Thursday, June 29, 2006

புதுப்பேட்டையும் காயலான் கடையும்

என் நினைப்பில் மண்ணைப் போட்ட செல்வராகவன் என்று 7-ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தைப் பற்றி நான் முன்னமே எழுதியிருந்தாலும் அவரின் மீது எனக்கு இன்னமும் நம்பிக்கை இருந்தது, "காதல் கொண்டேன்" என்கிற வித்தியாசமான முயற்சியை அளித்ததற்காக. ரவுடி, தாதாக்களை நாயகர்களாகக் கொண்ட படங்கள் தற்சமயம் நிறைய வந்துக் கொண்டிருந்தாலும் செல்வராகவன் தன் தனித்தன்மையுடன் 'புதுப்பேட்டை' யை உருவாக்கியிருப்பார் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் .......

()

விளிம்புநிலை மனிதர்களை பிரதானமாகக் கொண்ட படம் என்று கேள்விப்பட்டதிலிருந்து இந்தப்படத்தை சென்னையின் படுலோக்கல் தியேட்டர்களான கிருஷ்ணவேணி, சயானி, நாதமுனி போன்றவற்றில்தான் பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். தங்களுடைய வாழ்க்கையில் நிஜத்தில் அன்றாடம் பார்க்கின்றவற்றை நிழிலில் பார்க்கும் போது எவ்வாறு அவர்கள் எதிர்வினையாற்றுவார்கள் என்று யூகிப்பது எனக்கு கிளர்ச்சியூட்டுவதாயிருந்தது. ஆனால் சென்னையின் சொகுசு திரையரங்களில் ஒன்றான "சத்யம்" குழுமத்தில் பார்க்க விதித்திருந்தது.

முலைகளையும், பிருஷ்டங்களையும் பிரதானமாக துருத்திக் காட்டும் இறுக்கமான உடைகளை அணிந்திருந்த பெரும்பாலான யுவதிகள், தங்களை வெறித்துப் பார்க்கும் ஆண்களைப் பற்றிய பிரக்ஞை இல்லாதது போல் பாவனை செய்தனர். யுவன்களோ, லண்டன் வெள்ளைக்கார தாதிக்கு பிறந்தவர்கள் போல் " கிவ் மீ பிப்டி பக்ஸ் மேன்" என்று குதறலான ஆங்கில உச்சரிப்புடன் உலவிக் கொண்டிருந்தனர். பணக்காரத்தனமான அந்த சூழல் வழக்கம் போல் என்னை அசெளகரியமாகவும் விநோதமாகவும் உணர வைத்தது. மேல்தட்டு மக்கள் இடைவேளையில் முன்னரே கட்டணம் செலுத்தி தின்பண்டங்களை பிருஷ்டங்களை நகர்த்தாமல் தங்களின் இருக்கைகளுக்கே வரவழைத்துக் கொண்டனர். மூத்திரப்புரைக்கு செல்லத் தேவையில்லாமல் இருந்த இடத்திலேயே சிறுநீர் பிடிக்கப்பட்டுக் கொள்ளும் வசதி இருந்தால் கூடுதல் கட்டணம் செலுத்தி அதையும் பயன்படுத்திக் கொள்வார்களாயிருக்கும். இந்த மாதிரியான மனிதர்கள் "Low Class People" படத்தை பார்க்க விரும்பினது குறித்து எனக்கு எந்தவிதமான ஆச்சரியமுமில்லை. ஏனெனில்....

சிலவகை படங்கள் திறமையான மார்க்கெட்டிங் உத்திகள் மூலமும், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு மூலமும் சிறந்த படம் என்கிற மாயத்தோற்றத்தையும், சராசரி திரைப்பட பார்வையாளனிடம் ஒரு மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி லாபம் சம்பாதித்து விடும். ரஜினிகாந்த், விஜய் போன்றவர்களின் பெரும்பாலான குப்பைப் படங்கள் இந்த வகையைச் சேர்ந்தவைதான். புதுப்பேட்டையையும் அந்த வகையில் சேர்க்க நேரிட்டது துரதிர்ஷ்டவசமான ஒன்றுதான்.

()

தனிமைச் சிறையில் இருக்கும் ஒரு குற்றவாளி (தனுஷ்) சற்றே மனம் பிறழ்ந்த நிலையில் தன் வாழ்க்கையை சுயவாக்குமூலமாக பார்வையாளர்களுக்கு விவரிப்பதில் படம் துவங்குகிறது.

எந்தவிதமான முன்னேற்பாடான காட்சிகளுமில்லாமல், "படிச்ச நாயே கிட்ட வராதே" என்ற பாடலை ஒரு சேரி வாழ் மாணவன் பாடுகிறான். திரைப்படங்களில் பாடல் எனும் அம்சம் இருப்பதே அபத்தமெனும் போது "எதற்காக படிச்ச நாயை திட்டுகிறான்" என்று கேள்வி எழுப்புகிற சம்பந்தமேயில்லாத இந்த மாதிரி பாடல்களின் பங்கு இன்னும் அபத்தமானது. இதில் irony என்னவென்றால் பாடுகிற மாணவனே பிளஸ் 2 படிப்பவன்தான். பாடலில் மட்டுமே ஒலிக்கிற (புதுப்பேட்டை, காசிமேடு, வியாசர்பாடி எங்க ஏரியா) குறிப்பிடப்படுகிற இடங்கள் திரைப்படத்தின் பெரும்பாலான பின்னணி காட்சிகளில் எங்குமே காணப்படவில்லை. நிர்மாணிக்கப்பட்ட ஜொலிப்பான அரங்குகளிலும் பின்னணியின் சூழலே புரியாத இடங்களிலுமே திரைப்படம் பயணிக்கிறது.

தன்னுடைய தந்தையினாலேயே தன் தாய் கொல்லப்படுவதை அறிகிற அவன் பயந்து போய் வீட்டை விட்டு ஓடி பிச்சையெடுக்க ஆரம்பிப்பதும் சூழ்நிலை காரணமாக ஒரு ரவுடி கூட்டத்தில் சரண் புகுந்து அவனே பெரிய ரவுடியாகி, சமூக விரோதிகளின் பாதுகாப்பான புகலிடமான அரசியலில் குதிப்பதில் படம் நிறைகிறது. இந்த காவியத்தை "வித்தியாசமாய் சொல்கிறேன் பேர்வழி" என்று பார்வையாளர்களை படுத்தி எடுக்கிறார் செல்வராகவன். நம்பவே முடியாத காட்சியமைப்புகள், நாயக பாத்திரத்திற்கு பொருந்தாத தனுஷின் உடல்வாகு, நத்தை வேக திரைக்கதை என்று எல்லா அம்சங்களும் சேர்ந்து இந்தப் படத்தை ஒரு தரமில்லாத படமாக்குகின்றன.

()

தனுஷைப் பற்றி சிறப்பாக கூறியாக வேண்டும். படத்தின் காட்சி ஒன்றில் ரவுடி கதாபாத்திரம் ஒன்று தன் தம்பியை நோக்கி எரிச்சலுடன் கூறுவதாக ஒரு வசனம் வரும். "அந்த கூலிங்கிளாஸ கழட்டித் தொலைடா. லட்சம் லட்சமா பணத்த கொட்டி இவனைப் போட்டு படம் வேற எடுக்கறேன். என்ன ஆகப்போகுதோ" அதற்கு தம்பி "இல்லண்ணா. நீயே பாரு. படம் செமயா பிச்சிக்கப்போவுது" இந்த வசனம் செல்வராகவனின் மனச்சாட்சியிடமிருந்து தன்னையுமறியாமல் வெளிப்பட்டு விட்டதோ என்று யூகிக்கிறேன். தான் நடிக்கிற பாத்திரங்களுக்கேற்றவாறு முற்றிலும் பொருந்துகிற உடலமைப்பு இல்லையென்றாலும் தன் நடிப்புத் திறமையால் அந்த வெற்றிடத்தை நிரப்பி சாதனை படித்தோர் முன் உதாரணங்களாக உண்டு.

