வாக்கு அளித்து விட்டு வந்த கையோடு .. மன்னிக்க விரலோடு..சுடச்சுட எழுதுகிறேன். 'ஜனநாயகம்' என்கிற வார்த்தைக்கு உண்மையாகவே அர்த்தத்தைத் தரும் நாளிது. மற்ற நாட்களில் ஜீரோவாக இருக்கும் மிஸ்டர்பொதுஜனம், ஹீரோவாக உணரக்கூடிய ஒரே ஒரு நாள். மற்ற நாட்களில் உரோமமாக கூட மதிக்காத அரசியல்வாதிகள், 'பொன்னான வாக்குகளை' எப்படியும் பெற்று விடுவதற்காக இந்த பொதுஜனத்தின் முன் அடித்துக் காட்டிய பல்டிகளையும், கூழைக்கும்பிடுகளையும், வெற்றுச் சவடால்களையும், தனிநபர் அவதூறு நாடகங்களையும், அநாகரிகங்களையும் நிறையவே பார்த்து விட்டோம்.
தேர்தல் கமிஷனின் அபார சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். மக்கள்தொகைப் பெருக்கம் கொண்ட இந்தியா போன்ற தேசத்தில், இத்தனை கச்சிதமான திட்டமிடல்களுடனும் ஏற்பாடுகளுடன் ( தன்னுடைய இருப்பை, கமிஷனின் அதிகாரத்தை நிலைநாட்டிய, டிஎன் சேஷனுக்குப் பிறகு) கண்டிப்புடனும் கறார்த்தனத்துடனும் தேர்தல் செயற்பாட்டை நிகழத்தும் கமிஷனுக்கு ஒரு ராயல் சல்யூட். நம்மை ஆளப் போகும் அதிகார சக்தியை தேர்ந்தெடுக்கும் பல சிறு புள்ளிகளுள் நானும் ஒருவன் என்பதை இயந்திரத்தை அழுத்தும் போது பெருமையாகவும் புல்லரிப்பாகவும் இருந்தது. கூடவே மிகப் பெரிய அபத்த நாடகத்தின் ஒரு கையாலாகாத பார்வையாளன் என்கிற உணர்வும்.
இந்த முறை யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் எனக்கு குழப்பமேயில்லை. பொதுவான தமிழகத்தின் மனநிலையையே நானும் பிரதிபலிக்கிறேன். சில நல்ல விஷயங்களும் நிகழ்ந்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்கு ஆயிரம் காரணங்களை அடுக்க முடியும். இந்திய வரலாறு இதுவரை கண்டிராத அளவிலான ஊழல், ஆக்டோபஸ் குடும்பத்தின் வணிக ஆதிக்கம், அட்டூழியம், பொதுநலம் சார்ந்த கொள்கைகளை குழிதோண்டி புதைத்து விட்டு பதவியைப் பெற, அதை தக்க வைத்துக் கொள்ள, இன்னும் கொள்ளையடிக்க என... முழுக்க முழுக்க சுயநலம் சார்ந்த அரசியல் முடிவுகள், ஈழம் மற்றும் தமிழக மீனவர் பிரச்சினையை கையாண்ட அலட்சியம், அதன் மூலமும் தேடிய அரசியல் ஆதாயம், இலவசங்களை ஆசைகாட்டி வாக்குகளைப் பிடுங்க முயலும் அநாகரிக அரசியல், ரவுடிகளின, ஊழல் அதிகாரிகளின் ஆதிக்கம், மக்களின் அடிப்படை வசதிகளுக்கான வரிப்பணத்தை சுயலாபங்களுக்காக, ஆடம்பரங்களுக்காக இறைத்த அநியாயம்..
சொல்லி மாளாது.
சரி. நடப்பு ஆட்சியை தூக்கியெறியலாம். ஆனால் இதற்கு மாற்று?. பெரும்பாலோனரைப் போலவே இந்தக் கேள்விதான் எனக்குள்ளும் பெரியதொரு துக்கமாக, ஏக்கமாக உள்ளுக்குள் மண்டிக் கிடக்கிறது. தீயில் தப்பித்து நெருப்பில் விழுந்த கதையாக, எல்லாமே ஒரே சகதிக் குழிகளாகத்தான் இருக்கிறது. வேறு நாதியில்லாத இந்த துரதிர்ஷ்டமான சூழலில், 'இருப்பதிலேயே குறைந்த மோசம்' என்பதைத் தேர்ந்தெடுக்கும் பரிதாபகரமான நிலையில் இருக்கிறோம்.
என்னைப் பொருத்தவரை அரசியல் கட்சிகளையும், அவற்றின் உருப்படாத கொள்கைகளையும் இரண்டாமிடத்தில் வைத்து, வேட்பாளர்களைத்தான் முதலில் கணக்கில் எடுத்துக் கொண்டேன். முன்னணி அரசியல் கட்சிகளை மாத்திரம் மனதில் கொண்டு சில குறைந்த பட்ச நியாயவான்களை 'இவருக்கு வாக்களிப்பதால் என்ன பயன்?' என்கிற மனோநிலையை விட்டொழிக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். இந்த மனோநிலையே நமக்குள் பெரும்பான்மையாக இயங்குவதால்தான் இரண்டு கட்சிகளே மாறி மாறி நம் பிரதேசத்தை நாசப்படுத்திக் கொண்டிருக்கின்றன. குறைந்தபட்சமாகவது தொகுதிக்காக உண்மையாகவே உழைப்பார் என்று தோன்றினால், மற்ற எதையும் யோசிக்காமல் அவருக்கு வாக்களிப்பதே சிறந்ததாக இருக்கும் என்பது என் அபிப்ராயம். (சொற்ப உதாரணங்களில் ஒன்று: 'டிராபிக் ராமசாமி - சென்னை, திநகர் தொகுதி). மோசமான அரசியல்வாதிகளை தொடர்ந்து குற்றஞ்சொல்லி வம்பு பேசிக் கொண்டிருப்பதில் எந்த உபயோகமும் இல்லை.
49-ஓ என்னும் பிரிவை ஞாநிதான் தொடர்ந்து கவனப்படுத்தி பிரபலமாக்கினார் என நினைக்கிறேன். 'யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை' என்பது கசப்பின் உச்சத்தில் எடுக்க வேண்டிய, ஊழல்அரசியல்வாதிகளுக்கு ஓர் அச்ச முள்ளாக உணர வைக்க வேண்டிய ஓர் ஆயுதமாக இருந்தாலும், அடிப்படையில் இது ஜனநாயகத்தின் தொடர்ந்த செயற்பாட்டுக்கு இடையூறாகவே இருக்கும். தப்பித்தல் மனோபாவத்தின் நுண்ணிய வடிவமாக இந்த 49ஓ எனக்குப் படுகிறது.
எழுத்தாளர் பாஸ்கர்சக்தி கிராமங்களில் மேற்கொண்ட பயணங்களைப் பற்றி முன்னர் ஒரு பத்திரிகையில் தொடராக எழுதும் போது ... ஓட்டையும் உடைசலுமான அந்தப் பேருந்து தடதட சப்தத்துடன் ஏதோ ஒரு தர்மத்திற்குக் கட்டுப்பட்டு ஓடிக் கொண்டிருந்தது..' என்று எழுதியிருப்பார். இந்திய ஜனநாயகத்தையும் இந்தப் பேருந்துடன் ஒப்பிடலாம் என்று தோன்றுகிறது. இந்திய அரசியல்வாதிகள் தொடர்ந்து மக்களைச் சுரண்டிக் கொண்டிருந்தாலும், சில நல்ல விஷயங்களுடன் ஏதோ ஒரு தர்மத்திற்குக் கட்டுப்பட்டு இந்த தேசம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே அந்த குறைந்த பட்ச நம்பிக்கையைக் கொண்டு 'இருப்பதிலேயே குறைந்த மோசக்காரரை' தேர்ந்தெடுப்பதைத் தவிர வேறு வழியேயில்லை. தேர்தலைப் புறக்கணிப்பதோ, யாரையும் தேர்ந்தெடுக்க விருப்பமில்லை என்பதோ நிச்சயம் இதற்கு மாற்று இல்லை. குறைந்த பட்சம் நல்லவர் என்று நீங்கள் நம்பும் சுயேட்சைக்காகவது உங்கள் வாக்கை அளியுங்கள். இந்தச் சந்தர்ப்பத்தை வீணாக்காதீர்கள்.
()
இத்தனைக் கோடி ஜனங்களில் ஒரு சிறுபுள்ளியாக என் ஜனநாயகக் கடமையை ஆற்றிய பெருமையுணர்ச்சியுடனும் கறையுடனும் (கறை நல்லது) வீட்டிற்குள் நுழைந்த என்னை "தூங்கின போர்வையைக் கூட மடிச்சு வெக்காம போயிட்டு... கட்மையாற்றிட்டாராம்" என்று நொடித்து ஒரே நொடியில் அத்தனை போதையையும் இற்க்கி தரையில் கால்பட வைத்தார் வீட்டின் முதலமைச்சர்.
கடந்த தேர்தலின் போது எழுதிய பதிவு.
suresh kannan