...சமீபத்தில் என்னுடைய விருப்பத்திற்குரிய தமிழ் சினிமா பாடல் திரட்டைக் கண்ணுற்ற நண்பர் ஒருவர் அதிர்ந்து போனார். காரணம், சமகால இசையமைப்பாளர்களில் இடம் பெற்றிருந்தவர்கள், நான் தொடர்ந்து விமர்சித்து வரும் இளையராஜா (ஹே ராம் : நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி, குணா : கண்மணி அன்போடு), ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா என்றுதான் இருந்ததே தவிர அதில் ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் இல்லை. ஏனென்றால், எனக்கு ரஹ்மானின் இந்திப் பாடல்கள்தான் பிடிக்கும் (உ-ம்: தில்லி 6). ...
இப்படியான அபத்தமான கருத்தை அவர் பிறிதொரு சமயங்களிலும் எழுதிய ஞாபகம். ஒருவரின் இசை இந்தியில் கேட்டால் பிடிக்கும்; தமிழில் கேட்டால் பிடிப்பதில்லை என்பதை எப்படி ஒருவரால் சொல்ல இயலும் என்பதே எனக்குப் புரியவில்லை. இசை மொழிகளைக் கடந்தது என்பதை நாமெல்லாம் அறிவோம். மேலும் மொழியின் துணைகொண்டு அமையும் பாடல்கள் எல்லாம் ஒரு பாவ்லாதான். இசைதான் ஆதாரம். எனவேதான் என்னால் அட்சரம் கூடப் புரிந்து கொள்ள முடியாத இந்தித் திரைப்பட இசையை, இந்துஸ்தானி இசையை, ஸ்பானிய இசையை... ஏன் சாருவே சிபாரிசு செய்த நான்சி அஜ்ரத்தைக் கூட இசைக்காக மாத்திரமே ரசிக்க முடிகிறது. சமயங்களில் பிரபலமான தமிழ்ப்பாடல்களினால் அமைந்த instrumental தொகுப்புகளை அசலை விடவும் அதிகமாக ரசிக்க முடிகிறது. நண்பர் சாருவிற்கு ரகுமானின் இந்த தமிழ்ப்பாடலை பரிந்துரைக்க விரும்புகிறேன்.
கணினியின் சன்னலை சுருக்கி (minimise)வீடியோவை தவிர்த்து ஒலியை மாத்திரம் கேட்கவும். இந்தப் பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும் என்னுள் ஏதோ ஒன்று உடைந்து போகின்றது. உள்ளுக்குள் இருக்கும் அத்தனை ரணங்களையும் கண்ணீரின் மூலம் வெளியே அடித்துத் தள்ள முயலும் மாயவித்தையை இந்தப் பாடல் செய்கிறது. இதே அனுபவம்தான் கேட்கும் அனைவருக்கும் (அது தமிழ் அறியாத அன்பர்களுக்கும் சேர்த்து) அமையும் என்று உறுதியாகச் சொல்ல இயலாவிட்டாலும் உங்களுக்குள் ஏதோவொரு சலனத்தை ஏற்படுத்தத் தவறாது என்பதை மாத்திரம் உறுதியாகச் சொல்ல முடியும். இந்தப் பாடலுக்காக ஸ்வர்ணலதாவிற்கு தேசிய விருது கிடைத்த ஞாபகம். பாடலை கேட்டு முடித்த ஒவ்வொரு முறையும் ஸ்வர்ணலதாவின் கையை முத்தமிட விரும்புகிறேன்.
suresh kannan