Showing posts with label கமல்ஹாசன். Show all posts
Showing posts with label கமல்ஹாசன். Show all posts

Tuesday, August 11, 2020

கமல்ஹாசன்: ‘தேய்வழக்குகளை உதறியெரியும் பெருங்கலைஞன்’

Image Credit: Original uploader
 
பொதுவாக  முன்னணி சினிமா நாயகர்களின் உண்மையான வயதிற்கும் அவர்கள் ஏற்கும் பாத்திரங்களின் வயதிற்கும் பல சமயங்களில் தொடர்பே இருக்காது. இது சார்ந்த கிண்டல்களும் நமட்டுச்சிரிப்புகளும் ரசிகர்களிடையே நெடுங்காலமாக உண்டு.

நடுத்தர வயதைத் தாண்டியும் ‘கல்லூரி மாணவனாகவே’ முரளி நடித்த திரைப்படங்கள் ஏராளம். இந்த நோக்கில் ரஜினி மீதான கிண்டல்களுக்கு பஞ்சமேயில்லை. தெலுங்கு நடிகர்கள் இந்த விஷயத்தில் செய்ததெல்லாம் மாபெரும் பாதகம் என்றே சொல்லலாம். நடிப்பில் சாதனைகள் புரிந்த சிவாஜி கணேசன் கூட ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு கோட், சூட் அணிந்து ஸ்ரீதேவி போன்ற இளம் நடிகைகளுடன் மூச்சு வாங்க டூயட் பாடிய அநியாயமெல்லாம் நடந்தது.

இந்த வரிசையில் கமலும் விதிவிலக்கல்ல. நடுத்தர வயதைத் தாண்டியும் மரத்தைச் சுற்றி டூயட் பாடி, நாயகியுடன் மறைவில் சென்று உதட்டைத் துடைத்துக் கொண்டே வரும் அபத்தத்தை அவரும் செய்திருக்கிறார். ஆனால் ரஜினி போல தொடர்ந்து அடம்பிடிக்காமல் ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு தன் வயதுக்கேற்ற பாத்திரங்களை ஏற்க அவர் தயங்கியதில்லை. ‘கடல் மீன்கள்’ ‘ஒரு கைதியின் டைரி’ போன்ற திரைப்படங்களில் வயதான தோற்றத்தில் நடித்த போது அவருடைய வயது முப்பதுக்கும் குறைவாகத்தான் இருந்தது.

தன் வயதுக்கேற்ற பாத்திரங்களை கமல்ஹாசன் ஏற்றாரா என்னும் நோக்கில், 2000-ம் ஆண்டிலிருந்து அவர் நடித்த திரைப்படங்கள், அதிலுள்ள சிறப்பம்சங்கள், தோல்விகள் போன்ற விஷயங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். 
 
**
 
சராசரியான திரைப்படங்களைத் தாண்டி கலையம்சமுள்ள படங்களைத் தேடும் ரசிகர்களால் இன்றும் கூட சிலாகிக்கப்படுகிற “ஹேராம்’2000-ம் ஆண்டில் வெளியானது.

உடம்பு சுருங்கி இறுதிப் படுக்கையில் கிடக்கும் கிழவர் பாத்திரம், காதல் பொங்கி வழியும் கணவன், சாமியார் கோலத்தில் குற்றவுணர்வுடன் இரண்டாம் திருமணத்திற்கு அரைமனதுடன் சம்மதிக்கும் ஆசாமி, முறுக்கு மீசையுடன் புது மனைவியுடன் ஐக்கியமாகத் துவங்கும் நபர், அனைத்தையும் துறந்து விட்டு பழிவாங்கப் புறப்படும் கோபக்காரர் என்று ஐந்து விதமான தோற்றங்களில் ‘சாஹேத்ராமனாக’ விதம் விதமாக அவதாரம் எடுத்தார் கமல்.

ஒப்பனை என்கிற சமாச்சாரம் வெறுமனே அழகைக் கூட்டுவதற்காக என்பது அல்லாமல் ஒரு கதாபாத்திரத்தை அதன் மூலம் எப்படியெல்லாம் வேறுபடுத்திக் காட்ட முடியும் என்பதற்கு இந்தத் திரைப்படம் ஒரு கச்சிதமான உதாரணம். அத்தனை தோற்றங்களிலும் கமல் ‘நச்’சென்று பொருந்தினார்.

இதே ஆண்டில்தான் ‘தெனாலி’ திரைப்படம் வெளியானது. போர் சூழல் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தவராக கமல் நடித்திருந்தார். ஈழத்தமிழ் பேசி அவர் நடித்திருந்தது சிறப்பான அம்சமாக பார்க்கப்பட்டது. ‘எதைக் கண்டாலும் பயம்’ என்பதுதான் இந்தக் கதாபாத்திரத்தின் பலவீனம். ஆனால் அதன் நல்லியல்புகள் காரணமாக இதே பலவீனம்தான் அதன் பலமாகவும் பல காட்சிகளில் வெளிப்படுகிறது. இந்த சுவாரசியமான முரணை அடிப்படையாகக் கொண்ட காட்சிகள் சுவாரசியமாக வெளிப்பட்டிருக்கும். இவற்றைத் தாண்டி இதுவொரு வணிகநோக்குத் திரைப்படமே.

கமலின் சில சிறந்த திரைப்படங்கள், தாமதமாகத்தான் அங்கீகரிக்கப்படும், பாராட்டப்படும் என்றொரு பரவலான கருத்து உண்டு. அதற்கு பொருத்தமான திரைப்படங்களுள் ஒன்றான ‘ஆளவந்தான்’ 2001-ல் வெளியானது.

திடகாத்திரமும் மூர்க்கமும் மொட்டைத் தலையும் கொண்ட ‘நந்து’ பாத்திரம் ரசிகர்களை பெருமளவு ஈர்த்தது. சித்தியின் கொடுமையினால் பாதிக்கப்படும் ஒரு சிறுவன் பிறகு எப்படி மனப்பிறழ்வு கொண்டவனாகவும் பெண் வெறுப்பாளனாகவும் மாறுகிறான் என்பதை தனது மிரட்டலான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார் கமல்.

இதில் வரும் விபரீதமான காட்சியொன்றில், வன்முறையின் தீவிரத்தைக் குறைத்துக் காட்ட அனிமேஷன் வடிவில் படமாக்கப்பட்டது. இந்த உத்தியைப் பார்த்து பிரமித்து தன்னுடைய திரைப்படம் ஒன்றில் பயன்படுத்திக் கொண்டதாக ஹாலிவுட் இயக்குநர் க்வென்டின் டரான்டினோ ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். ஹாலிவுட் படங்களில் இருந்து கமல் நிறைய உருவியிருக்கிறார் என்று கூறப்பட்டிருந்த புகார்களுக்கு மாற்றாக நிகழ்ந்த விஷயம் இது.

பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம் போன்ற திரைப்படங்களை சாய்ஸில் விட்டுவிடலாம். அபாரமான நகைச்சுவைத் திரைப்படங்கள் என்பதைத் தாண்டி குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்கு அவற்றில் எந்த வித்தியாசமும் நிகழ்வில்லை. 
 
 
**

2003-ல் வெளியான ‘அன்பே சிவம்’, கமலின் பயணத்தில் ஒரு முக்கியமான படம். ‘தன் அழகான தோற்றத்தை கோரமாக்கிக் கொண்டு நடிக்க முன்வருபவனே சிறந்த நடிகன்’ என்று சிவாஜி அடிக்கடி கூறுவாராம். அந்த வகையில் ‘குணா’ முதற்கொண்டு பல பரிசோதனை முயற்சிகளை கமல் துணிந்திருக்கிறார். அன்பே சிவமும் அதில் ஒன்று. சோடாபுட்டி கண்ணாடி, தழும்புகளால் நிறைந்திருக்கும் அவலட்சணமான முகம், சார்லி-சாப்ளினை லேசாக நினைவுப்படுத்தும் உடை என்று வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருந்தார் கமல். இதன் எதிர்முனையில் தோற்றத்திலும் சிந்தனையிலும் ஒரு நவீன இளைஞனை பிரதிபலிக்கும் பாத்திரத்தில் மாதவன் நடித்திருந்தார். இந்த முரண் படத்தின் சுவாரசியத்திற்கு அடிப்படையாக அமைந்திருந்தது.

படம் முழுக்க ‘வித்தியாசமான தோற்றத்திலேயே’ வந்தால் ரசிகர்கள் விரும்பமாட்டார்களோ என்கிற தயக்கம் எப்போதுமே நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இருக்கும் போல. எனவே பிளாஷ் பேக்கில் முறுக்கு மீசையும் இடதுசாரி சிந்தனையும் கொண்ட தெரு நாடகக் கலைஞனாகவும் வந்து நாயகியுடன் ‘ரொமான்ஸ்’ செய்து இதை சமன் செய்தார் கமல். இந்த உத்தியை பல திரைப்படங்களில் காணலாம்.

2004-ல் வெளியான ‘விருமாண்டி’யும் கமலின் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று. நெற்றியில் விபூதிப்பட்டை, குங்குமம், முரட்டு மீசை, அலட்சியமாக வாரப்பட்ட தலைமுடி, முன்கோபம் என்று தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தர வயது ஆசாமியை மிக கச்சிதமாக கண் முன்னால் நிறுத்தியிருந்தார் கமல். பல்வேறு கோணங்களில் வெளியாகும் வாக்குமூலங்களைக் கொண்டு ‘உண்மை என்பது எது? என்பதைத் தத்துவார்த்தமாக தேடிய ‘ரஷோமான்’ திரைப்பட உத்தி இதில் பயன்படுத்தப்பட்டிருந்தது. மதுரையின் வழக்கு மொழியை கமல் சிறப்பாக கையாண்டிருந்தார்.

2005-ல் வெளியான ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ வணிகரீதியாக தோல்வியடைந்த படம் என்றாலும் ஒருவிதத்தில் மிக முக்கியமானது. ‘பிளாக் ஹியூமர்’ என்னும் அவல நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்ட முதல் தமிழ் சினிமா என்று இதை அடிக்கோடிட்டு குறிப்பிட வேண்டும்.

‘சூப்பர் ஹீரோக்களுக்கு’ நிகரான ‘அந்தர்பல்டி’ சாகசங்களை இதர நாயகர்கள் செய்து கொண்டிருக்கும் போது, காது கேட்பதில் குறைபாடு உள்ள இயல்பான நடுத்தர வயது ஆசாமியாக இதில் வருவார் கமல். படம் முழுவதும் இம்சைகளை ஏற்படுத்தும் மென்மையான நகைச்சுவைக் காட்சிகள் வந்து கொண்டேயிருக்கும்.

ஒரு காவல்துறை அதிகாரிக்கு வைப்பாட்டியாக இருக்கும் இன்னொரு நடுத்தர வயதுள்ள பாத்திரம்தான் இந்தத் திரைப்படத்தின் நாயகி. பதினெட்டு வயதிற்கு குறையாத இளம் பெண்களுடன் டூயட் பாடிக் கொண்டிருக்கும் இதர நாயகர்களின் திரைப்படங்களுக்கு இடையில் இது வியப்பூட்டும் அம்சம் எனலாம். மூன்று அமெச்சூர் திருடர்கள், தவறுதலாக வேறொரு சிறுவனை கடத்தி வந்து விட்டு படும் பாடுதான் இந்தத் திரைப்படத்தின் மையம். (இதே விஷயம் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம்’ திரைப்படத்திலும் ஒரு பகுதியாக வரும்).

தனது பிரத்யேக ஸ்டைலில் திரைப்படங்களை உருவாக்குபவர் கெளதம் வாசுதேவ மேனன். ரொமான்ஸ் + ஆக்ஷன் என்பதுதான் இவரது பாணி. இவரும் கமலும் ‘வேட்டையாடு விளையாடு’ (2006) என்கிற திரைப்படத்தில் இணைந்த போது அது புதிய வண்ணத்தில் அமைந்தது. துப்பறியும் அதிகாரியை நாயகனாகக் கொண்டு பல ஹாலிவுட் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. தமிழ் சினிமாவில் அப்படியொரு பாணியில் வந்த முயற்சியாக ‘வேட்டையாடு விளையாடு’ (2006) அமைந்தது.

கணவனால் குடும்ப வன்முறைக்கு ஆளாகும் ஒரு பெண்தான் இதில் நாயகி. அந்தச் சூழலில் இருந்து அவரை விடுவித்து நாயகன் மறுமணம் புரிவார். பொதுவாக ஹீரோக்களுக்கு ஒவ்வாத இது போன்ற விஷயங்களையெல்லாம் கமல் இயல்பாகச் செய்து கொண்டிருந்தார்.

சிவாஜியின் ‘நவராத்திரி’யை தாண்டிச் செல்லும் நோக்கும் நோக்கத்திலோ, என்னவோ.. கமல் பத்து வேடங்களில் நடித்த ‘தசாவதாரம்’ (2008) ஒரு முக்கியமான முயற்சி. இதில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் பிரத்யேகமான தோற்றங்களை உருவாக்கி, அதை திரையில் சித்தரிப்பதற்காக கமல் மிகவும் மெனக்கெட்டிருந்தார். ரங்கராஜ நம்பி, பல்ராம் நாயுடு, வின்செட் பூவவராகன் என்று ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒவ்வொரு வழக்கு மொழி, பாணி, பின்னணி என்று ரகளையாக நடித்திருந்தார் கமல். குறிப்பாக கிழவி பாத்திரத்தில் அவரது உடல்மொழியும் வசன உச்சரிப்பும் அபாரம்.

ஆனால் இவற்றை தனித்தனியாக பார்க்கிற போது சுவாரசியமாக இருந்ததே ஒழிய, ஒட்டு மொத்த சித்திரமாகப் பார்க்கிற போது பொழுதுபோக்கு சினிமா என்கிற அளவைத் தாண்டி இதில் விசேஷமாக எதுவும் இல்லை. ‘தன் திரைப்படங்களில் தன்னை மிகவும் முன்நிறுத்திக் கொள்வார்’ என்று கமல் மீது பொதுவாக சொல்லப்படும் விமர்சனத்தை ஆழமாக உறுதிப்படுத்துவதாக ‘தசாவதாரம்’ அமைந்தது. பத்து வேடங்களிலும் கமல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு எழுதப்பட்ட திரைக்கதை என்பதால் செயற்கையாகத் தெரிந்தது.
 
 
**

இதர மாநிலங்களில் உருவான சிறந்த திரைப்படம் என்றால் அதை தமிழில் ரீமேக் செய்ய கமல் எப்போதும் தயங்கியதில்லை என்பதற்கு ‘குருதிப்புனல்’ முதற்கொண்டு பல உதாரணங்கள் இருக்கின்றன.  அந்த வகையில் 2009-ல் வெளியான திரைப்படம் ‘உன்னைப் போல் ஒருவன்’. மத தீவிரவாதத்தை அரசு இயந்திரமானது ஆதாய அரசியலோடும் மெத்தனத்தோடும் கையாளும் போது ஒரு சராசரி மனிதனுக்கு எழும் கோபத்தின் வெளிப்பாடுதான் இந்தத் திரைப்படத்தின் மையம். குறுந்தாடியுடன் ஒரு கல்லூரி பேராசிரியரின் நடுத்தரவர்க்க தோற்றத்தில் நடித்திருந்தார் கமல். அசல் வடிவத்தை ஏறத்தாழ சிதைக்காமல் தமிழில் கொண்டு வந்தது பாராட்டுக்குரியது. இதிலும் அவரின் வயதுக்கேற்ற பாத்திரம்தான்.

2015-ல் வெளியான ‘உத்தம வில்லன்’ திரைப்படத்தை, ஏறத்தாழ கமலின் Mini Bio-graphical version எனலாம். அந்த அளவிற்கு அவருடைய அசல் வாழ்க்கையின் தடயங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தத் திரைப்படத்தில் நிறைந்திருந்தன. மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு நடிகன், அபத்தங்களால் நிறைந்திருந்த தன் அதுவரையான வாழ்க்கையை சிறிதாவது அர்த்தபூர்வமானதாக ஆக்க பாடுபடுகிறான். ‘மனோரஞ்சன்’ என்னும் நடிகனாக கமல் நடித்த சில காட்சிகள், அவர் எத்தனை திறமையான நடிகர் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்தன.

‘Spy Thriller’ எனப்படும் வகைமையான அதுவரையான தமிழ் சினிமாவில் மிக அமெச்சூராகத்தான் கையாளப்பட்டது. இதை ஏறத்தாழ ஹாலிவுட் தரத்திற்கு கொண்டு சென்ற திரைப்படம் ‘விஸ்வரூபம்’ I & II. முதல் பகுதியில் இருந்த இடைவெளிகளுக்கான பதில்கள் இரண்டாம் பகுதியில் இருக்கும் அளவிற்கு அபாரமான திரைக்கதையால் கட்டப்பட்டவை. இந்திய உளவாளி ஒருவன் சர்வதேச தீவிரவாதத்தை எதிர்கொள்வதுதான் இதன் மையம்.

பெண்மையின் சாயல் கொண்ட விஸ்வநாதன், எரிமலையின் ஆற்றலோடு விஸாமாக வெளிப்படும் காட்சி, தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க ஆக்ஷன் காட்சிகளுள் ஒன்றாக இருக்கும். ‘படம் புரியவில்லை’ என்கிற பரவலான கருத்து இதன் மீது எழுந்தது. ஆனால் நிதானமாகப் பார்த்தால் எத்தனை நுட்பமான விஷயங்களை இவற்றில் அடுக்கியிருக்கிறார் என்பது புரியும்.

கமலின் ரீமேக் வரிசையில் இன்னொரு அபாரமான முயற்சி ‘பாபநாசம்’ (2015).  மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘திரிஷ்யம்’ தமிழில் திருநெல்வேலியை பின்னணியாகக் கொண்டு வெளியானது. அன்பான மனைவி, இரண்டு மகள்கள் கொண்ட நடுத்தர வயது பாத்திரத்தில் ‘சுயம்புலிங்கமாக’ கமல் நடித்திருந்தார். இதில் அவர் வழக்கம் போல் தன் அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தாலும் மலையாளத்தில் மோகன்லால் செய்தததோடு ஒப்பிட்டால் கமல் சற்று பின்தங்கியிருப்பார் என்றுதான் சொல்ல வேண்டும்.

டூயட், காமெடி, ஆக்ஷன் என்று ஒரு தேய்வழக்கு திரைக்கதையுடன் நெடுங்காலமாக இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் நிறத்தை தொடர்ந்து மாற்றிக் கொண்டு வருவதில் கமல்ஹாசனுக்கு பிரதான பங்குண்டு. அந்த வகையில் ‘தூங்காவனம்’ (2015) ஒரு அற்புதமான முயற்சி. பிரெஞ்சு திரில்லர் திரைப்படத்தின் ரீமேக். தமிழ் வடிவத்திற்காக அசட்டு மசாலாக்கள் எதுவும் திணிக்கப்படாமல் யோக்கியமாக உருவாக்கப்பட்டதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஒரு முன்னணி நாயகனுக்குரிய தேய்வழக்குகளை கமல் கொண்டிருந்தாலும் ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு இவற்றிலிருந்து அவர் தொடர்ந்து மீற முயற்சித்துக் கொண்டே இருப்பதை கவனிக்க முடியும்.

‘மகாநதி’ திரைப்படத்தில் அவர் இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பனாக நடிப்பதைக் கண்ட ஒரு சீனியர் நடிகர் ‘இவ்வாறெல்லாம் நடித்தால் உன் இமேஜ் போய்விடும்’ என்று எச்சரித்தாராம். ஆனால் கமலின் சிறந்த திரைப்படங்களை கணக்கெடுத்தால் ‘மகாநதி’ அதில் உறுதியாக இடம்பெறும் என்பதுதான் வரலாறு. இந்த தொலைநோக்குப் பார்வையும் துணிச்சலும் பாத்திரத்திற்காக தன்னை மாற்றிக் கொள்ளும் மெனக்கெடலும் கமலிடம் எப்போதும் இருந்திருக்கிறது.





suresh kannan

Thursday, November 28, 2019

தூங்காவனமும் தமிழ் சினிமாவின் ரசிக மனமும்




கமல்ஹாசனின் சமீபத்திய திரைப்படமான 'தூங்காவனம்' தமிழ்த் திரை சூழலில் ஒரு முக்கியமான, முன்னோடியான, பாராட்டப்பட வேண்டிய முயற்சி என்கிற அழுத்தமான குறிப்புடன் இந்தக் கட்டுரையை துவங்க விரும்புகிறேன். ஆனால் அந்த முயற்சியை அவர் எத்தனை தூரம் வெற்றிகரமாக சாத்தியமாக்கினார் என்கிற கேள்விகளும் உள்ளன.

தமிழ் சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடும் நபர்களுள் முக்கியமானவராக குறிப்பிடப்படுபவர் கமல்ஹாசன் என்பது மிகையானதாக இருந்தாலும் அதில் உண்மையில்லாமலும் இல்லை. சமீபத்திய நுட்ப விஷயங்களின் அறிமுகம், ஒப்பனை சமாச்சாரங்கள், புதிய பாணி திரைக்கதை முயற்சிகள், வசனமே இல்லாத திரைப்படம், இளைஞர்களுக்கான பயிலரங்கம், சினிமா தயாரிப்பு, இயக்கம் என்று பலவிதங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதோடு தமிழ் சினிமாவிற்கு புதிய  விஷயங்களை பரிசோதனையாக அறிமுகப்படுத்துபவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் கமலிடம் இருக்கும் கலைஞரைக் காட்டிலும் அவருக்குள் இருக்கும் திறமையான வணிகரும், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் தன்மையும் அவரது முயற்சிகளை அரைகுறையானதாகவே ஆக்கி வைத்திருக்கின்றன.

***

'ஹாலிவுட் சினிமாவிற்கு நிகரானது' என்று விளம்பரங்களிலும் போஸ்டர்களிலும் சுயபெருமையோடு சில வெகுசன தமிழ்திரைப்படங்கள் தம்பட்டம் அடித்துக் கொண்டாலும் அவை துண்டு துண்டான சுவாரசியங்களைக் கொண்டிருக்குமே ஒழிய வழக்கமான தமிழ் சினிமா உருவாக்க முறையிலிருந்து பெரிதும் விலகாதவை. இந்த நோக்கில் முழுக்க ஹாலிவுட் பாணி சினிமாவானது தமிழில் இதுவரை ஒன்று கூட உருவாகவில்லை என்பதே உண்மை. ஹாலிவுட் சினிமாதான் சிறந்த சினிமாவிற்கான அளவுகோல் என்பது இதன் பொருள் அல்ல. அவைகளிலும் பல தேய்வழக்கு அபத்தங்கள் உள்ளதுதான் என்றாலும் ஒரு கதைக் கருவை எடுத்துக் கொண்டு அதன் மையத்திலிருந்து பெரிதும் விலகாமல் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும்  நம்பகத்தன்மையுடனும் காட்சிக்கோர்வைகளை உருவாக்குவது ஹாலிவுட் சினிமாவின் பாணி. பொருந்தாத, தேவையற்ற இடைச்செருகல்கள் பொதுவாக அவைகளில் திணிக்கப்படும் அபத்தம் நிகழாது.

ஆனால் தமிழ் சினிமாவின் வரலாறு என்ன? சினிமா என்கிற நுட்பம் தமிழ் சூழலில் அறிமுகமாகிய போது இங்கு அப்போது பொழுதுபோக்கு வடிவங்களாக இருந்த கூத்து, புராண நாடகங்கள் போன்றவை அப்படியே எதுவும் மாறாமல் சினிமாவில் பதிவு செய்யப்பட்டன. எந்தவொரு புது நுட்பம், கண்டுபிடிப்பு அறிமுகமானாலும் அவற்றை தம் பழமைவாத அபத்தங்களுக்கேற்ப உருமாற்றம் செய்து கொள்வதில் தமிழர்கள் பிரத்யேகமான திறமை கொண்டவர்கள். கணினியின் பயன்பாடு இந்தியாவில் அறிமுகம் ஆனவுடனேயே 'கம்ப்யூட்டர் ஜாதகம்' எனும் விஷயமும் தமிழகத்தில் உடனே வந்து விட்டது.

எனவே தமிழ் சமூகத்தில் புதிதாக நுழைந்த சினிமா எனும் நுட்பத்தில் புராண நாடகங்கள் எவ்வித மாறுதலும் அல்லாமல் அப்படியே நுழைந்ததில் ஆச்சரியமொன்றுமில்லை. இயல்பான விஷயம்தான். ஆனால் தமிழ் சினிமா உருவாகத் துவங்கி தனது நூற்றாண்டை நெருங்கப் போகும் சமயத்திலும் ஏறத்தாழ அதே நாடகத்தன்மையை இன்னமும் கைவிடாமலிருப்பதுதான் சங்கடமாக இருக்கிறது. இதை தமிழ் சினிமாவிற்கு என்று மட்டுமல்லலாமல் சில அரிதான விதிவிலக்குகளையும் கலைப்படங்களையும் தவிர்த்து ஏறத்தாழ அனைத்து இந்தியச் சினிமாக்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம். கட்டாயமாக திணிக்கப்படும் நான்கைந்து பாடல்கள், இரண்டு சென்ட்டிமென்ட் காட்சிகள், மூன்று சண்டைக் காட்சிகள், அபத்தமான நகைச்சுவை இணைப்புக் காட்சிகள், நாயக பிம்பங்களை ஊதிப்பெருக்கிக் காட்டுவதற்காக உருவாக்கப்படும் செயற்கையான கதை என்று குடுகுடுப்பைக் காரன் சட்டை போல பொருந்தாத பல விஷயங்களை ஒன்றிணைத்து தருவதுதான் இந்திய சினிமாவின் வடிவம் என்றாகியிருக்கிறது. ஆண்டாண்டு காலமாக நமக்கு பழகிப் போன காரணத்தினாலேயே இந்த அபத்தக் களஞ்சியத்தைதான் சினிமா என்று சக்கையைப் போல மென்று கொண்டிருக்கிறோம்.

***

நுட்ப ரீதியான விஷயத்தில் சில பாய்ச்சல்களை தமிழ் சினிமா நிகழ்த்தியிருந்தாலும் நுட்பம் என்பது சினிமாவை உருவாக்க உதவும் ஒரு கருவிதான். ஆனால் கதைகூறல் முறையில் இன்னமும் தமிழ்சினிமா  பின்தங்கிதான் இருக்கிறது. நம்முடைய சமூகத்து தொன்மையான கதையாடல்களின் படி இந்த வடிவம்தான் இயல்பாக உருவாகி வந்திருக்கிறது, எனவே இதை  விட்டு ஏன் மேற்கத்திய வடிவத்தை நாம் பின்பற்ற வேண்டும் என்ற கேள்வி எழலாம். எழுத்து இலக்கியத்தில் சிறுகதை, நாவல் போன்றவைகளும் மேற்கிலிருந்து இங்கு இறக்குமதியானவைதான். அவைகளுக்கென்று உள்ள பிரத்யேகமான வடிவத்தை நாம் பின்பற்றும் போது காட்சி ஊடகமான சினிமாவிற்கென்று உள்ள அடிப்படையான விஷயங்களை கைவிட்டு கூட்டுஅவியல் முறையையே ஏன் இன்னமும் பின்பற்ற வேண்டும்? ஓர் அந்நிய நுட்பத்தை நம்முடைய கலாசாரம் அதன் இயல்புக்கேற்ப உருமாற்றிக் கொண்டிருக்கிறது என்று வாதிடுபவர்களும் உண்டு. 

ஆனால் தமிழ் சினிமா அந்தச் சமூகத்தின் கலாசாரத்தையா பிரதிபலிக்கின்றது?  வெகுசன தமிழ் சினிமாக்களில் உள்ள சிறப்புக்களை எப்படியோ தோண்டியெடுத்து கண்டுபிடித்து சிலாகிக்கும் அறிவுஜீீவி விமர்சகர்கள் உண்டு. உலகின் முதல் குரங்கு தமிழக்குரங்குதான் என்று நிரூபிப்பதில் அலாதியான இன்பவெறி காண்பவர்கள். நுட்ப நோக்கில், நடிகர்களின் பங்களிப்பு நோக்கில், இயக்குநர்களின் உருவாக்க நோக்கில் தமிழின் வெகுசன திரைப்படங்களில் துண்டு துண்டாக சில சிறப்பம்சங்கள் உண்டுதான் என்றாலும் அவைகள் தமிழ் சினிமா எனும் தேய்வழக்கு வடிவமைப்புக்குள் செயற்கையாக இணைக்கப்பட்டிருப்பதின் காரணமாக ஒட்டுமொத்த அனுபவத்தில் சலிப்பையே தருகின்றன.

அயல் சினிமாக்களை காணும் வாய்ப்புள்ளவர்களுக்கு இந்த சலிப்பு பன்மடங்காக பெருகுகிறது. நுட்ப வளர்ச்சி காரணமாக இன்று உலகின் பல சிறந்த திரைப்படங்களை காணும் வாய்ப்பிருக்கிற தமிழ் ரசிகர்கள் அவற்றை இங்கு உருவாகும் சினிமாவுடன் ஒப்பிட்டு தங்களின் அதிருப்தியை வெளியிட்டபடி இருக்கிறார்கள். ஏறத்தாழ தமிழ் திரைப்படங்களுக்கு இணையான வெற்றியை ஆங்கில மொழிமாற்ற திரைப்படங்கள் பெற்று தமிழ் சினிமாக்களுக்கு நெருக்கடியை தருகின்றன. இதை உணர்ந்து கொண்டு புதிய தலைமுறை இயக்குநர்களும் தமிழ் சினிமாவின் வழக்கமான கதைகூறல் முறையிலிருந்து விலகி மெல்ல மெல்ல மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். என்றாலும் கூட சமரசங்கள் மற்றும் வணிக நெருக்கடிகள் காரணமாக அவர்களால் முற்றிலுமாக இதிலிருந்து விலக முடியவில்லை.

சமீபத்திய உதாரணத்திலிருந்து சொல்கிறேன். தனி ஒருவன் என்றொரு திரைப்படம். சுவாரசியமான திரைக்கதை காரணமாக  வணிகரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது. சாலையில் தூங்கிக் கொண்டிருப்பவனையும் எச்சில் துப்புவனையும் கொன்று விட்டால் இந்தியா வல்லரசாகி விடும் என்கிற ஷங்கர் திரைப்படத்தின் அபத்தமான கருத்தியலை முன்வைக்காமல் ஓர் அரசையே பின்நின்று இயக்கும் வணிக மாஃபியா  வலையின் ஆணிவேரான நபரை அழிக்க முயலும் ஒரு காவல்துறை இளைஞனின் கதை. என்றாலும் இதில் பல தர்க்கப்பிழைகள், வழக்கமான இடைச் செருகல்கள். நாயகனின் உடலில் வேவு பார்க்கும் கருவியைப் பொருத்தி ஒலியின் மூலம் அவனைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறான் வில்லன். தம்முடைய நடவடிக்கைகள் எல்லாம் உடனுக்குடன் கண்டுபிடிக்கப்படும் காரணம் தெரியாமல் அவதிப்படும் நாயகன் ஒரு கட்டத்தில் அதனைக் கண்டு பிடித்து விடுகிறான். அந்தச் சமயத்தில்தான் அவனுடைய காதலி வருகின்றாள். அவளிடம் தன்னுடைய காதலை  சொல்லத்தான் அவன் வரச் சொல்லியிருக்கிறான். என்றாலும் நெருக்கடியான சூழல் காரணமாக அவளிடம் கோபப்படுவது போல கத்தி விட்டு பின்பு சைகையின் மூலம் தன்னுடைய பிரச்சினையைச் சொல்கிறான். இருவரும் மெளனமாக தங்களின் காதலை பரிமாறிக் கொள்கிறார்கள். 'வேவு பார்க்கும் கருவியை நீக்க மருத்துவர் வர இன்னமும் அரை மணி நேரம் இருக்கிறது, என்ன செய்யலாம்? என நாயகி எழுதிக் கேட்கிறாள்.

அடுத்து வருகிறது ஒரு டூயட் பாட்டு. ஒருவன் வேவு பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்திலா காதல் செய்வார்கள்? இப்படி சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் தருணங்களை குரூரமாக நிறுத்தி தமிழ் சினிமாவின் வழக்கமான ஃபார்முலா விஷயங்களை அபத்தமாக அதில் திணித்து ஒரு நுண்ணுணர்வுள்ள பார்வையாளனை செருப்பால் அடிப்பது போன்ற காரியங்களை ஏன் தமிழ் இயக்குநர்களால் கைவிட முடியவில்லை? குறுந்தகடுகளில் பார்க்கும் சமயத்திலாவது இதை தாண்டிச் சென்று விடலாம். திரையரங்கில் பார்க்கும் போது என்ன செய்வது? இப்படி பல இடைச்செருகல் உதாரணங்களை தமிழ் சினிமாவிலிருந்து தோண்டியெடுத்துக் கொண்டேயிருக்கலாம். இதனாலேயே தமிழ் சினிமாக்களின் அபத்தங்களை சகித்துக் கொள்ள இயலாமல் அயல் சினிமாக்களிடம் தஞ்சமடையும் பார்வையாளர்கள் பெருகிக் கொண்டே போகிறார்கள்.

இந்தச் சூழலில் வெளியாகியிருக்கும் கமல்ஹாசனின்  'தூங்காவனம்'  திரைப்படம் தமிழ் சினிமாவின் வழக்கமான கதைகூறல் முறையிலிருந்து முற்றிலும் விலகி ஏறத்தாழ ஹாலிவுட் சினிமா பாணியைக் கொண்டிருப்பது ஓர் ஆறுதலான விஷயமாக இருக்கிறது.

***

கமல்ஹாசனிடம் சமீப காலமாக சில ஆச்சரியமான மாற்றங்களை கவனிக்க முடிகிறது. பொதுவாக ஒரு திரைப்படத்தை முடிக்க ஓர் ஆண்டிற்கும் மேலான காலத்தை அவர் எடுத்துக் கொள்வார். ஆனால் சமீபகாலமாக அவரது அடுத்தடுத்த திரைப்படத்தின் அறிவிப்புகள் குறுகிய நேரத்தில் தொடர்ந்து வெளியாகின்றன. விஸ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏறத்தாழ முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் மெருகேற்றலில் இருப்பதாகச் சொல்கிறார்கள். 'உத்தம வில்லன்' வெளிவந்து துவக்க நாளின் சிக்கலோடு ஓடியோ ஓடாமலோ கடந்து சென்று விட்டது. அதற்குள்ளாக  மலையாளத்தில் பெரும் வெற்றியைப் பெற்ற திரிஷ்யம், தமிழில் 'பாபநாசம்' என்ற பெயரில் வந்து அதுவும் வணிகரீதியான வெற்றியைப் பெற்றது.

இந்தச் சூடு அடங்குவதற்குள்ளாக அவரது அடுத்த திரைப்படம் குறித்தான அறிவிப்பு வெளிவந்தது. அந்த திரைப்படத்தின் பெயர் 'தூங்காவனம்'. இது Sleepless Night எனும் பிரெஞ்சு திரைப்படத்தின் அதிகாரபூர்வமான ரீமேக். விஸ்வரூபம் திரைப்படத்தின் மூலமாக ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களைத் தாண்டி வரவே இப்படி அடுத்தடுத்த திரைப்படங்களை குறுகிய நேரத்தில் கமல் உருவாக்குகிறார் என்று சொல்லப்படுவதில் எத்தனை தூரம் உண்மையிருக்கிறது என்று தெரியவில்லை. எனவே இதில் குறைந்தபட்ச வெற்றியை முதலிலேயே உறுதி செய்து கொள்ள, வெற்றி பெற்ற மற்ற மொழித் திரைப்படங்களை அவர் தேர்ந்தெடுப்பதாகவும் சொல்கிறார்கள்.

ஆனால் என்னதான் ரீமேக்கிற்காக மாங்கு மாங்கென்று உழைத்தாலும் எழுத்திலக்கியத்தில் மொழிபெயர்ப்பாளனுக்கு கிடைக்கும் சம்பிரதாயமான பாராட்டுதான் பொதுவாக இதற்கும் கிடைக்கும். என்னதான் இருந்தாலும் இது மறுஉருவாக்கம்தானே என்கிற எண்ணம் பார்வையாளர்களின் மனதில் உறைந்தபடி இருக்கும். கமல் போல அற்புதமான கலைஞனுக்கு ரீமேக்குகளில் நடிப்பது நிச்சயமான சவாலான விஷயமல்ல என்று தோன்றுகிறது. அவர் இதுவரை நடித்திருக்கும் ரீமேக் படங்களின் எண்ணிக்கையையும் அதற்கு கிடைத்த வரவேற்பையும் வைத்து இதைச் சொல்லிவிடலாம்.

கமல்ஹாசன் இப்படி மறுஉருவாக்கப்படங்களாக அடுத்தடுத்து தேர்ந்தெடுப்பது ஒருவகையில் ஆச்சரியம் என்றால் 'தூங்காவனத்திற்காக' பிரெஞ்சு திரைப்படத்தை அதிகாரபூர்வமான முறையில் ரீமேக்காக உருவாக்குவது இன்னொரு ஆச்சரியம். Plagiarism  தொடர்பான குற்றச்சாட்டை எதிர்கொள்ளாத படைப்பாளிகளே இருக்க மாட்டார்கள். தமிழ் சினிமாவும் அதற்கு விதிவிலக்கல்ல. மற்ற மொழித் திரைப்படங்களில் இருந்து கதையை, காட்சியை உருவுவது ஏதோ சமீப காலத்திய விஷயம் என்பது போல் சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலிருந்தே இது பழக்கமான விஷயம்தான். சமயங்களில் முறையாக அனுமதி பெறப்பட்டும் (இந்தியாவிற்குள்ளாக) சில திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றாலும் அது சொற்பமானது. அதிலும் அயல் தேசத்து திரைப்படங்கள் என்றால் கேள்வி கேட்பாரே கிடையாது. ஆளாளுக்கு உருவி சிதைத்து ஜாலியாக குழம்பு காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். சமீபத்தில் உருவாகும் தமிழ் சினிமாக்களின் கச்சாப் பொருளே கொரிய சினிமாக்கள்தான். இப்படியாக அயல் தேசத்து சினிமாக்களில் உருவும் தமிழ் படைப்பாளியாக கமலையே பொதுவாக பிரதானமாக சுட்டிக் காட்டுவார்கள். இந்த விஷயத்தில் அதிகமாக உருளுவது கமலின் தலையாகத்தான் இருக்கும். இவைகளில் பெரும்பாலும் உண்மையுண்டு. அவர் தமிழ் மசாலாவில் பொறித்தெடுத்துக் கெடுத்த அல்லது சுமாராக ஒப்பேற்றிய பல அயல் சினிமாக்களை ஒரு பட்டியலே இடலாம்.

இந்த நிலையில் அதிகாரபூர்வமான முறையில் ஓர் அயல்தேசத்து சினிமாவை மறுஉருவாக்கம் செய்வது கமலின் திரைப்பயணத்தில் இதுதான் முதன்முறை என்று நினைக்கிறேன்.  உலகமயமாக்கத்தின் விளைவாக அதன் சந்தை இன்னமும் விரிவடைந்து வரும் சூழலில் உலகிலேயே அதிகமான திரைப் பார்வையாளர்களைக் கொண்ட தேசங்களில் ஒன்றாக இந்தியா இருப்பதினால் இதுநாள் வரை அறியப்படாமல் அல்லது கண்டுகொள்ளப்படாமல் இருந்த வணிக மதிப்பை இப்போது தீவிரமாக சர்வதேச சினிமா நிறுவனங்கள் உணரத் துவங்கியிருக்கிறார்கள். எனவே இங்கு உருவாகும் பிரபல திரைப்படங்களில் நேரடியான Plagiarism குற்றச்சாட்டு இருந்தால் உடனே அது சம்பந்தப்பட்ட படநிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டு சட்ட நடவடிக்கையை எடுக்கத் துவங்கியிருக்கிறார்கள். எனவே கமலின் இந்த மாற்றத்திற்கு இந்தச் சூழலும் ஒரு காரணமாக இருக்கலாம். சட்ட விதிகளுக்கு உட்படாத வகையில் அதன் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பிக்கும் விதமாக  நாலைந்து அயல் சினிமாக்களிலிருந்து விஷயங்களை உருவி அவியல் செய்யும் சாமர்த்தியமான சமையல் இயக்குநர்களும் உண்டு.

***

ஹாலிவுட் சினிமாவும் 2015-ல் மறுஉருவாக்கம் செய்யப் போகும் பிரெஞ்சு திரைப்படமான 'Sleepless Night' (Nuit Blanche) திரைப்படத்தை  சில மாதங்களுக்கு முன் பார்த்திருக்கிறேன். இதன் சுவாரசியத்திற்கு அடிப்படையே இதன் அபாரமான திரைக்கதைதான். மற்றபடி ஒரே இரவில் நிகழும் இதன் மையக்களன் வழக்கமானதொன்றுதான். போதைப் பொருள் கும்பலால் கடத்தப்பட்டிருக்கும் தன் மகனை மீட்பதற்காக ஒரு காவல்துறை அதிகாரி ஆவேசமாக செய்யும் சாகசங்கள் கொண்ட வழக்கமான கதைதான். ஆனால் படுவேகமான, அசத்தலான திரைக்கதையின் மூலம் சுவாரசியப்படுத்தியிருக்கிறார்கள்.

வேகமான திரைக்கதை என்றாலே பொதுவாக பலரும்  சேஸிங் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் என்பதாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஸிட்பீல்ட் உபதேசித்திருக்கும் Three-act structure-ஐ  ஏதோ கணிதசூத்திரம் போல அப்படியே பொருத்தினால் அது உணர்வுபூர்வமான படைப்பாக அல்லாமல் இயந்திரத்தனமான சக்கையாகத்தான் வெளிவரும். வேகமான திரைக்கதை என்பது  அது மட்டுமேயல்ல. பார்வையாளனை கதாபாத்திரங்களோடும் சம்பவங்களோடும் அகரீதியாக ஒன்றச் செய்து அவனுடைய ஆவலையும் பதற்றத்தையும் தூண்டியபடியே இருப்பது. காதல் சார்ந்த கதையில் கூட இதை சாதிக்க முடியும். த்ரிஷ்யம் திரைப்படத்தில் கூட என்ன ஆக்ஷன் காட்சிகள் இருந்தது? ஆனால் பார்வையாளன் நகத்தைக் கடித்தபடி அதைப் பார்க்கவில்லையா?

எல்லாக் கதைகளும் ஏற்கெனவே சலிக்க சலிக்கச் சொல்லப்பட்டு விட்ட இன்றைய தேதியில் ஒரு திரைப்படத்திற்கு மிக மிக அடிப்படையானது திரைக்கதைதான். மேற்குறிப்பிட்ட பிரெஞ்சு திரைப்படத்தின் அபாரமான உருவாக்கத்திற்கு காரணம் மூன்று விஷயங்கள்தான். ஒன்று, திரைக்கதை. இரண்டு, திரைக்கதை. மூன்றும் திரைக்கதையேதான். அப்படியெனில் கதை என்று இருக்க வேண்டாமா? நிச்சயமாக. இல்லையெனில் அது சவத்திற்கு செய்யப்பட்ட ஒப்பனைகள் போல எத்தனை சாமர்த்தியமான திரைக்கதையும் நுட்பங்களையும் கொண்டிருந்தாலும்  ஜீவனேயில்லாமல் போய் விடும்.

கமல்ஹாசன் இந்த திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கின் மறுஉருவாக்கத்திற்காக தேர்வு செய்தது சற்று ஆச்சரியத்தை தருகிறது. ஏனெனில் இது 'இந்தியத்தன்மை' அல்லாத ஹாலிவுட் ஆக்ஷன் வகையிலான திரைப்படம். புதியஅலை திரைப்படங்கள் தமிழில் தற்போது வெற்றி பெற்றுவரும் சூழலில் இந்த ஆக்ஷன் தன்மையை பெரிதும் மாற்றாமல் ரீமேக் செய்வாரா என்கிற ஐயம் 'தூங்காவனத்தை' பார்ப்பதற்கு முன்னால்  இருந்தது. ஏனெனில் கமல் இதற்கு முன்பாக நகலெடுத்த  அல்லது மறுஉருவாக்கம் செய்த திரைப்படங்களை தமிழ்ப் பார்வையாளர்களுக்கு நெருக்கம் ஏற்படுத்த அதன் மூலம் இங்கு திறமையாக சந்தைப்படுத்த செய்த மாற்றங்கள், இணைத்த விஷயங்கள் பெரும்பாலும் மூலப்படைப்பை சிதைப்பவையாக, கொச்சைப்படுத்துபவையாக அமைந்திருந்தன.

உலக சினிமாக்களை காணும், அவற்றை உள்ளூர் படைப்புகளோடு ஒப்பிட்டு சலிப்புறும் சமகால பார்வையாளனின் நவீன மனதை கமல்ஹாசன் ஒருவேளை சரியாக புரிந்து கொண்ட காரணத்தினால் பிரெஞ்சு திரைப்படத்தை ஏறத்தாழ காட்சிக்கு காட்சி அப்படியே பின்பற்றியிருந்தார். தமிழ் சினிமாவின் வழக்கமான இடைச்செருகல்களான பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள், மிகையுணர்ச்சி அழுகைக் காட்சிகள் போன்றவை இதில் இல்லவே இல்லை. சில பிசிறுகளும் இல்லாமல் இல்லை.

இதில் சித்தரிக்கப்படும்படி காவல்துறையிடம் சாட்சி சொல்வதற்காக இத்தனை ஆர்வம் காட்டும் நடுத்தரவர்க்க மனிதர், அதிலும் படத்தில் காட்டப்பபடும் சமூகத்தைச் சார்ந்தவர் எவராவது யதார்த்தத்தில் இருக்கிறார்களா என தெரியவில்லை. இன்னொரு காட்சியில் உத்தம வில்லன் வெளியாவதில் துவக்க நாளில் ஏற்பட்ட சிக்கல் வேறு பெயரில் தொலைக்காட்சி செய்தியாக காட்டப்படுகிறது. திரையின் வெளியில் நிகழ்ந்த நடிகரின் தனிப்பட்ட விஷயம் அந்நியமாக இந்த திரைக்கதைக்குள் தேவையின்றி திணிக்கப்படுவது நெருடலை ஏற்படுத்துகிறது. நடிகர்களின் உடைகளும் உடல்மொழியும் ஏறத்தாழ பிரெஞ்சு திரைப்படத்தை நினைவுப்படுத்துவது போல அப்படியே நகலெடுக்கப்பட்டதால் ஒரு டப்பிங் படத்தை பார்க்கும் உணர்வு ஏற்பட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம். முறையான அனுமதியில்லாமல் தலைமறைவு அடையாளத்தில் வாழும் புலம்பெயர் நபர்களின் வாழ்வியல் சிக்கலை வெளிப்படுத்தும் ஒரு பாத்திரம் மூலப்படத்திலிருந்து இங்கு வேறுவிதமாக சிதைக்கப்பட்டிருந்தது. மிக முக்கியமாக, பிரெஞ்சு திரைப்படத்தின் காவல்துறை அதிகாரி தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சட்டவிரோதமாக போதைப் பொருளை  கடத்தி விற்கிறவனா அல்லது உண்மையிலேயே under cover ஆசாமியா என்பது சற்று பூடகமாக குழப்பம் ஏற்படுத்தும் விதத்தில்தான் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் தமிழில் இது சுத்திகரிக்கப்பட்டு 'நாயகன் என்றால் நல்லவன்தான்' என்கிற வழக்கமான பாணியாக மாற்றப்பட்டிருக்கிறது.

இப்படி சில பிசிறுகள் இருந்தாலும் படம் துவங்கிய நேரத்திலிருந்து எந்தவித இடைச்செருகலும் அல்லாமல் படத்தின் மையத்திற்கு தொடர்பான விஷயங்களுடன் மட்டுமே 'தூங்காவனம்' பயணித்தது ஆறுதலாக இருந்தது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிகழும் இடம் இரவுநேர கேளிக்கை மையம் என்பதால் மல்லிகா ஷெராவத்தை அழைத்து வந்து ஒரு ஐட்டம் பாடலை நைசாக செருகி விடுவது போன்ற விஷயங்களை  கமல் செய்துவிடுவாரோ என்று நினைத்து பயந்து  கொண்டிருந்தேன். நல்லவேளையாக அப்படி எந்தத விபத்தும் நிகழவில்லை

இவ்வகையான ஹாலிவுட் பாணி திரைக்கதைகள் தமிழிற்கு பழகும் போது அவற்றின் தேவையற்ற இடைச்செருகல்கள் மெல்ல மெல்ல உதிர்வதின் மூலம் ஆரோக்கியமான, சுவாரசியமான வெகுசன திரைப்படங்கள் தமிழில் உருவாகக்கூடிய சாத்தியத்தை ஒரு முன்னோடி முயற்சியாக நின்று உறுதிப்படுத்தியிருக்கிறது 'தூங்காவனம்'



 (உயிர்மை இதழில் பிரசுரமானது)

suresh kannan

Thursday, November 07, 2019

தேவர் காலடி மண்ணும் எஜமான் காலடி மண்ணும்



கமல்ஹாசனின் அடுத்த திரைப்படத்தின் தலைப்பு 'சபாஷ் நாயுடு'  என்று அறிவிக்கப்பட்டதுதான் தாமதம், அது குறித்த சாதிய நோக்கிலான விமர்சனங்களும் கண்டனங்களும்  நுண்ணரசியல் தேடும் பதிவுகளும் குவியத் துவங்கி  விட்டன. படத்தின் தலைப்பில் சாதியின் பெயரை கமல்ஹாசனால் தவிர்க்க முடியாதா என்று கேள்விகளும் உள்நோக்கத்துடன்தான் அவர் இது போன்ற தலைப்புகளை தொடர்ச்சியாக வைக்கிறார் என்கிற கோபங்களும்  கிளம்புகின்றன.

இத்திரைப்படத்தின் உள்ளடக்கம் எதைப் பற்றியது என்பதையறியாமல் வெறும் தலைப்பை வைத்தே விமர்சனம் செய்வது எம்மாதிரியான நெறி என்பது தெரியவில்லை. முன்னர் தென்மாவட்டங்களில் நிகழ்ந்த  சாதியக் கலவரங்களுக்கும் வன்முறைகளுக்கும் கமல்ஹாசனின் 'தேவர் மகன்' திரைப்படமும் அதன் பாடலும் காரணமாக இருந்தது; துணை போனது என்கிற கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக 'தேவர் காலடி மண்ணே' என்று துவங்கும் திரைப்பாடல் தேவர் சமூகத்தினருடைய சாதியப் பெருமிதங்களின் ஒரு நிரந்தர அடையாளமாகி தலித் சமூகத்தினரின் மீது ஒரு வெறுப்பேற்றும் ஆயுதமாகவே எறியப்பட்டு கலவரங்களுக்கு காரணமாகின என்கிறார்கள்.

