Tuesday, May 11, 2021

Nayattu (2021) - வேட்டையாடப்படும் காவல்துறை

Nayattu (The Hunt)  என்கிற மலையாளத் திரைப்படம் பார்த்தேன். ஒரு நல்ல அரசியல் திரில்லர். தமிழில் வெற்றிமாறன் இயக்கிய படம் போல் இருந்தது.


சார்லி, உதாஹரணம் சுஜாதா போன்ற திரைப்படங்களை இயக்கிய மார்ட்டின் பிராக்கட்டின் திரைப்படம்.

*

போலீஸ் அதிகாரிகள் தொடர்பாக பெரும்பாலும் இரண்டு விதமான திரைப்படங்களை நாம் பார்த்திருப்போம். ஒன்று, காவல்துறையின் பெருமிதங்களை கதறக் கதற பேசும் திரைப்படங்கள் (உதா: சாமி)

இரண்டு, மோசமான காவல்துறை அதிகாரியால் சராசரி நபர் ஒருவர் வேட்டையாடப்படும் படங்கள். (உதா: தில்)

‘நாயாட்டு’ காவல்துறையைச் சேர்ந்த மூவர், காவல் துறையினராலேயே வேட்டையாடப்படும் பின்னணியைப் பேசுகிற திரைப்படம். மிகச் சாதாரணமாக ஆரம்பிக்கும் திரைப்படம் ஒரு கட்டத்தில் ராக்கெட் வேகத்தில் பயணிக்கிறது. அதன் திகிலுக்கு கூடுதல் சுவாரசியத்தைச் சேர்க்கிறது பதைபதைப்பான பின்னணி இசை.

*
ஓர் எதிர்பாராத விபத்து, காவல்துறையைச் சேர்ந்த மூன்று நபர்களை சிக்கல்களுக்குள் இட்டுச் செல்கிறது. அரசு என்னும் பிரம்மாண்ட இயந்திரத்திற்கு முன்னால் காவல்துறையைச் சேர்ந்த கீழ்நிலை நபர்களும் கூட ஒரு புழுவைப் போல் சாதாரணமாகி விடுகிற யதார்த்தத்தை இந்தத் திரைப்படம் அற்புதமாக சித்தரித்திருக்கிறது.

இது தலித் விரோத படம் என்பது போல் சில விமர்சனங்களைப் பார்த்தேன். இதில் பாதிக்கப்படுபவர்கள் இரு தரப்பிலுமே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். (காவல்துறையில் ஒருவர் மட்டும் கிறிஸ்துவர்).

அது ஆதிக்க சமூகமோ, அல்லது தாழ்த்தப்பட்ட சமூகமோ எந்தவொரு சமூகத்திலும் சமூக விரோதிகள் இருப்பார்கள். கீழ்மைவாதிகள் இருப்பார்கள். இதை மறுத்து நாம் ரொமாண்டிசைஸ் செய்ய முடியாது. அவர்களையும் இணைத்து ஒரு திரைப்படம் சித்தரிக்கும் போது அதை சம்பந்தப்பட்ட ஒட்டுமொத்த சமூகத்திற்காக பொருத்திப் பார்ப்பது சரியல்ல.

உண்மையில் இந்தத் திரைப்படம், தலித் பிரச்சினையை அரசு என்னும் இயந்திரம்  அதன் செளகரியத்திற்காக வெவ்வேறு விதங்களில் கையாளும் முறையைப் பற்றித்தான் பேசுகிறது.

இந்தச் சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போது அந்தப் பிரதேசத்தில் இடைத் தேர்தல் வரப்போகிறது. விபத்தில் இறந்தவன் தலித் இளைஞன் என்பதால் ஆளுங்கட்சிக்கு அது தலைவலியாகிறது. அந்தத் தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் அம்சமாக அந்த மரணம் மாறுகிறது. எனவே ஆளும் அரசாங்கம் இந்தப் பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொள்கிறது. போலீஸ்காரர்களை பலி போட்டாவது பிரச்சினையை வெற்றிகரமாக கடக்க நினைக்கிறது.  அல்லாவிட்டால் இது இன்னொரு சாதாரண மரணமாக மாறியிருக்கும்.

*

மண்டேலா திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். இரண்டு சமூகங்களைச் சேர்நதவர்கள் மட்டுமே சரிசமமான எண்ணிக்கையில் அந்த ஊரில் இருக்கையில் ‘வேறு யாரும் இல்லையா?” என்று ஒருவர் கேட்க “அவங்களைத்தான் நாம துரத்தி விட்டுட்டமே’ என்று ஒருவர் சொல்வார்.

ஆக.. தேர்தல் காலங்களில் மட்டுமே தலித் சமூகத்திற்கும் அது தொடர்பான பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதர காலங்களில் அவை சமயத்திற்கு ஏற்ப ஊறுகாயாகவோ அல்லது அவசியப்பட்டால் ஊதிப் பெருக்கப்பட்டதாகவோ மாறுகிறது. இதைத்தான் இந்தத் திரைப்படம் அழுத்தமாக உணர்த்துகிறது.

*

'இத்தனை வருட அனுபவம் வாய்ந்த ஓர் போலீஸ்காரரால் இந்தப் பிரச்சினையை முறைப்படி சமாளித்திருக்கத் தெரியாதா?' என்னும் கேள்வி படம் பூராவும் எழுந்து கொண்டேயிருந்தாலும் திரைக்கதையை பல்வேறு விதமான நெருக்கடிக்குள் தள்ளி இந்த ஆதாரமான கேள்வியை பார்வையாளன் எழுப்புவதை மழுப்புவதில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார் எனலாம்.

இதன் முடிவு ஒருவித நிறைவின்மையைத் தந்தாலும், கடைசியில் இருவரும் என்ன முடிவெடுக்கிறார்கள் என்கிற எதிர்பார்ப்பையும் கூடவே தந்திருக்கிறது. அதுவே இதன் கிளைமாக்ஸிற்கு ஒருவகையான சுவாரசியத்தைத் தருகிறது.

குஞ்ஞாக்கோ போபன், ஜோஜூ ஜார்ஜ், நிமிஷா சஜயன் ஆகிய மூவருமே கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

அவசியம் காண வேண்டிய திரைப்படம். சேட்டன்மார்கள் நம்மை விடவும் அசுர வேகத்தில் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ‘நயாட்டு’வும் நிரூபிக்கிறது.


suresh kannan

No comments: