Friday, October 31, 2008

நான் பியர் குடித்து வளர்ந்த கதை

"சூத்துல கறியே இல்ல. நீயெல்லாம் ஏண்டா பேண்ட்ட இன் பண்றே?" என்பான் ஜோசப் அடிக்கடி. ஆறாம் வகுப்பிலிருந்து என்னுடன் படித்தவன். போலீஸ்காரன் மகன். அப்போதே கருகருவென்ற மீசையுடன் வகுப்பறையில் ரகசிய சிகரெட் பிடிப்பான். நான் அப்போது 'துள்ளுவதோ இளமை' தனுஷின் தம்பி போல் கோடு மாதிரி பரிதாபமாக இருப்பேன். கால்பந்து விளையாட்டில் மிகச்சுலபமாக என்னிடமிருந்து பந்தைப் பறித்துக் கொண்டு சிரித்துக் கொண்டே செல்வார்கள். வேறு ஆள் இல்லாத ஒரு அதிர்ஷ்ட தினத்தில் கோல் கீப்பராக நின்றேன். எதிரணியினர் அடித்த, மிகச் சோம்பலாக உருண்டு வந்த பந்தை கேவலமாக தடுக்க முயன்று காலின் நடுவே அனுமதித்து போஸ்டிற்குள் வழியனுப்பி வைத்தேன். எதிரணியினர் குதூகலத்தில் கொண்டாட எங்கள் டீமின் கேப்டன் ராஜகோபால் அடிக்கவே வந்துவிட்டான். த்ரீ பிச் பந்தில் முதுகு காட்டி ஓடும் போது பிருஷ்டத்தை நோக்கி மிகச்சரியாக பந்தை அடிப்பார்கள். மைதானமே 'ஓ'வென்று சிரிக்கும். அழுகையாக வரும். ஆண் என்பவன் அழக்கூடாது என்கிற கற்பிதம் காரணமாக பலவீனமாக சண்டைக்குச் செல்வேன். எப்படியாவது உடம்பை குண்டாக ஆக்குவது என்றொரு வெறி அப்போது ஏற்பட்டது.

இதுதான் நான் பியர் சாப்பிட ஆரம்பிக்க காரணமா என்று கேட்டால் இல்லை. இன்னொரு கிளைக்கதையும் இருக்கிறது. எங்கள் வீடு இருந்த தெருவிலேயே பெண்கள் உயர்நிலைப்பள்ளி இருந்தது. தேடியலைந்து சைட் அடிக்கத் தேவையின்றி பேஷன் டிவி மாதிரி மாணவிகள் ரோஜாக்கூட்டம் போல் வரிசையாக வர நின்ற இடத்திலேயே ஜோலியை முடித்துவிடலாம். நான் ஒல்லியாக இருந்தாலும் பார்க்கச் சுமாராகவே இருப்பேன். எனவே சில மாணவிகளின் ரகசிய பார்வையை சந்திக்க முடிந்தது. அதில் ஒரு மாணவி, பாரதிராஜா படத்தின் பின்னணி இசையோடு எப்போதும் குறுகுறுவென்றே பார்ப்பாள். அன்றைய கனவிலேயே அவளோடு திருமணமாகி குழந்தையை பள்ளிக்கூடத்தில் சேர்க்குமளவு முன்னேறி விட்டேன்.

இப்படியே பார்வைகள் உரசிக் கொண்டிருந்த போது 'சும்மா இருந்தால் வேலைக்கு ஆகாது' என்று ஒருநாள் முடிவெடுத்தேன். அவள் தனியாக வந்த ஒரு தருணத்தில் நண்பனின் கடையிலிருந்த பைவ்ஸ்டார் சாக்லெட் இருந்த ஜாடியை அப்படியே எடுத்துக் கொண்டு அவளிடம் நீட்டினேன். 'எனக்கு இன்னைக்குப் பிறந்த நாள். சாக்லெட் எடுத்துக்குங்க". ஒரு கணம் தயங்கியவள் சிரித்துக் கொண்டே சற்று விலகி கடந்து சென்றாள். சாக்லெட் எடுத்துக் கொள்ளாவிடினும் என்னை நோக்கிச் சீறாமல் சிரித்தது எனக்குள் பெருத்த நிம்மதியையும் பரவசத்தையும் ஏற்படுத்தியது. 'நிச்சயம் இது லவ்வுதான்'.

ஆனால் அது அன்றைய மாலையே தலைகீழாக கவிழ்ந்துவிடும் என்று எதிர்பார்க்கவில்லை. மாணவிகளை பத்திரமாக வீட்டிற்கு வழியனுப்பி வைக்க வேண்டுமே என்கிற கடமையுணர்ச்சியோடு நான் ஈவினிங் டியூட்டி பார்த்துக் கொண்டிருந்த போது 'குறுகுறு' என்னைக் கடந்து போனாள். அப்போது அவள் கூட இருந்த ஒரு கோணங்கிவல்லி "என்னடி, உங்க அண்ணன் சாப்பிடவே மாட்டாரா. இவ்ளோ ஒல்லியா இருக்காரே. முதல்ல உடம்ப பாத்துக்கச் சொல்லுடி" என்று கிண்டலடித்து விட்டுப் போனாள். என்னை நிராகரிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு பெண்கள் வழக்கமாக வீசும் ஆயுதமான 'அண்ணா'வை அவள் தன் தோழி மூலம் வீசிவிட்டுப் போனாள் என்பதை உணர்ந்த போது சினிமாப்படங்களில் போல மனதில் கடல் அலை பேரிரைச்சலோடு அலைந்து மோதியது. "ஒருத்தன் ஒல்லியா இருக்கலாம்டி. ஆனா சில்லியாத்தான் இருக்கக்கூடாது" என்று பார்த்திபன்தனமாக அவளை நோக்கி கூவத் தோன்றியது.

Photobucket

சரித்திரத்தில் இடம்பெறத்தவறி விட்ட இந்தச் சம்பவத்தை கருப்பு பீட்டரிடம் சொல்லி அழுத போது அவன் கொடுத்த ஐடியாதான் அது. 'மச்சான். இதுக்குப் போயா பீல் பண்றே. ரெண்டு நாளைக்கு ஒரு தடவை பீர் அடி. அப்புறம் பாரு. உடம்பு சும்மா கும்முன்னு ஏறும். நம்ம செல்வம் கூட இதத்தான் பாலோ பண்ணான். இப்பப் பாத்தியா எப்படி இருக்கான்?" சினையாக இருக்கும் பன்றி போல் பின்பக்கங்களை ஆட்டிச் செல்லும் செல்வத்தின் தோற்றம் மனதில் தோன்றியது. பீரா அல்லது பியரா என்று இன்று வரை குழப்பத்தை ஏற்படுத்தும் அந்த சமாச்சாரத்தைப் பற்றி கேள்விப்பட்டது அப்போதுதான்.

பள்ளி வெளியில் விற்கும் எலந்தைப் பழங்களை வாங்கவே வீட்டிலிருந்து சில்லறை பீறாய்வதற்குள் பாடுபடும் நான் பியர் காசுக்கு எங்கே போவது?. கொண்டைக்கடலையை ஊறவெச்சு காலைல சாப்பிடு. பச்சை முட்டைய உடைச்சு அப்படியே வாய்ல ஊத்திக்கோ, ஐம்பது தடவ தண்டால் எடு. சுண்டக்கஞ்சி சாப்ட்டு நல்லா தூங்கு என்று பல ஆலோசனைகள் வந்தாலும் எனக்கு பியர் அடிப்பதே சிறந்த மற்றும் கிளர்ச்சிகரமான ஆலோசனையாக இருந்தது. எப்படியோ காசு தேற்றி ஒரு சுபமுகூர்த்த தினத்தில் வொயின் ஷாப்பிலிருந்து பியர் பாட்டிலை வாங்கி பள்ளிப்பையினுள் மறைத்து வீட்டுக்கு எடுத்து வந்து விட்டேன். அப்புறம்தான் தெரிந்தது அதை திறப்பதற்கு கவாஸ்கர் வேண்டுமென்று. (ரொம்ப பழைய ஜோக் இது). பல்லால் கடித்து திறக்கும் வன்முறை கலாச்சாரமெல்லாம் அப்போது பழக்கமில்லாததால் கொஞ்சம் திகைப்பாக இருந்தது. நாடார் கடையில் போய்க் கேட்டவுடன் என் முழி சரியில்லாததால் சந்தேகமாக பார்த்தார். "எனக்கு இல்ல அண்ணாச்சி. பக்கத்து வீட்டுக்கு. கூல்டிரிங்க்ஸ் பாட்டில் திறக்கணுமாம்".

பாட்டிலை திறந்து ஏதோ ஸ்டவ்வில் மண்ணெண்ணைய் ஊற்றுவது போல சர்ரென்று ஊற்றியதில் "பொங்கலோ பொங்கல்" என்று குலவை சத்தம் கேட்காத குறையாக பொங்கி வழிந்தது. (இப்போதென்றால் எப்படி நுரை வராமல் ஊற்றுவது என்று பாடமே எடுப்பேன்) கொஞ்சம் சப்பியதில் ஏதோ சர்பத் போலத்தான் இருந்தது. ஆனால் அடுத்தடுத்து கசந்து போய் இந்த கர்மத்தை எப்படி குடிக்கிறார்கள் என்கிற அருவருப்பு மேலோங்க கால்வாசி பாட்டிலை கூட காலி பண்ணாமல் அப்படியே கீழே ஊற்றினேன்.

()

ஆயிற்று. பிறகு கோல்டன் ஈகல், கல்யாணி, மார்க்கோ போலோ, 2000, 5000, ஜிங்காரோ, கொக்கரக்கோ கும்மாங்கோ... என்று எல்லா பிராண்டும் பழக்கமாகி விட்டது. "COLD BEER SOLD HERE" என்கிற விளம்பரப் பலகைகளை பார்க்கும் போது 'அட நம்மாட்கள் எழுதுகிற கவிதையை விட இது சிறப்பாக இருக்கிறதே' என்று தோன்றும். உடம்பு குண்டாக வேண்டும் என்கிற அடிப்படை நோக்கம் போய் சாப்பிட்ட பிறகு ஏற்படும் அந்த ஏகாந்தமான மனநிலைக்கு மனம் ஏங்க ஆரம்பித்து விட்டது. குடித்த பிறகு அர்னால்டு போல உணர்ந்து எதிரே வருபவர்களெல்லாம் துச்சமாக தெரிந்தார்கள். ஆல்ஹலால் வாசனை கண்டு மிரண்டு ஒதுங்குபவர்களைக் கண்டால் கொண்டாட்டமாக இருந்தது. பின்நவீனத்துவ வார்த்தைகளை புழங்குவது எளிதாக இருந்தது. ஏறக்குறைய தினத்திற்கு ஒன்று என்று ஆகிப் போனது. சோறு தின்பதற்கு முன்னால் ஒரு பியர் சாப்பிட்டு விட்டு பிறகும் ஒன்று சாப்பிட்டதில் கேவலமாக சாலையில் வாந்தியெடுத்தேன். .

சென்னையில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் பியர் அருந்தியிருக்கிறேன். ஆம்லேட் தின்று வழித்துப் போட்ட இலைகள், கசக்கிப் போட்ட வாட்டர் பாக்கெட்டுகள், சிகரெட், பீடிப்புகை, கெட்ட வார்த்தைகள் என்று சுற்றுப்புறம் சற்று 'கலேஜி'யாக இருக்குமென்றாலும் அங்கு குடிக்க வருபவர்களை கவனிப்பது எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. சிலர் ஒரு குவார்ட்டரோ அல்லது கட்டிங்கோ வாங்கி வருவார்கள். தண்ணீரை கலந்து ஏதோ குழந்தைகள் மருந்து சாப்பிடுவது மாதிரி முகத்தை அஷ்டகோணலாக வைத்துக் கொண்டு ஒரே கல்ப்பில் அடித்துவிட்டு யாரிடமிருந்தாவது ஓசியில் மிக்சர் வாங்கிப் போட்டுக் கொண்டு உடனே வெளியேறி விடுவார்கள். இவர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளிகள். சில தொப்பையர்கள் வருவார்கள். அரசுப் பணிகளில் இருப்பவர்கள். பரிவாரங்கள் சூழ ரெண்டு ஹாப், கணிசமாக சைட்டிஷ் என்று ஷாப் பையனிடம் பந்தா பண்ணுவார்கள். அலுவலக அரசியல், சொந்தப் பிரச்சினைகள், சவடால்கள் இவைகளையெல்லாம் அளந்து குறைந்தது இரண்டு மணிநேரமாவது ஆகும்.

ஒருமுறை ஒருவர் என்னிடம் அவசரமாக வந்து 'கொஞ்சம் பேனா கொடுங்க" என்றார். ஏதோ முகவரியையோ, தொலைபேசி எண்ணையோ குறித்துக் கொள்ளப் போகிறார் என்று நினைத்து கொடுத்தேன். அப்புறம்தான் தெரிந்தது, விஸ்கியில் சோடாவை ஊற்றிவிட்டு கலக்கிக் கொள்ள கேட்டிருக்கிறார் என்று. கோபம் வந்து திட்டி விட்டேன். "கோச்சுக்காதீங்க, பிரதர்".

()

ஆனால் ஒன்று. அலுவலகம் சார்பாக நட்சத்திர ஹோட்டல் விருந்துகளில் கலந்து கொள்ளும் போதும் சரி, நண்பர்களுடன் அருந்தும் போதும் சரி, பெரும்பான்மையான மற்ற மது வகைகளை வகைக்கொன்றாக சுவைத்துப் பார்த்த போதும் கூட எதுவும் பிடிக்காமல் பியர் அளவிலேயேதான் நிற்கிறேன். 'இது பெண்களும் சிறுவர்களும் அருந்துவது' என்று நண்பர்கள் கிண்லடிப்பதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை.

பியர் ராசியோ அல்லது உடல் உழைப்பு குறைந்ததோ அல்லது இயல்பான வளர்ச்சி காரணமோ தெரியவில்லை, உடம்பு கொஞ்சம் பிடிக்க ஆரம்பித்தது. என்றாலும் இதை நான் யாருக்கும் நான் பரிந்துரைக்க மாட்டேன். சிறிது சதவீத ஆல்கஹாலாக இருந்தாலும் தொடர்ச்சியாக உட்செலுத்தப்படுவது உடல்நலனுக்கு நல்லதல்ல. 'கள்ளுண்ணாமை' பற்றி பத்தாங்கிளாஸிலேயே படித்திருக்கிறேன் என்றாலும் நான் மதுவருந்துவது (பியரை இதில் சேர்க்கலாமா?) குறித்து எந்நாளும் குற்றவுணர்ச்சி கொள்வதோ, மற்றவர்களிடம் மறைப்பதோ கிடையாது. அதிகமாக அருந்தி நடக்க ஆரம்பிக்கின்ற குழந்தை போல் ஆவது, பிறருக்கு தொந்தரவு தருவது, வம்புச் சண்டைக்கு போவது போன்றவற்றை செய்யக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறேன். திருமணத்திற்குப் பிறகு மனைவி, குழந்தைகளை எதிர்கொள்ள சங்கடப்பட்டு இப்போது இது குறைந்திருக்கிறதே ஒழிய மாதத்திற்கு ஒரு முறையாவது நிகழத்தான் செய்கிறது. உடம்பை குண்டாக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பழக்கத்தினால் தொப்பை பெருகிப் போய் பெரும்பிரச்சினையாக என் 'முன்னால்' நிற்பதையும் கட்டாயம் சொல்ல வேண்டும்.

குடிப்பழக்கம் குறித்து நாஞ்சில் நாடன் ஒரு அருமையான நெடுங்கட்டுரையை எழுதியிருக்கிறார். 'நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று' என்கிற கட்டுரைத் தொகுதியில் அது இருக்கிறது. ஒரு பியர் சாப்பிட்ட ஏகாந்த மனநிலையோடு நிச்சயம் நீங்கள் அதைப்படிக்க வேண்டும்.

suresh kannan

Tuesday, October 21, 2008

மனுஷ்யபுத்திரனால் ரூ.50/- பிழைத்தது

ஒரு கால கட்டத்தில் ஆர்வமாக சேர்த்த தீபாவளி மலர்கள் நாளடைவில் (அதாவது வருடடைவில்) இதனுடைய ஒரேமாதிரியான template-களின் காரணமாக சலிப்பை ஏற்படுத்தின. மேப்லித்தோ பேப்பரில் பளபளவென்ற வண்ணங்களில் அம்மன், முருகன், பாபா படங்கள், காஞ்சி சாமியார் வகையறாக்களின் அருளுரைகள், தீபாவளி சம்பந்தப்பட்ட அசட்டு ஜோக்குகள் (மாமனார் வீட்டிற்கு வரும் மருமகன்), தீபாவளியை எப்படி கொண்டாடுவேன் என்று நடிகர், நடிகையர்களின் வழவழா பேட்டிகள், வழக்கமான கழிசடை எழுத்தாளர்களோடு இடைநிலை இதழ்களிலும் சிற்றிதழ்களிலும் மாத்திரமே புழங்கும் எழுத்தாளர்களின் சிறுகதைகள் (தெவச சாப்பாடு போல இவர்களை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அழைப்பார்கள். அதிலும் அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி ரேஞ்ச் மட்டும்தான். கோணங்கி போன்றவர்களெல்லாம் யாரென்று பத்திரிகை ஆசிரியர்களுக்கே தெரியுமோ, என்னவோ), இன்னும் பல அசட்டுத்தனங்களுடன் தலையணை சைஸிலும் பேசாமல் ஒரு குவார்ட்டரும் சைட்டிஷ்-ம் வாங்கியிருக்கலாமோ என்று எண்ண வைக்கும் விலையிலும் வரும். எனவே வெடிச் சத்தத்தைப் போலவே தீபாவளி மலர்களும் அலர்ஜியை ஏற்படுத்தும் லிஸ்டில் எப்பவோ சேர்ந்து விட்டது.

என்றாலும் டைம்ஸ் ஆ·ப் இந்தியா பத்திரிகை ஒரு சிறப்பு இதழை ஜனவரி 08-ல் வெளியிட்ட போது அதை வாங்க எனக்கு ஒரே காரணம்தான் இருந்தது. தொகுப்பாசிரியர்: சுஜாதா. அவரின் இலக்கிய மதிப்பு அல்லாத எழுத்துக்களைக் கூட அதனுடைய சுவாரசியம் கருதியும் அவ்வாறு எழுதுவதின் கற்றல் கருதியும் தவறாமல் வாசிப்பதுண்டு. நான் எழுதுவதில் ஒரு சதவீத சுவாரசியமும் உபயோகமும் இருந்தாலும் அதற்கு காரணம் அந்த ஆசான்தான்.

அந்த இதழ் பெரும்பாலும் வெவ்வேறு இலக்கிய படைப்பாளிகளைக் கொண்டு மனுஷ்யபுத்திரனின் உதவியோடு சுவாரசியமாக அமைந்திருந்தது. அதைப் பற்றி எழுதின பதிவு இங்கே.

Photobucket

இந்த வருடம் டைம்ஸ் ஆ·ப் இந்தியாவும் தீபாவளி மலரை வெளியிட்டிருக்கிறது. மேலோட்டமாக சுஜாதா, மனுஷ்யபுத்திரன் பெயர்களை பார்த்தவுடன் என்ன ஏதென்று விசாரிக்காமல் வாங்கிவிட்டேன். பிறகு சாவகாசமாக வீட்டில் புரட்டிப் பார்க்கும் போது "தீபாவளி கொண்டாட்டம்" பற்றி த்ரிஷா வகையறா நடிகைகளின் பேட்டிகளையும் புகைப்படங்களை பார்த்த மாத்திரத்தில் திடுக்கிட்டு உள்ளடக்கத்தை அவசரமாக மேய்ந்தேன்.

இந்த இதழின் சிறப்பாசிரியராக 'ஆய்' மதனை டைம்ஸ் அழைத்திருக்கிறது. மேலட்டையிலேயே பிரசுரமாகியிருந்த இதை கவனிக்கத் தவறிவிட்டேன். இதழின் தரம் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் - 'அனுராதா ரமணனின் சிறுகதை ஒன்று பிரசுரமாகியிருக்கிறது'. இது போதுமென்று நினைக்கிறேன்.

ஜெயமோகன், சா.கந்தசாமி என்று சில ரத்தினங்களும் உள்ளன. சமீபத்தில் மேற்கொண்ட பயணத்தில் காசியில் ஏற்பட்ட அனுபவத்தை பிய்த்து சுத்தியலால் ஆங்காங்கே தட்டி தந்துள்ளார் ஜெயமோகன். ஏற்கெனவே வாசித்த இணைய வாசகர்கள் அல்லாதவர்களுக்கு நிச்சயம் இது நல்ல வாசிப்பனுபவத்தை தரும்.

'தமிழ் வலைப்பூக்கள் பற்றி' இளங்கோவன் எழுதிய கட்டுரையை பார்த்தவுடனே 'அட நம்ம ஏரியாவாச்சே' என்று ஆவலாக பாய்ந்தேன். வலைப்பூ எழுதினால் போலீஸ் புடிச்சுக்கும் என்று பயங்காட்டியிருந்தவர், சர்வீஸ் கமிஷன் பரிட்சை மாதிரியான ஒரு கேள்வித்தாளையும் பிற்பகுதியில் போட்டு எரிச்சலடைய வைத்திருந்தார்.

என்னடா இது, ரூ.50/-க்கு ஒரு பியராவது அடித்து குப்புறப்படுத்து தூங்கியிருக்கலாமே என்றெழுந்த எண்ணத்தை மாற்றியமைத்தது மனுஷ்யபுத்திரன் 'சுஜாதா' பற்றி தொகுத்திருந்த இணைப்பு. சுஜாதா என்கிற ஆளுமையின் பல்வேறு பக்கங்களிலிருந்து துறை வாரியாக சாம்பிள் தந்திருக்கிறார். கணையாழியின் கடைசிப்பக்கங்கள், கமலுடன் ஒரு சந்திப்பு, தமிழில் போர்னோ, சுஜாதாவின் பேவரைட் ஸ்ரீரங்கம், தேவன் வருகை சிறுகதை, பெங்களுர், சத்யஜித்ரே சினிமா.... என்று சுஜாதா பல்வேறு காலகட்டத்தில் எழுதின படைப்புகளிலிருந்து சிறந்த மாதிரிகளை தேர்ந்தெடுத்து தொகுத்திருக்கிறார் ம.பு.

சுஜாதாவின் தீவிர வாசகர்கள் இவைகளை ஏற்கெனவே படித்திருப்பார்கள் என்றாலும் என்னுடைய அனுபவம் போல் சிறந்ததொரு nostalgia-வை அவர்களுக்கு இவை வழங்கும் என நம்புகிறேன். சுஜாதாவை ஒரளவே அறிந்திருக்கிற இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பு. அவர் தமிழ் உரைநடையில் ஏற்படுத்தியிருக்கிற அபாரமான பாதிப்பு பற்றி இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

இந்த ஒரு காரணத்திற்காகவே இந்த மலரை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். இந்த மலரின் பெரும்பகுதியை ஏற்கெனவே குறிப்பிட்ட தீபாவளி மலர்களின் template-களின் சம்பிரதாயம் கெடாமல் தொகுத்திருக்கிற சிறப்பாசிரியர் மதனின் பங்களிப்பு பற்றி சுஜாதாவின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமெனில் 'அவரைப் பசித்த புலி தின்னட்டும்"

suresh kannan

Saturday, October 18, 2008

எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது?

ரொம்ப நாட்களாக என் மனதைக் குடைந்து கொண்டிருந்த கேள்விகள் இவை. இது எனக்கு மட்டும்தான் நடக்கிறதா அல்லது பெரும்பாலோர் இதை அனுபவிக்கிறார்களா என்று தெரியவில்லை. இந்த உலகத்தில் நான் மாத்திரம்தான் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறேனோ என்கிற சுயபச்சாதாபம் தரும் வேதனையை தாங்க முடியவில்லை. சில அனுபவங்களை கேள்விகளாக இங்கே இட்டிருக்கிறேன். நீங்களும் இந்த அனுபவங்களை சந்தித்திருக்கிறீர்களா அல்லது அதிர்ஷ்டவசமாக தப்பித்து இருக்கிறீர்களா என்று சொன்னால் தேவலை.

Photobucket

1) நடுஇரவில் ஆவலாக பேஷன் டி.வியைப் பார்க்க அமரும் போது, நான் பார்க்கும் நேரத்தில் மாத்திரம் தடித்தடியான ஆண்கள் நடந்து போகிறார்கள். ஏன்?

2) ரயில்வே நிலையத்தில் டிக்கெட் வாங்க மலைப்பாம்பு மாதிரியான வரிசையில் எரிச்சலுடன் நின்று கொண்டிருக்கும் போது மற்றவர்களை விட்டுவிட்டு சரியாக என்னை தேர்ந்தெடுத்து "ஓரு தாம்பரம் வாங்கிக் கொடுங்க. ப்ளீஸ்" என்று கேட்கிறார்களே, ஏன்?

3) சினிமா காட்சிகளின் இடைவேளையில் சிறுநீர் கழிக்க கழிவறை நாற்றத்தை பொறுத்துக் கொண்டு அவஸ்தையோடு நிற்கும் போது என் முன்னால் நிற்பவன் மாத்திரம் பக்கெட் நிறைய சேர்கிறாற் போல் கழிந்து கொண்டு எரிச்சலை ஏற்படுத்துகிறானே, ஏன்?.

4) அலுவலகத்தில் தாமதமாகி பயங்கர பசியோடு வீடு திரும்பும் போது அன்றைக்கு பார்த்து என் எதிரிக்கும் கூட நான் சாப்பிட அளிக்க விரும்பாத 'ரவா உப்புமா'வை சைட்டிஷ் கூட இல்லாமல் மனைவி தயார் செய்து வைத்திருக்கிறாரே, ஏன்?

5) நான் எழுதும் மொக்கை பதிவுகளுக்கு கூட எதிர்பாராத விதத்தில் அதிகம் பின்னூட்டமிடும் சக வலைப்பதிவு நண்பர்கள் உருப்படியாக எழுதியிருப்பதாக நான் நினைத்திருக்கும் பதிவை முகர்ந்து கூட பார்ப்பதில்லையே, ஏன்?

6) நான் செல்லும் போது மாத்திரம் டாஸ்மாக்கில் "பீர் கூலிங்கா இல்லங்க" என்று சொல்கிறார்களே, ஏன்?

7) ஒரு குறிப்பிட்ட பாடலை கேட்கவோ அல்லது திரைப்படத்தை பார்க்கவோ தீவிர உணர்வு ஏற்பட்டு தேடும் போது மிகச் சரியாக அந்த குறுந்தகடு மாத்திரம் கிடைக்காமலிருப்பதோ அல்லது எல்லாவற்றையும் கவிழ்த்துப் போட்டு எரிச்சலடைந்த பிறகு கடைசியில் கிடைக்கிறதே, ஏன்?

8) வில்லங்கமான காட்சிகள் இருக்காது என்று நினைத்து ஆங்கில ஆக்ஷன் படங்களை சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருக்கும் போது அதில் தீடீரென்று ஒருத்தி உடையை அவிழ்ப்பதும் அது வரைக்கும் இருந்த தனிமையை கலைத்து குடும்பத்தினர் யாராவது மிகச்சரியாக அதே நேரததில் அந்த இடத்தை கடந்து சங்கடத்தை ஏற்படுத்துவதும்.. ஏன்?

9) அடித்து பிடித்து பேருந்தில் ஏறி அவசரமாக இருக்கையைப் பிடித்து அமர்ந்த பிறகு நான் அமர்ந்திருக்கும் இருக்கை மாத்திரம் கிழிந்து போயோ அமிழ்ந்து போயோ அசெளகரியத்தை ஏற்படுத்துவது, ஏன்?

10) வீட்டிற்கு வந்து புரட்டிப் பார்க்கும் போது நான் வாங்கும் புத்தகத்தில் மாத்திரம் உள்பக்கங்கள் கிழிந்து போயோ அல்லது சிதைந்து போயோ எரிச்சலை கிளப்புவது ஏன்?

இன்னும் சில பிறிதொரு சந்தர்ப்பத்தில்....

இறுதியாக உங்களுக்கு.....

உருப்படியான பதிவுகள் இருக்க இந்த மொக்கை பதிவை நேரம் செலவழித்து படித்துக் கொண்டிருக்கிறீர்களே, ஏன்? :-)
suresh kannan

Thursday, October 16, 2008

ஆயிரம் பாயிண்ட்டும் மரண விளையாட்டும்

திகட்ட திகட்ட வன்முறையின் கோரங்களை அருவாளுடன் காட்டும் நம் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் இறுதிக் காட்சிகளில் "இவ்வாறாக வன்முறை கொண்டவனையே அழிக்கும்" என்று 'லுலுவாய்க்கு' மெசேஸ் சொல்லுவார்கள். இரத்த்தையும் அரிவாளையும் காட்டாமல் எப்படி வன்முறை காட்சிகளை அமைக்க முடியும் என்பது அவர்கள் பேட்டிகளில் வழக்கமாக கேட்கும் கேள்வி. ஒரு துளி ரத்தம் கூட திரைப்படச்சுருளின் மீது சிந்தாமல் அதே சமயம் வன்முறையின் உக்கிரத்தை நம் ஆழ்மனதில் உறைக்கும் படிச் செய்கிற இத்தாலி நாட்டுப் படமான Life is Beautiful (1997)-ஐ அவர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

Photobucket

படத்தின் இயக்குநர் Roberto Benigni இந்தப் படத்தில் வன்முறையின் குருரத்தை மழுங்கடித்து அபாரமான நகைச்சுவையின் மூலம் அதை கடந்து சென்றிருக்கிறார். சில படங்களைப் பார்த்து முடித்தவுடன் அசைய முடியாமல் அதன் தாக்கத்தின் பாதிப்பில் சில நிமிஷங்கள் அப்படியே அமர்ந்திருப்போம். அப்படியொரு பாதிப்பை என்னுள் ஏற்படுத்திய படமிது.

()

இத்தாலியைச் சேர்ந்த யூதரான Guido Orefice வாழ்க்கையை மிகுந்த சாதுர்யமான நகைச்சுவை போக்கில் அணுகுபவர். புத்தகக்கடை ஒன்றை அமைப்பதற்காக Arezzo நகருக்கு வரும் அவர் யூதரல்லாத (இந்த குறிப்பு முக்கியமானது) இத்தாலியரான Doraவை பார்த்த கணத்திலேயே காதல் கொள்கிறார். Guido-வின் நகைச்சுவையான பேச்சும் அவரின் அதிரடி கலாட்டாக்களும் Dora-விற்கு பிடித்துப் போய் தனக்கு நிச்சயம் செய்திருந்த மணமகனை விட்டு Guido-வுடன் ஓடிப் போகிறார். (இந்தப் பகுதி சற்று சலிப்பை ஏற்படுத்தினாலும் Guidoவின் Slapstic காமெடி அதை ஈடுகட்டுகிறது. இதில் வரும் சில நகைச்சுவையான சம்பவக்கோர்வைகள் விஜய் நடித்த 'யூத்' எனும் தமிழ்ப்படத்தில் அப்படியே கையாளப்பட்டிருக்கிறது.)

இருவரும் தோட்டத்திற்கு செல்வதை காண்பிக்கும் காமிரா சற்று நேரத்தில் zoom out ஆகி வெளியே வரும் போது அவர்களின் மகனுடன் வெளிவருகிறார்கள். (தையல் இயந்திரம் சுற்றுவதை overlapping மூலம் காண்பித்து காலம் கடப்பதை தமிழ்ச்சினிமாக்களில் நிச்சயம் பார்த்திருப்பீர்கள்).

உண்மையில் இந்தப்படம் இங்குதான் தொடங்குகிறது. இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயமது. ஜெர்மனியின் நாஜிப்படை யூத இனத்தையே அழிக்க முயன்று மிகப்பெரிய இனப்படுகொலைக் கொடூரம் நிகழ்ந்து கொண்டிருக்கும் தருணம். யூதரான Guido-வையும் அவரது மகனான ஜோஷ்வாவையும் நாஜிப்படையினர் பிடித்துச் சென்று விடுகிறார்கள். தாமதாக வீடு திரும்பும் Dora இதைத் தெரிந்து கொண்டு யூதர்கள் கொண்டுச் செல்லப்படும் ரயிலில் தன்னையும் இணைத்துக் கொள்கிறார். யூத இனத்தவராக அவள் இல்லாதிருந்தும் தன்னுடைய குடும்பத்தை பிரிய மனமின்றி உயிர் போகும் அபாயத்தை எதிர்கொள்ள முனைகிறார். ஜன்னல் துவாரத்தின் வழியே தன்னுடைய மனைவியும் ஏறுவதை துயரத்துடன் பார்க்கிறார் Guido.

அனைவரும் வதை முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். பெண்களையும் ஆண்களையும் தனித்தனியாக பிரித்துவிடுகின்றனர். நாஜிப் படையினருக்கு வேலையாட்களாக அவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். பணிக்கு லாயக்கற்றவர்களாக இருப்பதால் குழந்தைகளையும் வயதானவர்களையும் விஷப்புகை கூண்டிற்குள் அடைத்து கொல்கின்றனர். ஜெர்மனியர்கள் யூதர்களின் உயிருடன் விளையாட்டும் இந்த ஆபத்து மகனுக்கு தெரியாமலிருக்க தன்னுடைய நகைச்சுவையான போக்கின் மூலம் அதை எதிர்கொள்ள தயாராகிறார் Guido.

படைவீரர்களுடன் இது ஒரு விளையாட்டு என்றும் ஆயிரம் பாயிண்ட்டுகளை சேர்ப்பவர்களுக்கு உண்மையானதொரு பீரங்கி தரப்படும் என்றும் தன் மகனை நம்ப வைக்கிறார். தன்னுடைய இருப்பிடத்திலேயே அவனை ஒளித்து வைக்கிறார். யார் கண்ணிலும் படாமல் ஒளிந்திருப்பதுதான் இந்த விளையாட்டின் முக்கிய அம்சம் என்றும் அதனாலேயே பாயிண்டுகளை அதிகம் சேகரிக்க முடியும் என்று கூறுவதால் சிறுவன் ஒளிந்து கொள்கிறான். சிரமமான பணிகளைச் செய்து களைத்துப் போய் வரும் Guidoவிடம் "இன்று எத்தனை புள்ளிகள் கிடைத்தது?" என்று ஜோஷ்வா நச்சரிக்கிறான். ஒருவாறு அவனைச் சமாளிக்கிறார் Guido. போர் இறுதிக்கு வருவதால் தம்முடைய கொடூரத்தின் அடையாளத்தை அழித்தொழிக்க நாஜிப்படையினர் அனைவரையும் சாகடிக்க முடிவு செய்கின்றனர்.

தன் மகனை ஒளித்து வைத்துவிட்டு மனைவியைத் தேடிப் போகும் Guidoவை ஒரு போர்ப்படை வீரன் தனியாக அழைத்துச் சென்று சுட்டுக் கொள்கிறான். மயான அமைதியுடன் காணப்படும் முகாமினுள் மறுநாள் அமெரிக்கப்படையின் டாங்கி நுழைகிறது. மறைவிடத்திலிரும் வெளியே வரும் ஜோஷ்வா தன்னுடைய பரிசுதான் அந்த டாங்கி என்று நினைத்து மகிழ்ச்சியடைகிறான்.

வளர்ந்த பிறகு தன் தந்தையின் தியாகத்தையும் பாசத்தையும் உணர்ந்த ஜோஷ்வாவின் நினைவலையாக இந்தப்படம் பார்வையாளர்களுக்கு சொல்லப்படுகிறது.

()

Guido தன்னுடைய மனைவியை (இதில் நடித்திருப்பவரும் இயக்குநரின் நிஜமான மனைவி) முதன்முதலாக சந்திக்கும் போது அவள் வீட்டின் மேலே இருந்து தவறி விழுகிறாள். அவளைத் தாங்கிக் கொள்ளும் அவன் "எப்பவும் இப்படித்தான் வீட்ல இருந்து கிளம்புவீங்களா?" என்கிறான்.

தன் மகனை காப்பாற்ற Guido தன்னுடைய சாதுர்யத்தை நகைச்சுவை தோய பல இடங்களில் பயன்படுத்தும் போது சார்லி சாப்ளினின் நினைவு வருகிறது.

வதை முகாமில் Guidoவின் மகன் 'விளையாட்டில்' கலந்து கொள்ளும் மற்ற சிறுவர்களைப் பற்றிக் கேட்க "முதல் பரிசைப் பெற அனைவரும் ஒளிந்து கொண்டுள்ளனர். நீயும் அவ்வாறு ஒளிந்து கொண்டால்தான் பரிசைப் பெற முடியும்" என்று சமாளித்து நம்ப வைக்கிறான். ஒரு சமயத்தில் ஜெர்மன் படையினரின் குழந்தைகள் கண்ணாமூச்சி விளையாடும் போது தன் மகனை மறைவிடத்திலிருந்து அழைத்து வந்து 'அங்கே பார். எல்லோரும் ஒளிந்து கொண்டுள்ளனர்" என்று அந்தக் காட்சியைப் பயன்படுத்தி "விளையாட்டின்" நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறான். அப்போது இவர்களைப் பார்த்துவிடும் ஒருத்தி ஜோஷ்வாவையும் மற்ற குழந்தைகளுள் ஒருவன் என நினைத்து Guidoவிடமிருந்து பிடுங்கிச் செல்கிறாள். யூதச்சிறுவன் எனத் தெரிந்தால் உயிர்போய் விடுமே என்று மகனிடம் ஒரு வார்த்தையும் பேசக்கூடாது எனக் கட்டயாமாகக் கூறுகிறான். என்றாலும் மற்ற சிறுவர்களுடன் உணவருந்தும் ஜோஷ்வா தன் பேசு மொழியில் ஒரு வார்த்தையை கூறிவிடுகிறான். இதைக் கவனித்துவிடும் படைவீரனொருவன் தன்னுடைய உயரதிகாரியிடம் இதைப் பற்றி ரிப்போர்ட் செய்யப் போகும் இடைவெளியை உபயோகித்து அனைத்து ஜெர்மனியச் சிறுவர்களுக்கும் அதே வார்த்தையும் கற்பித்து உச்சரிக்கச் சொல்லி அதிகாரிக்கு குழப்பத்தை ஏற்படுத்தி மகனை தப்பிக்க வைக்கிறான்.

வீட்டில் குளிப்பதற்கு அடம்பிடிக்கும் சிறுவன் வதை முகாமிலும் அதே போல் குளிப்பதற்குச் செல்ல அடம்பிடிக்கிறான். ஆனால் 'குளிப்பது' என்பது வதைமுகாமின் சங்கேதமொழிப்படி குழந்தைகளை விஷவாயுவில் கொல்வது. இதை அறியாத Guido மகனை குளிக்கப் போகச் சொல்லி கட்டாயப்படுத்தும் போது பார்வையாளர்களுக்கு மனம் பதைக்கிறது.

விஷவாயுக் கூண்டிற்குச் செல்வதற்காக தன் உடைகளைக் கழற்றும் முதியவர்களில் ஒருவர் தன்னைக் கடந்துச் செல்லும் நாஜிப்படைப்பெண் கால்தவறி கீழே விழப்போகும் போது "பார்த்துச் செல்லுங்கள்" என்று சொல்லும் போது அந்தப் பெண்ணின் கண்களில் தெரியும் சங்கட உணர்வு நம்மையும் பாதிக்கிறது.

()

இவ்வாறாக பல காட்சிகளில் வன்முறையின் கொடூரமும் இனவெறுப்பின் அபத்தமும் மனிதஉரிமை மீறல்களின் அநியாயமும் பார்வையாளர்களுக்கு மிக மெலிதாக ஆனால் உறுதியாக பதிவாகுமாறு பதிவு செய்யப்படுகிறது. கடைசியான ஒரு இருட்டுக் காட்சியில் ஆயிரக்கணக்கான மனித உடல்கள் பிணமாகக்கிடப்பது ஒரு சர்ரியலிச ஓவியம் போல் காண்பிக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு ஓர் திடுக்கிடலை ஏற்படுத்துகிறது.

ஒரு இனத்தையே அழிக்கும் நாஜியினரின் ஆபத்தான சூழல் அதனுடைய தீவிரமில்லாமல் மிதமாகவே பார்வையாளர்களுக்கு உணர்த்தப்பட்டாலும் Guido அதை மகனுக்காக நகைச்சுவையாக எதிர்கொள்ளும் போது அதனுள் அமிழந்திருக்கும் சோகத்தின் வீர்யம் இன்னும் அதிகமாகிறது. Roberto Benigniயின் கோமாளித்தனமான தோற்றம் அவர் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு மிகப் பொருத்தமாய் அமைந்திருக்கிறது. (தமிழில் இந்தப்படம் ஒருவேளை எடுக்கப்பட்டால் அதற்கு பொருத்தமான நடிகரை யோசிக்கும் போது (பழைய) நாகேஷைத் தவிர வேறு யாரையும் யோசிக்க முடியவில்லை).

நான்கு ஆஸ்கர் விருதுகளை பெற்றிருக்கும் இந்தப்படம் (சிறந்த நடிகர்: Roberto Benigni) இத்தாலியில் அதிகம் நபர்களால் பார்க்கப்பட்டு கின்னஸ் சாதனையையும் பெற்றிருக்கிறது. உலகசினிமாப்பட ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் இந்தப்படமும் நிச்சயம் சேர்க்கப்பட வேண்டும்.

suresh kannan

Tuesday, October 14, 2008

ரஜினியின் அறிக்கையும் இன்னபிற மேட்டர்களும்

Photobucket

அண்ணன் ரஜினிகாந்த் மறுபடியும் திருவாய் மலர்ந்திருக்கிறார். அவரைச் சொல்லி குற்றமில்லை. அவர் பாட்டுக்கு (அதாவது ஏ.ஆர்.ரகுமான் பாட்டுக்கு) ஐஸ்வர்யாவுடன் சமர்த்தாக நடனம் ஆடிக் கொண்டிருந்தார். ஆனால் அவரது ரசிகர்கள் "விஜயகாந்த் வந்திருக்காக, சிரஞ்சீவி வந்திருக்காக, நீங்களும் மின்னலா வாங்க" என்று வற்புறுத்தி தாங்களே கொடியையும் கட்சியின் பெயரையும் அறிவித்து விட்டனர். அடையாளம் தெரியாமலிருக்க தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு சனி, ஞாயிறு லாட்ஜ்களில் தங்கியிருக்கும் 'காளிமுத்து' வகையறா வைத்தியர்களை சந்தித்து விட்டு திரும்பும் நபரைப் பிடித்து அழகான பெண்ணுடன் கல்யாணம் செய்து சாந்தி முகூர்த்த அறைக்குள் தள்ளிய கதையைப் போலிருக்கிறது இவர்கள் கதை. தமிழ்நாட்டில்தான் இந்த மாதிரி கொடுமையெல்லாம் நடக்கும். விட்டால் கட்சி அலுவலகம் அமைத்து வேட்புமனு தாக்கல் செய்து விடுவார்கள் என்று பயந்தோ என்னமோ ரஜினியே வெளிவந்து 'தனது பெயரை, புகைப்படத்தை அரசியல் ரீதியாக பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அறிக்கை விட்டிருக்கிறார். ஏதோ அவரின் பிம்பத்திற்கு மக்களிடம் இன்னும் செல்வாக்கு இருக்கிறது என்றொரு மாயத்தோற்றத்தை இதன் மூலம் நிறுவ முயற்சிக்கிறாரோ என்று தோன்றுகிறது.

வடிவேலு ஒரு நகைச்சுவைக்காட்சியில் சொல்வது போல 'இன்னமுமாடா இந்த ஊரு நம்பள நம்புது"?. "அது அவங்க விதி". என்பதுதான் நினைவுக்கு வருகிறது.

குசேலன் பட விவகாரம் தொடர்பாக அவர் அடித்த பல்டியின் மூலம் மக்களிடம் அவருக்கிருந்த கொஞ்ச நஞ்ச இமேஜூம் சரிந்துவிட்டது. தான் ஒரு சந்தர்ப்பவாதி என்பதை அவர் பல முறை நிரூபித்திருக்கிறார். 'தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது' என்று விமர்சித்த அதே ஜெயலலிதா அவர் கண்ணுக்கு அஷ்டலட்சுமியாகவும் காட்சியளித்திருக்கும் அதிசயம் ஆன்மீக தரிசனத்தின் ஒரு புதிய பரிமாணம். காவிரி பிரச்சினையில் நெய்வேலிக்குச் சென்ற திரையுலகத்தை புறக்கணித்து 'என் வழி தனிவழி' என்று தனிஆவர்த்தனம் நடத்தி சாத்தியமில்லாத நதிநீர் இணைப்பிற்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக 'ஸ்டன்ட்' அடித்தார். ஒக்கேனக்கல் விவகாரத்திலும் உணர்ச்சிகரமாக பேசி கைத்தட்டல் வாங்கிவிட்டு தன்னுடைய பட வியாபாரம் பாதிக்கப்படும் என்று தெரிந்தவுடன் 'மாப்பு. இனிமேல் செய்ய மாட்டேன்' என்று கன்னடத்தில் தோப்புக்கரணம் போட்டார். இனிமேலும் தமிழ்நாட்டு மக்கள் அவரை சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அரசியல் அவருக்கு ஒத்துவராது என்பதை அவரே உணர்ந்திருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது. என்றாலும் ரசிகர்களின் போர்வையில் சிலர் செய்யும் அதிகப்பிரசங்கித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் முயன்றிருப்பது நல்ல விஷயம்தான்.


ஆனால் அதோடு அவர் நின்றிருந்தால் அவரைப் பாராட்டியிருக்கலாம். 'தான் அரசியலுக்கு வர விரும்பினால் யாராலும் அதைத் தடுக்க முடியாது' என்று வழக்கம் போல் ஒரு குழப்ப 'பிட்டைப்' போட்டிருப்பதுதான் காமெடி. அவரைச் சுற்றியுள்ள கூட்டத்திற்கு கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்வதெல்லாம் போரடித்துவிட்டது. ரஜினியின் புதுப்படங்கள் வரும்போது டிக்கெட்டுகள் மூலம் சம்பாதிப்பதை இன்னும் விஸ்தரிக்க விரும்புகிறார்கள். எனவேதான் ரஜினிக்கே விருப்பமில்லையென்றாலும் அவர் அரசியலில் வரவேண்டுமென்று நீண்ட வருடங்களாக விரும்புகின்றனர். இதன் மூலம் குறைந்தபட்சம் தனக்கொரு எம்.எல்.ஏ. பதவியாவது வந்துவிடாதா என்பது அவர்களின் கணக்கு. இதனால்தான் இன்னமும் ரஜினியின் அரசியல் பிரவேசம் நிகழாமலிருப்பது அவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. இதுவும் ரஜினிக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. எனவேதான் 'அரசியலுக்கு வரமாட்டேன்' என்பதை தெளிவுபடுத்த விரும்பாமல் குட்டையைக் குழப்புகிறார். அவ்வாறு அவர் தெளிவாக அறிவித்துவிட்டால் பதவி மோகத்துடன் திரியும் பல பேர் விஜய்காந்த் கட்சிக்கோ வேறு எங்காவதோ தாவிவிடுவார்கள் என்று அவருக்குத் தெரியும். பின்பு அவர் படங்களுக்கு தோரணங்களும் கட்அவுட்டும் அமைப்பதற்கும் 'தலைவா' என்று கூச்சலிடுவதற்கும் ஆட்கள் வேண்டாமா? இன்றைய இளைய தலைமுறையினர் அஜீத்திற்கும் விஜய்க்கும் மாறி நீண்ட நாட்களாகிறது.


அவர் கைவிட்ட பொன்னான சூழலான '1996' மறுபடியும் அமையும் என்பது அசாத்தியமான ஒன்று.

முன்பெழுதிய பதிவின் காரணமாக 'அவள் அப்படித்தான்' படத்தை மீண்டுமொரு முறை பார்த்தேன். எப்பேர்ப்பட்ட ஒரு சிறந்த நடிகன்.. நடிப்புலகிலும் சிறந்த பெயரெடுக்காமல் அரசியலிலும் ஸ்தாபிக்க முடியால்.. இன்னமும் விக்கை மாட்டிக் கொண்டு ஒரு ஜோக்கர் போல... வேதனையாக இருக்கிறது. அவரின் உண்மையான ரசிகர்கள் இவ்வாறுதான் யோசிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

()

உயிர்மை அக்08 இதழின் தலையங்கத்தில் ரசித்த மனுஷ்யபுத்திரனின் வரி: பெரியார் படைப்புகளை நாட்டுடமை ஆக்குவது குறித்து இவ்வாறு எழுதுகிறார்: 'அண்ணா நூற்றாண்டில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருந்து வருபவர்களையெல்லாம் கருணையின் அடிப்படையில் விடுவித்து வரும் தமிழக முதல்வர் அவர்கள் திராவிட இயக்கத்தின் மூலவரும் மாபெரும் தமிழின் சிந்தனையாளருமான பெரியாரையும் கி.வீரமணியிடமிருந்து விடுதலை செய்யக் கருணை காட்ட வேண்டும்.'

()

சுப்ரமணியபுரத்தின் 'கண்கள் இரண்டால்' பாடலை பல பேர் சிலாகித்து தாண்டிப் போய் அடுத்தப் பாடலை மகிழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் என்னால் இன்னமும் அந்தப் பாடலில் இருந்து வெளிவர முடியவில்லை. அந்தப்பாடல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் போதெல்லாம் சானலை மாற்ற முடியவில்லை. மனம் பதின்ம வயதுகளின் எண்ணங்களுக்குள் புகுந்து கொண்டு கொண்டாட்டம் போடுகிறது.ஏதோவொரு புகைப்படத்தில் கிட்டத்தட்ட ஒரு தேவாங்கு போல தோற்றமளிக்கும் ஸ்வாதி இந்தப் படத்தின் பாடல்காட்சியில் தேவதை போல் தோற்றமளிப்பது ஆச்சரியமளிக்கிறது. வெட்கம் என்றால் என்னவென்று மறந்து போய் "சீக்கிரம் வாடா, அணைச்சுக்கடா" என்று முனகும் இன்றைய நாயகிகளுக்கு மத்தியில் பதின்ம வயதுப் பெண்களின் வெட்கம் கலந்த சிரிப்பை அழகியல் உணர்வுடன் திரையில் சாத்தியப்படுத்தியிருக்கும் அந்தப் பெண்ணை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறது. குறிப்பாக அந்தப்பாடல் காட்சியில் நாயகன் கோயிலில் நடக்கும் ஏதொவொரு சடங்கில் சாப்பிட்டுவிட்டு கைகழுவ வரும் போது தன்மீது மோதுவதைப் போல வருவதைக் கண்டு படபடப்புடன் நடுங்குவதும் அவன் திரும்ப செல்லும் போது தான் பயந்ததற்காக வெட்கத்தோடு ஒரு சிரிப்பை அவனை நோக்கி அளிப்பதும்... divine.

()

செப்08 உயிர் எழுத்துவில் பெருமாள் முருகனின் 'இருள் திசை' என்றொரு சிறுகதை மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. குடித்துவிட்டு வழக்கம் போல் எங்கோ விழுந்திருக்கும் குடும்பத்தலைவனை தேடி அழைத்துவர அம்மாவும் பிள்ளையும் நடுஇரவில் கிளம்புகிறார்கள். வீட்டினுள் தூங்கிக் கொண்டிருக்கும் சின்னதம்பி எழுந்து தேடி அழக்கூடாதே என்கிற பதைபதைப்புடனே அம்மா வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்புகிறாள். இவ்வாறான பயணம் அவர்களுக்கு பழக்கமான ஒன்றுதான். பனிபூத்த இரவில் நடப்பது அந்தச்சிறுவனுக்கு பிடித்திருக்கிறது. வழக்கத்திற்கு மாறாக ரத்த காயங்களுடன் விழுந்து கிடக்கும் அப்பனை வெறுப்புடன் அவனும் அழுகையுடன் அம்மாவும் தூக்கிக் கொண்டு வீடு வந்து சேர்கிறார்கள். சின்ன தம்பி எழுந்து அழாமல் இன்னமும் தூங்கிக் கொண்டுதான் இருந்தானா? அறிய இதழைப் படியுங்கள்.

பெருமாள் முருகன் எளிய வார்த்தைகளின் மூலம் மிக உயிர்ப்புடன் இந்தக் கதையைப் படைத்திருக்கிறார். கோடிக்கணக்கான தாய்மார்களின் கண்ணீரும் குடிகார தந்தையின் மகன்களின் வெறுப்பும் இக்கதையில் அழுத்தமாக உறைந்திருக்கின்றன. அதற்காக தந்தை பாத்திரத்தை ஏதோ ஒரு கொடூரனாக பெருமாள் முருகன் படைக்கவில்லை. இவ்வாறு குடித்து விழுவதைத் தவிர ஒரு நல்ல தந்தையாகவே அவர் இருக்கிறார். மிகச்சிறிய கதைதான். இதைப்படித்துக் கொண்டிருக்கும் போதே வார்த்தைகளும் புத்தகமும் மறைந்து போய் ஒரு குறும்படமாகவே அந்தச் சித்திரம் என் முன் நிகழ்ந்து கொண்டிருந்ததை காணும் அதிசய அனுபவத்தைப் பெற்றேன்.

()

எனது மீடியா பிளேயரின் play list-ல் நிரந்தரமானதொரு இடத்தைப் பிடித்திருக்கிறது 'வாரணம் ஆயிரம்' திரைப்பாடல்கள். 'சத்யம்'-ல் இழந்த தனது பெயரை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ். அவரிடம் எனக்குப் பிடித்த அம்சம் consistency. 'மின்னலே' வந்த புதிதில் 'ஏ.ஆர். ரகுமானை பிரதியெடுப்பவர்' என்றும் பின்பு 'கிறித்துவ தேவாலயங்களின் இசைப்பாடல்களை நகலெடுப்பவர்' என்றும் விமர்சனங்கள் எழுந்தன. என்றாலும் தன்னுடைய demand-ஐ உபயோகித்து நிறைய படங்களை ஒத்துக் கொண்டு நீர்த்துப் போகாமல் நிதானமாக தொடர்ந்து தரமான படைப்புகளையே தருகிறார் என்பது என் அவதானிப்பு. அதிசயமாக 'வாரணம் ஆயிரத்தில்' ஒரு கானா டைப் பாடலை போட்டிருக்கிறார். கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. 'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை' போன்ற கேட்பதற்குச் சுகமான தாமரையின் தமிழ் வார்த்தைகள், இன்றைய மற்ற திரைப்பாடல்கள் எவ்வளவு தூரம் மாசடைந்திருக்கின்றன என்பதை உணர்த்துகிறது.

'சாமுராயில்' 'மூங்கில் காடுகளே'வை விடவும் எனக்குப் பிடித்தது 'ஒருநதி' என்ற பாடல். திரைப்பாடல் அல்லாது தனியிசைப்பாடல்களுக்கு (private albums) மிகச்சிறந்த உதாரணமது. வைரமுத்துவின் வரிகள் மிகச்சிறப்பாக அமைந்திருக்கும். கேட்டுப்பாருங்கள்.

()

தமிழ்நாட்டுத் திரைப்படங்களுக்கு வசனம் எழுதுபவர்களுக்கு எவ்வளவு சம்பளமிருக்கும்? சற்று யோசித்துப் பாருங்கள். சில ஆயிரங்கள்? ஒரு லட்சம்? தெரியவில்லை. ஆனால் விஜய்காந்தின் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது கருணாநிதி கூறியது. 'கண்ணம்மா' படத்திற்கு வசனம் எழுதியதற்கு கிடைத்த 15 லட்சம், 'உளியின் ஓசை' படத்தில் கிடைத்த 25 லட்சம்... போன்றவைகளை பொதுமக்களுக்கே செலவழித்து விட்டதாக ஒரு பட்டியலை கூறியிருக்கிறார்.

கருணாநிதிக்கு முன்னதாக சூப்பர் ஸ்டாராக விளங்கிய இளங்கோவன் ('கண்ணகி'க்கு வசனம் எழுதியவர்) தன்னுடைய இறுதிக்காலத்தில் வறுமையில் செத்துப் போனார். பாகவதருக்கு வசனம் எழுதப் போன புதுமைப்பித்தன் காசநோய்க்கு மருந்தில்லாமல் இளமையிலேயே செத்துப் போனார். வசனம் எழுதுபவர்களுக்கு இவ்வளவு அதிக பணம் கிடைக்கும் போது ஏன் இவர்கள் அதை தக்க வைத்துக் கொள்ளவில்லை என்று ஆச்சரியமாக இருக்கிறது.

suresh kannan

Monday, October 13, 2008

குரு என் ஆளு கொரியன் படமா?

Photobucket

மாதவன் நடிக்கும் இந்த ஸ்டில்லைப் பார்த்தவுடன் வித்தியாசமாக இருக்கிறதே என்று ரசித்தேன். ஆனால் நம் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் ஸ்டில் முதற்கொண்டு வெளிநாட்டுப் படங்களிலிருந்துதான் சுடுவார்கள் என்பது தெரியாமல் போய்விட்டது. கடந்த வெள்ளியன்று World Movies Channel-ல் இந்திப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் பரிந்துரையின் பேரில் பிரபல கொரியப் பட இயக்குநர் Kim-ki-duk-ன் Iron 3 என்கிற திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது மேற்சொன்ன ஸ்டில்லை நினைவுப்படுத்தும் விதமான ஒரு காட்சியைப் பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது. படமும் இதிலிருந்துதான் நகலெடுக்கப்பட்டிருக்குமா அல்லது அறிவித்தபடி yes boss இந்திப்படத்தின் மறுஉருவாக்கமா என்று தெரியவில்லை. சரி அந்த கருமத்தை விட்டு விடுவோம்.

Photobucket

Kim-ki-duk-ன் Bad Guy, Spring Summer, Autumn, Winter and Spring... போன்ற திரைப்படங்களை ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். அதைப் போலவே Iron-3-யும் வித்தியாசமாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. இதில் பிரதான பாத்திரங்களான ஆணும் பெண்ணும் முழுப்படத்திலும் ஒரு வரி.... என்றால் ஒரு வரி கூட பேசிக் கொள்வதில்லை. பார்வைகள், தொடுகைகள் மூலம் மாத்திரமே முழுத்திரைப்படத்திலும் அவர்கள் இயங்குகிறார்கள். வைரமுத்து சொன்ன மாதிரி 'இதயத்தின் மொழிகள் புரிந்து விட்டால் மனிதர்க்கு மொழியே தேவையேயில்லை'. பெண்ணாவது படத்தின் இறுதிப்பகுதியில் மாத்திரம் தன் கணவனுடன் உரையாடுகிறாள்; அவனோ படம் முழுவதும் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. இதுவே பார்வையாளனுக்கோர் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

()

மனிதர்கள் யாருமில்லாத வீடுகளில்தான் அவனின் வாசமே. பூட்டை திறந்து சாவகாசமாய் வீட்டினுள் இயங்குவான். சமைத்து சாப்பிடுவான், துணிகளை துவைத்துக் கொள்வான், அங்குள்ள எலெக்ட்ரானிக் பொருட்கள் பழுதடைந்திருந்தால் சரி செய்து வைப்பான், உறங்குவான், மறுநாள் இன்னொரு வீடு, இன்னொரு சாப்பாடு. அங்குள்ள பின்னணயில் புகைப்படம் எடுத்துக் கொள்வான். இதுதான் அவன் வாழ்க்கை முறை.

ஒரு முறை வீட்டினுள் ஒரு பெண் இருப்பதை உணராமலேயே உள்ளே புகுந்து உண்டு, உறங்கிக் கொண்டிருக்கும் போது ஒளிந்திருந்து தன்னை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் அவளைக் கண்டு திடுக்கிட்டுப் போகிறான். உடனே வீட்டை விட்டு வெளியேறுகிறான். இருந்தாலும் மெளனமான அவளின் அடிபட்ட பார்வையில் உள்ள செய்தியை உணர முயல மறுபடியும் அங்கே செல்கிறான். கணவனிடம் திட்டும் அடியும் வாங்கிக் கொண்டிருக்கும் அவளை மீட்டு தன்னுடன் அழைத்துச் செல்கிறான். யாருமில்லாத வீடுகளில் புகுந்த தங்கும் அவனின் வாழ்க்கை முறையை அவளும் பின்பற்றுகிறாள்.

ஒரு முறை குத்துச் சண்டை வீரனின் வீட்டில் தங்கும் போது திடீரென்று எதிர்பாராமல் அவர்கள் திரும்பிவர அவனுக்கு அடி விழுகிறது. இன்னொரு வீட்டில் புகும் போது ஒரு கிழவன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறான். முதலில் அதிர்ந்து போகும் இவர்கள் கிழவரின் உடலை முறைப்படி வீட்டின் பின்புறம் புதைத்து விட்டு வழக்கம் போல சாவகாசமாக சமைத்து சாப்பிடுகிறார்கள். கொலைக்குற்றத்திற்காக காவல்துறை இவர்களை கைது செய்கிறது. காணாமல் போனவர்களின் பட்டியலில் இருக்கும் அந்தப் பெண்ணை அடையாளம் கண்டு அவளின் கணவனிடம் ஒப்படைக்கிறது. கிழவர் நுரையீரல் கான்சரினால்தான் இறந்து போனார் என்று பிரேதபரிசோதனை அறிக்கை கூறுவதால் காவல்துறை அவனை விடுவிக்க முன்வருகிறது. என்றாலும் அந்தப் பெண்ணின் கணவன் அவன் மேல் உள்ள வன்மத்தால் காவல்துறையினரிடம் பணம் கொடுத்து தான் அடிபட்டது மாதிரியே கோல்ப் பந்தினால் அடிக்கிறான்.

கோபமுறும் அவன் காவல்துறை அதிகாரியை தாக்க முயல சிறையில் அடைக்கப்படுகிறான். அங்கே கண்காணிக்கும் அதிகாரியிடமிருந்து ஒளிந்து அவனை வெறுப்பேற்றுகிறான். சிறையறைக்குள் எடுக்கும் பிரத்யேக பயிற்சி காரணமாக 180 டிகிரி சுழற்சியில் பின்பக்கம் மறைந்து ஆட்களின் கண்களுக்கு தெரியாமல் போகிறான். மறுபுறம் அவள் தன் கணவன் மீதுள்ள வெறுப்பு அகலாமல் இருக்கிறாள். அவனிடம் கொண்ட பழக்கம் காரணமாக பிறரின் வீட்டில் சென்று உறங்குகிறாள்.

அவன் யார் யார் வீட்டுக்கெல்லாம் முன்பு சென்றானோ அங்கிருப்பவர்கள் எல்லாம் தங்கள் வீட்டில் ஒரு அந்நியன் இருப்பதை உணர்கிறார்கள். ஆனால் அவன் யார் கண்ணுக்கும் தெரிவதில்லை. அதே போல் அந்தப் பெண்ணும் அவன் தன் வீட்டில் இருப்பதை உணர்கிறாள். அவளின் மனநிலை உற்சாகமடைகிறது. புரியாத கணவன் அவள் தன் மீதுதான் அன்பு கொள்கிறாள் என்று தவறாகப் புரிந்து கொள்கிறான்.

()

வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றுள்ள இந்தப்படம் பெண்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை மெளனமாகப் பேசுகிறது. தன்னை உடலாக மாத்திரமே பார்க்கும் கணவனை விட தன்னுடைய ஆன்மாவை நேசிக்கும் ஒரு மெளனியோடு இருப்பதையே அந்தப் பெண் விரும்புகிறாள். புரிந்து கொள்ள முடியாததாக கருதப்படும் பெண்ணின் ஆழ்உணர்வுகளின் ஒரு துளி இந்தப்படத்தில் வெளிப்படுவதாக தோன்றுகிறது.

suresh kannan

Friday, October 10, 2008

தமிழ் சினிமாவும் சில கேள்விகளும்

நாகார்ஜீனனின் இந்தப் பதிவை வாசிக்கும் போதே கேள்விகளுக்கு பதிலளிக்கும் விருப்பம் எழுந்தது. சற்று தள்ளிப் போட்டேன். பாலாஜி உடனே எழுத வேண்டும் என்று அழைத்த போது எழுந்த ஒரு உத்வேகத்தில் ஒரே அமர்வில் பெருமளவில் பாசாங்குகளைத் தவிர்த்து எழுதியது.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

சரியாக நினைவில் இல்லை. ஒண்டுக் குடித்தன வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி வைத்திருப்பவரின் வீட்டில் படம் ஆரம்பிக்க இருப்பதற்கு சற்று முன்னரே வசதியான இடத்தில் இடம்பிடித்து விஞ்ஞானத்தின் முக்கிய பரிணாமமான டி.வி.யைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற பரவசத்துடன் ராஜேஷ்கண்ணா வகையறாக்கள் நடித்த மொழி புரியாத இந்திப்படங்களும் முணுக்கென்றால் பாடக்கிளம்பிவிடும் காவிய, சரித்திரப்படங்களும் பார்த்த வயது ஏழோ அல்லது எட்டோ இருக்கலாம். முழுப்பிரக்ஞையுடன் நினைவில் இருப்பதென்றால் திரிசூலம். சிவாஜி தொலைபேசியுடன் கோவென்று அழும் போது சுற்றி அமர்ந்திருந்தவர்கள் கண்கலங்க அப்போதே எனக்கு சற்று எரிச்சலாக இருந்தது உண்மை.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

விஜய் நடித்த தரணியின் இயக்கத்தில் வெளிவந்த 'குருவி'. எட்டு வயது மகள் வலியுறுத்தியதின் பேரில் அவளுடைய மகிழ்ச்சிக்காக சென்றது என்றாலும் 'கில்லி'யில் முக்கால் படத்திற்கு தரணி அமைத்திருந்த சுவாரசியமான திரைக்கதையின் மீது ஏற்பட்ட நம்பிக்கையில் சென்றேன். மோசமில்லை. பல தமிழ்ப்படங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே எரிச்சலாக இருக்கும். குருவியை பார்த்து முடித்த பின்புதான் எரிச்சல் ஏற்பட்டது. கள்ள நகலெடுக்கப்பட்ட குறுந்தகடுகளும் இணைய தரவிறக்கங்களும் பழக்கமாகி விட்ட பிறகு அரங்கில் சென்று திரைப்படம் பார்க்கும் அனுபவம் குறைந்து போனது. (ஒரு நல்ல திரைப்படத்தை எப்படி அணுகுவது / பார்ப்பது என்பதைப் பற்றி தமிழ்ச் சமூகத்திற்கு யாராவது கற்றுத் தந்தால் தேவலை.)

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

ஆச்சரியமாக இதுவும் ஒரு வணிக நோக்கில் எடுக்கப்பட்ட படம்தான். பேரரசுவின் பழனி. பொழுதைக் கொல்ல வேண்டிய ஒரு கணத்தில் வீட்டில் கேபிள் டி.வி.யில் பார்த்தேன். வரப்போகும் காட்சிகளை முன்கூட்டியே உடனுக்குடன் ஊகிக்க முடிந்தது. எண்ணிக்கையில் குறைவுதான் என்றாலும் பழைய படங்கள் போலவே இதிலும் முணுக்கென்றால் எரிச்சலூட்டும் பாடல் காட்சிகள். சினிமாவில் பாடல் என்கிற மகா அபத்தத்தை அன்புமணியோ, கவுண்டமணியோ யாராவது சட்டம் போட்டு தடை செய்தால் புண்ணியமாய்ப் போகும். அபத்தமான வணிகப்படம்தான் என்றாலும் முழுப்படத்தையும் பார்க்க வைத்த இயக்குநரின் திறமையை வியந்தேன். திரைக்கதையின் சூட்சுமத்தை ஒரளவிற்கு உணர்ந்த இவர்களின் வணிக சங்கிலிகளின் தடையை நீக்கினால் நிச்சயம் நல்ல படங்களை அவர்களால் தரமுடியும் என்ற நம்பிக்கையுண்டு.

கைக்குட்டை போன்ற இரான் தேசம் கூட மனிதச் சமூகத்தின் அக/புறச் சிக்கல்களை, அனுபவங்களை திரைப்படங்களுக்கேயுரிய பிரத்யேக மொழியில் பாசாங்குகள் தவிர்த்து காவியங்களாக பதிவு செய்து கொண்டிருக்கும் போது நம் தமிழ் சினிமா மாத்திரம் ஏன் இப்படி மலக்குழியில் அமிழ்ந்திருக்கிறது என்பதை எண்ணி வேதனையாக இருந்தது.

4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

ருத்ரைய்யாவின் 'அவள் அப்படித்தான்'

நாகார்ஜூனன் இதை எழுதியிருக்காவிட்டாலும் நான் இதைத்தான் சொல்லியிருப்பேன். ஏற்கெனவே இதை இணைய விவாதங்களில் பல முறை சொல்லியிருக்கிறேன். மென்மையும் குரூரமும் திமிரும் சுயபச்சாதாபமும் தவிப்பும் ஏக்கமும் வன்மமும் கொண்ட 'மஞ்சு' என்கிற அந்த கதாபாத்திரத்தை நிகழ்வுகளின் மூலமும் வசனங்களின் மூலமும் இவ்வளவு வலுவாக சித்தரிக்கப்பட்ட படத்தை முன்னரும் பின்னரும் கண்டதில்லை. தமிழிலேயே வந்த உருப்படியான ஒரே சினிமா என்று கூட அதிரடியாக என்னால் இதை வரையறை செய்ய முடியும். அந்தளவிற்கு என்னை தாக்கிய/பாதித்த தமிழ் சினிமா இது. உலக சினிமாவில் ஏற்பட்ட புதிய அலையின் பாதிப்பு தமிழில் எதிரொலித்த முக்கிய படங்களுள் இது ஒன்று.

ஆனால் ராஜநாயகம் குறிப்பிட்டது போல் இப்படியொரு அற்புதத்திற்குப் பிறகு எப்படி 'கிராமத்து அத்தியாயம்' என்கிற அபத்தத்தை ருத்ரைய்யாவால் தர முடிந்தது என்பதோர் ஆச்சரியம்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

ஒன்றும் தோன்றவில்லை. இன்னாருக்கு ஓட்டுப் போடுங்கள் என்று ரஜினி மக்களிடம் தொலைக்காட்சியில் அறிக்கை விட்ட சம்பவத்தை வேண்டுமானால் சொல்லலாம். அதுவும் கூட ஜெயலலிதாவிற்கு எதிரான மனநிலையுடன் ஒரு சாய்வு நிலையில் சொல்லப்பட்ட அறிக்கை அது. நம்மை ஆள்பவர்களை தேர்ந்தெடுப்பதற்கு கூட நடிகர்களின் மூளையை இரவல் வாங்குகிற அளவிற்கு ஆட்டு மந்தையாக தமிழ்ச்சமூகம் சினிமாப்பித்து கொண்டிருக்கிறதே என்று அப்போது வேதனையாக இருந்தது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

ஏ.ஆர். ரகுமானின் வருகையைச் சொல்லாம். மேம்படுத்தப்பட்ட நுட்பங்களின் மூலம் பாடல்களின் கேட்பனுபவத்தை இன்னும் உன்னதமாக்கியது.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

ஓ நிறைய. அறந்தை மணியன் தொடங்கி தியோடர் பாஸ்கரன், யமுனா ராஜேந்திரன், அ.ராமசாமி, எஸ்.ராமகிருஷ்ணன், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, விஸ்வாமித்திரன், செழியன் என்று யார் தமிழ்சினிமா பற்றி உருப்படியாக எழுதினாலும் வாசித்துவிடுவேன், பத்திரிகைகளின் துணுக்குச் செய்திகள் உட்பட. பள்ளிப்பருவத்திலேயே சினிமா passion ஆக என்னை முழுமையாக ஆக்ரமித்திருந்தது. கேமிராவின் பின்னால் உள்ள துறையில் பணிசெய்வது, அதிகபட்சமாக இயக்குநராக ஆவது என்பதே என் வருங்கால கனவாக இருந்தது.

7. தமிழ்ச்சினிமா இசை?

தமிழச் சமூகத்திற்கே இசை என்றால் அது திரையிசைப்பாடல்கள்தான் என்று பெரும்பான்மையாக இருக்கும் போது நான் மட்டும் விதிவிலக்கல்ல. பள்ளிக்கு கிளம்புகிற அவசரத்திலும் விவிதபாரதியில் ஒலிக்கிற 'ஒரே நாள் உனை நான்' பாடலை கிறக்கத்துடன் கேட்கத்துவங்கியதில் ஆரம்பித்த பித்து இன்னும் அடங்கவில்லை. இளையராஜாதான் அப்போதைய ஒரே ஆதர்சம். எம்.எஸ். விஸ்வநாதன் கூட இரண்டாம்பட்சம்தான். இப்போதையப் பாடல்களில் விருப்பப்பாடலை தேர்வு செய்வது சிரமமாக இருந்தாலும் அப்படியொன்றும் மோசமாகிவிடவில்லை. நாம் விரும்பாவிட்டாலும் கூட தொலைக்காட்சிகளும் பண்பலை வானொலிகளும் அவைகளை தொடர்ந்து காதில் ஊற்றிக் கொண்டேதானே இருக்கின்றன?

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

சத்யஜித்ரே உடல்நலம் குன்றி மருத்துவனையில் இருந்ததும் தொடர்ந்து அவருக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டதும், வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் விருது அளிக்கப்பட்டதுமான நிகழ்வுகளைத் தொடர்ந்து ரேவின் முக்கிய படங்களை தேசிய தொலைக்காட்சி வரிசையாக ஒளிபரப்பியது. அதுவரை பார்த்திருந்த சினிமாவெல்லாம் ஒரே கணத்தில் அபத்தங்களாகிப் போக சினிமா என்கிற காட்சி ஊடகத்தை இவ்வளவு வலிமையாகவும் கலாஅனுபவத்துடனும் உபயோகிப்பது சாத்தியமா என்றொரு பரவச நிலையை எய்திய கணமது. பிறகான தேடல்களில் நிறைய உலக சினிமாக்களைப் பார்த்தாலும் பார்க்கிற ஒவ்வொரு முறையும் என்னை அலைக்கழிப்பது ரேவின் 'பதேர் பாஞ்சாலியும்' 'சாருலதாவும்'. இந்தியா ஒரே நாடு என்பதை virtual reality ஆக ஆக்கிக் கொண்டாலும் திரைப்படத்துறையிலும் கூட (தென்னிந்தியாவையும் இந்தி சினிமா உலகையும் தவிர) மற்ற மாநிலங்களில் என்ன நிகழ்கிறது என்பதே நமக்கு தெரியாமலிருப்பது எவ்வளவு துரதிர்ஷ்டவசமான நிலைமை.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடித் தொடர்பில்லை. ஆனால் திரைத்துறையில் பணிபுரிய வேண்டுமென்கிற கனவு இன்னமும் அடங்காமல் இருக்கின்றது. அடுத்த வேளை சோற்றுக்கு உத்தரவாதமில்லாதது என்பதால் முயற்சிக்கத் துணியவில்லை. ஒருவேளை பணிபுரிய நேர்ந்தால் நேர்த்தியான ஒரு சினிமாவைத் தரமுடியும் என்று எல்லா உதவி இயக்குநர்கள் போலவும் எனக்கும் நம்பிக்கையுண்டு.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ஆஹா! கேட்கவே பரவசமாயிருக்கிறது. பெரும்பாலான தொலைக்காட்சிகளும் வானொலிகளும் இணையப்பதிவுகளும் முதலில் ஸ்தம்பித்துப் போகும். மக்கள் தங்களுக்கான முதல்வர்களைத் தேட முடியாமல் பரிதவித்துப் போவார்கள். ஆனால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள். மெகா சீரியல்கள் இன்னும் நீளமாகும். மாத நாவல்களின் விற்பனை இன்னும் அதிகரிக்கும். தமிழர்களையும் பொழுதுபோக்கு கலாச்சாரத்தையும் பிரிக்கவே முடியாது. ஏதாவதொரு மாற்று வழியை நிச்சயம் தேடிக் கொள்வார்கள்.

அதிகம் பேர்களை அழைக்க வேண்டுமென்கிற விருப்பமிருந்தாலும் தொடரின் சம்பிரதாயம் கருதி இவர்களும் பதிலளிக்க வேண்டும் என்று நான் விழையும் நபர்கள்:

எஸ்.ராமகிருஷ்ணன்

சுதேசமித்திரன்

டிசே தமிழன்

சன்னாசி

பிரசன்னா

suresh kannan

Thursday, October 09, 2008

அழகான திரைக்கதையுடன் ஒரு cross-culture சினிமா


The Edge of the Heaven என்கிற இந்த துருக்கி-ஜெர்மன் திரைப்படத்தின் திரைக்கதை மிகச் சுவாரசியமாக அமைந்துள்ளது. உறவுகளுக்கிடையேயுள்ள அன்பையும் மனித வாழ்வின் அபத்தத்தையும் பற்றி இந்தப் படம் பேசுகிறது. துருக்கி-ஜெர்மன் இருநாடுகளிடைக்கிடையே அலையும் இந்தப்படத்தை இயக்கியிருப்பவர் ஜெர்மன் நாட்டவரான Fatih Akin.

பகுதி - I

ஜெர்மன் நாட்டில் குடியேறிய ஒய்வு பெற்று பென்ஷன் வாங்கும் முதியவரான Ali Aksu தன்னுடைய தனிமையைப் போக்கிக் கொள்ள துருக்கியை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு செக்ஸ் தொழிலாளியை (Yeter Ozturk) துணையாக வைத்துக் கொள்கிறார். கல்லூரி பேராசிரியராக இருக்கும் அவருடைய மகன் (Nejat Aksu) இதை விரும்பவில்லையென்றாலும் கூட அந்த செக்ஸ் தொழிலாளி தன்னுடைய மகளின் கல்லூரிப் படிப்பிற்காக இந்தத் தொழிலைச் செய்கிறார் என்று அறியும் போது நெகிழ்ந்து போகிறார். இவர் பாலியல் தொழில் செய்வது மகளுக்கு தெரியாது என்றும் காலணிகள் விற்கும் கடையில் பணிபுரிவதாக பொய் சொல்லியிருப்பதாகவும் சொல்கிறார்.

அதிக குடிபோதையில் கிழவருக்கு மாரடைப்பு வந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். வீட்டிற்கு வந்ததும் மகனைக் கூப்பிட்டு கேட்கும் முதல் கேள்வி: Did you fuck her? வெறுப்படையும் மகன் வீட்டிலிருந்து வெளியேறுகிறார். பாலியல் உறவுக்காக Yeter-ஐ கிழவர் அதிகாரமாக வற்புறத்த, மறுக்கும் அவரை கிழவர் ஓங்கி அறைய Yeter இறந்து போகிறார். கிழவர் ஜெயிலுக்கு போகிறார். கிழவரின் மகன் Yeter-ன் கல்விக்கு உதவ அவரைத் தேடி துருக்கிக்கு வருகிறார். அவரை கண்டுபிடிக்க இயலாமல் அங்கேயே ஒரு புத்தகக் கடையை நடத்துகிறார்.

பகுதி - II

துருக்கியில் படிக்கும் செக்ஸ் தொழிலாளியின் மகளான Ayten Ozturk புரட்சிகர இயக்கத்தின் போராட்டமொன்றில் காவல் துறையினரின் துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு தப்பியோடுகிறார். தோழர்கள் அவரை தலைமறைவாக ஜெர்மனிக்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கு காலணிக் கடைகளில் தன் தாயை தேடுகிறார். தோழர்களுடன் ஏற்படும் வேறுபாடு காரணமாக பணமின்றி தனிமையில் சுற்றித் திரியும் அவருக்கு Lotto என்கிற கல்லூரி மாணவி புகலிடம் அளிக்கிறார். இருவருக்குமான நட்பு நெருக்கமாகி உடல்ரீதியாக நீள்கிறது. ஜெர்மனியில் சட்டவிரோதமாக தங்கும் Ayten-ஐ காவல்துறை அடைக்கலம் மறுத்து துருக்கிக்கு திருப்பியனுப்புகிறது. அங்கு அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். தன் தோழியை மீட்க Lotto தாயின் மறுப்பையும் தாண்டி துருக்கிக்கு பயணமாகிறார். செலவை மிச்சம் பிடிக்க Netjat-ன் வீட்டில் குடி§யிருகிறார். சிறையில் சந்திக்கும் தன் தோழியின் குறிப்புகளின் படி மறைத்து வைக்கப்பட்டிருக்கும் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு திரும்புகையில் தெருவோரச் சிறுவர்கள் அவர் பையை பறித்துக் கொண்டு ஓடுகிறார்கள். ஒருவாறு அவர்களை Lotto துரத்திப்பிடிக்கும் போது ஒரு சிறுவன் விளைவறியாது துப்பாக்கியால் அவளை நோக்கிச் சுட அபத்தமாக செத்துப் போகிறாள்.

Ayten கல்விக்கு உதவ அவரைத் தேடிக் கொண்டிருக்கும் பேராசிரியர் அவரை கண்டடைந்தாரா? தன் தாயைத் தேடி வந்த Ayten சிறையிலிருந்து விடுபட்டாரா? என்பதையெல்லாம் பகுதி III-ல் காணலாம்.

()

படத்தின் திரைக்கதை வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. தன் தந்தையைத் தேடி Nejat செல்லும் காட்சியோடு படம் துவங்குகிறது. படத்தின் முதல் பகுதியும் இரண்டாம் பகுதியும் சமகாலத்திலேயே நிகழ்கின்றன. இரண்டு பகுதிகளும் ஏதாவதொரு துளிக்கணத்தில் உரசிக் கொள்கின்றன. இருந்தாலும் அவை அடுத்தடுத்தே பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்படுகிறது.

இந்தப்படத்தில் வரும் ஒரு வசனப்பகுதி மிக நெகிழ்ச்சியாக அமைந்துள்ளது. Lottoவின் மரணத்திற்குப் பிறகு துருக்கிக்கு வரும் அவளது தாய், Lotto தங்கியிருந்த அதே அறையில் தங்குகிறார். கல்லூரிப் பேராசிரியருடனான உரையாடல் இசுலாமியரின் ஒரு சடங்கைப் பற்றி அமைகிறது. ஜெர்மனியரான Lotto-வின் தாய்க்கு அதைப் பற்றி விளக்குகிறார்.

"இப்ராகிமின் விசுவாசத்தை சோதிக்க இறைவன் அவருடைய மகனைப் பலியிடச் சொல்லி உத்தரவிடுகிறார். கடவுளின் உத்தரவுக்கு அடிபணிந்து இப்ராகிமும் தன் மகனை பலி கொடுக்க மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறார். பலியிடப் போகும் போது கத்தி மழுங்கி விடுகிறது. இப்ராகிமின் விசுவாசத்தில் திருப்தியடைந்த இறைவன் மகனுக்கு பதிலாக ஓரு ஆட்டைப் பலியாக ஏற்றுக் கொள்கிறார்"

பிறகு பேராசிரியர் சொல்கிறார். "சிறுவயதில் என் அப்பா என்னிடம் இதைச் சொல்லும் போது மிகவும் பயந்து போனேன். என் தாயும் அப்போது உயிருடன் கிடையாது. எனவே அப்பாவிடம் கேட்டேன். 'ஒருவேளை என்னையும் அவ்வாறு பலியிட நீங்கள் முன்வருவீர்களா அப்பா?". அப்பா சொன்னார்: 'உன்னை பாதுகாக்க கடவுளைக் கூட நான் பகைத்துக் கொள்வேன்".

ஏற்கெனவே தந்தையின் மீது வெறுப்பிலும் கோபத்திலும் உள்ள பேராசிரியர் இதை நினைவு கூர்ந்த பிறகுதான் அவையெல்லாம் மறைந்து போய் தந்தையின் மீது வைத்துள்ள ஆழ்மன அன்பு விளங்குகிறது. சிறையிலிருந்து வெளிவந்து தன்னுடைய சொந்த ஊரில் கடைசிக் காலத்தை கழித்துக் கொண்டிருக்கும் அவரைக் காண செல்கிறார்.

()

இந்தப்படம் ஜெர்மனி நாட்டின் சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டாலும் நாமினேஷன் பட்டியலில் இடம்பிடிக்க முடியவில்லை. என்றாலும் சிறந்த திரைக்கதைக்கான விருதை கான் திரைப்படவிழாவில் பெற்றுள்ளது. இன்னும் பல விருதுகளும். படத்தின் இயக்குநரான Fatih Akin-ன் இதர படங்களில் Short Sharp Stock-ம் Head on-ம் சிறந்த படங்களாக கருதப்படுகின்றன.

suresh kannan

Wednesday, October 01, 2008

அப்போ... வடிவேலுதான் அடுத்த முதல்வரா?

Photobucket

எல்லா தேசத்தையும் போல் தமிழ்நாட்டிலும் அவ்வப்போது விநோதமான சம்பவங்கள் நடந்து ஒரு பரபரப்பை ஏற்படுத்தி அடுத்த விநோதத்திற்கு தாவிவிடும். சமீபத்திய சிலதில் என்னவென்று பார்த்தால் சிம்புவின் கார் பிரச்சினை. முதல் நாள் வந்த செய்தியின் படி சிம்புவும் அவரது சகோதரரும் இரவு 10 மணிக்கு நட்சத்திர ஓட்டல் ஒன்றிற்கு சென்றதாகவும் நள்ளிரவிற்கு மேலாகியும் அவர்கள் வெளியே வராததால் கார் டிரைவர் சிம்புவின் அம்மாவிற்கு போன் செய்து கேட்டதாகவும் "காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர். அப்போதுதான் அவர்களுக்கு புத்தி வரும்" என்று அவர் சொன்னதாகவும் தாமதமாக வெளியே வந்த சிம்பு காரைக் காணாமல் காவல் துறைக்கு புகார் ஒன்றை தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாயின. அடுத்த நாள் செய்தியில் சிம்பு ஊரிலேயே இல்லை என்றும் அவரின் சகோதரர்தான் ஓட்டலுக்கு சென்றதாகவும் தெரிய வந்தது. பிறகு அந்த காரில் அடிபட்டு ஒரு ஆள் இறந்து போனதாகவும் காரில் சிம்பு இருந்ததாகவும் செய்தி வந்ததில் இன்னும் பரபரப்பானது. டிரைவர் வண்டியை வீட்டில் விடாமல் அனுமதியும் பெறாமல் தன்னுடைய சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்திய போதுதான் இந்த விபத்து ஏற்பட்டதாக பிறகு கூறப்பட்டது. சிம்பு நடத்திய பிரஸ் மீட்டில் 'தனக்கு எதிராக சதி நடக்கிறது. எனக்கு குடிப்பழக்கமே கிடையாது" என்று அரசியல்வாதி அளவிற்கு அறிக்கை விட்டார். அவரின் தந்தையான 'டண்டணக்கா' டி.ஆரும் வழக்கம் போல் தலைமுடியைச் சிலுப்பி ஆவேசப்பட்டிருக்கிறார்.

பத்திரிகைகளில் வரும் செய்திகளை நம்புவதென்பதை நான் எப்பவோ விட்டு விட்டே¦ன்றாலும் இதில் உண்மை எங்கே ஒளிந்திருக்கிறது என்பதை யூகிக்க சுவாரசியமாயிருக்கிறது. சன் பிக்சர்ஸ் தத்து எடுத்துக் கொண்ட "காதலில் விழுந்தேனை" மதுரையில் வெளியிட அழகிரி குழு தடை ஏற்படுத்துவது ஒரு விநோதம் என்றால் (இப்படி சமீபத்தில் வெளியாகிற எல்லா தமிழ் திரைப்படங்களையும் தமிழ்நாடு முழுக்க வெளியிட முடியாமல் திமுக தடுத்தால் அவர்களுக்கு புண்ணியமாகப் போகும்). 'விடுமுறை நாள்' சிறப்பு நிகழ்ச்சிகள் என்று விநாயகர் சதுர்த்தியன்று காமெடி செய்கிறது கலைஞர் டி.வி. விநாயகர் சதுர்த்தி என்று சுயவாக்குமூலம் கொடுத்தால் பகுத்தறிவின் படி லாஜிக் இடிக்கும் என்று கருதுகிறார்கள் போலிருக்கிறது. "ஒரு வேளை கருணாநிதியை மண்டையைப் போட்டு அரசு விடுமுறை அளிக்கும் அன்றைய தினத்திலும் சிறப்பு நிகழ்ச்சிகளை போடுவார்களா?" என்று கேட்கிறார் நண்பரொருவர் விநோதமாக. காசும் சம்பாதிக்க வேண்டும், கொள்கையையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் எப்படி.

குஷ்பு கால் மீது கால் போட்டாலோ ராமன், அனுமன் பாத்திரங்கள் மூத்திரம் போவது போல் சுவரொட்டி அடித்தாலோ இந்து முன்னணிகாரர்களுக்கு மூக்கில் வேர்த்துவிடுகிறது. புகார் மனுவுடன் கிளம்பி விடுகிறார்கள்.இப்படிப்பட்டவர்கள் ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தை எப்படி விட்டு வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சமீபத்தில் ஒளிபரப்பபடுகிற தேநீர்த்தூள் விளம்பரமொன்றில் வயதானவர் ஒருவர் "முருகன் பக்திப்பாடலை" பாடுகிறார். வீட்டில் இருக்கும் சின்னஞ்சிறுசுகள் சகிக்க முடியாமல் காதை மூடிக் கொள்கின்றனர். பின்பு தேநீரை அருந்தியுவுடன் உற்சாகமடைந்து எம்.ஜி.ஆர் பாடலை பாடுகிறார். பக்திப்பாடலை கேவலப்படுத்தும் இந்தப் போக்கை எதிர்த்து இந்து முன்னணிகாரர்கள் யாரும் ஏன் இன்னும் வழக்கு போடவில்லை? உற்சாகமடைந்தால் எம்.ஜி.ஆர். பாடலைத்தான் பாட வேண்டுமா? கருணாநிதியின் வசனத்தை பேசி மகிழக்கூடாதா?" என்று உடன்பிறப்புகளும் வழக்கு போடலாம்.

()

"முதல்வராக ஆவதற்கான அனைத்து தகுதியும் அறிவும் எனக்கு இருக்கிறது" என்று சந்தடி சாக்கில் விநோதமாக காமெடி செய்கிறார் கார்த்திக். தமிழ்நாட்டில் இந்த முதல்வர் பதவி என்பது பாண்டி பஜார் பிளாட்பாரத்தில் கூறு போட்டு விற்கும் வஸ்துவை விட எளிமையான ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது. "2011-ல் என்னுடைய ஆட்சிதான் அமையும்" என்று வீரத்தளபதி (?) ஜே.கே.ரித்தஷ் அடுத்த வாரமே ஒரு கட்சி ஆரம்பித்து அடுத்த நாளே அறிவித்தால் கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன். வேலை வாய்ப்பு பதிவு அலுவலகத்தில் நிற்பதை விட பெரிய வரிசை 2011 முதல்வர் பதவிக்காக நிற்கிறது. "வருவியா, வரமாட்டியா" என்று தமிழக மக்கள் கேட்டுக் கொண்டிருந்த ரஜினிகாந்த் நல்ல வேளையாக இந்த வரிசையில் தற்போதைக்கு இல்லை. கர்நாடக, குசேல விவகாரங்களுக்குப் பிறகு மக்களிடையே அவரின் இமேஜ் சரிந்து விட்டதாக கூறுப்படுகிறது. என்னைப் பொறுத்த வரை ரஜினி அரசியலுக்கு லாயக்கானவர் அல்ல. தனிப்பட்ட வகையில் சில அடிப்படையான நேர்மை குணங்கள் அவரிடம் இருக்கின்றன. அரசியலுக்கு இது ஆகாது. தவறான கொள்கையாக இருந்தாலும் அதிலேயே உறுதியாக இருக்க சாதுர்யமும் மனத்திடமும் ஸ்திரமான புத்தியும் இருக்க வேண்டும். ரஜினியிடம் இவை இருப்பதாக தெரியவில்லை. ஷார்ட் டைம் மெமரி லாஸ் 'கஜினி' போல சுற்றியிருப்பவர்களின் கருத்துக்கு ஏற்ப தினத்துக்கு ஒன்று மாற்றிச் சொல்லும் "குழப்பவாதிகளால்" அரசியலில் குப்பை கொட்ட முடியாது. விதவிதமான 'விக்குடன்' ஐஸ்வர்யாவுடன் நிம்மதியாக டூயட் பாடிக் கொண்டிருப்பதுதான் அவருக்கு சரியானது.

()

இன்னொரு விநோதம் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வீட்டின் மீது நடந்த தாக்குதல். விஜய்காந்த் ஆட்கள்தான் இதை செய்ததாக அவர் காவல்துறையில் புகார் செய்திருப்பதும் சினிமாவில் தீவிரவாதிகளை பந்தாடிய கேப்டன் முன் ஜாமீன் மனுவிற்காக விண்ணப்பத்த கையோடு "ஆளுங்கட்சியின் விரோதப் போக்கு இது" என்று குற்றஞ்சாட்டியிருப்பதும் இன்னொரு விநோதம். விஜயகாந்த் வீட்டில் பிரியாணி போட்டால் கூட "ஆடு, கோழி உயிர் வதைச் சட்டத்தின் கீழ்" அவரைக் கைது செய்ய ஆளுங்கட்சி சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த அசந்தர்ப்பமான சூழ்நிலையில் விஜய்காந்த் இந்த அபத்தத்தை செய்ய மாட்டார் என்று நாளைக்கு அரசியலுக்கு வரப்போகும் கனிமொழியின் வாரிசுக்குக் கூட தெரியும். வடிவேல் இது தொடர்பாக தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டிதான் இன்னும் விநோதமானது. "தேர்தல் சமயத்தில் விஜய்காந்த் எங்கே நின்றாலும் அவருக்கு எதிராக நிற்பேன். மக்களிடத்தில் எனக்குள்ள செல்வாக்கை நிரூபிப்பேன்."

பெரும்பான்மையோனரைப் போல வடிவேலின் நகைச்சுவை எனக்கும் பிடித்தமானதுதான். மன உளைச்சலிருந்து என்னை மீட்டுக் கொள்வதில் அவரின் காமெடி காட்சிகளும் உதவுகிறது. அவரே சொல்கிறது போல தமிழ்நாட்டின் அனைத்து வீடுகளிலும் அவரை விரும்புகிறார்கள். ஆனால் வடிவேல் இந்த அபிமானத்தை தேர்தலில் ஜெயிப்பதற்கான பாதையாக மாற்றிக் கொள்ள முனைவதும் அதில் தெரியும் உறுதியும் விநோதமாக தெரிகிறது. முன்பெல்லாம் கதாநாயகர்களாக நடிப்பவர்கள்தான் தேர்தலில் எளிதில் வெற்றி பெறும் கனவில் இருந்தார்கள். ஆனானப்பட்ட சிவாஜியையே மக்கள் ஏற்றுக் கொள்ளாதது ஒருபுறமும் பாக்கியராஜ், ராமராஜன், டி.ஆர். போன்ற உதாரண புருஷர்கள் இருந்தும் இவர்கள் மயக்கம் தெளியவில்லை. "சினிமாவில் நல்லவனாக இருப்பவன் நிஜத்திலும் நல்லவனாக இருப்பான்" என்று தமிழக மக்களுக்கு இருக்கும் பாமரத்தனத்தை இவர்கள் உடனே பயன்படுத்திக் கொள்ள விழைகிறார்கள். அப்பன் காசில் தயாரிக்கும் முதல் படத்திலேயே கேமராவிற்கு முன்பு விரலை நீட்டி "எனக்குப் பின்னால ஒரு கூட்டமே இருக்கு" என்கிற விநோதமெல்லாம் நடக்கிறது.

இந்த வரிசையில் காமெடியனான வடிவேலுவும் சேர்ந்திருப்பது "தமிழக மக்களை" அவர் நன்கு புரிந்து வைத்திருப்பதைக் காட்டுகிறது. எனவேதான் வரும் தேர்தலில் நிச்சயம் ஜெயிப்பேன் என்று அவரால் அவ்வளவு உறுதியாக சொல்ல முடிகிறது. உணர்ச்சி வேகத்தில் அவர் பேசியிருந்தாலும் நடிகர்கள் ஆழ்மனதில் புதைந்திருக்கும் ரகசியக் கனவே அவர் வார்த்தைகளிலும் வெளிப்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன்.

()

சமீபத்தில் இன்னொரு விநோதமான விளம்பரத்தை பத்திரிகைகளில் பார்த்தேன். விஷயம் என்னவென்றால் 'மக்கள் மனதில் நிற்பவர் யார்' என்று கல்லூரி ஒன்று கருத்துக் கணிப்பை நடத்தியிருக்கிறது. இதில் அதிக புள்ளிகளைப் பெற்று முன்னணியில் இருப்பவர்.. வேறு யாருமில்லை. கோணல் மாணலாக நடனமாடியே புகழ் பெற்றிருக்கும் 'இளைய தளபதி' விஜய். அதையொட்டி வெளியான பத்திரிகை விளம்பரத்தில் எம்.ஜி.ஆரின் புகைப்படத்தின் அருகே "நேற்று" என்றும் விஜய்யின் பெரிய அளவு புகைப்படத்திற்கு அருகே "நாளை" என்றும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இன்னாங்கடா வெளையாடறீங்களா?

suresh kannan