Showing posts with label வாசிப்பனுபவம். Show all posts
Showing posts with label வாசிப்பனுபவம். Show all posts

Thursday, April 29, 2021

ஓர் உன்னதமான சிறுகதை - பா.திருச்செந்தாழை


 

சமீபத்தில் நான் வாசித்த மிகச் சிறந்த சிறுகதைகளுள் ஒன்றாக இதைச் சொல்வேன்.

(கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கி வாசிக்கவும்)

விலாஸம்

 

ஜெயமோகனின் தளத்தின் வழியாகவே இந்தச் சிறுகதையை வந்து அடைந்தேன். இனி பா.திருச்செந்தாழையின் இதர சிறுகதைகளையும் தேடி வாசித்தேயாக வேண்டும் என்கிற உத்வேகத்தைத் தந்து விட்டது.

*

இனி கதையைப் பற்றிய என் கருத்துக்கள்:



கால மாற்றங்களில் பேரரசுகளே கவிழ்ந்து வேறு புதிய அரசுகள் அதிலிருந்து முளைக்கும் போது தனி மனிதர்களும் அவர்களின் சிறிய சாம்ராஜ்யங்களும் எம்மாத்திரம்?

ஒரு புதிய முதலாளி, நொடிந்து கொண்டிருக்கும் தன் பழைய முதலாளியைச் சந்திக்கச் செல்வதுதான் இந்தக் கதையின் மையம். இது ஒருவகையான சீண்டல். தன்னுடைய மகத்தான வளர்ச்சியை பழைய முதலாளிக்கு மீண்டும் நினைவுப்படுத்தும் ஒரு விளையாட்டு. ஏனெனில் புதிய முதலாளி அத்தகைய அவமதிப்புகளையும் சவால்களையும் கடந்துதான் இந்த உயரத்திற்கு வந்திருக்கிறார். எனவே இதுவொரு மெல்லிய பழிவாங்கல். தன்னுடைய விழுப்புண்களை தன்னிச்சையாக தடவிப் பார்க்கும் மீறவியலாத உணர்வு.


ஆனால் இதை அவரால் மனநிறைவுடன் செய்ய முடிந்ததா என்பதில்தான் இந்தச் சிறுகதை உச்சம் பெறுகிறது.

*

பொதுவாகவே திறமையான வேலைக்காரர்களை நுண்ணுணர்வு கொண்ட முதலாளிகள் உள்ளுக்குள் அஞ்சுவார்கள். இன்னொரு பக்கம் அவனது திறமையை உள்ளே வியந்து கொண்டே இருப்பார்கள்.


‘இவன் ஒரு நாள் இங்கிருந்து வெளியேறி தனக்குப் போட்டியாகவோ அல்லது தன்னை மீறியோ செல்வான்’ என்கிற உணர்வும் அச்சமும் அவர்களுக்கு இருந்தபடியே இருக்கும். எனவே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மட்டம் தட்டியபடியே இருப்பார்கள்.  அவனது தன்னம்பிக்கையை குலைத்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அவனது ‘வளமான’ வருங்காலம் குறித்த ஆசையையும் கூடவே காட்டியபடி இருப்பார்கள். குதிரைக்கு முன்னால் காரட் கட்டி தொங்க விட்டு வேகமாக ஓட வைக்கும் உத்தியைப் போல.

போலவே திறமையான தொழிலாளியும் ஒரு நல்ல முதலாளியை சரியாக அடையாளங்கண்டு கொள்வான். அவரது திறமையை உள்ளுக்குள் பிரமிப்பான். போலிப் பணிவுகளைக் கூட்டுவான். அங்கிருந்து பலவற்றைக் கற்றுக் கொள்ள முயல்வான். ஆனால் இன்னொரு பக்கம் தன்னுடைய உழைப்பின் பலனெல்லாம் முதலாளிக்குச் செல்கிறதே என்கிற மனஉளைச்சலும் ஏக்கமும் அவனுக்குள் இருந்தபடியே இருக்கும். இதுவே அவனது வருங்காலத் திட்டங்களுக்கு அடித்தளமாக இருக்கும்.

ஆக.. முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இருப்பது ஒருவகையான love & hate உறவு. எத்தனை காலம் ஆனாலும் இடம் மாறினாலும் இந்த விளையாட்டை அவர்கள் ஆடியபடியேதான் இருப்பார்கள்.

*

ஒரு திறமையான தொழிலாளியை தந்திரம் மிக்க முதலாளிகள் மட்டம் தட்டி தொடர்ந்து அடிமையாக்குவது என்பது எல்லா இடத்திலும் இல்லை. சில சமூகங்களில் – குறிப்பாக நாடார்.. மார்வாரி போன்வற்றில் – திறமையான தொழிலாளிகளைத் தட்டிக் கொடுத்து வளர்த்து ஒரு கட்டத்தில் அவன் சொந்தமாக இயங்குவதற்கான பாதையையும் அமைத்துத் தருவார்கள். ஆனால் அந்த தொழிலாளி சொந்த சாதியைச் சேர்ந்தவனாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான தகுதியாக இருக்கும்.

*

கரைந்து கொண்டிருக்கும் பழைய முதலாளியின் பெருமிதங்கள், உச்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் புது முதலாளியின் உளவியல் ஆட்டம் என்று இந்தச் சிறுகதை பல்வேறு நுட்பமான விவரணைகளைக் கொண்டுள்ளது.

… யாவாரம்னா போர்தான. காலென்ன தலை என்ன? பள்ளத்துக்குப் பக்கத்துலதான மேடுன்னு ஒன்னு உருவாகுது” என்றார். குழந்தையான சிரிப்பின் வெளிச்சம் சின்னச் சின்னச் சுடர்களாய் குறைந்துகொண்டிருக்க, “நல்ல தொழிலாளிக்கு திறமை எவ்வளவு முக்கியமோ அதை அவனோட மூளைக்குச் செல்லவிடாம தடுக்கிற சூட்சுமம் முதலாளிக்கு முக்கியம்னு அப்பா சொல்வாரு.”…

என்பது போன்ற அபாரமான வரிகள் இந்தச் சிறுகதையின் வாசிப்பனுபவத்தை உன்னதமாக்குகின்றன. சிறுகதை முடியும் இடம் அற்புதமானது. புதிய முதலாளி எத்தனைதான் உயர்ந்தாலும் அவனுக்குள் இருக்கும் ஆதாரமான தொழிலாளி சாகவே மாட்டான் என்பது கச்சிதமாக உணர்த்தப்படுகிறது.

இதைப் போலவே பழைய முதலாளியின் முன் தன் செல்வாக்கைக் காட்டி சீண்டலைச் செய்து முடித்து விட்டாலும் அவரின் வீழ்ச்சி புதிய முதலாளிக்குள் ஒரு நெருடலையும் இனம் புரியாத சோகத்தையும் எழுப்பிக் கொண்டேயிருக்கிறது. ஏனெனில் இந்த வட்டமும் என்றேனும் திரும்பலாம்.

மிக அபாரமான சிறுகதை. கட்டாயம் வாசித்துப் பாருங்கள். 


ஜெயமோகனின் பதிவு

 


suresh kannan

Sunday, April 12, 2020

வணக்கம் - வலம்புரிஜான்





வலம்புரிஜான் எழுதிய ‘வணக்கம்’ என்றொரு நூலை மிகச் சிரமப்பட்டு வாசித்து முடித்தேன். நக்கீரன் இதழில் தொடராக வந்தததின் தொகுப்பு இது. நக்கீரனில் வந்தது.. என்பதில் இருந்தே இந்த நூலின் உள்ளடக்க தரத்தை அறிந்து கொள்ள முடியும்.

கலை, எழுத்து, அறிவியக்கம் போன்வற்றுடன் சிறிதாவது தொடர்புள்ளவர்கள்,  அதிகார வேட்டை அரசியலுக்குள் சென்று வீழ்ந்தால் எத்தனை கேவலங்களுக்கு உள்ளாவார்கள்.. அவர்களுக்குள் இருக்கும் கலைத்தன்மையும் அவரது அடையாளமும் எத்தனை சிதைந்து போகும் என்பதை உறுதிப்படுத்தும் நூல் இது.

வலம்புரிஜான் அடிப்படையில் சிறந்த வாசிப்பாளர். நிறைய அறிய முற்பட்டிருந்தவர். ஆனால் அதிகார அரசியல் என்னும் நெருப்பில் குளிர்காய முனைந்து நிறைய காயங்களுடன் பெற்றும் இழந்தும் செயல்பட்டிருக்கிறார்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இரண்டு பிம்பங்களுக்கும் அணுக்கமானவராக இருக்க ஜான் மிகவும் முயற்சித்திருக்கிறார். அவர்களுக்கு இடையேயான பந்தாட்டத்தில் மிகவும் அல்லல்பட்டிருக்கிறார். மிக குறிப்பாக ஜெயலலிதாவால் மிகவும் அவமதிக்கப்பட்டிருக்கிறார். ஒரு நீண்ட கால கட்டத்திற்குப் பிறகு அவருக்குள் இருந்த தன்மான உணர்வு விழித்தெழிந்திருக்கிறது. எனவே இந்த நூல்.

அரசாங்க அலுவலகத்தில் தன் பணிக்காலம் பூராவும் லஞ்ச சூழலில் மாட்டிக் கொண்டு, சந்தர்ப்பம் கிடைத்தால் அவனும் வாங்கிக் கொண்டு… பிறகு ஓய்வுக் காலத்தில் மிக செளகரியமான உணர்வில் ‘எல்லாம் பிராடு பசங்க சார்..’ என்று ஒரு அதிகாரி ‘பிறரை குற்றம்சாட்டி’ புலம்புவார் அல்லவா. அப்படியொரு சந்தர்ப்பவாத புலம்பல்தான் இந்த நூல். 

மிக குறிப்பாக ஜெயலலிதாவின் சில ஆதாரமான எதிர்மறை குணாதிசயங்களை துணிச்சலுடன் அம்பலப்படுத்துகிறார் ஜான். அதே துணிச்சலுடன் எம்.ஜி.ஆரை அம்பலப்படுத்துவதில் ஜானுக்கு தயக்கம் இருந்ததைப் போல உணர முடிகிறது. எம்.ஜி.ஆர் மீதுள்ள உள்ளார்ந்த மதிப்பு மனத்தடையை ஏற்படுத்தியதோ என்னமோ. ஆர்.எம். வீரப்பன், நடராசன், சசிகலா, திருநாவுக்கரசு போன்ற பல சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள், தரகர்கள் போன்றவர்கள் இடையிடையே வந்து போகிறார்கள்.

**

நல்ல தமிழ் கொண்ட எழுத்தை கேட்க, வாசிக்க எனக்கு எப்போதும் பிடிக்கும். ஆனால் அதுவே மிகையான அலங்காரமாக, செயற்கையான ஜோடனைகளுடன் வெளி வரும் போது குமட்டி விடுகிறது. திராவிட கலாசாரத்தின் சில நல்ல பண்புகளைத் தாண்டி, அவர்களிடம் வெறுக்கக்கூடிய அம்சங்களுள் ஒன்றாக இருந்தது அவர்கள் மொழியை மிகையாக ஜோடனை செய்த விளையாட்டுத்தான்.

வலம்புரி ஜானின் மொழி நடையும் இவ்வாறே இருக்கிறது. ‘கருவாடு மீனாகாது.. கறந்த பால் மடிபுகாது’ என்று அமைச்சர் காளிமுத்து பேசினார் அல்லவா.. அப்படியொரு செயற்கையான நெடி கொண்ட மொழி நூல் பூராவும் வீசிக் கொண்டிருக்கிறது. அதுவே ஓர் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. சொல்ல வரும் விஷயத்தை இப்படி இழுத்து இழுத்து எழுதி சலிப்பூட்டுகிறார் ஜான்.

இந்த நூலை கிசுகிசு வரலாறு என்று மதிப்பிடுகிறார் ஜெயமோகன். இது தொடர்பாக ஒரு நீண்ட கட்டுரையை தன் தளத்தில் ஏற்கெனவே எழுதியிருக்கிறார். ஒருவகையில் இந்த நூலை நான் வாசிக்க முற்பட அந்தக் கட்டுரையே காரணம்.

இது போன்ற கிசுகிசு வரலாற்றின் ஏராளமான வரிகளுக்கிடையே சிந்திக் கிடக்கும் உண்மையான வரலாற்றின் துளிகளை தொகுத்தெடுத்துக் கொள்ள முடியும் என்கிறார் ஜெயமோகன்.

உண்மைதான். ஆனால் கல்லில் இருந்து அரிசியைப் பொறுக்கும் சலிப்பான உணர்வைத் தந்தது இந்த நூல்.

எவராவது விரும்பினால் தேடிப் படிக்கலாம். ஆனால் நான் பரிந்துரை செய்ய மாட்டேன்.


suresh kannan

Saturday, February 01, 2020

தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி




எழுத்தாளர் இந்துமதியின் ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ நாவலை சமீபத்திய தற்செயல் தேர்வில் வாசித்து முடித்தேன். எத்தனையோ வருடங்களுக்கு முன்பு வாசித்த நூல் இது. அப்போது மிகவும் பிடித்திருந்தது. ஆனால், சமீபத்திய வாசிப்பில் அத்தனை உன்னதமாகத் தெரியாவிட்டாலும் தமிழில் எழுதப்பட்ட ஒரு குறிப்பிடத்தகுந்த வெகுசன நாவல் என்றே சொல்வேன்.

ஒரு காலக்கட்டத்தின்  பின்னணி இதில் உள்ளது. அதே சமயத்தில் எப்போதும் பொருந்திப் பார்க்க முடிகிற நிரந்தரத்தன்மையையும் கொண்டுள்ளது. பாலகுமாரன், ஆதவன் போன்றோரின் வாசனை ஆங்காங்கே வருகிறது.

இந்துமதியின் படைப்புகளில் சிலதை பதின்மங்களில் நான் வாசித்திருக்கக்கூடும். ஆனால் அவை எதுவுமே இப்போது நினைவில் இல்லை. மாறாக இந்த நாவல் மட்டும் நினைவில் மங்கலாகவும் அதே சமயத்தில் இதன் சில விவரணைகள் அழுத்தமாகவும் மனதில் பதிந்துள்ளது. குறிப்பாக நாவலில் விவரிக்கப்படும் ஓரிடம் எப்போதுமே நினைவில் வந்து கொண்டிருக்கும். இந்த நாவலின் ஒரு புள்ளி என்னுள் உறைந்து போன இடம் அது எனலாம்.

மேகங்கள் நகரும் போது நமக்குத் தெரியும் விநோதமான உருவங்களைப் போல,  சுண்ணாம்புச் சுவரில் காரை உதிரும் அது போன்ற உருவங்களை ஏற்படுத்தியிருப்பதை நடைமுறையில் நாம் பார்த்திருப்போம்.  இந்த நாவலிலும் அப்படியொரு சித்தரிப்பு.

சமையல் அறைச் சுவற்றில் இருக்கும் அப்படியொரு உருவம், நடனமாடும் ஒரு பெண்மணியைப் போலவே விஸ்வம் என்கிற கதாபாத்திரத்திற்குத் தோன்றும். ‘போடா கிறுக்குப்பயலே’ என்பது போல அவனுடைய தாயார், இவனின் கற்பனையை சிரிப்புடன் புறந்தள்ளி விடுவார்.

ஆனால் பிறகு இவர்களின் குடும்பத்தில் வந்து இணைகிற விஸ்வத்தின் அண்ணி (பிராமண வழக்கில் மன்னி), இதே கற்பனையை விஸ்வத்திடம் பகிரும் போது அதிலுள்ள ஒற்றுமையைக் கண்டு அவன் திகைத்துப் போய் விடுவான். இருவரின் ரசனையும் ஒரே மாதிரியாக அமைந்துள்ளதை மிக சுவாரசியமாக சுட்டிக்காட்டும் இடம் அது.

இப்போதைய மீள் வாசிப்பில் இந்த இடம் எப்போது வரும் என்று காத்திருந்து அது வந்தவுடன் புன்னகைத்துக் கொண்டேன்.

**

இந்த நாவல் எதைப் பற்றியது?

ஒருவனின் இளம் வயது என்பது லட்சியங்களும் கனவுகளும் நிரம்பி பெருகி வளரும் காலக்கட்டம். அந்தக் கனவுகளை நோக்கி பயணப்பட்டு விட முடியும் என்கிற நம்பிக்கை நிறைந்திருக்கிற வயது. ஆனால் கூடவே சந்தேகமும் நிராசையும் இணைந்திருக்கும் பருவம்.

அந்தக் கனவுகளை நோக்கி பயணப்பட விடாமல் யதார்த்தம் என்பது அவனை வேறெங்கோ திசை திருப்பி அலைக்கழிக்கும். வேறு வழியின்றி ஒரு கட்டத்தில் அந்த நிதர்சனத்தை அவன் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். இதுதான் இந்த நாவலின் மையம். இதை எந்தவொரு வளரிளம் இளைஞனின் அனுபவத்துடனும் பொருத்திப் பார்க்கலாம். அதனால்தான் காலத்தின் நிரந்தரத்தன்மை இதில் இருக்கிறது என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

பரசு என்கிற இளைஞன் மேலே படிக்க விரும்பி, ஆனால் குடும்பத்தின் சூழல் காரணமாகவும் தந்தையின் வற்புறுத்தல் காரணமாகவும் அந்தக் கனவை கைவிட்டு பணியில் சேர்கிறான்.

அவனுடைய தம்பி விஸ்வம். இவன்தான் இந்தப் புனைவின் நாயகன் எனலாம். அண்ணனைப் போலவே தானும் ஓர் இயந்திரம் ஆகி விடுவோமோ என்கிற பயமும், அப்படி ஆகி விடக்கூடாது என்கிற பிடிவாதமும் கொண்டிருக்கிறவன். ஆனால் சூழல் அவனைச் சுழற்றியடிக்கும் போது பரசுவின் தொடர்ச்சியாக அவனும் ஓர் இயந்திரமாகத்தான் ஆக வேண்டியிருக்கிறது.

விஸ்வத்தின் பாத்திரம் மிகக் கச்சிதமாகவும் சுவாரசியமாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. எண்பது, தொன்னூறுகளில் சிறுபத்திரிகை உலகில் இயங்கும் ஒரு நவீன இளைஞனின் சித்திரம் விஸ்வத்தினுடையது.

அன்றாட லெளகீக விஷயங்களின் மீது வெறுப்பும் எரிச்சலும் கொண்டிருக்கிறவன். இந்த மரபை மீறத் துடிக்கிறவன். இதிலிருந்து தப்பித்து விட முடியாதா என்கிற ஏக்கமும் நிராசையும் கொண்டிருக்கிறவன். பிலிம் சொசைட்டி, சார்த்தர், ஜே.கிருஷ்ணமூர்த்தி என்கிற அறிவார்த்தமான தேடலைக் கொண்டிருப்பவன். சிறுபத்திரிகை நடத்த முயல்கிறவன். இயந்திரமாக மாறி விட்டிருக்கிற அண்ணன் பரசுவின் மீது வெறுப்பும் பரிதாபமும் ஒருசேர கொண்டிருக்கிறவன்.

வேண்டா வெறுப்பாக அவன் செல்லும் ஒரு நேர்காணலுக்காக ஓர் அலுவகத்தின் வாசலில் நின்று கொண்டிருக்கிற போது அங்குள்ள இயற்கைச் சூழலை வியக்கிற விஸ்வத்தின் மனநிலையின் மூலம் அவனுடைய பாத்திரம், நாவலின் துவக்கத்திலேயே மிகச் சரியாக வாசகனுக்குள் கடத்தப்பட்டு விடுகிறது.

**

அண்ணி ருக்மணிக்கும் விஸ்வத்திற்கும் இடையில் ஏற்படும் நேசமும் ரசனை ஒற்றுமையும் மெல்ல திரண்டு எழுவதை இந்த நாவலின் சுவாரசியமான அம்சங்களுள் ஒன்றாகச் சொல்லலாம்.

வழமைகளினால் இருண்டு கிடக்கும் அந்த வீட்டினுள் ஓர் அகல் வெளிச்சம் போல நுழைகிறாள் ருக்மணி. அவளின் செய்கை ஒவ்வொன்றிலும் அவளுடைய ரசனையும் நேர்த்தியும் வெளிப்படுகிறது. ‘இத்தனை அழகு கொண்டவள். தனக்கு மனைவியா?” என்று துவக்கத்திலிருந்தே பிரமிக்கிற பரசு, அந்தப் பேரழகை நெருங்க முடியாமல் தாழ்வுணர்ச்சியுடன் விலகியே நிற்கிறான். எந்நேரமும் சிரித்துக் கொண்டே வளைய வருகிற ருக்மணியைப் பார்த்து விஸ்வத்திற்கு ஆச்சரியமாக இருக்கிறது. அண்ணன் பரசுவின் மீது கோபமாகவும் வருகிறது.

தன் துணிகளை அண்ணி துவைக்கும் போது சங்கடத்துடன் ஆட்சேபிக்கும் விஸ்வம், அவளுள் ஒளிந்திருக்கிற இலக்கிய வாசனையை அறியும் சமயத்தில் அவளுடன் ஒன்றிப் போகிறான். அவர்களுக்குள் ஒரு நாகரிகமான நட்பு உருவாவதற்கு இலக்கிய ரசனையும், அது தொடர்பான உரையாடலும் காரணமாக இருக்கின்றன.

விஸ்வத்தின் தந்தை பாத்திரமும் சரியாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பொருளாதார சூழல் காரணமாக தன் மகன்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறான சூழலில் தள்ளிக் கொண்டிருக்கிறோமே என்கிற உள்ளார்ந்த வேதனையும் ஆனால் அதனை தவிர்க்க முடியாத கட்டாயத்திலும் அவர் தத்தளிக்கிறார். தந்தையின் கையாலாகாததன்மை குறித்து விஸ்வத்திற்கு அவ்வப்போது எரிச்சல் வந்தாலும் அவருடைய நோக்கில் நின்று பார்க்கும் போது அவனுக்கு நிதர்சனம் புரிகிறது. எரிச்சல் பரிதாபமாகவும் அன்பாகவும் மாறுகிறது.

**

இந்த நாவல், துரை இயக்கி அஜித் நடித்த திரைப்படமான ‘முகவரி’யை எனக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்தது. இசைத்துறையில் ஆர்வமும் திறமையும் கொண்ட ஓர் இளைஞன் சினிமாவில் முட்டி மோதி தோற்றுப் போய் குடும்பச் சூழல் காரணமாக இறுதியில் பணிக்குச் செல்லும் கதை. இந்துமதியின் நாவலில் இருந்து துரை தூண்டுதல் பெற்றிருந்தாலும் ஆச்சரியமில்லை. அண்ணன், அண்ணி பாத்திரம் உட்பட திரைப்படத்திற்கும் நாவலுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.

இதில் இன்னொரு தற்செயல் ஒற்றுமையும் உள்ளது. இந்த நாவல், தொலைக்காட்சி தொடராக படமாக்கப்பட்ட போது விஸ்வம் பாத்திரத்தில் ரகுவரன் நடித்திருந்தார் என்று நினைவு. ஆனால் ‘முகவரி’யில் நாயகனுக்கு அண்ணனாக, அதாவது பரசு பாத்திரத்தை அவர் ஏற்றிருந்தார்.

நாவலை வாசித்து முடித்தவுடன் எப்போதோ பார்த்த தொடரின் சில காட்சிகளை பார்க்க முடியுமா என்று ஆசைப்பட்டேன். ஆனால் இணையத்தில் எத்தனை தேடியும் கிடைக்கவில்லை. (யாராவது கண்டெடுத்தால் சொல்லுங்கள்). 

இந்துமதி

இந்த நாவலில் மிக முக்கியமானதொரு அம்சத்தைக் கண்டேன்.

அதாவது பொதுவாக பெண் எழுத்தாளர்கள் என்றால் மாமியார் – மருமகள் பிரச்சினை, ஆணாதிக்க கணவனின் பிடியில் பல்வேறு கொடுமைகளை அனுபவிக்கும் ‘அபலை’ மனைவியின் பாத்திரம் என்று சமையல் அறையில் மூக்கைச் சிந்திக் கொண்டே எழுதியிருப்பார்கள் அல்லது இவற்றிலிருந்து மீறியெழுந்து ‘ஓ.. ஒரு தென்றல் புயலாகி வருதே’ என்று ஆவேசமான பெண்ணியக் குரலில், ஆண் குலத்தையே எரித்துச் சாம்பலாக்குகிற மிகையுடன் பொங்கியெழுந்து புரட்சி செய்வார்கள்.

ஆனால், இந்த நாவல் பெண் எழுத்தாளரால் எழுதப்பட்டிருந்தாலும் “ஆண் வாசனை’ மிகுந்த படைப்பாக இருப்பதை ஆச்சரியத்துடன் கவனித்தேன். எந்த இடத்திலுமே விஸ்வத்தின் பாத்திரம் தடம் மாறவில்லை. ஓர் ஆணின் மனதில் கூடு பாய்ந்த அதிசயத்தை இந்துமதி நிகழ்த்தியிருக்கிறார் எனலாம்.

விஸ்வத்தின் காதலி ஜமுனா ஒரு சராசரிப் பெண். ஆனால் தன்னை ‘இன்டலெக்சுவலாக’ உணரும் விஸ்வத்தால் அவளுடைய சராசரித்தனத்தை ஏற்க முடிவதில்லை. எரிச்சலுடன் அவ்வப்போது விலகி விடுகிறான். ஆனால் இவனுடைய அண்ணி ருக்மணியால் அறிவார்ந்த சூழலிலும் சரி, சராசரிகளின் உலகிலும் சரி, இரண்டிலுமே சகஜமாகப் புழங்க முடிகிறது. அவளுடைய இந்தக் குணாதிசயம் விஸ்வத்தின் அக உலகில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்துவதோடு இந்த நாவல் நிறைவுறுகிறது.

இந்துமதியை கணிசமாக படித்தவர்கள், அவர் எழுதியதில் இந்த நாவல் மட்டுமே குறிப்பிடத்தக்க படைப்பு என்கிறார்கள். கனவுலகில் மிதந்து திரியும் விஸ்வம், அங்கிருந்து சரிந்து யதார்த்தத்தின் படிகளில் நடந்து செல்லும் வீழ்ச்சியைத்தான் தலைப்பு குறிக்கிறது.

நிச்சயம் ஒருமுறை வாசிக்கத்தகுந்த நாவல்.




suresh kannan

Friday, December 20, 2019

மம்முட்டி என்கிற மனிதன்




மம்முட்டி எனக்குப் பிடித்த நடிகர்தான் என்றாலும் ஒரு நடிகரின் வாழ்வனுபவங்களில் என்ன இருக்கப் போகிறது, அப்படியே இருந்தாலும் அது பொய்யும் புனைவுமாய் திரையைப் போலவே மிகை ஒப்பனையுடன்தானே பதிவாகியிருக்கப் போகிறது என்கிற அசுவாரஸ்யத்துடனும் தவறான முன்முடிவுடனும்தான் அந்த நூலை வாசிக்க ஆரம்பித்தேன்.


அது, மூன்றாம் பிறை –  வாழ்வனுபவங்கள்.


மம்முட்டி என்கிற நடிகரைப் பற்றிய நூலாக அல்லாமல் பெரும்பாலும் ஒரு தனிநபரின் முகமாக  அமைந்திருப்பதே இந்த நூலின் சிறப்பு. தனது திரையுலக அனுபவங்களைத் தாண்டி தம் சொந்த வாழ்வின் அனுபவங்கள் பலவற்றையும் ஒப்பனையின்றி ஆத்மார்த்தமாக பகிர்ந்திருக்கிறார் மம்முட்டி. தமிழில் இப்படி எந்தவொரு நடிகராவது உண்மையாகவும் ஆத்மார்த்தமாகவும் எழுதுவாரா என்று சற்று நேரம் யூகித்துப் பார்த்தேன். தம் சுயநிறங்களை ஒரு வாக்குமூலம் போல ஒப்புக் கொள்ளும் மம்முட்டி தான் சறுக்கிய தருணங்களையும் பிறகு அதை உணர்ந்த பக்குவத்தையும் பாவ மன்னிப்பின் நெகிழ்ச்சியோடு எழுதியுள்ளார்.


***

முகம்மது குட்டி என்கிற இயற்பெயர் கொண்ட அந்த இளைஞன் ஓமர் ஷெரீப் போன்று ஒரு நடிகனாகும் விருப்பத்தில் அதையே தன் பெயராக வைத்துக் கொள்கிறான்.கல்லூரி நண்பர்களால் அந்தப் பெயராலேயே அறியப்படுகிறான். ஒருநாள்  சக நண்பனொருவனால் இயற்பெயர் கண்டுபிடிக்கப்பட்டு அவன் 'மம்முட்டி' என வேடிக்கையாக அழைக்க, பிடிக்காமலிருந்த அந்தப் பெயரே தன் அடையாளமாகி வாழ்நாள் முழுவதும் தன் பின்னாலேயே துரத்திக் கொண்டு வரும் சுவாரசியமான கட்டுரையோடு துவங்குகிறது இந்த நூல். (பிடிக்காமலிருந்த என் பெயர்)

தான் வழக்கறிஞராக பணிபுரிந்த போது, தன்னை தினமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் ‘சார்.. நீங்க ஏன் சினிமா நடிகராகக்கூடாது. அதற்கான முகவெட்டு உங்களுக்கு இருக்கிறது’ என்கிறான். சினிமா ஆசை உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கும் அந்த வழக்கறிஞருக்கு உள்ளுக்குள் ஜிலீர் என்கிறிருக்கிறது.

பிறகு புகழ்பெற்ற நடிகராகின பிறகு தன்னை வேடிக்கை பார்க்க முண்டியடிக்கும் கூட்டத்தில் போலீஸ்காரரால் அடிபட்டு ரத்தம் ஒழுகிய அந்த இளைஞனின் முகத்தை, பிரியத்துடன் தன்னை அழைத்த அந்தக் குரலை எங்கேயோ பார்த்த ஞாபகமிருக்கிறதே என்று யோசித்துப் பார்த்திருக்கிறார். பிறகுதான் அந்தச் சிறுவனின் நினைவு வருகிறது. தனக்குள் இருக்கும் நடிகனைக் கண்டுபிடித்த முதல் ரசிகனை பிறகு காண முடியவில்லை என்கிற துயரத்தை உண்மையாக பதிவு செய்கிறார். எப்படியாவது தேடிக் கண்டுபிடித்திருக்கலாமே என்று நமக்கே ஆதங்கம் பெருகுமளவிற்கு அந்த அனுபவம் அமைகிறது. (முதல் ரசிகனின் ரத்தம் தோய்ந்த முகம்).

பழங்குடி கதாபாத்திரமாக ஒரு திரைப்படத்தில்  மம்முட்டி நடிக்கிற போது துணை நடிகர்களாக உண்மையான பழங்குடி மனிதர்களே வரவழைக்கப்பட்டிருந்தார்கள்.  கும்பலாக அமர்ந்து உணவருந்துவது போன்ற காட்சி. கேமராவின் பொய்களுக்கு ஏற்ப நிறுத்தி நிறுத்தி உணவருந்த அவர்களுக்குத் தெரியவில்லை. சோறு கொட்டக் கொட்ட சாப்பிட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். மம்முட்டியின் பக்கத்தில் அமர்ந்திருக்கும் மனிதருக்கு மம்முட்டி யாரென்று தெரிவதில்லை. அறிமுகமில்லாவிட்டாலும் எவரோ ஒரு நாடோடி போல என நினைத்து, மம்முட்டியின் இலையில் அவியல் தீர்ந்து போன போது தன்னிச்சையாக தன் இலையில் இருந்து அவியலை வாரி வைத்திருக்கிறார்.

முன்பின் அறிமுகமில்லா ஒருவனின் இலையில் உணவு தீர்ந்த போது எவ்வித தயக்கமுமில்லாமல் தன்னிடமிருந்து பகிர்ந்தளிக்கும் பழங்குடி மனோபாவத்தை மம்முட்டி நெகிழ்வுடன் வியக்கிறார். அவர்களைத்தான் நாகரிகம் அறியாதவர்கள் என்று உணவைப் பதுக்கும் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். (கற்றுணர்தல்)

பிரசவ வலியுடன் சாலையில் காத்திருந்த பெண்ணுக்கு உதவியதில் அவர் தந்தை தந்த இரண்டு ரூபாய், படப்பிடிப்பு நடந்த வீட்டின் உரிமையாளர் மகனை வெளியேறச் சொன்ன கோபம், சக நடிகை பகிர்ந்து கொண்ட அந்தரங்கமான துயரம், ஏமாற்றிய தயாரிப்பாளரிடமிருந்து வசூலிக்காமல் போன பணம், ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக நினைக்கும் மலையாளிகளை கண்டிக்கும் நேர்மை,  பெண்களை மதிப்பதை அமிதாப்பச்சனிடமிருந்து கற்றுக் கொண்ட சம்பவம் என்று ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு விதமான உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது.

மம்முட்டிக்குள் ஓர் அபாரமான எழுத்தாளன் ஒளிந்திருக்கிறான் என்பதை அடையாளப்படுத்தும் வகையான எழுத்து. மலையாளத்தில் இதன் மொழி எப்படி இருந்திருக்கும் என்கிற யூகத்தை தனது இலகுவான  தமிழ் மொழிபெயர்ப்பின் மூலம் உணர்த்தியிருக்கிறார் ஷைலஜா.

மிகவும் சுவாரசியமான நூல். வம்சி வெளியீடு


suresh kannan

Tuesday, January 29, 2019

அசோகமித்திரனின் 'கரைந்த நிழல்கள்' - ஒரு மீள் வாசிப்பு





ஒரு சினிமா நிறுவனத்தில் நெடுங்காலம் பணி புரிந்ததின் மூலம் அசோகமித்திரனுக்கு எந்த அளவிற்கான லெளகீகத் தேவைகள் பூர்த்தியடைந்தன என்பது பற்றி நாம் அறியவில்லையென்றாலும் அந்த உள்வட்ட அனுபவத்தின் மூலம் நவீன தமிழ் இலக்கியத்திற்கு அற்புதமான சில படைப்புகள் கிடைத்திருப்பது  குறித்து மகிழலாம். அசோகமித்திரன் எழுதிய சிறுகதைகளில், நாவல்களில், சினிமா தொடர்பான சில  கட்டுரைகளில் திரையுலகத்தின் பிரத்யேகமான சில அந்தரங்கமான தருணங்கள், பகுதிகள், நபர்களைப் பற்றிய  சித்திரங்கள் மிக நுட்பமாக புனைவு மொழியில் பதிவாகியுள்ளன.

தன் முதலாளியான ஜெமினி வாசனிடம் பணி புரிந்த அனுபவங்களையொட்டி 'My Years with Boss' என்றொரு ஆங்கில நூலை எழுதினார் அசோகமித்திரன். 'மானசரோவர்' நாவலில் ஒரு முன்னணி நடிகனுக்கும் சினிமா உதிரி தொழிலாளிக்கும் உள்ள விசித்திரமான நட்பு பதிவாகியுள்ளது. இந்த நோக்கில் அசோகமித்திரன் திரைத்துறையின் ஓர் அங்கமாக பணிபுரிய நேர்ந்தது தமிழ் இலக்கியத்திற்கு லாபமே. இதன் உச்ச மதிப்பு என 'கரைந்த நிழல்கள்' நாவலைச் சொல்ல முடியும். தமிழில் எழுதப்பட்ட அபாரமான புதினங்களுள் முக்கியமான படைப்பு இது. சமகால மீள்வாசிப்பிலும் கூட தனது புத்துணர்ச்சியையும் புதுமையையும் இது இழக்கவில்லை என்பதே இதன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டுகிறது.

'கரைந்த நிழல்கள்' 1967-ம் ஆண்டில் 'தீபம்' இதழில் தொடராக வந்தது. பல பதிப்புகளைக் கடந்துள்ள இந்த நூல் ஆங்கிலம் உள்ளிட்ட இதர மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 2005-ல் கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட சிறப்பு பதிப்பில் 'இந்த நாவல் எழுதப்பட்டு நாற்பதாண்டுகள் ஆகியும் இதற்கு இன்னமும் தேவையிருக்கும் என்ற அவர்கள் நம்பிக்கை எனக்கு மிகுந்த உற்சாகம் அளிக்கிறது' என்று அதன் முன்னுரையில் எழுதுகிறார் அசோகமித்திரன்.

நாவல் வெளியான சமயத்தில் கிடைத்த வரவேற்பையும் எதிர்மறையான விமர்சனத்தையும் ஒரு குழந்தையின் கண்களின் வழியாக சமநிலையுடன் ஒரே மாதிரியாக  வியக்கிறார் அசோகமித்திரன். '.. நான் எழுதியது இவ்வளவு தீவிரமான பாதிப்பு ஏற்படுத்தியதைக் கண்டு எனக்கு வியப்பாக இருக்கிறது'. நடேச மேஸ்திரி என்னும் பாத்திரத்தை நடேச சாஸ்திரி என்று தவறாக எடுத்துக் கொண்டு எழுந்த எதிர்ப்புகளையும் தனக்கேயுரிய புன்னகையுடன் கடக்கிறார்.

***


'இலக்கிய உத்திகளைக் கையாள்வதில் தமிழர், உலகத்தில் எந்த எழுத்தாளருக்கும் குறைந்தவரில்லை என்று நிரூபிப்பது எனக்கு ஒரு நோக்கமாக இருந்தது' என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார் அசோகமித்திரன். அவரது நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறியது என்பதை இந்தப் புதினத்தை வாசிக்கும் எந்தவொரு நுட்பமான வாசகனும் உணர முடியும். நான்-லீனியர் எனும் உத்தியைக் கொண்டு 1967-ம் ஆண்டிலேயே ஒரு தமிழ் நாவல் எழுதப்பட்டிருக்கிறது என்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அந்த பாணியில் எழுதப்பட்ட முதல் தமிழ் படைப்பாக கூட இது இருக்கலாம்.

இந்த நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. ஒரு தமிழ் திரைப்படத்தின் கடைசிக்கட்ட உருவாக்க ஏற்பாடுகளோடு துவங்கும் இந்த நாவல் அத்திரைப்படத்தின் வீழ்ச்சியையும் அதனோடு இணைந்து சரியும், உயரும் தொடர்புள்ள நபர்களைப் பற்றியும் வெவ்வேறு கோணங்களில் தருணங்களில் விவரித்துக் கொண்டு பயணிக்கிறது. ஒன்றுக்கொன்று நேரடியாக தொடர்பில்லாத, கால வரிசையில் நகரும் அத்தியாயங்கள். ஆனால் எல்லாமே ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புள்ளதாகவும் உள்ளன. காலத்தின் படியில் நின்று கொண்டு இந்த அவல நகைச்சுவையின் பயணத்தை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அனுபவம் இந்தப் புதினத்தின் மூலமாக கிடைக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமாக வந்து கொண்டிருக்கும் சமயத்தில் வாசித்தவர்களுக்கு ஒருவேளை குழப்பம் ஏற்பட்டிருந்தால் அது வியப்பில்லை. ஒட்டுமொத்தமாக படிக்கும் போதுதான் இந்த நாவல் கட்டமைக்கப்பட்டிருக்கும் விதத்தையும் அதற்குப்  பின்னால் உள்ள திட்டமிடல் குறித்தும்  நமக்கு வியப்பும் பிரமிப்பும் உண்டாகின்றன.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிகழும் சம்பவமொன்று அதனோடு தொடர்புடைய நபர்களின் வெவ்வேறு பார்வைக் கோண்ங்களில் தனித்தனியாக விரியும் கதையாடல் உத்தி சமீபமாகத்தான் நமக்கு அறிமுகமாகியிருக்கிறது. Non-linear narrative  எனப்படும் இந்தப் பாணியில் திரைப்படங்களின் மூலமாக உதாரணம் சொல்ல வேண்டுமானால் அகிரா குரசேவாவின் 'ரஷோமானை' சொல்லலாம். இதே பாதிப்பில் தமிழில் வெளிவந்தது மணிரத்னத்தின் 'ஆய்த எழுத்து'.

'கரைந்த நிழல்கள்' நாவலிலும் இந்த உத்தி பல ஆண்டுகளுக்கு முன்பே  பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஸ்டூடியோவில் பணிபுரியும் சம்பத் என்கிற ஆசாமி உணவு வாங்குவதற்காக வண்டியில் புறப்படுகிறான். இது சார்ந்த நுண்விவரங்களை திறமையாக விவரிக்கிறார் அசோகமித்திரன். ஒரு கட்டத்தில் அவன் ஸ்டூடியோவை விட்டு வெளியே செல்லும் போது  படநிறுவனத்தின் முதலாளியின் கார் உள்ளே வருகிறது. ஆனால் தன்னுடைய சொந்த விவகாரம் ஒன்றின் காரணமாக பரபரப்புடன் செல்லும் சம்பத், ஒரு கணம் திகைத்து நின்று விட்டு தன் வேலையைப் பார்க்க அவசரமாக விரைந்து விடுகிறான்.

சில பக்கங்கள் தாண்டியுடன் இதே காட்சி மீண்டும் வருகிறது. இம்முறை அது படமுதலாளியான ரெட்டியாரின் பார்வை  நோக்கில் விரிகிறது. திரைப்படத்தின் நாயகி படப்பிடிப்பிற்கு வராமல் முரண்டு பிடிப்பதால் அது சார்ந்த மன நெருக்கடியிலும் நிதிச்சிக்கல்களிலும் இருக்கிறார் ரெட்டியார். ஸ்டூடியோவிற்குள் கார் நுழையும் போது  தன்னுடைய ஊழியனான சம்பத் எதற்கோ ஒளிந்து கொள்ள முயற்சிப்பவனைப் போல அவருக்குத் தோன்றுகிறது.

இப்படி உதவியாளனாக நமக்கு அறிமுகமாகும் சம்பத், நாவலின் இறுதிப்பகுதியில் பட முதலாளியாக உயர்ந்திருக்கிறான். அதே சமயம் நாவலின் துவக்கத்தில் நமக்கு அறிமுகமாகும் நடராஜன் என்கிற திறமையான தயாரிப்பு நிர்வாகி, இறுதியில் சாலையோரத்தில் பிச்சை எடுப்பவனாக வீழ்ந்து விடுகிறான். இந்த தகவல் கூட நேரடியாக அல்லாமல் சம்பத்தின் உரையாடல் மூலமாகத்தான் நமக்குத் தெரிய வருகிறது.  கனவுகளை பிரம்மாண்டமாக உருவாக்கும் திரையுலகத்தின் பரமபத ஆட்டத்தில் அது தொடர்பான பலரின் தனிப்பட்ட கனவுகள் நசுங்கி சாவது ஒரு முரண்நகை.

***

சில துண்டு காட்சிகள் மட்டுமே எடுக்கப்படவிருக்கிற ஒரு வெளிப்புற படப்பிடிப்பிற்கான ஏற்பாடுகளை திறமையாக கையாள்கிறான் நடராஜன். கொசுக்கள் நிறைந்திருக்கும் ஒண்டுக்குடித்தன வீட்டிலிருந்து அதிகாலையில் அவன் புறப்படுவதான சித்தரிப்புகளோடுதான் இந்த நாவல் துவங்குகிறது. தனது திறமையான ஆனால் ஆரவாரமில்லாத உரைநடையின் மூலம் ஒவ்வொரு சூழலையும் பாத்திரங்களின் அப்போதைய மனநிலையையும் அபாரமாக பதிவாக்கிச் செல்கிறார் அசோகமித்திரன். ஒவ்வொரு காட்சியுமே அதன் நுண்விவரங்களால் நிறைந்திருக்கின்றன. உதாரணத்திற்கு நாவலின் துவக்க வரியை பார்ப்போம்.

'அந்தக் குறுகலான சந்தில் அதிகம் ஓசைப்படாமலேயே வந்த கார் நிற்கும் போது மட்டும் ஒருமுறை சீறியது'.

ஏறத்தாழ சுஜாதாவின் உரைநடையை நினைவுப்படுத்தும் எழுத்து பாணி. மிகச்சுருக்கமான வாக்கியங்களில் ஒட்டுமொத்த சூழலையும் வாசகனின் மனதிற்கு கடத்தி விடும் திறமை அசோகமித்திரனுக்கு வாய்த்திருக்கிறது. ஆனால் சுஜாதாவின் உரைநடையில் இருக்கும் ஆரவாரமும் அதிகப்பிரசங்கித்தனங்களும் அசோகமித்திரனின் எழுத்தில் இல்லை. வாசகனுக்கு இடையூறு செய்யாத கலையமைதியுடன் கூடிய எழுத்தில் அனைத்தையும் உணர்த்தி விடுகிறார்.

ஒரு திரைப்படம் மெல்ல மெல்ல உருவாகும் தயாரிப்பு தொடர்பான நடைமுறை விஷயங்களில் திறமைசாலியாக இருக்கும் நடராஜனை இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் கூட பாராட்டுகிறார்கள். ஆனால் முடிவடையாமலேயே வீழும் அந்த திரைப்படம், நடராஜனை மட்டுமல்ல அதன் தயாரிப்பாளரான ரெட்டியாரையும் காணமாற் போகச் செய்கிறது.

இதைப் போலவே இதற்குப் பிறகான அத்தியாயத்தில் வரும் ராஜகோபாலும். இவனுடைய அறிமுகம் துவக்க அத்தியாயத்திலேயே சிறுகுறிப்பாக நமக்கு கிடைத்து விடுகிறது. நடராஜனைப் போலவே இவனும் வறுமை பிடுங்கித் தின்னும் ஒட்டுக்குடித்தன வீட்டிலிருந்து புறப்படுகிறான். திருமண வயதைத் தாண்டியும் அதற்கான வாய்ப்பு அமையாமல் அண்ணனின் சம்பாத்தியத்தில் ஒண்டிக் கொள்ளும் வேதனை. திரையுலகின் நிலையில்லாத சம்பாத்தியத்தால் அவதிப்படும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களில் ஒருவன். உதவி இயக்குநராக இருப்பவன்.

சந்திரா கிரியேஷன்ஸ் -ஸின் வெளிவராத திரைப்படம் இவனுடைய வாழ்க்கையையும் வீழ்ச்சியடைய வைக்கிறது. அடிக்கடி பஞ்சராகும் சைக்கிளில் செல்கிறான். ரிப்பேராகும் சைக்கிள்,  கீழ் நடுத்தர சமூகத்தின் குறியீடாகவே அசோகமித்திரனின் பல படைப்புகளில் வருகிறது. தனது அடுத்த பட வாய்ப்புக்காக பசியோடு  ஸ்டூடியோக்களில் அலைகிறான். உதவியாளனாக இருந்த சம்பத், தயாரிப்பு நிர்வாகியாக மாறி விட்ட விஷயம் தெரியாமல் அவனிடம் 'தண்ணி எடுத்துட்டு வா' என்று சொல்ல அவன் நாசூக்காக இவனை தவிர்த்து விட்டுச் செல்லும் பகுதி அபாரமானது. போதையின் பின்னணியில் தன்னுடைய அத்தனை துயரத்தையும் நண்பர்களிடம் கசப்பாக ராஜகோபால் வாந்தியெடுக்கும் உரையாடலும் அதை அவல நகைச்சுவையோடு விவரித்திருக்கும் அசோகமித்திரனின் எழுத்து திறனும் வியப்பளிக்கிறது. நடராஜனைப் போலவே இவனுடைய வீழ்ச்சியும் போகிற போக்கில் சம்பத் தரும் தகவலின் மூலம் தெரியவருகிறது.


நாவலின் கடைசிப்பகுதி சினிமாவை நம்பி இயங்கும் இன்னொரு அங்கமான மாணிக்ராஜ் என்பவனின் மூலமாக விரிகிறது. இவனும் நாவலின் இடைப்பகுதியில் நமக்கு அறிமுகமானவன்தான். வெளிநாட்டு திரைப்பட பிலிம்களின் துண்டுகளை வைத்து பிழைப்பு நடத்துபவன். அதைத் தவிர வேறு சில தொழில்களும் செய்கிறான் என்பது பூடகமாக வெளிப்படுகிறது. இந்த கடைசிப் பகுதி அதுவரையிலான தன்மையிலிருந்து மாறி இந்தப் பாத்திரத்தின் மூலமாக ஒருமை தன்னிலையில் விவரிக்கப்படுகிறது. சினிமாவுலகிற்கு தேவையான பிரத்யேகமான திறமைகளோடும் நெளிவு சுளிவுகளோடும் இருப்பவர்கள் மட்டும் எஞ்சி பிழைத்துக் கொள்கிறார்கள்.

தொழிலாளர்கள் முதலாளிகள் மீது கொண்டிருக்கும் மெல்லிய அச்சத்தையும் பதட்டத்தையும் நாவலின் பல பகுதிகளில் நுட்பமாக உணர்த்துகிறார் அசோகமித்திரன். தொழிலாளர்களின் ஆதாரமான மனஅமைப்பை, அடிமைத்துவ மனோபாவத்தை பல அபாரமான வரிகள் மிக நுட்பமாக வெளிப்படுத்துகின்றன. நாவலின் துவக்கத்திலேயே இது சார்ந்த பகுதி வருகிறது. நடராஜன் எத்தனை முடியுமோ அத்தனை முயன்று அதிகாலையிலேயே ஸ்டூடியோவிற்கு சென்றிருந்தாலும் முதலாளி அதற்குள் போன் செய்து விசாரித்திருக்கிறார். அந்த தகவல் நடராஜனை பதட்டத்துக்குள்ளாக்குகிறது. அன்றைய நாளின் ஏற்பாடுகளை முதலாளியிடம் விவரித்து விட்டு பிறகு தகவல் சொன்னவனிடம்   "ஏம்ப்பா முதலாளி அரை மணி நேரமாவா போன் செஞ்சிட்டிருந்தாரு' என்று விசாரிக்கிறான்.


***


சினிமாவுலகின் உதிரிமனிதர்களின் சித்தரிப்புகளைப் போலவே இதில் வரும் இரண்டு தயாரிப்பாளர்களின் சிக்கல்களும் நுண்விவரங்களால் வரையப்பட்டிருக்கின்றன. இது பணக்காரர்களுக்கான பிரத்யேகமான பிரச்சினைகள். சந்திரா கிரியேஷன்ஸ் அதனுடைய வீழ்ச்சியில் இருக்கிறது. அதன் முதலாளியான ரெட்டியார் நிதிச் சிக்கல்களில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். அப்போதைய படத்தை விரைவில் முடிப்பது அவசியம். ஆனால் நாயகியான ஜயசந்திரிகா படப்பிடிப்பிற்கு வராமல் முரண்டு பிடிக்கிறாள். தானே அவளுடைய வீட்டிற்குச் செல்கிறார். முதலாளி தோரணையில் பேசினாலும் தன் மகளைப் போன்ற அவளைத் துன்புறுத்துகிறோமே என்று  உள்ளூற அவருக்கு வேதனையாகவும் இருக்கிறது. 'இந்த அழகும் இளமையும் இருக்கிற வரைதான் உனக்கு மதிப்பு. அதை கெடுத்துக்காதே' என்று உபதேசிக்கிறார். 'உங்க அம்மாவை எனக்கு பல வருடமா தெரியும். ஏன்.. நீயே என் மகளாக கூட இருக்கலாம்" என்கிறார். (எம்.ஆர்.ராதா தொடர்பான ஒரு நகைச்சுவைத் துணுக்கு நினைவிற்கு வருகிறது)

ஒரு கதாபாத்திரத்தையும் அதன் தொடர்பான சம்பவங்களையும் நிஜம் என்று வாசகன் மயங்குமளவிற்கு இத்தனை திறமையாக வடிவமைக்க முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது. வீட்டின் வாசலில் ஜயசந்திரிகா மயங்கி விழுவதோடு சந்திரா கிரியேஷன்ஸின் அஸ்தமன அத்தியாயமும் எழுதப்பட்டு விடுகிறது. இத்தனை நுண்விவரங்களோடு விவரிக்கப்படுகிற இந்த திரைப்படத்தைப் பற்றிய தலைவிதி நாவலின் இறுதிப் பகுதியில் ஒரு உதிரித் தகவலாக மட்டுமே வெளிப்படுகிறது.


இன்னொரு தயாரிப்பாளர், ராம ஐயங்கார். சில சறுக்கல்கள் நேர்ந்திருந்தாலும் வெற்றிகரமான தயாரிப்பாளர். தேசத்தையே பைத்தியமாக அடித்த இரண்டு வெற்றிப்படங்கள் உட்பட பல திரைப்படங்களை தயாரித்தவர். நின்று போன ரெட்டியாரின் திரைப்படத்தை வாங்கி எதையாவது இணைத்து ஒப்பேற்ற முடியுமா என்று பார்க்கிறார். அதே சமயத்தில் இவர் ஆரவாரமாக ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் இந்தி திரைப்படம், இன அரசியலின் காரணமாக வடக்கில் வெளியாவதில் சிக்கல் ஏற்படுகிறது. இது சார்ந்த துயரத்தோடு தன் மகனை தேடிச் செல்கிறார் ஐயங்கார். தந்தையின் புகழின் வெளிச்சத்தில் வெறுப்புற்று எங்கோ இருளில் பதுங்கியிருக்கிறான் அவன்.

ராம ஐயங்கார் தன்னுடைய மகனுடன் உரையாடும் இந்தப்  பகுதி அற்புதமானது. அதுவரை எளிமையாக சென்று கொண்டிருந்த அசோகமித்திரனின் உரைநடை, சற்று அலங்காரமாக, நாடகத்தனமாக ஆவது இந்தப் பகுதியில்தான். இரண்டு நபர்களுக்கு இடையான அகங்கார மோதல் எனலாம். முதலாளித்துவத்தின் மீது வெறுப்புற்று விலகி நிற்கிற மகனின் மனவோட்டத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவன் வெற்று தத்துவம் பேசும் சோம்பேறியாகவும் தந்தையின் சம்பாத்தியத்தை அண்டியிருக்கிற ஊதாரியாகவும் இருக்கிறான்.

இந்தப் புதினத்தில் வெளிப்படும் கதாபாத்திரங்களில் அசலான நபர்களின் அடையாளங்களும் நாம் குத்துமதிப்பாக யூகிக்கும் அளவிற்கு வெளிப்பட்டிருக்கின்றன. ராம ஐயங்காரின் பாத்திரம் எஸ்.எஸ்.வாசனை நினைவுப்படுத்துகிறது. இயக்குநர் ஜகந்நாத் ராவ், நிமாய் கோஷ்ஷின் சாயலில் படைக்கப்பட்டுள்ளார். எவ்வித உள்ளீடும் இல்லாமல் தற்பெருமையுடன் பேசும் தமிழ் மரபின் மேடையலங்கார பாணி ஓரிடத்தில் கிண்டலடிக்கப்டுகிறது. போலவே தமிழ் சினிமாவில் மிகையாக பிழியப்படும் சோகத்தை ஒரு வெளிநாட்டவரின் அபிப்ராயம் வழியாக அசோகமித்திரன் கிண்டலடிக்கிறார்.

***

நவீன தமிழ் இலக்கியத்தில் தமிழ் திரையுலகம் சார்ந்து எழுதப்பட்ட படைப்புகள் குறைவுதான். வெளியிலிருந்து எழுதப்படுபவைகளை விட அந்தத் துறையின் உள்விவகாரங்களை அறிந்தவர்களால் எழுதப்படும் படைப்புகள் நம்பகத்தன்மையுடன் அமைகின்றன. சுஜாதாவின் 'கனவுத் தொழிற்சாலை' உள்ளி்ட்ட சில படைப்புகள் நினைவிற்கு வருகின்றன. ஆனால் இந்த வகைமையில் எழுதப்பட்ட, மிக நுட்பமான அழகியல் சார்ந்த உச்சப் படைப்பு  என்று 'கரைந்த நிழல்களை' சொல்ல முடியும்.

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சினிமாவின் பிரகாசம் மட்டுமே தெரிகிறது. ஆனால் அந்த வெளிச்சத்தின் அருள் கிடைப்பது சிலருக்கு மட்டுமே. ஆனால் பல்லாயிரக்கணக்கானவர்கள் அந்த பளபளப்பின் பின்னுள்ள இருட்டில் நிறைவேறாத எதிர்காலக் கனவுகளுடன் உழன்று மடிகிறார்கள். காலத்தின் சுழற்சியில் பலர் பரிதாபமாக காணாமற் போகிறார்கள். சிலர் மட்டும் கீழிருந்து நிரந்தரம் அல்லாத உச்சிக்கு நகர்கிறார்கள்.

நடராஜனின் நிலைமையைப் பரிதாபத்துடன் நினைவுகூரும் சம்பத் பிறகு  உடைந்த குரலில் சொல்கிறான். "சினிமான்னா என்னாங்க, காரு சோறு இது இரண்டும்தானேங்களே! புரொடக்ஷன் நடக்கிற வரைக்கும் அஞ்சு ரூபா சாப்பாடு, பத்து ரூபா சாப்பாட்டுக்கு குறைஞ்சு வேலைக்காரன் கூட சாப்பிட மாட்டான். பத்துப் பைசா பீடா வாங்க ஆறு மைல் எட்டு மைல் செளகார்பேட்டைக்கு இரண்டு கார் போகும்"

இந்தப் பரமபத ஆட்டமே சினிமாவுலகின் அஸ்திவாரம். ஏறத்தாழ சூதாட்டம். இந்தவுலகின் நிலையின்மையைப் பற்றி, அதன் உதிரி மனிதர்களின் வழியாக கச்சிதமாக சித்தரித்த அபாரமான படைப்பு என 'கரைந்த நிழல்கள்' புதினத்தைச் சொல்லலாம். 

(உயிர்மை ஜூன் 2017 இதழில் பிரசுரமானது)

suresh kannan

Sunday, May 21, 2017

மரணத் தொழிற்சாலை - ஹிட்லரின் வதைமுகாம்கள்




உலக வரலாற்றில் இதுவரை நிகழ்ந்த பெரும்இனப்படுகொலைகளைப் பட்டியலிட்டால்  முதலில் வந்து நிற்பது ஹிட்லர் தலைமையில் நாஜிக்கள் செய்த அநீதியே. அநீதி என்று குறிப்பிடுவது  கூட குறைந்த பட்ச சொல் மட்டுமே. மானுட அறத்தையும் நாகரிகத்தையும் குழி தோண்டிப் போட்ட படுபயங்கர காட்டுமிராண்டித்தனம் என்றுதான் சொல்ல வேண்டும். நாகரிகம் மெல்ல வளர்ந்து வந்து கொண்டிருந்த அந்தக் காலக்கட்டத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த இனப் பேரழிவின் அட்டுழியங்கள் மெல்ல மெல்ல அம்பலமான போது உலகமே அதிர்ச்சியடைந்தது. சுமார் ஆறு மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் விதம்விதமாக கொல்லப்பட்டார்கள்; கடும் சித்திரவதைக்கு உள்ளானார்கள். யூதர்கள் தவிர இடதுசாரிகள், ஜிப்ஸிகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று இந்த வரிசையில் கொல்லப்பட்டவர்களின் கணக்கு தனி. சொத்துக்களை இழந்து உயிர்தப்பி  அகதிகளாகவும் காணாமற் போனவர்கள் பட்டியல் வேறு.


இந்தப் பேரழிவு குறித்து காற்றில் உலவுவது போல பொதுவெளியில் நெடுங்காலமாகவே  பல கேள்விகள் இருக்கின்றன.

ஏன் ஹிட்லர் இந்த இன அழித்தொழிப்பை மனச்சாட்சியின் துளியும் இன்றி செய்தார்? அதற்கான பின்னணியும் காரணமும் என்ன? என்னதான் ஒரு சர்வாதிகாரி குரூர மனோபாவத்துடனும்  முட்டாள்தனமாகவும் ஆணையிட்டு விட்டாலும் நாஜிகள் லட்சக்கணக்கான யூதர்களை  ஈவுஇரக்கமேயின்றி கண்மூடித்தனமாக கொன்று குவிப்பார்களா என்ன? அவர்களுக்கு மனச்சாட்சி வேலையே செய்திருக்காதா? நாஜிப் படையில் இருந்த அத்தனை பேரையும் வசியப்படுத்தியா இந்தப் படுகொலைகளை ஹிட்லர் செய்திருக்க முடியும்?

தமக்கு முன் பின் தெரியாத ஓர் அப்பாவியை, பெண்ணை, குழந்தையை, முதியவரை அவர்கள்  யூதராகப் பிறந்த ஒரே காரணத்தினாலேயே சுட்டுக் கொல்வதும் பல்வேறு குரூரமான வழிகளில் சித்திரவதைக்குள்ளாக்கி சாகடிப்பதும் என்பது எத்தனை பெரிய கண்மூடித்தனம்?  அப்பட்டமான இனவெறுப்பு உள்ளே ஊறிப் போயிருந்தால்தான் இந்த அரக்கத்தனத்தை செய்ய முடியும்.

இதையொட்டி எழும் பல கேள்விகளைப் போலவே நிறைய பதில்களும் உலவுகின்றன.

இயேசுவின் மரணத்திற்கு யூதர்கள் காரணமாக இருந்தார்கள், எனவே யூதர்களின் மீதான பகை தோன்றியது என்பது ஒரு பதில்.  ஹிட்லருடைய தாயின் மரணத்திற்கு ஒரு யூத மருத்துவர் காரணமாக இருந்தார் என்கிறது இன்னொரு தகவல். ஆரிய இனமே உயர்ந்தது என்கிற உயர்வு மனப்பான்மையுடன் இன சுத்திகரிப்பிற்காக ஹிட்லர் செய்தது என்பது சொல்லப்பட்ட காரணங்களில் மற்றொன்று. எது உண்மை, எது பொய் என்றே கண்டுபிடிக்க முடியாத பதில்கள் அவை.  இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி வீழ்ந்து ஹிட்லரின் தற்கொலை நிகழ்வதற்கு முன்னால் பல்வேறு அரசு ஆவணங்கள் அவசரம் அவசரமாக அழிக்கப்பட்டன என்பதால் எஞ்சியிருக்கும் பதிவுகளையும் முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களையும் வைத்து மட்டுமே இந்தப் பின்னணியை அறிந்து கொள்ள முடியும்.

ஆனால்  யூத வெறுப்பிற்கு இதுதான் காரணம் என்று எதையும் திட்டவட்டமாக சொல்லி விட முடியாது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். வரலாற்றில் ஏராளமாக இறைந்திருக்கும் தரவுகளை ஆய்ந்து அவற்றின் தொடர்ச்சியோடும் சிக்கலான கண்ணிகளை இணைத்தும் தோராயமாகத்தான் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் ஹிட்லருக்கு முன்னாலும் யூத வெறுப்பு இருந்தது;  பின்னாலும்  இருக்கிறது. வித்தியாசம் என்னவென்றால் ஹிட்லரின் காலக்கட்டத்தில் இந்த இனவெறுப்பு ஒரு கச்சிதமான திட்டமிட்ட பிரச்சாரமாக முன்வைக்கப்பட்டு கொலைகளும் சித்திரவதைகளும் வெளிப்படையாகவே நடந்தேறின.

**

இந்த இனஅழிப்பைப் பற்றியும் ஹிட்லரைப் பற்றியும் பல்வேறு கோணங்களில் ஆராயும் நூல்கள், ஆய்வுகள், திரைப்படங்கள் போன்றவை ஆங்கிலம் உள்ளிட்ட சில மொழிகளில் ஏராளமாக உள்ளன. ஹிட்லரின் உளவியல், அவரது தனிப்பட்ட ஆளுமையை ஆராய்வது முதற்கொண்டு யூதர்கள் செய்யப்பட்ட வதைகளைப் பற்றி துல்லியமாக ஆராய்வது வரை பல்வேறு பதிவுகள் உள்ளன. ஆனால் தமிழில்  இரண்டாம் உலகப் போரின் பின்னணியோடு ஹிட்லரின் வாழ்க்கை வரலாற்றை மேலோட்டமாக விவரிக்கும் நூல்கள் உள்ளனவே தவிர யூதர்களின் மீது நிகழ்த்தப்பட்ட இந்தக் கொடுமைகளை பிரத்யேகமாக பதிவு செய்யும் நூல் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில் மருதன் எழுதி  கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள  'ஹிட்லரின் வதைமுகாம்கள்' எனும் நூல், தமிழ் சூழலில் அந்த இருண்ட பக்கத்தின் மீதான வெளிச்சத்தைப் பாய்ச்ச முயல்கிறது. அந்த வகையில் இதுவே தமிழில் வெளிவந்துள்ள முதன்மையான நூல் எனலாம். யுத்தம் முடிந்த பிறகு ரஷ்ய படையால் வதை முகாம்களில் இருந்து தப்பிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள், இதைப் பற்றி செய்யப்பட்ட ஆய்வுகள் என்று பல்வேறு நூல்களின் தரவுகளைக் கொண்டு கச்சிதமான கோர்வையாக இந்த நூலை உருவாக்கியுள்ளார் மருதன்.

மருதனின் அசாதாரணமான உழைப்பில் உருவாகியுள்ள இந்த நூல் நம்மைக் கவரும் அதே வேளையில் கலங்கடிக்கவும் வைக்கிறது. ஒவ்வொரு பக்கமும் மரணத்தின் ஓலங்கள், வலிகளின் கதறல்கள், விடுதலையின் ஏக்கங்கள் போன்றவற்றினால் குருதியும் கண்ணீரும் வழியும் ஈரங்களோடு பதிவாகியுள்ளது. ஆனால் இதில் பதிவாகியிருக்கும் துயரம் என்பது பனிப்பாறையின் மீதான நுனி மட்டுமே  நம்மால் கற்பனையில் கூட யூகிக்க முடியாத படியான கொடுமைகள் அரங்கேறியுள்ளன. முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒரு யூதர் சொல்கிறார் 'அங்கு நடந்ததை நான் சொன்னால் அது கடற்கரை மணலில் ஒரு துளியாக மட்டுமே எஞ்சும். அனைத்தையும் விவரிப்பது சாத்தியமல்ல. நாங்கள் அங்கு சந்தித்தவற்றை சொல்வது கடினம். அதையெல்லாம் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. எங்களுக்குள் அந்த அனுபவங்கள் புதைந்து போயிருக்கின்றன.'

நூலின் பெரும்பாலான பக்கங்களில் யூதர்கள் உள்ளிட்டவர்களின் நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள், அதற்கான திட்டங்கள், முகாம்களை நோக்கிச் செல்லும் ரயில் பயணங்களின் அவஸ்தைகள், அவர்களின் மரணத்திற்காக யூதர்களாலேயே செய்ய வைக்கப்பட்ட முகாம் பணிகள், மரணக்குழிகள், கொத்துக் கொத்தாக மனிதர்களை எவ்வாறு எளிதில் அழிப்பது என்று செய்யப்பட்ட ஆலோசனைகள், மனித உடல்களை வைத்து செய்யப்பட்ட ஆய்வுகள் என்று பல்வேறு தகவல்கள் பதிவாகியிருக்கின்றன.

யூதர்களை கொத்துக் கொத்தாக ரயில்களில்  மூச்சு முட்ட அடைத்து செல்வதற்காக எஸ்.எஸ். ரயில்வே துறைக்கு பணம் செலுத்த வேண்டும். இதற்காக சரக்கு ரயில்களை நாஜிகள் பயன்படுத்தினார்கள்.  உயிருள்ள மனிதர்களை சரக்குகள் என்றே தங்களின் ஆவணங்களில் குறிப்பிட்டார்கள். தேவையற்ற சரக்குகளை அழிப்பதற்காக வேறிடத்திற்கு கொண்டு செல்கிறோம் என்று குறிப்பு எழுதினார்கள். முகாம்களில் அடைக்கப்பட்ட நபர்களின் தனி அடையாளங்கள் உடனே அழிக்கப்பட்டன. அவர்கள் எண்களால் குறிக்கப்பட்டார்கள். உடல் வலு இல்லாதவர்கள், குழந்தைகளை விஷவாயு அறையில் இட்டுக் கொன்றார்கள். இதர நபர்கள் முகாம்களில் கடுமையான பணிகளுக்காக கட்டாயப்படுத்தப்பட்டார்கள். முகாமில் இருந்த ஒவ்வொருக்குமே தங்களின் விடுதலையோ மரணமோ எப்போது நிகழும் என்கிற விஷயம் அறியப்படாமல் பதட்டத்திலேயே தொடர்ந்து வைக்கப்பட்டார்கள்.

ஒரு துளி உணவிற்காகவும் இன்னபிற விஷயங்களுக்காகவும் யூதர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டார்கள். மற்றவர்களின் பொருட்களை திருடத் தயாராக இருந்தார்கள். மிக அடிப்படையான விஷயங்களை பறித்துக் கொண்டால் மனிதர்கள் எவ்வாறு விலங்குகளுக்கு நிகரானவர்களாக மாறும் கொடுமையை நாஜிப்படை திட்டமிட்டு செய்தது. இறந்து போனவர்களே அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று தோன்றுமளவிற்கு முகாமில் இருந்து பின்னர் விடுவிக்கப்பட்டவர்களின் உளவியல் நிலைமை பரிதாபகரமாக அமைந்தது. இயல்பான வாழ்க்கைக்குள் நுழைய முடியாமல் நிறைய பேர் முகாமின் கசப்பான நினைவுகளில் இருந்து வெளியேற முடியாமல் தடுமாறினார்கள்.

ஆனால் இந்த நூல் வதைகளைப் பற்றிய விவரணைகளோடும் அவற்றைப் பற்றிய பரிதாபங்களோடும்  தொடரும் விசாரணைகளோடும் முடிந்து விடவில்லை. இனவெறுப்பின் பின்னால் உள்ள சித்தாந்தக் காரணங்கள், உளவியல் பின்னணிகள் ஆகியவற்றின் தொடர்பான தரவுகளையும் பதிவு செய்கிறது.

தமிழில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் மிக முக்கியான நூல்களில் ஒன்றாக இதை  தயக்கமின்றி சொல்ல முடியும்.

**

ஹிட்லரின் வதைமுகாம்கள்
மருதன்
கிழக்கு பதிப்பகம், சென்னை
விலை ரூ.200
பக்கங்கள் - 232

(அலமாரி இதழில் பிரசுரமானது)




suresh kannan

Saturday, February 04, 2017

'கானகன்' - புலியாடும் வேட்டை




நவீன தமிழ் இலக்கியத்தில் சூழலியல் சார்ந்த படைப்புகள் மிக சொற்பம். சங்க இலக்கியத்தில் இயற்கை பற்றிய விவரணைகள், நுண்தகவல்கள் இருந்தன. இதன் தொடர்ச்சி இடையில் அறுபட்டு விட்டது.

மேலைநாடுகளில் தொன்னூறுகளில் Eco Criticism பற்றிய விழிப்புணர்வு பரவலாக ஏற்பட்டது. தமிழில் ச.கந்தசாமி எழுதிய சாயாவனம், சூழலியல் சார்ந்த துவக்க கால படைப்பு. ஜெயமோகனின் ‘ரப்பர், பாவண்ணனின் ‘பாய்மரக்கப்பல்’ போன்ற நாவல்கள் பிறகு உருவாகின.

இன்று சூழலியலுக்கான பிரத்யேகமான பருவ இதழ்கள் கூட வெளிவருவது மாதிரியான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சமகால இலக்கியத்திலும் இதன் பிரதிபலிப்புகள் வெளிப்படத் துவங்கியுள்ளன.

லஷ்மி சரவணகுமார் எழுதிய ‘கானகன்’ அவ்வாறானதொரு முயற்சி. இயற்கை வளங்களை பெருவணிகம் கொள்ளையடிப்பதும் சூறையாடுவதும் காலங்காலமாக நிகழ்ந்து வரும் ஓர் அராஜகம். மனித குலத்தால் இயற்கையின் மீது தொடுக்கப்படும் இந்தப் போரினால் பாதிக்கப்படுவது இயற்கையின் சமநிலை மட்டுமல்ல, இயற்கையைச் சார்ந்திருக்கும் காட்டுயிர்களும் பழங்குடிகளுமே.

அதிகார வர்க்கமும் வணிக முதலாளிகளும் இணைந்த ஒரு வலிமையான வலைப்பின்னலின் பேராசை காரணமாக தங்களின் வாழ்விடங்களையும் வாழ்வாதாரங்களையும் இழந்து துரத்தப்படும் அவலத்திற்கு ஆளாகின்றனர்.

கானகன் இந்தப் பின்னணியில் இயங்குகிறது.

**

தங்கப்பன் திறமையான வேட்டைக்காரன். காட்டின் அசைவுகளைப் பற்றி நுணுக்கமான அறிய முடிந்த அவனால் அதன் ஆன்மாவை உணர முடியவில்லை. அவனுடைய வளர்ப்பு மகன், வாசி. பழங்குடி நம்பிக்கைகளின் நுட்பமான தொடர்ச்சியான அவனுக்கு காட்டுயிர்கள் தொடர்ந்து அநியாயமான முறையில் வேட்டையாடப்படுவது குறித்த மெளனமான கோபம் இருக்கிறது.

தங்கப்பன் மற்றும் வாசியின் முரணியக்க இயங்குதலின் மீது நாவலின் மையச்சரடு பின்னப்பட்டிருக்கிறது. எண்பதுகளில், தமிழக மலைப் பகுதியில் நிகழ்வதாக களம் அமைக்கப்பட்டிருக்கிறது. பழங்குடிகளின் வாழ்வியல், இயற்கையை ஆராதிக்கும் அவர்களின் மனோபாவம், காட்டுயிர்கள், அவற்றின் மீது நவீன உலகம் நிகழ்த்தும் கொடூரமான வேட்டை போன்ற சம்பவங்கள், அதன் நுண்விவரங்கள் நாவலில் சிறப்பாகவே பதிவாகியுள்ளன.

நாவலை உருவாக்குவதில் நூலாசிரியரின் உழைப்பும் அக்கறையும் தெரிகிறது. என்றாலும் ஒட்டுமொத்த நோக்கில் இதுவொரு முதிராத முயற்சியாக சலிப்பூட்டுகிறது. காடும் பழங்குடிகளும், மிகையான அளவில், புனிதப்படுத்தப்பட்டுள்ளார்களோ என்று தோன்றுகிறது. ஆசிரியரின் குரலும் நாவலின் இடையில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருப்பதால் இதன் இயல்புத்தன்மையும் கலையமைதியும் வெகுவாக பாழாகியுள்ளது. செயற்கையான சம்பவங்களுடன் கூடிய அபத்தங்கள் நிறைந்துள்ளன. திணிக்கப்பட்ட பாலியல் நிகழ்வுகளும்.

இயற்கையைப் பற்றிய நுட்பமான விவரணைகளுடனும் நிதானமான நடையுடனும் இதை செறிவுப்படுத்தி உருவாக்கியிருந்தால் தமிழின் ஒரு முக்கியமான படைப்பாக ‘கானகன்’ அமைந்திருக்கும். என்றாலும் சூழலியல் பற்றிய தமிழ் படைப்புகள் சொற்பமே என்கிற அளவில், ‘கானகன்’ கவனத்தில் கொள்ளக்கூடிய முயற்சியே.

***

கானகன் (நாவல்) - லஷ்மி சரவணகுமார்
மலைச்சொல் பதிப்பகம்
பக்கம் 264 - விலை ரூ.99 (மக்கள் பதிப்பு)

(அலமாரி இதழில் பிரசுரமானது)


suresh kannan

Monday, July 18, 2016

பஞ்ச பூதம் - புதினம் - இலங்கையில் ஒரு 'மினி' கோணங்கி





தமிழ் இலக்கிய எழுத்தாளர்களும் அவாதம் படைப்புகளும்  தமிழகத்திலேயே பெரும்பாலும் அறியப்படாத சூழலில் இலங்கை தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி இங்குள்ள நிலைமையை சொல்லவே தேவையில்லை. இலக்கிய வாசிப்புள்ள  குறுகிய எண்ணிக்கையிலான நபர்கள் உள்ள  தமிழக சூழலில் கூட இலங்கை தமிழ் எழுத்தாளர்களைப் பற்றிய அறிமுகமோ உரையாடலோ இங்கு அதிகம் நிகழ்வதில்லை. சில திறனாய்வாளர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள் மட்டுமே தமிழ் சூழலில் இலங்கை எழுத்தாளர்களை துவக்கத்திலிருந்து தொடர்ச்சியாக அறிமுகம் செய்து கொண்டிருந்தார்கள். வெகுசனப் பரப்பில் சில நல்ல ஈழக் கவிஞர்களை சுஜாதா அறிமுகம் செய்தார். நூல் பரிவர்த்தனைகள் மூலம் இரண்டு உலகங்களையும் இணைக்கும் பாலமாக செயல்பட்ட பத்மநாப ஐயரின் பங்களிப்பு  இதில் குறிப்பிடத்தக்கது. திறனாய்வாளர் கார்த்திகேசு சிவத்தம்பி, கவிஞர் காசி ஆனந்தன் போன்று ஒரு சிலரின் பெயர்களும் படைப்புகளும் மட்டுமே இங்கு அறியப்பட்டிருக்கின்றன. போலவே சமகால எழுத்தாளர்களிலும் அ.முத்துலிங்கம் உள்ளிட்ட சில பெயர்கள் மட்டுமே. இதில் பெரும்பாலும் ஈழத்து எழுத்தாளர்கள் மட்டுமே உள்ளார்கள்.

இலங்கை எழுத்தாளர்களிடையே ஈழத்து எழுத்தாளர்கள், மலையக எழுத்தாளர்கள், முஸ்லிம் எழுத்தாளர்கள், சிங்கள எழுத்தாளர்கள் போன்ற பிரிவுகள் இருக்கின்றன. இந்தப் பிரிவுகள் குறித்தான பிரக்ஞை இங்கு இருப்பதாக தெரியவில்லை. தமிழ்  படைப்புலகின் இயக்கத்தை இலங்கை எழுத்தாள சமூகம் கூர்ந்து கவனிப்பதைப் போல் இங்கு பெரிதும் நிகழ்வதில்லை என்பது துரதிர்ஷ்டமானது. தமிழில் நூல்களை சிறப்பாக பதிப்பித்த இயக்கங்களுள் முன்னோடியானது 'வாசகர் வட்டம்'. அவற்றின் வெளீடுகள் இங்கு பெருமளவில் வரவேற்கப்படவில்லை என்று கூறும் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, அவற்றுக்கான சில சலுகைத்திட்டங்களை அறிவித்த போது ஈழத்திலுள்ள வாசகர்கள் மட்டுமே ஆர்வம் காட்டினார்கள் என்றும் தமிழ் சூழலில் அவை போதிய கவனம் பெறவில்லை என்றும் ஒரு நேர்காணலில் வருந்துகிறார்.

பரவலாக அறியப்பட்ட இலங்கை எழுத்தாளர்களின் எண்ணிக்கையே இங்கு  சொற்பமாக இருக்க  இளம் எழுத்தாளர்களைப் பற்றி ஏதும் இங்கு அறியப்படாமல் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இலங்கைப் பிரச்சினையை வெறும் உணர்வு சார்ந்த அரசியல் கோஷமாக அணுகும் தமிழ் சமூகம் அங்கு நிகழும் கலாசார பரிமாணங்களைப் பற்றிய அறிய ஆர்வம் ஏதும் கொள்வதில்லை. இந்த சூழலில்தான் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று எனும் கடற்கரைப் பிரதேசத்தில் இருந்து வெளியாகியிருக்கும், ஏஎம்.சாஜித் அஹமட் எழுதிய 'பஞ்சபூதம்' எனும் புதினத்தை வாசிக்க நேர்ந்தது.

