Wednesday, December 15, 2004

அவள் அப்படித்தான் - திரைப்படத்தைப் பற்றிய என் பார்வை

சில மாதங்களுக்கு முன்னால் நண்பர் ரஜினிராம்கி 'மூன்று முடிச்சு' போன்ற பழைய படங்களை தூசுதட்டி எடுத்து அவருடைய பார்வையை எழுத ஆரம்பித்தார். அப்போதே இந்தப்படத்தைப் பற்றிய பேச்சு வந்த போது எழுத நினைத்ததை இப்போது எழுதுகிறேன். மேலும் வண்ணநிலவனைப் பற்றிய கடந்த பதிவிலும் இந்தப் படத்தைப் பற்றி எழுதுகிறேன் என்று குறிப்பிட்டு இருந்தேன். இந்தப்படத்தை சன் டி.வியில் இரண்டொரு முறை பார்த்திருந்ததாலும் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டபடியாலும் நினைவிலிருப்பதை எழுதுகிறேன்.

() () ()

எனக்குப் பிடித்த தமிழ்த் திரைப்படங்களை மிகவும் வடிகட்டி பட்டியலிட்டால் அதில் இந்தப்படம் நிச்சயமிருக்கும். ருத்ரைய்யா என்பவர் இயக்கிய படமிது. இதற்கு முன்னால் 'கிராமத்து அத்தியாயம்' என்கிற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். என்னை அவ்வளவாக கவராத அந்தப்படத்தில், கமலின் சகோதரர் சந்திராசன் நடித்திருக்கிறார்.

அவள் அப்படித்தான் ஒரு அபூர்வமான படம். இந்தப் படத்தின் மையக்களன் மிக நுண்ணியமானது. தன்னுடன் பழகும் ஆண்களின் தொடர்ச்சியான துரோகத்தினால் பாதிக்கப்பட்டு எல்லா ஆண்களின் மீதும் வெறுப்பை உமிழும் ஒரு பெண், தன்னை அணுகும் ஒரு யோக்கியமான ஆணையும் அவ்வாறே தன் ஒவ்வாத பார்வையினால் ஒதுக்கி பின்னர் தன் தவறை உணருகின்ற கதை. இதை இயக்குநர் சொல்லியிருக்கும் விதம் நம்மை அயர வைக்கிறது.

இந்தக் கதாபாத்திரத்திற்கு அப்போதிருந்த கதாநாயகிகளில் ஸ்ரீப்ரியாவைத் தவிர வேறு யாரையும் பொருத்திப் பார்க்கமுடியவில்லை. வணிகபடங்களில் கவர்ச்சியாக வந்து போகும் இவர், இந்தப்படத்தில் இயல்பான தன் நடிப்பால் அந்த வேடத்தை நிறைவாக செய்திருந்தார். மனோரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் மூர்க்கத்தனமாக தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றிருந்தார்.

கமல்தான் இந்தப் பாத்திரத்திற்கு ஸ்ரீப்ரியாதான் சரியாக இருக்கும் என்று இயக்குநருக்கு சிபாரிசு செய்ததாக அவரது பேட்டிகளின் மூலம் அறிகிறேன். ஸ்ரீப்ரியாவும் இதற்காக கமலுக்கு தன் இன்னொரு பேட்டியில் நன்றி தெரிவித்திருந்தார்.

() () ()

கமலுக்கு ஒரு ஜென்டில்மேன் கதாபாத்திரம். அந்த பெண்ணின் இறந்தகால நிகழ்வுகளை அவளின் மூலமே அறிந்தபின்னால் அவள் மீது அனுதாபம் கலந்த தன் காதலை வெளிப்படுத்துகிறார். ஆனால் ஒரு சிக்கலான சூழ்நிலையில் ப்ரியா அதை மூர்க்கமாக நிராகரிக்க, மனம் உடைந்துபோய் தன் பெற்றோர் நிச்சயித்த பெண்ணை (இதயம் நல்லெண்ணெய் சித்ரா) திருமணம் செய்து கொள்கிறார்.

ப்ரியாவிற்கு மேலதிகாரியாகவும், கமலுக்கு நண்பராக வரும் ரஜினிகாந்தின் பாத்திரம் மிக சுவாரசியமானது. நெற்றியில் விபூதி பட்டையும், கையில் மது கிளாஸீமாக "நான் என்ன சொல்றேன் மச்சான்" என்று வரும் காட்சிகள் களை கட்டுகிறது. பெண்களின் மீது ஒரு ஆணாக்கியவாதியின் பார்வையை வைத்திருக்கும் இவர் பெண்களை வெறும் போகப் பொருகளாக மட்டுமே பார்க்கிறார்.

இவ்வளவு திறமையுள்ள நடிகர், சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்துடன் வணிக
சூழலில் சிக்கிக் கொண்டது துரதிர்ஷவசமானது.

இந்தப்படங்களின் வசனகர்த்தாக்களில் ஒருவர் எழுத்தாளர் வண்ணநிலவன் என அறிகிறேன். பெரும்பான்மையான இடங்களில் வசனங்கள் புது சவரக்கத்தி போல் மிக கூர்மையாக இருக்கிறது.

நான் மிகவும் ரசித்த ஒரு காட்சியை விளக்க முயல்கிறேன்.

கமல் தன் மீது அபிமானம் காட்டுவதை வெறுக்கும் ஸ்ரீப்ரியா, அவரை வெறுப்பேற்றும் விதமாக ரஜினியுடன் ஒரு பார்ட்டிக்கு செல்வார். அங்கே இருவரும் தனியாக இருக்கும் சூழ்நிலையில், ரஜினி தவறாக அவரை அணுக முயல, ரஜினியின் கன்னத்தில் அறைந்துவிடுவார்.

மறுநாள் ஸ்ரீப்ரியாவை சந்திக்கும் ரஜினி முந்தின நாள் நடந்த நிகழ்வைப்பற்றிய எந்தவித சலனமும் இல்லாமல் உரையாடத்துவங்க, திகைத்துப் போய் நிற்கும் ஸ்ரீப்ரியாவிடம் இவ்வாறு கூறுவார்.

"ஒரு ஆம்பளை, தனியா இருக்கற பொண்ணு கிட்ட எப்படி நடந்துகனமோ அப்படித்தான் நான் நடந்துகிட்டேன். ஒரு துணிச்சலான பொம்பள எப்படி நடந்துகனமோ அப்படித்தான் நீயும் நடந்துகிட்ட. லீவ் இட்."

() () ()

இளையராஜாவின் இசைக்கு இதில் பெரும்பங்கு உண்டு. வித்தியாசமான படமென்றாலே ராஜாவிற்கு பயங்கர மூடு வந்துவிடுமோ என்னமோ. மனிதர் பின்னியிருந்தார்.

உறவுகள் தொடர்கதை ....
பன்னீர் புஷ்பங்களே.... (கமலின் குரலில்)
அங்குமிங்கும் பாதை உண்டு, இதில் நீ எந்தப்பக்கம்...

போன்ற பாடல்கள் ராஜாவின் சிறந்த இசை வெளிப்பாடுகளில் சில.
வழக்கமான இரண்டரை மணி நேர படங்களோடு ஒப்பிடுகையில் இதன் கால அளவு சிறிது குறைவானது.

மீண்டுமொருமுறை பார்த்தால் இன்னும் சிறப்பாக எழுத இயலும் என நினைக்கிறேன்.

() () ()

இந்தப்படத்தின் இயக்குநர் ருத்ரைய்யா, சமீபத்தில் ஆனந்தவிகடன் இதழுக்கு பேட்டி அளித்திருந்தார்.

'சரியான கதை கிடைக்கவில்லை' என்று இப்போதைய தமிழ் இயக்குநர்கள் கூறுகிறார்களே? என்கிற கேள்விக்கு இப்படியாக பதிலளித்திருந்தார்.

'சிவகாசியில் இருந்து கொண்டு, தீப்பெட்டியை தேடுபவர்கள் இவர்கள்'

suresh kannan

23 comments:

Jayaprakash Sampath said...

நல்ல படம். டாகுமெண்டரி படம் எடுக்கிற கதாநாயகன் கேரக்டர் எல்லாம் அப்போது தமிழுக்குப் புதுசு ( இப்ப மட்டும் என்னங்கறீங்களா? :-)). இந்தப் படத்திலேயே ரொம்ப பிடித்த காரக்டர், ரஜினிதான். mcp என்றால் எப்படி இருப்பார் என்பதை அப்படியே அச்சாகப் படம் பிடித்துக் காட்டியிருப்பார். அப்புறம், அது நல்லெண்ணய் நாயகி இல்லை. சரிதா.

PKS said...

"Aathu Metula oru paatu ketkuthu..." paatu kiramaththu aththiyaayam padathil thaaney? When studying in Film Institute (For a student movie I think) Ruthraiah has also directed a story of Jayakanthan. I could not remember now what story it was. Thanks and regards, PK Sivakumar

rajkumar said...

Dear Suresh,

after reading your mounaragam review, i was planning to write about Aval appadithan.

But u wrote first- Good.

"Angumingum pathai undu" song is not from this movie- it is from Avargal.

The songs in this movie are

1. Uruvugal thodarkathai
2. Valkai oodam sella
3. Panner puspangale.

Saritha acted as Kamal's wife in the climax scene. Nalennai chitra acted as Yong age sripriya.

Anbudan

Rajkumar

Mookku Sundar said...

கல்லூரிக் காலத்தில், ஒரு நாள் நண்பனின் அம்மா/அப்பா ஊருக்குப் போயிருந்த போது இந்தப் படத்தை நண்பர்களோடு பார்த்தேன். அப்போது சரியாக புரியவில்லை. மற்றொருமுறை பார்க்க வேண்டும். சராசரியான படம் இல்லை என்பது மட்டும் தெரியும்.

அதற்குப் பின் ருத்ரையா என்ன ஆனார்..?? வேறு படங்கள் எடுத்தாரா..??

ரவியா said...

ஒரு தடவை பார்த்திருக்கேன்...இப் படத்தை ரொம்ப நாளா தேடிக்கிட்ருக்கேன் ! :((
டி.வி.டி யில் கிடைக்குமா?

Anonymous said...

Dear Suresh Kannan,

All your postings are good. i used to read blog regulary. keep it up.

Senthil

Anonymous said...

Your write-up made me to see this movie immediately. where can i find cd's of this movie?

ThanksRama Prabhakaran

இராதாகிருஷ்ணன் said...

"இவ்வளவு திறமையுள்ள நடிகர், சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்துடன் வணிக சூழலில் சிக்கிக் கொண்டது துரதிர்ஷவசமானது." - சரியாகச் சொன்னீர்கள். பலரும் இப்படித்தான் வீணாகப் போகிறார்கள்.

பிச்சைப்பாத்திரம் said...

தவறுகளை திருத்திய நண்பர்களுக்கு நன்றி. ராஜபார்வை படத்தையும் இதையும் குழப்பிக் கொண்டேன். அவர்கள் படத்தின் பாடலையும் இதில் வருவதாக தவறுதலாக எழுதி விட்டே

ராஜ்குமார்: நான் எழுதியதாலேயே நீங்கள் எழுத வேண்டாமென்பதில்லை. நீங்களும் எழுதுங்கள். உங்கள் பார்வையையும் அறிய ஆவலாக இருக்கிறேன்.

ஜெ. ராம்கி said...

Excellent Review Suresh! Real Birthday gift 4 us!

ஜெ. ராம்கி said...

Excellent Review Suresh! Real Birthday gift 4 us!

Badri Seshadri said...

சுரேஷ்: இப்பொழுது பின்னூட்டம் கொடுப்பது வசதியாக இருக்கும்!

Anonymous said...

பத்ரி,

நன்றிகள் பல.

சுரேஷ் கண்ணன்

By: suresh kannan

பிச்சைப்பாத்திரம் said...

டெச்ட் ரெப்ல்ய்

Anonymous said...

ͧÉ,
ôÇ¡ì̸Ǣø Á¢¸×õ ¿¢¾¡ÉÁ¡¸, Áɾ¢ø ÀÎŨ¾ «ÅºÃôÀ¼¡Áø ͸Á¡¸ Ä¢òÐ ±Ø¾ÓÊÔõ ±ýÚ ¿¢¨É츢§Èý. ¾í¸û ÁüÈ À¾¢×¸û ±øÄ¡Åü¨ÈÔõ ´ù¦Å¡ýÈ¡¸ ÀÊòÐ ÅÕ¸¢§Èý.

Áɾ¢ø À𼨾 ¾¢Èó¾ Òò¾¸Á¡¸ ¦ÅÇ¢ôÀÎòÐõ ¿£í¸û ¾í¸ÙìÌ À¢Êò¾ ±¨¾Â¡ÅÐ ´ý¨È ¯¾¡Ã½ò¾¢üÌ þó¾ À¨Æ ¿øÄ ¾¢¨ÃôÀ¼ Å¢Á÷ºÉõ §À¡ýÈ ´ü¨È ¦À¡Õ¨Ç ±ÎòÐ ¦¸¡ñÎ ¦¾¡¼Ã¡¸ ±ØÐí¸§Çý...

ÀÊì¸×õ ±Ø¾×õ ÍÅú¢ÂÁ¡¸ þÕì̧Á....

«ýÒ¼ý
‚¸¡óò

By: k_sreekanth_in@yahoo.com

Boston Bala said...

யாழ்: அவள் அப்படித்தான் - விமர்சனம்

Sridhar Narayanan said...

//(இதயம் நல்லெண்ணெய் சித்ரா)//
அது சரிதா-ன்னு நினைவு.

// தன்னை அணுகும் ஒரு யோக்கியமான ஆணையும் அவ்வாறே தன் ஒவ்வாத பார்வையினால் ஒதுக்கி பின்னர் தன் தவறை உணருகின்ற கதை. //

கதை அங்கே முடியவில்லைன்னு நினைக்கிறேன். இறுதிக்காட்சியில் அருணின் புதுமனைவியிடம் ‘பெண் விடுதலைன்னா என்னன்னு தெரியுமா’ என மஞ்சு கேட்க ‘அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க’ என அவள் சொல்லும் காட்சிதான் முத்தாய்ப்பு. அருணும் ஒரு ஹிப்போகிரைட் என்பதை ’சுருக்’ என சொல்லி மஞ்சுவின் முடிவை ஜஸ்டிஃபை செய்திருப்பார்கள்.

தோமா said...

அடிக்கடி பார்த்து ரசிக்கும் காட்சிகள் ....

http://www.youtube.com/watch?v=wPmiYeNhOcM&feature=related

http://www.youtube.com/watch?v=bXMqK2WKt0M&feature=related

http://www.youtube.com/watch?v=7RPSwVuBb7o&feature=related

http://www.youtube.com/watch?v=69YP-guLD-E&feature=related

பிச்சைப்பாத்திரம் said...

ஸ்ரீதர் நாராயணன்: மாறுபடுகிறேன். :)

அருண் நிச்சயமாக பாசங்குக்காரன் அல்ல. (கமலுக்காக இதை எழுதுகிறேன் என்று யாரும் சொல்லாமல் இருக்க வேண்டுமே, கடவுளே!) உண்மையான முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்டவன்தான். ஆணாதிக்க சமூகத்தில் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மஞ்சுவை அவன் சரியாகவே புரிந்து கொள்கிறான். அந்த அனுதாபமே காதலாக உருமாறுகிறது. ஆனால் மஞ்சுவோ இதற்கான எதிர்நிலையை எடுக்கிறாள். தொடர்ந்து மோசமான ஆண்களையே பார்த்த அவளுக்கு நேர்மையான அருண் ஒரு முரணாகவே தென்படுகிறான். அவனின் நேர்மையை உள்ளுக்குள் சிலாகித்தாலும் (இதை அவளுடைய தோழியுடைய உரையாடலில் கவனிக்க முடியும்) தான் வளர்த்துக் கொண்ட (கவசம்) அடாவடி பிம்பம் காரணமாகவே அருணை புறக்கணிக்கிறாள். இதன் உச்சமாக. அருணை பழிவாங்குவதாக எண்ணிக் கொண்டு பெண் பித்தனான ரஜினியைத் தேடிப் போகும் நிலையையும் எடுக்கிறாள்.

ஆனால் இவளிடமிருந்து உண்மையான காதலை எதிர்பார்த்து புரியவைப்பதற்குள் அருண் சோர்வும் அலுப்பும் கொள்கிறான். மஞ்சுவின் தொடர்ச்சியான புறக்கணிப்பு அவனுக்கு விரக்தியையே ஏற்படுத்துகிறது. எனவேதான் குறைந்தது தன் பெற்றோர்களின் விருப்பத்தையாவது நிறைவேற்றலாமெ என்கிற முடிவில் அவர்கள் பார்த்து வைத்திருந்த பெண்ணை முன்பின் அறியாமலேயே மணந்து கொள்கிறான். இந்த திருமணத்தைப் பற்றி அறியாத மஞ்சுவிற்கு இந்த நிலையில்தான் அருண் மீதான காதலை தன் அகங்காரத்தை இழந்து ஒப்புக் கொள்ளும் மனநிலை ஏற்படுகிறது. ஆனால் அதற்குள் காலம் கடந்து அருணுக்கு திருமணமாகி விட்ட செய்தி தெரியவருகிறது. பிறகுதான் காரில் நீங்கள் குறிப்பிடும் உரையாடல்.

தன்னைப் போல அல்லாமல் அருணின் மனைவி ஒரு சராசரி என்பதை அறிய அவளுக்குள் பொறாமையும் (மஞ்சுவும் ஒரு சராசரியாக இருந்திருந்தால் இத்தனை அல்லல் பட்டிருக்க மாட்டாளோ, என்னவோ) அருணின் எதிர்கால வாழ்வு குறித்த நிம்மதியும் தோன்றுகிறது. என்றாலும் அவள் இழந்த வாய்ப்பும் வாழ்வும் இழந்ததுதானே?

ரகுராமன் said...

Dear suresh,
Angum ingum padhai undu endra padal "avargal" padathil idam petru irukkirathu.

geethappriyan said...

//மனம் உடைந்துபோய் தன் பெற்றோர் நிச்சயித்த பெண்ணை (இதயம் நல்லெண்ணெய் சித்ரா) திருமணம் செய்து கொள்கிறார். //சுரேஷ் கண்ணன் நல்லெண்ணெய் சித்ரா இதில் சிறுவயது ஸ்ரீப்ரியாவின் வேடத்தில் வருகிறார்,முடிவில் கமல் மணக்கும் பெண் நடிகை சரிதா ஆவார்.ஏன் உங்களுக்கு இந்த குழப்பம்?

ஊசி said...

சினிமா என்பது வணிகத்தை முதல் இலக்காகக் கொண்டது. உன்னதங்கள் எல்லாம் பிற்சேர்க்கைகள்தாம். அ.அ.தான்க்குப் பிறகு, கிராமத்து அத்தியாயம் என்ற பேரறுவையை எடுத்து இரசிகர்களைச் சோதித்ததன் விளைவே, ருத்ரையாவின் முற்றுப்பெறாத அஞ்ஞாத வாசம். போரென்றால், வாளும், தேரென்றால் வடமும் கொண்டு செல்பவனே நல்ல தொழில்காரன்.. அதனால்தான், இராம.நாராயணன்களுக்கு கம்பளம் விரித்த கனவுத் தொழிற்சாலை ருத்ரையாக்களுக்கு கதவை சாத்திக்கொண்டது..

ஊசி said...

சினிமா என்பது வணிகத்தை முதல் இலக்காகக் கொண்டது. உன்னதங்கள் எல்லாம் பிற்சேர்க்கைகள்தாம். அ.அ.தான்க்குப் பிறகு, கிராமத்து அத்தியாயம் என்ற பேரறுவையை எடுத்து இரசிகர்களைச் சோதித்ததன் விளைவே, ருத்ரையாவின் முற்றுப்பெறாத அஞ்ஞாத வாசம். போரென்றால், வாளும், தேரென்றால் வடமும் கொண்டு செல்பவனே நல்ல தொழில்காரன்.. அதனால்தான், இராம.நாராயணன்களுக்கு கம்பளம் விரித்த கனவுத் தொழிற்சாலை ருத்ரையாக்களுக்கு கதவை சாத்திக்கொண்டது..