"வீர பாண்டிய கட்டபொம்மன்" படத்தை பார்த்திருந்த ஒரு வெளிநாட்டவர், சிவாஜி கணேசனை நேரில் பார்க்க நேரும் போது "நீங்கள் இவ்வளவு குள்ளமானவர் என்பதை படத்தில் என்னால் உணரவே முடியவேயில்லையே. திரையில் பார்க்கும் போது உயரமானவராக காட்சியளித்தீர்களே" என்று ஆச்சரியத்துடன் கேட்டாராம். "அந்தப் பாத்திரத்திற்கான உடைகளை அணியும் போது உள்ளூர பொங்கும் கம்பீர உணர்ச்சியினால் என்னையுமறியாமல் மார்பை உயர்த்தி நடித்ததினால் அப்படி நேர்ந்திருக்கலாம்" என்றாராம் சிவாஜி. எங்கேயோ படித்திருக்கிறேன். "யார்ரா இவன் பென்சில்ல கோடு போட்டா மாதிரி" என்று படத்திலேயே கிண்டலடிக்கப்படும் தனுஷ் ஒரு ரவுடிக் கூட்டத்தையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும் சரமாரியாக அடி வாங்கியும், கொடுத்துமாக பரிதாபமான உடலமைப்பைக் கொண்டு அவர் நடிக்க முயலும் போது நகைக்கவே தோன்றுகிறது. ராம்கோபால் வர்மாவின் முதல் தெலுங்குப்படமான "சிவா"வில் ஏறக்குறைய இதே மாதிரியான உடலமைப்பை கொண்ட ரகுவரன், பெரிய தாதாவாக வந்து அந்தக் குறையே தெரியாமல் தன் நடிப்பால் பார்வையாளர்களை பிரமிக்க வைப்பார். ஆக ... செல்வராகவன் இனி தன் சகோதரனையே கட்டியழுதுக் கொண்டிருக்காமல் பாத்திரத்திற்கு பொருத்தமானவர்களை தேர்ந்தெடுப்பது நல்லது. வட இந்தியாவைப் போல் இங்கே ரவுடிகளிடம் நவீன துப்பாக்கி வகைகள் இன்னும் அதிகளவில் புழக்கத்தில் வரவில்லையென்பது

யதார்த்தமென்றாலும், ஏதோ பழைய பட எம்.ஜி.ஆர் vs நம்பியார் போல தனுஷ் கத்தியை சுழற்றிக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருப்பது அதீதமாக இருக்கிறது.

()

படத்தின் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பாக அரவிந்த கிருஷ்ணாவின் ஒளிப்பதிவை குறிப்பிடலாம். காட்சிகள் கண்ணில் ஒற்றிக் கொள்கிற தெளிவுடன் சூழலுக்கேற்ற ஒளியமைப்புகளுடன் சிறப்பாக இருக்கிறது. யுவனின் பின்னணி இசை cliche-க்களைத் தவிர்த்து மேற்கத்திய பாணியில் சிறப்பாக இருந்தாலும் The God Father படத்தின் பின்னணி இசையை ஞாபகப்படுத்துவது போல் இருந்ததை தவிர்த்திருக்கலாம். "உசிரோட இருக்கணும் கண்ணு. அதுதான் முக்கியம்" என்பது போன்ற வசனங்கள் ஒலிக்கும் இடங்களில் மட்டும் பாலகுமாரன் நினைவுக்கு வருகிறார். 'விபச்சாரியாக நடித்தால் தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது' என்று யாராவது சிநேகாவிடம் சொல்லியிருப்பார்களோ என்னவோ, ரொம்பவும் பரிதாபமாக வந்து போகிறார். சோனியா அகர்வாலைப் பற்றியெல்லாம் எழுதவே தேவையில்லை.

நாம் ஆள்வதற்கு (வேறு வழியில்லாமல்) தேர்ந்தெடுப்பவர்களின் நிழலான பின்னணிகள் குறித்தும், அதில் உள்ள அசிங்கங்கள் குறித்தும் சொல்ல செல்வராகவன் இவ்வளவு மோசமான அளவில் மெனக்கெட்டிருக்க தேவையில்லை. இவ்வளவு தரமில்லாத படத்தை எடுத்துவிட்டு "தமிழ்ச்சினிமாவை அடுத்த தளத்திற்கு நகர்த்தியிருக்கிறேன்." "சர்வதேசதர படம்" என்றெல்லாம் பேட்டிகளிலும் படவிளம்பரங்களிலும் குறிப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்க்கும் போது எரிச்சலாக இருக்கிறது. இந்த மாதிரியான ரவுடிகளை நாயகர்களாக காட்டும் இயக்குநர்கள் கிளைமாக்ஸ் முடியுமுன், சென்சாருக்கு பயந்தோ என்னவோ அவர்களை சாகடித்தோ, திருத்தியோ, வன்முறைக்கெதிரான அறிவுரை சொல்லியோ கேவலமாக படத்தை முடிப்பார்கள். ஆனால் பரவாயில்லை... செல்வராகவன் "இவர் மூன்று முறை எம்.எல்.ஏவாக இருந்து பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்" என்று போட்டு இதுதான் யதார்த்தம் என்பதை சொல்கிறார்.

()

சென்னையில் புதுப்பேட்டை என்கிற இடம், பழைய இரும்புச் சாமான்கள், வாகனங்களின் துருப்பிடித்த உதிரி பொருட்களை விற்கும் காயலான் கடைகள் அடங்கிய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டு அறியப்படுகிறது. இந்த புதுப்பேட்டையையும் இந்தக் கடைகளில் விற்கப்படும் ஒரு பொருளின் தரத்திற்கே இணையாக சொல்லலாம்.

11 comments:

வவ்வால் said...

இதான்யா உண்மையான விமர்சனம்! கொஞ்சம் போல கெட்ட வார்த்தைகளை ஆங்காங்கே தூவி படம் எடுத்தால் எதார்த்தமான படம் ஆகிவிடும் என்று செல்வராகவன் எடுத்துள்ள 110 சதவீத அக்மார்க் ரீல் தான் படம்!

இன்றைய அரசியலில் தேர்தலில் சீட்கள் எல்லாம் முன்னரே கிச்சன் கேபினட், மகன் ,மகள் சிபாரிசின் மூலம் பேசி முடிவெடுத்த பின்னரே அறிவிப்பு என்ற கண் துடைப்பு என்பது கூட தெரியாமல் படம் எடுத்தவர் தான் செல்வராகவன்.

அரசியல்வாதியின் உள்வட்டத்தில் இருக்கும் தனுஷ் (கொக்கி குமார்) நேராக வந்து தேர்வு செய்யும் இடத்தில் தான் சண்டைப் போடுவார் என்பது கொஞ்சம் கூட பொருந்தாத ஒன்று.பாமரத்தனமான படம் இது என்பதில் எனக்கும் உடன்பாடே!

அபுல் கலாம் ஆசாத் said...

இனிய சுரேஷ்,

இது நீங்கள் எழுதியது:
//பணக்காரத்தனமான அந்த சூழல் வழக்கம் போல் என்னை அசெளகரியமாகவும் விநோதமாகவும் உணர வைத்தது.//

இது நான் எழுதியது:
தியேட்டர்காரரின் டார்ச் லைட்டைப் போல 'நோக்கியா'வை
ஒளிரச் செய்து இருக்கையின் எண்கள் தேடிய மேட்டுக்குடி இளைஞர் இளைஞிகள்
கூட்டத்தின் நடுவில், ஒவ்வாத பிறவியாக அமர்ந்து சத்தியம் திரையரங்கில்
இதனைப் பார்த்தேன்.

http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/9961

உணர்வுகளும் வெளிப்படுத்தும் உத்திகளும் ஒன்றாக இருப்பதால் ஒரு அட சுரேஷு நம்ம ஆளு என சின்ன சந்தோஷம், அவ்வளவுதான்.

அன்புடன்
ஆசாத்

J. Ramki said...

//சிலவகை படங்கள் திறமையான மார்க்கெட்டிங் உத்திகள் மூலமும், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு மூலமும் சிறந்த படம் என்கிற மாயத்தோற்றத்தையும், சராசரி திரைப்பட பார்வையாளனிடம் ஒரு மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி லாபம் சம்பாதித்து விடும். ரஜினிகாந்த், விஜய் போன்றவர்களின் பெரும்பாலான குப்பைப் படங்கள் இந்த வகையைச் சேர்ந்தவைதான்.//


அண்ணா, நீங்க என்னிக்கு நேரா மேட்டருக்கு வந்து விமர்சனம் எழுத ஆரம்பிக்க போறீங்க? பைதபை, திருவாளர் விஜய் அவர்களின் படங்களில் ஒன்றைக்கூட நான் பார்த்ததில்லை. ஆனால், அந்த இன்னொருத்தர் நடித்த எல்லா படத்தையும் பார்த்திருக்கேன். உங்க பார்வையில அதுல எதை குப்பைப்படம்னு சொல்றீங்க, எதுல மார்க்கெட் உத்தி, எதுல 'தொளில்நுட்ப' கலைஞர்கள் பங்கு அளிப்பு என்பதையெல்லாம் கொஞ்சம் செப்பினால் நல்லாயிருக்கும்.

தப்பா நினைச்சுக்க மாட்டீங்கங்கிற உரிமையோட... ஒரு 'விளிம்பு நிலை' கோயிஞ்சாமி!

Alex Pandian said...

>>>>>>முலைகளையும், பிருஷ்டங்களையும் பிரதானமாக துருத்திக் காட்டும் இறுக்கமான உடைகளை அணிந்திருந்த பெரும்பாலான யுவதிகள், தங்களை வெறித்துப் பார்க்கும் ஆண்களைப் பற்றிய பிரக்ஞை இல்லாதது போல் பாவனை செய்தனர்
>>>>>>>>>

.... இது...!!!

இவர்கள் ஏன் தான் இப்படியெல்லாம் உடை அணிந்துவிட்டு குற்றங்கள் ஏற்பட வழிபோட்டுக் கொடுக்கிறார்கள் என தெரியவில்லை.

பிச்சைப்பாத்திரம் said...

மறுமொழியளித்த நண்பர்களுக்கு நன்றி.


//உணர்வுகளும் வெளிப்படுத்தும் உத்திகளும் ஒன்றாக இருப்பதால் ஒரு அட சுரேஷு நம்ம ஆளு என சின்ன சந்தோஷம்,//

ஆசாத்:

ஒத்த மனநிலையில், அலைவரிசையில் சிந்திப்பவர்களுக்கு ஏற்படும் உணர்வுதான் இது.

//விஜய் அவர்களின் படங்களில் ஒன்றைக்கூட நான் பார்த்ததில்லை. //

//அந்த இன்னொருத்தர் நடித்த எல்லா படத்தையும் பார்த்திருக்கேன். உங்க பார்வையில அதுல எதை குப்பைப்படம்னு சொல்றீங்க//


"ரஜினி" ராம்கி:


இதெல்லாம் உங்களுக்கே ஓவராக தெரியவில்லை? :-)

Anonymous said...

Ramki is talking about Vijayakanth films :)

ஒரு பொடிச்சி said...

புதுப்பேட்டை படம் ஏனோ பிடித்திருந்தது. (நிறைய எதிர் விமர்சனங்கள் வந்தபடியால் இருக்கலாம்).
முக்கியமா "ரெயின்போ காலனி அளவுக்கு (பு.போட்டை) இல்லை" என்ற விமர்சனம் அதைப் பார்க்கும் ஆர்வத்தைத் தந்தது! எனக்கு 7G பிடிக்கவில்லை. முதல் படம் தந்த மனப்பதிவு மட்டுமே செ.ராகவனில் பிடித்திருந்தது.
புதுப்பேட்டை படத்தில் நீங்கள் சொல்கிற நிறைய அம்சங்கள் இருந்தனதான்.. முக்கியமா விளிம்புநிலை வாழ்வை -அப்படி அல்லாத - "தான்" (செ.ராகவன்) பார்க்கிற என்கிற உணர்வை தாண்டி (அவ் வாழ்வினுள் செல்ல) முடியவில்லை அவரால்... இது இயக்குநரின் தோல்வியா இருக்கலாம்.
இருந்தபோதும், ரெயின்போ காலனியை "விட" நல்ல படம் என்றே இப்போதும் சொல்வேன்!

