Friday, June 16, 2006

ஒரு முன்னாள் விடலையின் நினைவுக் குறிப்புகள்

வளர்சிதை மாற்றம் - தேன்கூடு போட்டி பதிவு

எச்சரிக்கை 1: இது சற்றே நீளமான கட்டுரை. படிக்க விசாரணைக் கமிஷன் தலைவர் போல நிறைய பொறுமை தேவை.

எச்சரிக்கை 2: இது ஒரு 20 வயது இளைஞனின் அமெச்சூர்த்தனமான தற்கொலை முயற்சி பற்றிய அனுபவங்களையும் இன்னும் சில சுவாரசியமில்லாத அந்தரங்கங்களையும் உள்ளடக்கியது. படிக்க விருப்பமில்லாதவர்கள் இங்கேயே விலகிக் கொள்ளலாம்.

()

நமது வாழ்க்கையை ஒவ்வொரு நிலையிலும் ஒரு கட்டத்தை தாண்டுவதின் மூலமே கடந்து கொண்டிருக்கிறோம். இது இயல்பாகவோ, திணிக்கப்பட்டதாகவோ, வலியுடனோ, சுகமான கனவுகளுடனோ.. எப்படியோ நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. இந்த வளர்சிதை மாற்றம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருந்தால்தான் வாழ்க்கை இயல்பாக இருக்கும். எல்.கே.ஜி. படிக்கப் போன மாதிரியே இப்பவும் விரல் சூப்பிக் கொண்டே பேருந்தில் அமர்ந்துக்கொண்டிருக்க முடியாது. எதிர் இருக்கையில் அமர்ந்திருக்கும் பேரிளம்பெண், ஆபாச சமிக்ஞை செய்து அப்பா, அம்மா விளையாட்டுக்கு அழைப்பதாக நினைத்து காவல் நிலையம் செல்லக்கூடும்.

இந்த வகையில் என்னுடைய பதின்ம வயதுப் பருவத்திலிருந்து பெரியவர்கள் உலகத்திற்கு எப்போது நுழைந்தேன் என்று நினைத்துப் பார்க்கிறேன். இது, இந்தக் கணத்தில்தான் நிகழ்ந்தது என்று தீர்மானமாக யாராலும் சொல்ல முடியாதுதான் என்றாலும் ஏதாவதொரு முக்கியமான நிகழ்வு இந்த லாங் ஜம்ப்பிங்கை ஏற்படுத்துகிறது என்பது என் தாழ்மையான கருத்து. அப்படியாக நான் "bye-bye adolocense" என்று சொன்னதற்கு ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது என் தற்கொலை முயற்சி.

"சொல்வதற்கு எல்லோரிடமும் ஒரு சிறந்த கதை இருக்கிறது" என்பார் சுஜாதா. இதோ ரத்தமும் சதையும் கண்ணீருமாக என்னுடையது. "அந்தரங்கம் புனிதமானது" என்கிற உணர்வில்லாமல் எல்லாவற்றையும் எல்லாரிடமும் பகிர்ந்து கொள்வது முறையானதா என்றும் இணையம் தருகிற சுதந்திரத்தை இவ்வாறாக தவறாக பயன்படுத்தலாமா சிலர் கேள்வி எழுப்பக்கூடும். "என் வாழ்க்கையே என் செய்தி" என்று தன் வாழ்க்கையை வெளிப்படையாக பகிர்ந்து கொண்ட மகாத்மா காந்தியிலிருந்து, பாலகுமா¡ரன், சாருநிவேதிதா, பாலச்சந்திரன் சுள்ளிக்காடு போன்றவர்களே இதை எழுதும் துணிவை எனக்குத் தருகிறார்கள். (பில்டப் ஓவராத்தான் போகுது!) இதனாலேயே அந்த சிறந்த படைப்பாளிகளோடு இந்த சுயபுலம்பலை ஒரே அளவுகோலில் நிறுத்தும் எண்ணம் கிஞ்சித்தும் எனக்குக் கிடையாது. இதை முழுமையாக படிக்கும் பொறுமையைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

()

காலையில் எழுந்து கதவைத் திறந்து பால் பாக்கெட்டை எடுத்து ப்ரிட்ஜில் வைத்து விட்டு (முன்ன வீட்ல ப்ரிட்ஜ் இல்லாதப்ப, அடையார் பிரிட்ஜ்ல வெக்கவான்னு கேப்பேன்) டாஸ்மாக் வாசலில் விழுந்து கிடப்பவனைப் போல அலங்கோலமான கோலத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் மகளை, சாம, தான, பேத, தண்டம் என்று அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி எழுப்ப வைத்து, சமையலறையில் தீவிரமாக சமையல் என்கிற பெயரில் விநோத ரசாயனக்கலவைகளை தயாரித்து எங்களை பரிசோதனை எலிகளாக நடத்திக் கொண்டிருக்கும் மனைவிக்கு வெங்காயம் அரிந்து கொடுத்து, படிச்ச நாயே கிட்ட வராதே........... என்கிற பாட்டை எப்.எம்மில் கேட்டுக் கொண்டே ஹிண்டுவை படித்து முடித்து, உள்ளே வெஜிடபிள் பிரியாணியா, பழைய சாதமா என்னவென்று வெளியே காட்டிக் கொடுக்காத நாகரிகமான ஹாட்பாக்சில் மதிய உணவை எடுத்துக் கொண்டு சமர்த்தாக அலுவலகத்திற்கு கொண்டிருக்கும் நான்..................

சற்றேழக்குறைய பதினைந்து வருடங்களுக்கு முன்னால் என்னவெல்லாம் அட்டகாசம் செய்து கொண்டிருந்தேன் தெரியுமா? 7ஜி ரெயின்போ காலனியில் வரும் அந்த நாயக பாத்திரத்திற்கும் எனக்கும் அதிக வித்தியாசமில்லை. ஓ..... வில் தொடங்கும் அந்த "அகர முதல" சென்னையின் பிரபல வார்த்தையை உச்சரிக்காமல் என்னால் எந்த வாக்கியத்தையும் ஆரம்பிக்கத் தெரியாது. "மச்சான்.. இப்டி பின்னால கறியே இல்லாம ஒல்லியா எந்த பிகரும் பாக்காது" என்று நண்பர்கள் உசுப்பேற்றி குண்டாகும் உபாயமாக பியரை உபதேசித்ததில், மெல்ல மெல்ல ஏறும் அதன் போதை பிடித்துப் போய் ஒரு முறை வீம்பாக 5 பியர் பாட்டில்களை ஒரே அமர்வில் சாப்பிட்டு, ஒரு காலை ராயபுரத்திலும் இன்னொரு காலை வண்ணாரப் பேட்டையிலுமாக வைத்து வீட்டிற்கு நடந்து போய் வாசலிலேயே அத்தனையையும் நாற்றத்துடன் வாந்தியெடுத்து... அன்றைக்குத்தானா என் அப்பாவின் தெவச நாளாக இருக்க வேண்டும்? இன்றைய பான்பராக்குக்குகளுக்கெல்லாம் முன்னோடியான "மாவா" என்கிற திடபோதை தரும் வஸ்துவை வகுப்பறையிலேயே உபயோகித்து ஆசிரியரால் பிடிபட்டு டி.சி. தரும் நிலையில்.. தலைமை ஆசிரியரின் முன்னால் என் அம்மாவின் அழுகையில் அது மன்னிப்புடன் தடுத்து நிறுத்தப்பட்டது.

character establishment போதும் என நினைக்கிறேன்.

()

சுமார் 12-ல் இருந்து 19 வயது வரையான இந்த பதின்ம வயதை உளவியலில் "புயலும் காற்றும் சுழன்றடிக்கிற பருவம்" என்று வர்ணிக்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். இந்த வயதில் நிகழ்த்தப்படும் நிகழ்வுகளான நம்முடைய வளர்ப்பு, சூழ்நிலை, போக்கு, கல்வி, பழக்க வழக்கங்கள் ஆகியவையே நம் எஞ்சிய வாழ்க்கையை பெரும்பாலும் தீர்மானிக்கின்றன. பெற்றோர்கள் மிகவும் தங்கள் வாரிசுகளை மிக ஜாக்கிரதையாக கையாள வேண்டிய பருவமாக இதைப் பார்க்கிறேன். உலகிலேயே முழுக்க இலவசமாக தரப்படும் ஆனால் தேவைப்படும் நேரத்தில் கிடைக்காத "உபதேசம்" என்கிற விஷயம் மட்டும் இந்த வயதுக்காரர்களுக்கு பயங்கர ஒவ்வாமையை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கிறது. மரியாதையை எதிர்பார்க்கும் வயசு. யாராவது தெரியாமல் "சார்" என்றால் புளகாங்கிதமடையும் அதே வேளையில் "டேய் தம்பி" என்பவரை பதினெட்டு தலைமுறை விரோதி போல் பாவித்து முறைக்கும் வயசு.

எல்லா மனிதர்களும் இடையறாது தேடிக் கொண்டிருக்கும் தன்னுடைய சுய அடையாளத்தை தீவிரமாய் தேட ஆரம்பிக்கும் வயசு. ஏதாவது ஒன்றை இறுகப்பற்றிக் கொள்ளும் பேராசையில் கண் முன்னே ஜொலிப்பான அடையாளங்களாக திகழும் நடிகர்களை தங்கள் ஆதர்சமாக ஏற்றுக் கொண்டு, சில சமயம் அதிலேயே மூழ்கிப் போகும் வயசு. சாப்பிடும் போது அப்பன் திட்டின "தண்டச் சோறுவை" மறக்க போதைப் பொருட்களை நாடச் செல்லும் ஆவேசமான வயது. காமம் உடலெங்கும் நிறைந்து வழிய மலையாளப் படங்களும், குளியலறையை நிழலாக கடப்பதும், சுயமைதுனமாகவும் கிடந்து அலையும் வயசு. சில மத்திம வயதுக்காரர்கள் மாதிரி பெண்களை வெறும் உடம்பாய்ப் பார்க்காமல், தேவதையாக, சகியாக பார்த்து கவிதை எழுதச்
சொல்லும் வயசு.

கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் மாத்திரமே இந்த பருவத்தை மிகுந்த சிரமங்களின்றி கடக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக நான் பெரும் சிரமத்தோடுதான் கடந்தேன். மிகவும் கட்டுப்பாடான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அளவுக்கு அதிகமான கட்டுப்பாடே என்னை வெறுப்பேற்றி எல்லையை மீறச் செய்தது. வீட்டின் அருகாமையில் வாய்த்த சேரி நண்பர்கள் இந்த மாதிரியான கட்டுப்பாடுகள் எதுவுமின்று திரிந்ததை வியப்புடன் பார்த்ததில் அவர்களே என் ஆதர்சமாகி நெருக்கமானவர்களாகவும் ஆகிப் போனார்கள். "போடா வெளில. இனிமே எங்க வீட்ல டி.வி. பாக்க வா.. சொல்றேன்" என்று அல்பமாக அலட்டுகிற கீழ் நடுத்தர நண்பர்களைப் போலல்லாமல், மிகுந்த சிரமத்திற்கிடையில் தனக்கு கிடைக்கும் எளிய உணவைக்கூட அலட்டலின்றி மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்கிற அவர்களின் இயல்பான தன்மை எனக்கு பிடித்துப் போனதில் நல்லவையுடன் கூட தீயவையையும் கற்றுக் கொண்டேன். ஆனால் ஒன்று, தீய பழக்கங்களோ, நல்ல பழக்கங்களோ, நடுத்தர வர்க்கத்தினருக்கே உரிய எந்த பாசாங்குகளுமின்றி எதையும் இயல்பாகவும், வெளிப்படையாகவும் செய்தது குறித்து இன்றும் எனக்கு திருப்தியுண்டு.

()

இந்த வயதில் பெரும்பாலும் எல்லோரும் தானாகவே தேடிப் போய் எதிர்கொள்ளும் விபத்து - காதல். இது ஹார்மோன்களின் கபடி விளையாட்டு, இயற்கையின் ஆதாரவிதிப்படி மனித சுழற்சியை உருவாக்க உடல் செய்யும் மாயம் என்பதெல்லாம் வழக்கம் போலவே அந்த நிலையைக் கடந்த பின்தான் புரிகிறது. "கடலை போடக்கூடக்கூட பிகர் இல்லாதவன் ஆம்பளையே கிடையாது" என்கிற நண்பர்கள் வட்டாரத்தின் குரூர விதிமுறைகள் ஆவேசத்தை கிளப்ப "எனக்கொரு கேர்ள் பிரண்ட் வேணுமடா" என்று ஏக்கத்துடன் சுற்றினேன். இந்த இடத்தில் என்னுடைய விநோதமான ஈகோவைப் பற்றி சொல்லியேயாக வேண்டும். சைட் அடிப்பதில் கூட ரொம்பவும் சுயமரியாதை உள்ளவன் நான். பேருந்தில் பயணிப்பவள், என்னைப் பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாளேயானால், மறந்து போய் கூட அவளை மறுபடி பார்க்க மாட்டேன். பெண்கள் கடந்து செல்லும் போது காக்காய் பிடிப்பது போல் புகழ்ச்சியான வார்த்தைகளை கூறுவது, வீடு வரைக்கும் எஸ்கார்ட் வேலை பார்ப்பது, பார்வையாலேயே பிச்சை எடுப்பது ... காதல் செய்வதற்கு அடிப்படை தகுதியான இவைகளையெல்லாம் மிகுந்த தன்மானத்துடன் செய்யாமலிருந்தேன். இப்படியாக பாரம்பரிய மறத்தமிழனாக சுற்றி வந்த என்னையும் அசடுவழிய வைத்தாள் ஒருத்தி.

டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்கள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலமது. asdfg அடிப்பதற்கு பதிலாக love அடிக்கவாரம்பித்தேன். "கண்டுகொண்டேன்"2 படத்தில் வரும் ஐஸ்வர்ராராயின் மினியேச்சர் போலிருந்த (நெஜமாங்காத்தாங்க) அவளை பார்த்ததும் எனக்குள் ஏதோ செய்ய ஆரம்பித்தது. அந்த வயதிற்கேயுரிய விடலைத்தனங்களுடன் எப்படியோ அவளைக் கவர்ந்து தினமும் பேச ஆரம்பித்துவிட்டேன். "டைப் அடிச்சதுல நெறைய தப்பு வந்துச்சா" என்று அவள் இயல்பாக கேட்ட சில நிமிட உரையாடலைக்கூட "மச்சி! ஒரு மணி நேரம் பேசினதுல டைம் போனதே தெரியலைடா" என்று நண்பர்களிடம் அளக்க ஆரம்பித்தேன். வளர்த்துவானேன்....இப்படியாக எல்லாவிதமான அமெச்சூர்தனங்களுடன் வளர்ந்து கொண்டிருந்த எங்கள் காதல் ஒரு அதிகாலை சண்டையில் முடிவிற்கு வந்தது.

அதிசயா அதிசயமாக நான் தாய் சொல்லை தட்டாமல் மளிகைச் சாமான்கள் வாங்க போய்க் கொண்டிருக்கும் போது ஒருவன் ரொம்ப தெனாவட்டாக வந்து "நீதானே ......." என்றான் சுருக்கமாக, மணிரத்னம் பட பாணியில். "ஆமாம்" என்றேன் புரியாமல். "டைப் அடிக்கப் போனா கைய கால வெச்சுகினு ஒயுங்கா இருக்காம, ..த்தா இன்னாடா பொண்ணுங்களாண்ட சில்மிசம்? என்றவுடனேயே விஷயத்தை புரிந்து கொண்டேன். நான் அந்த வயதில் பார்க்க சற்று ஒல்லிப்பிச்சானாக இருந்தாலும், என்னுடன் இருக்கும் நண்ப பரிவாரங்களின் பின்னணி குறித்து அந்த ஏரியாவில் எல்லோருக்கும் தெரியுமாதலால் என்னிடம் யாரும் எதுவும் வைத்துக் கொள்வதில்லை. "யார்ரா இவன் புதுசா இருக்கானே" என்று யோசித்துக் கொண்டே "........................ நீ யார்ரா......................... அதைக் கேட்கறதுக்கு" என்று விடுபட்ட இடங்களில் சென்னைக்கே உரித்தான அதிபயங்கர வசவு வார்த்தைகளை உதிர்த்தேன். பிறகு நானும் அவனும் காமா சோமா என்று அடித்துக் கொண்டோம். அதை சண்டை என்று வர்ணித்தால் அந்த வார்த்தைக்கே மிகுந்த அவமரியாதை வந்து சேரும் என்பதால் கட்டுப்படுத்திக் கொள்கிறேன். பிறகுதான் தெரிந்தது, என்"ஆளின்" அண்ணன்காரன் சொல்லி இவன் வந்து விசாரித்திருக்கிறான் என்று. "பசங்களுக்கு" தெரிந்தால் பிரச்சினையாகும் என்பதால் யாருக்கும் நான் சொல்லிக்கொள்ளவில்லை.

பிறகு என்னாச்சோ என்று தெரியவில்லை, அந்தப் பெண் என்னைக் கண்டவுடனேயே, திமுக எம்.எல்.ஏக்களை கண்ட அதிமுக எம்.எம்.எல்.ஏக்கள் போல் சங்கடத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டது. "என்னாச்சு" என்று ஒரு நாள் இருட்டு சந்தின் முனையில் வலுக்கட்டாயமாக விசாரிக்க, அந்தப் பெண் அழுதுக் கொண்டே ஓடிப்போனதில் வில்லன் பொன்னம்பலம் போல் உணர்ந்தேன். என்னுடைய ஈகோ, "கர்மத்த விட்டுத் தொலைடா மச்சான்" என்று பிரித்தெறிய முயன்றாலும் என்னவோ எனக்குள் உடைந்து போய் இரண்டு நாட்கள் சரியாக சாப்பிடாமல் எழவு வீட்டில் உட்கார்ந்திருந்தவன் போலிருந்தேன். மேலும் வேலையில்லாமல் வீட்டில் அமர்ந்திருந்ததில், மிதமான வறுமையுடன் போரடிக் கொண்டிருந்த என் கீழ்நடுத்தர குடும்பத்திலிருந்து மனஅழுத்தத்தை அதிகரிக்கும் எதிர்ப்புகள் வர... விரக்தியின் உச்சத்திற்கே போய்...... முடிவெடுத்துவிட்டேன் தற்கொலைக்கு.

()

வெயிலுக்கு பயந்து ஊட்டி, பெங்களூர் செல்பவர்களை பார்த்திருப்பீர்கள். பிரச்சினைக்கு பயந்து தற்கொலை செய்து கொள்வதற்கு பெங்களூரை தேர்வு செய்தேன். காரணம் இருக்கிறது. தற்கொலையிலும் எனக்கு முன்அனுபவம் இருந்தது. எட்டாவது வகுப்பை முடித்துவிட்டு விடுமுறையில் ஒரு மருந்துக் கடையில் பணிபுரிந்து கொண்டிருந்த போது, ஏதோ பிரச்சினை நேர, விஷய ஞானத்தில் compose 10mg பத்து மாத்திரைகள் விழுங்கியதில் சில நிமிடங்களிலேயே சொர்க்கத்திற்கு பயணித்து வண்டி பிரேக்டவுனாகி திரும்பிய இடத்திற்கே வந்து சேர்ந்தேன். மாலை 7 மணிக்கே மாத்திரைகளை விழுங்கி வீட்டில் படுத்திருந்தததால் பிறகு வந்தவர்கள் புரிந்து கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உப்புக்கரைசல் கொடுத்து காப்பாற்றி விட்டனர்.

இந்த முறை அந்த மாதிரியான தவறொன்றும் நிகழக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். மேலும் நான் என்ன ஆனேன் என்றே என் வீட்டாருக்கு தெரியக்கூடாது என்று தீர்மானித்து இதன் மூலம் அவர்களை பழிவாங்குவதாகவும் திருப்தி பட்டுக் கொண்டேன். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போல என் மரணமும் எந்தவித தடயமுமின்றி நிகழ வேண்டும் என்பதற்காக (அடப்பாவி! என்ன ஒரு அநியாய ஒப்பீடு) துப்பறியும் நாவல்களில் படித்திருந்ததை நினைவுப்படுத்திக் கொண்டு சட்டை காலரில் உள்ள தையல்கடையின் பெயரை கிழித்தெறிந்தேன். பணத்தை தவிர வேறெந்த அடையாளங்களும் இல்லாதவாறு பார்த்துக் கொண்டேன்.
பெங்களூரின் கெம்ப கவுடா ரோடு "தற்கொலை செய்ய இனிதே வருக" என்று வரவேற்றது. அங்கேயிருந்த சற்றே உயர்தரமான ஹோட்டலில் பொய் முகவரி கொடுத்து அறை எடுத்தேன். கணிசமான பணம் கையில் இருந்ததால், இரண்டு நாட்களை விருப்பம் போல் வாழ்ந்துவிட்டு பிறகு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். ரயில் தண்டவாளம், கட்டிட உச்சி, கடல், தூக்கு ... என்று மிகுந்த வலியுடன் சாவதற்கு விருப்பமில்லாததால் பழைய முறையையே பின்பற்றி tik20 என்கிற பூச்சி மருந்தை வாங்கிக் கொண்டேன். (சில தற்கொலை சம்பந்தமான உரையாடல்களில் இந்தப் பெயரை கேட்ட அனுபவம்) இதுவும் போதுமா என்று சந்தேகத்தோடு மருத்துவரிடம் சென்று "தொழிற்சாலையில் பணிபுரிவதாகவும், இரவில் தூங்க சிரமப்படுவதாகவும் சொல்லி restin என்கிற மாத்திரைகளை நிறைய வாங்கிக் கொண்டேன்.

இனி கொண்டாட்ட நேரம்.

()

ஒரு மாதிரி சுஜாதாவின் கதாபாத்திரம் போல் விநோதமாகத்தான் அலைந்தேன். பிளாட்பாரக்கடையில் ரெடிமேட் சட்டை வாங்கி அணிந்து கொண்டேன். கோன்பனா க்ரோர்பதியில் அமிதாப்பச்சன் எளிதாக அமர்ந்து போட்டியாளர் அமர சிரமப்படும் உயரமான நாற்காலி போல அமைந்துள்ள பாரில் அவ்வப்போது பியர் சாப்பிட்டு போதையிலேயே இருந்தேன். ஒரு அசைவக் கடையில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் விருட்டென்று வெளியேறினேன். ஒரு மூன்றாந்தர செக்ஸ் படத்தை கன்னட மொழியின் பின்னணியில் தலைவலியுடன் பார்த்தேன். ஊரைச் சுற்றிப்பார்க்க முடிவு செய்து டூரிஸம் அலுவலகத்திற்கு சென்று பின்பு முடிவை மாற்றிக் கொண்டு திரும்பினேன். ரூம் சர்வீஸிடம் காப்பி ஆர்டர் செய்துவிட்டு டீதானே எடுத்து வரச்சொன்னேன் என்று சண்டை போட்டேன். அறையிலிருந்த தொலைக்காட்சி பெட்டியை கன்னாபின்னாவென்று இயக்கி அது அழும் படி செய்தேன். இவ்வளவு செய்தேனே ஒழிய, ஒரு முறையாவது, தற்கொலை முடிவை மாற்றிக் கொண்டு ஊர் போய்விடலாமென்று மாத்திரம் யோசிக்கவேயில்லை. மிக உறுதியான தீர்மானம். 'தற்கொலை என்பது அந்த கண நேர பைத்தியக்காரத்தனம். அதைக் கடந்து விட்டால் போதும்' என்கிற 'புன்னகை மன்னன்' வசனமெல்லாம் என்னிடம் செல்லுபடியாகவில்லை.

முதல் நாள் இன்பமாக கழிந்து கணிசமான பணம் செலவழிந்திருந்தது. இன்னும் கூட இருந்தது. அப்போதுதான் தீடீரென்று அந்த எண்ணம் என்னுள் மின்னலடித்தது. எப்படியும் சாகப் போகிறோம், அதையும் பார்த்துவிட்டாலென்ன? அந்த வயதிற்கேயுரிய இயல்பான வெளிப்படான காமம் என்கிற உணர்வு என்னுள்ளே வழிந்து என்னை படாத பாடு படுத்திக் கொண்டிருந்தது. மலையாளப்படங்களும், சுயமைதுனமும் ஒரளவிற்கே வடிகாலாக அமைய, நிஜ அனுபவம் எப்படியிருக்கும் என்பது மிகுந்த ஆவலை என்னுள் ஏற்படுத்தியிருந்து. ஒரு பெண்ணின் உதட்டில் அழுந்த முத்தமிட்டால் எப்படியிருக்கும் என்று கற்பனையை ஓடவிட்டு ஈரமான பல இரவுகளை கழித்திருக்கிறேன். என்றாலும் இதை விலைமாதர்களுடன் சாத்தியமாக்கிக் கொள்ளும் தைரியம் மட்டும் -வாய்ப்புகள் இருந்தாலும் - வரவில்லை. அழுகிச் சொட்டும், விகாரமாக வீங்கியிருக்கும் ஆண்குறிகளின் புகைப்படங்களை பயங்காட்டி மருந்துகளை விற்கும் பிளாட்பார லேகிய வைத்தியர்களிடம் கூட்டத்தில் நின்று பார்த்திருந்ததில் இது (குறி)த்தான பயம் மிகுதியாக இருந்தது.

எப்படியும் சாகப் போகிற நிலையில் பெண்சுகம் எப்படியிருக்குமென்று பார்த்துவிட வேண்டுமென்கிற ஆவல் பயத்தையும் மீறி என்னுள் பற்றிக் கொண்டது. செத்துப் போய் விறைத்து நிற்கிற ஆண்குறியைப் பற்றிக் கொண்டு ஆவியாக அலைய எனக்கு விருப்பமில்லை. ஆனால் இதை எப்படி சாத்தியமாக்கிக் கொள்வது என்கிற யோசனையும் எழுந்தது. நான் இருந்த ஹோட்டலோ நாகரிகமான ஆனால் கட்டுப்பெட்டித்தனமாக இந்த மாதிரியான சமாச்சாரங்கள் எதுவும் நடைபெறுவதாக தெரியவில்லை. பகல் முழுவதும் சுற்றி விட்டு அறைக்கு வந்து ஓய்வெடுத்துக் கொண்டு இதே நினைவாக அலைந்ததில் .... "முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்" என்கிற வாக்கிற்கேற்ப (அடப்பாவி!) பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த அவர்களைப் பார்த்துவிட்டேன். "செக்ஸ் தொழிலாளிகள்" என்று முகத்தில் மட்டுமல்ல எல்லா இடத்திலும் எழுதி ஒட்டியிருந்தது. "எப்படி அணுகுவது?" என்று தயக்கமாக இருந்தது. தற்கொலையில் கூட முன்அனுபவம் கொண்ட எனக்கு இது புதிதாக இருந்ததால் தயக்கமாக இருந்தது. எவளாவது "என்னா தம்பி வோணும்" என்று கேட்டுவிடுவார்களோ என்று கூட பயமாக இருந்தது.

மனஅழுத்தத்ததால் பாதிக்கப்பட்டு முடிவைத்தேடி ஊர்பெயர் தெரியாத ஊரில் விபச்சாரியைத் தேடிக் கொண்டிருக்கும் ஒரு குழப்பமான 20 வயது இளைஞனின் பார்வையில் இதை அணுக வேண்டுகிறேன். இப்படியாக தயங்கிக் கொண்டிருந்த நேரத்தில் எங்கிருந்தோ ஒரு போலீஸ் ஜீப் ரோந்து வர, அத்தனை பேரும் விநோதமாக கத்திக் கொண்டு பக்கத்திலிருந்த இருட்டுச் சந்தில் ஓடி மறைந்தார்கள். எனக்கிருந்த குழப்பமான பயமும், உள்ளே ஆவேசமான காமமும் கலந்த விநோதமாக மனநிலையில் ஏதோவொன்று 'பட்'டென்று உடைந்து எல்லாம் வடிந்து போனது. ஏதோ நல்லதிற்குத்தான் (?!) இது நிகழ்ந்திருக்கிறது என்று என்னை தேற்றிக் கொண்டு ஹோட்டலை நோக்கி நடந்தேன். (இந்த இடத்தில் சுயஎச்சரிக்கையுடன் மற்ற நிகழ்வுகளை மாற்றியமைத்து தணிக்கை செய்திருக்கிறேன் என்று தவறாக யூகிப்பவர்களுக்கு ... என்னை நம்புங்கள். நிச்சயம் இதுதான் நடந்தது. அப்படி ஏதும் விவகாரமான விஷயம் நிகழந்திருந்தால் நிச்சயம் அதை தனிக்கட்டுரையாக எழுதியிருப்பேன்)

இனி விடைபெறும் நேரம்.

()

ஏதோ ஒரு 'எழவு' கோப்பைக்காக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் முட்டிக் கொள்கிற இறுதி கிரிக்கெட் போட்டி. ஊரே அந்த ஜீரத்தில் ஆழந்திருக்க நான் என்னுடைய last supper-ஐ நிறைவு செய்தேன். ரூம் சர்வீசில் ஒரு குளிர்பானம் வாங்கிக் கொண்டு, தூங்கப்போவதாக சொல்லி தொந்தரவு செய்யாமலிருக்க கேட்டுக் கொண்டேன். குளிர்பானத்தில் பூச்சி மருந்தை கலந்து விட்டு, ஏற்கெனவே பொடி செய்து வைத்திருந்த மாத்திரைகளையும் அதில் கலந்து எதிரே வைத்தேன். சுயபச்சாதாபத்தில் இயல்பாக கண்ணீர் வழிந்தோடியது. ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களையும், நண்பர்களையும் தனித்தனியாக நினைத்துக் கொண்டு மானசீகமாக உரையாடினேன். ஏதாவது கடிதம் எழுதி வைக்கலாமா என்று எழுந்த எண்ணத்தை உடனடியாக அழித்தேன். குடிக்கத் தொடங்கினேன்.

மண்ணைண்ணைய் வாடையுடன் குமட்டிக் கொண்டு வந்த அந்த திரவத்தின் விசித்திர சுவை (?!) இன்னும் கூட என் மூளையின் நீயூரான்களில் பதிந்திருந்து .. இதோ இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் ... பசுமையாக என்னுள் எழுகிறது. கால்வாசி குடித்திருந்த நிலையில் குமட்டிக் கொண்டு வந்ததை நாக்கை கடித்துக் கொண்டு அறையில் உலாவி அடக்கிக் கொண்டேன். மிச்சத்தை எப்படி குடிக்கப் போகிறேன் என்று பயமாக இருந்தது. எப்படியோ எல்லாவற்றையும் குடித்து விட்டு சிறிது நேரம் கிரிக்கெட்டை வேடிக்கை பார்த்துவிட்டு ............ எப்போது உறங்கி அல்லது மயங்கிப் போனேன் என்று தெரியாது.

விடியற்காலை சுமார் ஐந்து மணியளவில் தானாகவே விழிப்பு வந்தது. நான் போர்த்தியிருந்த போர்வை முதற்கொண்டு படுக்கையில் ஆங்காங்கே விகாரமான சிவப்பு நிற கறைகளுடன் அந்த இடமே பிரசவ அறை போல் இருந்தது. நடுவில் என்னையும் அறியாமலேயே அத்தனையையும் வாந்தி எடுத்திருக்கிறேன். நான் செத்துப் பிழைத்ததை கூட உணர முடியாமல், ஹோட்டல்காரன் இதைப் பார்த்தால் என்ன நிகழுமோ என்று நடுக்கமாயிற்று. எப்படியோ சமாளித்துக் கொண்டு தலையணையின் அடியில் வைத்திருந்த மிச்சமிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு அவசரம் அவசரமாக check-out செய்தேன்.

நம்பினால் நம்புங்கள். எப்படி பிழைத்தேன் என்று எனக்குத் தெரியாது. நான் வாங்கின restin என்கிற மாத்திரைகள் காம்போஸ் போல் வீர்யமானது அல்ல என்பதையும் அவை வெறும் டிராங்குவலைசர்கள்தான் என்பதையும் பின்னால்தான் தெரிந்து கொண்டேன். இருந்தாலும் tik20 சாப்பிட்டும் எப்படி பிழைத்துக் கொண்டேன் என்பது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. உடனே வாந்தியெடுத்துவிட்டதால்தான் பிழைத்துக் கொண்டேன் என்று நம்புகிறேன். வேகமாக வந்து மோத இருந்த ரயிலிடமிருந்து தப்பியவன் போல் வெளிறிப் போய் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தேன்.

()

முக்கியமான இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டோம். சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது ஏதோ ஒரு தேவதை காதருகில் அமர்ந்து கொண்டு நல்ல புத்தியாக சொல்லிக் கொண்டு வந்தது. இயற்கை ஏதோ ஒரு காரணத்திற்காக உன்னை படைத்திருக்கிறது. எப்படி உன் விருப்பமில்லாமல் நீ பிறந்தாயே அப்படி உன் விருப்பமில்லாமல் நீ இறக்க முடியாது. இல்லையென்றால் சாக முயன்ற இரண்டு முறையும் நீ பிழைத்திருப்பாயா? இனிமேலாவது இந்த மாதிரியான பைத்தியக்காரத்தனங்களை விட்டு உருப்படிகிற வழியைப்பார். கஷ்டப்படுகிற உன் குடும்பத்திற்கு உன்னால் இயன்ற வரையில் உதவி செய். எந்த வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உன்னை வளர்த்தவர்களை ஒரு கணமேனும் சிரிக்கச் செய்; நிம்மதி அடையச் செய். காதல் என்பதெல்லாம் அந்த நேர அபத்தம்தான்.
குழப்பமெல்லாம் விலகி தெளிவான மனநிலையுடன் சென்ட்ரலில் வந்திறங்கினேன்.
புத்தருக்கு ஒரு போதிமரம் போல் எனக்கொரு பெங்களுர்.

இதோ.....இந்தக் கணத்திலிருந்துதான் என் விடலைத்தனத்தையெல்லாம் உதறியெறிந்தேன் என்று தீவிரமாகவே நம்புகிறேன்.

()

இதற்குப்பிறகு ஒரு சுமாரான நல்ல வேலையைத் தேடிக் கொண்டேன். நல்ல நண்பர்களின் உதவியால் தமிழ் இலக்கியங்களின் பரிச்சயத்தை ஏற்படுத்திக் கொண்டேன். பெண் என்பவளை உடலைத்தாண்டி மனசு என்கிற விஷயத்துடன் அணுகக்கற்றுக் கொண்டேன். எந்தவொரு துன்பத்தையும் அல்லது இன்பத்தையும் சற்றே விலகியிருந்து அனுபவிக்க கற்றுக் கொண்டேன். எதையும் தத்துவார்த்தமாக கற்கத் தொடங்கினேன். ஜக்கிவாசுதேவோ, யாரோ சொன்ன "இதுவும் கடந்து போகும்" என்கிற வாக்கியம் என்னுள் ஆழப் பதிந்து போனது. ஏதாவது ஒரு துன்பம் ஏற்பட்டால் வாழ்க்கையோ முடிந்து போனது போல் அழுது அரற்றுகிறோம், புலம்புகிறோம். அதையே சிறிது காலம் கழித்து நினைவு கூர்கையில் எதற்கு அப்படி துன்பப்பட்டோம் என்று நம்மையே நாம் நகைத்துக் கொள்கிறோம். ஆனால் மறுபடி ஒரு துன்பம் வரும் போது.. இது மறந்து போய் மறுபடி அழுகைதான். "இதுவும் கடந்து போகும்."

எனக்கு மகள் பிறந்த பிறகுதான் என் வாழ்க்கையின் அர்த்தம் கிடைத்தாற் போலிருந்தது. குழந்தையிலிருந்து அவள் வளர்ச்சியை உன்னிப்பாக ஒரு தகப்பனாக ஆனந்தமாக கவனிக்கையில், இந்த சந்தோஷத்தையெல்லாம் இழந்து விட்டிருப்பேனே என்கிற உணர்வு தோன்றியது. அவளுடன் ஒரு குழந்தையாக மாறி கதவுக்குப் பின்னால் ஒளிந்து விளையாடுகிறேன். குடும்பத்தின் முக்கியமான பிரச்சினைகள் உள்பட அவளுக்கும் அவளுடைய மொழியில் விளங்க வைக்கிறேன். அவளுடைய மழலைத்தனமான ஆலோசனைகளை கவனமாக கேட்டுக் கொள்கிறேன். (சில சமயங்களில் இதுவே பயனுள்ளதாக இருக்கிறது.) அவள் தன்னுடைய குறும்புகளால் என்னை கோபப்படுத்தும் போது என்னுள் விழித்துக் கொள்கிற மூர்க்கத்தை கவனமாக கட்டுப்படுத்திக் கொள்கிறேன். என்றாலும் அவ்வப்போது கண்டிப்புடன் சிறிய தண்டனைகளும் உண்டு. அவளின் எந்தவொரு சிறிய பிரச்சனையையும் தேவையையும் கவனமாக கேட்டு அவள் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன். நான் அனுபவித்த எந்தவொரு சிறு வலியையும் அவள் அனுபவிக்க கூடாது என்பதில் விழிப்பாக இருக்கிறேன்.

()

எந்தவித கோர்வையுமில்லாமல் நான் விடலைப் பருவத்தை தாண்டின கதையை - உங்களுக்கு கொட்டாவி வரும் வகையில் - எந்தவித ஒப்பனையுமின்றி சொல்லி முடித்திருக்கிறேன். இதை எழுதி முடித்தவுடன் என்னுள்ளே ஏதோ ஒன்று கழன்று கொண்ட மாதிரி உணர்கிறேன். இதை எழுதியதின் மூலம் உங்களுக்கொரு செய்தி சொல்லியிருக்கிறேன் என்றெல்லாம் எழுதினால் அது எனக்கே அருவருப்பாகயிருக்கும். ஆனாலும் இந்தப் பதிவு மறைமுகமாகவாவது - குறிப்பாக பெற்றோர்களுக்கு - எதையாவது உணர்த்தினால் அதுவே என் வெற்றி. (குழந்தைகளுக்கு புத்தி சொல்லும் அளவிற்கு நாம் இன்னும் பெரியவர்களாகவில்லை)

இது பரிசிற்கு தேர்வாகும் என்ற எதிர்பார்ப்பெல்லாம் என்னிடம் இல்லை. இது தேர்வானால் ஆனந்தப் படவோ அல்லது தேர்வாகாவிட்டால் வருத்தப்படவோ என்னிடம் ஏதுமில்லை. ஏனெனில் -

இதுவும் கடந்து போகும்.

