சில திரைப்படங்களைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து பிறகு அது இயலாமலேயே போய் விடுகிறது. எனவே 'நல்ல படங்கள்' என நான் கருதுபவற்றைப் பற்றி சில வரிகளாவது எழுதி வைக்கப் போகிறேன். 'நீங்கள் பரிந்துரைக்கும் திரைப்படங்கள் உபயோகமாக உள்ளது' என பின்னூட்டத்திலும் தனி மடலிலும் நேர் உரையாடலிலும் தெரிவிக்கும் நண்பர்களுக்கு (உண்மையாகத்தான்) இது உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன். அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் திரைப்படங்களைப் பற்றி வழக்கமான முறையில் எழுதுவேன்.
EVERYBODY'S FINE (2009) பார்த்தேன். சிவாஜியின் 'வியட்நாம் வீடு' திரைப்படத்தை நினைவுப் படுத்தியது. புரிந்திருக்கும். வயதான காலத்தில் வாரிசுகளின் புறக்கணிப்பை வலியுடன் தனிமையில் உணரும் 'அழுகாச்சி' படம்.
தன்னுடைய மகன்/ள் (கள்) வருகைக்காக வீ்ட்டை ஒழுங்குபடுத்தி காத்திருக்கிறார் பிராங்க். நாம் எதிர்பார்த்தது போலவே ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்லி வராமலிருந்து விடுகிறார்கள். 'அட நாதாரிகளா, சரி. நானே உங்களைப் பார்க்க வரேன்' என்று ஆச்சரிய வருகையை அவர்களுக்கு அளிக்க புற்ப்பட்டு விடுகிறார். அவரவர்களின பிரச்சினையில் இவரை எல்லோருமே தவிர்க்க முயல்கின்றனர் என்பது புரிகிறது. ஆயாசத்துடன் திரும்பும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு எல்லோருமே வந்து சேர விக்ரமன் பட பின்னணி இசையுடன் கிறிஸ்துமஸ் விருந்தை அனைவரும் உண்ண படம் ஜூம் அவுட் கோணத்துடன் நிறைகிறது.
இத்தனை SUBTLE ஆக ராபர்ட டி நீரோ நடிப்பதை இப்போதுதான் பார்க்கிறேன். தன் மனைவியிடம் மிக இயல்பாக பழகிய மக்கள்ஸ் தன்னிடமிருந்து ஏன் விலகிப் போகிறார்கள் என்று ஒவ்வொரு தகப்பனும் நெருடலான வலியாக உணர்கிற சமாச்சாரத்தை யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ரயில் பயண்த்தில் எதிர் குண்டு பெண் பயணியிடம் வம்படியாக தான் செய்து கொண்டிருடிருந்த பணியை நினைவு கூர்வது சுவாரசியமான காட்சி. சமகாலத்து வயதான தோற்றத்துடன் உள்ள தந்தை, குழந்தைகளுடன் உரையாடும் அந்த விசாரணைக் காட்சியும் நன்று.
வயதான தகப்பனை புனிதப்பசுவாகவும், வாரிசுகளை வில்லர்களாகவும் கருப்பு வெள்ளையாக சித்தரிக்காமல், அவரவர்கள் வாழ்க்கைகளை பிரச்சினைகளுடன எதிர்கொண்டிருக்கும் யதார்த்தத்தை பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற செய்தியையும் இந்தப்படம் முன்வைக்கிறது.
சிறந்த படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் ராபர்ட் டி நீரோவின் அற்புதமான நடிப்பிற்காக பார்க்கலாம்.
தொடர்புடைய பதிவு : ஸ்மித்தைப் பற்றி
suresh kannan