Saturday, June 24, 2006

அறியப்படாத எழுத்தாளர்களின் வரிசையில் ........

சுப்ரமணிய ராஜூ என்கிற எழுத்தாளரின் சிறுகதைகள் அனைத்தும் ஒரு தொகுப்பாக 'கிழக்கு பதிப்பகம்' வெளியிட்டுள்ளதை நினைத்து உள்ளபடியே எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. இன்றைய இளம் வாசகர்களில் எத்தனை பேருக்கு இந்த எழுத்தாளரின் பெயர் அறிமுகமாயிருக்கும் என்று தெரியவில்லை.

சுப்ரமண்ய ராஜூவின் நினைவாக பாலகுமாரனும் மாலனும் இணைந்து 'அன்புடன்' என்கிற பல்வேறு எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளைக் கொண்ட ஒரு தொகுதியை வெளியிட்டனர். அதில் ராஜூவின் நண்பரான தேவக்கோட்டை வா.மூர்த்தியின் நெடிய முன்னுரையில் ராஜூவைப் பற்றின பல்வேறு நினைவுகள், சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அசோகமித்திரனும் இவரை சில கட்டுரைகளில் நினைவு கூர்ந்துள்ளார். இதன் மூலம் ராஜூவைப் பற்றிய அறிய வருகிற அவர் நட்பைப் பேணுவதில் மிகவும் கரிசனத்துடனும் கவனத்துடனும் இருந்துள்ளார். இலக்கியத்தை விட நட்பே அவருக்கு முக்கியமானதாகப் பட்டிருக்கிறது.

ராஜூவின் படைப்புகள் எனக்கு அதிகம் படிக்கக்கிடைக்கவில்லையெனினும் படித்த சிறுகதைகள் ஒன்றும் அவ்வளவு சிலாக்கியமாக இல்லை. (மறைந்து போன படைப்பாளி என்பதவற்காக அவரை புகழந்தே ஆக வேண்டும் என்கிற சம்பிரதாயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை)வெகு காலத்திற்கு முன்பு

கணையாழியில் சுஜாதா "காலத்தை வென்று நிற்கக்கூடிய சிறுகதைகள்" அடங்கிய ஒரு பட்டியலை வெளியிட்டார். புதுமைப்பித்தனையே வெகு தயக்கத்திற்குப் பின் மட்டுமே சேர்த்துக் கொண்ட் அந்தப்பட்டியல் அப்போது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் ராஜூவின் பெயரை பார்த்த பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. "நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு" என்னுமளவிற்கு பலத்த குரல்கள் இலக்கியவாதிகளின் மத்தியில் ஏற்பட்ட ஒரு பிரமை.

()

இது போல் திறமையான தமிழ் எழுத்துக்காரர்கள் அவ்வப்போது தோன்றி consistent-ஆக எழுதாமல் தனிப்பட்ட பிரச்சினைகளினாலோ அல்லது இறந்து போயோ பெரும்பாலான வாசகர்களின் கவனத்திற்கு வராமலேயே போய்விடுகிறார்கள். மேற்குறிப்பிட்ட பத்ரியின் பதிவின் பின்னூட்டத்தில் பிரகாஷ், சம்பத் என்கிறவரைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். ஏதொவொரு
'விருட்சம்' சிற்றிதழில் சம்பத்தின் 'இடைவெளி' என்கிற சிறுகதையைபடித்தவுடன் எனக்குத் தோன்றியது. "WOW".

இதே போல ஐராவதம் என்கிற எழுத்தாளரைப் பற்றி என்னுடைய பழைய பதிவுகளில் எழுதியிருக்கிறேன். என்னளவில், அஸ்வகோஷ், சுப்ரமணியன் ரவிச்சந்திரன், எஸ்ஸார்சி என்று பல திறமையான எழுத்தாளர்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே கவனம் பெற்று நின்று விடுகிறார்கள். இந்த வகையில் இன்றைய இளைய வாசகர்களிடம் நான் அறிமுகப்படுத்த விரும்புவது, இரவிச்சந்திரன் என்கிற துள்ளலான எழுத்தாளரைப் பற்றி.

என் சிறுவயதில் "சுஜாதா"வைப் பற்றி யாரிடமோ சிலாகித்துக் கொண்டிருந்த போது "இரவிச்சந்திரனைப் படித்திருக்கிறீர்களா?" என்றார். "யார் அவர்?" என்றதற்கு 'ஒரு இந்திய பாஸ்போர்ட்' என்கிற படைப்பை வாசிக்கக் கொடுத்தார். எனக்கு உடனே உடனே இரவிச்சந்திரனைப் பிடித்துப் போனதோடு, 'இந்த மாதிரியாக நம்மால் என்றாவது எழுத முடியுமா?" என்கிற தாழ்வு மனப்பான்மையும் பொறாமையும் கலவையாக தோன்றியது.

()

இரவிச்சந்திரன் பெங்களூர், மல்லேஸ்வரத்தைச் சேர்ந்தவர். சுஜாதா பணிபுரிந்த அதே BHEL-ல் இவரும் பணிபுரிந்திருக்கிறார். சுஜாதாவின் எழுத்துக்களைப் பிடித்துப் போய் அவரை குருவாக ஏற்றுக் கொண்டு அவரிடம் சிறுகதை பயின்று பின்னர் தன்னுடைய வழுக்கிச் செல்லும் நடையில் சுஜாதாவிற்கு இணையாகவும் சில சமயங்களில் தாண்டியும் செல்லும் வகையில் உரைநடையின் சாத்தியங்களை பயன்படுத்திக் கொண்டார். இவ்வளவு சிறப்பாக தமிழை கையாண்ட இவரின் தாய்மொழி தெலுங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

"இந்தப் படைப்பு மட்டுமல்ல, இனிவரும் எல்லாம் படைப்புகளை சுஜாதாவிற்கு சமர்ப்பணம்' என்றவர் தற்கொலை செய்து இறந்து கொண்டார் என்ற போது அதிர்ச்சியாக இருந்தது. தேசிகனின் மூலம் சுஜாதாவிடம் உரையாடும் வாய்ப்பு கிடைத்த போது, இந்தச் செய்தியை வருத்தமுடன் அவரும் நிச்சயித்த போது வருத்தமாக இருந்தது. 'இனி ஒரு விதி செய்வோம்' 'ஒரு இந்திய பாஸ்போர்ட்' 'இந்திராகாந்தியின் இரண்டாவது முகம்' போன்ற சிறந்த தொகுதிகளை எந்த பதிப்பகமாவது மீள்பதிப்பு வெளியிட்டால் மகிழ்வேன்.
()

Marathadi இணையக் குழுமத்தின் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களின் போதுஒவ்வொரு உறுப்பினரும் முறை வைத்து தினம்தினம் பல்வேறு விதமாக பதிய, என் முறை வந்த போது இரவிச்சந்திரனை அறிமுகப்படுத்தி ஒரு பதிவும் அவரின் சிறுகதையை ஒரு பதிவுமாக இட்டேன். அந்த பதிவுகளின் சுட்டிகள் கிடைக்காததால், எனது இந்த வலைப்பதிவில் அடுத்தடுத்த இடுகைகளாக இட்டுள்ளேன்.

அற்பாயுளில் இறந்து போன இன்னொரு சிறந்த எழுத்தாளரை அறிந்து கொள்ளுங்கள்.

4 comments:

வானம்பாடி said...

சுஜாதா பணிபுரிந்தது BEL.

Ram.K said...

ஆஹா !! நான் இந்த வரிசை என்பது அடுத்தவருக்குச் சொல்லப்பட வேண்டிய ஒன்று.

நான் இப்போதே தங்கள் வலைபூவை favorites - ல் இணைத்துவிட்டேன். மேலும் வாசிக்க

ஆவலுடன்
பச்சோந்தி

அருள் குமார் said...

நானும் பாலகுமாரன் படித்ததிலிருந்து சுப்டமணியராஜூ கதைகளை படிக்க முடியாதா என ஏங்கிக்கொண்டிருந்தேன். கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருப்பதை அறிந்து மகிழ்ந்தேன். இன்று வாங்கி படிக்க ஆரம்பித்துவிடேன்.

மூர்த்தி அவர்களின் முன்னுரை இதிலும் இருந்தது.

பயனுள்ள பதிவு சுரேஷ் கண்ணன். இதுபோன்ற விஷயங்களை தொடர்ந்து சொல்லுங்கள். நன்றி.

Cable சங்கர் said...

எனக்கு கூட நன்றாக ஞாபகமிருக்கிறது. நானும் இரவிச்சந்திரனை வாசித்திருக்கிறேன். அதிலும் அவர் குங்குமத்திலோ, குமுதத்திலோ எழுதிய "பெண்களூர்" என்ற பெண்களூர் பெண்களை பற்றி எழுதிய கட்டுரை மிக,மிக அருமையான ஓன்று. நீங்கள் சொலவதைப்போல அவர் சில சமயங்களில் சுஜாதாவை விஞ்சி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். பிறகு எனக்கு பிடித்த சில அவ்வளவாக பிரபலமாகாத எழுத்தாளர்கள், சாருப்ரபா சுந்தர்,ம.வே.சிவக்குமார்,சங்கரநாராயணன்.
www.cablesankar.blogspot.com
www.shortfilmindia.com
www.classiindia.com