Sunday, April 12, 2020

வணக்கம் - வலம்புரிஜான்

வலம்புரிஜான் எழுதிய ‘வணக்கம்’ என்றொரு நூலை மிகச் சிரமப்பட்டு வாசித்து முடித்தேன். நக்கீரன் இதழில் தொடராக வந்தததின் தொகுப்பு இது. நக்கீரனில் வந்தது.. என்பதில் இருந்தே இந்த நூலின் உள்ளடக்க தரத்தை அறிந்து கொள்ள முடியும்.

கலை, எழுத்து, அறிவியக்கம் போன்வற்றுடன் சிறிதாவது தொடர்புள்ளவர்கள்,  அதிகார வேட்டை அரசியலுக்குள் சென்று வீழ்ந்தால் எத்தனை கேவலங்களுக்கு உள்ளாவார்கள்.. அவர்களுக்குள் இருக்கும் கலைத்தன்மையும் அவரது அடையாளமும் எத்தனை சிதைந்து போகும் என்பதை உறுதிப்படுத்தும் நூல் இது.

வலம்புரிஜான் அடிப்படையில் சிறந்த வாசிப்பாளர். நிறைய அறிய முற்பட்டிருந்தவர். ஆனால் அதிகார அரசியல் என்னும் நெருப்பில் குளிர்காய முனைந்து நிறைய காயங்களுடன் பெற்றும் இழந்தும் செயல்பட்டிருக்கிறார்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இரண்டு பிம்பங்களுக்கும் அணுக்கமானவராக இருக்க ஜான் மிகவும் முயற்சித்திருக்கிறார். அவர்களுக்கு இடையேயான பந்தாட்டத்தில் மிகவும் அல்லல்பட்டிருக்கிறார். மிக குறிப்பாக ஜெயலலிதாவால் மிகவும் அவமதிக்கப்பட்டிருக்கிறார். ஒரு நீண்ட கால கட்டத்திற்குப் பிறகு அவருக்குள் இருந்த தன்மான உணர்வு விழித்தெழிந்திருக்கிறது. எனவே இந்த நூல்.

அரசாங்க அலுவலகத்தில் தன் பணிக்காலம் பூராவும் லஞ்ச சூழலில் மாட்டிக் கொண்டு, சந்தர்ப்பம் கிடைத்தால் அவனும் வாங்கிக் கொண்டு… பிறகு ஓய்வுக் காலத்தில் மிக செளகரியமான உணர்வில் ‘எல்லாம் பிராடு பசங்க சார்..’ என்று ஒரு அதிகாரி ‘பிறரை குற்றம்சாட்டி’ புலம்புவார் அல்லவா. அப்படியொரு சந்தர்ப்பவாத புலம்பல்தான் இந்த நூல். 

மிக குறிப்பாக ஜெயலலிதாவின் சில ஆதாரமான எதிர்மறை குணாதிசயங்களை துணிச்சலுடன் அம்பலப்படுத்துகிறார் ஜான். அதே துணிச்சலுடன் எம்.ஜி.ஆரை அம்பலப்படுத்துவதில் ஜானுக்கு தயக்கம் இருந்ததைப் போல உணர முடிகிறது. எம்.ஜி.ஆர் மீதுள்ள உள்ளார்ந்த மதிப்பு மனத்தடையை ஏற்படுத்தியதோ என்னமோ. ஆர்.எம். வீரப்பன், நடராசன், சசிகலா, திருநாவுக்கரசு போன்ற பல சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள், தரகர்கள் போன்றவர்கள் இடையிடையே வந்து போகிறார்கள்.

**

நல்ல தமிழ் கொண்ட எழுத்தை கேட்க, வாசிக்க எனக்கு எப்போதும் பிடிக்கும். ஆனால் அதுவே மிகையான அலங்காரமாக, செயற்கையான ஜோடனைகளுடன் வெளி வரும் போது குமட்டி விடுகிறது. திராவிட கலாசாரத்தின் சில நல்ல பண்புகளைத் தாண்டி, அவர்களிடம் வெறுக்கக்கூடிய அம்சங்களுள் ஒன்றாக இருந்தது அவர்கள் மொழியை மிகையாக ஜோடனை செய்த விளையாட்டுத்தான்.

வலம்புரி ஜானின் மொழி நடையும் இவ்வாறே இருக்கிறது. ‘கருவாடு மீனாகாது.. கறந்த பால் மடிபுகாது’ என்று அமைச்சர் காளிமுத்து பேசினார் அல்லவா.. அப்படியொரு செயற்கையான நெடி கொண்ட மொழி நூல் பூராவும் வீசிக் கொண்டிருக்கிறது. அதுவே ஓர் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. சொல்ல வரும் விஷயத்தை இப்படி இழுத்து இழுத்து எழுதி சலிப்பூட்டுகிறார் ஜான்.

இந்த நூலை கிசுகிசு வரலாறு என்று மதிப்பிடுகிறார் ஜெயமோகன். இது தொடர்பாக ஒரு நீண்ட கட்டுரையை தன் தளத்தில் ஏற்கெனவே எழுதியிருக்கிறார். ஒருவகையில் இந்த நூலை நான் வாசிக்க முற்பட அந்தக் கட்டுரையே காரணம்.

இது போன்ற கிசுகிசு வரலாற்றின் ஏராளமான வரிகளுக்கிடையே சிந்திக் கிடக்கும் உண்மையான வரலாற்றின் துளிகளை தொகுத்தெடுத்துக் கொள்ள முடியும் என்கிறார் ஜெயமோகன்.

உண்மைதான். ஆனால் கல்லில் இருந்து அரிசியைப் பொறுக்கும் சலிப்பான உணர்வைத் தந்தது இந்த நூல்.

எவராவது விரும்பினால் தேடிப் படிக்கலாம். ஆனால் நான் பரிந்துரை செய்ய மாட்டேன்.


suresh kannan