Wednesday, November 30, 2005

'உயிர்மை'யின் சு.ரா. நினைவு அஞ்சலி கூட்டம்

கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அண்ணாசாலை, தேவநேயப் பாவாணர் நூல்நிலைய கட்டிடடத்திற்குள் நுழையும் போது வியப்பும் அச்சமும் ஏற்பட்டது. நான் வழக்கமாகச் செல்லும் நூல்நிலைய கட்டிடம் என்றாலும் ஜெயலலிதாவின் பிரம்மாண்ட புகைப்படங்கள் அடங்கிய டிஜிட்டல் பேனரை பார்த்தவுடனே 'எது செய்தாலும் கருணாநிதிக்கு போட்டியாக செயல்படுகிற ஜெயலலிதா, ஒருவேளை தமிழிலக்கியத்திற்குள்ளும் குதித்து சு.ரா. கூட்டத்திற்கு தலைமை தாங்கப் புறப்பட்டு விட்டாரோ, என்னடா இது இலக்கியத்திற்கு வந்த சோதனை. இப்படியே கிளம்பி விடலாமா' என்றெல்லாம் தோன்றியது. நல்ல வேளையாக அப்படியெல்லாம் இல்லை. வேறு ஏதோ கூட்டத்திற்குண்டான பேனர்களை இங்கே வைத்திருந்தனர்.

நான் படியில் ஏறிக் கொண்டிருக்கும் போது சாருநிவேதிதா இறங்கி வந்துக் கொண்டிருந்தார். அறிமுகப்படுத்திக் கொண்டு பேசலாமா என்றெழுந்த எண்ணத்தை ஏனோ மாற்றிக் கொண்டு மேலே சென்றேன். ஏற்கெனவே கணிசமான அளவில் பார்வையாளர் வந்திருந்தார்கள். நான் அமரும் போது மனுஷ்யபுத்திரன் தன் வழக்கப்படி, எழுதி எடுத்து வந்திருந்த உரையை வாசித்து முடித்திருந்தார். சில பேச்சாளர்கள் பேசும் போது செய்யும் கோணங்கித்தனங்களும் நாடக காட்சிகளும் இதனால் தவிர்க்கப்படும் என்பதால் அவர்களுக்கு இந்த முறையை கட்டாயப்படுத்தலாம் என்று தோன்றியது. (இந்த இடத்தில் மனுஷ்யபுத்திரனின் எழுத்து நடையை குறிப்பிட வேண்டும். அவரின் கவிதைகளை விட உரைநடையையே நான் பெரிதும் விரும்புவேன். சொற்களின் லாகவமான கவித்துவமான கட்டமைப்பும் உள்ளடக்கத்தை சிதறாமல் கோர்வையாக தெரிவிக்கும் பாணியும் எப்போதும் என்னை பொறாமை கொள்ள வைக்கும்.)

பின்னர் ஜெயமோகன் எழுதிய 'நினைவின் நதியில்' என்கிற சுராவைப் பற்றின நூலை ஜெயகாந்தன் வெளியிட பாலுமகேந்திரா பெற்றுக் கொண்டார். (பேச்சாளர்கள் பேசியவற்றில் என் நினைவில் தங்கிய பகுதிகளை மட்டும் இங்கே தருகிறேன். இதில் ஏதேனும் கருத்துப் பிழையோ, தகவல் பிழையோ நேருமாயின் அது என் குற்றமாகும். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே செல்வதை தவிர்க்கும் நான், மிகவும் விரும்பி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன் என்றாலும் அப்போது நான் ஏனோ உற்சாகமான மனநிலையில் இல்லை. சுரமும், ஜலதோஷமும் என்னை தொந்தரவு செய்து கொண்டிருந்தனாலும் இது ஏற்பட்டிருக்கலாம்.)

முதலில் பேசிய பாலுமகேந்திரா, தாம் சு.ராவின் தீவிர ரசிகன் என்றும், ஒரு தொலைக்காட்சிக்காக பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகளை படமாக்கின போது அந்த சிறுகதை எழுதப்பட்ட முறையை விட தாம் சிறந்த முறையில் அதை படமாக்கினது குறித்து உள்ளூர கர்வப்பட்டதாகவும், ஆனால் சு.ராவின் சிறுகதையை படமாக்கின போது அவ்வாறு திருப்தியடைய முடியாமல் போனதாகவும் குறிப்பிட்டார்.

பின்பு மலையாளத்தில் பேசிய 'கல்பற்றா நாராயணனின்' உரையை ஜெயமோகன் மொழிபெயர்த்து வாசித்தார். (இந்த நேரத்தில் நான் வெளியே அமைக்கப்பட்டிருந்த புத்தகக் கடைகளில் சிற்றிதழ்களை வாங்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன்). அதன் பிறகு 'கூத்துப் பட்டறை' ந.முத்துசாமி சுராவுடனான அவருடைய அனுபவங்களை பார்வையாளர்களை சோர்வடைய வைக்கும் வகையில் சுவாரசியமின்றி பேசிக் கொண்டே போனார்.

கவிஞரும் சிறுகதை மற்றும் நாவலாசிரியருமான யுவன் சந்திரசேகர், தாம் முன்பு அவ்வப்போது கவிதைளை எழுதி நண்பர்களிடம் படிக்கத் தருவதாகவும், ஆனால் சு.ராவை சந்திக்கச் செல்லும் போது தன் கவிதையை அவரிடம் காட்ட தைரியமில்லாமல் செல்வதாகவும் கூறினார். ஒரு கவிதையின் முடிவில் தபால் விலாசம் வருமாறு எழுதினதை சுராவிடம் தயக்கத்தோடு 'இது சரியா' என அபிப்ராயம் கேட்க 'ஓ பேஷா செய்யலாமே. இதுவரைக்கும் தபால் விலாசத்தோடு கவிதை எழுதலாம்-னு எனக்குத் தோணலை. இனிமே இந்த மாதிரி இதுவரைக்கும் வராத விஷயங்களோடு எழுதலாம்னு தோணியிருக்கே' என்று பதில் வந்ததாம்.

நாஞ்சில் நாடனின் பேச்சு இயல்பாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. 'எவனொருவரிடம் நீ செல்வதற்கு மரியாதையுடன் கூடிய அச்சமும் தயக்கமும் கொள்கிறாயோ அவரே உனக்கு குருவாக இருக்க லாயக்கானவர்' என்கிற ஜக்கி வாசுதேவின் கூற்றுப்படி தாம் அவ்வாறு உணர்கிற இரண்டு எழுத்தாளர்களாக சு.ரா.வையும் ஜெயகாந்தனையும் குறிப்பிட்டார்.

பிரபஞ்சன் பேச ஆரம்பித்ததும் கூட்டம் இறுக்கம் தளர்ந்து கலகலப்பானது. அவருடைய தோழமையான பேச்சை எப்போதுமே நான் ரசிப்பேன். மெலிதான குரலில் 'நண்பர்களே' என்று ஆரம்பித்து கூட்டத்தின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கச் செய்வதில் வல்லவர். எழுத்தில் மட்டுமல்ல பேச்சிலும் சிறந்த கதை சொல்லி. சு.ராவின் 'பிரசாதம்' என்கிற கதையை சிரிக்கச் சிரிக்கச் சொன்னார். ஆனால் எப்போதோ படிக்கும் போது பிடித்த கதை, இப்போதைய வாசிப்பில் தன்னை கவரவில்லை என்றார். 'சு.ரா இறந்து போனாலும் அவரின் எழுத்துக்கள் நம்மோடு இருக்கும்' என்றும் 'கூர்மையான எழுத்தின் மூலம் அவரை கடந்து செல்வதே நாம் அவருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும்' என்றார்.

"சு.ரா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடனேயே ஜெயமோகன் பேனாவை எடுத்து விட்டார் போலிருக்கிறது" என்று அதிரடியான நகைச்சுவையுடன் ஆரம்பித்த ஜெயகாந்தன், அவர் சு.ராவைப் பற்றி இன்னும் அதிகமாக எழுத வேண்டும் என்றும் சு.ராவின் இடத்தை நிரப்ப வேண்டும் என்றும் கூறினார். பின்பு இளமைக்காலங்களில் சு.ராவோடு அளவளாவின சுவாரசியமான சம்பவங்களையும் இருவரும் எழுத்தாளர் மாநாட்டுக்கு நண்பர்களோடு சென்றதையும், நாகர்கோவிலில் சு.ராவின் இல்லத்திற்கு சென்ற போது அவரின் வசதியான வாழ்க்கையை பார்த்ததும் ஜெயகாந்தனுக்கு தோன்றியது இதுதான். 'இவர் ஏன் எழுதறார்?'