32 comments:

பிச்சைப்பாத்திரம் said...

இதை எழுதியதற்கு inspiration- ஆக இருந்த பிரகாஷின் பதிவிற்கும், என்னை எழுதச் சொல்லி ஊக்கப்படுத்தின - ஆசாத் வேஷத்தில் வந்த - கே.வி.ராஜாவிற்கும் :-) மற்றவர்களுக்கும் என் நன்றிகள் பல.

Haranprasanna said...

கட்டுரை முழுக்க சுஜாதா வாசனை. தேவையற்ற சில ஒப்புமைகளை விட்டுவிட்டு இன்னும் இயல்பாக எழுதியிருக்கலாம். இது போன்ற உண்மைச் சம்பவங்களுக்கு இயல்பே அடிப்படை. யாரோ எழுதிய கட்டுரையைப் போன்று இருக்கிறது. சம்பவங்களின் சுவாரஸ்யங்கள் வலிந்து சுவாரஸ்யம் தர ஏற்படுத்திக்கொண்ட வார்த்தைகளில் உடைகிறது. உங்கள் மகளுடன் விளையாடும் பத்தி மற்றவற்றை விட இயல்பாக இருப்பதாகப் படுகிறது. நன்றி.

ரவி said...

அருமையாக உள்ளது...நன்றிகள் பல..

அபுல் கலாம் ஆசாத் said...

சுரேஷ்,

பிரகாஷ்ஜி சொன்ன மாதிரி இந்த மாசம் பலமான போட்டிதான்.

//நான் அனுபவித்த எந்தவொரு சிறு வலியையும் அவள் அனுபவிக்க கூடாது என்பதில் விழிப்பாக இருக்கிறேன்//

கள்ளிக்காட்டார் சொல்லுவாருங்க, 'நான் செய்த தவறெதுவும் செய்யாத மகன் வேண்டும்'னு, அதுதாங்க இது.

சுரேஷ், என்னதான் நாம் (என்னையும் சேர்த்துதான்) விஷயங்களை அறிவுபூர்வமாக அணுகினாலும், குழந்தைகளுக்கு சுதந்திரம் தந்தாலும், அனைவரிடமும் இப்படி ஒரு அப்பா இருப்பார்.

வெற்றி பெற வாழ்த்துகள்!

அன்புடன்
ஆசாத்

PKS said...

படித்தேன். பல இடங்களில் வாக்கியங்கள் அங்கதம்; கூர்மை; அருமை. ஓவர்-பில்ட்அப்புகள் (வாசகர்களுக்கு முன்னெச்சரிக்கை, பின்குறிப்பு முதலியன) தவிர்த்துச் செதுக்கியிருக்கலாம்.

//இந்த இடத்தில் என்னுடைய விநோதமான ஈகோவைப் பற்றி சொல்லியேயாக வேண்டும். சைட் அடிப்பதில் கூட ரொம்பவும் சுயமரியாதை உள்ளவன் நான். பேருந்தில் பயணிப்பவள், என்னைப் பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாளேயானால், மறந்து போய் கூட அவளை மறுபடி பார்க்க மாட்டேன். பெண்கள் கடந்து செல்லும் போது காக்காய் பிடிப்பது போல் புகழ்ச்சியான வார்த்தைகளை கூறுவது, வீடு வரைக்கும் எஸ்கார்ட் வேலை பார்ப்பது, பார்வையாலேயே பிச்சை எடுப்பது ... காதல் செய்வதற்கு அடிப்படை தகுதியான இவைகளையெல்லாம் மிகுந்த தன்மானத்துடன் செய்யாமலிருந்தேன்.//

இந்தக் குணம் - சுயமரியாதை, ஈகோ, தன்மானம் - உங்களின் அடிப்படை வாழ்க்கைப் பார்வையாக இருப்பதாக உங்களை அறிந்த குறுகிய காலத்தில் உணர்ந்த மாதிரி இருக்கிறது.

பின்வரும் வரிகள் நன்றாக இருக்கின்றன. சுஜாதா டச்.

//எல்.கே.ஜி. படிக்கப் போன மாதிரியே இப்பவும் விரல் சூப்பிக் கொண்டே பேருந்தில் அமர்ந்துக்கொண்டிருக்க முடியாது. எதிர் இருக்கையில் அமர்ந்திருக்கும் பேரிளம்பெண், ஆபாச சமிக்ஞை செய்து அப்பா, அம்மா விளையாட்டுக்கு அழைப்பதாக நினைத்து காவல் நிலையம் செல்லக்கூடும்.//

////வெயிலுக்கு பயந்து ஊட்டி, பெங்களூர் செல்பவர்களை பார்த்திருப்பீர்கள். பிரச்சினைக்கு பயந்து தற்கொலை செய்து கொள்வதற்கு பெங்களூரை தேர்வு செய்தேன். //

//யாராவது தெரியாமல் "சார்" என்றால் புளகாங்கிதமடையும் அதே வேளையில் "டேய் தம்பி" என்பவரை பதினெட்டு தலைமுறை விரோதி போல் பாவித்து முறைக்கும் வயசு.//

அதே போல இந்த மாதிரியான சாதாரண வரிகள் சிலவும் உள்ளன. சீரியல் சினிமா தாக்கமா?

//asdfg அடிப்பதற்கு பதிலாக love அடிக்கவாரம்பித்தேன். //

உங்களின் அந்தரங்க அனுபவமாக இக்கட்டுரை சொல்கிறவற்றை நான் மதிக்கிறேன். இக்கட்டுரை கூட நல்ல கட்டுரைதான். புற்றீசல் மாதிரி வருகிற மலரும் நினைவுகள் வகை எழுத்துகளில் நினைவில் நிற்கக் கூடிய கட்டுரை. ஆனால், முன்குறிப்பு, பின்குறிப்பு, பீடிகைகள் இவற்றுக்கான தேவையில்லாத மாதிரி - இக்கட்டுரையை ஒரு சிறந்த சிறுகதையாக ஆக்கியிருக்கக் கூடிய திறமை உங்களுக்கு இருக்கிறது. அதை, வீண்டித்துவிட்டீர்களோ என்று தோன்றுகிறது. அதுவும், சுஜாதாவின் இளவயது நினைவுகளை அவர் ஸ்ரீரங்கத்துச் சிறுகதைகள் ஆக்கிய craftsmanship பற்றிப் பலமுறை வியந்திருக்கிறேன். நீங்களும் அதை உணர்ந்திருக்கலாம். அதனாலேயே, இதை நீங்கள் கதையாக்கியிருந்திருந்தால் ஒரு நல்ல சிறுகதை கிடைத்திருக்கும் என்ற ஏக்கம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

அன்புடன், பி.கே. சிவகுமார்

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

உங்களால் நல்லதொரு இடுகையைத் தரமுடியும் என்று யாகூ-குழும மடல்களைப் படித்த அனுபவத்தில் எண்ணியிருந்தேன். அரசல்-புரசலாக ஆங்காங்கே சில விதயங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தமையைப் படித்த அனுபவந்தான். இவ்வளவுதூரம் விரிவாக மனதைத் தைக்கும்படி எவ்விதமான பூச்சுக்களும் இல்லாமல் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் இது அதிர்ச்சியாக இல்லை. படித்தபிறகு மரியாதை கூடியிருக்கிறது என்று நான் சொல்வதை க்ளீஷேவாக எடுத்துக் கொள்ளாதீர்கள். கொள்ளமாட்டீர்கள் என்றும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. என்னால் இப்படி வெளிப்படையாக எழுத முடியாது என்பதே மரியாதையைக் கூட்டியிருக்கும் இன்னொரு விதயம்.

போட்டியில் வெற்றி/தோல்வி என்றெல்லாம் எழுதியிருந்தீர்கள். போட்டிக்கு எழுதிய இடுகை என்று சாதாரணப்படுத்திவிட வேண்டாம் சுரேஷ்கண்ணன்.

நல்லதொரு இடுகையைக் கொடுத்தமைக்கு நன்றி.

-மதி

கதிர் said...

சில இடங்களில் முகத்தை சுழிப்பது போல வரிகள் இருந்தாலும் பெரும்பாலான இளைஞர்கள் அதை தாண்டிதான் வந்திருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
சற்று சிறுகதை போல எழுதி இருந்தால் பரிசு நிச்சயம் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் அதிகம். உங்களை பற்றிய குறிப்பு போல அமைந்துவிட்டதாகவே உணர்கிறேன்.
நன்றாக எழுத வருகிறது உங்களுக்கு. பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்.

அன்புடன் தம்பி

SnackDragon said...

நன்றாக எழுதியுள்ளீர்கள். தலை தப்பினது தம்பிரான் புண்ணியம்!! :-)

manasu said...

ரொம்ப நாளுக்கு அப்புறம் வந்திருக்கீங்க..

படிக்கும் போது இந்த வரியை கட் பண்ணி போட்டு இது நல்லா இருந்த்ததுன்னு மறுமொழி போட நினைத்தேன். ஆனா படிக்க படிக்க எல்லாமே நல்லயிருந்துச்சு. மொத்த கட்டுரையுமே கட் பண்ணி போடுற மாதிரி.

அப்படி இருந்துச்சு இப்படி இருந்துச்சுன்னு, சொல்றதவிட simple ஆ தண்ணி மாதிரி....

நல்லா இருந்துச்சு சுரேஷ்.

Techie.... said...

அருமையான பதிவு.....வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.

-ராம்.

anbuselvaraj said...

Looks like a real life story. I hope, now you understood the value of life. Take care of yourslef and your family. good Luck.

anbuselvaraj said...

Looks like a real life story. I hope, now you understood the value of life. Take care of yourslef and your family. Good Luck.

Unknown said...

//ஆசாத் வேஷத்தில் வந்த - கே.வி.ராஜாவிற்கும் :-) //

அடப்பாவி மக்கா, ஏதோ ஒரு சின்ன மிஷ்டேக்கு அங்கே நடந்துபோச்சு. அதுக்கு இப்படி பழி வாங்கணுமா :-)))).

எந்த வித ஒளிவுமறைவும் இல்லாமல் எழுத ஒரு தைரியம் வேணும் சுரேஷ், அது உங்க கிட்டே இருக்குங்கிற நம்பிக்கையிலே தான் உங்களை எழுதச் சொன்னேன். என் நம்பிக்கை வீண் போகல.

பிச்சைப்பாத்திரம் said...

மறுமொழி அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

பிரசன்னா: ரொம்பவும் சீரியசான பதிவாக அமைந்து போய் அதுவே நகைப்பிற்கிடமாய் ஆகிவிடுமோ என்கிற பயத்தினாலேயே நானே அதை dilute செய்தேன். நீங்கள் சொன்ன மாதிரி தீவிரமான மொழியிலேயே எழுதியிருக்கலாம்தான். ஆனால் இயல்பிலேயே தீவிரமான விஷயத்தைக் கூட நகைச்சுவையோடு அணுகுவது என் இயல்பு.

பி.கே.எஸ். மற்றும் தம்பி: இதை புனைவு மொழியில் எழுதுவதாகத்தான் எப்பவோ......... திட்டமிட்டிருந்தேன். ஆனால் அது எந்தவித தூண்டுதலுமில்லாமல் மகளிர் இடஒதுக்கீடு போல் நீண்ட காலமாக கிடப்பில் இருந்ததால் இப்போது உபயோகப்படுத்திக் கொண்டேன். எந்த காரணத்தினாலோ இதை ஒரு புனைவாக எழுதத் தோன்றவில்லை.

மதி: நீங்கள் குறிப்பிட்டது போல் இதைப் படிக்கும் நண்பர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்கிற பயமும் கொஞ்ஞ¥ண்டு உள்ளே இருந்தது. எல்லா மனிதருக்கும் பொதுவான பிரச்சினைகளின் ஆதார வலி அல்லது புரிதல்கள் இருக்குமல்லவா? அந்தப் பகுதியை இது தொடுவதாக உணர்ந்து நேர்மறையாக புரிந்து கொள்ளப்படும் என்று நம்பினேன்.

Anonymous said...

நீளத்தைப்பற்றிய பிரச்சனை உண்மையில் இல்லைதான். ஆனால் தற்கொலையை பின்ணணியில் கொண்ட கதைக்கு, தற்கொலைக்கான காரணம் ஏற்கும் விதமாக இல்லாமல் இருப்பது குறையாக படுகிறது.

தற்கொலை செய்துகொள்வது என்பது கஷ்டத்தைப் பொறுத்ததல்ல, மனதை பொறுத்தது தெரிந்து தான் இருக்கிறது. இது உண்மைக் கதையாயின் அன்று நீங்கள் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்த்ததற்கும் நிச்சயமாய் நீங்கள் எழுதியதை விடவும் (அந்த டைப் அடிக்கிற பெண்) வேறு முக்கிய காரணங்கள் இருக்கும் என்று நிச்சயமாய் நினைக்கிறேன்.

//மிதமான வறுமையுடன் போரடிக் கொண்டிருந்த என் கீழ்நடுத்தர குடும்பத்திலிருந்து மனஅழுத்தத்தை அதிகரிக்கும் எதிர்ப்புகள் வர... // அப்படியானால் அந்த விஷயம்தான் முக்கிய காரணமாய் இருந்திருக்க வேண்டும் உங்கள் பதின்மவயது காதல் தோல்வியைவிடவும். ஒரு அற்புதமான கட்டுரையை போட்டிக்கான உருவகப்படுத்துவதில் ஈடுபட்டு லேசாய் சிதைத்திருக்கிறீர்களோ என்று தோன்றுகிறது. மற்றபடிக்கு கட்டுரையைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

(பெயர் தேவையில்லாததால் வெளியிடவில்லை)

ஓகை said...

சுரேஷ்,

நீங்களும் நானும் என்பதிலிருந்து உங்கள் எழுத்துக்களும் அதன் எதிர்வினையாக நான் எழுதுவதும் என்பது வேறுதானே!

விடலைப் பருவத்தைப் பிட்டு பிட்டு வைத்திருக்கிறீர்கள். அருமையாக இருந்தது. ம். எனக்கு இது போலெல்லாம் வாய்க்கவில்லை. விடலைகள் திட்டமிடுவதே இல்லை. ஒரு வளர்ந்த ஆண்மகனுக்கு எவ்வளவு டிக்20 தேவைப் படும், கூடவே எடுத்துக்கொள்ளப் போகும் இன்னொரு மருந்து இதற்கு விஷ முறிவாக ஆவதற்கு சாத்தியக் கூறுகள் உண்டா, எந்தவிதமாகவாவது பிழைத்துக் கொண்டால் அடுத்து செய்வது என்ன, என்றேல்லாம் சரியாக ஆய்ந்து அதற்ககேற்றவாறு செய்வதெல்லாம் அந்த வயதில் முடிவதில்லை. இந்த குரூர சிந்தனைக்காகத்தான் மேலே அந்த சால்ஜாப்பு வைத்திருந்தேன்.

அந்த வயது காதலும் அப்படித்தான். எதற்காக செய்கிறோம் என்பதே தெரியாமல் செய்ய்யப்படுபவை. தந்தையானபின்னுள்ள உங்கள் மனநிலை பொதுவான தந்தைக்குலத்துக்கு உரியது. LION KING படத்தில் சிங்கத் தந்தையின் மனப்பாங்கை ரொம்ப ரசித்தேன்.

