அப்பாவியாக கருதப்படும் Rubin தன்னுடைய வாழ்க்கையின் 20 வருடங்களை சிறையில் கழித்ததின் காரணங்களில் ஒன்றாக 'நிறவெறி'யைச் சொல்லலாம். மனிதர்கள் இயற்கையில் எந்த வித்தியாசமுமில்லாமல் படைக்கப்பட்டாலும் அவர்கள் ஏதாவது ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு தமக்குள் பிரிவினையை ஏற்படுத்திக் கொள்வார்கள் என்கிறார்கள் சமூகவியில் அறிஞர்கள். சமீபத்தில் சென்னையில் நடந்த சம்பவம் இது. ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 'எந்தப் பாடப் பிரிவு உயர்ந்தது' என்று தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவு வன்முறையாக மாறி அதில் தாக்கப்பட்ட மாணவன் சமீபத்தில் மரணமடைந்த போதுதான் இந்த விஷயம் வெளியில் வந்துள்ளது. ஆக சக மனிதனை வெறுக்க மனிதன் ஏதாவதொரு காரணத்தை 'உற்பத்தி' செய்து கொண்டேயிருக்கிறான்.
அமெரிக்கச் சேரியில் உள்ள கறுப்பினச் சிறுவர்களில் ஒருவன் ரூபின். பாலியல் நோக்கத்தில் தன் நண்பனை அணுகும் வெள்ளையன் ஒருவனை தாக்கின குற்றத்திற்காக சட்டத்தின் முன் நிறுத்தப்படுகிறான். கறுப்பினத்தினவர்கள் மீது வெறுப்புணர்வு கொண்ட அந்த வெள்ளை காவல் அதிகாரி அதை திருட்டு வழக்காக மாற்றி சிறுவனை சிறையில் அடைக்கிறான். சிறையிலிருந்து தப்பிய ரூபின் ராணுவச் சிப்பாயாக சேர்ந்து தன் பயிற்சியை முடித்து சில வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய சொந்த ஊருக்கு வரும் போது, தண்டனைக் காலத்தின் இடையிலிருந்து தப்பிய குற்றத்திற்காக மறுபடியும் சிறையில் அடைக்கப்படுகிறான். வெள்ளையர்களை எதிர்கொள்ள தன்னை எப்படியாவது வெற்றிகரமாக நிலைநாட்டிக் கொள்வதுதான் சிறந்த வழி என்று உணரும் ரூபின் சிறையில் கடுமையான உடற்பயிற்சிகளை செய்து தன்னை குத்துச்சண்டை வீரனாக தயார்ப்படுத்திக் கொள்கிறான். பிறகு வெளியில் வந்தவுடன் middle weight பிரிவில் பல புகழ்பெற்ற வீரர்களை தோற்கடித்து குறுகிய காலத்திலேயே நிறைய புகழையும் பணத்தையும் சம்பாதிக்கிறான். எதிர் போட்டியாளர்களை நாக்அவுட் முறையில் வெற்றி கொள்வதால் சூறாவளி என்னும் அர்த்தததில் 'hurricane' என்கிற செல்லப் பெயர் கிடைக்கிறது.
இவனது புகழை கண்டு வெறுப்படையும் அந்த காவல் அதிகாரி, ரூபினை மூன்று நபர்கள் கொலையுண்ட ஒரு சம்பவத்துடன் இணைத்து கைது செய்கிறான். சாட்சியங்கள் ரூபினுக்கு எதிராக மிக வலுவாக இருக்கும் சூழ்நிலையில் குற்றம் உறுதிபடுத்தப்பட்டு ரூபின் சிறையில் அடைக்கப்படுகிறான். நிரபாதியான தன்னை நிரூபித்துக் கொள்ள அவன் எடுக்கும் முயற்சிகள் மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்படுகின்றன.
()
ரூபினைப் போலவே சேரியைச் சேர்ந்த வறுமைப் பின்னணியைக் கொண்டவன் Lesra. பள்ளிப்படிப்பைத் தொடர இயலாமல் இருக்கும் லெஸ்ராவை கனடாவைச் சேர்ந்த தன்னார்வ தொண்டர்கள் தத்தெடுத்து அவனுக்கு கல்வியளிக்க ஏற்பாடு செய்கின்றனர். ஒரளவு வாசிக்கத் தெரிந்தவுடன் லெஸ்ரா வாசிக்கும் முதல் புத்தகமே குத்துச் சண்டை வீரர் ஒருவரின் வாழ்கை நூலான The 16th Round. பழைய புத்தகங்கள் விற்பனை செய்யப்படும் கடையிலிருந்து இதை வாங்குகிறான். ரூபின் சிறையிலிருந்து எழுதி வெளியிட்ட இந்த நூல் முன்னர் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரூபினுக்கும் தன்னுடைய வாழ்க்கைக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டு உணர்ச்சிவசப்படும் லெஸ்ரா ரூபினை சிறையில் சந்திக்கிறான். இருவருக்குமான உறவு வளர்கிறது. தன்னுடைய கனடா நண்பர்களுடன் இணைந்து ரூபினை எப்படியாவது சிறையிலிருந்து மீட்க உறுதியெடுக்கிறான். திரும்பவும் அந்த வழக்கிற்கான குறிப்புகளை ஆய்வு செய்வதில் ரூபினுக்கு சாதகமானதொரு சாட்சியம் கிடைக்கிறது. இதையடுத்து பெடரல் கோர்ட்டில் அப்பீலுக்காக செல்லும் போது நடந்த வாதப் பிரதிவாதங்களின் மூலம் நிறவெறியின் காரணமாக ரூபினின் மீது வீண்பழி சுமத்தப்பட்டிருப்பது நிருபணமாகிறது. ரூபின் விடுதலை செய்யப்படுகிறான்.
()
ஒரு பிரபலத்தின் வாழ்க்கை வரலாற்றை எப்படி சுவாரசியமான திரைக்கதையுடன் திரைப்படமாக உருவாக்குவது என்பதற்கு சிறந்த உதாரணமாக இந்தப் படத்தைச் சொல்லலாம். ரூபினின் ஆக்ரோஷமான குத்துச் சண்டை போட்டி ஒன்றுடன் துவங்கும் திரைப்படம் ரூபின் கைது செய்யப்படுதில் தொடர்கிறது. பின்னர் லெஸ்ரா வாசிக்கும் சுயசரித நூல் மூலம் ரூபினின் வாழ்க்கை பார்வையாளர்களுக்கு சொல்லப்படுகிறது. குத்துச் சண்டை போட்டிகள் கருப்பு-வெள்ளை நிறத்திலேயே பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூபினின் குத்துச்சண்டை வாழ்க்கை இறந்த காலத்திலேயே உறைந்து போய்விட்டது என்று இயக்குநர் Norman Jewison சொல்ல வந்ததாக நான் கருதுகிறேன். ரூபினுக்கு ஆதரவாக முகம்மது அலி உள்ளிட்ட பிரபலங்கள் குரல் கொடுக்கும் நிஜமான வீடியோ காட்சிகள் மிகப் பொருத்தமாக இணைக்கப்பட்டுள்ளன.

நிஜமான ரூபின் கார்ட்டர்
ரூபின் கார்ட்டராக நடித்திருப்பவர் பிரபல ஹாலிவுட் நடிகர் Denzel Washington. அந்த குத்துச் சண்டை வீரரின் பாத்திரத்துடன் மிகவும் ஒன்றி நடித்திருக்கிறார். அவரின் திடகாத்திரமான உயரமான உடல் காட்சிகளை நம்பகத்தன்மையுடன் உருவாக்க மிகவும் பயன்பட்டிருக்கிறது. பட உருவாக்கத்திற்காக நிஜமான ரூபின் கார்ட்டருடன் பல காட்சிகளை விவாதித்திருக்கிறார். தனிமைச் சிறையில் மனநிலை பாதிக்கப்பட்டு தன்னிடமே விவாதிக்கும் காட்சியிலும் சிறை உடையை அணிய மறுத்து பின்பு ஒரு சமரசத்திற்கு இறங்கி வரும் காட்சியிலும் நடிப்பின் உச்சத்தை வழங்கியிருக்கிறார் எனலாம். நம்முடைய தமிழ் நடிகர்களில் இவருடன் யாரை ஒப்பிடலாம் என்று யோசித்துப் பார்த்ததில் யாருமே தெரியவில்லை. (தேவையில்லை என்றாலும் இப்படி யோசிப்பதை தவிர்க்க முடியவில்லை.). டென்சல் வாஷிங்டன் நடிப்பில் வெளிவந்த படங்களில் மிக முக்கியமானது இந்தப்படம் என்று திரை விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
இயக்குநர் Norman Jewison காட்சிகளை மிகுந்த நம்பகத்தன்மையுடன் காட்சிகளை அமைத்திருந்தாலும் நிஜ சம்பவங்களோடு ஒப்பிடும் போது பல இடங்களில் உண்மைக்குப் புறம்பாக காட்சிகளை மழுப்பியிருப்பதாக விமர்சனம் எழுந்திருக்கிறது. குறிப்பாக Joey Giardello என்கிற பிரபல குத்துச்சண்டை வீரரோடு ரூபின் கார்ட்டர் மோதும் போட்டியில் நடுவரின் நிறவெறி காரணமாக ரூபினுக்கு எதிராக தீர்ப்பளிப்பதாக திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் Joey Giardello நிஜமாக சிறப்பாக சண்டையிட்டு ரூபினை தோற்கடித்திருக்கிறார். படம் வெளிவந்ததும் அவர் இதற்காக பட தயாரிப்பாளரின் மீது வழக்குத் தொடர்ந்ததும் நீதிமன்றத்தில் வெளியே நடந்த சமரசத்தில் அவருக்கு பணம் அளிக்கப்பட்டு சமாதானப்படுத்தப்பட்டிருக்கிறது. பிரதான பாத்திரத்தை 'ஹீரோ' போல சித்தரிக்க ஒரு பக்கச் சார்பாக சித்தரிப்பது ஒரு வாழ்க்கை வரலாற்றை - அதுவும் சமகால ஆளுமையை - திரைப்படமாக உருவாக்கும் இயக்குநருக்கு அழகல்ல. இந்த மாதிரி குறைகளைத் தவிர மிகச் சிறந்த அனுபவத்தை இந்தப்படம் வழங்குகிறது.
அகாதமி விருதுப் நாமினேஷன் பட்டியலில் சிறந்த நடிகருக்கான பிரிவில் டென்சல் வாஷிங்டனின் பெயர் இடம்பெற்றிருந்தாலும் விருது கிடைக்கவில்லை. ஆனால் பெர்லின் சர்வதேச விழாவில் சிறந்த படத்திற்கான விருதை பெற்றிருக்கிறது இந்தத் திரைப்படம்.
ஒரு குத்துச் சண்டை வீரரின் வாழ்க்கை சிறப்பான முறையில் திரைப்படமாக உருவாக்கப்பட்டிருப்பதான காரணத்திற்காகவும் டென்சல் வாஷிங்டனின் அற்புதமான நடிப்பிற்காகவும் இந்தத் திரைப்படத்தை கட்டாயம் காணவேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.
suresh kannan