Monday, April 05, 2021

ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது- பொருத்தமா அல்லது வருத்தமா?!

 

 

இந்தியச் சினிமாவின் வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருந்தவர்களுக்கு வழங்கப்படுவது ‘தாதாசாகேப் பால்கே விருது’, இந்தியச் சினிமாவின் மிக உயரிய விருதான இது, 2019-ம் ஆண்டிற்காக ரஜினிகாந்த்திற்கு இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்திலிருந்து இதற்கு முன் இந்த விருதைப் பெற்றவர்கள் சிவாஜி கணேசன் மற்றும் கே.பாலச்சந்தர். ஒருவகையில் எல்.வி.பிரசாத்தையும் இந்த வரிசையில் இணைத்துக் கொள்ளலாம்.


முதலில் ரஜினிகாந்த்திற்கு நமது வாழ்த்துகளைத் தெரிவித்து விடுவோம்.

ரஜினிகாந்த்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த உயரிய விருது குறித்து சராசரியான சினிமா ரசிகர்கள், குறிப்பாக ரஜினியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியை அடைவார்கள் என்பது எதிர்பார்க்கக்கூடியதே. ஆனால் சினிமா மீது ஆர்வமும் அக்கறையும் உடையவர்கள் அத்தனை மகிழ்ச்சி கொள்வார்களா என்பது சந்தேகமே. மகிழ்ச்சியோடு நெருடல்களையும் இந்த அறிவிப்பு சினிமா ஆர்வலர்களுக்கிடையே ஏற்படுத்தியிருக்கிறது.

*

முதலில் நல்ல விஷயங்களைப் பார்த்து விடலாம். ஒருவகையில் ரஜினிகாந்த் அடைந்திருக்கும் இந்த அங்கீகாரம் வரவேற்கத்தக்கது. முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடியது.

ஒரு காலக்கட்டத்தில் சிவப்பாகவும் அழகாகவும் இருப்பவர்கள்தான் சினிமாவில் நாயகர்களாக ஜொலிக்க முடியும் என்கிற எழுதப்படாத விதி இருந்தது. தியாகராஜ பாகவதர் முதல் கமல்ஹாசன் இதுதான் வழக்கம். அல்லது சிவாஜி கணேசனைப் போல அசாதாரணமான நடிப்புத் திறமையுள்ளவர்கள்தான் இந்தத் தடையை தாண்டி வர முடியும்.

இந்த நெடுங்கால மரபையும் தடையையும் உடைத்துக் கொண்டு வந்தவர் ரஜினி. கருப்பு நிறம், எளிமையான சராசரி தோற்றம், பிழையான தமிழ் உச்சரிப்பு, சுமாரான நடிப்பு போன்றவைதான் ரஜினியின் துவக்க கால அடையாளங்களாக இருந்தன. ஆனால் இவைகளைத் தன்னுடைய தனித்தன்மையான உடல்மொழியால், ஸ்டைலால் தாண்டி வந்தார் ரஜினி. ஏதோ பாலச்சந்தரின் கண்ணில் பட்ட அதிர்ஷ்டம் என்று அவரது வளர்ச்சியை சுருக்கிப் பார்க்க முடியாத அளவிற்கு ஒரு காலக்கட்டத்தில் விஸ்வரூபம் எடுத்தார்.

பிழையான உச்சரிப்பு, வேகமான நடை, அசைவு… என்று எவையெல்லாம் துவக்க காலத்தில் அவரது பலவீனங்களாகவும் கேலியாகவும் பார்க்கப்பட்டதோ அதுவே பிற்காலத்தில் அவரது பலமாகவும் பிரத்யேகமான அடையாளமாகவும் மாறிப் போனது. அவரது ஸ்டைல் பாணியை அவர் செய்தால் மட்டுமே அது எடுபடும். வேறு எவராலும் நகல் எடுக்க முடியாத பாணி அது.

தன்னுடைய கடுமையான உழைப்பாலும், வித்தியாசமான உடல்மொழி அசைவுகளாலும் துள்ளலான நடிப்பாலும் பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்து ‘சூப்பர் ஸ்டார்’ என்னும் உயரிய சிம்மாசனத்தில் நெடுங்காலமாக அமர்ந்திருக்கிறார் ரஜினி. ‘அவருக்குப் பின் நான்தான்’ என்று வேறு சில நடிகர்கள் குரல் கொடுத்தாலும் அல்லது அந்த அந்தஸ்திற்கு உள்ளூற ஆசைப்பட்டாலும் இன்னமும் கூட அந்த நாற்காலி அவருடையதுதான். ‘சூப்பர் ஸ்டார்’ என்றால் அது ரஜினியை மட்டுமே குறிக்கக்கூடியது என்பது இன்றைய சின்னக்குழந்தைக்கு கூட தெரியும். (ஒரு பேச்சுக்குத்தான் சொன்னேன். அதற்காக வீட்டில் இருக்கும் கைக்குழந்தை கிட்ட போய் கேட்டு இம்சை பண்ணாதீங்க).

*

‘ஒரு புலி வளப்பமாக இருந்தால் அது இருக்கும் ஒட்டுமொத்த காடே வளமாக இருக்கிறது என்று பொருள்’ என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். புலி புஷ்டியாக இருக்கிறது என்றால் அது நிறைய மான்களை வேட்டையாடி உண்டு கொழுத்திருக்கிறது என்று பொருள். அங்கு நிறைய மான்கள் இருக்கிறது என்றால் அவை மேய்வதற்கான புற்களின் வளர்ச்சி அந்த இடத்தில் நன்றாக இருக்கிறதென்று பொருள். எனில் அங்கு நிலவளம் அபரிதமாக இருக்கிறதென்று பொருள்.

இதையே எந்தவொரு துறைக்கும் பொருத்திப் பார்க்கலாம். முன்னணி நடிகர்களின் மசாலா திரைப்படங்கள் ஒரே மாதிரியான பாணியில் அமைந்து சலிப்பூட்டுகிறது என்கிற விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் முன்னணி நடிகர்களின் வணிக மதிப்பு உச்சத்தில் பறக்க பறக்கத்தான் கூடவே சினிமாத் துறை சார்ந்த அனைத்துப் பிரிவுகளும் வளர்ச்சி பெற முடியும். உயிர்வாழ முடியும்.

ஓர் உதாரணத்திற்கு சொன்னால், ஒரு திரையரங்கில் குறிப்பிட்ட காட்சியில் ஒரு முன்னணி நடிகரின் திரைப்படம் ஹவுஸ்புல் ஆகிறது என்றால் அங்கு கேன்டீன் வைத்திருப்பவர், டீக்கடைக்காரர் உள்பட பலர் மகிழ்ச்சியடைவார்கள். அந்த லாபம் அவர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக அமையும். இது ஒரு சிறிய உதாரணம்தான். இப்படி பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் சினிமாத்துறையை நம்பியிருக்கின்றன.

இந்த விஷயத்தை ரஜினி நன்கு புரிந்து வைத்திருந்தார் என்று தோன்றுகிறது. தான் நடிக்கின்ற திரைப்படத்தினால் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் மிகுந்த லாபம் அடைய வேண்டும் என்பதில் அவர் கவனமாக இருந்திருக்கிறார். ஏனெனில் அப்போதுதான் அந்தத் தயாரிப்பாளரால் தொடர்ந்து இயங்க முடியும்; மேலும் பல திரைப்படங்களைத் தயாரிக்க முடியும் என்பது ரஜினியின் எண்ணமாக இருந்திருக்கும். இதன் மூலம் சினிமாத்துறை தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்க ரஜினியும் ஒருவகையில் காரணமாக இருந்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது.

‘நீ நடித்த திரைப்படத்திலேயே உனக்குப் பிடித்த படம் எது?” – இப்படியொரு கேள்வியை ரஜினியிடம் ஒரு மேடையில் கேட்டார் கே.பாலச்சந்தர். சில நொடிகள் கூட தயங்காமல் ‘முள்ளும் மலரும்’ என்று பளிச்சென்று பதில் சொன்னார் ரஜினி. ‘கேள்வி கேட்பவர் தன் குருநாதர் ஆயிற்றே.. அவருடைய படத்திலிருந்தே ஒன்றைச் சொல்லி விடலாம்..’என்று ரஜினி மழுப்பவில்லை. தன் மனதில் படுவதை ஒளிக்காமல் அப்படியே சொல்லி விடும் நேர்மைதான் ரஜினியின் பலங்களுள் ஒன்று. பல சமயங்களில் இதுவே பலவீனமாகவும் ஆகியிருக்கிறது.

‘முள்ளும் மலரும்’ ‘அவள் அப்படித்தான்’ ‘ஆறிலிருந்து அறுபது வரை’ போன்ற சிறந்த திரைப்படங்களில் நடிப்பதைத்தான் ரஜினியின் மனம் விரும்பியிருக்கும். ஆன்மீக விஷயங்களில் மீதுள்ள நாட்டம் வேறு கூடவே இருந்தது.  ஆனால் அவர் அமர்ந்திருக்கும் ‘சூப்பர் ஸ்டார்’ என்னும் நாற்காலி மிக அரிதானது. அதற்காக அவர் கடந்து வந்த பாதை என்பது அத்தனை எளிதான விஷயமல்ல.

எனவே, சினிமாவின் இருப்பிற்காக தனக்குப் பிடிக்காத பல விஷயங்கள் இருந்தாலும் அரைமனதுடன் வெகுசன மசாலாத் திரைப்படங்களில் நடித்திருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது.

பிற்காலத்தில் தன்னுடைய வயதுக்கேற்ற பாத்திரங்களில் ‘கபாலி’ ‘காலா’ போன்ற திரைப்படங்களில் நடித்து ‘இளம் நடிகைகளுடன் டூயட் பாடுபவர்’ என்று தம் மீதிருந்த நெடுங்கால விமர்சனத்தை ஓரளவிற்கு துடைக்க முயன்றார் ரஜினி.

சட்டென்று இறங்காத தன்னுடைய வணிக மதிப்பின் மூலம் சினிமாத் துறையின் வளர்ச்சிக்கு நெடுங்காலமாக உறுதுணையாக இருந்தவர் என்கிற வகையில் இந்த விருது அவருக்கு கிடைத்திருப்பதை ஒரு நோக்கில் ஏற்றுக் கொள்ளலாம்; வாழ்த்தி வரவேற்கலாம். ஆனால்….

*

இப்போது இதன் எதிர்திசையில் உள்ள விஷயங்களைப் பார்ப்போம். சினிமாவில் தான் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்து நல்ல திரைப்படங்களை உருவாக்குபவர் என்கிற மதிப்பு கமல்ஹாசனின் மீது இருக்கிறது. இயக்குநர் ஷங்கர் போன்றவர்கள் ஒருபுறம் வெகுசன இயக்குநர்களாக இருந்தாலும் நல்ல சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் உருவாவதற்கு இன்னொரு புறம் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

ஆனால் அவ்வகையான முயற்சி ஒன்றையாவது ரஜினி செய்திருக்கிறாரா? யோசித்துப் பார்த்தால் இல்லையென்றே தோன்றுகிறது. தனக்குப் புகழையும் செல்வத்தையும் மக்கள் அபிமானத்தயும்  வாரி வழங்கிய சினிமாத்துறைக்கு சில நல்ல திரைப்படங்களை தயாரித்து வழங்குவதின் மூலம் அதன் ரசனை மாற்றத்திற்கு சிறுதுளியாகவாவது ரஜினி காரணமாக இருந்திருக்கலாம். ம்ஹூம் அது எப்போதும் நடக்கவில்லை.

நடிக்கும் காட்சிகளில் சிகரெட்டை விதம் விதமாக தூக்கிப் போட்டு இளைஞர்களிடம் புகைப்பிடிக்கும் வழக்கத்தை ஊக்குவித்தது. ‘பொம்பளைன்னா ஆடக்கூடாது.. அடங்கிப் போகணும்..’ என்கிற பிற்போக்குத்தனமான வசனங்களைப் பேசி நடித்தது.. என்பது உள்ளிட்ட பல காரணங்களை யோசிக்கும் போது ‘ரஜினி இந்த விருதிற்கு பொருத்தமானவர்தானா?’ என்று எழுகிற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.

‘வரும்.. ஆனா வராது’ என்கிற காமெடி வசனத்தைப் போல தனது அரசியல் வருகையை ஒரு குரூரமான நகைச்சுவை ஆட்டமாக ஆடித்தீர்த்தவர் ரஜினி. இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக நடந்து கொண்டிருந்த இந்த டிராமா, ரஜினியின் உடல்நலத்தையொட்டி சமீபத்தில் ஒரு வழியாக முடிவிற்கு வந்தது. மக்கள் தன் மீது வைத்திருந்த எதிர்பார்ப்பிற்கு தெளிவாகவும் அழுத்தமாகவும் ஒரு விடையைக் காண முடியாமல் குழப்பங்களின் கூடாரமாக இருந்த ரஜினி, இந்த விஷயத்தையும் தனது படங்களின் கச்சாப்பொருட்களில் ஒன்றாக மாற்றிக் கொண்டது ஏற்றுக் கொள்ளவே முடியாத விஷயம்.

மத்திய, மாநில அரசுகளுடன் எப்போதும் இணங்கிச் செல்வது, சமரசங்களுக்கு ஆட்படுவது, அடங்கிப் போவது உள்ளிட்ட பல காரணங்கள் இந்த விருது ரஜினிக்கு கிடைத்ததற்குப் பின்னால் உள்ள காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.

ரஜினியை விடவும் அதிக தகுதி வாய்ந்த ஒரு சினிமா ஆளுமைக்கு இந்த விருது கிடைத்திருந்தால் சினிமா மீது ஆர்வமுடைய அதன் நலம்விரும்பிகள் உண்மையாகவே மகிழ்ச்சியடைந்திருக்கக்கூடும். எப்படியோ தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நடிகர் இந்த விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு நாம் மகிழ்ச்சியும் ஆறுதலும் கொள்ளலாம்.

மீண்டும் வாழ்த்துகள் ரஜினி!


விகடன் இணையத்தளத்தில் வெளியானது – நன்றி விகடன்

suresh kannan

 

 

 

Monday, February 15, 2021

Sun Children (2020) - சூரியனின் புதல்வர்கள் - மஜித் மஜிதி

இரானிய திரைப்பட ரசிகர்களுக்கு அறிமுகம் தேவையில்லாத பெயர்களில் ஒன்று மஜித் மஜிதி. ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’, ‘தி கலர் ஆஃப் பாரடைஸ்’ போன்ற அற்புதமான சினிமாக்களை உருவாக்கியவர். இவரின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம், Sun Children (Khoršid).

அகாதமி விருதின், சர்வதேச திரைப்படங்களுக்கான போட்டிப் பிரிவில் இரானிய நாட்டின் சார்பில் தேர்வாகியிருக்கும் இந்தத் திரைப்படம், வெனிஸ் திரைப்பட விழாவிலும் நாமினேட் ஆகியுள்ளது.

*

சிறார்களின் மீதான உழைப்புச் சுரண்டல், அவர்களை குற்றவாளிகளாக மாற்றும் சமூகம் போன்ற அடிப்படையான பிரச்சினைதான் இந்தத் திரைப்படத்தின் மையம். குற்றம் நிகழ்ந்த பிறகு அதை ஆராயவும் தண்டனை கொடுக்கவும் காவல், நீதி, சிறை என்று நிறைய நிறுவனங்கள் உள்ளன. ஒருவகையில் குற்றங்கள் உற்பத்தியாவதற்கும் பெருகி வளர்வதற்கும் கூட இவைகளே மறைமுகக் காரணிகளாக உள்ளன.

ஆனால் குற்றங்கள் நிகழாதவாறு முதலிலேயே தடுப்பது, அவற்றின் ஊற்றுக் கண்களை கண்டுபிடிப்பது, அதற்கான சமூகவியல் நோக்கு ஆய்வுகளை நிகழ்த்துவது, அவற்றை நேர்மையாக நடைமுறைப்படுத்துவது போன்ற செயல்பாடுகள் மூன்றாம் உலக நாடுகளில் மிகக் குறைவாகவே உள்ளன.

குடும்ப வன்முறை, வறுமை, போர், அகதிகள் பிரச்சினை உள்ளிட்ட பல காரணங்களால் குடும்பங்களில் இருந்து துண்டிக்கப்படும் சிறார்கள், மிக எளிதில் உதிரிக்குற்றவாளிகளாக மாறுகிறார்கள். குற்றவாளிகளின் சமூகம் மிகச் சுலபமாக அவர்களை கையகப்படுத்திக் கொள்கிறது. இந்தப் போக்கிலிருந்து விலக, கல்வி என்னும் வெளிச்சத்தை அவர்கள் ஏந்தினால்தான் விடிவுகாலம் என்கிற செய்தியை உறுத்தாமல் சொல்கிறது மஜித் மஜிதியின் இந்தத் திரைப்படம்.


*

வெளிநாட்டு கார்களில் உள்ள டயரை சில சிறுவர்கள் திருட முயலும் காட்சியோடு படம் துவங்குகிறது. பாதுகாவலரிடம் பிடிபடாமல் அவர்களை இடித்துத் தள்ளி விட்டு சிறுவர்கள் பறந்தோடுகிறார்கள். இந்தக் கூட்டத்தின் தலைவனைப் போல செயல்படுகிறவன் அலி. அவனுடைய அம்மா மருத்துவமனையில் இருக்கிறாள்.

இந்தச் சிறார்களுக்கென்று சில பொதுவான அம்சங்கள் இருக்கின்றன. தந்தை இறந்து போயிருப்பார் அல்லது விட்டுச் சென்றிருப்பார் அல்லது கோபக்காரராக இருந்து அடித்து துவைத்து பணிக்குச் செல்ல கட்டாயப்படுத்துவார். ஆக பெற்றோர்களின் அன்பும் அரவணைப்பும் இல்லாமல் பணியிடங்களில் உழைப்புச் சுரண்டலை எதிர்கொள்பவர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.

அலியின் கூட்டத்தில் உள்ள ஒரு சிறுவனின் அக்காவான ஜஹ்ரா, ரயிலில் சில்லரைப் பொருட்களை விற்கிறாள். காவலர்களின் கண்களில் படாமல் தப்பிப்பதும் அவர்கள் வரும் போது சிதறியோடுவதுமான அவலமான வாழ்க்கை அவளுடையது. அலிக்கு ஜஹ்ரா மீது பிரியம் உள்ளது.

அலி தன்னை பைக்கில் துரத்தி வரும் ஒருவனிடமிருந்து தப்பித்து ஓடுகிறான். அவனோ இவனைப் பிடித்து குற்றங்களைச் செய்யும் ஒரு முதியவரிடம் ஒப்படைத்து விடுகிறான். அவருக்குச் சொந்தமான புறாவை அலி திருடி விடுவதுதான் காரணம். அந்த பேட்டை தாதா, பார்ப்பதற்கு ரிடையர்ட் ஆன ஸ்கூல் வாத்தியார் மாதிரி இருக்கிறார்.

அவர் இவனைக் கனிவுடன் பார்த்து ‘அந்தப் புறாவை நீயே வைத்துக் கொள். உன் அம்மா மருத்துவமனையில் இருந்து வந்தால் தங்க இடம் இருக்கிறதா.?. நான் ஏற்பாடு செய்து தருகிறேன்’ என்றெல்லாம் அன்பொழுக பேசுகிறார். அடி, உதையை எதிர்பார்த்து வந்த அலிக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

இதற்கு கைம்மாறாக ஒரு பணியை அலிக்கு தருகிறார் அந்த முதியவர். அதுதான் இந்தத் திரைப்படம் பயணிக்கும் மையத்தின் பாதை.

“இடுகாட்டிற்கு கீழே ஒரு புதையல் இருக்கிறது. நாங்கள் அங்கு செல்ல முடியாது. ஆனால் நீ செல்லலாம். அதன் பக்கத்துக் கட்டிடடத்தில் உள்ள பள்ளியில் நீ மாணவனாகச் சேர்ந்து கொள். அதன் பாதாள அறையில் துவாரமிட்டு சென்றால் இடுகாடு வந்து விடும். புதையலை எளிதாக எடுத்து விடலாம். செய்வாயா?” என்று கேட்கும் முதியவர் செல்போன் ஒன்றையும் அவனுக்கு பரிசாக அளிக்கிறார்.

ஆதரவற்ற சிறார்கள் படிக்கும் அந்தப் பள்ளி நிதிப்பற்றாக்குறையால் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இடையில் வருவதால் அலியை அங்கு சேர்க்க மறுத்து விடுகிறார்கள். சண்டையிட்டு முட்டி மோதி பள்ளியில் சேரும் அலி, தன்னுடைய ரகசிய பணியை தினமும் மேற்கொள்கிறான்.

இதில் அவன் வெற்றி பெற்றானா, என்னவெல்லாம் நடந்தது என்பதை இயல்பான காட்சிகளுடன் விவரித்திருக்கிறார்கள்.

*

ஒரு ஆதாரமான நீதிக்கதை போல இதன் திரைக்கதை பயணித்தாலும் உபதேசத்தின் வாசனை எங்கும் வந்துவிடாமல் இயல்பான காட்சிகளால் உருவாக்கியுள்ளார் மஜித் மஜிதி. சிறார்களின் அவலம் நிறைந்த வாழ்க்கை, நிதிச்சுமையால் தள்ளாடும் பள்ளியை தாங்கி நிறுத்தப் போராடும் நேர்மையான ஆசிரியர்கள், இன்னொரு புறம் தன்னுடைய ரகசிய ‘ஆப்பரேஷனில்’ கொலைவெறியுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அலி என்று இதன் திரைக்கதை துளி கூட சுவாரசியம் குறையாமல் நகர்கிறது.

அலியாக Rouhollah Zamani அருமையாக நடித்திருக்கிறான். கண்களில் எப்போதும் பயம், எரிச்சல், தயக்கம் போன்ற உணர்வுகள் நிறைந்திருக்கும் முகபாவத்துடன் படத்தின் பெரும்பான்மையான காட்சிகளை அற்புதமாக நிறைத்திருக்கிறான். வெனிஸ் திரைப்பட விழாவில் இவனது சிறப்பான நடிப்பிற்காக விருதும் கிடைத்திருக்கிறது.

பிரதான பாத்திரம் என்றல்ல, இவனுடைய கூட்டுக்களவாணிகளாக சுற்றும் சிறுவர்கள், களங்கமில்லாத முகத்துடன் இருக்கும் குண்டுப்பையன், அவனுடைய அக்கா ஜஹ்ரா, பள்ளியின் முதல்வர், குற்றப் பின்னணி இருந்தாலும் அவர்களை கரிசனத்தோடு அணுகும் ஆசிரியர் என்று ஒவ்வொரு சிறிய பாத்திரமும் அதற்கான  மெனக்கெடல்களோடு உபயோகிக்கப்பட்டுள்ளது.

“என் தம்பியிடம் தவறான வாக்குறுதிகளை சொல்லி திசை திருப்பி விடாதே. நாங்கள் போலீஸிடம் மாட்டிக் கொண்டால் திரும்பவும் அகதி முகாமிற்கே செல்ல வேண்டியதுதான்” என்று ஒரு காட்சியில் ஜஹ்ரா அழுகையும் ஆத்திரமுமாக அலியுடன் பேசும் வசனமானது மிகச் சிறப்பான காட்சிகளுள் ஒன்று. இரானிய திரைப்படங்களைப் போல குழந்தைகளை மிக இயல்பாக உபயோகப்படுத்துவது வேறெந்த பிரதேச சினிமாக்களிலும் அத்தனை இயல்பாக நிகழ்வதில்லை. ஜஹ்ரா பேசும் வசனத்தின் மூலம் ஆப்கன் அகதிகளின் பிரச்சினைகளும் ஊடாடிச் செல்கிறது.

ஜஹ்ராவிற்கு ஹேர்கிளிப் ஒன்றை பரிசளிக்கிறான் அலி. அவளும் அதை பிரியத்தோடு சூடிக் கொள்கிறாள். ஆரம்பக்காட்சியில் நிகழும் கவிதைத்தனமான இந்தக் காட்சியிக்கு முரணாக குரூரம் ஒன்று திரைக்கதையின் பின்னே நிகழ்கிறது.

சக மாணவர்களை நெற்றியால் முட்டி தாக்கி விடுகிறான் அலி. ‘இதை நீ எப்படிச் செய்தாய்?” என்று அவனிடம் கேட்டு கற்றுக் கொள்ளும் ஆசிரியர், அதை பிறகு பயன்படுத்தும் காட்சி அற்புதமானது. இவை தொடர்பான காட்சிகளில் நேரடி வன்முறையின் உக்கிரம் பதிவாகாதவாறு மிக கவனமாக இருந்துள்ளார் மஜித் மஜிதி. இப்படி திரைக்கதையானது சில நுணுக்கமான தொடர்புக்காட்சிகளால் வசீகரமாக அமைக்கப்பட்டுள்ளது.

*

மஜித் மஜிதி இந்தத் திரைப்படத்தை சிறப்பாக இயக்கியிருந்தாலும் இரானிய திரைப்படங்களுக்கென்று பிரத்யேகமான அற்புதமான எளிமையும், இயல்பும், அழகியலும், நம்பகத்தன்மையும் பொதுவாக இருக்குமல்லவா? அது இந்தத் திரைப்படத்தில் கணிசமாக இல்லாதது போன்ற உணர்வை அடைந்தேன். மஜித்தின் ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ திரைப்படத்தையே எடுத்துக் கொள்வோம். வாழ்க்கைக்கு நெருக்கமான எத்தனை இயல்பான காட்சிகளால் அது நிறைந்திருந்தது?

மஜித் மஜிதி பிரபலமாகிய விஷயம் என்பது ஒருவகையில் ஒரு விபத்தாகவே அவரது படங்களில் நிகழ்கிறதோ என்று தோன்றுகிறது. அவரது முந்தைய திரைப்படமான Beyond the Clouds (2017), இந்தியப் பின்னணியில் நிகழும் திரைப்படம் என்றாலும் Slumdog Millionaire போன்று இந்திய ஏழ்மையைச் சுரண்டும் திரைப்படங்களைப் போல சாதாரணமாக இருந்தது.

Sun Children படத்திலும் ஏரியல் வ்யூ உள்ளிட்டு ஒளிப்பதிவு பல இடங்களில் அற்புதமாக அமைந்திருந்தாலும் அது இரானிய திரைப்படங்களின் docudrama எளிமைக்கும் பாணிக்கும் விரோதமாக அமைந்து நெருடலை ஏற்படுத்தியது. போலவே சிறுவன் சுரங்கப்பாதை அமைக்கும் காட்சிகள் விறுவிறுப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் நம்பகத்தன்மையில்லை.

பள்ளியின் பக்கத்தில் புதையலைத் தேடும் அலி, இறுதியில் கல்விதான் உணமையான புதையல் என்று வந்து அடையும் கடைசிக் காட்சி அற்புதமான குறியீட்டால் நிறைகிறது. இதைப் போலவே சக மாணவர்களும் அலியிடமிருந்து விலகி உண்மையான முன்னேற்றத்தை அடையாளம் கண்டுகொள்வதும் நல்ல மாற்றமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு சமூகத்தில் குற்றவாளிகள் உருவாவதற்கு அந்தச் சமூகம்தான் பிரதான காரணம். முற்றிலுமாக கைவிடப்படுகிற ஒருவன் இருண்மையை நோக்கித்தான் நகர்வான். அவனை கைப்பிடித்து வெளிச்சத்திற்கு அழைத்து வருவது சமூகத்தின் கடமை. குறிப்பாக பெற்றோர்களைத் தாண்டி ஆசிரியர் சமூகத்திற்கு இது சார்ந்த பெரும் பொறுப்பும் கடமையும் உள்ளது. இதில் அப்படியொரு அற்புதமான ‘மாஸ்டர்’ வருகிறார்.

தமிழில் வந்த ‘மாஸ்டரை’ விடுங்கள். இந்தத் திரைப்படத்தில் ஓரமாக வந்து போகும் அவரைத்தான் உண்மையான ‘மாஸ்டர்’ என்று சொல்ல வேண்டும்.


suresh kannan

Saturday, January 30, 2021

லோகேஷ் என்கிற பரோட்டா மாஸ்டர்
லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ பார்த்தேன். சின்ன சின்ன சுவாரசியங்கள் இருந்தாலும் ஒட்டு மொத்த அனுபவத்தில் ‘ஆகக் கொடுமை’ என்றுதான் சொல்ல வேண்டும்.

*


லோகேஷ் வெகுசன வார்ப்பில் உருவாகி வளர்ந்து வரும் இளம் இயக்குநர்களில் ஒருவர்தான் என்றாலும் அதில் சற்று தனித்து பிரகாசிக்கக் கூடியவர்களில் ஒருவராக இருந்தார். மாநகரம், கைதி போன்றவை அதற்கு சிறந்த சாட்சியங்களாக இருந்தன. ஆனால் இது போன்ற இயக்குநர்களுக்கு நேரும் விபத்து என்னவெனில், அவர்கள் முன்னணி நாயகர்களிடம் சென்று சரணடையும் போது கூடவே அவர்களின் வீழ்ச்சியும் தன்னிச்சையாக துவங்கி விடுகிறது. துரதிர்ஷ்டமாக லோகேஷிற்கு நேர்ந்ததும் இதுவே.

ரிடையர்ட் ஆன கமர்சியல் இயக்குநர்கள் சக்கையாகி ஓய்ந்த பிறகு அவர்களிடம் எதுவும் பெயராது என்பதைப் புரிந்து கொள்ளும் முன்னணி நடிகர்கள், தடம் மாறி இளம் இயக்குநர்களின் திறமைகளை உறிஞ்ச ஆரம்பிக்கிறார்கள். இந்த வரிசையில் ஒரு சமீபத்திய பலியாடு லோகேஷ்.

முன்னணி நாயகர்களுக்கு படம் செய்யும் போது இது போன்ற இளம் இயக்குநர்கள் எதிர்கொள்ளும் பெருங்குழப்பம் என்னவெனில், அது தன் படமாக இருக்க வேண்டுமா அல்லது சம்பந்தப்பட்ட ஹீரோவின் வணிக பிம்பத்திற்கு இணக்கமாக இருக்க வேண்டுமா என்பதுதான். ஏனெனில் இதன் பின்னால் உள்ள பெரும் வணிகம் அவர்களை குழப்பத்திலும் தடுமாற்றத்திலும் ஆழ்த்துவது இயல்புதான்.

ஏனெனில் ஒரு முன்னணி நடிகரின் படத்தில்  அது தொடர்பான சமாச்சாரங்கள் இல்லாவிடில் அதை உத்தரவாதமாக எதிர்பார்த்து வரும் நடிகரின் ரசிகர்கள் ஏமாந்து விடுவார்கள். இது சார்ந்த அச்சமும் சங்கடமும் இந்த இயக்குநர்களிடம் உள்ளது. 

*

ஆனால், வில்லனிடமிருந்து தன் கற்பைப் காப்பாற்றிக் கொள்ள போராடும் நாயகி போல,  ‘மாஸ்டரில்’ தன் தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொள்ள லோகேஷ் இயன்ற வரை போராடியுள்ளார். அதற்கான உழைப்பும்  தடயமும் மாஸ்டரில் ஆங்காங்கே நிச்சயம் உள்ளது. ஆனால் இவை மட்டுமே போதுமா? ஒட்டு மொத்த அனுபவத்தில் இது ‘வழக்கமான’ விஜய் படமாகவும் இல்லாமல் லோகேஷின் படமாகவும் இல்லாமல் நடுவாந்திரத்தில் பரிதாபமாக தத்தளிக்கிறது.

குடிப்பழக்கமுள்ள ஹீரோ, அதற்கான பின்னணிக்காரணங்களை விளக்காமல் இருப்பது, ஆனால் அந்தக் காரணங்களை ஜாலியாக உருவாக்கியிருப்பது, வழக்கமான டூயட் பாடல்கள் இன்மை போன்றவை குறிப்பிடத்தக்க வித்தியாசமான அம்சங்கள்தான். இப்படியாக சம்பிரதாயமான தடயங்கள் இல்லாமல் தன் திரைக்கதையை உருவாக்க கடும் முயற்சி எடுத்திருக்கிறார் லோகேஷ். விஜய்யும்  இந்த மாற்றங்களை ஏற்றுக் கொண்டிருப்பது ஒரு நல்ல முன்னுதாரணம்.

போலவே வணிகமதிப்பு கொண்ட நாயகனாக இருந்தாலும் திரைக்கதையில் தன் பங்கு சிறப்பாக இருந்தால் அது என்ன வேடமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் விஜய் சேதுபதியின் ஈடுபாடும் பாராட்டத்தக்கது. இந்த அற்புதமான சந்தர்ப்பத்தையும் கலவையையும் லோகேஷ் பயன்படுத்திக் கொள்ளத் தவறி விட்டாரா அல்லது வணிக நெருக்கடிகளால் தடுமாறி விட்டாரா என்று தெரியவில்லை. படம் ‘பரோட்டா மாஸ்டராகி’ விட்டது. 

*

இளம் சிறார்களை குற்றவாளிகளாக வளர்த்தெடுத்து பயன்படுத்தும் மாஃபியா தொழில் என்பது நெடுங்காலமாகவே உள்ள சமூகக் குற்றம்தான். சமீபத்தில் வெளியான ‘திமிரு பிடிச்சவன்’ திரைப்படம் கூட இந்தப் பின்னணியை வழக்கமான சினிமா பாணியில் பயன்படுத்தியுள்ளது. ஏறத்தாழ லோகேஷூம் அதையே பயன்படுத்தியுள்ளார்.

இன்றைக்கு கொலையாளிகளாக ஊடகச் செய்திகளில் அடிபடுபவர்களின் புகைப்படங்களைப் பார்த்தால் தெரியும். அவர்களின் வயது என்பது ஏறத்தாழ இருபதுக்குள்தான் இருக்கும். இதுவொரு தீவிரமானதொரு சமூகப் பிரச்சினை. 

 

காவல்நிலையங்களும் சிறைக்கூடங்களும்  நீதிமன்றங்களும் குற்றத்தைக் குறைப்பதற்குப் பதிலாக அவற்றைப் பயிற்சி மையங்களாக மாற்றி வைத்திருக்கின்றன. ஏனெனில் சமூகத்தில் நிகழும் குற்றங்கள்தான் அவர்களின் முதலீடு. அவை தொடர்ந்து நிகழ்ந்தால்தான் அவர்கள் லாபம் சம்பாதிக்க முடியும்.

ஆனால் இப்படியொரு தீவிரமான பிரச்சினையை வழக்கமான சினிமா பாணியிலேயே லோகேஷ் கையாண்டிருப்பது துரதிர்ஷ்டமானது. கூர்நோக்கு பள்ளி கூடம் கூட சினிமா செட் என்று நன்றாகத் தெரியுமளவிற்கு அத்தனை போலித்தனமான காட்சிகளால் அவை நிறைந்துள்ளன. ‘மகாநதி’ திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் சிறை மற்றும் அதன் காட்சிகளின் தீவிரத்தை இதனுடன் ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரியும். ‘மாஸ்டர்’ படத்தின் காட்சிகள் எத்தனை அமெச்சூர் என்று.

*

வணிக சினிமாவின் எல்லைக்குள்ளேயே எவ்வளவோ செய்யலாம். ஆனால் நாயகனை முன்னிறுத்துவதிலேயே லோகேஷ் கவனமாக இருந்துள்ளது துரதிர்ஷ்டம்.

எம்.ஜி.ஆர் நடித்த பல்லாண்டு வாழ்க, கமலின் ‘நம்மவர்’.. ஏன் சமீபத்திய ரஜினியின் ‘பேட்ட’ என்று பல திரைப்படங்கள் நினைவிற்கு வந்து போகின்றன. சிறார் சீர்திருத்த பள்ளியின் பின்னணியில் பாலகுமாரன் ஒரு நாவல் எழுதியுள்ளார். அதில் இருந்த நம்பகத்தன்மையும் விறுவிறுப்பும் கூட இதில் இல்லை.

இதர படங்களில் இருந்து காப்பியடிக்கும் சமாச்சாரத்தை படத்தின் உள்ளேயே நிறைய இடங்களில் கிண்டலடித்திருப்பது ரசிக்க வைத்திருக்கிறது. ஒருவகையில் இயக்குநரின் சுயவாக்குமூலம் என்று கூட இதைச் சொல்லலாம். மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாக பேசி விட்டார் போலிருக்கிறது.

அதற்காக விஜய் ஒவ்வொருமுறையும் தன் ‘காதல் கதை’யை – கிளைமாக்ஸ் முடிந்த பின்னரும் கூட – அவிழ்த்து விடுவது ஓவர். அதிலும் அந்த ‘வாடா என் மச்சி’ நடனம் – ஆகக் கொடூரம்.

‘இரும்புக்கை மாயாவி’யாக விஜய்சேதுபதி ஆங்காங்கே ரசிக்க வைக்கிறார். ஆனால் சிமெண்ட் மூட்டையை குத்துவது போல எதற்கெடுத்தாலும் அவர் கையை ஓங்கிக் கொண்டு வருவது காமெடியாக இருக்கிறது. 

*

லோகேஷ் என்கிற இளம் திறமைசாலி, இப்படி ‘கொத்துப் பரோட்டா’ மாஸ்டராக பலியாகியிருப்பது காலத்தின் கோலம்.suresh kannan