற ஆரம்பக் காட்சியில் அவருடைய முகத்தில் தந்தையின் கனிவு நிறைந்திருப்பதைக் காணலாம். அறுவைச் சிகிச்சை முடிந்த பிறகு தம்முடைய நீண்ட வருட வேண்டுகோள் நிறைவேறப் போகிற மகிழ்ச்சியிலும் பதட்டத்திலும் மருத்துவர் பிரிப்பதற்கு முன்னாலேயே தம்முடைய கண் கட்டுக்களை தாமே மெல்ல அவிழ்த்துக் கொண்டு சுற்றுப் புறக்காட்சிகள் தெரிவதைக் கண்டு மகிழும் காட்சி குறிப்பிடத்தகுந்தது. பார்வையற்ற நிலையில் ஊன்றுகோலின் உதவியுடன் இயல்பாக நடக்க முடிந்தவருக்கு, பார்வை கிடைத்தவுடன் அப்போதுதான் நடக்க முயல்கிற குழந்தை போல் நடக்கிற காட்சியில் அவருடைய உடல் மொழி மிக அற்புதமாய் அமைந்திருக்கிறது. இதிலிருந்து மெல்ல மெல்ல விடுபவதை தொடர்ச்சியாக காட்சிகளில் மிகத் திறமையாக பின்பற்றியிருக்கிறார்.

விமான நிலையத்தில் தம்மைக் காண வந்திருக்கும் பெருந்திரளான கூட்டத்தில் எந்த முகம் தம்முடைய மனைவி, மகள் என்று தேடுகிற காட்சியும் மிக அற்புதம். மெல்ல அவருக்குள் ஏற்படுகிற ஏமாற்றத்தையும் அவர் கற்பனைக்கு மாறாக உலகம் இயங்கும் ஏமாற்றத்தையும் இயக்குநர் மஜித் மஜிதி உணர்வுப்பூர்வமான காட்சிப் பின்னணிகளின் மூலம் நகர்த்துகிறார். ரயில் பயணத்தில் பிக்பாக்கெட் திருடனின் சாகசத்தை வியப்புடனும் திகைப்புடனும் பார்க்கும் காட்சி ஒரு உதாரணம். தம்முடைய வாழ்க்கை இத்தனை வருடங்கள் வீணாக கழிந்ததாக தம்முடைய தாயிடம் வெடிக்கும் காட்சியிலும் இறுதியில் தம்முடைய புத்தகங்கள் அனைத்தையும் வீசியெறியும் காட்சியும் பார்வையாளனுக்கு திகைப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் காட்சிகள்.

மஜித் மஜிதியின் இன்னுமொரு சிறந்த திரைப்படம்.


suresh kannan

Saturday, July 04, 2009

'புது அப்பா' நல்லவரா, கெட்டவரா?..

முன்முடிவுகளின் அடிப்படையிலேயே நாம் பெரும்பான்மையான நேரங்களில் இயங்குகிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த நோக்கில் அனுபவம் என்பது இறக்கி வைக்க முடியாத சுமை. சில நபர்களை நமக்கு பார்த்த கணத்திலேயே பிடிக்காமற் போவதும் சிலரை பார்க்காமலேயே பிடித்துப் போவதும் முன்முடிவுகளின் அடிப்படையில்தான். ரயில் பயணத்தின் போது எதிரே அமரப் போகின்ற பயணி, சிடுமூஞ்சியாகவும் அவருடைய பெட்டிகளை வைத்துக் கொள்ள நம்முடைய இடத்தை ஆக்ரமிக்கப் போகிறவர் என்பதான கற்பனைகளுடனும் அதற்குண்டான ஜாக்கிரதை முன்னேற்பாடுகளுடனும் அமர்ந்திருக்கிறோம். வெளியே வரும் போது ஆட்டோகாரர் நிச்சயம் நம்மை ஏமாற்ற முயல்வார் என்ற முன்முடிவுடன் அவர் கேட்பதிலிருந்து ஐம்பது சதவீதத்தைக் குறைத்து பேரம் பேசுகிறோம். உறவுகளில் முன்முடிவோடு தவறாக பெரிதும் அணுகப்படுவது 'சித்தி' என்கிற உறவுமுறை. சித்தி என்றாலே அவர் தன்னுடைய கணவரின் குழந்தைகளை நிச்சயம் சரியாக வளர்க்காமல் கொடுமைப்படுத்துவார் என்பது பொதுவான எண்ணம்.

என்னுடைய மூத்த சகோதரருக்கு திருமணமாகியிருந்த சமயம். அதுவரை எங்களுக்குள் நாங்கள் அடித்துக் கொண்டும் கூடிக் கொண்டும் விரோதித்துக் கொண்டும் நட்பு பாராட்டிக் கொண்டும் இருந்தோம். அதுவரை இருந்த சூழ்நிலையைக் கலைத்துக் கொண்டு புதிதாக ஒரு அந்நியர் எங்கள் வீட்டில் நுழைகிறார். என்னுடைய பதின்மத்தில் இருந்த அந்த வயதுக்கேயுரிய அறியா வன்மத்தோடு 'அண்ணி' என்கிற அந்த உறவைப் புரிந்து கொள்ள முயலாமலேயே வெறுக்கவும் புறக்கணிக்கவும் செய்தேன். அவர் சாப்பாடு கொண்டு வந்தால் சாப்பிட மாட்டேன்; எதிரில் வந்தால் வெறுப்போடு திரும்பிச் செல்வேன். அவரின் நல்ல குணத்தைப் புரிந்து கொள்ள ஒரு மாதம் பிடித்தது. 'புதிதாக வரப்போகிறவள்' தன் மகனை பிரித்துவிடுவாளோ என்கிற வழக்கமான possessiveness குணத்தை வெளிப்படுத்தும் விதமாக என் அம்மா ஒரு முன்முடிவுடன் அண்ணனின் திருமணத்திற்கு முன்பிருந்தே எங்களிடையே உரையாடிக் கொண்டிருந்தது எனக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று பிறகு உணர்ந்தேன். உறவுகளை முன்முடிவுடன் அணுகக்கூடாது என்கிற படிப்பினையை இது அளித்தது.



இரானிய திரைப்பட இயக்குநர் மஜித் மஜிதியின் திரைப்படமான 'PEDAR' (தந்தை என்று பொருள்) இதைத்தான் பிரதானமாக சொல்வதாக எனக்குத் தோன்றுகிறது.

ஒரு விபத்தில் தன்னுடைய தந்தையை இழந்த சிறுவனான Mehrollah பொருளாதாரக் காரணங்களுக்காக கிராமத்திலிருந்து நகரத்திற்கு சம்பாதிக்கச் செல்கிறான். பணியிடத்தில் விடுமுறையைப் பெற்றுக் கொண்டு அம்மாவிற்கு, தங்கைகளுக்கு என்று ஒவ்வொரு பொருளாக தேடி வாங்கி ஊருக்குத் திரும்பும் போது தன்னுடைய பால்ய நண்பனின் மூலம் அந்த அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது. அவளுடைய அம்மா ஒரு போலீஸ்காரனை திருமணம் செய்து கொண்டு வேறொரு வீட்டில் வசிக்கிறார். "அந்த போலீஸ்காரன் ரொம்ப நல்லவனாம். உங்க அம்மா அதிர்ஷ்டம் செஞ்சவங்கன்னு ஊருக்குள்ள பேசிக்கறாங்க". கேட்ட மாத்திரத்திலேயே முகந் தெரியாத அந்த போலீஸ்காரனின் மீதும் அதற்குக் காரணமாகியிருக்கிற அம்மாவின் மீதும் ஆத்திரமும் வன்மமும் பெருகுகிறது மெஹ்ருல்லாவிற்கு. தான் வாங்கி வந்த பொருட்களை அவர்கள் வீட்டு வாசலில் எறிந்து விட்டு அம்மாவையும் ஆத்திரப்பார்வையுடன் முறைத்துவிட்டு தன்னுடைய பழைய வீட்டில் தங்குகிறான். எப்படியாவது அந்த போலீஸ்காரனை நிம்மதியிழக்கச் செய்ய வேண்டும் என்பதே அவனுடைய பிரதான நோக்கமாயிருக்கிறது.

நடுஇரவில் அவர்கள் வீட்டின் ஜன்னலை கல்லெறிந்து உடைக்கிறான். தன்னுடைய தங்கைகளை யாருக்கும் தெரியாமல் கூட்டி அழைத்து வந்து அம்மாவை பதைக்கச் செய்கிறான். தன்னுடைய புது தகப்பனை வழியில் முறைத்து 'தாயின் மருத்துச் செலவிற்கான' பணத்தை விட்டெறிகிறான். அவனுடைய அம்மா தன்னுடைய ஆதரவற்ற நிலையை எடுத்துச் சொல்லிக் கதறுவதை ஏற்காமல் புறக்கணிக்கிறான். "குடும்பத்திற்கு வேண்டிய பணத்தைத்தான் நான் சம்பாதிக்கப் போயிருந்தேன். நீ எதுக்காக இந்த ஆள கல்யாணம் செஞ்சிக்கிட்ட" என்று ஆணில்லாமல் ஒரு பெண் எதிர்கொள்ள சங்கடங்களையெல்லாம் அறிந்திருக்க முடியாத பால்யத்த்தின் அறியாமையுடன் எதிர்க்கேள்வி கேட்கிறான்.

ஒரு விபத்தில் சுவற்றின் மேலேயிருந்து கீழே விழுந்து சுவாதீனமின்றி கிடக்கும் மெஹ்ருல்லாவை தங்களுடைய பராமரிப்பில் வைத்து கவனிக்கின்றனர் அவனுடைய அம்மாவும் புதுதகப்பனும். தன்னுடைய இருப்பு அவனுக்கு சங்கடத்தை தரக்கூடாது என்பதற்காகவே பணியிடத்திலேயே தற்காலிமாக தங்கிக் கொள்கிறார் புதுதகப்பன். இவை எதுவும் மெஹ்ருல்லாவின் வன்மத்தை தேயச் செய்யவில்லை. போலீஸ்கார புதுதகப்பனின் துப்பாக்கியை களவாடிக் கொண்டு தன்னுடைய பால்ய நண்பனுடன் நகரத்திற்கு பறக்கிறான். அவனைத் தேடி கோபத்துடன் போலீஸ்காரரும் நகரத்திற்குச் செல்கிறார். நகரத்தில் ஜாலியாக சுற்றித்திரியும் அவர்களை பெருமுயற்சிக்குப் பின் துரத்திப்பிடித்து நண்பனை பேருந்தில் ஏற்றி அனுப்பி விட்டு மெஹ்ருல்லாவை கைவிலங்கிட்டு தன்னுடைய பைக்கிலேயே அழைத்து வருகிறார். வழியெங்கும் பிடிவாதமான மெளனத்துடன் பயணிக்கிறான் மெஹ்ருல்லா. "எத்தன திருட்டுப் பசங்கள பாத்திருப்பேன். எங்கிட்டயே உன் போக்கிரித்தனத்தை காட்டறியா" என்று அவனைத் திட்டிக் கொண்டே வருகிறார் போலீஸ்காரர்.

ஒரு சூழ்நிலையில் அவரிடமிருந்து வண்டியுடன் தப்பித்துவிடுகிறான் மெஹ்ருல்லா. ஆனால் இது போல் பல திருடர்களை பார்த்து அனுபவமுள்ள அந்த போலீஸ்காரர் மலையை சுற்றிவந்து பாதையில் தடையை ஏற்படுத்தி வைக்கிறார். இதை எதிர்பார்க்காத மெஹ்ருல்லா வண்டியுடன் கீழே விழுந்து திரும்பவும் மாட்டிக் கொள்கிறான். திரும்பவும் கைவிலங்கு மாட்டி அழைத்து வருகிறார். இரவு ஒரிடத்தில் தங்குகிறார்கள். அவர் தரும் உணவைப் புறக்கணிக்கிறான் மெஹ்ருல்லா. உறக்கத்தின் இடையில் தப்பிக்க முடியுமா என்று பார்க்கிறான். ஆனால் பயங்கர இருட்டில் ஓநாய்களின் ஊளையோசை அவனைத் தடுக்கிறது. இதை நன்றாக அறியும் போலீஸ்காரர் நிம்மதியாக உறங்குகிறார். திரும்பவுமான பயணத்தில் வண்டி பழுதாகி பாலைவனத்தின் நடுவிலேயே நின்றுவிடுகிறது. பழுதைச்சரிசெய்யும் எந்த முயற்சியும் பலனளிக்க வில்லை. எரிச்சலின் உச்சியில் மெஹ்ருல்லாவை போட்டுச் சாத்தியெடுக்கிறார். பின்பு அவனை கைவிலங்கிட்டு கால்நடையாகவே அந்த பாலைவனத்தை கடக்க முயற்சிக்கிறார். தீடீரென்று ஏற்படும் பாலைவனப் புயல் இருவரையும் அலைக்கழிக்கிறது. தன்னையும் மெஹ்ருல்லாவையும் பாதுகாத்துக் கொள்ள பெருமுயற்சியெடுகிறார். புயல் ஓய்ந்து மறுபடியும் நடக்க ஆரம்பிக்கும் போது வயதான அந்த போலீஸ்காரரால் ஒரு நிலைக்கு மேல் நடக்க முடியவில்லை. அதீதமான தாகமும் களைப்பும் கண்தெரியுமளவிற்கு நீளும் மணற்பரப்பும் உயிர்பயத்தை ஏற்படுத்திவிடுகிறது. கண்ணீருடன் தன்னை அங்கேயே விட்டுவிட்டு மெஹ்ருல்லாவை போகச் சொல்கிறார்.

கடுமையானவராக தெரிந்தாலும் அவரிடமிருந்து அவ்வப்போது கசியும் அன்பை ஓரளவிற்கு புரிந்து கொண்டிருக்கும் மெஹ்ருல்லா இந்த உச்சநிலையில் அவரின் அன்பை முழுமையாக தெரிந்து கொள்கிறான். நினைவின்றிக் கிடக்கும் அவரை மிகுந்த சிரமத்திற்குப் பிறகு அருகிலிருக்கும் ஒரு எதிர்பாராத ஓடையின் குளிர்ச்சியில் வந்து கிடத்துவதுடன் நிறைகிறது திரைப்படம்.

()

பொதுவாக இரானியத் திரைப்படங்களின் உருவாக்கமும் கதை சொல்லும் விதமும் அதன் நிலப்பரப்பும் என் மனதிற்கு மிக நெருக்கமாக இருப்பதைப் பார்க்கிறேன். இதுவும் அவ்வாறே. மஜித் மஜிதி இந்தத் திரைப்படத்தின் மூலம் எந்தவித கோணங்கித்தனமான உத்திகளுமில்லாமல் நேரடியாக பார்வையாளனிடம் உரையாடுகிறார். இந்தப் படத்தின் இரண்டே இரண்டு பிரதான பாத்திரங்களான போலீஸ்காரர் மற்றும் அந்த பதின்ம வயதுச்சிறுவன் ஆகிய இரண்டு பாத்திரங்களும் மிகத் திறமையாக உருவாக்கப்பட்டுள்ளன. போலீஸ்காரர் மெஹ்ருல்லாவை கருணையோடு அணுகினாலும் திரும்பத் திரும்ப அவனின் வன்மமான செயல்கள் வெளிப்படும் போது ஆத்திரமும் கோபமும் அடைந்து அதே வன்மம் அவருக்குள்ளும் பரவுவது இயல்பாக சொல்லப்பட்டிருக்கிறது.

நம்முடைய தமிழ்த் திரைப்படங்களின் பாத்திரங்கள் நீண்ட காலமாகவே கருப்பு-வெள்ளைத்தனத்துடனே உருவாக்கப்படுகின்றன. நாயகன் எலலா விதக் கல்யாண குணங்களுடன அதீத நல்லவனாகவும் சித்தரிக்கப்படும் வேளையில், வில்லன் குடும்பம் குட்டி என்ற எந்தக் கருமாந்திரங்களுமில்லாமல் எப்போதும் மது, மங்கைகளுடன் உல்லாசபுரி நாயகனாகவும் அதீத கொடுமைக்காரனாகவுமே சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். (தங்கத்தையோ, போதைப்பொருளையோ கைமாற்றின 'டீல்' வெற்றிகரமாக முடிந்தவுடன் 'என்ன வெறும் தண்ணிதானா என்பார் விருந்தாளி. வில்லன் புன்னகையுடன் கையைத் தட்டினவுடன் இதற்காகவே காத்திருந்த, எந்தெந்த பாகங்கள் தெரியவேண்டுமோ அதற்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட விநோதமான உடையுடன் இரட்டை அர்த்தப்பாடலுடன் வருவார் கவர்ச்சி நடிகை). அவ்வாறில்லாமல் பயபக்தியாக சாமி கும்பிடுகிற ஒரு முதியவரை காட்டும் அறிமுகக் காட்சியுடன் இயல்பான வில்லனை காட்டிய படம் மணிரத்னத்தின் 'பகல் நிலவு' என்று நினைக்கிறேன்.

Photobucket

இந்தப் படம் எனக்கு உணர்த்திய இன்னொரு செய்தி, ஒரே சூழ்நிலையில் திரும்பத் திரும்ப வாழ நேரும் மனிதர்களுக்குள் நீடிக்கும் முரண்கள், நீண்ட பயணங்களின் போது அது தரும் இனிய அனுபவங்களால் புகையாய் மறைந்து போவது. 'காப்பி போட்டாச்சா' என்பது போன்றவற்றிற்கு மாத்திரம் வீட்டில் வாயைத் திறக்கும் சிடுமூஞ்சி அப்பா, ரயில் பயணத்தின் போது கொய்யாப் பழம் விற்கும் சிறுமியின் விற்பனை சாதுர்யத்தை நினைத்து வாய்விட்டு சிரிப்பதை பார்க்கும் போது நமக்கு ஆச்சரியமாக இருக்கும். சமையலறையையும் அம்மாவையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு அங்கேயே புழங்கிக் கொண்டிருக்கும் எரிச்சலுடன் பதிலளிக்கும் அந்த ஜீவன் அடக்க மாட்டாத மகிழ்ச்சியுடன் தன் உறவினர் தோழியுடன் திருமண வீட்டில் உரையாடிக் கொண்டிருப்பதைக் காணும் போது இன்னும் ஆச்சரியம் நீளும். பயணங்களை நம்முடைய தொன்மையான சம்பிரதாயங்களுடன் பின்னிப் பிணைக்க வைத்திருப்பதின் காரணம் இதுவாகத்தானிருக்க வேண்டும். அதுவரை தன்னுடைய புதுதகப்பனிடம் முரண் கொண்டிருக்கும் மெஹ்ருல்லா பயணங்களின் இடையில் ஏற்படும் உயிர்போகும் சிக்கலான தருணத்தில் அவரின் அன்பைப் புரிந்து கொள்கிறான்.

போலீஸ்காரராக நடித்திருக்கும் Mohammad Kasebi தொழில்முறை நாடக நடிகர் மாத்திரமல்லாது இயக்குநரும் ஆவார். Hassan Sadeghi மெஹ்ருல்லா என்கிற சிறுவனாக மிகத்திறமையான முகபாவங்களுடன் தன்னுடைய பங்களிப்பை அளித்திருக்கிறான். மெஹ்ருல்லாவின் நண்பனாக வரும் சிறுவனின் துணைப்பாத்திரமும் திறமையாக உருவாக்கப்பட்டுள்ளது. கிராமத்தின் வறுமையில் உழன்று கொண்டிருக்கும் அவனுக்கு 2000 டோமன் (ரியால்) பணத்தை சம்பாதிப்பதே கனவெல்லையாக இருக்கிறது. இதற்காக மெஹ்ருல்லாவை தன்னையும் நகரத்திற்கு அழைத்துப் போகச் சொல்லி நச்சரித்துக் கொண்டேயிருக்கிறான். இதற்காகவே மெஹ்ருல்லாவிற்கு ஒரு விசுவாசமான அடிமை போல இருக்கிறான். நகரத்தின் செளகரியங்களை அனுபவிக்கும் போது அவனுடைய கனவு நிறைவேறி விட்டதாகவே தோன்றுகிறது. ஆனால் போலீஸ்காரரால் பிடிபட்டு திருப்பியனுப்பப்படும் போது ஆற்றாமையால் அழுகிறான். பொருளாதாரக் காரணங்களுக்காக நகரத்திற்கு புலம்பெயரும் கனவுகளுடன் இருக்கும் பல சிறுவர்களை இந்தப் பாத்திரம் நினைவுப்படுத்துகிறது.


இந்தத் திரைப்படம் நிறைவடையும் காட்சி மிக முக்கியமானது. சற்றும் நாடகத்தனமில்லாமல் இயல்பான நிகழ்வுடன் தன்னுடைய புதுதகப்பனின் அன்பை அந்தச் சிறுவன் முழுக்கவும் புரிந்து கொள்வதான காட்சியுடன் படம் நிறைகிறது. நினைவின்றி கிடக்கும் போலீஸ்காரனின் சட்டையிலிருந்து மெஹ்ருல்லாவின் குடும்பம் சந்தோஷமாகச் சிரிக்கும் புகைப்படமொன்று மிதந்து சிறுவனின் கையில் படருவதோடு திரை இருளடைகிறது. மாறாக இருவரும் கட்டிப்பிடித்து கதறியழுதிருந்தால் அது கேவலமானதொரு காட்சியாக அமைந்திருக்கும். இந்தப் புள்ளியில்தான் உலக சினிமாவிற்கும் மற்ற சினிமாவிற்கான வித்தியாசம் பொதிருந்திருக்கிறது எனக் கருதுகிறேன்.

suresh kannan