இந்த விஷயங்கள் குறித்து சற்று நிதானமாகவும் சமநிலையோடும் உரையாட முயல்வோம். இந்தக் கட்டுரை எந்தவொரு தனிநபருக்கும் அமைப்பிற்கும் சமூகத்திற்கும் ஆதரவான அல்லது எதிரான நோக்கில் எழுதப்பட்டதில்லை என்பதை மாத்திரம் மனதில் இருத்திக் கொண்டு வாசிப்பை தொடர வேண்டுகிறேன்.

***

தமிழ் சினிமா உருவாகத் துவங்கியதிலிருந்தே  சாதி, மதம்  தொடர்பான சர்ச்சைகளும் கூடவே இணைக்கோடாக பயணிக்கத் துவங்கின. தமிழ் படவுலகின் தந்தை என கருதப்படும் கே.சுப்பிரமணியம் 'பாலயோகினி' என்கிற திரைப்படத்தை 1937-ல் உருவாக்கினார். சாதிய வெறியை சாடும் சமூக சீர்திருத்த கதை இது. படத்தில் விதவைப் பெண் பாத்திரத்திற்கு பிராமண விதவைப் பெண் ஒருவரையே நடிக்க வைத்தார். வைதீக பிராமணர்களிடமிருந்து இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.1952-ல் வெளிவந்த பராசக்தி திரைப்படத்தில் கருணாநிதி எழுதிய  'அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?' என்பது போன்ற நாத்திக பிரச்சார கருத்துக்கள் ஆத்திகர்களால் கடுமையாக ஆட்சேபிக்கப்பட்டன. 1954-ல் வெளியான சொர்க்கவாசல் திரைப்படத்திற்காக மூட நம்பிக்கையின் மீது அமைந்த வைதீகச் சடங்குகளை விமர்சித்து அண்ணாதுரை எழுதிய வசனங்கள் கடுமையான சர்ச்சைக்குள்ளாகி சென்சாரில் பிறகு வெட்டப்பட்டன.

திரைப்படங்களில் தங்கள் சமூகத்தினர் தவறாக சித்தரிக்கப்படுகிறார்கள் என்று பிராமணர்கள் துவங்கிய இம்மாதிரியான எதிர்ப்புகள் பிறகு மெல்ல மற்ற சமூகத்தினர் இடையேயும் பரவியது. 'கரை கடந்த குறத்தி' என்கிற திரைப்படத்தின் தலைப்பு  காரணமாகவே அச்சமூகத்தினரிடமிருந்து எதிர்ப்பு எழுந்தமையால் 'கரை கடந்த ஒருத்தி'யாக மாற்றப்பட்டது. பின்பு இடைநிலைச் சாதிகளின் பெருமைகளை விதந்தோதும் திரைப்படங்கள் வரிசையாக வந்து குவியத் துவங்கின. அது குறித்த சர்ச்சைகளும் எழுந்தன. இந்தக் குவியல்களில் எவை சாதியப் பெருமிதங்களை நிலைநாட்டுகிறது, எவை அதன் எதிர்திசையில் இயங்குகிறது என்று சமநிலையோடு களைந்து பார்க்க வேண்டிய கடமை நமக்கு உண்டு.

***

எந்தவொரு படைப்பையும் கீழிறக்கி அதை சர்ச்சைக்குள்ளாக்குவதற்கு மிக எளிமையான வழி ஒன்றுண்டு. அந்த படைப்பின் ஒரு பகுதியை தங்களுக்கு சாதகமாக ஏற்றவாறு  ஒடித்து துண்டித்து அதை உள்நோக்கமுடைய பரப்புரை வாசகங்களுடன் மீண்டும் மீண்டும் பதிவு செய்து கொண்டேயிருப்பது. இது போன்று  'உருவாக்கப்படும்' சர்ச்சைகள் எளிதில் கவனத்திற்கு உள்ளாகும் வாய்ப்பிருப்பதால் அவை உடனே பரவி அந்த துண்டிக்கப்பட்ட கருத்து மிக எளிதாகவே தொடர்புடைய படைப்பிற்கு எதிரானதொன்றாக  நிலைபெற்று விடும். இது மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு, மேற்கோள் காட்டப்பட்டு வரலாற்றின் ஒரு பகுதியாகவே மாறி விடும். பிறகு சம்பந்தப்பட்ட படைப்பாளியோ அல்லது அவரது பிற்கால ஆதரவாளரோ நினைத்தால் கூட இந்த எதிர்பரப்புரையை உடைத்து அத்தரப்பு நியாயத்தை நிலைநிறுத்துவது கடினமாகி விடும்.

இவ்வகையான எதிர்பரப்புரைகள் உள்நோக்கமல்லாமல் கவனக்குறைவாக கூட தவறாக நிலைநிறுத்தப்படும் வழக்கமுண்டு. உதாரணமாக பாரதியின் 'மெல்ல தமிழினி சாகும்' என்ற ஒற்றை வரி மாத்திரம் தவறாக பலமுறை மேற்கோள் காட்டப்பட்டு பாரதியே தமிழ் மொழியின் அழிவை யூகமாக சொல்லி விட்டார் என்று சிலர் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக அவரைத் திட்டுபவர்களும் உண்டு. அந்தக் கவிதையின் தொடர்ச்சியாக 'என்றந்தப் பேதை யுரைத்தான்' என்பதை அவர்கள் அறிவதில்லை. மீண்டும் மீண்டும் இது தவறு என்று பாரதி அன்பர்களும் தமிழறிஞர்களும் விளக்கிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. தமிழ் மொழியின் முன்னோடியான பாரதி அப்படி சொல்லியிருப்பாரா என்பதை சரிபார்த்துக் கொள்ளக் கூட பலருக்குத் தோன்றுவதில்லை. எதிர்பரப்புரையில் உள்ள வசீகரத்தின் பலமே இதுதான்.

ஓரு திரைப்படத்தின் தலைப்பு அல்லது அதன் சில வசனங்களைக் கொண்டே அது சாதியத்திற்கு ஆதரவான திரைப்படம், வன்முறையைத் தூண்டுகிற படம் என்கிற அவசர முடிவிற்கு வருவது முறையற்றது. தீய நோக்குடன் தங்களுக்குச் சாதகமாக சில சாதிய வெறியாளர்கள் செய்யும் அல்லது புரியாதவர்கள் நிகழ்த்தும் இந்த எதிர்பரப்புரைகளுக்கு பாமரர்கள் வேண்டுமானாலும் உணர்வுரீதியாக ஒருவேளை மயங்க நேரலாம். ஆனால் சமநிலையுணர்வுடன் அறிவுசார்ந்து சிந்திப்பவர்களும் பலியாவதுதான் வேதனையானது. ஒரு திரைப்படத்தின் மையம் எதை  நோக்கி பயணிக்கிறது; எந்தக் கருத்தை அழுத்தமாகச் சொல்கிறது; அதன் நோக்கம் என்ன என்பதைத்தான் மிக முக்கியமாக கவனிக்க வேண்டும். அது பயணிப்பதற்கு இடையிலான விஷயங்களை துண்டித்து மேற்கோள் காட்டி எதிர்ப்பது அறிவுடைமை ஆகாது.

தென்மாவட்டங்களில் நிகழ்ந்த சாதியக் கலவரங்களுக்கு 'தேவர் மகன்' காரணமாக அமைந்தது என்பது பல சினிமாக்கட்டுரைகளில் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது. இதன் காரணமாக அத்திரைப்படம் சாதியத்திற்கு ஆதரவானதொரு பலமான அடையாளமாக நிலைநிறுத்தப்பட்டு கடுமையாக எதிர்க்கப்படுகிறது. இதை சற்று பார்ப்போம்.

தேவர் திரைப்படத்தின் திரைக்கதை என்ன?

சாதியப் பாகுபாடுகளும் பகைமைகளும் சச்சரவுகளும் நிறைந்திருக்கும் ஒரு வழக்கமான தமிழக கிராமம். அந்தச் சூழலில் இருந்து இடையில் விலகியிருந்த ஒரு நவீன மனம் கொண்ட இளைஞன் அங்கு திரும்பி வருகிறான். முற்போக்கு மனோபாவம் கொண்ட அவனுக்கு அங்குள்ள சாதிய மோதல்களும் அதன் தொடர்பாக நிலவும் வன்முறை பதட்டங்களும் வெறுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்துகின்றன.பழமைவாத மனநிலை கொண்ட தந்தையிடம் இதையெல்லாம் 'காட்டுமிராண்டித்தனம்' என விவாதிக்கிறான். அங்கிருந்து மறுபடி விலகி விட நினைக்கிறான். ஆனால் அங்கு நடைபெறும் சம்பவங்களும் சூழலும் அந்த வன்முறைக்குள் அவனையும் உள்ளிழுத்துக் கொள்கின்றன. தொடர்ந்து அதனுடன் போராடுகிறான். இதற்காக தன் கனவுகளையும் காதலையும் கூட அவன் இழக்க நேர்கிறது. தேவர் சமூகத்தின் இரு சகோதரர்களுக்குள் நிலவும் பகைமையின் இடையில் நசுக்கப்படும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் துயரத்தையும் இழப்பையும் அவனால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. இறுதியில் தன்னுடைய சமூகத்தைச் சார்ந்த ஒரு பிரதானமான சாதிய வெறியாளனை தற்செயலாக கொன்று விட்டு சிறைக்குச் செல்கிறான். 'சண்டையெல்லாம் போதும்டா.. புள்ளகுட்டிங்கள படிக்க வைங்கடா" என்று கடந்த அனுபவங்களின் வலி காரணமாக கதறுகிறான். கல்வி அவர்களை முன்னேற்றும் என்கிற நம்பிக்கையால் அவன் செய்யும் உபதேசம் அது.

ஆக படத்தின் பிரதான நாயகன், படம் முழுவதுமே சாதியத்திற்கு எதிராகவே தொடர்ந்து உரையாடுகிறான். படத்தின் இறுதிச் செய்தியும் சாதிய வன்முறைக்கு எதிரானதுதான். ஆனால் இத்திரைப்படம் சாதியத்திற்கு ஆதரவானதாகவும் வன்முறையின் ஊற்றுக் கண்ணாகவும் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. மஞ்சள் கண்ணாடி அணிந்திருப்பவனுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாக தெரிவது போல சாதியப் பதட்டம் கொண்டவர்களால் இத்திரைப்படம் தவறாக அணுகப்படுகிறது என்பது வெளிப்படை.

பின்பு ஏன் இந்தப் படம் சாதியத்திற்கு ஆதரவானதாக புரிந்து கொள்ளப்பட்டது. பார்ப்போம்.

***

எந்தவொரு கலைப்படைப்பும் மேன்மையுறுவது அதன் நுண்மைகளினாலும் அதன் நேர்மறையான மையத்தினாலும்.  ஒரு கதாபாத்திரமோ அல்லது சூழலோ அதன் சரியான நுண்மைகளுடன் சித்தரிக்கப்பட்டால்தான் நம்பகத்தன்மையைப் பெறும். கலை நோக்கிலும் மேம்பட்டதான நிலையை நோக்கி உயரும். மொண்ணையாக உருவாக்கப்படும் களிமண் சித்திரங்களால் அல்ல.

முன்பெல்லாம் சமூகத் திரைப்படங்களில் நாயகனின் சாதியைக் கண்டு கொள்வது சிரமம். வெளிப்படையாக சித்தரிக்கப்பட்டிருக்காது. உணர்ச்சிகரமான கதையும் சூழலும் வசனங்களுமே பார்வையாளர்களுக்கு போதுமானதாக இருந்தன. ஆனால் திரைப்படங்களின் உருவாக்க முறை மெல்ல முன்னேறும் போது நாயகன் பாத்திரம் முதற்கொண்டு ஒவ்வொன்றிற்கும் அவைகளுக்கான பின்னணிகளுக்கு நம்பகத்தன்மையுடன் கூடிய நுண்தகவல்களைத் தர வேண்டியிருந்தது. அப்போதுதான் அவை யதார்த்தமான படைப்புகளாாக உருமாற முடியும் என்கிற கவனம் இயக்குநர்களுக்கு ஏற்பட்டது.