எல்லோரும் கூறியதைப் போல சுஜாதாவின் பாதிப்பில் உங்கள் எழுத்து இருக்கிறது. அதுவும் அவருடைய எழுத்துக்களில் எனக்கு அதிகம் பிடிக்காததை அதிகம் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த கைசூப்பலை சொல்லலாம். சின்ன வயதில் நாம் செய்ததை இப்போது செய்யமுடியாது என்பதை நல்ல சுலப வார்த்தைகளில் சொல்லிவிடலாம். அதிலும் ஒரு உதாரணம் சொல்லி விளக்க வேண்டிய விஷயமில்லையே அது.

ஒரு தாசியை தேடிய விஷயமும் அப்படித்தான். அதை சிறந்த கவிதைத் தனமாக சொல்லியிருக்கலாம்.நிச்சயம் அங்கு ஆழமான கவிதை ஒன்று இருக்கிறது. அங்கும் சுஜாதா ஆர்ப்பாட்டமாய் வந்துவிட்டார்.

அனால் எல்லாவற்றையும் மீறி இப்பொருள் பற்றிய ஒரு நிறைவான பதிவு. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஓகை நடராஜன்.

ஓகை said...

நேற்று உங்களுக்கு அனுப்பிய பின்னூட்டத்தில் LION KING படத்தைப் பற்றி குறித்திருந்தேன். இன்று காலையில் அந்தப் படம் டிஸ்னி சேனலில் FATHER'S DAY SPECIAL ஆக திரையிடப் படுகிறது.

பிச்சைப்பாத்திரம் said...

//உங்கள் பதின்மவயது காதல் தோல்வியைவிடவும். ஒரு அற்புதமான கட்டுரையை போட்டிக்கான உருவகப்படுத்துவதில் ஈடுபட்டு லேசாய் சிதைத்திருக்கிறீர்களோ என்று தோன்றுகிறது///

ஆம். எழுதப்பட்டதை மறுபடியும் படித்துப் பார்த்த போது இன்னும் நிதானமாக ஒவ்வொரு வரியாக செப்பனிட்டு எழுதியிருக்கலாம் என்றுதான் நானும் நினைக்கிறேன். (இதில் irony என்னவென்றால் பிரகாஷ் எழுதிய பதிவிற்கும் இதையேதான் நான் ஆலோசனையாக கூறினேன்) நன்றி.

பிச்சைப்பாத்திரம் said...

///எல்லோரும் கூறியதைப் போல சுஜாதாவின் பாதிப்பில் உங்கள் எழுத்து இருக்கிறது. //

பிரசன்னாவும், பி.கே.சிவகுமாரும் இதையே குறிப்பிட்டுள்ளனர். இதற்காக நான் சந்தோஷப்படுவதா வருத்தப்படுவதா என்று தெரியவில்லை. எனக்கு எழுதக் கற்றுக் கொடுத்த ஆசான் சுஜாதா என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால் அதிலிருந்த விலகி, எனக்கு என்று ஒரு தனித்தன்மையான நடை அமைய வேண்டும் என்று நினைக்கிறேன். சாத்தியமாகவில்லை. இனியாவது இதில் கவனமாய் இருக்கிறேன்.

Anonymous said...

Good one...

Anonymous said...

மக்கா,

பிரசங்கம், பிகேஎஸ்னு ஒரே தாசில்தார் கூட்டமா இருக்கு. அதனால நான் ஒண்ணும் சொல்லலைவே.நல்லா இருடே!

சாத்தான்குளத்தான்

Anonymous said...

I read your arcticle and was very happy. This is my first comment to any of the blogs to say frankly I was not able to resist the temptation of praising you.

good one and expecting more from you.

யாத்ரீகன் said...

நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு..

உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும்....

tamilatamila said...

அருமையாக உள்ளது.
சீரியசான பதிவாக அமைந்து போகலாம் என்பதில் விழிப்பாக
இருந்து இயல்பாக எழுதியதற்கு சபாஷ் சொல்லியேயாக வேண்டும்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்....

பின்குறிப்பு: பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கார்த்திக் பிரபு said...

நன்றாக இருக்கிறது சுரேஷ்...

//இந்த இடத்தில் சுயஎச்சரிக்கையுடன் மற்ற நிகழ்வுகளை மாற்றியமைத்து தணிக்கை செய்திருக்கிறேன் என்று தவறாக யூகிப்பவர்களுக்கு ... என்னை நம்புங்கள். நிச்சயம் இதுதான் நடந்தது. அப்படி ஏதும் விவகாரமான விஷயம் நிகழந்திருந்தால் நிச்சயம் அதை தனிக்கட்டுரையாக எழுதியிருப்பேன்//

..பச் கொஞ்சம் மிஸ் ஆகிடுச்சு.

'restin ''tik20 ' மாத்திரைகளில் சுஜாதா நெடி அடிக்கிறது...பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்...அப்புறம் உங்க அனுமதியோட உங்கள் பதிவிற்க்கு என் பக்கத்தில் இருந்து link கொடுக்கிறேன்..அப்படியே நம்ம பக்கத்திற்க்கும் வந்து பாருங்க..நன்றி.

அருள் குமார் said...

சுரேஷ்,
உங்கள் கட்டுரை மனதை மிகவும் பாதித்துவிட்டது. நீங்களும் விடலைப்பருவம் பற்றி எழுதியிருப்பதாகச் சொன்னாதும் கதை தான் எழுதியிருக்கிறீர்கள் என நினைத்தேன். எனவே படிக்கும்போது சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

//கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் மாத்திரமே இந்த பருவத்தை மிகுந்த சிரமங்களின்றி கடக்கிறார்கள். // - நானெல்லாம் இந்த கேட்டகிரிதான். வாழ்க்கையில் பெரிதாய் எந்த கஷ்டமும் பட்டுவிடவில்லை. உங்கள் அனுபவத்தின் பகிர்தல்கள் எங்களுக்கும் தேவையாய்த்தான் இருக்கின்றன. இது பற்றி நிறைய பேசவேண்டும். பின்னர் தொலைபேசியில் தொடர்புகொள்கிறேன்.

Anonymous said...

Hi

Very interesting, the best was about the last chapter of seeing and enjoying the growing up of your daughter...too good boss.

Could you please give your eamil id.

Thanks

Sundar, Dubai, UAE

Geetha Sambasivam said...

வெறும் காதல் உணர்வு மட்டும் அந்த வயதில் தற்கொலைக்குத் தூண்டும் என்று நினைக்க முடியவில்லை. வேறு வலுவான காரணம் இருந்திருக்க வேண்டும். ஒருவேளை உங்கள் குடும்பச் சூழ்நிலை காரணமாக இருந்திருக்கலாம். ஒரு 20 வயதுப் பையன் தற்கொலைக்குப் போக வேறு வலுவான காரணங்கள் கட்டாயம் இருந்திருக்கும். எப்படி இருந்தாலும் "வாழ்க்கை வாழ்வதற்கே" என்று புரிந்து கொண்டதற்கு மகிழ்ச்சி. இனி வசந்தம் வீசட்டும். உங்கள் குடும்பத்திற்கு என் வாழ்த்துக்கள்.

Geetha Sambasivam said...

உங்கள் பதிவின் பெயரைப் பார்த்தேன். பொருத்தமாகத் தான் இருக்கிறது. உண்மையில் கடவுள் கொடுத்த பிச்சைப் பாத்திர்ம்தான் நீங்கள். தவறாகச் சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.

Nambi said...

Good one.
Still I have a feeling that U would have written even better. I agree with what Prasanna mentioned.

Nambi

Anonymous said...

Your message is clear and loud.

In real life, most are not as blessed as you are.

The general rule is, once a person tries to commit suicide, there is bright possibility for that escaping approach to pop-up in another occasion.

your writings shows, you are one blessed person to have such a mother or some guide, who subconsciously prevail on you to see the good and bad in right light.

wish you the best, more important wish your daughter good luck to have you are very long time to come(!)

Anonymous said...

உண்மையில் படித்ததில் திருப்தி .....வாழ்த்துக்கள் இன்னும் நிறைய எழுதவேண்டும் .