Tuesday, June 21, 2011

ஆரண்ய காண்டம் - உலக சினிமாவின் அடையாளம்

தீவிரமாக துவங்கி சட்டென அபத்தமாக முடிவது 'கருப்பு நகைச்சுவை' யின் இயல்புகளில் ஒன்று என்று சொல்லியிருந்தேன் அல்லவா? அதற்கான உதாரணக் காட்சி ஒன்று.

தனது நம்பிக்கையான அடியாட்களில் ஒருவனான முள்ளு, தங்களுக்குத் தெரியாமல் எதிரணி நபரான பசுபதியிடம் எதையோ பேரம் பேசப் போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ளும் ரவுடித் தலைவன் கஜேந்திரனும் வலது கை கஜபதியும் காவல் நிலைய வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போதும் எதற்கும் அசராத கஜேந்திரன் பொறுமையாக காத்துக் கொண்டிருக்க, கஜபதியோ பல்லைக் கடித்துக் கொண்டிருக்கிறான். அப்போது அங்கு வரும் ஜோஸ்யம் கூறும் ஒருவன் இருவரிடமும் தொணதொணவென்று அரற்றிக் கொண்டேயிருக்கிறான். " பாருங்க சார்..நீங்க ரெண்டு பூவ மனசுல நினைச்சுக்கங்க. அதை நான் சரியா சொல்லிட்டன்னா.. என் கிட்ட ஜோசியம் பாருங்க... இல்லாட்டி வேண்டாம் சார். ..நீங்க நினைச்சது வெள்ளைல மல்லிகையும் சிவப்புல ரோஜாவும்.சரியா"  ஜோஸய்க்காரனின் தொணதொணப்பை சகிக்க முடியாமல் கஜபதி தவிக்க, கஜேந்திரன் அதற்கும் அசராமல் உட்கார்ந்திருக்கிறான். ஒருநிலையில் ஜோஸ்யக்காரன் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு விலகி விடுகிறான். இருந்தாலும் இடிசசபுளி போல அமர்ந்திருக்கும் கஜேந்திரனிடம் தழுதழுத்த குரலில் கேட்கிறான். "அப்படி என்ன பூவத்தான் நினைச்சீங்க?'

சற்று நேரம் மவுனம். கஜேந்திரன் கரகரத்த குரலில் சொல்கிறான்.

பிரபு - குஷ்பு.

இந்த பெயர்களின் பின்னாலுள்ள trivia-வினால் திரையரங்கமே வெடிச்சிரிப்பில் அலறுகிறது.

சப்பையும் சுப்புவும் உடலுறவிற்குப் பின் சாவகாசமாக அமர்நது பேசிக் கொண்டிருக்கும் போது கதவு தட்டப்பட, சிங்கப் பெருமாள்தான் வந்து விட்டார் என்று சப்பை அழ ஆரம்பிக்க... அந்தக் காட்சி இன்னொரு உதாரணம்.

நகைச்சுவையில் துவங்கி தீவிரத்தில் முடிவதற்கு உதாரணம் .. ஸ்பீக்கர் போன் காட்சி. 'பசுபதிய போட்டுத் தள்ளிடு"

இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பம்சம்... மிக யதார்த்தமான உரையாடல்கள். வடசென்னை ரவுடிகள் என்ன ஆக்ஸ்போர்டு ஆங்கிலத்திலா பேசி்க் கொள்வார்களா? 'யாருண்ணே.. அண்ணியா, என்ற கேள்விக்கு... மனைவி தந்த தொணதொணப்பு எரிச்சலில் இருக்கும் பசுபதி  "இல்ல. சுண்ணி" என்கிறான். ஆனால் விவஸ்தையே இல்லாத சென்சார் போர்டு இந்த மாதிரி வார்த்தைகளை வெட்டி அதன் மூலமே இந்தக் காட்சிகளை  ஆபாசப்படுத்தியிருக்கிறது. பொதுச் சமூகத்துடன் புழங்கும் போது இம்மாதிரியான வார்த்தைகளை நிச்சயம் நாம் கடந்து வந்திருப்போம்; உபயோகித்திருப்போம். ஆனால் திரையில் இதை கேட்கும் போது மாத்திரம் பாசாங்குடன் கோபம் கொள்கிறோம் என்பது மாத்திரம் எனக்கு புரியவில்லை. மேலும் இது 'வயது வந்தவர்களுக்கான படம்' என்ற சான்றிதழுடன்தான் வெளியாகிறது. அதிலும் குறிப்பாக ஆ.கா. போன்ற படங்கள் Matured Audience எனப்படும் முதிர்ச்சியடைந்த பார்வையாளர்களுக்கு மாத்திரமான படைப்பு. தயாரிப்பாளரான, எஸ்.பி.சரண், குழந்தைகளும் படத்தின் தொனியோடு உடன்பாடில்லாத பார்வையாளர்களும் தவிர்க்க வேண்டிய படம் என்று தெளிவுப்படுத்துகிறார்.

வசனங்களில் யதார்த்தம் தவிர, ஒரு குறிப்பிட்ட வகையான உரத்த குரலில் அல்லாத  பிரத்யேக நையாண்டி படம் பூராவும் பொங்கி வழிந்து கொண்டேயிருக்கிறது.

"நீ மாத்திரம் உயிரோட இருந்திருந்தா கொன்னு போட்டிருப்பண்டா"


"சாமி கூட உக்கார்ந்து சரக்கடிச்சேன்னு சொன்னால ஊருல ஒரு பய நம்பமாட்டானே"


"தோத்தாங்கோளிகளா, என் பீயத் தின்னுங்கடா.. கிழட்டுக் கோளி...


"என்னா நீங்க டொக்காயிட்டீங்களா?"


"ரெண்டு கோடி சரக்கை அம்பது லட்சத்துக்கு தரேன்றான் குருவி."  - " ஏன் அவங்க அக்கா என்ன லவ் பண்றாளா?"


"ஆண்டிங்கள உஷார் பண்ணணும்னா ஒரு டெக்னிக் இருக்கு. ரஜினி பிடிக்குமா, கமல் பிடிக்குமா -ன்னு கேட்கணும். கமல் பிடிக்கும்னு சொன்னா ஈசியா கவுத்தில்லாம்".


"பயம் போகலை.. ஆனா தைரியம் வந்துடுச்சு"


"பசுபதிய என்ன பண்றது -ன்னு யோசிக்கறேன்" - ம்.. முத்தம் கொடுத்து மேட்டர் பண்ணு".


"சார்.. இத வெளில சொல்ல மாட்டீங்கள்ள... - ம்.... தெரியலே....

குறிப்பாக சிங்கப்பெருமாளின் அடியாள் ஒருவன் ஆண்ட்டிகளை மடக்குவதற்கான டெக்னிக்குகளை விவரிப்பது, மற்றவர்கள் சப்பையை கலாய்ப்பது, கஜேந்திரனின் குரூரத்தைப் பற்றி பசுபதி டீக்கடையில் விவரிப்பது  போன்ற காட்சிகளின் தொனியும் நீளமும், சாவகாசமும்... quentin tarantino -வின் படக்காட்சிகளை நினைவுப்படுத்துகின்றன. அந்த வகையறா இயக்குநர்களின் பாதிப்பு ஆ.கா.வில் தெரிந்தாலும் ஈயடிச்சான் காப்பியாக அல்லாமல் inspiration-ல் தமிழ்ச் சூழலுக்கு பொருத்தமாக வசனங்களையும் திரைக்கதையையும் அமைத்திருப்பதுதான் தியாகராஜன் குமாரராஜாவை சிலாகிக்க வைக்கிறது.

படத்தின் இன்னொரு பெரிய பலம் வினோத்தின் ஒளிப்பதிவு. படத்தின் உள்ளடக்கத்திற்கு பொருத்தமாக இயக்குநரின் மனச்சாட்சி போல் செயல்பட்டிருக்கிறார். Source of lighting எனப்படும் அந்தச் சூழலில் இருக்கும் இயற்கையான ஒளியைக் கொண்டே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. சிங்கப்பெருமாள் வீட்டின் இருளும் வெளிச்சமும் இன்டீரியரும், பாவா லாட்ஜின் கோணங்களும் பசுபதி சேஸிங் காட்சிகளும் தமிழ் சினிமாவிற்குப் புதியது. ஒரே நாளின் நிகழ்வுகளின் தொகுப்பு என்பதால் எடிட்டிங்கின் பங்களிப்பு இதில் சிறப்பாக அமைந்துள்ளது. ஆனால் இப்படியானதொரு கால எல்லைக்குள் திரைக்கதையை அமைத்துக் கொள்ளும் போது காலத்தின் தொடர்ச்சி கறாராகவும் சீராகவும் வருவதில் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் சில இடங்களில் இதில் நழுவியிருப்பது போல் தோன்றுவது நெருடலாக இருக்கிறது.

இளையராஜா தன்னுடைய இத்தனை வருட அசுர உழைப்பால் கிடைத்த பின்னணியிசை புகழை, யுவன் இந்தப் படத்தின் மூலம் பெற்றிருக்கிறார் என்று சொன்னால் சற்று மிகையாகத் தோன்றலாம். இசையை நவீன யுகத்திற்கு பொருத்தமாகவும் கிளிஷேக்களை உதறியும் உபயோகிப்பதில் ராஜாவையும் யுவன் தாண்டிச் சென்றிருக்கிறார் என்பது நிச்சயம் மிகையாக இருக்காது. பசுபதிக்கும் கஜேந்திரன் குழுவினருக்கும் இடையில் நிகழும் தீவிரமான சண்டைக்கு (ஆனால் எனக்கு காமெடியாகத்தான் தோன்றியது) வழக்கமாக உபயோகிக்கும் பரபரப்பான இசைக்குப் பதிலாக  துள்ளலான இசையையும், சிறுவன் கொடுக்காப்புளி கோகெய்ன் பையை ஒளித்து விட்டு வர ஓடிச் செல்லும் காட்சியில் தந்திருக்கும் இசையும் சப்பையும் சுப்புவும் உரையாடும் காட்சிகளில் தந்திருக்கும் இசையும் பிரமிக்க வைக்கிறது. என்றாலும் பீத்தோவனின் இசைத் துணுக்குகளும், IN THE MOOD FOR LOVE திரைப்படத்தின் பின்னணி இசையும் சில இடங்களை நினைவு கூர வைக்கின்றன.

தமிழ் சினிமாவை சர்வதேச தளத்திற்கு நகர்த்திச் செல்வதை இந்தப் படத்தின் மூலம் சாத்தியப்படுத்தியதில் யுவனின் பங்கும் அபாரமாக அமைந்திருக்கிறது எனலாம்.
 மறுபடியும் மறுபடியும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா என்னும் நவீன திரைக் கதைச் சொல்லியை வியக்க வேண்டியிருக்கிறது. சில உதாரணங்கள் தருகிறேன்.

இந்தப் படத்தில் பெரும்பாலும்  80-களின் திரைப்படங்களின் பாடல்கள் எங்காவது ஒலி்த்துக் கொண்டேயிருக்கின்றன. (இது சற்று அசெளகரியத்தை தருகிறது என்பதையும் சொல்ல வேண்டும்). தொலைக்காட்சி வீடியோவில் ஒளிபரப்பாகும் பாடல்களை பார்வையாளனுக்கு எந்தவொரு இடத்தில் இயக்குநர் காட்டுவதில்லை. ரவுடிகளுக்கு இடையே இடைத்தரகராக செயல்படும் சப்-இன்ஸ்பெக்டர் மயில்வினாயகம், டீக்கடையில் பொன்மேனி உருகுதே... வீடியாவில் சிலுக்குவை பார்த்து சிலாகிக்கிறார். ''இந்தப் பொண்ணை எனக்கும் பிடிக்கும்யா".. அதே போல் சிங்கப் பெருமாளின் வீட்டிலும் தொலைக்காட்சி இயங்கிக் கொண்டேயிருக்கிறது. எல்லா இடத்திலும் அவைகளின் ஒலியை மாத்திரமே பார்வையாளனால் கேட்க முடிகிறது. ஆனால் ஒரே ஒரு இடத்தில் தொலைக்காட்சியின் பிம்பத்தை இயக்குநர் காட்டுகிறார். அது அணைக்கப்பட்ட தொலைக்காட்சியின் முன் சப்பையும் சுப்புவும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கும் பிம்பங்கள். போலியாக கட்டமைக்கப்பட்ட பிம்பங்களை விட அன்றாட வாழ்வின் நிஜ பிம்பங்களையே இயக்குநர் பார்வையாளனுக்கு காட்ட விரும்புகிறார் என்று யூகிக்க முடிகிறது. (எப்பூடி).

பசுபதியின் மனைவி நைச்சியமாக கடத்தப்படும் போது வீட்டின் முன் வடை சுட்டுக் கொண்டிருக்கும் ஒரு கிழவி பிரேமின் ஓரத்தில் போகிற போக்கில் தெரிகிறார். இயக்குநர் நினைத்திருந்தால், அவருக்கு ஒரு குளோசப்பை போட்டு, சிங்கப்பெருமாளின் ஆட்கள் பசுபதியின் மனைவியை அழைத்துச் செல்வதை பார்ப்பது போல் காட்டி, பார்வையாளனின் மனதில் நிறுவி, அடுத்தக் காட்சியின் தொடர்ச்சிக்கு உபயோகப்படுத்தியிருக்கலாம். சிறிது நேரம் கழித்து பசுபதி வந்து அந்த கிழவியிடம் விசாரிக்கும் போதுதான்.. அவர் குளோசப்பில் காட்டப்படுகிறார்.

நாயகன், சென்னையிலிருந்து சிங்கப்பூர் வருவதை இன்னமும் விமானத்தைக் காட்டி, பார்வையாளனை அவமானப்படுத்த வேண்டாம் என்பதற்காக இதை உதாரணமாகச் சொல்கிறேன்.

அதே போல் சிறு கதாபாரத்திரத்தை கூட எப்படி நுட்பமாக வடிவமைப்பது என்பதற்கான பாடம் இதில் இருக்கிறது. சில காட்சிகளில் மாத்திரமே தோன்றும் சப்-.இன்ஸ் மயில்வினாயகம். குருவி மூலம் கடத்தி வரப்படும் கஜேந்திரனின் சரக்கை குருவி விற்று விட நினைக்கிறான். அது எங்கே கிடைக்கும் என்கிற விவரத்தை மயில்விநாயகம்தான் பசுபதிக்கு பணத்தை வாங்கிக் கொண்டு தெரிவிக்கிறான். கூடவே அது கஜேந்திரனின் சரக்கு, ஜாக்கிரதை என்று எச்சரிக்கவும் செய்கிறான்.

உரையாடலின் இறுதியில் பசுபதி 'இதை வெளியில் சொல்ல மாட்டீங்களே" என்று கேட்பதற்கு மயில்விநாயகம் சொல்கிறான். "தெரியலையே".

இன்னொரு முறை இன்னொரு தகவலைப் பரப்புவதற்கு தொலைபேசுவதற்காக பசுபதியின் மொபைல் போனைக் கேட்கிறான். தகவல் தெரிவிப்பதற்காக பணம் பெற்றுக் கொண்டாலும் போன் காசை மிச்சப்படுத்தும் அல்பத்தனம் காரணமாக இதைச் செய்கிறான். பசுபதி அதற்கும் தான் காசு தருவதாக சொல்வதும் அசடு வழிந்து கொண்டே தன்னுடைய மொபைலை உபயோகிக்கிறான். இடைத்தரகனுக்கு, அல்பத்தனமாக இருந்தாலும் பணம்தான் முக்கியம் என்பதற்கான கச்சிதமான கதாபாத்திர வடிவமைப்பு என்று எனக்குத் தோன்றுகிறது.

அதே போல் கொலைவெறியுடன் துரத்தும் கஜேந்திரனின் ஆட்களிடம் தப்பிப்பதற்காக உயிர்பயத்துடன் ஓடும் பசுபதியின் கூடவே அவனது மனவோட்டமும் ஒலியாக பார்வையாளர்களுக்கு சொல்லப்படுகிறது. "என் கூட என் சாவும் ஓடிவர்றது எனக்குத் தெரியுது". படத்தின் கவித்துவமான தருணங்களில் இந்தக் காட்சியும் ஒன்று.

இந்தப் படத்தின் அசலான லொக்கேஷன்கள் பிரமிக்க வைக்கிறது. ஒரு மளிகைக்கடை காட்டப்படுகிறதென்றால் அது உண்மையான மளிகைக்கடையாக இருக்கிறது. செளகார்பேட்டை, மின்ட் தெருவில் நுழையும் காமிரா அற்புதமாக அதை படம்பிடித்திருக்கிறது. (ஆனால் இது வடசென்னையின் நிலப்பகுதியை காட்சிப்படுத்தவில்லை. அந்த அடையாளம் தேவையில்லையென்று இயக்குநர் நினைத்திருக்கலாம்).

இப்படி பல நுட்பமான காட்சிகளை உதாரணமாக சொல்ல முடியும். அதே சமயத்தில் சிறு சிறு குறைகளும் இல்லாமல் இல்லை. தனது தந்தையை, கடத்திச் சென்றவர்களிடமிருந்து மீட்டுத் தருவதாக உறுதியளிக்கும் பசுபதியிடம், சிறுவன் கொடுக்காப்புளி கேட்கிறான். "உன் பொண்டாட்டியையே பத்திரமா வெச்சுக்கத் துப்பு இல்ல. எப்படிய்யா எங்க அப்பாவை கொண்டாருவே?" அதிகப்பிரசங்கித்தனமாக பேசும் குழந்தைகள், தமிழ் சினிமாவிற்குப் புதிதில்லை என்றாலும் இத்தனை விஷயங்களில் கவனம் செலுத்தியிருக்கும் இயக்குநர் இந்தப் பிசிறுகளையும் கவனித்திருக்கலாம். சிக்கலான ஒரு சூழ்நிலையில், அதுவும் முகம் பார்த்திராத ஓர் அந்நியனிடம் ஒரு சிறுவனால் இப்படிப் பேசு முடியுமா? மற்றபடி அந்தச் சிறுவனின் நடிப்பு பல இடங்களில் அட்டகாசம்.

இயக்குநர் தியாகராஜன் குமாராஜா லயோலாவில் விஸ்.காம் படித்து விட்டு, சில விளம்பரப் படங்களை இயக்கி விட்டு, ஆட்டோ (ஓரம் போ) -விற்கு வசனம் எழுதி விட்ட அனுபவங்களில் இந்தப் படத்தை இயக்க முன்வந்திருக்கிறார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, அவர் யாரிடமும் இதுவரை உதவி இயக்குநராக இருந்தததில்லை என்பது. தனித்தன்மையோடு ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கு இது ஒரு முக்கியமான தகுதி என்று நினைக்கிறேன். தமிழ் சினிமாவில் இன்னமும் கூட குருகுல வாசமே கல்வியாக அமைகிறது. இது ஒரு வகையில் பலம்தான் என்றாலும் இன்னொரு வகையில் குருக்களின் அபத்தங்களின் வழியிலேயே சிஷ்யர்களும் பின்பற்றிச் செல்லும் அவலமே பெரும்பாலும் நிகழ்கிறது. தமிழ் சினிமாவின் பாதையில் முக்கியமான மைல்கல் திரைப்படமான 'நாயகன்' இயக்கிய மணிரத்னமும் யாரிடமும் உதவியாக இருந்திராதவர் என்பதையும் இங்கு நினைவு கூறலாம்.

ஆரண்ய காண்டம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கி வைத்திருக்கிறது எனலாம். கதைச் சொல்லாடலில் ஓர் அதிநவீன பாதையை இட்டுச் சென்றிருக்கிறார் குமாரராஜா. இனி வரும் இளம் இயக்குநர்கள் அதை இன்னமும் முன்னெடுத்துச் செல்வார்களா, அல்லது வணிகப்பட மாய்மாலங்களின் உத்திகளின் மூலம் அந்தப் பாதையை குப்பைகளினாலும் மலத்தினாலும் மூடி விடுவார்களா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

நிச்சயமாக இந்தத் திரைப்படத்தை திரையரங்கில் காணுங்கள். நிச்சயம் அது ஒரு புதிய அனுபவமாக இருக்கும். ஒளிப்பதிவும் பின்னணி இசையும் அத்தகையது. மொக்கை பிரிண்டில் கண்டிப்பாக பார்க்காதீர்கள்..அரங்கில் காண முடியாவிட்டால் ஒரிஜினல் டிவிடி வரும் காத்திருந்தாவது பாருங்கள். எவ்வித அரசியலும் இல்லாவிட்டால், ஆரண்ய காண்டத்திற்கு நிச்சயம் நான்கைந்து தேசிய விருதுகள் நிச்சயம். சோமசுந்தரத்திற்கு துணை நடிகருக்கான விருது நிச்சயம் கிடைக்கும் என்று நினைக்கிறேன். இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங்..பின்னணி யிசை, சிறந்த திரைக்கதை.. இத்தனைக்கும்.

இத்தனை எழுதி வி்ட்டாலும். ஆரண்ய காண்டத்தின் முக்கியத்துவத்தை சரியாகச் சொல்ல வில்லையோ என்கிற தயக்கம் ஏற்படுகிறது. அத்தனை வலுவான படத்தை இன்னமும் வலுவாக உங்களுக்கு பரிந்துரைப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். DO NOT MISS IT.  முன்னமே சொல்லியிருந்த படி இந்தத் திரைப்படம் முதிர்ச்சியுள்ள பார்வையாளர்களுக்கானது. இன்னமும் லாலிபாப் சுவைக்கும் வாலிப வயோதிகர்கள், இந்தப்படத்தின் அருகில் கூட வந்து தொலைக்காதீர்கள். நன்றி.

suresh kannan

Saturday, June 18, 2011

ஆரண்ய காண்டம் - தமிழ் சினிமாவின் மஞ்சள் நீராட்டு விழா


பொதுவாக தமிழ் சினிமா பற்றி எப்போதும் திட்டியே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று என் மீது ஒரு புகார் உண்டு. ஆனால் அது அனைத்துமே தமிழ் சினிமாவின் மீதான பிரேமையினால்தான் என்பதை என் பதிவுகளை சரியான தொனியில் வாசிப்பவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். வழக்கமான தமிழ் சினிமாவிலுள்ள அபத்தங்கள் குறித்து  ஆவேசமாக உரையாடியிருக்கிறேன்;  வருத்தப்பட்டிருக்கிறேன் ; அதன் மூலம் ஆபாச வசவுகளை பெற்றிருக்கிறேன். இப்படி எழுதுவது குறித்து சமயங்களில் என் மேலேயே எனக்கு எரிச்சல் உண்டு.

ஆனால் இவைகளிலிருந்து பெரியதொரு விடுதலையை பெற்றுத் தந்திருக்கிறார் ஆரண்ய காண்டம் திரைப்படத்தின் இயக்குநரான தியாகராஜன் குமாரராஜா. தமிழ் சினிமாவின் முன்னோடிகள் என்று இதுவரை சொல்லப்பட்டிருப்பவர்கள் அனைவரையும் ஓர் அசுரப் பாய்ச்சலில் தாண்டிச் சென்றிருக்கிறார் இந்த இயக்குநர். சம்பிரதாயமான சொற்களில் அல்லாமல் உண்மையாகவே ஓர் உலக சினிமாவின் இலக்கணங்களுடன் உருவாகியிருக்கிறது ஆரண்ய காண்டம். ஆம். தமிழ் சினிமா சற்று முதிர்ச்சியடைந்து தனது மஞ்சள் நீராட்டு விழாவை கொண்டாடுவதன் மூலம் 'வயதுக்கு வந்ததன்' அடையாளத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. அதை சாத்தியப்படுத்திய தியாகராஜன் குமாரராஜாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

உலக சினிமா என்றாலே, ரத்தம், வன்முறை, ஆபாசம், கெட்ட வார்த்தைகள் போன்றவைகளைக் கொண்டவை என்கிற முன்முடிவுகளோடும் தவறான புரிதல்களோடும் அணுகுகிறவர்கள் உண்டு. ஒரு துளி ரத்தத்தை கூட காண்பிக்காமல் வன்முறையின் உக்கிரத்தையும்  அழகியலையும், ஒரு முத்தம் கூட இல்லாமல் காதலின் அவஸ்தையையும் சித்தரித்திருக்கிற பல உலக சினிமா உதாரணங்களைச் சுட்ட முடியும். ஆரண்ய காண்டம், தான் பயணிக்கிற காட்சிக் கோர்வைகளுக்கு பொருத்தமான தொனியையும் நிறத்தையும் இருண்மையையும் மிகக் கச்சிதமான திரைமொழியையும் கொண்டிருக்கிற காரணத்தினாலேயே இதை சந்தேகமின்றி உலக சினிமா என்று குறிப்பிட முடிகிறது.

இயக்குநர் மகேந்திரன் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டதைப் போல தமிழ் சினிமாவில் இருக்குமளவிற்கான நகைச்சுவை நடிகர்கள் வேறெந்த பிரதேச சினிமாவிலும் இருப்பார்களா என்று எனக்கும் தோன்றுவதுண்டு. ஆனால் தமிழில் இதுவரை அசட்டுத்தனமாக அல்லாமல் உருப்படியாக நகைச்சுவைக்கென்றே பிரத்யேக தமிழ் சினிமா ஏதும் வந்திருக்கிறதா என்றால் பாலுமகேந்திராவின் 'சதி லீலாவதி' , பாலச்சந்தரின் பாமா விஜயம், தில்லுமுல்லு போனற ஒரு சில திரைப்படங்களே தோராயமாக நினைவுக்கு வருகின்றன. தமிழில் கிளாசிக் காமெடி என்றால் பலரும் சட்டென்று குறிப்பிடுவது ' காதலிக்க நேரமில்லை'. ஆனால் இதை சில காட்சிகள் தவிர்த்து, முழுமையான திரைப்படமாக எத்தனை முயன்றும் என்னால்  ரசிக்கவே முடியவிலலை.

ஆனால்  'இருண்மை நகைச்சுவை' என்கிற வகைமையில் ஒரு தமிழ்த் திரைப்படம் கூட இது வரை வெளிவரவில்லை என்று சொல்லலாம். ஆரண்ய காண்டம் அந்த அவலத்தை துடைத்தெறிந்திருக்கிறது. ஒருவனின் புட்டத்தில் இன்னொருவன் எட்டி உதைப்பது என்பதையே தமிழ் சினிமாவின் நகைச்சுவையாக பெரும்பாலும் இதுவரை பார்த்து வந்திருக்கிறொம். 'கருப்பு நகைச்சுவை' என்பது தீவிரமான தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் படத்தில் அடியாழமாக ஒரு இழை நகைச்சுவையுடன் ஓடிக் கொண்டிருக்கும். மிகத் தீவிரமாக துவங்கும் காட்சி எதிர்பாராத ஒரு தருணத்தில் நகைச்சுவையாக முடிவது, நகைச்சுவையாக துவங்கும் காட்சி தீவிரத் தன்மையுடன் முடிவது போன்றவை கருப்பு நகைச்சுவையின் சில இயல்புத்தன்மைகள். . Quentin Tarantino, Coen brothers, Guy Ritchie போன்ற இயக்குநர்கள் இதில் விற்பன்னர்கள். இந்த வரிசையில் தமிழிலும் ஓர் இயக்குநர் உண்டு என்பதை பெருமையுடன் குறிப்பிடக்கூடிய ஒரு சாத்தியத்தை தியாகராஜன் குமாரராஜா ஏற்படுத்தியிருக்கிறார்.

முன்னரே குறிப்பிட்டிருந்த படி திரை மொழியை மிகக் கச்சிதமாக கையாண்டிருப்பதின் மூலம் உலக சினிமாவின் அந்தஸ்தை ஆ.கா. எட்டியிருக்கிறது. பெரும்பாலும் கிளிஷேக்களை கைவிட்டிருக்கிற சம்பிராதயமற்ற நான்-லீனியர் திரைக்கதை, நிகழ்வுகளுக்கு பொருத்தமாக, சற்று வெளிச்சமும் பெரும்பாலும் இருளுமான பின்னணியில் இயங்கும் ஒளிப்பதிவு, அட்டகாசமான பின்னணி இசை,  விளிம்பு நிலை சமூகத்தின் பாசாங்கற்ற வசனங்கள்,  டைம் லைனை பெரும்பாலும் கைவிடாத துல்லியமான எடிட்டிங், பொருத்தமான காஸ்டிங்,  பிரக்ஞைபூர்வமாக நிகழ்த்தப்பட்ட இயக்கம்... என்று அனைத்தும் சேர்ந்து வறண்ட பாலைவனத்தின் மழை போல இந்தத் திரைப்படத்தைக் கொண்டாட வைக்கின்றன.

அதற்கும் முன்பாக நாம் பாராட்ட வேண்டியது, இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளரை. இங்கு பல தயாரிப்பாளர்களுக்கு சினிமா குறித்த ஆர்வமோ, அறிவோ, கனவுகளோ இருப்பதாகத் தெரியவில்லை. இரண்டு கோடியைப் போட்டு ஐந்து கோடியை அள்ளி விடும் திட்டத்துடன் எவ்வித சமரசத்தையும் அதற்காக செய்யும் நிலையில் வணிகர்களே இங்கு இருக்கிறார்கள். ஒரு தயாரிப்பாளர், கதை சொல்ல வந்த புது இயக்குநரிடம் 'உன் ஜாதகத்தை கொண்டு வா, அது என் ஜாதகத்துடன் பொருந்தினால்தான் படம் தயாரிக்க ஒப்புக் கொள்வேன்' என்று கூறிய செய்தியை கேள்விப்பட்ட போது எனக்கு பெரிதாக ஆச்சரியமொன்றும் ஏற்படவில்லை. இதை விட கேனத்தனமான மூடநம்பிக்கைகள் எல்லாம் திரையுலகில் உலவுகின்றன. ஆனால் எஸ்பிபி சரண், சென்னை-28-ன் வெற்றிக்குப் பிறகு இந்த ஸ்கரிப்ட்டை தயாரிக்க முன் வந்தது மாத்திரமன்றி, பட வெளியீட்டின் தாமதத்தைப் பறறி கவலைப்படாமல் அசட்டுத்தனமான சென்சார் விதிகளிடம் போராடி படத்தை அதிக சேதமின்றி மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார். இவருக்குப் பாராட்டுக்கள்.

இந்தப் படத்தின் மிக முக்கியமான விஷயம் நடிகர் தேர்வு. ஒவ்வொரு பாத்திரமும் அதற்கெனவுள்ள பிரத்யேக குணாதியசங்களுடன் கச்சிதமாக தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்றால், அதற்குப் பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்திருப்பது முக்கியமானதாக இருக்கிறது. தமிழின் பல மூத்த நடிகர்கள் நடிக்க மறுத்த வேடத்தை (சிங்கப்பெருமாள்) இமேஜ் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அட்டகாசமாக நடித்திருக்கிறார் ஜாக்கி ஷெராஃப். எந்தவொரு  இடத்திலும் வேற்று பிரதேச நடிகர் என்கிற உணர்வு பார்வையாளனுக்கு வராமலிருப்பதே இந்தப் பாத்திரத்தின் வெற்றி எனலாம். 'சப்பை' என்கிற அசட்டுத்தனமான கோழை இளைஞன் பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் ரவிகிருஷ்ணா. பசுபதி, கஜேந்திரன், கஜபதி, சிறுவன் கொடுக்காப்புளி, சுப்பு, மயில்வாகனம். என்று ஒவ்வொரு பாத்திரமும் அதனதன் வார்ப்பில் கச்சிதமாக இயங்கி பிரமிப்பை ஏற்படுத்துகிறது.


நான் பிரத்யேகமாக குறிப்பிட்டு அழுத்தமாகச் சொல்ல விரும்புவது வாழ்ந்து கெட்ட ஜமீன் காளையனாக நடித்திருக்கும் சோமசுந்தரம் என்கிற நடிகரைப் பற்றி. இவர் கூத்துப் பட்டறை குழுவின் நடிகர் என அறிகிறேன். பிரேமின் ஓரமாக வந்து போகும் துணைப் பாத்திரம் போல் முதலில் அறிமுகமாகி, பின்பு ஒவ்வொரு பிரேமிலும் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டே போகும் இவரின் அசாத்தியமான நடிப்பைப் பார்த்து பிரமித்தே போனேன். தமிழின் சிறந்த யதார்த்த நடிப்பு என்று இதுவரை அறியப்பட்டிருக்கும் அத்தனை திறமைகளையும் ஒரே தாவலில் தாண்டிச் சென்றிருக்கிறார் என்று நான் குறிப்பிடுவது சற்று மிகையாகத் தோன்றினாலும் அது குறைந்தபட்சம் எண்பது சதவீதமாவது உண்மையாகத்தான் இருக்கும். 'நீ வேஸ்டுப்பா... என்று சிடுசிடுக்கும் மகனிடம்.... 'நீயும் அப்படிச் சொல்லாதடா..என் வெள்ளக் குஞ்சு' என்று தழுதழுக்கும் காட்சியில் எனக்குப் பொறி கலங்கிப் போயிற்று. இத்தனையொரு சிறந்த நடிப்பை இதுவரையில் எங்கும் நான் கண்டதில்லை. ராபர்ட் டி நீரோ.. என்கிறோம். ஜாக் நிக்கல்சன்.. என்கிறோம். சாமுவெல் ஜாக்சன் என்கிறோம்... அந்த வரிசையில் தமிழில் இனி இவரையும் வைத்து கொண்டாடலாம். ஆனால் இதற்குத் தீனி போடும் வகையிலான இயக்குநர்கள்தான் துரதிர்ஷ்டவசமாக தமிழில் இருக்கப் போவதில்லை.

ஆரண்ய காண்டத்தில் கதை என்கிற வஸ்து பெரிதாக ஒன்றுமில்லை. போதைப் பொருள் கடத்தல் சரக்குக்காக மல்லுக் கட்டும் இரண்டு ரவுடிக் கோஷ்டிகள், அதன் வலது கரங்கள், அல்லக்கைகள், இதனிடையே சிக்கி அல்லறும் ஒரு கோழை இளைஞன், மூத்த ரவுடியிடம் அவ்வப் போது அறைவாங்கும் இளம்பெண், தனது ஊரில் இழந்த போன பெருமையை நகரத்தில் பணம் சம்பாதிப்பதன் மூலம் மீட்க விரும்பும் ஜமீன், அவனின் மகன்...இவர்களின் நிகழ்வுகள், அடுக்கு மாடியின் ஜன்னல் காட்சிகள் போல் மாற்றிக் மாற்றிக் காட்டப்படுகின்றன. ஓர் அழுக்குப் பையிலிருக்கும் போதைப் பொருளை மையமாகக் கொண்டு சுழன்று வீழ்ந்து எழுந்து மடிகிறது இவர்களின் வாழ்க்கை. இதுவரை தமிழ் சினிமா அறவே கண்டிராத பிரமிக்க வைக்கும் திரைக்கதையின் மூலம் திறமையான கதைச் சொல்லாடலை முன் வைத்திருக்கிறார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா.

ஒரு கானகத்திற்குள் நுழையும் அந்நியனின் உணர்வை ஒரு திரைக்கதை தர உணர்த்த வேண்டும் என்று முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக ஆ.கா.வின் திரைக்கதையை கூறலாம். சாவகாசமாக துவங்கும் காட்சிகள், நெற்றில் அடித்தாற் போன்ற உணர்வுடன் சட்டென்று முடிகின்றன. ஒரு உதாரணம் சொல்கிறேன்.

சிங்கப் பெருமாளின் வலது கையான கஜபதி, போட்டி ரவுடித் தலைவனான கஜேந்திரன் என்பவன் எதிரிகளை துடைத்தெடுப்பதில் எத்தனை குரூரமானவன் என்பதை தேநீர் கடையில் அமர்ந்து சக அடியாட்களிடம் விவரித்துக் கொண்டிருக்கிறான். "அந்தப் பொண்ணு கட்டைவிரலை பிடிச்சு கஜேந்திரன் கரகரன்னு கடிச்சுத் துப்பிட்டான். அதான் தப்பு செய்யலையேன்னு கேட்டா... தப்பு செஞ்சப்புறம் கடிச்சுத் துப்ப முடியுமான்றான்". கஜபதி இதை சொல்லிக் கொண்டிருக்கும் போது கேட்டுக் கொண்டிருப்பவர்களில் ஒருவன் நம்பாமல் கபகபவென்று சிரிக்கிறான். "இதெல்லாம் பீலா. யாராவது ஒருத்தன் கிளப்பி இன்னொருத்தன் கிட்ட சொல்லி... அவன் இன்னொருத்தன் கிட்ட...

அந்த நான்கு பேருக்கும் தேநீர் கொண்டு வந்து வைக்கும் பணியாள் பெண்ணின் கையை குளோசப்பில் காட்டுவதோடு இந்தக் காட்சி சட்டென்று முடிகிறது.

அந்தப் பெண்ணின் கையில் கட்டை விரல் இருப்பதில்லை.

(தொடரும்)

suresh kannan

Friday, June 03, 2011

குதிரை பார்த்த கதைபடபூஜை தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அந்தப் படத்தின் இயக்குநர் முதற்கொண்டு பூஜை அய்யர் வரை தவறாமல் ஒரு வாக்கியம் சொல்வார்கள். 'இது பாத்தீங்கன்னா.. வித்தியாசமானதொரு கதை'... இறுதியில் இன்னொன்றும் சொல்வார்கள். 'படத்தை திருட்டு விசிடில பார்க்காம தியேட்டர்ல போய்ப் பாருங்க". தமிழ் சினிமா நசிவடைந்து போவதற்கு பைரசி பிரதான காரணங்களில் ஒன்று என்றாலும், திரையரங்கின் நிர்வாகங்களும் இன்னொரு காரணம் என்று சொல்கிறேன். ஏன்..?

கோடை விடுமுறையில் இருந்த குழந்தைகள் நச்சரித்துக் கொண்டே இருந்தார்கள். "எங்காவது வெளில கூட்டிட்டுப் போங்க" குடும்ப அவை கூடி ஆலோசித்தில் சினிமாவிற்கு போவதென்று முடிவாயிற்று.

தமிழ் சினிமாவை திரையரங்கில் சென்று பார்ப்பது தொடர்பாக நான் ஒரு பாலிசி வைத்துள்ளேன். மாற்று முயற்சி என்று அறியப்படுகிற, கருதப்படுகிற திரைப்படங்களை அரங்கிலேயே சென்று அதற்கு தார்மீகமாக ஆதரவு தருவது. நல்ல சினிமா தமிழில் வரவேண்டுமென்று விரும்பியும் எழுதியும் வருகிற நானே அதற்கு ஒரு உதாரணமாய் இருக்க வேண்டுமென்று ஏற்படுத்திக் கொண்ட சுயக்கட்டுப்பாடு. இதுவே வணிகநோக்குப் படமாய் இருந்து ஏதாவது ஒரு வகையில் அதில் குறிப்பிடத்தகுந்ததாய் இருந்தால் மாத்திரம், எவ்வித குற்றவுணர்வுமின்றி இணையத்திலேயே தரவிறக்கம் செய்து பார்த்து விடுவது. அப்படியாவது அது போன்ற படங்கள் நஷ்டமடைந்து அது போன்ற படங்கள் உருவாக்கப்படுவது நிறுத்தப்படட்டும் என்கிற ராமாயணத்து அணில் முயற்சி. வணிக நோக்குப் படங்களின் பின்னாலும் நிறைய உழைப்பும் தொழிலாளர்களும் இருப்பார்களே என்கிற கேள்வி வரலாம. ஹிட்லர் செயல்படுத்திய வதைக்கூடங்களின் உருவாக்கத்திற்குப் பின்னால் கூட உழைப்பிருந்திருக்கும். உழைப்பு எந்த நோக்கத்திற்காக என்பதில்தான் அதன் மதிப்பு உள்ளது.

நல்ல முயற்சிகளை திரையரங்கில் சென்று பார்ப்பது என்கிற முடிவின்படி 'அழகர்சாமியின் குதிரை'யை முதல்நாளே திரையரங்கில் சென்று காண திட்டமிட்டிருந்தேன். ஆனால் சில காரணங்களால் அது முடியாமற் போயிற்று. (சக வலைப்பதிவரும் இயக்குநருமான சார்லஸ் இயக்கிய 'நஞ்சுபுரம்' திரைப்படத்தையும் இவ்வாறே பார்க்க முடியாமற் போய் விட்டது).

குடும்பத்துடன் திரைப்படம் காண முடிவு செய்தவுடன் கே.வி.ஆனந்தின்  'கோ' படத்தை அதற்காக தேர்வு செய்திருந்தேன். ஏனெனில் off -beat திரைப்படமான அ.சா.கு -வை குழந்தைகள் எந்தளவிற்கு விரும்புவார்கள் என்கிற சந்தேகம் இருந்தது. எனவே அதை தனியாக இன்னொரு நாள் பார்க்கலாம் என்றிருந்தேன். வணிக மசாலா என்றாலும் கோ படம் பார்க்க விரும்பியதற்கு காரணம் அதன் ஒளிப்பதிவு. 'நடுநிசி நாய்கள்' படம் காண சென்றிருந்த போது  இடைவேளையில் இதன் டிரைலரை அப்போது பார்த்தேன். 'கோ' ஒளிப்பதிவிலிருந்த பாணியில் ஒரு வசீகரம் இருந்ததை என்னால் உணர முடிந்தது.. கே.வி.ஆனந்திடமே உதவியாளராக இருந்த ரிச்சர்ட் நாதன் என்பவர்தான் ஒளிப்பதிவு என்று தெரிந்தது. இந்த வணிக மசாலாவைத்தான் குடும்பம் விரும்பலாம் என்று எண்ணியிருந்தேன். ஆச்சரியமாக எல்லோருமே 'அழகர்சாமியின் குதிரையை' தோவு செய்தார்கள். எனக்கும் அதில் மகிழ்ச்சியே.

சென்னை புரசைவாக்கத்திலிருந்த, திரையரங்கங்களும் பொழுதுபோக்கு விஷயங்களும் உணவகங்களும் ஒருங்கே அமைந்திருந்த ஒரு 'மால் -க்குச் சென்றோம். படம் வெளிவந்து சில நாட்கள் கடந்து விட்டதால் அனுமதிச் சீட்டின் விலை சற்று குறைந்திருக்கும் என எண்ணினேன். ஆனால் குறைந்தபட்ச அனுமதிச் சீட்டே ரூ.100-ல்தான் துவங்கியது. நான்கு வயது மகளுக்கும் ரூ.100 என்பது சற்று அதிகமாய்த் தோன்றினாலும் வாங்கி விட்டோம்.

அரங்கின் உள்ளே சென்றவுடன் சற்று திடுக்கிட்டேன். திரைக்கு முன்னால் இரண்டே இரண்டு வரிசையின் பின்னால் எங்கள் இருக்கைகள். இத்தனை நெருக்கத்தில் அமர்ந்து பார்த்தால் தலைவலி ஏற்படும் முன்அனுபவம் சங்கடத்தைத் தந்தது. ரூ.100 இருக்கைகளுக்கும் ரூ.120 இருக்கைகளுக்கும் இடையில் கிட்டத்தட்ட 15 - 20 வரிசைகள் இடைவெளி. ஒரு சீட்டிற்கு ரூ.20/- அதிகம் செலவிட்டிருந்தால் பின் வரிசைகளில் செளகரியமாக அமர்ந்திருக்கலாம். எல்லாவற்றையும் கணக்கு போடும் நடுத்தரவர்க்க மனது நிச்சயம் இதை அனுமதித்திருக்காது. ரூ.20/- என்றால் ஆறு பேருக்கு ரூ.120/- அதிகமாகும்.

திரையரங்கின் குளிர்பதன வசதி, இருக்கைகளின் சொகுசுத் தன்மை, திரையிடலின் தரம ஆகியவற்றைக் கருத்திக் கொண்டு அனுமதிச் சீட்டின் விலையைக் கூட சற்று சமாதானப்படுத்திக் கொள்ளலாம்.

இன்னொரு விஷயம்தான் ஆத்திரமூட்டியது. அரங்கின் உள்ளே நுழைவதற்கு முன்னால் நாங்கள் வெளியிலிருந்து வாங்கிய எந்த உணவுப் பொருட்களையும் வைத்திருக்கக்கூடாதாம். மனைவி வைத்திருந்த பையை இதற்காக சோதனையிட்டிருக்கிறார்கள். இது எனக்கு பின்னர்தான் தெரிய வந்தது. இல்லையெனில் நிர்வாகத்தினரிடம் இது குறித்து சண்டையிட்டிருப்பேன். நடு இரவில் கூட எழுந்து 'பசிக்குது' எனும் சிறிய மகளுக்காக, வெளியில் செல்லும் போதெல்லாம் நொறுக்குத் தீனிகளை எப்போதும் ஸ்டாக் வைத்திருப்போம். வெளியில் செல்லும் போதுதான் குழந்தைகளுக்கு அதிசயமாக பெரும்பசி எடுத்துவிடும். இதற்காக வைத்திருந்த உணவைத்தான் திரையரங்க ஊழியர்கள் ஆட்சேபித்திருக்கிறார்கள்.

சிறுவயதுகளில் என் அம்மா திரைப்படத்திற்கு அழைத்துச் செல்லும் போதெல்லாம் வெளியில் எதுவும் வாங்கித்தராமல் வீட்டில் செய்த முறுக்கு, சீடை போன்றவற்றையே இடைவேளையில் தருவார். பக்கத்து இருக்கை சிறுவர்கள், பாப்கார்னும் கோன் ஐஸூம் சாப்பிட, வயிற்றெரிச்சலுடன் அதைப் பார்த்துக் கொண்டே அம்மாவை மனதிற்குள் திட்டுவோம். திரையரங்குகளில் விற்கப்படும் பொருட்களின் விலையைப் பார்க்கும் போது என் அம்மா செய்ததையே பின்பற்றலாம் என்று எனக்கு இப்போது தோன்றுமளவிற்கு உலகம் ஒரு முழு சுற்று வந்து விட்டது.  சிறிய காகிதக் கோப்பையில் தரப்பட்ட பாப்கார்ன் ரூ.30/- இதுவே சத்யம் தியேட்டர் போன்றவற்றில் ரூ.60/-  சோளத்தை விளைவிக்கிற  விவசாயக் கூலி எவராவது இதைக் காண நேர்ந்தால் இடைத்தரகர்களின் கொள்ளையை எண்ணி வயிறெரிந்து போவார்.

திரையரங்கில் வழக்கமான இன்னொரு பிரச்சினையையும் சந்தித்தேன். குடிமைப் பயிற்சி என்பதே அற்ற, பேசுவதில் பெருவிருப்பம் கொண்டிருக்கும் தமிழர்கள், திரையரங்கில் படம் ஓடிக் கொண்டிருக்கும் போதும் அதைச் செய்வார்கள். எனக்கெல்லாம் படம் பார்க்கும் போது மயான அமைதியாக இருக்க வேண்டும். சிறிய சப்தம் இருந்தால் கூட கொலைவெறியாகி விடுவேன். வீட்டில் குழந்தைகளிடம் இதற்காகவே பல முறை சத்தமிட்டிருக்கிறேன். அல்லது எல்லோரும் உறங்கச் சென்ற பிறகுதான் படம் பார்க்க ஆரம்பிப்பேன். 

திரையரங்கில் படம் ஓடிக் கொண்டிருக்கும் போது பக்கத்து இருக்கையிலிருந்தவர் "ஆமாண்ணே.. முடிச்சுடலாம்ணே... ஆமாண்ணே.. படம் பார்க்க வந்தேண்ணே... ஆமாண்ணே.. நாளைக்கு மொதோ வேலை உங்கள்துதான்.. சரிண்ணே.. ஆமாண்ணே... என்று தொணதொணத்துக் கொண்டிருந்தார். என் குணாதிசயம் பற்றி அறிந்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள் புன்னகையுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அவரிடம் ஆட்சேபித்தால் சற்று அமைதியாயிருந்து விட்டு மறுபடியும் ஆரம்பித்து விடுவார்.

என்னடா இது தொல்லை ... அரங்கு காலியாய்தான் இருக்கிறதே என்று இரு வரிசைகள் பின்னால் தள்ளி சென்று அமர்ந்தேன். எங்கிருந்தோ உடனே வந்த அரங்க ஊழியர், அவ்வாறு தள்ளி அமரக்கூடாது' என்றார். அரங்கமே பெரும்பாலும் காலியாக இருக்கிறதே, என்று கேட்டுப் பார்த்தும் கூட உறுதியாக மறுத்து விட்டார். நிர்வாகத்தின் கடுமையான உத்தரவாம். அந்த எரிச்சலுடனேயே படம் பார்க்க வேண்டியிருந்தது.

வீட்டிற்குத் திரும்பியவுடன் கணக்குப் போட்டுப் பார்த்ததில் அநாவசியமான செலவு  எதுவுமில்லாமலேயே  எல்லாம் சோத்து சுமார் ரூ.2000 செலவாகியிருந்தது. படமும் அதிக திருப்தியில்லாமற் போகவே, ஒரு அசலான நடுத்தர வர்க்க மனநிலை கொண்ட எனக்கு இந்தச் செலவு அதிகமாய்த் தோன்றியது.

எதற்காக இந்த தனிநபரின் அனுபவததை இத்தனை விஸ்தாரமாய்ச் சொல்கிறேன் என்றால், இது பல்லாயிரம் நபர்களின்  ஒரு பிரதிநிதித்துவக் குரலாக இருக்கக்கூடும். 'திரையரங்கில் சென்று படம் பாருங்கள்' என்று ஒவ்வொரு முறையும் பொதுமக்களுக்கு புத்தி சொல்லும் திரைத்துறையினர், நடைமுறையில் அதிலுள்ள யதார்த்தச் சிக்கல்களை களைவதற்கான, சுமைகளைக் குறைப்பதற்காக நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். படம் வெளிவந்த ஒரு மாதத்திலேயே ஒரிஜினல் டிவிடியை நியாயமான விலையில் வெளியிடுவதைப் பற்றியும் யோசிக்கலாம். அல்லது வேறு சாத்தியங்களையும்.

suresh kannan

Thursday, June 02, 2011

அழகர்சாமியின் கழுதை - பகுதி (2)


படத்தின் பிரதான துணைப்பாத்திரங்களில் ஒன்றாக அப்புக்குட்டியை தேர்வு செய்ததற்காக இயக்குநரை பாராட்டலாம். பத்து வருடங்களாக கோமாவில் படுத்துக் கொண்டிருக்கும் நோயாளி பாத்திரம் கூட பத்து இன்ச்சுக்கு ஒப்பனை அணிந்திருக்கும் தமிழ் சினிமாவின் அசட்டுத்தனமான அழகியல் குறித்து எனக்கு நீண்ட வருடங்களாக ஒவ்வாமையுண்டு. இந்தத் திரைப்படத்தில் குதிரைக்காரன் பாத்திரத்திற்கு, மார்க்கெட்டிங் வால்யூவிற்காக முன்னணி நடிகரை தேர்வு செய்து முகத்தில் கரி பூசி செயற்கையாக ஒப்பனை செய்து, அவர் இமேஜிற்காக  ரெண்டு டூயட்களை சண்டைகளை சேர்த்து... இப்படியெல்லாம் செய்யாமல் குதிரைக்காரனின் அளவுக்கேற்ற காட்சிகளையும் அதற்குப் பொருத்தமான நபரையும் துணைப் பாத்திரமாக தேர்வு செய்தது நன்று. ஆம், அப்புக்குட்டி இதில் துணைப்பாத்திரம்தான். பலரும் குறிப்பிடுவதைப் போல் இப்படத்தின் ஹீரோ அல்ல. அவரின் வருங்கால மனைவியாக வருபவரும் ஹீரோயின் அல்ல. போஸ்டரில் யாருடைய படம் பெரிதாக இருக்கிறதோ, அவரை ஹீரோவாக நினைத்துக் கொள்ளும், திரைப்படம் என்றிருந்தாலோ அதில் ஹீரோவாக யாராவது இருந்தேயாக என்று எதிர்பார்க்கும்  சூழலில் சிறு சிறு கதாபாத்திரங்களை வைத்தே ஒரு சினிமாவை உருவாக்கியிருப்பது மகிழ்ச்சி.

குதிரைதான் இந்தப் படத்தின் மையப்பாத்திரம். அதனைச் சுற்றியே எல்லாப் பாத்திரங்களும் வந்து போகிறார்கள். சில விஷயங்களைத் தவிர்த்து இயக்குநர் சுசீந்திரன் இதை சாதித்துக் காட்டியிருப்பது, தங்களை தமிழ் சினிமாவின் தூண்களாக கருதிக் கொண்டு பஞ்ச் டயலாக் பேசும் சூப்பர் ஹீரோக்களுக்கு பேரிடியாக இருக்கும்.


முந்தைய பகுதியில் இதன் திரைக்கதையின் மெதுவான நகர்வு குறித்து உரையாடினோம். அ.சா.கு -வின் இன்னொரு பெரிய மைனஸ் காட்சிகளின் நம்பகத்தன்மையின்மை. 'நகைச்சுவைக்கு லாஜிக்  தேவையில்லை' என்பார்கள். அது மைலாப்பூர் சபா நாடகங்களுக்கு வேண்டுமானால் இருக்கலாம். உலகத்தின் மிகச் சிறந்த கிளாசிக் காமெடிகளை எடுத்துப் பார்த்தால் அதன் பாத்திரங்கள், அவற்றின் இயல்பிலிருந்து மாறாமலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கும். உதாரணம் சார்லி சாப்ளின். ஆனால் அ.சா.கு.விலோ பார்வையாளர்களிடம் சிரிப்பைப் பிடுங்கி விட வேண்டும் என்பதற்காக அசட்டுத்தனமாக நடித்தும் பேசிக்கொண்டும் இருக்கிறார்கள். ஊர்ப் பெரியவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் காட்சி ஒன்றே போதும்.

மரக்குதிரை தொலைந்து போன சமயத்தில் வந்து சேர்ந்த நிஜக் குதிரையை 'சாமி' எனக் கொண்டாடுகிறார்கள். குதிரைக்குச் சொந்தக்காரன் திடீரென அங்கு குதித்து அதைக் கட்டிப்பிடித்து கதறியழுகிறான். (இதைப் பார்த்து அழுகையே வந்து விட்டது என்கிறார் தமிழின் முன்னணி திரை விமர்சகர் ஒருவர்). குதிரைக்கும் அவனுக்கும் உள்ள உறவு அழுத்தமாக நிறுவப்படாமலேயே, எப்படி அந்தக் காட்சி பார்வையாளர்களை அழுததமாக கவர முடியும்?  கிராமத்துக் காடசிகள் ஒருபுறம் காட்டப்படும் போதே இணைக்கோடாக குதிரையும் குதிரைக்காரனின் நட்பை காட்டி பின்பு இந்தக் காட்சியை சேர்த்திருந்தால், பார்வையாளர்கள் இதை இன்னும் உணர்ச்சிப்பூர்வமாக அணுகியிருக்க முடியும். மேலும் விலங்கிற்கும் மனிதனுக்கும் இடையில் உள்ள நேச உறவு கூட இதில் அசட்டுத்தனமாகவே நிறுவப்பட்டுள்ளது. பின்னால் வரும் பிளாஷ்பேக்கிலும் ஒரே பாடலில் ஹீரோ பணக்காரனாக ஆவதைப் போல் குதிரையை அவனுடன் நடக்க விட்டு ஓட விட்டு  மேலோட்டமாகவே இதை இயக்குநர் சாதிக்க முயன்றிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் ஊரிலுள்ள கெட்டவர்களையெல்லாம் சரியாக அடையாளங்கண்டு குதிரை தண்டிக்க ஆரம்பிக்கும் போது படம் சின்னப்பா தேவர் அளவிற்கு தரமிரங்கி விடுகிறது. சாதாரண மனிதர்களைத்தான் ஊதிப் பெருக்கி சூப்பர் ஸ்டார் வேடமிட்டு திரையில் காண்பித்து கொல்கிறீர்கள் என்றால், விலங்குகளையாவது அதனுடைய இயல்பிற்கு திரையில் உலவ விடக்கூடாதா? குதிரைக்காரனின் திருமணத்தைக் கூட குதிரைதான் நிச்சயம் செய்ய வேண்டுமா? கடவுளே! பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஆட்டுக்கார அலமேலு திரைப்படம் குறித்து சுஜாதா எழுதியதுதான் நினைவிற்கு வருகிறது.

ஊர்ப் பெரியவர்களே காமெடி செய்யும் அந்த இத்துப் போன கிராமத்தில் அதன் தலைவர் பதவிற்கு போட்டி வேறு நிகழ்கிறது. இந்தப் பதவியை எப்படியாவது கைப்பற்றி விட வில்லன் தோற்றத்தில் அவ்வப் போது வந்து போகிறார். அவர் என்ன செய்கிறார், ஏன் அப்படி செய்கிறார் என்பதையெல்லாம் யாராவது விளக்கிச் சொன்னால் தேவலை. சீப்பை ஒளித்து வைத்து கல்யாணத்தை நிறுத்துவது போல திருவிழாவை நிறுத்த அவர் என்னென்னமோ சீரியசாக செய்கிறார். நமக்குத்தான் காமெடியாக தோன்றுகிறது.

இன்னொரு நம்பகத்தன்மையில்லாத பாத்திரம் குதிரைக்காரனின் வருங்கால மனைவி. ஏற்கெனவே குறிப்பிட்டது போல் இந்த பாத்திரத்திற்கு சாதாரண தோற்றமுடைய கிராமத்துப் பெண்ணை நடிக்க வைத்திருந்தாலே போதும். அத்தனை அழகுடைய பெண், குண்டான குள்ளமான கறுப்பான ஒருவரை திருமணம் செய்ய மனப்பூர்வமாக சம்மதிப்பது யதார்த்ததில் அபூவர்மானது. அன்றாட வாழ்க்கையில் இப்படியான தம்பதியினரைக் கண்டிருக்கிறேன் என்றால் அழகான பெண்கள், சுமாரான தோற்றமுடையவரை திருமணம் செய்ய சம்மதித்தால் பெரும்பாலும் மணமகன் செல்வந்தராக இருப்பார். நடிகைகள் ஏன் லைட்மேனை திருமணம் செய்து கொள்ளாமல் தொழில் அதிபர்களை சரியாகத் தேடி திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று துவங்கி இதை யோசித்துப் பார்க்கலாம். பெண்கள் எதை வேண்டுமானாலும் விட்டுத் தருவார்கள், தன்னுடைய வாழ்க்கையின் பாதுகாப்பை எதற்காகவும் விட்டுத்தர மாட்டார்கள். இந்த விஷயத்தில் அவர்கள் மிக ஜாக்கிரதையானவர்கள். அவலட்சணமான ஒருவரைக் கூட திருமணம் செய்ய சம்மதிப்பார்கள். ஆனால் குதிரைக்காரனோ அன்றாட பிழைப்பிற்கே அவனுடைய குதிரையை நம்பியிருக்கும் அளவிற்கு வறுமையுள்ளவனாக இருக்கிறான். அல்லது மணப்பெண்ணின் வீடு வறுமையானது, பெண்ணை யாருக்காவது கட்டித்தந்து தலை முழுகிவிடும் நிலையிருக்கிறார்களா என்று பார்த்தால் அப்படியும் இல்லை. குதிரைக்காரன் குதிரையை திரும்பப் பெற்றால்தான் திருமணம் என்று கறாராக சொல்லுமளவிற்கு கெத்தாகவே இருக்கிறார்கள்.

'தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து விட்டானே என் மகன்' என்று ஊர்த்தலைவர் கதறுகிறார். அன்றாட பேச்சு வார்த்தையில், அதுவும சாதிப்புத்தி அழுத்தமாக படிந்து போன கிராமத்து  மனிதர் பேசும் போது 'தாழ்ததப்பட்ட சாதி' என்றா சொல்வார்?

இப்படி பல அபத்தங்களை இந்தப் படத்திலிருந்து பட்டியல் போடலாம்.

இத்தனை நுணுக்கமாகவெல்லாம் இயக்குநரோ, பார்வையாளனோ கவனிக்க வேண்டுமா என்று சிலருக்குத் தோன்றாலாம். பின்பு எதற்கு கதை உருவாக்கம், விவாதம் என்கிற சம்பிரதாயங்கள் எல்லாம் pre-production -ல் நடக்க வேண்டும்? எதைக் காட்டினாலும் பார்வையாளன் பார்த்து விட்டு கைத்தட்டி விடுவான் என்கிற நிலையில்தான் லாஜிக் என்கிற வஸ்துவை கண்டுகொள்ளாமலேயே இத்தனை வருட தமிழ்சினிமாவும் ஓடிக் கொண்டிருக்கிறது. இனியும் அது தொடரத்தான் வேண்டுமா?

மேலும் முழுமையான கலைப்படைப்பு என்று ஒன்று இல்லவே இல்லை. அது ஒரு மித். ஆனால் எல்லா கலைப்படைப்புகளும் அந்த உச்சத்தை நோக்கின உண்மையான முயற்சிகளாக இருக்க வேண்டும். அ.சா.கு அந்த முயற்சியை நோக்கி நகரவேயில்லை. ஒட்டுமொத்த தமிழ்சினிமாவே குப்பையாக இருப்பதால்தான் இப்படிப்பட்ட குறைப்பிரசவங்கள் கூட, 'சிறந்த படங்களாக' நமக்குத் தோன்றும் விசித்திரங்கள் நிகழ்கின்றன.

படத்திற்கு இசை ராஜா என்றாலே பல இயக்குநர்கள் உடனே அட்டென்ஷனில் எழுந்து நின்று அவர் என்ன தருகிறாரோ, அப்படியே பிரசாதம் போல் பெற்று வாயைப் பொத்தி ஏற்றுக் கொள்கிறார்கள். Captain of the ship என்பதெல்லாம் கோபத்தில் சரியாய் நடிக்கத் தெரியாத பெண்ணை கன்னத்தில் அறைவதோடு முடிந்து விடுகிறது. ராஜா என்கிற மேதை பல சமயங்களில் பிரசாதம் தருகிறார்தான், ஆனால் சமயங்களில் விபூதி என்கிற பெயரில் வெற்றுச் சாம்பலையும் தந்து விடுகிறார். இளம் இயக்குநர்களை கூட பெரும்பாலும் அவர் பேசவே விடுவதில்லை என்று தெரிகிறது. இதனால்தான் முன்னணி இயக்குநர்கள் சகிக்க முடியாமல் அவரிடமிருந்து விலகி விடுகிறார்கள் என நினைக்கிறேன். ரஹ்மான என்ற கலைஞனின் மகத்தான் உதயமும் இந்தக் காரணத்தினாலேயே நிகழ்ந்தது.

இந்த மிக எளிமையான கிராமத்து படத்தை 'உலகத் தரத்திற்கு' உயர்த்துவதற்காக ஹங்கேரியிலிருந்து இசைக்கலைஞர்களை வரவழைத்தாக ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் ராஜா குறிப்பிடுகிறார். உலக திரை விழாக்களில் கலந்து கொள்ளும் திரைப்படங்கள், அந்தந்த நாட்டின் கலாச்சாரத்தை, இசையை பிரதிபலிக்க வேண்டும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. தமிழ்படத்தைக் காண வரும் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு நம்முடைய மண்ணின் இசையை அளிக்காமல், இன்னொரு கலாச்சாரத்தின் பிரதிபலிப்பை தருவது சரியா எனத் தெரியவில்லை. எந்த ஹங்கேரி படத்திலாவது தமிழ் இசைக்கருவிகளின் பின்னணி இசையைக் கேட்டதுண்டா என்ற கேள்வியின் பின்புலத்தில் இதை யோசித்துப் பார்க்கலாம்.

இன்னொரு வகையில் பார்த்தால் இசைக்கு மொழியோ, கலாச்சாரமோ தடையில்லை. எந்தவொரு நாட்டின் இசைக்கருவியாலும் மனிதனின் சில ஆதாரமான, பொதுவான உணர்வுகளை பிரதிபலிக்க முடியும். அந்த வகையில் ராஜாவின் இசை மகத்தான பிரமிப்பைத் தருகிறது. குதிரையின் அறிமுகக் காட்சி, குதிரைக்காரனின் அறிமுகக் காட்சி, குதிரையை மீட்க போராட்டம் நிகழும் சண்டைக் காட்சி போன்றவைகளில் ராஜாவின் பின்னணியிசை உன்னதமான அனுபவத்தைத் தந்தது என்பதை மறுக்க மாட்டேன். ஆனால் அது இந்தப் படத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறதா என்று கேட்டால் பொருந்தவில்லை என்றுதான் சொல்வேன்.

பிட்ஸாவிற்கு நாட்டுக்கோழி குழம்பை தொட்டுச் சாப்பிடும் ஒரு சங்கடமான உணர்வை ராஜாவின் பின்னணியிசை தந்தது என்பதை இசை குறித்த பாண்டியத்தியம் அல்லாத ஒரு பாமர ரசிகனாக இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். (இசை குறித்த அறிவு உள்ளவர்கள் இங்கு அது குறித்து விளக்கமளிக்க கேட்டுக் கொள்கிறேன். பின்னணி இசையை இந்தத் தளத்தில் கேட்கலாம்). திரைப்படத்தில் காட்சிகளுக்கேற்பதான் செயல்பட வேண்டுமே தவிர, படைப்பாளி தன்னுடைய மேதமையை எந்த இடத்திலும் காட்டக்கூடாது என்பது ராஜாவின் நிலைப்பாடு என்பது மேற்குறிப்பிட்ட தொலைக்காட்சி நேர்காணலில் இருந்து அறிய முடிகிறது. சுசீந்திரன் தனது இயக்கத்தில் அவ்வாறு செயல்பட்ட ஒரு காட்சியை ராஜா சுட்டிக் காட்டியதில், இயக்குநரும் அந்தக் காட்சியை திருத்திக் கொண்டதாக குறிப்பிடுகிறார். இந்த நிலைப்பாட்டில் நம்பிக்கை கொண்ட ராஜா, படத்திற்கு பொருத்தமான அவரது அழுத்தமான அடையாளமான கிராமத்து இசையை அல்லவா பெரிதும் பயன்படுத்தியிருக்க வேண்டும்?

படத்தின் இன்னொரு பலம் பாஸ்கர் சக்தியின் இயல்பான அவருக்கேயுடைய பிரத்யேக நகைச்சுவை. ஆனால் இது மென் தீற்றலாக சில இடங்களில் மாத்திரமே வந்து போகிறது.

ஆங்காரமாய் உடுக்கையடிக்கும் கோடங்கியைப் பார்த்து ஒரு சிறுவன் கேட்கிறான்.

"டேய் கோடங்கி சாமியா, இல்ல பேயாடா?"

"ரெண்டுமே ஒண்ணுதான்டா"

இரவுக்காவல் செல்லும் இளைஞர்கள், ஒல்லிப்பிச்சான் ஒருவனும் அவன் மனைவியும் கோழி திருடுவதை காண்கிறார்கள். இளைஞர்களில் ஒருவன் சொல்கிறான். "என்னதான் திருடித் தின்னாலும் தொத்தலாத்தான் இருக்காய்ங்க"

கவனிக்கப்பட வேண்டும் என்கிற நோக்கமில்லாமல் போகிற போக்கில் இந்த வசனம் சொல்லப்படுவதினாலேயே இந்த நையாண்டி சிறப்பாகத் தோன்றுகிறது.

கோயில் வரி வசூலிக்க வந்திருக்கும் ஊர்க்காரர்களின் முன்னால் கட்டபொம்மன் வசனம் பேசும் சிறுவனின் காட்சி சற்று மிகை என்றாலும் ரசிக்கத்தக்கதாக இருந்தது.

இது போன்ற நையாண்டியும் பகடியும் படத்தின் ஆரம்பக் கட்டங்களில் சில இடத்தில் மாத்திரமே வந்து போகிறது. அசட்டு நகைச்சுவைக்கு பதில் படம் பூராவும் இது போன்றவை இடம் பெற்றிருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.

படத்தின் ஒளிப்பதிவாளர் தேனீ ஈஸ்வருக்கு இது முதல்படமாம். புகைப்படக்காரராக இருந்து ஒளிப்பதிவாளராக உருமாறியிருக்கிறார். ரசனையான ஒளிப்பதிவு. அந்தக் கிராமத்து நிலப்பகுதிகளின் விஸ்தீரணம் அழகாகத் தெரியும் பாடல்காட்சிகளிலும் 'கெட்டவர்களை' குதிரை துரத்திக் கொண்டு காட்சிகளிலும் சண்டைக்காடசிகளிலும் இவரது பணி சிறப்பாக இருக்கிறது. அழகுணர்ச்சியோடு பதிவு செய்வதுதான் சிறந்த ஒளிப்பதிவு என்பதாக ஒரு பிரமையிருக்கிறது. அந்த மாயையிலிருந்து தமிழ் சினிமா வெளிவந்தால் நல்லது.

அந்தக் கிராமத்தின் பிரத்யேக அடையாளம் படத்தில் வெளிப்படவேயில்லை. குதிரை கட்டிப் போடப்பட்டிருக்கும் இடமும் ஊருக்கு வெளியே வனாந்திரத்தில் அமைந்திருக்கும் மரக்குதிரையின் இடமும் (ஊரின் வெளியிலா அழகரின் வாகனத்தை வைத்திருப்பார்கள்) இது சினிமா செட் என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது. மேலும் 'சுப்ரமணியபுரத்தின்' பாதிப்பிலோ என்னமோ, படம் 80-களில் நிகழ்வதாக காட்டப்பட்டிருப்பதும் அதை நிறுவ பழைய காசுகளும் ரூபாய்களும் மாத்திரம் சில குளோசப்களில் காட்டப்படுவது படத்தின் அடிப்படை நிகழ்வுகளுக்கு எந்தவிதத்தில் உதவுகிறது என்பது புரியவி்ல்லை. 80-களில்தான் கிராமத்தில் இம்மாதிரியான மூடத்தனங்கள் இருந்தன என்றும் சொல்ல முடியாது. இன்றும் கிராமங்களில் சுருட்டு சாமியார்களும் பீர் சாமியார்களும் நீக்கமற நிறைந்திருக்கின்றார்கள்.


சுசீந்திரனின் முதல் திரைப்படமான 'வெண்ணிலா கபடி குழு' தமிழ்ச் சினிமாவின் வழக்கமான சட்டகத்திற்குள்தான் இயங்கியது என்றாலும் படம் நிறைந்த போது பார்வையாளனாக என்னால் ஒரு முழுமையை உணர முடிந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அ.சா.குவில் அதை உணர முடியவில்லை. படத்தின் சில சிறப்பான தருணங்கள் ஆங்காங்கே சிதறி அங்கேயே தேங்கி நின்று விட்டன.  முழுமையை நோக்கி நகரவேயில்லை என்பதுதான் என் ஆதங்கம். இதனால்தான் ஊடகங்களும் விமர்சகர்களும் இதை சிறந்த சினிமா என்றும் இளையராஜா உட்பட இதை 'உலக சினிமா' என்று குறிப்பிடும் போதும் கசப்புடன் மறுக்க வேண்டியிருக்கிறது.

உலக சினிமாவோடு தமிழ் சினிமாவை ஒப்பிட மாட்டேன் என்று முன்னரே குறிப்பிட்டிருந்தாலும் இதைச் சொல்லி விடுகிறென். இதே போன்றதொரு ஸ்கிரிப்டை, இரானிய இயக்குநர் அப்பாஸ் கிராஸ்தமி போன்றவர்கள் கையாண்டிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று யூகித்துப் பார்த்தால் நான் சொல்ல முயல்வது இன்னும் தெளிவாகப் புரியும். அப்படியெல்லாம் இங்கு சினிமாவை உருவாக்கினால் யார் பார்ப்பார்கள் என்றெல்லாம் கேட்டு நம்மை நாமே அவமதித்துக் கொள்ளவும் அடையாளங் காட்டிக் கொள்ளவும் வேண்டாம். மோசமான, அரைகுறைப் படைப்புகளை, கலையை உன்னதம் என்று புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கும் நம் சமூகம்தான் அதிலிருந்து தம்மை மீட்டெடுத்துக் கொண்டு மேலே வர வேண்டும்.

(தமிழில் ஒரு மாறுதலாக வருகிற முயற்சிகளைக் கூட இத்தனை குதறியெடுக்க வேண்டுமா என்று சிலருக்குத் தோன்றலாம். அசாகுவை முன்னிட்டு சில கேள்வி பதில்கள் - என்கிற பதிவில் அதைப் பற்றி உரையாடலாம்) :-)

மூன்று பின்குறிப்புகள்:

1) இந்தப் பதிவில் ஒரு நண்பருடன் உரையாடியதாக வந்த பகுதிகள் நினைவிருக்கலாம். அந்த நண்பர் வேறு யாருமல்ல. என்னுடைய ஆல்டர் ஈகோதான்.

2) என்னுடைய மகளிடம் விசாரித்த போது 'இந்தப் படம் பிடித்திருக்கிறது' என்றுதான் சொன்னாள்.

3) மிருகங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவை கலை முதிர்ச்சியுடன் பதிவு செய்த படமாக பிரெஞ்ச் இயக்குநர் ராபர்ட் பிரெஸ்ஸான் இயக்கிய Au Hasard Balthazar -ஐ பரிந்துரை செய்ய விரும்புகிறேன்.

suresh kannan