Showing posts with label பொக்கிஷம். Show all posts
Showing posts with label பொக்கிஷம். Show all posts

Tuesday, October 20, 2009

சேரனின் உலக சினிமா (?)


சேரனின் 'பொக்கிஷம்' திரைப்படத்தைப் பற்றி ரத்தக் கண்ணீரில் எழுதப்பட்ட பல இணைய விமர்சனங்களை படித்ததில் இருந்து அதை பார்ப்பதை பற்றி யோசிக்கவே திகிலாகவே இருந்தது. என்றாலும் மனதைத் திடப்படுத்திக் கொண்டு பார்த்ததில் அப்படியொன்றும் மோசமில்லை.

பதின்ம வயதில் ஒரு பெண்ணின் பெயரைத் தெரிந்துக் கொள்ளவே ஆறுமாசம் கடந்துவிடுகிற காலகட்டம் ஒன்று முன்பிருந்தது. ஆனால் சந்தித்த மறு தருணத்திலேயே 'லவ்யூ' எஸ்எம்எஸ்ஸ¥ம் சில வாரங்களிலேயே அங்கிருந்து கழட்டிக் கொண்டு இன்னொரு மொபைலைத் தேடியலைகிற இன்றைய நவீன யுகத்தோடு அதனை ஒப்பிடும் போது காதலின் (அப்படியொரு கருமாந்திரம் இருப்பதாகத்தானே அந்த வயதுகளில் தோன்றுகிறது?!) கவித்துவமான கணங்களை இழந்து நிற்கிற இந்த தலைமுறையின் அபத்தங்களைப் பற்றி இந்தப் படம் உரையாடுவதாகத் தோன்றுகிறது. தகவல் தொழில்நுட்பத்தின் தொடர்ச்சியான மேம்பாடுகள் மனிதனுக்கு வசதிகளை ஏற்படுத்தித் தருவதாக மேலோட்டமாக தோன்றினாலும் ஆழமாக யோசித்துப் பார்க்கும் போது அவனுக்கு மிகுந்த நெருக்கடிகளை அவை ஏற்படுத்தித் தருவதாகவே நான் கருதுகிறேன். வாரத்திற்கு ஒரு முறை ஒரே சினிமா எனும் நிலையிருக்கும் காலத்தில் சினிமா மீதிருந்த கவர்ச்சியையும் அதைப் பார்ப்பதில் ஏற்படும் பரபரப்பையும் தொலைக்காட்சிகள் திரைப்படங்களை உமிழ்ந்து கொண்டேயிருக்கும் இக்கால கட்டத்தில் இழந்துவிட்டோம். தின வாழ்வின் நிகழ்வுகள் அனைத்திலும் புதைந்திருக்கும் பரபரப்பு நம்முடைய மென்மையான உணர்ச்சிகளை மொண்ணையாக்கி விடுகின்றது.

சேரனின் நடிப்பை மிகக் குறையாக பலரும் சொன்னார்கள். வணிகநோக்குப்பட கதாநாயகர்களை விட சேரனின் நடிப்பு மேலாக இருந்ததாகவே எனக்குப்பட்டது. மருத்துவமனையில் ஆரம்பிக்கின்ற அந்த மெலிதான நட்பு இறுக்கமான காதலாக உருமாறுவதை மிக இயல்பாக காட்சிப்படுத்தியிருந்தார். பிரிவு ஏற்படுத்துகிற மனக்கொந்தளிப்பை நன்றாகவே வெளிப்படுத்தியிருந்தார். பெரும்பாலான காட்சிகள் மிகுந்த அழகுணர்ச்சியுடன் பதிவு செய்யப்பட்டிருந்ததில் ஒளிப்பதிவாளரின் கடின உழைப்பு தெரிகிறது. கடிதங்கள் வாசிக்கப்படுவது தொடர்ச்சியாக அமைந்திருந்த திரைக்கதையின் பலவீனத்தை மாத்திரம் சற்று ஒழுங்குப்படுத்தியிருக்கலாம். இந்த ஒரு விஷயம்தான் படத்திற்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது.

தொழுகையின் போது நதீரா காதலின் பரவசத்தில் மனம் தடுமாறுவது போன்றதொரு காட்சி வருகிறது. சேரனுக்கு தைரியம் அதிகம்தான். அடிப்படைவாதிகளின் கண்ணில் ஏன் இந்தக்காட்சி படவில்லை என்பது ஆச்சரியகரமாக இருக்கிறது. அதே போல் 'சில காலத்திற்குப் பிறகு திருமணம் நடக்கும்' என்று வாக்குத்தருகிற அந்த இசுலாமியப் பெரியவர் சிட்பண்ட்காரர்கள் போல் யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் ஊரைவிட்டு மறைந்து போவது போலவும் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. இதையும் வைத்து யாராவது திரியைக் கொளுத்தி விட்டிருந்தால் படமாவது இன்னும் சில நாட்கள் கூட ஓடியிருக்கும். சேரனுக்கு கொடுத்து வைக்கவில்லை.

தாயைப் பற்றி குறிப்பிடும் போது 'அதட்டுவது அவள் குரலல்ல' என்கிற நதீராவின் கடித வரியும் அவள் வீட்டின் அருகில் காண்பிக்கப்படும் உபயோகப்படுத்தப்படாத கட்டுமரமும் சிறந்த குறியீடுகளுக்கான உதாரணக்காட்சிகள். ஆனால் நதீராவிற்கு இன்னமும் திருமணமாகாமலிருப்பதாக காட்டப்படுவது யதார்த்தக் குறைவானதாக இருககிறது. அந்தப் பிடிவாதமான பெரியவர் எப்படியும் நதீராவிற்கு திருமணம் செய்து வைத்திருப்பார். கிளைமாக்ஸ் அதிர்ச்சிக்காகவே இதை சேரன் முயன்றிருப்பார் என்று தோன்றினாலும் ஆட்டோகிரா·பில் தெரிந்த அதே ஆணாதிக்கப் போக்கு இதிலும் தொடர்கிறது.

தன்னுடைய தந்தையின் மிகப் பழைய காதல் கடிதங்களை சேர்பிப்பதற்காக கடல் கடந்து மகன் செல்லும் சம்பவம் யதார்த்தத்தில் ஒருவேளை நிகழ்ந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று யோசிக்கவே சுவாரசியமாயிருக்கிறது. "ஏணடாப்பா போயும் போயும் இதுக்காகவே இவ்ளோ தூரம் வந்தே?" என்று வெற்றிலைக் கறையுடன் கூடிய பொக்கை வாயுடன் சிரிப்பாய்ச் சிரித்திருக்கலாம் அல்லது "அடப்பாவி,நானே அந்த சந்தேகப்புத்தி உள்ள மனுஷனோட இத்தன வருஷமா கஷ்டப்பட்டு குடும்பம் நடத்திட்டு இருக்கேன். எரியற நெருப்புல எண்ணைய ஊத்தினாப்ல வந்து சேந்திருக்கியே, இந்த வயசுல தேவையா எனக்கு?" என்று எரிந்து விழுந்திருக்கலாம்.

லெனின் என்று தன் மகனுக்கு பெயர் வைத்திருக்கிற, இந்து மதத்தைச் சார்ந்த 'முற்போக்கான' அப்பா, காதல் மணம் காரணமாக ஒருவேளை இசுலாமிய மதத்தில் இணைந்து விடுவானோ என்று தயக்கத்துடன் யோசிப்பது முரணாக இருக்கிறது.

எந்தவித வணிக மாசுகளுக்கும் சமரசப்படுத்திக் கொள்ளாமல் நேர்மையான படமொன்றை தந்ததற்காகவே சேரனைப் பாராட்ட வேண்டும்தான் என்றாலும் அவர் தன்னுடைய பேட்டிகளில் ‘உலக சினிமா’ ஒன்றை முயற்சித்திருப்பதாகவும் பெரும்பாலான ரசிகர்களுக்கு அதை ஏற்கும் முதிர்ச்சியில்லை என்றும் ஆதங்கப்படுவது எரிச்சலாக உள்ளது. கலைப்படம் என்றாலே அது நத்தை வேகத்தில்தான் நகரும் என்றும் அதுதான் உலக சினிமாவின் அடையாளம் என்று சேரன் புரிந்து கொண்டிருக்கிறாரா என்று சந்தேகமாக இருக்கிறது. என்னால் சவால் விட்டே சொல்ல முடியும். பெரும்பாலான உலக சினிமா இயக்குநர்களின் படைப்புகள் அடிப்படையில் ஒரு சுவாரசியத்தைக் கொண்டிருக்கும். உதாரணத்திற்கு இதுவரை நான் பார்த்த எந்தவொரு சத்யஜித்ரேவின் திரைப்படங்களிலும் இடையில் அசுவாரசியமாக உணர்ந்ததில்லை. தேவை சற்று பொறுமைதான். வணிகநோக்கு சினிமாக்களில் பழகின மனநிலையிலிருந்து விலகி நின்று அணுகினாலே போதுமானது. (சாருவும் இதைப் பற்றி இங்கே இவ்வாறாக குறிப்பிட்டிருக்கிறார்)

சினிமா என்றால் அதில் நல்ல சினிமா , கெட்ட சினிமா , மசாலா சினிமா , சீரியஸ் சினிமா என்று பலவிதமாக உள்ளது. ஆனால் எந்த சினிமாவாக இருந்தாலும் அதன் அடிப்படையான தன்மை , அது சுவாரசியமாக சொல்லப் பட்டிருக்க வேண்டும் என்பதுதான். ஒரு கலைப் படைப்பு என்றால் அது சுவாரசியமாக இருக்காது ; ஒரே அறுவையாக இருக்கும் ; அதுதான் ஆர்ட் ஃபில்ம் என்பதாக சராசரி மனிதனிடம் பொதுவாகவே ஒரு தவறான அபிப்பிராயம் உள்ளது. அதில் எள்ளளவும் உண்மை இல்லை. பெர்க்மன் , டர்க்கோவ்ஸ்கி என்று எந்தத் திரைப்பட மேதையாக இருந்தாலும் சரி , அவருடைய படம் ஒரு குறைந்த பட்ச சுவாரசியத்தைக் கொண்டிருக்க வேண்டும். உலகில் எந்த இடத்திலும் சீரியஸ் சினிமா என்றால் பார்க்க முடியாதபடி அறுவையாக இருக்கும் என்ற கருத்து நிலவுவதில்லை.


சற்றே பலவீனமான திரைக்கதை என்பதைத் தவிர வேறொன்றும் பெரிதான குறையில்லாத இந்தப்படம் பெரும்பாலோனோர்க்கு பிடிக்காமல் போனதற்கு காரணம் பதிவின் இரண்டாவது பத்தியில் உள்ளதாக நான் கருதுகிறேன்.


suresh kannan