Monday, December 23, 2019

The BFG - சோஃபியின் ராட்சத நண்பன்





ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் ஸ்பீல்பெர்க்கை நமக்குத் தெரியும். சுறாமீன்கள், டைனோசர்கள் போன்றவைகளை வைத்து பிரம்மாண்டமான திரைப்படங்களை உருவாக்கியவர். அவருடைய சமீபத்திய திரைப்படமான 'The BFG' -ம் ஒருவகையில் பிரம்மாண்டமான திரைப்படம்தான்.

ஆம். இதிலும் பெரிய பெரிய உருவங்கள் வருகின்றன. மனிதர்களை தின்னும் அரக்கர்கள் அவர்கள்.  அவர்களுக்கு இடையில் ஒரு நல்ல, வயதான விஸ்வரூபனும் இருக்கிறார். சோஃபி எனும் சிறுமிக்கும் அவருக்கும் இடையே நிகழும் நகைச்சுவையான, நெகிழ்வான சம்பவங்களை விவரிக்கும் ஜாலியான திரைப்படம் இது.


***


பத்து வயதான சோஃபி எனும் சிறுமி அநாதை விடுதியில் இருப்பவள். தூக்கம் வராத குறைபாடுள்ள அவள் ஒரு நாள் நள்ளிரவில் ஜன்னலின் வழியே சாலையில் ஒரு பிரம்மாண்டமான உருவம் உலவுவதைப் பார்த்து திகைத்துப் போகிறாள். தன்னைப் பார்த்து விட்டதால் 'இவள் ஊர் முழுக்க சொல்லி விடுவாள்' என்கிற காரணத்திற்காக அவளை  தன்னுடைய இடத்திற்கு தூக்கிச் செல்கிறது அந்த உருவம். கடல், மலையைக் கடந்த, பிரம்மாண்டமான அரக்கர்கள் வாழும் பிரதேசம் அது. அந்தப் பிரதேசத்திற்கேயுரிய விநோதமான பழக்க, வழக்கங்கள்.

சோஃபி மிகவும் பயந்து போய் விடுகிறாள். ஆனால் அவளைத் தூக்கிச் சென்ற உருவம் ஒரு வயதான கிழம். அவளிடம் சகஜமாக உரையாடுகிறது. 'நீ  இனி வாழ்நாள் முழுவதும் என்னிடம் இருக்க வேண்டும்' என்கிறது.  சோஃபிக்கு இன்னமும் பயம் தெளியாவிட்டாலும், அநாதை விடுதியில் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த அவளுக்கு இந்த  விநோதமான சூழல் கவர்கிறது. கிழத்துடன் வம்பளக்க ஆரம்பித்து விடுகிறாள். வார்த்தைகளை தப்பும் தவறுமாக உச்சரிக்கும் கிழத்தைக் கண்டு  சோஃபிக்கு சிரிப்பு வருகிறது.

ஆனால் அந்தப் பிரதேசத்தில் 'மனிதர்களை அப்படியே  விழுங்கி விடும் பெரிய பூதங்கள் இருக்கின்றன' என்று எச்சரிக்கிறார் கிழவர். 'அவர்களிடம் மாட்டிக் கொள்ளாதே'

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே கிழவரின் வீட்டிற்குள் ஒரு ராட்சச உருவம் உள்ளே நுழைகிறது. கிழவரை விடவும் மிகப் பிரம்மாண்டமாக இருக்கிறது அது.  மனித வாடையை முகர்ந்து விட்டு எங்கே என்று தேடுகிறது. சோஃபியை கிழவர் சாமர்த்தியமாக உயிர் தப்ப வைக்கிறார்.

***

கிழவர் வெளியே கிளம்புகிறார். 'எங்கே?' என்று கேட்கிறாள் சோஃபி. விதம் விதமான கனவுகளை பாட்டில்களில் பிடித்து சேகரிப்பது கிழவரின் பொழுதுபோக்கு. நீல வண்ணம் என்றால் சந்தோஷமான கனவுகள். சிவப்பு நிறம் என்றால் பயமுறுத்தும், மோசமான கனவுகள். 'தானும் வருவேன்' என்று அடம்பிடிக்கிறாள் சோஃபி. 'வெளியே ராட்சசர்கள் இருப்பார்கள்' என்று எச்சரிக்கிறார் கிழவர். சோஃபி பிடிவாதம் பிடிப்பதால் அழைத்துச் செல்கிறார்.

மனித வாசனையை உணர்ந்து ராட்சசர்கள் விழித்துக் கொண்டு சோஃபியை தேடுகிறார்கள். அவர்களிடமிருந்து இருவரும் எப்படியோ தப்புகிறார்கள். விதம் விதமான கனவுகளைக் கண்டு மகிழ்கிறாள் சோஃபி. அவற்றுடன் துரத்தி விளையாடுகிறாள்.

அந்தக் கனவுகளை ஊருக்குள் எடுத்துச் சென்று மனிதர்களுக்குள் செலுத்துவது கிழவரின் வேலைகளுள் ஒன்று. 'சிறுவர்களுக்கு நல்ல கனவுகளை மட்டும் செலுத்து' என்கிறாள் சோஃபி. கிழவரும் அப்படியே செய்கிறார்.


சோஃபியை ஊருக்குள்ளே விட்டு விட்டு கிழவர் மறைகிறார். ஆனால் அவருடன் மறுபடியும் ராட்சச பிரதேசத்திற்கு செல்ல வேண்டுமென்று சோஃபி துடிக்கிறாள். கிழவர் தன்னை மறைந்திருந்து கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பது அவளுக்குத் தெரியும். எனவே மாடியின் மேலேயிருந்து கீழே விழுகிறாள். கிழவரின் கை  அவளைத் தாங்கிப் பிடிக்கிறது.

'இதற்கு முன் உன்னைப் போலவே என்னை பார்த்து விட்ட ஒரு சிறுவனை எங்கள் பிரதேசத்திற்கு தூக்கிச் சென்றேன். பாவி, ராட்சசர்கள், அவனைத் தின்று விட்டார்கள். உனக்கும் அந்தக் கதி வர வேண்டாம்' என்கிறார் கிழவர். சோஃபி பிடிவாதம் பிடிக்க தன்னுடன் அழைத்துச் செல்கிறாள்.


***

சோஃபியின் போர்வை தவறுதலாக ராட்சசர்களிடம் சிக்கிக் கொள்கிறது. அதிலிருக்கும் வாசனையை  வைத்து கிழவர், சிறுமியை வீட்டிற்குள் ஒளித்து வைத்திருக்கிறார் என்று அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். கிழவரின் வீட்டிற்குள் நுழைந்து எல்லாவற்றையும்  கலைத்துப் போட்டு தேடுகிறார்கள். பாட்டில்கள் உள்ள கனவுகள் உடைந்து சிதறுகின்றன. அவர்களை விட உருவத்தில் சிறியதாக இருக்கும் கிழவரால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. சில பல போராட்டங்களுக்குப் பிறகு இருவரும் உயிர் தப்புகிறார்கள்.


தன்னுடைய புத்திசாலித்தனத்தை வைத்து கிழவரை தப்ப வைக்க வேண்டும்,  ராட்சசர்களை தண்டிக்க வேண்டும் என்று சோஃபி திட்டமிடுகிறாள். அதன்படி அந்த ஊரின் ராணியின் கனவில் ஒரு பயங்கரமான கனவை கிழவரின் மூலம் வரவழைக்கிறாள். ராட்சசர்களின் கொடுமை பற்றி ராணியால் உணர முடிகிறது. பின்னர் கிழவரும் சோஃபியும் ராணியிடம் சென்று தங்களின் பிரச்சினையைச் சொல்கிறார்கள்.

தன்னிடமுள்ள படைகளை அனுப்புகிறாள் ராணி. அவர்கள் ராட்சசர்களையெல்லாம் பிடித்து கடலில் போட்டு விடுகிறார்கள். கிழவர் தன்னுடைய பிரதேசத்தில் ஜாலியாக இருக்கிறார். தன்னை  அவர் எப்போதும் கவனித்துக் கொண்டிருப்பார் என்கிற நினைவில் சோஃபி சந்தோஷமடையும் விஷயத்தோடு படம் முடிகிறது.

***

கிழவரின் வீடு, வண்ண வண்ண கனவுகள், ராட்சசர்களின் அட்டகாசங்கள் போன்ற காட்சிகளும் சம்பவங்களும் கிராஃபிக்ஸில் திறமையாக உருவாக்கப்பட்டுள்ளன. ராணியின் உபசரிப்பில் கிழவர் விருந்துண்ணும் காட்சிகள் சிரிப்பை வரவழைப்பவை.

ஒரு ஜாலியான, வண்ணமயமான  ஃபேண்டஸி திரைப்படம் - The BFG. 



(SRV டைம்ஸில் பிரசுரமானது) 


suresh kannan

No comments: