Thursday, April 27, 2006

அட்சய திருதியையும் அசட்டுத்தனங்களும்

வருகிற ஏப்ரல் 30, 2006 அக்ஷய திருதியை நாளாக கொண்டாடப்படுவதையொட்டி (?) ஏற்கெனவே பதியப்பட்ட இந்தக் கட்டுரை மீள் பதிவு செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட நாளில் தங்கம் வாங்குபவர்களுக்கு சமர்ப்பிக்கவும் படுகிறது. :-)

()


கடந்த ஒரு வாரமாக சென்னை அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. பத்திரிகையிலும் தொலைக்காட்சியிலும் விளம்பரங்களுமாக 'இயேசு வருகிறார்' செய்திக்கு அப்புறமாக பரபரப்பான செய்தியாக இதுதானிருக்கும் என்கிற வகையில் ஒரே கலாட்டாவாக இருக்கிறது. பெரும்பாலான பெண்கள் செவ்வாய் கிரகத்திற்கு குடிபோகப் போவதான பரபரப்பில் இருக்கிறார்கள். பக்கத்து வீட்டு வம்புகளும், தொலைக்காட்சி தொடர்களைப் பற்றியும் பேசுவதற்கு முன்னால் அவர்கள் விவாதிக்கக் கூடிய விஷயம் இதுவாகத்தானிருக்கிறது. ஆக்கப்பூர்வமாக ஏதாவது பேசியிருக்கப் போகிறார்கள் என்று கனவு காணாதீர்கள். இல்லை.

அக்ஷய திருதியையான இன்று ஒரு கிராம் தங்கம் வாங்கினால் கூட வருகிற நாட்களில் அவர்கள் கேட்காமலேயே, கனக தாரா ஸ்தோஸ்திரம் சொல்லாமலேயே அவர்கள் வீட்டு கூரையைப் பிய்த்துக் கொண்டு தங்கம் கொட்டுமாம். பீரோவைத் திறந்து பார்த்தால் அவர்களுக்குத் தெரியாமலேயே கிலோ கணக்கில் தங்கம் இருக்குமாம்.

சீட்டு நிறுவனங்கள் 38 சதவீத வட்டி கொடுப்பதாக கூறி நிதி வசூலித்த போது இருந்த அதே பரபரப்பு இப்போதும் நிலவுகிறது. பெண்கள் பூரிப்புடன் தங்கநகைக் கடைகளில் வரிசையில் நிற்க, ஆண்கள் அம்போவென்று விளக்கெண்ணைய் குடித்த முகபாவத்துடன் வாசலில் காத்திருக்கிறார்கள். ஏறக்குறைய ஒரு ரூபாய்க்கு லாட்டரி வாங்கி ஒரு கோடி சம்பாதிக்க நினைக்கும் பேராசைக்கு கொஞ்சமும் குறைவில்லாத தன்மை அவர்கள் கண்களில் பார்க்க முடிகிறது.

இந்த நாளின் ஐதீகம் என்னவென்று எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை. ஆனால் இந்த மாதிரியான பேராசைத்தனமான அசிங்கத்தை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு, ஐதீகம் என்று பம்மாத்து செய்யும் அசட்டுத்தனம் என்னை அருவருப்புடன் குமட்ட வைக்கிறது. இந்த மாதிரி பேராசையுடன் நகை வாங்கப் போகிறவர்கள், கல்வியறிவில்லாத, அடுத்து வேளை சோற்றுக்கு உத்தரவாதமில்லாத அடித்தட்டு மக்கள் இல்லை. நன்கு படித்த, வாழ்க்கையின் அடிப்படை வசதிகள் அத்தனையும் கொண்ட உயர் / நடு மத்திய தர வர்ககத்தினரே. மாருதியில் பயணிக்கிறவன் டொயாட்டாவிலும், தாம்பரத்தில் வீடு வைத்திருக்கிறவன், அண்ணாநகரில் பங்களா வாங்கும் பேராசையிலும் இருக்கிறான் என்பதே இந்தச் செய்தியில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மறைமுக உண்மைகள். மனிதன் தன் வசதிகளை பெருக்கிக் கொண்டு போகட்டும் தப்பில்லை. ஆனால் அது உழைப்பின் மீது சாத்தியமாகப்பட வேண்டுமே தவிர குருட்டு அதிர்ஷ்டங்களால் வரும் என்று எதிர்பார்ப்பது அபத்தமானது. அசட்டுத்தனமானது.

இவர்கள் தாங்கள் கற்ற கல்வியை எதற்கு பயன்படுத்துகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எந்தத்துறையில் படித்தால் வளமான எதிர்காலம் இருக்குமென்று தேடி லஞ்சம் கொடுத்தாவது முட்டி மோதி சீட் வாங்கி படித்து, நல்ல வருமானம் வரும் நிறுவனத்தில் பணிபுரிந்து, மார்க்கெட்டில் தனக்கேற்ற விலையை தரும் பெண்ணை திருமணம் செய்து கொண்டு, இரண்டு படுக்கையறை கொண்ட வீடு வாங்கி, தன் எதிர்காலத்திற்காகவும் வாரிசுகளுக்குமான சொத்தை சேர்த்து வைத்து விட்டு ஒரு நாள் ஹார்ட் அட்டாக் வந்து செத்துவிடுவதைத் தவிர, தான் கற்ற கல்வியை சுயசிந்தனைகளுக்காக பயன்படுத்துகிறார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. தன் முன்னோர்கள் சொன்ன காரியங்கள் என்றாலும் அதை நாமாகவும் ஆராய்வோம் என்கிற அடிப்படை யோசனை கூட இவர்களுக்கு தோன்றாமல் ஆட்டு மந்தைக் கூட்டங்களாக இருப்பது எரிச்சலாக இருக்கிறது. 'தேடிச் சோறு நிதந் தின்று' என்கிற பாரதியின் பாட்டுக்கு நாமே உதாரணங்களாய்த் திகழும் வேடிக்கை மனிதர்களாயிருக்கிறோமா?

உலகத்திலேயே மிகக் கொடுமையான விஷயம் அறியாமைதான். போதுமான கல்வியறிவு பெற்றிருந்தும் அதே அறியாமையில் நாம் இருப்பது இன்னும் கொடுமையான விஷயம். என்ன செய்தாவது நாம் பணக்காரர்களாகி விட வேண்டும் என்கிற ஆசைதான் இவர்கள் கண்களை மறைக்கிறதா? அட்சய திருதியையில் தங்கம் வாங்கினால் தொடர்ந்து தங்கம் சேரும் என்பது உண்மையானால், போன வருடம் இதே நாளில் தங்கம் வாங்கியதற்கு இந்த வருடம் அதிக தங்கம் இவர்களிடம் 'தானாக வந்து' சேர்ந்திருக்கிறதா? அதற்கும் முன்வருடம் தங்கம் வாங்கியவன் இந்நேரம் தங்கச் சுரங்கத்திற்கல்லவா உரிமையாளனாக இருந்திருக்க வேண்டும். இல்லையே? இந்த அடிப்படை யோசனை கூட இல்லாமல் இந்த வருடமும் தங்கம் வாங்க வரிசையில் நிற்பவர்களை என்னவென்பது? பரபரப்பான சினிமாவின் அனுமதிச்சீட்டு ஒன்றிற்கு முன்பதிவு செய்வது போல், இந்த வருடமும் குறிப்பிட்ட இந்நாளில் தங்கம் வாங்க முன்பதிவு செய்யப்படுகிறதாம்.

இந்த விஷயத்தில் வணிகர்களைச் சொல்லி பயனில்லை. வணிக தர்மப்படி அவர்களின் முக்கிய நோக்கம் பொருட்களை எப்படியாவது விற்பதும் அதன் மூலம் லாபம் பெறுவதும். இதற்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யவோ வாக்குறுதி கொடுக்கவோ தயாராக இருப்பார்கள். வாடிக்கையாளர்களாகிய நாம் அலலவா சிந்திக்க வேண்டும்? தந்தையர் தினம், அன்னையனர் தினம் என்று இறக்குமதி செய்யப்பட்ட சென்டிமென்ட்டுகளை அவர்கள் தங்கள் விளம்பரங்களின் மூலம் ஊதிப் பெருக்கி வாடிக்கையாளர்களை எப்படியாவது வாங்கச் செய்கிறார்கள். இந்த அட்சய திருதியையும் அதே போன்றதுதான்.

()

பெண்ணுரிமை, பெண்ணியம் பேசும் சில பெண்களும் உடம்பு நிறைய நகைகளை பூட்டிக் கொண்டு முழங்கும் போது சிரிக்கவே தோன்றுகிறது. தன்னை, தன் சிந்தனைகளை வைத்து பிறர் மதிக்க வேண்டும் என்கிற தன்னம்பிக்கை இல்லாமல் தான் போட்டிருக்கிற நகைகளை வைத்து தன்னை பிறர் மதிக்க வேண்டும் என்று அடிமைச் சிந்தனைகளுடன் இருக்கிற இவர்கள் பெண்ணுரிமை என்பது எது என்பதை தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார்களா? சில ஆண்களும் இவர்களுக்கு போட்டியாக நகைகள் அணிந்திருப்பதை காண எரிச்சலாகவும், அருவருப்பாகவும் இருக்கிறது. இடது கை விரல்களிலும் மோதிரங்கள் அணிந்திருப்பவர்களை காணும் போது, இடது கையால் மட்டும் செய்ய வேண்டிய ஒரு வேளையில் என்ன செய்வார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

கேவலம் ஒரு உலோகம் நம்மை இவ்வாறு ஆட்டி வைப்பது குறித்து நாம் சிந்தித்திருக்கிறோமா? இரும்பைப் போல, அலுமினியத்தைப் போல இவை நம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கக்கூடியதாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. நாம் முதலீடு செய்திருக்கிற அத்தனை தங்கத்தையும் பொதுவில் முதலீடு செய்தால் உலக வங்கிக்கே கடன் கொடுக்கும் நிலையில் இந்தியா மாறிவிடும் என்று தோன்றுகிறது. அத்தனை முதலீடு ஒரு உலோகத்தின் மீது உள்ள பிரேமை காரணமாக முடங்கிக் கிடக்கிறது. (வருங்கால பாதுகாப்பிற்காக சொற்ப அளவில் தங்கம் சேர்த்து வைத்திருக்கும் எளியவர்களை நான் இதில் சேர்க்கவில்லை)

'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா' என்கிற பாரதியின் வாக்கை, 'எத்தனை கோடி ஆசைகள் வைத்தாய் இறைவா' என்று மாற்ற வேண்டிய சூழலில் இருக்கிறோம் போலிருக்கிறது..

Wednesday, April 26, 2006

இறந்த காலம் பெற்ற உயிர்

புனைவுகளின் ரசிகன் நான். மாறாக கட்டுரைகளை கண்டாலே திகைப்பூண்டை மிதித்தவன் போல் (அப்படியென்றால் என்ன?) தாண்டிப் போய் விடுவேன். வெகுஜன பத்திரிகைகளில் வரும் கட்டுரைகளும் இதில் அடக்கம். சிற்றிதழ்களில் வரும் கட்டுரைகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. இப்ரு மொழியின் மூலம் தமிழ் கற்றுக் கொண்டவர்கள்தான் சிற்றிதழ்களில் எழுத முக்கிய தகுதியோ எனுமளவிற்கு அந்த மொழியின் அடர்த்தி குறித்தும் கடுமை குறித்தும் எனக்கு ஒவ்வாமையே உண்டு. கணையாழி, சுபமங்களா, புதியபார்வை போன்ற நடுநிலை இதழ்களின் பழைய இதழ்களில் புனைவுகளை மாத்திரம் பத்திரப்படுத்தி கட்டுரைகளை கவனமாக தூக்கியெறிந்து விடுவேன்.

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல புனைவுகளில் செயற்கையாக கட்டமைக்கப்படும் கனவுலகங்களின் வெறுமையும் யதார்த்தமின்மையுமான பெரும்பான்மையான படைப்புகள் சலித்துப் போய் உண்மையை எட்டிப் பார்க்கும் ஆர்வத்தில் கட்டுரைகளின் பக்கம் என் கவனம் விழுந்தது. புனைவுகளில் உள்ள வசதி, ஒரு பொய்யையோ, உண்மையையோ எப்படி வேண்டுமானாலும் தன் விருப்பத்திற்கு ஏற்ப வளைத்தோ, நிமிர்த்தியோ கட்டமைத்துக் கொள்ளலாம். கட்டுரைகளில் ஒரு சொல் உண்மைக்கு மாறாக எழுதப்பட்டாலும் அதன் எதிர்வினையை உடனே எதிர்கொள்ள நேரிடும். தாம் தீவரமாக நம்பும் ஒரு கருத்தை, அது சர்ச்சையை ஏற்படுத்தும் என்று அறிந்தே இருந்தாலும், நெஞ்சுரத்துடன் எழுதுபவர்களே கட்டுரைகளின் பால் வரலாம்.

()

"இறந்த காலம் பெற்ற உயிர்" என்கிற சுந்தர ராமசாமியின் கட்டுரைத் தொகுதியை படித்த போது, ஒரு கட்டிடக் கலைஞனின் லாகவத்தோடு அவர் வார்த்தைகளை ஒவ்வொரு செங்கல்லாக பொருத்தமாக அமைப்பதை கவனித்த போது மிக்க பொறாமையே ஏற்பட்டது. ஆங்காங்கே தெறிக்கும் நகைச்சுவை புன்னகையை ஏற்படுத்தினாலும் தீவிரமான யோசிப்பையும் கோருவது. இத்தனைக்கும் தனது பதினெட்டாவது வயதில் தமிழ் எழுதக் கற்றுக் கொண்டதாக குறிப்பிடும் போது ("ஆசிரியர் கற்றுத் தரும் போது ஒவ்வொன்றும் எவ்வளவு சிரமமாக இருந்ததோ அந்தளவுக்குச் சுயமாக கற்றுக் கொள்ளும் போது ஒவ்வொன்றும் சுலபமாக இருந்தது.") என்னுள் ஏற்படும் சுய பரிதாபம் மிகக் கொடுமையானதாக இருக்கிறது.

பல்வேறு கால கட்டங்களில் எழுதப்பட்ட 34 கட்டுரைகளையும் சில கடிதங்களையும் உள்ளடக்கிய இந்தத் தொகுதியை படித்து முடித்த போது நவீன தமிழ் இலக்கியக்க உருண்டையின் சில பகுதிகளை சுற்றி வந்த திருப்தி ஏற்பட்டது.

"திருவள்ளுவர் என் நண்பர்" என்ற கட்டுரையின் இந்தப் பகுதியை சாவகாசமாக படித்துப் பாருங்கள். பெரும்பான்மையான பேச்சாளர்கள் இந்த உலகப் பொதுமறையை எவ்வளவு அபத்தமாக கையாண்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவரும்.

".......... மேடைப் பேச்சாளர் தன் புலமைக் கொடியை நிலை நாட்டத் திருக்குறளைச் சற்று விரிவாக கற்றிருக்க வேண்டும் எனற அவசியம் கூட இல்லை. ஆங்காங்கே வாகாகச் சில குறள்களைப் பொறுக்கி நெட்டுரு செய்திருந்தாலே போதுமானது. பல்வேறு சந்தர்ப்பங்களுக்கும் பொருந்தி வருவது போல் அக்குறள்களின் தேர்வு அமைந்திருந்தால் சொற்பொழிவாளர் கெட்டிக்காரர்தான். அரசியல் மேடைகளில் எந்தெந்தக் குறள்கள் ஜொலிக்கும் என்பது அவருக்குத் தெரியாமலா இருக்கும். கைவசம் இருக்கும் குறளுக்குத் தோதாகப் பேச்சின் தலைப்பு அமையவில்லை என்றால் அதை இழுத்து மடக்கிக் கைவசப் படுத்திக் கொள்வதும் மேடைப் பேச்சுக்குரிய சாமர்த்தியங்களில் ஒன்றுதான். சொல்வதையே திரும்பத் திரும்பச் சொல் முதலில் சிறிது கூச்சமாகவே இருக்கும். கூச்சம் மனித ஜன்மங்களுடன் இணைந்து வந்து கொண்டிருக்கும் ஒரு பழைய வியாதி. கைத்தட்டல் தரும் பரவசம் அவ்வியாதியை இருந்த இடம் தெரியமால் அடித்து விடும்.....

ந.பிச்சமூர்த்தியும் கலை : மரபும் மனித நேயமும்,

ரகுநாதன் ஒரு சந்திப்பு,

புதுமைப்பித்தன்: தமிழுக்கு நவீனப் பார்வை தந்தவர்,

சாகித்திய அக்காதெமிப் பரிசும் தமிழ்ச் சூழலும்,

தமிழச் சூழலில் சில சலனங்கள்,

சுய அறிமுகம்: சில சிதறல்கள்,

என் படைப்பனுபவம்,

தமிழ் வழிக் கல்வி,

இறந்த காலம் பெற்ற உயிர்

ஆகிய கட்டுரைகளை என்னளவில் முக்கியமானதாக கருதுகிறேன். ஒரு உன்னதமான வாசிப்பனுபவத்தை உங்களுக்கு இந்தத் தொகுதி வழங்கும் என்கிற தீவிரமான நம்பிக்கையின் பேரில் இதை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

()

இறந்த காலம் பெற்ற உயிர்: (கட்டுரைகள்) சுந்தர ராமசாமி, காலச்சுவடு பதிப்பகம், 192 பக்கங்கள், ரூ.90.

Tuesday, April 25, 2006

Go Moblogging today!

வலைப்பதிவதின் அடுத்தகட்ட தொழில்நுட்ப வளர்ச்சியை இந்தக் கட்டுரையின் மூலம் அறியலாம்.

Friday, April 07, 2006

ஓ போடு

"இந்து" பத்திரிகையில் வெளியான இது சம்பந்தப்பட்ட செய்தியை இதன் முக்கியத்துவம் கருதி ஒரு பதிவாக வெளியிடலாம் என்றிருந்த வேளையில் ஞாநியின் இந்த பதிவையே உபயோகப்படுத்தி கொள்கிறேன். திராவிட கட்சிகளின் மீது வெறுப்புற்றிருக்கும் பொதுமக்களில் சில பகுதியினர், வேறு எந்த மாற்றும் இல்லாததால் ஓட்டளிப்பதையே தவிர்த்து விடுகின்றனர். இது தவறானது. இதனால் கள்ள ஓட்டு போடுவோருக்கு இந்த விஷயம் சாதகமாக அமைந்து விடுகின்றது. இதை தவிர்க்க ஒவ்வொருவரும் தங்கள் மறுப்பையாவது பதிவு செய்வது ஜனநாயக கடமையாக கருத வேண்டும். இனி ஞாநியின் பதிவு.


ஓ போடு

ஓ போடு ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம்

ஓ போடு என்றால் என்ன? ஓட்டு போடு என்று அர்த்தம்.

ஓட்டு போடுவது மக்களின் உரிமையும் கடமையும் ஆகும். ஆனால் சராசரியாக எந்தத் தேர்தலிலும் வாக்காளர்களில் நூற்றுக்கு 45 பேர் ஓட்டு போடுவதில்லை. ஏன் ஓட்டு போடுவதில்லை என்று கேட்டால் பல பேர் சொல்லும் காரணம் இதுதான். "எந்த வேட்பாளரும் சரியில்லை; இருப்பதில் ஒருத்தருக்கு ஓட்டு போட எனக்கு பிடிக்கவில்லை," என்று சொல்லுகிறார்கள். அப்படி நினைப்பவர்களும் கூட போய் ஓட்டு போட முடியும். சட்டத்தில் அதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. அதுதான் 49 ஓ.

எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமையை நமக்கு இந்தப் பிரிவு கொடுத்திருக்கிறது. வாக்குச் சாவடிக்கு சென்று ஓட்டு போடுவதற்காக விரலில் மை வைக்கபட்ட பிறகு, எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்று நாம் தெரிவிக்கலாம். அதை ஓட்டுச் சாவடி அதிகாரி பதிவு செய்தாக வேண்டும். இதுதான் தேர்தல் விதிகள் (1961)ன் 49 (ஓ) பிரிவு. வாக்காளர் இதற்காக எந்த விண்ணப்பத்தையும் நிரப்பத் தேவையில்லை. ஓட்டுச் சாவடி அதிகாரியிடம் சொன்னால் போதும். அவர் தன்னிடம் உள்ள பாரம் 17 ஏ என்ற பதிவேட்டில் இதை எழுதிக் கொள்வார். அதில் நாம் கையெழுத்திட்டால் போதும்.

எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு நாம் உணர்த்தவேண்டும். அதற்கு சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும். அரசியலே சரியில்லை என்று அலுத்துக் கொண்டு நாம் ஓட்டு போடாமல் இருந்தால், அதனால் அரசியல் கட்சிகளுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. ஆனால் 49 ஓவின் கீழ் நம்முடைய ஓட்டைப் பதிவு செய்தால் நமது அதிருப்தியை அவர்களுக்குத் தெரியப்படுத்த முடிகிறது. ஒரு தொகுதியில் ஜெயிக்கிற வேட்பாளரை விட, 49 ஓவுக்கு அதிக ஓட்டு விழுந்தால், எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அப்போது 'இனி நேர்மையான அரசியல் செய்ய வேண்டும், நல்ல வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால் மக்கள் ஆதரவு கிடைக்காது' என்பது அரசியலில் உள்ளவர்களுக்கு உறைக்கும். மக்களுடைய அதிருப்தியை அரசியல்வாதிகளுக்கு தெரியப்படுத்த சிறந்த வழி - 49 ஓ.

ஓட்டு போடாமல் இருப்பது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். 49 ஓ போடுவது, நம்மை இனி ஏமாற்ற முடியாது என்று அறிவிப்பதாகும். ஓட்டு போடுங்க. 49 ஓ போடுங்க.
------------------------------------------------------------------------------------------------

'ஓ போடு' சமூக விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பாக வெளியிடப்படுகிறது. தொடர்புக்கு : ஞாநி 09869046486 /9444024947. e mail: ohpodu@hotmail.com. இந்தப் பிரசுரத்தை இயன்ற அளவுக்கு பரப்புங்கள். இந்தக் கருத்தை நண்பர்களுடன் விவாதியுங்கள்.

Wednesday, April 05, 2006

மன்னிச்சிடுங்க!

ஐந்தாண்டுக்கொருமுறை அரசியல்வாதிகள் முதல் பாக்கிச் சில்லறை தராமலிருக்கும் பேருந்து நடத்துனர் வரை அனைவரிடமும் ஏமாந்து ஏமாந்து... ஒரு மாறுதலுக்காக நான் யாரையாவது ஏமாற்றிப் பார்க்கலாம் என்று யோசித்ததின் விளைவுதான் முன்னர் எழுதிய தொலைக்காட்சியில் நடிப்பதாக போடப்பட்ட பதிவு.

மிகவும் உஷாரான நம் மக்கள், ஏப்ரல் 1 அன்று இதை வெளியிட்டால் நிச்சயம் கண்டுபிடித்துவிடுவார்கள் என்கிற யூகத்தினால் இரண்டு நாட்கள் கழித்து வெளியிட்டால் என்ன என்று தோன்றியது. பொதுவாகவே என்னிடம் ரகசியத்தை காப்பாற்றுவதிலோ, நம்பகத்தன்மையுடன் பொய் சொல்வதிலோ திறமை கிடையாது. வேடிக்கைக்காக பொய்யை காப்பாற்ற சொன்னால் கூட சிரித்தே காண்பித்து கொடுத்துவிடுவேன். கலர் டி.வி கொடுப்பதாக எந்த அரசியல் கட்சியாவது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தால் கூட "கூடவே ரிமோட்டும் கொடுப்பீங்கதானே" என்று கேட்குமளவிற்கு ஏமாறுபவன் நான். எனவே என்னாலும் திறமையாக நம்பும்படி பொய் சொல்ல முடிகிறதா என்று என்னையே சோதித்துப் பார்ப்பதற்காக இந்தப் பதிவு.

எனவேதான் கற்பனையுடன் நிஜத்தையும் கொஞ்சம் பிசைந்து எழுதினேன். எழுதி விட்டேனே தவிர, மனப்பூர்வமான வாழ்த்துக்களுடன் வரும் பின்னூட்டங்களை பார்க்கும் போது, இத்தனை நல்ல உள்ளங்களை ஏமாற்றி விட்டோமே என்கிற குற்ற உணர்வு எழுந்தது நிஜம்.

()

இந்த மாதிரி ஏப்ரல் 1ல் மற்றவர்களை முட்டாள்களாக்குவதில் அப்படியொன்றும் நான் சமர்த்தனில்லை. என்றாலும் இவ்வாறு மற்றவர்கள் முட்டாளாக்கப்படுவதை பார்த்து ரசிக்கப்பிடிக்கும். எனவேதான் Pogo சானலில் just for laughs:Gags என்கிற நிகழ்ச்சியை இயன்ற போதெல்லாம் பார்த்து ரசிப்பது வழக்கம். அம்மாதிரி ஏதாவது செய்யலாம் என்கிற யோசனையிலிருக்கும் போது யதேச்சையாக தோன்றியதுதான் இந்த சமாச்சாரம்.

உண்மையில் நான் மிகவும் வெறுக்கும் பட்டியலில் தொலைக்காட்சி தொடர்களுக்கு பிரதான பங்குண்டு. சிறுவயதுகளில் என்னை மனரீதியாக பாதித்ததற்கு தூர்தர்ஷனின் செவ்வாயக்கிழமை நாடகங்களுக்கு பெரிய பங்குண்டு. ஏதாவது ஒரு தொடரை விரும்பிப் பார்த்தேனென்றால் அது நாகாவின் "மர்மதேசம்"தான். Split personality என்கிற விஷயத்தை சந்திரமுகியின் தாத்தா காலத்திலேயே மிகத் திறமையாக கையாண்டிருப்பார் நாகா. மேலும் விஷீவல் மீடியம் என்பதன் சரியான அர்த்தத்தைப் புரிந்து கொண்டு தன் தொடரில் மிகச் சரியாக உபயோகித்தவர் அவர்.

ஏமாற்றுகிறேன் பேர்வழி என்று இத்தனை பேரை தெரிந்தோ தெரியாமலோ அந்த தொலைக்காட்சி தொடரை பார்த்து தண்டனை அடைவதற்கு ஒரு காரணமாகி விட்டோமே என்று நானும் 9.00 மணிக்கு அந்த தொடரை பார்க்க முடிவு செய்தேன். மைகாட்! செத்துத் தொலைப்பதற்கு முன் பக்கம் பக்கமாக வசனம் பேசும் அப்பா கேரக்டரும், அவர் சாவதற்கு முன்னாலேயே சங்கு, தப்பட்டையுடன் சுடுகாட்டு எபக்டை தன் கத்தல்களினால் கொண்டு வந்த நளினியாகட்டும்... எப்படி இந்த தொடர்களை ஜனங்கள் சகித்துக் கொள்கிறார்கள் என்று மகா ஆச்சரியமாக இருந்தது. என்னை மாதிரியே தொடர்களில் வெறுப்பு கொண்டிருப்பவர்களையும், நட்பு ரீதியான வேண்டுகோளின் மூலம் பார்க்க வைத்து அவர்களின் நேரத்தை வீணடித்து, வயிற்றெரிச்சலை கிளப்பி விட்டோமே என்று குறுகுறுவென்றிருந்தது. தேவையில்லாமல் இந்த எரிச்சலூட்டும் தொடருக்கு வேறு விளம்பரம் தேடிக் கொடுத்தோமே என்கிற குற்ற உணர்ச்சி வேறு. எதையோ செய்யப் போய் ஒரு அபத்த நாடகத்தை நிகழ்த்தியவன் போல் உணர்ந்தேன்.

()

ஆகவே மக்களே...

