Thursday, January 31, 2019

இயக்குநர் கெளதம் வாசுதேவ்- பகற்கனவுகளின் நாயகன்

'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தை பற்றி பிரத்யேகமானதாக இல்லாமல் அந்தப் படத்தை முன்னிட்டு இயக்குநர் கெளதமின் படைப்புலகைப் பற்றி சிறிது ஆராயலாம் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

பொதுவாக தமிழ் சினிமாவின் இயக்குநர்கள் உருவாக்கும் திரைக்கதைகள் எதன் மீது அமைந்திருக்கும்? அவர்கள் சினிமாவிற்காக பிரத்யேகமாக உருவாக்கிய கதைகள், எழுத்தாளர்களால் முன்பே எழுதப்பட்ட புனைவுகள்,  கேள்விப்பட்ட அனுபவங்கள், பத்திரிகை செய்திகள்  போன்றவை அடிப்படையாக, கலவையாக இருக்கும். இந்த கச்சாப் பொருளை ஆதாரமாக வைத்துக் கொண்டு சினிமாவிற்கேற்ற பண்டமாக உருமாற்றுவது வழக்கம். இந்த உருமாற்றத்தில் இயக்குநரின் தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள அந்தரங்கமான அடையாளங்கள், சாயல்கள், ஆழ்மன இச்சைகள் போன்றவைகள் தன்னிச்சையாக வெளிப்படக்கூடும். இது அந்தளவிற்கு அந்த திரைக்கதையுடன் அவரது அகம் நெருக்கமாக இருக்கிறது என்பதைச் சுட்டுகிறது.

உதாரணத்திற்கு, ஓர் ஆணின் வாழ்வில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களின் காதல் குறுக்கிட்டால்  என்னென்ன சிக்கல்கள் உருவாகலாம் என்பதை  தமிழ் சினிமாவின் சில இயக்குநர்கள் தொடர்ச்சியான இடைவெளியில் படமாக உருவாக்கியுள்ளனர். அதில் ஒரு குறிப்பிட்ட இயக்குநரின்  தனிப்பட்ட வாழ்க்கையை கவனித்தால் நிறைய பெண்கள் இருந்திருக்கின்றனர் என்பதை அறிய முடிகிறது. இதைப் பற்றிய வம்புகளை உரையாடுவது இந்தக் கட்டுரையின் நோக்கமில்லை என்பதால் அவர்களின் பெயர்கள் தேவையற்றது.

இந்தப் பாணிக்கு  எதிர்முனையொன்றும் இருக்கிறது. வணிக நோக்கு சினிமாவிற்கென்றே செயற்கையான கதைகளை அடிப்படையாக  கொண்டு உருவாக்கப்படும் திரைக்கதைகள் அதற்கான மசாலாக்களுடன் யதார்த்த உலகத்துடன் தொடர்பேயில்லாமல் மிகையான நாடகமாக, அந்தரத்தில்  தொங்குபவையாக இருக்கும். அதிலுள்ள செயற்கைத்தனம் காரணமாகவே அது போன்ற திரைப்படங்கள்  நுட்பமான பார்வையாளர்களின் மனதில் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தாது. படம் முடிந்ததும் அந்த சுவாரசியத்தை அரங்கிலேயே கழற்றி வைத்து விட்டு  மறந்து விடும் தன்மையைக் கொண்டதாக இருக்கும்.

இதற்கு மாறாக தாம் உருவாக்கும் திரைக்கதைகளை தம்முடைய மனதுடன், அந்தரங்கமான அனுபவங்களுடன், கற்பனைகளுடன் இணைத்து   உருவாக்கும் இயக்குநர்களின் படைப்புகள் யதார்த்தத்திற்கு நெருக்கமாக இருக்கும். நுண்ணுணர்வுகள் நிரம்பியதாக இருக்கும். அது போன்ற திரைப்படங்களை பார்வையாளன் தன் வாழ்நாள் முழுக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அசை போடுவான்.

இந்த நோக்கில் கெளதமின் திரைப்படங்களைப் பற்றி பார்க்கலாம்.


***


கெளதமைப் பற்றிய தனிப்பட்ட, உபத்திரவமில்லாத விவரங்கள் ஒருவகையில் அவரது திரைப்படங்களைப் புரிந்து கொள்ள உதவக்கூடும்.

அவருடைய தந்தை மலையாளி, தாய் தமிழர். இந்தக் கலப்புக் கலாச்சார பின்னணியோடு பிறந்தவராக இருந்தாலும் கெளதம்  வளர்ந்ததெல்லாம் தமிழ் நாடுதான். திருச்சியில் பொறியியல் படிப்பு. என்றாலும் சினிமா மீதான ஆசை அவருக்குள் ஒரு தீயாக கனன்று கொண்டேயிருந்தது. அதை ஊதிப் பெருக்கியதில் 'நாயகன்' திரைப்படத்திற்கு பெரிய பங்குண்டு. தமிழ் சினிமாவின் திரைமொழியை, கதைகூறலை, பார்வையாளர் ரசனையை பெரிதும் பாதித்த அந்த திரைப்படம் இளைஞரான கெளதமையும் பாதித்ததில் ஆச்சரியமில்லை. அத்திரைப்படம் தமக்குள் ஏற்படுத்திய செல்வாக்கைப் பற்றி பல நேர்காணல்களில் குறிப்பிடுகிறார். (காட்பாதர் திரைப்படத்தின் ஒரு தருணம், அச்சம்  என்பது மடமையடா-வை உருவாக்க காரணமாக இருந்தது என்கிற குறிப்பு அதன் டைட்டில் கார்டில் வருவதை இங்கு நினைவுகூரலாம்). விளம்பரப் படங்களில் இருந்து ராஜீவ் மேனன் வழியாக திரைத்துறையின் நுழைவு அமைகிறது.

கெளதம் என்கிற தனிநபரின் ஆளுமை சார்ந்த விஷயங்கள் அவரது திரைக்கதைகளிலும் நாயகப் பாத்திரங்களின் வடிவமைப்புகளிலும் புறத் தோற்றங்களிலும் கூட வெளிப்படுவதை கவனிக்கலாம். உயர்நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த பொறியியல் படித்த மாணவன், திரைத்துறையில் நுழைவதற்கான  கனவுகளுடன் இருக்கும் இளைஞன், முதற்பார்வையிலேயே காதல் பித்தில் விழுபவன், காதலுக்காக உருகி உருகி வழிபவன், தந்தை மீது அதிக பாசமுள்ளவன், நாணயமான  காவல்துறை அதிகாரி, கண்ணியமான காதலன் போன்ற சித்திரங்கள் தொடர்ந்து அவரது திரைப்படங்களில் வந்து கொண்டேயிருக்கின்றன. போலவே கெளதமின் தனிப்பட்ட விருப்பத் தேர்வான நீலச்சட்டை, கைவளையம் போன்ற விஷயங்கள் அவருடைய திரைப்படங்களின் நாயகர்களிடமும் இருப்பதை கவனிக்கலாம்.

கெளதம் அடிப்படையில் காதல் உணர்வுகள்  பொங்கி வழியும் மனம் கொண்டவராக இருக்கக்கூடும். எனவே அவரது திரைப்படங்களின் நாயகர்கள் உருகி உருகி காதலிக்கிறார்கள். கண்ணியமாக நடந்து கொள்கிறார்கள்.  கெளதம் இது சார்ந்த நிறைய பகற்கனவுகளை தம்முடைய திரைப்படங்களில் உருவாக்குகிறார். தம்மைக் காதலிக்காத பெண்களை வெறுப்பும் வன்முறையுமாக எதிர்கொள்ளும் இளைஞர்கள் நடைமுறையில் நிறைந்திருக்கும் தமிழ் சமூகத்தில் அதற்கு மாறாக கண்ணியமான காதலன்களை அவர் சித்தரிப்பது ஒருவகையில் வரவேற்புக்குரியது.

'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தில் நாயகிக்கு நாயகன் மீது எந்த தருணத்தில் நட்பு, காதலாக மாறியது என்பது குறித்தான உரையாடல் அவர்களுக்குள் பிற்பாடு நடக்கும். அவர்கள் மேற்கொள்ளும் சாலைத் தொடர் பயணத்தில் கண்ணியமாக நடந்து கொள்வான் நாயகன். ஒரே அறையில் தங்குவார்கள். அவள் உடைமாற்றுவதற்கான சூழல் வரும் போது தாமாகப் புரிந்து கொண்டு வெளியேறுவான். 'அந்தக் கணம்தானே"? என்று கேட்பான் நாயகன். அதை ஆமோதிப்பாள் நாயகி.

ஒரு நேர்காணலில் கெளதம் பகிர்ந்த விஷயம் இது. "என்னைச் சந்திக்கும் சில இளம் பெண்கள் கேட்கிறார்கள். உங்கள் திரைப்படங்களில் கண்ணியமான காதலனை தொடர்ந்து சித்தரிக்கிறீர்கள். ஆனால் நடைமுறையில் அது போன்ற ஆண்கள் எங்கேயிருக்கிறார்கள்?". அந்த வகையில் தாம் உருவாக்கும் ஆண் சித்திரங்கள் ஃபேண்டசி தன்மை கொண்டவை என்பது ஒருவகையில் நிரூபணமாகிறது என்று ஒப்புக் கொள்கிறார் கெளதம்.

ஆனால் அவ்வாறான கண்ணியமான காதலன்கள் சமூகத்தில் இல்லவே இல்லை என்றும் சொல்லி விட முடியாது. ஆண்மைய சிந்தனையுடன் இயங்கும் சமூகமாகவே இது பெரும்பாலும்  இருந்தாலும் ஒருதலையான, நிறைவேறாத காதல் உணர்வோடு தோன்றும் வெறுப்பில் பெண்களின் மீது வன்முறைகளை நிகழ்த்தும் சம்பவங்களின் சதவீதத்தையும், காதலின் மூலம் நிறைவேறிய திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சியோடு தங்களின் வாழ்வின் இனிமையைத் தொடரும்  நபர்களின் சதவீதத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். 'உலகத்துல எத்தனையோ பொண்ணுங்க இருந்தாலும் நான் ஏன் ஜெஸ்ஸியை லவ் பண்ணணும்' என்று தம்முடைய அகக்குரல்களின் வழியாக காதலை, பெண்மையை ஆராதிக்கும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

***

ஒரு நல்ல காதலனின் சித்திரத்தைப் போலவே நாணயமான காவல்துறை அதிகாரிகளையும் தம் திரைப்படங்களில் தொடர்ந்து உருவாக்குகிறார் கெளதம். இதுவும் பகற்கனவின் கூறுதான். தேசியம் எனும் அமைப்பு உருவானது பாரபட்சமில்லாத சமூகம் அமைவதற்கான ஓர் ஏற்பாடு. அரசு, சட்டம், நீதி, காவல் போன்ற துணை நிறுவனங்களின் அத்தியாவசியமான பணி என்பது இந்த சமத்துவத்தை சமூகத்தில் நிறுவுவதும், பேணுவதும், கண்காணிப்பதும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு இருக்கிறதா? சமூகத்தில் நிகழும் பல முறைகேடுகளுக்கு இந்த நிறுவனங்களின் பொறுப்பில் இருப்பவர்கள் உடந்தையாக இருக்கிறார்கள், தங்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.

தீயவர்களை அழித்து நல்லவர்களை காக்கும் அவதாரங்களைப் போன்ற காவல்துறை அதிகாரிகளை தம் திரைப்படங்களில் உருவாக்குகிறார் கெளதம். அவர் அடிப்படையில் காதலுணர்வு மேலோங்கிய ஒரு நபராக இருக்கக்கூடிய சாத்தியத்தைப் போலவே காவல்துறை அதிகாரியாக ஆக விரும்பி அந்த நிறைவேறாத ஏக்கம்தான் பலவிதங்களில் அவரது திரைப்படங்களில் எதிரொலிக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அது சார்ந்த பகற்கனவுகள் காவல் அதிகாரியின் சாகசங்களாக அவரது திரைப்படங்களில் வெளிப்படுகின்றன. தங்களை எந்த அவதார புருஷராவது வந்து காப்பாற்ற மாட்டாரா என்று ஏங்குவது எளிய சமூகத்தின் பல காலமாகத் தொடரும் ஏக்கம். எனவே அது சார்ந்த பகற்கனவுகளை உருவாக்கும் திரைப்படங்களை அவர்களும் விரும்புவார்கள். இது போன்ற எம்.ஜி.ஆர் ஃபார்முலா படங்கள் வெற்றி பெறுவதன் அடிப்படையான உத்தி இதுவே.

எனவே கெளதம் உருவாக்கும் 'நல்ல' காவல்துறை அதிகாரிகள் பொதுச்சமூகத்திடம் வெற்றி பெறுவதில் ஆச்சரியமில்லை. இயக்குநர் ஹரி உருவாக்கும் திரைப்படங்களின் காவலர்களும் இதைப் போன்றவர்கள்தான் என்றாலும் அவர்கள் மிகையான ஆவேசத்துடன் இயங்கும் போது கெளதமின் நாயகர்கள் ஆங்கிலப் படங்களின் நகல் போல நளினமாக இருக்கிறார்கள். இந்த ஒப்பீட்டைப் போலவே கெளதமின் காதல் திரைப்பட பாணியையும் செல்வராகவனின் பாணியையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். கெளதமின் பாத்திரங்களின் காதலை கண்ணாடி பூ போல பத்திரமாக கையாண்டு ஆராதிக்கும் போது அதை உடைத்துக் காட்டுவது போல அதன் இருண்மையையும் செல்வராகன் சித்தரிக்கிறார். காமமும் காதலின் ஒரு பகுதி என்று நிறுவுவதில் செல்வராகவனுக்கு ஆர்வம் அதிகம்.

கெளதமின் திரைப்படங்கள் ஒன்று, காதல், அன்பு, பாசம் போன்ற மெல்லுணர்வுகளைக் குறித்த பிரத்யேகமான திரைப்படமாக இருக்கும். விண்ணைத் தாண்டி வருவாயா, நீதானே என் பொன் வசந்தம், வாரணம் ஆயிரம் போன்றவை இந்த வகையைச் சார்ந்தவை. இன்னொரு வகை, காதலும் ஆக்ஷனும் கலந்து இயங்கும் திரைப்படங்களாக இருக்கும். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் போன்றவை.

'அச்சம் என்பது மடமையடா' இந்த தொடர்ச்சியான வகைமையில் உருவானதுதான் என்றாலும் இதில் தம்முடைய வழக்கத்தை மாற்ற முயல்கிறார் கெளதம். 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படத்தின் பல கூறுகளை நினைவுப்படுத்துவது போன்ற காட்சிகளோடு முதற்பாதி திரைப்படம் காதலுணர்வோடு இயங்கும் போது பிற்பாதி காட்சிகள் அதன் எதிர்முனையில் ஆக்ஷன் காட்சிகளோடு இயங்குகிறது. சரிபாதியாக கிழிக்கப்பட்ட காகிதம் போல இதன் திரைக்கதையை இரண்டு வகைமையாக பிரித்திருக்கிறார். இதன் மூலம் தனது ரசிகர்களுக்கு ஒரு புதுமையான சுவையைத் தர வேண்டும்  என்பது அவருடைய திட்டமாக இருக்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த விஷயம் சரியாக உருவாகி வரவில்லை. முதற்பாதி கெளதமின் பாணியில் அற்புதமானதாக இருக்கும் போது பிற்பாதியின் ஆக்ஷன் காட்சிகளில் நம்பகத்தன்மை என்பதேயில்லை. போதாக்குறைக்கு மிக அபத்தமான கிளைமாக்ஸ் வேறு.

