Saturday, December 16, 2006

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா

சென்னையின் 4வது சர்வதேச திரைப்பட விழா, எனக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்தவரின் அபான வாயு சத்தத்துடன் இனிதே துவங்கியது. "துட்டு கொடுத்து டிக்கெட் வாங்கிட்டோம். "மேற்படி" சீன்லாம் இருக்குமில்ல" என்று புலம்பிக் கொண்டிருந்த ஒருவரிடம் "மச்சான் கடவுள் நம்மள அப்படியெல்லாம் சோதிக்க மாட்டாரு, கவலப்படாத" என்று ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார் அவரது நண்பர். இந்திய சென்சார் இல்லாமல் திரையிடப்படும் இம்மாதிரியான சர்வதேச திரைப்படங்களில் கட்டற்ற பாலுறவுக் காட்சிகள் மிகுந்திருக்கும் என்கிற அற்பமான எண்ணத்துடன் வருபவர்கள், பதிலாக நீலப்பட குறுந்தகடுகளை நாடிப் போவது அவர்களது "நோக்கம்" முழுமையாக நிறைவேற ஏதுவாக இருக்கும். சுஜாதாவின் 'பிலிமோத்ஸவ்' என்கிற, சிறந்த சிறுகதைகளின் வரிசையில் சேர்க்கக்கூடிய ஒன்றுதான் என் நினைவுக்கு வருகிறது. திரைப்படவிழாவில் "பலான' நிழல் காட்சிகளுக்காக அலைபாய்ந்து ஏமாந்து திரும்பும் ஒருவன், ஒரு விடுதி வாசலில் நிஜமான பெண்கள் தொடர்புக்காக அணுகப்படும் போது பயந்து போய் விலகி ஓடுவான். மனித மனத்தின் உள்ளார்ந்த வேட்கையையும், மாறான பாசாங்கையும் பகடி செய்யும் கதை அது.

முன்னமே அல்லாமல் விழா நாளன்று அரங்க வாசலிலேயே நுழைவுச் சீட்டுகளுக்காக பதிவு செய்து கொள்ளமுடியும் என்று உட்லண்ஸ் தியேட்டருக்கு மாலை 6.30 மணிக்கு சென்றவனுக்கு, மறுநாள் காலையில்தான் பதிவு செய்ய முடியும் என்ற தகவல் அதிர்ச்சி அளித்தது. எனினும் அமைச்சர் தயாநிதிமாறன் விழாவை துவக்கி வைத்து சென்றதும், பதிவு செய்யாதவர்கள் உள்ளே அனுமதிக்கப்படக்கூடும் என்று விழா அமைப்பாளர் ஒருவர் சொன்னதில், அகதிகள் போல் சிலர் காத்திருந்தோம். தமிழக்த்தில் விழாவை தொடக்கி வைப்பதில் நல்லி குப்புசாமியோடு, தயாநிதிமாறன் போட்டி போடுகிறார் போலும். எனவே இவர் உளறிக் கொட்டுவதை கவனிக்க வேண்டிய துர்ப்பாக்கியத்தில் இருந்து தப்பியதை நினைத்து ஆசுவாசமாக இருந்தது. காத்திருந்த நேரத்தில், பளபளப்பான சுகாசினி உள்ளே போக, எஸ்.வி.சேகர் கொடுத்த ஒரு சாமியார் படத்தை அர்ச்சனா பயபக்தியோடு கண்ணில் ஒற்றிக் கொண்டு காரில் ஏறி கிளம்பினதை கவனிக்க முடிந்தது.

()

Photobucket - Video and Image Hosting

சமகால ஸ்பானிய இயக்குநர்களில் குறிப்பிடத்தகுந்தவரான பெட்ரோ அல்மோதோவர் இயக்கிய "VOLVER" (2006) (ஆங்கிலத்தில் Coming Back என்கிற அர்த்தம் வரும்படியான) ஸ்பெயின் நாட்டு படம் திரையிடப்பட்டது. மூன்று தலைமுறை பெண்களின் வாழ்க்கையை தொட்டுச் சென்றிருக்கும் இந்தப்படம் ஆணாதிக்க சமூகத்தின் நெருக்கடிகளை மிகுந்த மனஉறுதியுடன் தாங்குவதையும், நெருக்கடி எல்லை மீறிப் போகும் போது ஆவேசப்படுவதையும் மிகுந்த அழகியலுடனும், திறமையான திரைக்கதை உத்தியுடனும் சொல்கிறது.


Photobucket - Video and Image Hosting

சகோதரிகளான ராய்முண்டாவும் (Penelope Cruz) சோல்டாடும் (Lola Duenas), Raimunda-வின் மகளான பவுலாவும் (Yohana Cobo), தீ விபத்தில் கிராமத்தில் இறந்து போன பெற்றோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்வதில் படம் ஆரம்பிக்கிறது. பின்னர் அவர்களின் அத்தையை பார்க்கச் செல்கிறார்கள். மிகவும் வயதான நோய்வாய்ப்பட்ட அவர் யார் துணையுமின்றி தனியாக இருப்பதையும் சுவையான தின்பண்டங்கள் செய்து வைத்திருப்பதையும் வியக்கிறார்கள். ஆனால் அவரோ இறந்த போன இவர்களின் தாய்தான் அவரை கவனித்துக் கொள்வதாக சொல்கிறார். நோய் காரணமாக அவர் உளறுகிறார் என யூகித்துக் கொள்கின்றனர். ராய்முண்டா வீடு திரும்பும் போது வேலையை விட்டு வந்திருக்கிற கணவன் பீர் குடித்த படி சாக்கர் விளையாட்டை ரசித்துக் கொண்டிருக்கிறான். இருவருக்கும் வாதம் ஏற்படுகிறது. மகள் பவுலாவை தொடைகளுக்கிடையில் உற்றுப்பார்ப்பது, குளிக்கும் போது எட்டிப் பார்த்து செல்வது என்று விநோதமாக நடந்து கொள்கிறான்.

ராய்முண்டா ஒரு நாள் பணிமுடிந்து திரும்பும் போது பேருந்து நிலையத்திலேயே தன் மகள் குற்ற உணர்ச்சியோடும் கலக்கத்தோடும் காத்திருப்பதை கவனிக்கிறாள். அவளை விசாரித்துக் கொண்டே வீட்டுக்குள் நுழையும் போது தன் கணவன் கத்தியால் குத்தப்பட்டு இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைக்கிறாள். பவுலாவின் மீது பாலியல் பலாத்காரம் செய்யும் முயற்சியின் போது அவன் பவுலாவினால் குத்தப்பட்டு இறந்தான் என்பது தெரிகிறது. இந்தக் குற்றத்தை தான் சமாளித்துக் கொள்வதாக கூறும் ராய்முண்டா, பக்கத்தில் உள்ள விற்கப்படும் சூழலில் உள்ள ஒரு உணவகத்தின் குளிர்பதனப் பெட்டியில் பிணத்தை மறைத்து வைக்கிறாள். இறந்தவன் பவுலாவின் உண்மையான தந்தை அல்ல எனவும் இதைப் பற்றி பின்னர் சொல்வதாகவும் கூறுகிறாள்.

இதற்கிடையில் அவளது கிராமத்து அத்தை இறந்து போன செய்தி சகோதரி சோல்டாட் மூலமாக தெரிய வருகிறது. ராய்முண்டா தன்னால் வரமுடியாது என்று உறுதியாக தெரிவித்துவிடுவதால், பிணங்களை கண்டாலே பயப்படக்கூடிய சோல்டாட் தான் மாத்திரம் அத்தையின் சாவிற்கு செல்கிறாள். அங்கே பக்கத்து வீட்டுக்காரியான அஜிஸ்டினா, (Blanca Portillo) அவளுக்கு அனுசரணையாக இருப்பதோடு, சோல்டாடின் இறந்து போன தாய் அவ்வப்போது கிராமத்துக் காரர்களின் கண்களில் தென்படுவதாக தெரிவிக்கிறாள். வீடு திரும்பும் சோல்டாட், தன் காரின் பின்பக்கத்திலிருந்து சத்தம் வருவதை கண்டு பயந்து போகிறாள். நோய்வாய்ப்பட்டிருந்த அத்தையை, இத்தனை நாள் கவனித்துக் கொண்டிருந்ததாகச் சொல்லும் அவளது தாய்தான் (Carmen Maura) காரில் ஒளிந்து வந்தததாகச் சொல்கிறாள். தான் நடத்தும் பியூட்டி பார்லருக்குள் தன் தாயை உதவியாளராக ரகசியமாக வைத்துக் கொள்கிறாள் சோல்டாட்.

கிராமத்தில் பக்கத்து வீட்டுக்காரியாக இருந்த அஜிஸ்டினா, கான்சர் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து பார்க்கச் செல்லும் போது, அவள் தன் தாயைப் பற்றி "உயிருடன் இருக்கிறாளா, ஆவியாக அலைகிறாளா" என்கிற கேள்வியின் மூலம் குழப்பமடைகிறாள். அஜிஸ்டினாவின் தாய்க்கும் ராய்முண்டாவின் தகப்பனுக்கும் பாலுறவு தொடர்பு இருந்ததையும், ராய்முண்டாவின் பெற்றோர் தீ விபத்தில் இறந்து போன அதே நாளன்று அஜிஸ்டினாவின் தாயும் காணாமற் போன விநோததத்தைப் பற்றியும் விசாரிக்கிறாள். கணவனின் பிணத்தை ஒரு நதிக்கரையினில் புதைத்து விட்டு சகோதரியின் வீட்டிற்கு வரும் ராய்முண்டா, யாரோ அங்கே ரகசியமாக நடமாடுவதை கவனிக்கும் போது தன் தாய் அங்கே ஒளிந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறாள்.

()

பின்னர் தாயும் மகளும் பேசிக் கொள்கிற உரையாடல்கள் மூலமே பார்வையாளர்களான நமக்கு பல விளக்கங்கள் கிடைக்கின்றன. ராய்முண்டாவின் தகப்பனே அவளை கற்பழித்து அதன் மூலம் பிறக்கிற குழந்தைதான் பவுலா. ஒரு வகையில் அவளுக்கு மகளும் சகோதரியுமாக என்று விநோதமான உறவுமுறையுடன் இருக்கிறாள் பவுலா. ராய்முண்டாவின் தகப்பன், பக்கத்து வீட்டுக்காரியான அஜிஸ்டினாவின் தாயுடனும் முறையான பாலுறவு தொடர்பை வைத்திருக்கிறான். இந்த விஷயங்களை ஒருசேர அறிந்து கொள்கிற ராய்முண்டாவின் தாய், இருவரும் தனியாக இருந்த நிலையில் தீ வைத்து கொளுத்தி விடுகிறாள். ஆனால் ஊரார் அவள்தான் இறந்து விட்டதாக நம்புகின்றனர். இதை சாதமாக்கிக் கொண்டு நோயாளி சகோதரியின் வீட்டில் மறைந்து வாழ நேரிடுகிறது. தகப்பனால் கற்பழிக்கப்பட்ட ராய்முண்டா அந்த சூழ்நிலையை வெறுத்து விலகி வாழ்ந்து வந்ததால் இதைப் பற்றி அறிந்து கொள்ள முடியாமற் போகிறது. கேன்சர் நோயாளியான அஜிஸ்டினாவிற்கு உதவி செய்ய முடிவெடுத்திருப்பதாக ராய்முண்டாவின் தாய் சொல்வதோடு படம் நிறைகிறது.

()

ராய்முண்டாவின் தாய், உயிரோடுதான் இருக்கிறாளா, ஆவியாக அலைகிறாளா என்பதை பூடகமாகவே சொல்லியிருக்கிறார் இயக்குநர் அல்மோதோவர். மையக் கதாப்பாத்திரமான ராய்முண்டாவாக Penelope Cruz அருமையாக நடித்திருக்கிறார். ஒரு கொலை நிகழ்வான நெருக்கடியான நேரத்தில் அதை அற்புதமான எதிர்கொள்ளும் இவரது முகபாவங்கள் சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றன. பிரேதத்தை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது அழைப்பு மணியடிக்கும் பக்கத்து ரெஸ்டாரண்ட் உரிமையாளர், ராய்முண்டாவின் கழுத்துப் பகுதியில் இருக்கும் ரத்தக்கறையைப் பற்றி விசாரிக்கும் போது "Woman's Trouble" என்று சமாளிக்கிறாள். உடலுறவுக்கு அழைக்கிற கணவனை புறக்கணிக்கும் போது, அவன் கரமைதுனத்தின் மூலம் தன்னை திருப்திபடுத்திக் கொள்கிறான். பிரேததத்தை மறைக்க உதவி செய்வதற்காக தன் செக்ஸ் தொழிலாளியான தோழியை அணுகி அவளுடைய இரவு சம்பாத்தியத்தை தான் தருவதாக சொல்லும் போது "என்னுடைய யோனியின் மீது உனக்கு விருப்பமிருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை" என்கிறாள் நகைச்சுவையாக.

இந்தப்படம் கானஸ் திரைப்பட விருது, ஐரோப்பிய திரைப்பட விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றிருக்கிருக்கும் இந்தப்படம் எனக்கு சுஜாதாவின் சிறுகதை ஒன்றை நினைவுப்படுத்துகிறது. தாயும் மகளும் எழுதிக் கொள்ளும் கடிதங்கள் மூலம் அமைந்திருக்கும் அந்தச் சிறுகதை, கணவனால் கொடுமைப்படுத்தப்படுகிற மகளுக்கு மெல்லக் கொள்கிற வேதியியில் பொருள் ஒன்றை பரிந்துரைப்பதாக அமையும். ஏற்கெனவே தன் கணவனின் மீது அதை பிரயோகப்படுத்தியிருப்பதாக வெளிப்படும் அதிர்ச்சியான முடிவுடன் அந்தப் படைப்பு வெளியான போது பலத்த கண்டனத்திற்கு உள்ளானது.

Photobucket - Video and Image Hosting

பெட்ரோ அல்மோதோவர் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ஒரு கட்டுரை.

Monday, December 04, 2006

மக்கள் தொலைக்காட்சியில் விருதுத் திரைப்படங்கள்

மக்கள் தொலைக்காட்சயில் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் இரவு 8.00 மணிக்கு விருது பெற்ற சிறந்த திரைப்படங்களின் வரிசை ஒளிபரப்பாவதை உங்களில் எத்தனை பேர் கவனித்தீர்கள் என்று தெரியவில்லை. டி.ராஜேந்தரின் கர்ணகடூரமான குரலில் பாடின, எல்.கே.ஜி படிக்கும் போது உபயோகப்படுத்தின உடையை மறந்து போகாமல் பழைய பாசத்துடன் அதே உடையை அணிந்து கொண்டு நயனதாரா ஆடின "யம்மாடி ஆத்தாடி"-யை 108-வது தடவையாக சலிக்காமல் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் இம்மாதிரியான படங்களின் தேடல்களைக் கொண்டிருப்பவர்களுக்கு என் பாராட்டுகள்.

Antarjali Yatra (1987) - பயணத்திற்கு அப்பால்

காமல் மஜூம்தார் எழுதின வங்காள நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட கவுதம் கோஷ் என்கிற இயக்குநரால் உருவாக்கப்பட்ட இந்தப் படம், பெண்கள் உடன்கட்டை ஏறுவதைத் தடைசெய்யும் சட்டம் பிரிட்டிஷ் அரசினால் கொண்டுவரப்பட்ட காலகட்டத்தில் 1830-ல் நிகழ்வதான சூழ்நிலையின் பின்னணியுடன் இயங்குகிறது. சீத்தாராம் என்கிற பணக்கார பிராமண கிழவர் இறக்கும் தருவாயில் தொடங்கும் இந்தப்படம், அச்சமயத்தில் நிலவி வந்த (இப்போது மட்டும் என்ன வாழுதாம்!) பழமையில் ஊறிப் போன மூடநம்பிக்கைகளையும் உயர்சாதி இந்துக்கள் வேதங்களை காட்டி தந்திரமாக பிழைத்து வருவதின் குரூரத்தையும் பெண்கள் மனிதர்களாக அல்லாமல் வெறும் பொருளாக மதிக்கப்பட்ட அவலத்தையும் இயல்பாக முன்வைக்கிறது.

கங்கைக் கரையின் மயான தளத்தின் அருகில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் சீதாராம் உயிர் பிரியாமல் இழுத்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரின் ஜாதகப்படி அவர் தனியாக மரணிக்கக்கூடாது, துணையுடன்தான் மரணிக்கும் படி அவருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது எனவும், அப்போதுதான் அவர் மோட்சத்தை அடைவார் எனவும் ஜோசியர் ஒருவர் சீதாராமின் உறவினர்களுக்கு கூறுகிறார். இறக்கும் தருவாயில் உள்ள சீதாராமிற்கு திருமணம் செய்து வைத்து அவரின் மனைவியும் அவரோடு உடன்கட்டை ஏறினால் இவைகள் நடக்கும் எனவும் போதிக்கிறார். இந்தத் திருமணம் நடந்தால் கிடைக்கப் போகும் தட்சணைதான் அவருக்கு பிரதானமாக இருக்கிறதே ஒழிய தீயில் உயிருடன் கருகப்போகும் ஒரு உயிரைப் பற்றிய எந்தக் கவலையும் அவருக்கில்லை. திருமண வயதைத் தாண்டியும் மணம் செய்து கொடுக்க முடியாமல் வறுமையில் தவிக்கும் ஒரு பிராமணர், இந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு தன் மகளுக்கு சீதாராமை திருமணம் செய்து வைக்க முன்வருகிறார். குடும்ப வைத்தியர் இதற்கு சம்மதிக்காமல் விலகிப் போனாலும், ஜோசியரின் மிரட்டலுக்கு பயந்து வாளாவிருக்கிறார்.

அந்த மயானத்தில் பிணங்களை எரிப்பவனாக இருக்கும் பைஜூ (சத்ருகன் சின்கா) இந்த அவலத்தை காணச்சகியாமல் இதைத் தடுக்க முன்வருகிறான். என்றாலும் கீழ்ஜாதியில் பிறந்த அவனின் குரலை கேட்க யாரும் அங்கே தயாராக இல்லை. மயான தளத்திலேயே திருமணம் நடைபெறுகிறது. வரப்போகும் கொடுமையான வாழ்க்கையை நினைத்து மணப்பெண் அழ, (யசோபாய்) கையாலாகாத அந்த தகப்பனோ, சீத்தாதேவி பட்ட துயரங்களை சொல்லி ஆறுதல்படுத்த முனைகிறார். வயதானவருடன் மணப்பெண்ணையும், அவரின் இருமகன்களையும் விட்டுவிட்டு ஊரார் செல்கின்றனர். தந்தையின் சொத்தின் மீதே குறியாக இருக்கும் மகன்கள், அவரின் பணப்பெட்டியின் சாவி கிடைத்தவுடன் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு காணாமற் போகின்றனர்.

தனக்கு கற்பிக்கப்பட்ட நியாயங்களைக் கொண்டு ஆறுதலையடையும் மணப்பெண், கிழவருக்கு பணிவிடை செய்கிறாள். வெட்டியான் பைஜூ இந்த அபத்தமான சூழலில் இருந்து அவளை தப்பிக்கச் சொல்லி அறிவுறுத்துகிறான். ஆனால் ஆணாதிக்க சமூகத்தின் சுயநலத்தால் "கற்பு" எனப்படும் விஷயத்தை சிறுவயது முதலே போதிக்கப்பட்டு வந்த அவள் இதை மறுத்து அவனைத் துரத்தியடிக்கிறாள். என்றாலும் அவனின் அக்கறை குறித்து அவளுக்குள்ளும் ஒரு சலனம் ஏற்படுகிறது. மணப்பெண்ணைக் குறித்து மிகுந்த வேதனைப்படும் பைஜூ அவளை காப்பாற்றுவதாக நினைத்து புத்தி பேதலித்த நிலையில் கிழவரின் உடலைத் தூக்கி கங்கையில் எறியப்போகிறான். பதறிப் போகும் மணப்பெண் அவனை கட்டையால் தாக்குகிறாள். கிழவரின் உடல் மறுபடியும் பைஜூவாலேயே அதே இடத்தில் வைக்கப்படுகிறது.

பைஜூவின் அக்கறை நிறைந்த போதனைகள், மணப்பெண்ணிடம் சலனங்களை ஏற்படுத்தும் நிலையில் இருவரிடமும் மனதளளவில் நெருக்கம் ஏற்படுகிறது. கிழவரின் உடல்நிலை தேறிவரும் நிலையில், இவர்களின் நெருக்கத்தை கண்டு பதறிப்போகும் அவர், "விபச்சாரி" எனத்திட்டித் தீர்க்கிறார். தன்னை மன்னிக்கும்படி கதறியழுகிறாள் மணப்பெண். மறுநாள் மயானக்கரையை வெள்ளம் சூழ்ந்து கொள்கிறது. காப்பாற்றுங்கள் என்று கூக்குரலிடும் கிழவரும், மணப்பெண்ணும் நீரில் மூழ்கி இறக்கிறார்கள். மணப்பெண்ணை காப்பாற்ற ஓடின பைஜூ கலங்கிப் போய் நிற்பதுடன் படம் நிறைகிறது.

()

1988-க்கான சிறந்த தேசியவிருது, (சிறந்த வங்காளப்படம்) தாஷ்கண்ட் சர்வதே திரைப்படவிழா விருது உட்பட பல விருதுகளைக் குவித்துள்ள இத்திரைப்படம், முழுக்க முழுக்க மயான தளத்தின் பின்னணிளை மாத்திரம் கொண்டே நகருகிறது. இயல்பான வெளிச்சத்துடன் (available light) படமாக்கப்பட்டிருந்த காட்சிகள் பார்வையாளர்களை திரைப்படம் பார்க்கிற உணர்வை ஏற்படுத்தாமல் நேரிடையாக காண்கிற உணர்வை ஏற்படுத்துகின்றன. படத்தின் ஒரே தெரிந்த முகமான சத்ருகன் சின்னா வெட்டியான் பைஜூவாக சிறப்பாக நடித்திருக்கிறார். அந்தச் சமயத்தில் இந்தித்திரைப்படத்தின் ஸ்டாராக விளங்கினாலும், இந்த திரைப்பட ஆக்கத்தில் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்ததாக இயக்குநர் கவுதம் கோஷ் இந்தியன் எக் ஸ்பிரஸ் நாளிதழக்கு அளித்த நேர்காணிலின் மூலம் தெரியவருகிறது.

சதிக் கொடுமையை தடுக்க முயல்பவராக பைஜூ சித்தரிக்கப்பட்டிருந்தாலும், அவர் ஒரு கதாநாயகராக காண்பிக்கப்படாமல், நிகழ்வை தடுக்க போதிய திராணி இல்லாதவராகத்தான் செயல்படுகிறார். வைத்தியரிடன் தடுக்கச் சொல்லி கெஞ்சும் போது அவர் தன்னால் முடியாது எனவும் ஜாதிப்பிரஷ்டம் செய்துவிடுவார்கள் எனவும், "ஏன் நீயே போய் போலீஸிடம் சொல்லேன்" என்று நழுவுகிறார். "நான் சொன்னா நம்ப மாட்டாங்க, அடிப்பாங்க. நீங்க படிச்சவங்க" என அவர் கெஞ்சுவதை வைத்தியர் காதில் வாங்காமல் செல்கிறார்.

()

பணம் என்கிற தேவராட்சசனுக்கு முன்னால் சம்பிராதயங்கள், சடங்குகள் எவ்வாறு அர்த்தமிழக்கிறது என்பது இன்னொரு காட்சியில் விளங்குகிறது. மணப்பெண்ணின் தகப்பனாரிடம் ஜோசியர் திருமணத்தின் போது இன்னும் அதிகமான தட்சணை கொடுக்க வற்புறுத்த, யாரும் முன்வராத நிலையில் வெட்டியான் பைஜூ வெள்ளிப் பணத்தை கடனாக தர முன்வருகிறான். தாழ்ந்த சாதிக்காரனிடமா கடன் வாங்குவது என்று அவர் தயங்கும் போது, ஜோசியர் "சடங்குகளை நிறைவேற்ற யாரிடமும் கடன் வாங்கலாம். தங்கம், வெள்ளி போன்ற உலோகங்ளுக்கும் ஜாதி துவேஷம் பொருந்தாது" என்று தனக்கு சாதகமான முறையில் தந்திரமாக சொல்கிறான்.

இன்னொரு காட்சியில் பைஜூ மணப்பெண்ணை தப்பித்துச் சென்றுவிடுமாறு கூறும் போது அவள் "குடிகாரனே"என்று திட்டுகிறார். "மதுவைத் திட்டாதே, அம்மா. அது ஒரு உண்மை விளம்பி" என்கிறார் பைஜூ.

கல்வியறிவு இல்லாத ஒரு வெட்டியானுக்கு இருக்கும் யதார்த்த அறிவும், சமுக அக்கறையும் படித்த பண்டிதர்களிடையே இல்லாதது குறித்த நகைமுரணை இந்தப் படம் ஆரவாரமில்லாமல் தெரிவிப்பதாக எனக்குத் தோன்றுகிறது. படத்தின் இடையிடையே காட்டப்படும், கரையில் கட்டப்பட்ட ஒரு படகு அந்த மணப்பெண்ணின் குறியீடாக முன்வைக்கப்படுகிறது. படகு தர்மாவேசத்துடன் தன்னை விடுவித்துக் கொண்டால் ஜலசாகரத்தில் உல்லாசமாக நீந்தி மகிழலாம் எனினும் கற்பு என்னும் கயிற்றால் கட்டி வைக்கப்பட்டிருக்கும் குறியீடாக எனக்குத் தோன்றியது. மேலும் படகின் மீது வரையப்பட்டிருக்கும் இரு கண்கள், கங்கையே மெளன சாட்சியாக இந்த நிகழ்வுகளை கண்டு கொண்டிருந்தது என்றும் தோன்றியது.

()

வணிகசினிமாவை மாத்திரம் பார்க்கிறவர்களுக்கு இத்திரைப்படம் சலிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றாலும் ரசனையுள்ள பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. மற்ற தொலைக்காட்சிகள் வணிகசினிமா என்னும் சேற்றில் உழன்று கொண்டிருக்க, கசிந்து வரும் சுதந்திரக்காற்று போல, மக்கள் தொலைக்காட்சி விருதுத் திரைப்படங்களை ஒளிபரப்ப முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது. தமிழ் மொழியின் அடிக்குறிப்புகளில் ஆங்காங்கே எழுத்துப்பிழையும், கருத்துப்பிழையும் இருந்தாலும் ஆங்கில் மொழி தெரியாதவர்களும் கண்டு ரசிக்க ஏதுவாக எடுக்கப்பட்டிருக்கும் இம்முயற்சியும் பாரட்டத்தக்கதே.

Wednesday, October 18, 2006

ஒரு Corporate இலக்கியக் கூட்டம்

பொதுவாகவே ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே செல்வதை தவிர்ப்பவன் நான். ஒரு அலுவலக இயந்திரமாக போலிப்புன்னகைளும், வெளிக்காட்ட முடியாமல் மென்று விழுங்கப்பட்ட எரிச்சலுமாக ஆறு நாட்களும் கழியும் போது மிகப் பெரிய விடுதலையாக ஒரு நாள் கிடைக்கும் போது அதன் ஒவ்வொரு கணத்தையும் சுதந்திரமாக என்னுடைய விருப்பப்படி எனக்காக மட்டுமே செலவு செய்யவே விரும்புவேன். பொதுவாக குளியலுக்கு கூட அன்று விடுமுறைதான். வாரப்படாத தலையும், அலட்சியமாகக் கட்டப்பட்ட லுங்கியுமாக (எனக்கே) சகிக்காத கோலத்தில்தான் ஞாயிறுகள் கழியும். பெரும்பாலும் புத்தகம், கொஞ்சம் இசை, கொஞ்சம் தொலைக்காட்சி என்பதாகவே அது இருக்கும். முழு நாளையும் செலவு செய்து விட்டு இரவு 10 மணிக்கு துணி துவைப்பவன் சென்னையிலேயே நானாகத்தான் இருக்க முடியும். சுருங்கக்கூறின் ஞாயிறுகளின் பொழுதுகளை தீர்மானிப்பவன் நானே. இதற்காகவே என்னுடைய திருமணம் நடந்த நாளைக்கூட ஞாயிறு அல்லாத தினத்தில் அமைத்துக் கொண்டேன் என்று சொன்னால் அது சற்று அதீதமாகவே உங்களுக்குத் தோன்றக்கூடும். பல நல்ல திரைப்பட விழாக்களை, நண்பர்களின் சந்திப்பை ஞாயிறு அன்று அமைந்ததாலேயே பல முறை தவற விட்டதுண்டு. அலுவலக நாள் போலவே அன்றும் குளித்து, ரெடியாகி, பேருந்து பிடித்து போக வேண்டியதை நினைத்து ஏற்படும் சோம்பேறித்தனம்தான் காரணம். (போதும்பா. விஷயத்துக்கு வா!)

உயிர்மை பதிப்பகம் வெளியிடும் சாருநிவேதிதாவின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா பற்றிய அறிவிப்பினை பார்த்ததிலிருந்து ஞாயிறன்று அது அமைந்ததில் செல்லலாமா, வேண்டாமா என்று அலைபாய்ந்து கொண்டிருந்தேன். சாருவின் எழுத்து குறித்து எனக்கும் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், பாசாங்குகளைக் களைந்து வெளிப்படையாக எழுதப்படுகிற மற்றும் உலக இலக்கியங்களை - சற்றே அலட்டலுடனும் என்றாலும் - சுவாரசியமாக அறிமுகப்படுத்துவது என்கிற வகையிலும் அவர் எழுத்துக்கள் மீது ஒரு ஆதாரமான விருப்பம் எனக்கு இருந்தது என்பதையும் சொல்லியாக வேண்டும். நேற்று எல்லாமே சரியாக அமைந்துவிட விழாவிற்கு செல்வதென்று முடிவெடுத்தேன். மேலும் பங்கேற்போர் பட்டியலில் ஆர்.பார்த்திபன், பிரகாஷ்ராஜ் போன்ற பெயர்களை பார்த்திருந்ததனால், என்னதான் அறிவுஜீவி வேடம் போட முயற்சித்தாலும், நடிகர்களை நேரில் பார்க்க வேண்டும் என்கிற உள்ளுக்குள் மறைத்திருக்கிற பாமர ஆசையும் போகும் எண்ணத்தை உசுப்பியிருக்கலாம். :-)

()

தியாகராய சாலையில் ரெஸிடென்ஸி டவர்ஸில் எம்பரர் ஹால். பொதுவாக இலக்கியக்கூட்டங்கள் என்றாலே வெற்றிலைப் பாக்கு கறைகளுடன் கூடிய இருட்டான மாடிப்படிகள் அமைந்த, கொட்டாவியை அடக்கிக் கொண்டு இருபது அல்லது முப்பது நபர்கள் அசுவாரசியமாக கவனித்துக் கொண்டிருக்கிற, கதர்ச்சட்டையும் ஜோல்னா பையுமாக "இலக்கியவாதிகள்" என்று நெற்றியில் எழுதி ஒட்டி வைத்திருக்கிற சில நபர்களுமாக (அவர்களில் கட்டாயம் ஒருவர் தலை நிறைய முடியுடன் குடுமி வளர்த்திருப்பார்) டீயும் பிஸ்கெட்டும் கொடுப்பார்கள். வெளியே பழைய புத்தகக் கடைகளுமாக இருக்கும் ...... இப்படித்தான் அனுபவப்பட்டிருக்கிறேன். ஆனால் சாண்டலியர் விளக்குகள் இருளை துப்புரவாக துரத்தி வெளிச்சமாக்கி வைத்திருக்கிற, அஜாக்கிரதையாக நடந்தால் கால்வழுக்கி விடக்கூடிய மார்பிள் மாயாஜாலங்கள், குஷன் நாற்காலிகள், குளிர்பதன வசதியுட்ன கூடிய அரங்கத்தில் ஒரு இலக்கியக் கூட்டத்தை பார்த்தது ஆச்சரியமாக இருந்தது. கூட்டம் முடிந்ததும் நடந்த விருந்து, முழு ப·பேயாக சைவம் மற்றும் அசைவ பதார்த்தங்களோடு இருந்தது. வணிக நிறுவனங்களுக்காக நாங்கள் ஏற்பாடு செய்யும் பிரஸ் மீட் போன்றவைகளில்தான் இந்த மாதிரியான அனுபவங்கள் எனக்கு கிடைத்திருக்கின்றன.

()

சில வருடங்களுக்கு முன்பு கோபாலகிருஷ்ணன் என்றொரு பிரகஸ்பதி ஒரு பிரபல வங்கியின் சேர்மனாக இருந்தார். சென்னை நகரில் எது திறக்க வேண்டுமானாலும் இவரை கூப்பிட்டனுப்புவார்கள். (இந்த வாக்கியத்தை வரிகளின் இடையில் படிக்காமலிருக்க வேண்டுகிறேன்) இவரும் திறந்து அடுத்த நாள் நாளிதழ் செய்திகளில் வாயெல்லாம் பல்லாக நிற்பார். நல்லி குப்புசாமி செட்டியாரையும், சென்னை தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் நடராஜனையும் இந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளலாமா என்று தோன்றுகிறது. பல நூல் வெளியீட்டு விழாக்களிலும் இவர்களைப் பார்க்கிறேன். சாருவின் "கோணல் புத்தகங்கள்" வெளியீட்டுவிழா உட்லண்ஸில் நடந்த போது கூட இவர்கள்தான் பிரதானமாக கலந்து கொண்டனர். எனவே பேச்சு என்கிற பெயரில் இவர்கள் ஆற்றினவைகளை தவிர்க்கிறேன்.

கூட்டத்தில் பேசியவர்களின் உரைகளிலிருந்து எனக்கு நினைவிலிருக்கும் பகுதியை என்னுடைய மொழியில் தருகிறேன். (கருத்துப்பிழை ஏதேனும் இருந்தால் அது என்னுடைய பிசகேயாகும்)

நாஞ்சில் நாடனின் பேச்சு வழக்கம் போல் ஆத்மார்த்தமாகவும் பாசாங்கில்லாமலும் கச்சிதமாக அமைந்தது.

.... என்னுடைய எழுத்துக்களின் மீது சாருவிற்கும் அவர் எழுத்துக்களின் மீது நானும் பொறாமையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவரை sex writer என்கிறார்கள். இன்றைக்கு சினிமாவில் இல்லாத செக்ஸா? முன்பெல்லாம் ஒரு நடிகை மாடிப்படியிலிருந்து இறங்கி வருவதை கேமராவை கீழே வைத்து படம் பிடித்ததையே பார்த்து அன்றைய ரசிகர்கள் கிறங்கிக் கொண்டிருந்தார்கள். இன்று அந்த மாதிரியான காட்சி அதே உணர்வைத் தருமா? அதையெல்லாம் தாண்டித்தானே தமிழ் சினிமா சென்று கொண்டிருக்கிறது? .........

........ இன்றைக்கு இலக்கிய உலகில் ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவுகிறது. சக எழுத்தாளின் வீட்டுக்கு செல்லும் போது பருகத்தருகிற எதையும் குடிக்க பயமாயிருக்கிறது. ஒரு படைப்பை விமர்சனம் செய்ய அதைப் படித்தாக வேண்டிய கட்டாயம் ஒன்றுமில்லாத நிலையே இருக்கிறது. படிக்காமலேயே விமர்சனம் செய்யலாம். "இவன்தான் இப்படித்தான் எழுதுவான்" என்று முத்திரை குத்தி முன்தீர்மானத்துடனேயே அணுகுகிறார்கள். எதையும் படித்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள். என் எழுத்துக்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யுங்கள். செருப்பால் கூட அடியுங்கள். ஆனால் படித்து விட்டு செய்யுங்கள்......

......... இலக்கியம் என்பது வாசகனை பயமுறுத்தி விரட்டுவதாக இருக்கக்கூடாது. சிநேகித பாவத்துடன் இருக்க வேண்டும். சாருவின் எழுத்துக்கள் சுவாரசியமானது...

அடுத்து பேசிய கனிமொழியின் பேச்சு கனமில்லாமல் இயல்பாக இருந்தது.

...........சாரு என்னை தத்தெடுக்கிட்டவர்னு சொல்லுவேன். இந்து நாளிதழில் பணிபுரிந்த காலத்தில் எனக்கு சாரு உலக இலக்கியத்தை, இசையை அறிமுகப்படுத்தினார். பதே அலிகானெல்லாம் (Nusrat Fateh Ali Khan) அவர்தான் தெரியப்படுத்தினார். அப்பவே நெறைய விஷயம் தெரிஞ்சிருப்பார். நெஜமாவே விஷயம் தெரிஞ்சவரா..இல்ல.. கொஞ்சம் பெயர்களை தெரிஞ்சுக்கிட்டு பாவனை காட்றாரோன்னு சந்தேமாக இருக்கும். ஆனா அணுகிப் பார்க்கறப்போ ஒவ்வொண்ணைத்தையும் விவரமா சொல்வார். இப்ப இருக்கற மாதிரி இண்டர்நெட் வசதியெல்லாம் அப்ப கெடையாது. நெறைய படிச்சிருப்பார். திவ்வியப் பிரபந்தம் பத்தி கூட அவர் விவரமா சொன்னது ஆச்சரியமா இருந்தது. ..........அவர் இளைஞர்னு சொல்லிக்கறததான் சகிச்சிக்க முடியல....(சிரிப்பு)

டிராஸ்ட்கி மருதுவின் பேச்சு சீரியஸாகவும் விஷயபூர்வமாகவும் இருந்தது. (கொஞ்சம் போரடித்தது என்று கூட சொல்லலாம்)

..........சாருவின் புத்தகங்களை படிக்க முடியலைன்னாலும், அவர் ஹொடரோவ்ஸ்கி (Jodorowsky) பத்தி உயிர்மைல எழுதின கட்டுரை ஆச்சரியமா இருந்தது. அதனாலதான் இந்த கூட்டத்துக்கே வந்தேன். நெறைய பேருக்கு அந்த பெயரையே தெரியாது. பொதுவா உலக மக்களை ஹொடரோவ்ஸ்கி படங்களை பார்த்தவர்கள் / அல்லாதவர்கள்னு ரெண்டு பிரிவா பிரிக்கலாம். அந்தளவிற்கு அவருடைய படங்கள் முக்கியமானது. .............

........எனக்கு பிடிச்சது காமிக்ஸ். உலகத்திலேயே பிரான்சும், ஜப்பானும் காமிக்ஸ சீரியஸா இலக்கிய அளவுல பாக்கறாங்க. ஒரு சினிமா இயக்குநருக்கு காட்சியின் ஒவ்வோரு பிரேமும் ஒவியம் மாதிரி முக்கியமானதா இருக்கணும். ரெண்டு பேர் பிரேம்ல நிக்கறாங்கன்னா. எந்த இடத்துல நிக்கணும், எந்த இடத்துல லைட் இருக்கணும்னு எல்லாமே முன்கூட்டியே தீர்மானமா இருக்கணும். நாசரோட தேவதைங்கற படத்துல "ஒரு 300 வருஷத்துக்கு முந்தைய கால கட்டத்துல எந்த செட்டும் போடாம கணினி கொண்டே அமைச்சோம். இம்சை அரசன்ல கூட அந்த மாதிரி சில விஷயங்கள் செஞ்சிருக்கோம். ..........

சாருவின் எழுத்துக்களை மலையாளத்தில் மொழிபெயர்க்கும் ராமகிருஷ்ணன் மலையாளத்தில் பேசியதில் எனக்கு புரிந்த சில:

சாருவின் எழுத்துக்களை மலையாள இலக்கிய உலகில் மிகவும் மதிக்கிறார்கள். அவர் பெயரை வைத்து பெண் எழுத்தாளர் என்று கூட சிலர் தவறாக புரிந்து கொள்கிறார்கள்.

()

பார்த்திபன் தனக்கேயுரிய வார்த்தை விளையாட்டுக்களோடு சபையை சிரிக்க வைத்தார் என்பதோடு வேறு எந்த விஷயமும் இல்லை. சில பிரபலங்களை எதிர்பாராத இடங்களில் சகித்துக் கொள்ள வேண்டியிருப்பதற்கு இது ஓர் சிறந்த உதாரணம். தனக்கு சாரு சமீபத்தில்தான் அறிமுகமானார் என்றாலும் 15 வருடமாக பழகியது போன்ற உணர்வு இருவருக்குமே ஏற்பட்டிருக்கிறது என்றார்.

எந்தவித சம்பிரதாயங்களுமில்லாமல் தன் உரையை ஆரம்பித்தார் சாரு.

.......... இன்றைய பதிப்பக சூழ்நிலையில் எந்தவொரு புத்தகமுமே முதல் பதிப்பில் 1000 பிரதிகளே அச்சடிக்கப்படுகின்றன. ரஜினிகாந்ந்த் போன்று எழுத்துலகின் சூப்பர் ஸ்டாராக விளங்குகிற சுஜாதாவிற்குமே இதே நிலைதான் என்று மனுஷ்யபுத்திரன் வாயிலாக தெரிகிறது. நம்மை விட ஏழை நாடான துருக்கயின் மொத்த மக்கள் தொகையே தமிழ்நாட்டின் மக்கள் தொகைக்கு ஈடானது. அங்கு ஒரு புத்தகம் முதல் பதிப்பாக 1 லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்படுகின்றன. மத்தவங்களுக்கு எழுதறதுதான் பிரச்சினை. எனக்கு அதோட என் புத்தகங்களை நானே பதிப்பிக்கிற தொல்லை வேற இருக்கு. இப்பதான் மனுஷ்யபுத்திரன் என் புத்தகங்கள கொண்டு வர்றார்.

.......... எஸ்.ராமகிருஷ்ணன் வந்திருக்கார். எனக்கு சந்தோஷமாக இருக்கு. அவரை எவ்வளவோ விமரசித்து எழுதியிருக்கேன். ஆனா ignore பண்ணலையே. ஆனா நான் கடந்த 30 வருஷமா தொடர்ந்து புறக்கணிக்கப்படறேன். இது ரொம்ப முக்கியமானது. .........

......... நாலு புக்ல மத்த புத்தகங்களல வந்து மாணவர்களுக்கு பாடமாக கூட வைக்கலாம். ஆனா ராஸ லீலால நெறைய சர்ச்சையான விஷயங்கள எழுதியிருக்கேன். புத்தகமா போடறதுக்கு முன்னாடி மனுஷ்யபுத்திரன் கிட்ட "இதனால உங்களுக்கு தொல்லைகள் வரலாம். ஏன் ஜெயில்ல கூட போடலாம்"னேன். "நல்ல பாத்ரூம் மாத்திரம் இருந்தா போதும். நான் சமாளிச்சுக்குவேன்"றாரு அவரு.

.......அடுத்து காரைக்கால் அம்மையாரை பத்தி ஒரு நாவல் எழுதிக்கிட்டு இருக்கேன். செக்ஸே கிடையாது. (சிரிப்பு). ஆனா supression of body பத்தினது அது. இதுல கூட பாடி வருது பாருங்க. அப்புறம் "ஆஸ்பிட்டல்"னு ஒரு நாவல் எழுதறேன். இந்த நூல்களோட வெளியீட்டை பிரம்மாண்டமா cosmopolitan club-ல வைக்கலாம்னு ஒரு யோசனை. .... என்றவர் "வாழ்க்கைய கொண்டாடணும்ங்க" என்கிற செய்தியோடு முடித்துக் கொண்டார்.

()

சாருவின் முக்கிய அடையாளமே கலகம்தான். யதார்த்தவாத எழுத்துக்களால் தமிழ் இலக்கிய தேங்கிய நிலையிலிருக்கும் போது எல்லா மரபுகளையும் உடைத்துப் போட்டு எழுதின கலகக்கார எழுத்தாளர்களில் சாருவும் முக்கியமானவர். அவரின் நூல் வெளியீடு ஒரு வணிக நிறுவனத்தின் தயாரிப்பு அறிமுகத்திற்கு ஒப்பான சம்பிரதாயங்களுடன் நடைபெறுவது - என்னைப் பொறுத்தவரை - முரணாக தோன்றுகிறது. இந்த நூல்வெளியீட்டு விழா ஒரு பொதுக் கழிப்பறையின் முன்னால் நடைபெற்றிருந்தால் அது எனக்கு இயல்பாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

பிற்பாடு சாருவுடன் ஒரிரு வார்த்தைகள் (பொதுவாக அறிமுகப்படுத்தப்படாமல் என்னால் யாரிடமும் உரையாட முடியாது. ஆனால் நிர்மலாவும் (ஒலிக்கும் கணங்கள்) கூட இருந்த காரணத்தினால் என் இயல்புக்கு மாறான நிலையில் உரையாடினேன்) பேசும் போது "உங்க நூல்வெளியீட்ல விஸ்கியோ, பியரோ வழங்கப்பட்டிருந்தா அது எனக்கு இயல்பா இருந்திருக்கும். இப்படி சாம்பார் வடைல்லாம் இருக்கும் போது கொஞ்சம் அதிர்ச்சியா இருக்கு" என்றேன். புன்னகையோடு கேட்டுக் கொண்டார். "கிட்டத்தட்ட 600 பேருக்கும் மேல தமிழ்ல வலைப்பதியறாங்க. நீங்க எதையாச்சும் பாக்கறதுண்டா" என்றதற்கு "இல்லை" என்றார்.

சாப்பிடும் போது எஸ்.ராமகிருஷ்ணணுடன் சற்று உரையாட முடிந்தது. பேருந்து நிலையத்தில் பார்க்க நேர்ந்த ஒரு நிகழ்வைச் விவரித்து அதை எழுதவிருப்பதாகச் சொன்னார். அவரின் சமீபத்திய சிறுகதைகள் நிறம் மாறியிருப்பதை குறிப்பிட்ட போது 'மிகவும் திட்டமிட்டே ஆரம்ப நிலையில் எழுதின பாணியிலேயே' எழுதுவதாகச் சொன்னார்.

பிரகாஷ்ராஜ் இந்த கூட்டத்திற்கு வரவில்லை. நிறைய வாசிப்பவர் என்று அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் தமிழ் இலக்கியம் படிக்க முயற்சிக்கிறாரா என்று தெரியவில்லை. "ராஸ லீலா" வை மாத்திரம் வாங்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். சாப்பிட்டு விட்டு வருவதற்குள் விற்பனை மேஜை காலியாக கிடந்தது.

ஹொடரோவ்ஸ்கி (Jodorowsky) பற்றி சாருவின் கட்டுரை. ஒன்று இரண்டு


இந்த விழா பற்றிய நிர்மலாவின் கட்டுரை

Monday, September 25, 2006

சில முக்கிய(மற்ற) குறிப்புகள் - பகுதி 2

எம்.ஜி.சுரேஷ் எழுதிய நூலுக்கு "ஏலாதி" விருது

Post-modernism, Magical Realism, Cubism என்று மேற்கிலிருந்து இறக்குமதியான பல இலக்கிய வடிவங்களில் மாதிரிக்கு ஒன்றாக வைத்து புனைவுகள் எழுதியிருப்பவர் எம்.ஜி.சுரேஷ். இவை பரிசோதனை முயற்சிகள் என்ற அளவிலே ஏற்றுக் கொள்ளலாமே ஒழிய இவற்றிற்கான இலக்கிய தகுதிகள் எதுவுமில்லை என்பதுதான் என் அபிப்ராயம். ஆனால் மேற்குறிப்பிட்ட குழப்பமான இலக்கிய வடிவங்களை தமிழ் வாசகர்களுக்கு எளிமையான முறையில் விளக்கி கட்டுரைகள் எழுதியவர். அவர் எழுதிய நூலான "பின்நவீனத்துவம் என்றால் என்ன?" என்கிற முயற்சி எளிமையாகவும் சிறப்பாகவும் அமைந்திருப்பதாக இலக்கிய வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது. "பன்முகம்" என்கிற சிற்றிதழையும் இவர் நடத்தி வருகிறார்.

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தால், மேற்குறிப்பிட்ட நூலுக்கு "ஏலாதி" விருது கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் நடந்த விழாவொன்றில் வழங்கப்பட்டது. இந்நூலைப் பற்றி சுந்தர ராமாமி சொன்னது. "இந்த நூல் பத்து வருடங்களுக்கு முன்பு வந்திருக்குமேயானால் தமிழ்ச் சிந்தனைச் சூழலே மாறியிருக்கும்." (நன்றி. இனிய உதயம்: செப்06)

இவர் எழுதிய இன்னொரு நூல் "இஸங்கள் ஆயிரம்". (மருதா பதிப்பகம், ரூ.120/-) "இஸங்களைப் பற்றிய போதிய புரிதல் தமிழ்நாட்டில் இல்லை என்பது வருந்தத்தக்கது. அதற்கான போதிய நூல்கள் தமிழில் வெளிவராததும் ஒரு காரணமாக இருக்கலாம். எனவே தமிழ்ச் சூழலில் இஸங்களைப் பற்றிய சரியான புரிதல் ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது." என்கிறது பதிப்பகத்தாரின் குறிப்பு.


உயிர்மையின் தலையங்கள் மற்றும் கட்டுரைகள்

மனுஷ்ய புத்திரனின் உரைநடையை கையாள்கிற விதத்தின் மீது என்க்கிருக்கிற பிரமிப்பை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன். உயிர்மையில் அவர் எழுதும் தலையங்களைப் படிக்கும் பெரும்பான்மையான சமயங்களில் இது நிரூபணமாகியிருக்கிறது. செப்06 இதழில் இலங்கைப் பிரச்சினை குறித்தும் பன்னாட்டு நிறுவனங்களின் சர்ச்சைக்குரிய குளிர்பானங்கள் குறித்தும் அவர் எழுதியுள்ளார்.

.........'ஈழத் தமிழர்களின் துயரம் தொடர்ந்தால் இங்கு காஷ்மீர் போன்ற நிலை உருவாகும்' 'நாங்களும் துப்பாக்கி ஏந்திப் போராடுவோம்' என்பது போன்ற வெற்றுச் சவடால்களாலான 'காமெடி டிராக்குகள்' ஈழத் தமிழர்களுக்கு பாதகமான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. எந்த அரசியல் உள்ளீடும் அற்ற இந்தச் சவடால்களை மேடைகளில் முழங்குவதும் உடனே இவர்கள் இந்திய இறையாண்மைக்கு குந்தகம் செய்து விட்டார்கள், பிரிவினையை தூண்டுகிறார்கள் என்று சொல்லி கைது செய்யப்படுவதும் ஏதோ திருடன் போலீஸ் விளையாட்டைப் போல் மாறிவிட்டது. ......"

.....ஈழத் தமிழர்களை ஆதரிப்பவர்கள் என்றாலே அது புலிகளை ஆதரிப்பவர்கள் என்கிற நிலை உருவாகிவிட்டது. ஈழ மக்களை ஆதரிப்பதும் பிரபாகரனை ஆதரிப்பது இரண்டு வேறுபட்ட பிரச்சினைகள். ஈழத் தமிழர்கள்பால் நம்முன் இருப்பது உணர்வுபூர்வமான கடமைகள், அரசியல் நாடகங்கள் அல்ல. என்று மிக அறிவுப்பூர்வமாக இந்தப் பிரச்சினை குறித்த தனது கருத்துக்களை முன்வைக்கிறார் மனுஷ்ய புத்திரன்.

உண்மையில் இது குறித்த அக்கறை பெரும்பான்மயான அரசியல்வாதிகளுக்கோ, பொது மக்களுக்கோ இருப்பதாகத் தெரியவில்லை. ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு இலங்கைத் தமிழர்களின் மீதான பார்வை தலைகீழாக திரும்பிவிட்டது துரதிர்ஷ்டவசமானது. உயிரை கையில் பிடித்துக் கொண்டு வரும் அம்மக்கள், துப்பாக்கியைப் பிடித்து வருகிற சந்தேக பார்வையுடனேயே பார்க்கப்படுகிறார்கள். இது குறித்து உணர்ச்சி பொங்க எழுதும் மக்களில் எத்தனை பேர் அவர்களின் துயர் நீக்க களத்தில் இறங்கி போராடியிருக்கிறார்கள் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். அகதி முகாம்களுக்கு எத்தனை பேர் சென்று பார்த்திருப்பார்கள்? அல்லது ரவிகுமார் போல் ஆக்கப்பூர்வமான அறிக்கை ஒன்றை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பார்கள்?

மேலும் இலங்கைத் தமிழர்களின் மீது அனுதாபம் காட்டுபவன்தான் உண்மையான தமிழன் என்று சில பேர்களால் ஒரு பிம்பம் கட்டப்படுகிறது. மனித நேயத்தின் எல்லையை ஏன் இப்படி எல்லைக் கோடுகளை கொண்டு குறுக்கிக் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. உலகம் முழுக்கவே போரினாலும் வன்முறைகளினாலும் பல அப்பாவிகளும், பெண்களும், குழந்தைகளும் சாகடிக்கப்பட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். சமீபத்திய உதாரணம் இஸ்ரேல்.

.... கோக், பெப்ஸி, போன்ற குளிர்பானங்கள் வெறும் குளிர்பானங்கள் மட்டும் அல்ல. அவை ஒரு மனோபாவத்தின் வெளிப்பாடுகள். இந்த பானங்களை அருந்துகிற ஒருவர் நாகரிக வாழ்வின் பிம்பங்களையும் அதனோடு சேர்ந்து அருந்துகிறார். இந்த பிம்பங்கள் ஊடகங்கள் வழியாகத் தொடர்ந்து பெருக்கப்படுகின்றன. .........

தாராளமயமாக்கலின் மோசமான எதிர்வினை உள்ளூர் தயாரிப்புகள் பன்னாட்டு நிறுவனங்களோடு ராட்சதத்தனங்களோடு மோத முடியாமல் முடங்கியதுதான். கிரிக்கெட் ஆட்டக்காரர்கள், நடிகர்களின் மீது மக்களுக்கு இருக்கும் மோகத்தை பயன்படுத்திக் கொண்டு ப.நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விற்கின்றன. இவர்களின் தயாரிப்புகளுக்கு உள்ளூர் வளங்களும் மனிதசக்தியும் சுரண்டப்படுகின்றன. சுற்றுச்சூழலில் மாசு ஏற்படுத்துதல், குடிநீரை சுரண்டுதல், விளம்பரங்கள் மூலம் மக்களை மூளைச் சலவை செய்தல் போன்ற தீவினைகளில் ஈடுபடுகின்றன. மத்திய அரசு இவ்வாறான பன்னாட்டு நிறுவனங்களின் செயல்களை கட்டுப்படுத்துமாறு சட்ட மசோதா கொண்டு வந்தால் நல்லது. ஆனால் எளிய முறையில் விலைபோகும் நம் அரசியல்வாதிகள் அந்த பண முதலைகளின் கையூட்டுதல்களுக்கு மயங்காமல் இவற்றை நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பது வீண்செயலே.

()

எழுத்தாளர் திலகவதியை சிறப்பாசிரியராகக் கொண்டு "அம்ருதா" என்றொரு இடைநிலை இதழ் தொடங்கப்பட்டிருக்கிறது. திலகவதியின் படைப்புகள் குறித்து எனக்கு சிறப்பான அபிப்ராயம் ஏதுமில்லையென்றாலும், இந்தியாவின் மற்ற மாநில எழுத்தாளர்களின் படைப்புகளை மொழிபெயர்த்து தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்துவதின் மூலம் அவரின் பணி பாராட்டக்கூடியது. இந்த இதழின் செப்06 எனக்கு காணக்கிடைத்தது. பவித்ரா சீனிவாசனின் (இந்தப் பெயரில் வலைப்பதிபவரும் இவரும் ஒன்றுதான் என நம்புகிறேன்) சிறுகதை ஒன்றுடன் தொடங்கும் இவ்விதழில் பல சுவாரசியமான அம்சங்கள் உள்ளன. இன்றைய பெங்களூரை தன்னுடைய பழைய நாட்களோடு ஒப்பிட்டு வாஸந்தி எழுதியிருக்கும் கட்டுரை சுவை. அஸாமிய இலக்கியவாதியான இந்திரா கோஸ்வாமியன் நேர்காணல் சிறப்பாக பதிவாகியிருக்கிறது. மற்றவற்றை இனிமேல்தான் படிக்க வேண்டும்.

தொடர்பிற்கு: 5, ஐந்தாம் தெரு, சோமசுந்தரம் அவென்யூ, போரூர், சென்னை-600 116. போன்: 22522277. மின்னஞ்சல்: amruthamagazine@yahoo.com

Friday, September 15, 2006

சில முக்கிய(மற்ற) குறிப்புகள்

இந்திய திரைப்பட மேதைகளுள் மிக முக்கியமானவர் சத்யஜித்ரே. வசனத்தைக் குறைத்து காட்சிகளால் ஆக்கப்பட வேண்டியது திரைப்பட ஊடகம் என்கிற அடிப்படையை தனது படைப்புகளின் மூலம் தொடர்ந்து உணர்த்திக் கொண்டிருந்தவர் அவர். பதேர் பாஞ்சாலி, சாருலதா, ஜனசத்ரு, அகாந்துக் போன்ற பல சிறப்பான திரைப்படங்களை உருவாக்கியவர். மனிதனின் நுண்ணிய உணர்வுகளையும், சமூகத்தின் மீதுள்ள விமர்சனங்களையும் மென்மையாக ஆனால் அழுத்தமாக பதிவு செய்தவர். வாழ்நாள் சாதனை விருதுக்காக ஆஸ்கர் விருது பெற்ற ஒரே இந்தியர்.

கலைப்படங்கள் என்றாலே மிக மெதுவான திரைக்கதையமைப்புடையது, பெரிதும் சலிப்பூட்டும் காட்சிகளைக் கொண்டது என்கிற பொதுவான, தவறான ஒரு பிம்பம் சராசரி திரைப்பட பார்வையாளர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரேவின் முதல் படமான "பதேர் பாஞ்சாலி"யை ஒருவர் பார்த்தாலே இந்த குமிழ் உடைந்துவிம்.

சத்யஜித்ரேவைப் பற்றின புதிய இணையத்தளம் ஒன்று அண்மையில் உருவாக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கைக் குறிப்புகள், அரிய புகைப்படங்கள், இயக்கிய படங்களின் பட்டியல் என்று ஒரு முழுமையான தளமாக இது உள்ளது. ரே பிரியர்களுக்கு பிரியமான தளமாக இது இருக்கக்கூடும்.

ரேவைப் பற்றின இன்னொரு இணையத்தளம்

பதேர் பாஞ்சாலியைப் பற்றி நான் எழுதிய கட்டுரை

மரத்தடியில் எழுதின இன்னொரு கட்டுரை

()

சில மாதங்களுக்கு குமுதம் "தீராநதியில்" 'வனம்' என்கிற சிற்றிதழைப் (காலாண்டிதழ்) பற்றின அறிமுகத்தைப் பார்த்தேன். அதில் என்னைக் கவர்ந்த அம்சம், "சிறுகதைகளை பிரதானமாக வைத்து எங்கள் இதழின் உள்ளடக்கம் அமையும்" என்கிற மாதிரியான அறிவிப்புதான். இன்னொன்று, அந்த இதழின் ஆசிரியர் பட்டியலில் ஜீ.முருகன் பெயரை கண்டது. நவீன இலக்கிய படைப்பாளிகளில் குறிப்பிடத்தகுந்தவர் இவர். "கருப்பு நாய்க்குட்டி" என்கிற சிறுகதைத் தொகுப்பு வாசிப்பில் தவற விடக்கூடாதது. சந்தா விபரங்களைப் பற்றி விசாரித்து ஒரு அஞ்சலட்டை அனுப்பியதில் இதுவரை வெளிவந்துள்ள மூன்று இதழ்களையுமே அனுப்பி விட்டனர். உடனேயே சந்தாவை அனுப்பிவிட்டேன்.

சமீபத்திய இதழான (எண் 6) மே-ஜூன் 2006 இதழில் வெளியான ஒரு சிறிய கட்டுரை, உங்கள் பார்வைக்கு.

க.நா.சு கல்லறையிலிருந்து கிளம்பும் 'பட்டியல்' பூதங்கள்

க.நா.சு தொடங்கி வைத்த பட்டியல் சமாச்சாரம் இன்றும் தொடர்கிறது. தங்களுடைய இலக்கிய ஆய்வு (?) கட்டுரைகளிலோ, பேட்டிகளிலோ தரவரிசைப் பட்டியலிடுவதை சிலர் ஆர்வத்துடன் செய்து வருகிறார்கள். பெரும்பாலும் இவை ஆதரவாளர்களின் பட்டியலாகவே இருக்கும். தமிழின் தலைசிறந்த நாவலாசிரியர்கள், சிறுகதை எழுத்தாளர்கள், கவிஞர்களின் வரிசைகள் இவை. பெண்களுக்கும், தலித்துகளுக்கும் இதில் உப பிரிவுகளும் உண்டு. தினசரியில் வெளியாகியிருக்கும் தேர்வு முடிவில் எண்களைத் தேடுவது போல ஆர்வத்துடன் ஒவ்வொரு படைப்பாளியும் இந்தப் பட்டியிலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என்று தேடும் மன நோய்க் கூறு கொண்டவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் ஒவ்வொருவருக்கும் ஆதரவாளர்களும் அதிருப்தியாளர்களும் இன்று பெருகிப் போயுள்ளார்கள். யாருடையப் பட்டியலிலும் இடம் பெறான துரதிர்ஷ்டசாலிகளுக்காக வனம் தன்னுடைய ஆழ்ந்த அனுபாதத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

()

தொடர்புக்கு:
552, பேஸ்-1, சத்துவாச்சேரி, வேலூர்-632 009. செல்: 98420 52294. vanam_net@yahoo.co.in (ஆண்டு சந்தா ரூ.80/-)

()

.......பழனிவேள் ஒரு தேர்ந்த படைப்பாளி, நல்ல விமர்சன நோக்குடையவர் என்பது எனது அபிப்ராயம். அப்படியிருக்க, புதுப்பேட்டை இந்தியக் கருப்பர்களின் திரைப்படம் எனச் சறுக்கியது ஏனோ? மூன்றாந்தரக் குப்பையான புதுப்பேட்டையைப் பழனிவேள் இந்த வகையில் பகுப்பாய்வு செய்வது வாசகர்களின் நல்ல சினிமா ரசனையை மேம்படுத்த உதவுமா? இது போன்ற திரைப்படங்களைப் பற்றி எழுதுவதை விடுத்து ஜானகி விஸ்வநாதன் போன்றோரது வித்தியாசமான சினிமா முயற்சிகள் பற்றி எழுதுவது பயன்தரக்கூடியது.

காலச்சுவடு ஆகஸ்டு 06 இதழில் வெளியான, பழனிவேள் எழுதின புதுப்பேட்டை திரைப்பட விமர்சனத்தையொட்டி செப்06 இதழில் வெளியான வாசகர் (க.அகிலேஸ்வரன், யாழ்ப்பாணம்) கடிதத்தின் ஒரு பகுதி.

()

சமீபத்தில் படித்த நூல்கள்:

தலைமுறைகள் (நீல.பத்மநாபன்)

வட்டாரவழக்கு நாவல்களின் முன்னோடியான படைப்பு இது. மகத்தான பத்து இந்திய நாவல்களில் இது ஒன்று என்று க.நா.சு. ஆங்கிலப் பத்திரிகையில் இந்நூலைப் பற்றி எழுதயிருக்கிறார். ஆய்வுக் கட்டுரைகளிலும், விமர்சனக் கட்டுரைகளிலும் பல முறை இந்த நாவலின் பெயரைக் கண்டதில் இருந்து படிக்க வேண்டிய ஆவல் அதிகமாகி சமீபத்தில்தான் இது சாத்தியமானது. 1967-ல் எழுதி முடிக்கப்பட்ட இந்த நாவல் 1992-ல்தான் முதல் பதிப்பை கண்டிருக்கிறது. (வானதி பதிப்பகம்).

திரவியம் என்கிறவனின் 15 வயது முதல் 25 வயது வரையிலான காலகட்டத்தில் அவனுடைய பார்வையில் விரிகிற, பயணிக்கிற இந்த நாவலில் குமரி மாவட்டத்து செட்டிமார்களின் வட்டார வழக்குகளும், சடங்கு சம்பிரதாயங்களும், வாழ்க்கை முறையுமாக என நிறையச் சங்கதிகள் இந்த நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மிகுந்த நிதானமான நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் சில இடங்களில் சலிப்பூட்டி ஒரு நல்ல எடிட்டரின் தேவையை நினைவுப்படுத்துகிறது. வட்டார வழக்குச் சொற்கள் தாராளமாகவே இந்நாவலில் புழங்கினாலும் வாசகனுக்கு அது ஒன்றும் பெரிய தடையாக இல்லை.

"....... குறைந்தது ஆறு அங்குலமாவது கனமுள்ள அந்த ஒற்றைமரக் கதவு கோட்டை வாசலைப் போலப் பலவிதக் கீரீச்சல்களையும் மடமடவென்று வாந்தியெடுத்தவாறு மிகுந்த கஷ்டத்தோடு திறந்து கொண்டது" போன்ற அபூர்வமான வர்ணணைகள் வாசிப்பவனுத்தை சிறிதேனும் சுவாரசியப்படுத்த உதவுகின்றன.

என்றுமுள தமிழும் இன்று உள்ள தமிழும் (இந்திரா பார்த்தசாரதி)

1991 முதல் 92 வரை தினமணியில் "என் பார்வையில்" என்ற தலைப்பில் இ.பா எழுதிய 21 கட்டுரைகளின் தொகுப்பு இது. (தமிழ்ப் புத்தகாலயம்) அரசியல், கலை, இலக்கியம், ஆன்மிகம், மொழி போன்றவைகளைப் பற்றி அந்த காலகட்டத்தைப் பிரதிபலிக்கிற கட்டுரைகள், இன்றைய சூழ்நிலைக்கும் பொருந்தும்படி உள்ளன.

"திராவிட இயக்கங்கள் தங்களது அரசியல் லாபங்களுக்காக கத்தித்தீர்த்த தமிழ் மொழி குறித்த வெற்றுக்கூச்சல்களை (உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு) அவர்களே கைவிட்டு விட்ட நிலையில் சில "அடிப்படைவாதிகள்" இன்றும் கூட விடாதிருப்பதை பார்க்கும் போது "மொழி உணர்வு" என்கிறதை ஆயுதமாக்கி எப்படி ஒரு இனத்தின் மூளையை மழுங்கடிக்க முடியும் என்பதற்கு உதாரணம். மொழியின் வளர்ச்சி குறித்து அறிவுப்பூர்வமாக சிந்திக்க வேண்டுமேயல்லாமல் உணர்ச்சிப்பூர்வமாக அணுகுவது எந்தவித பயனையும் தராது. இந்த மாதிரியான ஆட்டு மந்தைகளை சற்றே அணுகிப் பார்த்தால் தமிழின் அடிப்படை இலக்கணம் கூட தெரியாமல் பிழையுடன் எழுதுவதை, பேசுவதை காணலாம்."

தமிழ் மொழி பற்றி இ.பா. எழுதியுள்ள கட்டுரைகளைப் படித்ததிலிருந்து எனக்கு தோன்றியதுதான் மேலே குறிப்பிட்டிருப்பது.

Friday, September 08, 2006

வேட்டையாடு விளையாடு - என் பார்வை

இணையமே இந்தப்படத்தை "வேட்டையாடி" முடிந்திருந்த தருணத்தில் நானும் கொஞ்சம் "விளையாடிப்" பார்க்கலாமே என்று தோன்றியதில் இந்தப் பதிவு.

உள்ளடக்கத்திலோ, கதை சொல்லும் உத்திகளிலோ, தொழில்நுட்ப சமாச்சாரங்களிலோ பரிசோதனை முயற்சிகள் மேற்கொண்டு தமிழச்சினிமா தேக்கமடையாமல் ஒரு அடியேனும் முன்னேற்றி அழைத்துச் செல்லக்கூடிய சொற்ப படைப்பாளிகளில் கமல்ஹாசன் பிரதானமானவர். பொதுவாக ஆங்கிலப்படங்கள் Action, Drama, Romance, Thriller என்று ஏதாவது ஒன்றில் வகைப்படுத்தக்கூடியதாக அமைந்திருக்கும். இந்த வகைப் படங்களில் திரைக்கதை அதிகம் அலையாமல் நூல்பிடித்தாற் போல் ஒரே கோணத்தில் சொல்லப்பட்டிருக்கும். தமிழ்ப்படங்களை இவ்வாறு வகைப்படுத்துதல் பொதுவாக அரிதான விஷயம். சாதம், சாம்பார், குழம்பு, ரசம், கூட்டு, பொரியல், அப்பளம், பாயாசம் என்று குழைத்து அடித்தால்தான் நம்மவர்களுக்கு சாப்பிட்ட திருப்தியே இருக்கும். ஒரு சராசரி தமிழ்த் திரைப்பட பார்வையாளனும் இந்த வகையிலேதான் தனக்கு கேளிக்கையாக அமைகிற திரைப்பட ஊடகத்தின் உள்ளடக்கத்தையும் எதிர்பார்க்கிறான். படத்தின் நடுவே சம்பந்தமில்லாமல் வணிக நோக்கத்திற்காக நுழைக்கப்படுகிற 'ஐட்டம்' பாட்டுக்களின் லாஜிக் பற்றியெல்லாம் அவனுக்கு கவலையில்லை. குதித்தாடும் செழிப்பான மார்பகங்கள் தரும் மனக்கிளர்ச்சியே அவனுக்கு போதுமானதாக இருக்கிறது.

மேற்சொன்ன சம்பிரதாயங்களை பெருமளவிற்கு யோக்கியமாக தவிர்க்க முயன்று எடுக்கப்பட்டிருக்கிற படம் வே.வி. அசட்டுத்தனமான நகைச்சுவைகளோ, காதைக் கிழிக்கும் வசனங்களோ, கேமராவை நோக்கி பேசப்படும் "பஞ்ச்" டயலாக்குகளோ, (எனக்கு இதுதான் நகைச்சுவைக் காட்சிகளாக தோன்றுகிறது) நாயகன் அந்தரத்தில் பறக்கும் நகைச்சுவைகளோ இல்லாமல் குற்றங்களின் புலனாய்வு நோக்கில் திசைமாறாமல் செய்யப்பட்டிருக்கும் திரைக்கதை (சிக்கிமுக்கி நெருப்பே போன்ற அபத்தங்களை தவிர்த்து) 'சபாஷ்' சொல்ல வைக்கிறது.

()

சுஜாதா ஒரு கட்டுரையில் ராணுவ வீரர்கள் களத்தில் போரிடுவதின் அடிப்படையைப் பற்றி எழுதியிருந்தார். நாட்டுப்பற்று, தேசியக்கொடி போன்ற மாய்மாலங்கள் ஒரு புறமிருந்தாலும், தன்னுடன் பழகிய தோழன் எதிரணியினரால் சுடப்பட்டு இறந்ததில் ஏற்படும் கோபமும், ஆவேசமும்தான் அவர்களை போரிட வைப்பதின் ஆதாரமான விஷயமாக விளங்குகிறது என்று. இதிலும் அந்த விஷயம் சுட்டிக் காட்டப்படுகிறது. நண்பர் ஆரோக்கியராஜின் மகள் கற்பழித்து கொலை செய்யப்படும் சோகம் ஆறுவதற்குள் நண்பரும் அவர் மனைவியும் கூட கொலை செய்யப்படுவது ராகவனை இந்த வழக்கில் ஒரு காவல்துறையின் அதிகாரியின் வழக்கமான கடமைகளை மீறி ஆவேசமாக செயல்பட வைக்கிறது எனலாம்.

கமல் இந்தப்படத்தில் இயல்பாக நடிக்க முயன்றிருக்கிறார். என்றாலும் சில வணிக கட்டாயங்களுக்காக சண்டைக் காட்சிகளில் வழக்கமான நாயக வேஷத்தையும் கட்ட வேண்டிதாயிருக்கிறது. படத்தின் முதல் பாடல் (கற்க கற்க) சிறப்பாகவும் பாராட்டத்தக்க உத்தியுடனும் எடுக்கப்பட்டிருக்கிறது. கமலின் கடந்தகால வாழ்வு பிளாஷ்பேக்கில் தவணை முறையில் சொல்லப்பட்டிருந்தாலும் பொருத்தமான இடங்களில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. திரில்லர் பட திரைக்கதையின் ஆதாரமே அடுத்தது என்ன என்று பார்வையாளளை எப்போதும் இருக்கையின் நுனியில் அமரச் செய்வதுதான். புலனாய்வின் இடையே சொல்லப்படும் அந்த மென்மையான காதல் காட்சிகள் நீளம் திரைக்கதையில் தொய்வை ஏற்படுத்துகிறது.

தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பான்மையாகவும் பார்வையாளனின் மூளையை கணக்கிலேயே எடுத்துக் கொள்ளாத "லாஜிக் மீறல்கள், கிளிஷேக்கள்" இந்தப்படத்திலும் உள்ளது. அமெரிக்க நாய்களின் புலன்களினாலேயே உணரப்படாத பிணங்கள், ராகவன் "உள்ளுணர்வினால்" உணரப்படுவதும், (இறுதிக்காட்சியில் "நீ ஒரு மோப்பம் பிடிக்கிற மோசமான நாய்டா" என்று வில்லன் வேறு இதை உறுதிப்படுத்துகிறான்) வழக்கு விவகாரங்களை பொது தொலைபேசியில் பேசுவதும், காவல்துறை அதிகாரியின் மூக்கருகிலேயே வில்லன் மாறுவேடத்தில் கடந்து செல்வதும் போன்றவையான காட்சிகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். (வில்லன் என்றாலே தலை நிறைய மயிர் வளர்த்திருக்க வேண்டும் என்கிற கவுதமின் எதிர்பார்ப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்).

()

ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் சில சிறப்பாக அமைந்திருந்ததற்கு ஏற்ப, பாடல்களின் காட்சியமைப்பும் சிறப்பாக அமைக்கபட்டிருக்கிறது. பின்னணி இசையில் ஹாரிஸ் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறாரா என்று தோன்றுகிறது. கமல்-ஜோ காதல் காட்சிகளின் பின்னணியில் பழைய இந்திப்படங்களை போல நூறு வயலின்கள் கதறுகிறது. பின்னணி இசை என்றாலே ஏதாவதொரு வாத்தியம் ஒலித்துக் கொண்டேயிருக்க வேண்டுமென்பதில்லை. அவற்றிற்கு ஓய்வு கொடுக்க வேண்டிய தருணங்களும் உண்டு.

குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருப்பவர்கள் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் எடிட்டர் ஆண்டனியும். இருவரின் கூட்டணியில் பல காட்சிகள் புத்துணர்ச்சியாக இருக்கிறது.

()

முந்தைய படமான 'காக்க காக்க'விலிருந்து முற்றிலும் மாறி எடுக்க தீர்மானித்ததாக இயக்குநர் கவுதம் (மதனுடனான) பேட்டியில் சொல்லியிருந்தாலும், பெரும்பாலான காட்சிகள் 'கா.கா' வை நினைவுப்படுத்துவதை தவிர்க்க இயலவில்லை. மேலும் இளமாறன், மாயா என்று முந்தைய படத்தின் பாத்திரங்களையே உபயோகிக்கும் அளவிற்கு என்ன பெயர் பஞ்சம் அல்லது சம்பந்தப்பட்ட பெயர்களின் மேல் இயக்குநருக்கு என்ன பிரேமை என்று புரியவில்லை. மேலும் 'கா.கா'வின் நாயகி ஜோதிகாவையே இதிலும் உபயோகித்ததில் இந்த ஒப்பிடுதல் இன்னும் அதிகமாகிறது. (சம்பந்தப்பட்ட பாத்திரத்திற்கு குறிப்பிட்ட நடிகைதான் பொருத்தமாக இருப்பார் என்று இயக்குநர் தீர்மானிப்பதில் தவறில்லை. ஆனால் பாத்திர குணாதிசயங்களும், காட்சியமைப்புகளும் ஒத்துப் போவதில்தான் இந்த சிக்கல் ஏற்படுகிறது).

An another episode in police officer's life என்பது இந்தப்படத்தின் tag line. ஆனால் The same episode of "Kakka Kakka" has been remade" என்பதுதான் என் கருத்தாக இருக்கும்.

()

படம் பார்க்கச் சென்ற சூழலை எழுதாவிட்டால் சில பேர் கோபித்துக் கொள்ளவும், இந்தப் பதிவின் தனித்தன்மை பாதிக்கப்படும் என்பதினாலும் இது தவிர்க்க முடியவில்லை. ஆரோக்கியமான தொழில்நுட்ப சமாச்சாரங்கள் அமைந்திருக்கும் அரங்கத்தில்தான் இந்த மாதிரியான படங்களின் காணும் அனுபவம் சிறப்பாக இருக்கும். ஆனால் என் வீட்டருகில் உள்ள ஒரு சுமாரான தியேட்டரில் (பிருந்தா) பார்த்ததில் பெரும்பாலான வசனங்கள் காதில் விழவில்லை. ஓயாமல் அழுது கொண்டிருந்த ஒரு கைக்குழந்தையின் கதறலோடும், அது ஓய்ந்த பிறகு அந்த தம்பதியினரின் சச்சரவு ஒலிகளின் பின்னணியோடும்தான் இந்தப் படத்தை பார்க்க நேர்ந்தது. வெளியே போக முயன்ற குழந்தையின் தாயை தடுத்து "பால்குடு, பால்குடு" என்று குழந்தையை இயல்பில்லாத முறையில் சமாதானமடைய வைக்க முயன்ற அந்த தந்தையையும், முலைக்காம்பை நிராகரித்து தொடர்ந்து கதறிய குழந்தையை சமாளிக்க முடியாமல் தவித்த அந்த தாயையும் கோபிக்க முடியாமலும், ஆனால் எழுகிற எரிச்சலை தவிர்க்க முடியாமலும் இந்தப் படத்தை காணும் அனுபவம் நேர்ந்தது.

பொதுவாகவே பொது இடங்களில் எவ்வாறு புழங்குவது என்கிற அடிப்படை நாகரிகம் அறியாத நம்மவர்களின் மேல் எப்போதும் எனக்கு எரிச்சல் உண்டு. "தமிழர்களின் தொன்மை நாகரிகம்" என்று கட்டுரை எழுதுபவர்களை முகத்திலேயே குத்த வேண்டும் என்கிற ஆசையுமுண்டு. மற்றவர்களின் மேல் எச்சில் படக்கூடும் என்கிற அறிவு இல்லாமல் கண்ட இடங்களில் காறித்துப்புபவர்கள், பொது இடங்களில் உரத்த குரலில் உருப்படியில்லாத உரையாடல்களை நிகழத்துபவர்கள், அணுகுண்டு அழிவிலிருந்து தப்பி ஓடுபவர்கள் போல் பதட்டத்துடன் மோதிக் கொண்டு ஓடி பேருந்து இருக்கையில் இடம் பிடிப்பவர்கள், மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கிறோம் என்கிற பிரக்ஞையே இல்லாதவர்கள்; அப்படி இருந்தும் அதை அலட்சியப்படுத்துபவர்கள்.... இந்த மாதிரி பிரகஸ்பதிகளை யாராவது வேட்டையாடினால் நன்றாக இருக்கும்.

Saturday, September 02, 2006

பழைய பேப்பர்

இணையத்தில் எனது இருப்பை புதுப்பித்துக் கொள்ள, எப்பவோ எழுதின குறிப்புகளை இங்கே பதிவு செய்கிறேன்.

சென்னையில் ஒரு கோடைக்காலம்

சென்னையின் கோடை விடைபெறத் தயங்கிக் கொண்டிருக்கிறது. பேருந்தின் ரயிலின் இரும்புக் கம்பிகள் பயணிகள் தங்களை அணுகவொட்டாதவாறு சூட்டில் தகிக்கின்றன. சிவனின் தலையில் கங்கை குடியிருக்கும் ஐதீகம் உண்மையோ அல்லது பொய்யோ தெரியவில்லை. என்னுடைய தலையில் இந்த மாதிரி தேவதை யாராவது குடிகொண்டு விட்டாளா என்று சந்தேகிக்கும் வகையில் வியர்வைத் தண்ணீர் தலைக்குள்ளிலிருந்து ஊற்று போல் பொங்குகிறது. வீட்டிற்குப் போனவுடன் அலுவலக வேடத்தை களைக்கும் வேளையில் உள்ளாடைகள் பிழியப்பட்ட தேனடையை விநோதமாக நினைவுப்படுத்துகின்றன. உடம்பில் வியர்வை ஊற்றுடன் சிரமப்பட்டு பாலத்தின் மேடேறிக் கொண்டிருக்கும் கைவண்டிக்காரரை எரிச்சலுடன் ஒலியால் திட்டி துரத்துகிறது ஒரு திமிர்பிடித்த வெளிநாட்டு கார்.

எங்கு பார்த்தாலும் கூட்டம் கூட்டமாக வரும் சக மனிதர்களைக் காண எரிச்சலாக இருக்கிறது. உலகத்திலேயே இரண்டாவது நீளமானதாக புகழ்பெற்ற மெரீனாவில் தாராளமாக சுவாசிக்கக் கிடைக்கும் மீன்வறுவல் நாற்றம் குமட்டலை ஏற்படுத்துகிறது.

மிகுந்த சப்தத்துடன் தரையில் மோதி மண் வாசனையை எழுப்பும் மழையை கற்பனையில் கண்டு நனைந்தபடி கடந்து போகின்றன நாட்கள்.

()

பழசாகிப் போன பாக்யராஜ்

மகளின் கோரிக்கைகிணங்க, இம்சை அரசனைக் காண சென்று அரங்கம் நிரம்பிவிட்டதால், "பாரிஜாதம்" என்கிற மகா அபத்தக் களஞ்சியத்தை காண நேரிட்டது. படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களிலேயே தூங்கத் துவங்கிவிட்ட மகளை பொறாமையுடன் பார்த்த படியும் கொடுத்த காசு வீணாகக்கூடாதே என்கிற நடுத்தர வர்க்கத்து மனப்பான்மையில் வெளியே போக முடியாமல் சகித்தபடி கழிந்தது இரண்டரை மணி நேரம். 'இந்தியாவிலேயே மிகச் சிறந்த திரைக்கதை படைப்பாளி' என்று பாக்யராஜைப் பற்றி வெகுஜன பத்திரிகைகள் பல நேரங்களில் சிலாகிப்பதுண்டு. ஒரு பொய்யை திரும்ப திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்பதற்கு இது ஒர் சிறந்த உதாரணம்.

அசட்டுத்தனமான நகைச்சுவையையும் பாலியல் உணர்வுகளையும் ஏதோவொரு நூதனமான சதவிகிதத்தில் கலந்து தருவதே அவரது பாணி. இதைத் தவிர வேறொன்றுமில்லை. அவரின் சிறப்பம்சமான ஒன்றை வேண்டுமானால் குறிப்பிடலாம். பத்து பேரை அடித்துவீழ்த்துகிற, திடகாத்திரமான, வீரதீர பராக்கிரமசாலிகளே பெரும்பான்மையாக கதாநாயர்களாக உலா வந்து கொண்டிருந்த நேரத்தில், ஒரு சாமான்யனின் குணாதிசயங்களோடு கதாநாயகனாகி தொடர்ந்து வெற்றி பெற்றவர். (இந்த வரிசையில் இன்னொரு நடிகராக மோகனை குறிப்பிடலாம். இரவல் பேனாவிலிருந்து இங்க் திருடும் கதாநாயகனை (பயணங்கள் முடிவதில்லை) மிகவும் அரிதாகத்தான் காண முடியும்.)

()

இன்னும் சில நாட்கள் கழித்து இம்சை அரசனை காண முடிந்தது. அரண்மனை பாத்திரங்களை கட்டம் கட்டி காட்டி விட்டு பல்லியையும் சுட்டும் அட்டகாசமான ஆரம்ப நகைச்சுவை பல இடங்களில் காணாமற் போயிருப்பதுதான் இந்தப் படத்தின் சோகம். பொருத்தமான கதையை தேர்வு செய்து கொண்டு வடிவேலுவை இன்னும் நன்றாக exploit செய்துகொண்டிருக்கலாம். என்னை இந்தப் படத்தில் மிகவும் கவர்ந்தது, அரண்மனை மற்றும் அந்தப்புரங்களின் அரங்க அமைப்புதான். நகைச்சுவைப் படம்தானே என்று compromise செய்து கொள்ளாமல் தீவிரமான உழைப்புடன் பங்களித்த கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தியைத்தான் இந்தப்படத்தின் நிஜ கதாநாயகன் என்பேன்.

இயக்குநர் சிம்புதேவன், நகைச்சுவையைக் கொண்டு சரித்திரப்படத்தில் சமகால பிரச்சினைகளை கட்டமைத்தது புத்திசாலித்தனமான காரியம். வீச்சறுவா நாயகர்களின் ரத்தங்களுக்கு நடுவே ஒரு ஆறுதலான படம்.

()

சமீபத்தில் படித்த சில நூல்களைப் பற்றி சில வரிகள்:

(1) கூடு கலைதல் - பொ.கருணாகரமூர்த்தி

சமகால இலங்கை தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர் பொ.கருணாகரமூர்த்தி. கணையாழி நடத்திய குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற இவரின் மிக சுவாரசியமான நாவலான "ஒரு அகதி உருவாகும் நேரம்" மூலம்தான் இவரை கண்டு கொண்டேன். பல்வேறு பிரச்சினைகள், சோகங்களுக்கு நடுவில் மெல்லிய இழை போல் ஊடுருவியிருக்கும் நகைச்சுவையே இவரது எழுத்தின் பலமாக நான் காண்கிறேன்.
இவரின் சமீபத்திய சிறுகதைகளின் தொகுப்பு "கூடுகலைதல்" என்கிற தலைப்பாக வெளிவந்திருக்கிறது. (கனவுப்பட்டறை வெளியீடு)

(2) ஆழி சூழ் உலகு - ஜோ.டி.குரூஸ்

மீனவர்கள் வாழ்க்கைப் போராட்டங்களை மையமாக வைத்து தமிழ் நவீன இலக்கியத்தில் அதிகம் படைக்கப்படவில்லை. வண்ணநிலவனின் "கடற்புரத்தில்" போன்றவைதான் அரிதாக தென்படுகிறது. குரூஸின் இந்த நாவல் மீனவர்களின் (பரதவர்கள்) தமிழக, குறிப்பாக குமரி மாவட்டத்தில் ஆமந்துறை என்ற பகுதியினரின் வாழ்க்கையை மிக நெருக்கமாக ஆய்வு செய்கிறது.

1933-ல் தொடங்கி 1985-ல் நிறையும் இந்த நாவலின் ஊடாக அவர்களின் புவியியல் பிரச்சினைகள், சமூக மாற்றங்களினால் ஏற்படும் விளைவுகள், மதமாற்றங்களினால் ஏற்படும் தடுமாற்றங்கள், அன்றாடம் மரணத்தை எதிர்கொண்டு ஜீவிதம் நடத்த வேண்டிய அவலமான வாழ்க்கை ஆகியவை குறித்து ஆராய்கிறது. இந்த காலகட்டத்தின் மிக முக்கியமான வரலாற்றுச் சம்பவங்களையும் (சிதம்பரம் பிள்ளையின் கப்பல் கம்பெனி) நாவல் நெடுக காண முடிகிறது.

மிக முக்கியமான நாவல் (தமிழினி பதிப்பகம்)

(3) சில இலக்கிய ஆளுமைகள் - வெங்கட் சாமிநாதன்.

சுருக்கமாக வெ.சா. என அறியப்படும் வெங்கட் சாமிநாதன், பி.ஆர்.ராஜம் அய்யர் தொடங்கி உ.வே.சா., திரு.வி.க., பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், க.நா.சு., பி.எஸ்.ராமையா, மெளனி, சி.சு.செல்லப்பா, தி.ஜா., ந.முத்துசாமி, தஞ்சை பிரகாஷ், சம்பத், கோமல் சுவாமிநாதன், நாஞ்சிநாடன், தயாபவார், எஸ்.பொ., ஆகிய ஆளுமைகளைப் பற்றி பல்வேறு கால கட்டங்களில், பல்வேறு இதழ்களில் (பெரும்பாலும் யாத்ரா) எழுதப்பட்ட கட்டுரைகள்.

வெ.சா.விற்கு ஒருவரைப் பிடித்து விட்டால் வானுயரப் புகழ்கிறார். (ந.முத்துசாமி பற்றிய கட்டுரை). மாறாக அமைந்து விட்டால் எதிராளி துவம்சம் செய்யப்படுகிறார். க.நா.சு மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தாலும், இருவருக்குமான முரண்கள் பல இடங்களில் வெளிப்படுகிறது. சம்பத் பற்றி எழுதப்பட்டிருந்த எனக்கு பிடித்திருந்தது. (காவ்யா பதிப்பகம்)

Saturday, July 15, 2006

பார்த்ததில்... கேட்டதில்.... படித்ததில்..

ஆனந்தவிகடன் வார இதழில் "பார்த்ததில்... கேட்டதில்.... படித்ததில்.. என்றொரு பகுதியில் இசை, புத்தகம், திரைப்படம் என்றும் சம்பந்தப்பட்ட துறைகளில் பிரபலமானவர்களை, அவர்களுக்கு பிடித்தமான படைப்புகளை வரிசைப்படுத்தச் சொல்லி வெளியிடுகிறார்கள். இவ்வாறு கேட்கப்படுகிறவர்களில் எத்தனை பேர் இயல்பாகவும், வெளிப்படையாகவும் தங்களின் பட்டியலை சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை. மற்றவர்களின் பார்வையில் தம்முடைய ரசனை உயர்வாக தெரிய வேண்டும் என்கிற ஆசையினால், விரும்பிப் படிப்பது "சரோஜாதேவி"யாக இருந்தாலும் (இந்தப் பெயரில் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொருவர் எழுதிக் கொண்டிருந்தார்கள்) ஷேக்ஸ்பியரின் காவியங்கள்தாம் விரும்பிப் படிப்பது என்று ஜீலியஸ் சீசர் போல் கம்பீரமாக சொல்லிக் கொள்வார்கள்.

அவ்வாறில்லாமல் வெளிப்படையாக, தன்னிச்சையாக ஒருவரின் ரசனை வெளிப்படும் தருணத்தில் அவருடைய மனப்பான்மையை நம்மால் ஒரளவிற்கு புரிந்து கொள்ள முடியும். இப்போதைய நடைமுறையில் சொன்னால் ஒருவர் தனது செல்போனின் Ring tone மற்றும் Hello tune ஆகியவற்றை எந்தப் பாடல்களைக் கொண்டு தேர்வு செய்கிறார் என்பதைப் பொறுத்து அவரின் குணாதியசத்தை ஒரளவு கணிக்க முடியும். அவருக்கு பிடித்த எத்தனையோ பாடல்கள் இருப்பினும், தன்னுடைய கருவியில் திரும்பத் திரும்ப ஒலிக்கப் போகிறது எனும் போது இன்னும் பிரத்யேகத்துடனும் சிரத்தையுடனும் தன்னுடைய தேர்வை கண்டடைவார்.
என்னுடைய நண்பரின் செல்போனில் வைத்துள்ள ஹலோ டியூனின் படி "Yes. Who is this?" என்றொரு கம்பீரமான ஆண் குரல் திரும்பத் திரும்ப ஒலிக்கும். அழைப்பவர் விழிப்பாக இல்லாவிட்டால், எதிர்முனையில் இருப்பவர்தான் பேசுகிறார் என்று நினைத்து "நான்தாங்க, கோயிஞ்சாமி பேசறேன்" என்று அவர் உண்மையாக பேசுவது வரை பொய்க்குரலுடன் மல்லாடிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

()

ஆனந்தவிகடன் தொடர் படி என்னுடைய விருப்பப் பட்டியலை எழுத முனைந்தால் எப்படியிருக்கும் என்ற ஆசை வந்ததால் இந்தப்பதிவு. கூடுமானவரை பிலிம் காட்டாமல் என்னுடைய விருப்பத்தை வெளிப்படையாக பதிவு செய்ய முயற்சித்திருக்கிறேன்.

படித்ததில்.......

சத்திய சோதனை - மோகன்தாஸ்.
மரப்பசு - தி.ஜானகிராமன்
ரத்தஉறவு - யூமா வாசுகி
ஆனந்தாயி - சிவகாமி
புலிநகக்கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்
ஆனந்த வயல் - பாலகுமாரன்
சதுரங்க குதிரை - நாஞ்சில்நாடன்
காகித மலர்கள் - ஆதவன்
ஜெயந்தன் சிறுகதைகள்
ஏழாம் உலகம் - ஜெயமோகன்


கேட்டதில் .........
How to Name it மற்றும் 1980-ல் வெளிவந்த பாடல்கள் - இளையராஜா
Tere Kasam - Adnan Sami
1942 A Love Story - R.D.Burman
இருவர் - AR Rahman
Greatest Hits of Beethovan
Devotional Songs - Anuradha Potuwal
Taal - AR Rahman
Colonial cousins - ஹரிஹரன்
பி.சுசீலா ஹிட்ஸ்
ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா - மலையாளம்


பார்த்ததில்........

சாருலதா (வங்காளம்) - சத்யஜித்ரே
பதேர் பாஞ்சாலி (வங்காளம்) - சத்யஜித்ரே
அவள் அப்படித்தான் - ருத்ரைய்யா
உதிரிப்பூக்கள் - மகேந்திரன்
ஹே ராம் - கமல்ஹாசன்
Mrs. & Mr. Iyer - அபர்ணா சென்
உன்னால் முடியும் தம்பி - கே.பாலச்சந்தர்
குருதிப் புனல் - பி.சி.ஸ்ரீராம்
வீடு - பாலுமகேந்திரா
நாயகன் - மணிரத்னம்


விருப்பப்படும் நண்பர்கள் இதனை தொடரலாம்.

Friday, July 14, 2006

தீவிரவாதி ஜிடேன்

ஒரு வழியாக உலக கோப்பை கால்பந்து போட்டி முடிவடைந்து விட்டது. விளையாட்டுக்களின் ராஜா என்று இந்த விளையாட்டைச் சொல்வேன். 90 நிமிடங்கள், 22 கால்கள், ஒரு பந்து என்கிற அளவில், எந்த நிமிடத்திலும் ஆட்டத்தின் முடிவு மாறக்கூடிய அளவில் பார்வையாளனை பரபரப்பாகவும், சுவாரசியமாகவும் வைத்திருக்கக்கூடிய இந்த விளையாட்டு, ஏறத்தாழ 110 கோடி பேர் உள்ள இந்தியாவில் பெரும்பான்மையாக கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானதாகும். இதோடு இந்த விளையாட்டு பிரதானமாக கவனிக்கப்படுவது அடுத்த உலக கோப்பையின் போதுதான். கிரிக்கெட் என்கிற ராட்சசம், கபடி, கில்லி, பம்பரம், காற்றாடி போன்ற உள்ளுர் பிரத்யேக விளையாட்டுக்கள் எல்லாவற்றையும் விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது. முன்பு ESPN சானல் தடையில்லாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த போது நிறைய கிளப் போட்டிகளை தவறாமல் பார்த்துவிடுவேன். எந்த கிளப், எந்த ஆட்டக்காரர் அல்லது நாட்டுக்காரர் என்பதெல்லாம் எனக்கு அவ்வளவாக முக்கியமில்லை. வெள்ளை கலர், நீல கலரில் எது சிறப்பாக ஆடுகிறது என்பதை ஒரு ஐந்து நிமிடம் கவனிப்பேன். சிறப்பாக ஆடக்கூடிய அணியின் சார்பான பார்வையாளனாக தன்னிச்சையாக மாறிவிடுவேன். "எனது" அணி வெற்றிபெற வேண்டும் என்கிற சுவாரசியத்துடன் ஆட்டத்தை கவனிப்பதற்கு இந்த உத்தி உதவியாக இருந்தது.

சமீபத்திய உலக கோப்பை போட்டிகளில் என்னைப் பொறுத்த வரை கால் இறுதிப்போட்டி தொடரில் பிரேசிலும் பிரான்சும் மோதியதிலிருந்துதான் பரபரப்பின் உச்சத்தை தொட்டது. இதில் பிரேசில் தோற்றுவிடும் என்று அப்போது யாராவது சொல்லியிருந்தால் எங்கள் எதிர்வீட்டு நாய் கூட அதை நம்பியிருக்காது. அந்த ஆட்டத்தில் முதலிலிருந்தே பிரான்ஸ் ஆதிக்கம் செலுத்தியது. குறிப்பாக அதன் தடுப்பாட்டக்காரர்கள் vierra போன்றவர்கள் தங்கள் பங்கை சிறப்பாக ஆற்றினார்கள். "சரியாக ஆடவில்லை" என்று ரொனால்டினோவைப் பற்றின குற்றச்சாட்டுக்கள் அதீதமானது என்றுதான் கூறுவேன். மத்தியகள ஆட்டக்காரக்காரராக அவர் பந்தை சிறப்பாக கையாண்டார்... மன்னிக்கவும்.. காலாண்டார். எதிர் அணிக்காரர்கள் பந்தை அவரிடமிருந்து பறிக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. அவர் அளித்த பல பாஸ்களை சக ஆட்டக்காரர்கள் (குறிப்பாக ரொனால்டோ) வீணாக்கினார்கள்.

பிரான்சின் Zidane எப்போதுமே எனது பிரியமான ஆட்டக்காரர். 1998 உலக கோப்பை போட்டிகளில் அவர் அடித்த வெற்றிக் கோல்கள் இப்போதுமே என் எண்ணங்களில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. பிரேசிலுடனான போட்டியில் அவரின் ஆட்டம் பார்வையாளர்களை திருப்திப் படுத்தும் வகையில் இருந்தது. ஹென்றிக்கு அவர் அடித்த அற்புதமான pass-ஆல் அன்றைய போட்டியில் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றவுடன் பிரான்ஸ்தான் கோப்பையை வெல்லும் என்று உறுதியாக நம்பினேன். சர்வதேச விளையாட்டிலிருந்து விடைபெறப் போகிற அவர் கோப்பையை கைப்பற்றி சாதனை புரியப் போகிறார் என்று நானும்
பெரும்பான்மையோரைப் போல தீவிரமாக நம்பினேன். அதற்கேற்றாற் போல் தனக்கு கிடைத்த பெனால்டி கிக்கை சாமர்த்தியமாக பயன்படுத்தி ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே ஒரு கோல் அடித்து நம்பிக்கையை ஏற்படுத்தினார். பதிலுக்கு இத்தாலியும் ஒரு கோல் சமனாக்கியது.

எக்ஸ்ட்ரா டைமில் வந்ததுதான் வினை. அப்பாவின் சட்டையின் பின்னாலிருந்து இழுக்கும் குறும்புக்கார மகன் போல, இத்தாலிய வீரர் மாட்டரஸி ஜிடேனின் சட்டையை இழுத்துக் கொண்டே போக எரிச்சலைடந்த ஜிடேன் "சட்டை வேண்டுமா? ஆட்டம் முடிந்ததும் தருகிறேன்" என்பதாக பத்திரிகைச் செய்தி. பதிலுக்கு மாட்டரஸி ஜிடேனை "தீவிரவாதி" என்றாரா? "உன் மனைவியின் சட்டையை தா" என்றாரா? அவருடைய உறவினர்களை ஆபாசமாக திட்டினாரா? .. ஒன்றும் தெரியவில்லை. கோபமடைந்த ஜிடேன், கையால் அடித்தால் நடுவர் பவுல் கொடுத்து விடுவாரோ என்னவோ என்று நினைத்து மஞ்சுவிரட்டு காளை போல தலையால் வேகமாக மாட்டரஸியின் தலையில் முட்டியதை தொலைக்காட்சியில் லைவ்வாக பார்த்த போது அந்த நடுராத்திரியில் கொஞ்சமிருந்து தூக்கக் கலக்கமெல்லாம் விலகிப் போனது.

பெனால்டி கிக்கில் பிரசித்தமான ஜிடேன் அந்த ஆட்டத்தில் நீடித்திருந்தால் பிரான்ஸ் கோப்பையை வென்றிருக்கக்கூடும் என்பதுதான் பெரும்பாலான விளையாட்டு ஆர்வலர்களின் கணிப்பு. ஒரு அணிக்கு தலைவனாக பொறுப்பான நிலையில் இருந்தவர், அந்த தருணத்தை முதிர்ச்சியுடன் அணுகியிருக்கலாம். எதிரணியினர் ஆத்திரமூட்டும் வகையில் பேசி கவனம் சிதைப்பதுதான் வாடிக்கையான விஷயம்தான். கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்தும் ஒரு பேட்டியில் "பாகிஸ்தான் அணியினர் தாம் பேட் செய்கையில் ஆபாசமாக வெறுப்பேற்றும் வகையில் பேசி அவுட் ஆக்க முனைவது வாடிக்கையானது" என்று குறிப்பிட்டிருக்கிறார். ஜிடேன் இந்த விஷயத்தை பின்னால் fifa-விடம் புகார் தெரிவித்திருந்து மாட்டரஸி மீது நடவடிக்கை எடுக்க வைத்திருக்கலாம். இவரது அவசரமான முன்கோபத்தால் சக அணியினரின் அத்தனை வருட தயாரிப்பும் உழைப்பும் வீணாகிவிட்டதுதான் சோகம்.

பீலே, மாரடோனா போன்ற கால்பந்து ஜாம்பவான்களின் வரிசையில் வைத்துப் போற்றத்தக்கவர் ஜிடேன் என்பதில் சந்தேகமேயில்லை. ஆஸ்திரேலியா கடைசி தருணத்தில் பெனால்டியை ஏற்படுத்தி போட்டியிலிருந்து விலகிப் போன பரிதாபத்தைப் போல், பிரான்சும் ஜிடேனின் இந்த தவறால் கோப்பையை இழந்தது வருத்தமானது. இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடமும் உள்ளதாக எனக்குத் தோன்றுகிறது.

()

தீவிரவாதம் என்கிற வார்த்தை ஆங்காங்கே குண்டு வெடிக்கும் இன்றைய சூழ்நிலையில் எதிர்மறையானதாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. ஒரு கொள்கையில், சித்தாந்தத்தில், கருத்தில், செய்கையில் தீவிரமாக இயங்குபவர் அனைவரும் தீவிரவாதிகள்தான். கால்பந்து என்னும் விளையாட்டில் தீவிரமாகவும் ஆத்மார்த்தமாகவும் இயங்கிய ஜிடேனை அந்தத் துறையில் தீவிரவாதி என்றழைப்பதில் தவறில்லைதானே?

(கோக்குமாக்காக ஒரு தலைப்பை வைத்து விட்டு எப்படியெல்லாம் நியாயப்படுத்தி எழுத வேண்டியிருக்கிறது)

Wednesday, July 05, 2006

ஒரு வயோதிகத் தகப்பனின் நெடும் பயணம்

வெளியூரில் படித்துக் கொண்டிருக்கும் உங்கள் மகன் காவல் துறையால் கைது செய்யப்பட்டிருப்பதாக உங்களுக்கு தகவல் வருகிறது. அலறியடித்துக் கொண்டு ஓடுகிறீர்கள். காவல் துறையோ, அரசு இயந்திரமோ, அதிகார அமைப்போ எங்கிடமிருந்தும் உங்கள் மகனைப் பற்றிய தகவலை அறிய முடியவில்லை. உயிரோடு இருக்கிறானா அல்லது இறந்து போனானா... ஒன்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை. என்ன செய்வீர்கள்?

நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது. காவல்துறையிடமிருந்தும், அரசியல்வாதிகளிடமிருந்தும் முறையான பதில் பெறமுடியாத அவ்வாறான ஒரு தந்தை நியாயம் வேண்டி நீதிமன்றத்தின் கதவுகளை நடுங்கும் கைகளோடு வெகுநேரம் தட்டிக் கொண்டிருந்த நெகிழ்ச்சியான அனுபவங்கள்தாம் இந்தப் புத்தகம்.

()

ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் - ராஜன் கொலை வழக்கு - பேராசிரியர் டி.வி. ஈச்சரவாரியர் - (தமிழில் குளச்சல் மு.யூசுப்) - காலச்சுவடு பதிப்பகம் - 208 பக்கங்கள் - ரூ.100/-

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக அறியப்படுகிற இந்தியாவின் பெருமைமிக்க அரசியல் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்கவே முடியாத ஒரு கறை 1975 ஜூன் 26 அன்று ஏற்பட்டது. இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்ட "இந்தியாவின் இருண்ட காலம்" என்று வர்ணிக்கப்படுகிற நெருக்கடி நிலையைத்தான் (Emergency) குறிப்பிடுகிறேன் என்பது சொல்லாமலே உங்களுக்குத் தெரிந்திருக்கும். இதற்கு முன்னர் அருகாமையில் உள்ள நாடுகளுடன் போர் ஏற்பட்ட போது தேசத்தின் பாதுகாப்பிற்காக இந்தியாவில் இரண்டு முறை நெருக்கடி நிலை பிரகனடப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு தனிமனிதரின் சுயநலத்திற்காக, தன்னுடைய அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக, தன்னுடைய குடிகளை காப்பாற்ற வேண்டிய ஒரு பிரதமரே நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தியது துரதிர்ஷ்டவசமானது. அதிகார அமைப்பின் துணையுடன் காவல் துறையினர் நடத்திய துஷ்பிரயோகங்களில் பல மனிதர்கள் அடைந்த மனரீதியான, உடல்ரீதியான வலிகளில் இந்தியாவே வாதைகளின் ஒரு கூடாராமாக மாறிப் போன, நீதி என்பது இருட்டில் உறைந்து போன கடுமையான காலகட்டமாய் இருந்தது அது.

1976 மார்ச் 1ம் தேதி, முன்னிரவு நடந்த கல்லூரி கலைவிழாவினில் கலந்து கொண்டு அதிகாலையில் கல்லூரிக்கு பேருந்தில் சக மாணவர்களுடன் ஆசிரியர்களுடன் வந்திறங்கிய ராஜன் என்கிற, கோழிக்கோடு பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்றி அந்த கல்லூரி மாணவர் காவல் துறையினரால் கைது செய்யப்படுகிறார். இந்தச் செய்தி கல்லூரி முதல்வரால் மாணவரின் தந்தையான, ஒரு கல்லூரியின் இந்திப் பேராசிரியரான டி.வி. ஈச்சரவாரியருக்கு தெரியப்படுத்தப்படுகிறது. விசாரணை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமில்லாத செய்தியை அறிந்து கொள்கிற அவருக்கு காவல் துறையின் கடுமையான முகத்தைத்தான் தரிசிக்க இயல்கிறதே, மகன் எதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறான், எங்கே அடைத்து வைக்கப்பட்டிருக்கிறான் என்கிற நியாயமாய் தெரிவிக்கப்பட வேண்டிய எந்தச் செய்தியும் தெரிவிக்கப்படவில்லை.

அப்போது உள்துறை அமைச்சராக இருந்த கருணாகரனை அவருக்கு நெருக்கமான பேராசிரியரின் மூலம் அணுகுகிறார் ஈச்சரவாரியர். திருப்திகரமான பதிலேதும் இல்லை. நக்ஸல்பாரிகளின் இருப்பிடத்திற்காக போலீஸாரால் அழைத்துச் செல்லப்படும் போது ராஜன் தப்பிவிட்டார் என்கிற அதிகாரப்பூர்வமற்ற செய்திதான் கிடைக்கிறது. ராஜனுக்கு இடதுசாரிகளின் மீது அனுதாபம் உண்டே தவிர, தீவிரவாத இயக்கங்களில் ஒருபோது ஈடுபட மாட்டான் என்ற உறுதியோடு இருக்கும் அவர் இதை நம்பவில்லை. அப்போதைய முதல்வரான ஸி. அச்சுதமேனோனை அணுகும் போதும் பூடகமான பதில்களே கிடைப்பதோடு, ஒரு சூழ்நிலையில் வெடித்துப் போய் "நான் ஒரு துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு கேரளம் பூராவும் உன் மகனைத் தேடி ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனா ஏறியிறங்க வேண்டுமா" என்கிற அவமதிப்பும் நேர்கிறது.

இங்கே ஒரு பழைய சம்பவத்தை நினைவுகூர்கிறார் ஈச்சரவாரியர். 1949 மார்ச் மாதம். பொதுவுடமைக்கார இயக்கத்தினர் அரசாங்கத்தால் வேட்டையாடிக் கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம். அச்சுதமேனனும் மற்ற தோழர்களும் தலை மறைவாக இருந்தனர். நடுஇரவில் ஈச்சரவாரியரின் வீடு தட்டப்படுகிறது. அழுக்கடைந்த உடம்போடும், உடுப்புகளோடும் அச்சுதமேனோன் நின்று கொண்டிருக்கிறார். "அந்திக்காட்டிலிருந்து போலீசின் கண்களை விட்டுத் தப்பியோடி வந்திருக்கிறேன். பின்னால் போலீஸ் வருகிறது. எப்படியாவது ஒரு மறைவிடம் ஏற்பாடு செய்து தர வேண்டும்" ஈச்சரவாரியரும் பொதுவுடைமை இயக்க அனுதாபிதான். தன்னுடைய உறவுக்காரச் சிறுவர்களின் துணையுடன் சற்று தூரமுள்ள ஒரு கிராமத்தில் பாதுகாப்பாக தங்க அனுப்பி வைக்கிறார். இந்த நிலையில் அவர்கள் மொத்தமாக போலீசாரிடம் பிடிபட்டால் ஏற்படக்கூடிய ஆபத்தை அவர் உணர்ந்திருந்தாலும் வேறு வழிதெரிந்திருக்கவில்லை.

ஒரு காலத்தில் அப்படி தன்னால் உதவி செய்யப்பட்டு இப்போது முதல்வராயிருக்கும் அச்சுதமேனோனின் அலட்சியத்தால் உடைந்து போகிறார் ஈச்சரவாரியர். பொதுநல சிந்தனைகளின் தாக்கத்தால் அதிகார அமைப்பையே உயிரையும் துச்சமென மதிக்கும் இளைஞர்களில் சிலர், அதே அதிகாரம் தன்னிடம் வந்த பின்னால் தலைகீழாக மாறிப்போகும் விந்தை தொடர்ந்து கொண்டேயிருப்பதுதான் போலும். இப்படி அச்சுதமேனோன், கே.கருணாகரன் போன்ற அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற தன்மையினால் பந்தாடப்படும் அவர் அதிகார அமைப்பின் உச்சமான ஜனாபதி வரைக்கும் மனுக்களை அனுப்பி சலித்துப் போய் கடைசி புகலிடமாக நீதிமன்றத்தை அணுகுகிறார்.

நெருக்கடி காலம் வாபஸ் பெறப்பட்ட 1977 மார்ச் 21ம் தேதிக்கு பிறகு நீதிமன்றம் சந்திக்கிற முதல் ஆள்கொணர்வு மனு (Habeas Corpus) அது. கேரளா மட்டுமன்றி தேசத்தின் கவனத்தையே ஈர்த்த வழக்கமாக அது அமைந்தது. "ராஜன் கைது செய்யப்படவில்லை" என்று முன்னர் சட்டசபையில் தவறான தகவல் கொடுத்த கருணாகரன், ராஜன் கைது செய்யப்பட்டது நீதிமன்றத்தால் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட நிலையில் பதவியேற்ற ஒரே மாதத்தில் ராஜினாமா செய்ய வேண்டியதாயிருந்தது. பத்திரிகைகளின் பொய்ச் செய்திகள், ஆதரவான சில பத்திரிகைகள், சாட்சியங்கள் காவல் துறையினரால் மிரட்டப்படுதல், ஆகிய பல்வேறு தடைகளைத் தாண்டி ராஜன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதும் விசாரணை முகாமில் துன்புறுத்தப்பட்டதும் நீதிமன்றத்தால் ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது. என்றாலும் ராஜன் கொலை செய்யப்பட்டது சந்தேகத்திற்கிடமின்றி நிருபிக்கப்படாததால் உயர் பொறுப்பில் இருந்த காவல்துறையினர் சிலருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை என்பதோடு முடிவுக்கு வந்தது. அதையும் அவர்கள் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ததில் விடுதலை செய்யப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர்.

ஆக... ஒரு குடியரசு நாட்டில் ஒரு நிரபராதி எந்தவித முகாந்திரங்களுமில்லாமல் அதிகார அமைப்பின் கொடிய பிரதிநிதிகளால் கொலை செய்யப்பட்டதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை என்பதும் ஏதும் கிடையாது என்பதே இதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி. ஆக.. ராஜன் கொலை வழக்கின் மொத்த தீர்ப்பே இதுதான் என்கிறார் ஈச்சரவாரியர்.

தன் மகன் இறந்து போனதற்கு நஷ்டஈடு கேட்டு சிவில் வழக்கை தொடர்கிறார் ஈச்சரவாரியர். இந்த வழக்கிலும் பல சிரமங்களை கடந்த பின் ஆறுலட்சம் ரூபாய் நஷ்டஈடாக கிடைக்கிறது. "ராஜன் ரத்தத்த வித்த காசு உனக்கு வேணுமாடா?" என்று அவரின் மூத்த சகோதரரிடமிருந்து உட்பட பல எதிர்ப்புக்குரல்கள் கேட்கிறது. ஆனால் இதைக் கொண்டு அரசு பொது மருத்துவமனையில் ராஜன் நினைவாக ஒரு வார்டும் இன்னும் பல பொதுநலத்திட்டங்களுக்குத்தான் இந்த பணம் பயன்படபோகிறது என்பதை அறிந்தவுடன் அனைவரின் பாராட்டும் ஈச்சரவாரியருக்கு கிடைக்கிறது. ஏற்கெனவே சிறிதளவில் மனநோயாளியாக இருந்த ராஜனது அம்மா, அவர் நினைவாக புலம்பி 2000-ல் இறந்து போகிறது.

()

சரி. ராஜனுக்கு என்னதான் ஆனது? அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னிரவில் கலை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்ற அதே இரவில் நக்ஸல்பாரி இயக்கங்களால் காயண்ண என்கிற இடத்தில் போலீஸ் ஸ்டேஷன் தாக்கப்பட்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்படுகின்றன. அதில் சம்பந்தப்பட்டிருக்கிற ராஜன் என்கிற பெயர் காவல்துறைக்கு கிடைக்கிறது. எனவே அதே பெயருள்ள கல்லூரி மாணவரை எந்தவித காரணமும் சொல்லாமல் விசாரணை முகாமிற்கு அழைத்துச் சென்று துன்புறுத்தி கொன்றதாக கருதப்படுகிறது. நீதிமன்றத்தாலும் "கருதப்படுகிறதுதான்" இதுவரை இந்த வழக்கில் ராஜனின் மரணத்தைப் பற்றின எந்தவிதமான அதிகாரபூர்வ தகவலும் காவல்துறையாலோ, நீதிமன்றத்தாலோ தெரிவிக்கப்படவில்லை.

இந்த வழக்கிற்குப் பிறகுதான் "ஒருவரை கைது செய்தபின் அவரின் உறவினருக்கு தகவல் அனுப்பப்பட வேண்டும்" "குற்றம் சாட்டப்பட்டவரை 24 மணிநேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும்" என்கிற வி.ஆர்.கிருஷ்ணய்யரின் பிரசித்திபெற்ற அந்த ஆணைகள் காவல்துறையினரின் வழிகாட்டுதலுக்கு இடப்படுகின்றன.

()

.... ராஜனைப் போன்று அதிகாரத்தின் ராட்சசக் கால்களால் மிதித்து அழிக்கப்பட்ட மனித உயிர்கள் ஏராளம். அந்த ஜீவன்களுக்கு ஈச்சவாரியரைப் போனற கல்வியறிவு பெற்ற அயராமல் உரிமைக்காகப் போராடும் ஒரு பாதுகாப்பாளர் இல்லை. ஆனால் ஈச்சரவாரியரின் இந்த நூலைப் படிக்கும் போது நாமறிந்திராத அந்தத் துயர முகங்களும் அவர்களது அவலங்களும் தவிர்க்க இயலாமல் நினைவுக்கு வரும்.... என்று இந்தப் புத்ககத்தின் முன்னுரையில் சுகுமாரன் குறிப்பிடும் போது ஆமோதிக்கத் தோன்றுகிறது.
சந்தனக் கடத்தல் வீரப்பனை தேடுகிறேன் பேர்வழி என்று ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களும், பழங்குடியினரும் அதிரடிப்படையினரால் முகாமில் கொடுமைப்படுத்தப்பட்ட அவலங்கள், சதாசிவம் விசாரணைக் கமிஷன் மூலம் நாம் அறிய நேரும் போது, இதுபோன்ற கொடுமைகள் காலங்காலமாக நிழலாக நம்மை தொடர்ந்து வரும் விஷயங்கள்தான் எனப் படுகிறது.

()

புத்தகத்தின் பல இடங்களில் ஈச்சரவாரியர் தன்னுடைய மகனைப் பற்றின நினைவுகளையும், மன உளைச்சல்களையும் வர்ணிக்கும் போது கண்ணீரை அடக்க பெரும் பிரயத்தனம் எடுக்க வேண்டியதாயிருந்தது. மொழிபெயர்ப்பு நூல் என்கிற ஞாபகம் வராதவாறு மொழிபெயர்த்த குளச்சல் மு.யூசுப் மிகுந்த பாராட்டுக்குரியவர்.

அலுவலத்திலிருந்து வீட்டிற்கு கிளம்புகையில் ரயிலில் மிகவும் அசுவாரசியத்துடன்தான் இந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். நான் இறங்க வேண்டிய இடத்திலிருந்து இரண்டு நிலையங்கள் தாண்டி ரயில் சென்றுக் கொண்டிருப்பதை பிறகுதான் கவனித்தேன். வீட்டிற்குச் சென்று ஒரே அமர்வில் இதை முடித்த போது உணர்ச்சியின் சோக உச்சியில் என்னையே நான் ஈச்சரவாரியாக உணர்ந்தேன்.

Thursday, June 29, 2006

புதுப்பேட்டையும் காயலான் கடையும்

என் நினைப்பில் மண்ணைப் போட்ட செல்வராகவன் என்று 7-ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தைப் பற்றி நான் முன்னமே எழுதியிருந்தாலும் அவரின் மீது எனக்கு இன்னமும் நம்பிக்கை இருந்தது, "காதல் கொண்டேன்" என்கிற வித்தியாசமான முயற்சியை அளித்ததற்காக. ரவுடி, தாதாக்களை நாயகர்களாகக் கொண்ட படங்கள் தற்சமயம் நிறைய வந்துக் கொண்டிருந்தாலும் செல்வராகவன் தன் தனித்தன்மையுடன் 'புதுப்பேட்டை' யை உருவாக்கியிருப்பார் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் .......

()

விளிம்புநிலை மனிதர்களை பிரதானமாகக் கொண்ட படம் என்று கேள்விப்பட்டதிலிருந்து இந்தப்படத்தை சென்னையின் படுலோக்கல் தியேட்டர்களான கிருஷ்ணவேணி, சயானி, நாதமுனி போன்றவற்றில்தான் பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். தங்களுடைய வாழ்க்கையில் நிஜத்தில் அன்றாடம் பார்க்கின்றவற்றை நிழிலில் பார்க்கும் போது எவ்வாறு அவர்கள் எதிர்வினையாற்றுவார்கள் என்று யூகிப்பது எனக்கு கிளர்ச்சியூட்டுவதாயிருந்தது. ஆனால் சென்னையின் சொகுசு திரையரங்களில் ஒன்றான "சத்யம்" குழுமத்தில் பார்க்க விதித்திருந்தது.

முலைகளையும், பிருஷ்டங்களையும் பிரதானமாக துருத்திக் காட்டும் இறுக்கமான உடைகளை அணிந்திருந்த பெரும்பாலான யுவதிகள், தங்களை வெறித்துப் பார்க்கும் ஆண்களைப் பற்றிய பிரக்ஞை இல்லாதது போல் பாவனை செய்தனர். யுவன்களோ, லண்டன் வெள்ளைக்கார தாதிக்கு பிறந்தவர்கள் போல் " கிவ் மீ பிப்டி பக்ஸ் மேன்" என்று குதறலான ஆங்கில உச்சரிப்புடன் உலவிக் கொண்டிருந்தனர். பணக்காரத்தனமான அந்த சூழல் வழக்கம் போல் என்னை அசெளகரியமாகவும் விநோதமாகவும் உணர வைத்தது. மேல்தட்டு மக்கள் இடைவேளையில் முன்னரே கட்டணம் செலுத்தி தின்பண்டங்களை பிருஷ்டங்களை நகர்த்தாமல் தங்களின் இருக்கைகளுக்கே வரவழைத்துக் கொண்டனர். மூத்திரப்புரைக்கு செல்லத் தேவையில்லாமல் இருந்த இடத்திலேயே சிறுநீர் பிடிக்கப்பட்டுக் கொள்ளும் வசதி இருந்தால் கூடுதல் கட்டணம் செலுத்தி அதையும் பயன்படுத்திக் கொள்வார்களாயிருக்கும். இந்த மாதிரியான மனிதர்கள் "Low Class People" படத்தை பார்க்க விரும்பினது குறித்து எனக்கு எந்தவிதமான ஆச்சரியமுமில்லை. ஏனெனில்....

சிலவகை படங்கள் திறமையான மார்க்கெட்டிங் உத்திகள் மூலமும், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு மூலமும் சிறந்த படம் என்கிற மாயத்தோற்றத்தையும், சராசரி திரைப்பட பார்வையாளனிடம் ஒரு மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி லாபம் சம்பாதித்து விடும். ரஜினிகாந்த், விஜய் போன்றவர்களின் பெரும்பாலான குப்பைப் படங்கள் இந்த வகையைச் சேர்ந்தவைதான். புதுப்பேட்டையையும் அந்த வகையில் சேர்க்க நேரிட்டது துரதிர்ஷ்டவசமான ஒன்றுதான்.

()

தனிமைச் சிறையில் இருக்கும் ஒரு குற்றவாளி (தனுஷ்) சற்றே மனம் பிறழ்ந்த நிலையில் தன் வாழ்க்கையை சுயவாக்குமூலமாக பார்வையாளர்களுக்கு விவரிப்பதில் படம் துவங்குகிறது.

எந்தவிதமான முன்னேற்பாடான காட்சிகளுமில்லாமல், "படிச்ச நாயே கிட்ட வராதே" என்ற பாடலை ஒரு சேரி வாழ் மாணவன் பாடுகிறான். திரைப்படங்களில் பாடல் எனும் அம்சம் இருப்பதே அபத்தமெனும் போது "எதற்காக படிச்ச நாயை திட்டுகிறான்" என்று கேள்வி எழுப்புகிற சம்பந்தமேயில்லாத இந்த மாதிரி பாடல்களின் பங்கு இன்னும் அபத்தமானது. இதில் irony என்னவென்றால் பாடுகிற மாணவனே பிளஸ் 2 படிப்பவன்தான். பாடலில் மட்டுமே ஒலிக்கிற (புதுப்பேட்டை, காசிமேடு, வியாசர்பாடி எங்க ஏரியா) குறிப்பிடப்படுகிற இடங்கள் திரைப்படத்தின் பெரும்பாலான பின்னணி காட்சிகளில் எங்குமே காணப்படவில்லை. நிர்மாணிக்கப்பட்ட ஜொலிப்பான அரங்குகளிலும் பின்னணியின் சூழலே புரியாத இடங்களிலுமே திரைப்படம் பயணிக்கிறது.

தன்னுடைய தந்தையினாலேயே தன் தாய் கொல்லப்படுவதை அறிகிற அவன் பயந்து போய் வீட்டை விட்டு ஓடி பிச்சையெடுக்க ஆரம்பிப்பதும் சூழ்நிலை காரணமாக ஒரு ரவுடி கூட்டத்தில் சரண் புகுந்து அவனே பெரிய ரவுடியாகி, சமூக விரோதிகளின் பாதுகாப்பான புகலிடமான அரசியலில் குதிப்பதில் படம் நிறைகிறது. இந்த காவியத்தை "வித்தியாசமாய் சொல்கிறேன் பேர்வழி" என்று பார்வையாளர்களை படுத்தி எடுக்கிறார் செல்வராகவன். நம்பவே முடியாத காட்சியமைப்புகள், நாயக பாத்திரத்திற்கு பொருந்தாத தனுஷின் உடல்வாகு, நத்தை வேக திரைக்கதை என்று எல்லா அம்சங்களும் சேர்ந்து இந்தப் படத்தை ஒரு தரமில்லாத படமாக்குகின்றன.

()

தனுஷைப் பற்றி சிறப்பாக கூறியாக வேண்டும். படத்தின் காட்சி ஒன்றில் ரவுடி கதாபாத்திரம் ஒன்று தன் தம்பியை நோக்கி எரிச்சலுடன் கூறுவதாக ஒரு வசனம் வரும். "அந்த கூலிங்கிளாஸ கழட்டித் தொலைடா. லட்சம் லட்சமா பணத்த கொட்டி இவனைப் போட்டு படம் வேற எடுக்கறேன். என்ன ஆகப்போகுதோ" அதற்கு தம்பி "இல்லண்ணா. நீயே பாரு. படம் செமயா பிச்சிக்கப்போவுது" இந்த வசனம் செல்வராகவனின் மனச்சாட்சியிடமிருந்து தன்னையுமறியாமல் வெளிப்பட்டு விட்டதோ என்று யூகிக்கிறேன். தான் நடிக்கிற பாத்திரங்களுக்கேற்றவாறு முற்றிலும் பொருந்துகிற உடலமைப்பு இல்லையென்றாலும் தன் நடிப்புத் திறமையால் அந்த வெற்றிடத்தை நிரப்பி சாதனை படித்தோர் முன் உதாரணங்களாக உண்டு.

"வீர பாண்டிய கட்டபொம்மன்" படத்தை பார்த்திருந்த ஒரு வெளிநாட்டவர், சிவாஜி கணேசனை நேரில் பார்க்க நேரும் போது "நீங்கள் இவ்வளவு குள்ளமானவர் என்பதை படத்தில் என்னால் உணரவே முடியவேயில்லையே. திரையில் பார்க்கும் போது உயரமானவராக காட்சியளித்தீர்களே" என்று ஆச்சரியத்துடன் கேட்டாராம். "அந்தப் பாத்திரத்திற்கான உடைகளை அணியும் போது உள்ளூர பொங்கும் கம்பீர உணர்ச்சியினால் என்னையுமறியாமல் மார்பை உயர்த்தி நடித்ததினால் அப்படி நேர்ந்திருக்கலாம்" என்றாராம் சிவாஜி. எங்கேயோ படித்திருக்கிறேன். "யார்ரா இவன் பென்சில்ல கோடு போட்டா மாதிரி" என்று படத்திலேயே கிண்டலடிக்கப்படும் தனுஷ் ஒரு ரவுடிக் கூட்டத்தையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும் சரமாரியாக அடி வாங்கியும், கொடுத்துமாக பரிதாபமான உடலமைப்பைக் கொண்டு அவர் நடிக்க முயலும் போது நகைக்கவே தோன்றுகிறது. ராம்கோபால் வர்மாவின் முதல் தெலுங்குப்படமான "சிவா"வில் ஏறக்குறைய இதே மாதிரியான உடலமைப்பை கொண்ட ரகுவரன், பெரிய தாதாவாக வந்து அந்தக் குறையே தெரியாமல் தன் நடிப்பால் பார்வையாளர்களை பிரமிக்க வைப்பார். ஆக ... செல்வராகவன் இனி தன் சகோதரனையே கட்டியழுதுக் கொண்டிருக்காமல் பாத்திரத்திற்கு பொருத்தமானவர்களை தேர்ந்தெடுப்பது நல்லது. வட இந்தியாவைப் போல் இங்கே ரவுடிகளிடம் நவீன துப்பாக்கி வகைகள் இன்னும் அதிகளவில் புழக்கத்தில் வரவில்லையென்பது

யதார்த்தமென்றாலும், ஏதோ பழைய பட எம்.ஜி.ஆர் vs நம்பியார் போல தனுஷ் கத்தியை சுழற்றிக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருப்பது அதீதமாக இருக்கிறது.

()

படத்தின் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பாக அரவிந்த கிருஷ்ணாவின் ஒளிப்பதிவை குறிப்பிடலாம். காட்சிகள் கண்ணில் ஒற்றிக் கொள்கிற தெளிவுடன் சூழலுக்கேற்ற ஒளியமைப்புகளுடன் சிறப்பாக இருக்கிறது. யுவனின் பின்னணி இசை cliche-க்களைத் தவிர்த்து மேற்கத்திய பாணியில் சிறப்பாக இருந்தாலும் The God Father படத்தின் பின்னணி இசையை ஞாபகப்படுத்துவது போல் இருந்ததை தவிர்த்திருக்கலாம். "உசிரோட இருக்கணும் கண்ணு. அதுதான் முக்கியம்" என்பது போன்ற வசனங்கள் ஒலிக்கும் இடங்களில் மட்டும் பாலகுமாரன் நினைவுக்கு வருகிறார். 'விபச்சாரியாக நடித்தால் தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது' என்று யாராவது சிநேகாவிடம் சொல்லியிருப்பார்களோ என்னவோ, ரொம்பவும் பரிதாபமாக வந்து போகிறார். சோனியா அகர்வாலைப் பற்றியெல்லாம் எழுதவே தேவையில்லை.

நாம் ஆள்வதற்கு (வேறு வழியில்லாமல்) தேர்ந்தெடுப்பவர்களின் நிழலான பின்னணிகள் குறித்தும், அதில் உள்ள அசிங்கங்கள் குறித்தும் சொல்ல செல்வராகவன் இவ்வளவு மோசமான அளவில் மெனக்கெட்டிருக்க தேவையில்லை. இவ்வளவு தரமில்லாத படத்தை எடுத்துவிட்டு "தமிழ்ச்சினிமாவை அடுத்த தளத்திற்கு நகர்த்தியிருக்கிறேன்." "சர்வதேசதர படம்" என்றெல்லாம் பேட்டிகளிலும் படவிளம்பரங்களிலும் குறிப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்க்கும் போது எரிச்சலாக இருக்கிறது. இந்த மாதிரியான ரவுடிகளை நாயகர்களாக காட்டும் இயக்குநர்கள் கிளைமாக்ஸ் முடியுமுன், சென்சாருக்கு பயந்தோ என்னவோ அவர்களை சாகடித்தோ, திருத்தியோ, வன்முறைக்கெதிரான அறிவுரை சொல்லியோ கேவலமாக படத்தை முடிப்பார்கள். ஆனால் பரவாயில்லை... செல்வராகவன் "இவர் மூன்று முறை எம்.எல்.ஏவாக இருந்து பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்" என்று போட்டு இதுதான் யதார்த்தம் என்பதை சொல்கிறார்.

()

சென்னையில் புதுப்பேட்டை என்கிற இடம், பழைய இரும்புச் சாமான்கள், வாகனங்களின் துருப்பிடித்த உதிரி பொருட்களை விற்கும் காயலான் கடைகள் அடங்கிய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டு அறியப்படுகிறது. இந்த புதுப்பேட்டையையும் இந்தக் கடைகளில் விற்கப்படும் ஒரு பொருளின் தரத்திற்கே இணையாக சொல்லலாம்.

பி.கே. சிவகுமாரின் கட்டுரைகள்

அழகிய சிங்கர் பல வருடமாக நடத்திக் கொண்டு வரும் சிற்றிதழான நவீன விருட்சத்தின் சமீபத்திய இதழில் (இதழ் எண்.71-72) பி.கே.சிவகுமாரின் கட்டுரைத் தொகுப்புக்காக நான் எழுதிய மதிப்புரை பிரசுரமாகியுள்ளது. அதை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். (நன்றி : நவீன விருட்சம்)

ஒரு வாசக மனத்தின் நுட்பமான அவதானிப்புகள்

அட்லாண்டிக்குக்கு அப்பால் - பி.கே.சிவகுமார் (கட்டுரைகள்)எனிஇண்டியன் பதிப்பகம், ரூ.120/-

()

தன்னைச் சுற்றி நிகழ்கிற அல்லது தன்னைப் பாதிக்கிற எந்த சமூக நிகழ்வைப் பற்றியும் கவலையில்லாத ஆட்டு மந்தைகளாக இருப்பவர் ஒருபுறமிருக்க, மாறாக அதை பொறுப்புணர்ச்சியோடு கூர்ந்து கவனித்து, உள்வாங்கி விமர்சிப்பதோ, பதிவு செய்வதோ சில பேருக்குத்தான் சாத்தியமாகிறது. எழுத்தாளர்களுக்கு தம் எண்ணங்களையும் கருத்துக்களையும் தம்முடைய படைப்புகளின் மூலம் வெளிப்படுத்த வாய்ப்பிருக்கிறது என்றால் சாதாரணர்களுக்கு வடிகாலாக அவர்களது நாட்குறிப்புகளே அமைகின்றன. இதனால் பலரின் சிறந்த கருத்துக்கள் வெளியுலகிற்கு தெரியாமலேயே போய்விடும் துர்ப்பாக்கிய நிலை இதுநாள் வரை ஏற்பட்டிருந்தது. ஆனால் கணினி தொழில்நுட்பம் சாதாரணர்களையும் எட்டியிருக்கிற இந்தக் காலகட்டத்தில் பல்வேறு விதமான இலவச வலைப்பதிவுச் சேவைகள், இந்தக் குறையை போக்கி எந்தவொரு மனிதரும் தம் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தவும் அதை பிறர் பார்வையிடுவதற்குமான வசதிகளை ஏற்படுத்தி தந்திருக்கின்றன. எழுத்து என்றாலே அச்சு ஊடகம்தான் என்கிற நிலை மாறி இன்று இணையத்தில் ஏராளமான தமிழ் படைப்புகள் படிக்கக் கிடைக்கின்றன. அந்த வகையில் எழுதப்பட்ட பி.கே.சிவகுமாரின் சிறந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு அச்சு ஊடகங்களை மட்டுமே சார்ந்திருப்பவர்களின் வசதிக்காக புத்தக வடிவிலே வெளியிடப்பட்டிருக்கிறது.

சிவகுமாரின் இந்த கட்டுரைகள் எல்லாமே இணையத்திலேயே வெளியாகி இணைய வாசகர்களின் பரவலான கவனத்தைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதிலுள்ள இலக்கியம், சமூகம், விவாதம், கவிதை, என்று வெவ்வேறு தலைப்புகளில் உள்ள 45 கட்டுரைகளை ஒருசேர வாசிக்கும் போது சிவகுமாரின் நுட்பமான ரசனையையும், வள்ளுவர் சொன்ன 'மெய்ப்பொருள் காணுதலை'யும், அவரின் பரந்துபட்ட வாசிப்பையும் நம்மால் உணரமுடிகிறது. 'வாசக அனுபவம்' என்கிற தலைப்பில் அமைந்துள்ள முதல் பகுதியில் பல்வேறு நூல்களின் விமர்சனங்கள் உள்ளன. விமர்சனக்கலை என்பது தமிழில் பொதுவாக சுய விருப்பு மற்றும் வெறுப்பு சார்ந்த, முன்தீர்மானங்களுடன் நூலை அணுகுகிற நிலையிலேயே இருக்கும் இன்றைய சூழலில் எவ்வித முகாமையும் சாராத இம்மாதிரியான பொதுவான வாசகர்களின் பார்வையில் சம்பந்தப்பட்ட நூலின் உண்மையான தகுதி குறித்து நம்மால் தெளிவாக உணரக்கூடும். ஒரு இளம் வாசகன் இந்தக் கட்டுரைகளைப் படிக்கும்போது தன் வாசிப்பனுபவத்தின் போதாமையையும், அதன் எல்லையை விரிவாக்க வேண்டிய அவசியத்தையும் உணரக்கூடும்..

()

உமாமகேஸ்வரியின் 'வெறும் பொழுது' என்கிற கவிதைத் தொகுப்பைப் பற்றி சிவகுமார் குறிப்பிடுகையில், 'மேலை நாடுகளிலிருந்து பிரதியெடுக்கப்பட்ட பெண்ணியக் கருத்துக்கள்' என்று சிலரால் குற்றஞ்சாட்டப்படுகிற தற்போதைய பெண் கவிஞர்கள் அந்த குற்றச்சாட்டுக்களை தங்களின் உணர்வு ரீதியான படைப்புகளின் மூலம் பொய்யாக்கியிருக்கிறார்கள். தலித் இலக்கியம் போல் பெண்களின் உணர்வுகளை பெண்களினால் மட்டும் சிறப்பாக வெளிப்படுத்த முடியும் என்கிறார். உமா மகேஸ்வரியின் கவிதைகள் பெண்ணியத்தை பெண்மையின் சிறப்பான குணாதியங்களுடன் சொல்ல விழைகின்றன என்பது இவரது கருத்து. 'கவிதை மனதிற்கு ஓர் அசைவை ஏற்படுத்தியதாக இருக்க வேண்டும்' என்கிற பிச்சமூர்த்தியின் கருத்திற்கேற்ப உமா மகேஸ்வரியின் கவிதைகளும் செயல்படுகின்றன என்று சிலாகிக்கும் இவர், ஆண்டாண்டுகளாக ஒடுக்கப்பட்ட பெண்கள், அதை ஆண்கள் மீதான வன்மமாக வெளிப்படுத்துவதைப் போல் அல்லாமல் அன்பும் நம்பிக்கையும் கொண்ட கவிதைகளாக இவரின் படைப்புகளை பார்க்கிறார் சிவகுமார்.

பழம்பெரும் எழுத்தாளரான வல்லிக்கண்ணனின் சுயசரிதமான 'வாழ்க்கைச் சுவடுகள்' என்கிற நூலைப் பற்றி எழுதும் போது, இந்த நூலின் மூலம் தமிழ்ச் சமூக வாழ்க்கையையும், கலை இலக்கியத்தையும், சிறுபத்திரிகைச் சூழலை அறிய உதவுகிற பொக்கிஷமாக குறிப்பிடுகிறார். சரித்திர நாவல்கள் என்று எழுதப்படும் பம்மாத்துகளை வெறுக்கும் வல்லிக்கண்ணனின் படைப்புகளை திராவிட இயக்கங்கள் ஏற்றுக் கொள்ளாமல் ஒதுக்கியே வைத்திருந்தன என்கிற செய்தி இந்த நூலின் மூலமாக நமக்கும் தெரிகிறது. திரைப்படத் துறையினரின் 'நீக்கு போக்குக்கு' ஏற்ப தம்மால் செயல்பட முடியாது என்று வந்த வாய்ப்பை உதறித் தள்ளிய வல்லிக் கண்ணனின் மீது சிவகுமாருக்கு ஏற்படுகிற மரியாதையைப் போலவே நமக்கும் ஏற்படுகிறது. 'பாராட்டுகிற மனம் வேண்டும்' என்கிற பாரதியின் வழியை தாமும் பின்பற்றுவதாக சொல்லும் வல்லிக்கண்ணனை, ஜெயமோகன் இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் இவ்வாறு விமர்சித்துள்ளார் "வல்லிக்கண்ணன் கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் பிற்காலத்தில் முக்கியமானவர்களாக ஆன பெரும்பாலான எழுத்தாளர்களை ஊக்குவித்து ஒருவரியேனும் எழுதியவரோ, பேசியவரோ அல்ல. அவர்களுக்கு தடைகளையும் உருவாக்கியவர். அவரை அங்கீகரிக்கும் முதிரா இளைஞர்களுக்கு மட்டும் ஓயாமல் ஊக்கம் கொடுப்பதே அவரது பாணி".

சுஜாதா (கணையாழியின் கடைசிப் பக்கங்கள்) சுகுமாரன் (திசைகளும் தடங்களும்) என்று நவீன இலக்கியம் மட்டுமல்லாது சித்தர் பாடல்களிலும், கம்ப ராமாயணத்திலும் சிவகுமாரின் வாசிப்பு நீள்கிறது. சிவவாக்கியரைப் பற்றி குறிப்பிடும் போது 'பகுத்தறிவைப் பயன்படுத்தி இறைவனை மறுக்கிற நாத்திகர்களிடையே, பகுத்தறிவால் இறைவனை உணர்ந்து அறிய முடியும் சொன்ன ஆத்திகர்' என்கிறார். பொருள்தேடி வெளிநாடு செல்லும் தமிழர்கள் பொதுவாக தங்கள் அடையாளங்களை அங்கே தொலைத்துக் கொண்டிருக்கும் சூழலில், சிவகுமார் தனது தாத்தாவிற்கு சொந்தமான பழுப்பேறிய புத்தகத்தை விருப்பமுடன் எடுத்துச் சென்றிருக்கிறார். வை.மு.கோபால கிருஷ்ணமாச்சர்யரின் கம்பராமாயண உரைத் தொகுப்பான அந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதும் போது அவரின் நினைவுகள் பின்னோக்கி தாத்தாவின் வீட்டைச் சுற்றியும், நூல்நிலையத்தைச் சுற்றியும் வி¡கிறது.

கம்பராமாயணத்தில் கதல் (நெல்) பாகம், திராட்சா (புல்) பாகம், நாரிகேள (கல்) பாகம் என்று மூவகை நடையும் இருப்பதையும், அதை விளக்கும் வண்ணமாக நெல்லென்பது வாழைப்பழம் தோலையுரித்த பின் சுவை தருவது போல வாசக மனம் சிறிது ஆராய்ச்சி செய்த பின் சுவை தருவது, திராட்சா பாகம் என்பது சுவைத்த மாத்திரத்தில் உள்ளும், புறமும் சுவை தருவது, அதன் மேலிருக்கும் கடினமாக பட்டையையும், ஓட்டையும் நீக்கியபின் அவை தருகிற தேங்காய் மாதிரியானது நாரிகேள பாகம் என்றும் விளக்கும் உரையாசிரியரை சிலாகிக்கும் சிவகுமார், 'தற்கால நவீன கவிதைகளில் பெரும்பாலானவற்றை நாரிகேள பாகத்தில் அடக்கி விட முடியும் என்று தோன்றுகிறது' என்றெழுதி நம்மையும் நகைக்க வைக்கிறார்.

'இலக்கியம்' என்கிற பகுதியில் சிவகுமாரின் வாசக மனம் இலக்கியம் குறித்து சில உரத்த சிந்தனைகளை நம் முன் வைக்கிறது. மரபுக்கவிதையா, புதுக்கவிதையா என்கிற வாதங்கள் இன்றளவும் நீடிக்கின்ற சூழலில், தமிழ்க் கவிதைகள் ஒவ்வொரு காலத்திலும் தன் வடிவத்தை இடையறாது மாற்றிக் கொண்டு வரும் போது மரபுக்கவிதையும் ஒருகாலத்தில் புதிய வடிவம்தான் என்பதையும், இப்போது கொண்டாடப்படுகின்ற புதுக்கவிதையின் வடிவமும் ஒழிந்து வேறொரு வடிவம் பின்னாளில் வரும் என்கிற விரிவான
பார்வையோடு 'புதுக்கவிதையும் மரபுக்கவிதையே' என்கிற கட்டுரை மொழிகிறது. தமிழ் படைப்புகளின் மீதான விமர்சனங்களையும், விமர்சகர்களையும் குறித்து ஒரு கட்டுரை கூறுகிறதென்றால் இன்னொன்று 'எது கவிதை?' என்கிற தலைப்பில் கவிதைக்கும் வாசகனுக்கும் இடையிலான உறவையும், புரிதலையும் ஆராய்கிறது. சமையலையும் எழுத்தையும் ஒப்பிட தைரியம் வேண்டுமென்றால் அது சிவகுமாரிடம் இருக்கிறது. எளிமையான சமையலில் குறை இருந்தால் உடனே தெரிந்து விடுவது மட்டுமல்லாது இவ்வகையான சமையலே சிரமமானது என்றும் கருதும் நூலாசிரியர், அதே போல் எளிமையான ஆனால் குறை இல்லாத எழுத்தை படைப்பதும் சிரமமான காரியமே என்பதை 'சமையலும் எழுத்தும்' என்கிற கட்டுரையில் கூறுகிறார்.

இதுவரையான பக்கங்களில் ஒரு வாசகராக நாம் பார்த்த சிவகுமார், 'விவாதம்' பகுதியில் ஒரு வழக்கறிஞராக உருமாறி கூர்மையுடனும், ஆதாரங்களுடனும், மெலிதான அங்கதத்துடனும் தாம் சரி என்று கருதும் வாதங்களை தீர்மானமாக முன்வைக்கிறார். ஜெயகாந்தனை விமர்சித்து முறையே அரவிந்தனும், மாலனும் இணையத்தில் எழுதிய கட்டுரைகளுக்கு இவரின் எதிர்வினைகள் தகவல்பூர்வமானதாகவும், பாராட்டத்தக்க அளவிலும் இருக்கிறது. என்றாலும் ஜெயகாந்தனை 'குருபீடமாக' ஏற்றுக் கொண்டிருக்கும் (இங்கே ஜெயகாந்தனின் 'குருபீடம்' என்கிற சிறுகதையை நினைவு கூர்வது பொருத்தமானது) சிவகுமார், 'எல்லா எழுத்தாளர்களின் படைப்புகளையும் அவற்றின் நிறை குறைகளோடு பரீசீலிப்பதும், தனது ஆதர்ச எழுத்தாளரின் படைப்புகளை கண்மூடித்தனமாக பாராட்டாதிருப்பதும், மாறாக தன்னைக் கவராத படைப்பாளிகளை முன்தீர்மானத்துடன் அணுகாதிருப்பதும், ஒரு சுதந்திரமான வாசகனின் ஆதாரமான செயல்பாடாக இருக்க வேண்டும்' என்று நான் கருதுகிற விஷயத்திற்கு மாறாக ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரை இறுகப் பற்றிக் கொண்டிருப்பது சரியா என சிவகுமார் யோசிக்க வேண்டும்.

'கவிதை கேளுங்கள்' பகுதியில் தன்னைக் கவர்ந்த சில கவிஞர்களின் படைப்புகளை தன் சுய அனுபவங்களுடன் ஒப்பிட்டு சிலாகிக்கிறார் சிவகுமார். 'தனித்தமிழ்' என்கிற விஷயம் மாயையான ஒன்று என்று ஆதாரங்களுடன் விளக்கும் இரண்டு கட்டுரைகளை (பொருந்தாக் காமம், தனித்தமிழ் என்னும் போலி') இந்தப் புத்தகத்தின் முக்கியமான கட்டுரைகளாக கருதலாம். பெரும்பாலோனோர் தினம் அருந்தும் பானமான, புழக்கத்திலுள்ள சொல்லாக விளங்கும் காப்பி (Coffee) என்ற சொல்லுக்கு மாற்றாக தனித்தமிழ் ஆர்வலர்கள் ஆக்கியிருக்கும் 'கொட்டைவடிநீர்' என்ற சொல்லை 'விந்து' என்று புரிந்து கொண்டதாக சிவகுமாரின் நண்பரொருவர் குறிப்பிடுகையில் திணிக்கப்படுகிற தனித்தமிழ் என்பது அபத்தமானதாகவும், அனர்த்தமான பொருள்படவும் ஆகிவிடக்கூடிய அபாயம் நமக்கு உறைக்கிறது. பரிதிமாற் கலைஞரும், மறைமலையடிகளும் ஆரம்பித்த 'தனித்தமிழ்' இயக்கத்திற்கு முன்பே எவ்வாறு பலவகையான பிறமொழி சொற்களை தன்னுள் ஏற்று பாதிப்படையாமல் தமிழ் செழுமையுடன் விளங்கி வந்து கொண்டிருக்கிறது என்பதை பல்வேறு உதாரணங்களுடன் இந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறார் சிவகுமார்.

என்றாலும் "திசைச் சொற்கள் தொல்காப்பியத்திற்கு முன்பிருந்தே தமிழில் இருந்தன என்று அறிய வருகிறோம். உதாரணமாக 'அந்தோ' என்ற வார்த்தை சிங்களத்தில் இருந்து வந்தது என்றும் சிக்கு ('சிக்கெனப் பிடித்தேன்' என்கிறது நம் பக்தி இலக்கியம்) என்பது கன்னடத்திலிருந்து வந்தது என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்" என்று எழுதுவதின் மூலம் சிங்களமும் கன்னடமும் தமிழின் தொன்மைக்கு நிகரானது அல்லது அதற்கும் முந்தையது என்று கூற விரும்புகிறாரா என்று புரியவில்லை. 'சமூகம்' என்கிற பகுதியில் அமைந்திருக்கும் இந்தக் கட்டுரைகளோடு வீரப்பன் மரணம், ஜெயேந்திரர் கைது, பெரியார், தலாய் லாமா, அரசியல் ஆகியவற்றின் உள்ளடக்கங்களில் இன்னபிற கட்டுரைகளும் நிறைந்துள்ளன.

இறுதிப் பகுதியான 'அமெரிக்கா' என்கிற தலைப்பில், வெளிநாட்டில் வாழும் தமிழரான கட்டுரையாசிரியரின் சுயஅனுபவங்களின் தொகுப்பு அடிப்படை மனித நேயத்துடனும், சுவாரசியமான சம்பவங்களுடனும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திண்ணை.காம் இணையத்தளம் குறித்த விமர்சனமும் இதில் அடக்கம். ஜெயமோகன் இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல "மேலை நாட்டு விஷயங்களை மிதமிஞ்சில் புகழ்ந்தேத்தி இந்தியாவை இறக்கி நோக்கும் பார்வை. என்ன இருந்தாலும் இந்தியா போல வருமா என்ற நோக்கு" ஆகிய தொனிகள் தவிர்க்கப்பட்டே இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

()

சிவகுமாரின் எழுத்து வாசிப்பிற்கு அப்பாலும் நம்மைச் சிந்திக்கச் செய்வதை (குறிப்பாக தனித்தமிழ் குறித்த கட்டுரைகள்) அவர் எழுத்தின் வெற்றியாகக் கருதுகிறேன். என்றாலும் சில கட்டுரைகள், ஆரம்பிக்கின்ற வேகத்திலேயே முடிந்து விடுகின்றன. சிவகுமார், சுகுமாரனின் கட்டுரைத் தொகுப்பைப் பற்றி குறிப்பிடும் போது "இப்படிப் பல இடங்களில் நிறுத்தி படிக்க வைக்கிற வரிகளைக் காணும் போது, அவற்றையெல்லாம் விரித்து இன்னும் எழுதியிருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை" என்று எழுதுகிறார். இதையே இவரின் சில கட்டுரைகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. பின்னாளில் இந்தக் கட்டுரைகள் அச்சேறும் என்ற பிரக்ஞையுடன் எழுதப்பட்டிருந்தால் இந்தக் குறை தவிர்த்திருக்கப்பட்டிருக்கக்கூடும் என்றும் தோன்றுகிறது.
விவாதக் கட்டுரைகளின் முன்னும் பின்னுமான தொடர்ச்சியான மற்றவர்களின் பதிவுகளை இணையத்தில் மாத்திரமே வாசிக்க முடியும் எனும் போது, இணையப் பரிச்சயம் இல்லாத வாசகர்களுக்கு இது ஒரு தடையாக இருக்கக்கூடும். மேலும் இணையத்தில் மட்டுமே புழங்கும் சில எழுத்தாளர்களின் பெயர்கள் கட்டுரைகளில் ஊடாடும் போது, அவர்களைப் பற்றின அறிமுகங்கள் இல்லாத அச்சு ஊடக வாசகர்களுக்கு இது நெருடலை ஏற்படுத்தக்கூடும். ஆனால் இவையெல்லாம் எளிதில் தாண்டிவிடக்கூடிய சிறு தடைகளே எனும் போது பொருட்படுத்த வேண்டியதில்லை. ஏற்கெனவே குறிப்பிட்டது போல, ஒரு இளம் வாசகன் இந்தக் கட்டுரைகளைப் படிக்கும் போது தனது வாசிப்பு பயணத்தை - அபத்தமான படைப்புகளைத் தவிர்த்து - ஒரு திட்டமிடலுடனும் தீர்மானத்துடனும் தொடர்வதற்கு உதவிகரமானதாக இருக்கக்கூடும்.

ஜெயகாந்தனும், ஜெயமோகனும் தத்தமது முன்னுரைகளில் வாழ்த்தியிருப்பதைப் போல முதிர்ச்சியடைந்து கொண்டிருக்கும் சிவகுமாரின் எழுத்துலகம், புனைகதைகளின் பக்கமாகவும் திரும்புவது எழுத்தாளருக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

Saturday, June 24, 2006

அறியப்படாத எழுத்தாளர்களின் வரிசையில் ........

சுப்ரமணிய ராஜூ என்கிற எழுத்தாளரின் சிறுகதைகள் அனைத்தும் ஒரு தொகுப்பாக 'கிழக்கு பதிப்பகம்' வெளியிட்டுள்ளதை நினைத்து உள்ளபடியே எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. இன்றைய இளம் வாசகர்களில் எத்தனை பேருக்கு இந்த எழுத்தாளரின் பெயர் அறிமுகமாயிருக்கும் என்று தெரியவில்லை.

சுப்ரமண்ய ராஜூவின் நினைவாக பாலகுமாரனும் மாலனும் இணைந்து 'அன்புடன்' என்கிற பல்வேறு எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளைக் கொண்ட ஒரு தொகுதியை வெளியிட்டனர். அதில் ராஜூவின் நண்பரான தேவக்கோட்டை வா.மூர்த்தியின் நெடிய முன்னுரையில் ராஜூவைப் பற்றின பல்வேறு நினைவுகள், சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அசோகமித்திரனும் இவரை சில கட்டுரைகளில் நினைவு கூர்ந்துள்ளார். இதன் மூலம் ராஜூவைப் பற்றிய அறிய வருகிற அவர் நட்பைப் பேணுவதில் மிகவும் கரிசனத்துடனும் கவனத்துடனும் இருந்துள்ளார். இலக்கியத்தை விட நட்பே அவருக்கு முக்கியமானதாகப் பட்டிருக்கிறது.

ராஜூவின் படைப்புகள் எனக்கு அதிகம் படிக்கக்கிடைக்கவில்லையெனினும் படித்த சிறுகதைகள் ஒன்றும் அவ்வளவு சிலாக்கியமாக இல்லை. (மறைந்து போன படைப்பாளி என்பதவற்காக அவரை புகழந்தே ஆக வேண்டும் என்கிற சம்பிரதாயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை)வெகு காலத்திற்கு முன்பு

கணையாழியில் சுஜாதா "காலத்தை வென்று நிற்கக்கூடிய சிறுகதைகள்" அடங்கிய ஒரு பட்டியலை வெளியிட்டார். புதுமைப்பித்தனையே வெகு தயக்கத்திற்குப் பின் மட்டுமே சேர்த்துக் கொண்ட் அந்தப்பட்டியல் அப்போது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் ராஜூவின் பெயரை பார்த்த பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. "நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு" என்னுமளவிற்கு பலத்த குரல்கள் இலக்கியவாதிகளின் மத்தியில் ஏற்பட்ட ஒரு பிரமை.

()

இது போல் திறமையான தமிழ் எழுத்துக்காரர்கள் அவ்வப்போது தோன்றி consistent-ஆக எழுதாமல் தனிப்பட்ட பிரச்சினைகளினாலோ அல்லது இறந்து போயோ பெரும்பாலான வாசகர்களின் கவனத்திற்கு வராமலேயே போய்விடுகிறார்கள். மேற்குறிப்பிட்ட பத்ரியின் பதிவின் பின்னூட்டத்தில் பிரகாஷ், சம்பத் என்கிறவரைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். ஏதொவொரு
'விருட்சம்' சிற்றிதழில் சம்பத்தின் 'இடைவெளி' என்கிற சிறுகதையைபடித்தவுடன் எனக்குத் தோன்றியது. "WOW".

இதே போல ஐராவதம் என்கிற எழுத்தாளரைப் பற்றி என்னுடைய பழைய பதிவுகளில் எழுதியிருக்கிறேன். என்னளவில், அஸ்வகோஷ், சுப்ரமணியன் ரவிச்சந்திரன், எஸ்ஸார்சி என்று பல திறமையான எழுத்தாளர்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே கவனம் பெற்று நின்று விடுகிறார்கள். இந்த வகையில் இன்றைய இளைய வாசகர்களிடம் நான் அறிமுகப்படுத்த விரும்புவது, இரவிச்சந்திரன் என்கிற துள்ளலான எழுத்தாளரைப் பற்றி.

என் சிறுவயதில் "சுஜாதா"வைப் பற்றி யாரிடமோ சிலாகித்துக் கொண்டிருந்த போது "இரவிச்சந்திரனைப் படித்திருக்கிறீர்களா?" என்றார். "யார் அவர்?" என்றதற்கு 'ஒரு இந்திய பாஸ்போர்ட்' என்கிற படைப்பை வாசிக்கக் கொடுத்தார். எனக்கு உடனே உடனே இரவிச்சந்திரனைப் பிடித்துப் போனதோடு, 'இந்த மாதிரியாக நம்மால் என்றாவது எழுத முடியுமா?" என்கிற தாழ்வு மனப்பான்மையும் பொறாமையும் கலவையாக தோன்றியது.

()

இரவிச்சந்திரன் பெங்களூர், மல்லேஸ்வரத்தைச் சேர்ந்தவர். சுஜாதா பணிபுரிந்த அதே BHEL-ல் இவரும் பணிபுரிந்திருக்கிறார். சுஜாதாவின் எழுத்துக்களைப் பிடித்துப் போய் அவரை குருவாக ஏற்றுக் கொண்டு அவரிடம் சிறுகதை பயின்று பின்னர் தன்னுடைய வழுக்கிச் செல்லும் நடையில் சுஜாதாவிற்கு இணையாகவும் சில சமயங்களில் தாண்டியும் செல்லும் வகையில் உரைநடையின் சாத்தியங்களை பயன்படுத்திக் கொண்டார். இவ்வளவு சிறப்பாக தமிழை கையாண்ட இவரின் தாய்மொழி தெலுங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

"இந்தப் படைப்பு மட்டுமல்ல, இனிவரும் எல்லாம் படைப்புகளை சுஜாதாவிற்கு சமர்ப்பணம்' என்றவர் தற்கொலை செய்து இறந்து கொண்டார் என்ற போது அதிர்ச்சியாக இருந்தது. தேசிகனின் மூலம் சுஜாதாவிடம் உரையாடும் வாய்ப்பு கிடைத்த போது, இந்தச் செய்தியை வருத்தமுடன் அவரும் நிச்சயித்த போது வருத்தமாக இருந்தது. 'இனி ஒரு விதி செய்வோம்' 'ஒரு இந்திய பாஸ்போர்ட்' 'இந்திராகாந்தியின் இரண்டாவது முகம்' போன்ற சிறந்த தொகுதிகளை எந்த பதிப்பகமாவது மீள்பதிப்பு வெளியிட்டால் மகிழ்வேன்.
()

Marathadi இணையக் குழுமத்தின் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களின் போதுஒவ்வொரு உறுப்பினரும் முறை வைத்து தினம்தினம் பல்வேறு விதமாக பதிய, என் முறை வந்த போது இரவிச்சந்திரனை அறிமுகப்படுத்தி ஒரு பதிவும் அவரின் சிறுகதையை ஒரு பதிவுமாக இட்டேன். அந்த பதிவுகளின் சுட்டிகள் கிடைக்காததால், எனது இந்த வலைப்பதிவில் அடுத்தடுத்த இடுகைகளாக இட்டுள்ளேன்.

அற்பாயுளில் இறந்து போன இன்னொரு சிறந்த எழுத்தாளரை அறிந்து கொள்ளுங்கள்.

இரவிச்சந்திரன் - சிறுகதை

சமூகம் என்பது கலகக்காரர்கள் மட்டுமே - ==============================================

-இரவிச்சந்திரன்

"இன்னும் நூறு வருஷத்துக்கு ஒரு கவிஞனும் கிடையாது. கவிதையும்
கிடையாது. 38க்கு இடைப்பட்ட வயசில் அவன் செத்தது கொடுமை. இந்த 38 வயசுங்கறதே, கலைஞனுக்கு ஒரு டேஞ்ஜர் பீ¡¢யட் போல. இவன், விவேகாநந்தர், புதுமைப்பித்தன், ஆலபர்ட் காம்யூ எல்லேர்ரும் 38தான். நல்ல வேளை நான் 54ஐத் தாண்டிட்டேன். அவன் இருந்தா இவ்வளவு காளான் முளைச்சு இருக்குமா? இன்ன தேதி வரைக்கும் ஒரு பயல் தமிழ் நாட்டில் கவிஞன்னு சொல்லிக்கிட்டுத் தி¡¢ய முடியுமா? அவனை மாதி¡¢ யாரய்யா இவ்வளவு Variety of Literature செஞ்சாங்க? குயில் பாட்டில் இருந்து ஜார் மன்னன் வீழ்ச்சி வரை பாடின Cosmopolitan minded popt அவன்தான். ஆயுதம் செய்வோம். நல்ல காகிதம் செய்வோம். கப்பல் கட்டுவோம். இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவோம்னு இண்டஸ்ட்¡¢யல் மைண்ட் அவனுக்குத்தான் இருந்தது........"

என்று உரை நிகழ்த்திவிட்டு, சோபாவில் தாக சாந்தி செய்து கொண்டார் இலக்கியப் பித்தன். ரூமில் உட்கார்ந்து இருந்த கூட்டம் ஆமா ஆமா! என்றது.

"தொடர்ச்சியா சொல்லுங்க," என்றார் ஒரு துணுக்கு எழுத்தாளர்.

"இவனை இப்படியே வளர விட்டால் ஆபத்து. கடைசியில் இவனோட பாட்டுக்குப் பயந்தே வெள்ளைக்காரன சுதந்திரம் கொடுத்திடப் போறான் அப்படின்னு பயந்து, திருவல்லிக்கேணியிலே ஒரு கூட்டம் அன்னைக்கு சாயங்காலம் அடிச்சே கொன்னானுங்களே, பாவிங்க."

"அய்யே! அப்படீங்களா?" என்றார் லோகல் கவிஞர்.

"ஆமா!" என்றார் தீர்மானமாக இலக்கியப் பித்தன்.

"அய்யா என்ன புதுசாச் சொல்றாப்பில?"

"யானை மிதிச்சுச் செத்தார்னு இல்லே சொல்லிக்கிறாங்க"

"பொய்யி. செஞ்ச தப்பை மறைக்கறதுக்கோசரம் அப்படி ஒரு வட்டார வழக்கு.
ஏன்யா, யானை மிதிச்சுச் சாகற ஆளாய்யா அவன்?"

"அதானே அதானே!" என்று ஒரு நாலைந்து அதானே.

இலக்கியப் பித்தன் ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டார். தரைக்கு மேல் ஒரடி உயரம் இருக்கிற மாதி¡¢ ஒரு நினைப்பு. தொண்டையைத் தட்டிக் கொண்டு கீழ்க் கண்டவாறு பாட ஆரம்பித்தார்.

சூதர் மனைகளிலே அண்ணே தொண்டு
மகளிருண்டுசூதிற் பணயமென்றே அங்கோர்
தொண்டச்சி போவதில்லைஏது கருதிப்
பணயம் வைத்தாய்? அண்ணே
யாரைப் பணயம் வைத்தாய்.
மாதர் குல விளக்கை........

"ஸார்! போஸ்ட்."

மாதர் குல விளக்கை அப்படியே விட்டு விட்டுக் கண்களைத் திறந்தார். எதி¡¢ல் சமீபத்தியப் புது யூனிபாரத்துடன் போஸ்ட் மேன்.

"இது வேறயா?" என்று முணுமுணுத்தார்.

"என்ன இது? அய்யாவைத் தொந்தரவு செஞ்சுகிட்டு" என்று முணுமுணுத்தார் ஒரு பத்தி¡¢கை ஆசி¡¢யர். தகாத செய்கை செய்தவனைப் போல - துகில் உ¡¢ந்த திரெளபதியைப் போல் சபையில் நின்ற போஸ்ட் மேன்.

"இல்லீங்க. இது ரெஜிஸ்டர் போஸ்ட். அய்யாதான் கையெழுத்துப் போடணும்னு ஐதீகம். அதனால்தான் தொந்தரவு பண்ணிட்டேன். மன்னிச்சுக்குங்க!" என்றார் பிச்சைக்காரத்தனமாக.

"பரவாயில்லை. உங்க கடமையை நீங்க செய்யணும்," என்று சொல்லி நீட்டின இடத்தில் போட்டுவிட்டு உறையை வாங்கினார். விலாஸத்தைப் படித்து விட்டு, எதி¡¢ல் உட்கார்ந்து இருந்த குடிமக்களைப் பார்த்துப் போனால் போகிறது என்று, "டில்லி லெட்டர். ஸாஹித்ய அகாடமியில் இருந்து வந்திருக்கு," என்றார்.

"என்னவாம்?"

"இந்தாப்பா. இதைப் படிச்சுச் சொல்லு" என்று அந்த சிரமத்தைத் தன்னுடைய அமானுவென்ஸஸிடம் கொடுத்தார். விறுவிறுவென்று முடித்து விட்டு, "இந்த வருஷம் panel-ல் தமிழுக்கு உங்களைப் போட்டு இருக்காங்களாம். ஒப்புதலைப் பத்து நாளிலே தொ¢விச்சுடணும்னு மகிழ்ச்சியுடன் அறிவிச்சு இருக்காங்க அய்யா!" என்றான்.

"அதே மகிழ்ச்சியுடன் ஒப்புதலைத் தொ¢விச்சு ஒரு லெட்டர் உடனே போட்டுரு."

"ஆகட்டுங்க," என்று சொன்ன அமானுவென்ஸஸ் பக்கத்து அறைக்குப் போனான். அங்கே அலமேலு கை நகத்துக்குப் பாலிஷ் ஏற்றி அதில் முகம் தொ¢யுமா என்று முயற்சித்துக் கொண்டு இருந்தாள்.

"இந்தாம்மா அலமேலு. இதை உடனே அடிச்சிடு. அவசரம்." என்றான்.

"அவசரமா அடிச்சா சா¢யா வராதுய்யா!" என்றாள் அலமேலு.

"இப்ப போஸ்டுக்குப் போயிடணும்."

"அய்யா சொன்னாரா?"

"ஆமா. பின்னே?"

"போய்க் கேட்கவா?" என்று டைப்ரைட்டரைத் தள்ளி விட்டு எழுந்து விட, அமானுவென்ஸஸ் பதறி, "தாயே! மன்னிச்சுக்கோ. அவரு அவசரப்படலை. நான்தான் பட்டேன்."

எழுந்த வேகத்தில் அலமேலு உட்கார்ந்து, "எனக்குத் தொ¢யாதா? உன்னை மாதி¡¢ எத்தனைப் பசங்களைப் பெறப் போறேன்."

"அம்மா ஆம்பிளைக் காமாட்சி! உனக்கு ராஜாமணின்னு பேரு வெச்சு இருக்கணும். அலமேலுன்னு வெச்சது நாச்சியாருக்கே இன்ஸல்ட்டு."

"அப்ப சா¢. இனிமே எங்க அம்மா பெக்கற குழந்தைக்கெல்லாம் உன்னைக் கேட்டுட்டுப் பேரு வெக்கச் சொல்லிடறேன். இப்ப திருப்தியா?"

அதிர்ந்து போய் "இப்படி எல்லாம் பேச வெட்கமாயில்லை?" என்று கோபித்தான் அமானுவென்ஸஸ்.

"இங்க வேலைக்கு வந்து சேர்ந்ததில இருந்து வெட்கம் எல்லாம் வெட்கப்பட்டுட்டுப் போயிடுச்சுய்யா!" என்றாள்.

சட்டென்று குனிந்து "சா¢. எப்பவோ அடிச்சா சா¢" என்று போனான். போனதைப் பார்த்துக் கொண்டே "ம். குதிரை சும்மா இருக்கும். லத்திதான் உறுமுமாம்." என்று அவன் காதுக்குப் பட சுவருக்குச் சொன்னான். அப்புறம் லோயர் ரோலரை ரீலிஸ் செய்து, கார்பனில் பேப்பரைப் புகுத்தி சிலிண்டருக்குள் செலுத்தி, தேதி போட்டு என்று தீப்பொறி பறக்கத் தட்ட ஆரம்பித்ததும், வாழ்வின் அவலங்கள் எல்லாம் மறந்து போயின, தற்காலிகத்துக்கு.

"இப்ப பாருங்க, பொதுச் சொத்து மாதி¡¢ ஆயிடுச்சு. புதிப்பு பதிப்புகளாப் போட்டு தீவட்டிக் கொள்ளை அடிச்சிட்டு இருக்கானுங்க. இருந்தப்ப சோத்துக்குச் செத்தான்....... என்று தொடர்ந்து கொண்டு இருக்கையில் 3 மீட்டர் தூரம் அரை மீட்டர் உயரத்தில் இருந்த டெலிபோன் அடித்தது. அதே அமானுவென்ஸஸ் டெலிமாலையைத் தொடுத்து, "அல்லோ...." என்றான்.

இலக்கியப் பித்தன், முகத்தைத் திருப்பி, திருட்டுச் சைகை ஒன்றின் மூலம்,
"யாரு?" எனறார்.

வாய்ப் பக்கத்தை மூடி "பத்தி¡¢கை ஆபீசில் இருந்துங்க."

"என்னவாம் எழவு?"

"சிறுகதைப் போட்டி விஷயம். அவசரமாம்."

"புதன்கிழமை வெச்சுக்கலாம்னு சொல்லு." புதன் கிழமைக்கு இன்னும் 13 நாள் இருந்தது.

"முடியாதாம். இந்த இதழில் முடிவு அடுத்த வாரம்னு வெச்சுட்டாங்களாம். ரெண்டு பாரம் மி~¢னுக்குப் போயிடுச்சாம். கொஞ்சம் தயவு பண்ணணுமாம்."

"கால்ல சுடுதண்ணிய ஊத்திட்டுதான் பத்தி¡¢கை நடத்துவானுங்க. சா¢ சா¢. இன்னும் ஒன் அவர்ல வர முடியுமான்னு கேளு. வரப்ப எல்லாக் கதைகளையும் எடுத்துட்டு வரச் சொல்லு. கையை வீசிட்டு விதவை மாதி¡¢ வெள்ளைப் புடவைல வரப் போறானுங்க."

"புறப்பட்டாச்சாம்" என்று சொல்லி வைத்து விட்டு, "லெட்டர் டைப் ஆயிட்டு இருக்குங்க."

எதி¡¢ல் உட்கார்ந்து இருந்த ஏழெட்டுப் பேரும் ஒன்று திரண்டார்கள். ஒருவர்,

"அப்போ விடை பெத்துகறோம்ங்க"

"உங்களுக்கும் கோடி ஜோலி" இது கவிஞர்.

"ஆமா" என்று ஒத்துக் கொண்டார் இலக்கியப் பித்தன்.

வாசல் வரை சென்று வழியனுப்பி விட்டுத் திரும்பினார். அருகே நின்று இருந்த உதவியாளனைப் பார்த்து "ஹீம், வெட்டி இலக்கியம் பேசியே விரோதம் வளர்த்துட்டு இருந்துட்டம்!" என்றார் பெருமூச்சுடன்.

"அது கூட ஆமாங்க!" என்ற அமானவென்ஸஸ், "அதோ கார் வந்துட்டு இருக்கு," என்றான். திருடன், கா¡¢யக் கண்ணன்.

கார், க்¡¢ல்லை எதிர்த்துக் கொண்டு, கான்கீ¡¢ட் தரையில் நுழைந்தது. தீபாவளி அவசரத்தில் கதவுகள் திறக்கப்பட்டு ஆறேழு பேர் உதிர்ந்தார்கள்.

"வணக்கங்க."

"வணக்கம். வாங்க வாங்க!" என்று புட்டபர்த்தி ஸாய்பாபா போல் சி¡¢த்து நமஸ்காரம் போட்டார்.உதவி ஆசி¡¢யர் ஒருவர் கக்கம் நிறையக் கதைகளை வைத்துக் கொண்டு,

"ஹிஹி. உங்களைத் தொந்தரவு பண்ணிட்டே இருக்கோம். மன்னிக்கணும். வேற வழி? உங்களை விட்டால்..."

பொ¢ய மனது பண்ணி "பரவாயில்ல. பொது வாழ்க்கையில் ஈடுபடறவன் privacyஐ விட்டுடணும். பிரபலத்துக்கு விலை அதான்!" என்றார்.

"ஸ்ட்ரோக் தூளுங்க" என்றார் இன்னொரு ஆமாஞ்சாமி.

உதவி ஆசி¡¢யர் கூட இருந்தவரைப் பார்த்து, "எழுதிக்குங்க. அடுத்த வாரம் ஒரு பாக்ஸ் மேட்டர் போட்டுருவோம்" என்றார் பதைப்புடன்.

"சா¢. இலக்கியம் பண்ண ஆரம்பிக்கலாமே?" என்றார் இ.பித்தன்.

தொடர்ந்து, "முதல்ல இருந்து விவரமாச் சொல்லுங்க. இந்தச் சிறுகதைப் போட்டி திடீர்னு எதுக்கு? ஏதாவது மலர் போடறீங்களோ?" என்றார் பற்ற வைத்துக் கொண்டே. கஞ்சா மணம் அறை முழுக்கப் பூதம் போல் பரவிற்று.
அந்த அறை பொ¢ய ஹால். தரை முழுவதும் காஷ்மீரக் கம்பளம் பரவி இருந்தது. மேலே அட்டகாஸமான கார்லோ விவா¡¢ சாண்டலியர். ஏதோ ஒரு டெலிகேஷனில் ஐரோப்பா போயிருந்த போது வாங்கி வந்தது. ஒரு மூலையில் பெடஸ்டல் ·பேன். இடது ஒரத்தில் போடி நாயக்கனூர் உயர்தரப் பஞ்சில், ஸாடின் தலையணைகள். அதில் சாய்ந்து கொண்டார். லாங் ஷாட்டில் டில்லி சுல்தான் மாதி¡¢க் காட்சி அளித்தார். பத்தி¡¢கை ஆபிஸ் ஆறேழு பேரும் செளகா¢யமாக உட்கார்ந்து கொண்டு இவர் என்ன உதிர்ப்பாரோ என்று காத்துக் கொண்டு இருந்தனர்.

கூட ஒரு துணுக்கு எழுத்தாளர், எழுத்தாளர் இலக்கியப் பித்தன் வீட்டில் இருக்கும் போது லுங்கிதான் உடுத்திக் கொள்கிறார் என்று சரம் சரமாக எழுதிக் கொண்டார்.

ஸால்வார் கமீஸீம், சரசமுமாக உள் நுழைந்தாள் அலமேலு.

"ஸார். ஸாஹித்ய அகாடமி லெட்டர். கையெழுத்துப் போட முடியமா? 10-30 மணி போஸ்டுல போயிடட்டும்." என்றாள் பவ்யமாக.

பவ்யம் ஒரு பாவனையே.இடமும் காலமும் நேரமும் மாறும் போது இந்தப் பவ்யம் ஆள் மாறும்.

"அந்த ராயல்டியை எனக்கு ஒரு பேரர் செக்காகக் கொடுத்திடுங்க. என்ன? மசமசன்னு இருக்காதீங்க. ஒரு நெக்லஸ் பண்ணிக்கணும்."

"இவ்வளவுதானே அலமேலு. செக்கைக் கொண்டா. கையெழுத்தை எங்கே போடணும்? இரு. பேனா எழுத மாட்டேங்குது. கொஞ்சம் உன்னோட மார்ல
தேச்சுக்கறேன்."

கையெழுத்து உற்சவம் முடிந்தது. அலமேலு அந்தப்புரத்துக்குள் போனாள். "ம். சொல்லுங்க." என்றார்.

"பத்தி¡¢கை ஆரம்பிச்சு பத்து வருஷம் ஆச்சு. அதுக்காக ஒரு ஸ்பெஷல் இஷ்யூ. அதிகப் பக்கங்கள் அதே விலை. கூடவே ஒரு இலவச இணைப்பு."

"அதில மெட்டீ¡¢யல் நாலு பக்கம். மீதி எல்லாம் விளம்பரம். அப்படித்தானே?" என்று கண்டுபிடித்த மாதி¡¢ச் சொன்னார் டில்லி சுல்தான்.

"ஹிஹி. கரெக்டாச் சொல்லீட்டீங்களே."

"மலர்னா - விளம்பரம் ஜாஸ்தி சேர்ந்துடுச்சுன்னு அர்த்தம்." என்றார் மானேஜர் சர்க்குலே~ன்.

"அதை ஏன் சபைல சொல்றீங்க?" என்று சிடுசிடுத்தார் உதவி ஆசி¡¢யர்.

"சா¢ சா¢. ஆரம்பியுங்க. சண்டை எல்லாம் அப்புறம். ஸோ, அதுல ஒரு சிறுகதைப் போட்டி. அதுவும் அறிமுக எழுத்தாளர்க்கு மட்டும். இல்லையா?"
என்று கேட்டார் சிறுகதைப் பித்தன்.

"அதேதான். முதல் பா¢சு ரூபா 3000. இரண்டாவது பா¢சு 2000 மூணாவதுக்கு ஆயிரம். பிரசுரமாவற கதை 20க்குத் தலா ரூபா 250."

"அது சா¢. அதென்ன கூடவே ஒரு வாலு. அறிமுக எழுத்தாளர்க்கு மட்டும் அப்படீன்னு."

"சிறுகதை எழுதறதுக்குத் தமிழ்ல ஆளே இல்லீங்க. எல்லாம் திருப்பித் திருப்பி மாமியார் மருமக சண்டை, வரதட்சணைக கொடுமைக கதை. ஒரு பொண்ணு குடும்பத்துக்காக உடம்பையே உருக்கிக்கறது. இல்லைன்னா சோரம் போறதுன்னு இதையே திருப்பித் திருப்பி எழுதிச் தேச்சிட்டு இருக்காங்க. அதைவிட்டா ஒரு பக்கக் கதைகள். இந்த ஒரு பக்கக் கதைகள் எழுதத் தமிழ் நாட்டில, ஐனதா கட்சிக்கு இருக்கிறதை விட அதிக ஆள் இருக்கு."

"முதல்ல, ஒரு பக்கக் கதையை ஒழிச்சுக் கட்டணும்." என்றார் இலக்கியப் பித்தன்.

"கரெக்ட் கூடுமானவரை நம்ம பத்தி¡¢கைல போடறதே இல்லை."

"நீங்க சொல்றது எல்லாம் சா¢தான். சிறுகதை நல்ல மீடியம். அதை யாரும் உபயோகப் படுத்தறது கிடையவே கிடையாது. பங்களுர்க்காரர்தான் ஸின்ஸியரா சிறுகதை மீடியத்தை ஒழுங்காச் செய்யறார்."

"பின்னே. நல்ல விஷயம் எங்க இருந்தாலும் பாராட்டணும். அதான் நம்ம பி¡¢ன்ஸிபில். ஆனால இதைப் போட்டுறாதீங்க. நமக்குள்ள."

"ஆஹா. அய்யாவுக்கு என்ன ஒரு மனசு!" என்றார் அம்பத்தூ¡¢ல் ஐஸ் பாக்டா¢ வைத்து இருக்கிற ஒரு அமெச்சூர் எழுத்தாளர்.

"சா¢. மொத்தம் எத்தன கதை வந்தது?"

"3625 கதை வந்தது. பயந்துட்டு சட் னு நிறுத்திட்டம்."

"ஸோ. தமிழ் நாட்டில வீட்டுக்கு ஒரு மரம். ஸா¡¢. எழுத்தாளர். இல்லையா?"
"அதேதான். அதில் முதல் ரவுண்டில் 3000 கதைகளை ¡¢ஜக்ட் செய்துட்டோம். போர்டுக்கே வராத குதிரைங்க. மீதி 625-ல் உயிர்த்தியாகம் செய்யற கதைகளை ஒதுக்கிட்டோம். அது நீங்க சொன்ன அபிப்ராயம்."

"குட். ஏன்னா சாவுங்கறது பொ¢ய விஷயம். ஒரு சிறுகதைல சாவு வர்ரது ¡¢டிகுலஸ். கதை முடிவுலே காரெக்டர் செத்தா - ஒரு வெய்ட் இருக்கும்னு நினைக்கற myth-ஐ உடைக்கணும். அதனாலதான் அப்படிச் சொன்னேன்."

"அ! அதில் 300 கதை போச்சா? மீதி 325. அதில் நூறு கதை இருக்கு. ஆனால் இல்லை. ஸோ அதுவும் அவுட்."

"225-ல் 25 கதை அயல் தேசத்துக் கதை - & ·பிலிம் ·பெஸ்டிவல் சினிமாவைத் தமிழ்ப்படுத்தி இருக்காங்க. இன்னும் இருநூறு. அதில் 175 கதைகள் முடிவில, ஏ! சமூகமேன்னு கூப்பிட்டு, கடைசி பாரா பூரா ஈசாப் கதை மாதி¡¢ உபதேசம் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க."

"பரவாயில்லையே. நல்லா அனலைஸ் பண்ணி இருக்காங்க. ஏன்! நீங்களே எழுதலாமே! என்று பாராட்டினார் உதவி ஆசி¡¢யரை."

"எங்கிங்க! எழுதற ஸ்பீட் வரப்ப பார்த்து எடிட்டர் பத்மப்பி¡¢யா டைவர்ஸ் கேஸ் என்னாச்சுன்னு போயப்பார்த்துட்டு வந்து ஸ்டுடியோ விஜயம் பகுதிக்கு எழுதுன்னு ஆர்டர் போடறார். சைதாப்பேட்டை மாஜிஸ்ட்ரேட் கோர்ட்ல பகல் முழுக்க நின்னு, மாஜிஸ்ட்ரேட் தீர்ப்புச் சொல்றதுக்கு முன்னேயே ஆபீசுக்கு வந்து தீர்ப்பை நாங்களே எழுதி ·பாரத்தை நிரப்ப வேண்டி இருக்கு."

"கொடுமை. உலகத்தில நல்ல கலைஞனுக்கு எப்பவும் இந்தத் துர்ப்பாக்கிய நிலைமைதான். சா¢. மீதி 25 கதை?"

"அதில், பிரசுரத்திற்குத் தகுதியானதுன்னு 20 கதைகளை, மீதி மூணு நடுவர்களும் தேர்ந்து எடுத்து இருக்காங்க."

"அதை விடுங்க. அவுங்க தேர்ந்து எடுத்தாச் சா¢யாத்தான் இருக்கும். அது சா¢. முதல் நடுவர் நான். மத்த மூணு யாரு?"

"ஒருத்தர் சினிமா டைரக்டர். இன்னொருத்தர் பெண் எழுத்தாளர். மூணாவது ஐகோர்ட் ஜட்ஜ்."

"ஜட்ஜ்க்கும் இலக்கியத்துக்கும் என்ன சம்பந்தம்?" என்று கோபித்துக் கொண்டார்.

"ரொம்ப மோசமா எழுதினவங்களை அவரை வெச்சிட்டு தண்டிக்கச் சொல்லிடலாம்!" என்றார் அம்பத்தூர் ஐஸ் பாக்டா¢. உடனே எல்லோரும் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரதமர் பொலிட் பீரோ கூட்ட்தில் சொன்ன ஜோக்கிற்குச் சி¡¢த்தது போல் ஒரே மாதி¡¢ச் சி¡¢த்தார்கள்.

"ஆக, தமிழ் நாட்டில ஐந்தே சிறுகதைதான் தேறி இருக்கு?"

"ஆமாங்க."

"மற்ற நடுவர்கள் தோந்து எடுத்த முதல் பா¢சுக் கதைய மட்டும் நீங்க படிச்சிட்டுத் தோ;ந்து எடுத்துட்டிங்கன்னா, முதல் பா¢சுக் கதையோட தாவு தீர்ந்துடும். இரண்டாவது, மூணாவதை ஒருபார்வை நீங்க பார்த்துட்டு ஓகே சொல்லணும். அது போதும்."

"எவ்வளவு பக்கம் வரது?"

"இருபது பக்கம். foolscap பேப்பர்ல."

"அய்யோ. இருபதா. முடியாது போலிருக்கே."

"அதுக்குதான் ஒரு ஐடியா செஞ்சோம். கதையோட synopsis-ஐ மட்டும் ஒரு முழுப் பக்கம் வர்ர மாதி¡¢ எழுதிட்டு வந்துட்டோம். உங்க செளகா¢யத்துக் கோசரம். அஞ்சு நிமி~த்துல படிச்சிடலாம். கொஞ்சம் தயவு பண்ணுங்க. இன்னைக்கு ·பாரம் மெஷினுக்குப் போகுது."

"ஹீம். சா¢ கொடுங்க. இந்தாப்பா. அந்தக் கண்ணாடியை எடுத்துக் கொடு. அப்புறம் காரை வெளியல வை. கூட்டத்துக்குப் போகணும். இப்பவே லேட்டு."
உதவி ஆசி¡¢யர் கதையை நீட்ட -

oOo

தஞ்சாவூர் டவுன். கோயிலுக்குப் பின்னால் ஒரு அக்ரஹாரம். கிட்டத்தட்ட எல்லாமே பிராமணக் குடும்பங்கள். அக்ரஹாரம் முடிந்த உடனே உடனே ஓதுவார் தெரு. அங்கே சிற்சில வீடுகள். ராஜராஜ சோழனின் சபையில் இருந்த ஓதுவார்களுக்கு என்று கட்டப்பட்ட ஓட்டு வீடுகள். ரா.ரா. சோழனும் போய், ஓதுவார்களும் போய், இப்போது ஓடுகள் மட்டுமே. மரங்களை எல்லாம் சுற்றுப்புற மக்கள் கால கட்டத்தில் பிடுங்கிக் கொண்டு போய்விட, வீடுகளின் திண்ணைகள் மட்டும்தான் இப்போது. அந்தத் திண்ணைகள் தெருவுக்கு மறைவிடங்கள். ஒவ்வொரு திண்ணை மறைவிலும், தெருப் பிச்சைக்காரர்கள், தொழு நோய்க்காரர்கள், ¡¢க்ஷாத் தொழிலாளர்கள், என்று ஆக்ரமித்துக் கொண்டு, தடுப்புக்குக் கோணிப் படுதாவை கட்டிக் கொண்டு அவல வாழ்க்கை. தெருவின் இக்கரையில் இருந்து அக்கரை வரை விளக்கு வெளிச்சம் கிடையாது.

இருப்பதிலேயே கொஞ்சம் மறைவான திண்ணை. அதில் கனகம் என்ற ஒண்டிக் கட்டை. வயது 30க்கும் மேலே. உத்யோகம் உலகத்தின் ரொம்பப் பழைய உத்யோகம். விபச்சாரம். கூலி வேலை ஆட்கள். குறைந்த வருவாய்க்காரர்கள். உழைப்பாளிகள், ¡¢க்ஷாத் தொழிலாளிகள் ஆகியோர். இரவு பத்துக்கு மேல் இருட்டுத் தெருவில் நுழைந்து கனகத்துக்குப் போணி செய்து விட்டுப் போவார்கள். சில சமயம் நைட் டூட்டி போலீஸ்காரர்களும், தெருவின் இருட்டு அவர்களுக்கு எல்லாம் ரொம்ப செளகா¢யம்.

நகரசபைத் தேர்தல். அக்ரஹாரத் தெருவுக்கு ஓட்டு வாங்க வந்த வேட்பாளர்களிடம் (இப்போது கவுன்சிலர்) இருட்டுத் தெரு செளகா¢யமாக இருப்பதால், இரவு அந்த வழியே பஜாருக்குப் போக வேண்டி இருப்பதால், வேறு நிழலான கா¡¢யங்கள் நடப்பதால் அதை நிவர்த்தி செய்தால்தான் உமக்கு ஒட்டு. லைட்டைப் போடு. ஓட்டைப் போடுவோம். இல்லாவிட்டால் அக்ரஹாரம் தேர்தலைப் பகிஷ்கா¢க்கும் என்று மிரட்ட, கவுன்சிலர் மிரண்டு, மராமத்து மந்தி¡¢ வரை போய் உடனடி சாங்ஷன் வாங்கி, இக்கரையில் இருந்து அக்கரை வரை, சரம் சரமாக சோடியம் விளக்குகளை இரண்டே நாளில் போட்டு விடுகிறார். இருட்டுத் தெரு இப்போது வெளிச்ச வெள்ளத்தில்.
எல்லோருக்கும் சந்தோஷம். கனகத்தைத் தவிர. வெளிச்சம் வந்து விட்டதால், ஒரு வாடிக்கை கூட வருவதில்லை. முதல் நாள் பட்டினி. இரண்டாவது நாள் கொலைப் பட்டினி. மூணாவது நாள் வழக்கமாக வருகிற ஆள் வருகிறான். ஆனால் தாண்டிப் போகிறான். பசித்த மானுடம். மறைவுத் திண்ணையில் இருந்து வெளிப்பட்டு "யோவ்! இங்க வாய்யா. என்னய்யா ஆச்சு உனக்கு!" என்று வேஷ்டியைப் பிடித்து இழுக்க, "அய்யே. விடு. கசுமாலம். இவ்வளவு நாள் இருட்டு இருந்தது செளகா¢யம். இப்போ? தீப அலங்காரம் மாதி¡¢ லைட்டு வெளிச்சம். வெளிச்சத்தில் போய் இந்த வேலையைச் செய்வாங்களா என்ன? சீ. போ!" என்று தள்ளி விட்டுப் போகிறான். புழுதியில் விழுந்த கனகம், பசியுடன் எழுந்து, பசியுடன் சுதா¡¢த்து, கை நிறையத தூக்க முடியாத கற்களைத் தூக்கிக் கொண்டு, வா¢சைக்கிரமமாக, ஒவ்வொரு சோடியம் விளக்குகளாகத் துர் ஆங்காரத்துடன் உடைத்து நொறுக்க, தெரு முழுவதும்
கண்ணாடிச் சிதறல்கள். இருட்டுக் குதறல்கள்.

பத்து நிமிஷம் கழித்து, இருட்டுத் தெரு. மறைவுத் திண்ணை. அங்கே கனகம். கூடவே இயக்கத்தில் இருக்கிற ஒரு ஆணுடல். அவள் தலைமாட்டருகே கசங்கின ரூபாய்கள். பி¡¢யாணிப் பொடடலங்கள்.

oOo

தலைப்பு - மெர்கு¡¢.

"இதோட ஒ¡¢ஜினல் ஸ்கி¡¢ப்ட் இருக்காய்யா?"

"இதோ. இருக்கு. 20 பக்கங்க."

வாங்கி முழுவதும் படித்தார். அரை மணி ஆயிற்று.

ஒரு நிமிஷம் யாரும் பேசவில்லை. அதி பயங்கர மெளனம்.

"இதுதான் முதல் பா¢சுக்கா?"

"ஆமாங்க."

"வெகு லட்சணம்." என்றார் கோபமாக. கோபம் கூட அல்ல - பாம்புச் சீறல்.

"ஏங்க?" என்று பதறினார் உதவி ஆசி¡¢யர்.

"நல்ல தீம். ஒவ்வொரு பாராவுக்கும் ஒரு பவர்புல் ஸ்ட்ரோக் இருக்கு. நேடிவிடி உண்டு. வொ¢குட் ரீடபிலிட்டி. சமூகத்தில் இருக்கிற பசிப் பிரச்சினையை ழுநெந ட¨நெ one line message-ல் சொல்ற ரொம்ப நல்ல ப்ளாட். அதனாலதான்."

"நீங்க சொன்னதெல்லாம் இருக்கய்யா. ஒத்துக்கறேன். முக்கியமான ஒரு drawback-ஐ எல்லோரும் மறந்துட்டிங்களே. தொடர்ந்து வெளிச்சம் இல்லேன்னா அங்கெல்லாம் விபசாரம் நடத்த வசதி இருக்கும்னு ஒரு வழிய நாம கண்டு பிடிச்சு, அதுக்கு நாமே பா¢சு கொடுக்கற மாதி¡¢ ஆச்சு!" என்றார்.

ஒருவரும் பேசவில்லை.

"இதுக்குப் பா¢சு கொடுத்தா ப்ராஸ்டிட்யூஷனை நாம என்கரேஜ் பண்ற மாதி¡¢ ஆச்சே."

"அது கூடச் சா¢தான்." என்றான் அமானு வென்ஸஸ்.

"அப்புறம் ஊர்ல இருக்கிற லைட்டை எல்லாம் ஒடச்சு ஊரே விபசாரம் ஆக வழியாயிடுமேய்யா. ரொம்ப செளகா¢யம். தொடர்ந்து அவரே. அவளுக எல்லாம் இதைப் படிச்சா, அப்புறம் ஊர்ல, தெருவுல ஒரு விளக்குக் கூட இருக்காது. தொ¢யுமா?"

"பொதுவா, தேவிடியாளுக வாரப் பத்தி¡¢கை எல்லாம் படிக்கறதில்லீங்க!" என்றான் அனானுவென்ஸஸ்.

"யோவ் முண்டம். வாயை மூடு. ஒரு உதாரணத்துக்குச் சொன்னேன். என்ன நான் சொல்றது, உதவி ஆசி¡¢யரே?"

அரை மனசுடன், "ஒரு விதத்துல சொல்றது சா¢தாங்க."

¨தா¢யம் வந்த மற்றவர்கள், "அய்யா சொல்றது சா¢தான்" என்று ஒப்புவித்தார்கள்.

"விபசாரத்தை ஊக்குவிக்கறதுக்கு வழி காட்டறதுக்கு ஒரு கதையைத் தோ;ந்து எடுத்து அதுக்குப் பா¢சு கொடுக்க நான்தான் கெடச்சனா? என்ன இதில மாட்ட வைக்கணும்னு. why did you choose me?"

உதவி ஆசி¡¢யர் பதறி, "அய்யா என்ன பேசறீங்க? நாங்க அப்படி நினைப்பமோ? இப்படி சபைல நிங்க சொல்லலாமா? வேணும்னா இதை ¡¢ஜக்ட் செய்துடறம்."
"செஞ்சிடுங்க"

"செஞ்சாச்சு. ஆனால் பா¢சு யாருக்குத் தர்ரது?"

"இரண்டாவதை முதல் பா¢சாவும், மூணாவதை இரண்டாவது பா¢சாவும் மாத்திடுங்க."

"ஆச்சு. ஆனால் மூணாவது பா¢சுக்கு?"

"அந்த இருபதில, சுமாரா இருக்கிறதை எடுத்து செலக்ட் செஞ்சிடுங்க."

"சா¢ங்க. இதை என்ன பண்றது?"

"எதை?"

"மெர்கு¡¢யை?"

"திருப்பி அனுப்பிடுங்க. போதிய தபால் தலை ஒட்டி இருக்கா?"


"ஒட்டி இருக்கு. அனுப்பிடறோம்."

"அப்ப ரொம்ப சந்தோஷம். பா¢சு பெற்றவர்களுக்கு என் ஆசிர்வாதங்கள்."
எழுந்தார். கூட்டமும் எழுந்தது. உதவி ஆசி¡¢யர் ஒரு கவரை நீட்டி "இதுல ஒரு செக் இருக்கு. நடுவர்க்கு நாங்க கொடுக்கறது வழக்கம்."

"இதெல்லாம் எதுக்கு? சா¢. யோவ் வாங்கிக்கய்யா!" என்றதும் அவானுவென்ஸஸ் வாங்கிக் கொண்டான்.

கும்பிடு போட்ட கும்பல் அம்பாசிடா¢ல் ஏறிற்று. தெருவில் சா¢ந்து இடதில் கண் மறைந்ததும். இலக்கியப் பித்தன் நுழைந்தார். "எங்கேய்யா செக்கு?
தொகை என்ன எழுதி இருக்கு?"

சொன்னான்.

"சைக்கிளை எடுத்துட்டு ஓடு. பாங்கில உடனே உடனே போட்டுட்டு மெதுவா வா. இப்பவே க்ளியரன்ஸீக்குப் போயிரட்டும்."

சைக்கிளை எடுத்துக் கொண்டு ஓடினான்.

உள்ளே நுழைந்தார். அலமேலு வருகையை எதிர்பார்த்து இருந்தாள். உள்ளே வந்து எதி¡¢ல் உட்கார்ந்து கொண்டு, 'இப்படி வா', என்றார் போல்டு லெட்டா¢ல்.
வந்தவள் உடையைத் தளர்த்திக் கொண்டாள். சரீரம் சாய்ந்ததும், தகாத இடத்தைத் தொட்டு, "காலைல இருந்து ஒரே இலக்கிய ஹிம்சை. உன்னை வாசனை பார்க்கக்கூட நேரமில்லே. ஸாடின் பாவடைதானே போட்டுட்டு இருக்கே?" என்றார்.

"பாவாடை இருக்கட்டும். கதை நல்லா இல்லையா, என்ன?"

"அருமையான கதை. படு Readability. ஒரு Short Story-க்கு வேண்டிய சா¢யான ·பார்ம் இருக்கு.புதுமைப் பித்தனுக்கு அப்புறம் தவக்களைப் பாய்ச்சல் ஸ்டைலை இருபது வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் படிச்சேன். செகாவியன் டச் இருந்தது!" என்றார்.

"அப்புறம் ஏன் ஒரு ஸீன் க்¡¢யேட் பண்ணினது?"

"நான் ப்ரைஸ் கொடுத்தால் பையன் click ஆயிடுவான். Race with the devil-னு ஒரு வாசகம் இங்கிலீஷ்ல இருக்கு. அந்தத் தப்பை நான் ஏன் செய்யணும்? இல்லையா?" என்றார்.

"அதுகூடச் சர்தான்டா!" என்றாள் அலமேலு.

oOo