Thursday, March 19, 2009

பழைய டெல்லியும் கறுப்புக் குரங்கும்

இந்தி மொழியோடும் இந்திப் படங்களோடும் எனக்கு அதிகம் பரிச்சயமில்லை. சிறுவயதுகளில் பொழுதுபோக்கிற்கு வேறுவழியில்லாத சூழலில் பழைய தூர்தர்ஷனில் சனிக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் படங்களை வைஜயந்தி மாலா போன்றவர்களுக்காக பார்ப்பதுண்டு. யானைகளை வேடிக்கைப் பார்க்கும் நோக்கத்தில் திரையரங்கில் பார்த்த 'அன்னை ஓர் ஆலயத்தின்' இந்திப் பதிப்போடு (Maa) அந்தத் தொடர்பு அறுந்து போயிற்று. சில வருடங்கள் கழித்து பதின்மங்களில் இந்தி மொழித் திரைப்படம் என்ற பிரக்ஞையோடு பார்த்தது RGV-யின் ரங்கீலா. ரஹ்மானின் பிரமிப்பூட்டின இசை, சற்றும் புரியாத வேற்று மொழி திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வை மறக்கச் செய்தது. பிறகு மாற்றுத்திரைப்படங்களின் பரிச்சயம் ஏற்பட்ட பிறகு வணிக நோக்கில் எடுக்கப்படும் திரைப்படங்களின் மீது ஒரு ஒவ்வாமையே ஏற்பட்டு விட்டது. "ஹே ஜிந்தகி...." என்று வண்ண வண்ண விளக்குகள் பின்னணியில் ஒளிர தலையில் பட்டு ரிப்பன் கட்டின கதாநாயகன் தோன்றும் திரைப்படங்கள்... என்கிற அலட்சியம் காரணமாக ஷாரூக்கும் அஜய் தேவ்கனும் உலவும் பிரதேசத்திற்கு செல்லாமலேயே இருந்தேன்.

ஆனால் சமீபத்திய சில வருடங்களில் இந்தி சினிமாவின் முகமே மாறிக் கொண்டே வருகிறதை உணர முடிகிறது. வணிகப்படங்கள் ஒரு பக்கம் வெளிவந்துக் கொண்டிருந்தாலும் அதற்கு இணையாக அவற்றிலிருந்து ஒதுங்கி புதிய சுவாசக் காற்று போல புது முயற்சிகளும் வெளிவருகின்றன. பெருநகரங்களில் மல்டிபிளக்ஸ் ரசிகர்களை நோக்கி எடுக்கப்படும் படங்களாக இவை இருக்கின்றன. பெரும்பாலும் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் இப்படங்கள் வணிகநோக்கில் சுமாரான வெற்றியைப் பெற்றாலும் முற்றிலும் புதியதொரு காண்பனுபவத்தை அளிக்கின்றன. Dus Kahaniyan, A Wednesday, Aamir, A life in a metro போன்ற சமீபத்திய மாற்றுத் திரைப்படங்கள் இந்திய சினிமாவிற்கான சர்வதேச நம்பிக்கையைத் தருகின்றன. அப்படியொரு படம் சமீபத்தில் பார்த்த Delhi6.

Photobucket

படம் பெரும்பாலும் பழைய டெல்லியை பின்னணிக்காட்சிகளாக கொண்டு நகர்கிறது. இந்த பழைய டெல்லி புதுடெல்லி என்பது சென்னையில் வடசென்னை, தென்சென்னை ஆகிய பிரிவைப் போன்றது. இதில் வடசென்னையின் ஆன்மாவை எந்த தமிழ்த் திரைப்பட இயக்குநரும் தம்முடைய படைப்பில் இன்னும் முழுமையாக பிரதிபலிக்கவில்லை என்றே கருதுகிறேன். 'மெட்ராஸ் தமிழைப்' பேசும் அடித்தட்டு மக்களை காட்டி விட்டால் வடசென்னையை காட்டி விட்டதாக கருதுகிறார்கள். வடசென்னை என்பது அது மாத்திரமல்ல. காசிமேடு முரட்டு மீனவர்கள் தொடங்கி தங்கவியாபாரம் செய்யும் செளகார்பேட்டை சேட்டுகளும், பனியாக்களும், தேவராஜ்முதலி தெரு கோமுட்டி செட்டியார்களும், போரினால் பர்மாவிலிருந்து வந்த அகதிகளும், துறைமுகத்தில் அருகில் இருப்பதனால் வியாபார வசதிக்காக வந்த நாட்டுக்கோட்டை செட்டியார்களும், பல தலைமுறைகளாக இங்கேயே செட்டிலான துலுக்கர்களும், போர்ச்சுக்கீசிய தெருவில் ஆங்கிலோ-இந்தியன் குடும்பங்களும், ஆர்மேனியன் தெருவும்... என வினோதமான கலவையது. இந்தப்படத்திலும் அப்படியானதொரு கலவையின் சாயல்களைக் காண முடிகிறது.

அமெரிக்காவில் செட்டிலாகியிருக்கும் இந்தியக் குடும்பத்தின் வயதான தாய்க்கு (வஹீதா ரஹ்மான்) இருதயக் கோளாறின் காரணமாக சில காலம் மாத்திரமே வாழவிருக்கும் சூழ்நிலை. பழைய டெல்லியில் தனது பாரம்பரிய வீட்டில் தன்னுடைய மரணம் நிகழ வேண்டுமென விருப்பப்பட்டு அங்கு சென்று வாழ முடிவெடுக்கிறார். அவரை அழைத்துச் செல்ல யாரும் முன்வராத சூழ்நிலையில் அவருடைய பேரன் ரோஷன் (அபிஷேக் பச்சன்) துணைக்கு வருகிறான். நியூயார்க்கிலேயே பிறந்து வளர்ந்த அவனுக்கு பழைய டெல்லியின் நெரிசலும் கலாசாரமும் மூச்சு முட்ட வைக்கின்றன. ஆனால் மேலுக்கு பார்ப்பதற்கு முரட்டுத்தனமாய் இருக்கும் மக்களின் உள்ளார்ந்த அன்பை பிறகு புரிந்து கொள்ள முடிகிறது. பக்கத்து வீட்டிலிருக்கும் பிட்டுவுடன் (சோனம் கபூர்) நேசம் ஏற்படுகிறது. அதை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில் வேறொரு காரணத்தினால் அந்தப் பகுதி மக்களின் மீது வெறுப்பேற்பட்டு அமெரிக்காவிற்கே திரும்பிச் செல்ல முடிவெடுக்கிறான். அவனுடைய பாட்டியும் இதே முடிவை எடுக்கிறார் என்பது ஆச்சரியம். ஆனால் அவ்வாறு அவன் திரும்ப முடிவதில்லை. ஏன் என்று அறிய திரைப்படத்தைப் பாருங்கள்.

()

'ரங்தே பசந்தி' திரைப்படத்தை இயக்கிய ராக்கேஷ் ஓம்பிரகாஷ் மேஹ்ரா இதை இயக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட முக்கால் படமும் கவிதையான தருணங்களின் மூலம் இயங்குகிறது.

வீட்டிலிருக்கும் புறாக்களை பறக்க வைத்து மகிழும் மதனகோபால் (ஓம்புரி), அவ்வாறே சுதந்திரமாக பறக்க முயலும் தன்னுடைய மகளை (பிட்டு) கட்டுப்பெட்டித்தனத்தால் ஒடுக்கி வைக்கிறார். இவரும் இவரின் சகோதரரான ஜெய்கோபாலும் எலியும் பூனையுமாக எப்போதும் முறைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இந்தப் பகைமை இவர்களின் குடும்ப உறவினர்களைப் பாதிப்பதில்லை. தங்களுடைய வீட்டைப் பிரிக்கும் சுவற்றில் துளையை ஏற்படுத்தி அதன் மூலம் தங்களின் உணர்ச்சியைப் பரிமாறிக் கொள்கிறார்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்தியாவில் பிரிவினையை ஏற்படுத்தி இரண்டு பிரதேச மக்களையும் பகைமை கொண்டவர்களாக தோற்றமளிக்கச் செய்தாலும் மக்கள் எதிர்பிரதேச மக்களோடு அன்போடேயே உறவாட விரும்புகிறார்கள் என்பதை குறியீடாக இந்தக் காட்சிகள் சொல்கிறதோ, என்னவோ?

வயதான லாலாஜயின் இளம் மனைவிக்கும் அந்தப் பகுதியின் போட்டோகிராபர் ஒருவனுக்கும் திருட்டுத்தனமாக உறவிருக்கிறது. இருவரும் கட்டிலில் உருள்கையில் காலடியில் சிக்கிக் கொள்ளும் ரிமோட்டின் மூலம் தொலைக்காட்சியில் சேனல் மாறி மாறி இருவரும் செய்து கொண்டிருக்கும் காரியத்திற்கு ஏற்ப செய்திகளும் காட்சிகளும் ஒளிபரப்பாவது (ராக்கெட் கிளம்பும் காட்சி) நகைச்சுவையாக இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன் வடமாநிலமொன்றில் மனிதக் குரங்கு எதிர்படும் மனிதர்களை தாக்கி விட்டு மறைந்தவிடுவதாக கடும்பீதி ஒன்று உலவியது. அந்தக் குரங்கை பார்த்தாக நிறைய வதந்திகளும் கட்டுக்கதைகளும் உலவியதே ஒழிய யாரும் அதை நேரில் பார்த்ததாக தெரியவில்லை. இந்தச் சம்பவத்தை மிக ஆழமாக தன்னுடைய படம் நெடுக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். அந்தக் குரங்கு வேறொன்றுமில்லை, நம்முடைய மனத்தில் இருக்கும் வன்முறையும் குரோதமும்தான் என்பதுதான் இயக்குநர் சொல்ல விரும்புவது. மேலும் அங்கு நிகழும் 'ராம லீலா'வின் நாடகக் காட்சிகளையும் தொடர்ந்து நிகழும் சம்பவங்களையும் பிணைத்திருப்பது சுவாரசியமானதாக இருந்தது.

ரோஷனுக்கும் பிட்டுவிற்கும் ஏற்படும் நேசம் மிக மிக இயற்கையாக நாடகத்தனமின்றி சொல்லபட்டிருக்கிறது. போட்டோகிராபரின் மூலம் தன்னுடைய மாடல் கனவு நிறைவேறப் போவதாக நம்பிக் கொண்டிருக்கும் பிட்டுவிடம் தன்னுடைய காதலை சொல்ல தயங்குகிறான் ரோஷன். ஆனால் ரோஷனின் தந்தையின் நண்பரான அலி (ரிஷி கபூர்) தன்னுடைய நிறைவேறாத காதலினால் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாத தன்னுடைய தனிமையை உணர்த்தி அவனை ஊக்கப்படுத்துகிறார். அவர் இசுலாமிய மதத்தைச் சேர்ந்த ரோஷனின் தாயைத்தான் (தன்வி ஆஸ்மி) இளம் வயதில் விரும்பியிருக்கிறார். ஆனால் அவளை விரும்புகிற இன்னொருவரான ரோஷனின் தந்தை மத எதிர்ப்புகளை பிடிவாதமாக சந்தித்ததினால் திருமணம் செய்துக் கொள்ள முடிகிறது. இதைப் பற்றி ரோஷனும் அலியும் உரையாடுவது நெகிழ்ச்சியாக இருக்கிறது. தன்னுடைய தாயை காதலித்தவனுடன் நாயகன் சகஜமாக உரையாடும் இந்த மாதிரியான காட்சியை எந்தவொரு திரைப்படத்திலும் பார்த்த நினைவில்லை.

நீயுயார்க்கிலிருந்து ரோஷன் முழுவதுமாக திரும்பியிருக்காத மனநிலையை பழைய டெல்லியின் மசூதி அருகே அமெரிக்க சுதந்திரச் சிலை இருப்பதாக ரோஷனக்கு தோன்றுவதை வைத்து உணர முடிகிறது. பழைய டெல்லியின் ஏதோ ஒரு கதவை திறந்தவுடன் நியூயார்க்கின் வீதியில் இந்தியக் கலாசாரம் வீசும் மக்கள் உலாவுவதாக கற்பனை செய்யும் பாடலொன்று சிறப்பான முறையில் பதிவாகியிருக்கிறது.

()

முன்பே சொன்னது போல் கவிதைக் கணங்களால் நிரம்பி ததும்புகிற இந்தப்படம் கடைசிப்பகுதியில் ஒரு மோசமான மத எதிர்ப்புப் பிரச்சாரப்படமாக திசை திரும்புகிறது. கருப்புக்குரங்கை முன்வைத்து இந்துக்களும் முஸ்லிம்களும் கலவரத்தில் ஈடுபடுகின்றனர். பாபர் மசூதி இடிக்கப்பட்டதின் மூலக்காரணத்தை பாவனை செய்வதாக இந்தக் காட்சிகள் அமைந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. தமிழ்ப்படங்களில் ஆர்ப்பாட்டமான வில்லனாக வரும் அடுல் குல்கர்னியின் திறமையாக வடிவமைக்கப்பட்ட அப்பாவித்தனமான பாத்திரத்தை நிச்சயம் நீங்கள் பார்க்க வேண்டும். கூடவே தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவராக நடிக்கும் திவ்யா தத்தாவையும்.

ஓட்டகத்தைப் போலவே தோன்றும் அபிஷேக் பச்சனை சில கணங்களிலேயே பிடித்துப் போகிறது. அந்த மாதிரியான பிரியமானதொரு நடிப்பை தந்திருக்கிறார்.

Photobucket

இந்தப்படத்தின் நாயகியான சோனம் கபூரைப் பற்றி தனிப்பதிவே எழுத வேண்டும். (அனில் கபூரின் மகளாமே!) அம்மணியை நாளெல்லாம் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கலாம் என்பது போன்று அப்படியொரு செளந்தர்யம். படம் முழுக்க மேலேயிருந்து இறங்கி வந்த தேவதை போலவே உலவுகிறார். இவருக்கு சம்மதமானால் என்னுடைய வங்கிக் கணக்கில் இருக்கும் முப்பத்தெட்டாயிரத்து இருநூற்று பன்னிரெண்டு ரூபாயை செலவழித்தாவது இவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம். ("ஆசை, தோசை, அப்பளம், வடை" - என் மனச்சாட்சி). இந்த விஷயத்தில் தமிழத் திரைப்பட ரசிகர்களின் ரசனையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. ஜாக்கி சானுக்கு உறவோ என்று நினைக்க வைக்கிற குஷ்புவில் இருந்து இடுப்பு மாத்திரமே அழகாக இருக்கும் சிம்ரன், சின்னக்குழந்தைகள் பயந்து அலறியழுகிறாற் போல் மணிபர்ஸ் வாயால் சிரிக்கும் சினேகா, மண்டையோட்டிற்கு ஒப்பனை செய்த மாதிரியான அசின், சரத்குமாரை விட அகலமாக தோன்றும் நமீதா. வரை திரைப்படங்களைப் போலவே நாயகிகளின் தேர்வு ரசனையும் மட்டமானதாகவே இருக்கிறது. (கோபிகா போன்ற நிஜ அழகிகளை உடனே திருமணம் செய்ய வைத்து அனுப்பி விடுகிறார்கள்).

மிக அழுத்தமாக குறிப்பிட வேண்டியது ரஹ்மானின் இசை. துள்ளலான 'மஸாக்கலி' முதல் அர்ஜியான் என்கிற கவ்வாலிப்பாடலும், இந்துக்களின் பக்திப்பாடலும், பழைய திரைப்படப்பாடலின் பாவனையில் ஒலிக்கும் 'Genda Phool' என வகைக்கொன்று இசையாக அதகளம் செய்திருக்கிறார் ரஹ்மான்.

()

தமிழிலும் இந்த மாதிரியான மல்டிபிளெக்ஸ் ரசிகர்களுக்கான திரைப்படங்களின் கலாசாரம் துவங்கி விட்டது. 'பொய் சொல்லப் போறோம்", த.நா.4777 போன்ற திரைப்படங்கள் அதைச் சொல்லுகின்றன. இதன் மூலம் இன்னும் வணிகக் குப்பைகள் ஒதுக்கப்பட்டு இரான் தேசம் போன்று தரமான திரைப்படங்களை தமிழிலும் எதிர்பார்க்க முடியும் என்று நம்புகிறேன்.

suresh kannan

Monday, March 09, 2009

ரஹ்மானை பாராட்டிய இளையராஜாமிகுந்த உணர்ச்சிப் பெருக்கோடுதான் அந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா இடையே ரஹ்மான். புராணப்படங்களில் வருவது போல் முப்பெரும் கடவுள்களை ஒரே மேடையில் பார்த்தது போலிருந்தது. சற்று அதீதமாக இருந்தாலும் நான் அப்போது உணர்ந்ததை அதைத்தான். வர்ஜா வர்ஜயமில்லாமல் எல்லாவகை இசையையும் கேட்கிறவன்தான் என்றாலும் மனதிற்கு நெருக்கமாக இருப்பது இந்த மூன்று பேரும்தான். தமிழ்த் திரையிசைக் கலைஞர்களின் சங்கத்தின் சார்பில் ஆஸ்கர் விருது பெற்ற ரஹ்மானுக்கு பாராட்டுவிழா நடைபெற்ற நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழச்சியது.

()

என்னுடைய பதின்ம வயதுகள் இளையராஜாவோடு மாத்திரமே கழிந்தது. இப்போது மாதிரி அல்லாமல் எம்.எஸ்.வி.யை கேட்க அப்போது சற்று சலிப்பாக இருக்கும். அதற்குப் பின் ரஹ்மான் புயலாக உள்ளே நுழைந்தவுடன் ராஜாவை சற்று நகர்த்தி வைத்து விட்டு அவரின் ரசிகராக மாறிப் போனேன். ஆனாலும் கேட்கிற போது உள்ளே மிக ஆழமாக இறங்கி அதிகம் சலனப்படுத்துவது யார் என்றால் அது ராஜாதான். இந்த மாதிரியான ஒப்பீடு அவசியமில்லாதது என்றாலும் கூட எப்படியோ இது நிகழ்ந்து விடுகிறது. (ரஹ்மான் கூட இதைப்பற்றி தன் உரையில் சொன்னார்). நண்பர்களுடனான அரட்டையின் போது இந்த தலைப்பு வரும் போது என்னுடைய கொச்சையான ஒப்பீடு இப்படியாக இருக்கும்.

'ராஜாவின் இசை தாயின் மடியில் படுத்துக் கொண்டிருக்கும் உணர்வை தருவது; ரஹ்மானின் இசை, மனைவியின் மடியில்'. அப்படியானால் தேவா? என்றான் ஒருவன். அதை பொதுவில் சொல்லவியலாது.

இசை பற்றிய அடிப்படை அறிவோ அதன் நுணுக்கங்களோ அறியேன் என்றாலும் என்னுடைய கேட்பனுபவத்தில் 'ராஜாவின் இசைக்கோர்வை மிலிட்டரி அணுவகுப்பு போல ஒரு தீர்மானமான கண்டிப்புடன் இருப்பதை கவனித்திருக்கிறேன். ஆனால் ரஹ்மானின் இசை அப்படியல்ல. திடீரென்று பல எதிர்பாராத ஆச்சரியங்களைக் தரக்கூடியது. (மணிரத்னத்தின் 'உயிரே' திரைப்படத்தின் ஸ்ரீனிவாசின் குரலில் 'என்னுயிரே' பாடலைக் கேட்டுப் பாருங்கள்). ரஹ்மான் தன்னுடைய பாடல்களில் தாளத்தை (rhythm) மிக வசீகரமாக அமைப்பதில் கவனமாக இருக்கிறார்.

இருவரும் பாடகர்கள் மற்றும் வாத்திய இசைக் கலைஞர்களிடம் வேலை வாங்குவதும் இதை எதிரொலிப்பதாகத்தான் இருக்கிறது என்பதை பலரின் நேர்காணல்களிலிருந்து உணர்ந்திருக்கிறேன். ராஜாவின் ஒலிப்பதிவில் அவர் என்ன நினைக்கிறாரோ, அல்லது இசைக்குறிப்புகள் எழுதியிருக்கிறாரோ, அவை அச்சுப் பிசகாமல் வர வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருக்கிறார். ஆனால் ரஹ்மான் பாடகர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கிறார். அவர்களை வழக்கமான முறை தவிர அவர்களின் பிரத்யேக திறமையைப் பொறுத்து பல்வேறு வகையாக பாடச் சொல்லி பின்னர் அவற்றிலிருந்து பொருத்தமான சிறந்தவற்றை எடுத்து தன்னுடைய படைப்பை உருவாக்குகிறார். குறிப்பிட்ட பாடலின் இறுதி வடிவம் எப்படியிருக்குமென்று ரஹ்மானைத் தவிர யாருக்கும் தெரிவதில்லை.

அதிகப் பிரசங்கித்தனத்தை இங்கேயே நிறுத்தி விட்டு மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சியில் என்னைக் கவர்ந்தவற்றை சொல்கிறேன்.

()

டி.எம்.எஸ்., P.B.ஸ்ரீனிவாஸ், சித்ரா, எஸ்.ஜானகி, கங்கை அமரன், வித்யாசாகர், பரத்வாஜ் உட்பட பில பிரபலங்களை சபையில் காண முடிந்தது.

* ஏவிஎம் சரவணன் கையைக் கட்டாமல் பேசிய போது "எம்.எஸ்.வி, வாலி போன்ற பல வருடங்களாக பணியாற்றும் திறமைசாலிகளை அரசு கவுரவிக்காதது வருத்தமாக இருக்கிறது" என்றார்.

* தனக்கு அளிக்கப்பட்ட பொன்னாடையை தமாஷாக வேட்டி போல கட்டிக் கொண்டு பேசிய எம்.எஸ்.வி. "நான் விருது பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அதனால் அது குறித்து யாரும் வருத்தப்பட வேண்டியதில்லை. என்னுடைய பிள்ளைகள் விருது வாங்குவதைக் காண சந்தோஷமாக இருக்கிறது." (பின்பு உடல்நிலை சரியில்லாததாலோ என்னவோ நிகழ்ச்சியின் இடையிலேயே அப்போது பேசிக் கொண்டிருந்த ரஹ்மான் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு சென்றார்).

* வழக்கமாக அளந்து பேசும் இளையராஜா அன்று மிக உற்சாகமாக பேசியதைக் காண ஆச்சரியமாக இருந்தது.

" ஜான் வில்லியம்ஸ் என்கிற மேற்கத்திய இசைக் கலைஞர் நான்கு ஆஸ்கர் வாங்கியிருக்கிறார். ஆனால் அவர் அதை சில வருட இடைவேளைகளில்தான் சாதிக்க முடிந்தது. ஆனால் நம்ம ஆள் போனார்... (சற்று இடைவெளி விட்டதில் சபை ஆர்ப்பரிக்கிறது). ரெண்டு விருதை தட்டிட்டு வந்துட்டார்."

"ரஹ்மானுக்கு எத்தனையோ பிரம்மாண்ட பாராட்டு விழா நடக்கலாம். ஆனா இந்த மாதிரி ஒரு மேடை எங்கேயும் கிடைக்காது."

"நம்ம கிட்ட எத்தனையோ இசை மேதைகள் இருந்திருக்காங்க. நெளஷத் அலி, மதன் மோகன், ரோஷன், எப்பேர்ப்பட்ட இசையமைப்பாளர்கள். நம்ம எம்.எஸ்.வி அண்ணா எத்தன படங்களுக்கு இசையமைச்சிருக்காரு. ஒருவேளை இந்த கம்போசர்ல்லாம் இல்லைன்னா.. இந்த விருதையெல்லாம் யாருக்கு கொடுப்பாங்க? கம்போசர்தான் முக்கியம். எல்லோரும் 12 Notes இருக்கும்பாங்க. நம்ம பாலமுரளி அண்ணா 27 சுருதியும் பாடிக் காட்டுவார். எனக்கு எப்ப இசையில் சந்தேகம் வந்தாலும் அவர்கிட்டதான் கேட்பேன். எந்த மேடையிலும் ஏறக்கூடிய தகுதி அவருக்கு இருக்கு."

"சம காலத்துல இசையமைச்சிக்கிட்டு இருந்த மதன் மோகனும் ரோஷனும் ஒருத்தரையொருத்தர் சந்திச்சிக்கிட்டதே இல்ல. தீடீர்னு ரோஷன் செத்துப் போயிடறாரு. சின்ன வயசுதான். 32. அவர் வீட்டுக்குப் போன மதன் மோகன் ரோஷனோட உடலைப் பாத்து சொல்றாரு.. You fool! To whom i will answer hereafter?". அதாவது அவங்க சந்திக்கவே இல்லைன்னாலும் தங்களின் பாடல்களின் மூலமா உரையாடிக்கிட்டு இருந்திருக்காங்க. அவங்க சந்திக்கத்தான் வேண்டுமா, என்ன?"

"எம்.எஸ்.வி அண்ணாதான் இங்க ஆதார ஸ்ருதி. அதற்கு மேல நான் பஞ்சமம். ரஹ்மான் அதற்கு மேல சட்ஜமம்"

* பாடகி எஸ்.ஜானகி பேசும் போது ரஹ்மானின் தந்தையும் மலையாளத் திரைப்படங்களில் இசையமைப்பாளராக இருந்த சேகரை நினைவு கூர்ந்தார். "அவர் இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பாரு".

வழக்கமாக பொதுவில் தன்னுடைய உணர்ச்சியை சற்றும் வெளிப்படுத்தாத ரஹ்மான் அப்போது உணர்ச்சிப் பெருக்கில் வழிந்த கண்ணீரை இயல்பாக துடைத்துக் கொண்டதை காண ஆச்சரியமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. அதிலிருந்து உடனே சற்று தன்னை மீட்டுக் கொள்ள அவர் வெளிப்படுத்திய உடல்மொழி பார்க்க அழகாக இருந்தது. மற்றவர்களின் அனுதாபங்களை ரஹ்மான் விரும்புவதில்லை. சில வருடங்களுக்கு முன் அவரின் தொலைக்காட்சி நேர்காணலில் அவருடைய இளமைப்பருவ வறுமையைப் பற்றிய கேள்விக்கு "ரொம்பக் கஷ்டப்பட்டோம்" என்று கூறியவர் உடனே சுதாரித்துக் கொண்டு "ரொம்ப டிராமாட்டிக்கா சொல்ல வேணாம்னு பாக்கறேன்" என்று அடுத்த கேள்விக்கு தாவி விட்டார்.

()

கே.பாலச்சந்தர், பாடகர் மனோ, பரத்வாஜ், வித்யாசாகர், தேவிஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட பலர் ரஹ்மானை வாழ்த்திப் பேசினர். ஹாரிஸ் ஜெயராஜ் பேசும் போது ரஹ்மானைப் பார்த்துதான் கீபோர்டை எடுத்ததாகவும் எப்போதும் அவர்தான் தன்னுடைய இன்ஸ்பிரேஷனாக இருப்பதைக் குறிப்பிட்டார். சங்கர்(கணேஷ்) நகைச்சுவையாக பேசுவதாக நினைத்துக் கொண்டு பேசியது அதீதமாக இருந்தது.

எல்லாப் பாராட்டையும் புன்னகையால் மட்டுமே ஏற்றுக் கொண்ட ரஹ்மான் ஆஸ்கர் விருது பெறுவதற்கான முயற்சியின் நடைமுறைகளை சுருக்கமாக சொன்னார். "வெளிநாட்டுப் படங்களுக்கு ஆஸ்கர் கிடைக்கும் போது ஏன் நம்ம நெளஷத், இளையராஜா போன்றவங்களுக்கு கெடைக்கலைன்னு முன்ன நினைப்பேன். ஆனா அகாதமி உறுப்பினர்களுக்கு நம்ம அறிமுகம் தேவையாயிருக்கு. யாருன்னு தெரியாம ஒட்டுப் போட மாட்டாங்க. என்னோட ஏஜெண்ட் மூலமா இதைச் செஞ்சேன். ஆனால் ஸ்லம்டாக் மில்லியனருக்கு ஆஸ்கர் கிடைக்கும்னு யோசிச்சு இசையமைக்கலை. கிடைச்ச நேரத்துல வழக்கமாகத் தான் செஞ்சேன். இளையராஜா, எம்.எஸ்.வி பேசும் போதெல்லாம் உங்க பலத்த கைத்தட்டல பார்த்தேன். இதுதான் உண்மையான ஆஸ்கர்விருது. தயவுசெஞ்சு ஒருத்தர பாராட்டறதா நெனச்சிக்கிட்டு இன்னொருத்தர திட்டாதீங்க".

()

கலைஞர்கள் தங்களின் மனமாச்சரியங்களை களைந்து வைத்து விட்டு இப்படியாக தங்களின் சமகால கலைஞர்களை வெளிப்படையாக பாராட்ட முன்வருவது பாராட்டத்தக்கதாக இருக்கிறது.


suresh kannan

Saturday, March 07, 2009

வழக்குரைஞர்கள்: போக்கிரிகள்... ஒழுக்கங் கெட்டவர்கள்

சமீபத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் நடந்த மோதலை விசாரிக்க முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி B.N.ஸ்ரீகிருஷ்ணா அவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட ஒருநபர் விசாரணைக் கமிஷனின் அறிக்கையை முழுவதுமாக படிக்க முடிந்தது. வழக்குரைஞர்களை லும்பன்களாக இந்த அறிக்கை சித்தரிக்கிறது.

..."Lawyers behaving like hooligans and miscreants. Lawyers think they are immune from the law, the report adds. Soft-pedalling policy by the lawyers led to the situation"...


என்று வழக்குரைஞர்களை கடுமையாக சாடியுள்ளது அந்த அறிக்கை. hooligans and miscreants என்கிற வார்த்தைக்கு போக்கிரி, ஒழுக்கங்கெட்டவர்கள், கயவர்கள் என்று அர்த்தம் கூறுகிறது சென்னைப் பல்கலைக்கழக அகராதி.

வழக்குரைஞர்கள் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தியிருப்பதை ஆரம்பத்திலேயே உயர்நீதிமன்ற நீதிபதிகள் தடுத்திருக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நிர்வாகம் இது குறித்து எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எடுக்காமல் மெளனம் காத்திருப்பதையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் பிரபாகாரனின் பிறந்த நாளை கொண்டாடியும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் வழக்குரைஞர்கள் போராட்டம் நடத்திய ஆரம்பக் காரணங்கள் முதல் சுப்ரமண்ய சுவாமி மீது நடந்த முட்டை தாக்குதல் வரை அறிக்கையில் ஆராயப்பட்டிருக்கிறது.

Photobucket

தொடர்ந்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வரும் வழக்குரைஞர்கள் இந்த அறிக்கையை ஏற்க மறுத்திருப்பதுடன் இது குறித்து கொதிப்படைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்களின் இந்த போராட்டத்தினால் நீதிமன்றப் பணிகள் முடக்கி வைக்கப்பட்டிருப்பதுடன் பொதுமக்களின் பல்வேறு வழக்குகள் தேங்கிப் போகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. நீதிபதிகளின் பற்றாக்குறை காரணமாக ஏற்கெனவே லட்சக்கணக்கான வழக்குகள் நீதிக்காக காத்திருக்கும் போது அதன் மீது இன்னும் சுமையைக் கூட்டுவது போல் நடக்கும் இந்தப் போராட்டத்திற்கு பொதுமக்களின் ஆதரவு கிடைக்காது என்பதை வழக்குரைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் இம்மாதிரியான போராட்டங்கள் வருங்காலத்தில் நடைபெறாதவாறு வழக்குரைஞர்களுக்கு உச்சநீதிமன்றம் கடுமையான விதிகளை ஏற்படுத்த வேண்டும். இப்போதைய போராட்டத்தைக் கூட உச்சநீதிமன்றமே தீவிரமாக தலையிட்டு வழக்குரைஞர்கள் பணிக்கு திரும்ப நிர்ப்பந்திக்க வேண்டும். அவ்வாறு குறிப்பிட்ட காலத்திற்குள் பணிக்குத் திரும்பாதவர்கள் மீண்டும் தங்கள் வழக்குரைஞர் பணியை சில வருடங்களுக்கு மேற்கொள்ள இயலாதவாறு தடை ஏற்படுத்த வேண்டும்.

()

சென்னை உயர்நீதிமன்றத்தின் அருகே அலுவலகம் அமைந்திருப்பதனால் சட்டக் கல்லூரி மாணவர்களாலும் வழக்குரைஞர்களின் தீடீர் போராட்டங்களினாலும் அடிக்கடி பாதிக்கப்படும் பொதுமக்களில் நானும் ஒருவன். அம்பேத்கர் சட்டக் கல்லூரியும் குறளகமும் அமைந்திருக்கும் நாற்சந்தி மிகுந்த போக்குவரத்து நெரிசல் மிக்கது. இங்கு சாலையைக் கடக்க விரும்பும் பாதசாரிகளுக்கு மிகுந்த மனோதிடம் தேவை. வேகமானதொரு வீடியோ கேம் விளையாட்டை கையாளும் லாகவத்துடனும் கவனத்துடன்தான் இங்கு சாலையை கடக்க முடியும். சிறிது தாமதித்தாலும் எதிர்புறமிருந்து வரும் வாகனமோ இடதுபுறமிருந்து வரும் வாகனமோ நம்மீது மோதும் அபாயமுண்டு. இந்த மாதிரியான நெரிசலான சாலையில்தான் சட்டக்கல்லூரி மாணவர்களோ, உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களோ சாலையில் அமர்ந்து தீடீர் போராட்டம் நடத்துவார்கள். சுற்றியுள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்படும். நடைபாதை வியாபாரிகளும் பொதுமக்களும் நடக்கவிருக்கும் வன்முறை குறித்த அச்சத்துடன் ஓடுவார்கள். அவசர வேலையாக செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி குறைந்தது ஒருமணி நேரத்தையாவது இழக்க வேண்டியிருக்கும். சென்னையின் அனைத்து மாநகர பேருந்துகளின் சந்திப்பு என்பதாலும் தென்சென்னையையும் வடசென்னையையும் இணைக்கும் பாதை என்பதாலும் பல பேர் இதனால் பாதிக்கப்படுவர். ஆனால் சட்டம் படிப்பவர்களுக்கும் அதை நடைமுறைப்படுத்துவர்களுக்கும் இதுகுறித்து கிஞ்சித்தும் அக்கறை கிடையாது. தங்களது வலிமையை நிலைநாட்டின திருப்தி ஏற்படும் வரையில் கலைந்து செல்ல மாட்டார்கள்.

அறிக்கையில் கூறப்பட்டிருப்பது போலவே வழக்குரைஞர்கள் சட்டத்தின் விதிகள் தமக்கானது அல்ல எனவும் அது தம்மை கட்டுப்படுத்தாது என்பதாகவும்தான் அன்றாட வாழ்வில் நடந்து கொள்கின்றனர். யாராவது ஒரு வழக்குரைஞர் குற்றவழக்கில் கைது செய்யப்பட்டாலோ அல்லது விசாரணைக்காக அழைத்து செல்லப் பட்டாலோ மற்ற வழக்குரைஞர்கள் கூட்டமாக வந்து வன்முறையின் மூலமோ காவல்துறையினரை மிரட்டுவதின் மூலமோ அவரை விடுவித்து அழைத்துச் சென்று விடுகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன் டைம்ஸ் ஆ·ப் இந்தியாவில் வந்த ஒரு செய்தி: குடிபோதையில் இருந்த வழக்குரைஞர் ஒருவர், காற்றுக்காக மாடியில் தூங்கிக் கொண்டிருந்த அண்டை வீட்டுக்காரப் பெண்களின் நடுவே படுத்து சில்மிஷம் செய்துள்ளார். அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறை அந்த நபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றது. ஆனால் அவர் தனது கைபேசியில் சக வழக்குரைஞர்களுக்கு உடனே தகவல் அளித்து விட்டார். அவ்வளவுதான். அந்த இரவிலும் காவல்நிலையத்திற்கு விரைந்து வந்த வழக்குரைஞர் பட்டாளம் சில்மிஷம் செய்த நபரை மீட்டுச் சென்று விட்டது. ஆனால் சாலையில் தூங்கிக் கொண்டிருக்கும் அப்பாவிகள் காவல்துறையினரால் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் போது அவர்களுக்கு குரல் கொடுக்க எவரும் முன்வருவதில்லை.

வழக்குரைஞர்களின் அராஜகத்திற்கு இன்னொரு தனிப்பட்ட அனுபவத்தையும் கூற விரும்புகிறேன். எங்களின் அடுக்ககத்தில் ஏற்பட்ட சில்லறைத் தகராறு ஒன்றில் ஈடுபட்ட வழக்குரைஞர் ஒருவர், சக குடிவாசியை குடிபோதையில் ஆபாசமாக திட்டித் தீர்த்ததோடு "உன் டைவர்ஸ் கேஸ்ல உனக்கு முன்ஜாமீன் எடுத்துக் கொடுத்தவனே நான்தாண்டா" என்று.. இன்னும் பல தகவல்களை பொதுவில் கொட்டித் தீர்த்தார். தன்னை நம்பி வாடிக்கையாளர்கள் தரும் தகவல்களின் ரகசியங்களை காக்க வேண்டும் என்பது வழக்குரைஞர்கள், மருத்துவர்கள் போன்றவர்களின் தொழில் தர்மம். ஆனால் தனிப்பட்ட விரோதத்தில் இவர்கள் அந்த தர்மத்தை மீறுவது போன்ற நம்பிக்கைத் துரோகம் வேறெதுவும் இருக்க முடியாது.

()

கிருஷ்ணாவின் அறிக்கை வழக்கறிஞர்களை மாத்திரம் சாடாமல் அதீதமாக எதிர்வினையாற்றிய காவல் துறையினரையும் குறைகூறுகிறது. வழக்குரைஞர்கள் ஏற்படுத்திய முதல் தாக்குதல்களினால் நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே SAG (Swift Action Group) வழக்குரைஞர்களின் மீது எதிர்தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் அது நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக அல்லாமல் பழிவாங்கும் நடவடிக்கையைப் போல் அமைந்தது கண்டிக்கத்தக்கது. காவல் துறையினர் பெண் வழக்குரைஞர்கள் மாத்திரமல்லாமல் நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் என எதிரில் வரும் அனைவரையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். அவ்வாறான தாக்குதலில் காவலர்கள் முறைப்படி நடந்து கொள்ளவில்லை என்பதையும் கிருஷ்ணாவின் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

....Despite instructions that during a lathi charge the lathi blow should be aimed at parts of the body other than thehead, the police freely rained lathi blows on the heads of the lawyers, causing head injuries to a number of lawyers.
மேலும் அங்கிருந்த வாகனங்களையும் நீதிமன்ற அலுவலகங்களின் உள்ளேயிருந்த பொருட்களையும் காவல்துறையினரின் குழு சேதப்படுத்தியுள்ளதை தொலைக்காட்சி ஒளிபரப்பிய சலனக் காட்சிகளில் காண முடிந்தது. 'வழக்குரைஞர்களின் வசவுச் சொற்களினாலும் கற்கள் கொண்டு தாக்கியதனாலும் ஏற்பட்ட கோபத்தை காவல்துறையினர் தாங்கிக் கொள்ள இயலாத பொறுமையின்மையால்தான் இவ்வாறான கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்கள் மீது தவறில்லை' என்கிற மாதிரியான வாதம் சிலரால் வைக்கப்படுகிறது. இது முட்டாள்தனமான வாதம். இம்மாதிரியான கலவரங்களை அடக்குவதற்குத்தான் அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது. அதைவிட்டு அவர்களும் தெருப்பொறுக்கிகள் போல் பதில் தாக்குதலில் ஈடுபட்டதை நியாயப்படுத்துவது முறையாகாது.

வழக்குரைஞர்களைப் போலவே காவல்துறையினரும் கட்டுக்கடங்காதவாறு நடந்து கொண்டிருப்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

....The policemen behaved in the same fashion as the unruly mob of lawyers.


நீதித்துறையும் காவல்துறையும் சமநிலையான சமூகத்தின் முக்கியமான இரு தூண்கள். இந்த தூண்கள் காலங்காலமாகவே ஒன்றையொன்று முட்டிக் கொண்டு நிற்கின்றன. இதனால் அஸ்திவாரமே ஆட்டங்காணும் அபாயமிருக்கிறது. இந்தச் சம்பவத்தின் மூலமாவது இதற்கொரு நிரந்தர முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

suresh kannan