அவர் மேலும் பேசும் போது "சு.ரா காலமாகி விட்டதாக சொல்கிறார்கள். காலம் என்றால் என்ன? எப்போதும் இருப்பது. சு.ரா எப்போதும் இருப்பார் என்று சொல்லி முடித்துக் கொண்டார்.

ஜெயமோகன், தாம் எழுதின நூலைப் பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டதோடு கூட்டம் நிறைவு பெற்றது.

()

துக்கம் ஊதுவத்திப் புகையை போல சுழன்று கொண்டிருக்குமோ அல்லது யாராவது கைக்குட்டையால் கண்களை துடைத்துக் கொள்வார்களோ அல்லது ஏதாவதொரு பாசாங்கான நாடகத்தை சகித்துக் கொள்ள வேண்டியிருக்குமோ என்றெல்லாம் பயந்து கொண்டிருந்த எனக்கு அவ்வாறெல்லாம் இல்லாமல் கூட்டம் இயல்பாக முடிந்ததில் திருப்தியே. எந்தவொரு நூல் வெளியீட்டிலும் சம்பந்தப்பட்ட நூலை வாங்கிப் பழக்கப்பட்டிராத நான் ஜெயமோகன் எழுதிய 'நினைவின் நதியில்' என்கிற நூலை வாங்கி இரண்டே அமர்வில் படித்து முடித்தேன். (இந்த நூலைப் பற்றி பின்வரும் நாட்களில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்)

Thursday, November 17, 2005

அது ஒரு கனாக்காலமும் தமிழ்ச் சினிமாவின் எதிர்காலமும்

தீபாவளி போன்ற பண்டிகையை, கட்டாயமாக புதுத் துணி எடுத்தோ, பட்டாசு வெடித்தோ, ஏதாவது ஒரு சினிமாவை பார்த்தோதான் கொண்டாட வேண்டும் என்கிற தமிழர்களின் சிந்தனை ஆழமாக வேறூன்றிவிட்ட நிலையில் தீபாவளிக்கு மறுநாள் அதிர்ஷ்டவசமாக விடுமுறையாக அமைந்துவிட்டபடியால் ஏதாவதொரு சினிமாவிற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென வேண்டுகோள் (அதாவது கட்டளை) என் குடும்பத்தினரால் என் முன்வைக்கப்பட்டது. சிவகாசி, மஜா போன்ற வெளிப்படையான வணிகப்படங்களை பார்ப்பதை விட கால் சராய்க்கு பட்டன் தைப்பதையே உன்னதமான காரியமாக நான் கருதியதால் இதற்கு மாற்றாக பாலுமகேந்திராவை நம்பி 'அது ஒரு கனாக்காலம்' என்கிற திரைக்காவியத்தை பார்க்க தீர்மானித்தேன்.

()

அப்பன் சொல் கேளாமை, பேருந்தில் பெண்களை கிண்டல் செய்து நடத்துனருடன் தகராறு, கவர்ச்சி நடிகையுடன் இரவு கனவுப்பாட்டு, கண்டவுடன் காதல் என்று இன்றைய இளைஞனின் எல்லாவித குணாதிசயங்களோடு இருக்கிற தனுஷ் சூழ்நிலை காரணமாக சிறைக்கு செல்ல நேருவதும் அதன் பின்நிகழ்வுகளும் கதை.

