Tuesday, December 24, 2019

Uncut Gems (2019) - வைரத்துடன் ஒரு சூதாட்டம்உண்மையில் எரிச்சலூட்டும் திரைப்படமாகத்தான் துவக்கத்தில் இது எனக்குத் தோன்றியது. ஆனால் பிறகு மெல்ல மெல்ல என்னை உள்ளே இழுத்துக் கொண்டதற்குக் காரணம் இதன் அபாரமான திரைக்கதையும் ஆடம் சாண்ட்லரின் அட்டகாசமான நடிப்பும். அவரது தொழில் வாழ்க்கையிலேயே ‘இதுதான் அவரது மிகச்சிறந்த நடிப்பு’ என்று விமர்சகர்கள் மதிப்பிடுகிறார்கள்.

இந்த கிரைம் திரில்லர் திரைப்படத்தில் அவரது தோற்றத்தையும் உடல்மொழியையும் முதலில் கவனிக்கிற போது எனக்கு சற்று குமட்டுவது போல் கூட இருந்தது. ஆனால் ஹோவர்ட் என்கிற அவரின் கதாபாத்திரத்துடன் நெருக்கமாக பயணிக்கிற போது மெல்ல மெல்ல அவர் சுவாரசியமான மனிதராக தென்படத் துவங்கி விடுகிறார்.

உண்மையில் ஹோவர்ட் எப்படிப்பட்டவர்? நகைச்சுவை நடிகர் வடிவேலுவை யாராவது நாலைந்து நபர்கள் நன்றாக மொத்தி விட்டு மூச்சு வாங்க நிற்கும் போது ‘அடிச்சுட்டிங்க இல்லை. இனி ஒருத்தன் என் முன்னால நிக்கக் கூடாது. Be careful’ என்று அவர்களிடம் வடிவேலு கெத்துடன் சொல்வார் அல்லவா? ஏறத்தாழ அப்படியொரு பாத்திரம்தான் ஹோவர்ட். அவமானத்திற்கு அசிங்கப்படாத சிங்கம்.

சிலர் தங்களுக்கு ஆதாரமாக, நன்கு தெரிந்த வணிகத்தில் நிலைக்க மாட்டார்கள். பேராசையுடன் வெவ்வேறு தொழில்களில் விழுந்து எழுந்து கொண்டே இருப்பார்கள். பணத்தை திட்டமிட்டு முதலீடு செய்யாமல் ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு, மாட்டைத் தூக்கி கழுத்தில் போட்டு என்று சகலவிதமான குளறுபடிகளையும் செய்து கொண்டே ஒரு நாள் பொத்தென்று வீழ்வார்கள்.

இப்படியான மனிதர்கள் சிலரை என் வாழ்விலேயே நெருக்கமாக பார்த்திருக்கிறேன். அவர்களிடம் மெல்ல பணம் பெருகும் போது அசட்டுப் பெருமிதமும் அலட்டலும் உயர்ந்து கொண்டே போகும். அப்படியான ஒருவரிடம் எங்களுக்குச் சேர வேண்டிய பணத்தை நான் பெறச் சென்ற போது பணக்கட்டை சற்று அலட்சியமாக மேஜையில் எறிந்தார். அது என்னை மட்டுமல்லாமல் பணத்தையுமே மரியாதைக் குறைவாக கையாண்டது போல் தெரியவே, சற்று கோபத்துடன் அவரிடம் இது குறித்து எச்சரித்தேன். சுதாரித்துக் கொண்டு மன்னிப்பு கேட்டார். பின்பு அவரின் திடீர் வளர்ச்சி, சொந்த செலவு சூன்யம் போல பல வணிகக் குளறுபடிகளால் குழம்பி தடுமாறி மெல்ல மெல்ல வீழ்ந்த போது குடும்பச் செலவிற்குக் கூட பணமில்லாமல் பல நாள் தாடியுடன் நின்று கொண்டிருந்த அவரை ஒரு நாள் பார்த்த போது பரிதாபமாக இருந்தது.

ஹோவர்ட்டும் இப்படித்தான்.  நியூயார்க் நகரில் நகைக்கடை வைத்திருக்கிறார். ஆனால் தொழிலில் கவனம் செலுத்த விடாமல் அவரைப் பிடித்திருப்பது சூதாட்டம் என்னும் பூதம். அந்தப் பூதம் அவரின் மண்டையைத் தொடர்ந்து பிறாண்டிக் கொண்டே இருக்கிறது. மற்ற எதைப் பற்றியும், எவரைப் பற்றியும் கவலைப்படாமல் அந்தப் பூதம் அழைக்கும் திசையெல்லாம் நகர்ந்து கொண்டே இருக்கிறார். குடும்பம், உறவு, நிறுவனம், நட்பு என்று பல விதங்களில் அவமானப்பட்டாலும் எதுவுமே அவருக்கு உறைப்பதில்லை.

**

எத்தியோப்பியாவிலுள்ள ஒரு சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட, வைரங்கள் அடங்கிய பாறைத் துண்டு ஒன்று ஹோவர்டிற்கு வந்து சேர்கிறது. தன் கடைக்கு வரும் கூடைப்பந்து விளையாட்டு வீரனான ‘கெவினுக்கு’ அந்தப் பாறைத் துண்டை ‘பல மில்லியன் மதிப்புள்ளது’ என்கிற பெருமிதத்துடன் அறிமுகப்படுத்துகிறான் ஹோவர்ட். கெவின் கருப்பினத்தைச் சேர்ந்தவன். அந்தப் பாறைத் துண்டைத் தொட்டவுடன் நேர்மறையான அதிர்வுகளை அடைகிறான். தன்னிடம் அது இருந்தால் ‘ராசி’யாக இருக்கும் என நம்புகிறான். அதன் மூலம் விளையாட்டுப் போட்டிகளில் ஜெயிக்க முடியும் என்று கருதுகிறான்.

எனவே ‘நாளை காலையில் இதைத் தருகிறேன்’ என்று எடுத்துச் செல்ல முயல்கிறான். அந்த வைரத்தை ஏலத்தின் மூலம் விற்று பெரும்பணம் அடைய திட்டமிட்டிருக்கும் ஹோவர்ட் இதை ஆட்சேபிக்கிறான். எனவே கெவின் தான் அணிந்திருக்கும் சாம்பியன்ஷிப் மோதிரத்தை அடமானமாக வைத்து வைரத்தை எடுத்துச் செல்கிறான்.

ஹோவர்ட் அந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு போய் அடமானமாக வைத்து பணம் பெற்று கூடைப்பந்து விளையாட்டு தொடர்பாக நிகழும் சூதாட்டத்தில் வைக்கிறான். முன்னாள் கடன்தாரர்கள் அவனை நிழலாகத் துரத்திய போதும் அவர்களுக்கு டிமிக்கி தந்து இதனைச் சாதிக்கிறான். எரிச்சலுறும் அவர்கள் இவனை நன்றாக மொத்தி ஆடையை அவிழ்த்து அவமானப்படுத்தி அனுப்புகிறார்கள். தன் மனைவியின் முன்னால் அசடு வழிய நிற்கிறான் ஹோவர்ட்.

இப்படியே பல தகிடுதத்தங்களை அவன் செய்து கொண்டே, தன் அலுவலக உதவியாளினியும் விசுவாசமான காதலியுமான ஒருத்தியின் மூலம் பெரும் பணத்தை சூதாட்டத்தில் சம்பாதிக்கிறான். ஆனால்.. ஹோவர்டிற்கு என்ன நிகழ்ந்தது என்பதை ‘டார்க் ஹியூமரோடு’ இறுதிக்காட்சிகள் விவரிக்கின்றன.

வைரத்தின் தரத்தைப் பொறுத்து அது அதிர்ஷ்டத்தை அள்ளியும் கொட்டும், அழித்தும் போடும்’ என்று உலகமெங்கிலும் ஒரு நம்பிக்கையுண்டு.அதை மெய்ப்பிக்கும் விதமாக இதன் திரைக்கதை அமைந்துள்ளது.

**

ஹோவர்ட் ஆக ‘ஆடம் சாண்ட்லர்’ ரகளையாக நடித்திருக்கிறார். சுற்றியுள்ள பாத்திரங்கள் மட்டுமல்லாது பார்வையாளர்களின் எரிச்சலையும் ‘என்னடா ஆள் இவன்’ என்கிற எள்ளலையும் அதே சமயத்தில் பரிதாபத்தையும் சம்பாதித்துக் கொள்ளும் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். படத்தின் காட்சிகள் பெரும்பான்மையும் இவரது ஆக்கிரமிப்பில்தான் உள்ளது.

விளையாட்டு வீரன் கெவின் மற்றும் அவனது ஆட்களுக்கு இடையே ஹோவர்ட் நிகழ்த்தும் குழப்பமான உரையாடல்கள் மற்றும் உரசல்களுடன்தான் படம் துவங்குகிறது. ஹோவர்ட்டின் பாத்திரத்தைப் பற்றி நாம் உணர்ந்து கொள்கிற போது, சரவெடி போல படம் மெல்ல மெல்ல வேகம் கொள்ளத் துவங்குகிறது.

ஆடம் சாண்ட்லர் பிறப்பால் ஒரு யூதர் என்பதால் திரைப்படத்திலும் இவை தொடர்பான காட்சிகள், கிண்டல்கள் வருகின்றன. இவர் அடிப்படையில் ஒரு நகைச்சுவை நடிகர் என்றாலும், அதன் சாயல் இதில் பெரிதும் வெளிப்படாதவாறு தீவிரத் தொனியில் நடித்துள்ளார்.

Safdie சகோதரர்கள் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படத்தை 2019-ம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களுள் ஒன்றாக இருக்கும் என்று மதிப்பிடுகிறார்கள்.


suresh kannan

No comments: