Monday, November 30, 2009

உலக சினிமாவின் அபத்த நகல்கள்

தமிழத் திரைப்படங்களைப் பொறுத்தவரை சர்வதேச தரத்தில் திரைப்படம் எடுக்கக்கூடியவர்களாக நான் கருதுவது (அவர்களின் வணிகத் திரைப்படங்களை தவிர்த்து) மகேந்திரன் மற்றும் பாலுமகேந்திரா ஆகியோர்களை மாத்திரமே. ஆனால் அவர்கள் ரிடையர் ஆகிற நிலையில் இருப்பதால் அமீரை அந்தப் பட்டியலில் சேர்க்கலாமா என்று யோசிக்கிறேன்.


என்று அமீரைப் பற்றி இந்தப் பதிவில் மிக நம்பிக்கையாக எழுதியிருந்தேன். ஏனெனில் என்னைப் பொருத்தவரை 'பருத்தி வீரன்' மிகுந்த நுண்ணுர்வான காட்சிகளுடன் உலகத் தரத்தில் உருவாக்கப்பட்ட படைப்பாக கருதுகிறேன். உயிர்மை நூல் வெளியீட்டில் அமீர், 'நான் எந்த உலக சினிமாவையும் பார்ப்பதில்லை, நூலும் வாசிப்பதில்லை. அதற்கான அறிவாற்றலும் என்னிடமில்லை' என்று பேசும் போது நல்ல சினிமாக்களை உருவாக்குவதற்கு இதுவே இவரின் முக்கியத் தகுதியாக இருக்கப் போகிறது என்று என்னுள் எண்ணிக் கொண்டேன். இதன் அடிப்படையில் அமீரின் 'யோகி' என்னுள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இயக்குநர் வேறொருவராக இருந்தாலும் அமீரின் தயாரிப்பு மற்றும் நடிப்பு என்கிற காரணத்தினால் அமீர் தனக்குரிய தரத்தை தக்கவைத்திருப்பார் என்று நம்பினேன். தொலைக்காட்சி நேர்காணல்களில் மற்ற இயக்குநர்கள் வழக்கமாக தரும் "இது ஒரு வித்தியாசமான கதை" என்றெல்லாம் பில்டப் தராமல் 'ரொம்ப உழைச்சிருக்கோம். பாருங்க' என்று இயல்பாக கூறினதும் பிடித்திருந்தது.யோகி சுடுகிறார் (?!)

ஆனால்.. பத்திரிகை மற்றும் இணைய விமர்சனங்கள் மூலம் 'யோகி', TSOTSI என்கிற தெற்கு ஆப்ரிக்க திரைப்படத்தின் அப்பட்டமான நகல் என்பதை அறிய நேரும் போது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. இதனாலேயே அந்தப் படத்தைப் பார்க்கும் ஆவல் முற்றிலும் வடிந்து எரிச்சலும் ஏமாற்றமுமே மிஞ்சுகிறது. (TSOTSI படத்தைப் பற்றி முன்னர் நான் எழுதின பதிவு) ஹாலிவுட் படங்களையும் தமிழுக்குத் தோதாக மாற்ற முடிகிற இன்னபிற மொழிப்படங்களையும் அப்படியே உருவிவிடுவது தமிழ்ச்சினிமாவிற்கு புதிதல்ல. கமல் இதில் விற்பன்னர். அதற்கு ஒருவரி க்ரெடிட் தருவதோ அல்லது காப்பிரைட் பிரச்சினை காரணமாக நேரடியாக அல்லாமல் மறைமுகமாகவேனும் ஒப்புக் கொள்வதோ கூட இவர்கள் ஜாதகத்தில் கிடையாது. உலக சினிமா பற்றின பிரக்ஞை குறைவாயிருந்த காலகட்டத்திலாவது இவர்கள் செய்த திருட்டுத்தனங்களை சிறிய வட்டத்தால் மாத்திரமே உணர முடிந்தது. இந்த சிறுகூட்டத்தால் என்ன செய்துவிட முடியும் என்று அதையே இவர்களும் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் இணையமும் நகல் குறுந்தகடுகளும் பிரத்யேக தொலைக்காட்சிகளும் உலக சினிமாக்களை வாரியிறைக்கிற, ஒரு பொதுவான சினிமா பார்வையாளன் கூட அகிரா குரோசாவையும் பெர்க்மனையும் அறிந்து வைத்திருக்கிற இந்தக் காலக்கட்டத்தில் இவர்கள் வெளித்திரைப்படங்களை கொஞ்சமும் கூச்சமில்லாமல் உருவுவது பாமரர்களின் மீது இவர்கள் வைத்துள்ள பெரும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

