Thursday, June 23, 2022

பெங்களூர் இரவிச்சந்திரன் சிறுகதைகள் - மீள்பிரசுரம் - முன்னுரை


பெங்களூர் இரவிச்சந்திரனின் சிறுகதைகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு தொகுக்ககப்பட்டு ஒரு புதிய பதிப்பாக வெளிவந்திருக்கிறது. அந்த நூலுக்கு நான் எழுதிய முன்னுரை இது.

oOo


நண்பர்களே….

எழுத்தாளர் இரவிச்சந்திரனை அறிந்து கொள்ளுங்கள். பெங்களூர் இரவிச்சந்திரன் என்றால், எண்பதுகளில் இலக்கியம் வாசித்த அன்பர்கள் சிலருக்கு சட்டென்று ஞாபகம் வரக்கூடும். அவர்களின் நினைவுகளில் இரவிச்சந்திரனின் பெயர் இன்னமும் கூட மங்காமல் பசுமையாக இருக்கக்கூடும்.

மற்றபடி தமிழ் நவீன இலக்கிய எழுத்தாளர்களின் வரிசையில், காலத்தில் புதைந்து போன, அவசியம் மீட்டெடுத்தே ஆக வேண்டிய, சமகால வாசகர்களால் அறிந்து கொள்ளப்பட வேண்டிய ஏராளமான நல்ல எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் இரவிச்சந்திரன் முக்கியமானவர். ‘மிடில் சினிமா’ மாதிரி, வெகுசன எழுத்தின் சுவாரசியமும் இலக்கியத்தின் மெல்லிய ஆர்வமும் கொண்ட வசீகரமான கலவைதான் இரவிச்சந்திரனின் எழுத்து

எழுத்தாளர் சுஜாதாவின் பாதிப்பால் எழுத வந்த இளம் எழுத்தாளர்கள், தமிழ்நாட்டில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேராவது இருப்பார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலோனோர், சுஜாதாவின் எழுத்துப் பாணியை தேசலாக நகலெடுக்க முயன்று அந்த ஸ்டைலில் சிக்கி தேங்கி மறைந்து போயிருப்பார்கள். தனக்குப் பிடித்த ஆதர்சமான எழுத்தாளனை பின்பற்றுவது வேறு; அவனை நகலெடுக்க முயன்று தொலைந்து போவது வேறு. இந்த நோக்கில் பார்த்தால் சுஜாதாவின் பாதிப்பால் எழுத வந்தாலும் தனக்கென்று ஒரு பிரத்யேகமான பாதையை கண்டுபிடித்து அமைத்துக் கொண்டவர் இரவிச்சந்திரன். சுஜாதாவின் ஏறத்தாழ அதே துள்ளலான நடையும், பாய்ச்சலும், வேகமும், சுவாரசியமும் இருந்தாலும் இரவிச்சந்திரனின் எழுத்து வேறு விதமான ருசியைத் தரக்கூடியது.

சுஜாதாவின் நாவல்களில் வரும் ‘கணேஷ் மற்றும் வசந்த்’ பாத்திரங்களைப் பற்றி நமக்குத் தெரியும். சுஜாதாவிற்குள் ஒளிந்துள்ள இரண்டு எதிர்முனை ஆளுமைகளின் பிரதிபலிப்பு அது. கணேஷ் புத்திசாலி; விவேகமானவர். கணேஷிற்கு நிகராக வசந்த்தும் புத்திசாலிதான். ஆனால் தனக்கேயுரிய குறும்புகளைக் கொண்டவன். “டேய் சும்மா இர்ரா’ என்று கணேஷால் அவ்வப்போது அதட்டப்படும் அளவிற்கு பெண்களைக் கிண்டலடிப்பவன்; பின்தொடர்பவன். வசந்த் என்கிற இந்தப் புனைவுப்பாத்திரம் ஒருவேளை சிறுகதை எழுத வந்தால் அது இரவிச்சந்திரனைப் போல் இருக்குமோ என்று எனக்குள் தோன்றுவதுண்டு. அந்த அளவிற்கு துள்ளலான நகைச்சுவை இவரது எழுத்தில் உத்தரவாதமாக இருக்கும்.

oOo

இரவிச்சந்திரனின் ஊர் மல்லேஸ்வரம். தாய்மொழி தெலுங்கு. என்றாலும் பல தமிழர்களே வெட்கப்படும் அளவிற்கு இந்த மொழியை அத்தனை லாகவமாகப் பயன்படுத்தியவர். ‘தமிழை கற்றுத் தந்தது கவிஞர் புவியரசு’ என்று தன்னை கவிஞரின் மாணவனாக சொல்லிக் கொள்ளும் இரவிச்சந்திரன், ‘தமிழைப் பழக்கியது சுஜாதா’ என்கிறார். ‘இந்தத் தொகுப்பு மட்டுமல்ல, இனி வரவிருக்கும் அனைத்துத் தொகுப்புகளும் சுஜாதாவிற்கு சமர்ப்பணம்” என்று ஒரு முன்னுரையில் விசுவாசமாக எழுதுகிறார். அத்தனை உயர்வான நட்பையும் மரியாதையையும் சுஜாதா மீது வைத்திருக்கிறார்.

நானறிந்த வரை, இதுவரை வெளிவந்திருக்கும் இரவிச்சந்திரனின் சிறுகதைத் தொகுப்புகள் நான்கு. இந்திராகாந்தியின் இரண்டாவது முகம், சிந்து சமவெளி நாகரிகம், இந்திய பாஸ்போர்ட், இனி ஒரு விதி செய்வோம். இதில் முதல் இரண்டு தொகுப்புகளின் அனைத்துக் கதைகளையும் இந்த நூலில் நீங்கள் வாசிக்க முடியும். இது தவிர, ‘இன்று கொலை நாளை விலை’ என்றொரு நாவலையும் இரவிச்சந்திரன் எழுதியிருப்பதாக சொல்லப்படுகிறது.

‘பிரபலம் தரும் போதைக்காகத்தான் எழுதுகிறேன். தமிழில் சிறுகதைகள், நாவல்கள் இன்னமும் குப்பையாகத்தான் இருக்கின்றன. அதற்கு என் எழுத்தே சாட்சி’ என்று தன்னைப் பற்றி இரவிச்சந்திரன் சுயபரிசீல நேர்மையுடன் சொல்லிக் கொள்கிறார். இன்னொரு பக்கம் அவரே ‘எதுவெல்லாம் இரண்டாம் முறை வாசிக்கத் தூண்டுகிறதோ, அவையெல்லாம் இலக்கியம்’ என்றும் சொல்கிறார். பிந்தைய அளவுகோலின்படி இரவிச்சந்திரனின் சில சிறுகதைகள் உன்னதமானவை என்று சொல்ல முடியும். எண்பதுகளில் எழுதப்பட்ட இந்தச் சிறுகதைகளை இன்றைய தேதியில் வாசித்தாலும் அத்தனை இளமையாகவும் புத்துணர்ச்சி தருவதாகவும் இருக்கிறது. வாசித்த பிறகு நீங்களும் என்னுடன் உடன்படுவீர்கள் என்கிற நம்பிக்கையுண்டு.

oOo

‘மத்தியதர வாழ்க்கையின் பிரச்சினைகளைப் பற்றி விதம் விதமாக எழுதிப் பார்க்கிறேன்’ என்று ஆசிரியர் சொல்லிக் கொண்டாலும், இந்த நூலில் உள்ள இரவிச்சந்திரனின் கதைகள் வெவ்வேறு வண்ணங்களில், விதங்களில், பாணிகளில் இருப்பது சுவாரசியமூட்டுவதாக இருக்கிறது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைப் பற்றிய பல்வேறு பிம்பங்களை நாம் அறிந்திருந்தாலும் சட்டென்று நினைவுக்கு வருவது ‘எமர்ஜென்சி’ என்கிற கசப்பான காலக்கட்டம்தான்.  என்றாலும் அந்த இரும்புப் பெண்மணிக்குள் பூ மாதிரி இருக்கிற இன்னொரு பிம்பம், ‘இந்திரா காந்தியின் இரண்டாவது முகம்’ என்கிற சிறுகதையில் சிறப்பாக பதிவாகியிருக்கிறது. கணவரை இழந்த ஒரு பெண், நாட்டின்  பிரதமரை சந்திக்கச் செல்லும் சூழலை மிகுந்த நம்பகத்தன்மையுடன் உருவாக்கியிருக்கிறார் இரவிச்சந்திரன். கதையின் இறுதி வரியை வாசிக்கும் போது உங்கள் மனதில் தன்னிச்சையான சலனமும் நெகிழ்வும் ஏற்படக்கூடும்.

ஒரு வளரிளம் சிறுவனின் சாகசங்கள், விடலைக் காதல்கள் என்கிற வகையில் சில சிறுகதைகள் சுமாராக பயணிக்கும் போது அதன் எதிர்முனையில் ‘சிந்து வெளி நாகரிகம்’ என்கிற கதை முற்றிலும் வேறு வகையிலான பின்னணியில் இயங்கி ஆச்சரியமூட்டுகிறது. ‘கோதை பிறந்த ஊர்’ என்பது இன்னொரு வசீகரமான கதை. ‘சந்திரலேகா’ நிச்சயம் பெண்ணியவாதிகளுக்கு ஆட்சேபம் ஏற்படுத்தக்கூடிய விவகாரமான கதை. அப்துல்ரகுமானின் புதுக்கவிதையுடன் துவங்கும் ‘சுயம்வரம்’ கதையில் நிச்சயம் ஒரு அட்டகாசமான மின்சாரம் இருக்கிறது.

தமிழ் ஈழப் பிரச்சினை என்பது எண்பதுகளில் கொதிநிலையுடன் இருந்த ஒரு துயரம். அந்தத் துயர ஆவேசத்தில் தமிழகத் தமிழர்களும் உணர்வுபூர்வமாக இணைந்திருந்தார்கள். இதன் ஆத்மார்த்தமான பிரதிபலிப்பை ‘காத்திருந்தார்கள்’ என்று ஒற்றை வார்த்தையுடன் துவங்கும் ‘சொந்தச் சகோதரர்கள்’ என்கிற கதையில் காண முடியும். ‘முற்றிலும் இந்திய அரசுக்குச் சொந்தமானது’ என்கிற கதையில் நாம் பலமுறை பழகியிருக்கும் ஒரு அழகான துரோகம் வெளிப்படுகிறது.

சுஜாதா சொன்னது மாதிரி இரவிச்சந்திரனிடம் அடுத்த வார்த்தையில் அனைத்தையும் சொல்லி விட வேண்டும் என்கிற துடிப்பும் பாய்ச்சலும் இருக்கிறது. இந்த மாயத்தை அவரது எழுத்தால் அநாயசமாக நிகழ்த்தி விட முடிகிறது. இதுவே இரவிச்சந்திரனின் ஆதாரமான பலம். இளம் எழுத்தாளர்களுக்கு அவசியப்படுவதும் கூட.

oOo

எனக்கு இரவிச்சந்திரன் அறிமுகம் ஆகியது, சுஜாதாவின் வாசகர் ஒருவரின் மூலம். சுஜாதாவைப் பற்றி அவரிடம் சிலாகித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது ‘எனில் இரவிச்சந்திரனை வாசித்திருக்கிறீர்களா? உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்’ என்று இந்திய பாஸ்போர்ட் தொகுப்பை கையில் திணித்தார். வாசித்தேன். எனக்கு உடனே உடனே பிடித்து விட்டது. (இப்படி இரண்டு ‘உடனே’வை போடுவது இரவிச்சந்திரனின் ஸ்டைல்).  ‘இந்தப் பையனிடம் ஒரு ஸ்பார்க் இருக்கு’ என்று எங்கோ சுஜாதா குறிப்பிட்ட நினைவும் இருக்கிறது. சுஜாதா அடையாளம் காட்டிய பெரும்பாலோனோர் சோடை போனதில்லை. அதற்கான தடயத்தை இரவிச்சந்திரனிடம் அழுத்தமாக காண முடிகிறது.

2006-ம் ஆண்டு என் வலைப்பதிவில் இரவிச்சந்திரனைப் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகத்தை எழுதி, அவருடைய அற்புதமான சிறுகதையான ‘சமூகம் என்பது கலகக்காரர்கள் மட்டுமே’ என்கிற படைப்பை மெனக்கெட்டு தட்டச்சி இட்டேன். அதை அப்போது நூறு பேர் கவனித்திருந்தால் என் அதிர்ஷ்டம். (கவனிக்க, வாசித்திருந்தால் என்று எழுதவில்லை). பிறகு நினைவு வரும் போதெல்லாம் இவரைப் பற்றி இணையத்தில் எழுதிக் கொண்டிருப்பேன்.

இன்றைக்கும் கூட இணையத்தில் இவரைப் பற்றி தேடிப் பார்த்தால் சொற்பமான குறிப்புகளே கிடைக்கும். ஜீவானந்தன், ஆர்.பி.ராஜநாயஹம் உள்ளிட்ட சிலர்தான் இரவிச்சந்திரனைப் பற்றிய குறிப்புகளை ஆங்காங்கே எழுதி வைத்திருக்கிறார்கள். மற்றபடி தமிழ் கூறும் நல்லுலகம் இவரை ஒட்டுமொத்தமாக மறந்து போனதாகவே தோன்றுகிறது.  

க்ளப்ஹவுஸ் என்கிற App-ல் ‘சிறுகதை நேரம்’ என்கிற அறையில், செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான ஃபாத்திமா பாபு, தினமும் ஒரு சிறுகதையை வாசித்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக இந்த இலக்கியப் பணியை அவர் செய்து வருகிறார்.  அந்த அறையில் ‘சமூகம் என்பது கலகக்காரர்கள் மட்டுமே’ சிறுகதையை பரிந்துரை செய்து வாசிக்க வைத்தேன். அதைப் பற்றிய கலந்துரையாடலும் பிறகு நடைபெற்றது. இப்படியாக இரவிச்சந்திரனை மீண்டும் சமீபத்தில் உயிர்பெற வைத்தேன்.

அதைத் தொடர்ந்து, ‘இரவிச்சந்திரனின் சிறுகதைகள் தொகுப்பாக வந்தால் நன்றாக இருக்கும்’ என்று சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ஒரு குறிப்பு எழுதி வைத்தேன். அது பதிப்பாளர் அசோக் சாய் ரமணா தம்புராஜின் கண்களில் பட்டது என்னுடைய அதிர்ஷ்டம். மளமளவென வேலைகள் ஆரம்பமாகின. என்ன செய்தாரோ, தெரியாது. மின்னல் வேகத்தில் செயல்பட்டு இரவிச்சந்திரனின் இரண்டு தொகுப்புகளை மீள்பிரசுரம் காண்பதற்கு ஏற்பாடு செய்து விட்டார். புதைந்து போயிருக்கும் நல்ல எழுத்துக்களை வெளிக்கொணர வேண்டும் என்கிற அவரின் தீராத ஆர்வம்தான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். அதற்காக அவருக்கு நன்றி. சிறப்பாக வடிவமைத்திருக்கும் நண்பர் பொன்.வாசுதேவனுக்கும் நன்றி.

oOo

‘என் புத்தகங்கள் நூறு வருஷம் வரை முக்கி முனகி தாக்குப் பிடிக்கும் என்பது என் கணிப்பு’ என்று ஒரு முன்னுரையில் எழுதியிருக்கிறார் இரவிச்சந்திரன். ஆனால் முப்பது வருடங்களை கடப்பதற்கு முன்பாகவே அவை மங்கிப் போய் விட்டன. சினிமாவை சுவாசிக்கும் தமிழ்நாடு போன்ற பிரதேசங்களில் இப்படி நடக்காவிட்டால்தான் அது ஆச்சரியம். இப்படி காலத்தில் புதைந்து போன எத்தனையோ நல்ல எழுத்தாளர்கள் தமிழில் உள்ளார்கள். இரவிச்சந்திரனுக்கு அத்தகைய விபத்து நடக்காமல் ஜெய்ரிகி பதிப்பகம் காப்பாற்றியிருக்கிறது.

இந்தக் கதைகளை வாசியுங்கள். இரவிச்சந்திரனின் இதர எழுத்துக்களையும் தேடி வாசிக்க வேண்டும் என்கிற ஆவல் உங்களுக்குள் ஏற்படும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு. இந்தத் தொகுதியை வாசிக்கப் போகும் உங்களுக்கு என் நன்றியும் அன்பும்.

 
வெப்பம் தகிக்கும் சென்னையின் ஒரு மாலை

28 மே 2022                                                                                  

 சுரேஷ் கண்ணன்