Showing posts with label முகநூல் குறிப்புகள். Show all posts
Showing posts with label முகநூல் குறிப்புகள். Show all posts

Sunday, July 03, 2016

முகநூல் குறிப்புகள் - 5

இயக்குநர் முத்தைய்யா எடுத்த சமீபத்திய திரைப்படம் 'மருது' முந்தைய திரைப்படம் குட்டிபுலி.

இரண்டு திரைப்படங்களுமே அப்பட்டமான சாதியப் பெருமிதங்களை, அது சார்ந்த வன்முறைகளை தன்னிச்சையாக உயர்த்திப் பிடிப்பவை. அவற்றை பெருமையாக முன்வைப்பவை. மிகவும் ஆபத்தான போக்கை சமூகத்தில் விதைத்துச் செல்பவை. இவற்றின் சாதிய அடையாளங்கள் அது குறித்த பெருமைகளுடன் இந்தப் படங்களில் துல்லியமாகவே சுட்டிக்காட்டப்படுகின்றன. அது குறித்த கூச்சம் அல்லது சமூக உணர்வு ஏதும் துளி கூட இயக்குநருக்கு இருப்பதாக தெரியவில்லை.

முத்தைய்யா போன்ற இயக்குநர்கள் உடனடியாக தடைசெய்யப்பட வேண்டும்.

தேவர்மகன் போன்ற படைப்பின் மையத்தை விளங்கிக் கொள்ளாதவர்கள் அவற்றை கடுமையான எதிர்க்கும் ஒருபகுதியை கூட அதை விட அதிகமான ஆபத்தை உற்பத்தி செய்யும் இம்மாதிரியான பயங்கரவாத படைப்புகளை அதிகம் கண்டுகொள்வதில்லை என்பது சோகம்.

இது போன்ற படைப்புகளை தமிழக மக்கள் ஆதரிக்கவே கூடாது.


***


இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளிவரவுள்ள 'தரமணி' திரைப்படத்தைப் பற்றி பல சினிமா செய்திகளை வாசித்திருந்தாலும் 'ஐ.டி. இளைஞர்களைப் பற்றிய கதை' என்பதை தவிர எந்தவொரு பிரத்யேக அபிப்ராயமும் இதுவரை என்னுள் உருவாகவில்லை.

ஆனால் இதன் டீஸரை இன்று கவனித்தவுடன் துல்லியமாக ஒரு சித்திரம் உருவாகத் துவங்கியிருக்கிறது. அதுவே இத்திரைப்படத்தின் மீதான ஆர்வத்தை உண்டாக்கியிருக்கிறது.

ஆண் -பெண் உறவுச்சிக்கல்கள் எத்தனை காலத்திற்கு பேசினாலும் இன்னமும் தீராதது. ஓர் பெண்ணின் அகத்தை அதன் விசித்திரங்களை, விநோத நியாயங்களை முழுமையாகப் புரிந்து கொண்ட ஆண் இன்னமும் பிறக்கவேயில்லை. பிறக்கவும் முடியாது.

நிலவுடமை சமூக மதிப்பீடுகள் சார்ந்து பெண்ணின் மீது ஆண் உருவாக்கிய கண்காணிப்பும் கலாசாரக் காவலும் இன்னமும் உயிர்ப்புடனேயே இருக்கிறது. இந்தக் கண்காணிப்பு கலாசாரத்தின் புற அடையாளங்கள் மாறிக் கொண்டே இருந்தாலும் அகத்தன்மை அப்படியே உறைந்திருக்கிறது. ஒரு சமகால, நவீன இளைஞனின் மூலம் இந்தப் புதிர்த்தன்மையை உணர்த்துகிறார் இயக்குநர்.

"உனக்கு மட்டும் ஃபேஸ்புக்ல ஏன் அத்தனை பிரெண்ட்ஸ் என்கிற இன்றைய ஜீன்ஸ் இளைஞன் கேள்வியும் தன் மனைவியை வெறிக்க சைட் அடிக்கும் முரட்டு இளைஞனை கண்டிக்கத் துணிவில்லாமல் "ஏண்டி அவன் உன்னையே வெறிக்கிறான்" என்று மனைவியையே கண்டித்து உதைக்கும் முந்தைய தலைமுறை வேட்டி இளைஞனும் மனதளவில் அப்படியேதான் இருக்கிறார்கள்.

தமிழ் நவீன இலக்கியத்தில் ஆண்-பெண் உறவுச்சிக்கல்களின் மீதான நவீன மனம் இயங்கும் முறையை மிக நுட்பமாகவும் ஆழமாகவும் தேர்ந்த மொழியில் எழுதியவர் என்று ஆதவனைச் சொல்லுவேன். அவர் படைப்புலகத்தில் மிக முக்கியமான அம்சம் இது.

போலவே நவீன தமிழ் சினிமாவில் மிகச் சிறப்பாக கையாள்பவர் செல்வராகவன்.

இந்தப் புதிய அடையாளத்திற்குள் ராம் பயணிப்பது உற்சாகத்தை தருகிறது. இயக்குநர் ராமை, மிகையாக பாராட்டுபவர்கள் அல்லது கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்கள் என்று இருதுருவ ரசிக மனோபாவத்தையே காண்கிறேன். இது ஏன் என்பது தெரியவில்லை. அவருடைய தமிழ் தேசிய அடையாளம் ஒரு காரணமாக இருக்கலாமா? அவருடைய 'தங்கமீன்கள்' திரைப்படத்திற்கு ஒரு சாராரிடமிருந்து எழுந்த மூர்க்கமான எதிர்ப்பு உண்மையில் என்னை திகைக்க வைத்தது.

அவருடைய திரைப்படங்கள் முன்வைக்கும் கருத்துகள், சமூக மதி்ப்பீடுகள் குறித்து நாம் விவாதிக்கலாம், உரையாடலமே தவிர ராம் நிராகரிக்கக்கூடிய இயக்குநர் அல்ல. திரைமொழியின் இலக்கணமும் நுண்மையும் அறிந்த மிக அரிதான தமிழ் இயக்குநர்களுள் ராம் ஒருவர் என்கிற வகையில் அவருடைய தரமணி திரைப்படத்தை மிகவும் எதிர்பார்க்கிறேன்.

பொசசிவ்னஸ் என்பது ஒருவகையில் அன்பை அடித்தளமாகக் கொண்டது என்றாலும் அதுவே மிகையாகப் போகும் போது மனநோயாக மாறி விடுகிறது. நாம் அன்பை செலுத்துபவர்கள் மீது அதற்கு மாறாக வன்மத்தையும் வெறுப்பையும் பகைமையையும் கொள்ளும் எதிர்திசைக்கு இட்டுச் செல்கிறது.

தனிப்பட்ட வகையில் நானும் அந்தக் குறைபாட்டிற்குள் விழுந்தவன் என்கிற வகையில் இந்த டீஸரில் வரும் இளைஞனை நெருக்கமாக உணர்கிறேன். இதன் எதிர்முனையில் இயங்கும் ஆண்ட்ரியா பாத்திரமும் திறமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தன்மதிப்பும், நுண்ணுணர்வும் உள்ள சமகால இளம் பெண் இப்படித்தான் இந்த அவமதிப்பை எதிரொலிப்பாள். இதையும் என் தனிப்பட்ட அனுபவத்திலேயே சொல்கிறேன்.

அந்த வகையில் சமகால நவீன இளைஞர்களின் அகவுலகத்தை அதன் சிக்கல்களை இத்திரைப்படம் மிகச் சிறப்பாக பிரதிபலிக்கும், சித்தரிக்கும் என நம்புகிறேன்.


***


இரா.முருகனின் நூல் வெளியீட்டு விழாவில் சற்று நேரம் அமர்ந்திருந்தேன். நான் சென்ற போது கிரேசி மோகன் பேசிக் கொண்டிருந்தார். அரங்கெங்கும் சிரிப்பலை. நூல்களின் ஓவியங்களை வரைந்த ஒரு பெண்மணியும் இன்னொருவரும் பேசினார்கள். ஒரே ஊதுபத்தி, விபூதி மணம். சாரு சொன்னது போல் சட்டென்று ஒரு ஆன்மீக மேடை போல தோற்றம். சுடச்சுட வெண் பொங்கல் கூட தருவார்கள் என்று தோன்றியது.

சாரு பேச ஆரம்பித்தவுடன் கூட்டம் சற்று தளர்ந்து சிரிக்கத் துவங்கியது. அவர் என்ன பேசினார் என்று ஆவலடைய வேண்டாம். அவர் கலந்து கொண்ட வேறு எந்த நிகழ்வின் வீடியோவையாவது பார்த்துக் கொள்ளுங்கள். அதேதான். நோபல் பரிசு. ஞான பீட பரிசு. அசோகமித்திரன்.. இங்கு எழுத்தாளர்கள் கவனிக்கப்படுவதில்லை. என்று இவருடையது வேறு வகை காலட்சேபம்.

கிளம்பி வந்து விட்டேன். உரையின் துவக்கத்தில் முருகனின் 'மனை' குறுநாவல் குறித்து ஒரு வரி பேசியது விதிவிலக்கு.

()

இரா.முருகனை ராயர் காப்பி கிளப் மடற்குழும காலத்திலிருந்து பழக்கம். இலக்கியவாதிகளை கிண்டலடித்து நான் போட்ட ஒரு மடலுக்கு சட்டென்று கோபித்துக் கொண்டார். இலக்கியத்தின் பால் உண்மையான அக்கறை கொண்டவரின் கோபம் அது.

அதற்கும் முன்னால் இந்தியா டுடேவில் வெளியான அவருடைய சிறுகதையை வாசித்திருக்கிறேன். அலுவலகத்தின் வரவேற்பறையில் வாடிக்கையாளனின் சிலையை வடிவமைத்திருக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனம். சிலைக்கும் அங்கு உழைப்பவனுக்கும் சட்டென்று வித்தியாசமில்லை என்பது போல் செல்லும் சிறுகதை என ஞாபகம்.

அதற்கும் முன்பாக வாத்யார் சுஜாதா மூலம்தான் முருகனின் பெயரை அறிந்தேன். 'ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம்' என்கிற அவரின் புகழ்பெற்ற கவிதையை சுஜாதா அடையாளங்காட்டி சிலாகித்தது இன்னமும் நினைவிருக்கிறது.

முருகன் சுஜாதாவின் நீட்சி என்பதில் ஒருபகுதி உண்மையிருக்கிறது. முதலில் கவிதை, சிறுகதை, குறுநாவல், தொடர்கதை, நாவல், சயின்ஸ் பிக்ஷன், கணிப்பொறிவியல் தொடர்பான படிப்பு, அது தொடர்பான சுவாரசியமான நுட்பக் கட்டுரைகள், ஹைக்கூ, சினிமா வசனம், கமல்ஹாசன் என்று இரண்டு பேருக்கும் சில பொதுவான அடையாளங்கள் உள்ளன. ஆனால் இப்படி பொதுப்படையாகவும் முருகனை வகைப்படுத்தி விட முடியாது.

முருகனின் எழுத்து மிகவும் பிரத்யேகமானது. பதினெட்டாம் நூற்றாண்டு மனிதர்களின் புராதன வாசனையில் கூட அவர் உரைநடை கச்சிதமாகப் புகுந்து கொள்ளும். மாய யதார்த்தம் என்கிற இலக்கிய பாணியை தமிழில் நிறைய பயன்படுத்தி எழுதியவர். சுவாரசியம் என்பதற்கு உத்தரவாதம் இருக்கும் அதே சமயத்தில் உள்ளடக்கத்திலும் எவ்வித சமரசமும் இருக்காது. தமிழின் இடைநிலை எழுத்தாளர்களில் இரா.முருகன் மிக முக்கியமானவர். என்னவொன்று குழாயடிச் சண்டைகளில் ஈடுபடும் ஆர்வமும் சாமர்த்தியமும் இல்லாமிருப்பதால் குறிப்பிட்ட வாசக வட்டத்தை தவிர சமகால தலைமுறைக்கு அதிகம் அறியப்படாமலிருக்கிறார்.

இன்று வெளியிடப்பட்ட அவரது அனைத்து நூல்களும் மகத்தான வெற்றி பெற வேண்டும் என்பதே என் விருப்பம். ராயர் காப்பி கிளப் கல்லாவில் உட்கார்ந்த அதே காலக்கட்ட தோற்றத்திலேயே எப்படி இன்றும் இருக்கிறார் என்பது இலக்கியத்தை தாண்டிய உப ஆச்சரியம்.


***


ஜெ பதவியேற்பு விழாவில் ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை குறித்து இணைய திமுகவினர், அனுதாபிகள் கண்ணீர் கசிந்த போது சற்று நகைச்சுவையாகவே இருந்தது.

காதுகுத்து விழாவில் பெரியப்பாவை 'வாங்க' என்று கண்டு கொள்ளாததால் அது 'இனி உன் வூட்ல கை நெனப்பனா -னனு என்று தொடங்கி வெட்டுக்குத்து வரை செல்லும் உள்ளூர் நிகழ்வும் அரசாங்கத்தின் தற்செயலான அல்லது உள்நோக்கமுடைய இயந்திர விதிகளின் வழியாக இயங்கும் ப்ரோட்டாகால்களும் ஒன்று என்பது போலவா அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்?

கா விடும் பள்ளிப்பிள்ளைகளை விட கேவலமான சிறுபிள்ளைத்தனத்துடன் நடந்து கொள்ளும் தமிழக அரசியல்வாதிகளைப் பற்றி நமக்கு பழகி விட்டது.

பின்னிருக்கையில் அமர்வது அத்தனை அகெளரவமானதா என்ன?

ஒரு சிறிய இலக்கிய நிகழ்வுதான். எடிட்டர் லெனின்தான் தலைமை. ஆனால் அவர் பாட்டிற்கு உள்ளே நுழைந்து ஒரு துணி தோள்பையுடன் கடைசி இருக்கையில் கோயிஞ்சாமி மாதிரி அமர்ந்து கொண்டார். வேர்க்கடலையை ஊதி ஊதி சிவாஜி ஒரு பாட்டில் நடந்து சொல்வாரே, அப்படியொரு ஞானச் சிரிப்பு. அப்புறம் முன்னே அழைத்துக் கொண்டார்கள்.

ஸ்டாலினும் லெனினும் ஒன்றா என்று கேட்காதீர்கள். ரஷ்யாவில் கூட ஒப்புக் கொள்ள மாட்டார்கள்தான். :)

இது ஏதோ இணையத்தில் கண்கலங்கி வீறாப்பு பேசும் விஷயம் என்று நினைத்துக் கொண்டிருந்த போது இப்போது ஜெ. அரசு அறிக்கை விடும் போதுதான் இந்த அளவிற்கு பெரிதானது என்று தெரிந்தது.

அம்மா எவரையாவது திரும்பிப் பார்க்க கழுத்தை திருப்புவதையே பெரிய சாதனையாக முன்நிறுத்தும் அதிமுக உபிக்களும் அதற்காக கண்கசியும் தமிழக அப்பாவிகளும் நிறைந்திருக்கும் சூழலில் ஜெ இப்படியொரு நேரடி சமாதான அறிக்கை விட்டிருப்பது நிச்சயம் பெரும் மாற்றம்தான்.

ஆனால் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியது அவரின் பெருந்தன்மை மட்டுமல்ல. தந்தையால் ஏற்படுத்த முடியாத இந்த மாற்றத்தைக் கூட ஏற்படுத்திய மகனின் இணக்கமான அணுகுமுறைதான்.

நல்ல துவக்கம். இனியாவது முகம் பார்த்து சிரியுங்கள் தமிழக அரசியல்வாதிகளே.


***


ஏனோ மனம் சோர்வாக, படபடப்பாக இருந்தது. இது போன்ற சமயங்களில் இலகுவான எழுத்து, திரைப்படம், நகைச்சுவைக் காட்சி என்று அதைக் கடந்து வர முயல்வேன். பல சமயங்களில் சுஜாதாதான் உதவுவார்.

இப்போது Srimanthudu தெலுங்கு திரைப்படத்தில் ஒரு சண்டைக்காட்சியை (?!) ரசித்துப் பார்த்து சிரித்தேன்.

சமீபமாகவே மகேஷ்பாபுவை அதிகம் பிடிக்க ஆரம்பித்து விட்டது. மற்ற தெலுங்கு நடிகர்கள் போல .. ரேய்.. என்று கண்சிவந்து உரத்த குரலில் பஞ்ச் பேசாமல் .. அந்த சொட்டைத் தலையனைப் பாரேன்.. காமெடியா இல்ல.. என்று காதில் ரகசியம் பேசும் விதத்தில் பேசும் அவரது நிதானமும் ஓர் அழகுதான்.

ஒண்டு குடித்தன வாழ்க்கையில் எவர் வீட்டில் டிவி இருக்கிறதோ அங்கு அடித்துப்பிடித்து ஓடி இடம் பிடித்து டைட்டில் காட்சிகள் ஓடும் போதே 'சண்டையமைப்பு' என்கிற வார்த்தை வருகிறதா என்று ஆவலுடன் பார்த்து இருந்தால் 'அப்பாடா' என்று மகிழ்ந்து இல்லையென்றால் இடம் போய் விடுமோ என்கிற பயத்தில் எழுந்து கொள்ளாமல் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மூக்கு விடைத்த வசனங்களை் வெறுப்பாக கேட்டு, இடையில் தூங்கிப் போய்..

சண்டைக்காட்சிகள் என்றால் இளம் வயதில் அத்தனை விருப்பமாய் இருந்தது. ஜெய்சங்கர் போடும் சண்டைகளைக் கூட வியந்த அப்பாவித்தனம் கொண்ட வயது. இப்போதும்தான். ஆனால் அது எந்தவிதத்திலாவது வித்தியாசமாக இருக்க வேண்டும்.

ஆனால் பல சமகால தமிழ் திரைப்படங்களில் அது செத்தவன் கையில் வெத்தலை பாக்கு வைப்பது போல அத்தனை சொரணையற்று 'வைத்துத் தொலைக்க வேண்டுமே' என்கிற சம்பிரதாயத்துடன் இருக்கும்.

சண்டைக்காட்சிகளுக்கு மிக முக்கியமே அதற்கான முன்னோட்டம்தான். நாயகன் அவர்களை அடித்து துவைக்க வேண்டும் எ்னகிற வெறி நமக்கே ஏற வேண்டும். அப்படியில்லையெனில் வீண். அவ்வாறான வெறி எனக்கு வந்தது சில சமயங்களில்தான்.

சுவாரசியமாகவும் வித்தியாசமானதாகவும் சண்டைக்காட்சிகளை அமைப்பது என்பது அந்தந்த மாஸ்டர்களுக்கு நிச்சயம் சவாலான விஷயம்தான். அவர்களும்தான் எத்தனை முறைதான் செட் போட்ட மார்க்கெட்டில் தக்காளிக் கூடைகளை தள்ளி விழுவார்கள்?

இந்தக் காட்சியைப் பாருங்கள்.

அர்னால்ட்.. (அதற்கப்புறம் ஏதோ வருமே) போல அதிகம் அலட்டிக் கொள்ளாமல் கஞ்சி போட்ட சட்டை போல விறைப்புடன் ஆனால் ஸ்டைலிஷாக சண்டை போடும் இந்த மகேஷ்பாபுவையும் இதை வடிவமைத்த மாஸ்டரையும்அப்படி பிடித்துப் போய் விட்டது. செயற்கைதான். எம்ஜிஆர் மான்கொம்பு சண்டையெல்லாம் பார்த்து பழகிய கலாசாரம்தானே நமது?

(எம்ஜிஆருக்கு உண்மையாகவே மான்கொம்பு சண்டை தெரியுமாமே? மான்களைத்தான் அவருக்கு நன்றாகத் தெரியும் என்று நினைத்திருந்தேன். அவர் சம்பந்தப்பட்ட பக்திக் கட்டுரைகளில் எப்படியாவது இப்படியொரு உட்டாலக்கடியான புல்லரிக்கும் தகவல்கள் வந்து விழுந்து விடுகின்றன)

உலக சினிமா கட்டுரைகளும் எழுதிக் கொண்டு தெலுங்கு மசாலாக்களையும் எப்படி பார்க்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டு டென்ஷன் செய்யாதீர்கள். எல்லோருக்குமே ஆல்டர் ஈகோ என்கிற இன்னொரு மனமும் ரசனையும் இருக்கிறது. சிலருக்கு நாலைந்து கூட.

நான் வெளிப்படையாக ஒப்புக் கொள்வேன். சிலர் மகேஷ்பாபு போலவே விறைப்பாக நடந்து செல்வார்கள். அவ்வளவுதான் விஷயம்.


***

சமீபத்தில் வெளிவந்த நூல் ஒன்றிற்கு 'நந்தனின் பிள்ளைகள்' என்ற தலைப்பு சூட்டப்பட்டிருப்பதைக் கண்டேன். ஒரு பார்வைக்கு பொருத்தமான, கவர்ச்சிகரமான தலைப்பு போல் தோன்றியது.

ஆனால் அதன் பின்னால் உள்ள சாதிஅரசியலையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. 'பறையர்களின் வரலாறு' என்று பின்னால் வருகிற குறிப்பிற்கு ஓர் அலங்கரிக்கப்பட்ட முன்னொட்டாக இந்த தலைப்பு - நந்தனின் பிள்ளைகள். ஏன் இந்த சுத்திகரிக்கப்பட்ட தலைப்பு?

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவர் அதீதமான சிவ பக்தியினால் இறைவனைக் காண மிகவும் விரும்பி ஆலயத்திற்குச் சென்று உள்ளே புக முடியாமல் மனம் புழுங்க சிவன் தோன்றி செய்த உபதேசத்தின் பெயரில் தீயில் புகுந்து பிராமணரான பின்னர் நாயன்மார்களில் ஒன்றாரானார் என்பது புராண வரலாறு.

எனில் நந்தனின் பிள்ளைகளும் சைவ சமய விசுவாசத்துடன் தீயில் புகுந்து தம்மை சுத்தப்படுத்திக் கொண்டால்தான் நந்தனின் நீட்சிகளாக மாற முடியுமா? இன்றும் கூட சைவ ஆலயங்களில் தலித் சமூகத்தினர் நுழைய முடியாமல் அதற்கு போராட்டம் நடத்தும் சூழல்தானே நீடிக்கிறது?

நூலின் தலைப்பை பூசி மெழுகாமல் 'பறையர்களின் வரலாறு' என்று நேரடியாக வைக்கலாமே?

இது என் சந்தேகம். நண்பர்கள் தெளிவுப்படுத்தலாம்.


***


கே டிவியில் கரு.பழனியப்பன் இயக்கிய 'பார்த்திபன் கனவு' சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன அபாரமான திரைக்கதை. தான் பார்த்து பார்த்து ஆசைப்பட்ட, ஆனால் பேசிப் பழகாத ஒரு பெண், அதிசயமாக பெற்றோரால் நிச்சயிக்கப்படும் போது, அட!பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக இருக்கிறதே என்று மனம் மகிழ்ந்து திருமணம் செய்து கொள்கிறான் அந்த இளைஞன்.

ஆனால் திருமணத்திற்குப் பிறகுதான் தெரிகிறது, தன் மனைவி தான் காதலித்த பெண்ணின் தோற்ற ஒற்றுமையில் இருப்பவர் என்று, பிறகென்ன, மண வாழ்க்கை இவனுக்கு கசந்து போகிறது. தற்செயலாக இவன் முன்னர் விரும்பிய பெண்ணே, இவன் வாழ்க்கையில் வருகிறாள். அதனால் எழும் சிக்கல்களுக்குள் கதை நகர்கிறது. பிறகு ஒரு நல்ல நிறைவு.

இப்படியொரு நாட் தோன்றியவுடனே ஒரு படைப்பாளிக்கு எப்படியிருக்கும்? உணவு பிரியர்கள் தங்களுக்குப் பிடித்தமான உணவு வகைகளை கண்டவுடன் 'இதை உண்ணப் போகிறோம்' என்கிற நிறைவுடனும் மகிழ்ச்சியடனும் அமர்வார்கள் அல்லவா? அவ்வாறே ஒரு படைப்பாளிக்கு ஒரு நல்ல கருப்பொருள் மாட்டினால் மிக சந்தோஷமாக அதை விரிவு படுத்திக் கொண்டேயிருப்பான் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பாான்.. சமயங்களில் தூங்கக் கூட முடியாது. உணவு உண்ண முடியாது. அந்தச் சமயத்தில் யாராவது தொந்தரவு செய்தால் பயங்கர கோபம் வரும்.

