Wednesday, September 29, 2010

குழ்ந்தைகள் நம்மைக் கவனிக்கிறார்கள்

பெரியவர்களான நம்மில் எத்தனை பேர், நாமும் முன்னர் கடந்து வந்த, சமகால குழ்நதைகளின் உலகத்தை கூர்ந்து கவனிக்கிறோம்?. அவர்கள் தங்களுக்குள் விளையாடும் விதத்தை, சண்டையிட்டு உடனேயே சமாதானமாகிற விதத்தை, அவர்களின் குறும்பும் நுண்ணறிவும் பெரிதான களங்கங்களுமல்லாத இயங்குமுறையை நாம் பெரிதும் கவனிப்பதேயில்லை. "சத்தம் போடாம இருக்கமாட்டீங்க?" போன்ற அதட்டல்களே நாம் அவர்களுடன் கொள்ளும் பொதுவான உரையாடல்களாக அமைகின்றன.

மாறாக குழந்தைகள் நம்மை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிய மாட்டோம். கற்பிதங்கள் ஏதும் திணிக்கப்படாத அந்த மூளைகளில் 'ஏன்? எதற்கு? எப்படி?' போன்றவையான அடிப்படைகளில் ஆயிரம் கேள்விகள் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. நீர்க்குமிழ் தோன்றி உடைவதிலிருந்து பாரதமப் பிரதமர் ஏன் டவலை எடுத்து தலையில் சுருட்டி வைத்திருக்கிறார் என்பது வரை எல்லாவற்றிற்கும் அவர்களுக்கு விடை தெரிந்தாக வேண்டும். நாம் பல முறை அவர்களை அலட்சியப்படுத்தும் போது, தற்காலிகமாக அவர்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொண்டாலும்  விடை அறியும் தீரா ஆர்வம் அவர்களை துரத்திக் கொண்டேயிருக்கிறது. 

பெரியவர்களான நமக்குள் ஏற்படும் கோப, குரோதங்களுக்காக நிகழும் சண்டைகளையும், உடலிச்சை சரசங்களையும், புறம் சொல்லுதலையும், சகலவிதமான திருட்டுத்தனங்களையும் சுற்றியுள்ள குழந்தைகள் எங்கே கவனிக்கப் போகிறார்கள், அல்லது கவனித்துதான் அவர்களுக்கு என்ன புரியப் போகிறது என்பதே நம் யூகமாக இருக்கிறது. நம்மைக்காட்டிலும் அதிக நுண்ணுணர்வுள்ள குழந்தைகள் அதைச் சரியாய்ப் புரிந்து கொள்வது மட்டுமல்லாமல் ஞாபகத்திலும் அப்படியே வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களிடம் சாவகாசமாக பொழுதுகளில் நெருங்கி உரையாடும் போதும் நாம் தெரிந்து கொள்ளலாம்.

இத்தாலிய நியோ-ரியலிசப் படைப்புகளின் முன்னோடிகளில் ஒருவர் விட்டோரியா டிசி கா. அதுவரை சினிமா உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த முறைமைகளிலிருந்து விலகி படப்பிடிப்புக் கூடங்களின் செயற்கைப்படுத்தப்பட்ட சூழலில் அல்லாமல் இயற்கையான அந்தந்த சூழலிலும் தொழில்முறை நடிகர்கள் அல்லாத நபர்களையும் வைத்து உருவாக்கப்படும் முறை நியோ - ரியலிசப் பாணி என்றழைக்கப்பட்டது. 


டிசிகாவின் 'பைசைக்கிள் தீவ்ஸ்' உலக சினிமா பார்வையாளர்களுக்கு மிகப் பரிச்சயமானது. இந்தப் படத்தைக் காண்பதற்காக நீண்ட ஆண்டுகள் காத்திருந்த நான் அதற்காக இடது கையையும் வெட்டித் தர தயாராய் இருந்தேன். அதற்கான அவசியமில்லாமல் சொற்ப ரூபாய்களிலேயே இதன் குறுந்தகடு கிடைக்குமென்பது பிறகுதான் தெரியவந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இத்தாலியில் ஏற்பட்டிருந்த வறுமையையும், வேலையில்லாத் திண்டாட்டத்தையும், உள்ளூர்க் கலாச்சாரப் படைப்புகளை ஒதுக்கி அந்த இடத்தில் அமெரிக்கத் திரைப்படங்கள் ஆக்ரமித்துக் கொண்டிருந்த அவலம்.. போன்றவைகளை 'பைசைக்கிள் தீவ்ஸ்' மிகச் சிறப்பாக முன் வைத்தது. 

 

இதற்கும் நான்காண்டுகளுக்கு முன்பு அதாவது 1944-ல் டிசிகா உருவாக்கிய திரைப்படம் The Children Are Watching Us. 

'இந்தக் கட்டிடம் வெறும் சிமெண்ட்டாலும் செங்கற்களாலும் ஆனது. இதை ஒரு வீடாக மாற்றுவது உன் கையிலதான் இருக்கிறது' என்று ஒரு கணவன் தன் புது மனைவியிடம் சொல்வது போல் ஒரு காட்சி மெளனராகம் திரைப்படத்தில் வரும். குடும்பம் என்கிறதொரு நிறுவனம் ஒரு பெண்ணால்தான் முழுமையடைகிறது, அவளால்தான் சிறப்பாக பேணப்படுகிறது, தொடர்ந்து இயங்குகிறது. அவள் அந்த நிறுவனத்திலிருந்து விலகி விட்டால் அது தட்டுத் தடுமாறி பிறகு அமிழ்ந்தே போய்விடுகிறது.

'இப்படியாகச் சொல்லித்தானே எங்களை விலங்கிட்டு வைத்திருக்கிறீர்கள்?' என்பது பெண்ணியவாதிகளின் கூக்குரலாக இருந்தாலும் இதுவே உண்மை. ஒரு ஆணால் இந்த நிறுவனத்தை சிரமப்பட்டாவது விதிவில்க்காக  இயங்க வைத்துவிட முடியுமென்றாலும் ஒருக்காலும் பெண் ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தை அவனால் நிரப்ப முடியாது.
 
The Children Are Watching Us திரைப்படம் மேற்சொன்னவைகளை பிரதானமான முன்வைத்து இயங்குகிறது.

நான்கு வயதுச் சிறுவனான பிரிக்கோ, தந்தைக்கும் தாய்க்கும் ஏற்படும் உணர்ச்சிப் போராட்டத்தினால் அலைகழிக்கப்படுகிறான். அவனது தாய் நினா, ராபர்டோ என்பவனைக் காதலிக்கிறாள். அவனுடன் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காக தன் குடும்பத்திலிருந்து விலகிச் செல்கிறாள். கணவனான ஆண்டிரியா, இது குறித்து பெருத்த அவமானமும் துன்பமும் அடைகிறான். சிறுவனை பார்த்துக் கொள்வதற்காக உறவினர்களிடம் உதவியை நாடுகிறான். இதனால் அலைக்கழிக்கப்படும் சிறுவனான பிரிக்கோ மிகுந்த காய்ச்சலில் விழுந்து கிடப்பதைக் கேள்விப்பட்டு தாய் திரும்பி வருகிறாள். அவளுடன் இணைந்து வாழ விருப்பமில்லாவிட்டாலும் மகனுக்காக அவளைத் தன்னுடன் இருக்க அனுமதிக்கிறான் கணவன். இப்படியாக சில நாட்கள் கழிகின்றன. தம்பதிகளுக்குள் இயல்பாக நேசம் மலருகிறது. மனைவியை மகிழ்விப்பதற்காக அருகிலுள்ள நகருக்கு சில நாட்களுக்கு இன்பச் சுற்றுலா ஏற்பாடு செய்கிறான் கணவன். ஆனால் அலுவலக விஷயமாக இரண்டொரு நாட்களிலேயே உடனே திரும்ப வேண்டிய சூழ்நிலை. மனைவியையும் மகனையும் சுற்றுலாத் திட்டம் முடிந்த பிறகு வந்தால் போதும் என தான் மாத்திரம் திரும்புகிறான்.

திரும்ப வரப்போகும் மனைவிக்காக வீட்டு அலங்காரங்களைச் செய்துக் கொண்டிருக்கும் அவனுக்கு, தாயால் கைவிடப்பட்டு எங்கெங்கோ அலைக்கழிக்கப்பட்டு எப்படியோ திரும்பி வரும் மகனின் மூலம் அதிர்ச்சி கிடைக்கிறது.

ஆம். அவனது மனைவி மீண்டும் காதலருடன் போய் விடுகிறாள். இம்முறை அவமானம் தாங்காத கணவன் தற்கொலை செய்து கொள்கிறான்.
திரைப்படங்களில் அதுவரை மிகுந்த ஆச்சாரமாக பேணிக் காக்கப்பட்டுக் கொண்டிருந்த 'குடும்பப் பெண்' என்னும் குறியீட்டை அதற்குரிய பிரத்யேக உணர்ச்சி வெளிப்பாடுகளின் மூலம் சித்தரித்து அந்தக் குறியீட்டை உடைத்தெறிந்ததின் மூலம் இந்தப் படம் முக்கியமானதாக உள்ளது.

தங்களின் காதல்களை வெளிப்படையாகச் சொல்லும், மனைவியிடமிருந்து விலகி காதலியை தேடிச் சென்று மனம் திருந்தி மீண்டும் மனைவியிடமே வந்தால் கூட இயல்பாக ஏற்றுக் கொள்ளப்படும் ஆண்களின் உலகத்தில், அதே வகையான உணர்ச்சிகள் பெண்ணுலகத்திலும் இருக்கலாம் என்று சிந்திப்பதையே ஆபத்தானதாக இன்றும் கூட கருதப்படும் சூழலில் 1940-களில் இம்மாதிரியான திரைப்படம் வந்தது நிச்சயம் புரட்சியானதாகத்தானிருக்க வேண்டும். இத்திரைப்படத்தையே அந்த மனைவியின் பார்வையில் இயக்குநர் சித்தரித்தால் நமக்கு இந்த உறவின் இன்னொரு பரிமாணம் தெரிந்திருக்க்கூடும்.

டிசிகா இத்திரைப்படத்தை மிக சுவாரசியமாகவும் லாவகமான காட்சிக் கோர்வைகளின் மூலம் நகர்த்திச் செல்கிறார். பொதுவாக குழந்தைகளை வைத்து படப்பிடிப்பு நடத்துவது கடினமானது. தாம் நினைப்பதை உடனேயே செயல்படுத்தி விடக்கூடிய சுதந்திரமுள்ள குழந்தைகளை ஒரு குறிப்பிட்ட உணர்ச்சி சட்டகத்திற்குள் கட்டுப்படுத்தி இயங்க வைப்பது மிகுந்த பொறுமையைக் கோரக்கூடியது. இதில் பிரிக்கோவாக நடித்திருக்கும் சிறுவன் ஒவ்வொரு பிரேமிலும் மிக இயல்பாக நடித்திருக்கிறான். தந்தையின் அருகாமையிருந்தாலும் தாயின் அரவணைப்பே அவனுக்குத் தேவை என்பதை பல காட்சிகளில் வெளிப்படுத்துகிறான்.

படத்தின் இறுதிக் காட்சி மிக முக்கியமானது. கணவனின் தற்கொலைக்குப் பிறகு மகனைத் தேடி வரும் தாய், அவன் தன்னிடம் வருவான் என்று தீர்மானமாக நம்புகிறாள். இத்தனை துன்பத்திற்கும் காரணம் அவளுடைய காதல்தான் என்பதை தன் நுண்ணறிவால் புரிந்து கொள்ளும் பிரிக்கோ, கண்ணீருடன் தன்னுடைய புறக்கணிப்பையே அவளுக்குத் தண்டனையாகத் தருகிறான். எவர் துணையுமின்றி அவன் தனியாக திரும்பி நடக்கும் சித்திரத்துடன் படம் நிறைகிறது.

'ஒரு துப்பாக்கியை உன் படைப்பில் வர்ணணை செய்திருந்தால் பின்னர் அது நிச்சயம் வெடிக்க வேண்டும்' என்கிறார் ருஷ்ய சிறுகதையாசிரியர்  ஆண்டன் செகாவ். இத்திரைப்படத்திலும் அந்தக் குடும்பம் கட்டிடடத்தின் எட்டாவது மாடியில் தங்கியிருப்பது ஆரம்பக் காட்சியில் சூசகமாக உணர்த்தப்படுகிறது. படத்தின் இறுதியில் கணவன் தற்கொலை செய்து கொண்ட  செய்தி மாத்திரமே உரையாடல்களின் மூலம் நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது. எனில் அத்தற்கொலை எவ்வாறு நிகழ்ந்திருக்க வேண்டும் என்பதை பார்வையாளன்தான் யூகிக்க வேண்டும்.

திரும்பி வந்த மனைவி உண்மையாகவே தன் குடும்பத்துடன் மீண்டும் இணைந்து கொள்ள விரும்புகிறாள். தன்னைத் தேடி வரும் காதலனையும் விரட்டியடிக்கிறாள். ஆனால் அவள் மனம் எவ்வாறு திரும்பவும் மாற நேர்கிறது என்பதை மிக இயல்பான காட்சிகளின் மூலம் சொல்கிறார் இயக்குநர். சுற்றுலா நகரில் கட்டற்ற சுதந்திரத்துடன் இரு ஆண்களுடன் சுற்றும் பெண் இவள் கண்ணில் பட்டுக் கொண்டேயிருக்கிறாள். அதில் ஒருவனும் இவளைத் தொடர்ந்தபடியே இருக்கிறான். அந்தக் குழுமத்துடன் நட்பேற்படும் சூழலும் நிகழ்கிறது. இந்நிலையில் இவளைத் துரத்தி வரும் காதலுனும் அங்கு வந்து சேர இவளுக்குள் பழையகாதல் உணர்வுகள்
சுதந்திரமாக துளிர்க்கின்றன்.

இந்த கணவன்-மனைவி உறவின் விரிசலை மோப்பம் பிடித்தபடியே அலையும் பக்கத்து வீட்டுக்காரி, அந்தக் குடும்பத்தினருக்காக மிக உண்மையாக, ஆத்மார்த்தமாக உழைக்கும் தாதி, காதலனைத் தேடிப் போகும் சகோதரியை ஆதரிக்கும் தங்கை, அவளுடைய வயதான காதலன்...என்று ஒவ்வொரு பாத்திரமும் அதற்குரிய தனித்தன்மைகளுடன் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன்.
இத்திரைப்படம் முழுவதுமே சிறுவனான பிரிக்கோவின் பார்வையிலேயே செல்கிறது. படத்தின் ஆரம்பத்திலேயே, தாய் இவனை விட்டு விலகிச் சென்றிருப்பதை அறியாமல் அந்நியச் சிறுவனோடு தன் சைக்கிளை பகிர்ந்து கொள்வதும்,  தந்தையை புண்படுத்த வேண்டாமே என்று தாயின் பொய்களுக்கு உடந்தையாக இருப்பதும், வீட்டிற்கு வரும் தாயின் காதலனை கையைப் பிடித்து கடித்து துரத்துவதும், சுற்றுலா நகரில் தன்னை விட்டு விட்டு காதலனுடன் சுற்றும் தாயை வெறுத்து தன்னந்தனியாக ஊர் திரும்ப முடிவு செய்வதும் என்று குழந்தைகளின் அகவுணர்வுகள் இவனின் மூலம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

படத்தின் ஒளிப்பதிவு குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது. நுட்பம் வளர்ந்ததின் காரணமாக நாம் இழந்தவைகளில் கறுப்பு -வெள்ளைத் திரைப்படங்களும். அட்சரம் பிசகாத துல்லியமான வண்ணத் திரைகளில் கூட கொண்டு வர முடியாத உணர்ச்சி வெளிப்பாடுகளை கறுப்பு -வெள்ளைச் சட்டகங்கள் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன.

குழந்தைகளின் உலகின் மூலம் பெரியவர்களின் அபத்த உலகைக் காண விரும்புவர்கள் தவற விடக்கூடாத திரைப்படமிது.

suresh kannan

Monday, September 27, 2010

படைப்புக் 'களவாணி'கள்

'தமிழர்களே, தமிழர்களே, என்னைக் கடலில் தூக்கிப் போட்டு விடாதீர்கள்' என்றொருவர் புலம்பும் (என்ன எழவு அர்த்தம் இதுக்கு) தொலைக்காட்சியில் ஞாயிறு காலைகளில் ஒளிபரப்பாகும் 'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சி பற்றி இந்தப் பதிவில் சமயங்களில் எழுதியிருக்கிறேன். இயன்ற போதெல்லாம் இந்நிகழ்ச்சியைப் பார்த்துவிடுவது வழக்கம். தற்சமயத்தில் இது அறிமுகச் சுற்று நிலையில் இருப்பதால் பல ஆர்வக்கோளாறான குறும்படங்களை அசெளகரியத்துடன் பார்க்க வேண்டியதிருக்கும்.

'விஷூவல் மீடியம்' என்பதின் அடிப்படையையே புரிந்து கொள்ளாமல் நிகழ்த்திக் காட்ட வேண்டியதையெல்லாம் உரையாடலிலேயே நகர்த்திச் செல்வதை இளைய தலைமுறை கூட இன்னும் கைவிடாத சோகத்தை விழுங்க வேண்டியதாயிருக்கிறது. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. நம் 'ஆஸ்கர்' கனவு இயக்குநர்கள் கூட நாலு மூலைகளிலும் ஆட்களை நிறுத்தி அவர்கள் மானாவாரியாக பேசிக் கொண்டிருப்பதை கண்ணாடி பிம்பத்திலும் காட்டிக் கொண்டிருக்கும் போது இவர்களை எப்படிக் குற்றம் சொல்ல முடியும்? இரண்டு பேர் உரையாடிக் கொண்டிருக்கும் போது ஒருவர் நகர்ந்து கேமிராவின் பக்கம் திரும்பி பேசும் அபத்தமெல்லாம் இன்னும் நடக்கிறது. யதார்த்த வாழ்க்கையில் நாம் யாரிடமாவது முதுகைக் காண்பித்து உரையாடுகிறோமா என்பதைப் பற்றிக் கூட யோசிப்பதில்லை.

சரி. இந்த நிகழ்ச்சிக்கு திரும்புவோம். இதில் நிகழ்ச்சி தொகுப்பாள பெண்மணி ஓர் எரிச்சலென்றால், நடுவர் பிரதாப் போத்தன் மகா எரிச்சல். இவர் வழாவழாகொழகொழாவென்று தம் கருத்தைத் தெரிவிப்பதற்குள் அடுத்த எபிஸோட் வந்துவிடுகிறது. மதன் பரவாயில்லை. அதீத ஆர்வக்காரர்களை அதிகம் கடுமை காட்டாமல் மிதமாக ஆனால் அழுத்தமாக தாம் சொல்ல நினைப்பதை தெரிவித்து விடுகிறார். ஏதோ ஒரு வாரத்தில் மற்ற இயக்குநர்களோடு ஒப்பிடும் போது ஒரு பெண் இயக்குநர் எடுத்த அபத்தமான குறும்படத்தை சிறந்ததாக தேர்ந்தெடுத்தார்கள். இதிலுமா இட ஒதுக்கீடு?.

26.09.2010 அன்று ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை இடையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். திகில் பட முயற்சி மாதிரி ஒரு குறும்படம் ஓடிக் கொண்டிருந்தது. சில காட்சிகளை பார்த்ததுமே, இதை எழுத்தில் எங்கோ வாசித்திருககிறோமே என்ற ஞாபகம் வந்தது. ஆமாம். ஏ.எச்.கோரி (?) என்பவர் எழுதிய 'ஹெலமெட்' என்கிற சிறுகதை அது. ஏதோ ஒரு வணிக வாரஇதழில் சில ஆண்டுகளுக்கு முன் வாசித்திருக்கிறேன். அந்தக் கதை அப்போதே என்னைக் கவர்ந்திருந்ததால் கத்தரித்து எடுத்து வைத்த ஞாபகம் கூட இருக்கிறது.


ஆவிகளுடன் பேசுவதற்கான ஆர்வமும் சற்று பயிற்சியும் உள்ள ஒருவன், அதை முயற்சித்துப் பார்ப்பதற்காக தம் நண்பர்களின் அறைக்குச் செல்வான். உரையாடலின் இடையில்தான் அன்று மாலை அவர்கள் செல்லவிருக்கிற திரைப்படத்திற்கான அனுமதிச் சீட்டுக்களை வீட்டிலேயே மறதியாக வைத்து வந்து விட்டிருப்பதை உணர்வான். ஆவிகளின் பேசக்கூடிய மீடியமான Ouija board-ஐ அங்கேயே வைத்து விட்டு 'அதைத் தொடாதீர்கள்' என்று நண்பர்களிடம் எச்சரித்து விட்டுச் செல்வான்.

ஆர்வ மிகுதியான நண்பர்கள் அதை வைத்து ஆவிகளுடன் பேச முயற்சிப்பார்கள். இரண்டு, மூன்று பிரபலமான ஆவிகளுடன் பேசிய பிறகு இன்னொரு ஆவியுடன் பேச முயற்சிக்கும் போது அது அவர்களுக்கு அது மிக நெருக்கமான நண்பன் என்கிற உணர்வைத் தரும். அனுமதிச் சீட்டு எடுக்கச் சென்ற நண்பன் தன் ஹெல்மெட்டை அங்கேயே வைத்து விட்டுச் சென்றிருப்பதை அப்போதுதான் கவனிப்பார்கள். 

.. இப்படியாகச் செல்லும் அந்தச் சிறுகதையை அப்படியே சற்று சுமாரான விஷூவல் டேஸ்டில் படமாக்கியிருந்தார் அந்த இயக்குநர். (ரவிராஜ் (?)) குறும்படத்தின் முடிவில் டைட்டில் கார்டில் நிச்சயம் ஒரிஜனல் எழுத்தாளரது பெயர் வரும் என்று ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தேன். வீட்டில் இருந்தவர்களிடம் இதைப் பற்றிச் சொல்லி என் ஞாபக சக்தியை நானே சுயபெருமையாக சிலாகித்தும் கொண்டிருந்தேன். ஆனால் டைட்டில் கார்டில் 'எழுத்து - இயக்கம்' என்று இயக்குநர் பேரே போட்டிருந்தது. இவர்தான் அன்றைய எபிஸோடின் சிறந்த படத்திற்கான விருதையும் வாங்கின ஞாபகம்.

படக்காட்சிகள், திரைக்கதை, கதை போன்றவைகளின் நகல்களுக்காகவும் திருட்டுக்காகவும்  நாம் மிகப் பெரிய இயக்குநர்கள் முதல் திட்டிக் கொண்டிருக்கிறோம். பெரும்பாலான உதவி இயக்குநர்களின் முக்கியப் பணியே இதுதான். வெளிநாட்டுப் படங்களிலிருந்தும் பழைய தமிழ்ப்படங்களிலிருந்தும் சிறந்த கதைகளை, காட்சிகளை, நகைச்சுவைகளை தம்முடைய அப்போதைய திரைப்படங்களுக்காக உருவுவது. இதில் புத்திசாலியான சில உதவி இயக்குநர்கள், தம்முடைய 'வருங்கால' இயக்குநர் படங்களுக்காக சில காட்சிகளை இயக்குநருக்கு தெரிவிக்காமல் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதும் உண்டு.

நம்மைச் சுற்றியுள்ள நிகழ்வுகளை, சமகால பிரச்சினைகளை கூர்ந்து கவனித்தாலே ஆயிரம் கதைகளை உருவாக்க முடியும். பல நல்ல தமிழ் புதினங்களை, இலக்கியங்களை திரைப்படமாக்க முடியும். ஆனால் சுயமாக சிந்திக்கத் திராணியில்லாத, நம்முடைய கலாசாரத்தை, சமூக அலவங்களை திரையில் பிரதிபலிக்க வேண்டும் என்கிற கலைஉணர்வும் பொறுப்பும் இல்லாத, வெகுஜன மக்களுக்கான போதை மாத்திரைகளையே உருவாக்குவதில் முனைப்பாயுள்ள பெரும்பாலான இயக்குநர்களும், அவர்களையொட்டி வரும் உதவி இயக்குநர்களும் டிவிடிகளையும் நூல்களையும் பிய்த்துப் பிய்த்துப் கச்சாப் பொருளாக உருவாக்கும் போது எவ்வாறு நாம் நல்ல சினிமாவை எதிர்பார்க்க முடியும்?

இந்த நிலையில் கோடம்பாக்கத்திற்குச் செல்லப் போகும்  'நாளைய இயக்குநர்'களும் ஆரம்ப நிலையிலேயே படைப்பாளிகளுக்கான உரிய மரியாதையைத் தராமல் 'யார் கவனிக்கப் போகிறார்கள்' என்று அலட்சியத்துடன் திருடத்துவங்கினால் இவர்களிடமிருந்து எந்த மாதிரியான சினிமாக்களை நாம் எதிர்பார்க்க முடியும்?

முதல் கோணல் முற்றிலும் கோணல். 

suresh kannan

Saturday, September 18, 2010

எந்திரன் - FAQ's

முந்தைய பதிவின் தொடர்ச்சிகடந்த பதிவில் நிகழ்ந்த சில விடுபடல்களுக்காக இந்தப் பதிவை எழுத நேர்ந்தது. சில கேள்விகளை பின்னூட்டத்தில் சந்திக்க நேர்ந்ததற்காகவும்.

'எந்திரன் போன்ற திரைப்படங்களை எதிர்ப்பதனால் என்ன பயன்? எப்படியும் பெரும்பாலோனோர் பார்க்கத்தான் போகிறார்கள். அப்புறம் ஏன் இந்த வீண் வேலை? யார் உங்களை கவனிக்கப் போகிறார்கள்?

'இவிடம் ஸ்வர்க்கமானு' என்கிற மலையாளத் திரைப்படத்தை சில நாட்களுக்கு முன் பார்த்தேன். தன்னுடைய பூர்வீக விவசாய நிலத்தை அரசியல் குண்டர்களிடம் இழந்து விடாமலிருக்க பேராடுபவராக மோகன்லால் நடித்திருப்பார்.

சட்ட ரீதியான உதவிக்காக இடதுசாரி சிந்தனையுள்ள நியாயமான வழக்குரைஞரை (ஸ்ரீனிவாசன்)  அணுகுவார் மோகன்லால். அவசரப் பணிக்கிடையிலும்  சமூகப் பிரச்சினை ஒன்றிற்காக  தெருமுனைக் கூட்டத்தில் உரையாற்றி விட்டுத் திரும்புவார் ஸ்ரீனிவாசன். அதுவரை நிலைகொள்ளாமல் தவிக்கும் மோகன்லால் கேட்பார்.

"நீங்கள் உரையாடியதை தெருவில் கடந்து செல்வோர் ஒருவர் கூட கவனித்தாகத் தெரியவில்லையே?"

"நெறைய பேர் கவனிக்கணும்னா நான் காபரே பிஸினஸ் நடத்தப் போயிருக்கணும்"
 

சற்று இடைவெளி விட்டுச் சொல்வார் ஸ்ரீனிவாசன்.

"இதோ பாருப்பா. நான் கூட்டத்தை கூட்டி கைத்தட்டு வாங்கறதுக்காக இதைச் செய்யல. எனக்கு இந்தச் சமூகத்திடம் உரக்கப் பேச வேண்டியிருக்கு. தன்னைச் சுற்றி நடக்கிற எந்தவொரு சமூகக் கொடுமையையும் காணாமல் இதுவரை தன்னுடைய சுயநலத்துக்காக மாத்திரமே யோசிக்கறவன்ல ஒரே ஒருத்தன் கூட ஒரு நிமிஷம் சிந்திச்சா கூட அது எனக்குக் கிடைச்ச வெற்றி."

அவ்வளவுதான் விஷயம்.

இந்தச் சமூகச் சொரணை ஏறக்குறைய பெரும்பாலோனோருக்கு இருக்கும். பலருக்கு இதைப் பற்றி பேச விருப்பமிருக்காது. பேசி என்ன ஆகப் போகிறது என்று சிலருக்கு அலுப்பாயிருக்கலாம். சிலர் தேர்தல் நேரங்களின் போது மாத்திரம் தங்களின் எதிர்ப்பை தெரிவிப்பார்கள். பேசுவதற்கு அஞ்சி எப்போதும் மெளனமாயிருப்பவர் பலர். நடப்பதை மெளன அவதானிப்புடன் காலம் கழிப்பவர் சிலர். இவர்களுடன் கூட 'அறியாமைதான் பேரின்பம்' என்றும் கண்டும் காணாமலும்  போகிறவர்களுக்காக இப்படி மறுபடியும் மறுபடியும் உரையாடத்தான் வேண்டியிருக்கிறது. எல்லா நீதி நியாங்களும் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டு விட்டன. என்றாலும் சமூக அநீதிகளின் சதவீதம் மேன்மேலும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. எனவேதான் இவற்றை நினைவுப்படுத்துவதற்காகவாவது இதைப் பேசவேண்டியிருக்கிறது. எனக்குக் கிடைத்த ஆயுதம் இந்த எளிய எழுத்து. பெரும்பாலான அச்சு ஊடகங்கள் அதிகாரத்திற்கு வால் பிடிக்கும் பணியைச் செய்து கொண்டிருப்பதால் அங்கு இம்மாதிரியான கட்டுரைகளை கனவிலும் எதிர்பார்க்க முடியாது.

சமூகத்தின் மற்ற துறைகளை விட தனிப்பட்ட வகையில் நான் நேசிக்கும் சினிமாத்துறையில் நிகழும் அநியாயங்களும் 'நான் புழங்கும் மொழியிலும் பிரதேசத்திலும் நல்ல சினிமா வர வேண்டும்' என்கிற ஆதங்கத்திலும் இவ்வாறான கட்டுரைகளை மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

வணிக சினிமாவினால் பலநூறு மக்களுக்கு வேலைவாய்ப்பும் பணமும் அரசிற்கு வருமானமும் கிடைக்கிறது. அதைத் தடுக்க நினைப்பது முட்டாள்தனம்தானே? 

இது ஆண்டாண்டு காலமாக பொதுப்புத்தியில் அழுத்தமாக உறைந்து நிற்கும் சிந்தனையும் கேள்வியும்தான். சினிமா கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னால் இதே மக்கள் வேலைவெட்டி எதுவுமில்லாமல் இருந்தார்களா? மேலும் பல்லாயிரக்கான மக்களுக்கு வருமானம் கிடைக்குமென்றால் மதுக்கடைகளைப் போல போதை மருந்து, உயிர்காக்கும் மருந்துகளில் கலப்படம் உள்ளிட்ட பல சட்டரீதியான குற்றங்களுக்கு அனுமதி கொடுத்து விட்டால் இன்னும் பல நபர்களுக்கு வேலை வாய்ப்பும் வருமானமும் கிடைக்குமே என்பதற்காக அதை ஆதரிக்க முடிவு செய்வோமா?

மேலே குறிப்பிட்டிருக்கும் உடல்ரீதியான ஆபத்தை ஏற்படுத்தும் அபாயங்களை விட ஒட்டுமொத்த சமூகத்தின் மனதை பாழ்படுத்தும், சிந்தனைகளை காயடிக்கும், அதிகார, முதலாளி வர்க்கத்தினரின் எந்தவொரு ஊழல்களைப் பற்றியும் யோசிக்க விடாமல் மயக்கத்திலேயே ஆழ்த்தி வைக்கும் வணிக சினிமா என்பது மிகக் கொடுமையான போதை மருந்திற்கு நிகரானது என்பதை நாம் அறிவோம்தானே?

தமிழ்பெயரில் தலைப்பு  வைத்தால் வரிவிலக்கு என்கிற அபத்தமான கொள்கைக்காக பல கோடி ரூபாய் வரிகளை இழக்கும் அரசு ஒருபுறமெனறால் இதுபோன்ற மிகை எதிர்பார்ப்பு படங்களின் மூலம் அதிகம் சம்பாதிப்பது நடிகர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் தவிர இடைத்தரகர்களும் கள்ள அனுமதிச் சீட்டை மறைமுகமாக ஊக்குவிக்கும் திரையரங்கு உரிமையாளர்களும்தான். சினிமா தொழிலாளர்களும் இந்த வணிகத்தைச் சார்ந்திருப்பவர்களும் அல்ல. இது போன்ற,  வணிகத்தை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்டு தயாரிக்கப்படும் திரைப்படங்களை நாம் புறக்கணிக்கத் துவங்கி அதே சமயம் சிறப்பாக உருவாக்கப்படும் நல்ல திரைப்படங்களை ஆதரிக்கத் துவங்கினால், 'வாடிக்கையாளர்களே முதலாளிகள்' எனும் தத்துவப்படி தயாரிப்பாளர்களும் நல்ல படங்களைத் தயாரிக்க முன்வருவார்கள். இதைச் சார்ந்திருக்கும் தொழிலாளர்களுக்கும் எவ்வித பாதிப்பும் நேராது. எனவே இதற்கான தீர்வு நம்மிடம்தான் உள்ளது.

இம்மாதிரியான படங்களில் ஹாலிவுட் தரத்திற்கான நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான நபர்களின் உழைப்பு உள்ளது. ஏன் இதை கொச்சைப்படுத்துகிறீர்கள்? 

அசோகமித்திரன் தொடர்பான விழா ஒன்றில் சுந்தரராமசாமி பேசும் போது "நூற்றுக்கணக்கான நூற்களை எழுதியிருக்கும் வணிக எழுத்தாளர்களை ஏன் புறக்கணிக்க வேண்டும். அவற்றின் பின்னேயுள்ள உழைப்பை நீங்கள் கவனிக்கக்கூடாதா' என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களை நாம் 'உழைப்பாளர் தினத்தன்று கொண்டாடுவோம்' என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். ஆயிரக்கணக்கான அபத்த நாவல்களை எழுதிய காரணத்திற்காக ஒரு க்ரைம் நாவலாசிரியரையோ, தாள்களை கருப்பாக்கி நூற்றுக்கணக்கான கவிதை நூல்களை எழுதிக் குவிக்கும் ஒரு கவிஞரையோ, அவற்றின் பின்னேயுள்ள உழைப்புக் கருதியாவது அவற்றை நாம் கொண்டாட வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்று வாதிட்டால் அது எத்தனை அபத்தமாக இருக்கும்? கள்ளச் சாராயம் காய்ச்சுபவனிடத்திலும் சிறுமிகளை கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் சமூக விரோதிகளிடம் கூடத்தான் அதிக உழைப்பும் ரிஸ்க்கும் உள்ளது. அந்த காரணங்களுக்காக அதைப் பாராட்ட முடியுமா?

குறிப்பிட்ட உச்சநடிகரின் படம் வரும் போது மாத்திரம் ஏன் இத்தனை எதிர்ப்பு? மற்ற படங்கள் வரும் போது மட்டும் ஏன் மெளனம் சாதிக்கிறீர்கள்?

உலகத்தின் இதுவரை எத்தனையோ படுகொலைகளும் மனித உரிமை மீறல்களும் நிகழ்ந்திருந்தாலும் அதன் உச்சமான யூதப்படுகொலைகளைப் பற்றியும் ஜப்பான் அணுகு்ண்டு கோரத்தையும் பற்றி பல ஆண்டுகள் கழிந்தும் நாம் துக்கத்துடனும் கோபத்துடனும் உரையாடுகிறோம். ஏன்?

மேலும் தமிழகத்தைப் பொறுத்த வரை வணிகச் சினிமா ஏற்படுத்தும் சமூக நாசத்தைப் பற்றின உரையாடல்கள் இன்றோ, நேற்றோ அல்லது இது போன்ற உச்ச நடிகர்கள் படம் வெளிவரும் போதோ மாத்திரம் நிகழ்வதில்லை. சிற்றிதழ்களும் சினிமா ஆர்வலர்களும் சமூக அக்கறை உள்ளவர்களும் தொடர்ந்து இதிலுள்ள அபாயங்களைப் பற்றி உரையாடிக் கொண்டிருக்கின்றனர். 1980-களில் தமிழ் சினிமா ஒரு மறுமலர்ச்சி யதார்த்த அலையில் பயணிக்கத் துவங்கியது மேற்குறித்த அணுகுண்டுக்கு இணையாக ஏவிஎம் நிறுவனம் 'சகலகலா வல்லவனை' எறிந்து சூழலை மாசுபடுத்தியோடு அந்தப் போக்கையே அடியோடு தகர்தத்தை சினிமா விமர்சகர்கள் இன்றும் ஆதங்கத்தோடும் கொதிப்போடும் பேசுகிறார்கள். எனவே இவ்வாறான உரையாடல்கள் தொடர்ந்து கொண்டிருப்பது அவசியமாகிறது.

இந்த எதிர்ப்பின் பின்னணியில் உள்ள அரசியல்தான் என்ன?

முந்தைய பதிவுகளிலேயே இதை தெளிவுபடுத்தி இருக்கிறேன். எந்தவொரு தனிபட்ட நபரையோ, நடிகரையோ, படைப்பாளியையோ, குழுமத்தையோ, நிறுவனத்தையோ, அரசியல் கட்சியையோ தாக்கும் எண்ணம் எனக்குக் கிடையாது. என்னுடைய இலக்கு முழுவதும் இதற்குக் காரணமாக உள்ள அமைப்பின் மீதும் அதன் பின்னணியின் மீதும் அதற்கான சமூகக் காரணங்களின் மீதுதான். காலவர்த்தமானங்களைத் தாண்டி சில நபர்களால் இந்த உரையாடல் தொடர்ந்து கொண்டுதானிருக்கும். இது தொடர்பான சமகால நிகழ்வு 'எந்திரன்' என்பதால் இந்த எதிர்ப்பும் கலகமும் அவசியமாகிறது.

இம்மாதிரியான படங்களை குறிவைத்து எழுதுவதின் மூலம் தளத்தின் மீதான கவனமும் ஹிட்டும் அதிக கிடைக்கும் என்பதுதானே  நோக்கம்?

பதிவின் ஆரம்பத்தில் நடிகர் ஸ்ரீனிவாசன் குறிப்பிட்ட அதே விஷயம்தான். ஹிட் கிடைப்பதும், அதிக பார்வையாளர்களை ஈர்ப்பதும், அதன் மூலம் ஆதாயம் பெற நினைப்பதும்தான் என்னுடைய நோக்கம் என்றால், கவர்ச்சியான புகைப்படங்களை இணைத்தும், இணையத்தில் பரவலாக கிடைக்கும் ஆபாச நகைச்சுவைகளை மொழிபெயர்த்தும், பின்னூட்டம் போடுபவர்கள் முதல் அச்சுப் பத்திரிகை முதலாளிகள், எழுத்தாளர்கள் வரை அனைவரையும் அகமகிழச் செய்தும் அதை நிறைவேற்றிக் கொள்ள முடியும். அதை நான் செய்வதில்லை என்பதை என் பதிவை வாசிக்கும் மனச்சாட்சியுள்ள வாசகர்கள் ஒப்புக் கொள்வார்கள்.

இதெல்லாம் நான் ஏதோ 'ரூம்' போட்டு யோசித்து எழுதினவை அல்ல. இங்கிருந்து எடுக்கப்பட்டவை இங்கேயே பகிரப்படுகிறது. கேள்விகள் தொடர்ந்தால் பதில்களும் தொடரலாம். :-)

suresh kannan

Friday, September 17, 2010

சினிமாவில் வணிகம் தவறா?

  • இந்தியாவில் எத்தனையோ வணிக முதலாளிகள் சிறுஅளவில் இருந்து இன்று உயர்ந்த நிலைக்குப் போயிருக்கிறார்கள். 'எந்திரன்' முதலாளிகளின் மீது மட்டும் ஏன் இத்தனை காழ்ப்புணர்ச்சி?
  •  சினிமாவின் மூலம் சம்பாதிப்பது அத்தனை பெரிய தவறா? ஏவிஎம் முதல் ஆர்.பி.செளத்ரி வரை யாரும் செய்யாததையா எந்திரன் முதலாளிகள் செய்து விட்டார்கள்? 
  • ஏன் எந்திரன் போன்ற திரைப்படங்களுக்கும் ரஜினி போன்ற வணிக கதாநாயகர்களுக்கும்  மட்டும் இத்தனை எதிர்ப்பு?
  •  நீ உன் சொந்த வாழ்வில் அத்தனை யோக்கியமானவனா? இவர்களைக் கேள்வி கேட்க உனக்கு என்ன அருகதை?
  • என்னுடைய பணம். என்னுடைய மகிழ்ச்சிக்காக அதை செலவு செய்வதில் உனக்கு ஏன் இத்தனை எரிச்சல்?

இந்த மாதிரியான கேள்விகள் பல விதங்களில் தொனிகளில் இணையத்திலும் பொதுப்புத்திகளிடமிருந்தும்  எழுப்பப்படுவதைக் காண்கிறேன். இதற்கான விடை பலருக்குத் தெரிந்திருந்தும்  நடிகர்களின் மீதுள்ள கண்மூடித்தனமான அபிமானத்தால் சிலரும்  வலதுசாரி சிந்தனைக்காரர்கள் பலரும் தெரியாதது போல் பூசி மெழுகிறார்கள். அவர்களை விட்டுவிடுவோம். இதிலுள்ள அபாயம் குறித்த அறியாமையுடன் ஒரு பெரும் சமூகமே இருக்கிறது. அதற்காகத்தான் இந்தப் பதிவு.

இனி..

உலகமயமாக்கம், தாராளமயமாக்கம் போன்ற கொள்கைகளை ஏற்றுக் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் பணம் என்பது ஒரு மதமாகவே ஆகி விட்டது. நம்மைச் சுற்றி நிகழும் பொருளாதாரச் சமநிலையின்மையை நாம் கண்டும் காணாமல் இருக்கிறோம். ஒரு கிலோ தக்காளியை ரூ.50/- அநியாய விலை கொடுத்து நான் வாங்கும் போது அதே விலையைச் சந்திக்க நேரும் வறுமைக் கோட்டிற்கு கீழேயுள்ள மக்கள் என்ன செய்வார்கள் என்று எனக்கு மனம் பதைக்கிறது. அடுத்த வேளை உணவிற்காக போராடும் பெரும்பான்மையான சதவீதத்திற்கு மத்தியில் ஒரு திருமணத்திற்காக பல கோடி ரூபாய் செலவு செய்வதும் இங்கு நிகழ்கிறது. தனது நீண்ட கால லட்சியமான சொந்த வீட்டிற்காக ஒருவன் தன் வாழ்நாளையே வங்கியில் அடமானம் வைக்கும் போது மறுபுறம் ஒரே ஒரு குடும்பம் மாத்திரம் தங்க ரூ.2000 கோடியில் மாளிகை கட்டப்படுகிறது. சர்வதேசவிளையாட்டுப் போட்டி என்ற பெயரிலும் தொலைத்தொடர்புத் துறையை மேம்படுத்துவது என்ற பெயரிலும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் ஊழலாக சுரண்டப்படுகின்றன. ஆனால் இத்தனையையும நாம் வெற்று அரட்டைப் பேச்சுகளின் மூலம் கடந்து வருகிறோம். சமூகத்தின் குறிப்பிட்ட சதவீதத்தினருக்கே இது குறித்த மனப்புழுக்கமும் கோபமும் மிகத் தீவிரமாக இருக்கிறது.

இத்தனை நொட்டு, நொள்ளை சொல்கிறாயே, நீ என்ன புரட்சி செய்து விட்டாய்? என்ற தொனியில் சில பின்னூட்டங்களையும் தனிமடல்களையும் காண்கிறேன். வெளிப்படையாகவே ஒப்புக் கொள்கிறேன். நான் ஒரு நடுத்தர வர்க்கக் கோழை. அதிகாரத்தின் மூர்க்கத்திற்கு எதிராக களத்தில் இறங்கி ஒரு துரும்பைக் கூட என்னால் கிள்ளிப் போட முடியாது. ஆனால் அதற்காக என்னுடைய சமூகக் கோபங்களை சந்தேகப்படுவதையோ போலி என்று நையாண்டி செய்வதையோ அந்த அளவிலான நேர்மையை சந்தேகப்படுவதையோ நான் வெறுக்கிறேன். என்னால் இயன்றதெல்லாம் இணையம் தந்திருக்கும் இந்தச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி என்னுடைய ஆற்றாமைகளைக் கொட்டுவதுதான். இந்த மனநிலையில்தான் பல இணைய நண்பர்களும் இருக்கிறார்கள் என்பதறிவேன்.

ஆனால்...

இந்த அடிப்படை அறவுணர்ச்சி கூட இல்லாமல் வணிக முதலாளிகளையும் சினிமா நாயகர்களையும் நியாயப்படுத்தி எழுதப்படும் சப்பைக்கட்டுகள் எரிச்சலையே உண்டு பண்ணுகின்றன.

ஏவிஎம் முதற்கொண்டு அம்பானி வரை இன்று வணிகத்தில் கொடிகட்டிப் பறக்கிறார்கள் என்றால் சிறிய அளவிலிருந்து சதவீதம் சதவீதமாக இன்று தங்களின் வளர்ச்சியை எட்டியிருக்கிறார்கள். இதற்காக அவர்களை நியாயவான்களாக முன்நிறுத்த முயற்சிக்கவில்லை. வணிகத்தில் நிகழும் எல்லா சமரசங்களையும் தில்லுமுல்லுகளையும் ஏமாற்று வேலைகளையும் தங்களின் பணபலத்தின் மூலம் அதிகார இயந்திரத்தின் முக்கிய பகுதி முதல் கடைசி உதிரிபாகம் வரை மகிழ்ச்சி்ப்படுத்திதான் அந்த உச்ச நிலையை சாதித்திருப்பார்கள்.ஆனால் சமகால தமிழகத்தில் குறிப்பாக ஊடகத்துறையில் நடப்பதென்ன? ஒரு குறிப்பிட்ட அரசியல் குடும்பத்தின் வாரிசுகள் பெரும்பான்மையான ஊடகத்துறையை அதிகார பலத்தின் துணைகொண்டு எளிதில் கையகப்படுத்தியிருக்கிறார்கள். நான் முழு நூறு ரூபாய் நோட்டை கண்ணால் பார்த்ததே சுமார் ஏழு வயதில்தான். ஆனால் இன்று அந்தக் குடும்பத்தின் 25 வயது இளைஞன் கூட பலகோடி ரூபாய் முதலீட்டில் திரைப்படம் தயாரிக்க முடிகிறது. எப்படி இது சாத்தியமாயிற்று? ஓர் அரசியல் தலைவரின் அதிகார பலத்தின் துணையுடன் அவரைச் சுற்றியுள்ள நண்டு, சுண்டுகள் எல்லாம் இன்று கோடீஸ்வர அந்தஸ்துடன் உலவுகின்றன. இது கூட பெரிய விஷயமில்லை. எல்லா வணிக முதலாளிகளின் வாரிசுகளுககும் இந்த வாய்ப்புண்டு. ஆனால் இதிலுள்ள முக்கியமான ஆபத்து என்னவென்றால் பொதுமக்களுக்கு சேவை செய்ய அமைக்கப்பட்டிருக்கும் எந்தவொரு பதவியையும் அரசியல் பேரங்களின் மூலம் எளிதில் பெற்று  அதன் மூலம் தாம் நினைப்பதையெல்லாம் ஒரே நாளில் சாதிக்க முடிவது என்பதுதான்.

எந்திரன் முதலாளிகளும் அவர்களின் கூட்டாளிகளும்  இன்று ஒட்டுமொத்த சினிமாத்துறையைக் கைப்பற்றியுள்ளனர். சினிமா மாத்திரமல்ல தொலைக்காட்சி, பத்திரிகை, வானொலி என்று ஒட்டுமொத்த ஊடகத்துறையையுமே சக போட்டியாளர்களை மிரட்டி அப்புறப்படுத்தி ஆட்சி செய்கின்றனர். இதன் மூலம் அவர்கள் நினைக்கும் 'செய்தியை' உருவாக்கி அதுதான் உண்மை என்று சமூகத்தை நம்ப வைக்க முடியும். இதிலுள்ள அபாயம் நமக்குப் புரிகிறதா இல்லையா? இந்த அபாயத்தினால்தான் இது போல் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கே ஊடகத்துறையின் பல பிரிவுகளுக்கான அனுமதி தருவது சில மேற்கத்திய நாடுகளில் மறுக்கப்படுகிறது. ஆனால் இதற்கும் ஒரு குறுக்கு வழியை கண்டுபிடித்துவிடுவார்கள் நம் அரசியல் விஞ்ஞானிகள்.

இது போல் மற்ற துறைகளில் பொருளீட்டுவதற்கும் கலைத்துறைக்கும் பெரிய வித்தியாசமுண்டு. அதிலாவது சமூகத்திற்கு நியாயமாக சென்று சேரவேண்டிய பொருள் பறிபோகும் அபாயம் மாத்திரமேயுண்டு. ஆனால் கலைத்துறையை கைப்பற்றுவதன் மூலம் ஒரு சமூகத்தின் சிந்தனையை, அடையாளத்தை, கலாச்சாரத்தை, சுயயோசிப்புத் திறனை கைப்பற்ற முடியும். ஒரு குறிப்பிட்ட நிறுவனம் தரும் செய்தியைத்தான், சினிமாவைத்தான், பொழுதுபோக்கைத்தான், நூலைத்தான், சிந்தனையைத்தான் நாம் பெற முடியும் என்பது எத்தனை அபாயகரமான சூழல்?.

'எந்திரன்' திரைப்படத்தின் மூலம் தமிழக மக்களின் மீது ஒரு கலாச்சாரப் போரே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒரு பொய்யை மறுபடியும் மறுபடியும் சொன்னால் அதை உண்மையாக்கி விடலாம் என்கிற தத்துவப்படி அதைப் பற்றியான மிகைச் செய்திகளை ஊதிப் பெருக்கி தொடர்ந்து மூளைச் சலவை செய்யப்படுகிறது.. இதற்கு 'சமூகத்தைக் காக்க வந்த அவதாரமாக' பாவனை செய்யும் வணிகக் கதாநாயகர்கள் முதல் பெரும்பாலான சினிமாத் துறையினர் வரை ஆதாயம் கருதியோ இதை வெளிப்படுத்த முடியாத கொதிப்புடனோ துணை போகின்றனர்.

இது ஒரு மோசமான சூழல். இந்த அபாயங்களுக்காகத்தான் இத்திரைப்படத்தை நாம் புறக்கணிப்பதும் எதிர்ப்பதும் நம் சமூகக் கடமையும் பொறுப்புமாகிறது. இந்நிலை தொடரும் பட்சத்தில் சிறு முதலீட்டுத் திரைப்படங்களும் புதிய முயற்சிகளும் தமிழ் சினிமாவில் சாத்தியமேயில்லாமல் போய்விடும். உலகத்திலேயே இரண்டாவது இடத்தில்  ஹாலிவுட்டுக்கு அடுத்தபடியாக சினிமா தயாரிக்குமிடத்தில் இருக்கும் இந்தியா, தர அடிப்படையில் சர்வதேச அரங்குகளில் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கும் நிலைக்குக் கூட அனுமதிக்கப்படாமல் போகும் அவமானகரமான சூழ்நிலைக்குத் தள்ளப்படும்.

ஒரு சினிமா ஆர்வலனாக இதை உங்கள் முன்வைப்பது என் கடமையும் விருப்பமும். முன்பொருமுறை  டிவிட்டரில் நான் சொன்னதுதான். ஊடகங்களில் வணிகம் பிழையில்லை. ஒட்டுமொத்த ஊடகமே வணிகமாக மாறுவது ஆபத்து. இதைத்தான் இந்தப் பதிவில் சொல்ல முயன்றிருக்கிறேன். இதை ஒரு குறிப்பிட்ட அரசியல் குடும்பத்தின்  மீதான தாக்குதலாகவும் பொச்சரிப்பாகவும் திசை திருப்பாமல் அதிகாரத்தையும் சமூகச் சிந்தனைகளையும் மூர்க்கமாக கைப்பற்ற முயலும் எந்தவொரு சக்திக்கும்  எதிரானதாக பாவித்து வாசிக்க வேண்டுகிறேன்.

இதிலுள்ள சிறு பிழைகளைப் புறக்கணித்து என் ஆதங்கம் குறித்தான ஆதார மையத்தைப் பற்றி உரையாடுமாறும் வேண்டுகிறேன்.

தொடர்புடைய பதிவு:

சிவாஜி திரைப்படம் தோற்க வேண்டும்

suresh kannan

Tuesday, September 14, 2010

எந்திரன்: மார்க்கெட்டிங் மாயாஜாலமும் பலியாடுகளும்


 'எந்திரன்' திரைப்படத்தைப் பற்றிய எந்தவொரு விஷயத்தையும் திரைவெளியீட்டிற்கு முன்னால் எழுதக்கூடாது என்று முடிவு செய்து வைத்திருந்தேன். இந்த முடிவு, முன்னர் எழுதிய 'எந்திரன் இ(ம்)சை-யை குறைகூறியும் பழித்தும் வந்த பின்னூட்டங்களுக்காகவும் பதிவுகளுக்காகவும் அல்ல. இணையப் பெருவெளியில் இம்மாதிரியான அபத்தங்களை சந்திப்பது புதிதல்ல. இதைத் தயாரிக்கும்  நிறுவனத்தைப்  போன்றே நாமும் இதைப் பற்றி தொடர்ந்து உரையாடி இதற்கு இன்னமுமான கவனக்குவிப்பை ஏற்படுத்த வேண்டுமா என்று தோன்றியது.

என் பதிவுகளை திறந்த மனதுடன் தொடர்ந்து வாசிப்பவர்களுக்குத் தெரியும். நான் வணிக நோக்கில் எடுக்கப்படும் அரைத்த மாவுத் திரைப்படங்களுக்கும் ஓவர்மசாலா குப்பைகளுக்கும் எதிராக தொடர்ந்து எழுதி வருவது. சிலரின் கூப்பாடுகளையும் அறைகூவல்களையும் கருத்தில் கொண்டு இதை நிறுத்தி விடக்கூடாது என்பது என் உறுதியான திடமான நிலைப்பாடு. இது ஒரு வகையான சமர். தூயக் கலைக்கும் தந்திர வணிகத்திற்கும் ஆண்டாண்டு காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் போர். தொடர்ந்து இப்படி எழுதுவதின் மூலம் 'நல்ல சினிமா' எதுவென்றும் 'மோசமானது' எதுவென்றும்  தொடர்ந்து சீண்டிக் கொண்டேயிருப்பதின் மூலம் ஒரே ஒரு  வெகுஜன ரசிகனுக்காவது புரிய வைத்து விட முடியாதா என்கிற பொதுநல ஆதங்கம்தான் இத்தனை எதிர்ப்பிற்கிடையிலும் என்னை எழுதச் செய்கிறது. அறிந்தே சாக்கடையில் வீழ்ந்து வீம்புக்காக விவாதிப்பவனை ஒன்றும் செய்ய இயலாது. அவ்வாறான இருப்பைக் கூட உணர்ந்திராதவர்களிடம் சற்றாவது சலனத்தை ஏற்படுத்தி விட முடியுமா என்பதே இவ்வாறான பதிவுகளின் நோக்கம்.

தொடர்ந்து ரஜினியைப் பற்றியே குறிவைத்து எழுதுவதாக சில நண்பர்கள் தங்களின் ஆட்சேபங்களை இதற்கு முன்னர் தெரிவித்திருக்கின்றனர். ஒரு சாதாரணனான எனக்கு இன்றைய தமிழ் சினிமாவின் ராஜாவான ரஜினியின் மீது தனிப்பட்ட துவேஷம் இருப்பதற்கு எவ்வித காரணமும் இருக்க முடியாது.

ரஜினி என்கிற பிம்பம்  இன்றைய வணிக சினிமாவின் உச்சநிலைக் குறியீடு. அந்த பிம்பத்தின் மீதுள்ள அசட்டுப் பிரேமையை தகர்ப்பதுதான் என் நோக்கமே ஒழிய ரஜினி என்கிற தனிநபரைத் தாக்குவதல்ல. வருங்காலத்தில் அந்த உச்ச நிலையில் ரஜினிக்கு மாற்றாக இன்னொரு பிம்பம் அமையும் போதும் என் இலக்கு அதன் மீதுதான் இருக்கும்.

சரி பதிவின் தலைப்பு தொடர்பான சமாச்சாரத்திற்கு வருவோம்.

ஒரு திரைப்படத்தின் டிரைய்லர் வெளியீட்டிற்காக இத்தனை பரபரப்பும் ஆரவாரமும்  ஏற்படுவது அல்லது 'ஏற்படுத்தப்படுவது' இதுதான் முதன்முறை என நினைக்கிறேன். இது பெருமை கொள்ள வேண்டிய விஷயமல்ல. மாறாக சமூகப் பொறுப்புணர்வுள்ள அனைவருமே வெட்கப்பட வேண்டிய விஷயம். சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம், தம்மிடமுள்ள மிகப் பெரிய பலமான ஊடகங்களின் துணையோடு இந்தப் பரபரப்பை அதிக பட்சமாக ஊதிப் பெருக்குகிறது. ஏற்கெனவே கள் குடித்த குரங்குகளாய் ஆடும் ரசிகப்பட்டாளம், இந்தப் பரபரப்பின் பின்னுள்ள வணிகத் தந்திரங்களை அறியாமல் விட்டில் பூச்சிகளாய் வந்து நெருப்பில் விழுகிறது.

டிரைலர் திரையிட்டதை பரபரப்பாக்கி, அதை ஒரு நிகழ்ச்சியாக ஒளிபரப்பி அதன் மூலம் விளம்பர வருவாயை நிரப்பிக் கொண்ட அந்த நிறுவனத்தின் வணிகத் திறமையைக் குறித்து வியக்காமல் இருக்க முடியவில்லை. அவர்களைக் குறை கூறி பயனில்லை. இயலுமானால் தங்களின் வணிகத் தந்திரங்களின் மூலம் மலத்தைக் கூட அழகான பாக்கிங்கில் இட்டு அதற்கு ஒரு நடிகரை விளம்பரத் தூதுவராக நியமித்து தொடர்ந்த விளம்பரங்களின் மூலம் மூளைச்சலவை செய்து அதை சாப்பிட்டால் தாதுவிருத்தி பெருகும் என்றோ தொப்பை கரையும் என்றோ சிவப்பழகு கூடும் என்றோ கூட நம்பச் செய்து விடுவார்கள். உலகமயமாக்கத்தின் போலி பளபளப்பிற்கிடையில் நுகர்வோர்களாகிய நாம்தான் அதிக விழிப்புடன் இருக்க வேண்டியிருக்கிறது.

`ஹாலிவுட்' திரைப்படங்களின் தரத்திற்கு நிகராக தயாரிக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு தொடர்பான நிகழ்ச்சியை அவர்களின் தொலைக்காட்சியிலேயே கண்டு மகிழ்ந்தேன். இது போன்ற அபத்தமான பொருளற்ற வாக்கியங்களை ஒருவேளை காண நேரும் ஹாலிவுட் தயாரிப்பாளரோ அல்லது இயக்குநரோ என்ன நினைப்பார் என்பதை யூகிக்க நகைப்பாக இருக்கிறது.

ஒர் அரசியல் குடும்பத்தினரிடம் ஒட்டுமொத்த ஊடகத்துறையும் சிக்கிக் கொள்ள நேர்ந்தால் என்ன நேர வேண்டுமோ அதுவே அந்த விழாவில் நேர்ந்தது. ஒருவர் விடாமல் அனைவருமே இத்திரைப்படத்தை 'வாராது வந்த மாமணி' என்கிற நோக்கில் புகழ்ந்து தள்ளினார்கள். வழக்கமாக இம்மாதிரியான செயற்கையான ஆதாய  நோக்கு புகழ்  புளகாங்கிதகளுக்கிடையில் 'சற்றாவது அறிவுப்பூர்வமாக பேசுகிறார்' என நான் அவதானித்து வைத்திருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் பேரரசுவின் திரைப்படங்களைப் போன்று கோமாளிகளின் உச்சமாக நின்றது மிக அவலமாக இருந்தது.

அந்த நிகழ்ச்சியைப் பாராதவர்களுக்காக இதை எழுதுகிறேன்.

'இணையத்தில் வந்த செய்தியாக' இதைக் குறிப்பிட்டு வைரமுத்து பேசினார். நகைச்சுவைத் துணுக்கிற்கும் செய்திக்கும் உள்ள வித்தியாசம் தெரி்ந்தும் மற்றவர்களை விட அதிகமாக புகழ்ந்து கைத்தட்டல் வாங்க விரும்பி விட்ட வைரமுத்து இதிலுள்ள  நெருடலை பொருட்படுத்தியிருக்க மாட்டார் என்பது நாம் அறிந்ததுதான்.

அமிதாப்பச்சனும் ரஜினிகாந்த்தும் அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு சென்றிருந்தார்களாம். அமிதாப்பை அடையாளம் கண்டுகொள்ளாத அதிபர் ஒபாமா, ரஜினிகாந்த்தை அழைத்து 'வாருங்கள், தேநீர் அருந்தலாம்' என்றாராம். அமிதாப்பிற்கு ஆச்சரியமாய்ப் போயிற்றாம். இது கூட பரவாயில்லையாம். வாடிகன் நகருக்கு இவர்கள் இருவரும் சென்ற போது 'போப்பும்' ரஜினிகாந்த்தை மாத்திரம் மேடைக்கு அழைத்து விசாரித்தாராம். அமிதாப் மயங்கியே விழுந்து விட்டாராம். அவர் மயங்கி விழுந்தததிற்கு காரணம் போப் ரஜனிகாந்த்தை அறிந்து வைத்திருந்தது அல்ல. அமிதாப்பிற்கு பக்கத்திலிருந்த ஒரு நபர் அமிதாப்பிடம் "மேடையில் நின்றிருப்பவர்களில் ஒருவர் ரஜினிகாந்த் என்று தெரிகிறது. மற்றவர் யார்?" என்று கேட்டாராம். பாவம், போப்பை இதை விட நுட்பமாக ஒருவர் அவமானப்படுத்தி விட முடியாது.

இது ஒரு நகைச்சுவைத் துணுக்கு என்பதை வைரமுத்து வெளிப்படுத்தியிருந்தாலாவது மன்னித்துவிடலாம். ஏதோ பிபிசி செய்தி நிறுவனத்தின் இணைய தளத்திலேயே வந்த செய்தி என்கிற நோக்கில் வைரமுத்து கூறியதுதான் மகா எரிச்சலாக இருந்தது. இவரே இப்படி எனும் போது பார்த்திபன், விவேக்  உள்ளிட்ட மற்ற கோமாளிகளைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

மற்றபடி 'இந்த டிரைலரைக் காண காலை ஐந்து மணிக்கே விழித்துக் கொண்டேன்' 'இதைப் பார்க்காமல் கக்கா வராது போலிருக்கிறது' என்கிற சக நடிகர்களின் உற்சாக பொய்களைக் காண நகைச்சுவையாக இருந்தது.

வழக்கம் போலவே நடிகரின் ரசிகர்கள் இந்த வரலாற்று நிகழ்வை கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள். கட்அவுட்களின் மீது பாலாபிஷேகம், டிரைலர் படப்பெட்டிக்கு அம்மன் கோவிலில் பூசை, யானை மேல் ஊர்வலம்.. என்று ஒரே அமர்க்களம்தான். இதற்கு மேல் யோசிக்கத் தெரியாத இவர்கள், இப்போதே இதையெல்லாம் செய்து தீர்த்து விட்டால் படவெளியீட்டின் போது என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான் என்னுடைய தற்போதைய கவலை.

suresh kannan

Monday, September 13, 2010

தமிழ் சினிமா: அசலும் நகல்களும்


தமிழ் சினிமா vs plagiarism பற்றின விவாதம் நீண்ட காலமாகவே நடந்து வருவதுதான் என்றாலும் தற்போதைய இணையச் சூழலில் அது சற்று மேலெழும்பி வந்திருப்பதால், ஒரு சினிமா பார்வையாளனாக (விமர்சகன்'னு சொன்னாலே இப்பல்லாம் அடிக்கறங்கப்பா) என்னுடைய 'கருத்தையும்' பதிவு செய்து 'கந்தசாமி'யாக விருப்பம்.

சினிமா பற்றி தனக்கு அதிகம் தெரியாது என்று ஒருபுறம் சொல்லி்க் கொண்டே so called சினிமா விமர்சகர்களை விட மிக நுட்பமான அவதானிப்புகளை முன்வைக்கும் ஜெயமோகன் சமீபத்தில் இவ்வாறாக எழுதினார்.

அறிவுஜீவி பாவனையுடன் எழுதப்படும் பல ’அதீத’ விமரிசனங்களையும் வாசிப்பதுண்டு, சினிமாவை கொஞ்சம் தெரிந்தவர்கள் நகைச்சுவைக்காக அவற்றை வாசிக்கலாம். எண்பது தொண்ணுறுகளின் சினிமாக்கூட்டமைப்புகளின் காலத்திலேயே இத்தகைய மூளைச்சிலும்பல்கள் சகஜம். இந்திரா பார்த்தசாரதியின் தந்திரபூமி நாவலில் டெல்லியில் அரசு குமாஸ்தாவாக இருக்கும் ஒரு ’சினிமா அறிவுஜீவி’யை வேடிக்கையாகச் சித்தரித்திருப்பார்.

பார்த்த உலகத்திரைப்படங்களை தமிழ்ப்படங்களுடன் ஒப்பிட்டு ’இதான்யா அது’ என்பதே அதிகமும் வாசிக்க நேரும் சினிமா பேச்சு. நான் நெடுங்காலமாகவே ’சினிமா பாரடைஸ்’ படத்தை ஒட்டி வசந்தபாலனின் ‘வெயில்’ எடுக்கப்பட்டிருக்கிறது என வாசித்து இருக்கும்போல என நம்பிக்கொண்டிருந்தேன். சமீபத்தில் சினிமா பாரடைஸ் படத்தைப் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. முற்றிலும் வேறு படம் இது. உண்மையிலேயே சினிமாபாரடைஸை நம்மவர்கள் இப்படித்தான் புரிந்துகொண்டார்களா?

வெயிலில் முருகேசன் ஒரு திரையரங்கில் பணியாற்றுகிறான், அந்த திரையரங்கு இடிக்கப்படுகிறது. அதேபோல ஒரு காலாவதியான கிராமத்திரையரங்கு சினிமா பாரடைஸில் வருகிறது. இவ்வளவுதான் ஒற்றுமை. ‘அதிலும் தியேட்டர் இதிலயும் தியேட்டர்’ என்ற அளவுக்குத்தான் நம்மவர்கள் உலகசினிமாவை புரிந்துகொள்கிறார்கள் என்று தோன்றுகிறது.

வெயில் படத்தைப் பார்க்கும் எவருக்கும் ஏன் அதில் சினிமா வருகிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். முருகேசன் காலாவதியான ஒரு மனிதன். ஆகவே காலவாதியான ஒரு தொழிலை அவன் செய்யவேண்டும். மக்களுக்கு அது காலாவதியானது என்று தெரிந்த, காட்சியாக காட்டக்கூடிய இயல்புகொண்ட இரு தொழில்கள் டூரிங் தியேட்டரும் கட்டை அச்சும். கட்டை அச்சு அச்சகம் ஏற்கனவே சேரனால் அவரது ’தவமாய் தவமிருந்து’ படத்தில் காட்டப்பட்டுவிட்டது. ஆகவே வேறு வழியில்லை. இந்தமாதிரி ‘மூலம்’ கண்டுபிடிப்பதில் ஒரு பெரும்படையே ஈடுபட்டிருக்கிறது. ஒரு படத்தின் கருவோ சில காட்சிகளோ இன்னொன்றுபோல் இருந்தால் ’அடிச்சுட்டான்யா’ என்ற உற்சாகம். ‘மூலத்தையே பார்த்தவன்யா நான்’ என்ற பெருமிதம்

எந்தெந்த தமிழ் சினிமாக்கள், எந்தெந்த உலகத் திரைப்படங்களிலிருந்து நகல் செய்யப்பட்டவை என்று அதிஉற்சாகமாக தயாரிக்கப்படும் பட்டியல்களை முன்னர் நானும் பார்த்து வாய் பிளந்திருக்கிறேன். 'த்தா.. எல்லாத்தையும் காப்பி அடிச்சுடறாங்கடா" என்று உற்சாகமாக உரையாடியிருக்கிறேன். ஆனால் உண்மையாகவே அவ்வாறான பட்டியல்களில் உள்ள திரைப்படங்களை பார்த்து ஒப்பிடும் போது ஏமாற்றமாகவும் ஆயாசமாகவும் இருந்தது. நகல் என்பதின் அடிப்படை புரிதல் கூட இல்லாமல் ஏதோ ஒரு சாயலை, காட்சிக் கோர்வையை, உடல்மொழியை, ஆடை வடிவமைப்பை, தற்செயலான ஒற்றுமையை மாத்திரம் வைத்துக் கொண்டு 'படம் முழுவதுமே இதிலிருந்து அது நகலெடுக்கப்பட்டது' என்ற எளிய முடிவிற்கு உடனே வந்துவிடுகிறார்கள். இது நம்மிடையே உள்ள தாழ்வு உணர்ச்சியின் இன்னொரு வகை வெளிப்பாடே. . 'வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தாம்பா' என்ற,  உலகின் எந்த சிறந்த விஷயமென்றாலும் அது மேற்குலகில் 'அதிவீர்ய' மூளைக்காரர்களின் தயாரிப்பாகத்தானிருக்க முடியும் என்கிற முன்முடிவுக்கு உடனே வந்துவிடுவது. 

நிற்க. நான் ஏதோ உண்மையாகவே அப்பட்டமாக 'காப்பியடிக்கும்' தமிழ் சினிமா இயக்குநர்களுக்கும் நடிகர்களுக்கும் வக்காலத்து வாங்க முனைவதான ஒரு தோற்றம் வருவதால் இங்கு அதை தெளிவுபடுத்தி விடுகிறேன். அதுவல்ல என் நோக்கம். இந்த அறிவுசார் சொத்துத் திருட்டென்பது உலகெங்கும் பரவலாக உள்ளது போல இங்கும் பழைய தமிழ் சினிமாக் காலங்களிலிருந்தே உருவாகி விட்டது. சினிமா என்கிற நுட்பம் வடக்கிலிருந்து தெற்கை நோக்கி பிரபலமாகும் போது இங்கே அப்போதிருந்த தெருக்கூத்தும் புராண அடிப்படை நாடகங்களும் அப்படியே எவ்வித மாற்றமுமில்லாமல் திரைக்கு நகர்ந்தன. பின்னர் அதுவும் சலித்துப் போன போது மிகச்சிறந்த ஹாலிவுட் டிராமாக்கள், இந்தியாவின் மற்ற மாநில குடும்ப டிராமாக்கள் (குறிப்பாக வங்காளம்) 'தமிழ்ப்படுத்தப்பட்டு' வெளியாகின.

இப்பவும் நீங்கள் பிலிம் நியூஸ் ஆனந்தன், அறந்தை மணியன் நாராயணன் போன்றவர்கள் எழுதிய பழைய சினிமாக் கட்டுரைகளை படித்துப் பார்த்தால் "----------- படம் அந்த தயாரிப்பாளருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. இதை தமிழில் எடுத்தால் நிச்சயம் கையைச் சுடாது என்று தோன்றியது. உடனே ---------- நடிகருக்கு இதைப் போட்டுக் காட்டி அவரின் ஒப்புதலைப் பெற விரும்பினார்.' என்று பல சமயங்களில் படங்களின் பெயரைக் குறிப்பிடாமலேயே எழுதப்பட்டிருக்கும். இந்தியாவிற்குள் உருவாக்க்ப்பட்டிருக்கும்  திரைப்படம் என்றால் சமயங்களில் முறையான மறுஉருவாக்க உரிமையை சட்டரீதியாகப் பெற்றிருப்பார்கள். இல்லையென்றால் அதை காப்புரிமை சட்டத்திலிருந்து தப்பிக்கும் வகையில் கதையின் போக்கை மாற்றியமைப்பார்கள். இரண்டு படைப்புகளுக்குமிடையே குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஒற்றுமையான அம்சங்கள் இருந்தால்தான் அது 'திருட்டு' என்று காப்புரிமைச் சட்டம் கூறுகிறது. இரண்டு தனி நபர்களுக்கும் ஒரே மாதிரியான கற்பனை இருந்திருக்க வாய்ப்புண்டு என்கிற benefit of doubt அடிப்படையில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி பல கதை / திரைக்கதையாசிரியர்கள் தங்கள் கைவண்ணத்தை காண்பித்து வருகிறார்கள்.

இவ்வாறு நகலெடுக்கப்படுவதில் பல வகைகளை என்னால் காண முடிகிறது. முழுதிரைப்படத்தையும் காட்சி, காமிரா கோணம், ஆடை வடிவமைப்பு, உடல்மொழி என்று அப்படியே காப்பியடிப்பது. இல்லையென்றால் படத்தின் பிரதான மையத்தை, முடிச்சை மாத்திரம் எடுத்துக் கொண்டு அதை அப்படியே உள்ளூர் கலாசாரத்தில் போட்டுப் பிசைவது. அல்லது குறிப்பிட்ட காட்சிகளை, திரைக்கதை பாணியை என்று ஏதோ ஒரு சிறப்பான அம்சத்தை  மாத்திரம் 'தம்முடைய'  படைப்பில் உபயோகிப்பது. சமயங்களில் எதனுடைய மூலம் எதுவுடையது என்பதை கண்டுபிடிப்பதே சிக்கலாகவும் அதனுடைய தொடர்ச்சியோடு நூல்பிடித்து பின்னோக்கி பயணிப்பதாக அமைந்துவிடும்.

பொதுவாக நடிகைகள் பேட்டியளிக்கும் போது  'கவர்ச்சியாக நடிப்பேன். ஆபாசமாக நடிக்க மாட்டேன்' என்று மழுப்புவார்களே, அவ்வாறு இன்ஸ்பிரேஷனுக்கும் இமிட்டேஷனுக்கும் துல்லியமான வேறுபாடு இருக்கிறதா என்றால் இருக்கிறது. மேற்கண்ட வழிகளில் உருவாக்கப்படுவது இமிட்டேஷன் என்றால், ஒரு படைப்பினால் அகவுணர்வு சார்ந்த பாதிப்பை அல்லது படைப்பின் மையத்திலிருந்து ஒரே ஒரு துளியை தொட்டுக் கொண்டு அதை அசலிலிருந்து முற்றிலும் விலகி தம்முடைய சுய கற்பனை வண்ணங்களின் மூலம் கேன்வாஸி்ல் ஓவியமாக தீடடுவதை இன்ஸ்பிரேஷனாக சொல்லலாம். இவ்வாறு செய்யப்படுவதை சம்பந்தபட்ட படைப்பாளியே முன்வந்து சொன்னால்தான் சமயங்களில் நம்மால் கண்டுபிடிக்க இயலும். அப்படிச் சொன்னாலும் கூட நம்மால் பெரிதாக எந்தவொரு வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க இயலாது. உதாரணமாக புதுமைப்பித்தனின் 'சிற்றன்னை' குறுநாவலின் பாதிப்பினால்தான் 'உதிரிப்பூக்களை' உருவாக்கினதாக இயக்குநர் மகேந்திரன் குறிப்பிடுகிறார். ஆனால் இரண்டு படைப்புகளிலும் பெரிதாக எந்தவொரு ஒற்றுமையும் இல்லை என்பதே விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது. இது படைப்பாளிகளின் தார்மீகமான உணர்ச்சி சம்பந்தப்பட்டது.

மற்ற படைப்பாளிகள் இவ்வாறு ஒப்புக் கொள்ளாததற்கு காரணமாக சட்டரீதியான சிக்கல்களோ, முதலீட்டின் ஒரு பகுதியை ஒதுக்குவது குறித்த கஞ்சத்தனமோ, மற்றவரின் படைப்பு என்று ஒப்புக் கொள்ள முடியாத ஈகோ பிரச்சினையாகவோ இருக்கலாம். எப்படியிருந்தாலும் ஒப்புக் கொள்ளாத பட்சத்தில் இது மகா பெரிய தவறுதான். நம்முடைய இலக்கியங்களிலிருந்தோ, இலக்கியவாதிகளின் ஒத்துழைப்புடனோ பல நல்ல கதைகளை திரைப்படமாக உருவாக்கலாம். ஆனால் சூப்பர் ஸ்டார்களுக்கு கோடிக்கணக்கிலும் நாயகிக்கு சில்லி சிக்கன் வாங்க ஐம்பது கிலோ மீட்டருக்கு பெட்ரோல் செலவு செய்யத் தயங்காத நம் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் எழுத்தாளருக்கு பணம் தர வேண்டுமானால் மாத்திரம் இந்த 'சிக்கன்வாதிகள்' உடனே சிக்கனவாதிகளாக மாறி விடுவார்கள். இது மாத்திரமல்லாமல் பெரும்பாலான தமிழ் இயக்குநர்களுக்கு ஒரு பெரிய வியாதி இருக்கிறது. அது கதை, திரைக்கதை, பாடல்கள், எடிட்டிங், ஒளிப்பதிவு, தயாரிப்பு, இசை, டைரக்ஷன், போஸ்டர் ஒட்டுதல், சவுண்ட் மிக்ஸிங், தயாரிப்பு நிர்வாகம்,  என ஒரு பெரிய பட்டியலையே டைட்டில் கார்டில் போட்டுக் கொள்ள விரும்பும் மோகம்தான் அது. இதனாலேயே மற்ற படங்களிலிருந்து காப்பியடித்ததை ஒப்புக் கொள்வதில்லை. மேலும் யாராவது கண்டுபிடித்து சுட்டிக்காட்டினாலும் மறுத்து சுட்டிக் காட்டியவர் மீதும் பாய்வது.

உலக சினிமாக்களிலிருந்து நகலெடுக்கப்பட்ட தமிழ் சினிமாக்கள் என்ற பட்டியலைப் பற்றி ஆரம்பத்தில் சொல்லியிருந்தேன் அல்லவா? அதில் சில சதவீத உண்மையிருந்தாலும் மற்றவை எவ்வாறு அரைகுறை புரிதலோடு இடம் பெற்றிருக்கிறது என்பதைப் பார்ப்போம். மணிரத்னத்தின் ஆய்த எழுத்து, Amores perros என்கிற மெக்சிகன் திரைப்படத்தின் அப்பட்டமான நகல் என்று நீண்ட ஆண்டுகளாக சொல்லப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.

ஒரு சம்பவத்தை மையமாக்கி அதன் மூலம் சம்பந்தப்பட்ட பல தனி நபர்களின் வாழ்க்கை நிகழ்வுகள்  பின்னோக்கி சொல்லப்பட்டிருக்கிறது என்கிற திரைக்கதை உத்தி  மாத்திரமே இரு படத்திற்குமான ஒற்றுமை. முழுத்திரைப்படமும் அல்ல. அரசியலை அரசியல்வாதிகளை மேம்போக்காக குற்றஞ்சொல்லிக் கொண்டிருக்காமல் அதை ரவுடிகளிடம் ஒப்படைக்காமல் படித்த மாணவர்கள் அரசியலில் பங்குபெற முன் வர வேண்டும் என்பதுதான்ஆய்த எழுத்து திரைப்படத்தின் மையம். Amores Perros-ல் இப்படியான மையமே கிடையாது. பல தனி நபர்களின் சம்பவங்கள் அதன் போக்கில் அதற்கான வன்முறையின் உக்கிரத்தோடு சொல்லப்படுகின்றன.

தமிழ்ப்படங்கள் ஆங்கிலம் அல்லது மற்றமொழிகளிலிருந்துதான் நகலெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிற தீர்மானமான முன்முடிவைப் பற்றியதற்கும் ஓர் உதாரணத்தை பார்த்து விடலாம்.

சாமுவேல் ஜாக்சனின் ONE EIGHT SEVEN என்கிற திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது அதிர்ச்சி. அது பெரும்பாலும் கமலின் 'நம்மவரின்' காட்சிகளை ஒத்திருந்தது. ஆஹா! கமல் இதையும் உருவி விட்டார் போலிருக்கிறதே என்று நினைத்தேன்.

ஆனால் விவரங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது நம்மவர் 1995-ம் ஆண்டும்
ONE EIGHT SEVEN 1997-ம் ஆண்டும் வெளிவந்திருக்கின்றன. நம்மவரின் இன்ஸ்பிரேஷன்,  Sidney Poitier நடித்து வெளிவந்த 1967-ல் வெளிவந்த To Sir, with Love ஆக இருக்கலாம். ஆனால் ONE EIGHT SEVEN 'நம்மவரில்' இருந்து நகலெடுக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் (கமலுக்கும் - கரணிற்கும் கழிவறைக்குள் நிகழும் அந்த ஈகோ மோதல் உட்பட) அந்தப் படத்திலிலேயே உள்ளன. ஆனால் நம்மவரை விட ஆங்கிலப்படமே சிறப்பாகவும் யதார்ததமாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் சொல்லி விடுகிறேன். சாமுவேல் ஜாக்சன், கமல் போல் 'பிளேடு பக்கிரி' சண்டையெல்லாம் போடுவதில்லை.

கமல் Mrs.Doubtfire மாதிரி பல ஹாலிவுட் படங்களை அப்படியே ஸ்வாகா செய்திருப்பது வேறு விஷயம். ஹேராம் கூட ர.சு. நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்' என்கிற புதினத்தை பெரும்பாலும் ஒத்திருக்கிறது என்ற சர்ச்சையும் உண்டு. ஆனால் இவ்வாறு நகலெடுப்பதில் அவர் தனிமனிதர் அல்ல. நாம் தமிழ் சினிமாவின் பிதாமகர்கள் என்று போற்றும் இயக்குநர்கள் உட்பட பெரும் படையே உள்ளது.

கெளதம் மேனன், சசி போன்று சில இயக்குநர்கள் தங்களுக்கு பாதிப்பை ஏற்படு்த்தின படைப்பின் மூலத்தை டைட்டில் கார்டிலேயே சமீபத்தில் குறிப்பிட்டு வருவது ஆரோக்கியமான விஷயம். முன்னரே சொன்னது போல தமக்கான கதைகளை டிவிடிகளில் தேடாமல் தமிழ் அல்லது மற்ற மொழி இலக்கியங்களிலிருந்தும் எழுத்தாளர்களிடமிருந்தும் அவற்றுக்கான முறையான ஒப்புதலோடு தேடினால் பல நல்ல தமிழ் சினிமாக்கள் உருவாகும்.


suresh kannan

Wednesday, September 08, 2010

எலிக்கறி, தொலைக்காட்சி பெட்டி அரசியல் (PEEPLI LIVE)

'உலகத்தின் மிகப்பெரிய  ஜனநாயக நாடு இந்தியா' என்றொரு வதந்தியிருக்கிறது. 'அப்படியல்ல' எனறு தீவிரமாக நம்புகிற தேசபக்தர்களை அவரவர்கள் நம்பும் கடவுள்கள் காப்பாற்றட்டும்.

அதிகாரத்தின் அனைத்து சட்டத்திட்டங்களுக்கும் அரசியல்களுககும் ஒடுங்கிப் பணிந்து தேர்தல் நாளன்று  உங்களுக்குப் பதிலாக இன்னும் வேறு யாரும் போடாத அதிர்ஷ்டமிருந்தால் ஓட்டுப் போட்டு  ஜனநாயகக் கடமையை ஆற்றின திருப்தியோடு ஒதுங்கி ஒரு நல்ல 'குடிமகனாக' நீங்கள் இருக்கிற வரை ஒன்றுமில்லை. இந்தப் புள்ளியிலிருந்து நீங்கள் நகர முயற்சிக்கும் போதுதான் பிரச்சினை.

உதாரணமாக சாதாரண பொதுமனிதனாகிய  உங்களுக்குச் சொந்தமானதொரு நிலத்தை பன்னாட்டு நிறுவனமோ, பலம் வாய்ந்த அரசியல்வாதியோ அல்லது உள்ளூர் ரவுடியோ கைப்பற்ற வேண்டுமென்று முடிவு செய்து விட்டால் கடவுளே கூட உங்கள் நிலத்தைக் காப்பாற்ற முடியாது. அரசு இயந்திரத்தின் எல்லாக்கதவுகளும் நீங்கள் வரும் போது மூடிக் கொள்ளும்.

சரி. கருத்துச் சுதந்திரமாவது இருக்கிறதா என்று பார்த்தால் .. பேருந்தில் பயணிக்கும் போது நடத்துநர் மீதி சில்லறை தராத எரிச்சலில் "என்னா சார் கவர்ண்மெண்ட்" என்று புலம்பிக் கொள்ளலாம். அவ்வளவுதான். அதிகாரத்திற்கு எதிராக மெலிதாக நமக்கே கேட்காத குரலில் முணுமுணுத்துக் கொள்ளத்தான் அனுமதியுண்டு.  எதிர்ப்பது ஓர் அமைப்பு என்றால் அரசு நால்வகை உபாயங்களையும் பயன்படுத்தி அதை ஒழித்து விட தொடர்ந்து முயலும்.  பொதுஜனங்களில் ஒருவர் என்றால் போச்சு. உங்கள் விரைக்கொட்டையை நசுக்கினால் கூட கேட்க ஆள் இருக்காது.

இந்த நிலையில் என்ன செய்யலாம்?

ஏதாவது புதினத்தை மாய யதார்த்த பாணியில் எழுதி மழுப்பிப் பார்க்கலாம். ஆனால் மொத்தம் நூறே பேர் படிக்கும் இந்த மாதிரியான பத்திரிகைகளில்  ஜாங்கிரித்தனமான மொழியில் எழுதப்படுகிற படைப்புகளை உளவுத்துறையில் உள்ளவர்கள் கூட கவனமாக வாசிக்க மாட்டார்கள் . இருப்பது  இரண்டேபேர் என்றாலும்  நான்கு குழுக்கள் அமைக்கும் தமிழ்ச் சமூக மனோபாவத்தின் படி அந்தப் புதினத்தை சாக்காகக் கொண்டு  அடித்துக் கொள்வதிலேயே சொல்ல வந்தது அதற்குள் நமத்துப் போய்விட்டிருக்கும்.

இந்தியாவின் பலமான, பரவலான ஊடகம் என்றால் அது சினிமாதான். தயிர் சாதத்திற்கு ஊறுகாய் இல்லாவிட்டால் கூட ஒப்புக் கொள்ளும் நம் சமூகம், சினிமா இல்லையென்றால் 'சிறந்த தமிழ்ப்படத்தை தேர்ந்தெடுக்கப் பணிக்கப்பட்ட' ஆக்டோபஸ் மாதிரி மூச்சுத் திணறியே செத்துவிடும். அதிவீர்யமான போதை மருந்தாகச் செயல்படும் இந்தியச் சினிமாவினால் புரட்சியேதும் நடக்க வாய்ப்பேயில்லை என்கிற காரணத்திறாகவேதான் அதற்கு வரிச்சலுகைகளும் இன்னபிற உதவிகளும் கிடைக்கின்றன என்பது வதந்தியாகத்தான் இருக்க வேண்டும்.சமூகச் சொரணயுள்ள படைப்பாளிகள் சற்று பூடகமாவோ, நகைச்சுவையில் மறைத்தோ சமூகப் பிரச்சினையொன்றை அலசிப் பார்க்கலாம். அப்படியாக ஒரு அரசியல் அங்கத சினிமாவாக சமீபத்தில் வந்திருப்பது PEEPLI (LIVE).

அரசாங்கத்தால் பெரிதும் புறக்கணிக்கப்படுகிற விவசாயச் சமூகம், தற்கொலை செய்து கொள்கிற சமகாலப் பிரச்சினையை சொல்ல முனைகிற இந்தத் திரைப்படம் அதை அழுத்தமாக நிறைவேற்றியிருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. நகைச்சுவையில் உள்ள அபாயமும் இதுதான். நகைச்சுவையின் ஊடாக சாப்ளின் முன் வைக்கிற அரசியலைப் புரிந்து கொள்ளாமல் அவைகளையே 'காமெடி' படங்களாக புரிந்து கைதட்டி சிரித்து உடனே மறந்து விடுகிற நம் சமூகம் இந்தப் படத்தையும் ஒரு நகைச்சுவைப் படமாகவே மாத்திரம் புரிந்து கொண்டால் அதில் ஆச்சரியமேதும் கிடையாது. ஏனெனில் PEEPLI (LIVE)  நகைச்சுவையைத் தாண்டி அதற்கான எந்தவொரு தீவிரத்தையும்  கொண்டிருக்கவில்லை.

பீப்லி (லைவ்)-வை செவ்வியல் திரைப்படமான 'பதேர் பாஞ்சாலி'யோடு ஒப்பிடப்படுகிற அபத்தங்கள் சிலவற்றைக் கண்டேன். இந்தத் திரைப்படத்தின் இயககுநரான  அனுஷா ரிஸ்வி கூட இதை ஒப்புக் கொள்ள மாட்டார். ஒரு இந்திய கிராமத்துக் குடும்பத்தின் வறுமையை எவ்வித பிரச்சார தொனியுமின்றி யதார்த்தமாக சொல்லிச் செல்கிற 'பதேர் பாஞ்சாலி' ஒரு சிறந்த கலைப் படைப்பாக உயர்ந்த தளத்தில் இயங்குகிறதென்றால் பீப்லி (லைவ்)-வோ மல்டிப்ளெக்ஸ்-ஸின் உயர் / நடுத்தர வர்க்கத்தினர் சில மணி நேரங்கள் சிரித்து விட்டுப் போகிற ஒரு சராசரி நகைச்சுவைப்படமாக மாறிப் போகக்கூடிய அபாயத்தை தன்னுள் வைத்திருக்கிறது.

முக்ய பிரதேஷ் எனும் கற்பனையான பிரதேசத்தின் 'பீப்லி' கிராமத்தைச்  சேர்ந்த வறுமை விவசாய சகோதரர்கள் நத்தா, புதியா. வங்கிக் கடனை அடைக்க முடியாமல் தங்களின் விவசாய நிலம் பறிபோகும் சூழ்நிலையில் உள்ளூர் அரசியல்வாதியிடம் உதவி கேட்டுச் செல்ல, அவனுடைய உதவியாளன் அவர்களைத் தவிர்க்கும் பொருட்டு "தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு அரசு ஒரு லட்சம் ரூபாய் வழங்குகிறது' என்ற செய்தியை போகிற போக்கில் சொலகிறான். சகோதரர்கள் குத்துக்காலிட்டு அமர்ந்து கலந்தாலோசிப்பதில்  'தம்பி தற்கொலை செய்து கொள்வது' என்று அரை மனதாக முடிவாகிறது.

இந்தச் செய்தி உள்ளுர் பத்திரிகையாளனின்  காதில் விழுந்து கட்டுரையாக வெளிவர தேசிய தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு இந்தச் செய்தியை தீப்பிடிக்க வைக்க முடியும் தோன்றுகிறது.

அதற்குப் பின் ஒரே அதகளம்தான்.

TRP எனும் மாயமானை துரத்திப் பிடிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராகயிருக்கும் தொலைக்காட்சி ஊடகங்கள், ஆளுங்கட்சிக்கு நெருக்கடியையும் சங்கடத்தையும் ஏற்படுத்த இந்தத் தற்கொலையை பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் எதிர்க்கட்சிகள், இதிலிருந்து தப்பிக்க நினைக்கும் ஆளுங்கட்சியின் சதித்திட்டங்கள், முட்டாள்தனமான பொம்மை அரசு அதிகாரிகள் ... என சகலரையும் அம்மணப்படுத்தியுள்ளது இத்திரைப்படம்.

'நத்தா தற்கொலை செய்து கொள்வானா, இல்லையா' என்பதை ஒரு பரபரப்பூட்டும் விவாதமாக கிரிக்கெட விளையாட்டிற்கு நிகரான தேசிய சூதாட்டம் போன்ற நிலைக்குச் செல்லுமாறு ஊதிப் பெருக்குகின்றன ஊடகங்கள். அந்த எளிய கிராமத்து வீட்டை  லைவ் டெலிகாஸ்ட் வாகனங்கள் சூழந்து கொள்ள அந்த இடமே திருவிழாக் கோலம் கொள்கிறது. (இந்த இடத்தில் உருகுவே நாட்டுத் திரைப்படமான 'The Pope's Toilet'-ஐ நினைவு கூரலாம். பிரேசிலின் எல்லைப்புற கிராமமொன்றில் போப் வருவதையொட்டி ஏற்படும் பரபரப்பை உபயோகப்படுத்தி பணம் சம்பாதிக்க நினைக்கும் அந்தக் கிராமத்தினரின் கனவு எப்படி நிராசையாகிறது என்பதைச் சொல்கிறது அந்தப்படம்).

கேமராவைப் பார்த்தாலே  ஓடி ஒளியும்  நத்தாவை தொடர்ந்து இரவு பகலாக கண்காணிக்கின்றன ஊடகங்கள். நத்தாவின் நண்பர்கள் உட்பட ஊரிலுள்ள அனைவருமே முக்கியஸ்தர்களாகி ஒவ்வொரு சானலும் ஆளுககு கிடைக்கிற நபர்களை பேட்டி காண்கின்றனர். தொலைக்காட்சியில் தங்களின் முகம் தெரியப் போகிற பூரிப்பில் எல்லோருமே ஏதோவொன்றைச் செல்ல உண்மை என்கிற வஸ்துவைப் பற்றி யாருமே கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இது எந்த அளவிற்கு போகிறது என்றால், இதுதான் நத்தா மலம் கழிக்கச் சென்ற பாதை, இதுதான் நததாவின் மலம் என்று வட்டமிட்டுக் காட்டுமளவிற்கு செல்கிறது. போட்டி ஊடகங்களை முந்திச் செல்லவும் சாதாரணமான ஒன்றை 'ஏதோ அதில் உள்ளது' போலவும் காண்பிப்பதற்காக, ஊடகங்கள் எத்தனை தூரத்திற்கும் தரம் தாழத் தயாராய் இருக்கின்றன என்பதை முகத்தில் அறைகிறாற் போல் சித்தரிக்கின்றன இக்காட்சிகள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 'விவசாயிகள் வறுமை காரணமாக பசி தாங்காமல் எலிக்கறி சாப்பிடுகிறார்கள்' என்றொரு புகார் எழுந்தது. எதிர்க்கட்சிகள் ஒருபுறம் இதை ஊதிப் பெருக்க முயன்று கொண்டிருக்க ஆளுங்கட்சியோ புள்ளிவிவரங்களுடன் இதை மறுத்து 'எலிக்கறி உண்கிற வழக்கமுள்ள சில பழங்குடி மக்களை' காண்பித்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக மழுப்பியது.

இத்திரைப்படத்திலும் நத்தா தற்கொலை சர்ச்சை தேசிய விவாதமாக பரவிக் கொண்டிருக்க  மாநில ஆளுங்கட்சி இதை மூடி மறைக்கவும் எதிர்க்கட்சிகள் இந்த வாய்ப்பை தவற விடாமல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் எல்லா வழிமுறைகளையும் பயன்படுத்துகின்றன. ஓட்டு வாங்குவதற்காக அரசியல்வாதிகள் ஏற்படுத்தும் கவர்ச்சியான சலுகைத் திட்டங்கள் எவ்வாறு மக்களுக்கு எவ்வித பயனும் அளிப்பதில்லை என்பது சில காட்சிகளின் மூலம் கிண்டலடிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கும்பல் கைபம்ப் ஒன்றை நத்தா குடும்பத்திற்கு வழங்கி விட்டுச் செல்கிறது. அதைப் பொருத்துவதற்குரிய செலவு செய்ய முடியாத சூழலில் அது சிறுவர்களின் விளையாட்டுப் பொருளாகிறது. இன்னொரு கும்பல் பெரிய தொலைக்காட்சி பெட்டியை வழங்கி விட்டுச் செல்கிறது. (ஏதாவது நினைவுக்கு வருகிறதா?).

நத்தா தற்கொலை செய்வான் என்று சில ஊடகங்களும் இல்லை என்று சில ஊடகஙகளும் அவரவர்களின் அரசியல் ஆதாயங்களுக்கேற்ப பிரச்சாரம் செய்துக் கொண்டிருக்க நத்தாவின் மகன் தூங்கிக் கொண்டிருக்கிற நத்தாவை எழுப்பிக் கேட்கிறான் "எப்பப்பா செத்துப் போவே?. பணம் கிடைச்சு நான் போலீஸ்காரனாவனும்".
 


நஸ்ருதீன் ஷா, ரகுபீர் யாதவ் போன்றசொற்பமான தெரிந்த முகங்களைத் தவிர  ஹபிப் தன்வீரின் நாடக குழுவிலிருந்தும் கிராமத்து ஆசிவாசிகளும் நடித்திருக்கின்றனர். பிரதான பாத்திரமான நத்தா (ஓம்கார்தாஸ் மாணிக்புரி) கூட நாடகக் குழுவைச் சேர்ந்தவர்தான். நத்தாவின் பாத்திரம் மிகத்திறமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. யாரைப் பார்த்தாலும் மிரண்டு ஓடும் இவன் சமயங்களில் தனக்கான கற்பனை உலகில் சந்தோஷமாக இருக்கிறான். அரசியல்வாதியிடம் உதவி கேட்கப் போகும் போது அண்ணனான புதியா, வந்த விஷயத்தைப் பேசிக் கொண்டிருக்க, இவனோ மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் அவித்த முட்டையை  வாய் ஊறப் பார்த்துக் கொண்டிருக்கிறான். பின்பு தனக்கான கனவுலகில் அதைச் சாப்பிடுவானாகயிருக்கும்.

நத்தாவின் குடும்ப உறுப்பினர்களின் பாத்திரங்கள் இன்னும் சுவாரசியம். நத்தாவின் மனைவி திரைப்படங்களில் சம்பிரதாயமாக காட்டப்படும் இந்தியப் பெண்ணிலலை. நிலத்தை இழந்துவரும் கணவனை துடைப்பத்தால் அடிக்காத குறையாக துரத்துகிறாள். அவனுடைய கையாலாகததனம் அவளுக்கு மிகுந்த எரிச்சலைத் தருகிறது. 'நத்தா'வின் மரணம் (?!) கூட அவளைப் பாதிப்பதில்லை. அதற்கான ஆதாயம் எப்போது வரும் என்பதில்தான் அவளுடைய முழுக்கவனமும் இருக்கிறது. எப்போதும் கட்டிலில் படுத்திருக்கும் நோயாளித் தாய் சகோதரர்கள் இருவரையும் உரத்த குரலில் சபித்துக் கொண்டேயிருக்கிறாள்.

வசனங்கள் பல இடங்களில் படு நக்கலாக ஒலிக்கின்றன. "உன்னிடமிருந்து எதையும் எடுத்துக் கொள்ளாமல் அரசாங்கம் எதையும் உனக்குத் தராது தம்பி" என்கிறான் ஒரு அரசியல்வாதி. "உயிரோட இருக்கறவங்களுக்கே எந்த உதவியும் செய்யாத அரசாங்கமா, செத்தவங்களுக்கு உதவப் போவுது?" என்று அரசுத் திட்டத்தை ஒரு பாமரன் கிண்டலடிக்கிறான்.

இந்தக் களேபரங்களுக்கு இடையில் ஒரு சிறிய கிளைக்கதையும் ஓடுகிறது. தனியொருவனாக தொடர்ந்து உழைத்து கிணறொன்றைத் தோண்டிக் கொண்டேயிருக்கும் ஒருவர் அது முடிவடையாமலே செத்துப் போகிறார். ஆனால் இதை சிலரைத்தவிர அந்த ஊர் மக்களோ குறிப்பாக ஊடகங்களோ கண்டுகொள்வதில்லை. உண்மையாக முன்நிறுத்தப்பட வேண்டிய ஆரோக்கியமான செய்திகளை விட்டுவிட்டு வெறும் கவர்ச்சியையும் பரபரப்பையுமே ஊடகங்கள் தலைப்புச் செய்திகளாக்குகின்றன.

ஒரு  அசலான இந்தியக் கிராமத்தையும் குடும்பத்தையும் முன்நிறுத்துவதில் இந்தப்படம் வெற்றியடைந்திருக்கிறது. ஊடகங்கள் கிராமத்தில் நுழைந்த பின் ஏற்படும் கலாட்டாக்களும் அரசியல் சதுரங்கக் காட்சிகளும் அதற்கேயுரிய பரபரப்புகளுடன் சொல்லப்பட்டிருக்கின்றன. அசலான நாட்டார் இசைப் பாடல்களை இப்படத்தில் கேட்க முடிகிறது.

நடிகர் அமீர்கான் இந்த அரசியல் அங்கதத் திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார். ஆளுங்கட்சியின் விழாக்களில் ஜால்ரா அடிப்பதிலேயே காலங்கடத்தும் தமிழக முன்னணி நடிகர்களுக்கு இதில் செய்தியிருக்கிறது. நத்தா பாத்திரத்தில் அமீர்கானே நடிக்கவிருந்து பின்பு தன்னை விட ஓம்காருக்கே அது பொருத்தமாயிருக்கும் என உணர்ந்து அதைக் கைவிட்டிருக்கிறார்.

முன்பே குறிப்பிட்டது போல் இதுவொரு 'நகைச்சுவைப்' படமாகவே போய்விடும் அபாயமிருக்கும் அளவிற்கு இயக்குநர் இது சம்பந்தப்பட்ட காட்சிகளிலேயே முழுக் கவனம் செலுத்தியிருக்கிறார். மாறாக விவசாயிகளின் ஆதாரமான பிரச்சினைகளையும் இணைக்கோடாக சற்று தீவிரத் தொனியில் மெலிதாக சொல்லிச் சென்றிருக்கலாம். விவசாயிகளைச் சோம்பேறிகளாகவும் எப்போதும் அரசுத் திட்டங்களையும் சலுகைகளையும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் சித்தரித்திருப்பதால் இப்படத்திற்கு சில விவசாய அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பும் எழுந்திருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் 8 மில்லியன் விவசாயிகள் தங்கள் தொழிலை கைவிட்டுவிட்டு பிழைப்பிற்காக நகர்மயமாகியிருக்கும் ஒரு குறிப்புடன் படம் நிறைகிறது. இதுதான் இத்திரைப்படத்தின் மூலம் நாம் உணர வேண்டிய முக்கியமான செய்தி. ராணுவத்திற்கான பல கோடி செலவுகளையும் அரசியல்வாதிகளின் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களையும் சமூகத்தின் ஒரு பிரிவு மாத்திரம் கோடீஸ்வரர்களாக வீங்கிக் கொண்டே பொருளாதாரச் சமநிலையின்மையையும் கள்ள மெளனத்துடன் வேடிக்கை பார்க்கும் அரசு, மிக ஆதாரமான விவசாயத்தை இப்படியாக புறக்கணிக்கும் போது 'வருங்காலத்தில் நாம் எதை உண்ணப் போகிறோம்' என்கிற கேள்வி பூதாகரக் கவலையுடன் நம் முன்னே நிற்கிறது.

டெய்ல் பீஸ்: இத்திரைப்படத்தை பாரதப் பிரதமர் திரு.மன்மோகன் சிங் சமீபத்தில் பார்த்திருக்கிறார். அவரும் இதையொரு 'காமெடி' படமாகவே அணுகினார் போலிருக்கிறது. பிறகு நிகழ்ந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் "அரசுக் கிடங்குகளில் மட்கி வீணாகும் தானியங்களை அதற்குப் பதிலாக வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு விநியோகிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறதே?' என்ற கேள்விக்கு 'அரசுத் திட்டங்களில் தயவுசெய்து நீதிமன்றங்கள் தலையிட வேண்டாம்' என்று பதிலளித்திருக்கிறார்.

அரசியல்வாதிகள் அரசியல்வாதிகள்தான்.

suresh kannan

Wednesday, September 01, 2010

ஹிட்ச்காக் எனும் கதைசொல்லி


ஹிட்ச்காக்-கை ஒரு மூன்றாந்தர திகில் பட இயக்குநர் என்றே ஏனோ நீண்ட ஆண்டுகளாக நான் எண்ணிக் கொண்டிருந்தேன்.  தமிழில் 'மாடர்ன் பிக்சர்ஸ்' எனும் சினிமா நிறுவனம் பெரும்பாலும் ஜெய்சங்கரை வைத்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் வெளியிடும் அபத்தமான சஸ்பென்ஸ் படங்களையும் ஹிட்ச்காக்கையும் எப்படியோ நானாகவே தொடர்புபடுத்தி ஒரு முன்முடிவுடன் அவரை நிராகரித்து வைத்திருந்தேன். அது எத்தனை பெரிய தவறு என்பது சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் தெரிந்தது. பிரிட்டிஷ்காரராக இருந்தாலும் பிற்பாடு பெரும்பாலான படங்களை ஹாலிவுட் நிறுவனங்களின் மூலம் உருவாக்கியதால் 'ஹாலிவுட்டின் சிறந்த கதைசொல்லி' என்று அவரை முதன்மைப்படுத்த விரும்புகிறேன்.

ஹிட்ச்காக்கின் பெரும்பான்மையான படங்கள் 'சஸ்பென்ஸ்' வகையைச் சார்ந்ததாக இருந்தாலும் அவை செயற்கைத்தனமான பரபரப்பையோ, அசட்டுத்தனமான மர்மங்களையோ கொண்டிருப்பதில்லை. மாறாக பாத்திரங்களின் அகவுணர்வு சார்ந்தும் உளவியல் ரீதியானதாகவும் அர்த்தப்பூர்வமான வித்தியாசமான காமிரா கோணங்கள் மூலமும் அழுத்தமான காட்சிகளை கோர்ப்பதின் மூலமும் மிக உயர்ந்த தளத்தில் இயங்குகின்றன. தம்முடைய படங்களில் தொடர்ந்து அவர் பரிசோதனை முயற்சிகளை செய்துவருவதை பார்வையாளர்கள் கவனித்திருக்கலாம். உதாரணமாக ROPE  என்கிற திரைப்படம் முழுவதுமே வெறும் 10 நீளமான காட்சிகளுடன் தொடர்ச்சியான ஒரே காட்சிக்கோர்வை போன்ற பாவனையுடன் உருவாக்கப்பட்டது.

ஹிட்ச்காக் படங்களின் மிகப் பெரிய பலமாக அவரின் திரைக்கதையமைப்பை குறிப்பிடலாம். படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன் திரைக்கதையை அதன் ஒவ்வொரு பிரேமிலும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை குறைவான வசனங்களுடன் பெரும்பாலும் காட்சிப்பூர்வமாக மிக கச்சிதமாக சிந்தித்து மிகுந்த திட்டமிடலுக்குப் பின்புதான் படப்பிடிப்பிற்குத் தயாராகிறார். அதற்குப் பிறகு திரைக்கதையை ஒரு தகவலுக்காகக் கூட அவர் பார்ப்பதில்லை. அத்தனையுமே அவர் மூளையில் தெளிவாக பதிவாகியிருப்பதால் எவ்வித தயக்கமுமில்லாமல் மிகுந்த நம்பிக்கையுடன் தம் படைப்பை உருவாக்கிச் செல்கிறார்.

படத்தின் துவக்கத்திலேயே அழுத்தமான ஒரு கொக்கியை பார்வையாளர்களின் மூளைகளில் மாட்டிவிடுகிறார் ஹிட்ச்காக்.  படம் பூராவும் அந்தக் கொக்கி நம்மை சுவாரசியமாக இழுத்துச் செல்கிறது. இந்த ரோலிங் கோஸ்டர் பயணம் காரணமாக ஒருவேளை நடுவில் ஏற்படும் தொய்வு கூட நம்மை பாதிப்பதில்லை.

ஹிட்ச்காக் படங்களில் நடிகர்கள், குறிப்பாக நாயகிகள், கருப்பு - வெள்ளை திரைப்படத்திலும் அவர்களைக் காதலிக்கத் தூண்டுமாறு  பிரத்யேக அழகுடன் உள்ளனர். ஆனால் அவர்கள் வெறுமனே அழகுப்பதுமைகளாக சித்தரிக்கப்படுவதில்லை. அவர்களுககுரிய தனித்தன்மையுடனும் சுயமரியாதை உள்ளவர்களாகவும் ஆபத்துக்காலங்களில் சுயமாக சிந்தித்து போராடுபவர்களாகவும்  வெளிப்படுகிறார்கள்.

உண்மையில் நான் இந்தப் பதிவை எழுத ஆரம்பித்ததே ஹிட்ச்காக்கின் 'The Wrong Man' என்கிற திரைப்படத்திற்காக. மாறாக அவரை சிலாகிப்பதிலேயே இத்தனை வரிகளை செலவழித்து விட்டேன். தவறொன்றுமில்லை.

'ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரே ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது' என்பது தேய்ந்து போன வாக்கியமாக இருந்தாலும் அதன் அளவில் மிக அர்த்தப்பூர்வமானது. செய்யாத தவறுக்காக தண்டனை அனுபவிப்பதைப் போன்ற கொடுமை எதுவுமே கிடையாது. தண்டனையின் கூடவே சுயஇரக்கமும் சேர்ந்து ஆளையே முழுக்கக் கொன்றுவிடும்.

கொஞ்சம் சுயபுராண பிளாஷ்பேக். சற்று சகித்துக் கொண்டாவது வாசித்து விடுங்கள்.

இலக்கியத்தில் ஆர்வமுள்ள பெரும்பாலானோரைப் போல எனக்கும் கணிதம் என்றால் ஆகாது. பள்ளிப்பருவத்தில் மற்ற பாடங்களை சுமாராகவும் தமிழ்ப்பாடத்தை விருப்பத்துடனும் படித்து விடும் எனக்கு தருக்கத்தின் மிகக் கடினமான வடிவமான கணிதத்துடன் எப்போதும் மல்லுக்கட்டல்தான். 'கணிதத்தில் மட்டும்தான் உங்கள் ஜீரோ மதிப்பெண் வாங்க முடியாது' என்பார் என்னுடைய ஆறாம் வகுப்பு கணித ஆசிரியர் அமலதாஸ். மிகக் கண்டிப்பானவர். ஆனால் அதை ஒரு சாதனையாக செய்து அடிக்கடி அவரை வெறுப்பேற்றிக் கொண்டிருப்பேன். புறங்கையின் மீதான விரல் எலும்புகளின் மீது மரக்கட்டை ஸ்கேல் அமலதாஸின் மூலம் வேகமாக மோதும் போது கணிதத்தின் மீதான வெறுப்பும் ஒவ்வாமையும் இன்னும் கூடவே செய்யும்.

இப்படியாக ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை கணிதத்தின் மூலமாக ஒருபுறமும் அமலதாஸின் மூலமாக இன்னொரு புறமும் தொடர்ந்து கொண்டிருந்த தாக்குதல் பத்தாம் வகுப்பில்தான் முடிவிற்கு வந்தது. ஆனால் படம் முடிந்தும் டிரைலர் முடியவில்லை என்கிற கதையாக பத்தாம் வகுப்பிலும் விதியும் அமலதாஸூம் வேறுவடிவில் நுழைந்தனர். 'எந்தெந்த வகுப்பிற்கு யார் யார் ஆசிரியர்கள்' என்று முதல் நாளில் நாங்கள் ஆவலாக அமர்ந்திருந்த போது நுழைந்தாரய்யா அமலதாஸ். எனக்குள் பயப்பந்து ஒன்று சுருண்டு உருண்டது. ஆனால் அவர் ஆங்கிலம் இரண்டாம் தாளுக்காம். கணிதத்திற்கு அல்லவாம். அப்பாடா ஒரு வகையில் நிம்மதி!.

முதல் நாளே ஒரு ஆங்கிலச் செய்யுளை நடத்திவிட்டு அதை மனப்பாடம் செய்து வரவேண்டும் என்று உத்தரவிட்டு விட்டார் அமலதாஸ். இப்போது எல்.கே.ஜி. படிக்கும் என் மகளின் மொழியில் சொன்னால், 'மிஸ் ரொம்ப ஓவராத்தான் பண்ணிக்கிறாங்க."

ஆனால் குறிப்பிட்ட அந்தச் செய்யுளை ஏற்கெனவே நான் மனப்பாடம் செய்து வைத்திருந்தேன். இங்கே என்னுடைய மூத்த சகோதரரை நினைவு கூர வேண்டும். அமலதாஸின் மிக உக்கிரமான வடிவம் அவர். டியுஷனுக்குச் செல்ல மறந்து விளையாடின மயக்கத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த என்னை தூக்கிப் போட்டு மிதித்த அந்தச் சம்பவத்தினை நினைத்தால் இன்றும் கூட என் முதுகுத்தண்டு சில்லிடுகிறது. ஒன்பதாம் வகுப்பு முடித்து கிடைத்த ஆண்டு விடுமுறையில் கூட என்னை அதிகம் விளையாட விடாமல் அடுத்த ஆண்டிற்கான படிப்பை அப்போதே கட்டாயப்படுத்தி  படிக்கச் செய்ததால்தான் என்னால் அந்த ஆங்கிலச் செய்யுளை அப்போதே மனப்பாடமாக எழுத முடிந்தது. இந்த ஒரு தருணத்திற்காகவாவது அவருக்கு நன்றி சொல்லக்கூடிய சம்பவம் அடுத்த நாள் நிகழ்ந்தது.

அமலதாஸின் இரண்டாம் நாள்.

மிக ஞாபகமாக அவர் எல்லோரையுமே அந்த ஆங்கிலச் செய்யுளை எழுதச் சொல்ல, மற்றவர்கள் விரை வீக்கத்திற்காக லாட்ஜ் வைத்தியரைச் சந்திக்கச் சென்றவர்கள் போல தயங்கிக் கொண்டிருக்கும் போது நான் இரண்டே நிமிடத்தில் கிடுகிடுவென்று எழுதி விட்டு கெத்தாக நிமி்ர்ந்தேன். அரையும குறையுமாக எழுதப்பட்டிருந்த ஒவ்வொருவரின் நோட்டுப் புத்தகமாக பார்த்துக் கொண்டு திட்டிக் கொண்டு வந்தவர்,  என் நோட்டைப் பார்த்து விட்டு திகைத்தார். சந்தேகம் கண்ணில் மின்னிற்று. முந்தைய ஆண்டுகளில், கணித வகுப்புகளில் தொடர்ந்து அடிவாங்குவதின் மூலம் 'நான் ஒரு மக்கு' என்கிற எண்ணம் அவருக்குள் உறைந்திருக்க வேண்டும். 'இவன் எப்படி இதை எழுதியிருக்க  முடியும்? என்கிற கேள்வி பள்ளிக்கட்டிடம் அளவிற்கு உயரமாக அவருக்குள் நின்றிருக்க வேண்டும். எனவே நான் புத்தகத்தைப் பார்த்துத்தான் காப்பியடித்திருக்க வேண்டும் என்று முடிவே செய்து விட்டார். மற்றவர்களைப் போல் நானும் தப்புதவறுமாக எழுதியிருந்தால் கூட தப்பித்திருப்பேன். நிமிர்வதற்குள் கன்னத்தில் ஓங்கி விழுந்த அறையில் பொறி கலங்கியது. "போய் போர்டுல இதை அப்படியே எழுதுடா பார்க்கலாம்".

பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு போர்டு அருகே சென்றேன். மொத்த வகுப்புமே என்னை அவநம்பிக்கையாய்ப் பார்த்தது. சாக்பீஸூம் கரும்பலகையும் விநோத சப்தத்துடன் மோதிக் கொள்ளும் அபூர்வமான அனுபவத்துடன் கடகடவென்று எழுதி முடித்தேன். வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்த முழு வகுப்பும் அந்த திகைப்பு அடங்குவதற்குள், இதற்கு ஆசிரியரின் எதிர்வினை என்ன, என்று அடுத்த பரபரப்பிற்கு தயாராகி அவரைப் பார்க்க ஆரம்பித்தது. இதை அமல்தாஸ் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை என்பது தெளிவாகவே தெரிந்தது. 'சரி' என்றாற் போல் ஏதோ முனகி விட்டு வெளியே சென்றார்.

செய்யாத தப்பிற்கு தண்டனை பெற்ற கழிவிரக்கத்தில் அப்போது அழுதேன் பாருங்கள் ஒர் அழுகை!  கண்ணாம்பாவெல்லாம் பிச்சை வாங்க வேண்டும். என் ஜியாமெண்ட்டரி பாக்ஸை சேதப்படுத்திய குற்றத்திற்காக ஒன்பதாம் வகுப்பிலிருந்தே நான் பேசாமல் இருந்த சேகர் கூட வந்து 'இட்ஸ் ஓக்கேடா மச்சான். விடு' என்று அமைதிப்படுத்தும் படி ஆயிற்று.

ஆக...

சரி சரி. உங்களுக்கு புரிந்து விட்டிருக்கும்.

()

இப்போது 'The Wrong Man' (1956) -க்கு வருவோம். அப்பாவியொருவன் குற்றவாளியாக தவறாக அடையாளங் காட்டப்படுதலின்  மூலம் அவனும் குடும்பமும் அல்லலுறும் கதை. உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

கிளப் ஒன்றில் செலோ இசைக்கலைஞனாக பணிபுரியும் Manny Balestrero தன் மனைவியுடனும் எப்போதும் ஒருவரையொருவர் சீண்டிக் கொண்டிருக்கும் இரண்டு மகன்களுடனும் பணப்பற்றாக்குறையிடையிலும் அமைதியான வாழ்க்கையை வாழ்கிறான். மனைவியின் வைத்தியச் செலவிற்காக இன்ஸூரன்ஸ் பாலிசியின் மீது கடன் வாங்கச் செல்லும் போது பிடிக்கிறது ஏழு மற்றும் அரைச் சனி.

ஹிட்ச்காக்கின் திரைக்கதை சாகசம் இதிலும் வெளிப்படுகிறது. படத்தின் துவக்கத்திலிருந்து இறுதிவரை எங்குமே தடம் மாறுவதில்லை. நூல் பிடித்தாற் போல் செல்கிறது.

இந்த மாதிரியான சஸ்பென்ஸ் படங்கள் தமிழில் ஏன் சாத்தியப்படுவதில்லை என்று ஆச்சரியமாக இருக்கிறது. அறிந்தோ அறியாமலோ வணிக ரீதியாக வெற்றிகரமான தமிழ்ப்படங்களுக்கென ஒரு வடிவமைப்பு உருவாகி விட்டிருக்கிறது. அது எப்படிப்பட்ட கதையென்றாலும் இரண்டு மூன்று சண்டைக்காட்சிகளும், கவர்ச்சி நடனங்களும், ஒரு சோகப்பாட்டும், திணிக்கப்பட்ட ரொமான்ஸூம் சென்டிமென்ட்டும் இருக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியிருக்கிறது.  எனவேதான் மார்பில் குண்டடி பட்ட நாயகன் உடனே ஆஸ்பத்திரிக்கு போய்த் தொலையாமல், அரைமணி நேரம் வசனம் பேசி பிறகு செத்துத் தொலைக்கிறான். நாயகனின் எல்லா கல்யாண குணங்களும் கொண்ட யோக்கியனை அவனுடைய காமாந்தகார நண்பன் வலுக்கட்டாயமாக கிளப் ஒன்றிற்கு அழைத்துச் செல்கிறான். அப்போதுதானே ஒரு கவர்ச்சி நடனத்தை நுழைக்க முடியும்?

இப்படியாக திரைக்கதையை அவரவர்களின் அபிலாஷைகளின் படி கொத்து பரோட்டா போட்டால் எப்படி அது ஒரு நல்ல திரைப்படமாக உருவாகும்? தமிழில் நான் கவனித்தவரை அதனளவில் சிறப்பாக உருவாக்கப்பட்ட சஸ்பென்ஸ் திரைப்படங்களாக எஸ்.பாலச்சந்தரின் 'பொம்மை' யையும் கே.பாலச்சந்தரின் 'எதிரொலி'யையும் குறிப்பிட முடியும்.


காவல்துறையின் விசாரணையில் சிக்கித்தவிக்கும் அப்பாவி மனிதராக HENRY FONDA மிக அற்புதமாக நடித்துள்ளார்.

ஹிட்ச்காக்கின் சிறுவயதில் அவருடைய தந்தை, இவரின் குறும்புத்தனங்களுக்கு  தண்டனை தரும் பொருட்டு அருகிலிருக்கும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சில நிமிடங்கள் லாக்கப்பில் அடைத்து வைக்குமாறு வேண்டிக் கொள்வாராம். சிறுவயதிலேயே காவல்துறையினர் மீது ஆழப்பதிந்த இந்த விநோதமான பயவுணர்வு இந்தப் படத்தின் பல காட்சிகளில் தன்னிச்சையாக வெளிப்பட்டிருப்பதாக ஹிட்ச்காக் ஓர் நேர்காணலில் கூறுகிறார்.

ஹிட்ச்காக் தனது படங்களில் சில விநாடிகளில் ஏதாவது ஒரு அடையாளமில்லா பாத்திரமாக தோன்றி மறையும்  CAMEO APPEARANCE மிகப் பிரபலமானது. இதைக் கண்டுபிடிக்கவே சில திரைப்படங்களை மீண்டும் கூர்ந்து பார்த்திருக்கிறேன். இதில் அவ்வாறான சிரமங்கள் ஏதும் தராமல் இயக்குநரே படத்தின் ஆரம்பத்தில் நிழலுருவமாக தோன்றி படத்தின் போக்கைப் பற்றி சுருக்கமாக விவரிக்கிறார்.

ஹிட்ச்காக்கின் ரசிகர்கள் மாத்திரமல்லாது அனைவருமே கட்டாயமாக பார்க்க வேண்டிய படமாக பரிந்துரைக்கிறேன்.

தொடர்புள்ள பதிவு:

ஹிட்ச்காக்கின் அட்டகாசமானதொரு திரில்லர் 

suresh kannan