***

சில நாட்களுக்கு முன் எழுத்தாளர்கள், பதிப்பகங்கள் தங்களின் நூல்களை அனுப்பித்தந்தால் என் வலைப்பதிவில் அதைப் பற்றி எழுதுவேன் என்று அறிவிப்பொன்று தந்திருந்தேன். ஃபேஸ்புக்கின் மூலம் நண்பர் சாஜித் என்னைத் தொடர்பு கொண்டு தான் எழுதிய புதினமொன்றை அனுப்புவதாகவும் அதை வாசித்து எழுதினால் மிகவும் மகிழ்வேன் என்றும் ஒரு தகவல் அனுப்பியிருந்தார். 'அனுப்புங்கள்' என்றேன். சில நாட்களைக் கடந்தும் நூல் வரவில்லை. அவரும் அதை நினைவுப்படுத்திக் கொண்டிருந்தார். எதிர்பாராத ஒரு நாளில் நூல் வந்து சேர்ந்தது. ஆனால் அது இலங்கை கிழக்கு மாகாணத்திலிருந்து வரும் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

முன்பே சொல்லியபடி தமிழ் சூழலில் இலங்கை எழுத்தாளர்களைப் பற்றிய கவனமும் அவதானிப்பும் இல்லாத பெரியண்ணன் மனோபாவத்தில் அலட்சியமாக இங்குள்ளவர்கள் இயங்கும் போது  அதற்கு மாறாக இலங்கை படைப்பாளிகள் இங்குள்ள சூழலை தொடர்ந்து கவனிக்கின்றனர். அதற்கான உறவுகளை பேண நினைக்கிறார்கள் என்பதற்கு இதை ஒரு சிறிய உதாரணமாக கொள்ளலாம். தமிழ் சூழலில் நான் பரவலாக அறியப்பட்டவனோ, பெரிய எழுத்தாளரோ கூட கிடையாது. ஆனால் இங்குள்ள ஒருவர் தம் நூலை வாசித்து அதைப் பற்றி கருத்து சொல்ல வேண்டும் என்று விரும்புகிற சாஜித்தின் எல்லைகளைக் கடந்த ஆர்வம் உண்மையிலேயே மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

'பஞ்சபூதம்' - மிகச்சிறிய நூல்தான். சென்னை தாம்பரம் புறநகர் ரயிலில் ஏறினால் கிண்டியைத் தாண்டுவதற்குள்  சில நிமிடங்களில் வாசித்து முடிக்கக்கூடிய அளவிலான சிறிய புதினம்தான். ஆனால் இதை செரித்துக் கொள்ள முயல்வதற்குத்தான் அதிக நாட்கள் தேவைப்படும் போலிருக்கிறது. அத்தனை கனமுள்ள எழுத்து.

இதற்கு இடைப்பட்ட நாட்களில் உட்பெட்டியின் வழியாக 'வாசித்தாயிற்றா' என்று நினைவுப்படுத்தும் படியான புன்னகைக்குறிகளை அனுப்பிக் கொண்டேயிருப்பார் சாஜித். நானும் பதிலுக்கு சால்ஜாப்பாக பதில் புன்னகைகளை அனுப்பி சமாளித்துக் கொண்டேயிருந்தேனே தவிர உண்மையில் இந்த நூலைப் பற்றி என்ன எழுதுவது என்பது குழப்பமாகவே இருந்தது.

****

'பஞ்சபூதம்' பின்நவீனத்துவ பாணியில் எழுதப்பட்ட ஒரு சிறிய புதினம். குறியீட்டு மொழியால் இயங்கும் ஒரு கனவுப் பயணம். இதையொரு மெட்டா பிக்ஷன் எனலாம். 'முதல் மூச்சு' 'இரண்டாம் மூச்சு' என்று துவங்கி  பத்து மூச்சுகள் பல்வேறு வகையான பத்து அத்தியாயங்களாக விரிகின்றன. வாசித்து முடிப்பதற்குள் நமக்குத்தான் மூச்சு முட்டுகிறது. இலங்கையில் ஒரு 'மினி' கோணங்கி இருக்கிறார் என்பதே நாம் இதிலிருந்து அறிய வேண்டிய செய்தி.

வாசகர்களுக்கு எவ்வித வேலையும் வைக்காமல் 'ஸ்பூன் ஃபீடிங்' பாணியில் எழுதுவது ஒரு வகை. பொதுவாக வெகுசன எழுத்துமுறை இவ்வகையானது. வாசகனின் நுண்ணுணர்வு சார்ந்த தகுதியை மனதில் கொண்டு இடைவெளிகளை அவன் நிரப்பிக் கொள்வான் என்கிற பரஸ்பர மரியாதையில் எழுதப்படுவது ஒரு வகை. பெரும்பாலான நல்ல நவீன இலக்கியங்கள் உருவாவது இந்த முறையில். ஆனால் வாசகனையும் தம்முடைய எழுத்துக்குள் இழுத்துப் போடுவது, அந்தப் பயணத்தில் அவனுடன் உரையாடுவது, எழுத்தின் ஒரு பங்காக, பாத்திரமாக வாசகனையும் இயங்க வைப்பது போன்ற முயற்சிகளை நிகழ்த்துவது நவீன காலக்கட்டத்திற்கு பிந்தைய எழுத்து வடிவம்.

'எனதன்பின் வாசகனனே, இப்பஞ்சபூதப் பிரதியினை வாசிப்பதற்கு முன் நீ இருக்கும் இடத்தினை ஒருகணம் சுற்றிப்பார்.. என்னால் ஏவிவிடப்பட்ட ஆத்மாக்கள் உனது கழுத்திலும், கண்களிலும், உதடுகளிலும் உயிர்ப்பிக்கத் தொடங்குகின்றன..' என்கிற முன்குறிப்புடன் வாசகனை தயார்படுத்தும் நூலாசிரியர், பிரதி இயங்கும் ஒரு கணத்தில் வாசகனையும் அதற்குள் இழுத்துச் செல்கிறார்.

அரசவையில் இசை பாட வந்திருக்கும் ஒரு கலைஞன் தன் இசையால் ஏற்படும் விபரீதங்கள் நிகழாமலிருக்க வேண்டுமானால் இந்த நூலை எழுதும் சாஜித்தை கொல்ல வேண்டும் என்கிற விநோதமான முறையீட்டை முன் வைக்கிறான். அவனைக் கொன்று விட்டால் 'மன்னனாகிய என்னைப் பற்றியும் நிகழவிருக்கிற உன் இசையைப் பற்றியும் யார் எழுதுவார்? என்பதற்கு மன்னர் கேட்க 'அதெல்லாம் வேறு எழுத்தாளர்களை வைத்து எழுதிக் கொள்ளலாம். இவனைக் கொல்ல உடனே வீரர்களை அனுப்பு' என்கிறான். இவை அனைத்தும் நிகழ்வது கடலுக்குள். அதற்கொரு காரணமும் இருக்கிறது.

இந்தப் பிரதியை எழுதிக் கொண்டிருக்கும் சாஜித்தின் காதுகளில் வீரர்களின் துரத்தும் ஓசை விழுகிறது. அங்கிருந்து தப்பித்து மணற்பரப்பிற்கு ஓடுகிறார். இவ்வாறாக சிறார்களின் ஃபேண்டசி பாணியில் எழுதப்பட்டிருந்த புதினமாக மேற்பார்வைக்கு இருந்தாலும் தனது கூர்மையான சொற்களால் இதையொரு அரசியல் விமர்சன பிரதியாகவும் மாற்றியிருக்கிறார் சாஜித்.

சிங்கள பேரினவாதத்தின் கொடுமைகளாால் நசுக்கப்பட்ட சமூகத்திலிருந்து எழுந்து அதனுடன் போரிட்ட புலிகள், இன்னொரு பக்கம் முஸ்லிம்கள் மீது செலுத்திய வன்முறைகளின் மூலம் தாமும் இனவாத பயங்கரத்தில், இனச்சுத்திகரிப்பு முயற்சிகளில்  ஈடுபட்டது ஒரு வரலாற்று முரண். ஹிட்லரின் வெறுப்பு பிரச்சாரத்தினால் நாஜிகளால் உலகெங்கிலும் துரத்தப்பட்டுபல்வேறு வன்முறைகளை சந்தித்த யூத சமூகம், தனக்கான ஒரு பிரதேசத்தை கட்டமைத்துக் கொண்ட பின் பாலஸ்தீனியர்களின் மீது நிகழ்த்தும் வன்முறையைப் போன்றது இது. சாஜித் உருவாக்கிய இந்த குறியீட்டு புதினத்தில் புலிகள் பற்றிய குறிப்புகளும் மிகப் பூடகமான முறையில் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஓரு கனவுப்பிரதேசத்திற்குள் பயணித்த ஒரு மாயாஜால உணர்வை இந்தப் புதினம் தருகிறது. தலையை உலுக்கிக் கொண்டே நிமிர்ந்தாலும் இதன் சொற்கள் நம் அகத்திற்குள் சுழன்றடித்துக் கொண்டே இருக்கின்றன.


***

பஞ்சபூதம் (நாவல்) -ஏ.எம்.சாஜித் அஹமட்
பெருவெளி பதிப்பகம்

31C, உபதபாலக வீதி, பதுர்நகர், அக்கரைப்பற்று,
அக்கரைப்பற்று 01, இலங்கை

ஆசிரியர்  .பேஸ்புக் பக்கம்: sajeeth amsajeeth

suresh kannan

Saturday, October 17, 2015

ஆளண்டாப் பட்சி - இடப்பெயர்வு எனும் வாதை





பெருமாள் முருகனின் ஆறாவது புதினம் - ஆளண்டாப் பட்சி. 2012-ல் வெளியானது. தமது புதினங்களின் தலைப்பை திட்டமிட்டு வைக்காமல் புனைவில் வெளிப்படும் ஏதாவது ஒரு வரியையொட்டி அமைப்பதே வழக்கம் என முன்னுரையில் குறிப்பிடும் பெருமாள் முருகன், இந்தப் புதினத்தின் தலைப்பையும் அவ்வாறே சூட்டியுள்ளார். ஆளண்டாப் பட்சி என்பது புராதனக் கதைகளில் குறிப்பிடப்படும் ஒரு பறவை. மனிதர்களை  தம்மருகே அண்டவிடாது என்றும் தீயவர்களை கொன்று விடும் என்றும் ஆனால் நல்ல மனிதர்களுக்கு உதவி செய்யும் என்கிற விநோதமான மனோபாவமுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் புதினத்தில் வரும் சில நபர்கள் இந்த மனோபாவத்தில் இயங்குவதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இடப்பெயர்வு என்பது மனிதகுலத்தின் தவிர்க்க முடியாத ஆனால் காலங்காலமாய் தொடர்ந்து கொண்டேயிருக்கும் துக்ககரமான விஷயங்களுள் ஒன்று. போர்களாலும் கலவரங்களாலும் வாழ்வாதாரங்களைத் தேடியும் பொருளீட்டுவதற்காகவும் உறவுகளிடையேயான பகைகளிலிருந்து விலகி நிற்கவும் என பல்வேறு காரணங்களுக்காக மனிதர்கள் இடம்பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள். இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது உயிர் பயத்துடனும் தங்களின் உறவுகளைப் பிரியும் வலியுடனும் தங்களின் உடமைகளை கைவிட்டு மக்கள் இடம்பெயர்ந்ததுதான் உலக வரலாற்றிலேயே நடந்த மிகப் பெரிய இடப்பெயர்வு நிகழ்வாகச் சொல்கிறார்கள். அந்தச் சமயத்தில் சுமார் 15 மில்லியன் நபர்கள் இடம் பெயர்ந்தார்கள். இந்தக் கலவரங்களில் சுமார் 10 லட்சம் நபர்கள் மத வன்முறை காரணமாக  கொல்லப்பட்டார்கள். பெருமாள் முருகனின் இந்தப் புதினமும் கூட்டுக்குடும்பத்திலிருந்து பிணக்குகளின் மூலம் எழும் வலியினால் தன்னை துண்டித்துக் கொண்டு செல்லும் ஒரு சிறுகுடும்பத்தின் இடப்பெயர்வை மைக்ரோ தளத்தில் அணுகிச் செல்கிறது.

இந்தப் புதினத்தின் பிரதான பாத்திரமான முத்து,  ஒரு விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவன். தனது மூத்த சகோதரர்களின் நிழலில் உலகம் அறியாமல் பத்திரமாக வளர்ந்தவன்.  ஒரு நிலையில் அந்தக் கூட்டுக் குடும்பத்தில்  பிரிவினை ஏற்படுகிறது. அந்தக் குடும்பத்திற்குச் சொந்தமான நிலத்தில் மூத்த சகோதரருக்கு அதிகமான பங்கு ஒதுக்கப்படுகிறது. அந்தக் குடும்பத்திற்கு அவர் அதிக காலம் உழைத்திருப்பதால் தர்க்கரீதியாக அது பொருந்திப் போகிறது. காலங்காலமாக நீடிக்கும் மரபுசார்ந்த சில வழக்கங்களின் செல்வாக்கின் மூலம் தன்னிச்சையாக எடுக்கப்படும் முடிவுகளில் பலவற்றில் சமகாலத்திற்குப் பொருந்தாத கண்மூடித்தனமான மூடத்தனங்கள் இருந்தாலும் சிலவற்றில் பொதிந்துள்ள நுணுக்கமான விஷயங்கள் பிரமிப்பேற்றுகின்றன. அடுத்த சகோதரருக்கு அதை விட குறைவான பங்கு.   மிச்சமிருப்பதில் ஒரு ஏக்கர் நிலம் மாத்திரம் முத்துவின் பங்காக வந்து சேருகிறது. அது வரை தன்னுடைய பெற்றோர்களின், சகோதரர்களின் பேச்சை மீறாமல் அவர்களின் அரவணைப்பின் நிழலிலேயே வாழ்ந்து பழகிய முத்துவிற்கு உள்ளூற சில எண்ணங்கள் ஓடினாலும் இது பற்றி எதையும் கேட்கத் தோன்றவில்லை. பேசாமல் தன்னுடைய பங்கை வாங்கிக் கொள்கிறான். ஆனால் அவனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிலம் கடைசியில் இருப்பதால் நீர்வரத்து குறைவாக இருக்கிறது. தாம் ஏமாற்றப்பட்டிருப்பதாக அவனுடைய மனைவி பெருமா தொடர்ந்து புலம்பிக் கொண்டேயிருக்கிறாள். இதன் மூலம் ஏற்படும் சச்சரவுகளினால் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்து மனிதர்களுக்கிடையே ஏற்படும் மாற்றத்தை வேதனையோடு உணர்கிறான் முத்து. அதுவரை தம்மிடம் அன்போடு பழகிய சகோதர உறவுகளிடம் ஏற்பட்டிருக்கும், விலகல் மனப்பான்மையை அவனால் துல்லியமாக உணர முடிகிறது.

உறவுகளினால் ஏற்பட்ட கசப்பை சகித்துக் கொள்ள இயலாமல் தாம் பிறந்த வளர்ந்த ஊரிலிருந்து வேறு எங்காவது போய் விடலாம் என்று முத்து எடுக்கும் முடிவிற்கு காரணமாக அமையும் ஒரு கீழ்மையான சம்பவம் மிக நுட்பமாக வெளிப்பட்டுள்ளது. முத்துவின் மூத்த சகோதரர், அவன் வீட்டில் இல்லாத சமயத்தில் அவனுடைய மனைவியை மானபங்கப்படுத்தி விடுகிறார். பிரிவினை ஏற்படுவதற்கு முன்புவரை கூட முத்துவிடம் மனைவியிடம் கண்ணியமாகப் பழகியவர் ஏன் இம்மாதிரியான கீழ்மையில் திடீரென்று ஈடுபட வேண்டும்? தம்முடைய நீண்ட நாள் ஏக்கத்தை பிரிவினையின் பின்னால் ஏற்பட்ட விலகலையொட்டி தீர்த்துக் கொண்டாரா என்று மேலோட்டமாக தோன்றினாலும் அதையும் விட நுட்பமான காரணம் ஒன்றிருப்பதாக தோன்றுகிறது. அது முத்துவின் நிலத்தையும் தனதுரிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற திட்டத்தின் ஒரு பகுதியா என்பதுதான் அது. நிலவுடமை மனோபாவம் மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றத்தின் ஒரு கண்ணியாகத்தான் இந்த கீழ்மைச் செயலை புரிந்து கொள்ள முடியும். இந்த அபாண்டமான செயலை முத்துவின் தாயாரும் சாதாரணமாக கடந்து போவது அவனுக்கு ஆச்சரியத்தையும் சினத்தையும் உண்டாக்குகிறது. மருமகளின் மீதான கோபத்தையும் வன்மத்தையும் அவள் இப்படி தீர்த்துக் கொள்கிறாளா? ஆனால் தனது பங்கு நிலத்தை விற்று விட்டு உறவுகள் அல்லாத வேறு இடத்தில் புதிய நிலம் வாங்குவதற்காக முத்து முயலும் போது  கணிசமான தொகையைத் தந்து உதவுபவளும் அவனது தாயாரே. ஆளண்டாப் பட்சியின் இன்னொரு முகம் அது.

***

புதிய வாழ்விடத்தைத் தேடி திட்டமிடாத பயணத்தின் பகுதியாக கால்போன போக்கிலே விளைநிலத்தை வாங்குவதற்காக தேடிச் செல்லும் முத்துவின் பயணத்தின் புள்ளியில்தான் இந்தப் புதினம் துவங்குகிறது.  இந்தப் பயணத்தில் அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களையும் அவனது கடந்த கால அனுபவங்களையும் முன்னும் பின்னுமாக இழுத்துச் சென்றிருப்பதின் வடிவத்தில் அமைந்திருக்கிறது, இந்தப் புதினம். பொதுவாக பெருமாள்முருகன் தனது புதினங்களை கட்டமைக்கும் சுவாரசியத்திற்கு இந்த நூலும் விதிவிலக்கல்ல. நாவல் இயங்கும் காலக்கட்டத்தை பூடகமாகத்தான் புரிந்து கொள்ள முடியும். புதினத்தில் சித்தரிக்கப்படும் நிலவெளி விவரணைகள், மனிதர்கள், சம்பவங்கள் ஆகியவற்றின் மூலம் குத்துமதிப்பாகத்தான் நாவல் இயங்கும் காலத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக முத்துவின் பயணத்தின் போது கூடவே பயணிக்கும் குப்பண்ணா, பெரியாரின் நாத்திக பிரச்சாரம் தொடர்பான சம்பவத்தை நினைவுகூறும் போது இதன் காலக்கட்டத்தை சற்று நெருங்கி அணுக முடிகிறது.

முத்துவிற்கும் குப்பனிற்குமான உறவு இந்தப் புதினத்தில் மிகச் சிறப்பாகவும் இயல்பாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. முத்து கொங்கு கவுண்டர் சமூகத்தைச் சார்ந்தவன். அவரை விட வயதில் மூத்தவரான குப்பன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர். முத்துவின் மாமனார் வீட்டில் பண்ணையாளாக பல வருடங்கள் பணிபுரிபவர். முத்து தனக்கான விவசாய நிலத்தை வாங்குவதற்கான பயணத்தில் அவனுக்கு துணையாகச் செல்பவர்.    இந்தப் புதினத்தின் பிரதான பாத்திரமாக இருப்பதற்காக முத்து செயற்கையாக கட்டமைக்கப்பட்ட நாயகத்தன்மையோடு சித்தரிக்கப்படவில்லை.  ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அதைத் தாண்டிய மனிதநேயத்தோடு அவரை 'குப்பண்ணா' என்று அன்போடு அழைக்கிறான். அதே சமயத்தில் தன்னுடைய சமூக நிலை குறித்த பிரக்ஞை சார்ந்த உயர்வுமனப்பான்மையும் அவனுக்கு இருக்கிறது. இரண்டிற்குமான நிலையில் பயணப்பட்டுக் கொண்டேயிருக்கிறான். அதைப் போலவே குப்பனுக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கேயுள்ள பழக்கப்பட்ட அடிமை மனோபாவமும் தாழ்வுணர்வும் உள்ளது. உயர்சாதியைச் சார்ந்தவராக இருந்தாலும் முத்தண்ணா தம்மிடம் சரிசமமாகப் பழகுகிறாரே என்று உள்ளூற பெருமையாக இருக்கிறது. அதற்காக அவர் அதிக உரிமையும் எடுத்துக் கொள்வதில்லை. 'அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்' என்கிற குறளைப்  போலவே முத்துவுடன் பழகுகிறார். இருவரும் தனிமையில் இருக்கும் சமயங்களில் உள்ளார்ந்து படிந்து கிடக்கும் சாதியுணர்வைத் தாண்டிய மனிதநேயத்துடனும் பொதுவிடத்தில் தனது கவுண்டர் சமூகத்துப் பெருமையை விட்டுத்தராத நிலையிலும் பழகுகிறான் முத்து. இவர்களது பயணத்தின் போது நிகழும் சம்பவங்கள், இவர்கள் தயாரித்து உண்ணும் உணவு வகைகள் போன்றவை அவற்றின் நுண்மையான தகவல்களோடும் மிக நுட்பமான விவரணைகளுடனும் பதிவாகியிருக்கின்றன.

இந்தப் புதினத்தின் மூலம் கொங்கு மண்ணின் வாசனை, அதன் கலாசாரம், மக்களின் சொலவடைகள், பழக்கங்கள், குணாதிசயங்கள் போன்றவற்றை அறிய முடிகிறது. குறிப்பாக விவசாயிகளுக்கு உழைப்பின் மீது ருசி என்பது அபாரமானது. அர்ப்பணிப்புடன் பணிபுரியும் நல்ல வேலைக்காரர்களுக்கு வேலை செய்வதென்பது நாக்கில் நீர் ஊற ருசியுள்ள உண்வை சாப்பிடுவதற்கு இணையானது. வாங்கிய காட்டை  விளைநிலமாக திருத்தப்பட வேண்டிய பணி என்பது முதலில் முத்துவிற்கு மலைப்பைத் தந்தாலும் அதை பகுதி பகுதியாக செய்து முடிப்பதின் மூலம் இன்னமும் ஆர்வம் ஊற்றெடுக்கிறது. சம்சாரிகளுக்கேயுரிய குணாதிசயம் இது. ஒரு கூட்டுக்குடும்பத்தின் பகுதியாக இருந்தவன், தன்னுடைய பிரத்யேக உழைப்பின் மூலமாக ஒரு விளைநிலத்தையும் வருங்கால சந்தததிகளுக்கான அமைவிடத்தையும் உருவாக்கும் அவனுடைய பெருமிதம், காட்டைச் சொந்தமாக்குவதிலிருந்தே துவங்கி விடுகிறது. காடு வாங்கும் விஷயம் நல்ல படியாக நடந்து முடிய வேண்டுமே என்கிற அவனுடைய வேண்டுதலும் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமே என்கிற அவனுடைய பதட்டமும் பிரச்சினை ஏதுமல்லாத நல்ல நிலமாக கிடைக்க வேண்டுமே என்கிற தேடுதலும் கலந்த அவனுடைய உணர்வுகள் புதினம் நெடுகிலும் சிறப்பாக பதிவாகியிருக்கின்றன. இது போன்ற கவலைகள் ஏதுமல்லாது உல்லாசமாக கூட வரும் குப்பண்ணாவைப் பற்றி அவனுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதுவரை தம்முடைய சகோதரர்களிடன் நிழலிலேயே வளர்ந்தவனாக இருந்தாலும் சுயமான முடிவை நோக்கிப் பயணிக்கையில் இயல்பாக கிளர்ந்தெழும் சாதுர்யம் மிக்கவனாக முத்து உருமாறும் அதிசயமும் நிகழ்கிறது.

முத்து தான் வளர்ந்த குடும்பத்திலிருந்து துண்டித்துக் கொண்டு வேறு இடம் தேடி நகர்வதற்கு அவனுடைய மூத்த சகோதரர் நிகழ்த்தும் அபாண்டமான செயல் ஓர் உச்சமான காரணமாக அமைந்தாலும் அதற்கான மறைமுக உந்து சக்தியாக இருப்பவள் அவனுடைய மனைவி பெருமா தான். இன்றைக்கும் கூட கூட்டுக்குடும்பத்திலிருந்து வெளியேறி தனக்கான நிலத்தையோ, வீட்டையோ தேடிக் கொள்ள பெரும் காரணமாயிருப்பவர்கள் அவர்களின் மனைவிகளாகத்தான் இருப்பார்கள். இது குறித்த தொடர்ந்த தூண்டுதல்களையும் நினைவூட்டல்களையும் மனநெருக்கடிகளையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டேயிருப்பார்கள். இந்தப் புதினத்திலும் முத்துவின் மனைவி பெருமா நேரடியாக பங்குகொள்ளும் பகுதி குறைவாக இருந்தாலும் முத்துவின் பயணத்தை தொடர்ந்து நடத்திச் செல்லும் மறைமுக காரணியாக அவளே இருப்பதை முத்துவின் மனப்பதிவுகளின் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. பெரியாரின் நாத்திக பிரச்சாரம் தந்த உத்வேகத்தில் குடுகுடுப்பைக்காரனை இரவில் பயமுறுத்தி அவனுடைய சாவிற்கு காரணமானதால் எழும் குற்றவுணர்வை காலங்கடந்தும் தக்கவைத்துக் கொண்டிருக்கும் குப்பண்ணா நினைவுகூரும் சம்பவம் ஒருவகையான சுவையென்றால் பனையேறும் தொழிலாளர்கள் கேட்கும் அதிக கூலி காரணமாக, தன் மகனின் சாதியையும் அடையாளத்தையும் மறைத்து தாழ்த்தப்பட்ட சிறுவனான அறிமுகத்துடன் அந்தத் தொழிலை கற்றுத்தர அனுப்பும் முத்துவின் தந்தையின் விநோதமான பிடிவாதம் இன்னொரு சுவையான கதையாக இதில் பதிவாகியிருக்கிறது. காட்டைத் திருத்துவதில் பெருமாவின் பாட்டி காண்பிக்கும் ஈடுபாடும் உழைப்பும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

மனிதன் கூடிவாழும் சமூக விலங்குதான் என்றாலும் தன்னளவில் ஒவ்வொரு மனிதனும் ஒரு தீவாகத்தான் இருக்கிறான். தன்னுடைய சுய அடையாளத்தை தேடி அடைவதே அவனுக்கு முன் நிகழும் சவாலாக இருக்கிறது. நிலவுடமைச் சமுதாயம் ஏற்பட்டதின் தவிர்க்க முடியாத ஊற்றுக் கண்ணிற்கு பின்னிருக்கும் பிரதானமான உணர்வு இது. பெருங்குடும்பங்கள் மெல்ல மெல்ல சிதறி விலகி உதிரிக் குடும்பங்களாக ஆகிக் கொண்டேயிருப்பது ஒருவகை பரிணாம வளர்ச்சி. காலந்தோறும் இந்தப் பயணம் இடையறாது நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். பெருமாள் முருகனின் 'ஆளண்டாப் பட்சி' இந்த ஆதார உண்மையை நுட்பமாகவும் ஒரு சமூகத்தின் பிரத்யேக கலாசாரம் சார்ந்தும் நிறுவுவதில் வெற்றி பெற்றிருக்கிறது எனலாம்.

தமிழ் மின்னிதழில் வெளியானது. (நன்றி: தமிழ் மின்னிதழ்)


suresh kannan