//இவர்கள் ஏன் தான் இப்படியெல்லாம் உடை அணிந்துவிட்டு குற்றங்கள் ஏற்பட வழிபோட்டுக் கொடுக்கிறார்கள் என தெரியவில்லை.//

இன்றைய காலம் -முன்னெப்போதை விடவும்- (முக்கியமாய் ஆடை நாகரிகங்களில் மட்டுமல்லாது) மேலைத்தேயமயப்பட்டதாய் இருக்கிறது; பெரும்பாலும் பொருள்வயப்பட்ட (materialistic), பாலியல்மயப்பட்ட உலகில் வாழ்கிறொம். சகல ஊடகங்களிலும் இவையே ஆக்கிரமித்து. இங்கே
வேறுபாடுகளின்றி, ஆண்-பெண்: இரு பாலிடையேயும் அணிகிற ஆடைகள் முதல் அனைத்திலும் இவையின் பாதிப்பு உள்ளது.
இங்கே இந்தப் பெண்கள் ஏன் அணிகிறார்கள் என்றால் - அது அவர்களுடைய உடல் ஆகவே அது அவர்களுடைய தேர்வு! குற்றங்கள் 'கூட' அது தான் காரணமென்று போகிற போக்கில் சொல்லுவது, ஒரு 'பொதுவான' அபிப்பிராயத்தை உண்மையாக்குவதை மட்டுமே செய்யும்.

மற்றப்படி, பணக்கார/(உரியதாய் உணராதவொரு) சூழலில் ஒட்ட முடியாமை எனக்கும் (பலருக்கும்?!) பரிச்சயமான விசயந்தான்.

Balamurugan said...

ராம்கி சொல்வது சரிதான். ஜென்டில்மேன் படத்துக்கு அப்புறம் வேறு எந்த படத்தையும் பார்க்கவில்லை என்று ஒரு முறை என்னிடம் சொன்னார். அவரது தலைவர் படமெல்லாம் சினிமா வரிசையில் சேராதாம்! ஆனாலும் இங்கே ரொம்ப ஓவராகவே உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். கொஞ்சம் சோடா வேணுமா ராம்கி?

CrazyTennisParent said...

ஓய் ராம்கி,

தலைவர் விஷயத்தை பொறுத்தவரை பேச்சை கடந்த நிலைல நீங்க இருக்கீங்கன்னு தெளிவா எடுத்து சொல்லும்.....

அருள் குமார் said...

உங்கள் விமர்சனத்தில் எனக்கு உடன்பாடு இல்லை! எனக்கு அதை எப்படி சொல்வதென்று தெரியாமல் பின்னுட்டம் இடாமல் போய்விட்டேன். இப்போது சாரு நிவேதிதா அவர்களின் விமர்சனத்தைப் பார்த்தபோது அதை இங்கே சொல்ல வேண்டும் எனத் தோன்றியது. ஏனேனில் அந்தப் படத்தில் நான் ரசித்த பல காட்சிகளைப்பற்ரி சொல்லியிருக்கிறார்.

பிச்சைப்பாத்திரம் said...

அருள்குமார்,

சாரு புகழ்வதாலேயே என்னளவில் இது சிறந்த படமாகிவிடாது. சாருவின் விமர்சனத்தைப் பற்றியும், "இந்தியக் கருப்பர்களின் படம்" என்று காலச்சுவடில் வந்த விமர்சனத்தைப் பற்றியும் இன்னபிற விஷயங்களையும் "புதுப்பேட்டை - மறுபர £சீலனை" என்கிற தலைப்பில் ஒரு பதிவு இடலாமென்றிருக்கிறேன். பார்ப்போம்.