வெள்ளந்தி மனசுடன் மனப்பூர்வமான வாழ்த்து சொன்னவர்களுக்கும், "இந்த மூஞ்சில்லாம் நடிக்கப் போவுதாமா, இன்னிக்கு வீட்டுக்குப் போனவுடனே டிவியை ஒடைச்சுட்டுதான் மறுவேலை" என்று கறுவிக் கொண்டிருந்தவர்களுக்கும், ஏதாவது ஏமாற்றுச் சமாச்சாரமாகத்தானிருக்கும் என்று சரியாக யூகித்து நமட்டுச் சிரிப்புடன் அமைதி காத்தவர்களுக்கும், வேறு யாரையோ பார்த்து நான் என்று தவறாக நினைத்துக் கொண்டு வாழ்த்தியவர்களுக்கும், உங்களின் விலைமதிப்பில்லாத நேரத்தை
வீணடித்ததிற்கும்...

மன்னிச்சுடுங்க.

Tuesday, April 04, 2006

தொலைக்காட்சி சீரியலில் நான்

"சன்" தொலைக்காட்சியில் இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் "கோலங்கள்" தொடரில் நான் நடிக்கும் சில காட்சிகள் இன்று ஒளிபரப்பாகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். எப்படி வந்தது இந்த வாய்ப்பு. கொஞ்சம் பிளாஷ்பேக்.

ஆனந்த் ராகவ்வின் 'சுருதி பேதம்' நாடகத்தை காண நாரத கான சபாவிற்கு சென்ற போது பா.ராகவனின் மூலம் எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் அறிமுகம் கிடைத்தது. அவர் ஆனந்த விகடனில் எழுதிய பழைய கட்டுரைகளான 'பஸ்ரூட்' முதற்கொண்டு அவரின் பல சிறுகதைகளை நினைவுகூர்ந்தேன். இதனால் மகிழ்ந்த அவர் எனக்கு மிகவும் நெருக்கமாகிப் போனார். மின்னஞ்சல் மூலம் தொடர்ந்த இந்த நட்பு பின்னர் தொலைபேசியின் மூலமாகவும், நேரிலுமாக தொடர்ந்தது. இதன் நடுவில் சினிமா மீதான என் ஆர்வத்தையும் அவ்வப்போது அவரிடம் புலம்பிக் கொண்டிருந்தேன். அவர் பணிபுரிந்துக் கொண்டிருந்த தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புத் தளத்திலும் சந்திப்புகள் நீடித்த ஒரு கணத்தில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் வரவேண்டிய நடிகர் வராத காரணத்தினால் (அது ஒரு சின்ன காட்சிதான்) இயக்குநர் திருச்செல்வத்திடம் என்னைப் பற்றி கூறி அந்தக் காட்சியில் நடிக்கச் சொன்னார்.

எனக்கு சினிமாவில் பின்புலத்தில்தான் பணிபுரிய ஆர்வம் இருந்ததே ஒழிய, திரைக்கு முன்னால் தோன்றும் ஆர்வம் இருந்ததே இல்லை. இதனால் முடியவே முடியாதென்று மறுத்துவிட்டேன். சினிமாவில் சந்தர்ப்பம் எப்படி கதவை தட்டும் என்பது தெரியாது என்றும் வந்த சந்தர்ப்பத்தை விட்டு விடாதீர்கள் என்றும் சொன்ன பாஸ்கர் சக்தி, இயக்குநர் ஆர்வம் கொண்டு சினிமாவில் நுழைந்து சிறந்த நடிகர்களாகிப் போனவர்களின் பட்டியலையும் சொல்லி எப்படியோ சம்மதிக்க வைத்துவிட்டார்.

அதன்படி நான் நடித்த சிறு காட்சி இன்று ஒளிபரப்பாகிற பகுதியில் வெளியாகிறது. ஒளிபரப்பாகிற வரை யாருக்கும் தெரிய வேண்டாமென்கிற வேண்டுகோளும் வைக்கப்பட்டதால் யாருக்கும் சொல்லவும் இயலவில்லை. நண்பர்கள் பார்த்து என்னுடைய பங்களிப்பைப் பற்றின கருத்துகளை தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். (அடையாளம் கண்டுபிடிக்க என்னுடைய புகைப்படத்தை reference-ஆக வைத்துக் கொள்ளலாம்) :-)