எந்தவித வணிக சமரசங்களுக்கும் இடம் தராமல் மிகச்சுவாரசியமாக சொல்லியிருக்க வேண்டிய இதை பாலுமகேந்திரா சொல்லியிருக்கிற விதம் எனக்கு மிகவும் ஏமாற்றமளித்தது. இந்த மாதிரியான சொதப்பலான, ஊர்கின்ற திரைக்கதையை தொகுக்க AVID எடிட்டிங் எழவு முறை எல்லாம் எதற்கு என்றே புரியவில்லை. (மிகுந்த அவசியமேற்படுகிற சமயங்களில் காட்சிகளின் நிகழ்வுகள் மற்றும் உணர்வுகளை நிதானமாக காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிற படங்களை இதனுடன் ஒப்பிடவில்லை). சன் டி.விக்கு டெலிபிலிமாக எடுக்க வேண்டியதை மனசு மாறி திரைப்படமாக எடுத்து விட்டாரோ என்று நினைக்குமளவிற்கு தூர்தர்ஷனின் 'செவ்வாய்க்கிழமை நாடக' வாடை படம் பூராவும் அடிக்கிறது. ·பிளாட் கதவை திறப்பதை அரை மணி நேரத்திற்கு ஒரு முறை காண்பிப்பதை வேறு வேறு மாதிரிகளில் சொல்ல முடியும் என்பதை புனே திரைப்படக் கல்லூரியில் படிக்கும் போது தங்கப்பதக்கம் வாங்கின பாலுமகேந்திராவிற்கு தெரியாமலா போயிருக்கும் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சரி போகட்டும்! வயசாகி விட்டது போலிருக்கிறது. தனுஷ் சிறைப் பகுதியிலிருந்து தப்பிக்கும் அந்த ஆரம்பக் காட்சியை இதை விட சிறப்பாக 'நாய்புகழ்' இராமநாராயணணே எடுத்திருப்பார் போலிருக்கிறது.

என்றாலும் இதில் உபயோகப்படுத்தப் பட்டிருக்கிற நடிகர்கள் தங்கள் பங்கை திறம்பட செய்திருக்கிறார்கள் என்பது ஒரு ஆறுதல். 'காதல் கொண்டேனுக்கு' பிறகு தனுஷை யாரும் சரியாக உபயோகப்படுத்தின மாதிரி தெரியவில்லை. இந்தப் படத்தில் ஒரு விட்டேற்றியான இளைஞனை, காதல் என்றவுடன் மிகவும் சின்சியராகிவிடுகிற இளைஞனை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறார் தனுஷ். பல இடங்களில் அவருடைய முகபாவங்கள் எந்தவொரு சிறந்த நடிகருக்கும் சவால் விடுகிற படியிருக்கிறது. என்றாலும் அந்த பல்லி மாதிரியான உடம்பை வைத்துக் கொண்டு சிறைச்சாலை இன்ஸ்பெக்டரிடம் வலியப் போய் மறுபடியும் மறுபடியும் உதை வாங்கும் போது அனுதாபத்திற்கு பதில் எரிச்சலே வருகிறது. (இந்த மாதிரியான அபத்தமான காட்சியை சித்தரித்தற்கு இயக்குநர்தான் காரணம் என்றாலும் .... சரி சரி விடுங்க..)

ப்ரியா மணி மேக்கப் இல்லாமல் வந்து சற்றே பயமுறுத்தினாலும் எல்லா பாவங்களையும் எளிதாக சொல்லிவிடும் தன் கண்களை வைத்து சமாளித்திருக்கிறார். டெல்லி கணேஷீம் உஷாவும் ஒரு கண்டிப்பான அப்பாவையும் பாசமான அம்மாவையும் முறையே கண்முன் கொண்டு நிறுத்தியிருக்கிறார். மற்ற படங்களில் ஒரு மூலையில் வந்து விட்டு போகும் இவர்கள் பிரதான பாத்திரங்கள் தரப்படும் போது பின்னியெடுப்பதைப் பார்க்கும் போது நம் வணிக இயக்குநர்களை நினைத்தால் எரிச்சலாக இருக்கிறது. கலைராணி ... பாவம்... மனோரமாவின் இடத்தைப் பிடிக்க நாடக உலகிலிருந்து வந்திருக்க வேண்டியதில்லை.

இந்தப் படத்தின் ஒரே ஆறுதலான சிறப்பம்சமாக இளையராஜாவைச் சொல்வேன். சில குறிப்பிட்ட இயக்குநர்கள் படங்களுக்கு மட்டும் தன் ராஜதூக்கத்திலிருந்து விழித்தெழுந்து இசைக்கின்ற ராஜா இதில் நிறையவே ஓவர் டைம் பார்த்திருக்கிறார். 'அந்த நாள் ஞாபகம்' என்கிற (பாலுமகேந்திரா படங்களில் தவறாமல் இடம் பெறுகிற) Montage பாட்டும் 'காட்டு வழி போற தம்பி' என்கிற டைட்டில் பாட்டும், தனுஷின் அம்மா இறந்த பின் ஒலிக்கின்ற ராஜாவின் பேவரைட் அம்மா பாட்டும் சிறப்பாக வந்திருக்கிறது. பின்னணி இசையில், குறிப்பாக காவல் துறை சம்பந்தப்பட்ட காட்சிகளில் கலக்கியிருக்கின்ற ராஜாவின் இசைக்கு ஈடுகொடுக்க முடியாமல் பரிதாபமான காட்சியமைப்புகள் ஜீவனற்று தோன்றுகின்றன.

இயக்குநர் பாலுமகேந்திரா தோற்றுப் போயிருந்தாலும் நல்ல வேளையாக ஒளிப்பதிவாளர் பாலு இன்னும் உயிர்ப்போடிருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் பெரும்பாலான காட்சிகள் நிகழும் நாயகனின் வீட்டின் ஒளியமைப்பு மிக சிறப்பாக இருக்கிறது.

()

இத்துணை திறமையான கலைஞர்களின் துணையோடு மிகச் சிறப்பாக வந்திருக்க வேண்டிய படத்தை இத்தனை சொதப்பலாக்கினதற்கு முழுக்க காரணமாக பாலுமகேந்திராவைச் சொல்வேன். வணிக அம்சத்திற்காக செருகப்பட்ட தேஜாஸ்ரீயின் கனவு கவர்ச்சிப் பாட்டும் யதார்த்தமேயில்லாத சிறைக்கூடக் காட்சிகளும் (இத்தனை வசதியான சிறையை இதுவரை நான் பார்த்ததேயில்லை. தமிழ்ப்படங்களிலேயே சிறை சம்பந்தப்பட்ட காட்சிகளை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றது 'மகாநதி' மட்டுமே) அபத்தமான கிளைமாக்சும் இதை இயக்கியது பாலுமகேந்திராதானா என்று சந்தேகப்படும் நிலைக்கு நம்மை தள்ளுகிறது.

பாலுமகேந்திரா, பாரதிராஜா, பாலச்சந்தர் போன்ற சிறந்த திரைப்பட இயக்குநர்களுக்கு ஒரு நிலைக்கு பிறகு ஏன் சிறப்பாக இயங்க முடிவதில்லை? (இந்தக் கேள்வியை பொதுவாகவே அனைத்துத் துறையிலும் பெரும்பாலான கலைஞர்களின் மீது பொருத்திப் பார்க்கலாம்) சமீபத்திய அமுதசுரபியில் ஓவியர் தேனுகா பயன்படுத்தியிருக்கிற 'Intellectual Menopause' என்கிற வார்த்தைதான் நினைவுக்கு வருகிறது. தமிழ்ச்சினிமாவின் யதார்த்தப் படங்களின் பொற்காலமாக விளங்கிய 1980-க்களை கலைத்துக் கொண்டு வந்த 'சகலகலா வல்லவன்' போன்ற வணிக வெடிகுண்டுப் படங்களின் புகையிலிருந்து வெளிவர இயலாமல் இன்னமும் தமிழ்ச் சினிமா மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் பாலுவைப் போன்ற இயக்குநர்களும் ஏமாற்றமளிப்பதைப் பார்க்கும் போது இந்த சக்தி மிகுந்த ஊடகத்தின் எதிர்காலத்தை நினைத்து எனக்கு கவலையாக இருக்கிறது. இன்றைய தலைமுறையினருக்கு இப்போது ஓடிக் கொண்டிருக்கும் வணிகப்படங்கள்தான் சினிமா என்று அழுத்தமாக நம்பும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்களோ என்றும் தோன்றுகிறது.

அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம்பிறை, ரெட்டைவால் குருவி, வீடு, சந்தியாராகம், சதிலீலாவதி என்று எத்தனை சிறப்பான படங்கள்.

ஹீம்........... அது ஒரு கனாக்காலம்.