அதுவரை நல்ல காவல்துறை அதிகாரிகளையே சித்தரித்துக் கொண்டிருந்த கெளதமின் திரைப்படங்களில் முதன்முறையாக வில்லனாக ஒரு கெட்ட போலீஸ் அதிகாரி வருகிறார். அதை சமன் செய்வதற்காகவோ அல்லது கெளதமின் வழக்கமான பாணியை கைவிடக்கூடாது என்பதற்காகவோ நாயகனும் ஐபிஎஸ் படித்து நல்ல காவல்துறை அதிகாரியாக வந்து தம் பழிவாங்கலை நிகழ்த்துகிறான். இதுதான் அந்த அபத்தமான கிளைமாக்ஸ்.  நல்லவேளை, பழிவாங்கப்பட வேண்டியது நீதிபதியின் பாத்திரமாக இருந்திருந்தால், திரைப்படம் இயங்கும் காலம் இன்னமும் கூடி நம்மை வேதனைக்குள்ளாகியிருக்கும்.

***

'உங்களின் திரைப்படங்கள் ஏன் ஒரே பாணியில் சுற்றிக் கொண்டிருக்கின்றன?' என்று சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர் கெளதமிடம் கேட்கிறார். 'எனக்கு வசதியான விஷயங்களைப் பற்றிய படங்களையே நான் உருவாக்க விரும்புகிறேன்' என்று பதில் சொல்கிறார் கெளதம். மேலே குறிப்பிட்ட இரண்டாவது வகை இயக்குநர்களைப் போல சினிமாவிற்காக வெளியிலிருந்து எடுக்கப்பட்ட கதைகளை திரைப்படமாக்க கெளதம் விரும்பவில்லை. மாறாக தன்னுடைய தனிப்பட்ட, அந்தரங்கமான, ஆழ்மன விருப்பங்களை உணர்வுகளைச் சுற்றியே தன் படைப்புலகத்தை உருவாக்க விரும்புகிறார். இது ஒருவகையில் புரிந்து கொள்ளக்கூடியது. இயக்குநரின் தனிப்பட்டயுலகையும் அவரது திரைப்படங்களையும் பிரித்து நோக்க முடியாது எனும் பொருள் கொண்டது. ஆனால் மேற்குறிப்பிட்ட பத்திரிகையாளரின் கேள்வியைப் போல இந்த தேய்வழக்கு வரிசையை சலிப்பாக உணரும் பார்வையாளர்களும் இருப்பார்கள்.

கெளதமின் திரைப்படங்களில், இவ்வாறாக புரிந்து கொள்ளப்படாமல் தோல்வியடைந்த திரைப்படமாக 'நீதானே என் பொன் வசந்தம்' திரைப்படத்தைக் குறிப்பிடுவேன். பொதுவான தமிழ்  சினிமாவின் கதைகூறல் முறையிலிருந்து  பெரிதும் விலகியிருந்த திரைப்படம் அது. சம்பவங்களின் தொகுப்பு மட்டுமே அதில் இருக்கும். டைட்டில் கார்டிலேயே இதை தெளிவாக சொல்லி விடுவார் இயக்குநர். எனவே  காதல் ஜோடியின் ஊடல் மற்றும் கூடல் தொடர்பான சம்பவங்களே தொகுப்பாக திரும்பத் திரும்ப  வந்ததை பலரால் புரிந்து கொள்ள முடியவில்லை. 'என்னய்யா. இது படம் இது' என்று சலித்துக் கொண்டார்கள். மாறாக அந்த உணர்வுகளை நடைமுறையில் அனுபவித்த காதலர்களால் அது சரியாக புரிந்து கொள்ளப்பட்டது. இன்றும் கூட அத்திரைப்படத்தைக் கொண்டாடும் காதலர்கள் இருக்கிறார்கள்.

இது போல 'நடுநிசி நாய்கள்' என்கிற திரைப்படமும் தோற்றது. அந்த மாதிரியான psychological thriller வகைமையை கெளதமிடம் இருந்து பார்வையாளர்கள் எதிர்பார்க்கவில்லை என யூகிக்கிறேன். ஒரு கலாசார அதிர்ச்சியுடன் அதைப் புறக்கணித்தார்கள். இந்த நிலையில் 'கிராமப்புறப் பின்னணியை வைத்து ஒரு திரைப்படம் உருவாக்குவதற்கான ஆர்வம் இருக்கிறது' என்று கெளதம் நேர்காணல்களில் சொல்லி வருவது எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது.

**

காதலும் வீரமும் தமிழர் பெருமை என்கிற மரபையொட்டி, அந்த இரண்டு விஷயங்களை பிரத்யேகமாகவும் கலந்தும் தம் திரைப்படங்களை இதுவரை உருவாக்கிய கெளதம், அதை முற்பாதி, பிற்பாதியாக இரண்டாகப் பிரித்து உருவாக்கிய 'அச்சம் என்பது மடமையடா'வின் கலவை சரியாக உருவாகி வரவில்லை. முதற்பாதி 'விதாவி'ன் முன்தீர்மானிக்கப்பட்ட சாயல்களோடு அற்புதமாக உருவாகியிருந்தாலும், அதன் எதிர்முரணாக பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி தர வேண்டும் என்று திட்டமிடப்பட்ட இரண்டாம் பாதி சொதப்பலாக அமைந்து விட்டதே இத்திரைப்படத்தின் தோல்விக்கு காரணம்.

இரண்டாம் பகுதியின் இறுதிக்காட்சி வரையில் அதுவரை சிக்கல்களுக்கான காரணத்தை பார்வையாளர்களுக்கு தெரிவிக்காமல் படம் நிறைவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஓர் அவசர இணைப்பாக அதை விளக்கியது ஒரு புதுமையான உத்தி. ஆனால் மற்ற சொதப்பல்களில் இந்தப் புதுமை அமுங்கிப் போனது. 'Big Bad Wolves' என்கிற இஸ்ரேல் திரைப்படத்தில் படத்தின் கட்டக் கடேசி ஷாட்டில்தான்  அதுவரையான சிக்கலுக்கான விடையிருக்கும். பார்வையாளர்களுக்கு ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சியது.  அதுவரைக்கும் பார்வையாளர்களை வேறு ஒரு திசையை நோக்கி போக்கு காட்டிக் கொண்டிருப்பார் இயக்குநர்.

கெளதம் தனது செளகரியமான அச்சில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தாலும் நுட்பத்தை நவீன தோரணையில் அமைந்த உருவாக்கத்துடன் திறமையான கதைசொல்லியாக இருப்பதால் அவருக்கான சந்தைக்கும் பார்வையாளர்களுக்கும் அடுத்த சில வருடங்களுக்காவது இழப்பிருக்காது என்று தோன்றுகிறது.

(காட்சிப்பிழை -டிசம்பர் 2016 இதழில் பிரசுரமானது)


suresh kannan

Wednesday, January 30, 2019

'மகேஷிண்டே பிரதிகாரம்' - அவல நகைச்சுவையின் அழகியல்


இந்தியாவில் மையநீரோட்ட சினிமாக்கள் மரபான கதைகூறல் முறையிலிருந்து பொதுவாக மெல்ல விலகி வருகின்றன. ஒரு புள்ளியிலிருந்து துவங்கி ஒரு முழு வட்டமாக மறுபடியும் அதில் இணையும் தேய்வழக்கு திரைக்கதைகள் மறைந்து வருகின்றன. வழக்கமான பாணியில் அல்லாமல் அநேர்க்கோட்டு வரிசையில் சம்பவங்களின் தொகுப்பாக உயிர் கொள்கின்றன. பின்நவீனத்துவத்தின் காலக்கட்டத்தில் இருக்கிறோம் என்பதை அழுத்தமாக நினைவுப்படுத்தும் படைப்புகள் உருவாகி வருகின்றன. பழைய கால சிவாஜி படங்கள் மாதிரி கதாபாத்திரங்களின் மிகையான புறச்செய்கைகளின்  மூலம் உணர்ச்சிகள் வெளிப்படுத்தப்படுவதில்லை. ஐரோப்பிய சினிமாக்கள் போல கலையமைதியுடன் கூடிய காட்சிகளின் மூலம் பாத்திரங்களின் அகச்சிக்கல்கள் பார்வையாளர்களுக்கு நுட்பமாக கடத்தப்படுகின்றன.

உலகமயமாதல், மல்ட்டிபெக்ஸ் அரங்கங்களுக்கென்று உருவாகும் பிரத்யேகமான பார்வையாளர் சதவீதம் ஆகியவை திரைக்கதை உருவாக்கங்களில் பாதிப்பை செலுத்துகின்றன. உலக சினிமாவின் பரிச்சயமும் செல்வாக்கும் கொண்ட இளைய தலைமுறை இயக்குநர்கள் தங்களுக்கான சாத்திய எல்லையில் மரபை மீற நினைக்கிறார்கள். இவ்வாறான மாற்று முயற்சிகள் இந்தி திரைப்படங்களில்  எப்போதோ துவங்கி விட்டன. இவ்வாறான போக்கை மலையாள சினிமாக்களில் தற்போது காண முடிகிறது. இந்தப் போக்கின்  சாயல் அழுத்தமாக படிந்துள்ள திரைப்படம் 'மகேஷிண்டே பிரதிகாரம்'. (மகேஷின் பழிவாங்கல்).


***


மகேஷ் என்கிற இளைஞன் அவனுக்கு சம்பந்தமில்லாத ஒரு தெருச்சண்டையில் வீழ்ந்து அவமானப்படுகிறான். ஊரே  அவனை வேடிக்கை பார்க்கிறது. உள்ளுக்குள் உடைந்து போகும் அவன், தன்னை அடித்தவனை திரும்ப அடித்து வீழ்த்தாமல் இனி காலில் செருப்பு அணிவதில்லை என சபதம் கொள்கிறான். இதுதான் இந்த திரைப்படத்தின் ஒருவரிக் கதை. வாசிப்பதற்கு சாதாரணமாகத் தெரிந்தாலும் அபாரமான திரைக்கதையின் மூலம் சுவாரசியப்படுத்தியிருக்கிறார்கள். ஒருவரால் ஏற்பட்ட பாதிப்பிற்கு பழிவாங்காமல் சில விஷயங்களின் மீதான தியாகமும் வைராக்கியமும் நிகழ்வது என்பது இதிகாச காலத்திலிருந்தே ஒரு மரபாக நம்மிடம் உள்ளது.

ஆலப்புழாவில் தம்பன் புருஷன் என்கிற நபர் தெருச்சண்டை ஒன்றை விலக்கப் போய் தாக்கப்பட்டு வீழ்ந்திருக்கிறார். பழிவாங்காமல் இனி  காலில் செருப்பு அணிவதில்லை என்கிற  வீராப்புடன் மூன்று வருடங்களுக்கும் மேலாக காத்துக் கொண்டிருந்தார்.  இந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

குளத்தின் கரையில் ஹவாய் செருப்புகள் சுத்தப்படுத்தப்படும் அண்மைக் கோணத்தில் அமைந்த காட்சியோடு படம் துவங்குகிறது. அந்தச் செருப்பு  படத்தின் மையத்திற்கு முக்கியமான குறியீடாக இருக்கப் போகிறது என்பதை முன்னொட்டாக உணர்த்தும் காட்சியது. குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் மகேஷ் (ஃபகத் பாஸில்) ஒரு சராசரி மலையாளியின் சித்திரத்தை சில நொடிகளில் நமக்குத் தந்து விடுகிறார்.

மகேஷ் குளித்து விட்டு கரையேறும் போது பின்னணியில் அபாரமான பாட்டொன்று ஒலிக்கிறது. அவன் வாழும் இடுக்கி எனும் பிரதேசத்தைப் பற்றிய பாடல். மாண்டேஜ் காட்சிகளாக விரியும் இந்தப் பாடலின் மூலமாக அந்த மண்ணின் மணத்தையும் கலாசாரத்தையும், அந்த மண்ணைச் சாராத பார்வையாளர்கள் கூட நெருக்கமாக உணரும் படி அந்தப் பாடல் சிறப்பாக அமைந்துள்ளது. மோனநிலையில் உறைந்திருக்கும் மகேஷின் தந்தை, மகேஷ் சமையல் செய்யும் காட்சி, அவனுடைய அன்றாட நடைமுறைச் செயல்கள் என மாறி மாறி வரும் காட்சிகள்  ஒரு சிறப்பான அறிமுகத்தையும் புத்துணர்ச்சியையும் இந்தப் பாடல் காட்சிகளின் மூலமாக நமக்குத் தருகின்றன.

***


தன் நண்பருக்காக மகேஷ் தெருச்சண்டையில் ஈடுபடும் சம்பவமானது  மிக தற்செயலாக நிகழ்கிறது. ஆனால் அதற்கு முன் சங்கிலித்தொடர் போல சில பல சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதன் எதிர்வினையாகத்தான் இந்தச் சண்டை நடக்கிறது. பல்வேறு சம்பவங்களை ஒன்றிணைத்து இந்தப் புள்ளியில் வந்து நிறுத்தும் திரைக்கதையின் வசீகரம் இயல்பானதாகவும் அற்புதமானதாகவும் இருக்கிறது.

இதைப் போலவே மகேஷின் காதல் தொடர்பான காட்சிகளும். அவனுடைய பள்ளித் தோழிதான் அவள். இளம் பருவத்திலேயே துவங்கும் காதல் நெருக்கமாக வளர்கிறது. அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வதில்லை என்றாலும் மனதளவில் தம்பதிகளைப் போலவே உணர்கிறார்கள். ஆனால் இந்தக் காதல் நிறைவேறுவதில்லை. வழக்கமான சினிமா வில்லன்களோ, பெற்றோர்களின் கடுமையான எதிர்ப்போ என்று எதுவுமேயில்லை. அவளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள். அவன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறவன்.

பெண் பார்க்கும் போது அவன் வந்து பேசும் தருணத்தில் அவளுடைய மனதில் சலனம் வந்திருக்கலாம். ஏனெனில் மகேஷ் உள்ளூரில் ஒரு சாதாரண ஃபோட்டோ கிராஃபர். அவள் தன் பெற்றோர்களிடம் பிடிவாதம் பிடித்தோ அல்லது மகேஷிடம் வந்து இணைந்தோ கூட தன் திருமணத்தை முடித்திருக்க முடியும். சூழல் அவ்வாறான இணக்கத்தோடுதான் இருக்கிறது. அவளது பெற்றோர்களுக்கு கூட இவர்களின் காதல் தெரியும். அவளின் சம்மதமில்லாமல் திருமணத்தை நடத்த மாட்டார்கள் என்பது போல் காட்சிகள் நகர்கின்றன. 'அவனைக் கட்டிக்கிட்டா வெளிநாட்டுக்குப் போகலாம்' என்கிற ஒரே வரியின் மூலம் ஆசையை விதைக்கிறார் அவளின் தந்தை. அவ்வளவுதான், காதல் 'டமால்' ஆகிறது.

இயல்பு வாழ்க்கையில் இப்படித்தான் பல காதல்கள் முறிகின்றன. காதலை விடவும் தங்களின் வாழ்க்கை குறித்த பாதுகாப்பு உணர்வே பெண்களுக்கு அதிகமாயிருக்கும். அதுதான் யதார்த்தமான விஷயம். ஆனால் சினிமாவானது காதல் என்பதை  இதுவரை மிகையான புனிதத்துடன், போலித்தனமாக சித்தரிப்பதுதான் வழக்கம். இத்திரைப்படம் அந்த நாடகத்தன்மையிலிருந்து  விலகி இயல்பாக சித்தரிப்பது சிறப்பு. மகேஷின் காதலி தன் காதலைத் துறக்கும் காட்சிக் கோர்வைகள் மிக மிக இயல்பாக நகர்ந்து செல்கின்றன.

***


இத்திரைப்படத்தின் பல காட்சிகள் Black comedy எனப்படும் அவல நகைச்சுவையின் பாணியில் சுவாரசியமாக உருவாகியிருக்கின்றன. உதாரணத்திற்கு இதைச் சொல்லலாம். மகேஷின் வயதான தந்தை 'எல்லாம் மாயை' எனும் தத்துவார்த்தமான மனநிலைக்கு நகர்ந்து விடுகிறார். இவரின் தொடர்பற்ற செயல்கள் மற்றவர்களுக்கு குழப்பத்தை தருகின்றன. இவர் வீட்டை விட்டு காணாமற் போய் விட்டதாக நினைத்து காவல் நிலையத்திற்கு புகார் தரும் காட்சியில் இவருடைய நண்பர்கள் ஆளுக்கொரு யூகங்களைச் சொல்வார்கள். "அவர் கொஞ்ச நாளாவே ஆளு சரியில்லை சார்"  இங்கே ஒரு சிறிய பிளாஷ்பேக்.

மகேஷின் தந்தையும் நண்பர்களும் சீட்டாடிக் கொண்டிருக்கும் போது அவர் எங்கோ வெறித்து பார்த்துக்  கொண்டிருப்பார். 'இந்த உலகம்தான் எத்தனை அழகானது' என்பார். நண்பர்களும்  அவர் பார்வையின் திசையில் கவனிப்பார்கள். ஒருவன் சாலையில் மூக்கைச் சிந்திக் கொண்டிருப்பான். மாட்டுச்சாணி படிந்த கறை சாலையில் உறைந்திருக்கும்.

இன்னொரு காட்சி இன்னமும் ரகளையானது. மகேஷின் தந்தையும் அவருடைய சகவயது நண்பரும் அமர்ந்திருக்கும் போது அவர் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் இயேசுவின் படத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பார். 'என்னவோய்.. அங்கயே பார்க்கறீரு?' என்று நண்பர் கேட்கும் போது 'நாம ஒரு  திருவிழாவில காபரே டான்ஸ் பார்த்தமே, ஞாபகம் இருக்கா?" என்பார் மகேஷின் தந்தை. நண்பரும் அந்தப் படத்தை உற்றுப் பார்ப்பார். அவருடைய முகம் பரவசத்தில் மலரும். 'மறக்க முடியுமா" என்பார்  இளிப்புடன். பின்னணியில் அவர்கள் பார்த்திருந்த டான்ஸில் கேட்டிருந்த பாட்டு பின்னணியில் ஒலிக்கும். இவ்வளவு உரையாடலும் இயேசு படத்தின் பின்னணியில் நிகழ்வதுதான் இதிலுள்ள அபாரமான நகைச்சுவை.

படம் முழுக்க இது போன்ற அவல நகைச்சுவையில் நனைந்த காட்சிகள்  மிக மிக இயல்பானதாக வருவது அத்தனை சுவாரசியம். தம்மால் பழிவாங்கப்பட வேண்டிய ஆசாமியின் பணியிடம் பற்றிய தகவல் தெரிந்து, சட்டென்று தீர்மானித்து மகேஷ் ஆவேசமாக கிளம்புவான். அவனின் நண்பர்களும் ஊர்க்காரர்களில் சிலரும் வேடிக்கை பார்க்க உற்சாகமாக பின்னால் வருவார்கள். ஆனால் அங்கு சேர்ந்ததும்தான் தெரியும், 'அந்த ஆசாமி நேற்றுதான் துபாய் சென்று விட்டான்' என்ற செய்தி. பொங்கிய ஆவேசத்தையும் பழிவாங்கும் உணர்ச்சியையும் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் அசட்டுத்தனமாக நிற்பான் நாயகன். சுற்றிலும் வேடிக்கை பார்க்க காத்திருந்த பார்வையாளர்கள் வேறு. என்னவொரு அவலமான சூழல்?

***

இத்திரைப்படத்தின் நாயகனான ஃபகத் பாஸிலின் தந்தை நீண்டகாலமாக வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்பது நமக்குத் தெரியும். இந்தப் பின்னணியில் இருந்து  நேரடியாக திரைக்கு வரும் அதிர்ஷ்ட வாரிசுகள் தங்களின் பிம்பத்தை வளர்த்துக் கொள்ள என்னென்ன அட்டூழியங்களைச் செய்வார்கள் என்பதை தமிழ் சினிமாவில் நாம் பார்க்கிறோம். ஆனால் ஃபகத் பாஸில், ஒரு சராசரியான மலையாளியின் சித்திரத்திற்கு மேலான எந்த விஷயத்தையும் இத்திரைப்படத்தில் செய்வதில்லை. காதலில் அபத்தமாக தோற்றுப் போகிறார். எதிர்பாராத அந்நியனிடம் அடிவாங்கி அலங்கோலமாக சாலையில் விழுகிறார். ஊரே வேடிக்கை பார்க்கிறது.  அவர் செருப்பணியாதது குறித்த கிண்டல்கள் வருகின்றன. எதிராளியைத் தாக்குவதற்காக கராத்தே கற்றுக் கொள்ளும் சுயபகடி சார்ந்த காட்சிகளும் வருகின்றன. இறுதிக் காட்சியில் எதிராளியை வீழ்த்துவது சினிமாவுக்கேயுரிய உச்சக்காட்சி என்றாலும் இயல்பானதாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படியொரு பாத்திரத்தில் தமிழில் உள்ள எந்தவோரு முன்னணி நடிகராவது ஒப்புக் கொள்வாரா என்று சந்தேகமாக  இருக்கிறது.

இதில் வரும் நகைச்சுவைக்காட்சிகளும் அபாரம். மலையாளத் திரைப்படங்களுக்கேயுரிய அழுங்கிய ஆனால் அற்புதமான நகைச்சுவை. மகேஷின் போட்டோக் கடையின் பக்கத்தில் ஃபிளெக்ஸ் போர்டு அச்சடிக்கும் கடை வைத்திருக்கும் குடும்ப நண்பராக Alencier Ley Lopez அட்டகாசமாக நடித்திருக்கிறார்.  எவனோ மூக்கைச் சிந்துவதை வெறித்துப் பார்த்து 'உலகம் அழகானது' என்று தன் நண்பரும் மகேஷின் தந்தையும் ஆனவர் உளறும் போது திகைப்புடன் பார்க்கும் இவர், பிறகு 'பேபி, நீ கூட அழகானவன்தான்' என்று அவர் சொன்னவுடன் முகச்சுளிப்பை மாற்றிக் கொண்டு பெருமையான முகபாவத்தை தரும் அந்த சிறுஅசைவு அத்தனை அழகானது.

மகேஷின் காதலி அவனைத் தேடிச் செல்வதற்கு ஏதுவாக, அவளுடைய குடும்ப உறுப்பினர்களை திசை திருப்புவதற்காக இவர் செய்யும் நாடகமும் அதனால் இவர் படும் பாடும் நல்ல நகைச்சுவைக் காட்சி. நாடகக்குழு அனுபவமும் உள்ள இவர் 1998-ல் இருந்தே மலையாளத் திரையுலகில் நடித்து வந்தாலும் சமீபத்தில்தான் பரவலான கவனத்திற்கு உள்ளாகியிருக்கிறார் என்கிற தகவலை பார்த்த போது ஆயாசமாக இருந்தது. மலையாளத்திலுமா அப்படி?

இதைப் போலவே Soubin Shahir-ன்  நகைச்சுவை பங்களிப்பும். இவர் காட்டும் எளிய முகபாவங்களுக்கு கூட சிரிப்பு வருகிறது. 'மம்மூக்காவா, லாலேட்டனா, யார் பெருமையான பாத்திரங்களில் நடிப்பதில் சிறந்தவர்' என்று உற்சாகமாக பேசி  அப்போதுதான் அறிமுகமான ஓர் இளம் பெண்ணை உடனேயே இவர் நட்பாக்கிக் கொள்வது சிறந்த காட்சி. 'தன்னுடைய பெண்ணின் பின்னால் இவன் சுற்றுகிறானோ' என்று அவரது தந்தை இவரிடம் கண்டிப்புடன் பேசும் போது அதை நிராகரித்து இவர் காட்டும் தீவிரமான முகபாவம் நகைச்சுவையின் இன்னொரு பக்கம். அபாரமான நடிகர்.


***

இதில் வரும் பெரும்பாலான முகங்களும் அவர்களது அசைவுகளும் சினிமாத்தனமானதாக இல்லாமல் இயல்பானதாக இருக்கின்றன. மகேஷின் முதல் காதலியும், மகேஷ் இரண்டாவதாக  தன் காதலை எதிர்கொள்ளும் பெண்ணும் கூட அத்தனை இயல்பாக நடித்திருக்கிறார்கள். மகேஷின் தந்தையாக நடித்த,  அந்தோனி கொச்சி, சில காட்சிகளில் வந்தாலும் முதிர்ச்சியான நடிப்பை தந்திருக்கிறார். தாம் எடுத்த புகைப்படத்தை ஓர் இளம் பெண் நிராகரித்த அவமானத்தை மகேஷால் தாங்க முடியாத போதுதான் அந்த துறையில்  தம் தந்தைக்கு உள்ள திறமையை கண்டறிகிறான். அவர் வீட்டை விட்டு காணாமற் போவதில்லை. பின்புறமுள்ள தோட்டத்தில் வரும் பறவையை புகைப்படம் எடுப்பதற்காக இரவில் காத்திருக்கிறார்.

பொருத்தமான தருணங்களில் ஒலிக்கும் பாடல்களும் இனிமையானதாக உள்ளன. கேரள மண்ணின் மணம் கமழும் இசை. இயல்பான, நேர்த்தியான ஒளிப்பதிவு. சமையல் செய்வதின்் இடையில் மகேஷ் அறையின் வாசலில் நிற்கும் காட்சி ஒன்று, தன்னந்தனியான ஓர் ஆணின் சித்திரத்தை அவனின் மனநிலையை ஒரு நொடியில் நமக்கு கடத்தி விடுகிறது. இப்படியாக பல காட்சிகள் நுண்ணுணர்வுடனும் ரசனையுடனும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இயக்குநர் திலீஷ் போத்தனுக்கு இது முதல் திரைப்படம் என்பதை நம்ப முடியவில்லை. மலையாளத் திரைக்கு புதிய அலை இயக்குநர்களின் மத்தியில் ஒரு திறமையான புதுவரவு.

(அம்ருதா - டிசம்பர் 2016 இதழில் பிரசுரமானது)

suresh kannan

Tuesday, January 29, 2019

அசோகமித்திரனின் 'கரைந்த நிழல்கள்' - ஒரு மீள் வாசிப்பு

ஒரு சினிமா நிறுவனத்தில் நெடுங்காலம் பணி புரிந்ததின் மூலம் அசோகமித்திரனுக்கு எந்த அளவிற்கான லெளகீகத் தேவைகள் பூர்த்தியடைந்தன என்பது பற்றி நாம் அறியவில்லையென்றாலும் அந்த உள்வட்ட அனுபவத்தின் மூலம் நவீன தமிழ் இலக்கியத்திற்கு அற்புதமான சில படைப்புகள் கிடைத்திருப்பது  குறித்து மகிழலாம். அசோகமித்திரன் எழுதிய சிறுகதைகளில், நாவல்களில், சினிமா தொடர்பான சில  கட்டுரைகளில் திரையுலகத்தின் பிரத்யேகமான சில அந்தரங்கமான தருணங்கள், பகுதிகள், நபர்களைப் பற்றிய  சித்திரங்கள் மிக நுட்பமாக புனைவு மொழியில் பதிவாகியுள்ளன.

தன் முதலாளியான ஜெமினி வாசனிடம் பணி புரிந்த அனுபவங்களையொட்டி 'My Years with Boss' என்றொரு ஆங்கில நூலை எழுதினார் அசோகமித்திரன். 'மானசரோவர்' நாவலில் ஒரு முன்னணி நடிகனுக்கும் சினிமா உதிரி தொழிலாளிக்கும் உள்ள விசித்திரமான நட்பு பதிவாகியுள்ளது. இந்த நோக்கில் அசோகமித்திரன் திரைத்துறையின் ஓர் அங்கமாக பணிபுரிய நேர்ந்தது தமிழ் இலக்கியத்திற்கு லாபமே. இதன் உச்ச மதிப்பு என 'கரைந்த நிழல்கள்' நாவலைச் சொல்ல முடியும். தமிழில் எழுதப்பட்ட அபாரமான புதினங்களுள் முக்கியமான படைப்பு இது. சமகால மீள்வாசிப்பிலும் கூட தனது புத்துணர்ச்சியையும் புதுமையையும் இது இழக்கவில்லை என்பதே இதன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டுகிறது.

'கரைந்த நிழல்கள்' 1967-ம் ஆண்டில் 'தீபம்' இதழில் தொடராக வந்தது. பல பதிப்புகளைக் கடந்துள்ள இந்த நூல் ஆங்கிலம் உள்ளிட்ட இதர மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 2005-ல் கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட சிறப்பு பதிப்பில் 'இந்த நாவல் எழுதப்பட்டு நாற்பதாண்டுகள் ஆகியும் இதற்கு இன்னமும் தேவையிருக்கும் என்ற அவர்கள் நம்பிக்கை எனக்கு மிகுந்த உற்சாகம் அளிக்கிறது' என்று அதன் முன்னுரையில் எழுதுகிறார் அசோகமித்திரன்.

நாவல் வெளியான சமயத்தில் கிடைத்த வரவேற்பையும் எதிர்மறையான விமர்சனத்தையும் ஒரு குழந்தையின் கண்களின் வழியாக சமநிலையுடன் ஒரே மாதிரியாக  வியக்கிறார் அசோகமித்திரன். '.. நான் எழுதியது இவ்வளவு தீவிரமான பாதிப்பு ஏற்படுத்தியதைக் கண்டு எனக்கு வியப்பாக இருக்கிறது'. நடேச மேஸ்திரி என்னும் பாத்திரத்தை நடேச சாஸ்திரி என்று தவறாக எடுத்துக் கொண்டு எழுந்த எதிர்ப்புகளையும் தனக்கேயுரிய புன்னகையுடன் கடக்கிறார்.

***


'இலக்கிய உத்திகளைக் கையாள்வதில் தமிழர், உலகத்தில் எந்த எழுத்தாளருக்கும் குறைந்தவரில்லை என்று நிரூபிப்பது எனக்கு ஒரு நோக்கமாக இருந்தது' என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார் அசோகமித்திரன். அவரது நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறியது என்பதை இந்தப் புதினத்தை வாசிக்கும் எந்தவொரு நுட்பமான வாசகனும் உணர முடியும். நான்-லீனியர் எனும் உத்தியைக் கொண்டு 1967-ம் ஆண்டிலேயே ஒரு தமிழ் நாவல் எழுதப்பட்டிருக்கிறது என்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அந்த பாணியில் எழுதப்பட்ட முதல் தமிழ் படைப்பாக கூட இது இருக்கலாம்.

இந்த நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. ஒரு தமிழ் திரைப்படத்தின் கடைசிக்கட்ட உருவாக்க ஏற்பாடுகளோடு துவங்கும் இந்த நாவல் அத்திரைப்படத்தின் வீழ்ச்சியையும் அதனோடு இணைந்து சரியும், உயரும் தொடர்புள்ள நபர்களைப் பற்றியும் வெவ்வேறு கோணங்களில் தருணங்களில் விவரித்துக் கொண்டு பயணிக்கிறது. ஒன்றுக்கொன்று நேரடியாக தொடர்பில்லாத, கால வரிசையில் நகரும் அத்தியாயங்கள். ஆனால் எல்லாமே ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புள்ளதாகவும் உள்ளன. காலத்தின் படியில் நின்று கொண்டு இந்த அவல நகைச்சுவையின் பயணத்தை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அனுபவம் இந்தப் புதினத்தின் மூலமாக கிடைக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமாக வந்து கொண்டிருக்கும் சமயத்தில் வாசித்தவர்களுக்கு ஒருவேளை குழப்பம் ஏற்பட்டிருந்தால் அது வியப்பில்லை. ஒட்டுமொத்தமாக படிக்கும் போதுதான் இந்த நாவல் கட்டமைக்கப்பட்டிருக்கும் விதத்தையும் அதற்குப்  பின்னால் உள்ள திட்டமிடல் குறித்தும்  நமக்கு வியப்பும் பிரமிப்பும் உண்டாகின்றன.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிகழும் சம்பவமொன்று அதனோடு தொடர்புடைய நபர்களின் வெவ்வேறு பார்வைக் கோண்ங்களில் தனித்தனியாக விரியும் கதையாடல் உத்தி சமீபமாகத்தான் நமக்கு அறிமுகமாகியிருக்கிறது. Non-linear narrative  எனப்படும் இந்தப் பாணியில் திரைப்படங்களின் மூலமாக உதாரணம் சொல்ல வேண்டுமானால் அகிரா குரசேவாவின் 'ரஷோமானை' சொல்லலாம். இதே பாதிப்பில் தமிழில் வெளிவந்தது மணிரத்னத்தின் 'ஆய்த எழுத்து'.