தேவர்மகன் திரைப்படத்தில் நாயகனின் தந்தையாக வரும் பெரிய தேவர், அடிப்படையில் நல்லியல்புகள் கொண்டவராக இருந்தாலும் பழமைவாத மனம் உள்ளவராக, சாதிய பெருமிதம் கொண்டவராக இருக்கிறார். எனவே அது தொடர்பான பெருமிதப் புகழுரைகள் அவரை மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது. இந்தச் சூழலை பார்வையாளர்களுக்கு கச்சிதமாக உணர்த்த என்ன செய்ய வேண்டியிருக்கிறது? அவர் சமூகத்தின் புகழ்ச்சிப் பாடலை சித்தரிக்க வேண்டியிருக்கிறது. பொதுவாகவே கிராமத்திலுள்ள கூத்துக்கலைஞர்கள் அந்தந்த ஊர் பெரியவர்களின், சமூகங்களின் அருமை பெருமைகளை மிகையாக புகழ்ந்து பணம் பெறும் வழக்கம் இன்றும் கூட உள்ளது. (பருத்தி வீரனில் வரும் ஒரு காட்சியை நினைவு கூறலாம்). ஆனால் சாதியத்தின் பெயரால் நிகழும் வன்முறை, பகைமை குறித்த புழுக்கமும் பெரிய தேவருக்குள் உள்ளது. எனவேதான் தன் மகன் இதை காட்டுமிராண்டித்தனம் என்று ஆத்திரப்படும்  போது 'நாகரிக உலகத்தை நோக்கி அவன் மெல்லத்தான் வருவான்' என்கிறார்.

ஒரு திரைப்படத்தின் நம்பகத்தன்மையை உருவாக்குவதற்கான நோக்கில் சித்தரிக்கப்பட்ட ஒரு திரையிசைப்பாடலை தொடர்புள்ள அந்த சாதியச்சமூகம் தன்னுடைய பெருமைகளை விதந்தோதுவதற்காக எடுத்து பயன்படுத்திக் கொண்டால் அது எவருடைய குற்றம்? சமநிலையுடன் அத்திரைப்படத்தை கவனிக்கும் எந்தவொரு நடுநிலையாளரும் அதிலுள்ள வன்முறையின் குரூரத்தை உணர்ந்திருப்பார். இறுதியில் நாயகன் கதறும் கதறலால் துளியாவது அசைக்கப்பட்டிருப்பார். ஒருவேளை அவர் அழுத்தமான சாதி நம்பிக்கையாளராக இருந்திருந்தாலும் கூட அது குறித்த பரிசீலனை அவருக்குள் ஒரு துளியாவது ஏற்பட்டிருக்கும்.

ஆனால் இவற்றையெல்லாம் வசதியாக கைவிட்டு விட்டு அதில் சித்தரிக்கப்பட்டிருக்கும் வன்முறைகளை பெருமையாகவும் அதன் பாடலை தங்களுக்குச் சாதகமானதாகவும் மாற்றிக் கொண்டால் அந்த மனம் சாதியப் பெருமிதத்திற்குள் எத்தனை ஆழமாக மூழ்கியிருக்கும்? தவறு படத்தின் மீதா அல்லது அந்த சாதியக் கொடுர மனதின் மீதா?

சமீபத்தில் விக்ரம் சுகுமாரன் இயக்கி வெளியான 'மதயானைக்கூட்டம்' என்கிற திரைப்படம் சாதியத்திற்கு ஆதரவானதாக பெரும்பாலான விமர்சகர்களால் கருதப்பட்டது. உண்மையில் அத்திரைப்படம் சாதியத்திற்கு எதிரானது. அந்த வன்முறையில் ஈடுபடுபவர்களை முட்டாள்களாக, கொடூரர்களாக சித்தரித்த திரைப்படம் அது. அறிவுஜீவிகளாலேயே ஒரு  திரைப்படத்தின் மையத்தை சரியாக கணிக்க முடியவில்லையெனும் போது பாமரர்களை நினைத்தால் பரிதாபமாகவே உள்ளது. இத்திரைப்படத்தைப் பற்றிய ஒரு விமர்சனக் கட்டுரையை 'மதயானைக் கூட்டம் - சாதியக் கொடூரத்தின் ஆவணம்' என்கிற தலைப்பில் பிப்ரவரி 2014 உயிர்மை இதழில் எழுதினேன். அதுவரை அத்திரைப்படத்தை சாதியத்திற்கு ஆதரவானதாக கருதிய சிலர், இந்தக் கட்டுரையை வாசித்தவுடன் தங்களது கருத்தை மாற்றிக் கொண்டதாக எனக்கு தெரிவித்திருந்தார்கள். அத்திரைப்படத்தின் தலைப்பே அச்சமூகத்தில் உள்ள சாதிய வெறியாளர்களை கடுமையாக விமர்சிக்கிறது என்கிற அடிப்படையை, எளிமையான உண்மையைக் கூட பலரால் உணரமுடியவில்லை.

தேவர் சமூகத்தின் ஒரு பிரிவைச்  சார்ந்த சாதியமைப்பு ஒன்று தங்களின் பேனர்களில் 'மதயானைக்கூட்டமே' என்று தங்களை சுயபெருமித்துடன் வர்ணித்துக் கொண்டது என்ற செய்தியை நண்பரொருவர் கூறினார். தேவர் மகனின் பாடலை தங்களுக்கு சாதகமாக உபயோகித்துக் கொண்ட அதே சிறுமைத்தனம்தான் இதுவும். மதயானைக்கூட்டம் என்ற சொல்லின் பின்னால் உள்ள விலங்குகளின் மூர்க்கத்தனமான பொருளையுணரால் அதையும் பெருமையாக நினைக்கும் கூட்டத்தை என்னதான் சொல்வது? இந்த சிறுபிள்ளைத்தனங்களுக்கு கலைஞர்கள் என்ன முடியும்?

திரைப்படங்கள் என்று மட்டுமல்ல. சாதியப் பெருமிதங்களை பறைசாற்றும் சமூகங்கள் எந்தவொரு பழைய அடையாளங்களையும் அதன் உண்மையான பொருள் உணராமல் தங்களின் பெருமைகளாகவே நினைத்துக் கொள்கிறார்கள். சிங்கம் என்கிற விலங்கு ஒரு சமூகத்தின் பெருமை மிக அடையாளமாக, புளகாங்கிதமாக கருதப்படுகிறது. சிங்கத்தின் வாழ்வு முறையைக் காணும் போது உண்மையில் அரிமா எனப்படும் ஆண் சிங்கம் என்பது சோம்பேறித்தனமானது. தன் உணவிற்காக பெண் சிங்கத்தை சார்ந்திருக்கக்கூடியது. பெண் சிங்கங்கள் கூடி வேட்டையாடும் உணவை  வெட்கமில்லாமல் சென்று முதன்மையாக தின்னக்கூடியது. ஒரு சிங்கக்கூட்டத்தில் பெண் சிங்கங்களுக்கே அதிக முக்கியத்துவம் உண்டு. பெண் சிங்கத்தை விட ஆண் சிங்கத்திற்கு ஆயுள் குறைவானது. இந்த உண்மைகளை அறியும் எந்தவொரு நபராவது தம்மை இந்த விலங்குடன் ஒப்பிட்டு பெருமையடைவாரா?

ஆக சாதியப் பெருமிதங்களைக் கொண்ட நபரால் எந்தவொரு அடையாளத்தின்  உண்மையான பொருளை உணராமல் மேம்போக்காக தங்களுக்கு சாதகமாக ஸ்வீகரித்துக் கொள்ளும் அற்பத்தனங்களுக்கு அதன் எதிர்திசையில் இயங்கும் ஆக்கப்பூர்வமான படைப்புகளை உருவாக்கும் கலைஞர்கள் பலியாக்கப்படலாமா என்பதை யோசிக்கலாம்.

***

கல்வியறிவின் சதவீதம் குறைவாக உள்ள , பழமைவாத மனங்கள் இன்னமும் மாறாத ஒரு சமூகத்தில் உருவாகும் படைப்புகள் அது குறித்த ஜாக்கிரத்தனத்துடன், அந்தச் சூழலை உசுப்பேற்றாத அளவில் உருவாக்கப்பட வேண்டும் அல்லவா? இது கலைஞர்களின் கடமையும் பொறுப்பும் அல்லவா என்றொரு கேள்வி எழலாம். இது ஒருவகையில்தான் சரியானது. கலைஞர்களின் படைப்புச் சுதந்திரத்தில் தலையிடாத சமூகம்தான் நாகரிகத்தை நோக்கி முன்னேறுகிற சமுதாயமாக கருதப்படும்.  துணைத் தகவல்களால் திசை திரும்பாது ஒரு படைப்பின் மையத்தை சரியாகப் புரிந்து கொள்கிற அளவிற்கான பயிற்சியை நாம் பெற வேண்டும் என்பதே இதிலுள்ள செய்தி. 'ஒரு திரைப்படத்தை எவ்வாறு அணுகுவது என்கிற பயிற்சியை கல்வித்திட்டத்தில் சேர்க்க வேண்டும்' என்று இயக்குநர் பாலுமகேந்திரா பல காலமாக சொல்லிக் கொண்டிருந்ததை இந்த நோக்கில் புரிந்து கொள்ளலாம்.

அப்படியொரு முன்னேற்றமான சூழல் சமூகத்தில் மலரும் வரை பாமரர்களுக்கு இதைச் சரியாக சுட்டிக் காட்ட வேண்டிய பணி விமர்சகர்களுக்கு உண்டு. சாதிய வன்முறைச் சமூகத்தை நோக்கி உபதேசிக்க வேண்டிய கடமையை விட்டு கலைஞர்களை நோக்கி விமர்சிக்கும் விஷயமானது சமூகத்தை பின்னோக்கி இழுக்கும் தன்மையையே ஏற்படுத்தும்.

தேவர் மகனுக்குப் பிறகு தலைப்பிடப்பட்ட கமல்ஹாசனின் 'சண்டியர்' என்கிற திரைப்படமும் துவக்க நிலையிலேயே பலத்த ஆட்சேபத்திற்கு உள்ளானது. தேவர்மகன் திரைப்படத்தின் சில கூறுகளை சாதிய வெறியர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட காரணத்தினால் ஏற்பட்ட வன்முறைகளையும் அந்தக் கலவரங்களில் பாதிக்கப்பட்ட தலித் சமூகத்தின் துயரங்களை கருத்தில் கொண்டாவது, அதன் நடைமுறை பாதிப்புகளை உணர்ந்தாவது கமல்ஹாசன் இந்த எதிர்ப்பை புரிந்து கொண்டிருக்கலாம். ஒரு தற்காலிக சமரசமாக தலைப்பை உடனடியாக மாற்றியிருக்கலாம். அதே சமயத்தில் இது படைப்புச் சுதந்திரத்தில் தலையிடும் விஷயம் என்கிற அவர் தரப்பும் அதற்கான நியாயம் கொண்டதுதான். சிலபல போராட்டங்களுக்குப் பின் தலைப்பை அவர் கசப்புடன் மாற்றிக் கொண்டது தவிர்த்திருக்கப்பட வேண்டியது. ஆனால் 'விருமாண்டி' என்று மாற்றப்பட்ட தலைப்பில் வந்த இந்த திரைப்படமும் இரு சாதியச் சமூகங்கள் முட்டாள்தனமாக மோதிக் கொண்டு மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அவலத்தை சித்தரிப்பதுதான். ஆனால் இத்திரைப்படமும் அதன் உள்ளடக்கத்தை தவறாகவே புரிந்து கொண்டு பரப்புரை செய்யப்பட்டது.

தம்முடைய திரைப்படத்திற்கு உடனடி கவனம்  கிடைக்க வேண்டும் என்கிற காரணத்திற்காகவே இது போன்ற சர்ச்சையான விஷயங்களை கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கிறார் என்கிற வாதம் எந்தளவிற்கு உண்மையானது? சண்டியர் சர்ச்சைக்குப் பிறகு வேறொரு நடிகரால் 'வர்றார் சண்டியர்' என்கிற திரைப்படம் வெளியான போது அது சார்ந்த பலத்த எதிர்ப்பும் உருவாகவேயில்லை. புகழ் பெற்ற நடிகர் என்பதாலேயே அவர் தொடர்பான விஷயங்களை எதிர்த்து தாங்கள் புகழடைய நினைக்கிறார்கள் என்று இந்த எதிர்ப்பாளர்களின் மீதும் இது போன்ற குற்றச்சாட்டை வைக்க முடியும்தானே?

***

உண்மையில் 'தேவர் காலடி மண்ணே' திரைப்பாடலை விட அதிக ஆபத்தைக் கொண்டது 'எஜமான் காலடி மண்ணே' வகைப் பாடல்கள். ஏனெனில் தேவர்மகன் போன்ற திரைப்படங்களின் இடையில் சித்தரிக்கப்படும் காட்சிகள் சாதியத்திற்கு ஆதரவானதாக தவறாகப் புரிந்து கொள்ளப்படும் வாய்ப்பு இருந்தாலும் அதன் ஒட்டுமொத்த மையம் சாதியத்திற்கு எதிரானதாக உள்ளது என்பதை நிதானமாக யோசித்தால் உணர முடியும். ஆனால் 'எஜமான் காலடி மண்ணே' வகையறா திரைப்படங்களில் இது போன்ற ஆபத்தான இடைத்தகவல்கள் அல்லாமல் நாயகன் நல்லவன், அதன் எதிர்நாயகன் கெட்டவன் என்கிற கறுப்பு -வெள்ளை சித்திரங்களாக உருவானாலும் ஒட்டுமொத்த நோக்கில் அவை ஆண்டை -அடிமை கலாசாரத்தை மறைமுகமாக மிக வலுவாக முன்வைக்கின்றன.

