Thursday, May 20, 2021

The Great Indian Kitchen (2021) - சமையலறை என்னும் ஆயுள் தண்டனை

 
கடந்த ஜனவரி மாதத்தில் வெளியான 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' என்னும் மலையாளத் திரைப்படம் பரவலான கவனத்தையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. 'பெண் விடுதலை' என்னும் கருத்தாக்கம்தான் இதன் மையம். சமையல் அறையில் அடைபட்டுள்ள பெண்களின் நூற்றாண்டுத் துயரத்தை மிக கச்சிதமாக பதிவு செய்துள்ளது இந்தத் திரைப்படம். மிகையோ, ஆர்ப்பாட்டமோ இல்லாமல் மிக இயல்பான திரைமொழியில் உருவாக்கப்பட்டிருப்பதுதான் இதன் விசேஷமான அம்சம்.


நமது ஆதி சமூக அமைப்பானது 'தாய் வழிச்சமூகமாகவே' இருந்தது. பெண்தான் ஒரு மனிதக் கூட்டத்தை தலைமையேற்று வழிநடத்தினாள். ஆனால் ஒரு கட்டத்தில் நிலைமை மாறிப் போனது.  ஆண் பொருள் தேடி வருபவனாகவும் பெண் வீட்டின் பொறுப்பேற்று குழந்தை வளர்ப்பிற்கும், சமையல் உள்ளிட்ட வீட்டுப் பணிகளை செய்பவளாகவும் மாறினாள். பெண்கள் கல்வி கற்று பணிக்குச் செல்லத் துவங்கி விட்ட இந்த நவீன யுகத்திலும் இந்த அமைப்பு முறையில் பெரிதும் மாற்றம் இல்லாமல் இருப்பது துரதிர்ஷ்டமானது.

குழந்தைகளுக்கான பாடப்புத்தகங்களில் 'குடும்பம்' என்பதைக் குறிக்கும் படத்தைக்  கவனித்தால் 'தந்தை' என்பவர் வரவேற்பறையில் அமர்ந்து நாளிதழ் வாசித்துக் கொண்டிருப்பார். மனைவி என்பவர் சமையல் அறையில் பணி செய்து கொண்டிருப்பார். குழந்தைகள் தரையில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும். சமையல் என்றால் அது பெண் மட்டுமே செய்ய வேண்டியது என்பது நமது ஆழ்மனதில் அழுத்தமாகப் படிந்திருப்பதின் விளைவு இது. கணவன், மனைவி ஆகிய இருவருமே பணிக்குச் செல்லும் சமகால சூழலில் கூட சமையல் பணி பெண்களின் தலையில் மட்டுமே கூடுதலாக சுமத்தப்பட்டுள்ளது.

கவிஞர் ஜெயபாஸ்கரனின் 'மரபு' என்னும் தலைப்பிட்ட கவிதையை இங்கு நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.

வியர்க்க விறுவிறுக்க
எனக்கு நானே புலம்பியபடி

எதையாவது தேடிக் கொண்டிருப்பதை
சமையலறையின் ஜன்னல் வழிப்பார்த்து
பரிகாசம் செய்கிறாள் என் மனைவி.

அவள் சொல்கிறாள்...

சமையலறையில் என் கண்களை கட்டி
விட்டால் கூட
எந்த பொருள் மீதும் விரல் படாமல்
கேட்டப் பொருளை
கேட்ட மாத்திரத்தில்
எடுத்துத் தருவேன் என்று
சவால் விடவும் செய்கிறாள்
அங்கிருந்து.

அவளிடம் சொல்லிக் கொள்வதில்லை
நான்
நீ மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக
அங்கேயே இருக்கிறாய் என்பதை...’



இந்தக் கவிதையின் கடைசிப்பகுதி இருக்கிறதல்லவா.. அதுதான் இந்தத் திரைப்படத்தின் சாரம். உலகம் முழுக்க சமையல் அறையில் நெடுங்காலமாக அடைபட்டிருக்கும் பெண்களின் உள்ளார்ந்த அவஸ்தைகளையும் மெளனக் கோபங்களையும் உண்மைக்கு மிக நெருக்கமான தொனியில் நின்று காட்சிப்படுத்தியிருக்கிறது இந்தத் திரைப்படம்.

*

இதில் வரும் பிரதான பாத்திரங்களுக்கு பெயர்கள் இல்லை. 'அவள்' 'அவன்' என்று பெயரிடப்படாமல் காட்சிகளின் வழியாக நகர்வதே இதை அனைவருக்கும் பொதுமையாக அடையாளப்படுத்தி பார்க்கத் தோன்றுகிறது. அந்த 'அவள்' நடனத்தில் ஆர்வம் உள்ளவள். நிச்சயிக்கப்பட்ட திருமணத்தின் மூலம் தன் வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்கு நகர்கிறாள்.

பெண் பார்க்கும் படலத்தின் போது அவனும் அவளும் சங்கோஜத்துடன் ஓரிரு வார்த்தைகள் பேசிக் கொள்வதற்குள் காட்சி சட்டென்று வெட்டப்பட்டு அடுத்ததாக திருமணக்காட்சி காட்டப்படுகிறது. இதன் மூலம் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களின் நடைமுறை குரூரம் பளிச்சென உணர்த்தப்படுகிறது. ஒருவரையொருவர் அறிந்து புரிந்து கொள்ளும் குறைந்தபட்ச அவகாசம் கூட தரப்படுவதில்லை.

பாரம்பரிய பெருமை வாய்ந்த ஒரு 'பெரிய' குடும்பத்தில் வாழ்க்கைப்படுகிறாள் ‘அவள்’. புது மணப்பெண் என்பதற்கான ஆரம்பக்கட்ட சலுகைகள் துவக்க நாட்களில் தரப்படுகின்றன. ஆனால், வெளிநாட்டில் வசிக்கும் தன் மகளை கவனித்துக் கொள்வதற்காக கிளம்பி விடுகிறாள் அந்த வீட்டின் தலைவி. எனவே வீட்டின் மொத்த பணிச்சுமையும் புது மணப்பெண்ணின் தலை மீது விழுகிறது. அப்போது ஆரம்பிக்கிறது அவளின் அன்றாட தினங்களின் போராட்டம். சமையல் அறையில் உள்ள பாத்திரங்களோடும் இயந்திரங்களோடும் இணைந்து அவளும் ஓர் அஃறிணைப் பொருளாக மாறுகிறாள். மனப்புழுக்கத்தின் உச்சத்தில் அவளின் மெளனக்கோபம்  ஒரு நாள் ரெளத்திரமாக வெடிப்பதுதான் இதன் கிளைமாக்ஸ்.

*

சமையல் போட்டி தொடர்பான ரியாலிட்டி ஷோவோ என்று நினைக்கும்படி, படத்தின் பெரும்பாலான பகுதியானது உணவு தயாரிக்கப்படும் காட்சிகளின் வழியாகவே கடக்கின்றன. குக்கர் சீறும் சத்தம், காய்கறிகள் நறுக்கப்படும் க்ளோசப் காட்சிகள்,  டாப் ஆங்கிளில் காட்டப்படும் அடுப்பு மேடை, வற்றல் பொறிக்கப்படும் ஒலி, உணவு பரிமாறப்படுவது என்று குறிப்பிட்ட காட்சிகளே திரும்பத் திரும்ப  வருகின்றன. ஒரு திரைப்படத்தின் தொனியை சரியாக உள்வாங்கிக் கொள்ள இயலாதவர்களுக்கு ஒருவேளை இந்தக் காட்சிகள் சலிப்பை ஊட்டக்கூடும்.

ஆனால் சற்று யோசித்துப் பாருங்கள். நடைமுறையில் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை சமையல் அறை தொடர்பான விஷயங்களுக்கே செலவிடும் பெண்களின் நிலைமை என்ன? கனவில் கூட அவர்களுக்கு உணவு தயாரிக்கும் சலிப்பான காட்சிகளே திரும்பத் திரும்ப வரும். இந்த பரிதாபமான நடைமுறை அவஸ்தையைத்தான் இயக்குநர் பார்வையாளர்களுக்கு கடத்த முயல்கிறார். ஒன்றரை மணி நேரத் திரைப்படத்திலேயே இவற்றை நம்மால் சகிக்க முடியவில்லையென்றால் வருடக்கணக்கில் இதையே செய்பவர்களின் நிலையை நாம் யோசித்துப் பார்க்க வேண்டாமா?

