Saturday, December 14, 2019

இறுதிச் சுற்று - ஒரு நாக்அவுட் அனுபவம்


ஒரு விளையாட்டை முழுக்க முழுக்க மையப்படுத்தி உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் தமிழில் குறைவு. ஏறத்தாழ இல்லை என்றே சொல்லி விடலாம். இதுவரை விளையாட்டுடன் தொடர்புப்படுத்தி உருவான திரைப்படங்களும் வெகுசன சினிமாவின் கூறுகளின் இடையில் அந்த விளையாட்டும் ஒரு இழையாக பயணிக்குமே ஒழிய முழுக்க அதை மையப்படுத்தியிருக்காது.

முழுக்க விளையாட்டை மையப்படுத்தி உருவான இந்தித் திரைப்படங்களாக ஷாருக்கானின் ‘சக்தே இந்தியா’, பிரியங்கா சோப்ராவின் ‘மேரிகோம்’ போன்றவற்றை சொல்லலாம். விளையாட்டுடன் தொடர்புள்ளவையாக உருவான தமிழ் திரைப்படங்கள் என்று ஜீவா, வெண்ணிலா கபடிக்குழு, எதிர்நீச்சல், வல்லினம், ஈட்டி, பூலோகம் போன்றவற்றை உதாரணம் சொல்ல முடியும். (கில்லி திரைப்படத்தை இதில் சேர்க்க முடியாதா என்று ஏக்கமாக கேட்கிறார் விஜய் ரசிகர் ஒருவர்). இதில் ஜீவாவும் வெண்ணிலா கபடிக்குழுவும் சாதிய அரசியலையும் பூலோகம் விளையாட்டுத்துறையில் உள்ள சர்வதேச வணிக அரசியலைப் பற்றி பேசும் முக்கியமான திரைப்படங்களாகும்.

இப்படியான விளையாட்டுத் திரைப்படங்களுக்கென்று ஒரு பொதுவான வார்ப்புரு இருக்கும். முன்பு புகழ்பெற்ற வீரராக இருந்தவர் இப்போது பயிற்சியாளராக இருப்பார். அவருக்கு கடந்த கால கசப்பு ஏதாவது ஒன்றிருக்கும். அல்லது அவரால் தீவிரமாக பயிற்சியளிக்கப்பட்டிருந்த சீடன் எவனாவது அவரைத் துரோகித்து விட்டு எதிர்முகாமிற்கு சென்றிருப்பான். தனிப்பட்ட வாழ்க்கையின் கடுமையான துயரம் ஏதாவது இருக்கும். முரட்டுத்தனமாகவும் சிடுசிடுவென்றும் இருக்கும் அவரிடம் அந்த விளையாட்டில் இளம் வயதிலிருந்தே மிக ஆர்வமுள்ள எந்த இளம் வீரனாவது அவரிடம்  கற்றுக் கொள்ள வேண்டி வருவான். முதலில் அவனை ஏற்றுக் கொள்ளவே அவர் மறுப்பார். பின்பு அவனது பிடிவாதத்தையும் பிரத்யேகமான திறமையையும் அடையாயம் கண்டு கொள்ளும் குரு, அவனை சீடனாக அரவணைத்துக் கொள்வார். சில பல தீவிரமான போராட்டங்களுக்குப் பின் குருவின் இழந்த புகழை விசுவாசமான அந்த சீடன் மீட்டுத் தருவான்.

இது போன்ற திரைப்படங்கள் விளையாட்டைப் பற்றியது என்பதால் அது தொடர்பான காட்சிகளே அதிகம் இருக்கும். அது தொடர்பான நுணுக்கங்கள், பயிற்சிகள், கட்டுப்பாடுகள், தவிர்க்கக்கூடிய தவறுகள், சறுக்கல்களால் நிறைந்திருக்கும். தொடர்பான விளையாட்டுப் போட்டிகள் அடிக்கடி வராது. அதற்கான உணர்ச்சிகரமான சூழல் முதலில் வலுவாக அமைக்கப்படும். பார்வையாளன் அந்தப் போட்டியை மிகவும் ஆர்வமாகவும் பரபரப்பாகவும் எதிர்பார்க்கும்படி இருக்கும். மெல்ல மெல்ல அதன் உச்சத்தை நோக்கி நகரும். போட்டி நடக்கும் போது காட்சி பரபரப்பின் உச்சக்கட்டத்தை அடையும். பார்வையாளன் இருக்கையின் நுனிக்கே வந்து விடுவான். முதல் சில சுற்றுகளில் நாயக வீரன் தோல்வியுற்று காயப்பட்டு பதட்டத்தை ஏற்படுத்துவான். பிறகு குரு தரும் உத்வேகமான சமிக்ஞையின் மூலம் நுணுக்கமான அசைவின் மூலம் எதிரியை வீழ்த்துவான். அந்த உச்சக்கட்ட வெற்றியில் பார்வையாளனும் மிக்க மகிழ்ச்சியோடு பங்கு கொள்வான். அவனுடைய பதட்டம் பிறகு மெல்ல தணியத் துவங்கியிருக்கும்.

சில்வஸ்டர் ஸ்டோலோனின் ‘ராக்கி’ தொடர்வரிசை திரைப்படங்கள் இவ்வகைமையில் முன்னோடியாக குறிப்பிடும்படியானதாக சொல்லலாம். சமூகத்தின் எல்லாத் துறைகளையும் போலவே சினிமாவும் ஆண்மைய சிந்தனைகளால் இயங்குவதால் இதில் நாயக வீரனாக உருவாக்கப்படும் மையப்பாத்திரங்கள் பெரும்பாலும் ஆண்களாகவே அமைவார்கள். வணிகச் சந்தையும் சமூக மனதின் பொது உளவியலும் இதற்கொரு முக்கியமான காரணம். ஆவேசமான விளையாட்டுக்களுடன் பெண்களை தொடர்புபடுத்தி எவரும் யோசிப்பதில்லை.

ஆனால் மேலே உதாரணம் காட்டப்பட்ட சக்தே இந்தியா மற்றும் மேரிகோம் ஆகிய இரண்டு திரைப்படங்களிலுமே பெண்கள்தான் விளையாட்டு வீரர்கள் என்பது ஆச்சரியமான விஷயம். ஓட்டப்பந்த வீராங்கனையான அஸ்வினி நாச்ப்பா –வை கொண்டு மெளலி இயக்கிய தெலுங்குத் திரைப்படத்தையும் சொல்லலாம். மேரிகோமும் அஸ்வினியும் தங்களின் சுயமான திறமையால் அந்தந்த துறைகளில் ஏற்கெனவே நிறுவிக் கொண்டதால்தான் அவர்கள் குறித்தான திரைப்படங்கள் உருவாக முடிந்தது என்பதையும் கவனிக்க வேண்டும்.

***

இதன் தொடர்ச்சியாக தமிழில் ஒரு பெண் வீரரை மையப்படுத்தி முதன்முதலில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ‘இறுதிச்சுற்று’. இது பெரும்பாலும் விளையாட்டுத் திரைப்படங்களுக்கான உதாரண வார்ப்புருவை கச்சிதமாகவும் திறமையாகவும் பின்பற்றியிருந்ததால் மிகுந்த கவனத்திற்கு உரியதாகிறது. மற்ற வெகுசன திரைப்படங்களிலுள்ள வழக்கமான கூறுகளினால் இதன் திரைக்கதை காற்றாடி போல அலைபாய்வதில்லை. சாதாரண விளையாட்டுக்களிலேயே பெண்கள் தொடர்பான திரைப்படங்கள் உருவாகமல் இருக்கும் போது மிகுந்த உடல்வலிமையைக் கோரும் மற்றும் எளிதில் காயமேற்படும் ஆபத்துகளைக் கொண்ட குத்துச்சண்டை போன்ற ஆக்ரோஷமான விளையாட்டு தொடர்பான திரைப்படத்தில் ஒரு பெண்ணை மையப்படுத்தி உருவாக்க தனியான துணிச்சல் வேண்டும். மேரிகோம் போன்ற வெற்றிபெற்ற முன் உதாரணங்கள் இருந்ததால் இது சாத்தியமாயிற்று எனலாம்.

ஒரு படைப்பாளியை பால் பேதத்துடன் சுட்டிக்காட்டுவது முறையானதல்ல என்றாலும் இத்திரைப்படத்தை இயக்கியது ஒரு பெண் என்பதாலும் தன்னுடைய இனத்தவரை பிரதானப்படுத்த வேண்டும் என்று அவர் சிந்தித்திருக்கலாம். ஏறத்தாழ எல்லாத் துறையில் பெண்கள் முன்னேறிக் கொண்டும் சாதனைகள் புரிந்து கொண்டிருந்தாலும் கூட அவர்களின் பிரகாசங்கள் வெளியில் பரவலாக அறியப்படாமல் ஆணாதிக்க உலகில் மூழ்கடிக்கப்படும் சூழலில் இது போன்ற படைப்புகள் அவசியம் தேவைப்படுகின்றன.

ஹாலிவுட் திரைப்படமான ‘மில்லியன் டாலர் பேபி’ இதன் கச்சிதமான உதாரணம். குத்துச்சண்டை விளையாட்டில் மிகுந்த ஆர்வமுடைய ஒரு பெண், புகழ்பெற்ற பயிற்சியாளரை நாடிப் போகிறாள். ‘பெண்களுக்கு நான் பயிற்சியளிப்பதில்லை’ என்று மறுக்கும் அவர், அவளின் பிடிவாதத்திற்குப் பிறகு அவளின் திறமையை இனங்கண்டு பயிற்சியளிக்க ஆரம்பிக்கிறார். குறுகிய காலத்திலேயே அவள் புகழ்பெற்ற வீராங்கனையாக உருவாகத் துவங்குகிறாள். தன்னுடைய மகளின் பிரிவின் துயரத்தால் மறுகிக் கொண்டிருக்கும் பயிற்சியாளர் இவளை தன் சொந்த மகளாகவே பாவிக்கத் துவங்குகிறார்.


***

இறுதிச்சுற்று திரைப்படத்திற்கு வருவோம்.

அங்கிங்கெனதாபடி எங்கும் நிறைந்திருக்கும் அரசியலானது குத்துச்சண்டை விளையாட்டுத் துறையிலும் இருக்கும் காரணத்தினால் திறமை வீணாக்கப்பட்டு அதன் துயரம் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் எதிரொலிக்கும் கடந்த கால கசப்புகளுடன் இருக்கிறார் குத்துச்சண்டை வீரர் பிரபு. (மாதவன்). பின்னாட்களில் திறமையான பயிற்சியாளர் என்கிற அடையாளத்துடன் இருந்தாலும் அவரது மூர்க்கத்தனமும் அங்கு நிகழும் அரசியலின் மீது அவர் வெளிப்படுத்தும் ஆவேசமும் பலருக்குப் பிடிப்பதில்லை. எனவே பழிவாங்கும் நடவடிக்கையாக அவர் சென்னைக்கு மாற்றப்படுகிறார்.

அசுவாரசியமாக சென்னைக்குள் நுழையும் அவரின் கண்ணில் படுகிறாள் மதி. மீனவக்குப்பத்தைச் சார்ந்த இளம்பெண். குத்துச்சண்டை விளையாட்டில் அவளுக்குள் ஒளிந்திருக்கும் அசாத்தியமான திறமையை வெளிக்கொணர முயல்கிறார். ஏறத்தாழ பிரபுவிற்கு ஈடான முரட்டுத்தனத்துடன் இருக்கும் மதி (ரித்திகா சிங்) என்கிற அந்தப் பெண்ணிற்கும் இவருக்கும் துவக்கத்தில் நிறைய முரண்களும் மோதல்களம் நிகழ்கின்றன. சிலபல உணர்ச்சிகரமான நாடகங்களுக்குப் பிறகு மாஸ்டரின் லட்சியம், விருப்பம், நோக்கம் எல்லாமே குத்துச்சண்டையும் தன்னுடைய நலனும் மாத்திரமே என்பதைப் புரிந்து கொண்ட பின் குருவிற்குப் பெருமை தேடித்தரும் விதமாக சர்வதேச போட்டியின் கடைசி விநாடிகளில் எதிராளியை நாக்அவுட்டின் மூலம் வெல்கிறாள் மதி.

திறமையான பயிற்சியாளராக அற்புதமாக நடித்துள்ளார் மாதவன். சில வருடங்களுக்கு முன்பு ‘அலை பாயுதே’ திரைப்படத்தில் மென்மையான இளம் காதலனாக அறிமுகமாகிய அந்த மாதவனா இவர் என்று பிரமிக்கும் படியாக தன்னுடைய தோற்றம், உடல்மொழி, அலட்சியமும் மூர்க்கமும் கொண்ட வசனங்கள் என்று தன்னை இந்தப் பாத்திரத்திற்காக மிகுந்த மெனக்கெடலுடன் உருமாற்றியிருக்கிறார். மணிரத்னத்தின் ‘ஆய்த எழுத்து’ திரைப்படத்தில் முரட்டுத்தனமான ஒரு ரவுடியாக இவ்வகையான பாத்திரத்தில் ஏற்கெனவே தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு திரைப்பட பாத்திர வடிவமைப்பின் தனித்தன்மைகளுக்காக தன்னையே வருத்திக் கொள்ளும் இது போன்ற நடிகர்களின் அர்ப்பணிப்பு உணர்வை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மாதவனின் திரைப்படப் பயணத்தில் இத்திரைப்படம் ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும். அத்தனை அபாரமான நடிப்பு.

இத்திரைப்படத்தில் நடித்தற்காக நாசர் அவர்களை பிரத்யேகமாக பாராட்டியாக வேண்டும். ஏனெனில் துணை நடிகர் கூட ஒருவேளை நடிக்கத்தயங்குகிற ஒரு பாத்திரத்தில் இத்தனை வருட அனுபவமுள்ள சீனியர் நடிகர் தயங்காமல் நடிக்கத் துணிந்த அந்த அர்ப்பணிப்பு உணர்விற்காக. பயிற்சியாளர் என்கிற பெயரில் உள்ளூரில் பல வருடங்களாக இருந்தாலும் எந்தவொரு சாம்பியனையும் உருவாக்காத முதிர்ச்சியற்ற, மாதவனின் முரட்டுத்தனத்தினால் சமயங்களில் சிறுமைப்படுத்தப்படுகிற பாத்திரம் அவருக்கு. பயிற்சிக்கூடத்தில் உதவியாளராக இருக்கிறார். (மில்லியன் டாலர் பேபி திரைப்படத்தில் மார்கன் ப்ரீமென் நடித்த பாத்திரம் நினைவிற்கு வருகிறது). ‘நீ கக்கூஸ் கழுவத்தான்யா லாயக்கு’ என்று மாதவனால் ஒரு கட்டத்தில் அவமானப்படுத்தப்படும் போது.. “ஆமாம். கக்கூஸ் நான் கழுவுறேன். ஆனா கப்பு உங்கள்துதானே?’ எனும் போது அந்த ஒரு சிறிய வசனத்தில் காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் உறைந்திருக்கும் சமூகக் கோபம் வெடித்து சிதறுகிறது.

மதி என்கிற மீனவகுப்பத்துப் பெண்ணாக நடித்திருக்கும் நடிகை உண்மையிலேயே கிக் பாக்ஸிங் வீரராக இருப்பதால் அவருடைய உடல்மொழி நம்பகத்தன்மையுடன் இருக்கிறது. அதிலொன்றும் கூட ஆச்சரியமில்லை. ஆனால் இதற்கு முன் நடித்த அனுபவமேதுமில்லாமல் முதல் திரைப்படத்திலேயே அத்தனை அபாரமாய் நடித்திருக்கிறார் பாருங்கள். அதுதான் ஆச்சரியம். மாதவனுக்கு ஈடான முரட்டுத்தனத்துடன் அவருடன் மோதிக் கொண்டேயிருப்பவர், ஒரு கட்டத்தில் மாதவனின் நல்லியல்பு புரிந்தவுடன் இனக்கவர்ச்சியினால் அவர் மீது காதல் கொள்வதும் போட்டியில் தோற்ற காரணத்திற்காக  மாதவன் தன்னை நிராகரித்தவுடன் வேதனை கொள்வதும் பின்பு மீட்டுக் கொண்ட உத்வேகத்துடன் குருவின் மீது நெகிழ்ச்சி காட்டுவதும் என பல்வேறு உணர்ச்சியான முகபாவங்களால் அற்புதம் செய்திருக்கிறார்.

ராதாரவி சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் ஆத்மார்த்தமாக நடித்திருக்கிறார். குத்துச்சண்டை அஷோசியேஷனின் தலைவராக அரசியலும் அற்பத்தனங்களும் செய்பவராக ஜாகீர் உசேனின் நடிப்பும் அபாரம்.

வழக்கமான போக்கில் சென்று கொண்டிருந்த தமிழ் திரையிசையில் அந்தந்த காலக்கட்டததில் தமது பிரத்யேகமான திறமையின் மூலம் அதை உற்சாகமான புதிய திசைக்கு பயணிக்க வைத்து சாதனை புரிந்த இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் போல சமகாலத்தில் அந்தச் சாதனையைப் புரிந்து வருபவராக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணைச் சொல்லலாம் என்று தோன்றுகிறது. அதுவரையான மரபை ஆரோக்கியமாக மீறும் துணிவு, புதிய பாணியிலான இசையமைப்பு, விளிம்பு நிலை சமூகத்தின் கலையை அதன் தன்மை பெரிதும் மாறாமல் உபயோகிக்கும் உன்னதம் போன்றவை இந்த இசையமைப்பாளரை தனித்து கவனப்படுத்துகின்றன.

***

இறுதிச் சுற்று திரைப்படத்தின் இயக்குநரான சுதா கோங்கராவின் முதல் திரைப்படமான ‘துரோகி’ பார்த்திருக்கிறேன். பாத்திரங்களின் வடிவமைப்பு, மேக்கிங் ஆகியவை சிறப்பாக இருந்தாலும் திரைக்கதையின் பலவீனத்தால் சுமாரான திரைப்படமாக அது அமைந்தது. இவர் மணிரத்னத்தின் உதவியாளராக இருந்ததால் குருவின் செய்நேர்த்தியை மாத்திரம் எடுத்துக் கொண்டு திரைக்கதையை வடிவமைப்பதில் கோட்டை விட்டு விட்டாரே என்று அப்போது நினைத்துக் கொண்டேன். ஆனால் அதற்கு வட்டியும் முதலுமாய் அற்புதமான திரைக்கதையின் மூலம் விட்டதைப் பிடித்து விட்டார்.

இத்திரைப்படம் விளையாட்டுத் திரைப்படங்களுக்கேயுரிய தேய்வழக்கான வார்ப்புருவில் அமைந்திருந்தாலும் சுவாரசியமான, உணர்ச்சிகரமான, பரபரப்பான காட்சிக்கோர்வைகளின் மூலம் கவர்ந்திருக்கிறார். வழக்கமான தமிழ் திரைப்படத்தின் நீளம் அல்லாமல் கச்சிதமான காட்சிகளுடன் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் முடிந்து விடுகிறது. இடையில் பாடல்கள் வந்தாலும் அவைகளுக்குள்ளும் திரைக்கதை நகர்வதால் பெரிய இடையூறாக தெரியவில்லை. தேவைற்ற காட்சிக்கோர்வை என்று எதையுமே சொல்லி விட முடியாதபடி படைப்பின் மையத்துடன் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருக்கின்றன. கதாபாத்திரங்களின் உணர்வும் பார்வையாளர்களின் உணர்வும் பின்னிப் பிணையும் படி உணர்ச்சிகரமான காட்சிகளை உருவாக்குவது ஒரு திறமையான இயக்குநரின் அடையாளம். அந்த வகையில் கவுரி அபாரமான வெற்றியை அடைந்திருக்கிறார்.

பொதுவாக குருவைத் தேடி சீடன் கண்டடைவதும் அவருடைய துவக்க நிராகரிப்புகளைத் தாண்டி பிடிவாதத்துடன் தன் திறமையின் மூலம் அவரைக் கவர்வதும் என்கிற வழக்கமான போக்கு அல்லாமல் இத்திரைப்படத்தில் குருதான் தன்னுடைய சீடரை அடையாளங் கண்டுகொள்கிறார்.

பெண் பித்தன் என்று அறியப்படும் மாதவன் அந்தக் காரணத்தினாலேயே தன் பின்னால் சுற்றுகிறானோ என்று துவக்கத்தில் சந்தேகப்படும் ரித்திகா, தன் சகோதரிக்காக விளையாட்டில் வேண்டுமென்றே தோற்றுப் போய் மாதவனை வெறுப்பேற்றுவதும் பின்பு திறமையை வளர்ப்பது மட்டுமே அவரது நோக்கம் என்கிற நல்லெண்ணத்தை புரிந்து கொண்டு அவர் மீது நேசம் கொள்வதும் ஜெயிப்பதற்காக போட்டியை அணுகும் நேரத்தில் சகோதரியின் துரோகத்தால் தோற்றுப் போவதும், முன்பு போலவே இப்போதும் வேண்டுமென்றே தோற்றுப் போனாள் என்கிற குற்றச்சாட்டுடன் குருவின் புறக்கணிப்பையும் ஆத்திரத்தையும் துயரத்தையும் எதிர்கொள்வதும் இறுதியில் விடாமுயற்சியோடு குருவின் நம்பிக்கையைப் பெறுவதும் என நுட்பமான புனையப்பட்டிருக்கும் திரைக்கதை சுவாரசியமான வேகத்துடன் பயணிக்கிறது. (உச்சக் காட்சியில் போட்டியில் வென்று விட்ட பிறகு தாயைத் தேடும் குழந்தை போல மாஸ்டரை தேடி அவர் மீது பாய்ந்து அமரும் காட்சியின் உடல்மொழியும் ‘மில்லியன் டாலர் பேபி’ திரைப்படத்தை நினைவுப்படுத்துகிறது.)

பாத்திரங்களின் வடிவமைப்பும் அவற்றின் இயல்பான பரிணாம வளர்ச்சியும் கூட மிக நுட்பமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. மாதவனின் மீது காதல் கொள்ளும் ரித்திகா அவர் வாங்கித் தந்த தொப்பியை பெரும்பாலும் அணிந்திருப்பதும் அவர் பக்கத்தில் அமர்வதற்காக போட்டியிட்டு இடம் பிடிப்பதும் அவருடன் பேசும் பெண் மீீது பொறாமை கொள்வதும் அதுவரை குருவின் காலைத் தொட்டு கும்பிடாத திமிருடன் இருந்தவர், குருவின் முழு நல்லெண்ணம் முழுவதும் புரிந்தவுடன் இறுதிப் போட்டிக்கு முன்பு காலில் விழுந்து வணங்கிச் செல்வதன் மூலம் அந்தப் பாத்திரத்திற்கு ஏற்பட்டிருக்கும் அக மாற்றத்தை சிறப்பான நுணுக்கங்களுடன் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

குருவிற்கும் பெண் சீடருக்கும் உள்ள உறவும் மிக அற்புதமாக ஆபாசக் கலப்பின்றி பதிவாகியிருக்கிறது. ரித்திகாவிற்கு தன் மீதுள்ளது ஒடிபஸ் காம்ப்ளக்ஸினால் (Oedipus Complex) ஏற்பட்டிருக்கும் இனக்கவர்ச்சி என்பதை புரிந்து கொள்ளும் மாதவன் அவரை கவனமாக நல்வழிப்படுத்துகிறார். ஒரு காட்சியில் ரித்திகா புடவையணிந்து கொண்டு வந்து காதலை வெளிப்படுத்தும் போது ‘உன்னைப் புடவையில் பார்க்க பிடிக்கவில்லை. ரிங்கில் நின்று ஃபைட் பண்ணும் போதுதான் பிடிச்சிருக்கு’ என்று அவர் சொல்வதிலிருந்து குத்துச்சண்டையைத் தவிர அவருடைய கவனம் வேறெதிலுமே இல்லை என்பதின் மூலம் அந்தக் கதாபாத்திரத்தின் வடிவமைப்பு மிக கவனமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. போலவே சகோதரிகளாக இருந்தாலும் காதல் என்று வந்து விடும் போது ஏற்படும் விலகலும் துரோகமும் கூட திரைக்கதையின் மையத்துடன் பொருந்துமாறு உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘அவளுக்கு மாத்திரம் ஏன் மாஸ்டர் ஸ்பெஷலா டிரையினிங் தர்றீங்க’ என்று ரித்திகாவின் சகோதரி மாதவனிடம் ஆவேசப்பட்டு அழும் காட்சி ஒன்று போதும், இயக்குநரின் திறமைக்கு சான்றாக அமைகிறது.

***

விளையாட்டு தொடர்பான அத்தனை இந்தியத் திரைப்படங்களின் காட்சிகளிலும் சாதி, மதம், வர்க்கம் என்று ஏதோ ஒருவகையில் அதன் அரசியல் நுழைந்து விடுவதைப் பார்க்கும் போது திரைக்கதையை கற்பனையாக உருவாக்கினாலும் இந்தியாவின் அவலமான யதார்த்தம் எப்படியோ உள்ளே பதிவாகி விடுவதைக் காண முடிகிறது.

ஷாருக்கானின் சக்தே இந்தியா திரைப்படத்தில் அவன் ஒரு இசுலாமியன் என்பதற்காகவே விளையாட்டில் அவன் செய்யும் தவறொன்றின் மீது மதச்சாயமும் அது சார்ந்த அரசியல் வசைகளும் பூசப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியில் ஆதிக்க சமூகத்தினர் மட்டுமே தொடர்ச்சியாக பெரும்பாலும் தேர்வு செய்வு செய்யப்படும் சாதிய அரசியலை ‘’ஜீவா’ திரைப்படம் பதிவு செய்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீது இடைநிலைச்சாதிகள் செய்யும் ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் ‘வெண்ணிலா கபடிக்குழு’ சொல்கிறது. பீகார், ஜார்கண்ட், மணிப்பூர் போன்ற புறக்கணிககப்பட்ட இந்திய மாநிலங்களிலிருந்து மிக அபூர்வமாக உருவாகி வரும் விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ள வேண்டிய உளவியல் தடைகளை “மேரிகோம்’ விவரிக்கிறது.

இத்திரைப்படத்திலும் விளையாட்டுத் துறையில் உள்ள அரசியலும் அதிகார துஷ்பிரயோகமும் துல்லியமாகப் பதிவாகியிருக்கிறது. பெண் விளையாட்டு வீரர்கள் மீதான பாலியல் சுரண்டலும்.

இந்தியா இத்தனை பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தாலும் ஏன் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்ல முடியவில்லை? என்கிற பொதுவான சலிப்பான புகாருக்கும் கேள்விக்குமான விடை இம்மாதிரியான அரசியல் ஆபாசங்களில் பொதிந்திருக்கிறது. தகுதியுள்ள விளையாட்டு வீரர்கள் புறக்கணிக்கப்படுவதும், இதிலுள்ள அரசியல் தடைகள் தாண்ட முடியாமல் விரக்தியுடன் விலகிப் போகிறவர்களும் சிபாரிசு காரணமாக உள்ளே நுழையும் பலவீனர்களாலும் நாம் தொடர்ந்து தோற்றுப் போய்க் கொண்டேயிருக்கிறோம்.  நம்முடைய தேசம் வெல்ல வேண்டும் என்கிற பொதுவான நோக்கத்தை விட தனிநபர்களின் சுயநலமான எண்ணங்கள் ஆதிக்கம் செய்வதே இம்மாதிரியான அவலத்திற்கு காரணம்.

***

குத்துச் சண்டை மாதிரியான ஆபத்தான விளையாட்டுப் போட்டியின் பின்னுள்ள வணிகச் சந்தையையும் (பூலோகம் திரைப்படம் இதைப் பற்றி பிரதானமாக உரையாடுகிறது) வீரர்களுக்கு இதில் ஏற்படும் உயிரிழப்பு உள்ளிட்ட ஆபத்துக்களையும் பற்றி இத்திரைப்படம் கவனத்தில் கொள்ளவேயில்லை. ஒரு வழக்கமான விளையாட்டு தொடர்பான திரைப்படத்தைப் போலவே ஒரு பரபரப்பான, பரவசமான வெற்றியுடன் பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்துவதோடு நின்று விடுகிறது.

குத்துச்சண்டை போன்ற ஆபத்தை விளைவிக்கும் விளையாட்டுக்கள் என்பது என்னதான் தற்காப்புக் கலை என்றும் மருத்துவர்கள் மற்றும் நடுவர்களின் கண்காணிப்பில் நிகழ்வது என்றாலும் மனித உடலை மீளாத ஆபத்திற்கு இட்டுச் செல்லும் தன்மை வாய்ந்தது. மனதை ஒருமுகப்படுத்துதல், உடலினை உறுதி செய்தல், எதிராளியின் அசைவிற்கேற்ப குறைந்த நேரத்தில் சமயோசிதமாக செயல்பட்டு தாக்குதல் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்ளும் விளையாட்டு என்பது போன்ற காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதிலுள்ள ஆபத்தை மழுப்ப முடியாது.

மறுபடியும் மில்லியன் டாலர் பேபி திரைப்படத்தைத்தான் மேற்கோள் காட்ட வேண்டியிருக்கிறது.

அத்திரைப்படம் இறுதிச் சுற்று போல வெற்றியடைந்த மகிழ்ச்சியுடன் நின்று விடாமல் சக போட்டியாளரின் வன்மம் காரணமாக போட்டி நின்ற பிறகும் தொடர்கிற தாக்குதல் காரணமாக அதில் வரும் வீராங்கனை மீள முடியாத ஆபத்தோடு படுத்த படுக்கையாகி விடுகிறார். அவர் படும் அவதியை காண சகிக்க முடியாத அவருடைய பயிற்சியாளர் ஒரு நிலையில் அவளுக்கு மரணத்தை அளிப்பதோடு குத்துச்சண்டை பயிற்சியளிப்பதையே நிறுத்தி விட்டு அங்கிருந்து விலகி எங்கோ மறைந்து விடுவதாக அத்திரைப்படம் முடிகிறது. குத்துச்சண்டையின் புகழ்பெற்ற வீரராக விளங்கிய முகம்மது அலி அதிலிருந்து விலகிய பிற்காலத்தில் ‘பார்கின்ஸன் நோயால்’ அவதிப்பட்டதை உதாரணமாக சொல்லலாம்.

குத்துச்சண்டை போன்ற ஆபத்தான விளையாட்டுகளுக்கு என்னதான் பல பெருமைகளுடன் கூடிய அரிதாரங்களைப் பூசினாலும் விளையாட்டு ஆர்வலர்கள் இதை மறுத்தாலும் அவைகளில் உள்ள ஆபத்தை மழுப்ப முடியாது. மனிதர்களுக்கு எச்சமயத்திலும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய தன்மை கொண்டது. மட்டுமல்லாமல் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை ஆக்ரோஷமாக தாக்கிக் கொள்வதை சுற்றியுள்ள மனிதர் கூட்டம் ரசிப்பதென்பது அவர்களின் ஆழ்மனதில் உறைந்துள்ள குரூரமான வன்முறை உணர்வுகளுக்கு தீனி போடுவது போல்தான் அமைந்துள்ளது. மன்னர்களும் சர்வாதிகாரிகளும் அரசாண்ட காலங்களில் பொழுதுபோக்குகள் அதிகமில்லாத சூழலில் மனிதரை மனிதர் மோத விட்டு ரசிக்கும் போக்கும் நாகரிக உலகிலும் தொடர்வது பொருத்தமில்லாதது போல் தோன்றுகிறது.

இறுதிச்சுற்று இது போன்ற விஷயங்களையும் திரைக்கதையினுள் உரையாடியிருந்தால் ஒரு முழுமையான திரைப்படமாக மலர்ந்திருக்கக்கூடுமோ என்று தோன்றுகிறது.

***

இந்தியாவில் பெண்களுக்கான குத்துச்சண்டை அறிமுகமான ஐந்தே வருடத்தில் அந்த இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது எத்தனை பேருக்கு தெரியும்? என்கிற கேள்வியுடன் இத்திரைப்படம் முடிகிறது.

பார்வையாளர்களை நோக்கி இயக்குநர் சுதா வைத்திருக்கும் 'நாக்அவுட்' குத்து அது.(அம்ருதா இதழில் பிரசுரமானது) 


suresh kannan

2 comments:

Santhosh said...

Directors name is Sudha Kongara.. It is incorectlin mentioned in the article. Nevertheless a nice article Suresh Kannan sir.

பிச்சைப்பாத்திரம் said...

Dear Santhosh, thanks. corrected.