Friday, November 17, 2017

லக்ஷ்மி மற்றும் அறம் குறித்து சில வார்த்தைகள்

அறம் திரைப்படம் மற்றும் லக்ஷ்மி குறும்படம் ஆகிய இரண்டு படைப்புகளையும் பற்றி விரிவாக எழுதும் உத்தேசம் இருக்கிறது. இவை பற்றி இணையத்தில் வரும் பல மொண்ணையான எதிர்வினைகளை, நையாண்டிகளைக் கண்டால் சிரிப்பு ஒருபுறமும் கோபம் ஒருபுறமும் வருகிறது.

ஒரு சினிமாவைப் புரிந்து கொள்வதற்கான பயிற்சியை, கல்வித்திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று பாலுமகேந்திரா தொடர்ந்து குரல் தந்து கொண்டிருந்த அவசியத்தை மறுபடியும் மறுபடியும் நினைவுகூர்கிறேன். சினிமா என்றல்ல, ஒரு புதினத்தை, கட்டுரையை, கவிதையை சரியாக புரிந்து கொள்ளக்கூடிய நுண்ணுணர்வும் முதிர்ச்சியும் நிதானமும் நம்மில் பெரும்பாலோனோரிடம் இல்லை என்பதை ஒரு புகாராகவே சொல்கிறேன்.

எத்தனையோ மணி நேரங்களை செலவு செய்து ஓர் எழுத்தாளர், ஒரு இயக்குநர் தம்முடைய படைப்பை பொதுவெளியில் வைக்கிறார். ஆனால் சில நிமிடங்கள் மட்டுமே செலவு செய்து மிக மிக மேலோட்டமாக அவற்றைப் பற்றிய நம்முடைய எண்ணங்களை பதிவு செய்கிறோம். இதில் பல பதிவுகள் அதிகப் பிரசங்கித்தனமாக, சுயமுனைப்பு நோக்கமாக இருக்கின்றன. இவற்றின் மூலம் நம்முடைய அறியாமைதான் வெளிப்படுகிறது, இதன் மூலம் நம்முடைய முட்டாள்தனங்கள்தான் அம்பலப்படுகின்றன. என்கிற சொரணை கூட பலருக்கு இருப்பதில்லை.

**

லக்ஷ்மி குறும்படத்தில் அந்தப் பெண் பாத்திரம் தம்முடைய கணவனிடமிருந்து எதிர்பார்ப்பது பாலுறவை மட்டுமல்ல. அதையும் மீறி தன்னுடைய இருப்பு மதிக்கவும் அங்கீகரிக்கவும் பட வேண்டும் என்கிற ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும். பாலின சமத்துவமில்லாத குடும்பம், சமூகம் போன்ற நிறுவனங்களை அந்தக் குறும்படம் விசாரணை செய்கிறது. தம்முடைய இணையிடமிருந்து ஆதரவான ஒரு சொல் கூட வராத இயந்திரத்தனமான வாழ்க்கை முறை அவளுக்கு சலிப்பையும் கழிவிரக்கத்தையும் தருகிறது. இதுவே அவளுக்குள் மெல்லிய பழிவாங்கல் உணர்வைத் தருகிறது. அதற்கான சந்தர்ப்பம் தற்செயலாக கிடைக்கும் போது ஒரு சராசரி பெண்ணுக்கான நியாயவுணர்வுடன் முதலில் தடுமாறும் அவள், பிறகு தன்னிச்சையாக அந்த புதிய அனுபவத்திற்குள் நீந்திச் செல்கிறாள்.

பாலுறவு அல்ல, அந்த இளைஞன் தனக்கு முக்கியத்துவம் தந்து உரையாடும் அணுகுமுறையே அவளுக்கு பிடித்துப் போகிறது. அவளைக் கவர்வது என்பது அந்த இளைஞனின் நோக்கமாக இருந்தாலும், இவளுடைய பார்வையில் அவளின் இருப்பு அங்கீகரிக்கப்படுவதே அவளுக்கு பெரிய ஆசுவாசத்தை தருகிறது.

ஆனால் சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் நீதி காரணமாக அவள் அதைத் தொடர விரும்புவதில்லை. அந்த ஒரு நாள் சந்திப்பை, அனுபவத்தை, புத்தகத்திற்குள் மயிலிறகை ஒளித்து வைக்கும் சிறுவனைப் போல ரகசியமாக வைத்துக் கொள்கிறாள். பாலுறவுதான் முக்கியம் என்றால் அந்த உறவை அவள் தொடர்ந்திருப்பாள் என்பதை மொண்ணை புத்திக்காரர்கள் கூட மிக எளிதாக புரிந்து கொள்ளக்கூடும்.

ஆனால் இந்தக் குறும்படத்தைப் பார்த்த பலரும் படுக்கையறைக்குள் எட்டிப் பார்த்து நீதி சொல்வதைத்தான் முக்கியமாக செய்திருக்கிறார்கள். சிந்து பைரவி திரைப்படம் முதற்கொண்டு இதே கருத்தாக்கத்தில் இதுவரை பல படைப்புகள் வந்திருக்கின்றன. ஆனால் இவற்றைப் பற்றி சமூகத்திற்கு எவ்வித புகாரும் இல்லை. ஏனெனில் இவையெல்லாம் ஆண்மையப் படைப்புகளாக, ஆணின் பார்வையில் இருந்து உருவானவை. 

இச்சமூகமும் பெரும்பாலும் ஆணாதிக்கத்தன்மையோடு இயங்குவதால் இந்தப் படைப்புகள் மிக இயல்பாக கடந்து போயின. இவற்றிற்கு விருதுகள் கூட கிடைத்தன. ஆனால் இதன் எதிர்முனையில் இதையே ஒரு பெண் நிகழ்த்தும் போது இச்சமூகம் பதட்டமும் கோபமும் அடைகிறது. நிலவுடமை மனோபாவத்தில் இயங்கும் அது தன்னுடைய சொத்து பறிபோகிற பதட்டத்தில் கோபம் கொள்கிறது. சம்பந்தப்பட்ட பெண்ணை மலினமாகவும் கொச்சையாகவும் ஏசுகிறது. இணையத்தின் மூலம் வெளியான பல எதிர்வினைகள் இந்த நோக்கில், புரிதலில் அமைந்தவையே.

**

அறம் திரைப்படத்தில் தேவையற்ற காட்சிகள் இருந்ததாகவும், திரைக்கதை இலக்கணத்தில் பொருந்தாதாவாறு சில விஷயங்கள் இருந்ததாகவும் சில புத்திசாலிகள் சொல்கிறார்கள். இந்தப் படைப்பில் பிரச்சார தொனி வந்துவிடக்கூடாது என்கிற கவனத்துடனும் சுவாரசியம் குன்றிவிடக்கூடாது என்கிற திட்டமிடலுடனும் இயக்குநர் காட்சிகளை உருவாக்கியிருப்பதை மேலோட்டமாக கவனித்தாலே நாம் உணரக்கூடும். அப்படியே சில பிசிறுகள் இருந்தால்தான் என்ன? படைப்பின் மையம் சமூகவுணர்வுடன் இருந்து அது நேர்மையான காட்சிகளின் மூலமாக நகரும் போது இவற்றை பெரிதுபடுத்த வேண்டுமா? மக்களின் பிரச்சினையைப் பேசும் திரைப்படத்தில் பிரச்சார நெடி வந்தால்தான் என்ன? மக்களுக்காகத்தானே கலை?,

நேர்மையாக இயங்க முனையும் படைப்பாளிகளைக் கூட நம்முடைய அரைகுறை புத்திசாலித்தனத்தால் நிராகரிக்கும் போது நமக்கு மிஞ்சப் போவது வழக்கமான தமிழ் சினிமா குப்பைகளே. இந்த அடிப்படை கூட புரியாமல் ஒரு சினிமாவைப் பற்றி பேசுவதில் என்ன பயன்?

‘எக்காரணத்திற்காகவும் மக்களை குறை சொல்லாதீர்கள்’ என்கிற செய்தி அறம் படத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்படுவதை கவனித்திருக்கலாம். பல்வேறு சமயங்களில், பல்வேறு காரணங்களால் தாங்கள் தொடர்ந்து  நிராகரிக்கப்படும் மக்களின் கோபமானது ஒரு விபத்தின் வழியாக அவர்களிடம் ஆவேசமாக வெளிப்படுகிறது. அவர்கள் செய்யும் சில காரியங்கள் அந்தச் சமயத்தில் உணர்ச்சி வேகத்தில் முட்டாள்தனமாகத்தான் இருக்கின்றன. ஆனால் அவர்களுக்கு எதிரான குரலை இயக்குநர் படத்தில் ஓரிடத்திலும் அனுமதிப்பதில்லை. ‘அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். புரிய வைக்க வேண்டியது அறிவுசார் தரப்பின் கடமை’ என்பதை மறுபடி மறுபடி சொல்கிறார்.

ஆனால் அம்மாதிரியான மக்கள் சமூகத்தின் ஒரு பகுதியே அறியாமையால் இத்திரைப்படத்திற்கு எதிராக குரல் தந்து கொண்டிருப்பது கசப்பான முரண். 

suresh kannan