என் இளம் வயதில் நண்பன் ஒருவன் அவனுடைய கல்லூரிக்காக நாடகம் எழுதச் சொல்லிக் கேட்டான்

(முகநூலில் இருக்கிறான். tag செய்கிறேன். Ravi Chandra Jiddu Jrc ரவி, நினைவிருக்கிறதா? :)

அப்போதைய வயதில் என்ன எழுத வரும்? பார்த்துக் களித்த கிரேசி மோகன், சேகர் வகையறா நகைச்சுவை நாடகங்கள்தான். ஒரு போலி டாக்டரைப் பற்றிய நாடகம். அவனிடம் பேசி விட்டு இரவு வீட்டில் சென்று படுக்கிறேன். மனம் அதைப் பற்றிய சிந்தனையிலேயே இருக்கிறது. ஓர் அவுட்லைன் உருவாகியது.. யோசிக்க யோசிக்க நகைச்சுவை துணுக்குகள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன.என்னால் படுக்கவே முடியவில்லை. உடனே எழுந்து ரஃப் நோட்டை எடுத்து மனம் சென்ற படி அதை எழுதிக் கொண்டேயிருந்தேன்.

எதற்காக இதைச் சொல்ல வருகிறேன் என்றால் புதுமுக இயக்குநர்கள் தங்கள் முதல் படங்களை பல வருடங்களாக அப்படி யோசித்து யோசித்து இழைப்பார்கள். அதன் உண்மையான உழைப்பு ஸ்கிரிப்டில் தெரியும்.

அவர்களைப் பற்றிய எவ்வித அறிமுகமும் இல்லாமல் இம்மாதிரியான இயக்குநர்களின் முதல் படங்களை திரையரங்கில் பார்க்கும் போது மனம் ஆச்சரியத்தில் பொங்கி வழியும். கரு.பழனியப்பனின் இந்த படம், பாார்த்திபனின் புதிய பாதை, சுசி கணேசனின் .ஃபைவ் ஸ்டார், வெற்றிமாறனின் 'பொல்லாதவன்" ' ராஜகுமாரனின் 'நீ வருவாய் என' .. இப்படியொரு பட்டியலைச் சொல்ல முடியும்.

ஆனால் இவர்கள் அடுத்து சில படங்களிலேயே காணாமல் அல்லது நீர்த்துப் போய் விடுகிறார்கள். எல்லாவற்றிற்கும் இவர்கள் சொந்தமாகவே யோசிக்க வேண்டும் என்பது கூட இல்லை. நல்ல கதாசிரியர்களை, திரைக்கதையாசிரியர்களை அழைத்துக் கொண்டால் கூட போதும். ஷங்கர் போன்றவர்கள் இந்த விஷயத்தில் கில்லியாக இருக்கிறார்கள்.

பழைய படத்தின் தலைப்பைக் கொண்ட இந்தப் படத்தை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இது இயக்குநரின் சொந்த திரைக்கதையாக இருக்குமா? அல்லது வேறு எந்த படத்திலிருந்தாவது இன்ஸ்பையர் ஆனதா என்று வேறு தோன்றி விட்டது. தமிழ் என்றால் மட்டம் என்கிற தாழ்வுணர்வினால் அல்ல. சிலர் அப்படி கெடுத்து வைத்திருக்கிறார்கள்.


***


இன்று புறநகர் ரயிலில் வந்து கொண்டிருக்கும் போது பிரமிளின் இலக்கியக்கட்டுரைகள் தொகுதி நூலை வாசித்துக் கொண்டிருந்தேன். (சு.ராவின் ஜே.ஜே.சில குறிப்புகள் புதினத்தை அடித்து துவம்சம் செய்திருக்கிறார் பிரமிள். கட்டுரையின் தலைப்பு: புதிய புட்டியில் பழைய புளுகு).

பின்னாலிலிருந்து எவருடைய மொபைலில் இருந்தோ இளையராஜாவின் சில அற்புதமான 80-களின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.

இதை சொல்வதற்காக மன்னிக்கவும் "வேண்டுமென்றே இழுக்கிறான்' என்று ராஜா ரசிகர்கள் கோபிக்க வேண்டாம். இளையராஜாவின் அற்புதமான இசை எனும் போதே அது எண்பதுகளின் இசை என்பதை மனது தன்னிச்சையான பின்னொட்டாக இணைத்துக் கொள்கிறது.

அந்தப் பாடல்களின் வரிசையில் குறிப்பாக 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி'யில் 'உச்சி வகுந்தெடுத்து'. அதன் இடையிசையில் ஓர் அற்புதமான தாலாட்டு இசை பெண் குரலில் ஹம்மிங்காக வரும். பாடிப்பார்த்தால் சற்று சிரமமானது. தொடர்ந்து வரும் ஷெனாயின் எளிமையான ஆனால் அபாரமான இசைத்துணுக்கும்.

நான் சிரமப்பட்டு நூலில் கவனம் செலுத்த முயன்றாலும் கவனம் தன்னிச்சையாக இசையின் மீதே சென்றது. பிரமிளின் உரைநடையை வாசிப்பதே ஒரு சவால். சில வாக்கியங்களை இரண்டு மூன்று முறை வாசித்தால் கூட ஜீரணிப்பது கடினம்.

புத்தகத்திற்கும் இசைக்கும் இடையில் தத்தளித்தேன். நல்ல பசியுடன் ஒரு விருந்திற்கு சென்றவன், அங்கு பரிமாறப்பட்டிருக்கும் விதம் விதமான உணவு வகைகளை கண்ணால் பார்த்ததிலேயே மனம் நிறைந்து அதனால் சரியாக உண்ண முடியாமல் ஒரு நிறைவின்மையை அடைவான் அல்லவா, அப்படி ஆகி விட்டது இந்த காலைப் பொழுது.


***


அபிலாஷ் எழுதிய இந்தப் பதிவில் எழுப்பப்பட்ட கேள்வி எனக்கும் கூட தோன்றியிருக்கிறது. எப்படி சில எழுத்தாளர்களால் அவர்கள் எந்தக் காலத்திலோ நுகர்ந்த படைப்புகளைக் கூட எப்படி பசுமையாக நினைவில் வைத்திருக்கிற முடிகிறது? சமீபத்திய பதிவுகளிலும் துல்லியமாக நினைவிற்கு கொண்டு வர முடிகிறது?

அபிலாஷ் விளக்கியதை தவிர்த்து என்னளவில் நானும் சில விஷயங்களை சுருக்கமாக சொல்ல விரும்புகிறேன்.

இதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று சிறிய பாதை, இரண்டு பெரிய பாதை. இரண்டு பாதைகளுக்குமே சற்று முன் தயாரிப்பும் உழைப்பும் வேண்டும். சிறிய பாதைக்கு நிறையவும் பெரிய பாதைக்கு சுமாராகவும். ஏனெனில் அதில் உழைப்பு முன்னமே செலுத்தப்பட்டிருப்பதால்.

முதலில் சிறிய பாதை

பேயோன் எழுதிய பழைய ட்வீட் ஒன்று நினைவிற்கு வருகிறது. (நினைவிலிருந்து)

இலியாசோ பினாகோவின் திரைப்படம் நேற்று பார்த்தேன். யாரு பெத்த பிள்ளையோ. இப்போது1982--லேயே இதைப் பார்த்ததாக கட்டுரை எழுத வேண்டும்'

சிறிய பாதை என்பது இந்தக் கிண்டலில் சொல்லப்படுவதைப் போல பெயர்களை மட்டுமே உதிர்த்துச் செல்வது. அல்லது நாவலின், திரைப்படத்தின் கதைச்சுருக்கத்தை வாசித்து விட்டு அதனை முன்னமே வாசித்து ஆராய்ந்திருப்பதைப் போன்ற உணர்வுடன் ஒரு பாவ்லா.

இலக்கியத்திற்குள் அப்போதுதான் நுழைகிற எளிய வாசகன் நிச்சயம் இந்த ஜோடனையில் மயங்கி விழுவான். ஆனால் சம்பந்தப்பட்ட படைப்பை ஊன்றி படித்திருந்தவர்கள் இந்தப் போலிகளை உடனே அடையாளங் கண்டு கொள்வார்கள்.

இரண்டாவது பெரிய பாதை.

நிச்சயம் இதற்கான நிறைய உழைப்பும் நுண்ணுணர்வும் வேண்டும். உண்மையாகவே அந்தப் படைப்பை நீங்கள் வெவ்வேறு இடைவெளிகளில் ஊன்றி வாசித்திருக்க வேண்டும். அதனுடன் வாழ்ந்திருக்க வேண்டும். என்றாலும் கூட சில வருடங்கள் கழித்து அதை மேற்கோள் காட்ட விரும்பினால் சில விஷயங்கள் மங்கலாகத்தான் தெரியும். மேற்கோள் காட்டுவதற்கு முன்னால் அவசரம் அவசரமாக மீள்வாசிப்பு செய்தாலும் அதன் ஒட்டுமொத்த அனுபவத்தை ஓரளவிற்கு நினைவிற்கு கொண்டு வரலாமே ஒழிய அதன் நுண்தகவல்களை, உணர்வுகளை நினைவிலிருந்து கொண்டு வருவது கடினம்.

இதற்கான ஒரு வழி இருக்கிறது.

அது நீங்கள் எந்தவொரு படைப்பை வாசித்தாலும், திரைப்படத்தைப் பார்த்தாலும் அவற்றை பற்றிய உங்களின் எதிர்வினையை, அனுபவத்தை ஒரு சிறிய குறிப்பாக வரிசைப் படுத்தி எழுதி வைத்து விட வேண்டும். சோம்பேறித்தனமல்லாமல் உடனுக்குடன் செய்தாக வேண்டும். அடுத்தடுத்த வாசிப்புகளில் இதை இன்னமும் மேம்படுத்தி வைத்துக் கொள்ளலாம்..

பிறகு எத்தனை வருடங்கள் கழித்து இந்த படைப்பை மீள்நினைவு செய்ய வேண்டியிருந்தாலும், இந்தக் குறிப்புகளை மட்டும் கூட வாசித்தால் போதும். ஒரு பெரிய நூல் கண்டிலிருந்து ஒரு நுனியை மட்டும் இழுத்தால் அந்த பெரிய நூல் வந்து கொண்டேயிருப்பது போல அந்த படைப்பைப் பற்றிய அனுபவத்தை பசுமையாக ஏறத்தாழ வெளியே கொண்டு வர முடியும்.


***


அரசியலில் இருந்து விலகப் போவதாக தமிழருவி மணியன் தெரிவித்திருந்த கருத்தையொட்டி பல நகைப்புக் குறிகளும் கேலி ஆரவாரங்களும் இணையத்தில் நிறைந்திருப்பதைக் கண்டேன்.

தமிழருவி மணியன் பல்வேறு சமயங்களில் முரண்பட்ட, நடைமுறை அரசியலுக்கு ஒவ்வாத லட்சியவாத கருத்துக்களைக் கூறியிருக்கலாம். அவருடைய நோக்கில் அதற்கான நியாயங்கள் இருக்கலாம். அவருக்கு அரசியல் சாதுர்யங்கள் இல்லாமலிருக்கலாம். ஜனநாயக வெளியில் இதற்கான வெளி அனுமதிக்கப்பட வேண்டும் என்பது அடிப்படை.

ஆனால் அவர் அடிப்படையில் நேர்மையான கொள்கைகளையும் செயற்பாடுகளையும் கொண்டவர். அதிலும் சமகால அரசியலின் ஊழல்களையும் வெளிப்படையான முறைகேடுகளையும் காணும் போது இவ்வாறான நேர்மைகளின் மதிப்பு அதிகமாக நமக்கு உறைக்கிறது. இவ்வாறான விதிவிலக்குகளின் இருப்பாவது நமக்கு தேவையானதாக இருக்கிறது.

ஆனால் இவ்வாறானவர்கள் அரசியலில் விரக்தியற்று வெறுப்புற்று விலகுவதாக அறிவிப்பதும் அதற்கு பொதுவெளியில் இருந்து மகிழ்ச்சியும் வரவேற்பும் இருப்பதும் ஒருவகையில் ஆபத்தான போக்கு. நேர்மையான தனிநபர்கள் அரசியலில் இயங்க லாயக்கு அற்றவர்கள், நகைச்சுவையாகப் பார்க்கப்படுகிறவர்கள் என்கிற தொனி வருங்காலத்தில் நேர்மை என்பதே அரசியலில் துளியும் இல்லாத ஒரு நிலைக்கு இட்டுச்செல்லும். இது போன்றவர்களின் தோல்வியும் விரக்தியும் இளைய தலைமுறை நேர்மையாளர்களையும் பாதிக்கும், பின்னடையச் செய்யும்.

அர்விந்த் கெஜ்ரிவால் -ஆம் ஆத்மி போல ஒரு மாற்று அரசியல் இங்கு மலரப்படாமலேயே கூட போய் விடும்.

சூது கவ்வும் திரைப்படத்தில் வரும் ஒரு நேர்மையான அரசியல்வாதியை ஒரு நகைச்சுவையாளராக நாம் பார்க்கும் போக்கு நிஜத்திலும் தொடர்வது சமூகத்திற்கு நல்லதல்ல.


***


ரஹ்மானின் புதுப்பாடலை முதல் இரண்டு முறைகளிலேயே கேட்டு மதிப்பிட முயல்வது அறியாமை. மனைவி கொண்டு வரும் புது ரெசிப்பியை நன்றாக உள்ளது அல்லது இல்லை என்று சொல்ல முடியாத தடுமாற்றம் ஏற்படும். இரண்டிற்குமே கடுமையான பின்விளைவுகள் உண்டு. என்றாலும் சமீபத்திய ராசாளியை பார்க்க முயல்வோம்.

முதலில் ஒன்றை சொல்ல வேண்டும். இது ஒரு அட்டாசமான fusion. செவ்வியல் இசையையும் நவீன இசையையும் ஒலிகளையும் உறுத்தாமல் மிகப் பொருத்தமாக கலந்து அபாரமான இசை விருந்து படைக்கிறார் ரஹ்மான். பல்லவியை முதலில் கேட்ட போது இந்திப் படத்திற்கு முயலப்பட்ட மெட்டோ என்று ஏனோ தோன்றிற்று. போலவே ஆண் குரல் ஹரிசரண் என்று முதலில் நினைத்து ஏமாந்தேன். பிறகுதான் சத்யபிரகாஷ் என்று தெரிந்தது. மனிதர் உயர் ஸ்தாயிகளில் அநாயசமாக உலவும் லாகவம் பிரமிக்க வைக்கிறது. ஷாஷாவின் குரலும் அபாரம்.

ரஹ்மானின் சமீபத்திய பாடல்களை முழுக்க முழுக்க அவர் விருப்பப்படி உருவாக்குகிறார் என யூகிக்கிறேன். அதாவது வணிகரீதியாக வெற்றியடைய வேண்டும் என்கிற கட்டாயத்திற்கோ பதட்டத்திற்கோ உட்படாமல் சுதந்திரமாக விளையாடுகிறார். குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பாடலின் இடையிசைகள் இரண்டுமே இசை விமர்சகர்களால் கொண்டாடித் தீர்க்கப்படப் போகின்றன. இந்த நவீன ஒலிகளை கச்சேரிகளில் reproduce செய்ய முடியாமல் இசைக்குழுக்கள் தடுமாறப் போகிறார்கள். முதல் இடையிசையில் சட்டென்று திருவையாறில் நிற்கின்ற பரவச அனுபவம் கிடைக்கிறது. இந்தப் பாடலின் சிறப்பை உணர முக்கியமான அளவுகோல், எங்கே இது செவ்வியலில் இருந்து நவீனத்திற்கு மாறி மாறிச் செல்கிறது என்பதைக் கவனித்தாலே போதும் என்று தோன்றுகிறது.

முதல்பகுதியில் அருணகிரிநாதரின் 'முத்தைத்திரு' பாணி உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. வேகமாக நகரும் இந்த சந்தங்கேற்ப பாடல் வரிகள் எழுதுவது மிக கடினம். தாமரை எவ்வித நெருடலும் இல்லாமல் பொருத்தமான சொற்களால் அநாயசமாக இதைக் கடந்து செல்கிறார். யார் சொல்வது அன்பை, யார் எய்வது அம்பை.. போன்ற திரைசாயல்களுடன் கூடிய வரிகளிலும் கவர்கிறார்.

எனக்கு நினைவுள்ளவரை இம்மாதிரியான fusion இசை பாணிப்பாடல் கெளதமின் படங்களில் இதுவரை உபயோகப்படுத்தப்படவில்லை என்றே நினைக்கிறேன். இதுவே கதைச்சூழல் குறித்த ஆர்வத்தை ஊட்டுகிறது. நாயகன் மற்றும் நாயகியின் மெல்லிய ஈகோ மோதல் அது சார்ந்த ஊடல் இதன் பின்னணியாக இருக்கலாம்.

'தள்ளிப் போகாதே'விற்கு பிறகு இந்த ராசாளியை விட்டு தள்ளிப் போக முடியாமலிருப்பதுதான் இப்போதுள்ள பிரச்சினை.


***


தமிழ் சினிமாக்களில் என்றல்ல மையநீரோட்ட இந்தியச் சினிமாக்களில் வசனம் அதிகமாக இருக்கிறது என்பதற்கான ஒரு நடைமுறை உதாரணத்தை நீண்ட காலமாக உணர்கிறேன்.

இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்த சில அயல் சினிமாக்களை சப் -டைட்டில் சரியாக பொருந்துகிறதா என்று தற்காலிகமாக ஓட்டிப் பார்ப்பது வழக்கம். சப்-டைட்டில் சரியாகப் பொருந்தாத படங்களை வைத்துக் கொண்டு சமயங்களில் பைத்தியம் பிடிப்பது போல் அவற்றை சரிசெய்ய முயன்றிருக்கிறேன்; தேடியிருக்கிறேன்.

இவ்வாறாக ஓட்டிப் பார்க்கும் போது காட்சிகளும் பின்னணி இசையும்தான் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்குமே ஒழிய வசனம் பேசும் பகுதி சட்டென்று வராது. அது வந்தால்தானே சப் -டைட்டில் சரியாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்?

ச்சீ. நாய்களா பேசித் தொலைங்க.. என்று சமயங்களில் எரிச்சலே வந்து விடும். முன்னும் பின்னுமாக நகர்த்துவதில் எங்காவது பேசுவார்கள். சப் -டைட்டில் சரியாக பொருந்தியவுடதான் அப்பாடா என்றிருக்கும்.

ஆனால் இந்தியத் திரைப்படங்களில் இவ்வாறில்லை.

சற்று நகர்த்தினாலே போதும், கிராமப்புறங்களில் சொல்லப்படும் பழமொழியைப் போல 'ஓலைப்பாயில் நாய் மோண்ட கதையாக' சளசளவென்று பேசத் துவங்கி விடுவார்கள்.

அந்த மாதிரி பிரச்சினையே கிடையாது.


***



தமிழ் படத்தின் இயக்குநர்கள் தங்கள் படத்தின் ஒவ்வொரு பிரேமையும் சபீனா கொண்டு கழுவி பின்பு கொலோன் போட்டு துடைத்தது போல் DI -ல் பளிச்சென்று ஆக்குகிறார்கள். வண்ணங்கள் கண்ணைப் பறிக்கின்றன.

ஆனால் இந்த கதை, திரைக்கதை என்கிற ஆதார வஸ்துவில் மாத்திரம் நூற்றாண்டு தூசி படிந்திருக்கிறது.

இந்த மனைவிமார்கள் அவசர உப்புமாவைக் கிளறி தட்டில் வைத்து கடாசி விட்டு அவசரமாக சென்று சீரியலில் கண்ணைப் பொருத்திக் கொள்வது போல இந்த தமிழ் இயக்குநர்கள் தாங்கள் செய்த உப்புமாவை செய்தவுடன் ஒரு வாய் ருசி கூட பார்க்க மாட்டார்களா?


***

வீட்டில் வாசிக்காமல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களைப் பார்த்து 'நேரமில்லையே'' என்று பெருமூச்சோடு தினமும் கடந்து செல்வது 'வேலைக்கு ஆகாது' என்று கடந்த ஒரு வாரமாக ஒரு புதிய வாசிப்பு முறையை எனக்குள் நானே அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

அதன்படி தினமும் ஒரு புத்தகத்தை Random ஆக எடுத்து அதிலிருந்து ஒரு சிறுகதையையோ, கட்டுரையையோ, நாவல் என்றால் ஓர் அத்தியாயத்தையோ என நூலின் பகுதியை வாசித்து விட்டு வைப்பது.

இதை அனுதினமும் கட்டாயமாக பின்பற்றியே ஆவது என்று எனக்குள் டைம்பாம் செட் செய்து கொண்டிருப்பது நல்ல பலனைப் பெற்றுத் தருகிறது.

()

இன்று கிடைத்தது, எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் 'கனவு மெய்ப்பட வேண்டும்' என்கிற பழைய சிறுகதைத் தொகுதி. நூலாசிரியரே ஒரு விழாவில் அன்பளிப்பாக தந்தது. கூட ஒரு கவிதைத் தொகுதியும் (கவிதை என்றாலே இலவச இணைப்பு மாதிரி சொல்கிறேனே என்று கோபித்துக் கொள்ளக்கூடாது).

சிறுகதைத் தொகுதியில் இருந்து பைபிளைப் பிரித்து ஒரு வாசகத்தை படிப்பது போல நூலைப் பிரித்து தற்செயலான ஒரு சிறுகதையைப் படித்தேன்.

'எங்கேயோ பார்த்த ஞாபகம்' - இது சிறுகதையின் தலைப்பு.

வெகுசன இதழ்களின் பாணியை நினைவுப்படுத்தும் நடை.. நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் இலக்கியப் பயணம் இதிலிருந்து நகர்ந்து எவ்வளவோ முன்னகர்ந்து விட்டது. எனவே இப்போது அவர் எப்பவோ எழுதிய இந்த நூலின் உரைநடையை நினைவுகூர்வதினால் அவருக்கு ஒருவேளை சங்கடம் நேரலாம். என்றாலும் இது 'மூக்கில் சளி ஒழுகிக் கொண்டிருந்த' அவருடைய மகனின் பழைய புகைப்படம்தானே? பிரியம் இருக்கத்தானே செய்யும்? :)

()

சுவாரசியமான நடை. கதையின் உள்ளடக்கம் இதுதான்.

ஒரு சினிமாவின் படபூஜை. இருபத்தைந்து வருடங்களாக தொடர்ந்து வெற்றியையே காணும் ஒரு சூப்பர் ஸ்டார்தான் அந்தப் படத்தின் நாயகன். எனில் அவனுடைய வயதை உத்சேதமாக கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இந்தப் படத்திற்கு இரண்டு இளம் நாயகிகள். அதில் ஒரு நாயகியின் வனப்பும் இளமையும் இவனைக் கவர்கிறது. என்றாலும் அவளை எங்கேயோ பார்த்த ஞாபகமும் வருகிறது. நினைவு பிடிபடவில்லை. தன் பி.ஏ. விடம் கண்காட்டி விட்டு நகர்கிறான்.

அது ஒரு உயர் ரக ரிஸார்ட். நடிகன் அங்குதான் வழக்கமாக தனக்குப் பிடித்த பூக்களை முகர்ந்து கசக்குவது வழக்கம். இளம் நடிகைக்காக காத்திருக்கிறான். அவள் வர சற்று தாமதமாகிறது. சற்று எரிச்சலுடன் 'ஏன்?" என கேட்கிறான். நாயகி சற்று மூக்கைச் சிந்திக் கொண்டே "என் அம்மாவிடம் பர்மிஷன் வாங்க தாமதமாகி விட்டது" என்று சொல்லி விட்டு கூடுதலாக ஓர் அதிர்ச்சி தகவலையும் சொல்கிறாள். "நான் உங்களுக்கு மகள் முறை வேண்டும்" .

அவளுடைய தாயின் பெயரைச் சொல்கிறாள். ஃபீல்டில் இருந்து முன்பே ஒதுங்கி விட்ட பழைய நடிகை அவள். நடிகனுடன் பழக்கம் உண்டு.

இளம் நாயகி பின்பு இதையும் சொல்வதுதான் யதார்த்தமான, பரிதாபமான நகைச்சுவை

'இதற்காக என்னை இந்தப் படத்திலிருந்து தூக்கி விடாதீர்கள். இதிலிருந்துதான் என் எதிர்காலமே துவங்க வேண்டும்' என்று சொல்லி கோ'வென்று அழுகிறாள்.

()

மகள் பாத்திரம், பிறகு அதே பெண்ணுடன் நாயகி பாத்திரம், பின்பு நாயகிக்கு வயதானவுடன் அவளுடைய மகளுடன் நாயகி பாத்திரம் என்று இளம் பெண்களுடன் மட்டுமே நடிக்கும் கிழட்டு கதாநாயகர்களை செருப்பால் அடித்த கதை இது.


***


லக்கேஜை தோளுக்கு மேல் சிரமப்பட்டு தூக்கி மேலேயுள்ள லாஃப்டிற்குள் எப்படியாவது அடித்துப் பிடித்து திணித்து பெருமூச்சுடன் இறங்கி வருவதைப் போல இசையமைப்பாளரின் சிக்கலான மெட்டிற்குள் தமிழை மடக்கி ஒடித்து துண்டித்து கொலை செய்து திணிக்கும் 'மீட்டர்' பாடலசிரியர்களின் இடையே அந்த வணிக சிக்கல்களுக்குள்ளும் தங்களால் இயன்றவரைக்குமான கவித்துவத்தையும் கதைச் சூழலுக்கான பொருத்தமான வார்த்தைகளையும் இட்டு மேலதிக அழகு செய்யும் பாடலாசிரியர்களும் இன்னமும்் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பாலாஜி சக்திவேலின் 'காதல்' திரைப்படத்தில் வரும் இந்தப் பாடல் எனக்கு பிடித்தமானது. கேட்பவர்களின் மனதையும் உயிரையும் கரைக்கும் சோகத்தின் பாவம் இதில் மிக அருமையாக வெளிப்பட்டிருக்கும். ஹரிசரண் அற்புதமாக பாடியிருப்பார். இதற்கு அபாரமாக இசையமைத்த ஜோஷ்வா SRIDHAR ஏன் பிறகு காணாமற் போய் விட்டார் என்று தெரியவில்லை..

இந்தப் பாடலை எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன். சமயங்களில் கண்கசியவும். ஆனால் இன்று காலையில் கேட்கும் போது இந்த ஒரு வரியின் பொருத்தமும் அழகும் என்னை பிரமிக்க வைத்தது.

'மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடுகட்டும்'

இந்தப் பாடலின் சூழல் நமக்கு தெரியும். ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண் ஒருத்தியை தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த இளைஞன் கூட்டிக் கொண்டு ஓடுகிறான். தன்னை நம்பி வந்து விட்ட அவளை ஆறுதல்படுத்தும் நோக்கில் அந்த இளைஞன் பல நம்பிக்கையான வார்த்தைகளை கூறுகிறான்.

தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய் தோழியே
இரண்டுமாய் என்றுமே நான் இருப்பேன்
தோளிலே நீயுமே சாயும் போது
எதிர்வரும் துயரங்கள் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்

இது பொதுவாக ஆண் சொல்லும் நம்பிக்கையான உறுதிமொழிகள்தான்.

ஆனால் முன்னர் குறிப்பிட்ட வரியின் பொருள் மிகவும் ஆழமானது. பொருளியல் உலகைக் கூட எப்படியாவது எதிர்கொள்ள முடியும். ஆனால் சாதிமறுப்பு திருமணம் செய்த காரணத்திற்காக, தாம் எதிர்கொள்ளவிருக்கும் சாதி ஆவணக் கொலைகளின் பயங்கரத்தை அந்த இளம் காதலர்கள் உணர்ந்துதான் இருக்கிறார்கள்.

சுற்றிலும் ஆபத்து. எவர் வேண்டுமானாலும் காட்டிக் கொடுக்கலாம், தகவல் சொல்லலலாம். இதற்கிடையில்தான் வாழ்ந்தாக வேண்டும்.

என்றாலும் கூட அந்த நம்பிக்கையை இளைஞன் ஊட்டுகிறான்.

'மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடுகட்டும்'

சுற்றிலும் உயர்அழுத்த மின்சாரம் பாயும் கொலைகாரக் கம்பிகள் இருந்தாலும் காகங்களும், மைனாக்களும் அதன் இடையில்தான் ஊடாடுகின்றன, கூடுகட்டுகின்றன, வாழ்கின்றன. அதிர்ஷ்டம் இல்லாத பறவைகள் மின்சாரத்தில் கருகி சாகின்றன. என்றாலும் வாழும் நம்பிக்கையை அவை விடுவதில்லை.

சாதி வெறியர்களின் ஆபத்தை மின்சாரத்திற்கும் அதற்கு இடையில் வாழ வேண்டிய காதலர்களை கூட்டுப்பறவைகளுக்கும் உவமையாக எழுதிய நா.முத்துகுமாரை வியக்கிறேன்.

https://www.youtube.com/watch?v=E-cQMjx0HNg


***

'நீ எந்த அரசியல்?' என்கிறார்கள். இடதா வலதா? எல்லா அரசியல்களிலுமே அவரவர்களுக்கான சார்புகளும் சாதகங்களும் நல்லவைகளும் தீயவைகளும் சுதந்திரமும் ஃபாஸிஸமும் உண்டு.

குதிரைக்கு கடிவாளம் போட்டது போல் ஒரு குறிப்பிட்ட அரசியலுக்குள் புகுந்து கொண்டு மற்றவற்றை கண்மூடித்தனமாக புறக்கணிக்கும், நிராகரிக்கும், வெறுக்கும் அரசியல் என்னுடையதில்லை.

அன்னப்பறவை போல எல்லாவற்றிலும் உள்ள சாதகங்களை மட்டும் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். ஆனால் இதற்கு என்ன பெயரென்று தெரியவில்லை. குழப்ப அரசியலாக இருக்கலாம்.


suresh kannan

Wednesday, June 01, 2016

முகநூல் குறிப்புகள் - 4

பள்ளித் தேர்வு முடிவுகள் வரும் நாளிற்கு ஒரு வாரத்திற்கு முன்பேயே 'மாணவச் செல்வங்களே, தற்கொலை செய்து கொள்ளாதீர்கள். தோல்வி என்பது வாழ்க்கையின் ஒரு பகுதிதான்' என்கிற அளவிற்கு சுயமுன்னேற்ற உபதேசிப்பவர்களின் பயமுறுத்தும் கட்டுரைகள் 'தொணதொணவென்று' அதிகம் வர ஆரம்பித்து விடுகின்றன.

யார் பதட்டமாக இருக்கிறார்கள் என்றே குழப்பமாக இருக்கிறது.

உண்மையில் இந்தக் கட்டுரைகள் மாணவர்களின் பெற்றோர்களை நோக்கி உரையாட வேண்டுபவை. நான் கவனித்த வரை 'தான் தேர்வில் தோற்று விட்டோமே' என்று தற்கொலையில் ஈடுபடும் மாணவர்கள் மிக குறைவு. அதிலிருந்து மீள முடியும் என்கிற இளம்மனதுக்குரிய நம்பிக்கையும் அலட்சியமும் அவர்களுக்கு இருக்கிறது.

அவர்களை தற்கொலையை நோக்கி செலுத்துவது அதிகம் எதுவென்றால் 'அடப்பாவி... இவ்ளோ பீஸை கட்டி படிக்க வெச்சேனே.. எனக்கு அப்பயே தெரீயும். படி படி-ன்னா சரி.. சரி..ன்னு ஏமாத்திட்டே இருந்தான்.ஐயோ.. ஒரு வருஷம் வீணாப் போயிடுமே.. மத்த பிள்ளைங்கள்லாம் காலேஜ் போகும் போது இவன் மாத்திரம் தடிமாடு மாதிரி வீட்ல இருப்பானே. கட்ன பணம்லாம் வீணா போச்சே.. பாவி ..பாவி..

என்கிற பெற்றோர்களின் புலம்பல்களையும் ஒப்பிடல்களையும் எதிர்கொள்ள இயலாத குற்றவுணர்வில்தான் மரணத்தை நாடுகிறார்கள், தேர்வில் தோற்றதால் அல்ல.


***


மெலடி பாடல்களை மட்டும்தான் ரசித்து பகிர வேண்டும் என்கிற கட்டாயம் ஏதுமில்லை. வேகமான தாளயிசையில் அதிர வைக்கும் பாடல்களையும் ரசிக்கலாம். அப்படி இன்று காலை நான் கேட்டு மிரண்ட பாட்டு இது.

மரகதமணி எனப்படும் கீரவாணி ஓர் அருமையான இசையமைப்பாளர். அழகன், நீ பாதி நான் பாதி (இதில் நிவேதா என்கிற ஒற்றைச் சொல்லை மட்டும் வைத்துக் கொண்டு அவர் இசையமைத்திருக்கும் அபாரமான பாடலைக் கேளுங்கள்) என்று தமிழில் நல்ல திரையிசைப் பாடல்களை தந்திருந்தாலும் அதிகம் கவனிக்கப்படாதவர்; தெலுங்கு இசையமைப்பாளராகவே அறியப்படுபவர்.

ஓர் ஈயை கதாநாயகனாக வைத்துக் கொண்டு ஒரு ஃபேண்டசி படம் தர முடியும் என்று நினைப்பதற்கே ஒரு கெத்து வேண்டும். அருமையான திரைக்கதையையும் நுட்பத்தையும் வைத்து அதை சாதித்த ராஜமெளலியை எத்தனை பாராட்டினாலும் தகும்.

இந்தப் பாடலில் ஓர் ஈ ஒரு மனிதனை பழிவாங்கத் துடிக்கிறது. அதற்கான அழுத்தமான வெறியும் வன்மமும் கருணையின்மையும் இந்தப் பாடலில் குருதித் துளிகளாக தெறித்து விழுகிறது.

கிட்டத்தட்ட குழந்தைகளின் ரைம்ஸ் போல விளையாட்டாக துவங்கும் பாடல் மெல்ல மெல்ல அதன் பயங்கரத்திற்கு நகர்கிறது.

அபாரமாக எழுதப்பட்ட பாடல் வரிகளும்(மதன் கார்க்கி) இதன் பயங்கரத்திற்கு பொருத்தமாக துணை போகிறது.

நான் உடனடியா செஞ்சு முடிக்க
பத்து விடயம் கிடக்குது

One உன்ன கொல்லணும்
Two உன்ன கொல்லணும்

என்று பத்து வரை வில்லனை கொல்வது மட்டுமே முக்கியமான அஜெண்டா என்கிற வெறித்தனம் பாடல் வரிகளில் தெறிக்கிறது.

கதற கதற பதற பதற
சிதற சிதற சிதற சிதற
வெட்டி வெட்டி வெட்டி கொல்லணும்

என்பது அந்தப் பயங்கரத்தின் உச்சம். திரைக்கதையின் இணையாக பயணிப்பவர்கள் இந்தப் பழிவாங்கலின் முக்கியத்துவத்தை உணர்வதால் அவர்களும் இதனுடன் உற்சாகமாக இணைந்து கொள்வார்கள். அது இயக்குநரின் வெற்றி.

ஈ தன் சிறிய உருவத்தின் எல்லைக்குள் செய்யக்கூடிய சாத்தியங்களை வைத்துக் கொண்டு ஆனால் பெரிய அளவிலான பழிவாங்கும் உத்திகளை சுவாரசியமாக யோசித்து காட்சி வடிவில் சாத்தியமாக்கியிருக்கிறார் ராஜ்மெளலி.

அணு குண்டு போடும் வண்டு நானு
தொடங்கிடுச்சு போரு...

உன் கோட்டைக்குள்ள வாறேன்
உனை வேட்டையாடப் போறேன்
உன் கண்ணுக்குள்ள கைய விட்டு
ஆட்டிப்பாக்கப் போறேன்...

வாசிப்பதற்கு எளிய வரிகள் போல் தோன்றினாலும் மெட்டின் மீட்டருக்குள் ஆனால் அழுத்தமான, பொருத்தமான, தொடர்ச்சியான வரிகளை எழுத வேண்டும் என்கிற சவாலை வெற்றிகரமாக தாண்டியிருக்கிறார் மதன் கார்க்கி.

உச்சபட்ச டெஸிபலில் வைத்து இந்தப் பாடலை கேட்டுப் பாருங்கள். திருப்பி அடிக்காத கோயிஞ்சாமி எவராது எதிரே மாட்டினால் அவர் கழுத்திலேயே பொளேர் என்று அடிக்கத் தூண்டும் எனர்ஜியும் வெறியும் இந்தப் பாட்டில் கலந்து சீறுகிறது.

முழு திரைப்படத்தையும் மீண்டுமொருமுறை பார்க்க வேண்டும் என்கிற ஆவலையும் ஏற்படுத்துகிறது. 



இதை ஏற்கெனவே சொல்லி விட்டேனா என்று தெரியவில்லை. என்றாலும் மறுபடியும் சொல்லலாம். தவறில்லை. எங்கள் வீட்டில் பொதுவாக விஜய் டிவிதான் பெரும்பான்மையாக ஓடும். எனவே மற்ற சானல்களின் ரியாலிட்டி ஷோக்களை நான் அவ்வளவாக கவனித்ததில்லை.

இதில் 'கனெக்ஷன்ஸ்' மற்றும் ' நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்' போன்ற அபத்தமான நிகழ்ச்சிகளை தடைசெய்ய எவராவது பொதுநலவழக்கு தொடருவாராயின் அதை ஆதரித்து என் பங்காக இப்போதே ரூ.101/ - தரத் தயார்.

என்னதான் பல்வேறு ரசனைக்குட்பட்ட பொதுதரப்பின் மனோபாவத்தை கணித்து அதற்கேற்ப நிகழ்ச்சிகளை வடிவமைப்பது கடினமானதுதான் என்றாலும் இத்தனை அபத்தமாக கூட நிகழ்ச்சி இருக்க முடியுமா என்று எண்ண வைத்தவை. தமிழை சாகடிக்க பல்வேறு வழிகளில் இதுவுமொன்று.

இன்னொரு கொடுமையையும் பார்த்தேன். ஆங்கில தொலைக்காட்சிகளில் வரும் சாகச நிகழ்ச்சிகளை அப்படியே நகல் செய்து 'regionalise' செய்கிறோம் என்கிற பெயரில் இங்குள்ள தொந்தி, தொப்பை நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் கயிற்றில் தலைகீழாக தொங்கி மூச்சு வாங்கி சில நொடிகளில் ப்பே... என்று அலறியடித்துக் கொண்டு வரும் கொடூரம் சகிக்கவேயில்லை.
:)


***

பொதுவாக காலையில் தொலைக்காட்சி பார்ப்பதில்லை. இன்று செய்திதாள் வர தாமதமானதால் வானிலை குறித்து அறிய தொலைக்காட்சியை இயக்கினேன். சன் டிவியில் இயக்குநர் மெளலியின் நேர்காணல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

மெளலியின் நகைச்சுவை மிக மிக பிரத்யேகமானது; தனித்துவமானது. எளிதில் நகல் செய்ய முடியாதது. சில வசனங்களை அவர்தான் சொன்னால்தான் அதன் தாக்கம் வெளிப்படும். இவரை வழக்கமான மைலாப்பூர் அசட்டு நகைச்சுவை வரிசையில் இணைத்து விட முடியாது.

அந்த நேர்காணலில் மனிதர் அநியாயத்திற்கு அடக்கமாக பேசிக் கொண்டிருந்தார்.

எவரிடமும் உதவி இயக்குநராக அல்லாமல் நேரடியாக இயக்குநர் ஆனது, விளையாட்டை மையப்படுத்தி திரைப்படம் இந்தியாவில் அது வரை உருவாகியில்லாமலிருந்த நிலையில் அஸ்வினி நாச்சப்பாவை வைத்து ஒரு sports drama திரைப்படத்தை பல வருடங்களுக்கு முன்பே உருவாக்கியது. என்று பல விஷயங்களில் அவர்தான் முன்னோடி.

இது தொடர்பான விஷயங்களையும் தொலைக்காட்சி சீரியலில் நடிக்க வந்தது குறித்தும் அலட்டல் ஏதும் அல்லாமல் யாரையோ சொல்வது போல சொல்லிக் கொண்டிருந்தார்.

அவருடைய துவக்க கால திரைப்படங்களான 'மற்றவை நேரில்' 'இவர்கள் வித்தியாசமானவர்கள்' உள்ளிட்ட பல திரைப்படங்களின் பிரதிகள் இன்று காணக்கிடைக்கவில்லை என்பது சோகம்.


***


சுமார் வாரத்திற்கு ஒரு முறை தொலைபேசியில் அழைத்து என் அம்மாவை குசலம் விசாரிப்பது வழக்கம். சமயங்களில் ஒரு வாரம் என்பது இரண்டு வாரங்களாகி ஒரு மாதமாக கூட ஆகி விடுவதுண்டு.

ஒருபக்கம் அது பற்றிய நினைவும் குற்றவுணர்வும் இருந்தாலும் பணியழுத்தம் காரணமாக மனது அதில் செல்லாது. தள்ளிப் போட்டுக் கொண்டேயிருக்கும். சற்று தளர்வாக இருக்கும் சமயங்களில் போன் செய்யும் நினைவு வராமல் தொலையும்.

அவ்வாறு ஒரு மாதமாகி விட்ட சமயங்களில் சற்று தயக்கத்துடன்தான் போன் செய்வேன்.

"என்னம்மா.. எப்படி இருக்க.. உடம்பு எப்படி இருக்கு. இந்த மாசம் சுகர் டெஸ்ட் போனியா?"

எதிர்பார்த்தபடியே மறுபக்கத்திலிருந்து கண்ணகி கிளைமாக்ஸ் கண்ணாம்பா குரலில் ஆவேசக்குரல் பொங்கி வரும்.

"ஏண்டா.. நான் உயிரோட இருக்கறதாவது நினைப்பிருக்குதா? ஒரு போன் பண்ணா என்ன? போன் தேஞ்சு போயிடுமா? என்னா ஏது -ன்னு கூட விசாரிக்க மாட்டியா? ஏன் உன் வீட்டு மகராசி போன் செய்ய வேண்டாம்னு சொல்லிட்டாளா?"

என்று நம்முள் உள்ள குற்றவுணர்வை அதிகப்படுத்துவது போல் புலம்பல் சத்தம் அதிகம் வரும். உடனே டிபன்ஸிவ் டெக்னாலஜியாக நம் மனதிற்குள் ஒரு ரத்தக்கண்ணீர் எம்ஆர்ராதா உருவாகி விடுவார்.

'நாமதான் ஆயிரம் வேலைக்கு நடுவுல போன் செய்ய முடியாம பிஸியாக இருக்கோம். பொழுதன்னிக்கும் சீரியல் பார்த்து பொழுதக் கழிக்கிற அந்த கெழங்கட்டைங்கதான் போன் செஞ்சா என்ன? அது ஏன் நாமளே போன் பண்ணணும்-னு வெயிட் பண்றாங்க?"

ஆனால் அப்படியெல்லாம் கேட்டு விடமுடியுமா? நம் தமிழ் கலாசாரமும் பண்பாட்டு அடையாளங்களும் என்னாவது? நான் அந்தப் பின்புலத்திலிருந்து உருவாகி வந்த ஒரு வரலாற்றுக் கண்ணி அல்லவா?

எனவே எம்.ஆர்.ராதாவை பின்னுக்குத் தள்ளி விட்டு, நீண்ட வருடம் கழித்து தாயைப் பார்க்கும் எம்ஜிஆரின் நெகிழ்ச்சியை வரவழைத்துக் கொண்டு சிவாஜி மாடுலேஷனில் உரையாடலைத் தொடர்வேன்.

"மன்னிச்சிடும்மா.. என்னம்மா.. பண்றது.. வேலைஅதிகம். நீ எப்டிம்மா இருக்கே? வேளா வேளைக்கு மருந்து சாப்பிடறியா?"

இது பாவனை என்று தெரிந்தாலும் மறுபுறத்தின் குரலில் கணிசமான மாற்றமும் கனிவும் தெரியும்.

அதுதான் அம்மா!

:)


***


திருமண வீடுகளில் சிலருக்கு ஒரு கெட்ட வழக்கமுண்டு. 'சாப்பீட்டீர்களா?' என்று ரெண்டு மூணு முறை உறுதிப்படுத்திக் கொள்ள விசாரி்த்தால் போயிற்று. சந்தேகமா.... என்று அவர்களின் கையை கொண்டு வந்து நம் மூக்கின் மீது வைத்துக் காட்டுவார்கள்.

நல்லவேளை, எவருக்காவது வயிற்று உபாதையிருந்து பாத்ரூம் எந்தப் பக்கம் என்று அவர் விசாரித்து நாமும் வழிகாட்டி பின்பு "வேலை முடிந்ததா' என்று மெல்லிய மனித நேயத்துடன் விசாரித்தால் இம்மாதிரியான ஆசாமிகள் என்ன செய்வார்களோ என்று யோசிக்கவே திகிலாக இருக்கிறது.

வாக்களிப்பு முடிந்த நாள் அன்று இணையம் முழுக்க இது போல் கறை படிந்த பல விரல்கள். சாட்சியத்தை நிரூபிக்கிறார்களாமாம். அதில் பல விரல்களில் நகம் வெட்டாத குறை வேறு.

நண்பர் ஒருவரும் கூட அம்மாதிரியான விரல் ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். ஆனால் அன்று அவரால் வாக்களிக்க இயலவில்லை என்று எனக்கு நன்றாக தெரியும்.

"ஏன்யா.. அந்த மாதிரி செய்தீரு?' என்றேன்.

'எவன் விரலோட போட்டோவையோ எடுத்துப் போட்டேன். யாருக்குத் தெரியப் போகுது?" என்றார்.

அடப்பாவிகளா! கள்ள ஓட்டு போடுவார்கள். கேள்விப்பட்டிருக்கிறேன். கள்ள ஸ்டேட்டஸூமா?

வெளங்கிடும்.
:)


***


குடும்பத்தோடு 24 பார்த்து விட்டு இப்போதுதான் திரும்பினேன்.

டைம்மெஷனில் நான்கு நாட்களுக்கு முன் போய் அப்போது கவுண்ட்டரில் நாலு டிக்கெட்டுக்காக கட்டிய ரூ.480/-ஐ திருப்பி எடுக்க முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று இப்போது எண்ண வைத்து விட்டது அந்த திரைப்படம்.

தோழி சமந்தாவிற்காக இதைப் பொறுத்துக் கொள்கிறேன். என்ன க்யூட்னஸ் இல்ல?

:)

***


இந்த தேர்தல் நிலவர கலவரங்களில் ரணகளத்திலும் கிளுகிளுப்பான ஒரு செய்தி என்னவெனில் அது தேதிமுகவின் பின்னடைவு. விஜயகாந்த்தின் அதிகார கனவுகளின் அஸ்தமனம் இந்த தேர்தலின் கூடவே நிகழந்தால் அதிக மகிழ்ச்சி.

இந்த நோக்கில் தமிழக மக்களும் விஜயகாந்த் முன்பு சொன்னதையேதான் இப்போது எதிரொலிக்கிறார்கள்.

"தூக்கி அடிச்சிடுவேன்.. பார்த்துக்க.."

:)


***


தேர்தல் நிலவரங்கள் ஒருபக்கம் இருக்கட்டும். நாம் இந்தப் பாடலை கவனிப்போம். கடந்த ஒரு வாரமாக என்னை இன்பமாக தொந்தரவு செய்து கொண்டேயிருக்கும் பாடல்.

sid sriram -ன் குரல் ஏன் சிலருக்கு பிடிக்கவில்லை என்று ஆச்சரியமாக இருக்கிறது. கர்நாடக சங்கீதமும் மேலை செவ்வியல் இசையும் அறிந்த ஒரு பாடகரின் கலைத்திறமை சந்திக்கும் புள்ளிகள் இவர் பாடும் பாடல்களில் சிதறி வழிகின்றன.

பழைய மரபும் சமகால நவீனமும் இணையும் அற்புதம்.. இந்தப் பாடலில்் ஒரு குறிப்பிட்ட வரியை வேறு வேறு ஆலாபனைகளில் இவர் கையாள்வது சிறப்பு.

பட்டுத்துணியை கூர்மையான கத்தரியால் துண்டித்து ஓர் உருவத்தை அழகு செய்வது போல இந்தப் பாடலை அப்படிப் பார்த்து பார்த்து அலங்கரித்திருக்கிறார் ரஹ்மான். பொதுவாக அவர் பாடகர்களை சுதந்திரமாக அனுமதிப்பார் என்பார்கள். இதிலும் அப்படிப்பட்ட சுதந்திரம் இருந்தாலும் அவை ஒரு கறாரான எல்லைக்குள் நின்று இயங்குவதை கவனிக்கலாம்.

பாடல் முழுக்க வரும் அந்த ரிதம்மும் பின் லேயரில் மெல்லிய குரலில் கசியும் பெண் குரலும் அத்தனை அழகாக இருக்கிறது. வழக்கம் போல் உள்ளுக்குள் பல ஆச்சரிய துண்டுகள்..

நான் பெரிதும் ரசித்தது இதில் வரும் பாடல் வரிகள். அதாவது துண்டு துண்டு மின்னல்கள். பொதுவாக இம்மாதிரி வரிகளை நாம் தவற விட்டு விடுவோம்.

நாயகிகளை மானே, தேனே, மயிலே, குயிலே என்றெல்லாம் திரைப்பாடல்களில் வர்ணித்தது போக மேலதிக அன்பில் அதுசார்ந்த சிறு கோபத்தில் அவரை திட்டுவதும் காதல்தான்.

'காதல் பிசாசே' என்று இதை துவங்கி வைத்தார் யுகபாரதி. 'அழகான ராட்சசியே' என்று பின்பு இணைந்தார் வைரமுத்து.

மதன் கார்க்கி இப்போது 'அரக்கியே' என்கிறார்.

கணினி நிரல்களை வைத்து மென்பொருளை உருவாக்க முடிவது போல பாடல்களை உருவாக்குவது குறித்த மென்பொருளை இவர் உருவாக்கிய போது பலர் கோபம் கொண்டார்கள். ஒருவகையில் மதன் செயல்படுத்தியது உண்மையே.

சுஜாதா ஒருமுறை கண்ணதாசனிடம் பேசிய போது கவிஞர் கூட இதை உறுதிப்படுத்தினார். எதுகை, மோனைகளை கவனமாக அமைத்துக் கொண்டால் அதற்கேற்ற பாடல் வரிகளை எளிதில் உருவாக்கி விடலாம். தொடர்ந்த பயிற்சியின் மூலம் வருவது இது.
சினிமா இசை ஏற்படுத்தி தரும் கறாரான எல்லையின் அவஸ்தை இது.

ஆனால் அந்தப் பயிற்சிக்குள்ளும் அந்த கவிஞனின் பிரத்யேகமான கவிமனம் இயங்குகிறதா என்பதில்தான் முக்கியமான வேறுபாடு இருக்கிறது.

மதனின் வரிகளில் பொதுவாக அதிக மொழி கலப்பு இருப்பது நெருடலை தந்தாலும் சமகால இளையமனதுகளை அவரும் பிரதிபலித்துதான் ஆக வேண்டியிருக்கிறது.

இதில் துண்டு துண்டாக வரும் பல அபாரமான வரிகளை கவனித்தேன்.

மெய் நிகரா மெல்லிடையே
பொய் நிகரா பூங்கொடியே

என்று ஆரம்பமே அசத்துகிறது.

புல்லாங்குழலே... வெள்ளை வயலே...
பட்டாம் புலியே...
கிட்டார் ஒலியே...
மிட்டாய் குயிலே...
ரெக்கை முயலே

இதில் ஒலிக்கும் நயத்தையும் ஒத்திசைவையும் அழகான படிமங்களையும் கவனியுங்கள். மிக குறிப்பாக மிட்டாய் குயிலே என்கிற சொல்லின் கற்பனை என்னை ரொம்பவும் கவர்ந்தது. அடிக்கடி சொல்லிப் பார்த்தேன். தித்தித்தது.

பட்டாம் புலியே என்பது பட்டாம்பூச்சி + புலியின் விநோத சேர்க்கையை உணர்த்தும் கற்பனை என யூகிக்கிறேன்.

இதையும் கவனியுங்கள்.

பேசும் பனி நீ.. ஆசை பிணி நீ..
விண்மீன் நுனி நீ.. என் மீன் இனி நீ..
இன்ப கனி நீ.. கம்பன் வீட்டு கணினி

இந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதமும் அத்தனை அழகாக இருந்தது. நடனம் வடிவமைக்கப்பட்ட விதமும் அழகு.

பழைய கற்பனைதான். காதலி பார்க்கும் இடம், நபர்கள் எல்லாமே காதலனின் முகமாகவே தெரிகிறது. 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா'தான்.

பாட்ஷா திரைப்படத்திலும் கூட இப்படியொரு கற்பனைப் பாடல் வருகிறது. 'நீ நடந்தால் நடையழகு' பாடலில் நாயகி பார்க்கும் எல்லோருமே ரஜினிகாந்த்தாக தோன்றுவார்கள்.

ஆனால் இத்திரைப்படத்தில் அப்படிப்பட்ட கற்பனையை நாயகன் நாயகியிடம் விதைக்கிறான், அவள் அதிலிருந்து தப்பித்து ஓட முயல்கிறாள் என்பது வேறுபாடு.

இத்திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் ஒரு பெண் குழந்தையைக் காட்டுவார்கள். அந்தக் குழந்தைதான் நாம் முன்னால் பார்த்த சமந்தா என்பது பார்வையாளர்களுக்கு புரியும்.

ஆனால் அந்தக் குழந்தையின் அதே உடையையே இந்தப் பாடலில் சமந்தாவிற்கு உபயோகித்திருக்கும் இயக்குநரின் நுண்ணுணர்வையும் வணிக திறமையையும் வியக்கிறேன்.

இந்தப் பாடல் தலைவி சமந்தாவால் கூடுதல் அழகு பெறுகிறது என்றால் அது மிகையில்லை.

சூர்யாவா, யார் அது?




முன்பெல்லாம் அதிமுக, திமுக ஆகிய இரண்டு பிரதான கட்சிகளில் மக்களுக்கு நன்கு அறிமுகமான இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்கள் இருந்தார்கள். தலைமையின் முக்கிய பிம்பம் தவிர இவர்களுக்கும் பிரத்யேகமான ஆதரவாளர்கள் கூட்டமும் வாக்கு வங்கியும் இருந்தது. ஒரு மரத்தின் விழுதுகள் போல மாநிலம் முழுக்க இவர்களின் பிரச்சாரமும் செல்வாக்கும் தலைமையை தாங்கிப் பிடித்தன. தலைமை சற்று பலவீனமடைந்தாலும் அதிக சேதாரம் ஆகாமல் இவர்கள் காப்பாற்றினாார்கள்.

திமுகவில் அன்பழகன், வைகோ, நாஞ்சில் மனோகரன் போன்றோர். அதிமுகவில் நெடுஞ்செழியன், காளிமுத்து, பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றோர்.

நினைவுகூர்ந்தால் ஒரு பட்டியலாக இவர்களின் பெயரை சொல்ல முடியும்.

ஆனால் இப்போது இரண்டு கட்சிகளிலுமே இது போன்ற இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்கள் என்று எவருமே இல்லாதது போன்ற தோற்றம்.

அப்படியே இருந்தாலும் அவர் தொடர்பான தொகுதியில் மட்டுமே சற்று பிரபலமாக இருக்கக்கூடும்.

அதீதமான தன்முனைப்பு, போட்டி அரசியல், வாரிசு அரசியல் உள்ளிட்ட பல காரணங்களால் ஒரு கட்சிக்கு ஒரு முகம் மாத்திரமே என்கிற நிலை தற்போது உள்ளது. எல்லாப் பெருமையும் தனக்கே வர வேண்டும், எவருக்கும் சென்று விடக்கூடாது என்பது போல.

ஜெயலலிதாவின் தலைமைக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சி ஜனநாயகம் அறவே அழிந்தது என்பது வெளிப்படை. அராஜகமும் ஆணவமும் அடிமைத்தனமும் நிறைந்த கட்சியாகி விட்டது. அதுதான் தனக்கு பாதுகாப்பானது என்று ஜெயலலிதா கருதுகிறார். ஆனால் அவருக்குப் பிறகு கட்சி என்னவாகும் என்பதைப் பற்றியும் அவர் யோசிக்க வேண்டும்.

ஆனால் இந்த உட்கட்சி ஜனநாயகம் முன்னர் இருந்ததாக கருதப்பட்ட திமுகவும் ஏறத்தாழ அதிமுகவின் பாதையில் செல்கிறது.

சமீபத்திய திமுகவின் மறுஎழுச்சிக்கு ஸ்டாலினின் நடைப்பயணமும் இணக்கமான அணுகுமுறையும் முக்கியமான காரணம்தான் என்றாலும் அவரையும் தாண்டி இன்னபிற தலைவர்களின் வளர்ச்சி தடுக்கப்படுவதும் பழைய திமுக போல் விசுவாசமான, உண்மையான அர்ப்பணிப்புடன் கூடிய தேர்தல் பங்களிப்பு குறைந்து போனதும் கூட திமுகவின் இந்த மெல்லிய இடைவெளி தோல்விக்கு ஒரு பகுதி காரணமாக இருக்கலாம் என நம்புகிறேன்.


***
 
திரையரங்கமும் தீனிப்பண்டாரங்களும்

பொதுவாகவே மல்டிபெக்ஸ் கலாசாரம் எனக்குப் பிடிக்காததொன்று. மிடில்கிளாஸ் கோயிஞ்சாமியாக அங்கு என்னை உணர்வேன். தண்ணீர், தின்பண்டங்கள் கொண்டுவரக்கூடாது என்பதும் உள்ளே நுழைவதற்கு முன் ஏறக்குறைய கோமணம் வரை தடவிப் பார்ப்பதும் என அங்குள்ள நிறைய கட்டுப்பாடுகள் எரிச்சலையே தரும்.நமக்கு உள்ளுர் திரையரங்கங்களே தோதானது.

24 திரைப்படத்தை நல்ல திரையரங்கில் காணவேண்டுமென்று பிள்ளைகள் கேட்ட போது அதற்காகும் செலவை சொல்லிப் பார்த்தேன். எப்பவாவது ஒருமுறைதானே என்கிற கெஞ்சலும் பின்பு அடமும் அதிகமானது.

வேறு வழியில்லாமல் சென்றால் கவுண்ட்டரில் இருந்த நங்கை ஏதோ இலவசமாய் தருவது போன்ற மிதப்புடன் ஸ்கீரினிற்கு அருகில் உள்ள இருக்கைதான் காலியாக உள்ளது என்றார். வேண்டாமென்று திரும்பினேன்.. உடனே பார்த்து என்ன சாதிக்கப் போகிறோம்?

கிரெடிட் கார்ட் சனியன்கள் எல்லாம் என்னிடம் கிடையாது. எனவே மறுவாரத்தில் மறுபடியும் நேரில் சென்று பின்னால் உள்ள இருக்கைகள்தானே என்று இருமுறை உறுதிப் படுத்திக் கொண்டு டிக்கெட் வாங்கினேன்.

()

வெளியே கீரைக்காரியிடம் "மூணு கட்டு பத்து ரூபான்னு கொடேன்" என்று கறாராக பேரம் பேசுகிற மிடில் கிளாஸ் மாமாக்கள் எல்லாம் மல்ட்டிபெக்ஸிற்குள் நுழைந்தவுடன் தங்களை உடனே அமெரிக்கன்களாக நினைத்துக் கொள்கிறார்களோ என்னவோ? அவர்களின் நடை, உடைகளில் உடனே மாற்றம் வந்து விடுகிறது. மூத்திரப் புரைக்கு கூட நுனி நாக்கு ஆங்கிலத்தில்தான் தப்புத் தப்பாக வழி கேட்கிறார்கள். கம்ப்யூட்டரில் பில் வந்தவுடன் எவ்வளவு என்று கூட சம்பிரதாயத்திற்கு கேட்காமல் உடனே கிரெடிட் கார்டை நீட்டுகிறார்கள் அல்லது சரசரவென்று புத்தம் புது ஐநூறு ருபாய் தாள்கள்.

நாம் இந்தியாவில்தான் இருக்கிறோமா என்று ஒரு கணம் சந்தேகம் வந்து விடுகிறது.

இடைவேளையில் எதுவும் கேட்கக்கூடாது என்கிற குறிப்புடன்தான் பிள்ளைகளை அழைத்துச் சென்றேன். கஞ்சத்தனம் அல்ல. ஒன்றுக்கு பத்தாக விலைசொல்லி கொள்ளையடிக்கும் இடங்களை நாம் ஏன் ஊக்கப்படுத்த வேண்டும் என்பதும் ஏன் அப்படி ஏமாற வேண்டும் என்பதும் என் கொள்கை. மேலும் அப்படி செலவு செய்ய வசதியும் விருப்பமும் இல்லை என்பது வேறு விஷயம்.

என்றாலும் ஒரு பாப்கார்னுக்கான கோரிக்கை பிள்ளைகளிடமிருந்து வலுவாக வந்தது. சரி ஒன்றுதானே என்று வெளியே விலையைப் பார்த்தால்.. அம்மாடியோவ்.. நூறு ரூபாயாம்.

சரி ஒழிந்து போகிறது என்று வாங்கப் போனால் அதற்கும் பெரிய க்யூ..

மக்களே.. இதைச் சொல்வதற்காக என்னை தவறாக நினைக்காதீர்கள்... இரண்டரை மணி நேர படத்தின் இடைவேளையில் மக்களுக்கு அப்படி என்னதான் பசிக்குமோ என்று தெரியவில்லை. ஒவ்வொருத்தரும் பாப்கார்ன, பப்ஸ், கோக்.. இன்னமும் என்னென்னமோ விசித்திர வஸ்துகள்.. சரமாரியாக வாங்கிக் குவிக்கிறார்கள். அதை டிரேயில் அடுக்கி எடுத்துச் செல்லும் போது ஏதோ விருது வாங்கியது போலவே பெருமை.

ஒவ்வொன்றும் நாலைந்து மடங்கில் அநியாயமான கொள்ளை விலை. இப்படி தெரிந்தே ஏமாறுவதில் அப்படி என்ன பெருமை என்பதே எனக்குப் புரியவில்லை.

போர்க்காலங்களில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் போது எங்காவது உணவு கிடைத்தால் பணக்காரர்கள் ஆவேசமாக வாங்கிக் குவிப்பார்கள் அல்லவா?. இவர்கள் வாங்கும் ஆவேசமும் ஏறத்தாழ அதற்கு நிகராக இருந்தது. இன்னமும் ஒரு மணி நேரம் பொறுத்தால் வெளியில் சென்று இதை விடவும் மலிவு விலையில் வயிறார சாப்பிடலாமே?

இது தவிர அரங்கின் உள்ளேயே படத்திற்கு இடையே பண்டல் பண்டல்களாக ஆர்டர் செய்து சாப்பிடுபவர்கள் தனி குரூப்.

அவர்களின் உழைப்பு, அவர்களின் சம்பாத்தியம். எனவே இதை நான் பொறாமையில் சொல்லவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்படி கொள்ளையடிக்கும் மால்களில் தெரிந்தே ஏமாறுவதில் என்ன மேட்டிமைத்தனமான பெருமை இருக்கிறது? இதன் மூலம் சாமானியர்களும் அந்த விலையை எதிர்கொள்வதைப் பற்றி இவர்கள் சற்று கூட யோசிக்க மாட்டார்களா?

ஒரு கோப்பை பாப்கார்ன் .. அதுவும் ரூ.100 கொடுத்து வாங்குவதற்காக சுமார் 20 நிமிடம் நின்று கொண்டிருந்தேன். எத்தனை அபத்தம்? என் மேலேயே எனக்கு கோபமாக வந்தது. வாங்காமல் திரும்பி விடலாமா என்று கூட நினைத்தேன். பிள்ளைகளின் சுருங்கிய முகம் நினைவிற்கு வந்து தொலைத்ததால் காத்திருந்து வாங்கிச் சென்றதில் பத்து நிமிட திரைப்படத்தை இழந்தேன்.

படம் துவங்கும் நேரம் அனுமதிச் சீட்டில் தெளிவாக அச்சடிக்கப்பட்டிருந்தும் கூட படம் ஆரம்பித்த பிறகுதான் பலர் கூட்டம் கூட்டமாக உள்ளே நுழைகிறார்கள். மற்றவர்களுக்கு தொந்தரவு தருகிறோமே என்று துளி கூட வெட்கமும் கூச்சமும் இல்லாமல் சத்தமாக பேசி தங்களின் இருக்கைகளை தேடுகிறார்கள்.

இன்னமும் கூட அதிகம் சொல்ல முடியும். வேண்டாம். நிறைய பேரின் கோபத்திற்கு ஆளாக விரும்பவில்லை.

'படத்தை திரையரங்கில் வந்து பாருங்கள்' என்று எந்த பிரபலமாவது உபதேசிக்கும் போது இவையெல்லாம் உடனே நினைவிற்கு வந்து வயிற்றெரிச்சலைக் கிளப்புகின்றன.

இதைச் சொல்வதற்கு மன்னிக்கவும். திரைப்படம் என்பது ஒரு அனுபவம். இந்த தீனிப்பண்டாரங்கள் இந்த அனுபவத்தை தானும் அனுபவிக்காமல் மற்றவர்களையும் நிம்மதியாக அனுபவிக்க விடாமல் இடையூறாய் டார்ச்சர் செய்து தொலைக்கிறார்கள்.

மிடில்கிளாஸ் மென்ட்டாலிட்டியுடனும் அதற்கான தாழ்வுணர்வுடனும் நான் புலம்புகிறேன் என்று கூட நீங்கள் எவராவது நினைக்கக்கூடும். ஆனால் நான் சொல்வதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா என்பதை மாத்திரம் சற்று நிதானமாக யோசித்துப் பாருங்கள்.


***


இன்று மாலை எழும்பூர் ரயில் நிலைய படிக்கட்டுகளில் இறங்கிச் சென்று கொண்டிருந்தேன். சிவப்பு நிற துண்டு அணிந்து கையில் ஒரு புத்தகத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த தோழர் சி.மகேந்திரன் தனியாளாக படிகள் ஏறி சென்று கொண்டிருந்தார்.

தவ வாழ்க்கை வாழ்கிறோம் என்று திராவிட கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள், அமைப்புகள் புளுகினாலும் இன்னமும் கூட எளிமை என்பது நடைமுறையில் இடதுசாரிகளிடம் மட்டுமே காணக் கிடைக்கிறது.

இதுவே மற்ற ஒரு கட்சியின் அடிமட்டத்தலைவர் என்றிருந்தால் கூட அவருடன் பத்து பதினைந்து உதவிகளும் இரண்டு மூன்று டாட்டா சுமோக்களுமாக சூழலே பரபரப்பாக ஆகியிருக்கும்.

தமிழகத்தில் இடதுசாரி அரசியல் மீது இன்னமும் ஏன் நமக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்று ஆச்சரியமாக இருக்கிறது. நேர்மையாளர்களை ஒரு புறம் கை விட்டுக் கொண்டே அரசியல் ஊழல் மலிந்திருக்கிறது என்று புலம்பிக் கொண்டிருப்பதில் எவ்வித பயனுமில்லை.




suresh kannan

Monday, May 16, 2016

முகநூல் குறிப்புகள் - 3

நண்பர் அபிலாஷ் கடந்த பல மாதங்களாக அச்சு ஊடகங்களில் எழுதும் கட்டுரைகளை தொடர்ந்து வாசிக்கிறேன். பல்வேறு இதழ்களில் தொடர்ச்சியாக அவர் எழுதுவற்கு பின்னுள்ள உழைப்பு குறித்து பிரமிப்பாக இருக்கிறது. மேலும் அவரது எழுத்தின் மூலம் வெளிப்படுகிற அவரின் பரந்து பட்ட வாசிப்பு குறித்தும் ஆச்சரியமாக இருக்கிறது.

என்னளவில் வார, மாத இதழ்களுக்கு அந்தந்த டெட்லைன்களுக்குள் எழுதுவதென்பது நிச்சயம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விஷயம். சமீபமாக அந்த அழுத்தத்தை என்னால் நன்கு உணர முடிகிறது. அது குறித்த அலாரம் மனதில் ஒரு சுமையாக அப்படியே உறைந்து மிரட்டிக் கொண்டேயிருக்கும் சமயங்களில் நடுஇரவில் கூட அது சார்ந்த அலாரம் உள்ளே பலமாக அடித்து பதறியடித்து எழுந்து உட்கார்நது எழுதியிருக்கிறேன்.

எப்போது பறக்கத் தோன்றுகிறதோ அப்போது சுதந்திரமாக பறக்கும் பறவையைப் போல் எழுத்தாளன் இயல்பாக இயங்க வேண்டியவன். ஆனால் இம்மாதிரியான நடைமுறை அழுத்தத்தையும் அதனால் படைப்புகளில் எதிரொலிக்கக்கூடிய கோர்வையின்மையையும் அவன் எதிர்கொள்ள வேண்டியிருப்பது சிக்கலான விஷயம்தான்.

ஆனால் சிலர் இம்மாதிரியான டெட்லைன்கள் இருந்தால்தான் அது சார்ந்த அழுத்தம் காரணமாக எழுதி முடிப்பார்கள். எழுதுவதற்கான ஊக்கத்தையே அத்தகைய அழுத்தங்கள்தான் தரும். பத்திரிகைகளின் துரத்துதல்களின் காரணமாகத்தான் பல படைப்புகளை எழுதியிருப்பதாக சொல்லியிருக்கிறார் சுஜாதா.

'எழுத்து எனக்கு சுவாசம் போல' என்று சிலர் சொல்வதெல்லாம் நிச்சயம் உட்டாலக்கடி என்பதாக எனக்குத் தோன்றுகிறது. பறவையை உதாரணம் சொன்னேன் அல்லவா? பறத்தல் என்பது ஒரு பறவைக்கு தன்னியல்பாக படிவது போல எழுதுவதென்பது அப்படியாக அமைந்தவர்கள் மட்டுமே அப்படிச் சொல்ல முடியும்.

என்னைப் பொறுத்த வரை அச்சு ஊடகத்திற்கு எழுதுவது என்பது ஒரு வாதை. எழுதுவது குறித்த திட்டவட்டமான கருத்துக்களும் வடிவமும் மனதில் ஏற்கெனவே தோன்றியிருந்தாலும் அவற்றை சொற்களின் வடிவத்தில் வலுக்கட்டாயமாக பிடுங்கி கோர்வையாக அமைப்பது என்பது சள்ளை பிடித்த வேலை. எவ்வளவு தூரம் ஒத்திப் போட முடியுமோ அத்தனை தூரம் ஒத்திப் போடத் தோன்றும்.

இணையத்தில் எழுதும் போது அது நம்முடைய ஏரியா என்பதால் எவ்விதப் பிழைகளையும் பற்றி கவலைப்படாமல் இயல்பாக எழுதி விட முடிகிறது. ஆனால் அச்சு ஊடகம் எனும் போது அது இன்னொருவரின் பொறுப்பில் இருக்கும் பிரதி என்பதால் தன்னிச்சையாகவே ஒரு பதட்டமும் ஒழுங்குணர்வும் உள்ளே வந்து விடுகிறது.

மட்டுமல்லாமல் எழுத்து மேஜையின் பின்னிருந்து ஒரு கற்பனையான வாசகன் நான் எழுதுவதையெல்லாம் கிண்டலடித்துக் கொண்டே இருக்கிறான், அதன் பிசிறுகளை, தவறுகளை திருத்தச் சொல்லி எச்சரித்துக் கொண்டே இருக்கிறான். அவனைச் சமாளிப்பது பெரும்பாடாக இருக்கிறது. திருத்தி திருத்தி எழுத வேண்டியதாக இருக்கிறது.

ஒரு திரைப்படக் கட்டுரைக்காக நான் என்னால் முடிந்த அத்தனை உழைப்பையும் தருகிறேன். ஒரு குறிப்பிட்ட திரைப்டத்தைப் பற்றி எழுத வேண்டும் என்றால் அதை குறைந்தது இரண்டு அல்லது மூன்று முறை பார்க்கிறேன். அதன் தகவல்களை தேடித் தேடி சரி பார்த்துக் கொள்கிறேன். அப்படியும் சில பிசிறுகள் அமைந்து விடுகின்றன. ஆனால் மிகுந்த உழைப்பைச் செலுத்தி எழுதப்படும் எழுத்து பரலவாக கவனத்திற்கு உள்ளாகாத போது அது சார்ந்த சோர்வும் ஏற்படுகிறது. என்றாலும் கூட எழுத வேண்டும் என்கிற ஊக்கம் குறையாததால் அடுத்ததற்கு நகர முடிகிறது.

()

இம்மாதிரியான சிக்கல்களை அபிலாஷ் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை பொதுவில் பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.

மே 2016 குமுதம் தீராநதி இதழில் 'நவீன புனைவுகளில் ஊனத்தை குறியீடாக்குவதின் சிக்கல்' என்கிற அவரது கட்டுரை முக்கியமானது மட்டுமல்ல சுவாரசியமானதும் கூட. நவீன தமிழ் இலக்கியத்தின் புனைவுப் பிரதிகளில் ஊனம் எனும் கருத்தாக்கம் நேரடியாகவும் மறைமுகமாகவும் எப்படியெல்லாம் கையாளப்படுகிறது என்பதை சில உதாரணங்கள் கொண்டு ஆராய முயல்கிறார் அபிலாஷ். அக ஊனங்களே அதிகம் கையாளப்பட வேண்டிய இலக்கிய வடிவத்தில் புற ஊனங்கள் வாயிலாக நிகழும் அகச்சிக்கல்கள் பற்றிய குறிப்புகளை ஒரு தேர்ந்த ஆய்வு நடையில் பதிவாக்குகிறார்.

அபீலாஷின் புனைவு எழுத்தை நான் அதிகம் வாசித்தது இல்லை. ஆனால் அபுனைவு எழுத்துக்களில் நான் உணரும் ஒரு நெருடலை அவருக்கு கவனப்படுத்த விரும்புகிறேன். இதை அவர் சரியான தொனியில் எடுத்துக் கொள்வார் என்கிற நம்பிக்கையுண்டு.

தான் அறிந்த எல்லாவற்றையும் உணர்ந்த அனைத்தையும் தன்னுடைய வாசகனுக்கு கடத்திவிட வேண்டும் என்கிற வேகமும் தத்தளிப்பும் அது சார்ந்த குணாதிசயமும் இளம் எழுத்தாளர்களின் எழுத்தில் அமைவது அவ்வகை எழுத்தில் உள்ள சிக்கல்களில் ஒன்று. இதன் காரணமாக அந்தப் படைப்பின் கலையமைதி சிதைவுறுவதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

அபிலாஷின் அபுனைவு எழுத்திலும் இந்த நெருடலை உணர்கிறேன். அவர் தன்னுடைய மனம் நெய்யும் வார்த்தைப் பிரயோகங்களை அப்படியே தொடர்ச்சியாக பதிவு செய்து கொண்டே போகிறார். இதற்கு எப்படி உதாரணம் சொல்லலாம் என்றால், எவ்வித குறிப்புகளும் அல்லாமல் பேச முயலும் ஓர் அனுபவமற்ற பேச்சாளர், தம் மனதில் உருவாகும் கருத்துக்களையெல்லாம் பார்வையாளர்களுக்கு கடத்தும் வேகத்தில் கோர்வையற்று துண்டு துண்டாக பல விஷயங்களை சொல்லிச் செல்வதுடன் ஒப்பிடலாம். அவர் பேசியதில் பல ஆழமான நல்ல கருத்துக்கள் இருந்திருக்கும். ஆனால் மனம் இயங்கும் வேகத்தில் பேச்சும் இயங்க முயல்வதால் ஏற்படும் சிக்கல் காரணமாக கோர்வையற்று கச்சிதமற்று இருக்கும்

பின்பு எவராது அந்தப் பேச்சின் தேவையற்ற பகுதிகளை எடுத்து திருத்தி கோர்வையாக்கி ஒரு நல்ல கட்டுரையாக மாற்ற முடியும்.

கோர்வையாகவும் அதே சமயம் ஆழமாகவும் பேசுவதற்கு மிகுந்த உழைப்பும் பயிற்சியும் தேவைப்படுகிறது.

தமிழ் எழுத்து சூழலில் எடிட்டர் எனும் பிரத்யேகமான பணியின் அவசியம் பல காலமாக உரையாடப்பட்டுக் கொண்டு வந்தாலும் நடைமுறையில் அது பரவலாக சாத்தியப்படாதது துரதிர்ஷ்டமே. அபிலாஷின் எழுத்திற்கு தேவை அம்மாதிரியான ஒரு எடிட்டர். எழுத்தாளனே தன் எழுத்தை சீர்திருத்துவதென்பது மனஉளைச்சலை தரக்கூடிய வேலை.

ஒருவகையில் அபிலாஷிற்கு கூறுவதை எனக்கே கூறிக் கொள்வதாகவும் பார்க்கிறேன்.

***


விஜய்காந்த் NDTV -க்கு அளித்த நேர்காணலை தொடர்ந்து பார்க்க முடியாமல் நிறுத்தி விட்டேன். அதையொரு நகைச்சுவைப் பிரதியாகவும் காணலாம் என்பது ஒருபக்கம் இருக்கட்டும், எனக்கோ திகில் படம் பார்ப்பது போல் இருந்தது.

எவராவது மேடையில் பேசும் போது தாம் சொல்ல வந்த கருத்தை சுற்றி சுற்றி திக்கி சொல்ல முயலும் போது அந்த தவிப்பு கவனிக்கிறவனுக்கும் வந்து விடும். பேசுபவனை தலையில் தட்டி, இதுதானே சொல்ல வந்தே?" என்று பாயுமளவிற்கு ஓர் உணர்வு ஏற்படும், தலைமுடியை பப்பரப்பே என்று விரித்துப் போட்டிருப்பவனை இழுத்து வந்து முடிவெட்டி விட வேண்டும் என்று தோன்றுகிற உணர்வைப் போல.

நிற்க, ஆங்கில மொழிதான் உயர்வானதா என்பது போல இதை மொழியரசியல் நோக்கில் புரிந்து கொள்ள வேண்டாம். விஜய்காந்த் இயல்பாகவே தமிழில் பேசியிருக்கலாம். பாவம் பிரணாய் ராய், எத்தனையோ அரசியல்வாதிகளை ஆங்கிலத்தில் மடக்கி மடக்கி கேட்ட வயிற்றெரிச்சல்களும் பாவங்களும் விஜயகாந்த் அலுவலகத்தில் வந்து விடிந்திருக்கிறது. படிக்காதவன் திரைப்படத்தில் ரஜினிகாந்த்தின் தம்பி அவரை ஆங்கிலத்தில் திட்டுவது புரியாமல் 'எஸ் ..எஸ்..' என்பாரே, அப்படி பலியாடு போல தலையாட்டிக் கொண்டிருந்ததைப் பார்க்க பாவமாக இருந்தது.

பிரணாய் ராய்க்கு ஒருவேளை தமிழ் நன்றாக தெரிந்திருந்தாலும் கூட விஜய்காந்த் பேசியதை புரிந்து கொள்ள முடிந்திருக்காது என்பதுதான் இதிலுள்ள கூடுதல் நகைச்சுவை.

ஒருவேளை செய்தியாளர்கள் விஜயகாந்த்தை வைத்து காமெடி கீமெடி செய்து கொண்டிருக்கிறார்களோ? அல்லது vice versa வா?


***



 
கோபுர வாசலிலே வரும் 'காதல் கவிதைகள் படித்திடும் நேரம்' என்பது இளையராஜாவின் ரகளையான கம்போஷிஸனில் அமைந்த பாட்டு. இளையராஜாவின் நூறு சிறந்த தமிழ் திரையிசைப் பாடல்களை எவராவது கறாராக தொகுத்தால் அது நிச்சயம் இடம்பெறக்கூடிய தகுதி கொண்டது என்பது என் அனுமானம். அத்தனை நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்டது இந்தப் பாடல்.

என் வாழ்வில் இந்தப் பாடலை குறைந்தது ஆயிரம் முறைக்கு குறையாமல் கேட்டிருப்பேன். இதன் துவக்கத்தில் வரும் 'எஸ். ஐ லவ் திஸ் இடியட்' என்கிற குரல் மட்டுமே இந்தப் பாடலுக்கு ஒரு திருஷ்டிப் பொட்டு. அபஸ்வரமும் கூட. அது பின்னணிக் குரல் தருபவரது என்று நினைக்கிறேன். அதைக் கேட்கும் போதெல்லாம் எரிச்சல் வரும். சில நொடிகள்தான் என்றாலும் எப்போது அது கடந்து தொலைக்கும் என்று எரிச்சலோடு காத்திருப்பேன்.

தொடர்ந்து வரும் அற்புதமான இசையும் பாலுவின் குரலும்தான் அதை மட்டுப்படுத்தும்.

நான் இதை எழுத வந்தது வேறு ஒரு காரணத்திற்காக.

இதன் கடைசி பல்லவியை கவனியுங்கள்.

இதயம் இடம் மாறும்.. என்று சித்ரா பாடியவுடன் (4:46) பாலு மெலிதாக ம்.. சொல்லுவார்..

அமுதும் வழிந்தோடும் .. என்று பாலு பாடும் போது (4:52) அந்த ம்.. மின் முறை சித்ராவுடையது.

இந்த இரண்டு 'ம்'கள்தான் இந்தப் பாடலை எங்கோ ஒரு உயரத்திற்கு கொண்டு செல்கின்றன என்பது என் தாழ்மையான கருத்து. என் பிரச்சினை என்னவென்றால் இந்த 'ம்களை கவனமில்லாமல் முதல், இரண்டாவது பல்லவியில் தேடிக் கொண்டிருப்பேன். அது வராமல் ஏமாற்றமாகி விடும் அப்புறம்தான் அது கடைசி பல்லவியில் வருவது நினைவிற்கு வரும். சமயங்களில் நானே அந்த 'ம்'களை என் குரலில் இட்டு நிரப்பும் அராஜகத்தை செய்வேன்.

அந்த அளவிற்கு இந்த 'ம்'களுக்கு நான் அடிமை.

என்னைப் போன்ற சஹஹிருதயர் எவரேனும் உண்டா?

***


இசைக்கலைஞர் எம்.எஸ். பற்றி டி.எம். கிருஷ்ணா, கேரவன் இதழில் ஆங்கிலத்தில் எழுதியுள்ள நீளமான கட்டுரையொன்று மே 2016 காலச்சுவடு இதழில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு பிரசுரமாகியுள்ளது. சமீபத்தில் வாசித்த சிறந்த, தரமானதொரு கட்டுரையாக இதைக் குறிப்பிடுவேன். மொழியாக்கமும் சிறப்பு. அநாமிகா என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் இது சுகுமாரனின் மொழிபெயர்ப்பாக இருக்கலாம் என்பதென் தேவையில்லாத யூகம்.

எம்.எஸ்.என்கிற ஆளுமைக்கு பொதுவாக இரண்டு பரிமாணங்கள் உண்டு. ஒன்று பொது தளத்தில் ஓர் இசையாளுமையாக, ஆன்மிக அடையாளமாக, இசைப் பேரரசியாக அறியப்பட்டிருக்கும் விருதுகள் பல பெற்றிருக்கும் ஒரு வடிவம். இன்னொன்று, எம்.எஸ்.ஸின் வாழ்க்கை பின்னணி, அதிலுள்ள சர்ச்சைகள், புகைமூட்டங்கள், அவற்றிலிருந்து துடைத்தெறிந்து அவரை ஒரு புனிதப்பசுவாக வடிவமைத்த அவரது கணவர் சதாசிவத்தின் பங்கு, அவரது கட்டுப்பாடுகளால் ஒருவேளை இழந்து போன எம்.எஸ்.ஸின் சுதந்திரமும் கலையாற்றலும் ..

என பல்வேறு தளங்களில் சமநிலையுடன்கூடிய நிதானத்துடன் இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. ஒரு கச்சிதமான ஆலாபனையைப் போலவே இந்தக் கட்டுரையை உணர்கிறேன். நண்பர்கள் இந்தக் கட்டுரையை தவறாமல் வாசிக்க வேண்டும் என வேண்டுகிறேன்.

முன்னொரு சமயத்தில் ஜெயமோகன் எழுதிய கட்டுரையையும் இதனுடன் இணைத்து வாசிக்கலாம்.

எம்.எஸ். வாழ்க்கை வரலாறு பற்றி டி.ஜே.எஸ். ஜாாஜ் எழுதிய (MS – ‘A Life in Music’ ,T.J.S George) என்கிற நூலை வாசித்தே தீர வேண்டுமென்கிற ஆவலை, இந்தக் கட்டுரைகள் உண்டாக்குகின்றன.

நண்பர்கள் எவரிடமாவது இந்த நூல் இருக்கிறதா என அறிய ஆவல்.


***



நண்பர் Lalitharam Ramachandran ஆசியோடு இன்று ரசித்த ஒரு பாடலைப் பற்றிய சில பாமர குறிப்புகள்.


சுசி கணேசன் இயக்கத்தில் வந்த ஃபைவ்ஸ்டார் எனக்கு பிடித்தமான திரைப்படங்களில் ஒன்று. அதைப் பற்றி எவ்வித அறிமுகமும் இல்லாமல் திரையரங்கில் முதன்முறை பார்த்த போது 'ச்சே.. ஸ்கிரிப்ட்ல கலக்கியிருக்காண்டா' என்று இயக்குநரை நினைத்து பரவசப்பட்டேன். அந்த சுசிகணேசன் பிறகு வெகுசன மசாலாவில் மூழ்கி காணாமற் போய் விட்டார் என்பதற்கு நாமும் ஒருவகையில் காரணம்.

அத்திரைப்படத்தில் வரும் எல்லாப் பாடல்களுமே எனக்குப் பிடித்தமானது.

குறிப்பாக இந்தப் பாடல் கூடுதலாக பிடிப்பதற்கு காரணம். இனிப்பும் உப்பும் இணைந்த 50-50 பிஸ்கட் போல மகிழ்ச்சியும் துயரமும் இணைந்த ஒரு விநோதமான கலவையில் உருவானது என்பதற்காக இருக்கலாம்,. உப்புச்சுவை சற்று தூக்கல் என்றாலும்.

ஒரு வடஇந்திய திருமணத்தின் உற்சாகமான மகிழ்ச்சியின் குரல்களுக்கு இடையில் ஒலிக்கிறது.

தாலி கட்டிய அடுத்த கணமே காணமாற் போய் விட்ட தன் கணவனைக் குறித்து அந்த துயரத்துடன் ஒரு தென்னிந்திய கிராமத்து இளம் பெண் பாடும் பாடல்.

தாண்டியா நடனத்தின் துள்ளலிசை பாணியில் அட்டகாசமாக துவங்கும் பாடல் பிறகு மெல்ல அடங்கி 'எங்கிருந்து வந்தாயடா' என்கிற துயரத்தில் கஜல் இசையை நினைவுப்படுத்தும் பாணியோடு இயல்பாக வந்து இணைந்து கொள்கிறது. எவ்வித உறுத்தலும் இல்லை.

திருமணத்தில் வழக்கமாக மணமக்களை கிண்டலடிக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான சூழலில் அதற்கு எதிர்திசை முரணாக, தன் கணவனின் பிரிவைப் பற்றி பாடும் அந்த காண்ட்ராஸ்ட் சூழலை யோசித்ததற்காகவே இயக்குநரைப் பாராட்ட வேண்டும். இரண்டு மனநிலைகளையுமே இப்பாடல் மாறி மாறி எதிரொலிக்கிறது.

'ஒருவர் வாழும் உலகில், மௌனம்தானே பேச்சு' என்று இந்த அடங்கிய துயரத்தின் சுவையை சொற்களில் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் Kavignar Thamarai

சந்தனா பாலா இந்தப் பாடலின் தன்மையை உணர்ந்து அருமையாக பாடியிருக்கிறார். ஓரிடத்தில் துக்கம் தாங்காமல் அழுகையின் உச்சத்தில் கேவல் ஒலி போல் தடுமாறி பின்பு தன்னை மெல்ல சமாளித்துக் கொண்டு பாடலில் இணையும் அந்த பாவம் அபாரம்.

அனுராதா Sriராம்.மற்றும் அவரது கணவன் பரசுராம் ஆகியோர் இணைந்து இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள். அத்தனை அருமையான பாடல்களை உருவாக்கிய இவர்கள் பின்பு வேறு எந்த படத்திலும் பணியாற்றியதாக தெரியவில்லை.

ஏன்?


***

இயக்குநர் பார்த்திபனின் 'புதிய பாதை' எனக்குப் பிடித்த தமிழ் திரைக்கதைகளுள் ஒன்று. வெகுசன வார்ப்பிற்குள் ஒரு நல்ல திரைக்கதைக்காக அதை மேற்கோள் காட்டுவேன்.

அதில் ஒரு காட்சி. அந்த தொகுதியின் அரசியல்வாதியான நாசர் முன்பு பாாத்திபன் கால் மேல் கால் போட்டு ஆட்டிக் கொண்டே அமர்ந்திருப்பார். அருகிலிருக்கும் விகே ராமசாமி, அவருக்கேயுரிய பிரத்யேகமான டபுள் மீனிங் மாடுலேஷனில் 'தொகுதி வயசுல சின்னவர்தான். அவரு முன்னாடி நானே ஆட்னதில்ல - காலை. நீ இப்படி ஆட்டறியே" என்பார்.

அதற்கு பார்த்திபன் தரும் பதிலை இன்னமும் மறக்காமல் இருக்கிறேன்.

"அவருக்கு நான் சம்பாரிச்சுக் கொடுக்கத்தான் வந்திருக்கேன். மரியாதை தர இல்லை"

()

தனியார் லிமிடெட் கம்பெனிகளில் கூட கார்ப்பரேட் கலாசாரத்தின் சாயல்கள் மெல்ல படிந்து கொண்டிருக்கும் சூழலில், இன்னமும் கூட சில நிறுவனங்கள் அந்தக் கால மளிகைக் கடை 'மொல்லாளி' பாணியிலேயே இயங்குகின்றன. எங்களுடைய வாடிக்கையாளர் நிறுவனம் ஒன்று, கோடிகளில் லாபம் காட்டுகிற சுக்கிர திசையில் இயங்குகிற பெரிய நிறுவனம் என்றாலும் அதன் அனைத்து முக்கியமான முடிவுகளையும் அந்த நிறுவனத் தலைவரே எடுப்பார். விசிட்டிங் கார்ட் பிரிண்ட் செய்வதாக இருந்தாலும் அவர்தான் முடிவு. அதிகாரப் பகிர்வு என்பதே கிடையாது. எதைக் கேட்டாலும் அங்குள்ள ஊழியர்கள் 'சாரைக் கேட்கணும்' என்பார்கள். சார் நிறுவனத்திற்கு வருகிறார் என்கிற செய்தி கிடைத்தவுடன் ஏறத்தாழ அப்போதே பரபரப்பாகி அட்டென்ஷனில் நின்று கொண்டிருப்பார்கள்.

இன்னும் சில முதலாளிகள். ஊழியர்கள் தங்களைக் கண்டவுடன் அந்தக் கால எஸ்.வி.சுப்பைய்யா.. போல இடுப்பில் துண்டை இறுக்க கட்டிக் கொண்டு 'மொதலாளி' என்று கண்கசிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இது போன்ற நாடகங்களை கச்சிதமாக நிகழ்த்துபவர்களுக்குத்தான் ஊதிய உயர்வும் அங்கீகாரமும் தருகிறார்கள் இவை நாடகம் என்று 'மொல்லாளிகளுக்கு' தெரியும் .என்றாலும் அவர்களால் கிடைக்கும் போலிப் பெருமிதங்களுக்காகவே அவர்களை போற்றி வளர்க்கிறார்கள்.

ஓர் ஊழியரின் செயற்பாடுகள் எந்த அளவிற்கு அர்ப்பணிப்புடனும் சரியானதாகவும் இருக்கிறது? அவரால் நிறுவனத்திற்கு கிடைக்கும் ஆதாயத்தின் சதவீதம் என்ன? என்பதை வைத்து ஒருவரை மதிப்பிடுவது நல்ல முதலாளிக்கு அழகு. இன்றைய தேதியில் hard work என்பதை விட smart work-க்கிற்குதான் மரியாதை.

அவ்வாறானவர்களின் உழைப்பை கண்டும் காணாமலும் இருந்து விட்டு அவர்கள் தங்களுக்கு எப்போதும் மரியாதை தரவில்லை என்கிற அற்ப காரணத்திற்காகவே பல்வேறு வகையில் பழிவாங்கும் முதலாளிகள், அந்த நிறுவனத்தின் வளர்ச்சியை அவர்களே புதைகுழியில் தள்ளுகிறார்கள் என்பதை அறிவதில்லை. அறிந்தாலும் அவர்களின் ஈகோ அவற்றை ஏற்றுக் கொள்ள தடுக்கிறது.

இந்த விஷயத்தில், பணி தொடர்பான விஷயத்தை சிகரெட் புகைத்துக் கொண்டே தன் முதலாளியுடன் விவாதிக்க முடியும் என்கிற மேலை நாட்டுக் கலாச்சாரம் எவ்வளவோ தேவலை என்று தோன்றுகிறது, அங்கும் அடிமைக் கலாசாரம் இன்ன பிற வழிகளில் கசிந்து கொண்டிருக்கும் என்றாலும்.

'Job is done' என்கிற பதிலை விட 'வணக்கம் மொல்லாளி' என்கிற குரலில்தான் ஒரு முதலாளி மகிழ்வார் என்றால் அவர் முதலாளியாக இருக்கவே தகுதியில்லாதவர்.


***


தமிழ் திரையிசை தொடர்பான ஒரு பதிவு செய்யப்பட்ட இசைக் கச்சேரியை வீடியோவில் நண்பருடன் சேர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு பாடகர், திரையிலும் அவரே பாடின ஒரு பாடலை சற்று விஸ்தரித்து ஆலாபனை செய்து பாடினார். சட்டென்று அது அசல் போல தெரியவில்லை. வேறு பாணியில் இருந்தது. கவனித்த நண்பர் முகம் சுருங்கி 'என்னத்த பாடுறான்' என்று சலித்துக் கொண்டார். அவருக்குப் புரியவில்லை. அவருடைய ரசனை இன்னமும் வளர வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

என்றாலும் எதனால் அவருக்கு ஏமாற்றம் வந்தது என்று யோசித்துப் பார்த்தேன். அந்த நிகழ்வில் முன்னர் பாடப்படட்ட சில பாடல்களை பாடகரின் கூடவே அவரும் கள்ளக்குரலில் பாடி அதில் தன்னை மறைத்துக் கொண்டு - தன்னையும் ஒரு பாடகராக நினைத்து மகிழந்து கொண்டிருந்தார். இந்தப் பாடல் வேறு நோட்டில் பாடப்படவே, நம் நண்பரால் அதைப் புரிந்து கொள்ள முடியாததால் ஏற்பட்ட ஏமாற்றமும் சலிப்பும் அது என்று யூகிக்க முடிந்தது.

ஆல்பத்தில் ஒலிக்கும் அதே ஒழுங்கில்தான் கச்சேரியிலும் பாடகர் பாட வேண்டுமென்று நாம் எதிர்பார்ப்பது அறியாமையினாலேயே. அதற்கு வீட்டிலேயே சி.டியில் கேட்டு விடலாம்.

அதே இனிப்பை வேறு வேறு சமயங்களில் சாப்பிட்டிருந்தாலும் அந்தந்த சூழல், மனநிலை ஆகியவற்றைப் பொறுத்து அந்த இனிப்பின் சுவை நிச்சயம் மாறுபட்டிருக்கும். இசையும் அவ்வாறே. ஸ்டுடியோவில் பாடிய போது பாடகர், இசையமைப்பாளர் உருவாக்கித் தந்த கட்டுப்பாட்டில் பாடியிருக்கலாம். அதையே கச்சேரியில் பாடும் போது தன்னியல்பாக இன்னும் சற்று விஸ்தரித்து அந்த இசையை விரிக்க முயல்கிறார். நாம் அந்த புது அனுபவத்தை அந்தப் பின்னணியில் புரிந்து கொண்டு ரசிக்க நம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இசைக்கு சில அடிப்படை இலக்கணங்கள் வகுக்கப்பட்டிருந்தாலும் அதை ஆதாரமாகக் கொண்டு ஒரு பறவையைப் போல வானில் சுதந்திரமாக பறத்தல், கீழே இறங்கி வருதல், தரையில் சற்று உலாத்துதல், பின்பு எதையோ மறந்ததை எடுக்க விரைவதைப் போல சட்டென்று மேலே ஏறி பறத்தல் என்று பறவை அதன் சுதந்திரத்தில் இயங்குவதைப் போல ஒரு பாடகனும் அப்போதைய மனநிலையின் படி, மனோதர்மத்தின் படி தன் இசையை விஸ்தரித்து பாடுவதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

செவ்வியல் இசைகளில் நிகழ்வது இதுவே. கர்நாடக இசையை விட ஹிந்துஸ்தானியில் ஒரே ஒரு வரியை, வார்த்தையை வைத்துக் கொண்டு சுமார் இரண்டு மணி நேரம் கூட விதவிதமான அலங்காரத்துடன் ஆலாபனை செய்வார்கள். அந்த நுட்பம்தான் அதன் அழகியலே. செவ்வியல் பயிற்சியுள்ள பாடகர்கள் திரையிசையிலும் இயன்ற எல்லைக்குள் தங்கள் சுதந்திரத்தைப் பயன்படுத்த முயல்வார்கள். இதை அனுமதிக்கும் அல்லது கட்டுப்படுத்தும் இயக்குநர்கள் உண்டு.

இது மேடைகளில் நிகழும் போது நம்முடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ப பாடகர் பாட வேண்டும் என்கிற சிறுபிள்ளைத்தனமான எதிர்பார்ப்பை கழற்றி பாடகரின் கூடவே பறப்பதற்கு முயல வேண்டும் அல்லது அதை குறைந்தபட்சம் புரிந்து கொள்ளவாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.

இதையெல்லாம் அந்த நண்பரிடம் சொல்ல முடியவில்லை. சொலலியிருந்தால் அவர் நண்பராக தொடர்ந்திருப்பாரா என்பது சந்தேகமே.


***



சமகாலத்தில் இயங்கும் தமிழ் திரை இசையமைப்பாளர்களில் ராஜாவிற்கு இணையாக நிறுத்தக்கூடிய கலையுணர்வும் படைப்பூக்கமும் கொண்ட ஆளுமையாக ரஹ்மானை மட்டுமே சொல்ல முடியும்.

சமீபமாக ரஹ்மானின் சில தேர்ந்தெடுத்த பாடல்களை மிக நுணுக்கமாக பல முறை கேட்ட அனுபவத்தில் சொல்கிறேன்.

வெகுசன மனம் தன்னியல்பான திட்டமிடாத கூட்டுணர்ச்சியுடன் ஒரு கலைஞரை பரவலாக ஏற்றுக் கொள்வதிலும் கொண்டாடுவதிலும் பொருள் இல்லாமல் இல்லை என்பதை உணர்ந்தேன்.

இந்த வகையில் ரஹ்மானை கொண்டாட இந்தப் பாடல் ஒரு கச்சிதமான உதாரணம். சற்று நிதானமாக கேட்டுப் பாருங்கள். உள்ளுக்குள் எத்தனை ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கிறார்? உன்னி கிருஷ்ணனும் ஹரிணியும் அபாரம்.


***




காதலுணர்வு சார்ந்து மற்றவர்கள் எடுக்கும் திரைப்படங்களுக்கும் கெளதம் வாசுதேவ மேனன், செல்வராகவன் போன்றவர்களுக்கும் நிறைய வித்தியாசமுண்டு. பின்னவர்களின் படங்களில் அது வெற்று, அசட்டு ரொமாண்டிசமாக அல்லாமல் காதலின் மென்மையும் வலியும் அவைகளில் ரத்தமும் சதையுமாக பதிவாகியிருக்கும்.

கெளதமின் காதல் திரைப்படங்களின் வரிசையில், மின்னலே, விண்ணைத் தாண்டி வருவாயா, நீதானே பொன் வசந்தம் ஆகியவற்றில் கடைசியாக குறிப்பிட்டது என்னுடைய மகா ஃபேவரைட். என்னை பெருமளவில் பாதித்த திரைப்படம் அது. அந்தப் பிரதியுடன் குதூகலித்திருக்கிறேன், அழுதிருக்கிறேன், பரவசமடைந்திருக்கிறேன். அப்படியொரு கொண்டாட்டத்தை என்னுள் உணர்த்திய படம் அது.

கெளதம் ஓர் உண்மையான நல்ல காதலர். காதலின் அத்தனை உணர்வுகளையும் அவர் தனிப்பபட்ட வாழ்வில் உண்மையாக ஆழ்ந்து விழுந்து பிரண்டு எழுந்திருக்கிறார். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு என்று ஆக்ஷன் திரைப்படங்களிலும் கூட லவ் டிராக் அத்தனை உயிர்ப்புடன் இருக்கும்.

'நீஎபொவ' -வில் இந்தப் பாடலை கவனியுங்கள்.

காதல் துணையுடன் ஏதோ ஒரு சச்சரவில் (அதற்கான காரணம் அற்பமானதாக கூட இருக்கலாம்) அது சார்ந்த மிகையான உணர்வில் அமைந்த சண்டையில், அது ஏற்படுத்திய கசப்பில், மனஉளைச்சலில் நீங்கள் எப்படி எதிர்வினையாற்றுவீர்கள்,?

அந்தவுணர்வு இதில்அபாரமாக பதிவாகியிருக்கிறது. 'பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா?' எடுத்த எடுப்பிலேயே உயர் ஸ்தாயியில் துவங்கும் பாடல் இந்தவுணர்வின் உளைச்சலை, மிகையை சரியாக உணர்த்துகிறது.

இதில் ஜீவாவின் உடல்மொழியை கவனியுங்கள்...தோழி தன்னை நிராகரித்த திகைப்பும், ஏமாற்றமும் அது சார்ந்த சினமும் அவரது அசைவுகளில் நன்றாக வெளிப்படும்.

கடற்கரை மணலை காலால் ஆத்திரத்துடன் உதைத்து விட்டு பிறகு ஒருவேளை தோழியின் மனம் திரும்புமா என்கிற நப்பாசையுடன் மீண்டும் சென்று ஏக்கத்துடன் பார்க்கிறார். விதியின் கரங்கள் வலிமையானவை. இவா் திரும்பிச் சென்ற சமயத்தில்தான் தோழியும் திரும்பிப் பார்க்கிறார்.

கடற்கரை ஒருவகையில் மரணத்தின் குறியீடு. அங்கு விரக்தியுடன் செல்லும் இவரின் கை முஷ்டிகள் இறுகும் ஒரு குளோசப் காட்சி அவரது மனதின் உளைச்சலை பதிவாக்குகிறது.

ஊருக்குத் திரும்பும் முடிவுடன் நடக்கத் துவங்குகிறார். அங்கிருந்து வெளியேற பேருந்து மட்டுமே வழி. ஆனால் அதை நிராகரித்து நடக்கிறார். கடந்து செல்லும் பேருந்தின் மீது ஆத்திரத்துடன் குத்த நினைத்து கடைசி நொடியில் அதை கைவிடுகிறார். உணர்வை அறிவு நிலை கடந்து செல்லும் துளியின் தருணம் அது.

அந்த தூரத்தை சாலையில் நடப்பதின் மூலம் கடந்து செல்கிறார். அந்த துயரத்தை, உளைச்சலை தன்னைத் தானே தண்டித்துக் கொள்வதின் மூலம்தான் அவர் கடந்து வர முடியும், தற்காலிகமாக.

படம் பூராவும் ஆக்ரமித்திருந்த, என்னை அந்தரங்கமான நெருக்கத்துடன் உணரச் செய்த சமந்தாவை, இந்த ஒரு பாடலில் மட்டும் ஓவர்டேக் செய்திருந்த ஜீவாவை பிடித்திருந்தது.

ஓர் அசலான காதலனால்தான் இப்படிப்பட்ட நுட்பங்களை காட்சிகளில் படிய வைக்க முடியும். கெளதம் அப்படிப்பட்ட ஓர் ஆசாமி என்பது நன்கு புலனாகிறது..

ஓர் ஆணின் பார்வையில் இந்தக் காட்சிகளை ரசித்திருக்கிறேன் என்பது வெளிப்படை. இதற்கு இன்னொரு பக்கமும் உண்டு.


***



தோழி சமந்தா 2010 முதல் 'பாணா காத்தாடி' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் போலிருக்கிறது. நான் கவனித்ததில்லை. 'நான் ஈ''யில் கூட 'அட அழகாக இருக்கிறாரே' என்று வழக்கமான நடிகையைப் பார்ப்பது போல அவரைக் கடந்து விட்டேன்.

ஆனால் நீதானே என் பொன் வசந்தத்திற்குப் பின்னால் பிடித்தது சனி. 'நித்யா வாசுதேவன்' என்கிற மறக்க முடியாத பாத்திரத்தின் மூலம் எனக்குள் அழுத்தமாகப் பதிந்து விட்டார். ஒரு நடிகை தன் அழகின் மூலமாக மட்டுமல்லாது தன் கலைத் திறமையின் மூலமாக இத்தனை கவர முடியும் என்கிற பிரமிப்பை ஏற்படுத்திய படம் அது. முழுதாக பதினைந்து முறைக்கும் மேல் பார்த்திருப்பேன் என்றாலும் நினைக்கும் போதெல்லாம் துண்டு துண்டாக காட்சிகளை பார்த்தது பல முறை. குறிப்பாக அந்த கடற்கரை காட்சி, மொட்டை மாடி விவாத காட்சி.

இதற்குப் பிறகு சமந்தா எனதின் ஒரு பகுதியாகி விட்டார். அவரை ஒரு வேற்று நபர் என்பதை கூட என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. இவருக்காகவே மொழி புரியாத பல தெலுங்கு மசாலாக்களை, அதிலும் இவரை மட்டுமே 'ஆ'வென்று பார்த்துக் கொண்டிருப்பேன்.

ஒரு நடிகையின் மீதான எதிர்பாலின கிளர்ச்சி சார்ந்த மனோபாவம் என்று இதை மற்றவர்கள் மலினமாக புரிந்து கொள்வதை வெறுக்கிறேன். அதையும் தாண்டியதொன்று. அவர் என்னை தன் சிறந்த நண்பனாக ஏற்றுக் கொள்வது உள்ளிட்ட பல பகற்கனவுகளில் மூழ்கியிருக்கிறேன்.

பாவனையாக அல்லாமல் உண்மையாகவே சமூக சேவைகளுக்காக உதவும் நல்லியல்பு,

ஒரு நடுத்தர வர்க்கத்துப் பெண்ணாக போட்டி நிறைந்த சூழலில் பல சிரமங்களுக்கு இடையே தன்னையொரு வெற்றிகரமான நடிகையாக நிலைநிறுத்திக் கொண்டிருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் சட்டென்று ஒரு பிரேக் அடித்து 'என்னுடைய குடும்பத்தினருடன் செலவு செய்வதற்காக சில மாதங்கள் நடிக்கப் போவதில்லை' என்கிற சமீபத்திய அறிவிப்பின் துணிச்சல்

உள்ளிட்ட பல காரணங்களுக்காக அவரை அப்படிப் பிடித்திருக்கிறது.

எனக்குப் பிடித்தமானதொரு நபரின் சாயலில் அவர் இருப்பது இன்னொரு கூடுதல் காரணம்.

சுருக்கமாகவும் தெளிவாகவும் கூற வேண்டுமெனில்..

உயிரும் உடலும் தலைவிக்கே..


***


இரண்டு விளக்கங்கள்:

1) என்ன சார்.. நீங்க பாட்டுக்கு சமந்தாவை ஜொள்றதையெல்லாம் பப்ளிக்கா சொல்றீங்க.. இன்னொரு பக்கம் சினிமா சீரழிவு -ன்னு தீவிரமா எழுதறீங்க.. ஏதாவது ஒண்ணுல நில்லுங்க. இமேஜ் என்ன ஆகும் -னு கவலைப்பட்டு உபதேசம் செய்யற மெசேஜ் ஒண்ணு.

இது என் டைம்லைன். தனிநபர் சார்ந்த அனைத்துப் பிரச்சினைகளையும் கூடுமானவரை பாசாங்குகளைக் களைந்து, என்னுடைய அனைத்துப் பக்கங்களையும் வெளிப்படையாக்குவதே என் விருப்பமும், நோக்கமும். ஒளித்து வைக்க ஏதுமில்லை. பாசாங்கு நான் வெறுக்கும் விஷயங்களில் முக்கியமானது. பெண்களின் புரொஃபைல்களுக்கு லைக் அட்டெண்டென்ஸ் போடும் நபர்களை விட இது தேவலை என்றே நினைக்கிறேன்.

2) உங்களுக்கு வேறெந்த பிரச்சினையும் இல்லையா? எப்பவும் சினிமாதானா?

ஒரு சராசரி நபருக்கு உண்டான அத்தனை லெளகீகப் பிரச்சினைகளும் சிக்கல்களும் எனக்கு சற்று அதிகமாகவே உண்டு. சமயங்களில் அதிலிருந்து தப்பிக்கவும், இளைப்பாறவுமே இங்கே எழுதுகிறேன். இங்கயும் வந்து டென்ஷன் பண்ணாதீங்க.


***


இது விதண்டாவாதம் என்று நினைக்காமல் இதனுள் உள்ள ஒரு பக்க அல்லது ஒரு பகுதி நியாயத்தை சரியான தொனியில் நண்பர்கள் அணுக வேண்டும் என வேண்டுகிறேன்.

'வாக்களிக்க பணம் பெற வேண்டாம்' என்று தேர்தல் ஆணையம் தொடர் பிரச்சாரம் செய்து வருகிறது. அறம் சார்ந்து இது சரிதான். இது எல்லோருக்கும் தெரிந்த நடைமுறை நாடகமும் கூட.நிஜத்தில் என்ன நடைபெறுகிறது என்பது நாம் அறிந்ததுதான்.

வாக்களிப்பவர்கள் பணம் வாங்கினால் அரசியல்வாதிகளுக்கு ஊழல் செய்ய கூடுதல் துணிவு வந்து விடும் என்றும் ஒரு கருத்து சொல்லப்படுகிறது.

ஒரு பேச்சுக்கு இந்த தேர்தலில் வாக்காளர்கள் எவருமே ஒருவர் கூட ஒரு ரூ பணம் வாங்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்போது ஊழல்களே நடைபெறாது என்கிற உத்தரவாதம் ஏதேனும் உள்ளதா?

கோடிக்கணக்கில் வருமான வரி பாக்கி வைத்திருக்கிற பிரபலங்களின் பெயரை வெளிப்படையாக அறிவிக்காமல் அது குறித்து சம்சா தின்று கொண்டே சம்பிரதாயத்திற்கு அது குறித்து பொதுவாக பாராளுமன்றத்தில் விவாதித்து விட்டு,

மாதச்சம்பளம் வாங்கும் மிடில் கிளாஸ் கோயிஞ்சாமிகளை 'வரி கட்டுங்கள்,.வரி கட்டுங்கள்' என்று வருமானவரித் துறை கழுத்தை நெறிப்பதைப் போல,

ஊழல் செய்யாதீர்கள், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்று அரசியல்வாதிகளுக்கு உபதேசம் செய்யாத தேர்தல் ஆணையமும் இன்னபிற அமைப்புகளும் அடித்தட்டு மக்களிடம் போய் 'வாக்களிக்க பணம் வாங்காதீர்கள்' என்று மேட்டிமைத்தனத்துடன் உபதேசிப்பது எவ்வகையான அறம்?


***

கருணாநிதி அராஜகமாக கைது செய்யப்பட்ட செய்தி அறிந்த அந்த விடியற்காலை நேரத்தில் திமுக காரர்களுக்கு நிகராக ஏன் அதற்கு அதிகமாகவும் கூட கொதித்துப் போனவன் நான். தன்னிச்சையாக என் வாயில் இருந்து ஆபாச சொற்கள் வந்து விழுந்தன.

ஆனால் அந்த வீடியோ இந்த தேர்தல் சமயம் பார்த்து சுற்றுக்கு வருவதில் உள்ள அபத்தமும் அனுதாபக் கோரலும் குமட்ட வைக்கிறது. அப்படியே எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவையும் பதிலுக்கு சுற்றுக்கு விட்டால் பதிலுக்கு சமனாகி விடும்.

நல்லா பண்றீங்கய்யா அரசியல்.

***


'டைம்டேபிள் கணக்கா லஞ்ச் ஒரே மாதிரியே இருக்கே. ஏதாவது மாத்தம் செய்யக்கூடாதா?' -ன்னு வீட்டம்மணி கிட்ட கொஞ்ச நாளா புலம்பிட்டு இருந்தேன்.

இன்னிக்கு மாத்தம் தெளிவா இருந்தது.

லஞ்ச் டப்பா அடியில், ஒருவேளை சாம்பார், குழம்பு கசிஞ்சு கொட்டினா கறையாகம இருக்கிறதுக்காக ஒரு கறுப்பு கவர் இருக்கும். ரொம்ப நாளா இருந்தது.

இன்னிக்கு அந்த கவர் பிங்க் கலர்ல மாறியிருந்தது.

மாற்றம் - முன்னேற்றம் - கவுண்டமணி..


***


ஜெயமோகன் எழுதிய இந்தப் பதிவின் மையக்கருத்து மிக முக்கியமானது. குறிப்பாக இலக்கிய, சினிமாக் கனவுடன் தங்களின் சொந்தக்கால்களை நழுவ விட்டுக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு.

என் இளம் வயதில் ஒரு பத்திரிகையாளனாக அல்லது சினிமா இயக்குநராக அல்லது அதில் பணிபுரிவனாக இருக்கும் பெரும் கனவு இருந்தது. அந்தக் கனவுகளை அடைவதில் உள்ள நடைமுறைச்சிக்கல்கள் குறித்த யூகமும் கூடவே இருந்தது. எனவே வீட்டின் வறுமை காரணமாக கிடைத்த பணியில் சேர்ந்தேன். லாட்டரிச் சீட்டு விற்பவனாக, பை தைக்கும் கடையில் கத்தரிக்கோலால் மண்டையில் அடி வாங்கிய உதவியாளனாக , பைண்டிங் கடை, மருந்துக் கடை என்று உதிரி மனிதர்களின் அத்தனை பணிகளையும் செய்திருக்கிறேன்.

சமயங்களில் அந்தக் கனவுகளின் வெம்மை என்னை சுட்டெரித்துக் கொண்டே இருக்கும். கருகி கருகி சாவேன். ஆனால் அப்போது எடுத்த யதார்த்தமான முடிவு எத்தனை சரியானது என்று ஒரு கட்டத்தில் உணர்ந்தேன். பிறகு அந்த அதிருப்தி மெல்ல சரியாற்று.

கடந்த வருடத்தில் கூட ஒரு பெரிய இயக்குநருக்கு உதவி இயக்குநராகவும் வாய்ப்பு தேடி வந்தது. சினிமா ஆர்வமுள்ள இளைஞர்கள் கனவு காணும் இடம் அது. ஆனால் நான் உறுதியாக மறுத்து விட்டேன். அதற்குப் பின்னால் இருக்கும் நிலையின்மையை என்னால் துல்லியமாக யூகிக்க முடிந்தது. ஒருவேளை என் குடும்ப பின்னணி சற்று வளமாக இருந்திருந்தால் கூட என் கனவுகளைத் தேடி பறந்திருப்பேன். அவ்வாறு இல்லை.

என்றாலும் இப்போது அது குறித்து பெரிதாக எந்த வருத்தமும் இல்லை. ஆனால் மெல்லிய ஏக்கமும் அது சார்ந்த துக்கமும் உள்ளுக்குள் அலையடிக்கும். அடுத்த மாதத்திற்கான செலவு குறித்து யோசித்தால் அலை திரும்பிப் போகும்.

'பிளாட்பாரத்துல படுத்து தூங்கியிருக்கேன்' என்று வெற்றியடைந்தவர்களின் நேர்காணலில் உள்ள பெருமிதங்களைப் பார்த்து பிளாட்பாரத்தில் தூங்க பல இளைஞர்கள் துணிவுடன் கிளம்புகிறார்கள். பிறகு லாட்டரி அடித்து விடும் என்கிற கற்பனையுடன்.

ஆனால் வெற்றியடைந்தவர்களின் சதவீதம் எத்தனை என்பதையும எண்ணிப் பார்க்க வேண்டும். பல வருடங்களாகியும் பிளாட்பாரத்திலேயே தூங்குபவர்கள்தான் அதிக எண்ணிக்கை.

லெளகீக தளத்தில் ஒரு காலை அழுத்தமாக ஊன்றி நின்றபடிதான் உங்கள் கனவுகளுக்காக அடுத்த காலை எடுத்து வைக்கலாம். பறவையின் சிறகுகள் போல.

ஒற்றை சிறகின் மூலம் மட்டுமே உங்கள் கனவுகளை நோக்கி பறக்க முடியும் என்பது ஒருவகையான துயரம்தான் என்றாலும் அதுதான் யதார்த்தமும் கூட.

இந்த அற்புதமான விஷயத்தை இந்த ஒற்றைப் பதிவின் மூலம், கவிஞர் விக்ரமாதித்யன் மூலம் பதிவாக்கியிருக்கிறார் ஜெயமோகன்.


***


பென்சில் - பார்த்துக் கொண்டிருக்கும் போதே கொரியப் படங்களின் வாசனை அடிக்கிறதே என்று யோசித்தேன். நினைத்தது சரி. 4th period mystery படத்தின் ரீமேக் என்கிறது விக்கி.

இயக்கியவர் கெளதம் வாசுதேவனிடம் உதவி இயக்குநராக இருந்தவராம். என்ன சொல்ல?

கொஞ்சம் சகித்துக் கொண்டாலும் முதல் பாதி ஓரளவிற்கு சுவாரசியமாகவே இருக்கிறது. அந்த புத்திசாலித்தனத்தை அப்படியே மெயின்டெயிண் செய்திருந்தாலாவது சற்று தேறியிருக்கும்.

சஸ்பென்ஸ் படங்களின் மிக அடிப்படையான வடிவம். ஒரு கொலை. அதற்கான பல யூகங்களை பார்வையாளர்களிடம் விதைக்கிறார்கள்.இறுதியில் நம் சந்தேக வட்டத்தில் இல்லாத ஒருவர் என்கிற தேய்வழக்கு முடிவு.

நான் கூட ஹீரோவே அந்தக் கொலையை செய்து விட்டு பார்வையாளர்களை குழப்புவதற்காக அவரே துப்பறிவது போல் நடிக்கிறாரோ என்று கூட யோசித்து வைத்திருந்தேன். ம்ஹூம். தமிழ் சினிமா அப்படியெல்லாம் வளரக்கூடாது என்று அடம் பிடிக்கிறார்கள்.

இரண்டாம் பகுதி மகா அபத்தம். 10000 மாணவர்கள் படிக்கிற இண்டர்நேஷனல் ஸ்கூல், ஏதோ பூத் பங்களா மாதிரி காலியாக இருக்கிறது.

தர அடிப்படையில் தம்மை தகுதியானதாக காட்டிக் கொள்வதற்காக 'இங்லீஷ்' ஸ்கூல்கள் செய்யும் தகிடுததங்களை ஒரு நீதியாக சொல்லி படத்தை முடிக்கிறார்கள். அப்பாடா என்றிருக்கிறது.

படத்தின் தலைப்பு பென்சில். அது சீவுவதற்காக உபயோகப்படும் பொருளை தலைப்பாக வைத்திருக்கலாம்.

அது என்னமோ ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் படங்களை பார்க்கும் போதெல்லாம், தலையிலேயே தட்டி 'வீட்ல பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வா' என்று சொல்ல வேண்டும் போலவே தோன்றுகிறது.


suresh kannan

Sunday, May 08, 2016

முகநூல் குறிப்புகள் - 2

ஒரு திரையிசைப் பாடலில் பிரமித்து விட்டால் தேனில் விழுந்த ஈ மாதிரி அதிலேயே மூழ்கி சிக்கி கிடப்பது என் வழக்கம். வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த பைத்திய நிலை தெரியும் என்பதால் அவ்வளவாக கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற தேவையில்லாத நெருடல் உள்ளுக்குள் ஓடும். தேய்ந்த ரிகார்டரில் பாடலின் ஒரு வரி திரும்பத் திரும்ப ஓடினால் அது நுட்பக் கோளாறின் விளைவு. ஆனால் ஓரு பாடலே திரும்பத் திரும்ப ஓடினால் என்ன கோளாறு?

இன்று காலைல அப்படியொரு தேன் குடத்தில் விழுந்தேன்

.. 'மன்னவன் வந்தானடி' கே.வி.மகாதேவன் சுசிலா கூட்டணியில் உருவான இந்தப் பாடலை ஒரு தேசிய சாதனை என்று தயங்காமல் அறிவித்து விடலாம். இதுவரையான இந்திய திரையிசைப்பாடல்களில் ஆகச்சிறந்த நூறை தேர்வு செய்தால் அதில் இந்தப் பாடல் நிச்சயம் இடம் பெறும். பெறாவிட்டால் தேர்வாளரை வீடு தேடிப் போய் உதைக்கலாம்.

மகாதேவனின் ரகளையான கம்போஷிஷனை நினைத்தாலே பிரமிப்பாக இருக்கிறது. எத்தனை வாத்தியங்கள்? ... எத்தனை அற்புதமான மெட்டு, அதில் எத்தனை வேறுபாடுகள்?.. அத்தனையையும் ஒரு நேர்க்கோட்டு கலவையில் இணைத்து நிறுத்துவதற்கு எத்தனை கலை மேதமை இருக்க வேண்டும்?

ஆனால் அதை விடவும் என்னை பிரமிக்க வைத்தது சுசிலா.. அவர் பாடியுள்ள தெளிவையும் அதிலுள்ள ஏற்ற இறக்கங்களையும் அதன் நுண்மைகளையும் வேறுபாடுகளையும் கவனித்துப் பாருங்கள். ஒரே வார்த்தைதான்.. பிரமிப்பு.

எனக்கு முறையான இசை ஞானமெல்லாம் கிடையாது.. அப்படியே கேட்டு கேட்டு என்னளவில் உள்ளுணர்வின் உந்துதலில் அதன் ரசனையில் உணர்வதுதான். பொதுவாகவே சுசிலாவின் பாடல்களை ரசிப்பதற்கு நான் ஒரு குறுக்கு வழி கண்டுபிடித்துள்ளேன். அது..

சுசிலாவின் குரலை ஒரு வாகனமாக கற்பனை செய்து கொள்ள வேண்டும். கண்களை இறுக்க மூடிக் கொண்டு அந்த வாகனத்தில் ஏறி அமர்ந்து கொள்ள வேண்டியதுதான். இப்போது மனக்காதால் அந்த வாகனத்தின் ஒவ்வோரு அசைவையும் அலட்சியமாக கடக்காமல் முழுக்கவனத்துடன் அதில் பயணம் செய்யுங்கள். . ஜாக்கிரதை... வாகனத்தின் அபாரமான ஏற்ற இறக்கத்தில் தவறி எங்கேனும் விழுந்து விட வாய்ப்புண்டு. இறுக்கமாக பிடித்துக் கொள்ளுங்கள். அந்த வாகனத்தை மனதால் முழு கவனக்குவிப்புடன் தொடர்ந்து சென்று கொண்டேயிருங்கள்..

இப்போது அந்த வகையில் இந்தப் பாடலை கேட்டுப் பாருங்கள். ஒரு ரோலர் கோஸ்டர் இயந்திரத்தில் ஏறி அமர்ந்த சாகச விளையாட்டின் படபடப்பும் கிளுகிளுப்பும் உற்சாகமும் உங்களுக்கு ஏற்படும். குறிப்பாக இந்தப் பாடலில் ஓர் இசை ரகளையையே நிகழ்த்தி விடுகிறார் சுசிலா..

ஒருபுறம் வேகமாக மோதும் தென்றல் காற்று போல அவர் முழங்கிக் கொண்டிருக்க இன்னொரு புறம் இடி முழக்கம் போல் ஜதி சொல்பவர் எதிரொலிக்க, வாத்தியங்கள் அதன் ஒத்திசைவோடு மாயாஜாலம் செய்ய..

இந்த அனுபவத்தை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. சற்று நினைத்துப் பாருங்கள். இப்போது போல இடையில் சற்று மூச்சு வாங்கிக் கொண்டு பின்பு டிராக்கில் நுட்பத்தின் மூலம் ஒப்பேற்றும் பம்மாத்து வேலையெல்லாம் அப்போது கிடையாது. லைவ் ரிகார்டிங்கில் எந்தப் பிசிறும் இல்லாமல் எல்லோரும் ஒரே விசையின் எதிரொலி போல ஒத்துழைக்க வேண்டும்.

ஏறத்தாழ இருபத்தைந்தாவது தடவையில் பாடல் முடிந்த போது சுசீலாவிடம் செல்லமான பிரியத்துடன் இப்படித்தான் கேட்கத் தோன்றியது.

"சண்டாளி. எப்படிடி பாடினே?"




***

"முன்பெல்லாம் நகைச்சுவைப் படங்கள் என்ற லேபிளில் வரும் so called காமெடிப் படங்களிடம்.. "டேய் .. கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதீங்க. சிரிக்க வெக்க முடியலைன்னா விட்டுடுங்கடா" என்று கெஞ்ச வேண்டி வரும்.

இப்போதைய டிரெண்டின் படி வரும் பேய் படங்களில் "டேய் சிரிக்க வெக்காதீங்கடா.. சீக்கிரமா பயமுறுத்தி தொலைங்கடா.. டயமாவுது.. கிளம்பணும். சந்தைக்குப் போணும்.. ஆத்தா வையும்.." என்று பயங்கரமாக கெஞ்ச வேண்டியிருக்கிறது."

***

'ரஷோமான்' 'செவன் சாமுராய்'' என்று அகிரா குரசேவாவின் சில குறிப்பிட்ட திரைப்படங்களே தமிழ் சூழலில் அதிகம் உரையாடப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் அவருடைய சிறந்த திரைப்படங்களுள் ஒன்றான ' Stray Dog' பற்றிய என்னுடைய கட்டுரை, உயிர்மை மே 2016 இதழில் வெளியாகியுள்ளது.

நண்பர்களின் கவனத்திற்கு.

***
எழுத்தாளர் அமுதவன் எழுதிய 'என்றென்றும் சுஜாதா' என்ற நூலை சமீபததில் வாசித்தேன். சற்று பழைய நூல்தான். இருந்தாலு்ம் ஏன் இந்த நூல் இத்தனை நாட்களாக என் கண்ணில் படவில்லை என்று என்னையே நொந்து கொள்ளுமளவிற்கு சுஜாதாவைப் பற்றிய அத்தனை சுவாரசியமான தகவல்கள்.

சுஜாதாவின் பெங்களூரு வாசத்தின் போது அமுதவன் நீண்ட வருடங்களாக அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர். தன்னை பின்னுக்குத் தள்ளிக் கொண்டு சுஜாதாவுடனான முதற் சந்திப்பு, தேசலான எண்ணிக்கையுடன் அமைந்த முதல் இலக்கியக் கூட்டம் என்று தன்னுடைய பிரத்யேகமான பல அனுபவங்களை இந்த நூலில் விவரித்துள்ளார்.

பல சம்பவங்கள் வருடங்கள் கடந்தவை என்றாலும் அதை நினைவிலிருந்து மிக நுட்பமாக விவரித்துச் செல்லும் அமுதவனின் நினைவாற்றல் பிரமிக்க வைக்கிறது. சுஜாதா ஒரு திரைப்படத்தில் நடிக்க நேர்ந்த சம்பவம், ஒரு திரைப்படத்தை இயக்க சுஜாதாவிற்கு வந்த வலுக்கட்டாயமான வாய்ப்பு, குமுதம் தொடர்கதைக்கு வந்த வன்முறை மிரட்டல், எழுத்தாளர் இரவிச்சந்திரன் ஏற்படுத்திய நெருடல் உள்ளிட்ட பல சுவாரசியமான சம்பவங்கள். அமுதவனின் மேல் பொறாமையே ஏற்படுகிறது. சுஜாதாவுடன் அத்தனை நெருக்கமாக இருந்துள்ளார்.

இவ்வாறான நூல் ஒன்றை ஏறத்தாழ அது போன்ற அனுபவங்களைப் பெற்றிருக்கக்கூடிய நண்பர் தேசிகன் எழுத வேண்டும் என்பது என் கோரிக்கை.


***




டெல்லி கணேஷ் எனக்கு பிடித்தமான நடிகர்களில் ஒருவர். நகைச்சுவை நாடக பின்னணியிலிருந்து வந்ததால் அது குறித்த கோணங்கித்தனங்கள், செயற்கைத்தனங்கள் சமயங்களில் இருந்தாலும் சரியான உபயோகித்தால் பிரகாசிக்கக்கூடிய நடிகர். சிந்து பைரவி, மைக்கேல் மதன காமராஜன் என்று நிறைய உதாரணங்களை சொல்லலாம்.

அவர் தற்போது தம்முடைய மகனை வைத்து ஒரு திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். 'என்னுள் ஆயிரம்' என்பது அதன் தலைப்பு. எவராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இதற்காக சுமார் மூன்று கோடி செலவு செய்ததாகவும் வெறுமனே மூன்று லட்சம் மட்டுமே திரும்பி வந்ததாகவும் அவர் வருத்தப்பட்டு சொல்லியதாக ஒரு செய்தி கூட வாசித்தேன். திரையிட தியேட்டர்களே கிடைக்காத விஷயத்தையும் அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும் கூட சொல்லியிருந்தார். அப்பாவியான தான் ஏமாந்து போனேன் என்கிற புலம்பலும் அதில் இருந்தது.

திரைப்படத் துறையில் இத்தனை ஆண்டுகள் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதரால் ஒரு திரைப்படத்தை உருவாக்கி வெளியிடுவதில் உள்ள சிக்கல்களைப் பற்றி அவர் அறியவேயில்லையா என்று ஆச்சரியமாக இருந்தது. மேலும் சொந்தமாக திரைப்படம் எடுத்து சீரழிந்த பல முன்னோடி நடிகர்களைப் பற்றிய தகவல்களை வைத்தாவது அவர் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டுமே எனவும் தோன்றியது.

இதெல்லாம் சினிமாவிற்கு வெளியில் உள்ள புறத்தகவல்கள்.

()

இப்போது சினிமாவிற்குள் வருவோம். 'என்னுள் ஆயிரம்' என்கிற அந்த திரைப்படத்தைப் பார்த்தேன். எது அழகு என்கிற தத்துவத்திற்குள்ளும் அரசியல்சரிநிலைக்குள்ளும் செல்லத் தேவையில்லை எனும் பட்சத்தில். மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய முகவெட்டு இருப்பவர்தான் ஒரு பிரதான நடிகராக வெற்றிகரமாக தொடர முடியும் என்பது ஒரு நடைமுறை விதி.

'பார்க்க பார்கத்தான் பிடிக்கும்'' என்கிற தத்துவார்த்தப்படி டெல்லி கணேஷ் யோசித்தாரா, அல்லது பல திரைப்படங்களை செலவு செய்து விஜய் முகத்தை தொடர்ந்து காட்டி அவரை தமிழக மக்கள் வலுக்கட்டாயமாக ஏற்றுக் கொள்ள வைத்த எஸ்.ஏ.சந்திரசேகரை தன்னுடைய முன்னோடியாக டெல்லி கணேஷ் நினைத்துக் கொண்டாரா என்று தெரியவில்லை.

நாயகன் மகா, சுமாராகத்தான் இருக்கிறார்.

நடுத்தரவர்க்க தகப்பன் ஒருவன் பல சிரமங்களுக்கு இடையில் தம் மகனுக்கு ஒரு பைக் வாங்கித் தருவது மாதிரி தம் மகனை வைத்து ஒரு திரைப்படத்திற்காக மூன்று கோடி செலவு செய்ய முன்வந்தது கூட பிரச்சினையில்லை. ஒருவாறு சகித்துக் கொண்டு விடலாம் என்று வைத்துக் கொள்ளுங்களேன். அது அவர் பிரச்சினையும் கூட.

()

ஆனால் இந்த திரைப்படம் ஓடவில்லையே என்று வருந்துவதற்கு ஒரு சுக்கு காரணம் கூட இல்லை. அந்தளவிற்கு பிச்சைக்காரன் வாந்தியெடுத்தது போல குழப்பமான திரைக்கதை..மிக மந்தமானதும் கூட. எரிச்சலூட்டும் வகையில் பாடல்களின் தருணங்கள்.

பார்வையாளர்களை கணக்கிலேயே கொள்ளாமல் 'நான் எடுத்துதான் படம்' என்று திரைக்கதை அது பாட்டிற்கு இஷ்டத்திற்கு எங்கெங்கோ சுற்றுகிறது. ஒரு நல்ல திரைக்கதை என்பது பார்வையாளனின் உணர்வுடன் முதலிலேயே இறுக்கமாக பொருந்தி விட வேண்டும். பிரதான பாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளனும் பிரதிபலிக்க வேண்டும். 'செத்தவன் கையில் வெத்தலை பாக்கு தந்தது மாதிரி' மொண்ணையான ஒரு திரைக்கதையை உருவாக்கி விட்டு..

இறுதிப் பிரதியை இயக்குநர் உள்ளிட்ட மற்றவர்களாவது பார்த்தார்களா என சநதேகமாக இருக்கிறது.

ஒரேயொரு வித்தியாசம் என்னவெனில், அறிமுக நாயகன் என்பதற்காக ஓவர் பில்டப் எல்லாம் தரவில்லை. கூடுதலாக நாயகத்தன்மை அழிக்கப்பட்டு அந்த இளைஞன் வயது முதிர்ந்த இல்லத்தரசி ஒருவருடன் அசந்தர்ப்பமான சூழலில் பாலுறுவு கொள்கிறான் என்பதையெல்லாம் கூட சித்தரிக்கத் துணிந்ததற்காக சபாஷ் சொல்லலாம். இளைஞனின் காதலியும் இந்தப் பெண்ணும் ஒரே இடத்தில் இருக்கும் ஏற்படும் சிக்கல்களையாவது சுவாரசியமாக நீட்டித்திருக்க வேண்டாமா? அவரையும் மறுகாட்சியிலேயே சாகடித்தாகி விட்டது. பின்பு எப்படி திரைக்கதை உயிரோடு இருக்கும்?

மூன்று கோடியை செலவு செ்யத தயாரிப்பாளர் டெல்லி கணேஷ், திறமையான எத்தனையோ இளம் இயக்குநர்களையும் திரைக்கதையையும் நடிகர்களையும் நம்பியிருக்கலாம். ஆற்றில் கொட்டுவது பாசத்தில் கண்ணை மூடி பணத்தை இறைத்து விட்டு பின்பு வருந்துவதில் என்ன பலன் இருக்கிறது?


***


எங்கள் பகுதியின் பாஜக வேட்பாளர் காவி நிறம் கமழ, அடல்பிகாரி வாஜ்பாய், உத்தமத் தலைவன் மோடி போன்ற வாசகங்கள் இறைபட வாக்கு கேட்டுச் சென்றார். கூடவே பத்து பதினைந்து வாடகை இளைஞர்கள், பைக்குடன். நாளைக்கு ரூ.300, பெட்ரோல் 50, பிரியாணியாம்.

பாஜக என்பதால் வெஜிடபிள் பிரியாணிதான் தருவார்கள் என நினைக்கிறேன்.


***

கபாலி டீஸர் பற்றி எழுதிய கட்டுரை - குமுதம்.



***


குமுதத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் உலக சினிமா தொடர் பற்றிய அறிவிப்பு.



***


அவசரக் குடுக்கையாக பல வருடங்களுக்கு முன்பே ஒரு முன்னோடியான திரைப்படத்தை எடுத்து விடுவது கமலின் கெட்ட வழக்கங்களில் ஒன்று. அப்படியொரு திரைப்படம் ராஜபார்வை. அதிபராக்கிரம புஜபலசாலிகளே நாயகர்களாக கர்ஜித்துக் கொண்டிருந்த போது (அதில் கமலும் ஒருவர் என்பது முரண்நகை) கண்ணு தெரியாத ஒருத்தன்தான் ஹீரொன்னா யார் சார் ஒத்துக்குவாங்க? அதான் தமிழ்நாட்டு ஜனங்க விவரமா படத்தை தோற்கடிச்சாங்க. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

சரி. நான் சொல்ல வந்தது ஒரு குறிப்பிட்ட பாடலைப் பற்றி. அந்திமழை பொழிகிறது.

இதை விடவும் அதிகம் பிடித்தது பரவலாக கவனிக்கப்படாத 'விழியோரத்துக் கனவும் வந்து' பாடல். அதிலுள்ள காவிய சோகம் தமிழ் திரையிசையின் மகத்தான பதிவுகளில் ஒன்று.

அந்திமழைக்கு வருவோம். சில பாடல்களை அதன் வீடியோவோடு தைரியமாக பார்க்கலாம். அப்படியொன்று இது. இந்தப் பாடலுக்கு முன்னால் ஒரு பகுதி வரும். பார்வையற்றோர் பள்ளியில் அந்த மாணவர்களுடன் இணைந்து கமலும் நின்று கொண்டு பாடும் பாட்டு.

நான் இளம் வயதில் முதன்முறையாக அந்தப் பகுதியை பார்க்கும் போது அப்படி நெகிழ்ந்து போனேன். அதில் கவனியுங்கள். ஹீரோவை தனியாக சித்தரிக்காமல் அந்தக் கூட்டத்தில் ஒருவராய் காட்டுவார்கள். அதுவரை குருட்டு கதாபாத்திரம் என்றால் கூலிங்கிளாஸ் போட்டு மழுப்பி தள்ளாடி நடந்து சொதப்பி பரிதாபத்தை சேகரித்துக் கொண்டு என்கிற பிஸினெஸ் எல்லாம் இல்லாமல் கண்ணாடியணியாமலேயே ஒரு கண்பார்வையற்றவரின் உடல்மொழியை கச்சிதமாக முயன்ற கமலுக்கு ஒரு கைத்தட்டலை தருவோம் நண்பர்களே...

எனவே இந்தப் பாடலை அதன் தொடக்கத்தோடுதான் கவனிக்க வேண்டும். பார்வையற்ற பிள்ளைகளோடு தன் காதலனும் பாடும் பாட்டை நெகிழ்ச்சியுடன் கவனித்துக் கொண்டிருக்கும் நாயகியிடமிருந்து காமிரா tilt up ஆகி உயிரைப் பிசைந்து தொலைக்கும் ராஜாவின் அற்புதமான ஹம்மிங்கோடு மரங்களின் இடையில் பயணிக்கும்.

மாண்டேஜ் வகை பாடல்களை அதுவரை பாலுமகேந்திராவே அற்புதமாக தமிழிற்கு அறிமுகப்படுத்தியிருக்க, அந்த வகையில் இதுவொரு அற்புதமான மாண்டேஜ். அது வழக்கமான டூயட்டாக இருந்தாலும் அதை சுவாரசியப்படுத்த தன்னால் என்ன முடியுமோ அதையெல்லாம் செய்வார் கமல். இதிலும் கவனியுங்கள்.

ஒரு நிலையான சித்திரம் மெல்ல மெல்ல தெளிவாகி பின்பு சலனக் காட்சிக்கு நகரும் அந்த அற்புதத்தை நுட்பம் வளர்ந்த பிறகான படத்தில் கூட பார்த்திருக்கிறீர்களா?

கண்பார்வையற்ற பாவனையில் மாதவி நடந்து செல்ல கமல் தடுமாறி அவரை அழைத்துச் செல்லும் அந்தக் காட்சியிலுள்ள பரிகாசத்தை என்ன என்பீர்கள்?

இந்த ஒரேயொரு பாடலுக்காகவே இந்தப் படம் பிய்த்துக் கொண்டு ஓடியிருக்க வேண்டுமே? தோற்கடித்து விட்டீர்களே ஐயா..

இளையராஜா + வைரமுத்துவின் பிரிவிற்கு அவரவர்களின் தனிப்பட்ட காரணங்கள் இருந்தாலும் அதற்கான உரிமையும் நியாயமும் இருந்தாலும் அந்தப் பிரிவு பிறகான திரையிசையை பாலைவனமாக்கியிருக்கிறதே, அது வரலாற்றுத் துரோகம் இல்லையா கலைஞர்களே... காலம் உங்களை மன்னிக்குமா என்ன?



***
 
சக்தி செளந்தர்ராஜன் இயக்கிய 'மிருதன்' திரைப்படம் பார்த்தேன். 'நாணயம்' 'நாய்கள் ஜாக்கிரதை' என்று அவரது முந்தைய திரைப்படங்களின் வரிசையைப் பார்க்கும் போது அவர் திரில்லர் ஜானர்களில் படமெடுக்கும் ஆர்வமுடையவர் என்று தெரிகிறது. அந்த ஆர்வம் மிருதனில் சற்று முன்னேறி சுவாரசியமாகியிருக்கிறது எனலாம். வாழ்த்துகள் அவருக்கு.

தமிழ் திரைப்படங்களை அந்த சூழலில் மற்ற தமிழ் திரைப்படங்களுடன் மட்டுமே ஒப்பிட முடியும் என்கிற ஆதாரமான நோக்கில் மிருதன் சமீபத்திய திரைப்படங்களோடு பார்க்கும் போது எவ்வளவோ தேவலை. பரபரப்பான காட்சிகளின் இடையே தமிழ் சினிமா மரபு படி கட் செய்து ஜெயம் ரவிக்கும் லட்சுமி மேனனுக்கும் ஒரு டூயட்டை செருகி எரிச்சலடைய வைப்பாரோ என்று பயந்து கொண்டே இருந்தேன். அப்படி செய்யவில்லை. படத்திலுள்ள நம்பகத்தன்மை, தர்க்கப்பிழைகள் உள்ளிட்ட பலவற்றைத் தாண்டியும் ஹாலிவுட் பாணியில் அந்த பரபரப்பை இடையறாமல் தொடரச் செய்வதில் இயக்குநரின் ரசனையைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் அந்த தீவிரத்தை மட்டுப்படுத்தும் அசட்டுத்தனமான நகைச்சுவைகள் தமிழ் பார்வையாளர்களை மனதில் வைத்து உருவாக்கியவை போல. போலவே சிறுமியை வைத்தான சென்ட்டிமென்ட் காட்சிகளும்.

Zombie களுக்கும் ஒரு விநோதமான ஆபத்தான வைரஸ்ஸால் பாதிக்கப்பட்டு உருவாகும் மூர்க்கர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இதை எப்படி zombie திரைப்படமென்று விளம்பரித்தார்கள் என்று தெரியவில்லை.

தமிழில் இப்படியொரு ஜானரில் படம் திட்டமிட்டு வெளியாகி அது ஏறத்தாழ சுவாரசியத்துடன் இருக்கிறது என்பதே ஆரோக்கியமான போக்காக இருக்கிறது. இந்த வகையில் சென்றால் ஒரு நீட்டான ஹாலிவுட் திரைக்கதையமைப்பில் தமிழிலும் கூட ஒரு திரைப்படம் உருவாகக்கூடும் என்கிற நம்பிக்கை பிறக்கிறது. (ஹாலிவுட்தான் அளவுகோலா என்று கேட்காதீீர்கள்,, ஏறத்தாழ ஆம்).

இமானின் இசையில் வரும் அந்த 'முன்னாள் காதலி்' ராக் பாணியில் ஓர் அட்டகாசமான பாடல். தொண்டைய கிழியும் டெஸிபலில் பாடிய விஷால் தத்லானி அசத்தியிருக்கிறார்.

அரசியல் கூட்டத்திற்கு ஆள் பிடிப்பது போல் இதில் கூட்டம் கூட்டமாக வந்து ஜெயம் ரவியின் துப்பாக்கியினால் சுடப்பட்டு சுடப்பட்டு வீழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள். பெரிய பட்ஜெட்படம் போல. இவர்களுக்கும் வெத்தலைபாக்கு போட்ட வாய் மாதிரியான ஒப்பனைக்கே நிறைய செலவாகியிருக்கும். அத்தனை நபர்கள்.

தண்ணீர் பட்டால் இவர்களுக்கு அலர்ஜி என்பது (இந்த வைரஸ் நாயிடமிருந்து பரவுகிறது) ஒரு நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு கோயில் வாசலில் சுண்டலுக்கு நிற்கும் பக்தாஸ் போல என்ன காரணத்தினாலோ மருத்துவமனை வாசலில் திரண்டு நிற்கும் வைரஸ் கனவான்களை தண்ணீர் கொண்டு சமாளிக்கிறார் ஹீரோ. தண்ணீரும் தீர்ந்து போய் விடுகிறது.

"அவர்கள் மேலே எச்சில் துப்பினால் விலகிப் போகும் சாத்தியம் உண்டே" என்றேன் சீரியஸ் கிண்டலாக. "ஆமாப்பா.. எனக்கும் தோணுச்சு. சொல்ல தயக்கமா இருந்தது" என்றாள் மகள்.

என் வீட்டிற்குள்ளேயே ஒரு சஹஹிருதயர் இருக்கிறார் என்பதைக் கண்டு கொண்ட தருணம் அது.


***


வடிவேலு ஊத்தப்பத்திற்காக மெனக்கெட்டு அதன் ரெசிப்பியை கால் மணி நேரத்திற்கு இழுத்து இழுத்து சொல்லியது போல மற்ற கட்சிகள் பிட் அடித்து காப்பி அடித்து கொஞ்சம் சொந்தமாய் யோசித்து வியர்த்து ஒழுக தோ்தல் அறிக்கை தயாரித்து வெளியிட,

அம்மாவோ ஒரே வார்த்தையில் 'மாஸ்டர் ஒரு ஊத்தப்பம்' என்று ஜோலியை சுலபமாய் முடித்து விட்டார்கள்.

"அம்மா .. ன்னு கூப்பிட்டவுடனே சமையற்கட்டிலிருந்து வியர்வையை துடைச்சிக்கிட்டே 'என்னடா கண்ணு வேணும்" னு ஒரு பரிதாபமான உருவம் வருமே.. அந்த அம்மா -ன்னு நெனச்சீங்களா....

அம்மா.... டா.... மகிழ்ச்சிடா...



***


ஒரு போலியான சாதி மறுப்பாளரை கண்டுபிடிப்பதற்கான ஒரு வழி, அவர் பிறந்த சாதி உங்களுக்கு தற்செயலாக தெரிந்திருந்தால் பேச்சின் இடையே அது தொடர்பான கிண்டலையோ, பழமொழியையோ சொல்லி விளையாட்டாக சீண்டிப் பாருங்கள். ஆசாமிக்கு சுர்ரென்று கோபம் வந்து அதை மறைக்க முயன்றோ அல்லது கிண்டலுக்கு ஆவேசமாக எதிர்த்தோ எதிர்வினை புரிந்தால் பூனைக்குட்டி வெற்றிகரமாக வெளியே வந்து விட்டது என்று அர்த்தம்.

நான் பிறக்க நேர்ந்த(கவனிக்கவும்: நேர்ந்த) சாதி அல்லது மதத்தைப் பற்றி எவர் கிண்டலடித்தாலும் அவமதித்தாலும் அது ஒரு துளி கூட என்னைப் பாதிக்காது என்பதை துணிவுடன் என்னால் சொல்ல முடியும். ஏனெனில் மனதளவில் அது சார்ந்த விருப்போ வெறுப்போ எதுவுமில்லாத ஏகாந்த நிலைதான்.

ஒரு பண்பாட்டு அமைப்பு என்கிற அளவில் சாதியின் வரலாற்றுத் தரவுகளை, பின்னணிகளை ஆய்வு நோக்கில் அறிய முயல்வேனே தவிர உணர்வுபூர்வமாக அதனுடன் எனக்கு எவ்வித பிணைப்பும் கிடையாது.

***

தேசிய விருதை மறுத்த இளையராஜாவின் நிலைப்பாடு குறித்து கங்கை அமரன் முன்வைக்கும் ஆவேசமான கருத்துக்களை - ராஜாவின் ரசிகர்களும் - சற்று நிதானமாக யோசித்துப் பார்க்கலாம்.

ராஜாவின் இசை மேதமை குறித்து பொதுவாக எவரும் கேள்வி கேட்கவில்லை. அது நிரூபிக்கப்பட்ட ஒன்று. அவரது கலை சார்ந்த திமிரை கூட யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை. அதை வித்யா கர்வம் என்று கூட சகித்துக் கொண்டு விடலாம்.

ஆனால் அந்த மனோபாவத்தை அவர் 'நாயினும் கடையேன்' என்கிற அடக்க தொனியின், ஆன்மிக குரலின் உள்ளாகவே வெளிப்படுத்துகிறார் அல்லவா, அந்த இரட்டை மனநிலையின் போலித்தனத்தைத்தான் ஆரம்பத்திலிருந்து சொல்லி வருகிறாம்; விமர்சித்து வருகிறோம். அதையேதான் கங்கை அமரனும் சொல்கிறார். இதை தாம் சகோதரராக அல்ல, ரசிகனாக சொல்கிறேன் என்று அவர் அழுத்தமாக சொல்வதில் உண்மையும் நேர்மையும் இருக்கிறது.

பாடலுக்காக ஒரு விருதையும் பின்னணி இசைக்காக ஒரு விருதையும் தரும் உலக நடைமுறையை இந்திய தேசிய விருதுக் கமிட்டியும் பின்பற்றுவதில் என்ன தவறு? முழு இசைக்கே தான்தான் அத்தாரிட்டி என்று ராஜா ஏன் நினைத்துக் கொள்ள வேண்டும்? அல்லது அந்த முறை தவறே என்றாலும் கூட ஒரு பெருந்தன்மையொடு, இன்னொரு இசையமைப்பாளருக்கு கிடைக்கும் அங்கீகாரத்திற்காக இந்த விஷயத்தை ஒரு மூத்தவராக சகித்துக் கொண்டு போக முடியாதா?

கங்கை அமரனின் ஆவேசத்தை நிதானமாக கேட்டுப் பாருங்கள்.





***


நண்பர் சொன்னது.:

பின்னணி இசைக்கு விருது தருகிறார்கள் என்றால் பாடல்களுக்கான இசை சரியில்லையா என்ன? என்பது போல் ராஜா புரிந்து கொள்வது விநோதமானது.

திரைப்படங்களில் செயற்கையாக திணிக்கப்படும் பாடல்கள் தேவையா என்கிற விவாதம் நெடுங்காலமாக பேசப் பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் சினிமாவைப் புரிந்த இசையமை்ப்பாளர் அதை பெருமையாகவே கருத மாட்டார். ஆனால் ராஜா இரண்டையும் ஒட்டுமொத்தமாக இணைத்து குழப்பி, குழம்பி 'இது சரின்னா.. அது சரியில்லையா.. கொடுத்தா மொத்தமா குடு' என்று சொல்வது முறையில்லை.

ராஜா ஒரு சில படங்களில் இசையமைப்பாளராக தோன்றியுள்ளார். "ஏன் என் நடிப்பு சரியில்லையா? என்று அந்தப் படங்களின் சிறந்த நடிகருக்கான விருதையும் தாமே கேட்டு அடம் பிடிக்காமலிருப்பது வரை மகிழ்ச்சி.


***


இந்தியத் திரைப்படங்களில் பாடல்கள் தேவையா என்பதே அரதப்பழசான விவாதமாகி விட்ட சூழலில் இன்னமும் நாம் அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்க வேண்டியதே துரதிர்ஷ்டமானது.

கடந்த நிலைத்தகவல் ஒன்றில் நண்பர் சிஎஸ்கே -விற்காக அளித்த பதில் இது.
 
()

பாடல்கள் இந்திய திரைப்படக் கலாசாரத்தின் பிரத்யேகமான ஒரு விஷயம், ஏன் அதை இழக்க வேண்டும் அல்லது தூற்ற வேண்டும் என்பது ஒரு காலக்கட்டம் வரையில் அதுவும் ஒரு நிலையில் வரை சரி. ஏனெனில் முந்தைய காலத்தில் ஒரு திரைப்படத்தின் வெற்றியை தீர்மானிக்கும் காரணியாய் பாடல்களும் இருந்தன. நிறையப் பாடல்கள் இருந்ததை ரசிகர்களும் வரவேற்றார்கள். ஏனெனில் அதுவரையான கூத்து, நாடக வடிவம் அப்படியே திரையில் பெயர்ந்துதான் காரணம். திரைக்கென இருக்கும் பிரத்யேகமான இலக்கணத்தைப் பற்றி எவரும் கவலைப்படவில்லை.

ஆனால் இன்று நிலைமை வேறு. எல்லாக்கதைகளும் சொல்லப்பட்டு விட்ட நிலையில் திரைக்கதையை எப்படி சுவாரசியமாக உருவாக்க வேண்டும் என்பதுதான் இயக்குநர்களின் முன் உள்ள கடுமையான சவால். அதற்காக மண்டையைப் பிய்த்துக் கொள்கிறார்கள். உலக சினிமா மற்றும் ஹாலிவுட் சினிமாக்களின் பரவலான பரிச்சயம் ரசிகர்களின் மனோபாவத்தையும் எதிர்பார்ப்பையும் கூட மாற்றி விட்டது.

பாடல்கள் திரைப்படத்தின் சுவாரசியத்திற்கான தடைக்கற்களாக இருப்பதை இயக்குநர்களும் ரசிகர்களும் பரவலாக உணரும் சூழலில் யாருக்காக அந்த சம்பிதாயத்தை விடாப்பிடியாக தொடர்கிறார்கள் என்பதே புரியவில்லை. சமீீபத்தில் பார்த்த என்னுள் ஆயிரம் திரைக்கதையை இன்னமும் மேம்படுத்தி பல சிக்கல்களை இணைத்திருந்தால் நல்ல வடிவமாக வந்திருக்கக்கூடும். ஆனால் மோசமான, குழப்பமான திரைக்கதையுடன் கூடுதல் சுமையாக பாடல்களும் சலிப்பை அதிகமாக்கின.

ஒரு திரைக்கதையில் நிச்சயம் பாடல் வைக்க வேண்டி இருந்தாலும் திரைக்கதையும் அதை வலுக்கட்டாயமாக கோரினால், அதற்கேற்ற அதன் பின்னணியும் இருந்தால் பாடல் இடம்பெறுவதில் பிரச்சினையில்லை. ஆனால் இந்தியச் சினிமாவில் கிளிஷேவாக ஒரு வலுக்கட்டாயத்துடன் பாடல்கள் இடம் பெற்று வெறுப்பேற்றுகின்றன என்பதை நாம் அனைவருமே உணர்ந்திருக்கிறோம். பிறகு யாரை ஏமாற்றிக் கொள்ள இந்த நாடகம்?

நமக்கு அந்தளவிற்கு இசைப் பற்று இருக்குமேனில் தனி இசை ஆல்பங்களை ஆதரித்து அந்தக் கலாசாரத்தை வளர்க்கலாம்.


***


இணையததின் மூலமாக மட்டுமே அறியப்பட்டஒரு நபரை நேரில் சந்திப்பது என்பது ஒரு விநோதமான அனுபவம். என்னதான் புகைப்படங்களில் பார்த்திருந்தாலும் அதுவரை விர்ச்சுவலாக மட்டுமே வார்த்தைகளால் உணர்வுகளால் அறிந்திருந்த ஆசாமி நேர்சந்திப்பில் எப்படி இருப்பாரோ எப்படி பேசுவாரோ என்கிற ஆவலும் நெருடலும் ஏற்படுவது இயல்பே.

ஆனால் நேர்சந்திப்பில் முதன்முறையாக ஒருவரை சந்திக்கச் செல்வதற்கும் இதற்கும் நிறைய வித்தியாசமுள்ளது. ஒரு நபரை அப்போதுதான் முதன்முறையாக சந்திக்கச் செல்கிறீர்கள் என்றால் அவரது விருப்பு, வெறுப்புகளை அறிய சில நாட்களாவது ஆகும்; மேலும் சில சந்திப்புகள் தேவைப்படும். ஆனால் இணைய நட்பு அப்படியல்ல. அவரது உணர்வுகளை ஆசாபாசாங்களை இணையப் பரிமாற்றங்களின் நீங்கள் ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள் என்பதால், ஆசாமி நேரில் எப்படியிருப்பார் என்று உருவம் சார்ந்து நீங்கள் கற்பனை செய்திருந்த ஒற்றுமை, வேற்றுமைகளைத் தவிர, அடுத்த இரண்டு நிமிடங்களிலேயே நீங்கள் அவருடன் சற்று நெருக்கமாகவே பேச முடியும்.

நண்பர் தெஷிணாமூர்த்தி காமாஷிசுந்தர் என்னை நேரில் சந்திக்க பிரியப்பட்டிருந்தார். இரண்டொரு முறை கேட்டிருந்தார். பணிச்சுமை காரணமாக என்னால் செல்ல இயலவில்லை. (உண்மையாகவே) அவருக்கு சற்று வருத்தம் ஏற்பட்டது. எனக்கும். எனவே இந்த முறை நேரம் தேதி எல்லாம் கச்சிதமாக குறித்து வைத்துக் கொண்டு சந்தித்தோம்.

ஏன் நம்மை நேரில் சந்திக்க நினைக்கிறார், ஒருவேளை இளையராஜாவின் பரம ரசிகராக இருந்து, 'இவனை ஒரு சாத்து சாத்தினால் என்ன? என்று நினைத்துக் கொண்டு நேரில் சென்றவுடன் 'டேய் ராமானுஜம்... இவனைக் கவனிடா' என்பாரோ. (கபாலிதான் பிரமோஷன் ஆகி விட்டாரே) நாம் அந்தளவிற்கெல்லாம் ஒர்த்தே கிடையாதே என்கிற விபரீத கற்பனையெல்லாம் தோன்றியது.

அவருடைய ஃபுரொபைலுக்குச் சென்று பார்த்தேன். கட்டின பசு மாதிரி என்னை விட சாந்தமாக இருந்தார். ஹ என்று சற்று தைரியம் வந்தது.

மட்டுமல்ல என்னுடைய பதிவுகளுக்கெல்லாம் ஏறத்தாழ முதல் லைக்கும் பின்னூட்டமும் போடுபவர். சமயங்களில் இவரைப் போன்றவர்களை எங்கே காணோம் என்று கூட தேட வைத்து விடுவார்கள். என்னுடைய பதிவுகளை இத்தனை விரும்பி வாசித்து, நேரில் வேறு சந்திக்க விரும்புபவர் எப்பேர்ப்பட்ட தியாகவுள்ளம் கொண்டவராக இருக்க வேண்டு்ம், சரி நேரில் சென்று பார்த்து விடுவோம் என்று தோன்றியது.

சந்தித்தோம்.

**

என் உள்ளுணர்வு பொய்யாகவில்லை. ;வாழ்க்கைல ஒழுக்கம்தான் முக்கியம்டா.. பொய் சொல்லக் கூடாது' என்றெல்லாம் சமூக விழுமியங்களை தங்களின் வாழ்க்கையில் கறாராக பின்பற்றிக் கொண்டிருப்பார்கள் அல்லவா. இவர் அப்படிப்பட்ட ஆசாமி. சுஜாதா மொழியில் சொன்னால் ' இந்த மாதிரி மாடல்லாம் இப்ப வர்றதில்லைங்க'

ஐம்பதுகளைக் கடந்தவராக இருந்தாலும் புகைப்படத்தில் காணப்படுவதை விடவும் இளமையான தோற்றம்.

சந்தித்த இரண்டாவது நிமிடத்திலேயே தன் வாழ்க்கைச் சுருக்கத்தை தெரிவித்தார். முன்னரே சொல்லிருந்தேன் அல்லவா, இணையத்து நட்பில் உடனடியாக கனெக்ஷன் ஏற்பட்டு விடுமேன.

தொழில் நுட்பம் சார்ந்த உத்யோகம் என்பதால் ஸ்பானர்களை சற்று மறக்க முயன்று எழுத்தின் பக்கமும் எழுத்தாளர்களின் பக்கமும் திரும்பியிருக்கிறார். எழுதுவதிலும் ஆர்வம் இருநந்திருக்கிறது. இளமையில் சாத்தியப்படாததால் நெருப்பு சற்று அணைந்து விட்டது. மீண்டும் அதை உசுப்பச் சொல்லி வேண்டினேன். தம்மைக் கவர்ந்த எழுத்தாளர்களை நேரில் சென்று சந்திப்பதை ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார். (கவனிக்க, அந்த வகையில் எனக்கும் எழுத்தாளன் என்கிற ஓர் அங்கீகாரம் கிடைத்தது)

என் இளமைப்பருவத்தின் அடித்தட்டு வாழ்க்கையில் உள்ள துயரங்கள் குறித்து நான் எழுதுவதையெல்லாம் கவனித்து தனக்கும் அது போன்ற அனுபவங்கள் இருந்த காரணத்தினாலேயே சஹஹிருதயராகி சந்திக்க விரும்பியிருக்கிறார்.

பூரியுடனும் இட்லியுடனும் இணைந்து சில பல எழுத்தாளர்களின் பெயர்களும் அரைபட்டன.

வேண்டாமென்று மறுத்தும் தன்னுடைய வண்டியில் வீடுவரை வந்து இறக்கி விட்ட நல்ல மனிதர். 'இனி பரஸ்பரம் அடிக்கடி சந்திப்போம்' என்கிற உறுதிமொழியுடன் பிரிந்தோம்.

அடுத்த முறை இனி வேறு எவராவது சந்திக்க விரும்பினால் 'உங்கள் பெயர் தெஷிணாமூர்த்தியா,?; என்று உறுதிப்படுத்திக் கொண்டு சந்திக்க உத்தேசம். அந்த அளவிற்கு இந்தப் பெயர் கொண்ட பண்பாளர் ஒருவரோடு நிகழ்ந்த சந்திப்பு அத்தனை இனிமையானதாக இருந்தது.


***


1956 முதல் 2016 வரையான அசோகமித்திரன் சிறுகதைகள் அனைத்தும் ஒட்டுமொத்த தொகுப்பாக வரவிருக்கும் அறிவிப்பை காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் முன்பு கண்ட போது ஓர் இன்ப அதிர்ச்சி வந்து தாக்கியது. என்றாலும் ஒரு வழக்கமான மிடில்கிளாஸ் கோயிஞ்சாமியின் மனவுணர்வுடன் அதன் விலை சற்று பயமுறுத்தியது. முன்வெளியீட்டுத் திட்டத்தில் இன்னமும் சகாயவிலை என்றாலும் என் பட்ஜெட்டிற்கு மீறியது. 'சொக்கா.. ஆயிரம் பொன்னாச்சே...ஆயிரம் பொன்னாச்சே.. என்று மனதிற்குள் புலம்பினேன்.

'என் இடது கையை வெட்டி விற்றாவது இந்த நூலை வாங்க விருப்பம். ஆனால்..' என்று இந்தப் புலம்பலை ஒரு நிலைத்தகவலாக வெளியிட்டிருந்தேன். நண்பர் Arulkumar Sivasamy -ன் காதில் இந்தப் புலம்பல் விழுந்து இந்த நூலை நான் உங்களுக்கு பரிசளிக்க விரும்புகிறேன் என்று முன்வந்தார்.

வெறுமனே ஆறுதல் வார்த்தையாக அல்லாமல், உடனேயே வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி அதற்கான ஆவண நகல்களை அனுப்பியிருந்தார். புத்தக கண்காட்சி தாமதமானதால் நூலும் வெளிவரத் தாதமாகியது என்று நினைக்கிறேன். ரஜினிபட ரசிகன் கபாலிக்காக காத்திருப்பது போல இதற்காக காத்திருந்தேன். கண்காட்சியில்தான் வெளியாகும் என நினைத்திருந்தேன்.

ஆனால் ஆச்சரியகரமாக நேற்றிரவு வீடு திரும்பிய போது கொரியர் வந்திருந்தது. திறந்திடு சீசே. உலகத்தின் சோகத்தையெல்லாம் முகத்தில் தாங்கிய தலைவரின் (?!) அற்புதமான கோட்டோவியத்துடன் அட்டைப்படம். நற்றிணைப் பதிப்பகத்தின் பிரத்யேக பாணியை நினைவுப்படுத்தும் வகையில் அதன் வடிவமைப்பு இருந்தது.

நவீன தமிழ் படைப்பாளிகளின் வரிசையில் இது நிச்சயம் ஒரு முக்கியமான, அசாதரணமான தொகுப்பு என்று கருதுவதால் கெட்டி அட்டையில் பைண்ட் செய்திருக்கலாமோ என்று தோன்றியது.

ஒரு பெரும் பொக்கிஷமே என் வாழ்வில் வந்து இணைந்ததைப் போன்ற மகிழ்ச்சியும் திகைப்பும் ஏற்பட்டது. புத்தக அடுக்கின் முதன்மையில் இந்த நூலை வைத்து சற்று நேரம் வெறித்து பார்த்து அந்த இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.

இதை சாத்தியப்படுத்திய நண்பர் அருள்குமார் சிவசாமிக்கு மீண்டும் மீண்டும் நெஞ்சார்ந்த நன்றி.


***


இந்த விஷயத்தை ஏற்கெனவே சில முறை சொல்லியிருந்தாலும் மீண்டும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

விஜய் டிவியில் மெட்ராஸ்.

சற்று நேரம் பார்த்து விட்டு நகரலாம் என்று நினைத்தால் சானலை மாற்றவே முடியவில்லை. குறுக்கிடும் விளம்பரங்கள்தான் எரிச்சலூட்டுகின்றன.

எத்தனையோ முறை பார்த்த திரைப்படம். ஆனால் சலிக்கவேயில்லை. ரஞ்சித்தின் திரைமொழியும் பாத்திரங்களை கையாளும் விதமும் அத்தனை இயல்பாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கிறது. விஷூவல் மீடியாவின் இலக்கணத்தை உணர்ந்தவர் என்று நன்றாகத் தெரிகிறது. ஆனால் வெகுசன சினிமாவின் சில சம்பிரதாயங்கள் அவர் கையை கட்டிப் போட்டிருப்பதாக யூகிக்கிறேன்.

சுவர் பிரச்சினை சற்று தீவிரமானவுடன் அன்பு, காளி, விஜி ஆகியோரின் நாட்களின் தருணங்கள் மெல்ல நகர்வதை வசனங்கள் அல்லாமல் காட்சிகளின் வழியாகவே உணர்த்தும் அந்தப் பகுதியை மிகவும் ரசித்தேன்.

சம்பவம் நடந்தவுடன் 'எனக்கு ரொம்ப பயமாயிருக்குடா' என்று அழுகிற இயல்பான ஹீரோ (?!) தமிழ் சினிமாவின் உருவாக்கத்தில் மிக அரிதான சித்தரிப்பு.

சந்தோஷ் நாராயணனின் அபாரமான பின்னணி இசை இந்தப் படத்தின் ஒரு முக்கியமான பலம்.

என்னிடம் மட்டும் ஒரு ஐந்து கோடி ரூ இருந்தால் ரஞ்சித்திடம் தந்து அவர் முழுமையாக விரும்பும்படியான ஒரு திரைப்படத்தை உருவாக்கச் சொல்லி வேண்டுவேன். சர்வதேச அளவில், தரத்தில் புகழப்படக்கூடிய ஒரு தமிழ் திரைப்படத்தை ரஞ்சித்தால் உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கையும் விருப்பமும் என்னுள் இருக்கிறது.


***


உடலைப் பேணிக்காத்தல் என்பது தொடர்பாக பேச்சு வந்ததால் அது தொடர்பாக மகளி்டம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

"நம் உடல் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட ஓர் இயந்திரம். தன் சிக்கல்களை தானே தீர்த்துக் கொள்ளும் வகையில் அதன் இயங்குமுறைகள் அபாரமாக உள்ளன. ஆனால் நாம் அதை உணராமல் பல்வேறு வழிகளில் அதை தண்டித்துக் கொண்டே இருக்கிறோம். கூடுமான வரை அந்த தண்டனைகளைப் பொறுத்துக் கொள்ளும் உடல் அது தாங்காத நிலையில் அதற்கான சிக்கல்களுக்கு உள்ளாகிறது. அப்போதும் கூட அதற்கான சமிக்ஞைகளை முதலிலேயே நமக்கு தருகிறது.

தன் தேவைகளை அதுவாகவே நமக்கு நினைவுப்படுத்துகிறது. உதாரணமாக வெயில் காலத்தில் உடலின் நீர்ச்சத்து குறைந்தால் அதற்கான சுரப்பிகளின் மூலம் தாகம் எனும் உணர்வை ஏற்படுத்துகிறது. நாம் நீர் அருந்துகிறோம்."

இவ்வாறாக சீரியஸாக பேசிக் கொண்டிருந்ததின் இடையில் மகள் புகுந்தாள்.

"நீங்க கூட வெண்டைக்காய் பொறியல் ரொம்ப விரும்பிச் சாப்பிடுவங்கள்ல. மூளை நல்லா வேலை செய்யறதுக்கு வெண்டைக்காய் உதவும் -னு சொல்லுவாங்க.. அப்ப அது நல்லா வேலை செய்யணும்-னு அப்பப்ப அது உங்களுக்கு நினைவுப்படுத்துதா?"

()

வீட்டுக்குள்ளேயே வில்லர்களை வைத்து சோறு போட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறோமே என்று ஒரு கணம் என் மீதே கடுமையான கோபம் வந்தது.

suresh kannan