'கரைந்த நிழல்கள்' நாவலிலும் இந்த உத்தி பல ஆண்டுகளுக்கு முன்பே  பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஸ்டூடியோவில் பணிபுரியும் சம்பத் என்கிற ஆசாமி உணவு வாங்குவதற்காக வண்டியில் புறப்படுகிறான். இது சார்ந்த நுண்விவரங்களை திறமையாக விவரிக்கிறார் அசோகமித்திரன். ஒரு கட்டத்தில் அவன் ஸ்டூடியோவை விட்டு வெளியே செல்லும் போது  படநிறுவனத்தின் முதலாளியின் கார் உள்ளே வருகிறது. ஆனால் தன்னுடைய சொந்த விவகாரம் ஒன்றின் காரணமாக பரபரப்புடன் செல்லும் சம்பத், ஒரு கணம் திகைத்து நின்று விட்டு தன் வேலையைப் பார்க்க அவசரமாக விரைந்து விடுகிறான்.

சில பக்கங்கள் தாண்டியுடன் இதே காட்சி மீண்டும் வருகிறது. இம்முறை அது படமுதலாளியான ரெட்டியாரின் பார்வை  நோக்கில் விரிகிறது. திரைப்படத்தின் நாயகி படப்பிடிப்பிற்கு வராமல் முரண்டு பிடிப்பதால் அது சார்ந்த மன நெருக்கடியிலும் நிதிச்சிக்கல்களிலும் இருக்கிறார் ரெட்டியார். ஸ்டூடியோவிற்குள் கார் நுழையும் போது  தன்னுடைய ஊழியனான சம்பத் எதற்கோ ஒளிந்து கொள்ள முயற்சிப்பவனைப் போல அவருக்குத் தோன்றுகிறது.

இப்படி உதவியாளனாக நமக்கு அறிமுகமாகும் சம்பத், நாவலின் இறுதிப்பகுதியில் பட முதலாளியாக உயர்ந்திருக்கிறான். அதே சமயம் நாவலின் துவக்கத்தில் நமக்கு அறிமுகமாகும் நடராஜன் என்கிற திறமையான தயாரிப்பு நிர்வாகி, இறுதியில் சாலையோரத்தில் பிச்சை எடுப்பவனாக வீழ்ந்து விடுகிறான். இந்த தகவல் கூட நேரடியாக அல்லாமல் சம்பத்தின் உரையாடல் மூலமாகத்தான் நமக்குத் தெரிய வருகிறது.  கனவுகளை பிரம்மாண்டமாக உருவாக்கும் திரையுலகத்தின் பரமபத ஆட்டத்தில் அது தொடர்பான பலரின் தனிப்பட்ட கனவுகள் நசுங்கி சாவது ஒரு முரண்நகை.

***

சில துண்டு காட்சிகள் மட்டுமே எடுக்கப்படவிருக்கிற ஒரு வெளிப்புற படப்பிடிப்பிற்கான ஏற்பாடுகளை திறமையாக கையாள்கிறான் நடராஜன். கொசுக்கள் நிறைந்திருக்கும் ஒண்டுக்குடித்தன வீட்டிலிருந்து அதிகாலையில் அவன் புறப்படுவதான சித்தரிப்புகளோடுதான் இந்த நாவல் துவங்குகிறது. தனது திறமையான ஆனால் ஆரவாரமில்லாத உரைநடையின் மூலம் ஒவ்வொரு சூழலையும் பாத்திரங்களின் அப்போதைய மனநிலையையும் அபாரமாக பதிவாக்கிச் செல்கிறார் அசோகமித்திரன். ஒவ்வொரு காட்சியுமே அதன் நுண்விவரங்களால் நிறைந்திருக்கின்றன. உதாரணத்திற்கு நாவலின் துவக்க வரியை பார்ப்போம்.

'அந்தக் குறுகலான சந்தில் அதிகம் ஓசைப்படாமலேயே வந்த கார் நிற்கும் போது மட்டும் ஒருமுறை சீறியது'.

ஏறத்தாழ சுஜாதாவின் உரைநடையை நினைவுப்படுத்தும் எழுத்து பாணி. மிகச்சுருக்கமான வாக்கியங்களில் ஒட்டுமொத்த சூழலையும் வாசகனின் மனதிற்கு கடத்தி விடும் திறமை அசோகமித்திரனுக்கு வாய்த்திருக்கிறது. ஆனால் சுஜாதாவின் உரைநடையில் இருக்கும் ஆரவாரமும் அதிகப்பிரசங்கித்தனங்களும் அசோகமித்திரனின் எழுத்தில் இல்லை. வாசகனுக்கு இடையூறு செய்யாத கலையமைதியுடன் கூடிய எழுத்தில் அனைத்தையும் உணர்த்தி விடுகிறார்.

ஒரு திரைப்படம் மெல்ல மெல்ல உருவாகும் தயாரிப்பு தொடர்பான நடைமுறை விஷயங்களில் திறமைசாலியாக இருக்கும் நடராஜனை இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் கூட பாராட்டுகிறார்கள். ஆனால் முடிவடையாமலேயே வீழும் அந்த திரைப்படம், நடராஜனை மட்டுமல்ல அதன் தயாரிப்பாளரான ரெட்டியாரையும் காணமாற் போகச் செய்கிறது.

இதைப் போலவே இதற்குப் பிறகான அத்தியாயத்தில் வரும் ராஜகோபாலும். இவனுடைய அறிமுகம் துவக்க அத்தியாயத்திலேயே சிறுகுறிப்பாக நமக்கு கிடைத்து விடுகிறது. நடராஜனைப் போலவே இவனும் வறுமை பிடுங்கித் தின்னும் ஒட்டுக்குடித்தன வீட்டிலிருந்து புறப்படுகிறான். திருமண வயதைத் தாண்டியும் அதற்கான வாய்ப்பு அமையாமல் அண்ணனின் சம்பாத்தியத்தில் ஒண்டிக் கொள்ளும் வேதனை. திரையுலகின் நிலையில்லாத சம்பாத்தியத்தால் அவதிப்படும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களில் ஒருவன். உதவி இயக்குநராக இருப்பவன்.

சந்திரா கிரியேஷன்ஸ் -ஸின் வெளிவராத திரைப்படம் இவனுடைய வாழ்க்கையையும் வீழ்ச்சியடைய வைக்கிறது. அடிக்கடி பஞ்சராகும் சைக்கிளில் செல்கிறான். ரிப்பேராகும் சைக்கிள்,  கீழ் நடுத்தர சமூகத்தின் குறியீடாகவே அசோகமித்திரனின் பல படைப்புகளில் வருகிறது. தனது அடுத்த பட வாய்ப்புக்காக பசியோடு  ஸ்டூடியோக்களில் அலைகிறான். உதவியாளனாக இருந்த சம்பத், தயாரிப்பு நிர்வாகியாக மாறி விட்ட விஷயம் தெரியாமல் அவனிடம் 'தண்ணி எடுத்துட்டு வா' என்று சொல்ல அவன் நாசூக்காக இவனை தவிர்த்து விட்டுச் செல்லும் பகுதி அபாரமானது. போதையின் பின்னணியில் தன்னுடைய அத்தனை துயரத்தையும் நண்பர்களிடம் கசப்பாக ராஜகோபால் வாந்தியெடுக்கும் உரையாடலும் அதை அவல நகைச்சுவையோடு விவரித்திருக்கும் அசோகமித்திரனின் எழுத்து திறனும் வியப்பளிக்கிறது. நடராஜனைப் போலவே இவனுடைய வீழ்ச்சியும் போகிற போக்கில் சம்பத் தரும் தகவலின் மூலம் தெரியவருகிறது.


நாவலின் கடைசிப்பகுதி சினிமாவை நம்பி இயங்கும் இன்னொரு அங்கமான மாணிக்ராஜ் என்பவனின் மூலமாக விரிகிறது. இவனும் நாவலின் இடைப்பகுதியில் நமக்கு அறிமுகமானவன்தான். வெளிநாட்டு திரைப்பட பிலிம்களின் துண்டுகளை வைத்து பிழைப்பு நடத்துபவன். அதைத் தவிர வேறு சில தொழில்களும் செய்கிறான் என்பது பூடகமாக வெளிப்படுகிறது. இந்த கடைசிப் பகுதி அதுவரையிலான தன்மையிலிருந்து மாறி இந்தப் பாத்திரத்தின் மூலமாக ஒருமை தன்னிலையில் விவரிக்கப்படுகிறது. சினிமாவுலகிற்கு தேவையான பிரத்யேகமான திறமைகளோடும் நெளிவு சுளிவுகளோடும் இருப்பவர்கள் மட்டும் எஞ்சி பிழைத்துக் கொள்கிறார்கள்.

தொழிலாளர்கள் முதலாளிகள் மீது கொண்டிருக்கும் மெல்லிய அச்சத்தையும் பதட்டத்தையும் நாவலின் பல பகுதிகளில் நுட்பமாக உணர்த்துகிறார் அசோகமித்திரன். தொழிலாளர்களின் ஆதாரமான மனஅமைப்பை, அடிமைத்துவ மனோபாவத்தை பல அபாரமான வரிகள் மிக நுட்பமாக வெளிப்படுத்துகின்றன. நாவலின் துவக்கத்திலேயே இது சார்ந்த பகுதி வருகிறது. நடராஜன் எத்தனை முடியுமோ அத்தனை முயன்று அதிகாலையிலேயே ஸ்டூடியோவிற்கு சென்றிருந்தாலும் முதலாளி அதற்குள் போன் செய்து விசாரித்திருக்கிறார். அந்த தகவல் நடராஜனை பதட்டத்துக்குள்ளாக்குகிறது. அன்றைய நாளின் ஏற்பாடுகளை முதலாளியிடம் விவரித்து விட்டு பிறகு தகவல் சொன்னவனிடம்   "ஏம்ப்பா முதலாளி அரை மணி நேரமாவா போன் செஞ்சிட்டிருந்தாரு' என்று விசாரிக்கிறான்.


***


சினிமாவுலகின் உதிரிமனிதர்களின் சித்தரிப்புகளைப் போலவே இதில் வரும் இரண்டு தயாரிப்பாளர்களின் சிக்கல்களும் நுண்விவரங்களால் வரையப்பட்டிருக்கின்றன. இது பணக்காரர்களுக்கான பிரத்யேகமான பிரச்சினைகள். சந்திரா கிரியேஷன்ஸ் அதனுடைய வீழ்ச்சியில் இருக்கிறது. அதன் முதலாளியான ரெட்டியார் நிதிச் சிக்கல்களில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். அப்போதைய படத்தை விரைவில் முடிப்பது அவசியம். ஆனால் நாயகியான ஜயசந்திரிகா படப்பிடிப்பிற்கு வராமல் முரண்டு பிடிக்கிறாள். தானே அவளுடைய வீட்டிற்குச் செல்கிறார். முதலாளி தோரணையில் பேசினாலும் தன் மகளைப் போன்ற அவளைத் துன்புறுத்துகிறோமே என்று  உள்ளூற அவருக்கு வேதனையாகவும் இருக்கிறது. 'இந்த அழகும் இளமையும் இருக்கிற வரைதான் உனக்கு மதிப்பு. அதை கெடுத்துக்காதே' என்று உபதேசிக்கிறார். 'உங்க அம்மாவை எனக்கு பல வருடமா தெரியும். ஏன்.. நீயே என் மகளாக கூட இருக்கலாம்" என்கிறார். (எம்.ஆர்.ராதா தொடர்பான ஒரு நகைச்சுவைத் துணுக்கு நினைவிற்கு வருகிறது)

ஒரு கதாபாத்திரத்தையும் அதன் தொடர்பான சம்பவங்களையும் நிஜம் என்று வாசகன் மயங்குமளவிற்கு இத்தனை திறமையாக வடிவமைக்க முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது. வீட்டின் வாசலில் ஜயசந்திரிகா மயங்கி விழுவதோடு சந்திரா கிரியேஷன்ஸின் அஸ்தமன அத்தியாயமும் எழுதப்பட்டு விடுகிறது. இத்தனை நுண்விவரங்களோடு விவரிக்கப்படுகிற இந்த திரைப்படத்தைப் பற்றிய தலைவிதி நாவலின் இறுதிப் பகுதியில் ஒரு உதிரித் தகவலாக மட்டுமே வெளிப்படுகிறது.


இன்னொரு தயாரிப்பாளர், ராம ஐயங்கார். சில சறுக்கல்கள் நேர்ந்திருந்தாலும் வெற்றிகரமான தயாரிப்பாளர். தேசத்தையே பைத்தியமாக அடித்த இரண்டு வெற்றிப்படங்கள் உட்பட பல திரைப்படங்களை தயாரித்தவர். நின்று போன ரெட்டியாரின் திரைப்படத்தை வாங்கி எதையாவது இணைத்து ஒப்பேற்ற முடியுமா என்று பார்க்கிறார். அதே சமயத்தில் இவர் ஆரவாரமாக ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் இந்தி திரைப்படம், இன அரசியலின் காரணமாக வடக்கில் வெளியாவதில் சிக்கல் ஏற்படுகிறது. இது சார்ந்த துயரத்தோடு தன் மகனை தேடிச் செல்கிறார் ஐயங்கார். தந்தையின் புகழின் வெளிச்சத்தில் வெறுப்புற்று எங்கோ இருளில் பதுங்கியிருக்கிறான் அவன்.

ராம ஐயங்கார் தன்னுடைய மகனுடன் உரையாடும் இந்தப்  பகுதி அற்புதமானது. அதுவரை எளிமையாக சென்று கொண்டிருந்த அசோகமித்திரனின் உரைநடை, சற்று அலங்காரமாக, நாடகத்தனமாக ஆவது இந்தப் பகுதியில்தான். இரண்டு நபர்களுக்கு இடையான அகங்கார மோதல் எனலாம். முதலாளித்துவத்தின் மீது வெறுப்புற்று விலகி நிற்கிற மகனின் மனவோட்டத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவன் வெற்று தத்துவம் பேசும் சோம்பேறியாகவும் தந்தையின் சம்பாத்தியத்தை அண்டியிருக்கிற ஊதாரியாகவும் இருக்கிறான்.

இந்தப் புதினத்தில் வெளிப்படும் கதாபாத்திரங்களில் அசலான நபர்களின் அடையாளங்களும் நாம் குத்துமதிப்பாக யூகிக்கும் அளவிற்கு வெளிப்பட்டிருக்கின்றன. ராம ஐயங்காரின் பாத்திரம் எஸ்.எஸ்.வாசனை நினைவுப்படுத்துகிறது. இயக்குநர் ஜகந்நாத் ராவ், நிமாய் கோஷ்ஷின் சாயலில் படைக்கப்பட்டுள்ளார். எவ்வித உள்ளீடும் இல்லாமல் தற்பெருமையுடன் பேசும் தமிழ் மரபின் மேடையலங்கார பாணி ஓரிடத்தில் கிண்டலடிக்கப்டுகிறது. போலவே தமிழ் சினிமாவில் மிகையாக பிழியப்படும் சோகத்தை ஒரு வெளிநாட்டவரின் அபிப்ராயம் வழியாக அசோகமித்திரன் கிண்டலடிக்கிறார்.