'கதை பஞ்சம்' என்று இவர்கள் பாவனையாக சலித்துக் கொள்வதைக் கண்டால் சிரிப்பாக இருக்கிறது. அப்படிப்பபட்ட பஞ்சத்தையும் மீறி இவர்கள் என்ன காவியத்தைப் படைக்கிறார்கள் என்று பார்த்தால் அதை விட அதிகம் சிரிப்பு. தமிழ்நாட்டில் இல்லாத பிரச்சினையா? இவற்றை கலைப்படங்களாக எடுத்து தலையில் துண்டு போட்டு போகச் சொல்வது என் நோக்கமல்ல. இவற்றைக்கூட வணீகரீதியான வெற்றி பெறக்கூடிய தகுதியுடன் உருவாக்க முடியும். வழக்கமான கிளிஷேக்களை மக்கள் வெறுக்கிறார்கள் என்பதை இன்றைய திரையரங்குகளில் மக்களின் வெளிப்பாட்டை வைத்து உணர முடிகிறது. (என்ன ஆனாலும் சரி, வெகுஜன சினிமாச் சகதியில்தான் புரள்வேன் என்கிற ஞானவான்களை ஒருபுறம் ஒதுக்கிவிடுவோம்)

சொந்தமான ஒரு கதைப்பின்னணியை உருவாக்குவது சிரமமென்றால் நல்லதொரு தமிழ் இலக்கியப் படைப்பாளியின் படைப்பை அனுமதியுடன் பெற்று அதை திரைவிரிவாக்கம் செய்யலாம். கதை விவாதம் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அபத்தச் செலவுகளின் ஒரு பகுதியை மாத்திரம் கூட அவர்களுக்கு தந்தால் போதுமானதாயிருக்கும். அதை விட்டு ஏன் இவர்கள் குறுந்தகடுகளையே நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இந்த வரிசையில் நான் பெரிதும் நம்பிக் கொண்டிருந்த அமீரும் சேர்ந்ததுதான் எனக்கு அதிர்ச்சி. மற்ற வகையான இயக்குநர்கள் என்றால் பழகிப் போன ஒன்றாக எடுத்துக் கொண்டிருப்பேன். அவ்வளவு சீக்கிரம் தமிழ் இயக்குநர் யார் மீதும் நம்பிக்கை வைக்காதே என்பதுதான் 'யோகி' எனக்குத் தந்த பாடம். (இதை மேற்சொன்ன பதிவின் பின்னூட்டத்திலேயே சிலர் சொல்லியிருந்தனர். அவர்களின் தீர்க்கதரிசனத்தை வணங்கத் தோன்றுகிறது).

image courtesy: original uploader

suresh kannan

Wednesday, November 04, 2009

பரிந்துரை : சாருவின் கட்டுரை

உயிர்மை நவம்பர் 09 இதழி்ல் 'தமிழ் சினிமா பாடல்கள் - ஓரு பண்பாட்டு வீழ்ச்சியின் அடையாளம்' என்றொரு கட்டுரை சாரு நிவேதிதாவால் எழுதப்பட்டிருக்கிறது. தமிழச் சமூகம் தம்முடைய கலாச்சார அடையாளங்களை மெல்ல மெல்ல இழந்து அம்மணமாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் இக்கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அதை உங்களுக்கு பரிந்துரை செய்ய விரும்புகிறேன்.

வணிகச் சகதியில் அமிழ்ந்து கொண்டிருக்கும் தற்போதைய தமிழ்ச்சினிமாவில் 'பாடல்கள்' என்பதே அபத்தம் என்றாலும் அதுவும் அர்த்தமின்மையின் உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கும் நிலையை தம்முடைய பிரத்யேகமான இரக்கமேயில்லாத பகடியான மொழியில் நம்முன் வைக்கிறார் சாரு. அதிலிருந்து சில பகுதிகளை மாத்திரம் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

... ஒட்டு மொத்தமான philistine சமூகச் சூழல். தமிழ்நாட்டில் மட்டுமே காணக்கூடிய இந்தச் சூழல் தனக்கு அறிமுகமாகும் எதையுமே வடிகட்டி அதன் நீர்த்துப் போன வடிவத்தையே தனக்கென்று எடுத்துக் கொள்கிறது....

...என்னதான் ஜனரஞ்சக பைங்கிளி கலாச்சாரமாக இருந்தாலும் அதில் கொஞ்சமாவது தமிழ் உணர்வும் தமிழ் வாழ்க்கையும் இருக்க வேண்டும்; தமிழ் வாழ்க்கையின் வேர் இருக்க வேண்டும்; தமிழ் நாட்டின் வெகுஜன கலாச்சாரத்தில் அப்படி இருக்கிறதா?


முழுக்கட்டுரையையும் உயிர்மை நவம்பர் 09 இதழிலோ அல்லது சாருவின் தளத்திலோ சென்று வாசியுங்கள்.

Monday, November 02, 2009

சாசனம் - மகேந்திரனின் தோல்வியுற்ற சினிமா

நேற்று மாலை தொலைக்காட்சி சானல்களை மேய்ந்துக் கொண்டிருந்த போது ஜீ தொலைக்காட்சியில் மிகத் தற்செயலாக இந்தப் படத்தின் திரையிடலை கவனித்தேன். இறங்கிக் கொண்டிருந்த உறக்கம் காணாமற் போனது. படம் வெளிவந்த புதிதில் திரையரங்கிலேயே பார்த்திருக்க வேண்டியது. நான் இரண்டு நாட்கள் கழித்து சாவகாசமாக போன போது படத்தை தூக்கிவிட்டிருந்தார்கள். பிறகு இணையத்திலும் குறுந்தகடிலும் தேடிய போது ஏமாற்றமே மிஞ்சியது. நல்வாய்ப்பினையளித்த ஜீக்கு ஒரு ஜே.இளைஞனொருவன் அவனுடைய தந்தையின் கடன்பிரச்சினையின் காரணமாக இன்னொரு குடும்பத்துக்கு தத்து கொடுக்கப்படுவதும் அதனால் அந்த இளைஞனுக்கு நேரும் அகவயமான சிக்கல்களே இத்திரைப்படத்தின் அடித்தளம். விவரமறியாத குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்வது நடைமுறையிலுள்ள வழக்கம். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் மேலாக ஒரு குடும்பத்தில் புழங்கிவிட்டு சடாரென்று ஒரு நாளில் அத்தனையையும் உதறி இன்னொருவரை தந்தையாக பாவிக்கச் சொல்வது மனதை அறுக்கும் செயல். அந்த இளைஞனின் மனக்கொந்தளிப்பை காட்சிகளின் ஊடாக மிகச் சரியாகவும் உணர்ச்சிகரமாகவும் திரையில் பதிவு செய்துள்ளார் மகேந்திரன். வாரிசுத் தேவைக்காகவும் சொத்து வேறு எங்கும் கைமாறி போய்விடக்கூடாது என்பதற்காகவும் இப்படி தத்துக் கொடுப்பதும் எடுப்பதும் நகரத்தார்களின் (நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள்) கலாசாரத்தின் ஒரு பகுதியாக இருப்பதை அறிய முடிகிறது. ஆனால், பெரிய வீடுகளில் வசிப்பவர்கள்; நிறைய பதார்த்தங்களுடன் உண்பவர்கள்; வணிகம் செய்பவர்கள் என்பதைத் தவிர இச்சமூகத்தைப் பற்றி வேறெந்த நுண்மையான தகவல்களையும் இத்திரைப்படத்தின் மூலமாக அறிய முடியவில்லை.

தத்துக் கொடுக்கப்படுகிற அதனால் தன்னுடைய சொந்தத் தந்தையின் மரணத்தைக்கூட காண முடியாமல் மனதிற்குள்ளாகவே புழுங்க நேர்கிற முத்தையா என்கிற ராமநாதனாக மிக அற்புதமாக நடித்துள்ளார் அரவிந்த்சாமி. (இப்படியொரு இயல்பான நடிகர் இடையிலேயே திரைத்துறையிலிருந்து விலகியது துரதிர்ஷ்டவசமானதொன்று.) இதன் பின்னணயில் ஒரு சுவாரசியமான தகவலுண்டு. அரவிந்த்சாமியின் உண்மையான தந்தை டெல்லி குமார் என்பதும் (தொலைக்காட்சி தொடர் புகழ்) அ.சாமி டெல்லி குமாரால் இன்னொருவருக்கு தத்து கொடுக்கப்பட்டவர் என்பதுமான உண்மைத்தகவல்கள் சம்பந்தப்பட்ட நடிகரின் உணர்வுகளை புரிந்து கொள்ள கூடுதல் காரணங்களாகிறது. இந்தப் பாத்திரத்திற்கு அரவிந்த்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பது என் யூகம். இந்தப்படத்தில் எந்த ஊதியமும் பெற்றுக் கொள்ளாமல் அரவிந்த்சாமி, கெளதமி போன்றவர்கள் முன்வந்தார்கள் என்பது இன்னொரு trivia.

தம்மையும் தம்மை நம்பி வந்த குடும்பத்துப் பெண்ணையும் (ரஞ்சிதா) இணைத்து வம்பு பேசும் ஊர்க்கூட்டத்தின் முன்பு பொரிந்து தள்ளும் காட்சியிலும் தன்னுடைய தந்தையின் மரணத்தைக் கேட்டு அதிர்ந்து ஆனால் போகமுடியாத காரணத்திற்காக தனிமையில் அழும் காட்சியிலும் ஊராரின் அவதூறு காரணமாக தனக்காக அழும் சரோஜியை இரண்டாவது மனைவியாக ஏற்றுக் கொள்ள முடிவெடுக்கும் காட்சியிலும் தன்னுடைய மகளை நீண்ட வருடங்கள் கழித்து காணும் இறுதிக் காட்சியிலும் மிக அற்புதமாக நடித்துள்ளார் அரவிந்த்சாமி.

இவரது மனைவி விசாலம் ஆச்சியாக நடித்திருக்கும் கெளதமியும் சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார். தன்னுடைய கணவருக்கும் சரோஜிக்கும் ஏற்பட்டிருக்கிற உறவை அறிந்திருக்கும் அவள், அதை அங்கீகரிக்கும் விதமாக சரோஜியிடம் மறைமுகமாகவும் பெருந்தன்மையுடனும் அதை அறிவிக்கும் காட்சி மிக உன்னதமானது. (இவரது தோற்றம் சம்பந்தப்பட்ட பாத்திரத்திற்கு பொருந்தவில்லை என்பது ஒரு குறை).

முத்தையா குடும்பத்தின் ஆதரவை நாடி வருகிற பெண்ணாக ரஞ்சிதா. முத்தையாவின் உயரிய குணத்தைக் கண்டு வியந்து அதன் காரணமாக தன்னையே தருகிறாள். இதனால் தெய்வம் போன்ற குணமுடைய விசாலம் ஆச்சியின் மனம் நோக காரணமாகி விடுவோமோ என்றும் குமைகிறாள். இதனாலேயே அவர்களின் வாழ்க்கையில் குறுக்கே நிற்காமல் விலகிப் போய்விடுகிறாள்.

முத்தையாவின் அக்காளான மெய்யம்மை ஆச்சியின் பாத்திரம் தனித்துவம் வாய்ந்தது. திருமணம் செய்து கொள்ளாமலிருக்கும் இவள் முத்தையா-சரோஜியின் உறவை முதிர்ச்சியுடன் அணுகும் பாங்கு மதிக்கத் தக்கதாய் இருக்கிறது. (சபீதா ஆனந்த் போன்றவர்கள் எத்தனை முறைதான் இவ்வாறான சபிக்கப்பட்ட சோகப் பாத்திரங்களில் நடிப்பார்களோ?). தலைவாசல் விஜய்யும் அவரைப் போன்றவர்களுக்கென்றே படைக்கப்படுகிற ‘விசுவாசமான வேலைக்காரன்’ பாத்திரம் என்றாலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

அரவிந்த்சாமியின் ‘மகள்’ பாத்திரத்தின் அறிமுகம், படத்தின் இறுதிக்காட்சியில் பார்வையாளர்களுக்கு ஆவலூட்டும்படி திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனால் அதில் தொலைக்காட்சி தொடர்களில் தோன்றும் ‘சஜிதா’வின் (மந்திரப்புன்னகை) முகத்தை பார்த்ததுமே என்னுள் இருந்த ஆவல் வடிந்துப் போனது. ஆனால் அதற்கு நான் வெட்கும்படியாக சொற்ப காட்சிகளே என்றாலும் மிகத்தரமான நடிப்பை வழங்கியிருந்தார் சஜிதா. நீண்ட வருடங்கள் கழித்து தந்தையைக் காணப் போகிற குறுகுறுப்பும் அச்சமும் வெட்கமுமான உணர்வை மிகப் பொருத்தமாக வெளிப்படுத்தியிருந்தார். தன்னுடைய தாய் பொதுவெளியில் தந்தையுடன் உரையாடிக் கொண்டிருப்பதை கோபமும் தவிப்புமாக அணுகும் காட்சியிலும் அவரது நடிப்பு சிறப்பாக அமைந்திருந்தது.

()

எல்லாத் தரப்பு ரசிகர்களாலும் பெரிதும் ரசிக்கப்பட்ட ‘உதிரிப்பூக்கள்’ ‘முள்ளும் மலரும்’ போன்ற உன்னத திரைப்படங்களை இயக்கிய (’உன் கண்ணில் நீர் வழிந்தால்’ போன்ற மொக்கைத் திரைப்படங்களும் உண்டுதான்) மகேந்திரன் இயக்கியதுதானா இந்தப்படம் என்ற ஐயம் ஏற்படுமளவிற்கு படம் மிக தொய்வான திரைக்கதையுடன் ஊர்கிறது. பேசப்பட்ட அளவிற்கு நகரத்தார்களின் சமூகச்சூழல் திரைப்படத்தில் பிரதிபலிக்காதது மிகப் பெரிய குறை. திரும்பத் திரும்ப ஒரே பாத்திரங்கள் தோன்றுவது சலிப்பைத் தோன்றுகிறது. என்னைக் கண் கலங்க வைத்த இறுதிக்காட்சி உட்பட சில காட்சிகளில் மாத்திரமே மகேந்திரனின் இருப்பை உணர முடிகிறது. NFDC உடனான நிதிப்பற்றாக்குறை பிரச்சினையில் திட்டமிட்டபடி படத்தை உருவாக்காத முடியாத விபத்தினால் இது நேர்ந்திருக்கலாம் என்று யூகிக்கிறேன்.

எழுத்தாளர் கந்தர்வனின் ‘சாசனம்’ சிறுகதையையொட்டி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருப்பதாக அறிகிறேன். ஆனால் அது சிறுகதையா அல்லது நாவலா என்று சந்தேகம் கொள்ளுமளவிற்கு நிகழ்வுகளின் காலம் தலைமுறையைத் தாண்டி நீள்கிறது. மேலும் பாத்திரங்கள் யதார்த்தமற்று லட்சியவாதப் பாத்திரங்களாகவே உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். முத்தையாவின் முதல் மனைவியான விசாலம் ஆச்சி அவரின் இரண்டாவது திருமணத்தை ஏற்றுக் கொண்டு உடனேயே உயிர் விடுகிறார். இரண்டாவது மனைவியான சரோஜியோ விசாலம் மனம் நோகக்கூடாது என்று அவளின் மரணம் குறித்து அறியாமலேயே 13 வருடங்கள் விலகி வாழ்கிறாள். இந்நிலையில் அவளும் முத்தையாவும் தங்களின் உடல்ரீதியான பாலியல் தேவைகளுக்காக என்னதான் செய்வார்கள் என்கிற இயல்பான கேள்வி என்னுள் எழுகிறது. இம்மாதிரியான தியாக திருவுருப்பாத்திரங்களை பார்வையாளர்களின் சோக உணர்ச்சியை செயற்கையாக தூண்டும் இயக்குநர்கள் வேண்டுமானாலும் படைத்துக் கொள்ளட்டும். மகேந்திரனுமா?

ஏற்கெனவே ஊர்ந்துச் செல்லும் மந்தமான திரைக்கதையில் பாடல்கள் (இசை: பாலபாரதி) வேறு எரிச்சலைக் கிளப்புகின்றன. வழக்கமான மகேந்திரனின் படங்களுக்கு பெரிய பலமாக விளங்கும் ராஜாவின் இருப்பு இல்லாத குறை மிகத் தெளிவாகத் தெரிகிறது. குறிப்பிட்ட சில காட்சிகள் பார்வையாளனுக்கு தந்த சிறந்த அனுபவங்களைத்தவிர முழுமையான அளவில் இது ஒரு தோல்வியுற்ற படைப்பு என்றுதான் வேதனையுடன் சொல்லத் தோன்றுகிறது.

ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி பல வருடங்கள் வாழ்ந்த குடும்பத்தை விட்டு சூழ்நிலை காரணமாக விலகுகிற இளைஞனின் மனக்கொந்தளிப்பும் சோகமும்தான் இத்திரைப்படம் முக்கிய புள்ளி. ஆனால் 'புகுந்த வீட்டிற்கு' செல்கிற பெண் சமூகமும் ஏறக்குறைய இதே வேதனையை இயல்பாக ஆண்டாண்டு காலமாக அனுபவிக்கிறது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

இத்திரைப்படத்தைப் பற்றின எழுத்தாளர் பாவண்ணனின் அற்புதமான பதிவு.


suresh kannan