Wednesday, December 08, 2004

இரண்டு ரொட்டிகளும், ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலும்

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
இந்த ஜகத்தினை அழித்திடுவோம்.

பசி என்கிற உணர்ச்சியை உக்கிரமாக உணர்ந்தவனால்தான் இவ்வாறு எழுத முடியும். தன்னைவிடவும் மற்றவனுக்காக அதிகம் கவலைப்பட்டிருக்கிறான் பாரதி. அதனால்தான் அவனால் இவ்வாறு எழுத முடிந்தது. ஆனால் இந்த வரிகள் பல தடவை கட்டுரைகளிலும், பட்டிமன்ற மேடைகளிலும் மறுமறுபடி சொல்லப்பட்டு, இந்த வரிகளின் வீரியம் இழந்துவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது. எத்தனை பேரால் இதனை அதன் முழுஅர்த்தத்துடன் விளங்கிக் கொள்ள இயலும்? 'என்னது, ஒருத்தன் பட்டினியா இருந்தா ஜகத்தை அழிக்கணுமா? வன்முறையா இருக்குதே?' என்று யோசிக்கும் மேல்தட்டு குடிமக்களால் இதை நிச்சயம் புரிந்து கொள்ள முடியாது.

சமீபத்தில் பசிப்பிணியின் கொடுமையை முழு தீவிரத்துடன் உணரக்கூடிய சம்பவம் நிகழ்ந்தது.
O

இரண்டு நாட்களுக்கு முன் ஒரு வாடிக்கையாளரை சந்திக்க அண்ணாசாலையில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலின் லாபியில் காத்திருக்க நேர்ந்தது. கொடுமையான வெயிலைக்கூடிய மதிய நேரம். மணி இரண்டு இருக்கும். காலை நேர அவசரத்தில் இரண்டு ரொட்டிகளை மட்டுமே விழுங்கி விட்டு அலுவலகத்திற்கு கிளம்பி இருந்ததால் பயங்கர பசி. பணிஅழுத்தத்தின் காரணமாக நடுவில் வேறு எந்த உணவையும் சாப்பிட நேரமில்லை. இந்த நிலையில்தான் அங்கே காத்திருந்தேன்.

உள்ளே எனது வாடிக்கையாளர் கலந்து கொண்டிருந்த ரோட்டரி மீட்டிங் முடியும் தறுவாயில் மதிய உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த உணவுகளின் மசாலா வாசனை பசியுடன் வெளியே உட்கார்ந்திருந்த என்னை வெறுப்பேற்றியது. பக்கத்தில் எங்கேயும் வெளியில் போய் தேநீர் கூட அருந்த முடியாத நிலைமை. அவர் எந்த நேரமும் வெளியே வரலாம். அப்போது விட்டுவிட்டால் விளம்பர வடிவமைப்பு தொடர்பாக அவரின் ஒப்புதலை பெற முடியாமல் போய்விடும். மனிதர் சாயங்காலமே ஜெர்மனி போய் விடுவார். அப்படி ஏதும் நடந்தால் அலுவலகத்தில் என்னைக் காய்ச்சி விடுவார்கள். விருந்து நடந்துக் கொண்டிருந்த அரங்கின் வாசலையே கண்கொத்தி பாம்பாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

இந்த ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்குள் நுழைந்தவுடனே இயல்பாக ஏற்படும் அந்த மெல்லிய தாழ்வுமனப்பான்மையை தவிர்க்க முடிவதில்லை. என்னமோ ஆக்ஸ்போர்டில் டிகிரி முடித்தவன் மாதிரி 'மூத்ரம் போற எடம் எங்கப்பா?' என்று கேட்பதற்கு கூட ஆங்கிலம்தான் கேட்க முடிகிறது. நாமே தப்பித்தவறி தமிழில் பேசினால் கூட, தமிழ்நாட்டில் ஓட்டல் நடத்தி பிழைக்கிற அவன்கள், நம்மை வேற்று கிரகத்து மனிதர்கள் போல பார்க்கின்றனர்.

எங்கேயும் நகர முடியாத நிலையில், அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் செடியின் தொட்டியில் சிறுநீர் கழிக்கலாமா என்று ஒரு சர்லியசத்தனமான யோசனை வந்தது. யாராவது கேட்டால்கூட 'செடிக்கு தண்ணி ஊத்தாம காயவெச்சிருக்கீங்களே?' என்று சத்தாய்க்கலாம் போலவும் இருந்தது. ஆனால் இதெல்லாம் டீக்கடையில்தான் செல்லுபடியாகும் என்பதாலும், திடகாத்திரமான வாயிற்காப்போன் பின்னால் கூட்டிக் கொண்டு போய் கும்மி விடுவான் என்பதாலும் மூடிக் கொண்டு அமர்ந்திருந்தேன்.

பசி... பசி.... பசி....

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் கழித்து வாயில் பீடா உப்பலுடன் மனிதர் வந்தார். வெளியே வந்தபிறகும் யாரிடமோ மிக தோழமையாக சிரித்து பேசிக் கொண்டு இருந்தார். பல்லைக்கடித்துக் கொண்டு காத்திருந்தேன். ஆனால் மனதிற்குள் அவரின் பத்து தலைமுறையை திட்டித் தீர்த்தேன். அசுவாரசியமாக என்னைப் பார்த்தவரிடம் வந்த விஷயத்தை விளக்குவதற்கு பத்துநிமிடம் ஆனது. 'நீங்க சாப்டீங்களா?' என்று ஒரு பேச்சுக்காவாவது கேட்பார் என்று எதிர்பார்த்தேன். பெரிய மனுஷன் பெரிய மனுஷன்தான்; கேட்கவில்லை. வெளியில் வந்து ஒரு ரோட்டோர டீக்கடையில் பிஸ்கட்டை கடித்துக் கொண்டு டீயை குடிக்கும் போதுதான் கொஞ்சம் உயிர் வந்தது.

O

நான் சிறுவயதில் ஒரளவு வறுமையில் வாடியவன்தான் என்றாலும் தீவிரமான பசியுடன் சில வேளைகளில் மட்டுமே இருக்க நேர்ந்தது. அந்த சில வேளைகளும் நானாகத் தேடிக் கொண்டதுதான். 15 வயதிருக்கும் போது, வீட்டில் உள்ளவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்த வயதிற்கேயுரிய அசட்டு வேகத்துடன் வெளியேறி, இரண்டு, மூன்று நாட்கள் ஒரு வேளை தேநீர் மட்டுமே பருகி பசியால் துடித்திருக்கிறேன். நண்பர்கள் உதவுவார்கள்தான் என்றாலும், ஏனோ அந்த சமயத்தில் கால் போன போக்கில் போகத் தோன்றியது.

வெற்றிகரமான நான்காவது நாள் பசியுடன், ஏதோ ஒரு காய்கறி மார்க்கெட்டை கடக்கும் போது, ஒரு முழு சாத்துக்குடி பழம் கீழே கிடந்ததை காண முடிந்தது. கடந்து போனவர்கள் யாரும் அதை கவனிக்கவில்லை. யாராவது தவறுதலாக விட்டுவிட்டார்கள் போலிருக்கிறது என்று எண்ணினேன். பசியை உக்கிரமாக உணர்ந்த அந்த கணத்தில் வெட்கத்தை எல்லாம் உதறிவிட்டு, சுற்றும் முற்றும் யாராவது பார்க்கிறார்களா என்று நோட்டம் விட்டுவிட்டு சடக்கென்று அதை எடுத்த வேளையில் எங்கிருந்தோ நமுட்டுச் சிரிப்பு சத்தம் கேட்டது.

எவன் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும் என்று அருகிலிருந்த குழாயில் கழுவிவிட்டு (இன்னும் இரண்டுநாள் பசி நீடித்திருந்தால் இந்த ஆச்சாரம் கூட பறந்து போயிருக்கும்) தோலை உரிக்க முற்பட்ட போதுதான் அது முழுவதும் கெட்டுப்போன பழம் என்பதை அந்த அழுகின நெடி உணர்த்தியது. பின்னால் யாரோ நமுட்டுச்சிரிப்பு சிரித்த காரணத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது.

பின்னர் பசி பொறுக்க முடியாமல், திருட்டு பஸ் ஏறி வீடு சேர்ந்ததும், என்னைக் காணாமல் வீட்டில் உள்ளோர் துடித்துக் கொண்டிருந்ததை காண நேர்ந்ததும், என்னைக் காணாத துக்கத்தில் வீட்டில் சமையலே செய்யாத துக்கத்தில் இருந்ததால், அவசரமாக ஓட்டலில் இருந்து வாங்கி வந்த உணவை, நான்கு நாட்கள் உணவருந்தாத காரணத்தால், விழுங்க முடியாமல் அவஸ்தைப்பட்டதும் மிச்சகதை. அந்த வயசுக்குரிய முரட்டுத்தனத்தையும் மீறி குடும்பம் என்கிற அமைப்பின் மீது மரியாதையும், அன்பு நரம்புகளால் பிணைக்கப்பட்டுள்ளதையும் உணர முடிந்தது. மேலும், அந்த சமயத்தில்தான் என்னால் பசியின் கொடுமையையும், இதன்மூலம் பசியினால் அவதிப்படுகிற மற்றவர்களின் உணர்வையும் புரிந்துகொள்ள முடிந்தது.

இப்போது கூட, தெருக்களில் பிச்சையெடுப்பவர்களில், கைகால் இழந்த பிச்சைக்காரர்களை கூட அவசரத்தில் கவனிக்காமல் போகமுடிகிற எனக்கு, 'பசிக்குது' என்று முறையிடும் பிச்சைக்காரர்களை தாண்டிப் போக முடிவதில்லை.

இந்த கடைசிப்பத்தியை எழுதியதின் மூலம் இந்த வலைப்பதிவின் தலைப்பை நியாயப்படுத்தி விட்டேன் என்று நினைக்கிறேன். :-))

suresh kannan

3 comments:

Kannan said...

சுரேஷ்,

ரொம்பவும் ரசித்துப் படித்தேன், உங்களின் இந்தப் பதிவை.

நன்றி.

நானானி said...

சுரேஷ்!
பசியின் கொடுமை...மிகமிக கொடுமைதான். உங்கள் அனுபவம் தவிர்த்திருக்கக் கூடியது. நல்ல பதிவு.

cheena (சீனா) said...

காத்திருப்பது அதுவும் பசியுடன் காத்திருப்பது என்பது பயங்கர கொடுமை. வேறு வழி ?? தவிர்க்க முடிந்தால் நலம்.