***

நவீன தமிழ் இலக்கியத்தில் தமிழ் திரையுலகம் சார்ந்து எழுதப்பட்ட படைப்புகள் குறைவுதான். வெளியிலிருந்து எழுதப்படுபவைகளை விட அந்தத் துறையின் உள்விவகாரங்களை அறிந்தவர்களால் எழுதப்படும் படைப்புகள் நம்பகத்தன்மையுடன் அமைகின்றன. சுஜாதாவின் 'கனவுத் தொழிற்சாலை' உள்ளி்ட்ட சில படைப்புகள் நினைவிற்கு வருகின்றன. ஆனால் இந்த வகைமையில் எழுதப்பட்ட, மிக நுட்பமான அழகியல் சார்ந்த உச்சப் படைப்பு  என்று 'கரைந்த நிழல்களை' சொல்ல முடியும்.

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சினிமாவின் பிரகாசம் மட்டுமே தெரிகிறது. ஆனால் அந்த வெளிச்சத்தின் அருள் கிடைப்பது சிலருக்கு மட்டுமே. ஆனால் பல்லாயிரக்கணக்கானவர்கள் அந்த பளபளப்பின் பின்னுள்ள இருட்டில் நிறைவேறாத எதிர்காலக் கனவுகளுடன் உழன்று மடிகிறார்கள். காலத்தின் சுழற்சியில் பலர் பரிதாபமாக காணாமற் போகிறார்கள். சிலர் மட்டும் கீழிருந்து நிரந்தரம் அல்லாத உச்சிக்கு நகர்கிறார்கள்.

நடராஜனின் நிலைமையைப் பரிதாபத்துடன் நினைவுகூரும் சம்பத் பிறகு  உடைந்த குரலில் சொல்கிறான். "சினிமான்னா என்னாங்க, காரு சோறு இது இரண்டும்தானேங்களே! புரொடக்ஷன் நடக்கிற வரைக்கும் அஞ்சு ரூபா சாப்பாடு, பத்து ரூபா சாப்பாட்டுக்கு குறைஞ்சு வேலைக்காரன் கூட சாப்பிட மாட்டான். பத்துப் பைசா பீடா வாங்க ஆறு மைல் எட்டு மைல் செளகார்பேட்டைக்கு இரண்டு கார் போகும்"

இந்தப் பரமபத ஆட்டமே சினிமாவுலகின் அஸ்திவாரம். ஏறத்தாழ சூதாட்டம். இந்தவுலகின் நிலையின்மையைப் பற்றி, அதன் உதிரி மனிதர்களின் வழியாக கச்சிதமாக சித்தரித்த அபாரமான படைப்பு என 'கரைந்த நிழல்கள்' புதினத்தைச் சொல்லலாம். 

(உயிர்மை ஜூன் 2017 இதழில் பிரசுரமானது)

suresh kannan

Monday, January 28, 2019

தமிழ் சினிமாவில் பாடல்கள் அவசியமா?

ஆர். நடராஜ முதலியார் உருவாக்கிய 'கீசகவதம்'  என்கிற மெளனத் திரைப்படத்தோடு தமிழ் சினிமா உதயமாகியதாக வரலாறு சொல்கிறது. இது 1916-ல் வெளியானது என்கிற தகவல் பரவலாக  நம்பப்பட்டாலும் இது குறித்து திரைப்பட ஆய்வாளர்களுக்கிடையே மாறுபட்ட கருத்துகள் உள்ளன. 1917-ல் வெளியானதாக சிலரும், 1918-ல் என்று வேறு சிலரும் சொல்கிறார்கள். தமிழ் சினிமாவின் நூற்றாண்டு எது என்பதிலேயே குழப்பம். வரலாற்றை ஆவணப்படுத்துதலில் உள்ள அலட்சியமும் அறியாமையும் தமிழ் சமூக மனோபாவத்தின் ஒரு பகுதி என்பது நிரூபணமாகிறது. தமிழில் வெளியான மெளனத் திரைப்படங்களின் ஒரு பிரதி கூட நம்மிடமில்லை என்பது பரிதாபம்.

இந்த அவலம் ஒருபுறமிருக்கட்டும், அது எந்த வகை திரைக்கதையாக இருந்தாலும், திரைப்படத்தின் நடுவே 'பாடல்கள்' எனும் சமாச்சாரம் இடம்பெறும் வழக்கமென்பது இந்தியச் சினிமாவிற்கேயுரியது. தமிழ் சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல. சமகாலம் வரையிலும் கூட தமிழ் சினிமாவோடு பின்னிப் பிணைந்திருக்கும் 'பாடல்கள்' என்பது  தேவையா, அல்லவா என்கிற விவாதம் நெடுகாலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு திரைக்கதைக்கு பாடல்கள், அவசியமா, அநாவசியமா?

அவசியமா என்கிற கேள்வி  எழும் போதே அதன் மீதான எதிர்மறை அம்சங்களும் உள்ளன என்கிற வகையில் அந்தக் கேள்வியிலேயே ஒரு பகுதி விடையும் உள்ளது.

தமிழ் சினிமாவோடும் பார்வையாளர்களோடும் இணைந்திருக்கும் திரையிசைப் பாடல்கள் பற்றிய விவரங்களை அதன் சுருக்கமான வரலாற்றுப் பின்னணியோடு பார்ப்போம்.

***

பன்னெடுங்காலமாகவே தமிழ் கலாசாரத்துடன் இசை என்பது பின்னிப் பிணைந்தது. இயல், இசை, நாடகம் என்பது தமிழ் மரபு. சங்க காலம் முதல் பக்திக் காலம் வரை தமிழிசை செழித்திருந்தது. சில வரலாற்றுக் காரணங்களால் இடையில் சில தொய்வுகள் ஏற்பட்டன.  சமணர்கள் காலத்திலும் டெல்லி சுல்தான்கள் மற்றும் விஜயநகரப் பேரரசு தமிழகத்தை ஆக்ரமித்த காலக்கட்டங்களிலும் தமிழிசை பெரிதும் தேக்கம் அடைந்தது. மாறாக கர்நாடக இசை இங்கு பிரபலமடைந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான தமிழிசை இயக்கத்தின் மூலமாக மறுமலர்ச்சி ஏற்பட்டது. இதன் மூல காரணமாக இருந்தவர் ஆபிரகாம் பண்டிதர். தமிழிசையின் தொன்மையை இதர இசைகளுடன் ஒப்பிட்டு பலவித ஆய்வுகளின் மூலம்  நிறுவினார்.

பத்தொன்பதாம்  நூற்றாண்டின் இறுதியில் சலனப்படங்களின் அறிமுகம் சென்னையில் நிகழ்ந்தது. பதிவாக்கப்பட்ட காட்சிகளின் குறும்படங்கள் சென்னை, விக்டோரியா ஹாலில் முதன்முறையாக திரையிடப்பட்டன. சாமிக்கண்ணு வின்சென்ட் குறும்படங்களை ஊர் ஊராக கொண்டு சென்று திரையிட்டார்.  இது போன்ற சில பல நிகழ்வுகளுக்குப் பிறகு தமிழில் மெளனப்படங்களின் காலம் துவங்கியது. துவக்கத்தில் குறிப்பிட்டபடி 1916-ல் உருவான 'கீசகவதம்' தமிழின் முதல் மெளனப்படம். அப்போது பாடல்களுக்கான அவசியம் ஏற்படவில்லை. பாத்திரங்கள் பேசும் வசனங்கள் காட்சிகளின் இடையே எழுத்தில் காண்பிக்கப்பட்டன. கல்வியறிவு பரவலாக இல்லாத காலக்கட்டம் என்பதால் திரைக்குப் பக்கவாட்டில் இருந்து  வசனங்களை வாசித்துக் காட்டுபவர்கள் இருந்தார்கள்.

1931-ல் இருந்து தமிழ் சினிமா  பேசத் துவங்கியது. 'காளிதாஸ்' தமிழின் முதல் முழுநீள பேசும் படம். ஆனால் அது தமிழ் படமா, அல்லவா என்பதில் சர்ச்சைகள் உள்ளன. கதாநாயகியான டி.பி.ராஜலட்சுமி, தமிழில் பேசும் போது நாயகன் தெலுங்கில் பதிலளிப்பான். இந்தி வசனங்களும் இருந்தன. எழுத்தாளர் கல்கி இத்திரைப்படத்தைப் பற்றி தன்னுடைய பிரத்யேகமான பாணியில் கிண்டலடித்திருக்கிறார். இத்திரைப்படத்தில் சுமார் ஐம்பது பாடல்கள் இடம் பெற்றிருந்தன. பாடல்கள் அதிகம் இடம்பெற்றிருப்பது அந்தக் காலக்கட்டத்தின் வழக்கமாகவும் சிறப்பான அம்சமாகவும் கருதப்பட்டது. அதிக பாடல்கள் கொண்ட தமிழ் சினிமா ஸ்ரீ கிருஷ்ண லீலா (1934) . இதில் 62 பாடல்கள் இருந்தன.

நுட்பம் வளராத இந்தக் காலக்கட்டத்தில் காட்சிகளைப் பதிவு செய்யும் போதே ஒலியையும் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. எனவே  இசை ஞானம் உள்ளவராகவும் சிறந்த பாடகராகவும் இருப்பது கதாநாயகனின் அடிப்படையான தகுதியாக இருந்தது. எம்.கே.  தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, டி.ஆர். மகாலிங்கம் போன்றவர்கள் வெற்றி பெற்ற கதாநாயகர்களாகவும் சிறந்த பாடகர்களாகவும் இருந்தனர். இவர்களது பாடல்களுக்காகவே திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடின. உயர் வர்க்கத்தினர் கர்நாடக இசையையும் கிராமப்புறத்தினர் நாட்டுப்புற இசையையும் ரசிக்கும் வழக்கத்திலிருந்த குறுக்குச் சுவரை கிராமஃபோன் என்கிற நுட்பம்  பெருமளவு பாதித்தது.  நாடகத்தின் பிரபலமான பாடல்கள் இசைத்தட்டில் பதிவு செய்யப்பட்டு பரவலாக கிடைக்கத் துவங்கின. நாடகத்தில் இசைக்கலைஞர்களாக இருந்தவர்களே திரையிலும் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட நிலை மாறி கர்நாடக இசையில் புகழ் பெற்றிருந்தவர்களும் திரையிசையை நோக்கி நகர ஆரம்பித்தனர். திரையின் மூலம் கிடைக்கும் புகழும் செல்வாக்கும் இதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது.

***

இந்தக் காலக்கட்டத்தின் பெரும்பான்மையான படங்கள், அப்போது புழக்கத்தில் இருந்த நாடக மரபையொட்டியே உருவாக்கப்பட்டன. கூத்து மற்றும் நாடக வடிவில் மக்களின் பிரபலமான பொழுதுபோக்காக இருந்த புராணக்கதைகளும் இதிகாசத்தின் கிளைக்கதைகளும் அப்படியே காட்சிகளாக பதிவாக்கப்பட்டன. காமிராவின் அசைவு பெரும்பான்மையாக இருக்காது. நுட்பம் வளராத காலக்கட்டத்தில் இந்த தன்னிச்சையான போக்கு அமைந்தது ஒருவகையில் இயல்புதான்.

ஆனால் காட்சி ஊடகத்தை அதற்கேற்ற சாத்தியங்களுடன் பயன்படுத்தக்கூடிய மனோபாவம் இன்னமும் கூட வளராமல் போனதற்கு இந்த அடிப்படையே ஒரு முக்கியமான  காரணமாக இருக்கிறது. தமிழ் சினிமாவின் திரைக்கதையில் பாடல்கள் ஒரு கூடுதல் சுமையாகவும் தடையாகவும் இருப்பதற்கு  காரணம், இந்த பழமையான மரபை விட்டு இன்னமும் நம்மால் விலக முடியாததே.

இயல், இசை, நாடகம் என்று தமிழக கலையின் அனைத்துக் கூறுகளையும் சினிமா தனக்குள் ஸ்வீகரித்துக் கொண்டதைப் போலவே, சினிமாவிற்கான இசையும்  கர்நாடக, ஹிந்துஸ்தானி, நாட்டார் இசையின் கூறுகளை உள்வாங்கிக் கொண்டது. திரையிசைக்கென கலப்படமாக ஒரு பிரத்யேக பாணி உருவாகத் துவங்கியது. அரசியல் கட்சிகளும் தங்களின் வளர்ச்சிக்காக திரைஊடகத்தை பயன்படுத்திக் கொண்டன. விடுதலைப் போராட்டக் காலத்தில் சுதந்திர உணர்வை ஊட்டியும் வெள்ளைக்காரர்களின் கொடுமையை விளக்கும் பாடல்கள்  இருந்தன. இந்தக் காலக்கட்டத்திற்குப்  பிறகு, சினிமாவின் புகழை அரசியல் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்கிற கண்டுபிடிப்பை  முதலில் நிகழ்த்தியது காங்கிரஸ் கட்சியே.

காங்கிரஸ் தலைவராக இருந்த சத்யமூர்த்தியின் வேண்டுதலின் பேரில் கே.பி.சுந்தராம்பாள் கட்சிக்கூட்டங்களில் பாடி மக்களைக் கவர்ந்தார். திரைப்பாடல்களிலும் இவரது புகழ் நீடித்தது. சினிமாவின் கவர்ச்சியை வலுவாக பயன்படுத்திக் கொண்ட இயக்கங்களில் திராவிட இயக்கம் முக்கியமானது. வசனங்களாகவும் பாடல்களாகவும் தங்கள் கொள்கைகளை வெகுசன மக்களிடம் கொண்டு சேர்த்தனர். இன்னொருபுறம் பட்டுக்கோட்டை கல்யாண  சுந்தரம் போன்ற திரைக்கவிஞர்கள் பொதுவுடமைச் சிந்தனைகளை தம் பாடல்களில் இணைத்தார்கள்.

திரைக்கதைக்கு தொடர்பேயில்லாமல் திடீரென்று கதாநாயகன் அவன் சார்ந்திருக்கும் அரசியல் கொள்கை சார்ந்த பாடலைப்  பாடுவான். கதைக்கும் அந்தப் பாடலுக்கும் நேரடி தொடர்பே இருக்காது. ஆனால் இது முரணாக கருதப்படாமல், மக்களால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட முறையாக இருந்தது. இவ்வாறான வழக்கங்கள் சினிமாவின் உருவாக்கத்தை பெருமளவு பாதித்தன. ஒரு தமிழ் சினிமாவில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு அம்சமாக பாடல்கள் இருந்ததால் இதற்கேற்ப திரைக்கதையை எழுத வேண்டிய கட்டாயம் இருந்தது. இயல்பாகவும் தொடர்ச்சியான போக்கில் உருவாக்கப்பட  வேண்டிய திரைக்கதைகள், பாடல்களின் கட்டாயத்தினால் தடைக்கற்களை தாண்டிச் செல்லும் கட்டாயத்தைக் கொண்டிருந்தது. இந்த வழக்கம் இன்னமும் கூட பெரிதும் மாறவில்லை.

***


ஒரு சினிமாவை பொதுவாக   சட்டென்று எவ்வாறு நினைவுகூர்கிறோம் என்பதை யோசித்துப் பார்க்கலாம். பெரும்பாலும் அதன் பாடல் ஒன்றின் மூலமாகத்தான் இருக்கும். வானொலியிலும் தொலைக்காட்சியிலும் ஒரு குறிப்பிட்ட பாடலை கேட்கும் போது தொடர்புள்ள திரைப்படத்தின் கதை, நடிகர்கள், சம்பவங்கள் முதற்கொண்டு பல விஷயங்கள், அந்தப் பாடலின் மூலமாக நினைவிற்கு வருகின்றன. அந்தளவிற்கு திரையிசையும் தமிழ் பார்வையாளனும் பின்னிப் பிணைந்துள்ளான். கலப்பின வடிவமாக உள்ள திரையிசை, சினிமாவின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது செவ்வியல் இசை உள்ளிட்ட இதர வகைமைகளின் வளர்ச்சிக்கும் தடையாக உள்ள நடைமுறையைச் சிக்கலைக் கவனிக்க வேண்டும்.

கர்நாடக இசையும், நாட்டார் இசையும், விளிம்பு நிலை சமூகத்தின் இசையும் ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன. திரையிசையின் பிரபலமும் கவனஈர்ப்பும் இதர இசை வடிவங்களின் பால் பொது ரசிகர்கள் திரும்பாதவாறு கட்டிப் போட்டுள்ளன. கிராமத்திலுள்ள எளிய மக்கள் கூட  கர்நாடக இசையை தேடி ரசிக்கும் காலக்கட்டமொன்று இருந்தது. புராண நாடகங்களும் கிராமபோன் இசைத் தட்டுக்களும் இந்த இசையை அவர்களிடம் கொண்டு சேர்த்தன. திரையிசையின் அசுரத்தனமான வளர்ச்சி இந்த மரபை ஒரு கட்டத்தில் துண்டித்துப் போட்டது. இசையின் பல வடிவங்கள் அதனதன் மரபு கலையாமல் மெல்ல வளர்ந்து சமூகத்தின் மையத்தில் இடம் பெறும் சூழலை திரையிசை கலைத்துப் போட்டது.


சினிமா என்பது  அடிப்படையில் இயக்குநரின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய ஊடகம். இது பல்வேறு கலைகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்படும் வடிவம் என்பதால் ஒருவரின் கச்சிதமான மேற்பார்வையில், தலைமையில் அமைந்தால்தான்  அது கோர்வையான வடிவமாக வெளிவரக்கூடிய சாத்தியம் அதிகம். இந்தச் சூழல் தமிழ் சினிமாவில் ஏறத்தாழ இல்லை எனலாம்.

சில குறிப்பிட்ட இயக்குநர்களைத் தவிர தமிழ் சினிமாவில் நடிகர்களின் ஆதிக்கம் மிகுதியாக இருந்தது; இருக்கிறது. ஒரு திரைப்படத்தின் வணிகம் அவர்களைச் சுற்றி பிரதானமாக இயங்குவதால் சினிமா உருவாக்கத்தின் எல்லாத் துறையிலும் அவர்கள் மூக்கை நுழைத்தார்கள். அத்துறை சார்ந்த குறைந்த பட்ச அறிவோ, அனுபவமோ  அவர்களுக்கு இருக்கவேண்டுமென்று கட்டாயமில்லை. இயக்குநர்களின் கையில் இருக்க வேண்டிய சினிமா நடிகர்களின் கையில் சிக்குவது துரதிர்ஷ்டம். கதாநாயகர்கள் தங்களை உயர்த்திப் புகழும் வகையில் பாடல்களை உருவாக்கச் சொல்லும் விபத்துகள் அதிகரித்தன.  தங்களின் அரசியல் வளர்ச்சிக்காக இயக்கத்தின் கொள்கைகளை பாடல்களில் திணித்தார்கள். இம்மாதிரியான துரதிர்ஷ்டமான சூழலிலும் கண்ணதாசன் போன்ற கவிஞர்கள் பிரகாசித்தார்கள் என்பது அவர்களின் திறமையைக் காட்டுகிறது. திரைக்கதை சீராக உருவாக வேண்டிய போக்கை இம்மாதிரியான சூழல்கள் பெருமளவு பாதித்தன.

இந்த வழக்கத்தை உடைத்து நடிகர்களின் கையில் இருந்த சினிமாவை இசையமைப்பாளரின் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்த பெருமை இளையராஜாவை சாரும். விளிம்புநிலை இசையாக இருந்த நாட்டார் இசையை சமூகத்தின் மையக் கலைவெளிக்குள் கொண்டு வந்தது அவரது முக்கியமான சாதனை. என்றாலும் கூட பாடல்களின் பங்களிப்பு திரைக்கதையை பாழ்படுத்தும் போக்கு பெரிதும் மாறவில்லை.இளையராஜாவின் புகைப்படம் இருந்தாலும் படத்தின் வணிகத்திற்கு உத்தரவாதம் என்பதால் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் ராஜாவை மொய்த்தனர். நடிகர்களின் ஆதிக்கத்திற்கு பதிலாக இசையமைப்பாளர். மாற்றம் நிகழ்ந்தது இவ்வகையில் மட்டுமே.


ஒரு விநோதமான சம்பவத்தை இங்கு நினைவு கூர வேண்டும். பாடல்களுக்காக இளையராஜாவை பல இயக்குநர்கள் துரத்திக் கொண்டே இருந்ததால் அதிலிருந்து தப்பிக்க அவர் ஒரு விசித்திரமான நிபந்தனையை விதிக்கிறார். 'என்னிடம் வெவ்வேறு வகையிலான ஐந்து மெட்டுக்கள் இருக்கின்றன. அதற்கேற்ப எந்த இயக்குநர் திரைக்கதை எழுதுகிறாரோ, அவர்களுக்கு அந்த மெட்டுக்களை தருவேன்'. ஒரு இயக்குநர் இதை சவாலாக எடுத்துக் கொண்டு பாடல்களுக்கேற்ப திரைக்கதை எழுதி மெட்டுக்களை வாங்குகிறார். பாடல்கள் வெற்றி பெறுகின்றன. படமும் அமோகமாக வெற்றி பெறுகிறது. அது 'வைதேகி காத்திருந்தாள்'. 'நீதானே என் பொன் வசந்தம்' இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர். சுந்தர்ராஜனே வெளியிட்ட தகவல் அது.

அதாவது, காலுக்கு ஏற்ப செருப்பு தைக்கப்படாமல், செருப்பிற்கேற்ப காலை வெட்டிக் கொள்ளும் சினிமா உருவாக்க முறை இதன் மூலம் நிரூபணமாகிறது.  அதையும் வெற்றி பெறச்செய்யும் நம் ரசனை ஒரு கேலிக்கூத்து. தமிழ்நாட்டின் சுவாசங்களுள் ஒன்றான சினிமா குறித்த ரசனை எத்தனை கீழ்மட்டத்தில் உள்ளது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

***

ஒரு காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவின் சிறப்பம்சமாக பார்க்கப்பட்ட 'பாடல்கள்', இன்று கைவிட முடியாத சம்பிரதாயமாக தேய்ந்து கொண்டிருக்கிற வீழ்ச்சியைப்  பார்க்கிறோம். ஒரு சாதாரண திரைப்படத்திலேயே கூட பாடல்கள் சகிக்க முடியாததாக ஆகிக்கொண்டிருப்பது ஒரு பக்கம், சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் திரைக்கதையில்,  சட்டென்று திணிக்கப்பட்ட பாடல் வரும் போது சுவையான விருந்தின் இடையே 'நறுக்'கென்று கல்லைக் கடித்து விட்ட வெறுப்பை பார்வையாளன் உணர்கிறான். இது போன்ற சமயங்களில் ஆண்கள் திரையரங்குகளில் அவசரம் அவசரமாக வெளியே போவதைப் பார்க்க முடிகிறது. இந்த வழக்கம் பலகாலமாக மாறவில்லை. பெண்களும் இது போன்ற சுதந்திரத்தை உணர முடிகிற காலத்தில் அவர்களும் இவ்வாறே வெளியேறுவார்களாக இருக்கும்.

காட்சி ஊடகத்தின் அடிப்படையான நுட்பமென்பது  மேலை நாடுகளிலிருந்து பெறப்பட்டது என்றாலும் திரையிசைப் பாடல்கள் என்பது இந்தியக் கலாசாரத்தின் பிரத்யேக அம்சம்தானே, இசை  கேட்டு வளரும் மரபுதானே நம்முடையது, திரைப்படங்கள் இந்தியப் பண்பாட்டிற்கென உள்ள வடிவத்தில் இருப்பதில் என்ன பிரச்சினை என்று சிலர் விவாதம் செய்கிறார்கள். ஒரு கோணத்தில் மட்டுமே இந்த விவாதம் சரி. ஒரு  திரைக்கதை பாடல்களை மிக அவசியமாக கோருகிறது, கதையின் போக்கு  அவ்வாறாக இருக்கிறது என்றால் அதில் பாடல்கள் இடம்பெறுவது ஒப்புக் கொள்ளப்பட வேண்டியது.

ஆனால்  சம்பிரதாயம் என்பதற்காகவே திரைக்கதையில் எப்படியாவது பாடல்களை திணிப்பது, அதற்கேற்ப திரைக்கதையை சிதைப்பது போன்றவையெல்லாம் எந்த வகையில் சரியாகும்? மட்டுமல்லாமல் திரையிசைப்பாடல்கள் நம் கலாசாரத்தை பிரதிபலிக்கும் விதமாகவா உருவாக்கப்படுகின்றன? அது  கிராமப்புறத்தில் அமைந்த  களமாக இருந்தாலும் ஒரு  ஜோடிக்கு காதல் உதயமாகி விட்டால் அவர்கள் அடுத்தக் காட்சியிலேயே வெளிநாட்டின் பின்னணியில் கோணங்கித்தனமான குதியாட்டங்களை நடனம் என்கிற பெயரில் செய்கின்றனர். இதுவா இந்தியக் கலாசாரம்?

***

பாடல்கள் என்பது வெளிவரவிருக்கும் திரைப்படத்திற்கு விளம்பரமாக கருதப்பட்ட காலம் இருந்தது; இன்னமும் கூட இருக்கிறது. ஆனால் தொழில்நுட்பம் பல்வேறு விதமாக விரிவடைந்திருக்கும் காலக்கட்டத்தில் விளம்பரம் செய்ய பல வழிகள் உள்ளன. பாடல்களுக்கென இருந்த வணிகச்சந்தையும் இன்றில்லை. புகழ்பெற்ற இசையமைப்பாளர்களின் பாடல்கள் வெளியிட்ட சில தினங்களில் லட்சக்கணக்கான பிரதிகள் விற்று சாதனை புரிந்த காலமெல்லாம் மலையேறி விட்டது. இணையம் மிகப்பெரிய கள்ளச்சந்தையாக உருமாறி அந்தக் கதவையும் மூடியிருக்கிறது.

திரையிசைப் பாடல்கள் மறைந்து விட்டால் சராசரி நபர்கள் இசை கேட்பதற்கான சந்தர்ப்பங்களும் குறைந்து விடுமே என்று தோன்றலாம். இதுவொரு மாயை மட்டுமே. அந்தந்த வகைமைகளில் தனிநபர்களின் இசைத் தொகுப்புகள் உருவாவதற்கான சந்தர்ப்பங்கள் பெருகும். பல்வேறு புதிய திறமைகளும் பரிசோதனைகளும் வெளிப்படுகின்ற சூழல் அமையும். திரைக்கதையின் வார்ப்பிற்குள் அடங்க வேண்டிய செயற்கையான கட்டுப்பாடுகள் இல்லாமல் சுதந்திரமான கற்பனையில் சிதைக்கப்படாத இசை கேட்கக்கூடிய  வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலைநாடுகளில் இவ்வாறான வழக்கம்தான் நடைமுறையில் இருக்கிறது.

திரையிசைப்பாடல்கள் இருக்கும் காலக்கட்டத்தில், தனிப்பட்ட இசைத்  தொகுப்புகளில் என்ன நடக்கிறது என்று கவனியுங்கள். அது ஆன்மீகப் பாடலாக இருந்தாலும் சரி. அரசியல் கொள்கை சார்ந்த பாடலாக இருந்தாலும் சரி, பெரும்பாலும் புகழ்பெற்ற திரையிசைப்பாடல்களின் நகல்களாகவே இருக்கின்றன. இது போன்ற அபத்தங்கள் மறையக்கூடிய நிலைமை உருவாகும்.

சினிமாவும் பாடல்களும் ஒட்டுமொத்தமாக ஒன்றையொன்று நிராகரித்து பிரிந்து விட வேண்டுமென்பதில்லை. பொருத்தமான தருணங்களில் பயன்படுத்தப்படுவதின் மூலம் இதையும் சுவாரசியமான உத்தியாக மாற்றலாம். பாடலுக்கு நடிப்பவர்கள் வாயசைத்து பாடும் வழக்கத்தை மாற்றி, பாடல் பின்னணியில் ஒலிக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளை இணைத்து அதை 'மாண்டேஜ்' பாணியில் சிறப்பாக உபயோகிக்கத் துவங்கிய தமிழ் இயக்குநர் பாலுமகேந்திரா. பின்னர் இந்தப் பாணியை பல இயக்குநர்கள் பின்பற்றினார்கள்.

ஹாலிவுட் திரைப்படங்கள், உலக சினிமாக்கள் போன்றவற்றின் பரிச்சயம் மிகுந்து வரும் காலக்கட்டம் இது. பாடல்கள் அல்லாத, கச்சிதமான திரைக்கதைக்குள், நேரத்திற்குள் உருவாக்கப்படும் அம்மாதிரியான திரைப்படங்கள் சுவாரசியமாக இருப்பதை சமகால பார்வையாளர்கள் உணர்கிறார்கள். இதன் பிரதிபலிப்பு இந்தியச் சினிமாக்களிலும் எதிரொலிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். பாடல்களைத் திணிக்கும் போக்கை கைவிட்டு விட்டு திரைக்கதைக்கு பிரதானமாக கவனம் செலுத்த வேண்டிய காலக்கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை சினிமா இயக்குநர்கள் உணர வேண்டும். நூற்றாண்டை நெருங்கி விட்ட தமிழ் சினிமா புதிய போக்கிற்கு ஏற்ப தன்னை சுயபரிசீலனையோடு புதுப்பித்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.. 


(படச்சுருள் - ஜனவரி 2017 இதழில் பிரசுரமானது)


suresh kannan

Tuesday, January 22, 2019

ரஜினி என்கிற மாயமான்தங்களின் துயரங்களிலிருந்து மீட்பதற்காக எந்த ரட்சகனாவது வர மாட்டானா என்பது பொதுசமூகத்தின், குறிப்பாக அடித்தட்டு மக்களின் ஆதாரமான ஏக்கங்களுள் ஒன்று. எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் இந்த எதிர்பார்ப்பு ஓயாது. மதம் போன்ற நிறுவனங்கள் இந்த ஏக்கத்தை வலுவாகப் பற்றிக் கொண்டு ,அவரவர்களின் பிம்பங்களை முன்நிறுத்தி அசைக்க முடியாத அமைப்புகளாகி விட்டன. அரசர்கள் கடவுளுக்கு நிகராக கருதப்பட்ட, அப்படி கருதப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட காலங்களும் முன்பு இருந்தன. ஜனநாயகம் மலர்ந்து மக்கள் அதிகாரத்திற்கு நகர முடியும் என்கிற மறுமலர்ச்சிக் காலக்கட்டத்தில் அரசியல்வாதிகள் இந்த இடத்தை அபகரித்துக் கொண்டார்கள். ஒரு சராசரி நபர் சாம, பேத, தான, தண்டம் என்று பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்டால் ஒரு குறுநில மன்னருக்கான அதிகாரத்தையும் செளகரியங்களையும் பெற்று விட முடிகிறது.

பொதுமக்களுக்கு உண்மையாகவே சேவை செய்வதின் மூலமாகவோ அல்லது அப்படியான பாவனைகளின் மூலமாகவோ அதிகார அரசியலுக்குள் வருவது ஒருவழி. இதற்கு நீண்ட காலமாகும். ஆனால் இதற்கான குறுக்கு வழியும் ஒன்று இருக்கிறது. அது சினிமா. கச்சிதமாக திட்டமிடப்பட்ட காட்சிகளின் மூலம் தன்னை அவதார நாயகராகவும் அடித்தட்டு மக்களின் மீட்பராகவும் காட்டிக் கொண்டால், நிழல் பிம்பங்களை நிஜம் என்று நம்பும் சமூகம் அதிகாரத்தை இந்த நடிகர்களிடம் ஒப்படைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். இந்த வழிமுறையில் வெற்றிகரமாக பயணித்த அரிதான உதாரணம் எம்.ஜி.ஆர்.

இன்றைய விளம்பர நிபுணர்கள் கூட அதிசயப்படக்கூடிய விஷயமாக எம்.ஜி.ஆரின் திட்டங்களும் முன்தயாரிப்புகளும் இருந்தன.  ஏறத்தாழ அனைத்து திரைப்படங்களிலும் ஏழைப் பங்காளனாக தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டதோடு அரசியல் அடையாளங்களையும் அவற்றில் மிக நுட்பமாக திணித்து மக்களின் அபாரமான நம்பிக்கையைப் பெற்றார். இன்றும் கூட அடித்தட்டு மக்களிடையே இவரது பிம்பம் செல்வாக்குடன் இருக்கிறது. ‘நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்…’ என்கிற பாடலின் மூலம் அவர் வைத்த கோரிக்கையை மக்கள் நிஜமாக்கிக் காட்டினார்கள். இவரின் அரசியல் எதிரியாக கருதப்பட்ட கருணாநிதியை முழுதாக ஓரங்கட்டி, ஏறத்தாழ 13 வருடங்கள் தொடர்ந்து முதலமைச்சராக இருந்த பெருமை எம்.ஜி.ஆருக்கு வாய்த்தது.

ஆனால் எம்.ஜி.ஆரின் ஆட்சி நடைமுறையில் இருந்த காலக்கட்டங்களில் அடித்தட்டு மக்கள் உண்மையாகவே மகிழ்ச்சியாக இருந்தார்களா? அவர்களின் பெரும்பாலான துயரங்கள் தீர்க்கப்பட்டனவா? இது தொடர்பாக எம்.எஸ்.எஸ். பாண்டியன் எழுதிய ‘பிம்பச்சிறை’ என்கிற நூலை வாசித்துப் பார்க்கலாம். எம்.ஜி.ஆர் என்கிற பிம்பம் படிப்படியாக திட்டமிட்டு வளர்ந்ததையும், அதிகாரத்தில் அமர்ந்த பிறகு நிகழ்ந்த குளறுபடிகளும் நிர்வாக சீர்கேடுகளும் புள்ளிவிவரங்களோடு அந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. நிழலை நிஜமாக நம்பினதற்காக தமிழக மக்கள் தந்த விலை இது. 

எம்.ஜி.ஆர் என்கிற புலியைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட பல பூனைகள் பின்னர் கிளம்பின. சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி.ராஜேந்தர் என்று இந்தப் பட்டியல் மிக நீண்டது. எம்.ஜி.ஆர் தந்த ஆதரவின் பின்புலத்தில் இதில் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா மட்டுமே. அவருக்கு என ஓர் இரும்பு ஆளுமையையும் பல அடாவடிகளின் மூலம் வளர்த்துக் கொண்டார். ஆனால் மற்றவர்கள் எல்லாம் சூடான பாலில் வாய் வைத்த பூனையைப் போல மறுபடியும் சினிமாத் துறைக்கே அலறியடித்துக் கொண்டு திரும்பி ஓடினார்கள். விஜய்காந்த் போன்றவர்கள் திரிசங்கு சொர்க்கம் போல இடையில் மாட்டிக் கொண்டு விழிக்கிறார்கள். என்றாலும் இந்த வரிசை ஓய்வதாக இல்லை. அரசியல் அதிகாரத்திற்குள் நகர சினிமா என்கிற குறுக்கு வழி எளிதாக இருக்கும் என்கிற கற்பனையில் நேற்று நடிக்கத் துவங்கிய இளம்நடிகர் கூட காமிராவை நோக்கி வீர வசனங்கள் பேசும் நகைச்சுவைகளும் பெருகத் துவங்கி விட்டன.

ஆனால் நிழலுக்கும் நிஜத்திற்குமான வித்தியாசத்தை பொதுமக்கள் இன்று உணர ஆரம்பித்து விட்டார்கள். முன்பெல்லாம் சண்டைக்காட்சிகள் என்றால் அது தொடர்பான படப்பிடிப்பை ஸ்டூடியோவிற்கு உள்ளே ரகசியமாகத்தான் வைத்துக் கொள்வார்களாம். ஹீரோ தாவுவதையும் பறப்பதையும் உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கும் பார்வையாளர்களுக்கு இது சார்ந்த ரகசியங்கள் புலப்பட்டு, சினிமா மீதும் சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீதும் அவர்களுக்கு இருக்கும் கவர்ச்சி குறையக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. ஆனால் பெரும்பாலான படப்பிடிப்புகள் இன்று வெளிப்புற இடங்களில்தான் நடைபெறுகின்றன. கிராஃபிக்ஸ் முதற்கொண்டு சினிமாவின் பல நுணுக்கங்களை, அதிலுள்ள பிழைகளை பார்வையாளர்களே அலசத் துவங்கியிருக்கிறார்கள். இவற்றில் சித்தரிக்கப்படும் சாகசங்கள் பெரும்பாலும் போலியானவை என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. நாயக நடிகர்களின் மீதான கவர்ச்சி குறைவதற்கு இது போன்ற காரணங்கள் முக்கியமானதாக அமைந்திருக்கின்றன. இந்தச் சூழலில் இன்னொரு எம்.ஜி.ஆர் உருவாவது இனி சாத்தியமேயில்லை என்றுதான் தோன்றுகிறது.

**

சமீப காலத்திய தமிழக அரசியல் சூழலில் ஜெயலலிதா விட்டுச் சென்ற வெற்றிடத்தை குறிவைத்து மறுபடியும் சில நடிகர்கள் அரசியல் களத்திற்குள் குதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவற்றில் பிரதானமானவர் ரஜினிகாந்த். ‘வருவேன், ஆனா வர மாட்டேன்’ என்கிற மதில் மேல் பூனை கதையாக, அரசியலுக்குள் நுழைவதாக ரஜினிகாந்த் கூறிக் கொண்டிருக்கும் புனைவிற்கான வயது ஏறத்தாழ 25 ஆண்டுகள். மாறி மாறி அரசாண்ட இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியால் சலிப்பும் வெறுப்பும் கொண்டிருக்கும் தமிழக மக்கள், மாற்றத்திற்காக அல்லாடிக் கொண்டிருக்கும் போது இந்த ‘வருவேன், வரமாட்டேன்’ விளையாட்டை இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக அவர் நிகழ்த்திக் கொண்டிருப்பது நிச்சயம் முறையல்ல. தன்னுடைய நிலைப்பாட்டை பட்டவர்த்தனமாக தெரியப்படுத்தாமல் சூழ்நிலைக்கு ஏற்ப ஜாக்கிரதையாக விளையாடிக் கொண்டிருப்பதும் ஒருவகையில் மக்களுக்கு செய்கின்ற துரோகம்தான். இது மட்டுமல்லாமல், இந்த ‘மதில் மேல் பூனை’ கதையாடலை தன்னுடைய திரைப்படக்காட்சிகளுக்கான முதலீடாகவும் மாற்றிக் கொண்ட சாமர்த்தியசாலிதான் ரஜினிகாந்த். ‘நான் பாட்டுக்கு என் வழியில் போயிட்டிருக்கேன்.. என்னை சீண்டாதீங்க’ என்று புனைவுப் பாத்திரங்களிடம் வீராவேசமாக பேச, மக்கள் அந்தப் பாவனையைப் புரிந்து கொண்டு பலமாக கைத்தட்டி மகிழ்ந்தார்கள். இப்படி சில வருடங்கள் அவரது சினிமா வண்டி ஓடிக் கொண்டிருந்தது.

எம்.ஜி.ஆரைப் போல தன் திரைவாழ்க்கையை ரஜினி திட்டமிட்டு அமைத்துக் கொள்ளவில்லை. அவ்வாறு தீர்மானிக்கும் செல்வாக்கு துவக்க காலக்கட்டங்களில் அவரிடம் இல்லாமலிருந்தது. வில்லன் பாத்திரங்களின் மூலம் வெற்றியடைந்து நாயகராக பதவி உயர்வு பெற்றாலும் கூட, குடிப்பது உள்ளிட்ட காட்சிகளில் அவர் நடிக்கத் தயங்கவில்லை. எம்.ஜி.ஆரைப் போல தன்னை ஒழுக்கவாதியாகவும், நேர்மறை பிம்பமாகவும் சித்தரித்துக் கொள்ள ரஜினி அதிகம் மெனக்கெடவில்லை. திரைக்கு வெளியிலும் தன்னுடைய பிம்பம் குறித்தான கவலை அவருக்கு இல்லை. ஒருவகையில் அவருடைய சிறப்பு அம்சங்களில் ஒன்றாக இதுவே பேசப்பட்டது.

வருங்காலத்தில் தானொரு ‘சூப்பர் ஸ்டார்’ ஆவோம் என்கிற கற்பனையோ எதிர்பார்ப்போ ரஜினிக்கு இல்லை. இதை வெளிப்படையாகவே பல நேர்காணலில் அவர் கூறியிருக்கிறார். என்றாலும் காலம் இந்த தங்க கீரிடத்தை அவர் தலையில் வைத்தது. ரஜினியின் கடுமையான உழைப்பும் இதற்கு காரணமாக இருந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை. ‘தானுண்டு தன் நடிப்புண்டு’ என்றிருந்த ரஜினியை அரசியல் உள்ளே இழுக்கும் என்று கற்பனை செய்திருப்பாரா என்று தெரியவில்லை என்றாலும் இது எல்லா பிரபலங்களுக்கும் நேரக்கூடிய விபத்துதான்.

ஒரு சராசரி நபருக்கு, அரசியல் மீது இருக்கக்கூடிய பொதுவான கோபங்களையும் கிண்டல்களையுமே அவர் திரைப்படத்தின் பாடல்களும் காட்சிகளும் ஒரு காலக்கட்டத்தில் பிரதிபலித்தன. குரு சிஷயன் திரைப்படத்தில் வரும் ‘நாற்காலிக்கு சண்டை போடும்’ பாடல் ஓர் உதாரணம். ‘எனக்கு கட்சியும் வேண்டாம், கொடியும் வேண்டாம்’ என்றெல்லாம் கூட தன் அரசியல் ஒவ்வாமையை வெளிப்படையாக பதிவு செய்தவர். மக்களிடம் பிரபலமும் செல்வாக்கும் கொண்டவர்களின் மீது அரசியல்வாதிகளுக்கு ஒருபுறம் ஈர்ப்பும் இன்னொரு புறம்எரிச்சலும் வருவது இயற்கை. ஒன்று அவர்களை வளைக்கப் பார்ப்பார்கள் அல்லது உடைக்கப் பார்ப்பார்கள்.

அந்த வகையில் அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவிற்கும் ரஜினிகாந்த்திற்கும் உரசல்கள் ஆரம்பித்தன. காவல்துறையினர் ரஜினியின் காரை போயஸ் கார்டனின் வெளியில் நிறுத்தி விசாரணை செய்தார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் ரஜினி தன் திரைப்படங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பேசிய அரசியல் விமர்சனங்கள், வசனங்கள் ஆளுங்கட்சியை எரிச்சலூட்டியதாகவும் கூறப்படுகிறது. ‘அண்ணாமலை’ திரைப்படத்தில் துவங்கிய இந்த உரசல், பாட்சா திரைப்படத்தின் வெற்றிவிழாவில் பெரிய சர்ச்சையாக மாறியது. மணிரத்னம் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டதையொட்டி விழா மேடையில் இதை ரஜினி காரமாக விமர்சிக்க, படத்தின் தயாரிப்பாளரான ஆர்.எம்.வீரப்பன், ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளாகி பதவியை இழந்தார். இதன் இடையில் பாமக கட்சியோடு ஏற்பட்ட உரசலில் அந்தக் கட்சிக்காரர்கள் ‘பாபா’ திரைப்படத்தின் படப்பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடிய நகைச்சுவையும் நிகழ்ந்தது.

இதனால் பல்வேறு வகையில் எரிச்சலுக்கு உள்ளான ரஜினி, 1996-ல் நிகழ்ந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக – தாமக கூட்டணிக்கு ஆதரவாக குரல் தந்தார். ‘ஜெயலலிதா மீண்டும் முதல்வரானால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது’ என்று அவர் ஆவேசமாக கூறியதை, தொலைக்காட்சிகளில்  மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டது திமுக.  இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு, அப்போதைய ஆளுங்கட்சியின் மீது பொதுமக்கள் சலிப்பும் கோபமும் கொண்டது பிரதான காரணம் என்றால், ரஜினியின் ஆதரவும் ஒரு குறிப்பிடத்தக்க பங்காக அமைந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் பிறகு நிகழ்ந்த தேர்தல்களில் ரஜினியின் ‘வாய்ஸ்’ பெரிதும் எடுபடவில்லை. இதை உணர்ந்த ரஜினியும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் நேரடி ஆதரவு தராமல் ‘கழுவிய நீரில் நழுவிய மீனாக’ இருந்தார். மறுபடியும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த போது ஒரு விழா மேடையில் அவரை ‘தைரியலட்சுமி’ என்று புகழவும் ரஜினி தயங்கவில்லை.

தமிழக அரசியலுக்கும் ரஜினிக்கும் இடையில் நிகழ்ந்த இந்தச் சம்பவங்களை விவரமாக எழுதுவற்கான காரணம் இருக்கிறது. ரஜினி அரசியல் பாதைக்குள் தற்செயலாக வந்து விழுந்ததற்கான தடயங்கள் இவை. மற்றபடி பொதுமக்களின் பிரச்சினைகளைப் பற்றிய பிரத்யேகமான கருத்தோ, பார்வையோ, அக்கறையோ அவரிடம் எப்போதும் இருந்ததில்லை. திரைத்துறையினர் நிகழ்த்தும் போராட்டங்களில் மட்டும் கட்டாயத்திற்காக கலந்து கொள்வார். காவிரி நீர் பிரச்சினைக்காக நிகழ்ந்த ஒரு போராட்டத்தில் நடிகர் சங்கத்தோடு இணையாமல் தனியாக உண்ணாவிரதம் இருந்து பரபரப்பை ஏற்படுத்தினார். ‘என் வழி, தனி வழி’ என்கிற அவருடைய ‘பஞ்ச்’ வசனத்தை இப்படித்தான் நடைமுறையில் நிரூபிக்க வேண்டுமா?

‘நதிநீர் இணைப்பிற்காக ரூ.ஒரு கோடி தருகிறேன்’ என்று அவர் அறிவித்ததும் பரபரப்பானது. இந்தியாவின் நதிகளை இணைப்பதென்பது பல நூறு கோடிகளை கோரி நிற்கும் திட்டம் என்பதால் எளிதில் சாத்தியமில்லாதது என்பது ஒருபுறம் இருக்க, இயற்கையான முறையில் பாயும் நதிகளை வலுக்கட்டாயமாக இணைப்பது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பல லட்சம் மக்கள் தங்களின் வாழ்விடங்களை இழக்க வேண்டியிருக்கும் என்றும் சொல்கிறார்கள். இவற்றையெல்லாம் ஆராயாமல் ரஜினி அறிவித்தது ஒரு ‘ஸ்டண்ட்’ ஆகவே படுகிறது. அவருடைய குரல் பலரால் கவனிக்கப்படும் போது அதுபற்றிய பொறுப்பில்லாமலும் ஒரு பிரச்சினையின் ஆழத்தை அறியாமலும் சினிமாவில் பேசும் ‘பஞ்ச்’ வசனங்களைப் போன்று நிஜ வாழ்விலும் சொல்லுபவரால் என்ன மாதிரியான திட்டங்களை மக்களுக்கு சாத்தியப்படுத்த முடியும்?

நேரடி அரசியலுக்குள் வருவதற்கான எண்ணம் ரஜினிக்கு இப்போது கூட இல்லை என்றே தோன்றுகிறது. ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் ஆடிய நாடகத்தையே சமகாலத்திலும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்கிறார். அரசியல் கட்சியை துவங்குவதற்கான ஏற்பாடுகளை அவர் தெரிவித்த போது வழக்கம் போல் ஊடகத்தில் அந்தச் செய்தி தீ போல பற்றிக் கொண்டது. ஒரு செய்தியாளர் ‘உங்கள் கட்சியின் கொள்கை என்ன?’ என்கிற ஆதாரமான கேள்வியை முன்வைக்கும் போது கூட அவரால் தெளிவாக பதிலளிக்க முடியவில்லை. இந்தச் சம்பவத்தைப் பற்றி ‘தலையே சுத்திடுச்சு’ என்று வேறு இடத்தில் சொல்லி சிரித்துக் கொள்கிறார். இதற்காக மக்களும் அவரைப் பார்த்து சிரிக்கிறார்கள் என்பதை அவர் அறிகிறாரா இல்லையா என்று தெரியவில்லை.

‘இன்னமும் கட்சியே துவங்கவில்லை, அதற்குள் கொள்கையைப் பற்றி என்ன சொல்ல முடியும்?” என்று அவர் வெள்ளந்தியாக பேசுவதிலிருந்து கதையே இல்லாமல் சினிமா படப்பிடிப்பிற்கான பூஜையைப் போட்டு விடுவது போல, கட்சியின் கொள்கைகள், தொலைநோக்குத் திட்டங்கள், வாக்குறுதிகள் என்கிற எந்தவொரு அடிப்படையான விஷயங்களும் இல்லாமல் விளையாட்டு போல கட்சியைத் துவங்கவிருக்கிறாரா என்று தோன்றுகிறது. தனது ஒவ்வொரு புதிய சினிமா வெளியாவதற்கு முன்பும் படம் ஓடுவதற்காக செயற்கையாக ஒரு பரபரப்பைக் கிளப்பி விட்டு விடுகிறார் என்று பெரும்பாலோனார் கருதுகிறார்கள் இதற்கான முகாந்திரங்கள் அவருடைய தொடர்ச்சியான செய்கைகளில் தெரிகின்றன. ‘போர் வரும் போது பார்க்கலாம்’ என்று ரசிகர்களை உசுப்பி விட்டு விட்டு அடுத்தடுத்த படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள சென்று விடுபவரை மக்களின் பிரதிநதி என்று கூட அல்ல, ஒரு கட்சியின் தலைவர் என்று கூட சொல்ல முடியவில்லை.

காவிர் நீர் விவகாரத்திற்காக, ஐபிஎல் போட்டியை எதிர்த்து நிகழ்ந்த போராட்டத்தின் போதும் சரி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு  விவகாரத்தின் போதும் சரி, ரஜினியின் அசலான ‘வலதுசாரி’ முகம் கொடூரமாக வெளிப்பட்டது. ‘சீருடை அணிந்த காவலர்களை அடிப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்’ என்று காவல்துறையினருக்கு பரிந்து பேசினார். இது ஒருவகையில் ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்தான். ஆனால் காவல்துறையால், போராட்டக்காரர்கள் மீதும், காவல்நிலையத்தில் புகார் தர வருகிறவர்கள் மீதும், ஏன் அன்றாடம் பொதுமக்கள் மீது நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள், ஊழல், லஞ்சம், பொய் வழக்குகள் என்று நீளும் பல மோசடிகளைப் பற்றி அவர் எப்போதாவது பொதுமக்களின் குரலாக நின்று பேசியிருக்கிறாரா?

ஸ்டெர்லெட் ஆலையை மூடுவதற்காக நிகழ்ந்த மக்கள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு ‘சமூக விரோதிகள்’தான் காரணம் என்று ஆவேசமாக பேட்டியளித்தார் ரஜினிகாந்த். காவல்துறையினர் தாக்கப்பட்டதற்காக இந்த இடத்திலும் கண்டனம் தெரிவித்தார். ஏறத்தாழ நூறு நாட்கள் அமைதியாக நிகழ்ந்த போராட்டத்தை திசை திருப்ப அல்லது கறை படிய வைக்க, அரசு மற்றும் கார்ப்பரேட் கூட்டணியின் சதியில் சில கைக்கூலிகள் போராட்டத்தில் ஊடுருவி வன்முறையை நிகழ்த்தியிருக்கலாம். ஆனால் பல அப்பாவி மனிதர்களின் உயிர் பறி போயிருக்கும் நேரத்தில் அதைப் பற்றி பிரதானமாக பேசாமல் ‘சமூக விரோதிகள்’ என்று அசந்தர்ப்பமாக பேசியிருப்பதின் மூலம் மக்களின் உணர்வுகளையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துகிறோம் என்கிற பிரக்ஞை கூட அவருக்கு இல்லை.

அடித்தட்டு மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு எவ்வகையிலும் உதவாத ‘ஆன்மீக அரசியல்’ என்றொரு கொள்கையை முன்வைப்பது, முன்னாளில் ‘சோ’வும் இன்னாளில் ‘குருமூர்த்தியும்’ ரஜினியின் அரசியல் ஆலோசகர்களாக இருந்தார்கள் என்று சொல்லப்படுவது, ஸ்டெர்லைட் போராட்ட விவகாரத்தில் ஆளுங்கட்சிக்கு சாதகமாகப் பேசுவது … ரஜினியின் இந்த நிலைப்பாடுகளையெல்லாம் கூட்டி கழித்துப் பார்த்தால், பாஜகவின் செல்வாக்கை தமிழகத்தில் வளர்ப்பதற்காக உபயோகிக்கப்படும் மறைமுக பிம்பம் ரஜினிகாந்த் என்று சொல்லப்படுவதில் உண்மையிருக்குமோ என்று தோன்றுகிறது.

ஒரு திரைப்படத்தை மூன்று மணி நேரம் பார்க்கும் ஒரு சராசரி ரசிகன் கூட அதில் அழுத்தமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் அரசியல் உணர்வின் பால் கவரப்படுவான். அது குறித்து சிந்திக்கத் துவங்குவான். அடித்தட்டு மக்களின் ‘நில உரிமைக்கான போராட்டத்தை’ அடிப்படையாகக் கொண்ட ‘காலா’ திரைப்படத்தில் பல நாட்கள் நடித்திருந்தும் அதில் பேசப்பட்டிருக்கும் அரசியலால் ரஜினி துளி கூட ஈர்க்கப்படவில்லை என்றே தெரிகிறது. ‘எல்லாத்துக்கும் போராட்டம்னா தமிழ்நாடு சுடுகாடாயிடும்’ என்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் எரிச்சல்பட்டது அவருடைய ‘வலதுசாரி’யின் முகத்தை அம்பலப்படுத்துகிறது.. அவர் நடித்த திரைப்படத்தின் கருத்தாக்கத்திற்கு அவரே முரணாக நிற்கிறார். திரைக்குள் ஒரு ரஜினியும், திரைக்கு வெளியே வேறு ஒரு ரஜினியுமாக விலகி நிற்கும் ‘டபுள் ஆக்ஷனை’ அவரால் சிறப்பாக செய்ய முடிகிறது.

ரஜினிகாந்த் தனிப்பட்ட வகையில் சில நற்பண்புகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் அரசியல் தளத்தில் இயங்குவதற்கான துளி தகுதி கூட அவரிடம் தென்படவில்லை. அரசியலில் நுழைவதையே இருபத்தைந்து ஆண்டுகளாக மேலாக குழப்பிக் கொண்டிருப்பவரிடம், துரதிர்ஷ்டவசமாக அரசியல் அதிகாரம் கிடைத்து விட்டால் மக்களுக்கான திட்டங்கள் எல்லாம் இந்தக் குழப்பத்திலேயே தள்ளாடி நின்று விடும். ‘எப்போது அவர் அரசியலுக்கு வருவார்?’ என்று கொலைவெறியுடன் காத்திருக்கும் ரசிகர் படையிடம் அதிகாரப் பங்கீடு கிடைத்தால் முன்னாள் அரசியல்வாதிகள் அடித்த கொள்ளையையே தொடர்வதற்கான சாத்தியங்கள் அதிகம். இந்த வாய்ப்பிற்காகத்தான் ரஜினியின் அரசியல் சூதாட்டத்தை பல வருடங்களாக அவர்கள் சகித்துக் கொண்டிருக்கிறார்கள்.

திரைத்துறையில் ரஜினி ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்கலாம். ஆனால் அரசியலைப் பொறுத்தவரையில் அவர் ஒரு மாயமான். அவரை நம்பி பின்தொடர்ந்து சென்றால் இழப்பு தமிழக மக்களுக்குத்தான். இதை பெரும்பாலான சதவீதத்தினர் அறிந்தே வைத்திருக்கிறார்கள். என்றாலும் தங்களுக்கான மீட்பரை எதிலும் எங்கும் தேடும் அப்பாவிகள் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. 

('பேசும் புதிய சக்தி - ஜூலை 2018 இதழில் பிரசுரமானது)

suresh kannan

Thursday, January 17, 2019

கலைஞர் என்கிற கருணாநிதி – வாசந்தி

புத்தக கண்காட்சி சென்று திரும்பியவுடன் வாங்கின புத்தகங்களை தரையில் பரப்பி அழகு பார்த்து விட்டு சந்தோஷ அலுப்புடன் உறங்கச் செல்வது ஒவ்வொரு வருடத்திலும் வழக்கம். கண்காட்சி என்றல்ல, பழைய புத்தகக்கடைகளில் வாங்கி வரும் புத்தகங்களுக்கும் இதே சடங்குதான்.

ஆனால் நேற்று உண்மையான அலுப்பாக இருந்ததால் தற்செயலாக கையில் கிடைக்கும் முதல் புத்தகத்தின் முன்னுரையை வாசித்து விட்டு உறங்கச் செல்லலாம் என்று நினைத்து கையில் எடுத்தேன். அப்போது சுமார் பதினோரு மணி. ஆனால் உறங்கச் செல்வதற்கு இரண்டு மணியாகி விட்டது. அந்தளவிற்கு அந்தப் புத்தகம் தன்னிச்சையாக என்னை உள்ளே இழுத்துக் கொண்டு விட்டது.

**

கலைஞர் என்கிற கருணாநிதி – பத்திரிகையாளரும் எழுத்தாளருமான வாசந்தி எழுதிய நூல். (காலச்சுவடு பதிப்பகம்).

ஓர் அரசியல் கட்சியின் தலைவர் அல்லது அந்தக் கட்சியின் தீவிரமான ஆதரவாளர், அனுதாபி போன்றவர்கள் எழுதும் நூல்களுக்கும் ‘வெளியில்’ நின்று பார்த்து எழுதுபவர்களின் நூல்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. முன்னதில் கட்சி விசுவாசமும், வெளிப்படையான மனச்சாய்வும், மழுப்பல்களும் இருக்கும். மாறாக அந்த அமைப்பை வெளியில் நின்று கவனிக்கிறவர்களின் பதிவுகளில் சமநிலைத்தன்மையும் அது குறித்தான கவனமும் இருக்கும்.

வாசந்தியின் நூல் இரண்டாவது வகை. சிறுவன் கருணாநிதி, சாதியப்பாகுபாட்டின் அவலத்தை நடைமுறையில் உணரும் ஒரு கசப்பான சம்பவத்தோடு நூல் துவங்குகிறது. இளம் வயதின் அனுபவங்களே ஒருவரின் ஆளுமையை வடிவமைக்கிறது என்கிறார்கள். எனவே கருணாநிதியின் சமூகநீதிப் பங்களிப்பின் விதை இளமையில் விழுந்திருக்கலாம்.

கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு என்கிற பாவனையில் இந்த நூல் தோன்றினாலும் அவருடைய அரசியல் பயணம், சொந்த வாழ்க்கை தொடர்பான சம்பவங்கள், போன்றவை மிக திறமையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. கருணாநிதி என்கிற ஒற்றைப் புள்ளியில் மட்டுமல்லாமல் அதனையொட்டி தமிழக வரலாற்றின் நினைவுகளும் விவரங்களும் மிகப் பொருத்தமாக இணைக்கப்பட்டுள்ளன.

‘மானே, தேனே..’ என்கிற ஆராதனை வார்த்தைகளை இட்டு நிரப்பும் எவ்வித மாய்மாலங்களும் இதில் இல்லை என்பதே பெரிய ஆறுதலாக இருக்கிறது. கருணாநிதியின் நல்லியல்புகள், நிர்வாகத்திறன், நூலாசிரியர் உடனான நட்பு போன்றவற்றுக்கு இடையே கருணாநிதி பற்றிய எதிர்விமர்சனங்களும் உள்ளுறையாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. எழுத்தாளர் வாசந்தி, அடிப்படையில் பத்திரிகையாளராகவும் இருப்பதால் கட்டுப்பாடான வேகத்துடனும், நம்பகத்தன்மையுடனான தொனியுடனும் புள்ளிவிவரங்களுடனும் இந்த நூலை நகர்த்திச் செல்கிறார். தவறான புரிதலால் நிகழும் ஒரு சச்சரவுடன்தான் கருணாதியுடனான அறிமுகம் வாசந்திக்கு நிகழ்கிறது. அதை எப்படி இருவருமே பரஸ்பரம் கடந்து வந்தார்கள் என்பதை முன்னுரையில் சுவாரசியமான சம்பவமாக  சொல்லிச் சொல்கிறார்.

கருணாநிதியின் தன்வரலாற்று நூலான நெஞ்சுக்கு நீதி, திமுகவின் வரலாறு போன்ற நூல்களைப் படித்தவர்களுக்கு இந்த நூலின் விவரணைகள், சம்பவங்கள், விவரங்கள் ஒருவேளை சலிப்பூட்டலாம். ஆனால் அவர்களையும் வாசிக்க வைக்கும் சுவாரசியத்தோடும் கோணத்தோடும் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

ஒரு பறவைப்பார்வையில் கருணாநிதி என்கிற ஆளுமையைப் பற்றிய கச்சிதமான கோணத்தை பதிவு செய்யும் இந்த நூல், அதன் ஊடாக தொடர்புடைய இதர விவரங்களையும், விமர்சனங்களையும் பொருத்தமாக இணைத்துக் கொண்டு முன்நகர்கிறது.

பாதிதான் வாசித்து முடித்திருக்கிறேன். அதற்குள்ளாக எதற்கு இந்தப் பதிவு என்று எனக்கே தோன்றியது. கண்காட்சி முடிவதற்குள் இதைப் பொதுவில் தெரிவித்தால் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு ஏதுவாக இருக்கும் என்கிற பொதுநலமே பிரதான காரணம்.

நெஞ்சுக்கு நீதி, திமுகவின் வரலாறு, முரசொலி மாறனின் மாநில சுயாட்சி போன்ற நூல்களைத் தேடி வாசிக்க வேண்டும் என்கிற எண்ணம் நீண்ட நாட்களாகவே இருந்தது. அதை வேகப்படுத்தும் தூண்டுதலை வாசந்தியின் நூல் அளிக்கிறது.

அழகான முகப்பு, தரமான அச்சு, வடிவமைப்பு, நேர்த்தியான எடிட்டிங் போன்றவைகளும் இந்த நூலை விரும்பச் செய்கின்றன. குறிப்பாக எழுத்துப்பிழை எங்கும் இல்லாததே பெரிய ஆறுதல். (விலை ரூ.125)

suresh kannan