அந்த வீட்டில் இரண்டு ஆண்கள் இருக்கிறார்கள். ஒன்று 'அவளின்' கணவன். இரண்டாவது 'அவளின்' மாமனார். பொதுவாக இது போன்ற பெண்ணின் சிரமங்களைச் சொல்லும் திரைப்படங்களில் ஆண் பாத்திரங்கள் கொடூரமானவர்களாகவும் ஆணாதிக்கத்தனம் மிகுந்தவர்களாகவும் சித்தரிக்கப்படுவார்கள்.  அவர்களின் அப்பட்டமான வில்லத்தனம் வெளிப்படையாக பெருகி வழியும். இதன் மூலம் பெண் பாத்திரத்தின் மீதான அனுதாபமும் ஆணின் மீதான கோபமும் பார்வையாளர்களுக்கு கூடுதலாக ஏற்படச் செய்வதற்கான உத்தி இது.

ஆனால் இதில் வரும் ஆண்கள் மிக ‘இயல்பானவர்களாக’ இருக்கிறார்கள். அதாவது தங்களிடம் தன்னிச்சையாக பெருகியோடும் ஆணாதிக்க மனோபாவம் பற்றிய பிரக்ஞையோ கவனமோ அவர்களிடம் துளியும் இல்லை. முருங்கைக்காயை மென்று மேஜையில் அப்படியே துப்புகிறார்கள். சாப்பிட்ட தட்டை கழுவுவதில்லை.

‘அவளின்’ மாமனார், ‘மகளே’ என்றுதான் அன்புடன் ‘அவளை’ அழைக்கிறார். ஆனால் மருமகளின் பணிச்சுமையைப் பற்றி ஏதும் கவலை கொள்ளாதவராக இருக்கிறார். ‘விறகு அடுப்பில் சோறு பொங்கினால்தான் தனக்குப் பிடிக்கும்’ என்பதை மருமகளிடம் நயமுடன் சொல்கிறார். ஆக அவள் இரட்டை சமையல் செய்ய வேண்டியிருக்கிறது. டூத் பிரஷில் பேஸ்ட் வைத்து தருவதில் இருந்து அவர் வெளியில் செல்லும் போது செருப்பு எடுத்து வைப்பது வரையான பணிகளை வீட்டுப் பெண்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஈஸி சேரில் சாய்ந்து கொண்டு மனமுருக சாமி கும்பிடுவதுதான் அவரின் வேலை. இத்தனை ‘நல்லவராகவே’ அவர் இருக்கிறார்.

‘அவளின்’ கணவனும் அப்படியே. தனது தந்தைக்கு பாசத்துடன் பரிமாறும் அனபான மகன்தான். ஆனால் ஒருமுறை கூட தன் மனைவியை அழைத்து ‘நீயும் அமர்ந்து சாப்பிடு’ என்று சொல்வதில்லை. ஒருமுறை கணவனும் மனைவியும் சாப்பிட வெளியில் செல்கிறார்கள். உணவகத்தில் சாப்பிடும் போது ஒரு சிறிய கோப்பையில் எலும்புகளை கடித்து ஜாக்கிரதையாக போடுகிறான் கணவன்.. ‘இந்த மேனர்ஸை வீட்டிலும் பின்பற்றலாமே?” என்று மனைவி தயங்கிய படி சுட்டிக் காட்டியவுடன் அவனுக்கு கோபம் வந்து விடுகிறது. முகம் மாற எழுந்து போய் விடுகிறான்.

*

சமையல் என்னும் பணியோடு அதைப் பரிமாறுதல் என்னும் கூடுதல் சுமையையும் பெண்கள் சுமக்க வேண்டியிருக்கிறது. இதில் வரும் பெண்கள், சமையல் அறைக்கும் சாப்பாட்டு மேஜைக்கும் இடையே பதட்டத்துடன் ஓடிய படியே இருக்கிறார்கள். ‘ஏவ்’ என்கிற ஏப்பத்துடன் உணவைச் சுவைத்து விட்டு எழும் பெரும்பாலான ஆண்கள் அதைப் பாராட்டி ஒரு வார்த்தை மனைவியிடம் சொல்வதில்லை. இதைப் போன்ற பல விஷயங்கள் இந்தத் திரைப்படத்தின் உள்ளே மெளனமான காட்சிகளாக விரிந்து செல்கின்றன.

ஆண்கள் துப்பி வைத்து விட்டுப் போகும் கழிவுகளை முகச்சுளிப்புடன் தினமும் எடுத்துப் போடுகிறாள் ‘அவள்’. இப்படி தினமும் முகத்தைச் சுளித்து சுளித்து அந்த சுளிப்பே அவளது முகத்தில் நிரந்தர பாவமாக தங்கி விடுகிறது. சமையல் மேடையில் மலை போல் குவிந்து கிடக்கும் பாத்திரங்களை திகைப்புடன் பார்த்து நிற்பதே ‘அவளுக்கு’ தினசரி வேலையாகி விடுகிறது. முகச்சுளிப்புடன் எச்சில் பாத்திரங்களை கழுவி விட்டு கையை நன்கு கழுவுகிறாள். ஆனால் தாம்பத்திய உறவின் போது கூட அந்த நாற்றம் துரத்திக் கொண்டே வருகிறது. அப்போதும் கையை முகச்சுளிப்புடன் முகர்ந்து பார்த்துக் கொள்கிறாள்.

இந்தத் திரைப்படத்தின் கிளைமாக்ஸை சமையல் அறை கழிவு நீரில் வைத்திருக்கிறார் இயக்குநர். பாத்திரம் கழுவும் நீர் செல்லாமல் அடைத்துக் கொள்கிறது. மறுபடியும் முகச்சுளிப்புடன் நாற்றமடிக்கும் கழிவு நீருக்காக ஒரு பக்கெட்டை தினமும் வைக்கிறாள். இது தொடர்பான காட்சிகள் அவ்வப்போது காட்டப்படுகின்றன.

“யாராவது பிளம்பரை கூட்டி வரக்கூடாதா?” என்று தினமும் கணவனிடம் கேட்கிறாள். அவனோ அது தனது பணியல்ல என்கிற முகபாவத்துடன் ‘பார்க்கலாம்’ என்று விட்டேற்றியாக கிளம்பி விடுகிறான். ஆனால் பிரச்சினை தீர்க்கப்படுவதேயில்லை. ஒரு தொழிற்சாலை இயந்திரத்தில் உள்ள குறையை ஒரு தொழிலாளி சுட்டிக் காட்டினால் அது உடனே சரியாக்கப்பட்டு விடுகிறது. உற்பத்தி பாதிக்கப்படக்கூடாதே என்கிற அச்சத்தினால். ஆனால் வருடம் பூராவும் சமையல் அறையில் பணிபுரியும் பெண்களுக்கு ஒரு சிறிய வசதி கூட செய்து தரப்படுவதில்லை என்கிற நடைமுறை கசப்பை இந்தக் காட்சிகள் இயல்பாக பதிவு செய்திருக்கின்றன.

இது சார்ந்த மெளனக்கோபம்தான் ஒரு கட்டத்தில் அவளை வெடிக்க வைக்கிறது. பல்வேறு அழுத்தங்கள் இணைந்து வெடிக்கும் அந்தத் தருணத்தில் அவள் என்ன செய்கிறாள் என்பதை நீங்கள் படத்தைப் பார்த்துதான் அறிந்து கொள்ள வேண்டும்.

*

இந்தத் திரைப்படத்தில் பின்னணி இசை என்பதே இல்லை. சமையல் அறையில் உணவு தயாரிக்கப்படும் சத்தங்கள், சாப்பிடும் ஒலிகள் போன்றவைகளால் மட்டுமே முழுத் திரைப்படமும் நிறைந்திருக்கிறது. படத்தின் துவக்கத்திலும் இறுதியிலும் பொருட்பொதிந்த இரண்டு பாடல்கள் வருகின்றன.

‘அவளாக’ நிமிஷா சஜயன் அற்புதமாக நடித்திருக்கிறார். ஏறத்தாழ இந்தத் திரைப்படத்தைத் தூக்கிச் சுமப்பவராக இவரைத்தான் சொல்ல வேண்டும். பொதுவாக நடிகைகளுக்கு இருக்கும்  மிகையாக ஒப்பனையோ, செயற்கையான பொலிவோ இல்லாமல் இயல்பான தோற்றத்துடன் இருப்பதுதான் நிமிஷா சஜயனின் பலம் எனலாம். எனவே சராசரிப் பெண்களின் துயரத்தைப் பேசும் இந்தப் பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இந்த வருடத்திற்கான தேசிய விருதிற்கு தகுதியானவர் என்று கணிக்கும் அளவிற்கு தனது சிறந்த நடிப்பைத் தந்திருக்கிறார்.

கணவராக சூரஜ் வெஞ்சரமூடு மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அடிப்படையில் இவர் ஒரு நகைச்சுவை நடிகர். மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட். பிற்பாடு குணச்சித்திர வேடங்களில் பிரகாசிக்கத் துவங்கினார். இந்தத் திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் அருமையாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சராசரி ஆணின் மனோபாவத்தை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

இத்திரைப்படத்தின் பாத்திரத்தின்படி இவர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர். கல்வி நிலையத்தில் ‘குடும்பம்’ என்றால் என்ன? என்பதை மாணவர்களுக்கு இவர் விளக்கும் ஒரு காட்சி வருகிறது. ஆனால் நடைமுறையில் அதைப் பற்றிய அறிவே இவருக்கு இல்லை. நாம் கற்கும் கல்வியை பொருளீட்டுவதற்காக மட்டுமே பயன்படுத்துகிறோம்; அதை நம் சிந்தனையின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதேயில்லை என்பது போன்ற மிக முக்கியமான விஷயங்கள் போகிற போக்கில் காட்சியாகிக் கடக்கின்றன.

முன்பே குறிப்பிட்டபடி இதில் வரும் ஆண்கள் வெளிப்படையான வில்லன்களாக சித்தரிக்கப்படவில்லை. தன்னிச்சையாகவே அவர்களிடம் ஆணாதிக்க மனோபாவம் பெருகியோடுகிறது. ஆனால் அதைப் பற்றிய உணர்வோ பிரக்ஞையோ அவர்களிடம் சுத்தமாக இல்லை.

சமூகத்தில் தொடர்ந்து நிலவும் இம்மாதிரியான ஆணாதிக்க மனோபாவத்திற்கு ஒருவகையில் பெண்களும் காரணமாக இருக்கிறார்கள் என்பதே கசப்பான உண்மை. குழந்தைகளை சிறுவயதில் பாலின பேதத்துடன் வளர்ப்பதுதான் அடிப்படையான காரணம். பெண் குழந்தை என்றால் அவள் சமையல் கற்றுக் கொள்வது அவசியம் என்று சிறுவயதிலேயே மூளைச் சலவை செய்யப்படும் போது ஆண் குழந்தைக்கு மட்டும் பல்வேறு சலுகைகள் தரப்படுகின்றன. எனவே தான் அதிகாரம் செய்யப்பிறந்தவன், சமையல் பணி என்பது தனக்கு இழுக்கு தரக்கூடியது என்று ஒவ்வொரு ஆணும் உயர்வுமனப்பான்மையுடன் கருதத் துவங்கி விடுகிறான்.

போலவே பெண்களுக்கு இழைக்கப்படும் துயரங்களுக்கு சமயங்களில் பெண்களே காரணமாக இருக்கிறார்கள். இது தொடர்பான காட்சிகளும் இந்தத் திரைப்படத்தில் இயல்பாக வந்து போகின்றன. ‘மாதவிலக்கு நாட்கள்’ என்பது எத்தனை உடல் அவஸ்தையைத் தரக்கூடியது என்பது ஒவ்வொரு பெண்ணுக்குமே நன்கு தெரியும். ஆனால் ‘தீட்டு’ என்கிற பெயரில் அந்த நாட்களில் வீட்டின் பின்புறத்தில் ஒதுக்கி அமர வைப்பது, தாமதமாக உணவு தருவது உள்ளிட்ட பல துன்பங்களை பெண்களே சக பெண்களுக்குத் தருகிறார்கள்.

‘சமையல் அறையை’ ஓர் அதிகார மையமாக கருதிக் கொள்வதால் வரும் பிரச்சினையிது. புதிய மருமகள் சமையல் அறையில் மெல்ல ஆக்கிரமிப்பு செய்வதை எந்தவொரு மாமியாரும் நாத்தனாரும் அத்தனை எளிதில் அனுமதிப்பதில்லை. தங்களால் இயன்ற அத்தனை தடைகளையும் செய்கிறார்கள். அவளுக்கு எதிராக தங்களின் கணவரை, மகனைத் தூண்டி விடுகிறார்கள். பெரும்பாலான வரதட்சணைக் கொடுமைகளின் பின்னணியில் பெண்களே இருக்கிறார்கள் என்பதுதான் நடைமுறை. அடிமைகளாக இருப்பவர்கள் தங்களுக்குள்ளேயே ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு சாவதைப் போன்ற அவல நகைச்சுவை இது. ‘சமையல் அறை என்பது அதிகாரம் அல்ல, ஆணாதிக்க உலகம் தந்திரமாக அமைத்திருக்கும் சிறை’  என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.

*

மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கையுள்ள நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது என்றாலும் பாலியல் பற்றிய அடிப்படையான விழிப்புணர்வு இங்கு பெரும்பாலான ஆண்களிடம் இல்லை. சொற்ப நிமிடங்களுக்குள் தங்களின் பாலியல் வேகத்தை தணித்துக் கொள்ளும் வடிகால்களாகவே பெண்ணின் உடலைக் கையாள்கிறார்கள். பெண்களின் உடல் பற்றிய அறிவு, அவர்களின் உணர்வுகள், விருப்பங்கள் ஆகியவவை பற்றி பெரும்பாலான ஆண்களுக்கு கவலையில்லை. அவற்றைப் பற்றிய பாலியல் அறிவு பெரும்பாலோனார்களிடம் இல்லை என்பதே உண்மை.

“நீங்கள் கொள்ளும் பாலுறவு எனக்கு வலியைத் தருவதாக இருக்கிறது. Foreplay என்பதைப் பற்றி நீங்கள் அறிய மாட்டீர்களா?” என்று தயக்கத்துடன் கணவனை ஒருமுறை கேட்டு விடுகிறாள் ‘அவள்’. என்ன இருந்தாலும் படித்தவள் அல்லவா? ஆனால் கணவனுக்கு கோபம் வந்து விடுகிறது. ‘ஓஹோ.. அதைப் பற்றியெல்லாம் உனக்குத் தெரியுமா?’ என்று மலினமாக கிண்டல் செய்கிறான். இதன் மூலம் அவன் கேள்விக்குட்படுத்த முற்படுவது அவளின் கற்பை. தன் கையாலாகதனத்தை மறைத்துக் கொள்ள அவளை அவமதிப்பதின் மூலம் திருப்தி கொள்கிறான் ‘அவன்’.

தினம் தினம் சமையல் அறையில் அல்லாடும் அவளுக்கு சில நொடிகள் ஆசுவாசம் தருபவளாக இருப்பவள், பால் பாட்டில் எடுத்து வரும் சிறுமி மட்டுமே. ‘இவளுக்காக’ சிறிய அன்பளிப்புகளை எடுத்து வருகிறாள். மூச்சுத் திணறும் அந்தச் சூழலில் சிறிதாவது அவளுக்கு ஆசுவாசம் தருவது இந்தச் சிறுமியின் ‘வருகை’ மட்டுமே.

இவள் மாதவிலக்கான சமயங்களில் சமையல் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. ‘ஆச்சாரம்’ என்கிற பெயரில் இவளுக்கு கிடைக்கும் விடுதலையை அதிர்ஷ்ட விடுமுறை என்றே கொள்ளலாம். என்றாலும் அந்தச் சமயத்திலும் மனிதாபிமானத்தோடு பணிப்பெண்ணுக்கு உதவுகிறாள். பணிப்பெண்ணும் இவளும் வீட்டைச் சுத்தம் செய்யும் காட்சிகள் திரும்பத் திரும்ப காட்டப்படுகின்றன. பாரம்பரிய வீட்டின் மருமகளும், பணிப்பெண்ணும் ஏறத்தாழ ஒரே நிலையில்தான் இருக்கிறார்கள் என்பது நமக்கு நுட்பமாக உணர்த்தப்படும் காட்சிகள் இவை. பணிப்பெண்ணின் நிலைமை இன்னமும் மோசமானது என்பது சொல்லாமலேயே நாம் புரிந்து கொள்ளக்கூடிய விஷயம்.

*

ஜோ பேபி இயக்கியிருக்கும் நான்காவது திரைப்படம் இது. ஆர்ப்பாட்டமில்லாத திரைமொழியின் வழியாக தான் சொல்ல வந்ததை மிக அழுத்தமாகவும் ஆழமாகவும் பார்வையாளர்களுக்கு கடத்தியிருக்கிறார். உண்மையில் இது ஆண்களுக்கான படம். அறிந்தோ அல்லது அறியாமலோ ஆண்களின் பல எதிர்வினைகளில், உடல்மொழிகளில், அசைவுகளில் ஆணாதிக்க மனோபாவம் பெருகி வழிந்தபடியே இருப்பதை அவர்களுக்கே உறுத்தும்படியாக உருவாக்கியிருப்பதை இயக்குநரின் வெற்றி எனலாம்.

பொருளாதாரச் சுதந்திரம் என்பது பெண் விடுதலையின் ஒரு பிரதான வாசல் என்பதையும் படம் இறுதியில் உணர்த்துகிறது. இதில் ஒரு காட்சி வருகிறது. புகுந்த வீட்டின் அழுத்தங்களைத் தாங்க முடியாத ‘அவள்’, ஒரு கட்டத்தில் வெடித்து பிறந்த வீட்டிற்கு வந்து விடுகிறாள். அப்போது வீட்டிற்குள் நுழையும் அவளது இளைய சகோதரன், தனது தங்கையிடம் ‘குடிக்கத் தண்ணீர் கொண்டு வா’ என்று கேட்கிறான். “ஏன் உனக்கு கை இல்லையா..நீயே போய் எடுத்து குடிக்க முடியாதா?” என்று ‘அவள்’ வெடிக்கிறாள். ஆணாதிக்கச் சிந்தனையானது சமூகத்தில் இன்னமும் மட்டுப்படாமல் இருப்பதற்கு குழந்தைகளின் வளர்ப்பு முறை ஒரு முக்கியமான காரணியாக இருப்பதை இந்தக் காட்சி அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது.

குறிப்பிட்ட வயதுகளில் இருக்கும் பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நுழைவது தடை செய்யப்பட்ட விவகாரமானது கேரளத்தில் பெரும் சர்ச்சைகளையும் பெண்ணியம் சார்ந்த விவாதங்களையும் எதிர்ப்புகளையும் எழுப்பியது. அதுவும் இந்தப் படத்தில் நுட்பமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. பெண்ணியக் கருத்துகளுக்கு ஆதரவான ஒரு வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்கிறாள் ‘அவள்’. பழமைவாதத்தில் ஊறியுள்ள சில கலாசார காவலர்களின் மிரட்டல் காரணமாக அந்த வீடியோவை நீக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறான் ‘கணவன்’. கருத்துச் சுதந்திரம் என்பது பெண்களுக்கு எப்படி முற்றிலுமாக மறுக்கப்படுகிறது என்பதை விளக்கும் இந்தக் காட்சிக் கோர்வையின் ஊடே இந்துத்துவ அரசியலின் கோர முகங்களும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

அப்பட்டமான வெகுசன சினிமாவின் பாணியிலிருந்து விலகி மாற்று சினிமாக்களை உருவாக்குவதில் மலையாளத் திரையுலகம் எப்போதுமே தொடர்ந்து சாதித்து வருகிறது. இந்த நோக்கில் ஒரு மிகச் சிறந்த உருவாக்கமாக ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தைச் சொல்லலாம். பல நூற்றாண்டுகளாக சமையல் அறையில் சிறைப்பட்டிருக்கும் பெண்களுக்கு ஒரு சிறிய ஜன்னலைத் திறந்து அவர்களை ஆசுவாசப்படுத்தியிருக்கிறது இந்தத் திரைப்படம்.


(பேசும் புதிய சக்தி - மே 2021 இதழில் வெளியானது)


 

suresh kannan

3 comments:

John said...

உங்கள் வீட்டில் யார் சமையல்?

Venkat said...

Very well written review Suresh. Thank you.

Preethi Uthirakumar said...

👏👏👏👏