இதில் வரும் நாயகர்கள் அடிப்படையில் நல்லியல்புகளைக் கொண்டிருந்தாலும் அந்தப் பிரதேசத்தின் எல்லாப் போக்கையும் தீர்மானிப்பவர்களாக இருப்பார்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தினரைச் சார்ந்தவர்கள் இவரை அண்டிப் பிழைப்பவர்களாகவும் இந்த நாயகர்கள் அவர்களை கடவுள் நிலையிலிருந்து கருணை காட்டுவதான காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருக்கும். குறுநில மன்னர்களாக, நிலச்சுவான்தாரர்களாக இருந்த காலக்கட்டத்தின் நிலப்பிரபுத்துவ தன்மையின் நீட்சிகளாக இவர்கள் பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும். அனைத்துச் சமூகங்களும் அதன் மையத்தில், அதிகாரத்தில் பங்கேற்கும் ஜனநாயக வெளியை உறுதிப்படுத்த வேண்டிய காலக்கட்டத்தில் இது போன்ற சித்தரிப்புகள் பிற்போக்குத்தன்மைகளை வலியுறுத்துவதான அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும். ஒட்டுமொத்த தன்மையில் தேவர்மகன் வகை திரைப்படங்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுவதைப் போல இவ்வகைத் திரைப்படங்களின் ஆபத்துகள் சரியாக கூட புரிந்து கொள்ளப்படுவதில்லை. முன்னதை விட இவ்வகையான திரைப்படங்கள் சமூகத்தில் விதைக்கும் ஆபத்தே அதிகம்.

ஒருகாலக்கட்டத்திற்குப் பிறகு தமிழ் திரையில் இடைநிலைச்சாதிகளின் சாதியப் பெருமிதங்களை அழுத்தமாக முன்வைக்கும் திரைப்படங்கள் உருவாகத் துவங்கின. ஆர்.வி.உதயகுமார், கே.எஸ்.ரவிக்குமார், ஹரி போன்றவர்கள் இவ்வகையான திரைப்படங்களை தொடர்ச்சியாக உருவாக்கத் துவங்கினார்கள். இடைநிலைச்சாதி சமூகங்களை பெருமையாக சித்தரிப்பது என்பது ஒரு போக்காகவே மாறி அதுவே ஒரு வணிகச் சரக்காக மாறிற்று. தொடர்ச்சியான முற்போக்கு பிரச்சாரங்களால் சமூகத்தில் அமுங்கியிருந்த சாதியுணர்வு மீண்டும் வீறு கொண்டு புது வேகத்துடன் சாதிய அமைப்புகளாகவும் அரசியலாகவும் மாறுவதற்கு இவ்வகை திரைப்படங்களும் ஒருவகையில் காரணமாக இருந்தன. ஏனெனில் ஒட்டுமொத்த நோக்கில் இவை அந்த நாயகர்களின் சாதியப் பெருமிதங்களுக்கு ஆதரவாக இயங்கின; அதன் வன்முறைகளை நேரடியாக,  மறைமுகமாக நியாயப்படுத்தின.

ஆனால் இவ்வகை திரைப்படங்களின் ஆபத்துகள் பரவலாக உணரப்படுவதில்லை, எதிர்ப்புகள் பரவலாக ஆவதில்லை. ஆனால் இதன் நேர்திசையில் இயங்கும் தேவர்மகன் வகை திரைப்படங்கள் பெரிய ஆபத்தாக முன்நிறுத்தப்படுகின்றன. நாம் எவ்வகை புரிதலில் இயங்குகிறோம் என்கிற அறியாமையை இந்தப் போக்குகள் தெளிவாகவே சுட்டிக் காட்டுகின்றன.

சமீபத்தில் வெளியான 'மருது' என்கிற திரைப்படத்தைப் பார்த்தேன். இந்த இயக்குநரின் முந்தைய திரைப்படங்களான குட்டிப் புலி, கொம்பன் ஆகிய திரைப்படங்களோடு இந்த திரைப்படமும் ஒரு குறிப்பிட்டட சமூகத்தின் சாதியப் பெருமிதங்களை, அதன் வன்முறைகளை, கொலைகளை பெருமைமிகு அடையாளத்துடன் பதிவு செய்கிறது. இதன் சமூக அடையாளங்கள் மிகத் தெளிவாகவே படத்தில் சித்தரிக்கப்படுகின்றன. இந்தப் பிரதேச மனிதர்கள் அல்லது இந்தச் சமூகத்து மனிதர்கள் வன்முறையாளர்கள் என்கிற செய்தியை இவ்வகைத் திரைப்படங்கள் விஷம் போல் பொதுப்புத்தியில் ஏற்றிக் கொண்டேயிருக்கின்றன. இது தொடர்பான சமூக உணர்வோ அல்லது கூச்சமோ இந்த இயக்குநர்களுக்கு இருப்பதில்லை. தற்செயலாக வன்முறைக் கூட்டத்தில் விழ வேண்டிய குற்றவுணர்வோடு தேவர்மகன் நாயகன் கதறுவதைப் போல இவர்களுக்கு எந்தவொரு நெருடலும் இருப்பதில்லை. மாறாக அந்த வன்முறைகளை தங்கள் கலாசாரத்தின் பெருமையாக  நினைப்பதுதான் அழுத்தமாகப் பதிவாகியிருக்கிறது. இது போன்ற திரைப்படங்கள்தான் மிகவும் ஆபத்தானவை. இந்த வித்தியாசத்தை தெளிவாக உணரும் நுண்ணுணர்வு நமக்குள் வளர வேண்டும்.

மேலும் ஒரு சாதியின் பெயரை உச்சரிப்பதற்கே தயங்கும், அச்சப்படும் போக்கும் ஆபத்தானது.  எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக்கூடிய ஒரு அணுகுண்டை எவருக்கும் தெரியாமல் ஒளித்து வைப்பதைப் போன்ற ஆபத்து இது. சாதி சார்ந்த நகைச்சுவைகளால், பகடிகளால் அதன் தீவிரத்தன்மை மெல்ல மழுப்பப்பட வேண்டும். இதைப் பற்றிய  மிகையுணர்வுடன் அல்லாத வெளிப்படையான அறிவுசார் உரையாடல்கள் சமநிலையுடன், திறந்த மனதுடன் சமூகத்தில் நிகழ வேண்டும்.

பழங்குடிகளின் தொடர்ச்சியாக உருவாகி வந்த இனக்குழுக்களில் இருந்து சாதி என்கிற அமைப்பும் அதன் உட்பிரிவுகளும் உருவாகின. ஒவ்வொரு இனக்குழுவிற்கு பின்னாலும் பல்லாண்டுக்கணக்கான வருடத்தில் இறுகி வந்த பண்பாட்டு அடையாளங்களும் அதன் நுண்மைகளும் உள்ளன. அவற்றில் உள்ள பிற்போக்குத்தனங்கள் மெல்ல களையப்பட்டு தன்னைச் சுத்திகரித்துக் கொண்டே முன்னகர்வதே நாகரிக சமூகத்தின் அடையாளம். மாறாக அதனுள் திணிக்கப்படும் உயர்வு தாழ்வுகளும் பாகுபாடுகளுமே சர்ச்சைகளையும் வன்முறைகளையும் உண்டாக்குகின்றன. சாதி அரசியல் இதனை வளர்த்து தங்களுக்கு சாதகமானதாக பயன்படுத்திக் கொள்கிறது.

***

மீண்டும் கமல்ஹாசனின் சமீபத்திய திரைப்படத்தின் சர்ச்சைக்கே திரும்புவோம். 'சபாஷ் நாயுடு' என்பதில் உள்ள சாதியப் பெயருக்காக படம் வெளிவருவதற்கு முன்பே ஏன் இத்தனை பதட்டப்பட வேண்டும்? இந்தப் படத்தின் தலைப்புடன் வெளியான நடிகரின் புகைப்படம் இதுவொரு நகைச்சுவைத் திரைப்படம் என்பதை வெளிப்படையாகவே உணர்த்துகிறது. இதற்கு முன்னர் வெளியான 'தசாவதாரம்' என்கிற திரைப்படத்தின் ஒரு பாத்திரமான 'பலராம் நாயுடு' பலரால் கவனிக்கப்பட்டது; ரசிக்கப்பட்டது.

கமல்ஹாசன் ஒரு திறமையான கலைஞர் என்பதன் கூடவே திறமையான வணிகர் என்கிற தன்மையையும் கொண்டவர். எனவே முன்னர் ஒரு பாத்திரத்தின் மூலம் நிறுவப்பட்ட அடையாளத்தை சாமர்த்தியமாக உபயோகப்படுத்திக் கொள்ளும் விதமாக அதை இன்னமும் விரிவாக்கம் செய்து முழு திரைப்படமாக உருமாற்றுகிறார். எனவே பார்வையாளர்களிடம் அது எளிதில் சென்று பதிய ஏதுவாக அந்தப் பெயரையே மறுபடியும் பயன்படுத்திக் கொள்கிறார் என்கிற நோக்கில் நம்மால் ஏன் புரிந்து கொள்ளப்படவில்லை?

தசாவதாரம் 'பலராம் நாயுடுவை' நினைவுகூர்ந்தால் அது எத்தனை சுவாரசியமாக வடிவமைக்கப்பட்ட பாத்திரம் என்பதை உணர முடியும். பலராம் நாயுடு, காவல்துறை அதிகாரிக்குரிய அடிப்படையான அறிவைக் கொண்டிருந்தாலும் ஓர் அரசாங்க இயந்திரத்தின் அபத்தமான தன்மையையும் கொண்டவர். ஒரு சிக்கலான சூழலை அவரால் உடனடியாகப் புரிந்து கொள்ள  முடியவில்லை. தன்னை உயர்ந்த இடத்தில் கற்பனை செய்து கொண்டு அந்த அதிகாரத்தை தொடர்ந்து நிலைநிறுத்தும் அவர், அவரை விடவும் உயர்ந்த அதிகாரியின் முன்னால் அடிமை போல பதறவும் செய்கிறார். அதீதமான மொழிப்பற்று கொண்டவர். அம்மாஞ்சியான ஒருவரைக் கூட தன் மொழி சார்ந்தவர் என்பதால் வரவழைக்கப்பட்ட பாசத்துடன் சகித்துக் கொள்கிறார்.

இப்படியொரு பாத்திரம் முழு திரைப்படத்திலும் வந்தால் அது எத்தனை சுவாரசியமான  படைப்பாக இருக்கும்? ஆனால் அது வெளிவருவதற்கு முன்னாலேயே அதனுள் உள்ள சாதியின் பெயரைக் காரணம் காட்டி நாம் பதறுகிறோம், எதிர்க்கிறோம். நம் எல்லோருக்குள்ளும் ஒரு கோமாளித்தனமான  'பலராம் நாயுடு" என்கிற உண்மையைத்தான் இம்மாதிரியான பதட்டங்கள் சுட்டிக் காட்டுகின்றன.


உயிர்மை - ஜூன் 2016-ல் வெளியான கட்டுரை.

suresh kannan

Saturday, July 04, 2015

கமல்ஹாசனின் 'தூங்காவனம்'




கமல்ஹாசனிடம் சமீப காலமாக சில ஆச்சரியமான மாற்றங்களை கவனிக்க முடிகிறது. பொதுவாக ஒரு திரைப்படத்தை முடிக்க ஓர் ஆண்டிற்கும் மேலான காலத்தை அவர் எடுத்துக் கொள்வார். இந்த இடைவெளி குறித்து அவரது ரசிகர்களே கவலைப்பட்டு அடுத்த திரைப்படத்தை மிக ஆவலாக எதிர்பார்ப்பது வழக்கம். ஆனால் சமீபகாலமாக அவரது அடுத்தடுத்த திரைப்படத்தின் அறிவிப்புகள் குறுகிய நேரத்தில் வருகின்றன. விஸ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏறத்தாழ முடிந்து போஸ்ட் ப்ரொடக்சன் மெருகேற்றலில் இருப்பதாகச் சொல்கிறார்கள். 'உத்தம வில்லன்' வெளிவந்து துவக்க நாளின் சிக்கலோடு ஓடியோ ஓடாமலோ கடந்து சென்று விட்டது. அதற்குள்ளாக 'பாபநாசம்' திரைப்படத்தின் அறிவிப்பு வந்து படமும் இதோ வெளிவந்து விட்டது. படம் வெளிவரப் போவதற்கு முன்பே இது குறித்த முன்தீர்மான விமர்சனங்கள் வெளிவரத் துவங்கி விட்டன. த்ரிஷ்யத்திற்கும் இதற்குமான வித்தியாசத்தை பட்டியலிட ரசிக விமர்சகர்கள் கொலை வெறியுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சூடு அடங்குவதற்குள்ளாக அவரது அடுத்த திரைப்படம் குறித்தான அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த திரைப்படத்தின் பெயர் 'தூங்காவனம்' என்கிறார்கள். இது Sleepless Night எனும் பிரெஞ்சு திரைப்படத்தின் அதிகாரபூர்வமான ரீமேக் என்று சொல்லப்படுகிறது. விஸ்வரூபம் திரைப்படம் மூலமாக ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களைத் தாண்டிவரவே இப்படி அடுத்தடுத்த திரைப்படங்களை குறுகிய நேரத்தில் அவர் உருவாக்குகிறார் என்று சொல்லப்படுவதில் எத்தனை தூரம் உண்மையிருக்கிறது என்று தெரியவில்லை. எனவே இதில் குறைந்தபட்ச வெற்றியை முதலிலேயே உறுதி செய்து கொள்ள, வெற்றி பெற்ற மற்ற மொழித் திரைப்படங்களை அவர் தேர்ந்தெடுப்பதாகவும் சொல்கிறார்கள். மோகன்லால் நடிப்பில் வெளிவந்த த்ரிஷ்யம் - மலையாள திரையுலகிலேயே அதிக வசூலை செய்த சாதனை திரைப்படம். மேலும் அதன் கதைக்களமும் சுவாரசியமானது மட்டுமல்லாமல், நடிப்பதற்கு வாய்ப்புள்ள சவாலான பாத்திரமும் கூட. மோகன்லால் இதை தனது அற்புதமான பங்களிப்பால் நிறைவு செய்திருந்தார். 

ஆனால் என்னதான் ரீமேக்கிற்காக மாங்கு மாங்கென்று உழைத்தாலும் எழுத்திலக்கியத்தில் மொழிபெயர்ப்பாளனுக்கு கிடைக்கும் சம்பிரதாயமான பாராட்டுதான் பொதுவாக இதற்கும் கிடைக்கும். என்னதான் இருந்தாலும் இது மறுஉருவாக்கம்தானே என்கிற எண்ணம் பார்வையாளர்களின் மனதில் உறைந்தபடி இருக்கும். கமல் போல அற்புதமான கலைஞனுக்கு ரீமேக்குகளில் நடிப்பது நிச்சயமான சவாலான விஷயமல்ல என்று தோன்றுகிறது. அவர் இதுவரை நடித்திருக்கும் ரீமேக் படங்களின் எண்ணிக்கையையும் அதற்கு கிடைத்த வரவேற்பையும் வைத்து இதைச் சொல்லிவிடலாம். 


கமல்ஹாசன் இப்படி மறுஉருவாக்கப்படங்களாக அடுத்தடுத்து தேர்ந்தெடுப்பது ஒருவகையில் ஆச்சரியம் என்றால் 'தூங்காவனத்திற்காக' பிரெஞ்சு திரைப்படத்தை அதிகாரபூர்வமான முறையில் ரீமேக்காக உருவாக்குவது இன்னொரு ஆச்சரியம். Plagiarism  தொடர்பான குற்றச்சாட்டை எதிர்கொள்ளாத படைப்பாளிகளே இருக்க மாட்டார்கள். தமிழ் சினிமாவும் அதற்கு விதிவிலக்கல்ல. மற்ற மொழித் திரைப்படங்களில் இருந்து கதையை, காட்சியை உருவுவது ஏதோ சமீப காலத்திய விஷயம் என்பது போல் சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலிருந்தே இது பழக்கமான விஷயம்தான். சமயங்களில் முறையாக அனுமதி பெறப்பட்டும் (இந்தியாவிற்குள்ளாக) சில திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றாலும் அது சொற்பமானது. அதிலும் அயல் தேசத்து திரைப்படங்கள் என்றால் கேள்வி கேட்பாரே கிடையாது. ஆளாளுக்கு உருவி சிதைத்து ஜாலியாக குழம்பு காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். இப்படியாக அயல் தேசத்து சினிமாக்களில் உருவும் தமிழ் படைப்பாளியாக கமலையே பொதுவாக பிரதானமாக சுட்டிக் காட்டுவார்கள். இந்த விஷயத்தில் அதிகமாக உருளுவது கமலின் தலையாகத்தான் இருக்கும். இவைகளில் சில புகார்கள் உண்மைதான். இன்னும் சிலவை உண்மையல்ல. இந்தப் பதிவை வாசிக்கவும்.

இந்த நிலையில் அதிகாரபூர்வமான முறையில் ஓர் அயல்தேசத்து சினிமாவை மறுஉருவாக்கம் செய்வது கமலின் திரைப்பயணத்தில் இதுதான் முதன்முறை என்று நினைக்கிறேன்.  உலகமயமாக்கத்தின் விளைவாக அதன் சந்தை இன்னமும் விரிவடைந்து வரும் சூழலில் உலகிலேயே அதிகமான திரைப் பார்வையாளர்களைக் கொண்ட தேசங்களில் ஒன்றாக இந்தியா இருப்பதினால் இதுநாள் வரை அறியப்படாமல் அல்லது கண்டுகொள்ளப்படாமல் இருந்த வணிக மதிப்பை இப்போது சீரியஸாக சர்வதேச சினிமா நிறுவனங்கள் உணரத் துவங்கியிருக்கிறார்கள். எனவே இங்கு உருவாகும் பிரபல திரைப்படங்களில் நேரடியான Plagiarism குற்றச்சாட்டு இருந்தால் உடனே அது சம்பந்தப்பட்ட படநிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டு சட்ட நடவடிக்கையை எடுக்கத் துவங்கியிருக்கிறார்கள். எனவே கமலின் இந்த மாற்றத்திற்கு இந்த சூழலும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஹாலிவுட்டும் 2015-ல் மறுஉருவாக்கம் செய்யப் போகும் பிரெஞ்சு திரைப்படமான 'Sleepless Night' (Nuit Blanche) திரைப்படத்தை  சில மாதங்களுக்கு முன் பார்த்திருக்கிறேன். இதன் சுவாரசியத்திற்கு அடிப்படையே இதன் அபாரமான திரைக்கதைதான். மற்றபடி ஒரே இரவில் நிகழும் இதன் மையக்களன் வழக்கமானதொன்றுதான். போதைப் பொருள் கும்பலால் கடத்தப்பட்டிருக்கும் தன் மகனை மீட்பதற்காக ஒரு காவல்துறை அதிகாரி ஆவேசமாக செய்யும் சாகசங்கள் கொண்ட வழக்கமான கதைதான். ஆனால் படுவேகமான, அசத்தலான திரைக்கதையின் மூலம் சுவாரசியப்படுத்தியிருக்கிறார்கள்.

வேகமான திரைக்கதை என்றாலே பொதுவாக பலரும்  சேஸிங் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் என்பதாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஸிட்பீல்ட் உபதேசித்திருக்கும் Three-act structure-ஐ  ஏதோ கணிதசூத்திரம் போல அப்படியே பொருத்தினால் அது உணர்வுபூர்வமான படைப்பாக அல்லாமல் இயந்திரத்தனமான சக்கையாகத்தான் வெளிவரும். வேகமான திரைக்கதை என்பது  அது மட்டுமேயல்ல. பார்வையாளனை கதாபாத்திரங்களோடும் சம்பவங்களோடும் அகரீதியாக ஒன்றச் செய்து அவனுடைய ஆவலையும் பதற்றத்தையும் தூண்டியபடியே இருப்பது. காதல் சார்ந்த கதையில் கூட இதை சாதிக்க முடியும். த்ரிஷ்யம் திரைப்படத்தில் கூட என்ன ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது? ஆனால் பார்வையாளன் நகத்தைக் கடித்தபடி அதைப் பார்க்கவில்லையா?

எல்லாக்கதைகளும் ஏற்கெனவே சலிக்க சலிக்கச் சொல்லப்பட்டு விட்ட இன்றைய தேதியில் ஒரு திரைப்படத்திற்கு மிக மிக அடிப்படையானது திரைக்கதைதான். மேற்குறிப்பிட்ட பிரெஞ்சு திரைப்படத்தின் அபாரமான உருவாக்கத்திற்கு காரணம் மூன்று விஷயங்கள்தான். ஒன்று, திரைக்கதை. இரண்டு, திரைக்கதை. மூன்றும் திரைக்கதையேதான். அப்படியெனில் கதை என்று இருக்க வேண்டாமா? நிச்சயமாக. இல்லையெனில் அது சவத்திற்கு செய்யப்பட்ட ஒப்பனைகள் போல எத்தனை சாமர்த்தியமான திரைக்கதையும் நுட்பங்களையும் கொண்டிருந்தாலும்  ஜீவனேயில்லாமல் போய் விடும்.

கமல்ஹாசன் இந்த திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கின் மறுஉருவாக்கத்திற்காக தேர்வு செய்திருப்பது சற்று ஆச்சரியத்தை தருகிறது. ஏனெனில் இது 'இந்தியத்தன்மை' அல்லாத ஹாலிவுட் ஆக்ஷன் வகையிலான திரைப்படம். புதியஅலை திரைப்படங்கள் தமிழில் தற்போது வெற்றி பெற்றுவரும் சூழலில் இந்த ஆக்ஷன் தன்மையை பெரிதும் மாற்றாமல் ரீமேக் செய்தால் இது நிச்சயம் தமிழ் பார்வையாளர்களுக்கு மிக ஆச்சரியமானதொன்றாக வித்தியாசமான அனுபவமாக அமையும். கமல் அதை சாதிப்பார் என்று தோன்றினாலும் பெரும்பாலும் நைட்கிளப்பினுள் நிகழும் இத்திரைப்படத்தில் வணிக சமரசத்திற்காக நைசாக ஏதேனும் பாடல் காட்சியை செருகி விடுவார்களோ என்கிற சந்தேகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. இதில் கமல் முத்தமிடும் திரிஷாவின் பாத்திரம் அசலில் சில நிமிடங்கள் மட்டுமே வருவது. தமிழில் என்ன செய்யவிருக்கிறார்களோ தெரியவில்லை. போலவே பெண் காவல் அதிகாரியாக வருபவரின் பாத்திர வடிவமைப்பும் சிறிது நேரமே என்றாலும் குறிப்பிடத்தகுந்தது. மதுஷாலினி இந்தப் பாத்திரத்தை கையாள்வார் என யூகிக்கிறேன்.

மேற்குறிப்பிட்ட பிரெஞ்சு திரைப்படத்தின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் அதன் ஒளிப்பதிவு. பெரும்பாலும் நைட்கிளப் கூட்டத்திற்குள்ளேயே நிகழ்ந்து கொண்டிருக்கும் காட்சிகளில் அந்தக் கூட்டத்தை கட்டுப்படுத்தி அதன் தொடர்ச்சிகளில் விலகல்தன்மை இல்லாமல் பதிவு செய்வது சிரமமான விஷயமாகத் தோன்றுகிறது. ஆனால் அதை மேற்சொன்ன திரைப்படத்தில் அபாரமாக சாத்தியப்படுத்தியிருப்பார்கள். காவல்துறை அதிகாரியாக பிரதான பாத்திரத்தில் நடித்திருக்கும் Tomer Sisley அடிப்படையில் ஒரு நகைச்சுவை நடிகர். ஆனால் இத்திரைப்படத்தில் அத்தனை தீவிரத்தன்மையுடன் தன் மகனை மீட்பதற்காக எதையும் செய்யத் துணியும் தந்தையின் பாத்திரத்தை அற்புதமாக கையாண்டிருப்பார். இவர் நேர்மையான காவல் அதிகாரியா அல்லவா என்பதே சற்று புரியாதபடி பூடகமான முறையில் இவரது பாத்திர வடிவமைப்பு அமைக்கப்பட்டிருக்கும்.

தமிழ் திரையில் பல விஷயங்களில் முன்மாதிரியாகவும் முன்னோடியாகவும் இருக்கும் கமல்ஹாசன் ஓர் அந்நிய திரைப்படத்தை முதன்முறையாக அதிகாரபூர்வ முறையில் மறுஉருவாக்கம் செய்யும் விஷயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அதே சமயத்தில் இதில் இந்தியத்தன்மைக்கான சமரசங்களை ஏதும் செய்யாமல் படத்தின் ஜீவனை அப்படியே இதிலும் கடத்தி வந்தால் சிறப்பாக இருக்கும்.

"தூங்காவனத்திற்காக' நிசச்யம் காத்திருக்கலாம். 


suresh kannan