Saturday, February 27, 2010

எழுத்தாளர் சுஜாதாவுடன் ஒரு சந்திப்பு

சுஜாதா என்கிற எழுபது வயது இளைஞர்

சுஜாதா, கணையாழியின் கடைசிப் பக்கங்களில் எழுதும் போது, தன்னை வந்து சந்திக்கும் வாசகர்களைப் பற்றி குறிப்பிட்டு விட்டு இவ்வாறு எழுதினார்: 'எனது உண்மையான வாசகர்கள் என்னை வந்து சந்திப்பதில்லை'.

எனக்கு இதில் உடனே உடனே உடன்பாடு ஏற்பட்டது. ஏனெனில், ஒரு சிறந்த படைப்பாளி தன்னுடைய படைப்புகளிலேயே தாம் தீவிரமாக நம்புகிற கருத்துக்களையும், எண்ணங்களையும் முழுமையாக எந்த வித உபகேள்விகளுக்கும் இடமில்லாமல் மிக நேர்மையாக எழுதி விடுகிறார். ஆக அந்தப் படைப்பாளி எழுதியதையே நாம் முழுவதையும் உள்வாங்கிக் கொண்டால் அது போதுமானதாக இருக்கும். அதை விட்டு, அந்தப் படைப்பாளியை சந்தித்து அபத்தமாக உரையாடுவது, ஆட்டோகிராப் வாங்குவது போன்றவை, 'நான் அந்த எழுத்தாளரை சந்தித்தேன்' என்று ஜம்பமடிப்பதற்கு உதவுமே தவிர வேறொன்றிற்குமில்லை. ஆனால் படைப்பாளி எழுதின வட்டத்தையும் தாண்டி சிந்தித்து தனது ஐயங்களை அவரிடம் தெளிவுபடுத்திக் கொள்ள முயலும் வாசகர்கள் அரிதானவர்கள்; இந்த நிலையிலிருந்து விதிவிலக்கானவர்கள்.

இந்த காரணத்திற்காகவே, நான் பொதுவாக எந்த எழுத்தாளரையும் சந்திக்க முயல்வதில்லை, என் வாசகப் பயணத்தை நல்லதொரு திசையில் மாற்றியமைத்த மற்றும் என் மிகுந்த அபிமானத்திற்குரிய சுஜாதா உட்பட.


 ஆனால் கடந்த வாரத்தில் ஒரு நாள் பிரசன்னா தொலைபேசியில் "நண்பர் தேசிகன் மூலமாக எழுத்தாளர் சுஜாதாவை சந்திக்கலாமென்றிருக்கிறோம். நீங்கள் சுஜாதாவின் படைப்புகளில் மிகுந்த பிரேமை கொண்டிருக்கிறவர் என்று நான் அறிவேன். நீங்களும் வருகிறீர்களா?" என்று அழைத்த போது வந்த சந்தர்ப்பத்தை தவற விட வேண்டாமே என்று உடனே ஆர்வத்துடன் ஒப்புக் கொண்டேன்.

28.05.2005. மாலை ஆறு மணி. உட்லண்ட்ஸ் டிரைவ்-இன் ரெஸ்டாரண்ட்.

இதுவரை புகைப்படங்களிலும், நூல் வெளியீட்டு விழாக்களில் தூரமாக நின்று மட்டுமே பார்த்திருந்த சுஜாதா, தனது அசாதாரணமான உயரம் காரணமாக சற்று குறுகினாற் போல் தளர்ச்சியாக நடந்து வர, 'இவரிடம் என்ன கேள்வி கேட்டு, என்னத்த பதில் சொல்லப் போகிறார்' என்று ஆயாசமாக இருந்தது. கற்றுக் கொடுத்தவர்கள் அனைவரும் ஆசான்கள் எனில் சுஜாதா எனக்கு முக்கியமானதொரு ஆசான். எழுத்துலகில் துரோணரைப் போல் திகழும் அவரின் பல்லாயிரக்கணக்கான ஏகலைவன்களில் நானுமொருவன். பதிலுக்கு சுஜாதா, நல்ல வேளையாக கட்டை விரலையெல்லாம் கேட்காமல், தன்னுடைய மெத்து மெத்தான ஐந்து விரல்களையும் மென்மையான புன்னகையுடன் என்னிடம் நீட்டினார். "நான் சுரேஷ் கண்ணன்" என்று சந்தோஷத்துடன் அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

உணவகத்தின் குளிர்பதனம் செய்யப்பட்ட அறையில் ஆரம்பித்தது எங்கள் அரட்டைக் கச்சேரி. நாங்கள் ஐந்து பேர். நான், பிரசன்னா, ராஜ்குமார், ரஜினிராம்கி, ராமச்சந்திரன் உஷா. எங்களை உரையாடவிட்டு பக்கத்தில் அமைதியாக அமர்ந்திருந்த தேசிகன். (இகாரஸ் பிரகாஷ், சுவடுகள் ஷங்கர், ஷங்கர் கிருபா, பிரதீப் போன்றோர் பிற்பாடு வந்து இணைந்து கொண்டனர்)

ஒரு சிறிய ராணுவ பட்டாலியன் போல் சுஜாதாவை நோக்கி கேள்விக் குண்டுகளை சரமாரியாக நாங்கள் எறிய, நிறைய பேசுவாரோ மாட்டாரோ என்கிற என் தவறான அனுமானத்தையெல்லாம் தூள்தூளாக்கும் வகையில் அனுபவம் மிகுந்த ராணுவ தளபதி போல் எங்கள் கேள்விகளை அனாயாசமாகவும், உற்சாகமாகவும் புன்னகையுடனும் எதிர்கொண்டார் சுஜாதா என்கிற அந்த 70 வயது இளைஞர். ஒரு திட்டமிட்ட உரையாடலாக இல்லாமல், நட்புடன் கூடிய கலந்துரையாடலாக இருந்தது அது. எங்களில் பெரும்பாலானோர் அவரை முதன் முறையாகப் பார்ப்பதினால் ஆர்வத்துடன் ஒருவரையொருவர் முந்திக் கொண்டு பல கேள்விகளை முன்வைத்தோம். பல்வேறு ரசனை கொண்ட குடும்ப உறுப்பினர்கள், தொலைக்காட்சியில் தங்களுக்குப்பிடித்த சேனல்களை மாற்றி மாற்றி அமைப்பது போல் இருந்தது அது.

இதில் நான் கேட்ட கேள்விகளை மட்டும் தொகுத்தளித்துள்ளேன். சுஜாதா பேச்சு மொழியில் கூறிய பதில்களை நான் உரைநடைத்தமிழில் இடங்களில் மாற்றியமைத்துள்ளேன். இதில் ஏதேனும் கருத்துப் பிழைகளிருந்தால், அது என் தவறாக இருக்கக்கூடும்.

"இந்த போண்டா ரொம்ப புஷ்டியாயிருக்கிறதே" என்கிற சுஜாதா பிராண்ட் நகைச்சுவையுடன் ஆரம்பித்த அந்த உரையாடலில் இருந்து சில முக்கியமான பகுதிகள்.

()

உரையாடல் இயல்பாக இன்றைய கல்வித்துறையின் போக்குகளில் இருந்து ஆரம்பித்ததால், என் முதல் கேள்வி:

சுரேஷ் கண்ணன்: "இன்றைக்கு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ரேஸ் குதிரைகள் போல் வளர்க்கின்றார்கள். இன்றைய தேதியில் கல்வி என்பது அடித்தட்டு மக்கள் நுழைய முடியாதது போல், வாங்க முடியாத luxury பொருள் போல் ஆகி விட்டதே? இதனால் கிராமப் புறங்களில் உள்ள மாணவர்கள், அவர்கள் விரும்பிய படிப்புக்களை படிக்க முடியாமல், ஏதோவொரு கிடைத்த துறைப் படிப்பை படிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியிருக்கின்றார்களே?"

சுஜாதா: "இடஒதுக்கீட்டின் மூலம் பின்தங்கிய மக்களும் விரும்பிய படிப்பை படிக்கிற வாய்ப்பு இருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக திறமையற்ற நிர்வாகத்தின் காரணமாகவும், சில மேல்தட்டு மக்கள் முறையற்ற வழிமுறையில் அந்த வாய்ப்பை குறுக்கு வழிகளில் பயன்படுத்துவதாலும் இந்த நிலை ஏற்படுகிறது."

சுரேஷ் கண்ணன்: "பாலகுமாரன் தன் முன்கதைச் சுருக்கத்தில் 'சுஜாதா தனக்கு சிறுகதை எழுதுவதற்கான வழிமுறைகளை சொல்லித் தந்தார்' என்று குறிப்பிட்டிருக்கிறார். எழுதுவதில் ஆர்வமுள்ள நாங்களும் அதே கேள்வியை இப்போது உங்கள் முன்வைத்தால் உங்கள் பதில் என்னவாக இருக்கும். அதேதானா? அல்லது updated-ஆன விஷயங்கள் ஏதேனும் உள்ளதா?"

சுஜாதா: "கதையை முதல் வரியிலேயே ஆரம்பித்து விடுங்கள். இதுதான் நான் அவருக்கு சொன்னது. வேறொன்றுமில்லை"

சுரேஷ் கண்ணன்: "உங்கள் சிறுகதையில் எனக்கு பிடித்தது 'பிலிமோத்ஸவ்' "

சுஜாதா: "அப்படியா?

சுரேஷ் கண்ணன்: நீங்கள் பல சிறுகதைகளை எழுதியிருந்தாலும் பெரும்பான்மையினர் தங்களுக்கு பிடித்ததாக கூறும் சிறுகதை 'நகரம்'. அதை நிதானமாக திட்டமிட்டு எழுதினீர்களா? அல்லது பத்திரிகைகளின் துரத்தல்களுக்கேற்ப அவசரமான மனநிலையில் எழுதினீர்களா?"

சுஜாதா: "மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினர் ஒருவரை பார்க்கச் சென்றிருந்த போது, அங்கு பார்க்க நேர்ந்த காட்சிகளின் தாக்கத்தில் உடனடியாக எழுதப்பட்ட கதை அது."

சுரேஷ் கண்ணன்: "இப்போது இணையத்தில் ஏறக்குறைய 500 பேர் வலைப்பதிகிறார்கள். பொதுவாக வலைப்பதிவுகளைப் படிக்கிறீர்களா? வலைப்பதிவுகளின் போக்கு எப்படி இருப்பதாக உணர்கிறீர்கள்?"

சுஜாதா: நிறைய வலைப்பதிவுகளப் படிக்கிறேன். சில பேர்களின் வலைப்பதிவை எழுத்துரு பிரச்சினை காரணமாக படிக்க இயலவில்லை. பத்ரி, தேசிகன் போன்றோர்களின் பதிவுகள் படிக்கமுடிகிறது. பொதுவாக வலைப்பதிவுகள் அனுமார் வால் போல் நீண்டு கிடக்கிறது. அரிதாக கிடைக்கிற தகவல்களை உள்ளடக்கியதுதான் ஒரு சிறந்த பதிவாக இருக்க முடியும்.

சுரேஷ் கண்ணன்: "நீங்கள் உங்கள் சிறுவயதில் எழுதிக் கொண்டிருந்த கையெழுத்துப் பத்திரிகைகளின் நவீனவடிவம்தானா இந்த வலைப்பதிவுகள்?"

சுஜாதா: "ஆம். நாங்கள் நடத்திய கையெழுத்துப் பத்திரிகையில் நாங்களே படம் வரைவோம். இதெல்லாம் எழுதுகிற ஆர்வமிருக்கிறவர்களுக்கு ஒரு outlet மாதிரித்தான்.

சுரேஷ் கண்ணன்: "ஆனால்... இப்போது வலைப்பதிவு எழுதுகிறவர்களில் சிலர், இதை outlet-ஆக பயன்படுத்தாமல் toilet-ஆக பயன்படுத்துவதுதான் பிரச்சினை."

(உரையாடல் இப்போது தமிழர்களின் ஆதார விஷயமாகிய சினிமாவின் பக்கம் திரும்புகிறது)

சுரேஷ் கண்ணன்: "பாய்ஸ் படத்திற்கு ஏன் அவ்வளவு எதிர்ப்பு? ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நடத்திய, எதிர்கொண்ட விஷயங்கள்தானே அதில் இருந்தது?"

சுஜாதா: "அவர்கள் அதை திரையில் பார்க்க விரும்பவில்லை"

சுரேஷ் கண்ணன்: "ஒரு படத்தின் வசனங்கள் ஆட்சேபத்திற்குரியதாக இருக்கும் பட்சத்தில், யாரை நாம் திட்ட வேண்டும்? இயக்குநரையா? வசனகர்த்தாவையா?"

சுஜாதா: "ஒரு இயக்குநர்தான் படத்தின் எல்லாத்துறைகளுக்கும் பொறுப்பு. அவர் தீர்மானித்த பின்தான் அவை காட்சிகளில் இடம் பெறுகின்றன. மேலும் வசனகர்த்தா எழுதிய வசனங்கள் அப்படியே இடம் பெறும் என்கிறது கிடையாது. சம்பந்தப்பட்ட நடிகர்களும் தங்கள் சொந்த வசனங்களை பயன்படுத்துவார்கள். 'பாய்ஸ்' படத்தில் சில காட்சிகளில் விவேக் அதை செய்தார்"

சுரேஷ் கண்ணன்: உங்கள் சிஷ்யர்களில் ஒருவரான, பெங்களூர் இரவிச்சந்திரன் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?

சுஜாதா: அவர் இறந்து விட்டார். அவருக்கு நேர்ந்த சில அந்தரங்கப் பிரச்சினை காரணமாக தொடர்ந்து மதுவருந்தியதின் காரணமாக இறந்து போனார். நல்ல எழுத்தாளர்.

(நான் இதைக் கேட்டு திகைப்பும், அதிர்ச்சியும் அடைகிறேன். இந்தச் செய்தியை ஊர்ஜிதப்படாமல் இணைய நண்பர்கள் மூலம் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தாலும், சுஜாதா மூலமாக மிக உறுதியாக இந்தச் செய்தியை கேடக நேரும் போது வருத்தமாகவே இருந்தது. இந்த வருத்தம் சுஜாதா குரலிலும் எதிரொலித்தது)

சுரேஷ் கண்ணன்: "இன்றைக்கு மரபு தெரியாமலே பலர் கவிதை எழுத வந்து விடுகின்றனர். எனக்கு கவிதை என்கிற வடிவமே தொடர்ந்து பிடிக்காமலே இருக்கிறது. இதற்கு என்ன காரணமாக இருக்கும்? எனது முன்னோர்களின் ஜீன்களில் ஏற்பட்டிருக்கிற ஏதாவது குறைபாடா?" (சிரிப்பு)

சுஜாதா: "You may not come across several good poems" அதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.".

சுரேஷ் கண்ணன்: "இவ்வளவு பழைய விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிற நீங்கள் ரம்யா கிருஷ்ணன் பெயரை மறந்து விட்டீர்களே?" (சிரிப்பு)

சுஜாதா: (சிரிப்பு)

சுரேஷ் கண்ணன்: "நீங்கள் ஆனந்த விகடனில் 70 ஆண்டு நிறைவையொட்டி எழுதியிருந்த கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது"

()

நண்பர்களின் பல கேள்விகளுக்கு கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் பதிலளித்த சுஜாதா 7.30 மணிக்கு தனது உரையாடலை முடித்துக் கொண்டார். மனமில்லாமல் நாங்கள் எழுந்து கொள்கிறோம். 'உங்களை ரொம்பவும் சிரமப்படுத்தி விட்டோமா' என்பதற்கு 'அதெல்லாம் இல்லை' என்கிறார். தேசிகனை அவர் 'என் சிஷ்யன்' என்று குறிப்பிட்ட போது, தேசிகன் மீது சற்று பொறாமையாக இருந்தது. நண்பர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்வதும், கையெழுத்து வாங்குவதுமாக இருக்கின்றனர். வழக்கம் போல் நான் ஒதுங்கி நிற்கிறேன்.

"இவ்ள நேரம் எங்களுக்கு பத்தலைங்க. என்சைக்ளோபீடியாவ ரெண்டு பக்கம் புரட்டிப் பாத்தா மாதிரிதான் இருக்குது. இன்னும் கூட நெறைய பேச வேண்டியிருக்கு. வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க" என்கிற எங்களுக்கு புன்னகையுடன் கையசைத்து விடைபெற்று காரில் ஏறிக் கொள்கிறார்.

()

இன்னும் சில விமரிசனப்பூர்வமான கேள்விகளை கேட்கலாமா, வேண்டாமா என்று தயங்கிக் கொண்டிருந்த நான், மகிழ்ச்சியும், சிரிப்பும் பொங்கி வழிந்த அந்த உற்சாகமான சூழ்நிலையை கெடுக்க விரும்பாமல் எனக்குள்ளேயே அந்த கேள்விகளை மூழ்கடித்துக் கொண்டேன். இன்னொரு வேளையில் பார்க்கலாம். நாங்கள் தயாரான கேள்விகளோடு மிகவும் முன்னேற்பாடோடு வந்திருந்தால் இந்தக் கலந்துரையாடல் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் என்று நம்புகிறேன். இந்தக் கலந்துரையாடல் எனக்கு அவ்வளவு திருப்திகரமாக இல்லை. சுஜாதா என்கிற அந்த பன்முக ஆளுமையிடமிருந்து இன்னும் நிறைய விஷயங்களை கேட்டிருக்கலாம்.

பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் என்று பல சினிமா ஜாம்பவான்களிடமும், பல துறையிலுமுள்ள அறிஞர்களோடும் புழங்கிய சுஜாதா, அவரோடு ஒப்பு நோக்கும் போது குஞ்சுகுளுவான்களாகிய எங்களோடு சரிக்கு சமமாக பேசுவாரா என்கிற தயக்கத்தையெல்லாம் உடைத்தெறிந்து விட்டார். சுஜாதா என்கிற அந்த எழுத்தாளரிடம்..... எழுத்தாளரை விடுங்கள்.... ரங்கராஜன் என்கிற அந்த எளிய மனிதரிடம் ஒன்றரை மணிநேரம் உரையாடிக் கொண்டிருந்தது ஒரு நிறைவான அனுபவமாக இருந்தது.

இந்த நிகழ்வை சாத்தியமாக்கிய நண்பர் தேசிகனுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள். (மனிதருக்கு அபரிதமான நகைச்சுவை உணர்ச்சியிருக்கிறது. நண்பர் ராஜ்குமார், தாம் பெரம்பூர், திரு.வி.க.நகரில் இருந்து வருவதாக கூறியவுடன் இவர் "நான் பெங்களூர்ல இருந்து வர்ற வழில பார்த்த ஊர் மாதிரியிருக்கே" என்று கிண்டலடிக்கிறார்)

இந்த மாதிரியான எழுத்தாளர்களுடன் கூடிய நிறைவான சந்திப்புக்கள் அடிக்கடி நிகழ நான் வணங்கும் இயற்கையை பிரார்த்திக்கிறேன்.

(இது ஒரு மீள் பதிவு) image courtesy : Bharat KV's photostream

நன்றி: சுஜாதா தேசிகன்.

மற்ற நண்பர்களின் அனுபவங்களை வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்:


 சுஜாதாவைப் பற்றி ஒரு எளிய வாசகனின் சில குறிப்புகள்

எழுது... எழுது...

 suresh kannan

Wednesday, February 24, 2010

(ராம் கோபால்) வர்மாவிற்கு வயதாகி விட்டதா?

என்னை வெறுப்படையச் செய்யும் சமாச்சாரங்களில் தெலுங்கு டப்பிங் படங்களு்க்கு பிரதான இடமுண்டு.  (ஜெயமாலினியின் சாகச உடலமைப்பிற்காகவும் நடனத்திற்காகவும்  சமயங்களில் அவற்றை சகித்துக் கொள்வேன்). ஆனால் அப்படியான படங்களில் ஒன்றை பார்த்து பிரமித்து அமர்ந்திருந்த ஆச்சரியமும் வர்மாவின் முதல்படமான ‘உதயம்’ (தெலுங்கில் ‘ஷிவா’) மூலம்.நிகழ்ந்தது,  இதே மாதிரியான இந்தித் திரை அனுபவம் ‘ரங்கீலா’வின் மூலம் நிகழ்ந்ததும் அதன் இயக்குநரும் வர்மா என்பதும் தற்செயலான ஆச்சரியம். அதிலிருந்து RGV என்றழைக்கப்படும் ராம் கோபால் வர்மாவின் உருவாக்கங்களை மிக ஆவலுடன் எதிர்பார்க்கத் துவங்கினேன்.


கதை சொல்லும் பாணியையும் காட்சிக் கோணங்களையும் ஒளி அமைப்பையும், வசனங்களைக் குறைத்து நுட்பமான முகபாவங்களின் மூலம் செய்தியை உணர்த்தும் ஹாலிவுட் பாணியையும் தன்னுடைய உருவாக்கங்களில் நுழைத்துக்  கொண்டு இந்திய சினிமாவின் முகத்தையே சற்று மாற்றியமைத்தவர் என்று வர்மாவை உறுதியாகச் சொல்லலாம். இதை முன்பே ஒரளவிற்கு மணிரத்னம்  நிகழ்த்திவிட்டார் என்றாலும் அவரின் நீட்சியான வர்மா பல அடிகள் தாண்டியிருக்கிறார். குறிப்பாக நிழல் உலக மனிதர்களையும் அவர்களின் அரசியல் தொடர்புகளையும் யதார்த்தத்திற்கு மிக அருகாக நின்று சித்தரித்திருந்ததை ஒரு சாதனையாகவே சொல்லலாம். வணிக ரீதியாக பல தோல்விப் படங்களை தந்திருந்தாலும் கேளிக்கை சார்ந்த திரைஉருவாக்க இயக்குநர்களில் வர்மாவின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது. சத்யா, கம்பெனி, நிஷப்த், சர்க்கார், சர்க்கார் ராஜ்.... போன்றவை என்னளவில் நல்ல உருவாக்கங்கள். கறுப்பு மேஜிக்கை ஆதரிக்கும் பூங்க் உள்ளிட்ட பல படங்கள் எரிச்சலூட்டுபவை என்றாலும் வர்மாவின் மீதான நேசம் குறையவில்லை.

எதற்காக இவ்வளவு பில்டப் என்றால், வர்மாவின் சமீபத்திய திரைப்படமான RANN பார்த்தேன். (போர் அல்லது போர்க்களம் என்று அர்த்தம் கொள்ளக்கூடியது). இப்படியொரு சொதப்பலை வர்மாவினால் எப்படி செய்ய முடிந்தது என்று ஆச்சரியமாக இருந்தது. (இந்த இடத்தில் இடுகையின் தலைப்பை வாசிக்கவும்).

()

'சில பத்திரிகைச் செய்திகளுக்கும் அதன் உண்மைத்தன்மைக்கும் உள்ள இடைவெளி மிக தூரம்' என்பதை என்னுடைய பதின்மத்திலேயே தெரிந்து கொள்ள நேர்ந்தது என்னுடைய அதிர்ஷ்டமா அல்லது துரதிர்ஷ்டமா என்று தெரியவில்லை.

எங்கள் வீட்டுத் திண்ணையில் தண்டபாணி அண்ணன் எப்போதும் ஒரு ஜமாவுடன் அமர்ந்திருந்து எம்ஜிஆர் பாடல்களை உற்சாகமாக பாடிக் கொண்டிருப்பார். ஒழிந்த நேரங்களில் ஆடுபுலிஆட்டமும் ரம்மியும். அதுவும் சலித்துப் போன நேரங்களில் தன்னுடைய வீரதீர பராமரக்கிங்களை நிறைய மசாலா சேர்த்து சொல்லிக் கொண்டிருப்பது பெரும்பாலும் பொய் என்று தெரிந்தேயிருந்தாலும் நானும் ஓரத்தில் அமர்ந்து வாயைத் திறந்து ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருப்பேன். என்னுடைய ஆளுமை உருவாக்கத்தில் தண்டபாணி அண்ணனின் கூறுகளும் இருக்கலாம். அப்படியாப்பட்டவர் ஒரு பகல் வேளையில் நடுத் தெருவில் வைத்து கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டார். மாலை பள்ளியிலிருந்து திரும்பியதும்தான் இந்த அதிர்ச்சியான செய்தி எனக்குத் தெரிய வந்தது. ஊர்த்தலைவரின் உறவினர் பெண்ணொருத்தி தண்டபாணி அண்ணனை விழுந்து விழுந்து காதலித்ததும் வேறு வழியின்றி இவரும் அதை ஏற்றுக் கொண்டதையும் தொடர்ந்து கொலை மிரட்டலும் லேசுபாசாக எழுந்திருக்கிறது. 'அவ்வாறெல்லாம் நடக்காது, திருமணத்தை நடத்திக் கொண்டால் சரியாகிவிடும்' என்று அலட்சியமாக இருந்தவர் எதிர்பாராத தருணத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்.

ஆனால் மாலைப் பத்திரிகைகளில் இந்த சமாச்சாரங்களின் தடயமே இல்லாமல் ஏதோவொரு சில்லறைத்தகராறில் ஏதோவொரு இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்டார் என்றிருந்ததை வாசிக்க எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும்  இருந்தது. அதற்குப் பின்னாலும் கூட உண்மை வெளிவரவில்லை. ஊர்த்தலைவருக்கு இருந்த அரசியல் செல்வாக்கு இதை சாதித்திருக்கிறது.

ஆக... எங்கள் பகுதி மக்களுக்கு அந்தச்  சம்பவத்தின் உண்மையான பின்னணி தெரிந்திருக்க.. மற்றவர்கள் பத்திரிகையில் வந்திருந்தைத்தான் நம்ப வேண்டிய கட்டாயம். ஒரு சாதாரண குற்ற நிகழ்விற்கே இந்தக் கதி என்றால், மிகப் பெரிய குற்றங்களை ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள் எந்த அளவிலான நம்பகத்தன்மையோடு வெளிப்படுத்தும் என்கிற சந்தேகம் பொதுப்பரப்பில் தோன்றி நிறைய மாமாங்களாகிவிட்டது.

இந்த பழைய சமாச்சாரத்தைத்தான் வர்மாவின் Rann திரைப்படம் நவீன மொழியில் பேசுகிறது. ஊடகங்கள் பெருகிவிட்ட இன்றைய சூழ்நிலையில் போட்டி காரணமாகவும் இருப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்காகவும் பணத்திற்காகவும் அரசியல்வாதிகளோடும் தொழிலதிபர்களோடும் கைகுலுக்கி செய்திகளை 'உருவாக்கும்' அபாயத்தில் ஈடுபட்டால் பொதுமக்கள் நிஜத்தை எங்குதான் கண்டு கொள்வார்கள் என்கிற ஆதாரக் கேள்வியை முன் வைக்கிறது.


விஜய் மாலிக் (அமிதாப் பச்சன்) ஒரு நேர்மையான செய்தி சானலின் தலைவர். செய்திகளை அதன் நம்பகத்தன்மையோடு மக்களுக்கு தருவதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாதவர். வணிகப் போட்டியில் பின்தங்கியிருந்தாலும் இதன் நேர்மை காரணமாகவே இந்தச் சேனல் மக்களிடம் நற்பெயரை பெற்றுள்ளது. அமெரிக்காவிலிருந்து திரும்பியிருக்கும் இவரது மகனான ஜெய்க்கு (சுதீப்) ஊடகம் என்பது இன்னுமொரு வியாபாரம். லாபம் என்பதுதான் அதன் நிகர செயல்பாடாக இருக்க வேண்டும் எனக் கருதுகிறான். ஆனால் கண்டிப்பான தந்தையைத் தாண்டி எதையும் செய்துவிட முடியவில்லை.

இந்நிலையில் அவரது மைத்துனனின் சதியாலோசனைப்படியும் கெட்ட அரசியல்வாதியான (அரசியல்வாதி என்றாலே நல்லவர் எவர் இருக்க முடியும் என்று கேட்டால் என்னிடம் பதிலில்லை) மோகன் பாண்டேயின் (பரேஷ் ராவல்) வழிநடத்துதலின்படியும் அப்போதைய நேர்மையான பிரதமருக்கு எதிரான ஒரு சதிச் செய்தியை செயற்கையாக உருவாக்கி தன்னுடைய சேனலில் ஒளிபரப்புகிறான். தந்தையையும் எப்படியோ இதை நம்ப வைத்துவிடுகிறான். இதன் காரணமாக அடுத்த தேர்தலில் கெட்ட அரசியல்வாதி பிரதமராகி விடும் சூழ்நிலையை உருவாக்குகின்றனர்.

அந்த சேனலில் பணிபுரியும், அமிதாப்பை தன்னுடைய ஆதர்சமாகக் கொண்டிருக்கும் இளம் செய்தியாளர் பூரப் சாஸ்திரி (ரிதேஷ் தேஷ்முக்) இந்தச் சதியை அமிதாப்பிடம் துப்பறிந்து வெளிப்படுத்துவதும் தன்னுடைய தவற்றைத் தாமதமாக தெரிந்து கொண்ட அவர் மக்களிடம் எல்லாவற்றையும் ஒப்புக் கொண்டு நேரலையில் மன்னிப்பு கேட்பதுமாக படம் நிறைகிறது.

சத்யா, கம்பெனி போன்ற அற்புதங்களை நிகழ்த்தின வர்மாவா, ஒரு ஹை-பட்ஜெட் டெலிபிலிம் போன்றிருக்கும் இந்தத் திரைப்படத்தை இயக்கினார் என்று ஆச்சரியமாக இருந்தது. வர்மாவின் வழக்கமான சாகசத்தினால் திரைக்கதையை ஒரளவிற்கு சகித்துக் கொண்டாலும் பல தர்க்கத் துவாரங்களுடன் இருக்கும் கதையின் பலவீனமான அஸ்திவாரம் காரணமாக எதையுமே ரசிக்க முடியவில்லை. பல வருடங்களாக செய்தித் துறையில் இருக்கும் அமிதாப்பால் எப்படி அந்த பொய்ச் செய்தியை நம்பி ஒளிபரப்ப முடிந்தது என்ற கேள்வியில் துவங்கி அந்தச் சேனலின் போட்டிக்காரரான அம்ரிஷ் கக்கர் தான் பெற்ற ஐந்நூறு கோடி ரூபாயை இப்படியா வெளிப்படையாக ஒப்புக் கொள்வார் என்பது முடிய பல கேள்விகள் தொடர்ந்து தலையில் சுற்றிக் கொண்டேயிருந்ததால் இந்தப் படத்தால் ஒரு நல்ல அனுபவத்தை எனக்குத் தர இயலவில்லை என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியும்.

பரேஷ் ராவலின் ஒப்பனை எரிச்சலைத் தந்தாலும் அவரின் அலட்டாத நடிப்பு நிறைவைத் தருகிறது. ஒரு நனைந்த எலி போலவே அமிதாப் இந்தப்படத்தில் உலவுகிறார். விஜயகாந்த் பட ரேஞ்சிற்கு கிளைமாக்சில் அவர் பேசும் நீண்ட வசனம் கொட்டாவியை வரவழைத்தாலும் சில முகபாவங்களில் அவருடைய இத்தனை வருட சாதனையின் ரேகையைக் கண்டு கொள்ள முடிகிறது. Stay tuned, Please dont goaway என்று குரோர்பதியில் நிமிடத்திற்கு ஒரு முறை சொன்னவரே இதில் ஊடகங்கள் பார்வையாளர்களை தக்கவைத்துக் கொள்ள செய்யும் அநியாயங்களையும் அபத்தங்களையும் பட்டியலையிடுவதைக் காணும் போது சம்பந்தம் இல்லாவிட்டாலும் அதிலுள்ள நகைமுரணை யோசிக்க சுவாரசியமாக இருக்கிறது.

செய்தி தொகுப்பாளர்கள் செய்யும் கோணங்கித்தனங்களை எதிரொலித்துக் காட்டியிருக்கும் ராஜ்பால் யாதவ்வின் நகைச்சுவையான நடிப்பு குறிப்பிடத்தகுந்தது. நீத்து சந்திராவை பார்வையாளர்கள் ரசிக்க அனுமதிக்காமல் வெறுமனே தலையை மாத்திரம் காட்டும் காட்சிகளில் (?!) உபயோகப்படுத்தியிருப்பது வர்மாவின் ரசனையின்மையைக் காட்டுகிறது. :-)

வர்மாவின் ரசிகர்கள் சகவாச தோஷத்திற்காக வேண்டுமானால் ஒருமுறை பார்த்துத் தொலைக்கலாம் என்பதைத் தவிர இத்திரைப்படத்தில் வேறொன்றுமில்லை. 

suresh kannan

Thursday, February 18, 2010

லா ஸ்ராடா - துயரத்தின் காவியம்

உலகத்தின் சிறந்த 10 திரைப்படங்களை பட்டியலிடச் சொன்னால் என்னால் தயக்கமேயின்றி 1954-ல் வெளிவந்த இத்தாலிய நியோ ரியலிச வகைத் திரைப்படமான 'லா ஸ்டிராடா'வைச் அதில் சேர்க்க முடியும். ரேவின் 'பதேர் பாஞ்சாலி' டிசிகாவின் 'பை சைக்கிள் தீவ்ஸ்' போல பார்வையாளனின் நெஞ்சில் ஒரு நீங்காத துயரத்தின் வடுவாக பதிந்து விடும் திரைப்படங்களின் வரிசையில் லா ஸ்டிராடாவிற்கும் முக்கிய பங்குண்டு. அதிர்ச்சி தரும் திருப்பங்களைக் கொண்ட திரைக்கதையோ, பிரமிக்க வைக்கும் தொழில்நுட்பமோ எதுவுமே இத்திரைப்படத்தில் இல்லை. மாறாக மனித உணர்வுகளின் ஆதாரமான நுண்ணுர்வைப் பற்றி இப்படம் மெல்லிய குரலில் ஆனால் அழுத்தமாக உரையாடுகிறது. ·பெலினி முன்வைக்கும் உன்னதமான காட்சிக் கோர்வைகளின் மூலம் மிகச் சிறந்த அனுபவத்தை இத்திரைப்படத்தின் மூலமாக பெற முடிகிறது.

வறுமையின் காரணமாக ஜிப்சியான ஜாம்பனோவிற்கு விற்கப்படுகிறாள் ஜெல்சோமினா. சங்கிலியால் தன் மார்புகளை இறுகக்கட்டி பின்னர் அதை உடைத்துக் காட்டும் வித்தையின் மூலம் பிழைக்கும் ஜாம்பனோ ஒரு முரடன். குழந்தைமையும் அப்பாவித்தனமும் கொண்ட ஜெல்சோமினாவை அவன் ஒரு பொருட்டாகவே கொள்வதில்லை. டிரம்ப்பெட் ஊதச் சொல்லி அவளை அடிக்கிறான். சம்மதம் பெறாமலேயே அவளுடன் உறவு கொள்கிறான்.அவளை இரவெல்லாம் தெருவில் அமர வைத்துவிட்டு வேசையோடு சுற்றிக் களைத்துப் போய் எங்கோ விழுகிறான். அன்றாடம் கிடைக்கும் உணவுடன் திருப்தியடையும் அவன் ஜெல்சோமினாவின் உள்ளே மறைந்திருக்கும் கலைத்தன்மையைக் கண்டு கொள்வதேயில்லை. அவனுடைய நடவடிக்கையால் வெறுப்படையும் அவள் விலகிப் போகிறாள்.

கட்டிடங்களுக்கு இடையிலான கயிற்றில் வித்தை காட்டும் மேட்டோவை அப்போது  காண்கிறாள். எப்போதுமே மிக உற்சாகமாக இருக்கும் அவனை வியப்புடன் பார்க்கிறாள். இதற்கிடையில் அவளைத் தேடி வரும் ஜாம்பினோ வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கிறான்.

ஜாம்பினோவும் ஜெல்சோமினாவும் பணிக்குச் சேரும் அதே சர்க்கஸ் கம்பெனியில் மேட்டோவும் பணிபுரிகிறான். முரடனான ஜாம்பினோவை விளையாட்டாக தொடர்ந்து சீண்டிக்கொண்டேயிருக்கிறான் மேட்டோ. கோபமடையும் ஜாம்பினோ ஒரு சமயத்தில் கத்தியைக் கொண்டு அவனை துரத்த காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான். அநாதையாக நிற்கும் ஜெல்சோமினாவை சர்க்கஸ் கம்பெனியினர் தங்களுடன் வரும்படி அழைக்கின்றனர். ஆனால் மேட்டோவுடனான உரையாடலால் மனம் மாறும் ஜெல்சாமினோ, ஜாம்பினோவிற்காக காத்திருக்கிறாள். அவன் சிறையிலிருந்து வெளிவந்ததும் இருவரும் வழக்கம் போல் பயணம் மேற்கொள்கின்றனர். வழியில் மேட்டோவைக் காணும் ஜாம்பினோ, அவனைத் தண்டிக்க வேண்டி இரண்டு வலுவான குத்துக்களை விட எதிர்பாராதவிதமாக இறந்து போகிறான் மேட்டோ. திடுக்கிடும் ஜாம்பினோ அவனது உடலை மறைத்துவிட்டு அதிர்ச்சியடைந்து நின்றிருக்கும் ஜெல்சோமினாவை அழைத்துச் செல்கிறான்.

மேட்டோ கொலையுண்ட காட்சியைக் கண்ட ஜெல்சோமினா திக்பிரமையடைந்தவளைப் போல காணப்படுகிறாள். மேட்டோவுடனான உரையாடலின் வார்த்தைகளையே மறுபடியும் மறுபடியும் சொல்கிறாள். காவல் துறையினரிடம் மாட்டிக் கொள்வதற்கு இவளே காரணமாகிவிடக்கூடும் எனக் கருதும் ஜாம்பினோ அவளை நிராதராவாக சாலையில் விட்டு விட்டுச் செல்கிறான். வருடங்கள் கடக்கின்றன.

ஜாம்பினோ மிதமிஞ்சிய குடிப்பழக்கத்துடன் அதே முரட்டுத்தனத்துடன் இருக்கிறான். வழியில் சில குழந்தைகள் ஒரு பாடலை இசைப்பதைக் கண்டு திடுக்கிடுகிறான். ஏனெனில் ஜெல்சோமினா அடிக்கடி இசைக்கும் பாட்டு அது. விசாரிக்கும் போது மனம் பிறழ்வுற்ற பெண்ணொருத்தி அங்கு சாலையில் சுற்றிக் கொண்டிருந்ததாகவும் அந்தக் குடும்பத்தினர் அழைத்து உணவளித்ததாகவும் பின்னர் உடல்நலம் குன்றிய அவள் கடற்கரைச் சாலையிலேயே இறந்த போனதாகவும் தகவல் கிடைக்கிறது. அளவிற்கதிகமாக குடிபோதையில் ஜெல்சோமினாவின் நினைவுகளுடன் ஜாம்பினோ குற்றவுணர்வில் வாய்விட்டு அழும் காட்சியுடன் படம் நிறைகிறது.


இந்தப் படத்தை மறக்கவியலாத ஒரு அனுபவமாக்கியது ஜெல்சோமினாவின் பிரமிப்பூட்டும் இயல்பான நடிப்பு. இத்திரைப்படத்தின் இயக்குநரான ·பெலினியின் மனைவியான குயிலிட்டா மசினா, அந்த அற்புதத்தை நிகழ்த்தியிருந்தார். அவருக்காகவே இந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தேன். தமிழ் நடிகைகளில் இதே போன்றதொரு தோற்றத்தையும் நடிப்பையும் தருபவராக சாவித்திரியை ஒரளவிற்கு குறிப்பிடலாம்.

ஜெல்சோமினாவை முதலில் பார்க்கும் எவருக்கும் அவள் ஒரு பெண்ணாகத் தெரியாமல் வளர்ந்த குழந்தையைப் போலவே தெரிவார். குழந்தைகளின் கண்களைப் போல் ஆச்சரியத்தில் விரியும் அவரது பெரிதான கண்கள் சமயங்களில் அனுதாபத்தைக் கோருவதாகவும் உற்சாகத்தைப் பரப்புவதாகவும் இருக்கும். அப்பாவித்தனமான அந்த பாத்திரத்திற்கு மிகப் பொருத்தமாக அமைந்திருந்தார் மசினா. 'பெண் சாப்ளின்' என்று புகழப்படும் வகையில் பல திரைப்படங்களில் குறிப்பாக இவரது கணவரது படைப்புகளில் பல திறமையான பாத்திரங்களை கையாண்டார் இவர். பாலியல் தொழிலாளியாக நடித்த 'நைட்ஸ் ஆ·ப் கேப்ரியா' அதில் குறிப்பிடத்தகுந்தது.

ஜாம்பினோ குடித்து விட்டு விழுந்திருக்க காத்திருக்கும் நேரத்தில் அங்கிருக்கும் சாலையோரத்தில் தக்காளி விதைகளை பயிரிடுவதில் ஈடுபடுவாள் ஜெல்சோமினா. கண்விழிக்கும் ஜாம்பினோவிடம் அதைக் காண்பிக்க அவன் எரிச்சலுடன் 'அதை அறுவடை செய்யும் வரை காத்திருக்க முடியாது. புறப்படு' என்பான். முள்வேலியில் மாட்டிக் கொண்ட பறவை போன்றதொரு நிலைதான் அவர்களுக்கிடையேயான உறவு. அவளின் எதிரேயே ஒரு வேசையை அவன் கொஞ்சிக் கொண்டிருக்க சங்கடத்துடனும் குழந்தைமையுடனும் ஜெல்சோமினா தவிக்கும் காட்சி குறிப்பிடத்தகுந்தது.

சொற்ப காட்சிகளில் நடித்தாலும் 'முட்டாள்' மேட்டோவாக நடித்திருக்கும் ரிச்சர்ட் பேஸ்ஸார்ட்டின் நடிப்பு சிறப்பானது. ஜாம்பினோவின் சிடுமூஞ்சித்தனத்திற்கு நேர்மாறாக எப்போதுமே உற்சாகமாகவும் வாழ்க்கையை அதன் போக்கில் வாழும் சுதந்திர இயல்பினன். ஜாம்பினோ சிறைக்குச் சென்ற பிறகு அநாதையாக நிற்கும் ஜெல்சோமினாவிற்கும் இவனுக்குமான உரையாடல் முக்கியமானது. தன்னுடைய அழகற்ற தன்மைக்காகவும் நிராதரவான நிலைக்குமாக அழும் அவளிடம் "இந்த உலகத்தில் அனைத்துமே ஏதோவொரு இலக்குடன்தான் படைக்கப்பட்டுள்ளது. ஒரு கூழாங்கல்லுக்கான இடம் கூட இங்கு முக்கியமானது" என்று உபதேசிக்கிறான். ஜாம்பினோவிடமிருந்து பிரிந்துவிட யோசிக்கும் ஜெல்சோமினாவை இந்த வார்த்தைகள் ஆற்றுப்படுத்துவதுடன் மனமாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. மேட்டோ கொல்லப்பட்டவுடன் இந்த வார்த்தைகள் மாத்திரமே அவளது அதிர்ச்சியுற்ற மனதினுள் சுழன்றடிக்கின்றன.ஜாம்பினோவாக நடித்திருக்கும் ஆன்டனி குயினின் நடிப்பும் குறிப்பிடத்தகுந்தது. ஜெல்சோமினாவை ஒரு மனித ஜென்மமாகவே மதிக்காமல் புறக்கணிக்கிறான். சிறையிலிருந்து வெளிவருவதற்காக காத்திருக்கும் ஜெல்சோமினாவை "ஏன் எங்காவது போய்த் தொலைவதுதானே"? என்று எரிச்சலுடன் கூறுகிறான். அவ்வாறு அவள் சென்றிருந்தாலும் அந்த அடிமையை விட்டிருக்க மாட்டான் என்றாலும் அவனது அப்போதையை மனநிலையையே அந்த வார்த்தைகளின் மூலம் உணர முடிகிறது.  மேட்டோ கொலையுண்ட அதிர்ச்சியில் தொடர்ந்து ஜெல்சோமினா புலம்பிக் கொண்டிருக்கும் போதுதான் அவளை ஒரு பொருட்டாக பயத்துடன் பார்க்கிறான். ஏதோ ஒரு ஆத்திரத்தில் நிகழ்ந்த கொலைக்காக பல வருடங்களை சிறையில் கழிக்க அவன் விரும்பவில்லை. ஆனால் பின்னாளில் அவளை சாலையில் அப்படியே விட்டுவிட்டு வந்ததற்காக குற்றவுணர்வில் அழும் காட்சியில் இவரது நடிப்பு சிறப்பானதாக இருந்தது.

()

சாலைப் பயண நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் ஹாலிவுட் படங்கள் அனேகம். இத் திரைப்படமும் அந்த வகையைச் சார்ந்ததுதான். லா ஸ்ராடா எனும் இத்தாலிய மொழிச் சொல் 'சாலை' என்றுதான் பொருள் தருகிறது. 1956-ன் சிறந்த அயல்நாட்டுத் திரைப்படப் பிரிவின் 'அகாதமி' விருதை பெற்ற இத்திரைப்படம், உணர்வுப்பூர்வமான காட்சிக் கோர்வைகளின் காரணமாக 'சிறந்த படங்களின்' வரிசையில் வைத்து போற்றப்படுகிறது. 'அகாதமி' விருது தவிர பல திரைப்பட விருதுகளையும் இத் திரைப்படம் பெற்றுள்ளது.

ஜாம்பினோவின் பாத்திரமும் இந்தப் படமும்  ·பெலினிக்குள் உருவான விதம் சுவாரசியமானது. அவரது இளமைப் பருவத்தில் அங்கு வாழ்ந்த ஒரு பெண்பித்தன் பல பெண்களை படுக்கையில் வீழ்த்தி துன்புறுத்துவான். ஒரு முட்டாளான அப்பாவிப் பெண்ணையும் அதே போல் வீழ்த்துகிறான். பின்னாளில் ·பெலினி படப்பிடிப்பிற்காக கடுமையான சாலைகளையுடைய மலைப்பாங்கான இடத்தைக் கடக்கும் போது ஒருவன் வண்டியை ஓட்டிக் கொண்டு வர பின்னால் சிறிய உருவிலான பெண்ணொருத்தி அதைத் தள்ளிக் கொண்டு வரும் காட்சியைப் பா¡க்கிறார். இந்தக் காட்சியும் முன்னர் அறிந்திருந்த பெண்பித்தன் பாத்திரமும் அவருக்குள் இணைய 'லா ஸ்ராடா'வின் காட்சிகள் மனதிற்குள் விரிகின்றன. மகத்தான காவியங்கள் உருவாவதின் மூலம் ஒரு சிறிய துகளாக இருக்கலாம் என்பதற்கான சிறிய உதாரணமிது.

ஜெல்சோமினா சாலையில் தனித்துவிடப்படும் காட்சிதான் பார்வையாளன் அவளை கடைசியாக பார்ப்பது. பின்னர் அவள் இறந்து போகும் செய்தியை அறியும் போது ஜாம்பினோவைப் போல அவனும் அதிர்ச்சியும் துக்கமும் அடைகிறான். ஆண்களால் அலைக்கழிக்கப்படும் அப்பாவிப் பெண்களின் சிறந்த பிரதிநிதி ஜெல்சாமினோ. கனவுகளில் கூட அவளது குழந்தைத்தனமான முகம் வந்து என்னை துன்புறச் செய்கிறது. 

 suresh kannan

Saturday, February 13, 2010

எழுத்தாளர் ஜெயந்தன் : அஞ்சலி

பிடித்தமான எழுத்தாளர் இறந்துவிடும் போது அவரை இதுவரை சந்தித்திருக்காவிட்டால் கூட நம்முடைய சுற்றங்களில் ஒருவரை இழந்துவிட்ட துக்கத்தையே நாம் அடைகிறோம் என்று தோன்றுகிறது. பலவிதமான எழுத்தாளர்களில் எப்படி ஒருசிலரை குறிப்பாக நமக்கு மிகவும் பிடித்துவிடுகிறது என்று யோசித்துப் பார்த்தேன். அந்த எழுத்தாளனின் சிந்தனைகளும் எண்ணங்களும் வாசகனுடனான அதே அலைவரிசையோடு இணைந்து ஒத்துப்போகிற அந்தப் புள்ளிதான் அதனுடைய துவக்கமாக இருக்கக்கூடும்.

ஓர் உதாரணம். நெரிசலான பேருந்தில் பால் வித்தியாசங்களில்லாமல் மனித உடல்களுடன் கரைந்துப் போய் ஆக்டோபஸீக்கு சிக்கன்குனியா வந்த போஸில் எசகுபிசகாக எரிச்சலுடன் நின்று கொண்டிருப்போம் அல்லவா? சினிமா பாடல் காட்சிகளில் வருவது போல் திடீரென்று மற்ற அனைவரும் மறைந்து போய் நாம் மட்டும் காலியான பேருந்தில் அதே போஸில் நின்று கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? நான் நினைத்து நினைத்து சிரிக்கும் என்னுடைய இந்த அபத்தமான நகைச்சுவையை எழில்வரதனின் ஏதோ ஒரு சிறுகதையில் அப்படியே சந்திக்கும் போது எனக்கு எழில்வரதனை அந்தக் கணமே பிடித்துப் போயிற்று. எனக்குப்பிடித்த எழுத்தாளர்களின் வரிசையில் எழில்வரதனும் இயல்பாகவே இணைந்து விட்டார்.


ஜெயந்தனை நான் இணைத்துக் கொண்டதும் இதே மாதிரியான தருணமொன்றில்தான். 'வெள்ளம்' என்றொரு சிறுகதை. காமத்தைப் பற்றின நுட்பமான சித்திரங்களைக் கொண்ட சிறுகதையது. மனைவி ஊருக்குப் போயிருக்கும் ஒரு மதிய வேளையில் மழை பெய்ய ஆரம்பிக்க அதன் தொடர்ச்சியாக பாலுறவு கிளர்ந்த எண்ணங்களுடன் படுத்திருக்கும் ஒருவன், மழைக்கு வந்து ஒதுங்கும் வெவ்வேறு வயதுடைய மூன்று பெண்களைப் பார்க்கும் உணர்வுகளை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தும் சிறுகதை. அந்தக் கணமே ஜெயந்தனை மிகவும் நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

அவரது சிறுகதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக தேடியதில் மிகச் சிரமப்பட்டே அடைய முடிந்தது. திருவல்லிக்கேணி பழைய புத்தகக் கடையொன்றில் மேய்ந்து கொண்டிருந்த போது ஜெயந்தனின் சிறுகதைத் தொகுதியான 'மனச்சாய்வு' கண்ணில்பட்டது. இன்ப அதிர்ச்சியுடன் அதை எடுக்க முனைவதற்குள் பக்கத்தில் நின்றிருந்த இன்னொரு நபரும் அதே புத்தகத்தை எடுத்துப் பார்த்தார். அடுத்தவர் தேர்வு செய்திருப்பதை வாங்கத் துடிப்பதுதானே தமிழ் மரபு? அசுவாரசியமாக புரட்டிப் பார்த்து அவர் தூக்கிப் போட்ட அந்த நூலை கைப்பற்றியவுடன்தான் ஆசுவாசமாக இருந்தது. பின்னதான புத்தக கண்காட்சியின் போது அவருடைய மொத்த சிறுகதைகளையும் இரண்டு பாகங்களாக பதிப்பித்திருந்ததை (ராஜராஜன் பதிப்பகம்) கண்டு அவற்றை வாங்கின பிறகுதான் மற்ற சிறுகதைகளையும் வாசிக்க முடிந்தது. (இப்போது வம்சி பதிப்பகம் எல்லாச் சிறுகதைகளையும் சேர்த்து வெளியிட்டிருக்கிறார்கள்).

()

சுமார் 10 வருடங்களுக்கு முன்பு இலக்கியக்கூட்டம் ஒன்றில் ஜெயந்தனை சந்தித்தேன்.

புகைப்படத்தில் ஏற்கெனவே பார்த்திருந்தபடியால் அவரைப் பார்த்த போது உடனே அடையாளங்கண்டு கொள்ள முடிந்தது. இயல்பாகவே எனக்குள்ள கூச்ச சுபாவம் காரணமாக அவரை அணுகி உரையாடுவதற்கு தயக்கமிருந்தாலும் பிடித்த எழுத்தாளர் என்பதால் கூச்சத்தை உதறி பேச ஆரம்பித்தேன். அவரின் சிறுகதையொன்றை சிலாகித்து பேசினதை கேட்டுக் கொண்டார். இன்னொரு  சிறுகதையில் வந்திருந்த சம்பவமொன்று திரைப்படமொன்றில் பயன்படுத்தப்பட்டிருந்ததைப் பற்றியும் கூறிக் கொண்டிருந்தேன். சில நிமிடங்களே இந்த உரையாடல் நீடித்தது. பிறகு என்ன நினைத்தாரோ, உரையாடலிலிருந்து திடீரென்று விலகி என்னிடமிருந்து பிய்த்துக் கொண்டு இன்னொருவரிடம் பேச ஆரம்பித்தார். என்னை அவர் அவமானப்படுத்திவிட்டதாக உணர்ந்தேன். அப்போது இளைஞன்தானே? ஆத்திரம் பொங்கியது. 'இந்த எழுத்தாள மயிராண்டிகள் எல்லாம் இப்படித்தான்' என்று குரோதமாக எண்ணிக் கொண்டேன். பிறகு அவருடைய சிறுகதைகளை வாசிக்கும் போது 'இன்னாத்த கிழிச்சுட்டான். இந்த மாதிரி ஆயிரம் கதை நான் எழுதுவேன்' என்று நினைத்துக் கொண்டேன். 'ஒரு எழுத்தாளரின் மறுபக்கம்' என்கிறதோர் கட்டுரையை ஜெயந்தனின் பெயர் குறிப்பிடாமல் எழுதி அப்போது உறுப்பினராக இருந்த 'ராயர் காப்பி கிளப்' மடற்குழுமத்தில் இட்டேன்.

இப்போது யோசிக்கையில் அனைத்துமே சிறுபிள்ளைத்தனமாகவும் கிறுக்குத்தனமாகவும் தோன்றுகிறது. அப்போது இவை தோன்றாமைக்கு அந்த வயதுக்குரிய நியாயங்கள் இருக்கத்தான் செய்தன. ஒரு எழுத்தாளரிடம் ஏற்படும் தனிப்பட்ட கசப்புகள் அவருடைய படைப்புகளுடனான வாசிப்பனுபவத்தை பாதிப்பதின் அபத்தத்தைப் பற்றியும் மேற்சொன்ன  கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

இந்த அஞ்சலிக் கட்டுரையை எழுதுவதை முன்னிட்டு மேலே குறிப்பிட்டிருந்த 'வெள்ளம்' சிறுகதையை தேடி வாசித்தேன். சில கதைகள் அப்போது ஏற்படும் பரவசத்தை சில வருடங்கள் கழித்து ஏற்படுத்துவதில்லை. ஆனால் 'வெள்ளம்' சிறுகதை இப்போதைய வாசிப்பிற்கும் அந்த உணர்ச்சியை பாதுகாப்பாக தருவதில் வெற்றி பெற்றது. 'மனச்சாய்வு' 'அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்' 'முனுசாமி' 'ஞானக்கிறுக்கன் கதைகள்' போன்ற சிறுகதைகள் மிகச் சிறந்த படைப்புகளாக உடனடி நினைவுக்கு வருகின்றன. தொகுதியை மீள்வாசிப்பு செய்துவிட்டு அவற்றைப் பற்றி எழுத முயல்கிறேன். இடதுசாரி சிந்தனைகளை உள்ளடக்கிய அவரது எழுத்து எந்தவித அலங்காரமுமில்லாத எளிமையானது. சாவசகாசமாக சம்பவங்களை விவரிப்பது. ஆனால் வாசிப்பின் நிறைவில் வலுவான பாதிப்பை ஏற்படுத்துவது.

ஜெயந்தனுக்கு என்னுடைய அஞ்சலி.

(ஜெயந்தனின் புகைப்படம் தொகுதியின் பின்னட்டையில் இருந்து எடுக்கப்பட்டது).


தொடர்புடைய பதிவுகள்:

தினமணி செய்திக் குறிப்பு

ஜெயந்தனின் சிறுகதையொன்றை வாசிக்க

இன்னொரு வாசக அனுபவமும் அஞ்சலியும்

ஜெயமோகனின் அஞ்சலி

ஜெயந்தனின் குறுநாவல் குறித்தான விமர்சனம்

suresh kannan

Monday, February 08, 2010

யுகமாய்த் தொடரும் வரலாற்றுப் பகை

எம் மக்காள்! ஆயிரத்தில் ஒருவன் என்கிற இந்த ஆடும் கூத்தை யான் சத்யமான கொட்டகையில் கண்டனன். நம்புங்கோள்.

இத்திரைப்படம் குறித்து வந்திருக்கும் இணைய விமர்சனங்கள் ஆயிரத்தைத் தாண்டியிருக்கும் என்கிற அச்சமிருந்தாலும் இதுவும் ஆயிரத்தில் ஒன்றாய் இருக்கட்டுமே என்கிற துணிச்சலில்  எழுதுகிறேன். அதுவரை வந்திருந்த விமர்சனங்களை மாத்திரமே வாசித்து முன்னதாக என்னால் எழுதப்பட்ட இந்த இடுகைக்கும் படத்தை நிஜமாகவே கண்டு எழுதப்போகும் இந்த இடுகைக்கும் அதிக வித்தியாசமேதுமில்லை என்பதை அறிய எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

இந்தப் படத்தை மிக மூர்க்கமாக நிராகரிக்கும் விமர்சனங்களையும் வாசித்தேன். அவரவர்களுக்கான அரசியல் மற்றும் புரிதலின் பார்வையில்தான் ஒரு பிரதியை அணுகுகிறார்கள் என்றாலும்  'ஆ.ஒ.வை விட வேட்டைக்காரனே தேவலை' என்கிற தொனியில் எழுதப்பட்ட பதிவுகள் சற்று அதீதமாய் மாத்திரமல்ல அபத்தமாயும் தோன்றியது. க்ளிஷேக்களுடன் தொடர்ந்து உருவாகிக் கொண்டிருக்கும் தமிழ்ச்சினிமா குப்பைகளின் மத்தியில் செல்வராகவன் போன்றோர் உருவாக்கித் தரும் புதிய முயற்சிகளை ஆதரிக்கவில்லையென்றாலும் தம்முடைய பலமனத்தையும் திரட்டி நிராகரிப்பது நல்ல சினிமா ஆர்வலர்களின் செயல் அல்ல.

இந்த மிகுபுனைவுப் படத்தின் காட்சிக் கோர்வைகளை பல்வேறு குறியீடுகளுடன் இணைத்துப் பார்த்த (அப்படி பார்க்காவிடில் இவர்களை புத்திஜீவிகள் என்று யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறார்களோ, அறியேன்) விமர்சனங்களும் நகைப்பையே தந்தது. விட்டால் டாம் &ஜெர்ரி கார்ட்டூனுக்குக் கூட பொழிப்புரை எழுதிவிடுவார்கள் போலிருக்கிறது. பின்புறமுள்ள ஒளிவட்டத்தை சற்று இறக்கி வைத்து விட்டு சமயங்களில் நம்மிடம் மீதமுள்ள குழந்தைமையை உபயோகித்துக் கொண்டு சில சினிமாக்களை அணுகுவது நல்லது.

கலைப்பட ரசிகர்கள் கேளிக்கை சார்ந்த திரைப்படங்களை புறக்கணிக்கிறார்கள் என்கிற பொதுவானதொரு குற்றச்சாட்டு உண்டு. அது உண்மையில்லாதது. கலையின் அடிப்படையே கேளிக்கைதான். நீதி போதனை அல்ல. அவ்வகையில் சுவாரசியமாக உருவாக்கப்படும் கேளிக்கைத் திரைப்படங்களை எல்லாப் பிரிவினருமே ஏற்றுக் கொள்கிறார்கள். பிரச்சினை எங்கே என்றால், திரும்பத் திரும்ப மசாலாக்குப்பைகளை விழுங்கி செரிக்காமல் வாந்தியெடுக்கும் படங்களையும் தம்மை திருவுருக்களாக முன்நிறுத்திக் கொள்ளும் நாயக கோமாளிகளையும்தான் நிராகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இந்த அடிப்படைப் புள்ளிகளை மனதில் நிறுத்தி 'ஆயிரத்தில் ஒருவன்' குறித்தான என் பார்வையை கோர்வையல்லாத வார்த்தைகளின் மூலம் உங்கள் முன்வைக்க விரும்புகிறேன்.


சமகாலத்தையும் தொன்மத்தையும் சாமர்த்தியமாக இணைக்கின்ற புதுமையோடு இத்தனை பெரிய பரப்பில் ஒரு கதையை யோசிக்கத் துணிந்த செல்வராகவனுக்கு அதைச் சாத்தியமாக்குவதில் துணைநின்ற குழுவினருக்கும் முதலில் ஒரு பூச்செண்டு.

12-ம் நூற்றாண்டிற்குப் பிறகு வெற்றிடமாக உள்ள சோழர்களின் வரலாற்றுப் பக்கங்களை தன்னுடைய சாதுர்யமான புனைவால் நிரப்பிய செல்வராகவனின் திறமை பாராட்டப்பட வேண்டியதே. இது ஒரு கற்பனை என்று சுயமாகவோ அல்லது தணிக்கைக் குழுவினரின் குறிப்பின்படியோ முன்ஜாக்கிரதையாக  போட்டிருந்தாலும் பதிவு செய்யப்படாத வரலாற்றின் தொடர்ச்சியை ஒரு படைப்பாளி தன்னுடைய விருப்பத்திற்கு தீர்மானிக்கும் படைப்புச் சுதந்திரத்தை பார்வையாளர்கள் அனுமதிக்கவும் புரிந்து கொள்ளவும் வேண்டும். 'தமிழர்களை காட்டுமிராண்டிகளாக சித்தரிப்பதா' என்று உணர்ச்சிவசப்படத் தேவையில்லை. குகைகளில் வாழாவிட்டாலும் இந்த 21-ம் நூற்றாண்டிலும் நம்முடைய ஆழ்மனதில் உறங்கும் காட்டுமிராண்டித்தனம் மங்கி விடவில்லை என்பதற்கு பேருந்துகளில் இடம்பிடிக்க முண்டியடிக்கிற அன்றாட நிகழ்வுகளிலிருந்து துவங்கி நிறைய உதாரணங்களை காட்ட முடியும்.

லும்பன் சமூகத்தின் பிரதிநிதியாக கார்த்தியின் பாத்திரம் முழுமையாக இல்லாவிட்டாலும் ஒரளவிற்கு அதனுடைய எல்லைகளைத் தொட்டிருந்தது. ஆனால் 'பருத்தி வீரனின்' தொடர்ச்சி போலவே அமைந்திருந்ததை தவிர்த்திருக்கலாம். 'பேலன்ஸ் பேமெண்ட் கொடுங்க' என்பது இயல்பான தொனியில் இருந்தாலும் எடுத்து எடுப்பிலேயே பெண்களை படுக்க அழைப்பதெல்லாம் சினிமாவில் மாத்திரமே சாத்தியமுள்ள மிகையான சித்தரிப்பு. இவர்தான் அந்த சோழத் தூதுவன் என்பதற்கான தடயங்களை ஆங்காங்கே பூடகமாக வைத்திருந்தது இயக்குநரின் திரைக்கதை சாமர்த்தியத்தை காட்டுகிறது. (ரீமாவின் துப்பாக்கி பழுதாவது, கார்த்தியை வெட்டவருபவன் மின்னல்தாக்கி இறப்பது போன்றவை). சட்டையில்லாமல் திரியும் இவரின் முதுகிலுள்ள புலி சின்னத்தை ரீமா எப்படி காணத் தவறினார் என்பது ஒரு கேள்விக்குறி.

ஆண்ட்ரியாவின் பாத்திரம் படத்திற்கு தேவையில்லாத சுமை. இவர் ஏன் படம் முழுவதும் மந்திரித்துவிட்டது போலவே திரிகிறார் என்பது புரியவில்லை. அந்த ஆபத்தான பயணம் குறித்து ஓலைச்சுவடியின் மூலம் இவர்தான் தெளிவாக அறிந்திருக்கிறார் எனும் போது ஆரம்பத்தில் ரீமா இவரை ஏதோ 'விருப்பமிருந்தால் வா' என்கிற ரீதியில் கூப்பிடுவதும் 'ஏன் இவ்வளவு ஆபத்து இருக்கிறது என்று முன்பே சொல்லவில்லை' என்று பாதுகாப்பு அதிகாரி இவரை கோபித்துக் கொள்வதும் முரணாக இருக்கிறது. ஆராய்ச்சியாளர்களால் நிறைய முறை முயற்சி செய்யப்பட்ட தோல்வியடைந்த இந்தத் திட்டத்தில் இத்தனை ஆபத்து இருக்கிறது என்பதை எப்படி அந்தக் குழுவால் எதிர்பார்க்க முடியவில்லை என்பது தெளிவாக இல்லை. பழங்குடி இனத்தவரின் மொழியிலே உரையாடக்கூடிய, ஓலைச்சுவடியை வாசிக்கிற அளவிற்கு தமிழறிவு கொண்டிருக்கிற இவர், 'ராஜா ப்ளீஸ் நான் சொல்றதக் கேளுங்கோ' என்று சமகாலத்தமிழில் (?!) திணறுவது ஏன் என்பதும் ஒரு நெருடல்.

நல்லதொரு இயக்குநரின் கையில் கிடைத்தால் எப்படி ஒரு மொண்ணையான நடிகர் கூட சோபிக்க முடியும் என்பதற்கு ரீமாசென்னின் பாத்திரம் ஒரு உதாரணம். திரைப்படத்தின் இரண்டாம் பகுதியின் பெரும்பான்மையை இவரே ஆக்ரமித்துக் கொள்கிறார். பாண்டிய வாரிசாக இவர் வெளிப்படுத்தப்பட்டவுடன் இவரின் உடல்மொழியும் வன்ம வெளிப்பாடும் சிறப்பாக இருந்தது. ஆனால் இவர் ஏன் மன்னனுடன் உடல்தொடர்பு வைத்துக் கொள்ள அத்தனை முனைப்பாக இருக்கிறார் என்பது தெளிவாக இல்லை. தாமே ஒரு 'சோழ இளவரசனை' உருவாக்கி அவனை கைப்பற்றுவதுதான் இவரது நோக்கமாக இருக்குமோ? :-)

மன்னர் என்பதற்காக வழக்கமான முறையில் திருவுருவாக சித்தரிக்காமல் சோழ மன்னனின் பாத்திரம் அதிகபட்ச யதார்த்தத்துடன் உருவாக்கப்பட்டிருந்தாகத் தோன்றியது.. எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் அதிகார மையங்கள் மக்களிடமிருந்து நெருங்கியிருப்பதான பாவனையிலேயே இருக்கும் என்பதற்கு இந்தப் பாத்திரம் ஒர் உதாரணம். 'மந்திரியாரே மாதம் மும்மாரி பொழிந்ததா' என்கிற கேள்வியும் 'அது தெரியாம நீ இன்னா மேன் பண்ணிட்டு இருந்தே' என்பதும் நகைச்சுவைத் துணுக்காக இருந்தாலும் அதில் பொதிந்திருக்கும் உண்மையையும் நாம் காண வேண்டும். 'ராசாவே, அரண்மனை அந்தப்புரத்தில் சொகமாய் இருக்கறீங்கோ. எங்களுடைய இடர்ப்பாடுகளை யாராவது உங்களிடம் உரைத்ததுண்டா' என்று மக்கள் கூட்டம் ஆற்றாமையுடன் கேட்கும் போது ஆத்திரத்துடனும் இயலாமையுடனும் கதவைத் சாத்திக்கொள்ளும் மன்னனின் அதே மனப்பாங்கை இன்றும் கூட காண முடியும். முதுகு சொறிவதற்கு கூட ஆள் வைத்திருக்கும் பூர்ஷீவாத்தனமும் தாய்த் தேசத்திற்கு பயணப்படும் செய்தியைக் கேட்ட மக்களின் உற்சாகத்தைக் கண்டு கண்கலங்க பரவசப்படுவதுமான கலவையான பாத்திரத்தை பார்த்திபன் சிறப்பாக கையாண்டிருந்தார். இந்தப் பாத்திரத்திற்கு இவரை விட்டால் பொருத்தமான இன்னொருவர் பிரகாஷ்ராஜ் மாத்திரமே.

எதையோ முறையிட வந்திருக்கிற பெண்ணைக்கூட தம்மிடம் கூடத்தான் விரும்புகிறார் என்னுமளவிற்கு பெண் என்றாலே அவளை உடலாகவே காண்கிற அளவிற்கு ராஜாவின் மனநிலை இருக்கிறது என்பதை சித்தரித்திருந்து இயல்பானதாக இருந்தது. தம்மை தொட வருகிற ராஜாவை ஆண்ட்ரியா மெல்ல தள்ளி விட்டதும் ராஜா உட்பட சுற்றியிருக்கும் பெண்கள் அனைவருமே அதிர்ச்சியடைகிறார்கள். ஒரு பெண் ராஜாவை புறக்கணிப்பதாவது? இம்மாதிரியான சின்னச் சின்ன நுட்பமான காட்சிக் கோர்வையை வைத்து இயக்குநரின் நுண்ணுர்வை சிலாகிக்க முடிகிறது.

()

திரையரங்கில் காணும் போது படத்தின் பிற்பகுதியிலுள்ள பல காட்சிகள் வெட்டப்பட்டிருந்ததை உணர முடிந்தது. இணையத்திலிருந்த uncut version-ஐ வைத்து இதை சரிபார்த்துக் கொண்டேன். பதிலாக படத்தின் முற்பகுதியிலுள்ள தேவையில்லாத (பாடல்கள் உட்பட) காட்சிகளை தூக்கியிருக்கலாம். முற்பகுதி விளையாட்டுத்தனமாகவும் பிற்பகுதி தீவிரமாகவும் இருந்ததால் இந்தப்படத்தை எவ்வகையில் சேர்ப்பது என்ற குழப்பம் ஏற்படுகிறது. திரைக்கதை முறையாக திட்டமிடப்படாதனின் விளைவு இது.

மிகுபுனைவின் உருவாக்கத்தில் தர்க்கத்தின் செல்வாக்கு சொற்பமேயென்றாலும் மிகுபுனைவும் தர்க்கத்தின் ஒரு சட்டகத்தில் அடங்கித்தான் ஆக வேண்டும். நான்-லீனியர் படைப்பென்றாலும் அந்த ஒழுங்கின்மையும் பார்வையாளனின் பொதுவான புரிதலுக்காக ஏதோ ஒருவகை ஒழுங்கோடு அமைந்திருக்க வேண்டும். அந்த வகையில் இந்தப் படத்திலும் பல தர்க்கப் பிழைகளைக் காண முடிகிறது. நவீன ஆயுதங்களும் புராதன ஆயுதங்களும் மோதிக் கொள்ளும் காட்சிகள் போன்றவை பெரும் காமெடியாகவே தெரிகிறது. இப்படி பல காட்சிகளை உதாரணம் காட்ட முடியுமென்றாலும் சமீபத்திய தமிழ்ச் சினிமாவில் நிகழ்ந்திருக்கும் ஒரு புதிய முயற்சிக்காகவும் அனுபவத்திற்காகவும் இந்தப் படத்தை நிராகரிக்க நான் துணிய மாட்டேன். 

suresh kannan

Wednesday, February 03, 2010

அஞ்சுவண்ணம் தெரு

தோப்பில் முஹம்மது மீரானின் இன்னுமொரு சுவாரசியமான புதினம்.

நாஞ்சில் நாட்டின் பிரத்யேக வட்டார மொழியும் இசுலாமியச் சமூகப் பின்னணியில் இயங்குகிற காரணத்தால் ஆங்காங்கே இரைந்திருக்கிறஅரபிச் சொற்களும் வாசகனை ஒரு வேளை ஆரம்பத்தில் திணறடிக்கலாம். ஆனால் அது அதிகாலை குளிர் குளத்தில்  நீராடுவதைப் போலத்தான். மனதைத் திடப்படுத்தி முதல் முங்கை போட்டுவிட்டால் பிறகு எழுந்திருக்க மனதே வராத ஆனந்தத்தை மீரானின் புதினத்தின் மூலமாக அனுபவிக்க முடிகிறது.

கடலோர கிராமத்தின் கதை,  சாய்வு நாற்காலி, துறைமுகம்... என்று மீரானின் படைப்புகளில் தொடர்ச்சியாக இதை உணர்கிறேன். வழக்கமான கடலோர மனிதர்களைத் தவிர்த்து தறி நெசவுத் தொழிலில் ஈடுபடும் மனிதர்கள் இருந்தாலும் இந்தப் புதினத்தின் மையம் அவர்களைப் பற்றியல்ல. தொன்மங்களும் நம்பிக்கைகளும் நவீன காலத்தின் பரிணாமத்தில் மெல்ல சிதறுண்டுப் போவதை இந்தப் புதினம் விவரிக்கிறது. தான் ஒரு சிறந்த கதை சொல்லி என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டேயிருக்கிறார் மீரான். இந்தச் சமூகப் புதினத்தை துப்பறியும் நாவல் போல் மிகுந்த சுவாரசியத்துடன் வாசித்து முடித்தேன்.


மலையாளத்து மகாராஜா சோள (?) பாண்டிய நாட்டிலிருந்து ஐந்து நெசவுக் குடும்பங்களை தருவித்து அவர்களுக்கான நிலத்தையும் ஒதுக்கி குடியமர்த்துகிறார். எனவேதான் அந்தத் தெருவின் பெயர் இயல்பாக 'அஞ்சு வண்ணம் தெரு'வாகிறது. 'அடக்கம் செய்யப்பட்ட தாய்'தான் அந்தத் தெரு மனிதர்களுக்கு தெய்வமாக இருக்கிறது. நாட்டார் மரபில் சிறு தெய்வங்கள் தோன்றும் அதே பின்னணிதான். மகாராஜா உலாவரும் போது அவரை மறைந்திருந்து பார்த்த தஞ்சாவூர் தாயும்மாவின் (ஹாஜரா) அழகில் மயங்கி மணம் முடிக்க தூது அனுப்புகிறார். ஒரு காபிருக்கு இசுலாமிய பெண்ணை மணம் முடிப்பதாவது? தந்தை கேட்கிறார் " மன்னன் உன்னை மனைவியாக்கி விடுவான். நீ காபிராக இறக்கப் போகிறாயா? ஈமானுள்ள முஸ்லிமாக இறக்க விரும்பிறியா?" மகள் சொல்கிறாள் "ஈமானுள்ள முஸ்லிமாக". "அப்படியானால் இந்த குழியில் இறங்கம்மா". மதத்திற்காக உயிருடன் புதைக்கப்படுவதை விரும்பி ஏற்றுக் கொள்ளும் அவள் 'அடக்கம் செய்யப்பட்ட தாய்' ஸ்தானத்தை அடைந்த புராதன நிகழ்வு அஞ்சுவண்ணம் தெருவின் ஆதி வரலாறு தெரிந்தவரான பக்கீர் பாவா சாகிப் மூலமாக வாப்பாவிற்கும் தெரிவிக்கப்படுகிறது.

அஞ்சுவண்ணம் தெருவில் ஜரிகை தாவணியும் அங்கவஸ்திரமும் பட்டு வேட்டியும் நெய்யக்கூடிய ஒரே தறிக்காரனான அப்பாஸ் முதலியின் மண்வீட்டை இடித்து ஷேக் மதார் சாகிப் 'நபீசா மன்ஸிலை' கட்டுகிறார்.  அந்தத் தெருவிலுள்ள தைக்கப்பள்ளியை விட அந்தக் கட்டிடம் உயரமாக இருப்பது ஆபத்து என்று பள்ளிவாசலை பராமரிக்கும் மைதீன் பிச்சை மோதீன் முதற்கொண்டு தெருவாசிகள் அனைவரும் சொல்கின்றனர். ஆனால் இதற்கொரு பரிகாரமுண்டு. தைக்காப்பள்ளியின் மேலே ரெண்டு மினாராக்கள் கட்டிக்கொடுப்பதுதான் அது. ஆனால் தொழில் சுணங்கியிருப்பதாலும் ஷேக் மதாப் சாகிப்பிற்கு விருப்பமில்லாததாலும் அதை நிறைவேற்ற முடிவதில்லை. தொழில் நொடித்து வீட்டில் அமீனா புகும் நிலை ஏற்படுகிறது. தெய்வத்தின் சாபம் என்றே தெருவாசிகள் இதைக் கருதுகின்றனர்.

பிறகு பாழடைந்த அந்த வீட்டினுள் பெண் தற்கொலையொன்று நிகழ்வதாலும் பேய்கள் இருப்பதாலும் யாரும் அதனருகே செல்வதில்லை. மகளுக்காக வீடொன்றை வாங்க முயலும் 'வாப்பா' எதிர்ப்பையும் மீறி அதை வாங்கி வீட்டின் பெயரை 'தாருல் சாஹினா' வாக மாற்றினாலும்  அவருடைய மகளும் மருமகனும் அதிருப்தியோடும் தெருக்காரர்கள் கிளப்பிவிடும் பீதியுடனும் அங்கு வாழ்கிறார்கள். இந்த இடத்திலிருந்து புதினம் நிகழ்காலத்தில் இயங்கத் துவங்குகிறது. அதன் பின்னர் அஞ்சுவண்ணம் தெருவில் ஏதேதோ சம்பவங்கள் நடக்கின்றன. மதத்தின் புராதனத்தன்மையும் நவீனத்தன்மையும் மோதிக் கொள்கின்றன. தைக்காப்பள்ளி கவனிப்பாரின்றி பாழாகிறது. 'அடக்கம் செய்யப்பட்ட தாய்க்கு' விளக்கேற்றவோ சந்தனத்திரி கொளுத்துவதற்கோ ஆளில்லை. மைதீன் பிச்சை மோதீன் மர்மப்பாம்பு கடித்து பள்ளிவாசலிலேயே இறக்கிறார்.

()

மீரான் இயல்பான வட்டார மொழியில் காலத்தை முன்னும் பின்னுமாக கடக்கின்ற உத்தியோடு இந்தப் புதினத்தை நகர்த்திச் செல்கிறார். மத நம்பிக்கைச் சார்ந்த ஆனால் பகுத்தறிவிற்கு ஒட்டாத விஷயங்களை தன்னுடைய மேதமையை நுழைக்காமல் அதனின் இயல்பிலேயே விவரித்திருப்பது நன்றாக இருக்கின்றது. பள்ளி வாசலை பராமரிக்கிற பாவப்பட்ட பாத்திரமொன்று மீரானின் படைப்புகளில் தொடர்ந்து சித்தரிக்கப்படும். இதிலும் அது 'மைதீன் பிச்சை மோதீனாக' வருகிறது. தைக்காப்பள்ளியில் தொடர்ந்து விளக்கு எரிவதற்கு தெருவாசிகளிடம் இரந்து கொண்டேயிருக்கிறார். "அடக்கம் செய்யப்பட்ட தாய் இன்னு இருட்டிலையாக்கும்" மம்முதம்மா என்றொரு பாத்திரம் இதில் முக்கியமானதும் சுவாரசியமாக சித்தரிக்கப்பட்டதுமாகும். அஞ்சுவண்ண தெருவின் பெரும் சண்டைக்காரியாக குழாயடியை கைப்பற்றியிருக்கும் அவள் தெருவாசிகளின் அந்தரங்கங்களை சண்டையில் போட்டு உடைக்கிறாள். 'எப்படி இவளுக்குத் தெரிந்தது' என்று தெருவாசிகள் திகைப்படைகிறார்கள்; ஆச்சரியப்படுகிறார்கள்; ஜின்னுவின் துணையுடன்தான் இது சாத்தியமாகும். அவளுடைய வரலாறு மைதீன் பிச்சை மோதீன் மூலமாக வாப்பாவிற்கு தெரியப்படுத்தப்படும் போது நமக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. சுதந்திரத்திற்காவும் தன்னுடைய மதத்திற்காகவும் உயிரை முன்வந்து இழந்த ஒரு தியாகியின் மகள். வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களில் இவ்வாறு ஆயிரக்கணக்கான சித்திரங்கள் உள்ளன.  

பொதுவாக எல்லாப் படைப்புகளிலும் பிரதியை உருவாக்குகிற ஆசிரியனும் ஒரு பாத்திரமாக உள்நுழைந்திருப்பான். அப்படியாக இதில் 'வாப்பா'வரும் பாத்திரம் நூலாசிரியர் மீரானாக இருக்கக்கூடும் என யூகிக்கிறேன். இசுலாமிய மதத்தின் சில கூறுகளை அறியாமையில் ஏற்பட்டிருக்கிற மூடத்தனம் என்ற புரிதல் இவருக்கு இருக்கிறது. தைக்காப்பள்ளிக்கு மினாராக்கள் கட்டிக் கொடுக்காததால்தான் வீட்டில் துன்பங்கள் நிகழ்கின்றன என்று தீவிரமாக நம்பும் மகளையும் மருமகனையும் இவர் தெளிவுப்படுத்த முயன்று கொண்டேயிருக்கிறார். அவர்கள் தரும் எரிச்சலையும் சலிப்பையும் அறிவின் துணையுடன் கடக்கிறார். அதன்படியே அந்தக்குடும்பம் முதலில் சில பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொண்டாலும் பின்னர் நல்ல நிலைமைக்கு ஆளாகிறது.

நாவலின் பிற்பகுதி கசப்பான வார்த்தைகளால் நிறைந்திருக்கிறது. மதத்தை நவீனப்படுத்துவதாகச் சொல்லும்   ஒரு கூட்டத்திற்கும் மரபின் மீதான நம்பிக்கைவாதிகளும் மோதல் நிகழ்கின்றன. இரு குழுக்களின் மோதலில் வேம்படி பள்ளி நீதிமன்றத்தின் கைக்குப் போகிறது. நீதிமன்றத்தின் சார்பாக ரீசிவராக நியமிக்கப்படுபவர் ஓர் இந்து. எல்லா வரவு செலவுகளையும் அவரிடம் ஒப்படைக்கவும் எந்தவொரு அனுமதிக்கும் அவரை நம்பியிருக்கவும் வேண்டியிருக்கிறது. இதிலுள்ள முரண்நகையை பூடகமாகச் சொல்லியிருக்கிறார் மீரான். எந்தவொரு வன்முறைச்சம்பவத்திற்கும் அப்பாவி இசுலாமியர்கள் பலிகடாக்களாக முன்நிறுத்தப்படுவதையும் சில நிகழ்வுகள் சொல்லிச் செல்கின்றன.

தறியின் நெசவு போலவே புரானத்தோடும் மத ஆன்மீகத்தோடும் இயைந்து இயைந்து கதை சொல்லியிருக்கும் மீரானின் படைப்புத் திறமைக்காகவும் வட்டார மொழிச் சுவைக்காகவும் கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய புதினம் - அஞ்சுவண்ணம் தெரு.

அஞ்சுவண்ணம் தெரு,(நாவல்) அடையாளம் வெளியீடு, 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம்,621310 , முதல் பதிப்பு , 2008, விலை ரூ.130/ -

நாவல் குறித்த  ஜெயமோகனின் பதிவு
                                
                                 அ.ராமசாமியின் பதிவு
                           
                                 களந்தை பீர்முகம்மதுவின் பதிவு

மீரானின் 'துறைமுகம்' நாவல் குறித்த பதிவு

suresh kannan