Friday, December 20, 2019

மம்முட்டி என்கிற மனிதன்
மம்முட்டி எனக்குப் பிடித்த நடிகர்தான் என்றாலும் ஒரு நடிகரின் வாழ்வனுபவங்களில் என்ன இருக்கப் போகிறது, அப்படியே இருந்தாலும் அது பொய்யும் புனைவுமாய் திரையைப் போலவே மிகை ஒப்பனையுடன்தானே பதிவாகியிருக்கப் போகிறது என்கிற அசுவாரஸ்யத்துடனும் தவறான முன்முடிவுடனும்தான் அந்த நூலை வாசிக்க ஆரம்பித்தேன்.


அது, மூன்றாம் பிறை –  வாழ்வனுபவங்கள்.


மம்முட்டி என்கிற நடிகரைப் பற்றிய நூலாக அல்லாமல் பெரும்பாலும் ஒரு தனிநபரின் முகமாக  அமைந்திருப்பதே இந்த நூலின் சிறப்பு. தனது திரையுலக அனுபவங்களைத் தாண்டி தம் சொந்த வாழ்வின் அனுபவங்கள் பலவற்றையும் ஒப்பனையின்றி ஆத்மார்த்தமாக பகிர்ந்திருக்கிறார் மம்முட்டி. தமிழில் இப்படி எந்தவொரு நடிகராவது உண்மையாகவும் ஆத்மார்த்தமாகவும் எழுதுவாரா என்று சற்று நேரம் யூகித்துப் பார்த்தேன். தம் சுயநிறங்களை ஒரு வாக்குமூலம் போல ஒப்புக் கொள்ளும் மம்முட்டி தான் சறுக்கிய தருணங்களையும் பிறகு அதை உணர்ந்த பக்குவத்தையும் பாவ மன்னிப்பின் நெகிழ்ச்சியோடு எழுதியுள்ளார்.


***

முகம்மது குட்டி என்கிற இயற்பெயர் கொண்ட அந்த இளைஞன் ஓமர் ஷெரீப் போன்று ஒரு நடிகனாகும் விருப்பத்தில் அதையே தன் பெயராக வைத்துக் கொள்கிறான்.கல்லூரி நண்பர்களால் அந்தப் பெயராலேயே அறியப்படுகிறான். ஒருநாள்  சக நண்பனொருவனால் இயற்பெயர் கண்டுபிடிக்கப்பட்டு அவன் 'மம்முட்டி' என வேடிக்கையாக அழைக்க, பிடிக்காமலிருந்த அந்தப் பெயரே தன் அடையாளமாகி வாழ்நாள் முழுவதும் தன் பின்னாலேயே துரத்திக் கொண்டு வரும் சுவாரசியமான கட்டுரையோடு துவங்குகிறது இந்த நூல். (பிடிக்காமலிருந்த என் பெயர்)

தான் வழக்கறிஞராக பணிபுரிந்த போது, தன்னை தினமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் ‘சார்.. நீங்க ஏன் சினிமா நடிகராகக்கூடாது. அதற்கான முகவெட்டு உங்களுக்கு இருக்கிறது’ என்கிறான். சினிமா ஆசை உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கும் அந்த வழக்கறிஞருக்கு உள்ளுக்குள் ஜிலீர் என்கிறிருக்கிறது.

பிறகு புகழ்பெற்ற நடிகராகின பிறகு தன்னை வேடிக்கை பார்க்க முண்டியடிக்கும் கூட்டத்தில் போலீஸ்காரரால் அடிபட்டு ரத்தம் ஒழுகிய அந்த இளைஞனின் முகத்தை, பிரியத்துடன் தன்னை அழைத்த அந்தக் குரலை எங்கேயோ பார்த்த ஞாபகமிருக்கிறதே என்று யோசித்துப் பார்த்திருக்கிறார். பிறகுதான் அந்தச் சிறுவனின் நினைவு வருகிறது. தனக்குள் இருக்கும் நடிகனைக் கண்டுபிடித்த முதல் ரசிகனை பிறகு காண முடியவில்லை என்கிற துயரத்தை உண்மையாக பதிவு செய்கிறார். எப்படியாவது தேடிக் கண்டுபிடித்திருக்கலாமே என்று நமக்கே ஆதங்கம் பெருகுமளவிற்கு அந்த அனுபவம் அமைகிறது. (முதல் ரசிகனின் ரத்தம் தோய்ந்த முகம்).

பழங்குடி கதாபாத்திரமாக ஒரு திரைப்படத்தில்  மம்முட்டி நடிக்கிற போது துணை நடிகர்களாக உண்மையான பழங்குடி மனிதர்களே வரவழைக்கப்பட்டிருந்தார்கள்.  கும்பலாக அமர்ந்து உணவருந்துவது போன்ற காட்சி. கேமராவின் பொய்களுக்கு ஏற்ப நிறுத்தி நிறுத்தி உணவருந்த அவர்களுக்குத் தெரியவில்லை. சோறு கொட்டக் கொட்ட சாப்பிட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். மம்முட்டியின் பக்கத்தில் அமர்ந்திருக்கும் மனிதருக்கு மம்முட்டி யாரென்று தெரிவதில்லை. அறிமுகமில்லாவிட்டாலும் எவரோ ஒரு நாடோடி போல என நினைத்து, மம்முட்டியின் இலையில் அவியல் தீர்ந்து போன போது தன்னிச்சையாக தன் இலையில் இருந்து அவியலை வாரி வைத்திருக்கிறார்.

முன்பின் அறிமுகமில்லா ஒருவனின் இலையில் உணவு தீர்ந்த போது எவ்வித தயக்கமுமில்லாமல் தன்னிடமிருந்து பகிர்ந்தளிக்கும் பழங்குடி மனோபாவத்தை மம்முட்டி நெகிழ்வுடன் வியக்கிறார். அவர்களைத்தான் நாகரிகம் அறியாதவர்கள் என்று உணவைப் பதுக்கும் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். (கற்றுணர்தல்)

பிரசவ வலியுடன் சாலையில் காத்திருந்த பெண்ணுக்கு உதவியதில் அவர் தந்தை தந்த இரண்டு ரூபாய், படப்பிடிப்பு நடந்த வீட்டின் உரிமையாளர் மகனை வெளியேறச் சொன்ன கோபம், சக நடிகை பகிர்ந்து கொண்ட அந்தரங்கமான துயரம், ஏமாற்றிய தயாரிப்பாளரிடமிருந்து வசூலிக்காமல் போன பணம், ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக நினைக்கும் மலையாளிகளை கண்டிக்கும் நேர்மை,  பெண்களை மதிப்பதை அமிதாப்பச்சனிடமிருந்து கற்றுக் கொண்ட சம்பவம் என்று ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு விதமான உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது.

மம்முட்டிக்குள் ஓர் அபாரமான எழுத்தாளன் ஒளிந்திருக்கிறான் என்பதை அடையாளப்படுத்தும் வகையான எழுத்து. மலையாளத்தில் இதன் மொழி எப்படி இருந்திருக்கும் என்கிற யூகத்தை தனது இலகுவான  தமிழ் மொழிபெயர்ப்பின் மூலம் உணர்த்தியிருக்கிறார் ஷைலஜா.

மிகவும் சுவாரசியமான நூல். வம்சி வெளியீடு


suresh kannan

No comments: